Tuesday, August 30, 2011

வானவில் :குள்ள நரி கூட்டமும், ஆத்மாநாமும்


பார்த்த படம்: குள்ள நரிக் கூட்டம்

பார்த்து ரொம்ப நாளானாலும் இப்போது பகிர காரணம் உள்ளது. அது அப்புறம். சாதாரண கதை, சொல்லப்பட்ட விதம் சுவாரஸ்யம். வெண்ணிலா கபடி குழு ஹீரோ விஷ்ணுவிற்கு இன்னொரு நல்ல படமாக இது அமைந்தது. ஹீரோயின் ரம்யா நம்பீசன் செம அழகு. குறிப்பாய் குறும்பு கொப்பளிக்கும் கண்கள். படத்தின் முதல் பாதி ஒரு சின்ன விஷயத்தை வைத்து மிக சுவாரஸ்யமாக செல்கிறது. ஹீரோ தனது தந்தை மொபைலுக்கு ரீ-சார்ஜ் செய்யும் போது தவறான எண்ணுக்கு ரீ-சார்ஜ் செய்து விடுகிறார். அது ஹீரோயின் போன் நம்பர். ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரீ-சார்ஜ் செய்ததால் பணத்தை திரும்ப தர சொல்லி கேட்கிறார். அப்படியே காதல் வளருகிறது. அந்த பணத்தை ஹீரோயின் எப்படி திரும்ப தருகிறார் என்பதை மிக அழகாக காண்பிக்கிறார்கள். அடிக்கடி சந்திக்க வேண்டும் என கொஞ்சம் கொஞ்சமாக பணம் தர, கடைசியில் சில்லறை காசுகளில் வந்து நிற்கிறது அந்த கடன்!

ஹீரோ அப்பா போலிசை வெறுக்க, ஹீரோயின் அப்பாவோ போலிசுக்கு தான் பெண்ணை தருவேன் என்கிறார். இதற்காக ஹீரோ எப்படி போலிஸ் ஆனார் என்பது தான் கதை. பிற் பாதியில் போலிஸ் வேலை செலக்ஷனில் உள்ள அரசியலையும் இன்டரஸ்டிங் ஆக காட்டுகிறார்கள். க்ளைமாக்ஸ் மட்டும் சற்று சினிமாடிக் ஆக இருந்தாலும், அதனை மறந்து நிச்சயம் ரசிக்கலாம். இந்த படம் இந்திய தொலை காட்சிகளில் முதன் முறையாக பிள்ளையார் சதுர் த்தி அன்று (வரும் வியாழன்) காலை 11 மணிக்கு விஜய் டிவியில் ஒளி பரப்பாகிறது. இதுவரை பார்க்காவிடில், பாருங்கள், நிச்சயம் ரசிப்பீர்கள்.

சன் இன்னும் சில படி மேலே போய் ஆடுகளம் படம் வியாழன் மாலை ஆறு மணிக்கு ஒளி பரப்புகிறார்கள் . ஆடுகளம் பற்றிய நம்ம விமர்சனம் இங்கே வாசிக்கலாம் !


ரசித்த பாட்டு : மூங்கில் காடுகளே (படம்: சாமுராய்)

இயற்கை எப்போதும் ரசிக்கிற விஷயம். அத்தோடு அற்புதமான இசையும் சேர்ந்தால் கேட்கவா வேண்டும்? இந்த படம் தோல்வி அடைந்தாலும், இந்த பாடல் கேட்கவும் பார்க்கவும் மிக இனிமையான ஒன்று


பாடலின் ஊடே ஒரு சோகம் இழையோடிக்கொண்டே இருக்கும். அதை புல்லாங்குழல் என்ன அருமையாய் சொல்கிறது பாருங்கள் ! கேரளாவிலும், ஹோக்கேநேக்களிலும் எடுக்கப்பட்ட இந்த பாடல் ஒரு விஷுவல் ட்ரீட் !


தூக்கு தண்டனை 

தூக்கு தண்டனையே வேண்டாம் என்று நினைக்கிற ஆள் இல்லை நான். நம் நாட்டில் இன்னமும் மிக கொடூரமான பல்வேறு குற்றங்கள் நடக்கவே செய்கின்றன. மரண தண்டனை என்கிற பயம் இருந்தாலாவது அவை ஓரளவு குறைய வாய்ப்புண்டு. ஆனாலும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் மீதான குற்றங்கள் முழுமையாக நிரூபிக்கப்பட்ட மாதிரி தெரிய வில்லை. எனவே அவர்களை தூக்கிலிடுவது தேவையில்லை என்றே நினைக்கிறேன். பேரறிவாளன் தாயார், முருகன் மகள் ஆகியோரின் அவல குரல் மனதை வருத்துகிறது . இது தொடர்பாக தமிழர்கள் பெரும் எழுச்சி குரல் எழுப்புவது ஆறுதல் ! இன்னும் சில நாட்களில் நீதி மன்றம் மூலம் அவர்களுக்கு நீதி கிடைக்கிறதா என பார்ப்போம் !

ரசித்த கவிதை

இந்தச் செருப்பைப் போல்
எத்தனை பேர் தேய்கிறார்களோ
இந்தக் குடையைப் போல்
எத்தனை பேர் பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ
இந்தச் சட்டையைப் போல்
எத்தனை பேர் கசங்குகிறார்களோ
அவர்கள் சார்பில்
உங்களுக்கு நன்றி
இத்துடனாவது விட்டதற்கு.

                                                                 - ஆத்மநாம்
நாட்டி கார்னர்

நாட்டியை கூண்டிற்குள் வைத்து பார்ப்பதை விட வெளியே வைத்து பார்ப்பது தான் அழகு. வெளியே என்பது அதனை பொறுத்த வரை கூண்டின் மேல் அமர்வது தான். நல்ல மூட் இருந்தால் தான் வெளியே வந்து கூண்டின் மேல் அல்லது கதவின் மேல் அமரும். தன் இறகை நீவுவது, தலை சாய்த்து பார்ப்பது என அது செய்கிற எல்லாமே அப்போது நன்கு ரசிக்க முடியும். சற்று தைரியம் வந்து விட்டால், வெளியில் இருக்கும் போது நாம் அருகில் போனால் கூட பேசாமல் பார்க்கும். வெளியில் வந்து அமர்ந்து நிறைய நேரம் வரை நாம் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும். அப்புறம் தைரியம் வந்த பின் நாம் அருகில் செல்லலாம். இந்த வாரம் சனிக்கிழமை முழுக்க வெளியில் இருந்தது. ஞாயிறு காலை குளிக்க வைக்க முயற்சித்ததால், கோபமாகி கூண்டிற்குள் போய் விட்டு அப்புறம் "உர்" என்று வெளியே வரவே இல்லை.

கல்யாண நாள் அப்டேட் 

கல்யாண நாள் எப்படி போச்சு என்று கேட்ட அனைத்து நண்பர்களுக்காகவும் இந்த அப்டேட் :

திங்கள் கிழமை என்பதால் வழக்கம் போல டென்ஷன் ஆக தான் போனது. பிறந்த நாளுக்கு கூப்பிடாத சில நண்பர்கள் கூட இந்த "நன்னாளை" நினைவு வைத்து அழைத்தார்கள். கூட படித்த அவர்கள் இந்த ப்ளாக் வாசிக்க மாட்டார்கள். குடுத்து வைத்தவர்கள் !!

நாங்கள் இருவருமே புது துணி அணியவில்லை என்பது இருக்கட்டும், சமையலை சொன்னால், எப்படி சிறப்பாக கொண்டாடினோம் என்பது புரியும். அன்று காலை உணவு (மகள் தவிர்த்து, எங்கள் இருவருக்கும்) தயிர் ஊற்றி பழைய சாதம் ! மதியம்? கார குழம்பு !! ம்ம் 14 வருஷம் ஆச்சுன்னு இப்படியா? எனக்கு தான் தைரியம் இல்லை. நீங்க யாராவது என் சார்பா நியாயம் கேட்க கூடாதா?

விட்டாச்சு லீவு !!

புதன் ரம்ஜான். வியாழன் விநாயகர் சதுர்த்தி. எனவே நிறைய நிறுவனங்கள் வெள்ளியும் லீவு விட்டு, தொடர்ந்து ஐந்து நாள் விடுமுறை விட்டுள்ளனர். இதனால் தென் தமிழகத்திலிருந்து சென்னை வந்து வேலை செய்யும் பலரும் தத்தம் சொந்த ஊருக்கு கிளம்பி விட்டனர். என்ஜாய் தி ஹாலிடிஸ் நண்பர்களே !!

Monday, August 29, 2011

பெண் பார்த்த அனுபவங்கள்

ருபத்தைந்து வயது ஆன போதே பெரியண்ணன் எனக்கு பெண் பார்க்க ஆரம்பித்து விட்டார். படித்து முடிக்கவே இருபத்தி நான்கு வயதாகியது. பெண் பார்க்க ஆரம்பித்த போது நல்ல வேலையில் இல்லை. அதுக்குள் கல்யாணமா? மனுஷனை கொஞ்ச நாளாவது சந்தோஷமா இருக்க விடுங்க சாமிகளா என கெஞ்சியும் கேட்க வில்லை (அண்ணன்கள் வாழ்க்கையை பார்த்தே கல்யாண கஷ்டம் புரிந்திருந்தது ...)

சரி... கல்யாணம்னு செய்தால், வேலைக்கு போகும் பெண்ணை தான் செய்துப்பேன் என்றேன்... வீட்டில் கடும் எதிர்ப்பு... அண்ணிகள் இருவரும் வேலைக்கு போக வில்லை.. ஆனால் என் அக்கா ஒரு டாக்டர். அக்கா வேலை பார்க்கும் போது, என் மனைவி வேலை பார்க்க கூடாதா?? யாரும் கடை குட்டியான என் பேச்சை (எப்போதும் போல்) கேட்கவே இல்லை... ஊரில் உள்ள பல ஜாதகங்களை அலசி ஆராய்ந்தனர்...

