Tuesday, December 16, 2014

தொல்லை காட்சி - நீயா நானா - ஆபிஸ் -விஜய் டிவி ஸ்பெஷல்

பெண்கள் Vs ஆண்கள் 

நரசுஸ் காபிக்கான விளம்பரம் இது:

அம்மா - சிறு பெண்ணுக்கு காபி போட சொல்லி தருகிறார். காபி போட்டு முடித்ததும் சரியாக அப்பா உள்ளே நுழைந்து காபியை குடித்து விட்டு " பேஷ் ! பேஷ் ! ரொம்ப நல்லா இருக்கு " என்கிறார்

" இதை இதை இதை தான் நாங்க எதிர்பார்த்தோம் " என கோரசாக சொல்கிறார்கள் அம்மாவும்,பெண்ணும் !

சாப்பிட்டு விட்டு கருத்து சொல்வது மட்டுமே ஆணின் வேலை - அவனை நல்ல சாப்பாட்டால் குஷிபடுத்துவ்து பெண்ணின் பொறுப்பு ("" இதை இதை இதை தான் நாங்க எதிர்பார்த்தோம் " ) இப்படி பழமை ஊறிய சிந்தனையில் எடுக்கிறார்களே ! இன்னிக்கு உலகம் எவ்வளவோ மாறி போச்சு !

அப்பாவும் பெண்ணும் காபி போட்டு, வேலைக்கு சென்று திரும்பும் அம்மாவிற்கு தருவது போல் காட்டியிருந்தால் இன்னும் நன்றாய் இருந்திருக்கும் ! (சனிக்கிழமை மாலைகளில் எங்க வீட்டில் நடக்குறதை சொன்னேன் பாஸ் ! )

அழகு கார்னர்

விஜய் டிவி கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் வரும் ப்ரியா பவானி ஷங்கர்..

சீரியல் பார்ப்பதில்லை. சேனல் மாற்றும் போது இந்த அம்மணி கண்ணில் பட்டால் மட்டும் நின்று சற்று இளைப்பாறுவது உண்டு. கோதுமை நிறம், பேசும் விழிகள் என அம்மணி ............ரசிக்கும் அழகு !



நீயா நானா - கார்பரேட்டால் வேலை இழந்தோர் 

"அடடா நாம கலந்து கிட்டுருக்க வேண்டிய தலைப்பல்லவா ? " என எண்ண வைத்த டாப்பிக்.

கம்பனிகளில் வேலை இழந்தோர் ஒரு புறமும், நிறுவனங்கள் வேலையை விட்டு அனுப்புவது ஏன் என HR உள்ளிட்டோர் மறு புறமும் பேசினர்.

ஓரளவு சுவாரஸ்யமான மற்றும் சில அவசிய தகவல்கள் பகிர்ந்த நிகழ்ச்சி என்றாலும் சட்ட ரீதியான ஊழியர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசிய தகவல்களை சொல்லாமல் சென்றனர்...

நிறுவனம் - தான் நினைத்த படி ஒருவரை உடனே வேலையை விட்டு அனுப்ப முடியாது - தவறு செய்திருந்தால் - ஒரு என்கொயரி நடத்தி - அதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே தண்டனை தரமுயும் என்பதையும், அத்தண்டனை கூட தவறுக்கு நிகரான அளவில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதையும் கூற வில்லை. (வேலையை விட்டு அனுப்புவது மரண தண்டனை போல அரிதான நேரங்களில் மட்டுமே தரப்பட வேண்டும் !)

குறிப்பாக நிர்வாகம் மிரட்டுகிறது என்பதற்காக வேலையை விட்டு செல்ல ரிசைநேஷன் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. " என் மீது தவறு என்றால் அதை நிரூபியுங்கள்" என்றால் - நிர்வாகம் இறங்கி வந்து '" உனக்கு சில மாதங்கள் டைம் தருகிறோம்; அதற்குள் வேறு வேலை பார்த்து கொண்டு செல் " என சொல்லும் என்கிற தகவலை சொல்லியிருந்தால் லட்சக்கணக்கான மக்களுக்கு அது பயனுள்ள வகையில் இருந்திருக்கும் !

ஆபிஸ்

ஹவுஸ் பாஸ் பார்ப்பதால் - கூடவே நானும் "கேட்கும்" (கண்- கணினி மீது) ஒரே சீரியல் இது...

லட்சுமிக்கு நடிக்க விருப்பமில்லை என விலகிய பின் - அவரது காரக்டர் வெளியூர் சென்றதாக காட்டி முடித்து விட்டனர். போலவே இன்னொரு முக்கிய பெண்மணி (சூசன்) நிஜ வாழ்வில் கர்ப்பம் என்பதால் - கதையில் அவரை இறக்க வைத்து காரக்டரை காலி செய்தனர்....

இந்த இருவரும் இன்றி இரண்டாம் பாகம் துவங்கி - ஒரு மாதிரியாக போய்க்கொண்டிருக்கிறது... கலர்புல் பெண்கள்.... காமெடி என்ற பெயரில் மரண மொக்கை... சின்ன சின்ன சஸ்பென்ஸ் என்று செல்லும் கதையில் - நிச்சயம் முதல் பாக சுறுசுறுப்பில்லை.... இழுவையாக செல்வதை உணர்ந்து கதையை ஒழுங்கு செய்தால் நலம் !

மேலும் மிக கொடுமையான நேரத்தில் (இரவு 10.30) ஒளிபரப்புகின்றனர்.. பழையபடி 10 மணிக்கு மாற்றா விட்டால் - மக்கள் தேவையான போது யூ டியூபில் மட்டும் பார்த்து கொள்ள துவங்கி விடுவர் !

பார்த்த படம் - தங்கபதக்கம்

ஒரு ஓய்வு நாளின் மதிய வேளையில் - பாதியிலிருந்து பார்த்தோம். எங்கள் ஊர் காவேரி தியேட்டரில் தரை டிக்கெட்டில் அமர்ந்து பார்த்து அழுது விட்டு வந்தது அவ்வப்போது நினைவுக்கு வந்தது. இப்போது பார்க்க பல இடங்கள் காமெடியாக தான் இருந்தது. குறிப்பாக சிவாஜி - கஞ்சி போட்ட போலிஸ் யூனிபார்ம் போல செம விறைப்பாக நடிப்பது செம என்டர்டெயின்மென்ட் . வீட்டில் சாப்பிடும்போதும் மனைவி கூட பேசும்போதும் கூட அதே விறைப்பு தான்.


ஸ்ரீ காந்த் மாடுலேஷன் அதற்கு மேல். ஒவ்வொரு வசனம் பேசும்போதும் உடலை ஒருவாறு ஆட்டியபடி, அல்லது சற்று எம்பி எம்பியபடி அவர் பேசுவது ஸ்டெயிலாமாம் !!

இப்படத்துக்கு பதிவர் சிபி விமர்சனம் எழுதினால் சுவாரஸ்யமாய் இருக்கும் என தோன்றியது (குறிப்பாய் கே ஆர் விஜயா மற்றும் பிரமிளா பற்றிய அவரது வர்ணனைகள் மற்றும் படத்தின் லாஜிக் மீறல்கள் )

பேக் டு ஸ்கூல்

ஏகப்பட்ட விளம்பரங்கள் - பில்ட் அப் தந்து வந்த இந்நிகழ்ச்சி ரொம்ப ரொம்ப சுமார்.

குஷ்பூவை சில குழந்தைகளுடன் விளையாட விடுகிறார்கள். இதில் பொது அறிவு கேள்விகள் வேறு... ஐந்தாறு வயது குழந்தைகளுக்கு எப்படி பெரியவர்கள் அளவு பொது அறிவு இருக்கும் !

எவ்வித சுவாரஸ்யமும் இன்றி கொட்டாவி வர வைத்த நிகழ்ச்சி. போக போகவாவது இம்ப்ரூவ் செய்கிறார்களா என பார்க்கலாம் !

Sunday, December 14, 2014

கோவா.. சூதாடும் இடத்தில் (Casino) ஓர் நாளிரவு..அனுபவம்

திவுலகில் தொடர்ச்சியாய் இயங்க துவங்கிய பின் இவ்வளவு பெரிய இடைவேளை எடுத்ததில்லை.

எங்கள்  ACS இன்ஸ்டிடியூட் நடத்திய தேர்தலில் போட்டியிட்டதால் - எந்த சோசியல் மீடியாவிலும் விசிபிளிட்டி அதிகப்படுத்த எழுதக்கூடாது என்ற தேர்தல் விதிமுறையின் படி - 3 மாதம்  முழுவதுமாய் ஒதுங்கியிருந்தேன்.

தேர்தல் முடிந்தது. ரிசல்ட் கிறிஸ்துமஸ் அருகாமையில் வெளியாகும்.

