Wednesday, July 31, 2013

தமிழ் வலைப்பதிவர் மாநாடு - 2013 - குழு விபரங்கள்

2வது தமிழ் வலைப்பதிவர்கள் மாநாடு  சென்னை

வரும் செப்டம்பர் 1ம்தேதி (01-09-2013) நடைபெற இருக்கும் தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு திருவிழா சிறப்பாக நடைபெற உள்ளது. அதற்கான பணிகளையும் ஏற்பாடுகளையும் செய்ய பதிவர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு பொறுப்புகள் ஒப்படைக்கப் பட்டுள்ளன.

பதிவர் திருவிழா

குழுக்கள் மற்றும் அதன் உறுப்பினர்கள் விபரங்கள் உங்களின் பார்வைக்காக.

பொதுக்குழு உறுப்பினர்கள்

1.                  புலவர் இராமானுஜம்
2.                  கவிஞர் மதுமதி
3.                  பட்டிகாட்டான் ஜெய்
4.                  சென்னை பித்தன்
5.                  ஆரூர் மூனா செந்தில்
6.                  அஞ்சாசிங்கம் செல்வின்
7.                  பாலகணேஷ் (மின்னல்வரிகள்)
8.                  அரசன் ( கரைசேரா அலை)
9.                  சீனு (திடங்கொண்டுபோராடு)
10.              சிவக்குமார்(மெட்ராஸ்பவன்)
11.              கே.ஆர்.பி.செந்தில்
12.              பிலாஸபி பிரபாகரன்
13.              டி.என்.முரளிதரன்
14.              மோகன்குமார்(வீடு திரும்பல்)
15.              கவியாழி கண்ணதாசன்
16.              கவிதைவீதி செளந்தர்
17.              சரவணன்(ஸ்கூல் பையன்)
18.              ரூபக்ராம்
19.              வேடியப்பன்(டிஸ்கவரி புக் பேலஸ்)
20.              சசிகலா (தென்றலின் கவிதைகள்)

நிர்வாகக்குழு உறுப்பினர்கள்

1.                  மதுமதி

2.                  பட்டிகாட்டான் ஜெய்

3.                  புலவர் இராமானுஜம்

4.                  ஆரூர்.மூனா.செந்தில்
5.                  அஞ்சாசிங்கம் செல்வின்

குழு பொறுப்புகள்

1.                  நிதி திரட்டும் ஏற்பாடுகள் மற்றும் அனைத்து குழுக்களை ஒருங்கிணைத்தல் பொறுப்பு

·         கவிஞர் மதுமதி
·         பட்டிகாட்டான் ஜெய்
       உதவி - அரசன்

2.                  பதிவர் மாநாட்டு வரவு செலவு கணக்குகள் பொறுப்பு

·         பட்டிகாட்டான் ஜெய்

3.                  உணவு ஏற்பாட்டுக்குழு

          ஆரூர்.மூனா.செந்தில்குமார் –குழு இன் சார்ஜ்
·         அஞ்சாசிங்கம் செல்வின்
·         சிவக்குமார் – மெட்ராஸ்பவன்
·         பிரபாகரன் பிலாஸபி
·         ரஹீம் கஸாலி
·         சிராஜுதீன்
·         காணாமல் போன கனவுகள் ராஜீ
·         கேஆர்பி செந்தில்
·         கேபிள் சங்கர்



4.                  வெளியூர் பதிவர்கள் வரவேற்பு மற்றும் ஏற்பாடுகள் குழு



·         ஆரூர் மூனா செந்தில்  குழு இன் சார்ஜ்
·         அஞ்சாசிங்கம் செல்வின்
·         சிவக்குமார்  மெட்ராஸ்பவன்
·         பிரபாகரன் பிலாஸபி
·         தமிழ்வாசி பிரகாஷ்  மதுரை
·         சதீஷ் சங்கவி  கோவை
·         வீடு சுரேஷ்குமார்  திருப்பூர்
·         கோகுல் மகாலிங்கம்  பாண்டிச்சேரி
·         தனபாலன் - திண்டுக்கல்

5.                  மண்டபம் ஏற்பாடுகள் குழு

-     மதுமதி


-        பட்டிகாட்டான் ஜெய்

6.                  வாராந்திர ஆலோசனைக்கூட்டங்கள் ஒருங்கிணைப்புக்குழு

·         சீனு திடங்கொண்டுபோராடு
·         அரசன் (கரைசேரா அலை)
·         உதவி  பட்டிகாட்டான் ஜெய்

7.                  பதிவர்கள் ஐ.டி. கார்டு மற்றும் பேனர் ஏற்பாடுகள் குழு

·         பாலகணேஷ் (Designing&Printing)
·         உதவி1 - ரூபக்ராம்
·         உதவி2  சரவணன்(ஸ்கூல்பையன்)

8.                  பரிசுப்பொருகள் ஏற்பாடு & பொறுப்புகள் குழு

·         டி.என். முரளிதரன்
·         அரசன்

9.                  காவல்துறை அனுமதி ஏற்பாடுகள் குழு

·         பட்டிகாட்டான் ஜெய்
·         மதுமதி
·         புலவர் இராமானுஜம்




10.              தனி தமிழ்வலைப்பதிவர் குழுமம் வலைதளம் ஏற்பாடுகள்



·         ஆரூர்.மூனா.செந்தில்குமார்
·         சீனு

11.              மாநாட்டு நிகழ்ச்சி நிரல் தயாரிப்பு குழு

·         புலவர் இராமானுஜம்
·         மதுமதி
·         பட்டிகாட்டான் ஜெய்
·         பாலகணேஷ்

இந்த குழுவில் இணைந்து  மாநாட்டு வேலைகளில் பங்கெடுக்க விருப்பமுள்ளவர்கள் இணைந்து கொள்ளலாம்.

*******************
பதிவர் மாநாட்டிற்கான தங்களது வருகையை தெரிவிக்க, தொடர்புகொள்ள வேண்டிய பதிவர்கள் :

 மதுமதி – kavimadhumathi@gmail.com
பட்டிகாட்டான் ஜெய் – pattikattaan@gmail.com 
சிவக்குமார் – madrasminnal@gmail.com 
ஆரூர்மூனா.செந்தில்குமார் – senthilkkum@gmail.com 
அஞ்சாசிங்கம் செல்வின் – selwin76@gmail.com 
பாலகணேஷ் – bganesh55@gmail.com 
சசிகலா - sasikala2010eni@gmail.com 

*********
அண்மை பதிவுகள் :

வானவில் - கனகா பேட்டி- பூங்காத்து திரும்புமா - சென்னை IIT

மனதை உலுக்கிய தூக்கு மர நிழலில் 

தொல்லை காட்சி - கேடி பாய்ஸ் - அல் கேட்ஸ் - சில்லுன்னு ஒரு காதல்

Tuesday, July 30, 2013

வானவில்- கனகா பேட்டி - பூங்காத்து திரும்புமா - சென்னை IIT

கனகா பேட்டி

இன்று  முழுக்க கனகா மரணம் என செய்தி கசிய, கனகா ஜம்மென்று வந்து கான்சரும் இல்லை ; ஒன்றும் இல்லை ; உயிருடன் தான் இருக்கேன் என தந்த பேட்டி இது. அவரின் வெடி சிரிப்பு அவருக்கு ஒரு பிரச்னையும் இல்லை எனபதை தெளிவாய் சொல்கிறது  !

(இந்த லிங்கை க்ளிக் செய்தால் - Watch on Youtube என்று வரும் ; அதை மறுபடி க்ளிக் செய்து அவரது பேட்டி காணவும் )


முக நூல் கிறுக்கல்கள்

அந்த ஆளு "நன்றி"ன்னு சொல்லிட்டு அடுத்த நொடி "தப்பா சொல்லிட்டேன் - ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்"னு சொல்லிட்டார் . வார்த்தை தவறுவது சகஜம் தான்."ஒரு நிலையில் இருந்தாரோ ; வழக்கம் போல புல்லா இருந்தாரோ"- அடுத்த நொடி தப்பை புரிஞ்சிகிட்டு மாத்திட்டார். ஆனா நம்ம மக்கள் அதை எம்புட்டு ஓட்டிட்டாங்க ! அடுத்த நொடி அவர் சரியா சொன்னார்னு ஒரு இடத்திலும் சொல்லலை !