ஒரு முறை தஞ்சை சென்றிருந்த போது அண்ணன், "வா வெளியே போகலாம்" என அழைத்து கொண்டு போனார். ஒரு சாதாரண சட்டை, கைலியுடன் எதற்கு என்று தெரியாமலே அவர் வண்டி பின்னால் அமர்ந்து செல்கிறேன்.. ஒரு போட்டோ ஸ்டுடியோவிற்கு அழைத்து சென்றார். புகைப்படம் எடுப்பவரையே எனக்கு டை மாட்டி விட வைத்தார்.. அதற்கு மேல் கோட் வேறு.. (டை, கோட் போன்றவை ஸ்டுடியோவில் எப்பவும் இருக்கும் என்பதே அன்று தான் எனக்கு தெரிந்தது!)


மேலே கோட் கீழே லுங்கி உடன் எடுத்த இந்த போட்டோவை வைத்து தான் என்னை மாப்பிள்ளை என மார்க்கெட்டிங் செய்தார். அந்த போட்டோ ஓரளவு நன்றாகவே வந்திருந்தது.எனது மனைவி பார்த்து மயங்கிய (!!???) முதல் போட்டோவும் இதுவே!

********** **************** ****************
அண்ணன் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள மிகவும் வற்புறுத்தினார். சொந்தமாய் ஒரு வீடும் கூடவே டிவி, பிரிட்ஜ் , டூ வீலர் என அனைத்தும் அவர்கள் தருவதாகவும் வாழ்க்கையில் உடனே செட்டில் ஆகி விடலாம் என்றும் செம பிரைன் வாஷ் செய்தார். ஆனால் வேலைக்கு செல்லும் பெண் என்கிற நம்ம பாலிசி மேட்ச் ஆகலை. அதோடு பெண்ணின் பெயர் காளீஸ்வரி! "எனக்கு பெயரே பிடிக்கலை. கல்யாணம் செய்துக்க மாட்டேன்" என்றேன். "பேரையாடா கல்யாணம் பண்ணிக்க போற? பொண்ணை தானே கட்டிக்க போறே?" அண்ணன் கோபத்தில் திட்டினார்.

இந்த வாக்குவாதம் நடந்தது தஞ்சையில். அன்று அண்ணன் வீட்டுக்கு போய் விட்டு சென்னை திரும்புகிறேன். அவரது வண்டியில் என்னை ரயில் நிலையத்தில் இறக்கி விட வந்து கொண்டிருந்தவர், கடைசி வரை காளீஸ்வரியை திருமணம் செய்து கொள்ள நான் ஒத்து கொள்ளாததால் கோபமாகி நடு வழியில் இறக்கி விட்டு போய் விட்டார். (ரயிலுக்கு பத்தே நிமிடம் மீதம் இருக்க ஆட்டோவும் கிடைக்காமல் யாரோ ஒருவரிடம் லிப்ட் கேட்டு, ஓடி வந்து டிரைன் பிடித்தேன்....)

********* *********** ************
ஒரு வழியாய் வீட்டில் உள்ளவர்கள் வேலைக்கு செல்லும் பெண்ணுக்கு ஒத்து கொள்ள, முதன் முறையாய் பெண் பார்க்க அண்ணன், அண்ணி உடன் செல்கிறேன். சென்னையின் வழக்கமான ஒரு கொதிக்கும் நாளாக தான் அது இருந்தது. மாலை நேரம் ஒரு வாடகை காரில் கிளம்பினோம். சற்று நேரத்தில் சரியான பேய் மழை.. இடி, மின்னல்!! ஒரு வழியாய் பெண் வீட்டை அடைய அங்கு கரண்ட் கட்! மெழுகு வர்த்தி வெளிச்சத்தில் பேசினோம். அநேகமாய் அனைவருமே சகுனம் சரி இல்லை என்ற எண்ணத்துடன் இருந்தனர். இதில் பெண்ணையும் என்னையும் தனியே வேறு பேச வைத்தனர்.. இடி சத்தம்.. மழை. இதற்கு நடுவில்.. ஒரு சந்திப்பு.. நான் எதோ உளறி கொட்டினேன்.. சொஜ்ஜி, பஜ்ஜி சாப்பிட்டு வீடு வந்தோம்.

பெண் வீட்டார் "சகுனம் சரி இல்லை; ஜாதகம் பொருந்தலை" என தகவல் அனுப்பினர்.. அண்ணன் நான் பெண்ணிடம் பேசியதால் தான் இப்படி ஆனதாகவும் இனி பெண் பார்க்க போகும் போது, எந்த பெண்ணிடமும் தனியே பேசக்கூடாது என்றும் கூறினார் !
********* *********** ************

அடுத்து பெண் பார்த்தது எனது மனைவியை தான்…

மறைந்த நண்பன் லக்ஷ்மணன் நினைவாக அவனது கவிதை புத்தக வெளியீடு நடந்த அன்று, அதே நேரத்தில் நான் பெண் பார்க்க வருவதாக, பெண் வீட்டில் அண்ணன் சொல்லி இருந்தார். என்னிடம் இதை சொல்ல, நான் முடியவே முடியாது என போகாமல் இருந்து விட்டேன். அண்ணனுக்கு பயங்கர கோபம். லட்சுமணன் விழா நடக்கும் ஹால் தொலைபேசி எண்ணை எப்படியோ கண்டுபிடித்து (அப்போ செல் போன் நஹி)  " பெண் பார்க்க போ.." என்று ஆர்டர் போட்டார்.. நான் "முடியாது" என மறுத்தேன்.. "மதியம் அல்லது மாலையாவது போ " என்றார்.. "எல்லா ஊர்களில் இருந்தும் பிரண்ட்ஸ் வந்துருக்காங்க. இன்று போகவே முடியாது என மறுத்து விட்டேன்.. (அன்று என் மனைவி வீட்டில் எங்களுக்காக பஜ்ஜி முதலியவை செய்து வைத்து, நாங்கள் வராமல் ஏமாந்தனராம்.)

பின் மீண்டும் மறு நாளே பெண் பார்க்க ஏற்பாடு செய்து விட்டார். சென்னையில் உள்ள அண்ணனின் நண்பர் ஒருவருடன் வேண்டா வெறுப்பாக தான் பெண் பார்க்க சென்றேன். காரில் செல்லும் போது தற்போது திருமணம் வேண்டாம் என அவரிடம் புலம்பி தள்ளியவாறே சென்றேன். ஆனால் பெண்ணை பார்த்ததும், உடனே மனதுக்குள், " இவள் தான் என் மனைவி" என உள்ளுணர்வு மிக தெளிவாக சொல்லி விட்டது..

சினிமாவில் வருவது போல் காபி உடன் தலை குனிந்தவாறு பெண் வர வில்லை. நாங்கள் பேசி கொண்டிருக்கும் போது ரொம்ப சாதாரணமாக வந்து எங்களுடன் அமர்ந்து, எந்த தயக்கமும் இல்லாமல் பேசினாள்.

காரில் திரும்ப செல்லும் போது ஒரு முழு பல்டி அடித்து "இந்த பெண்ணை தான் கல்யாணம் செய்துப்பேன்.. பேசி முடிக்க சொல்லுங்க" என்று கூறி விட்டேன். வரும் போது பேசினதுக்கு கொஞ்சமாவது வெக்கபடனுமே.. ம்ஹும்..

இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம் என்றவன் எப்படி கல்யாணத்திற்கு ஒத்து கொண்டான் என வீட்டில் அனைவருக்கும் ஆச்சர்யம். ஆனால் அண்ணன் அதற்கு பின்னும், டூ வீலர் வாங்கி தர சொல்லி பெண் வீட்டில் கேட்க, அதற்காகவே வேறு வரன் பார்க்கும் அளவு அவர்கள் போய் விட்டனர்.

ஒரு பக்கம் நான் அண்ணனிடம், " டூ வீலர் எல்லாம் வேண்டாம்; ஒழுங்கா இந்த alliance- ஐ முடி.." என சொல்ல......

" வேறு வரன் பார்க்கலாம்" என்ற என் மாமனார் மாமியாரிடம் என்னோட "அழகில் மயங்கி விழுந்த" மனைவியும் " இவர் தான் வேணும்" என அடம் பிடிக்க (ம்ம் விதி வலியது!!) ரெண்டு குடும்பமும் புரிந்து கொண்டு எங்க நிச்சய தார்த்தம் நல்ல படியா நடந்தது. 

அடுத்த ஒண்ணரை மாதத்தில் கல்யாணம். ம்ம் காதலர்களாக சென்னையில் சுற்றி திரிந்தது அந்த ஒண்ணரை மாதம் தான்.
******* *********** ************
திருமணம் நிச்சயம் ஆன பிறகு என் மாமனார் அவ்வபோது என் அலுவலகம் வருவார். அப்படி வரும் போது ஒரு முறை சொன்னார் "நீங்க ரொம்ப நல்ல டைப். ஆனா ரொம்ப பாவம்..." என்று.அதன் அர்த்தம் அப்போது புரியவில்லை.சில வருடங்கள் கழித்து புரிந்த போது ஒன்றும் செய்ய முடிய வில்லை..
********* *********** ************
எங்கள் திருமணம் நடந்த ஒரு வாரத்திற்குள், நாங்கள் தேனிலவில் இருக்கும் போதே இரண்டு பெண்கள் இறந்த செய்தி எங்கள் காதுகளை எட்டியது... ஹலோ.நீங்களா எதுவும் கற்பனை செய்யாதீங்க.. இறந்தவர்கள் பேரை கேளுங்க... முதலாமவர் இளவரசி டயானா. அடுத்தவர் மதர் தெரசா.

மனைவியிடம் "மோகன் குமாருக்கு கல்யாணம் ஆன சோகத்தில் தான் இந்த ரெண்டு பெரும் இறந்திட்டாங்க.." என்றேன்...

கல்யாணமான புதிது என்பதால் அப்போதெல்லாம் மனைவி என்னை அடிக்க ஆரம்பிக்க வில்லை. அந்த தைரியம் தான் !!