கோவா குறித்த இப்பதிவு நீண்ட நாளாக Draft -ல் இருந்தது. ..இப்போது உங்கள் பார்வைக்கு ....
***********

கேசினோ... ஆம் சூதாடும் இடமே தான்.... அந்த வார்த்தையை கேட்டதுமே நிறைய மனிதர்கள் புகைபிடித்து கொண்டோ, குடித்த படியே  சீட்டாடும் ஒரு பிம்பம் நமது நினைவுக்கு வரும்.. என்ன செய்வது சினிமாக்களில் அப்படிதான்  நமக்கு காண்பித்திருக்கிறார்கள்...

நிஜத்தில் கேசினோ எப்படி இருக்கிறது?

பார்க்கும் முன் கோவாவின் கேசிநோக்கள் பற்றி சில தகவல்களை சொல்லி விடுவோம்

இரண்டு வகையான கேசினோக்கள் கோவாவில் உண்டு.. ஒன்று வழக்கமான (தரையில் இருக்கும்) கேசினோ ; மற்றொன்று மிதக்கும் கேசினோ - கடலில் அமைக்கப்பட்ட கப்பல் அதுனுள் இருக்கும் கேசினோ இந்த வகையை சேரும்.

கோவா கடல் சூழ்ந்த இடம் என்பதால் -  இங்கு மிதக்கும் கேசினோக்கள் அதிகம் உள்ளன.

நாங்கள் சென்ற "கேசினோ ப்ரைட் " மிக புகழ் பெற்றது. நுழைவு கட்டணம் 1000 ரூபாய் ; இதற்கு 500 ரூபாய்க்கு விளையாடும் கூப்பன் தந்து விடுகிறார்கள். மேலும் பபே உணவு அன் லிமிட்டட் ஆக சாப்பிடவும், கேசினோ விளையாடும் இடத்தில் ஆல்கஹாலும்  கூட இலவசம்.. எனவே கொடுத்த ஆயிரம் ரூபாய் முதலில் அதிகம் போல தோன்றினாலும், அதிகம் ஆடி பணம் இழக்க வில்லை எனில் - கொடுத்த காசுக்கு வொர்த் தான்...

உள்ளே நுழைந்து டிக்கெட் எடுக்கும்போதே மகளின் வயதை கேட்டு விட்டு 21 வயது வரை சூதாட்டம் ஆட அனுமதி இல்லை என்று அவளுக்கு மட்டும் 300 ரூபாய் டிக்கெட் தந்தனர். காமிரா அனுமதி இல்லை என அதனையும் வாங்கி வைத்து விட்டனர் (போன்கள் எடுத்து செல்லலாம் எனினும்  அதிலும் தப்பி தவறி கூட புகைப்படம் எடுக்க கூடாது )

மிதக்கும் கப்பலுக்கு ஒரு படகு மூலம் அழைத்து செல்கிறார்கள். தரை தளத்தில் தான் விளையாட்டுகள்.. சிறுவர், சிறுமிகள் அங்கு அனுமதி இல்லை என்பதால் இரண்டாம் தளம் (உணவகம்) நேரடியே சென்றோம்..(மகள் உடன் இருந்ததால்) 



20க்கும் மேற்பட்ட வெஜ் மற்றும் நான் வெஜ் உணவுகள்....  மீன், சிக்கன், மட்டன் என அனைத்தும் இருந்தாலும் அதிகம் சுவையாய் இல்லை; குறிப்பாக மீன் ரொம்ப சுமாராக கொஞ்சம் சாப்பிட்டு விட்டு - வைத்து விடும் விதத்தில் இருந்தது.

ஆனால் மிக அசத்தியது இனிப்பு வகைகள் .. பல்வேறு வித இனிப்புகள் வரிசை கட்டி அணி வகுக்க, ஹவுஸ் பாஸ் அவற்றை மட்டுமே ரவுண்டு கட்டி அடித்து இனிப்புகளுடன் மட்டுமே இரவு உணவை முடித்து கொண்டார்.

மனைவியையும் மகளையும் உணவு உண்ண சொல்லி விட்டு  - கேமிங் நடக்கும் தரை தளத்துக்கு வந்தேன்...பெண்ணை தனியே விட்டு விட்டு வர மனமின்றி ஹவுஸ் பாசும் கேமிங் இடத்திற்கு வரவில்லை; ஆயினும் சாப்பிடும் இடமான இரண்டாம் தளத்திலிருந்து கீழே கேமிங் நடக்கும்   இடத்தை வேடிக்கை பார்க்க இயலும் ; அப்படி தான் அவர்களும் பார்த்தார்கள் )

மிக பெரிய ஹால்... அங்கு 20க்கும் மேற்பட்ட கப்பலின் பணியாளர்கள் இருந்து - விருந்தினர் சூதாட்டம் ஆட உதவிக்கொண்டிருந்தனர். .. ரூலேட் மற்றும் கேசினோ வார்  ஆகிய இரண்டு ஆட்டங்கள் மிக அதிக அளவில் ஆடப்பட்டன.

எனக்கு தரப்பட்ட 500 ரூபாய் மற்றும் மனைவிக்கு தந்த அதே அளவு கூப்பன் இரண்டுக்கும் சேர்த்து விளையாட திட்டம்...

முதலில் விளையாட்டை புரிந்து கொள்ள வேண்டும். அங்கு ஆடுவோர் எல்லாம் பழம் தின்று கோட்டை போட்டவர்கள் போலும். அசால்ட்டாக விளையாடுகிறார்கள்.. அநேகமாய் உள்ளூர் வாசிகளாய்  இருக்க வேண்டும்...

அங்கு விளையாடும் பணியாளர்களின் உடல் மொழி வேடிக்கையாகவும், ரசிக்கும் வண்ணமும் இருந்தது. அனைவருக்கும் ஒரே மாதிரி வெள்ளை உடை.. சில விஷயங்கள் ஒரே மாதிரி தான் செய்கின்றனர். குறிப்பாக கேம் ஆட நீங்கள் காயின் (பணத்துக்கு ஈடு ) தந்தால் - அதை கையில் வாங்குவதில்லை; போர்டின் மீது வைக்க சொல்கிறார்கள். அந்த போர்டிலிருந்து அந்த பணத்தை அவர்கள் வேகமாக எடுக்கும் லாவகமே அழகு !



விளையாட்டில் - ஒரு கட்டத்திற்கு  குறைந்த பட்ச கேம்பிள் தொகை ரூ. 100; அதிக பட்சம் ரூ 2000. நீங்கள் பல கட்டங்களிலும் ஒரே நேரத்தில் பந்தயம் கட்டலாம்

மிதக்கும் கப்பல் பயணமும் கேசினோவும் மிக அருகருகே உள்ளது; இரண்டையும் ஒரே நாளின் மாலையில் கண்டு விடலாம்.

நமக்கு தரும் கூப்பன் வைத்து ஒரே முறை விளையாடலாம். அதாவது 500 ரூபாய் கூப்பனை அப்படியே வைத்து தான் விளையாட முடியும் ; நூறு நூறாக அல்ல.

கேமிங் என்றால் என்ன என அறிய மட்டும் அந்த பணத்தை வைத்து விளையாடினேன். அவர்கள் தந்த முதல் 500 ரூபாயை தோற்று விட்டால் - அடுத்து ஆட - மீண்டும் பணம்  கட்டி தான் ஆக வேண்டும். நல்ல வேலையாக துவக்க ஆட்டம் தோற்காமல் இருந்ததால் - பணம் சற்று அதிகம் கிடைத்தது. பின் அதனை வைத்து 100, 200 ரூபாயாக வைத்து பல்வேறு ஆட்டங்கள் ஆடிப்பார்த்தேன்.. கம்பல்சரி ஆக வாங்கிய பணம் காலி ஆனதும் மீண்டும் ஆடும் எண்ணத்தை ஒத்திப்போட்டு விட்டு - மற்ற நபர்களையும் அவர்கள் ஆடும் விதத்தையும்  மெளனமாக கவனிக்க துவங்கினேன்

சில பேர் ரூபாய் நோட்டுகளை கட்டாக கொண்டு வந்து வைத்து கொண்டு ஆடுகிறார்கள். காயின்கள் தீர்ந்தால் சிப்பந்திகளை விட்டு பணம் அனுப்பி காயின்கள் பெற்று கொள்கிறார்கள்.

பேப்பர் வைத்து ஏதேனும் குறிப்புகள் குறித்து கொண்டு - பிளான் பண்ணி ஆடும் ஆட்களும் இருக்கிறார்கள்.

ஆங்காங்கு சில பெண்களும் கூட மிக ஆர்வமாய் விளையாடுவதை காண முடிந்தது.

நம்மை போல் புதியவர்கள் தான் எல்லா போர்டுகளுக்கும் சென்று வேடிக்கை பார்க்கிறோம் ; வழக்கமாய் வருவோர் - தங்களுக்கு பிடித்த விளையாட்டிலேயே செட்டில் ஆகி விடுகிறார்கள்.