For Every action, there is an equal and Opposite reaction; In social media, it is over reaction"- ன்னு ஓரிடத்தில் படித்தேன். அது சரியா தான் இருக்கு !

************
பெண்கள் காட்டும் அன்பு என்பது நம்மை பித்தனாக்கி அலைய வைப்பது ..........

## என்னமா எழுதிருக்காருய்யா கண்ண தாசன் சான்சே இல்லை !
************
சென்னை மேற்கு ஸ்டடி சர்க்கிள் ( ICSI - SIRC ) சார்பாக கிண்டியில் நடந்த "செக்ஸூவல் ஹராஸ்மென்ட் தடுப்பு சட்டம் " பற்றிய செய்தி தொகுப்பு தந்தி டிவியில் செய்திகளிடையே ஒளி பரப்பாகிறது. பல முக்கிய பேச்சாளர்களும் எங்கள் குழுவின் கன்வீனர் (ரெங்கராஜன் ) மற்றும் துணை கன்வீனர் (மோகன் குமார்) பேசியுள்ளோம் காலை 6 மணி முதல் வரும் பல ஒரு மணி நேர செய்திகளின் இடையே இந்த நிகழ்ச்சி 5 நிமிடம் ஒளி பரப்பாகும்.

ஏதாவது ஒரு செய்தியில் பார்த்து விடுங்கள் நண்பர்களே ! தவறினால் யூ டியூபில் வலையேற்றி உங்களை பார்க்க சொல்லி கொலையாய் கொல்லுவார் வீடுதிரும்பல் ஓனர் ! ஜாக்கிரதை !
************
அழகு கார்னர்



என்னா பாட்டுடே

முதல் மரியாதையில் பல பாடல்கள் அற்புதம் என்றாலும் - அதில் நம்பர் ஒன் - "பூங்காற்று திரும்புமா" தான் ! படம் வெளிவந்த புதிதில் எல்லா டீ கடைகளிலும், ரேடியோவிலும் இப்பாடலே ஒலிக்கும் ஆனாலும் அலுக்கவே இல்லை !

" உள்ளே அழுகுறேன் வெளியே சிரிக்குறேன் ; நல்ல வேஷம் தான் வெளுத்து வாங்குறேன் "

" மெத்தை வாங்குனேன் - தூக்கத்தை வாங்கலை "

போன்ற வரிகள் பல மத்திய வயது ஆண்களுக்கு பொருந்த கூடியவை வைரமுத்துவுக்கு இப்படத்துக்கு தேசிய விருது கிடைத்த நினைவு. பாடலில் ஆண் - குரல் காலம் சென்ற மலேசியா வாசுதேவன். மலேசியா சிவாஜிக்கென குரலை மாற்றி பாடுவார். 

பாடலை படமாக்குவதில் பாரதிராஜா ஸ்பெஷல் பல இடத்தில் தெரியும். ராஜாவின் ப்ளூட் பிட்டுக்கு - அழகாய் குட்டிகுட்டி ஷாட் வைத்து நம்மோடு சேர்ந்து ராஜாவை ரசிப்பார் 

" பாடலை சிவாஜி எங்கோ பாடுறார் ராதா இன்னொரு மூளையில். ஒருவர் பாடுவது எப்படி இன்னொருத்தருக்கு கேட்கும்?" என படம் பார்த்த பள்ளி வயதில் லாஜிக் பேசினேன் :)

பாடலில் இருவர் நடிப்புமே அழகு ; சிவாஜி இறுதியில் பாட்டை பாடியது யார் என்று தெரிந்ததும் ஒரு ரீலிப் -உடன் கடைசி வரிகளை பாடுவார். பாட்டு முழுதுமே ராதாவின் நடிப்பு இப்போது தான் பிடிக்கிறது 

பாரதிராஜா- வைரமுத்து- ராஜா என்னா காம்பினேஷன் சாரே !




படித்ததில் பிடித்தது

வேலையில் இருக்கும் நபர்களுக்கு ஐ ஐ. டி போன்ற அருமையான நிறுவனத்தில் படிக்க முடிய வில்லையே - படித்திருந்தால் இன்னும் நல்ல நிலைக்கு சென்றிருக்கலாமே என சற்று ஏக்கம் இருக்க கூடும்; அத்தகைய மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் " வேலை செய்யும் Executives -க்காகவே சென்னை ஐ ஐ. டி நிறுவனம் மிக விரைவில் ஆன்லைன் கோர்ஸ்கள் சில துவங்க உள்ளது. முதலில் ஆட்டோமொபைலில் மேற்படிப்பு மிக விரைவில் துவங்குகிறது பின் மற்ற துறைகளுக்கும் இது பரவலாம்

செய்தி வாசித்தது : இங்கு

செப்டம்பர் 1- பதிவர் திருவிழா அப்டேட் 

செப்டம்பர் 1 பதிவர் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நேர்த்தியாக நடந்து வருகின்றன

வெளியூர் பதிவர்கள் வருகையையை யார் யார் கவனிக்கிறார்கள் என்பதை இந்த பதிவில் வாசிக்கலாம்

உங்கள் வருகையை விரைவில் மெயில் மூலம் உறுதிபடுத்துங்கள். உணவு, தங்குமிடம் போன்ற பல்வேறு விஷயங்களை திட்டமிட அது உதவும் !

அய்யாசாமி கார்னர்

அய்யாசாமி ஆபிசில் அநியாயத்துக்கு சீன் போடும் நபர் ஒருவர் இருக்கிறார். பகல் ஷிப்டில் வேலை பார்த்தாலும் இவர் நள்ளிரவு 12 மணி அதிகாலை 3 மணிக்கெல்லாம் எல்லாருக்கும் மெயில் அனுப்பி கிலியூட்டுவார்.

ஒரு குழுவாக அமர்ந்து சாப்பிடும்போது மேற்படி நபர் இப்படி சொன்னார் :

" நம்ம ஆடிட்டர் ரவியை பகல் நேரத்தில் பிடிக்கவே முடியலை. எப்ப பார்த்தாலும் இன்கம் டேக்ஸ் ஹியரிங்லே இருக்கேன்னு சொல்றார். அதனால இனிமே தினம் நைட்டு 11 மணிக்கு ரெண்டு பேரும் போனில் பேசிக்கறதா முடிவு பண்ணிருக்கோம் "

இதை கேட்டதும் அய்யாசாமி ஷாக் ஆகி சாப்பிடுறதை சிறிது நேரம் நிறுத்தி விட்டார். பின் நிதானமாக சொன்னார்

"நைட்டு 11 மணிக்கு தினம் பேசிக்குவீங்களா? அது பீக் ப்ரொடக்ஷன் டைம் ஆச்சே ! என்னையெல்லாம் தப்பி தவறி அந்த நேரத்தில் டிஸ்டப் பண்ணிடாதீங்க !"

சுற்றி இருந்த 10 பேரும் இதற்கு சிரிக்க துவங்க ஒரு பெண் குரல் இப்படி எழுந்தது

" நான் ஒருத்தி இருக்கேன்னு நினைப்பே இல்லாம பாய்ஸ் சமாசாரம் பேசுறீங்களா ?"

இதை கேட்டதும் பயந்து போன அய்யாசாமி " தினம் அந்த நேரத்தில் நான் ப்ளாக் எழுதுவேங்க; அதை தான் சொன்னேன் ; வேற ஒண்ணும் இல்லை " என்று முழுசாய் யூ டர்ன் அடித்து எஸ் ஆனார் !