Monday, August 22, 2011

வானவில்: 180 -ம், சூப்பர் சிங்கரும்


பார்த்த படம்: 180

ஹீரோவுக்கு கேன்சர் உள்ள இன்னொரு கதை என்ற தயக்கத்துடன் தான் பார்க்க ஆரம்பிதேன். ஆனால் படம் பெருமளவுக்கு நன்றாக தான் உள்ளது. சித்தார்த் நடிப்பு மிக இயல்பு. சில பாடல்கள் கேட்கவும், பார்க்கவும் இனிமை. ஹீரோயின்கள் ஓகே ரகம். ஹீரோவுக்கு கேன்சர் என தெரிந்த பின் தான் கதை சோக ராகம் பாட ஆரம்பித்து விடுகிறது. முடிவு வித்யாசமாக ஹீரோ இறக்கிற மாதிரி காட்டாமல் இருப்பது சற்று ஆறுதல். (ஆமாம் ஆனந்த விகடனில் முன்பு கேன்சரால் யாராவது இறக்கிற மாதிரி படத்தில் காட்டினால், அது தவறு. இப்படி தவறான விஷயத்தை காட்டும் படத்துக்கு விமர்சனம் எழுத மாட்டோம் என அறிவித்திருந்தார்களே. இன்னும் தொடர்கிறார்களா என்ன?). சின்ன சின்ன சுவாரஸ்யங்களுக்கும், புது இயக்குனரின் முயற்சிக்காகவும் ஒரு முறை பார்க்கலாம்

QUOTE HANGER
If you judge people, you will not have time to love them.

பிடித்த பாடல்

இந்த பாடல் பிடிக்க முக்கிய காரணம் ரஹ்மான். இந்த பாடலை உருவாக்கிய விதமும், குறிப்பாய் இந்த பாடலில் திருக்குறள் ஒலிக்க வைத்ததும் அருமை.



எங்கே போச்சு அந்த ஹிட்ஸ்?

சென்ற பதிவுக்கு கிடைத்த ஹிட்ஸ் அசர வைத்தது. மூன்று நாளில் ரெண்டாயிரத்துக்கும் அதிகமான பேர் வாசித்தனர் எனினும், கூகிளில் "பிரபல பதிவுகள்" கணக்கிற்கு மட்டும் அதை எடுத்து கொள்ள வில்லை. முதல் ரெண்டு நாள் அதே கூகிள் தான் எப்போது பார்த்தாலும் 18 பேர், 22 பேர் வாசிப்பதாக காட்டியது. இது உண்மை என்று தான் நினைக்கிறேன். அந்த ஒரு பதிவிலேயே நான்கு Follower-கள் சேர்ந்தனர். (பொதுவாய் இப்போதெல்லாம் ரெண்டு பதிவுக்கு ஒருத்தர் தான் சேர்கிறார்). இப்படி நான்கு பேர் ஒரே நாளில் சேர்ந்ததிலேயே இந்த பதிவை ரெண்டாயிரத்துக்கும் அதிகமானோர் வாசித்தது புரிந்தது. "ஆல் டைம் அதிகம் படித்த" பதிவாக இருக்க வேண்டியது இப்போ தான் "இந்த மாத டாப் 5-க்குள் நொண்டியடிக்கிறது !

நாட்டி கார்னர்

நாட்டிக்கு இப்போதெல்லாம் எங்களை நன்கு அடையாளம் தெரிய ஆரம்பித்து விட்டது. முன்பு கூண்டுக்குள் கை விட்டால் கடிக்க வரும். சாப்பாடு குடுக்க சென்றாலும் அதே கதை தான். இப்போது சாப்பாடு குடுத்தால் சமத்தாக வாங்கி சாப்பிடுகிறது. சும்மா கை விட்டாலும் கடிப்பதில்லை. ஆனால் சில நேரம் அதற்கு பிடிக்காத மாதிரி சில வேலைகள் செய்து விட்டால் ரொம்ப கோபமாகி விடும். அடுத்த சில நாள், நாம் அருகில் போனாலே கடிக்கிற மாதிரி பாவம் காட்டும். நாட்டிக்கு மற்றொரு கிளி துணைக்கு வாங்கலாமா என யோசித்து வருகிறோம். நிஜத்தில் நடக்குமா என தெரியலை. தற்சமயம் பரீசலனையில் மட்டும் உள்ளது.

டிவி பக்கம்

சூப்பர் சிங்கர் இறுதி கட்டத்தை நெருங்குகிறது. மாளவிகா அவுட் ஆனது சரி என்று தான் சொல்லவேண்டும். அதற்கு முந்தைய சில வாரங்களாக அவர் சரிவர பாடலை. இந்த வாரம் டிரைலர் பார்த்தால் சாய் சரண் அவுட் ஆக போவது போல் தெரிகிறது. (குழப்பினாலும், குழப்புவாங்க). சாய் சரண், பூஜா,சத்ய பிரகாஷ் ஆகிய மூவரில் இருவர் மட்டும் நேரடியாக பைனல் செல்ல உள்ளனர். மாளவிகா, சந்தோஷ் உள்ளிட்ட மற்றவர்கள் ஒயில்ட் கார்ட் ரவுண்ட் மூலம் மீண்டும் உள்ளே வருவார்கள். ஒயில்ட் கார்டிலும், பைனலிலும் நம்மை எல்லாம் மொபைலில் ஓட்டு போட சொல்லி ஏர்டெல் நன்றாக காசு பார்ப்பார்கள். நடத்துங்கப்பா,. நடத்துங்க !

சம்பவம்

அலுவலகம் வரும்போது ஒரு வளைவில் ஒரு டூ வீலர் ஓட்டி வந்தவர் திடீரென சறுக்கி விழுந்தார். அந்த இடத்தில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தி கொண்டிருந்த சிறுவர்கள் ஓடி போய் அவரையும், வாகனத்தையும் தூக்கி நிறுத்தினர். நடக்க முடியாமல் நொண்டியவாறு கீழே கிடந்த மொபைலை எடுத்தவாறு, அருகில் உள்ள கட்டையில் சென்று அமர்ந்தார். நான் அவரிடம் நெருங்கி "யாருக்காவது போன் செய்யணுமா? கூப்பிடணுமா?" என்றேன். (அவரசமாய் அலுவலகம் செல்லும் நிலை. என்னால் நிச்சயம் அவருடன் மருத்துவமனை செல்ல முடியாது) " இல்லீங்க. போன் வொர்க் ஆகுது. நானே கூப்பிட்டுக்குறேன்" என்றார். " வேன் காரன் ஒருத்தன் வண்டி ஓரத்தில் இடிச்சிட்டு போய்ட்டான். நிக்கவே இல்லை" என்றார். அருகில் இருந்தவர்களும் " ஆமாம் அதனாலதான் விழுந்தார்" என சொல்ல, இத்தகயவர்களை நினைத்து எரிச்சலும் கோபமும் வந்தது. அநேகமாய் அவருக்கு ஒரு கால் எலும்பு முறிவு ஆகியிருக்கும், அசைக்கவே முடிய வில்லை. ஹெல்மெட் போட்டிருந்ததால் தலை அடி படவில்லை. இல்லா விடில் நிச்சயம் அடி பட்டிருக்கும். காலை அலுவலகம் செல்ல வேண்டியவருக்கு இப்படி ஆகி விட்டது. பொறுப்பில்லாமல் இடித்ததும் இல்லாமல், நிறுத்தாமலும் செல்லும் இத்தகைய ஓட்டுனர்களை வண்டி எண் வைத்து கண்டுபிடித்து அவர்கள் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்தால் தான் இத்தகைய தவறு/ விபத்துகளை தவிர்க்க முடியும்.

Wednesday, August 17, 2011

காஞ்சனா முனி- 2: எப்படி சூப்பர் ஹிட் ஆனது?




இந்த படம் ஓடாது என்பதற்கு எத்தனையோ காரணங்கள் இருந்தன.
பொதுவாகவே இரண்டாம் பாக படங்கள் பெரும் வெற்றி பெறுவதில்லை எனபது ஒன்று. பேய் படங்கள் பல (சமீபத்து ஆனந்த புரத்து வீடு உட்பட) தோல்வியை தழுவின என்பது அடுத்த காரணம். இதன் ஹீரோயின் லட்சுமி ராய் நடித்து வெற்றி பெற்ற படங்கள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணும். கடைசியாக பெண்கள் பெயரில் வருகிற தமிழ் படங்களில் பத்தில் ஒன்று தான் ஓடும். மீதம் ஒன்பது படம் ஓடாது (சீரியல்கள் மட்டும் பெண்கள் பெயரில் தான்)

இப்படி எத்தனையோ காரணங்கள் இருக்க அவற்றை தவிர்த்து இந்த படம் எப்படி வென்றது ... இதோ ஒரு பார்வை.

பேய் பழி வாங்கும் வழக்கமான கதை என்பது கடைசி அரை மணியில் தான் நமக்கு புரிகிறது. அது வரை (குறிப்பாக இடைவேளைக்கு முன் வரை) கதை எதை நோக்கி நகர்கிறது என்பது புரியாமலும், அதே நேரம் சற்று ஆர்வத்துடனும் பார்க்க வைத்துள்ளனர்.

பொதுவாய் நான் பேய் படங்களை முழுவதுமாக தவிர்த்து விடுவேன். காசு குடுத்து விட்டு பயந்துட்டு வரணுமா என்பது என் எண்ணம். ஆனால் இப்படி நினைக்கும் என்னை போன்றோரே ரசிக்கும் படி பெரும்பகுதி படம் இருந்தது என்பது தான் உண்மை. குறிப்பாய் கோவை சரளா & தேவதர்ஷினி அடிக்கிற லூட்டி. அடடா ! அட்டகாசம். படத்தின் வெற்றிக்கு மிக மிக முக்கிய காரணம் இவர்களே. பெண்கள் வருகை இதனால் அதிகரிக்கிறது என்பதோடு ஆண்களும் ரசிக்கும் படி உள்ளது இவர்கள் காமெடி. அதிலும் வீட்டில் பேய் உள்ளதா என தெரிந்து கொள்ள இவர்கள் எடுக்கும் டெஸ்டுகளும் அதற்கு இருவரின் ரீ ஆக்ஷனும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது. இது போன்ற மாமியார்- மருமகள் நிஜத்தில் பார்க்க முடியாது என்றாலும், படத்தில் நிச்சயம் ரசிக்கலாம். கோவை சரளா டயலாக் டெலிவரி செம! பல வசனங்கள் நிறுத்தி, இழுத்து இவர் பேசும் போது சிரிப்பு பிய்த்து கொண்டு போகிறது.

கதை மிக நேராக வேறு எந்த விஷயத்தையும் தொடாமல், டைவர்ட் ஆகாமல் செல்கிறது. ராகவா லாரன்ஸ் பயம், ஜொள்ளு கலந்த அந்த பாத்திரத்துக்கு சரியாக பொருந்துகிறார்.