யூ டியூபில் கிடைக்கும் இந்த வீடியோவில் நாங்கள் சென்ற கேசிநோவை காணலாம்... கடைசியில் இளம் பெண்கள் ஆடுகிற மாதிரி காட்டுவது எல்லாம் சும்மா புருடா .. ஏதாவது நியூ நியர் பார்டிக்கு மட்டும் அது நடந்திருக்கலாம் ... அதனை நம்பி ஏமாறாதீர்கள் :)




கோவா செல்லும் போது நிச்சயம் கேசிநோவிற்கும் ஒரு விசிட் அடியுங்கள் .. ஒரு வித்தியாச உலகத்தை காண தவறாதீர்கள் !
*********
மாக்கீஸ் சாட்டர்டே மார்க்கெட் & இண்டோ மார்கெட் .

சனிக்கிழமை அன்று கோவாவில் தங்கினீர்கள் என்றால் அவசியம் செல்ல வேண்டியவை இந்த 2 மார்க்கெட்டுகளும்...

இரண்டுமே பாகா என்கிற ஏரியாவில் இருக்கின்றன. துணிகள், பெண்களுக்கான பேக் மற்றும் இன்ன பிற அக்ஸசரீஸ், கலை பொருட்கள் ஆகியவை இங்கு கிடைக்கும்.

விலை சர்வ சாதாரணமாக  5  மடங்கு சொல்கிறார்கள். 850 ரூபாய் சொன்ன ஒரு பொருள் விற்பவராகவே கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து 200 ரூபாய்க்கு எங்களிடம் தந்தார். இத்தனைக்கும் நாங்கள் ஒரு முறை கூட விலை சொல்ல வில்லை. அவர் 200 ரூபாய் சொன்ன பின் தான் அட.. வாங்கலாமே என தோன்றி, .வாங்கினோம்.

வாங்கி கொண்டு நகர்ந்ததும் மீண்டும் நினைத்து பார்த்தேன். அந்த பொருள் பிடித்திருந்து விலை கேட்டால், நாம் எவ்வளவு கேட்போம்.. 500 ரூபாய் கேட்டிருக்கலாம்... 850 சொல்லும் ஒரு பொருளை எப்படி 200 ரூபாய்க்கு கேட்பது என்று.. தலை சுற்றி விட்டது !

துணிகள் அவ்வளவு நன்றாய் இராது வாங்க வேண்டாம் என நண்பர்  கூறியிருந்தார்.அது உண்மை தான். துணிகள் பக்கம் அதிகம் நாங்கள் செல்ல வில்லை. உண்மையிலேயே கலை பொருட்கள் தான் மிக அட்ராக்டிவ் விலைக்கு கிடைக்கிறது.

மார்கெட் உள்ளே  நுழையும் போதே பீர் விற்கிறார்கள். நிறையவே உணவகங்கள்..  மாக்கீஸ் என்ற பெயரில் இருக்கும் உணவு கடையில் நல்ல கூட்டம்; நாங்கள் ஓரிரு வகை மட்டும் வாங்கி சாப்பிட்டு பார்த்தோம்; நன்றாக இருந்தது.

சனிக்கிழமை மட்டுமே இந்த இரு மார்கட்களும் இயங்குகின்றன. மாலை 6 மணிக்கு துவங்கும் மார்கெட் இரவு 11 அல்லது 12 மணி வரை நீடிக்கிறது ; இதை தவிரவும் புதன் கிழமை மார்க்கெட் என குறிப்பிட்ட ஒரு பீச் அருகே பகல் முழுதும் நடக்கும் மிக மார்கெட் ஒன்று மிக பிரபலம் என்று கூறினர்.

ஷாப்பிங் பிரியர்கள் .. சனிக்கிழமை இரவு கோவாவில் இருந்தால்...  டோன்ட் மிஸ்  தி பிளேஸ்  !

Wednesday, September 10, 2014

சலீம் & ஓம் ஷாந்தி ஓஷானா - சினிமா விமர்சனம்

சலீம் 

"நான் " ஆச்சரியப்படுத்தியது என்றால் - அதன் இரண்டாம் பாகம் சலீம் - கூட அதே  போன்ற உணர்வை தருகிறது  !

முதல் நல்ல விஷயம் ... வித்யாசமான கதைக்களன்.. காதல் -  கிராமம் போன்ற டெம்ப்ளேட்களில் இருந்து வேறு பட்டு சுவாரஸ்யமாய் கதை சொல்லி - ஆர்வமாய் கவனிக்க வைக்கிறார்கள்



"நான்" - படம் - ஹீரோ டாக்டருக்கு படிப்பதுடன் நிறைவடையும். இங்கு ஹீரோ டாக்டர்  படிப்பை முடித்து ஆஸ்பத்திரியில் பணியாற்றுவதில் இருந்து தொடர்கிறது.

சாதாரணமாக செல்லும் முதல் பாகம்.. இரண்டாம் பாகத்தில் விறுவிறுக்க வைத்து விடுகிறார்கள்.   கதை , திரைக்கதை -மற்றும் -  சொன்ன விதம்.. இவற்றால் ரசிக்க வைக்கிறது படம்.

"நான் " படத்தின் பார்மட் பெருமளவு பயன்படுத்தப்பட்டுள்ளது... குறிப்பாக இவ்வளவு தப்பு செய்யும் ஹீரோ நிச்சயம் மாட்டி கொள்வான் என நினைக்க வைத்து முடிவில் வேறு விதமாய் முடிப்பது இங்கும் தொடர்கிறது.

குறைகள்  இல்லாமல் இல்லை.

குறிப்பாக - முக பாவங்கள் எதுவும் மாற்றாத ஹீரோ - ஏராள லாஜிக் மிஸ்டேக் இவை இரண்டும் !

இருப்பினும்... இரண்டரை மணி நேரம் சுவாரஸ்யமான படம் என்ற அளவில் நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம் ... சலீம் !

*********
ஓம் ஷாந்தி ஓசானா 

சில மாதங்களுக்கு முன்பு வெளியான இந்த மலையாள படம் இப்போது தான் காண முடிந்தது.

செம்ம்ம வித்யாசமான கதை. சொன்ன விதமும் கிளாஸ் ! இவை இரண்டையும்  விட அசத்தும் விஷயம் ஹீரோயின் நஸ்ரியா நடிப்பு.. வாவ் .. என்ன பெர்பார்மன்ஸ் !!



முழுக்க முழுக்க - ஒரு பெண்ணின் பார்வையில் செல்லும் கதை.. அவளது Calf love .. துவங்கி - பின்பு வரும் காதல்... சண்டை - பிரிவு.. படிப்பு... என நழுவி கொண்டு ஓடுகிறது படம்.

படத்தில் ஹீரோ வரும் காட்சிகள் மிக  குறைவு.முழுக்க படத்தை சுமப்பது  நஸ்ரியா.. நஸ்ரியா.. நஸ்ரியா மட்டுமே !



அந்த பாத்திரத்தை ரொம்ப அழகாக  வடிவமைத்துள்ளனர். நடப்பதில் துவங்கி, பார்வை - பேச்சு என ஒவ்வொன்றும் அப்படி பொருந்தி போகிறது !

இங்கும் அங்கும் ஊசலாடி சென்றாலும்.. இறுதியில் ஒரு நல்ல பீல் குட் மூவி என்ற நிறைவை தருகிறது ஓம் ஷாந்தி ஓஷானா !

அண்மையில் திருமணமான நஸ்ரியா மீண்டும் நடிப்பாரா ? நடிக்க வேண்டும் என்ற ஆவல் - படம் பார்த்து முடிக்கும் போது - நம் மனதில் !

Tuesday, September 9, 2014

கணவன் - மனைவி சண்டை

ணவன் - மனைவி சண்டை பல வருடங்களாக அறிமுகம் ஆனதுதான். அம்மா - அப்பா சண்டை துவங்கி, பின் அண்ணன் - அண்ணி, அக்கா - அத்தான் என பல வித சண்டைகள் பார்த்து பழக்கமாகி போய் தான் இருந்தது.

திருமணத்துக்கு பின் முதல் ஆறு மாதம் நல்லா தான் போனது. ஃபைட் சீன்களுக்கான அறிகுறி ஒண்ணும் காணும்.

கல்யாணமான புதுசு... அப்போல்லாம் அய்யாதான் அதிகமா பேசுவார்... எனது வீர தீர பராக்கிரமங்கள்.. யார் யாரை (one side-ஆ) லவ் பண்ணேன்; எந்த எந்த கவிதை எந்த பெண்ணை பற்றி எழுதியது போன்ற விபரங்கள் சொன்னபோதெல்லாம் நம்ம 'ஹவுஸ் பாஸ்' சிரிச்சிகிட்டே தான் கேட்டாங்க. ஒண்ணும் சொல்லலே. நான் கூட லைஃப் இப்படியே பிரச்னை இல்லாம போகும்னு நம்ம்ம்பி... வாழ ஆரம்பிக்கும் போது ஆரம்பிச்சிடுச்சு கதை..

அதன் பின் நடந்த எல்லா சண்டைகளிலும் ஒரு பொதுவான pattern இருக்கும்.