**********
அண்மை பதிவுகள் :

மனதை உலுக்கிய தூக்கு மர நிழலில் 

தொல்லை காட்சி - கேடி பாய்ஸ் - அல் கேட்ஸ் - சில்லுன்னு ஒரு காதல்

மனதை உலுக்கிய தூக்கு மர நிழலில்

ல்லூரி காலத்தில் படித்து விக்கித்து போன நூல் சி.ஏ பாலன் என்பவர் எழுதிய "தூக்கு மர நிழலில் ".

பாலன் கேரளாவை சார்ந்த ஒரு கம்யூனிஸ்ட் தலைவர். அவருக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. கருணை மனுவும் ஜனாதிபதியால்   நிரகாரிக்கப்பட - இன்னும் ஒரு வாரத்தில் தூக்கு எனும் நிலை.

அப்போது கேரளாவில் ஈ. எம் எஸ் தலைமையில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்தது.வழக்கறிஞர் கிருஷ்ண ஐயர் மூலம் மீண்டும் ஜனாதிபதிக்கு மனு செல்ல, இம்முறை கருணை மனு ஏற்று கொள்ளப்பட்டு விட்டது !

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பாலன் எந்த தவறும் செய்ய வில்லை என விடுதலை ஆகிறார் !

**********
நூல் முழுக்க முழுக்க சிறையில் இருந்த போது சி.ஏ பாலன் சந்தித்த அனுபவங்களை தான் கூறுகிறது. மேலும் பல தூக்கு தண்டனை கைதிகளின் மன நிலையை கண்ணாடி போல காட்டி விடும் இந்த புத்தகம் !

சி.ஏ பாலன் சிறையிலிருந்து வெளியான பின் எழுதிய நூல் இது. முழுக்க முழுக்க உண்மை சம்பவங்களால் நிறைந்தது

இந்த நூல் எந்த பதிப்பகத்தில் கிடைக்கும் என்ற தகவலும் இல்லை. புத்தக சந்தையிலும் கூட இந்த புத்தகம் கண்ணில் பட்டது இல்லை.  எந்த பதிப்பகத்தில் இந்த நூல் கிடைக்கிறது என்ற தகவல் யாரேனும் தந்தால் நன்றியுடையவனாவேன் !

நூல் துவங்கும் போது சி.ஏ பாலன் சிறையில் சென்று சேர்கிறார். அவருக்கு ஒரு அறை ஒதுக்கப்படுகிறது. அதன்பின் சிறையில் நடக்கும் பல்வேறு சம்பவங்களை அவர் சொல்லி போகும் போது நமக்கு " இப்படி ஒரு உலகமா?" என்று அச்சமும் வியப்பும் மேலிடும்.

உதாரணத்துக்கு சில :

வெளி உலகில் காசு எப்படி பல பொருள்களை வாங்க பயன்படுகிறதோ அதே போல, சிறைக்குள் பீடி, சிகரெட் தான் பண்டமாற்று பொருள். சிறை வார்டன்கள் அல்லது கைதிகளிடம் பல வஸ்துகள்  கிடைக்கவும் இவையே பயன்படுகிறது. வழக்கமாய் ஜெயிலுக்கு வருவோர் தங்களை போலிஸ் பிடிக்க போகிறது என்றால் ஆசன வாயில் பீடி கட்டை சொருகி சிறைக்குள் எடுத்து வந்து விடுவார்களாம் !

வார்டன்கள் செய்கிற கொடுமை; சிறைக்குள் உள்ள அரசியல் என்றெல்லாம் சொல்லி போகும் இந்த நூல் - மிக முக்கியமாய் தொடுவது தூக்கு தண்டனை கைதிகளின் மன நிலையை !



நூலாசிரியர் சி.ஏ பாலன் ஒரு தூக்கு தண்டனை கைதி என்பதால் - பல தூக்கு தண்டனை கைதிகளுடன் பழகும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கிறது. அவர்களின் கதைகள் பலவற்றை அவர் கூறுகிறார். அநேகமாய் ஒவ்வொரு மனிதனும் எதோ ஒரு நேரத்தில்,  கோபத்தில் அல்லது முட்டாள் தனத்தில் தவறு செய்து விட்டு அந்த தவறுக்காக தன்னை தானே நொந்து கொண்டு இருப்பதை சொல்லி செல்கிறார்

தூக்கில் போடப்போகும் முன் மனிதர்கள் எப்படி பயப்படுகிறார்கள் என்பதையெல்லாம் அவர் விவரிக்கும் விதம் படித்து 20 வருடம் ஆகியும் இன்னும் மறக்க முடிய வில்லை ! தூக்கு மேடைக்கு செல்லும்போது  பலரை தர தரவென்று இழுத்து தான் செல்வார்களாம். சிலர் அந்த பயத்தில் ஏறக்குறைய மயங்கி போய் விடுவார்களாம். அப்படியே கொண்டு சென்று தான் தூக்கில் இடுவார்களாம்.

நிற்க. சி.ஏ பாலனுக்கு என்ன ஆனது என்று பார்ப்போம்

அவர் ஒரு நிரபராதி எந்த தவறும் செய்ய வில்லை என வெளியில் சில அரசியல் கட்சிகள் போராடுகின்றன. குறிப்பாக நடிகர் MR ராதா இவரை விடுவிக்க கோரி பெரும் போராட்டத்தில் ஈடுபடுகிறார்
பொதுவாய் தூக்கு தண்டனை கைதிகள் - தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனை பெறுவதை தான் கேள்விப்படுவோம். இங்கு அவர் குற்றமே செய்யாதவர் என விடுவிக்கப்படுகிறார்

"எந்த தவறும் செய்யாத எனக்கு தானே தூக்கு விதிக்கப்பட்டது? அந்த தீர்ப்பு அப்படியே எடுத்து கொள்ளப்பட்டிருந்தால் நான் இறந்திருக்க வேண்டும் தானே ? நமது நீதி முறையும் தூக்கு வழங்கும் விதமும் எவ்வளவு கேலிக் கூத்தாக இருக்கிறது பாருங்கள்"  என்று நூலை முடிக்கிறார் சி.ஏ பாலன் 

படித்து 20 வருடங்கள் ஆகியும் இவ்வளவு விஷயங்கள் நினைவில் கொண்டு எழுதுவதிலேயே இந்த நூல் என்னுள் ஏற்படுத்திய தாக்கம் உங்களுக்கு புரிந்திருக்கும் !

வாய்ப்பு கிடைத்தால் இந்நூலை அவசியம் வாசியுங்கள் !

Monday, July 29, 2013

தொல்லை காட்சி - கேடி பாய்ஸ் -அல் கேட்ஸ் - சில்லுன்னு ஒரு காதல்

கேடி பாய்ஸ் கில்லாடி கேர்ள்ஸ்

விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜூனியரில் முதல் 10 இடங்களை பிடித்த குட்டீஸ் - இன்று ((சற்று வளர்ந்து ) பாடுகிறார்கள்

ஆண்கள் பக்கம் - ஷ்ரவன், ரோஷன் ஸ்ரீ காந்த் போன்றோர் ; பெண்களில் பிரியங்கா ஸ்ரீ நிஷா, சுகன்யா, யாழினி, அனு போன்றோர். பெயர்களை பார்க்கும் போது பெண்கள் அணி தான் சற்று பலமாய் இருக்கு !



துவக்க நிகழ்ச்சியில் பெண்கள் அணி தான் மொத்தத்தில் மட்டுமல்ல பெரும்பாலான ஒன் ஆன் ஒன் னிலும் வென்றனர்.