சரத் குமாரை ஒரு சர்பிரைஸ் ஆக (படம் முடியும் வரை வெளியே தெரியாமல்) உபயோகித்துள்ளனர். சாதாரண மக்களிடம் சரத் குமாருக்கு இன்னும் கூட ஒரு ரீச் இருப்பது புரிகிறது. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒரு ஆழமான விஷயத்தை தொடுகிறது. சமீபத்தில் திருநங்கைகள் சம்பந்தமாக சில படங்கள் வந்து எதுவும் சரியாக ஓடவில்லை. இந்த படம் சொல்லும் ஆதாரமான விஷயம் திருநங்கைகள் பற்றியது. படம் செம ஹிட்.

பயமுறுத்தும் அல்லது பயமுறுத்த முயற்சிக்கும் காட்சிகளை இரவிலும், பகலில் ரொமான்ஸ் அல்லது காமெடி காட்சிகள் என தெளிவாக பிரித்து விட்டார் இயக்குனர். திகில் காட்சிகளிலும் இருக்கும் காமெடி தான் நம்மை அவற்றை ரசிக்க வைக்கிறது. ஒளிப்பதிவு, எடிட்டிங் இவை பற்றியெல்லாம் கவலை படாது, தான் யாருக்காக படம் எடுக்கிறோம் என தீர்மானமாக உள்ளார். படம் பெரும்பாலும் ஒரு பங்களாவில் நடக்கிறது. சில காட்சிகள் ஒரு கிரவுண்டில் ..மிஞ்சி போனால் பாடல்களுக்கு ஊட்டி!  

மிக சிக்கனமான பட்ஜெட்டில் எடுத்த இந்த படம் தியேட்டர்காரர்கள், விநியோகஸ்தர்கள் என அனைவருக்கும் எக்க சக்கமாய் பணம் சம்பாதித்து கொண்டிருப்பதாக சமீபத்து சென்னை பதிவர் சந்திப்பில் பேசி கொண்டனர். (அது தான் நான் இந்த படம் பார்க்க காரணமே) பதிவர்களில் பலர் படம் பார்த்திருந்தனர். அவரவரும் படம் எப்படி ஓடுகிறது என தங்கள் version பகிர்ந்து கொண்டனர். 

இனி படத்தில் ரசிக்க முடியாத சில விஷயங்கள்:

ராகவா லாரன்ஸ் அம்மா கோவை சரளா இடுப்பில் ஏறி கொள்வது சிரிக்க வைத்தாலும், அண்ணி இடுப்பில் ஏறுவதேல்லாம் டூ மச்.

ஹீரோயின் இன்றியே இந்த படம் எடுத்திருக்கலாம் எனினும் Commercial compulsion -க்காக லட்சுமி ராய். இன்னும் சற்று ஸ்கோப் உள்ள பாத்திரமாகவும், இன்னும் நல்ல ஹீரோயினாகவும் இருந்திருக்கலாம்.

கடைசி பாட்டு மற்றும் சண்டை போர். பேய் நரசிம்மர் கோயில் உள்ளே எல்லாம் புகுந்து பின் வில்லனை கொல்வது 
ஹிஹி.

திருஷ்டி பரிகாரம் போல் பாடல்கள். திரை அரங்கம் என்றால் சிகரெட் பிடிக்கவும், சி டியில் பார்த்தால் forward செய்யவும் வைக்கின்றன .

மீண்டும் படம் ஓடுகிற விஷயத்துக்கு வருவோம். வெளியீட்டின் போது தந்த சரியான மார்கெட்டிங் 
படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம்! டிவி, பேப்பர் இன்ன பிற மீடியாக்களில் ராம. நாராயணன் தந்த விளம்பரங்கள் படத்தை நன்கு பிரபலமாக்கி விட்டது. குறிப்பாக குட்டி பசங்கள் படம் பார்க்க காட்டும் ஆர்வமும், பெண்கள் கூட்டம் திரை அரங்கிற்கு வந்ததும் படத்தை வெற்றி பெற வைத்து விட்டது. 

தமிழ் திரை உலகம் இன்றைக்கு இருக்கும் நிலையில் இத்தகைய வெற்றிகள் குளுக்கோஸ் ஏற்றுவது போல் உள்ளது.

காஞ்சனா: நன்றாக சிரிக்க வைக்கிறது இந்த முனி !

Monday, August 15, 2011

வானவில்: சுதந்திர தின டிவி சிறப்பு நிகழ்ச்சிகள் -ஓர் பார்வை

பிறந்த நாள்

வழக்கம் போல் இந்த வருட பிறந்த நாளும் இனிமையாக கழிந்தது. சிறு வயது முதலே எனது பிறந்த நாளை வீட்டில் விமர்சையாக கொண்டாடுவார்கள். பெரிய அண்ணன் கலர் பேப்பர்களை வாங்கி வெவ்வேறு சைசில் நறுக்கி வீடு முழுதும் ஓட்டுவார். அதில் பல அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர்கள் எனக்கு பிறந்த நாள் வாழ்த்து எழுதியது போல் அவரே எழுதுவார். அந்த சின்ன வயதில் ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும்.

இந்த ஆண்டு ரெண்டு கேக் வெட்டினேன் ! அலுவலகத்தில் ஒன்று. வீட்டில் ரெண்டாவது !! ஆபிசில் சரியான வேலை எனவே வீட்டுக்கு வரவே இரவு ஒன்பதரை ஆகி விட்டது. அப்போது சர்பிரைஸ் ஆக கேக் வெட்ட வைத்து, பலூனுக்குள் என்னெவோ போட்டு வெடிக்க வைத்து அசத்தி விட்டனர். என் பெண் சின்ன வயதிலிருந்தே தானாக தயார் செய்த க்ரீடிங்க்ஸ் தருவாள். கூடவே இந்த முறை ஒரு ஆர்ட் வொர்க்கும் தந்தாள்.

நண்பர்களின் வாழ்த்துக்கும், அன்பிற்கும் நன்றி !

சுதந்திர தின டிவி நிகழ்ச்சிகள்: ஒரு பார்வை

இணையத்தில் விசேஷ தினங்களில் டிவி சிறப்பு நிகழ்ச்சிகளை விடாமல் பார்த்து விட்டு, அது பற்றி எழுதும் ஒரே பதிவு வீடுதிரும்பல் என்கிற உங்களின் எதிர்பார்ப்பை ஈடுசெய்யும் விதத்தில் இதோ ஒரு சிறு அலசல்..

கலைஞரில் லியோனி பட்டிமன்றம் ஓரளவு சிரிக்க வைத்தது. இனியவன் பேசும்போது வசந்த மாளிகை பாடல் வரியான "அன்னத்தை தொட்ட கைகளினால் மது கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்" என்பதை மேற்கோள் காட்டி, இதன் அர்த்தம் " சாப்பிட்ட பின் சரக்கடிக்க கூடாது" என்பதே என்று வில்லங்க விளக்கம் குடுத்தார். லியோனி கிராமத்து டென்ட் கொட்டகையில் மணல் கொட்டி படம் பார்க்கும் அனுபவத்தை சொன்னபோது மலரும் நினைவு !

சாலமன் பாப்பையா பட்டி மன்றத்தில் மனிதாபினம் வளர்கிறது என்று பேசிய பாரதி பாஸ்கர் பின்னி எடுத்தார். மிக உணர்ச்சி பூர்வமாக இந்தியாவில் மட்டுமே என்னென்ன விதத்தில் கருணை மிகுந்த மனிதர்களை பார்க்க முடியும் என்று பேசி நெகிழ வைத்தார். (சாலமன் பாப்பையா பட்டி மன்றங்களில் ராஜா எப்போதும் தோற்கும் அணியிலேயே இருப்பார். போலவே பாரதி பாஸ்கர் எப்போதும் ஜெயிக்கும் அணிதான். கவனித்துள்ளீர்களா?)

பல்வேறு படங்கள் போடப்பட்டன. ஜெயா டிவியில் சரத்குமார், நயன்தாரா நடித்த "தலைமகனும்" சன்னில் போட்ட "வாடா" படமும் எது மோசமான படம் என்பதற்கு போட்டியிட்டன. கலைஞரில் ரெண்டாவது முறையாக மதராச பட்டினமும் சன்னில் இருபதாவது முறையாக கில்லியும் போட்ட போது, விஜய் இது வரை காண்பிக்காத " யுத்தம் செய்" ஒளி பரப்பி, அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தது.

விஜய்யின் சுதந்திர தின சிறப்பு நீயா நானா செம போர். தமிழில் மட்டுமே பேசுவோர், அதற்கு நேர் எதிரான மற்றொரு பிரிவினர். நிகழ்ச்சி எங்குமே சிறிதும் சுவாரஸ்யம் இல்லை.

அனுஷ்கா பேட்டி கலைஞரில் பார்க்க முடியாத படி வேறு எதோ வேலை. நீங்க யாராவது பார்த்தீங்களா? தலைவி எப்படி இருந்தாங்க? என்ன சொன்னாங்க? :)))

அனைத்து சேனல்களும் சொல்லி வைத்த மாதிரி தெய்வ திருமகள் படம் குறித்து விக்ரமை அழைத்து பேசியது. அதுவும் இரவு பத்து மணிக்கு பல சேனல்களில் விக்ரம் பேட்டி தான். விஜய்யில் மட்டும் "நிலா" (பேபி சாரா) வந்தது.

சன் கில்லி, வாடா, வானம் என ஒரே நாளில் மூன்று படங்கள் போட்டு கே டிவி போல் இருந்தது. கலைஞரும் மதராச பட்டினம், தூங்கா நகரம்,வாரணம் ஆயிரம் என ஒரே பட மயம் தான். ஆட்சிக்கு வந்த பின்னும் ஜெயாவில் நல்ல படங்கள் வந்த பாடில்லை. இருப்பதில் விஜய் சினிமா மட்டுமின்றி பல நிகழ்ச்சிகளும் கலந்து காண்பித்ததால் பரவாயில்லை என சொல்ல வேண்டும்.

QUOTE CORNER

A hero fears nothing, complains of nothing and never gives away.