1. ஒரு பெரிய தவுஸண்ட் வாலா பட்டாசு ஒரு சின்ன திரியில் ஆரம்பிக்குமே.. அப்படி ஒரு சின்ன கிண்டல் அல்லது பேச்சில் ஆரம்பிக்கும் சண்டை. அநேகமா இந்த கிண்டல் நம்மோடதாதான் இருக்கும்.

2. அடுத்து யார் பக்கம் என்ன தப்புன்னு ஒரு நீண்ட விவாதம் கோர்ட் சீன் போல் நடக்கும். இதில் அந்த நாள் பண்ணிய தப்பு பற்றி மட்டுமே பேசனும்னு எந்த ரூல்ஸும் கிடையாது. நான் வர மறந்த முக்கிய ஃபங்ஷன்கள் மற்றும் கல்யாணங்கள் என்னென்ன, ஹவுஸ் பாஸ் பக்கத்தில் இருக்கும் போதே மற்ற பெண்களை பற்றி ஹவுஸ் பாஸிடமே அடித்த கமென்டுகள் மற்றும் இன்ன பிற குற்றங்கள் புள்ளி விபரங்களுடன் வெளி வரும். இதற்கு என்னால் ஆன எதோ ஒரு விவாதம் (ரொம்ப weak-ஆக) முன் வைப்பேன்.

3. இதன் பின் ஒரு "அழுகை படலம்" நடக்கும். இப்போது நான் விட்டத்தை பார்த்து கொண்டோ, சாவி போன்ற முக்கியமான ஒன்று தேடுவது போலோ ஏதாவது ஒன்று செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் டிவி ரிமோட் பக்கம் இந்த நேரம் போக கூடாது. அது எரியும் தீயில் எண்ணை ஊற்றும் செயல்.

ஆரம்பத்தில் ரொம்ப அப்பாவியாய், "நானா உன்னை திட்டினேன்? நீ என்னை திட்டிட்டு - நீயே ஏன் அழுகிறே?" என்று கேட்டுள்ளேன். இப்போது அப்படி கேட்குமளவு தைரியம் இல்லை.

4. இதன் பின் சமாதான உடன்படிக்கை நிகழும். நீங்கள் நம்பா விட்டாலும் கூட சொல்லி வைக்கிறேன்.. பெரும்பாலான நேரம் நம்ம ஹவுஸ் பாஸ் தான் நம்ம கிட்டே "சாரி" கேட்டு சண்டையை முடிச்சு வைப்பார். (ஆம்பளை ஈகோவை பார் என பெண்கள் முணு முணுப்பது கேட்கிறது).

சில நேரம் ரொம்ப விரக்தி ஆகி வீட்டை விட்டு வெளிநடப்பு செய்ய பார்ப்பேன். அது மட்டும் நம்ம ஹவுஸ் பாஸுக்கு பிடிக்கவே பிடிக்காது. எங்கிருந்து தான் வருமோ அவ்வளவு தெம்பு..!! என்னை பிடிச்சு உள்ளே தள்ளி வீட்டை பூட்டி விடுவார்.

என்ன தான் எத்தனையோ சண்டைகள் போட்டாலும், ஒரு முறை எங்க அக்கா வந்திருந்த போது நாங்கள் இருவரும் போட்ட சண்டை தான் இன்றளவும் எல்லாராலும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக பேசபடுகிறது.

இரவு பத்து மணிக்கு ஆரம்பித்த சண்டை விடிய விடிய நடந்தது. நைட் ஷோ படம் மட்டுமல்ல, அதற்கு பிறகு ஒரு ஷோ கூட முடிஞ்சிருக்கும் என்பார்கள் என் ஃபேமிலியில்.. நடுவில் புகுந்து தடுக்க பார்த்த அக்காவுக்கும் எங்களால் ஆன அன்பளிப்பு கொடுக்க, அக்கா அப்புறம் கப் சிப்.

ஒரே நல்ல விஷயம் காலையில் "போர் நிறுத்தம்" அறிவித்து இருவரும் வேலைக்கு போய்ட்டோம்!!

இப்போல்லாம் சண்டைகள் ஓரளவு குறைந்து விட்டது! இதற்கு முக்கிய காரணம் எனக்கு வந்த புரிதல்தான்!

நண்பரை உரிமையாய் கிண்டல் பண்ணுவது போல் மனைவியை கிண்டல் பண்ண கூடாது என்ற தெளிவு வந்தடுச்சு.. மேலும் எந்த சண்டை வந்தாலும் உடனே தோல்வியை ஒப்பு கொண்டு சரண்டர் ஆகி விட்டால் சண்டை சீக்கிரம் முடிந்து விடும்..

என்ன தான் கோர்ட்ல நெம்பர் ஒன் வக்கிலாக இருந்தாலும் பெண்டாட்டி கிட்டே சண்டை போட்டு ஜெயிக்க முடியாது!! இந்த உண்மை புரிய நமக்கு ஏழெட்டு வருஷம் ஆச்சு... ம்ம்

இருங்க எதோ பாத்திரம் உருளற சத்தம் கேக்குது.......

"என்னம்மா கூப்பிட்டியா? இதோ வந்துக்கிட்டே இருக்கேன்...."

Monday, August 11, 2014

சிறு வயது குறும்புகள் + சில பிறந்த நாள் நினைவுகள் ...

குறும்பு - 1

சிறு வயதில் என்னை சாப்பிட வைப்பதென்றால் படு கஷ்டம் (நம்ப முடியலே ..இல்லே??) ..  மனதில் எதாவது ஒரு பொருளை நினைத்து கொள்வேன்.. அந்த பொருளை சாப்பாடு ஊட்டுபவர் சொல்ல வேண்டும்... சரியாக சொன்னால்தான் சாப்பிடுவேன்.. இல்லா விட்டால் தரையில் புரண்டு அழுவேன்..

சென்னை வந்த போது பச்சை கலரில் ரயில் பார்த்தது ; அதனை மனதில் நினைத்து கொள்ள, சரியாக சொல்லாத போது, " பச்சை ரயிலை சொல்ல மாட்டேங்குறியே" என நீண்ட நேரம் அழுது ஆர்பாட்டம் செய்வேன். இது எங்க குடும்பத்தில்  ரொம்ப பிரபலம்.. இன்றும் யாராவது ஒருவர் " பச்சை ரயிலை சொல்ல மாட்டேங்குறியே" என்று சொல்லி கிண்டல் செய்வார்கள்..

குறும்பு - 2

ஒன்றாவது, ரெண்டாவது ( I std/ II std) படிக்கும் போதெல்லாம் அக்காவின் தோழிகள் , பக்கத்து வீட்டு பெண்கள் என என்னை விட மிக பெரிய பெண்களிடம், " என்னை கல்யாணம் பண்ணிக்கிறிங்களா? என கேட்பேன்.. (அப்போ வயசு 5 அல்லது 6 !!) இதை எப்படி ஆரம்பித்தேன்; நானாகவே கேட்டேனா; யாரும் சொல்லி கொடுத்ததா என நினைவில் இல்லை.

ஏழாவது படிக்கும் போது,  ஆசிரியை ஒருவர், " ஏன்டா சின்ன வயசில் பக்கத்து வீட்டுக்கு வரும் போது என் கிட்டே வந்து கல்யாணம் பண்ணிக்கிறியா-ன்னு கேட்டே; இப்ப பண்ணிக்கிறியா? " என வம்புக்கு கேட்க, அனைவரும் (குறிப்பாய் பெண்கள்) செமையாய் சிரித்தனர். மானம் போனது. பதில் சொல்லாமல் வழிந்து வைத்தேன்..

குறும்பு - 3

ஏழு வயது இருக்கும் போது எனது வகுப்பு மாணவன் ஒருவன் குஷியாக இருக்கையில், ஒரு குறிப்பிட்ட வார்த்தையை உபயோகிப்பான். அவனிடம் இருந்து அந்த வார்த்தை எனக்கும் தொற்றி கொண்டது. ஒரு நாள் வீட்டில் உள்ள ரேடியோ-வில் 16 வயதினிலே பாட்டு ஒன்று வைத்தனர். புது பட பாட்டு என்ற மகிழ்ச்சியில் நான் அந்த வார்த்தையை குதித்தவாறே சொன்னேன். அண்ணன் அடி பின்னி விட்டார் பின்னி.. அப்புறம் தான் தெரிந்தது அது ஒரு கெட்ட வார்த்தை என்பது.. !!!

குறும்பு - 4

தம்பு சாமி என்ற நண்பன் என் தெருவிலேயே இருந்தான். செம, செம வாலு பையன். இவன் இன்னும் சில நண்பர்களுடன் தினம் மாலை ரயில்வே ஸ்டேஷன் வரை வாக்கிங் போவான். ரயில் நிற்கும் போது, அதில் உள்ளவர்களுடன் ஜன்னல் வழியே நல்ல தனமாக பேசுவான். ஆனால் ரயில்  கிளம்ப ஆரம்பித்ததும் அதே நபர்களை கெட்ட, கெட்ட வார்த்தைகளால் திட்டுவான். அவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் பார்ப்பது அவனுக்கு செம குஷி..

