Friday, September 11, 2015

வானவில்- மோகன்ராஜா - கே. எஸ். ரவிக்குமார் இன் தி மேக்கிங் !

சூப்பர் சிங்கர்

என்ன ஆச்சு மனோவுக்கு? திடீர் என கழட்டி விட்டனர்... அவர் இடத்தில் வந்துள்ள உஷா உதூப் வித, விதமாய் பாராட்ட மட்டுமே செய்கிறார். பாடுபவர்கள் தங்களை மேம்படுத்தி கொள்ளும் வண்ணம் (சித்ரா போல) நல்ல ஜட்ஜாய் அவர் இருக்க வாய்ப்பில்லை..

சில நல்ல பாடகர்- பாடகிகள் இருந்தாலும் ஏனோ தொடர்ந்து பார்க்க பிடிக்காமலே இம்முறை நகர்கிறது..

நீயா நானா

இந்த வார நீயா நானா சென்ஸ் ஆப் ஹியூமர் பற்றியது. அதனை காமெடியாக செய்கிறேன் என மரண மொக்கை போட்டனர். எதற்கும் சிரிப்பு வரவில்லை; நீயா நானா பார்க்க துவங்கினால் முக்கால் வாசி தூரமாவது பார்ப்பது வழக்கம். இம்முறை பாதி தாண்டுவதற்குள் - ஆப் செய்து விட்டு தூங்க கிளம்பி விட்டோம்.. இப்படி மொக்கை போடுவதில் உள்ள நல்லது.. .. சீக்கிரம் தூங்க சென்று மறுநாள் வார துவக்கத்தை ப்ரெஷ்ஷாய் துவங்கலாம்..

ரசித்த கவிதை

கை இல்லாமல்
கால் இல்லாமல்
உறுப்புகள் கோரப்பட்டு
மனுசங்க இருக்காங்க
வயிறு இல்லாத மனிதன்
இல்லவே இல்லை.

- மு.சுயம்புலிங்கம்

அழகு கார்னர் 



ஹெல்த் கார்னர்

ஜிம் என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருவது வெயிட் தூக்குவது தான். ஆனால் அது மட்டுமே ஜிம் இல்லை (சொல்ல போனால் நான் 5 ஆண்டுகளாக சென்ற போதும் வெயிட் அதிகம் தூக்கியதே இல்லை !)

கார்டியோ என்கிற - நடை, ஓட்டம், சைக்கிளிங் போன்றவை தான் உடல் நலனை பாது காக்க நினைப்போர் செய்ய வேண்டிய மிக முக்கிய விஷயங்கள்.

இன்னும் ஒரு சாரார் உடலில் சிக்ஸ் பேக் வேண்டும், கட் வர வேண்டும் என்றெல்லாம் விரும்புவர். இவர்கள் தான் வெயிட் தூக்குவது உள்ளிட்ட இன்னும் ஏராள விஷயங்களில் இறங்குவர்.

ஜிம் அல்லது வீட்டின் அருகே நடை - இப்படி என்ன செய்தாலும் சற்று வெரைட்டி ஆக இருக்குமாறு பார்த்து கொண்டால் நல்லது. உதாரணமாய் நடை பயிற்சி, சைக்கிளிங், மாடி படிகள் ஏறி இறங்குவது, ஸ்கிப்பிங்.. இப்படி... காரணம் உடலுக்கு வெவ்வேறு வித பயிற்சி தரும்போது தான் எடை குறைய வாய்ப்புகள் அதிகம். ஒவ்வொரு நாளும் ஒரே வித பயிற்சி ஒரே அளவு நேரம் செய்தால் உடல் அதற்கு எளிதில் பழகி விடும். பின் எடை கூடாமல் இருக்குமே ஒழிய குறையாது.

நடை பயிற்சி போன்ற ஒரே விதம் மட்டுமே செய்ய முடியும் என்றால் - இரு வாரத்திற்கு ஒரு முறையாவது நேரத்தை சில நிமிடங்கள் ( 5 நிமிடம் ) கூட்டி கொண்டே போவது கூட நல்ல பலன் தரும்.