ஒவ்வொரு ஞாயிறும் காலை 10.30 க்கு விஜய் டிவி யில் ஒளிபரப்பாகிறது. முழுதாய் பார்க்கா விட்டாலும் இயலும்போது பார்க்கலாம். யார் ஜெயிக்கிறார்கள் என்பதற்காகவோ, விஜய் டிவி போடும் சீன்களுக்காகவோ அல்ல - நிகழ்ச்சியில் மிக நன்றாக பாடும் சிலருக்காக

விண் டிவி யில் பங்குகள் பற்றிய நிகழ்ச்சி 

நிஜந்தன் அவர்கள் விண் டிவி யில் பங்கு சந்தை குறித்து ஒரு எக்ஸ்பர்ட் உடன் பேசிய நிகழ்ச்சி ஒரு நாள் கண்டேன்

கிட்டத்தட்ட 10 பங்குகள் பெயரை குறிப்பிட்டு - "இவற்றை வாங்குங்கள் ; இவை விலை நிச்சயம் ஏறும் " என்று கருத்து சொல்லி கொண்டிருந்தார் அந்த நபர்.

கிட்டத்தட்ட ஜாதகம் மற்றும் ராசி பலன் சொல்வது போல் தான் இதுவும் ! நான் ஒரு நிறுவனத்தில் கம்பனி செகரட்டரி ஆக உள்ளேன். எங்கள் நிறுவன பங்கு எப்போது ஏறும் இறங்கும் என்பதை - உள்ளே என்ன நடக்கிறது என்று அறிந்த என்னால் கூட சொல்ல முடியாது என்பதே உண்மை !

இவர்கள் சொல்வதை கேட்டு யாரும் இன்வெஸ்ட் செய்கிறார்களா - அதனால் பலனடைந்தார்களா என தெரிய வில்லை !

தமிழ் பேச்சு எங்கள் மூச்சு 

அருமையான இந்த நிகழ்ச்சி மீண்டும் விஜய் டிவி யில் துவங்கி உள்ளனர். அடடா பசங்க என்னமா பேசுகிறார்கள் ! அட்டகாசம் ! இந்த தலை முறை இளைஞர்கள் இவ்வளவு சுத்தமாய் தமிழ் பேசுவார்களா என்று ஆச்சரியமாய் உள்ளது !

சென்ற வாரம் 3 பேர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினர். மூவரும் நடுவர்களில் ஒருவரான நெல்லை கண்ணன் மீது எவ்வளவு மதிப்பு வைத்துள்ளனர் என்பது வெளியேறி செல்லும்போது பேசியதில் தெரிந்தது. அவர்கள் பேசிய வரிகளில் நெல்லை கண்ணன் நெகிழ்ந்து கண் கலங்கி விட்டார்.

நிகழ்ச்சியில் ஒரு வார்த்தை கூட ஆங்கிலம் உபயோகிக்காமல் பேச்சாளர்களும், நடுவர்களும் பேசுகிறார்கள்.. நல்ல விஷயம் ஆனால் விஜய் டிவி காம்பியர்கள் தான் " தமிழ் பேச்சு எங்கள் மூச்சு " Powered By என்று சொல்லி விளம்பர தாரர் பெயர் சொல்கிறார்கள் எல்லோரையும் திருத்தும் நடுவர்கள் காம்பியர்களிடம் " Powered By என்று சொல்லாமல் " நிகழ்ச்சியை வழங்குபவர்கள் என்று சொல்ல சொல்லலாமே !

சூப்பர் சிங்கர் கார்னர் - அல் கேட்ஸ்
அழகேசன் என்ற 61 வயது பெரியவர் சூப்பர் சிங்கரில் பாடி வருகிறார். இவர் பேரை அல் கேட்ஸ் என்று மாற்றியதில் துவங்கி இவரை செமையாக கிண்டல் செய்கிறார்கள் அது புரியாமல் தலையை தலையை ஆடுகிறார் இந்த பெரியவர்



பழைய பாடல்கள் என்றால் ஓரளவு நன்கு பாடினாலும் முறையான பயிற்சி இல்லாமை மற்றும் புதிய பாடல்களில் ரொம்ப சுமாராக பாடுவதால் முதல் 20 க்கு முன்பே வெளியாகும் நபராக இவர் இருக்க கூடும்
கிரிக்கெட் கார்னர்
இந்தியா பல ஆண்டுகளுக்கு பின் ஜிம்பாப்வே சென்று ஆடி வருகிறது. தோனி, அஷ்வின், மற்றும் முக்கிய வேக பந்து வீச்சாளர்கள் இல்லாமல் இந்தியா - A போன்ற ஒரு அணி தான் சென்றாலும், ஜிம்பாப்வே மிக வீக் ஆக இருப்பதால் இந்தியா எளிதில் வென்று வருகிறது

புஜாராவிற்கு வாய்ப்பு தராமல் ராயுடுவுக்கு தருவது ஏன் என்று புரிய வில்லை. ஆஸ்திரேலியா தென் ஆப்ரிக்க போன்ற வெளிநாடுகளில் உள்ள கடினமான பிட்ச்களில் நன்கு விளையாட கூடிய புஜாராவிற்கு ஒரு நாள் கிரிக்கெட்டில் வாய்ப்பு தருவது அவசியம். போலவே ரசூல் மற்றும் மோஹித் ஷர்மா ஆகியோருக்கும் அடுத்த 2 போட்டிகளிலாவது வாய்ப்பு தர வேண்டும் !

பார்த்த படம் - சில்லுன்னு ஒரு காதல்

முணுக்குன்னா இந்த படத்தை கலைஞர் டிவியில் போட்டுடுறாங்க. எப்ப போட்டாலும் நம்ம வீட்டம்மணி உட்கார்ந்து முடிஞ்சவரை பார்ப்பார். பார்ப்பது மட்டுமல்ல ஜோதிகா மாதிரி தன்னை மனதில் நினைத்து கொண்டு அநியாயத்துக்கு பீலிங்க்ஸ் + கமண்ட் விடுவார்

கதைப்படி சூர்யா - பூமிகாவை கல்லூரி காலத்தில் லவ் பண்ணிட்டு அப்புறம் ஜோதிகாவை கல்யாணம் பண்ணிக்குறார். ஆனா அவரு (நம்மளை மாதிரி ) மனைவியிடம் தன் பழைய காதலை சொல்லலை; ஒரு நாள் ஜோதிகா அம்மணி டயரி எடுத்து படிக்க, மாட்டிக்கிறார். " ஒரு நாள் கூட அவளோட வாழலை " என பீலிங்க்ஸ் பார்த்துட்டு ஜோதிகா - பழைய காதலியை தேடி சென்று கூட்டி வருகிறார்..

படம் ஓடும்போது எங்களுக்குள் நடந்த டயலாக்

" நான் கூட காலேஜ் டேஸ் முழுக்க டயரி எழுதினேன் எல்லாம் - மேலே புக் ஷெல்பில் தான் இருக்கு "

" லவ் மேட்டரெல்லாம் எழுதிருக்கீங்களா ? நான் படிச்சதே இல்லியே !"

"சூர்யா மாதிரி முழுக்க யாராவது எழுதுவாங்களா ? அப்படியே லைட்டா எதோ இருக்கும் நீயா படிச்சு புரிஞ்சிக்க வேண்டியது தான் "

" அட பாவி "

" நம்ம லவ்வர்சில் யாரையாவது இப்படி பேசி கூட்டிட்டு வாயேன் "

" ம்ம்? நான் ஏன் போய் கூப்பிடனும் ?"

" சினிமாவில் ஜோதிகா தானே போயி கூட்டிட்டு வந்தார்; அது மாதிரி நீ தான் போயி சொல்லணும் இந்த மாதிரி இந்த மாதிரி .. . அவரு உன்னையே நினைச்சு உருகுறாருன்னு "

படம் பார்த்த சுவாரஸ்யத்தில் குண்டு ஏதும் வெடிக்கலை; பின்னாளில் வேறு ஏதாவது ஒரு சண்டையின் போது இதற்கான பலன் தெரிய வரும் :))

*********
அண்மை பதிவு

உணவகம் அறிமுகம் - -ஆதம்பாக்கம் சுவாமீஸ் கபே

Saturday, July 27, 2013

உணவகம் அறிமுகம் - சுவாமீஸ் கபே, ஆதம்பாக்கம்

செயின்ட் தாமஸ் ரயில் நிலையத்தை ஒட்டி அமைந்துள்ளது கருணீகர் தெரு. இங்கு உள்ள சிறிய - கடை சுவாமீஸ் கபே. பல நேரங்களில் கடைக்கு செல்ல வேண்டும் என்று தேடி கொண்டே சென்றாலும் கடையை தாண்டி சென்று விடுவோம்...காரணம் கடை மெயின் ரோடில் இருந்தாலும் சிறியதாக உள்ளதால் இருப்பதே எளிதில் தெரியாது !