அவர்களது எந்த குறும்புக்கும் உதவி செய்யாத என்னை எப்படி இந்த கேங்கில் சேர்த்து வைத்திருந்தார்கள் என்பது இன்றளவும் புதிர்  தான்.
***********************

சில பிறந்த நாள் நினைவுகள் ....



நீடாமங்கலம் என்ற சிறிய ஊரில் நான்காவது (கடைசி) பிள்ளை யாய் பிறந்தாலும் ஒவ்வொரு வருடமும் சிறு வயதில் எனது பிறந்த நாள் வீட்டில் மிக சிறப்பாக கொண்டாடினார்கள்.

13 வது வயது வரை - பெரியண்ணன் தான் எனது பிறந்த நாளை முன்னின்று  கொண்டாடுவார். எங்கு படித்த போதும் வேலைக்கு சென்ற போதும் - ஆகஸ்ட் 12 அன்று நீடாமங்கலம் வந்துவிடுவார்.

முதல் நாள் இரவே வீடு முழுதும் கலர் காகிதங்கள் ஒட்டுவார். அதில் எம்.  ஜி.ஆர்.  கலைஞர்,சிவாஜி, கமல், ரஜினி ஆகியோர் எனக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னது போல் எழுதியிருப்பார். இது கற்பனை என்றாலும் சின்ன வயதில் அது எனக்கு மிக அதிக மகிழ்ச்சியை தரும். பிறந்த நாள் முடிந்த பின்னும் ரொம்ப நாள் அந்த கலர் காகிதங்கள் காற்றில் அசைந்து கொண்டேயிருக்கும்.... ஜனவரியில் பொங்கல் வந்து வீட்டுக்கு வண்ணம் பூசும் வரை ஒரு சிலவாவது மிச்சமிருக்கும்

இன்றைக்கும் ஒவ்வொரு பிறந்த நாள் வரும் போதும் - அந்த கலர் காகிதங்கள் நினைவிலாடும்..

*************
கல்லூரியில் படிக்கும் போது ஒரு வருட பிறந்த நாளை நண்பர்கள் மறக்க முடியாத நாளாக்கினர்

அந்த வருடம் ஆகஸ்ட் துவக்கம் நீண்ட விடுமுறையில் கல்லூரி இருந்தது. நண்பர்கள் வெவ்வேறு ஊர்களில் இருந்த போதும் - எனது பிறந்த நாளுக்காக திருச்சி வர  திட்டமிட்டனர்.என்னையும்  அழைத்தனர்.

கல்லூரியில் படித்த போது - சில ஆண்டுகளில் - பிறந்த நாளன்று ரத்த தானம் செய்வது  வழக்கம். அன்றும் அப்படி தஞ்சை ராஜா மிராசுதார் மருத்துவ மனையில் ரத்த தானம் செய்து விட்டு - திருச்சி  சென்றேன். கல்லணையில் சந்திக்க நண்பர்கள் கூறியிருக்க.. அங்கு சென்றதும் - ஒரு அற்புதமான கேக் வெட்ட சொல்லி என்ன  அசத்தினர் நண்பர்கள். ஆளுக்கு ஒரு பரிசு தந்ததில்... இன்றும் நினைவில் இருப்பது பாலகுமாரனின் " இனிது இனிது காதல் இனிது " புத்தகம். பாலகுமாரனுக்கு எழுதிய எனது கடிதம் 3 பக்க அளவில் பிரசுரம்  ஆகியிருந்தது. அது பிரசுரம் ஆனது எனக்கு தெரியாத நிலையில், அவர்கள்  அப்புத்தகம் வாங்கி சரியாக பிறந்த நாள் அன்று தந்தது அப்பிறந்த நாளை ஸ்பெஷல் ஆக்கியது..

*************
பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் ஸ்பெஷல் ஆனவர் தான். ஒவ்வொருவர் பிறந்த தினம் அவருக்கு சிறப்பான + கொண்டாடப்பட வேண்டிய ஒன்று தான்....!

Tuesday, July 29, 2014

வேலையில்லா பட்டதாரி - சினிமா விமர்சனம்

ன்றாக நினைவிருக்கிறது. முதன் முதலில் தனுஷின் நடிப்பில் ஆச்சரியப்பட்டு போனது " காதல் கொண்டேனில்" தான்... படம் பார்த்து விட்டு " இது மாதிரி ஒரு படமோ, நடிப்போ தனுஷுக்கு இன்னொரு முறை கிடைக்கவே கிடைக்காது " என சொல்லிக்கொண்டிருந்தேன்... பொல்லாதவன், ஆடுகளம், மயக்கம் என்ன - என எனது அந்த எண்ணத்தை அவ்வப்போது பொய்யாக்கி கொண்டிருந்தார் தனுஷ்.



இதுவரை வெளிவந்த எல்லா தனுஷ் படங்களை விட வேலை இல்லா பட்டதாரி  மிக வேறுபட்டது. காரணம் இத்தகைய மாஸ் படம் தனுஷ் இதுவரை செய்ய வில்லை. அட்டகாசம் !

கதை 

சிவில் இஞ்சினியரிங் முடித்து விட்டு,  கட்டிட  துறைக்கு மட்டுமே வேலைக்கு செல்வேன் என இருக்கிறார் தனுஷ். அம்மாவின் புண்ணியத்தில் ஒரு வேலை கிடைக்க, அதில் வரும் சோதனைகளை எப்படி சமாளித்தார் என்பதை வெண் திரையில் காண்க !

ஹீரோ 

இப்படத்திற்கு ஒரு ஹீரோ அல்ல .. 3 ஹீரோ !

முதல் ஹீரோ.....கதை எழுதி இயக்கிய வேல்ராஜ்... படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் இவரது கதை மற்றும் திரைக்கதை தான்... இயக்குனராக முதல் படம் என்பதால்  ஜெயிக்கிற வெறியுடன் உழைத்திருப்பது தெரிகிறது. இவரின் சுவாரஸ்ய Plot இல்லா விடில் படம் வென்றிருக்க வாய்ப்பில்லை ! வெல் டன்  வேல் ராஜ் !

அடுத்து .. தனுஷ்.. ! ரஜினியின் ஸ்டைல் மற்றும் தாக்கம் ஆங்காங்கு தெரிகிறது. மனுஷன் அசத்தி இருக்கிறார் அசத்தி ! படத்தின் ஒவ்வொரு ஷாட்டிலும் அநேகமாய் இவர் இருந்தாலும் - சற்றும் அலுக்காதது இவரது பெர்பார்மன்ஸ் கெத்தாக இருப்பதால் தான். பாட்டு, பைட்டு, எமோஷனல் சீன் , காமெடி என எல்லா காட்சிகளும் பெர்பெக்ட் கலவையில் அமைய - தனுஷின் நடிப்பு ஜொலிக்கிறது !



இறுதியாய்...  மூன்றாவது ஹீரோ  அனிருத் ! ஒரு படத்தில் அத்தனை பாட்டுகளும் ரசிக்கும்படி அமைவது எத்தனை முறை சாத்தியமாகிறது ! படத்துடன் சேர்த்து தான் பாடல்களை முதலில் முழுவதுமாய் கேட்டேன்.  ... மிக மிக ரசிக்கும் படி இருந்தது. கதையுடன் ஒன்றி வரும் பாடல்களும் அதை எடுத்த விதமும் கூட ஒரு காரணம்.

காமெடி - ஹீரோயின் இன்ன பிற 

ரொம்ப நாள் கழித்து காமெடி ரோலில்.. விவேக் ... தனது வழக்கமான மொக்கை இன்றி ஓரளவு கிச்சு கிச்சு மூட்டுகிறார்.

அமலா பால் ... அழகு... ! வழக்கமான தமிழ் ஹீரோயின் தான்,  ஸ்கோப்.. குறைவாய் இருந்தாலும் நிறைவு...

சமுத்திரக்கனி - ஒரு பக்கம் ஹீரோ மாதிரி ரோல் செய்பவரை எப்படி அப்பாவாக்கினர் என தெரிய வில்லை. எப்போதும் இப்படி திட்டும் அப்பாக்கள் இருப்பார்களா ? (எனது அப்பா அவசியம் திட்ட வேண்டிய நேரத்தில் கூட திட்டியதேயில்லை.. மகன் வருந்துவானே என்று !)