பிடித்த பாட்டு - முன்பே வா என் அன்பே வா

கடந்த சில ஆண்டுகளாக எனது ரிங் டோன் இந்த பாட்டு தான். மாற்றவே மனம் வரலை. பாடிய இரு குரல்களுமே (நரேஷ் ஐயர் & ஸ்ரேயா கோஷல்) எனக்கு ரொம்ப, ரொம்ப favourite. படமாக்கிய விதமும் அருமை. பூக்கள், மழை, ஏரி, மலை, பசுமை, கல்லூரி வளாகம் என இந்த பாடலின் Background ..அனைத்துமே ரசிக்கும் படி இருக்கும். அதுவும் கடைசியில் வருகிற ஸ்ரேயா கோஷலின் ஹம்மிங்.. சூப்பர்ப் .. சான்சே இல்லை! உங்களில் பலருக்கும் இந்த பாட்டு பிடிக்கும் என்றே நினைக்கிறேன்



நாட்டி கார்னர்

கார வகைகளில் "நீட்ட குச்சி" போன்ற ஒரு காரம் விற்கப்படும் தெரியுமா? மரவள்ளிகிழங்கு சிப்ஸ் தான் இது! மிக சின்ன குச்சி போல் இருக்கும். இதை நாட்டி விரும்பி சாப்பிடும். ஒவ்வொரு சிறு குச்சி தந்தால், அதை பிடித்தவாறு சாப்பிடும் அழகு இருக்கே !  "கருக்..முருக்" என சத்தம் வருகிற மாதிரி சாப்பிடும் நாட்டி. அநேகமாய் எப்போது குடுத்தாலும் மறுக்கமால் இதை சாப்பிடும். தன் இரு விரல்களுக்கு இடையே அதனை பிடித்து கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுவதை பார்த்தால், மனிதர்கள் சிகரெட் பிடிப்பது தான் நமக்கு ஞாபகம் வரும் !!

அய்யாசாமியும் மாருதி காரும்

அய்யாசாமிக்கு கார் ஓட்ட வரு......ம்.... ஆனா வரா..........து..!! (அவர் கார் ஓட்டும் லட்சணத்தை இதுக்கு மேல் தெளிவா சொல்ல முடியாது). ஒரு காலத்தில் தத்தக்கு பித்தக்குன்னு கார் ஓட்டிக்கிட்டுருந்தார். ஒரு ஞாயிறு இரவு குடும்பத்துடன் வரும்போது வண்டி பிரேக் டவுன் ஆகி நடு காட்டில் நிற்க வேண்டியதா ஆகிடுச்சு. அன்னிக்கு வீட்டுக்கு வருவதற்குள் "போதும் போதும்"னு ஆகி, அதிலிருந்து கார் எடுக்காமலே நிறுத்தி வச்சிருந்தார். பின் மாச கணக்கில் கார் சும்மா இருப்பதை பார்த்து ரத்த கண்ணீர் வர, காரை குடுத்துட்டார் (ஆம் விக்கலை. குடுத்துட்டார்)

Thursday, August 11, 2011

டுபுக்கு & அப்துல்லா :சென்னை பதிவர் சந்திப்பு - சுடச்சுட பகிர்வு

பதிவர் டுபுக்கு வருகையை ஒட்டி சென்னையில் நேற்று மாலை பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடாகியிருந்தது. இதில் "அண்ணே" அப்துல்லா நண்பர்களின் நீண்ட நாள் விருப்பத்திற்கிணங்க பிரியாணி ஏற்பாடு செய்வதாக சொல்ல, கூட்டம் களை கட்டியது.

முதலில் வழமை போல் காந்தி சிலை என்று தான் சொல்லியிருந்தனர். ஆனால் திடீர் மழையால் சந்திப்பு, அப்துல்லா வேலை பார்க்கும் அலுவலகத்துக்கு மாற்றி விட்டனர். கிட்டத்தட்ட 25 பதிவர்கள். மிக அற்புதமான, நிறைவான சந்திப்பு

எனக்கு தெரிந்து வந்திருந்த நண்பர்கள்:

டுபுக்கு, அப்துல்லா, அனுஜன்யா, கேபிள் சங்கர், யுவக்ரிஷ்ணா, அதிஷா,பால பாரதி, டாக்டர் புருனோ, கார்க்கி, ஆதி, கே. ஆர். பி. செந்தில், ஓ.ஆர். பி. ராஜா, சுரேகா, எறும்பு ராஜகோபால், பலா பட்டறை சங்கர், அதியமான் , காவேரி கணேஷ், எல் கே , தமிழ் அமுதம், சுகுமார், பிரதீப் (பெய்யென பெய்யும் மழை), வெட்டி பையன்.

இன்னும் சிலர் வந்திருந்தனர். பெயர் மறந்து விட்டது. மன்னிக்க. விடுபட்ட பெயர்கள் நண்பர்கள் சொல்லலாம்.


படங்கள் நன்றி தமிழ் அமுதன்மேலும் படங்களுக்கு இங்கே பாருங்கள்


சந்திப்பின் சில துளிகள்:

முதலில் அப்துல்லா அலுவலகம் வெளியில் காத்திருந்தோம். அப்துல்லா மற்றும் கேபிள் பிரியாணி வாங்க பெரியமேடு சென்றிருந்தனர். அப்துல்லா போன் செய்து சொன்னதும் அலுவலக கான்பரன்ஸ் அறையில் அமர வைத்தனர். நண்பர்கள் வந்த வண்ணம் இருக்க, அறையில் சேர்கள் போத வில்லை. பின் எங்கெங்கிருந்தோ சேர்கள் எடுத்து வந்து போட்டனர். ஆபிசில் இருக்கும் எல்லா சேரும் அங்கே வந்திருக்கும் போல என கமெண்ட் அடித்து கொண்டிருந்தோம்.

சந்திப்பு செமையாக களை கட்டியதற்கு முக்கிய காரணம் கார்க்கி, டுபுக்கு, சுரேகா, பால பாரதி உள்ளிட்டோரின் நகைச்சுவை உணர்வு. மனிதர்கள் சிரிப்பு வெடிகளை அள்ளி விட்டு கொண்டிருந்தனர். அதுவும் கார்க்கி ஒரு சிரிப்பு பட்டாசு.

ஒரு பிரபல பதிவர், அதிஷா என்பது பெண் பெயர் என நினைத்து கொண்டிருந்து விட்டு, அதிஷாவை நேரில் பார்த்து ஆண் என தெரிந்து நொந்து போன சம்பவம் பற்றி பகிர்ந்த போது அனைவரும் சிரித்து கண்ணில் தண்ணியே வந்து விட்டது.

இருந்த பதிவர்களை கலாய்த்தது ஒரு பக்கம் என்றால் வராத ஜாக்கி, உண்மை தமிழன் சாரு போன்றோர் பற்றி பேசி சிரித்தது இன்னொரு தனி கதை.

அனுஜன்யா மும்பையிலிருந்து வேறு வேலையாக வந்தவர் சர்பிரைஸ் ஆக வந்து ஜோதியில் கலந்தார். டுபுக்கு மற்றும் அனுஜன்யா இருவரும் வங்கியில் பணி புரியும் பதிவர்கள். இரு வேறு துருவங்களான இவர்கள் அருகருகில் அமர்ந்து பேச, " நீங்க பேசுங்க நாங்க எல்லாரும் பாக்குறோம்" என நக்கல் !!

கிரிக்கெட் ஆர்வலரான எல் கே அங்கு வந்தும் இந்தியா இங்கிலாந்து கிரிக்கெட் மேட்ச் ஸ்கோர் பற்றி பேசி மனம் நொந்து கொண்டிருந்தார்.

டுபுக்கு பல ஆண்டுகளாக எழுதுவதால் பழைய பதிவர்கள் பலர் வந்திருந்தனர்.

கேபிள் நிர்வாக தயாரிப்பளாராக பணியாற்றிய அரும்பு மீசை படத்துக்கு விமர்சனம் எழுதிய ஒரே பதிவர் கேபிள் தான் என கலாய்க்க, "ஏய். இல்லைப்பா. ஜாக்கி கூட எழுதினாரு தெரியுமா? " என்றார் கேபிள்.

காவேரி கணேஷ் தனக்கு மகள் பிறந்ததாக இனிப்பு தந்தார். திருமணமாகி பல ஆண்டுகள் கழித்து பிறக்கும் குழந்தை. மிக மகிழ்ச்சியாக வாழ்த்து சொன்னோம்.

டாக்டர் புருனோவுக்கு எப்போது போன் செய்தாலும் ரீச் ஆகாது என சொல்ல, அவர் அதை மறுக்க, அப்போதே சிலர் போன் அடித்தும் அவருக்கு ரீச் ஆகலை !! டாக்டர் சார் வேற சர்விசாவது மாத்துங்க

லண்டனில் தற்போது எதனால் கலவரம் நடக்கிறது என்று பகிர்ந்தார் இங்கிலாந்தில் வசிக்கும் டுபுக்கு (இன்டர்வியூ உபயம் கார்க்கி)

"ஒரே ஆளை பார்க்க இவ்வளவு பெரிய கூட்டம் இந்த ஆபிசில் யாருக்கும் வந்திருக்காது. அப்துல்லா வேற தி.மு.க காரர். நில அபகரிப்பு கேசில் தப்பிக்க தான் நம்மளை எல்லாம் இங்கே ஒளிச்சு வச்சிருக்கார்னு நினைச்சுக்க போறாங்க" என ஒருவர் எடுத்து விட்டார். அடுத்த முறை ஆபிஸ் பையன் தண்ணீர் வைக்க வந்த போது " ஏம்பா, மதுக்கூர் நிலவரம் எப்படி? மதுரையில் என்ன நடக்குது? போலிஸ் வந்துடும்னு நினைக்கிறியா? " என்றெல்லாம் பேச, தண்ணீர் கொண்டு வந்த பையன் சற்று கலவரமாகி வெளியே சென்றான் !

சமீபத்திய ஆங்கில படமொன்றில் மருத்துவ துறையை சார்ந்தவர்கள் டயபடிஸ் சரி செய்ய மருந்து வந்தும், அதை வெளியே சொல்லாமல் எப்படி ஏமாற்றுகிறார்கள் என காண்பித்ததாக சுரேகா சொல்ல, "அந்த படம் புருடாங்க. நூறு பேரில் அம்பது பேருக்கு டயபடிஸ் சரி பண்ண சொல்லுங்க பார்ப்போம்" என பொங்கி விட்டார் டாக்டர் புருனோ.

"தோழி மற்றும் குஜ்ஜு என எப்படி ரெண்டு பேரை சமாளிக்கிறீங்க? குஜ்ஜு பொய் தானே? "என அடுக்கடுக்காய் கார்க்கியை குறுக்கு விசாரணை செய்தார் வக்கீல் (வேற யாரு அய்யாசாமி தான்!)