ஒரு பத்துக்கு - பதினைந்து கடை - 150 சதுர அடியில் எப்படி ஒரு ஹோட்டல் இருக்க முடியும் என்று கேள்வி எழுகிறதல்லவா?

ஹோட்டலில் கிட்சனே இல்லை ! வீட்டில் தயார் செய்து உணவு கொண்டு வந்து விடுகிறார்கள். பில் தர ஒரு நபர்; பின் பார்சல் தரவும் அங்கேயே சாப்பாடு உண்போருக்கு எடுத்து தரவும் - இருவர். அவ்வளவு தான் கடை.



ஆனால் அந்த சிறிய இடத்தில் எப்போதும் கூட்டம் நிரம்பியிருக்கும்.

வேளச்சேரி போளி ஸ்டால் பற்றி எழுதும்போது 25 ரூபா சாப்பாட்டு கடை என்று எழுதியிருந்தேன் அல்லவா ? கிட்டத்தட்ட அதே மாதிரி கான்செப்ட் இங்கும் ! இங்கு பல உணவு வகைகள் 20 ரூபாய் தான் !

பூரி, பரோட்டா, சப்பாத்தி, தோசை மட்டுமல்ல - மதியத்துக்கு அனைத்து கலந்த சாதமும் 20 ரூபாய் தான்.

வருகிற கஸ்டமர்களில் 90 % பார்சல் தான் வாங்குகிறார்கள். நின்ற படி சாப்பிடுவோர் அரிது.

இட்லி, தோசை என்ன வாங்கினாலும் - இரு வகை சட்னிகள் மற்றும் சாம்பார் அருமை !



பரோட்டா, பூரி, இடியாப்பம் போன்றவை நன்றாக இருந்தாலும், வீட்டில் செய்து கொண்டு வந்து, ஹாட் பேக்கில் வைத்து தருவதால், சப்பாத்தி மற்றும் தோசை அவ்வளவு நன்றாக இருப்பதில்லை

இட்லி, பரோட்டா அல்லது கலந்த சாதம் - வீட்டில் செய்த உணவு - மிக குறைந்த விலையில் சாப்பிட இக்கடையை நாடலாம் !

மேலதிக தகவல்கள்

சுவாமீஸ் கபே
கருணீகர் தெரு
ஆதம்பாக்கம்

Friday, July 26, 2013

"யாரை பிடிக்கும்?" மாறும் விதம்

சிறு வயது முதல் ஒவ்வோர் காலத்திலும் எந்த உறவு முக்கியம் என்பது நம்மை அறியாமலே மாறி வருகிறது. இந்த சுவாரசிய மாறுதல் எப்படி நடந்து வந்துள்ளது என்று யோசித்தேன். இது எனக்கு மட்டுமல்ல இதை வாசிக்கும் பலருக்கும்  (சிறு மாறுதல்களுடன்) பொருந்தும் என்றே தோன்றுகிறது.



************
பிறந்தவுடன் முதலில் தாயை தான் பிடித்தது. உணவு தரும் அன்னை  .. அக்கறை காட்டுவதிலும் அவரைப் போல் யாரும் இருக்க வாய்ப்பில்லை. இது முதல் சில வருடங்களுக்கு மட்டுமே.

பின் அப்பாவை பிடிக்க ஆரம்பித்தது. வெளியே கூட்டி போவார்.கேட்டதை வாங்கி தருவார்.

3 to 5 வயது வரை அப்பா செல்லம் என்றால் அதன் பின் நண்பர்கள் முக்கியமாகி விடுகிறார்கள். Same age group.. ஒரே மாதிரி விளையாட, யோசிக்க, 5 வயது முதலே நட்பு கோலோச்ச ஆரம்பித்து விடுகிறது.

பத்து to பன்னிரண்டு வயதில் உள்ள நட்பு கொஞ்சம் காமெடி ஆக இருக்கும். இந்த வயதில், தான் போட்ட டிரஸ் தான் பெஸ்ட்; தான் பார்த்த சினிமா தான் சூப்பர் என ஆள் ஆளுக்கு தன் பெருமை பேசி பீற்றி கொள்வர்.

எனது பத்து வய்தில் நண்பன் நந்துவும் நானும் இதே போல் தான் இருந்தோம். பெரும்பாலும் சேர்ந்து தான் சினிமா பாப்போம். சில நேரம் ஒருவர் வீட்டில் permission கிடைக்காமல், மற்றொருவர்  மட்டும் சினிமா பார்க்க நேர்ந்தால், தான் பார்த்தது ஒரு சிறந்த சினிமா என்று பீலா விடுவோம். படத்து இயக்குனர் கூட தயாரிப்பாளர் இடம் அந்த அளவு கதையை marketing பண்ணியிருக்க மாட்டார். அடுத்த சில நாட்கள் பார்க்கும் போதெல்லாம் படம் பற்றி சொல்லி வெறுப்பேற்றுவோம்.

எனது பெண் இன்று இந்த பருவத்தில் உள்ளாள். கிட்டதிட்ட அதே கதை தொடர்கிறது. எங்கள் காலத்தில் சினிமா. தற்போது அவளும், தோழிகளும் பீலா விடுவது, தான் வாங்கிய பொருள் அல்லது சென்று வந்த இடம்...

அப்புறம் 15 வயது வாக்கில் opposite sex தான் முக்கியம் என்று ஆகி விடுகிறது. சிலர் கவிதை எழுத ஆரம்பிக்கின்றனர். சும்மா போக வேண்டியது. பார்க்க வேண்டியது. திரும்ப வந்து விட வேண்டியது. அவ்வளவு தான். காதலை நேரில் சொல்லாமல் போக காரணம் "ஏற்று கொள்ளா விட்டால் என்ன செய்வது ?" என்ற பயம் தான். Atleast எங்க generation-ல் பெரும்பாலும் அப்படி தான் இருந்தது. இதயம் படம் எடுத்த போது எங்க கல்லூரியில் நிறைய பேர் இது என் கதை என சொல்லி திரிந்தனர்.

இதில் அடுத்த காமெடி குறிப்பிட்ட காலம் ஒரு பெண் பின் சுற்றி அது set ஆகாது என புரிந்ததும் அடுத்த பெண்ணை பார்க்க ஆரம்பிப்பது தான். எந்த point -ல் முதல் பெண்ணை விட்டு அடுத்த பெண்ணுக்கு போகிறோம் என்பது, தினமும் எந்த கணம் தூங்க ஆரம்பிக்கிறோம் என உணர முடியாத மாதிரி ஒரு புதிர் தான்.

காதலுக்கு சிறந்த மருந்து இன்னொரு காதலே. வசூல் ராஜா பாட்டில் வருவது போல் " ஒரே காதல் ஊரில் இல்லையடா".

காதல் காலங்கள் (Total period) ஒவ்வொருவருக்கும் ஆளை பொறுத்து மாறுகிறது. வாழ்க்கையில் settle ஆகணும் என்ற நினைப்பு சற்று சீக்கிரம் வந்து படிப்பு போன்ற உருப்படி ஆன சமாச்சாரங்களின் பின்னால் சீக்கிரமே வருபவர்கள் கொஞ்சம் பிழைச்சிகுறாங்க.

அப்புறம் கல்யாணம் என்ற ஒன்று நடக்கிறது.. அடுத்த சில மாதங்களுக்கு (கவனிக்க... மாதங்களுக்கு) மனைவி தான் முக்கியம் என்ற நிலை.. புது சந்தோஷம்.. வாழ்க்கை இனிக்கிறது. பின் குழந்தை பிறந்ததும் கதையே மாறி போகிறது.