இடைவேளைக்கு பின் தனுஷ் வேலைக்கு போய் விடுகிறாரே.. அப்புறம் ஏன்  வேலை இல்லா பட்டதாரி (வி. ஐ. பி) என பெயர் வைத்தார்கள் என நம்முள் ஒரு கேள்வி தோன்ற - அத்தகைய வி. ஐ. பி களே பிற்பகுதியில்  தனுஷுக்கு  உதவுவதாக காட்டி - அத்தகைய வி. ஐ. பி களின் ஓட்டுக்களை மொத்தமாக அள்ளுகிறார்கள் ( இருந்தாலும் தனுஷின் யூ டியூப் பேச்சை கேட்டு வேன் ,பஸ்ஸில் எல்லாம் ஆட்கள் வந்து இறங்குவது த்ரீ மச் -ங்க !)

தனுஷ் மற்றும் அவரது தம்பிக்கிடையேயான உறவு செம சுவாரஸ்யமாய் வடிவமைத்துள்ளனர்... அண்ணன் - தம்பி ஒப்பீடு - தம்பியை விரட்டி கொண்டே இருக்கும் அண்ணன் என புன்னகையுடன் ரசிக்க வைக்கும் பகுதி அது

போலவே அந்த லூனா ஒரு பாத்திரமாகவே ரசிக்க வைக்கிறது.



புது முக வில்லனை பற்றி நாம் கமண்ட் அடிக்கும் முன்பே - தனுஷை விட்டு அமுல் பேபி என்றும் " ஒண்ணை எல்லாம் வில்லனாவே ஏத்துக்க முடியலை " என்றும் கிண்டலடித்து விடுகிறார்கள்..

குறைகள் 

படத்தின் ஒரே குறை ஆங்காங்கு தெரியும் லாஜிக் மீறல்கள் !

இஞ்சினியரிங் முடித்து ஒரு வருடமே ஆன அமலா பால் மாதம் 2 லட்சம் சம்பாதிக்கிறாராம் ! இப்படி மாசம் 2 லட்சம் சம்பாதிப்பவர் - வேலை இல்லாத தனுஷை காதலிக்கிறாராம் !

இன்னொரு காட்சியில் கால் சென்டரில் மாதம் 50 ஆயிரம் சம்பளத்தில் தனுஷ் வேலைக்கு போவதாக சொல்கிறார்கள். எந்த கால் சென்டரில் துவக்க சம்பளம் 50 ஆயிரம் தருகிறார்கள் ?

எவ்வளவோ வில்லத்தனம் செய்யும் வில்லனை தனுஷ் தொடர்ந்து பொறுப்பதும், அவரை மன்னிப்பு மட்டும் கேட்க சொல்வதும் - ஏனோ இடறுகிறது

இப்படி சின்னச்சின்ன குறைகள் இருந்தாலும்

சுவாரஸ்யமாக கதை சொன்ன விதத்திலும், தனுஷின் அட்டகாசமான நடிப்பிலும் இந்த பட்டதாரி முதல் வகுப்பில் பாஸ் ஆகிறார் !

வேலை இல்லா பட்டதாரி... இவ்வருடம் வெளி வந்தவற்றில் பெஸ்ட் கமர்ஷியல் என்டர்டெயினர்  ... டோன்ட் மிஸ் இட் !

Wednesday, July 16, 2014

BPO ஓர் அறிமுகம் - புத்தக விமர்சனம்

BPO ஓர் அறிமுகம் என்கிற தலைப்பில் கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட சிறு நூலை சமீபத்தில் வாசித்தேன். எழுதியவர் - SLV மூர்த்தி. இவர் IIM அஹமதாபத்த்தில் எம். பி. ஏ பட்டம் பெற்றவர்.

மிக சிறிய நூல். 78 பக்கங்கள் ; ஆனால் ஏக் தம்மில் படித்து முடிக்க முடியலை ! 11 அத்தியாயம் ; ஒவ்வொன்றும் ஆறேழு பக்கங்கள் . அவ்வளவு தான் !

BPO துறை வரலாற்றை அமெரிக்காவில் இருந்து துவங்கி எப்படி பிற இடங்களுக்கு விரிவானது; அதன் அவசியம் என்ன, எந்த நாடுகள் இதில் சிறந்து விளங்குது; இந்த துறையில் பணியாளர்கள் சந்திக்கும் சில பிரச்சனைகள் என்று சொல்லி போகிறார்

புத்தகத்திலிருந்து BPO துறை பற்றிய சில விஷயங்கள் உங்கள் பார்வைக்கு :



*****************
வேலை பங்கீடு ( Division of Labour) பற்றி ஆடம் ஸ்மித் ........

Division of Labour பற்றி விளக்க ஆடம் ஸ்மித் குண்டூசி தயாரிக்கும் உதாரணத்தை எடுத்து கொள்கிறார். வெறும் குண்டூசி தானே என்று நினைக்காதீர்கள்.

முதலில் - இரும்பு துண்டிலிருந்து கம்பிகள் செய்ய வேண்டும். கம்பியை கோணல் இல்லாமல் நேரக்க வேண்டும். தலைப்பாகத்தை உருண்டை வடிவமாக்க வேண்டும். மறுமுனையை கூராக்க வேண்டும். துரு நீக்கி பாலிஷ் போடவேண்டும். இது போன்ற 18 பணிகளை முடித்தால் குண்டூசி தயாராகும் !!

இந்த 18 கட்ட வேலைகளையும் ஒரு மனிதனே செய்தால், அவனால் ஒரு நாளில் 20 குண்டூசிகள் மட்டுமே தயாரிக்க முடியும். 10 பேர் ஒரு குழுவாக இணைந்து 19 வேலைகளையும் பங்கிட்டு செய்தால் எவ்வளவு தயாரிக்கிறார்கள் தெரியுமா?

ஆடம் ஸ்மித் கணக்குப்படி 48,000 குண்டூசிகள் தயாரிக்கிறார்கள் ! அதாவது உற்பத்தி திறன் 240 மடங்கு அதிகரிக்கிறது !

வியாபார போட்டியில் தங்கள் பொருட்களின் விலையை குறைக்க ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் வேலைகளில் முக்கியமானவற்றை ( Core Competency ) மட்டுமே தாங்கள் செய்து கொண்டு இதர வேலைகளை மற்ற நிறுவனங்களிடம் தரும் வழக்கம் ஏற்கனவே இருந்தாலும் கூட 1990 க்கு பின் இன்னும் அதிகமாகிறது 2000 -ல் Y 2 K பிரச்சனைக்கு பின் - இந்தியன் சாப்ட்வேர் துறை வேகம் பிடித்தது

கால் சென்டர்கள் என்று எடுத்து கொண்டால் அவை 1960 முதலே உலகில் வலம் வர துவங்கி விட்டதாம் !

இந்தியாவிற்கு முதலில் BPO வரத்துவங்கியது 1994-ல் .. அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கி தான் முதலில் இந்தியாவிற்கு அவுட் சோர்சிங் வேலைகள் வர காரணமாக இருந்துள்ளது.

சீரான வளர்ச்சிக்கு பின் 1999 முதல் அடுத்த 10 ஆண்டுகள் இந்தியாவில் BPO துறை மிக அபாரமாக வளர்ந்தேறியுள்ளது

கால் செண்டர் அல்லது இதர BPO நிறுவனங்கள் அமெரிக்காவை விட இந்தியா அல்லது பிலிப்பைன்சில் நடத்த காரணம் இங்கு நடத்த செலவு குறைவு என்பது தான். அமெரிக்காவில் 100 ரூபாய் செலவானால் இங்கு, 20 ரூபாய் தான் ஆகும் .

இந்திய மக்கள் தொகையில் 20 முதல் 30 லட்சம் மக்கள் தான் ஐ. டி துறையில் பணியாற்றுகிறார்கள் என்று ஓரிடத்தில் தெரிய வருகிறது. BPO துறையில் 10 லட்சம் பேர் பணியாற்றுகிறார்கள்... யோசிக்கையில் மொத்த மக்கள் தொகையில் சின்ன நம்பர் என ஆச்சரியமாக இருக்கிறது

என்னென்ன விதமான BPO க்கள் உள்ளன - காப்டிவ் BPO என்றால் என்ன, BPO துறையில் என்னென்ன வேலைகள் நடக்கிறது போன்ற தகவல்கள் நிச்சயம் பயனுள்ளவை

இந்தியாவின் முதல் 10 BPO நிறுவனங்கள் என இப்புத்தகம் சொல்பவை

1. ஜென்பாக்ட்
2. ட்ரான்ஸ் வொர்க்ஸ்
3. ஐ. பி. எம்
4. TCS BPO
5. கேம்பிரிட்ஜ்
6. குளோபல் சொல்யூஷன்ஸ்
7. விப்ரோ BPO
8. கண்வேர்ஜிஸ் இந்தியா
9. பர்ஸ்ட் சொல்யூஷன்ஸ்
10 HCL BPO

(எப்படி இன்போசிஸ் மிஸ் ஆகிறது என புரிய வில்லை !)

கால் சென்டர்களில் அட்ரிஷன் எனும் வேலையை விட்டு போகும் சதவீதம் 45 % இருப்பதாக பகிர்கிறது புத்தகம். அதாவது ஒரு வருடத்தில் நூறு பேர் வேலைக்கு சேர்கிறார்கள் என்றால் , 45 சதவீதம் பேர் அவ்வருடம் வேலையை விட்டு செல்கிறார்கள். மிக அதிக அட்ரிஷன் உள்ள துறை B PO துறை தான்.