"வக்கீல் கிட்டேயும் டாக்டர் கிட்டேயும் பொய் சொல்ல கூடாது இங்கே ரெண்டு பேரும் இருக்காங்க " என சொல்லிட்டு அடுத்தடுத்து பொய்யா சொல்லிக்கிட்டிருந்தார் கார்க்கி

ஏற்கனவே ஹீரோ மாதிரி இருக்கும் பலா பட்டறை சங்கர் பிரான்ச் தாடியெல்லாம் வைத்து அசத்தி கொண்டிருந்தார்.

"டுபுக்கு நீங்க ஹீரோ மாதிரி தான் இருக்கீங்க. நீங்க டைரக்ட் பண்ற படத்தில் நீங்க தான் ஹீரோவா? " என கேட்க, " இல்லீங்க "நான் டைரக்சன் மட்டும் தான் " என்றார் டுபுக்கு சீரியசாக !

டுவிட்டர், பேஸ்புக், ப்ளாக், லின்குட் இன் இவற்றின் ஒற்றுமை, வேற்றுமை, பலன்கள், பிரச்சனைகள் இவை கொஞ்ச நேரம் பிரித்து மேயப்பட்டது.

ஆதிக்கும் எனக்கும் ஒரு பதிவில் சின்ன சண்டை வந்திருந்தது. அதையும் பேசி சரியாகி இந்த முறை "நண்பேண்டா" ஆகிட்டோம்

கார்க்கி பாஸ் அவருக்கு போன் செய்தார். அப்போ கார்க்கி பேசிய ஸ்டைலை பார்க்கணுமே ! என்ன பவ்யம்!! அவர் பேசிய போது நாங்கள் அனைவரும் பேசுவதை நிறுத்தி விட்டு கார்க்கி பம்மியதை மட்டும் பார்த்து சிரித்து கொண்டிருந்தோம்.

மொட்டை மாடியில் ஊழியர்கள் உணவருந்தும் இடத்தில் அனைவரும் அமர்ந்து சாப்பிட்டோம்.சூடாக, சுவையாக பிரியாணி. செம டெஸ்ட்டி. கேபிள் பாணியில் சொல்லனும்னா டிவைன் !

சாப்பிடும் போது " என்னயா இந்த விஜய் படம் எடுக்கிறார். பொய் சொல்ல போறோம், மதராச பட்டினம் , தெய்வதிருமகள், எல்லாமே திருட்டு தான்" என ஒரு கூட்டம் சொல்ல, மற்றொரு குழுவோ "காபி அடிக்கமால் படமே எடுக்க முடியாது" என வாதிட்டது.

பிரபல பதிவர் கேபிள் சங்கரும், பிரபல தொழிலதிபர் ஓ.ஆர். பி. ராஜாவும் தான் அனைவருக்கும் ஓடி, ஆடி உணவு பரிமாறினார்கள் (வெயிட்டான ஆளுங்க. அரை கிலோவாவது குறைஞ்சா சரி. )

தமிழ் அமுதம், டுபுக்கு போன்ற சிலர் புகை படம் எடுத்தனர். அவர்கள் அவற்றை பகிர்ந்தால் உண்டு.

எனக்கு அலுவலகம் மற்றும் தனிப்பட்ட முறையில் சில வாரங்களாக ஏகப்பட்ட மன அழுத்தம். தொடர்ந்து ரெண்டு, மூன்று மணி நேரம் எல்லா கவலையும் மறந்து விட்டு விடாது (Non Stop) சிரிக்க முடிந்தது மிக பெரிய relief ஆக இருந்தது.

 ****
மேலே படத்தில் உள்ள இந்த பதிவருக்கு நாளை பிறந்த நாள். நாளை காலை முழுதும் ACS Institute-ல் ஒரு செமினாரில், தான் பேச உள்ளதாகவும் அதனால், அப்போது நண்பர்கள் யாரும் தொலை பேசியில் பேச வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார். (ம்க்கும்.. இவர் செமினாரில் பேசுறதை உங்க கிட்டே சொல்லணுமாம்!)

யாரென்று கண்டு பிடிக்க முடியா விட்டால், சென்ற ஆண்டு ஆகஸ்ட் 12-ல் எழுதிய இந்த பதிவை பாருங்கள் !!

Monday, August 8, 2011

வானவில்: அழகர் சாமியின் குதிரை.. கல்கி கவிதை !

பார்த்த படம் அழகர் சாமியின் குதிரை 
அழகர் சாமியின் குதிரை இப்போது தான் பார்க்க முடிந்தது. இந்த வருடம் வெளிவந்த நல்ல திரைப்படம் என நிச்சயம் சொல்லலாம். பிற நாட்டு படங்களின் பாதிப்பின்றி இப்படி ஒரு நல்ல படம் எடுத்தமைக்கே பாராட்ட வேண்டும். அடுத்து அப்புக்குட்டி போன்ற ஒருவரை ஹீரோவாக போட்ட தைரியம். படம் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் செல்கிறது. கோயிலில் உள்ள குதிரை வாகனம் யார் திருடியது, எப்படி கிடைக்கும் என்ற சஸ்பென்ஸ் நம்மை தொடர்ந்து ஆர்வத்துடன் பார்க்க வைக்கிறது. கிளைமாக்ஸ் சற்று dramatic !! ராம ராராயணன் படங்கள் மாதிரி குதிரை எல்லா கெட்டவர்களையும் அஞ்சு நிமிஷத்தில், செய்த தப்புக்கேற்ற மாதிரி "அந்தந்த" இடத்தில் மிதிக்கிறது!! இளைய ராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும் அருமை. மொத்தத்தில் படம் பார்த்து முடிக்கும் போது ரொம்ப நிறைவாக உள்ளது. சமீபத்திய இயக்குனர்களில் நிச்சயம் சுசீந்திரன் கவனிக்க படவேண்டியவர். மூன்று படங்களும் இதுவரை மிக டீசன்ட் ஆகவும், வித்தியாசமாகவும் தந்துள்ளார். அவசியம் பாருங்கள் அழகர் சாமியின் குதிரை.

கல்கியில் கவிதை


நீண்ட நாள் கழித்து எனது கவிதை ஒன்று புத்தகத்தில் பிரசுரம் ஆகியுள்ளது. சென்ற வார கல்கியில் வெளியானது இந்த கவிதை...


சொந்த ஊர் பற்றிய பாடல் ஒன்று 

தனது ஊருக்கு சென்று பெற்றோரை பார்க்க முடியாத சோகம் சொல்கிறது மேலே உள்ள கவிதை. சொந்த ஊர் பற்றிய பாடல்களில் என்னை மிக கவர்ந்தது இந்த பாடல். வீடியோவாக பார்க்கையில் அவ்வளவு தூரம் ஈர்க்காததன் காரணம் இந்த பாடலை கேட்ட பல்வேறு தருணங்களிலும் என் சொந்த ஊரே மன கண்ணில் ஓடியதாக இருக்கலாம். ஆடியோவில் கேட்க, கேட்க அலுக்காத பாடல் இது. பேருந்தில் எங்கள் ஊரான நீடாமங்கலத்தில் நுழையும் போது வாக்மேனில் இந்த பாடலை கேட்டவாறே , "பாலங்கள், ஆறுகள், தெருக்கள்" பற்றிய வரிகளோடு இந்த பாடலின் நாயகனாக சில முறை வாழ்ந்திருக்கிறேன்.


இந்த பாடலின் காட்சியமைப்பில் என்னை கவர்ந்தது: சிறுவனை ஹீரோயினும், நடக்க முடியாத பெரியவரை ஹீரோவும் தூக்கி வருகிற இடம் தான். (பிடித்த பாடல்கள், அதன் காரணத்தோடு இனி அவ்வப்போது இப்படி பகிர எண்ணம்..)

கிரிக்கெட் கார்னர்


இங்கிலாந்தில் ஆடும் இந்திய அணியை பார்த்தால் பாவமாய் இருக்கு. ஹர்பஜன் இவ்வளவு மோசமாக பவுலிங் போட்டு பார்த்ததில்லை. பேட்டிங்கில் டிராவிட் தவிர சொல்லிக்கொள்கிற மாதிரி யாரும் ஆட வில்லை. உலகின் மிக நீண்ட டெயில் நம் டீமுடையது. மாறாக இங்கிலாந்து அணியில் கடைசி ஆட்களின் ஆவரேஜ் யுவராஜ், ரைனா போன்ற நமது பாட்ச்மேன்களின் டெஸ்ட் ஆவரேஜ் போல் உள்ளது. டிராவிட் முதல் இரு மேட்ச்களிலும் அற்புதமாக ஆடினார். மிக மெதுவாக ஆடுகிறார் என டிராவிடை வெறுக்கும் ஆட்களும் கூட ரசிக்கும் படி இருந்தது அவர் ஆட்டம் !

எப்போது லேண்ட்மார்க்கை நெருங்கினாலும் சில மேட்சுகள் நம்மை காக்க வைத்து விட்டு பின் கடப்பது தான் சச்சினின் வழக்கம். அவரை ஸ்பான்சர் செய்யும் நிறுவனங்கள் அவரும் நூறாவது செஞ்சுரி அடிப்பார் என மேட்ச் நடக்கும் நாட்களில் ஒரு பக்கம் விளம்பரத்திற்கு ஒதுக்கி வைத்து ஏமாறுகின்றன.

இந்தியா தனது நம்பர் ஒன் டெஸ்ட் ஸ்டேட்டசை தற்காலிகமாவது இழக்கத்தான் போகிறது. அடுத்தடுத்த சீரிஸ் ஆவது ஒழுங்காக ஆடி மீண்டும் நம்பர் ஒன் ஆனால் சரி !

QUOTE HANGER

As food is necessary for the body, prayer is necessary for the soul.

நாட்டி கார்னர்

(எங்கள் வீட்டு கிளி நாட்டியின் குறும்புகள் சில அவ்வப்போது இங்கு பகிரப்படும்).