அந்த குழந்தை வளர்ந்து, படித்து வேலை/ கல்யாணம் என ஆகும் வரை குழந்தையே முக்கியம் என பல ஆண்டுகள் திரிகிறோம்...

பையன்/ பெண் திருமணம் ஆகி போன பின் ஒரு வெறுமை வருகிறது. மறுபடி மனைவி தான் முக்கியம் என எண்ண ஆரம்பிக்கின்றனர்.

பேரன்/ பேத்தி வந்ததும் அது ஒரு தனி சுகம். தன் குழந்தை வளர்க்கும் போது இருந்த டென்ஷன் இன்றி பேரன்/ பேத்தி வளர்ப்பை ஜாலி ஆக எதிர் கொள்கின்றனர் தாத்தா - பாட்டிகள்.

கடைசி காலத்தில் முழுக்க முழுக்க மனைவி மீது தான் dependent ஆக உள்ளனர் பல ஆண்கள்.

யோசித்து பார்த்தால், மிக அதிக காலம் (From 25 years to 70 years) கூட வரும் உறவு மனைவி மட்டும் தான்.

அம்மா நம்மை முதல் 20 அல்லது 25 வருடம் பார்த்து கொண்டார் என்றால் மனைவி 25 முதல் 75 வயது வரை நம்மை பார்த்து கொள்கிறார். நல்லது, கெட்டது அனைத்திலும் கூடவே இருக்கிறார்.

" The most important relationship for every one is the spouse" - இது திருமணம் முடிந்த உடன் நான் வேலை பார்த்த அலாக்ரிட்டி என்ற நிறுவனத்தில் சொல்லி கொடுத்த விஷயம் !

*********
டிஸ்கி : பதிவெழுத வந்த புதிதில் எழுதியது (மீள் பதிவு)

Thursday, July 25, 2013

பெண்களுக்கு செக்ஸ் தொந்தரவு - தடை செய்ய வந்த சட்டம்

ணியிடங்களில், பெண்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள் தருவோர் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் ஒன்று இயற்றப்பட்டுள்ளது. லோக் சபா மற்றும் ராஜ்யசபாவில் இந்த சட்டம் ஏற்று கொள்ளப்பட்டு, பின் ஜனாதிபதி ஒப்புதலும் வாங்கி தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது

இது பற்றிய தகவல்கள் சிறு கேள்வி பதில் வடிவில் :

எந்தெந்த நிறுவனங்கள் இதனை பின் பற்ற வேண்டும் ?

அனைத்து நிறுவனங்களும் - அவ்வளவு ஏன் - வீட்டி பணிபுரியும் பணிப்பெண் கூட பாலியல் சீண்டல்களுக்கு ஆளானால், இச்சட்டத்தின் கீழ் கம்பிளேயின்ட் தரலாம். நிறுவனங்கள், சிறு கடைகள், ஹோட்டல்கள், அரசு துறை நிறுவனங்கள் என எல்லா இடங்களுக்கும் இச்சட்டம் பொருந்தும்

இந்த சட்டத்தில் முக்கியமாக என்ன சொல்லப்பட்டுள்ளது ?

ஒரு பெண் பாலியல் சீண்டல்களுக்கு ஆளானால், அவர் அது பற்றி, பணி புரியும் இடத்தில் புகார் தரலாம். ஒவ்வொரு நிறுவனமும் இதற்காக " Internal Complaints committee " ஒன்றை அமைக்க வேண்டும்.

இந்த கமிட்டியில் எத்தனை உறுப்பினர் இருக்க வேண்டும், யார் யாரெல்லாம் இருக்க வேண்டும் என்ற விபரங்களை இந்த சட்டம் விரிவாக கூறுகிறது

மேலும் புகார் உண்மை - என்றால் அதன் மேல் தகுந்த நடவடிக்கை எடுக்கவும் கூறப்பட்டுள்ளது. பொய்யான குற்ற சாட்டுகள் தரப்பட்டால் அப்படி தந்த பெண் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது

ஒவ்வொரு நிறுவனமும் Internal Complaints கமிட்டி அமைக்க வேண்டுமா ? உதாரணமாக 5 பேர் வேலை செய்யும் ஒரு மருந்து கடையில் ஒரே ஒரு பெண் இருந்தால் அங்கும் Internal Complaints கமிட்டி அமைக்கணுமா ?

10 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் வேலை பார்க்கும் எந்த நிறுவனம் அல்லது கடையும் (அங்கு ஒரே ஒரு பெண் ஊழியர் இருந்தால் கூட) இந்த கமிட்டி அமைக்க வேண்டும்.

அரசாங்கம் ஒவ்வொரு ஏரியாவிலும் சில லோக்கல் கமிட்டிகள் அமைக்கவும் சட்டம் பரிந்துரை செய்துள்ளது. 10 க்கு குறைவான நபர்கள் ஒரு நிறுவனம் அல்லது கடையில் வேலைக்கு இருந்தால் அங்கு நிகழும் இத்தகைய குற்றங்களை லோக்கல் கமிட்டி முன்பு எந்த பெண்ணும் கொண்டு செல்லலாம்

Internal Complaints கமிட்டியில் யார் யாரெல்லாம் உறுப்பினர் ஆக இருக்க வேண்டும்?

கமிட்டியில் குறைந்தது 4 உறுப்பினர் இருக்க வேண்டும். கமிட்டியின் தலைவராக ஒரு பெண் தான் இருக்க வேண்டும். அவர் அலுவலகத்தில் சீனியர் நிலையில் இருக்கும் பெண்மணியாய் இருத்தல் நலம். கமிட்டியின் மொத்த உறுப்பினர்களில் குறைந்தது பாதி பேர் பெண்களாக இருக்க வேண்டும். 4 பேர் கொண்ட கமிட்டி எனில் - குறைந்தது 2 பெண்கள்; 5 பேர் உள்ள கமிட்டி எனில் குறைந்தது 3 பெண்கள் இருத்தல் அவசியம்

இந்த கமிட்டியில் நிறுவனத்தில் பணி புரியாத ஒரு வெளி நபரும் இருக்க வேண்டும். இவர் சேவை நிறுவனங்களுடன் (NGO) தொடர்புடையவராக இருத்தல் அவசியம்

ஒரே ஊரில் இருக்கும் நிறுவனத்தின் ஒவ்வொரு கிளைக்கும் ஒரு கமிட்டி அவசியமா? வெளியூரில் இருக்கும் ப்ராஞ்ச்களுக்கும் கமிட்டி தேவையா ?

ஆம் உள்ளூர் அல்லது வெளியூர் எங்கு கிளை அலுவல்கம் இருந்தாலும் அங்கும் இத்தகைய கமிட்டி அவசியமே.


தனது மேலதிகாரியான பெண் அதிகாரி தனக்கு செக்ஸ் டார்ச்சர் தருகிறார் என ஒரு ஆண் ஊழியர் இந்த சட்டத்தின் கீழ் புகார் தர முடியுமா?

இல்லை இந்த சட்டம் முழுக்க முழுக்க பெண்களை பாது காக்க மட்டுமே இயற்றப்பட்டது. சட்டத்தின் தலைப்பிலேயே "பெண்களை பாதுகாக்க " என கூறப்பட்டுள்ளது. 

ஒரு ஆண் அதிகாரி ( Gay ) தனக்கு செக்ஸ் டார்ச்சர் தருகிறார் என இன்னொரு ஆண் ஊழியர் இந்த சட்டத்தின் கீழ் புகார் தர முடியுமா?

முடியாது மேலே சொன்ன காரணம் தான்.பெண்கள் மட்டுமே இந்த சட்டத்தின் கீழ் கம்பிலேயின்ட் தர முடியும்

ஒரு பெண் ஊழியர் மற்ற சக ஊழியர்களை விட - தனது மேனேஜர் மேல் செக்ஸ் கம்பிலேயின்ட் தந்தால் அது சீரியசாக எடுத்து கொள்ளப்படும் என்பது உண்மையா ? ஏன் ?