இதற்கான காரணங்கள் - இத்துறையில் பணியாற்றுவதால் வரும் உடல் மற்றும் மன தொந்தரவுகள்.

B PO துறையில் பணியாற்றும் மக்களிடையே எடுத்த ஒரு ஆய்வு என பகிரும் தகவல் திக்கென்று இருக்கிறது. இத்துறையில் இருப்போரில் 20 % மக்களுக்கு தற்கொலை எண்ணம் வருகிறது என்றும், அதே அளவு மக்களுக்கு மிக அதிக மன அழுத்தம் உண்டு என்றும் தெரிவிக்கிறது இந்த ஆய்வு. மேலும் மூன்றில் ஒருவருக்கு உடல் உறவு பிரச்னையும் உண்டு என குண்டை தூக்கி போடுகிறார்கள்.

கடைசி அத்தியாயத்தில் BPO துறை பற்றிய நல்லது மற்றும் கெட்டதை ஒரு கோர்ட் சீன் போல பேசி இத்துறை நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியம் என முடிக்கிறார்

மொத்தத்தில்..

BPO குறித்து அறிய விரும்பும் யாருக்கும் அத்துறை குறித்த நல்லதொரு அறிமுகம் இப்புத்தகம் தரும்
***************
BPO ஓர் அறிமுகம்
ஆசிரியர் : SLV மூர்த்தி.
பக்கங்கள்: 78
விலை : ரூ. 25

Sunday, July 13, 2014

அரிமா நம்பி & Aashiqui -2 ஒரு பார்வை

அரிமா நம்பி 

சற்று சுவாரஸ்யமானதொரு த்ரில்லர் படம். ஆக்ஷன் கதைகள் சரியான முறையில் தரப்பட்டால் - அது தான் நிறைய மக்களை சென்றடைய சிறந்த வழி என உணர்ந்து தனது முதல் கதையை தேர்ந்தெடுத்துள்ளார் இயக்குனர் ஆனந்த் ஷங்கர்

கதை 

ஹீரோ விக்ரம் பிரபு ஒரு Pub -ல் ஹீரோயின் ப்ரியா ஆனந்தை சந்திக்கிறார். மறு நாளே இருவரும் டேட்டிங் செல்ல - அப்போது ப்ரியா ஆனந்த் கடத்தப்படுகிறார். அவரை விடுவிக்க ஹீரோ முயல - கடத்தலின் பின் இருக்கும் பெரிய மனிதர் அதனை முறியடிக்க நினைக்க - இறுதியில் யார் வெல்வார் என சொல்லணுமா என்ன ?



பாசிட்டிவ் 

முதல் ஷாட்டிலேயே கதையை துவங்கும் விதம், பெரும்பாலும் விறுவிறுப்புடன் எடுத்து செல்லும் திரைக்கதை  இரண்டாலும் கவர்கிறார் புது இயக்குனர்

விக்ரம் பிரபுவிற்கு  சென்ற படமான இவன் வேற மாதிரியிலும் கூட இதே வித பாத்திரம் தான். ஆனால் அதை விட நிச்சயம் இப்படம் பெட்டர்

செஸ் ஆட்டம் போல ஹீரோவின் நடவடிக்கையை வில்லன் கணிக்க, அதற்கு தக்க - அவரை குழப்ப ஹீரோ செய்யும் செயல்கள் சுவாரஸ்யம்.

வில்லன் சக்கரவர்த்தி அந்த [பாத்திரத்துக்கு கச்சிதம்

ட்ரம்ஸ் சிவமணி - பின்னணி இசையில் மட்டும் கவர்கிறார்.

நெகடிவ் 

முதல் 15 நிமிடத்திற்கு பின் ஒரு பரபரப்பு வந்து விட, இறுதி வரை அதை மெயிண்டயின் செய்ய நிறைய மெனக்கெட்டுள்ளனர். இருப்பினும் ஒரே நாளில் நடக்கும் கதை - ஒரு மாதம் நடப்பது போல எங்கோ ஒரு அயர்ச்சி நம்முள் எட்டி பார்க்கிறது

நிறைய லாஜிக் மீறல்கள் உண்டு எனினும் - இரண்டு மட்டும் எனக்கு ரொம்ப உறுத்தியது. ஒரே நாள் மட்டுமே அறிமுகமான பெண்ணுக்காக (ஆழமான  காதலும் இல்லை !) தன் உயிரையும் வாழ்க்கையையும் ஹீரோ பணயம் வைப்பது நம்புகிற மாதிரி இல்லை.

ஒரு வங்கியை சுற்றி போலிஸ் இருக்க, அரை நிமிடத்தில் திடீரென யோசித்து அந்த வங்கியை கொள்ளை அடிக்கிறார் ஹீரோ.. ஹூம்...

இடைவேளைக்கு பின் பாடல்களை குறைத்தது பெரிய ரிலீப். ஆயினும் இன்னும் சில்க் ஸ்மிதா, டிஸ்கோ சாந்தி காலத்து கவர்ச்சி டான்ஸ் ஆடும் க்ளப் பாடல்கள்  தேவை தானா ?

மொத்தத்தில்

நிச்சயம் ஒரு வித்தியாச முயற்சி. ஒரு முறை பார்க்கலாம்

*****************

Aashiqui -2 ஹிந்தி ஒரு பார்வை 

2013-ல் வெளியான இப்படம் இப்போது தான் காண சந்தர்ப்பம் வாய்த்தது. அதென்ன  Aashiqui -2 ? Aashiqui  என்ற பெயரில் 30 ஆண்டுகளுக்கு முன் ஒரு படம் வந்து செம ஹிட் ஆகியுள்ளது. அதன் சீக்வல் தான் இப்படம்.

வாழ்வே மாயம், பயணங்கள் முடிவதில்லை பாணியில் காதலையும் சோகத்தையும் பிழிய பிழிய சொல்லும் படம் இது. ஆயினும் நன்றாகத் தான் உள்ளது



கதை 

பிரபல பாடகரான ராகுல் ஜெயகர் - குடியினால்  சரிவை சந்தித்து கொண்டிருக்கும் நேரம் - ஒரு பாரில் பாட்டு பாடும் ஆரோஹியை சந்திக்கிறான். அவளிடம் திறமை ஏராளமாய் உண்டு; நிச்சயம் சாதிப்பாள் என மும்பை அழைத்து வந்து - பயிற்சி தந்து வாய்ப்புகளும் பெற்றுத்தர - ஆரோஹி மிக பெரும் பாடகி ஆகிறாள்.

ராகுல்- ஆரோஹி இருவரும் திருமணம் செய்யாமலே கணவன் - மனைவியாய் வாழ, மனைவியின் வளர்ச்சி ஒரு அளவிற்கு மேல் ராகுலை   உறுத்த ஆரம்பிக்கிறது... ராகுலின் குடிப் பழக்கம் அவரை எங்கு கொண்டு செல்கிறது என்பதை படத்தின் இறுதிப்பகுதி சொல்கிறது

ஆதித்ய ராய் கபூர் & ஷ்ரதா கபூர் ஹீரோ மற்றும் ஹீரோயின் - படத்தை ரசிக்க இந்த இருவரும் மிகப்பெரும் காரணம்.  ஷ்ரதா கபூர் அழகு, நடிப்பு, முகபாவம், கிளாமர் என எல்லா பக்கமும் சிக்சர் அடிக்கிறார். அவருக்கு ஈடு கொடுக்கும் அளவிற்கு இன்னொரு அற்புத பெர்பார்மன்ஸ் ஆதித்யாவுடையது.

படத்தின் முதல் காட்சியை பார்க்கும் போதே நிச்சயம் இது வித்தியாச படம் என்ற எண்ணமும் இயக்குனரின் ஆளுமையும் எளிதில் புரிந்து விடுகிறது

ஹீரோயின் பெரிய ஆளாக வரவேண்டும் என்று மட்டுமே ஆசைப்படும் ஹீரோ. ... ஹீரோ எவ்வளவு தவறு செய்தாலும் மன்னித்து - அவனை சரி செய்ய எந்த எல்லைக்கும் செல்லும் ஹீரோயின்  -என  இருவருமே மிக மிக நல்லவர்களாய் காட்டியிருப்பது அழகு . ஹீரோவின் குடிப்பழக்கம் ஒன்று தான் படத்தின் பெரும் வில்லன்.