காலை எழுந்ததும் அநேகமாய் அனைவரும் நாட்டி அருகில் சில நிமிடங்களாவது செலவிடுவதும், அதனை கொஞ்சுவதும் வழக்கமாகி விட்டது. ஒரு நாள் முதலில் எழுந்த நான் கூண்டினுள் பார்க்க நாட்டியை காணும். ரூம் முழுதும் பார்த்தும் ஆளை காண வில்லை. டியூப் லைட் போட்டு பதட்டத்துடன் தேட, டைனிங் டேபிள் கீழே ஒளிந்து கொண்டு அமர்ந்திருந்தது நாட்டி ! பின் மெதுவாய் நடந்து வந்து கூண்டினுள் சென்று விட்டது. அது காணாமல் பதட்டப்பட்ட நிமிடங்கள் செம டென்ஷன் !

நாட்டி பல நேரம் கூண்டில் உள்ள கட்டையில் அமர்ந்து கொண்டு கீழே பாத்திரத்தில் உள்ள ஏதாவது உணவை சாப்பிடும். இப்படி கீழே குனிந்து சாப்பிடுவதால் தலை கீழாய் சாப்பிடுவது போல் இருக்கும். கூண்டிற்குள் கீழ் பக்கம் வந்து அமர்ந்தும் சாப்பிடலாம். ஆனால் நாட்டிக்கு இப்படி தலை கீழாய் சாப்பிடுவது தான் பிடிக்கிறது!

அய்யாசாமி

"கடவுளால் கூட முடியாத விஷயம் ஒண்ணு உண்டு. நடந்ததை மாத்த அவராலும் முடியாது" இது மனசுல நல்லா பதிஞ்சு போனதிலிருந்து, கடந்த காலம் பத்தி அதிகம் வருத்தப்படுவதில்லை. ஆனா எதிர் காலம் பற்றி பயம், யோசனை இல்லாம இருக்க முடியலை. "எல்லாம் நல்லா தான் போய்க்கிட்டுருக்கு ஆனா கூட ஏன் எதிர் காலம் பத்தி பயம் இருந்து கிட்டே இருக்கு?"  என்னென்னவோ சொல்லி உள்ளுக்குள்ளே இருக்க ஆளை சும்மா இருக்க சொன்னாலும், அவரு அடங்காமல் எதையாவது எடுத்து விட்டுகிட்டே இருக்கார். இதுக்கு என்ன தான் பண்றது? இது எனக்கு மட்டுமா? எல்லாருக்குமா? பதில் சொல்லுங்க மக்களே "

Sunday, August 7, 2011

நண்பர்கள்: நின்றுபோன நீருற்றுகள்

எழுதியவர்: தேவகுமார் 

நண்பர்கள் தினத்தில் என் நண்பர்களை பற்றி நினைத்து கொண்டு இருக்கும் போது, திடீர் என்று இறந்து போன நண்பர்களை பற்றின ஞாபகம் வந்தது. வழியில் தவறவிட்ட அந்த நண்பர்களை பற்றின குறிப்பு தான் இந்த பதிவு.

ஜெயசீலன்: என்னோடு ஆறாவதில் இருந்து எட்டாவது வரை படித்தவன். பக்கத்துக்கு ஊர்காரன். நானும், அவனும் சேர்ந்துதான் பள்ளிக்கு சைக்கிளில் போவோம் (நான் குரங்கு பெடல் அவன் முக்கோணம்!). நாங்கள் ஏழாவது போன போது, அவனின் அத்தை மகளும் சேர்ந்து கொள்ள, எங்கள் சைக்கிள் பயணம் இனிமையாய் ஆனது (நானும் முக்கோணத்திற்கு மாறியிருந்தேன்). அவன் ஏழாவது படிக்கும் போதுதான் கதை எழுத ஆரம்பித்தான் (நாங்கள் இரும்புக்கை மாயாவியின் பிடியில் இருந்தே வெளிவராத சமயம் அது!). அவன் கதையில் வந்த இளைஞர்கள் புல்லெட் வைத்து இருந்தார்கள்; பாலியஸ்டர் சட்டை அணிந்து இருந்தார்கள்; கள்ள சாராய பானைகளை உடைத்தார்கள்; சீட்டாடும் இடத்தில கலகம் செய்தார்கள். அப்போதே கதை சோறு போடாது என எப்படி அவனுக்கு தெரியும் என தெரியவில்லை, என்னவாக ஆகபோகிறாய் என கேட்டால், கதாசிரியர் என சொல்லாமல், கண்டக்டர் என சொல்வான். எட்டாவது முழுஆண்டு விடுமுறையில் அவன் திடீர் என்று இறந்து போனான். என்ன காரணம் என யாருக்கும் தெரியாத நிலையில், எப்போதும் காரணம் தெரியாத இறப்புக்கு சொல்லும் காரணத்தையே சீலனின் மரணத்திற்கும் சொன்னார்கள் - அது, மூலையில் ரத்த நரம்பு வெடித்துவிட்டது. இருந்திருந்தால் ஒரு கதாசிரியர் ஆகவோ, அவனுக்கு பிடித்த பேருந்து நடத்துனர் வேலைக்கோ போயிருப்பான். எந்த கதையிலாவது புல்லெட் ஓடும்போது, அல்லது சிவப்பான பேருந்து நடத்துனரை பார்க்கும்போது நான் ஜெயசீலனை நினைத்து கொள்கிறேன்.


(தேவாவின் புகைப்படம் அவசரத்துக்கு கிடைக்க வில்லை. 23 வருடமாய் தொடரும் நட்பு, நண்பர்கள் தினத்துக்கு பொருத்தமாய் இருக்கும் என இந்த புகைப்படம் பகிர்கிறேன்.அனைவருமே வக்கீல்கள்!-மோகன் குமார்)

விஜய சந்திர பிரகாஷ்: நான் அவனின் பேருக்கே பெரிய விசிறி. பேருக்கு பொருத்தமாய் கம்பீரமாய் இருப்பான் VCP. இவன் என் சட்ட கல்லூரி தோழன். சென்னை பசங்களை தவிர என் வகுப்பில் சரளமாய் ஆங்கிலம் பேச தெரிந்தவன் இவன் மட்டும் தான் (ஊட்டி கான்வென்ட் படிப்பு).

எதை பற்றியும் ஒரு கருத்து வைத்து இருப்பான். IPKF - ஐ கடுமையாக விமர்சிக்கும் அதே வேலையில் ஜனநாயக தேர்தல் மட்டுமே இலங்கைக்கான தீர்வு என 1991 - யில்லேயே சொன்னவன். தினமும் ஒரு ஆங்கில செய்திதாளும், வாரம் ஒரு ஆங்கில வார பத்திரிகையும் படிக்கவேண்டும் என எங்களுக்கு அறிவுரை சொன்னவன் (இன்று வரை அதை நான் பின்பற்றுகிறேன்) . "Single woman are not my kind" என James Bond மாதிரி பேசி எங்களை அசர அடித்தவன். நன்றாக படித்தவன் அவன். மூன்றாம் ஆண்டு இறுதியில் அவன் இறந்து விட்டதாக எங்களுக்கு கொஞ்ச நாள் கழித்து தகவல் வந்தது. முதலில் அவன் உடல் நலம் இல்லாமல் இறந்து விட்டதாக நாங்கள் நினைத்தோம். அது தற்கொலை என ஊட்டி போய்வந்த ஒரு நண்பன் சொன்னபோது நாங்கள் நம்பவில்லை. இன்று வரை அதை நான் நம்பவில்லை, VCP ஒரு தைரியசாலி.

செந்தில் குமார்: இவன் என் வகுப்பு தோழன் எனினும் இவன் என் அப்பாவிற்குதான் கூட்டாளி. எங்கள் பக்கத்து வயல்காரன். என் அப்பாவிடம் அவ்வளவு விளக்கமாய் விவசாயத்தை பற்றி பேசுவான் (இந்த பட்டம் நீங்க கடலை போடுங்க, நெல்லு வேண்டாம்; பசுங்கன்னுக்கு கொம்பு சுட்டுடிங்க). இவன் ஏறக்குறைய எங்கள் சுற்றுவட்டாரத்தில் இருந்த எல்லா பள்ளியிலும் படித்தான். தம்மம்பட்டி, முருங்கபட்டி (எங்கள் ஊர்), புத்தனாம்பட்டி, திருச்சி, மீண்டும் எங்கள் ஊர், இப்படி பல பள்ளி சுற்றி வந்தான் செந்தில். எங்கள் பள்ளியில் இவனுக்குதான் நிறைய பட்டப்பேர். வயதுக்கு மீறிய வளர்ச்சி என்பதால் 'குண்டன்' என ஆரம்பித்து எத்தனையோ பேர்கள்.

ஏழாவது வகுப்பில் பூங்கோதை டீச்சர் தெர்மாஸ் குடுவை பற்றி பாடம் எடுக்கும் போது, யார் வீட்டில் தெர்மாஸ் குடுவை இருக்கிறது என கேட்க, நாங்கள் திருதிரு என விழித்தோம் (நாங்கள் தெர்மாஸ் குடுவையை கண்ணில் கூட கண்டதில்லை!) செந்தில் மட்டும் எழுந்து எங்கள் வீட்டில் ஏழு தெர்மாஸ் குடுவை இருக்கிறது என சொல்ல, டீச்சர் அசந்து போய் தீர விசாரித்ததில், அவன் சொன்னது தெர்மாஸ் குடுவை இல்லை, சுரக்காய் குடுவை என தெரிய வர, அன்றில் இருந்து அவன் 'தெர்மாஸ் குடுவை' எனவும் அழைக்கப்பட்டான். அவனது பட்ட பேர்களை இலகுவாய் ஏற்று கொண்டவன். அவனும் பட்ட பேர் வைப்பதில் கில்லாடி. கருப்பாய் இருப்பவனுக்கு 'கரிபால்டி' என பேர் வைத்து எங்கள் பள்ளிக்கு ஒரு புதிய பட்டப்பேரை உருவாக்கி கொடுத்தவன் அவன். செந்தில் பள்ளியில் நன்றாக படித்தவன் இல்லை. பத்தாவது பன்னிரெண்டாவது இரண்டிலுமே தவறி பின் தேறியவன். ஆனால் அவன் BA (Economics) (National College, Trichy) படித்த போது Statistics (வேப்பம்காய்!) பாடத்தில் 83 மதிப்பெண் வாங்கி ஆச்சர்ய படுத்தினான். எப்படிடா? என கேட்டபோது, "ஒண்ணுமில்ல, புதுசா சேர்ந்து இருக்கிற (லேடி) Lecturer எனக்கு Statistics concepts எல்லாம் நல்லா வருது, நல்லா படிச்சா நிறைய மார்க் வாங்கலாமின்னு சொன்னங்க, அதான் Try பண்ணினேன்" என அவன் சொன்னது எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. ஒரு வேளை அந்த Lecturer மாதிரி எல்லோரும் அவன் மீது நம்பிக்கை வைத்து கொஞ்சம் பாராட்டி இருந்தால் அவன் தற்கொலை செய்து கொண்டு இருக்க மாட்டானோ எனத் தோன்றுகிறது. "உங்க பையன் ஊருக்கு வரும்போது எங்க வீட்டுக்கு வரதே இல்ல" என செந்தில் அப்பா கோபித்து கொள்வதாய் என் அப்பா சொல்வார். நான் அவர்கள் வீட்டுக்கு போகாமல் இருப்பதற்கு காரணம், அவர்கள் வீட்டில் 'தெர்மாஸ் குடுவை' இல்லாததாக கூட இருக்கலாம்.