மோகன்ராஜா - கே. எஸ். ரவிக்குமார் இன் தி மேக்கிங்

தனி ஒருவன் படம் பார்த்து முடித்ததும் - அன்றிரவே- மோகன் ராஜா இயக்கிய படங்களின் முழு லிஸ்ட் தேடி பிடித்து பார்த்தேன்...

தெலுகில் ஹனுமான் ஜங்க்ஷன் என்ற படத்தில் இயக்குனராக அறிமுகம்..பின் வரிசையாக தமிழ் படங்கள் மட்டுமே - ஜெயம், எம். குமரன் சன் ஆப் மகாலக்ஸ்மி, உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங் , சந்தோஷ் சுப்பிரமணியம், வேலாயுதம், தில்லாலங்காடி இவற்றுக்கு பிறகு தனி ஒருவன்..



ஒன்றை கவனித்தீர்களா? இவற்றில் தில்லாலங்காடி மட்டுமே தோல்வி படம் ! மற்ற அனைத்து படங்களும் நிச்சயம் சந்தேகத்திற்கு இடமில்லாத வெற்றி.. !அவற்றில் பல அந்த வருட டாப் 10 -ல் கூட இடம் பிடித்திருக்கும் ...

இதற்கு முன் அவர் இயக்கி எனக்கு பிடித்த படம் சந்தோஷ் சுப்பிரமணியம்.. தனி ஒருவன் அதற்கு இணையான ஒரு படம் தான்.. 

இப்படி தமிழில் 7 படம் இயக்கி - அவற்றில் 6 படம் சூப்பர் ஹிட் ஆவது இன்றைய சினிமா இருக்கும் நிலையில் அசாதாரண விஷயமாக தெரிகிறது...

இதுவரை யாரும் ராஜாவை சீரியசாக எடுத்து கொள்ள வில்லை .... நிச்சயம் தனி ஒருவன் அதனை மாற்றியிருக்கிறது..

வெற்றியை தலைக்கு எடுத்து கொள்ளாமல் இதே போல் focused ஆக பயணித்தால், நிச்சயம் எஸ். பி. முத்துராமன், கே. எஸ். ரவிக்குமார் வகை இயக்குனராக இவர் மிளிர வாய்ப்புள்ளது !

Wednesday, September 2, 2015

வானவில் - Wangs Kitchen & சென்னை அமிர்தா - ஒரு பார்வை. ..

குறைந்த ரத்த அழுத்தம் எனும் எமன்

பொதுவாக எல்லோரும் உயர் ரத்த அழுத்தம் குறித்தே பயம் கொள்வர். சொல்ல போனால் குறைந்த ரத்த அழுத்தத்திற்கு மாத்திரைகளே கிடையாது. சாப்பாட்டில் நீங்கள் உப்பு சேர்த்து கொள்ள வேண்டும்; காய்கறி நிறைய சாப்பிட வேண்டும் என சில உணவு முறை மாற்றங்கள் மட்டுமே..

ஆனால் குறைந்த ரத்த அழுத்தத்தில் பெரும் பிரச்சனை - மயக்கம் அடைவது தான்.. அலுவலக நண்பரின் உறவினர் இத்தகைய மயக்கத்தால் அடைந்த பாதிப்பு மிக பெரிது !

காலை நேரம் கழிப்பறை சென்றவர் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயக்கமுற்றிருக்கிறார். கீழே விழுந்து மண்டையில் நல்ல அடி.. நிறைய ரத்த போக்கு..

சில மணி நேரம் கழித்தே பிறர் பார்த்து மருத்துவமனை கொண்டு செல்ல, அதற்குள் உயிர் பிரிந்து விட்டது..

இங்கு குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக உயிர் பிரிய வில்லை.. அது தந்த மயக்கம்.. அப்போது தலையில் பட்ட காயம் இவையே காரணம்... எனினும்.. யாரும் இல்லாத போது மயக்கம் அடைவதும் துன்பம் தானே?

குறைந்த ரத்த அழுத்தத்தை அலட்சியம் செய்யாமல் தேவையான சில எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது நல்லது !

வேங்க்ஸ் கிச்சன் பில்லிங்... 