ஆம். சக ஊழியர் மேல் தரும் செக்ஸ் கம்பிலேயின்ட் விட- தான் ரிப்போர்ட் செய்யும் மேனேஜர் மேல் அதே புகார் தந்தால் அதன் விளைவு அதிகம் தான்.
காரணம் ஒரு மேனேஜர் தான் தன் கீழே இருப்போருக்கு வருடாந்திர அப்ரைசல், ப்ரோமோஷன், லீவு என எல்லாவற்றையும் ஓகே செய்ய வேண்டும். இந்த அதிகாரத்தை அவர் தவறாக நடக்க முயல்வது பெரும் குற்றமாக கருதப்படும்

இங்கு அந்த குற்றம் மட்டுமல்ல தனது பதவியை தவறாக பயன்படுத்தினார் என்பதால் தண்டனை அதிகமாகவே ( அநேகமாக வேலை இழப்பு) இருக்கும்
**************
து புதிய சட்டம் என்பதால் இது பற்றி விரிவாய் பேச எங்கள் ஸ்டடி சர்க்கிளில் இருந்து ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்துள்ளோம். அதன் அழைப்பிதழ் இது...


இதை வாசிக்கும் நீங்கள் HR அல்லது லீகல் பீல்டில் இருந்தால் நிச்சயம் நீங்களும் கலந்து கொள்ளலாம் அல்லது உங்கள் நிறுவன HR மேனஜர்க்கு இந்த பதிவை அல்லது மீட்டிங் குறித்த அறிவிப்பை அனுப்பி, முடிந்தால் கலந்து கொள்ள சொல்லுங்கள் !

Wednesday, July 24, 2013

வானவில் - ஸ்டேட் பேங்க் புது ரூல் - பதிவர் திருவிழா -Stiff Colar

ஸ்டேட் பேங்க் : இனி இல்லை டெபாசிட் ஸ்லிப், வித் டிராயல் ஸ்லிப் !

ஸ்டேட் பேங்கிற்கு சமீபத்தில் நண்பரின் வங்கி கணக்கிற்கு பணம் கட்ட சென்றிருந்தேன். ATM கார்ட் இருக்கா என்றனர். "கேஷ் கட்ட ஏங்க ATM கார்ட் ?" " இனிமே எல்லாம் அப்டித்தான் " என்று சொல்லி விட்டு அவர்கள் சொன்னது:

" இனி டெபாசிட் ஸ்லிப், வித் டிராயல் ஸ்லிப் போன்றவை கிடையாது. நீங்க கேஷ் கட்டணும் என்றால் கூட ATM கார்ட் எடுத்துட்டு வந்தால் தான் கட்ட முடியும். பணம் எடுக்கணும் என்றாலும் ATM கார்ட் எடுத்துட்டு வரணும் (ATM கார்ட் கையில் இருந்தா - ATM மிஷினில் எடுத்துட மாட்டோமா??)"

சரிங்க ; "என்கிட்டே SBI ATM கார்ட் இல்லை ஆனால் என் அப்பாவுக்கு ஊரில் உங்க பேங்க்கில் மட்டும் தான் அக்கவுன்ட் இருக்கு ; அப்ப என்ன செய்றது " என்றால் " அதுக்கு நீங்க கிரீன் கார்ட்ன்னு ஒண்ணு அப்ளை செய்து வாங்கிக்கணும்; வேற ஒரு அக்கவுன்ட்டுக்கு பணம் அனுப்பணும்னா அதுக்கு தனி கிரீன் கார்ட் வாங்கணும் " என்றதும் தலை சுற்றாத குறை தான் !

ஓரளவு படித்த நமக்கே இப்படி என்றால் - அதிகம் விபரம் இல்லாதவர்கள் எப்படி சமாளிப்பார்கள் என புரியலை !

சென்னையில் பல SBIகளில் இது அமலுக்கு வந்துடுச்சாம். சில SBI ப்ரான்ச்சில் மட்டும் டெபாசிட் ஸ்லிப், வித் டிராயல் ஸ்லிப் வாங்கி வருகிறார்கள் விரைவில் அதுவும் நிறுத்தப்படுமாம் ! இதே முறை மற்ற வங்கிகளுக்கும் வந்துடும் என்றார் அந்த அம்மணி !

முக நூல் கிறுக்கல்கள் 

ஒவ்வொரு மனுஷன் பண்ற தப்புக்கும் தண்டனை தினம் காலையிலேயே கிடைச்சிடுது .....................

இட்லி ! முடியல :(
**************
பெண்டாட்டி பிள்ளை வீட்டில் இல்லை
தடை போட யாரும் இல்லை
பதிவெழுதி கொல்லலாம் மக்களை ...
தில்லானா ..........

## சாட்டர்டே பீலிங்க்ஸ் !
**************
நெய் பொங்கல் சாப்பிட்டும் தூக்கம் வராட்டி - அந்த மனுஷனை தூக்க மாத்திரை கூட தூங்க வைக்க முடியாது ! பீலிங் ஸ்லீப்பி !!
**************
போஸ்டர் கார்னர் 


படித்ததில் பிடித்தது - காலில் புண்ணை விரைவில் ஆற்ற ஒரு புது முறை சிகிச்சை 

சர்க்கரை நோய் வந்தவர்களுக்கு காலில் அடிபட்டால் அவ்வளவு சீக்கிரம் ஆறாது இல்லையா? இதனை சரி செய்ய இப்போது புதிதாக ஒரு இயந்திரம்/ முறை வந்துள்ளது அதன் பெயர் ஹைபர்பேரிக் ஆக்சிஜன் தெரப்பி.

நாம் பொதுவாய் சுவாசிக்கும் போது உடலில் 20 % ஆக்சிஜன் தான் உள்ளே செல்கிறது. இது சிவப்பு அணுக்களில் சேர்ந்து உடலில் உள்ள திசுக்களுக்கு அனுப்புகிறது காயம் உள்ள இடத்துக்கு நிறைய ஆக்சிஜன் கிடைத்தால் சீக்கிரம் ஆறும்.

இந்த புது முறையில் - குறிப்பிட்ட இயந்திரம் மூலம் ஆக்சிஜன் தெரப்பி தருகிறார்கள். இந்த இயந்திரத்தின் உள்ளே நோயோளியை அனுப்ப, அவர் நல்ல ஆக்சிஜனை 100 சதவீதம் சுவாசிப்ப்பார். ஆக்சிஜன் இங்கு இரண்டு மடங்கு அழுத்தத்தில் இருக்கும். 100 சதவீத ஆக்சிஜன் நோயாளி உடலில் கலப்பதால் புண் சீக்கிரம் ஆறும். இந்த சிகிச்சை புண்ணின் தன்மையை பொறுத்து ஓரிரு வாரங்கள் எடுத்தால் - புண் ஆறுகிறது என்கிறார்கள்

தற்சமயம் சென்னை ஆயிஷா மருத்துவமனையில் "Serious Wounds Healing Unit " என்ற பிரிவில் இந்த சிகிச்சை கிடைக்கிறது

ஆயிஷா ஹாஸ்பிட்டல் முகவரி:

Address: 91-A, Millers Road, Kilpauk, Chennai, Tamil Nadu 600010
Phone:044 2642 6930

அறிமுகம் - Stiff Color 

நண்பன் தேவா அண்மையில் எங்கள் அலுவலகம் வந்தபோது புது சட்டை அணிந்திருந்தான். "நல்லா இருக்கே; எங்கே வாங்கினே " என்றால் "இணையத்தில் புக் செய்து வாங்கினேன் - விலை 500 ரூபாய் " என்றான். 500 ரூபாய்க்கு அந்த சட்டை செம வொர்த் ! நம்ம ஊர் என்றால் அதே சட்டை 1000 ரூபாயாவது இருக்கும்

விபரங்கள் கேட்ட பின் Stiff Color என்ற அந்த சட்டை லிங்க் தந்தான். வெப்சைட் சென்று பார்த்தால் எல்லாம் 800 ரூபாய், 1000 ரூபாய் என்று தான் இருந்தது. வாரம் ஒரு முறையாவது டிஸ்கவுன்ட் போடுகிறார்கள். அநேகமாய் மதியம் 1 முதல் 4 வரை தான் இந்த டிஸ்கவுன்ட் தருகிறார்கள் தங்கள் முகநூல் பக்கத்தில் இதற்கான அறிவிப்பை சரியே அன்றைக்கோ அல்லது முதல் நாளோ தான் சொல்கிறார்கள்

பணம் முதலில் டிரான்ஸ்பர் செய்தால் நாம் சொல்லும் முகவரிக்கு சட்டை அனுப்புவர். மேலும் அதில் நமது இனிஷியல் (கைகளில்) போடணும் என்றாலும் செய்கிறார்கள்.