****
உங்கள் நண்பர்களில் யாரையேனும் நீங்கள் தவறவிட்டு இருந்தால், அவர்கள் வீட்டுக்கு ஒரு நடை (என் போல் இல்லாமல்) போய்விட்டு வாருங்கள். அவர்களின் பெற்றோர்களுக்கு இதமாய் இருக்கும்.

உங்களுக்கும், என் நண்பர்களுக்கும் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்!

எழுதியவர்: தேவகுமார் 

Monday, August 1, 2011

ஜூனியர் அச்சீவரும் காக்னிசன்ட் நிறுவனமும்

ஜூனியர் அச்சிவ்மென்ட் (JA) என்கிற தொண்டு நிறுவனம் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. பல நாடுகளில் கிளைகள் கொண்ட இந்நிறுவனம் சில பள்ளிகளை தத்தெடுத்து அந்த பள்ளிகளுக்கு தேவையான Infrastructure உள்ளிட்ட வசதிகளை செய்து தருகிறது. மேலும் பல பள்ளிகளில் உள்ள பத்தாம் மட்டும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தொடர் பயிற்சி அளித்து அவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற உதவுகிறது. இதே போல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தும் இவர்கள் பற்றி மேலும் அறிய http://jaindia.org/ என்கிற இணைய தளத்தை பாருங்கள்.

இத்தகைய ஒரு நிகழ்வாக புழுதிவாக்கம் அரசு மேல்நிலை பள்ளியில் தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக மாணவர்களுக்கு பல்வேறு வித படிப்புகள் மற்றும் வேலை வாய்ப்பு குறித்த தகவல் பகிரும் நிகழ்ச்சி ஜூலை 30 அன்று நடந்தது. இது பற்றிய சிறு தொகுப்பு இதோ .

நிகழ்ச்சி குறித்து பள்ளி மாணவர்கள் இடையே நிகழ்ச்சி பொறுப்பாளர்களில் ஒருவரான கிருத்திகா பேசியபோது எடுத்த வீடியோ இதோ



பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த நிகழ்ச்சி நடந்தது. 15-க்கும் மேற்பட்ட வாலண்டியர்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். HSBC, Deloitte, KPMG, என பல நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் JA-வுடன் சேர்ந்து வாலண்டியர்களாக தொண்டாற்றுகிறார்கள். இதில் மிக அதிக ஆர்வம் காட்டுகிறது காக்னிசன்ட் நிறுவனம். இதன் ஊழியர்கள் பலர் சனி, ஞாயிறுகளில் இதே பணியை செய்கின்றனர். புழுதிவாக்கம் பள்ளிக்கு வந்த வாலண்டியர்களில் என்னை தவிர மற்ற அனைவரும் காக்னிசன்ட் ஊழியர்களே !


வாலண்டியர்களில் ஒருவரான கிருத்திகா ஒரு முறை சென்னையை அடுத்துள்ள ஒரு குறிப்பிட்ட பள்ளிக்கு வாரா வாரம் சென்று பாடம் நடத்துவது குறித்து சொன்னார். நானும் பாடம் எடுப்பெதேன்றால் செல்லலாமே என ஆர்வத்துடன கேட்டேன். " மூணு மணிக்கு வேன் வரும். கிளம்பணும்" என்றார். நான் கூட மதியம் மூணு மணி என்று தான் நினைத்தேன். அப்புறம் தான் தெரிந்தது ... காலை மூணு மணி என்று! அப்போது தான் ஒவ்வொருவராய் கூட்டி கொண்டு சென்னைக்கு வெளியே உள்ள பள்ளிக்கு காலை எட்டு மணிக்குள் சென்று சேர்ந்து பாடம் எடுக்க முடியுமாம்! (நமக்கு இந்த அளவு ரிஸ்க் சரிப்படாது என புழுதிவாக்கம் பள்ளியுடன் தற்போது நான் நிறுத்தி கொண்டிருக்கிறேன் ).

காலை அனைத்து வாலண்டியர்களுக்கும் அன்றைக்கு நடத்த வேண்டிய நிகழ்வு பற்றி ஒரு சிறு briefing தருகிறார்கள். மாணவர்களுக்கு என்னென்ன உதாரணம் தரலாம். எவை பற்றி பேச கூடாது என்கிற அனுபவங்கள் பகிரப்படுகிறது. இது முடிந்ததும் ஓரிரு வாலண்டியர்கள் ஒவ்வொரு வகுப்புக்கும் செல்கிறார்கள்.


துவக்கத்தில் " World of Oppurtunities" என்கிற தலைப்பில் இந்தியாவில் ஒவ்வொரு துறையிலும் என்னென்ன வேலை வாய்ப்புகள் உள்ளன என்பது குறித்து பேசுகிறார்கள். உதாரணமாக ஒரு ஓட்டல் என்றாலே அதில் எத்தனை வித வேலைகள் உள்ளன. சர்வர், கிளீனர், காஷியர், சூப்பர்வைசர், சமைப்பவர் - (இதிலேயே பல வித speciality உண்டு ), செக்யூரிட்டி, ஓனர்.. இப்படி பல வித ஆட்கள் உள்ளனர். இது ஒவ்வொரு நிறுவனத்துக்கும் எப்படி பொருந்துகிறது என மாணவர்களை வைத்தே ஒவ்வொரு நிறுவனத்திலும் உள்ள பல வித வேலைகளை சொல்ல வைக்கிறார்கள்.உங்களுக்கு பிடித்த துறை, பிடித்த வேலை எது என நீங்கள் முடிவு செய்யுங்கள் என்பது தான் இதில் சொல்ல வருகிற கருத்து.
மாணவர்களில் சிலரிடம் வித்தியாச திறமை தென்பட்டால் அதனை கண்டு பிடித்து பாராட்டவும் தவறுவதில்லை. நமது அருள் அரசை பேச சொல்லி வாலண்டியர்கள் கேட்ட வீடியோ இதோ




அடுத்து வேலைக்கு தேவையான குணங்கள் என்னென்ன என்பது குறித்து சில வகுப்புகள் நடக்கின்றன. இதில் பல வித ரோல் பிலேகள் (Role play ) சுவாரசியமாக உள்ளது. உதாரணமாக வேலைக்கு இன்டர்வியூ எனில் என்னென்ன கேள்விகள் கேட்பார்கள் என இன்டர்வியூ நடத்தி காட்டுகிறார்கள்.அங்குள்ள மாணவர்கள் வேலைக்கு ஆட்களை எடுத்தால் எந்தெந்த வேலைக்கு யார் யாரை எடுப்பார்கள் என்பது பற்றி சிறு கேம் வைக்கிறார்கள். ஒவ்வொரு நிலையிலும் நல்ல பதில் சொல்லும் மாணவர்களுக்கு சாக்லேட் வழங்கி பாராட்டு கிடைக்கிறது.

வகுப்பில் எடுத்த ஒரு வீடியோ இதோ




அருகில் உள்ள படத்தில் இருப்பவர்கள் பற்றிய தகவல் சுவாரஸ்யம் ஆனது. கணவன்- மனைவியான இவர்கள் இருவருமே HR-க்கு படித்தவர்கள். இருவரும் சேர்ந்தே நிகழ்ச்சிக்கு வருகிறார்கள். சேவையில் இருவருக்கும்  ஈடுபாடு உள்ளது பாராட்டுக்குரியது. நிகழ்ச்சி முடிந்ததும் மாணவர்களுக்கு கலந்து கொண்டமைக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. மாணவர்களை வைத்தே வழங்கப்பட்டஇந்த நிகழ்வில் எடுத்த வீடியோ இதோ







அது போன வருஷம் ! து இந்த வருஷம் !!

சென்னை JA பொறுப்பாளர்களில் ஒருவரான மோகன் ராஜ் மிக மிக அருமையாகவும், விழுந்து விழுந்து சிரிக்கும் படியும் பேசுவார். காலை அவர் பேசிய போது கேமரா கை வசம் இல்லாததால் வீடியோ எடுக்க முடியவில்லை :((( இவருக்கு விசிறிகள் அதிகமாகி கொண்டே போகிறார்கள். (மோகன் ராஜ் இந்த வருட படத்தில் நடு நாயகமாக நின்று கொண்டு என் தோள் மீது  கை போட்டிருக்கிறார் பாருங்கள்..) நகைச்சுவைக்கு என்றும் தனி மரியாதை தான் !!

ஒவ்வொரு முறையும் வித்தியாச அனுபவமும் நிறைய மன நிறைவும் தரும் இந்த நிகழ்ச்சியில் நீங்களும் இயலும் போது உங்கள் ஊரிலிருந்தே கூட பங்கேற்கலாம்...http://jaindia.org/  இணைய தளத்தில் உங்களை வாலண்டியர் ஆக பதிவு செய்தால்.. ! வாலண்டியர் ஆகிறவர்கள் நிகழ்ச்சிக்கு தொடர்ந்து வர முடியாது என நினைத்தால், பல்வேறு படிப்புகள் குறித்த மாணவர்களின் சந்தேகங்களுக்கு மெயில் மூலம் விளக்கம் கூட அளிக்கலாம்.

சனிக்கிழமை காலை சற்று அதிக நேரம் தூங்கலாம் என எண்ணாமல் மாணவர்களுடன் ஆர்வமாய் தங்கள் அனுபவத்தை பகிரும் இவர்கள் நிச்சயம் வித்தியாசமானவர்கள் தான் !
Related Posts Plugin for WordPress, Blogger...