அண்மையில் Wangs Kitchen ஹோட்டல் சென்றபோது சாப்பிடுகிற ஐட்டம் ஒவ்வொன்றும் 100 முதல் 150 ரூபாய் போல் இருந்தது. சாப்பிட்டு முடித்து Bill பார்த்ததும் செம ஷாக். குறைந்தது 25 % பில் அதிகமாய் இருந்தது.  எப்படி  என கவனித்தால், செர்வீஸ் டேக்ஸ், சேல்ஸ் டேக்ஸ் போட்டு பின் சர்வீஸ் சார்ஜ் என நூறு ரூபாய்க்கும் மேல்  போட்டிருந்தனர்.இவை மட்டுமே 200 ரூபாய் தாண்டி விட்டது. சர்வீஸ் சார்ஜ் என தனியே வசூலிப்பது தான் கொடுமை ! சில இடங்களில் பார்சல் எனில் - பேக்கிங் சார்ஜ் வாங்குவர்.. அது கூட இந்த அளவு வசூலிக்க மாட்டார்கள்.. நமக்கு காட்டப்படும் விலைக்கு மேல் 2 டேக்ஸ் , சர்வீஸ் சார்ஜ், டிப்ஸ்.. இப்படி சேர்த்தால் எங்கேயோ போய் நிற்கிறது..

என்ன ஆர்கியூ செய்ய முடியும் !! இனி இந்த ஹோட்டல் பக்கம் வரவே கூடாது என்ற முடிவை மட்டும் எடுத்து விட்டு வெளியில் வந்தேன் !

ரசித்த கவிதை 

புலியைப்  போல் பயமுறுத்துகிறது
முதுமை
விரோதியைப்  போல்
உடலைத் தாக்குகிறது வியாதி

உடைந்த பானையிலிருந்து வழியும் நீர் போல்
ஒழுகுகிறது ஆயுள்.

இருந்தும் மனிதன்
நற்செயல்கள் செய்யாதிருக்கிறான்
இது அதிசயமே !  - அயல் நாட்டு கவிதை (தமிழில் மதுமிதா)

கவிதை பற்றி சில வரிகள்..

முதுமை நம்மை தொடர்ந்து விரட்டுகிறது.. எவ்வளவு நாள் இருக்க போகிறோம் என்பது யாருக்கும் தெரியாது; இருந்தும் கூட இருக்கும் வரை நல்லது செய்வோம் என ஏன் மனிதர்கள் நினைப்பதில்லை என கேள்வி எழுப்புகிறது இக்கவிதை.. இது சொல்லும் இந்த செய்திக்கு அடுத்து ரொம்ப பிடித்த விஷயம்... " உடைந்த பானையிலிருந்து வழியும் நீர் போல்ஒழுகுகிறது ஆயுள்" என்ற கற்பனை !

ஹெல்த் கார்னர்

நொறுக்கு தீனி என்பது உடல் எடைக்கு மிக பெரும் எதிரி. என்னை போன்ற ஆட்கள் வெயிட் போட இந்த நொறுக்கு  தீனியும் ஒரு முக்கிய காரணம். உடல் பயிற்சி செய்யாத காலங்களில் உடல் நலம் பற்றிய பிரக்ஞை இன்றி நன்கு சாப்பிடும் கெட்ட பழக்கம் வேறு ஒட்டி கொள்ளும். மாறாக தினம் ஏதேனும் ஒரு வொர்க் அவுட் செய்யும் போது இந்த நொறுக்கு தீனி சமாசாரங்களை கண்டால், ஒரு பக்கம் எடை குறைய எவ்வளவு போராடுகிறோம்; அப்புறம் இதை வேறு உண்பதா என்று சற்று தள்ளி நிற்போம்.

அலுவலகம் செல்வோர் மாலை நேரம் - நண்பர்களுடன் காண்டீன் சென்று சாப்பிடாத பட்சம் - வார நாட்களில் நொறுக்கு தீனி சாப்பிடாமலே தள்ளி விடலாம். சனி, ஞாயிறு தான் எல்லோரும் உணவுகள் - சற்று அளவுக்கதிகமாக சாப்பிடுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. வார இறுதியில் நொறுக்கு தீனி சாப்பிடுவது ஓகே. ஆனால் சற்று அளவோடு இருந்தால் நலம் !