நான் இதுவரை வாங்கவில்லை (பல நேரங்களில் மதியம் முகநூலில் மட்டும் அறிவிக்கிறார்கள் அலுவலகத்தில் இருந்து பார்க்க முடியாமல் போகிறது) ; நண்பன் தேவா சில முறை வாங்கியிருக்கிறான். நம்பிக்கையான க்ரூப் என்று தான் தெரிகிறது .

இந்த பதிவு வெளியிடப்படும் இன்று மதியம் 1 முதல் 4 வரை மட்டும் ஆக்ஸ்போர்ட் சட்டைகளுக்கு 25 % டிஸ்கவுன்ட் என்று நேற்றிரவு முகநூலில் கூறியிருந்தார்கள் ! விருப்பமிருந்தால் எட்டி பாருங்கள் !

Stiff Colar Facebook page: https://www.facebook.com/StiffCollar

பதிவர் திருவிழா

சென்ற வருடம் போலவே, இந்த வருடத்துக்கான பதிவர் திருவிழா ஏற்பாடுகள் துவங்கி விட்டன. செப்டம்பர் 1 - ஞாயிறு காலை விழா நடக்க உள்ளது. காலை முதல் மாலை வரை விழா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஹால் புக் செய்யப்பட்டு விட்டதால் செப்டம்பர் 1 என்கிற தேதி உறுதியாகி விட்டது.

விழா நடக்கும் இடம்: 

CINE MUSICIAN’S UNION HALL 
கமலா தியேட்டர் அருகில் வட பழனி 
தேதி: செப்டம்பர் 1, 2013, ஞாயிறு காலை (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)


இந்த மாநாட்டிற்காக ஆகும் செலவுகளை சமாளிக்க விருப்பமுள்ள பதிவர்களிடம் அன்பளிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. ஏதோ ஒரு வகையில் அன்பளிப்பு தர இயலாமல் இருக்கும் பதிவர்கள், தங்களின் வருகையையே அன்பளிப்பாக தருமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

உங்களது பெயர், உங்கள் வலைதளமுகவரி, ஊர்/நாடு, தொலைபேசி எண்(optinal)தெரிவித்தால், உணவு தயார் செய்ய, வெளியூர் எனில் தங்கும் இட வசதி செய்ய மிகவும் உதவியாக இருக்கும்.

பதிவர் மாநாட்டிற்கான தங்களது வருகையை தெரிவிக்க, தொடர்புகொள்ள வேண்டிய பதிவர்கள் :

மதுமதி – kavimadhumathi@gmail.com
பட்டிகாட்டான் ஜெய் – pattikattaan@gmail.com
சிவக்குமார் – madrasminnal@gmail.com
ஆரூர்மூனா.செந்தில்குமார் – senthilkkum@gmail.com
அஞ்சாசிங்கம் செல்வின் – selwin76@gmail.com
பாலகணேஷ் – bganesh55@gmail.com
சசிகலா - sasikala2010eni@gmail.com

முதல் நாளே வெளியூர் நண்பர்கள் பலர்  வந்து விட, சனி, ஞாயிறு 2 நாளும் செம குதூகலமாய் இருக்கும். நீண்ட இடைவேளைக்கு பின் பல நண்பர்களை சந்திக்க, ஜாலியாய் அரட்டை அடிக்க போகும் அந்த இரு நாட்களுக்காக காத்திருக்கிறேன் !

விழா பற்றிய மேலும் விபரங்களுக்கு : இங்கு வாசியுங்கள் !

************
அய்யாசாமி கார்னர்

ஆகஸ்ட் மாதம் கல்யாண நாள் வருவதால் Mrs. அய்யாசாமி இப்பவே புடவை வாங்கணும் என சொல்லி மனிதரை கடைக்கு அழைத்து சென்றார். இரண்டு புடவைகள் எடுத்து வைத்து கொண்டு, எதை செலக்ட் செய்வது என நீண்ட நேரம் யோசிக்க, அய்யாசாமி " ரொம்ப பிடிச்சா ரெண்டையும் எடுத்துக்க " என்று பெர்மிஷன் (!!!??) தர , " அப்டி வா வழிக்கு " என ரெண்டு புடவையும் வாங்கி முடித்தார் Mrs. அய்யாசாமி.

பர்ச்சேஸ் எல்லாம் முடிந்து வீட்டுக்கு செல்லும் வழியில் இப்படி புலம்பினார் Mrs. அய்யாசாமி

" எங்க கம்பனி வேற சீக்கிரம் மூடிடுவான் போலருக்கு ; ரெண்டு புடவையும் சீக்கிரம் கட்டிடணும் "

" என்னாது ! கம்பனி சீக்கிரம் மூடிடுவானா ? என்னாடி சொல்றே? தெரிஞ்சா 2 புடவை எடுக்க சரின்னு சொல்லிருக்க மாட்டேனே ? " என்று அய்யாசாமி சொல்ல, Mrs. அய்யாசாமி, அவரை ஏமாற்றிய வெற்றி களிப்பில் ஜாலியாக சிரித்தார்.

அய்யாசாமி மைண்ட் வாய்ஸ்  :

" கல்யாணம் ஆகி 15 வருஷம் ஆச்சுது; ஆனா 16 வருஷமா இந்த கம்பனி சீக்கிரம் மூடிடுவாங்க; அதுக்கப்புறம் நான் வேலைக்கு போக மாட்டேன்னு சொல்லிக்கிட்டே தான் இருக்கா ; ஒண்ணும் நடக்க மாட்டேங்குது ; நீ வண்டியை ஓட்டுடா சூனா பானா "

என்னா பாட்டுடே 

"வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே " ரஹ்மான் இசை அமைத்து பாடிய இந்த பாடல் எப்போது கேட்டாலும் மனம் என்னவோ போல் ஆகி விடும்

கன்னத்தில் முத்தமிட்டால் படத்தின் டைட்டில் சாங் இப்பாடல். இவ்வளவு மெதுவாக ஒரு பாடல் அமைத்து அதை நம்மை ரசிக்கவும் வைக்க எத்தனை இசை அமைப்பாளருக்கு தைரியம் இருக்கும்? கதை களன் பற்றிய நினைவின்றி பாடலை கேட்டால் - இசையை ரசிக்கும் பலரும் மயங்கி போவார்கள் ...அற்புதம் !


முதலில் சொன்ன மாதிரி படத்தின் டைட்டில் மற்றும் படகாட்சிகள் உடன் கூடிய பாடல் இங்கு; பார்க்கும்போது இலங்கை பிரச்சனை நினைவிற்கு வந்து கண்கள் கலங்குவதை தவிர்க்க முடிய வில்லை.

ஆமாம் இவ்வளவு அற்புதமான படங்கள் எடுத்த மணிரத்னம் கடைசி 2 படங்களில் ஏன் காணாமல் போனார் ?


Related Posts Plugin for WordPress, Blogger...