நான் தற்போதெல்லாம் அலுவலகம் செல்லும் போதே மாலை நேரம் சாப்பிட கேரட், வெள்ளரி அல்லது கொய்யா பழம் எடுத்து சென்று விடுகிறேன். நம்மை மாதிரி 7- 8 வரை அலுவலத்தில் இருப்போர் மாலை இதை சாப்பிட்டால் இரவு வரை பசி எடுப்பதில்லை !



சென்னை அமிர்தா

சமீபத்து ரயில் பிரயாணம் ஒன்றில் இளைஞர் ஒருவர் அருகில் பயணித்தார். அவரிடம் பேசிக்கொண்டிருந்த போது - சென்னை அமிர்தாவில் - சைதாப்பேட்டையில் படிப்பதாக  தெரிந்தது. தனது கல்லூரியில் பல விதமான கோர்ஸ் இருப்பதாகவும் - படித்து முடித்த பின் 10,000 ரூபாய் முதல் 50,000 வரை பலருக்கும் வேலை கிடைப்பதாகவும்  கூறினார்.

சற்று நேரம் பேசிய பின் அவரது கல்லூரி பற்றி சமீபத்தில் நிறைய சர்ச்சைக்குரிய விஷயங்கள் வெளியாகிறதே என்று கேட்க, " கல்லூரி மாணவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டான். அதற்கு பீஸ் கேட்டு கல்லூரி டார்ச்சர் செய்தது தான் காரணம் என செய்தி வெளியானது. ஆனால் அவனது வகுப்பு நண்பர்களே அது காரணம் இல்லை; அவனது குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தான் காரணம் என கூறுகின்றனர்" என்றார்.

செங்கல்பட்டு தாண்டி சிறு கிராமத்தில் இருக்கும் இந்த 18 வயது இளைஞர் 2 வருட படிப்பிற்கு பின் 10,000 அல்லது அதற்கும் அதிக சம்பளத்தில் வேலை  என்பதை மதிப்பு மிக்கதாய் கருதுவதில் ஆச்சரியம் இல்லை !

கிரிக்கெட் பக்கம் 

விராத் கோலி தலைமையில் இந்திய அணி இலங்கையை 2-1 என்ற அளவில் ஜெயித்தது மகிழ்ச்சிக்குரிய விஷயம். மிக எளிதில் 3-0 என நாம் வென்றிருக்க முடியும்.. முதல் டெஸ்ட் 170 ரன்னை அடிக்க முடியாமல் தோற்றது இன்னும் உறுத்துகிறது. அதை தாண்டி வந்து அடுத்த 2 டெஸ்ட் வெளிநாட்டு மண்ணில் வென்றது நல்ல விஷயம் தான்..

அஷ்வின்- மிஸ்ரா பவுலிங் காம்போ - ஓரளவு நன்றாக செட் ஆனது..

இஷாந்த் ஷர்மாவின் வெறியுடன் கூடிய பந்து வீச்சு

பேட்டிங் ஒவ்வொரு முறை ஒவ்வொருவர் அடித்தது.. இப்படி நிறைய பாசிடிவ்-கள்

இந்திய அணி இனியாவது புஜாராவை அவசியம் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.. டெஸ்ட் மேட்ச்சில் டிராப் செய்யும் அளவு மோசமான வீரர் இல்லை. மும்பை அணியை சேர்ந்தோருக்கு ஒரு அளவுகோலும், பிறருக்கு இன்னொரு அளவு கோலும் இருப்பது அணிக்கு நல்லதல்ல..

அழகு கார்னர் 





கீர்த்தி சுரேஷ்.. இது என்ன மாயம் - என்ற பெயரில் சமீபத்தில் ரிலீஸ் ஆகி தியேட்டரை விட்டு 2 நாளில் மாயமாய் மறைந்த படத்து ஹீரோயின்.. அடுத்தடுத்து படங்களில் அம்மணி ரொம்ப பிசி... குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன் ..

முன்னாள் நடிகை மேனகாவின் மகள் (நெற்றிக்கண்.. ராமனின் மோகனம் பாடல் நினைவிருக்கா??) மலையாள பக்கத்திலிருந்து இங்கு கரை ஒதுங்கும் இன்னொரு புது வரவு..

Related Posts Plugin for WordPress, Blogger...