இத்தகைய மியூசிக்கல் சப்ஜெக்ட்டிற்கு பாடல்கள் தான் அடி நாதம். அட்டகாசமான பாடல்கள் .. படம் பார்த்து முடிந்ததும் தேடி தேடி பாடல்களை தரவிறக்கம் செய்தேன். படத்துடன் பார்க்கையில் எல்லா பாடல்களும்  பிடித்தாலும் தனியே கேட்க "தும் ஹி ஹோ " மட்டுமே ஈர்க்கிறது



படத்தை நிச்சயம் பாசிடிவ் ஆக முடித்திருக்கலாம். குடிப்பழக்கத்திலிருந்து மனிதர்களால் விடுபட முடியும் என்ற நம்பிக்கை தரும் விதத்தில் முடிக்க திரைக்கதையில் அத்தனை வாய்ப்பிருந்தும்  சோகமாக முடிக்கிறார்கள். இத்தகைய கதைக்கு இப்படி முடித்தால் மட்டுமே "காவிய அந்தஸ்த்தும்" நம் மனதில் படம் என்றும் தங்கும் என்பதும் திரைக் குழுவின் எண்ணமாய் இருந்திருக்கலாம். அது ஓரளவு உண்மையும் கூட..

படம் 2013 மார்ச் மாதத்தில் ரிலீஸ் ஆகி - மீடியாக்கள் எதிர்மறையாய் அதிகம் விமர்சனம் செய்தாலும் தனது பட்ஜெட்டை விட 10 மடங்கு அதிக பணம் ஈட்டியதாக விக்கி பீடியா சொல்கிறது 

அழுகாச்சி படம் என ஒதுக்காமல் காதல் தோல்விக்கும் - ஒரு சுகமிருக்கு என நம்புவோர் நிச்சயம் பார்க்கலாம் !

Saturday, May 31, 2014

கோச்சடையான் - சினிமா விமர்சனம்

முன்கதை சுருக்கம் 

சென்ற முறை கோச்சடையான் ரிலீஸ் என அறிவித்த போதே,  செவ்வாய் நள்ளிரவு 12 மணிக்கு விழித்திருந்து புக்கிங் துவங்கிய அரை மணி நேரத்தில் டிக்கெட் எடுக்க- அடுத்த நாளே ரிலீஸ் தாமதம் என்ற தகவல் வந்தது.  (ரஜினி, விஜய், அஜீத் போன்றோர் படத்துக்கு வெள்ளி புதுப்படம் ரிலீஸ் என்றால் மல்டி பிளக்ஸ்களில் - செவ்வாய் நள்ளிரவே - 3 நாள்  வீக் எண்ட் புக்கிங்  முடிந்து விடும் என்பதே அப்போது தான் தெரிந்தது)

4 நாட்களுக்கு பின் ரிலீஸ் ஆகும் படத்துக்கு - இப்படி நள்ளிரவு வரை விழித்திருந்து டிக்கெட் புக் செய்வது வெறுப்பாக இருக்க, ரிலீஸ் ஆனபின் பொறுமையாக பார்த்து கொள்ளலாம் என விட்டு விட்டேன்...

படம் ரிலீஸ் ஆகி ஒரு வாரம் கழித்து வெள்ளி மாலை லக்ஸ் - திரை அரங்கில் நேற்று கோச்சடையான் கண்டோம்...

கோடை விடுமுறை என்பதால் தியேட்டர் முழுதும் பள்ளி செல்லும் சிறுவர்கள் - தனியாகவோ - குடும்பத்தோடோ வந்திருந்தனர் ... ஓரளவு போட்ட காசை எடுத்து விடுவார்கள் என நினைக்கிறேன்

கதை 

இது 2 மணி நேரத்துக்கும் குறைவாக ஓடும் படம்.. ஆனால் கதையை சொன்னால் - புரிய வைக்க மூணு மணி நேரம் ஆகும்..



ஒரு வரியில் சொல்லணும் என்றால்... " சிறுவயதில் தந்தையை கொன்றவனை பழி வாங்கும் மகனின் கதை" ... (அடேங்கப்பா... ரொம்ப புதுசா இருக்கே !)

ப்ளஸ் 

1. ரஜினி படம் என்றாலே கதை, திரைக்கதை போன்றவற்றை பற்றி அதிகம் கவலைப்படாமல் - படம் ஓட ரஜினி ஒருவரே போதும் என்ற அலட்சியத்துடன் எத்தனையோ படங்கள் வந்து- அவையும் நன்கு ஓடிய வரலாற்றை நாம் அறிவோம் .

3 D, கார்ட்டூன் இவற்றை மட்டும் நம்பாது - ஒரு பெரிய வரலாற்று கதையை உருவாக்கியமைக்கு முதல் ஷொட்டு.

2. நிச்சயம் தமிழில் இது வித்யாச முயற்சியே. சாதாரண சினிமா ரசிகனாக டெக்னிகல் குறைகள் ஏதும் பெரிதாக தெரிய வில்லை.

3. கார்ட்டூனாக இருந்தபோதும் ரஜினி ஸ்டைல் மற்றும் குரல்.. அது தான் படத்தை முழுதும் பார்க்க வைக்கிறது

4. ரஜினி பேசும் வசனங்கள் படத்தின் மிக பெரிய பலம். பல பஞ்ச டயலாக்ஸ் உண்டு எனினும் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒன்று... " எதிரிகளை ஒழிக்க எத்தனையோ வழிகள் உண்டு.. முதலாவது வழி மன்னிப்பு " - கிளாஸ் !

5. ரஜினியை மட்டும் மையமாக வைத்து வரும் 2 பாடல்கள் வெரி குட்

மைனஸ் 

1. படத்தின் மிக பெரிய மைனஸ் - 110 நிமிட படத்தில் 20 நிமிடம் செம அறுவை! இந்த 20 நிமிடம் பாடல் காட்சிகள், காமெடி  மொக்கைகள் என ஆங்காங்கு நிறைந்து இருக்கிறது. மற்ற படம் எனில் அறுவை பாடல் காட்சியை வெட்டி போட்டு விடலாம். இங்கு படமே 110 நிமிடம் எனும்போது 20 நிமிடத்தை வெட்டி விட்டால் - 90 நிமிட படமாக -  மக்களுக்கு திருப்தி அளிக்காமல் போய் விடும் அபாயம் இருக்கிறது

படத்தை தொய்வடைய செய்வதே இந்த அறுவை காட்சிகள் தான் !

 2.  இசை - முன்பே சொன்ன மாதிரி ரஜினியின் 2 பாடல்கள் மட்டுமே நன்று; தீபிகாவை சுற்றி வரும் அனைத்து பாடல்களும் உலக மகா கொடுமை ! டூயட்டும் சரி.. இடைவேளைக்கு பின் வரும் சோக பாட்டும் சரி.. படத்தை தொபுக்கடீர் என விழ வைக்கிறது !



சில காட்சிகளில் ரீ ரிகார்டிங் ரகுமானையே வெறுக்கடிக்கிறது. உதாரணமாய் ரானா தனது வீட்டில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்க - அங்கு வரும் மாமா நாகேஷ் - தான் வடித்த சிலை பற்றி பேசும் காட்சி.. இதற்கு தேவையே இல்லாமல் ரகுமான் போட்டுள்ள பின்னணி இசை... எழுந்து வெளியே ஓடலாமா என எண்ண வைக்கிறது !

3. ரஜினி, நாசர் போன்றோரை எளிதில் அடையாளம் காண முடிகிறது எனினும், பல நடிகர்களை நாம் புரிந்து கொள்ளவே ரொம்ப நேரம் பிடிக்கிறது. குறிப்பாக ஆதி, ருக்மணி இருவரையும் எத்த்தனை பேருக்கு தெரிந்திருக்குமோ ! படத்தை பற்றி யோசிக்காமல் - நம் மனது " இது யாரு.. எங்கேயோ பார்த்திருக்கோமே !" என யோசித்தபடி இருப்பது படத்தோடு ஒன்ற முடியாமல் செய்து விடுகிறது ! படம் துவங்கும் முன்பே பாத்திரங்களையும் அதை நடிப்போரையும் அறிமுகபடுத்தியிருக்கலாம் ! வரலாற்று படம் என்பதால் இப்படி முன் அறிமுகம் செய்வது  சாத்தியமே !

4. நாகேஷை வைத்து காமெடி என்ற பெயரில் அடிக்கும் கூத்து 70 களில் கூட சிரிப்பை வரவழைதிருக்காது !

லாஜிக் மீறல்களை தாண்டி காதில் பூ சுற்றும் பல காட்சிகள் உண்டு ; மலையை விட்டு மலை தாவும் ரஜினியின் குதிரை..  கடலுக்குள் செல்லும் ரஜினியை டால்பின் மீண்டும் கப்பலுக்குள் தூக்கி எறிவது .. இப்படி... ஆனால் ரஜினி படத்தில் லாஜிக் பார்க்க கூடாது என்ற அரிய கொள்கை - நாம் அறிவோம் ஆகவே இவற்றை பெரிது படுத்த வேண்டியதில்லை.

வெர்டிக்ட் 

படம் பற்றி ரஜினி ரீ ஆக்ஷன் 

வீட்டில் பள்ளி செல்லும் குழந்தைகள் இருந்தால் - அவர்களுக்காக செல்லுங்கள். அவர்கள் (மட்டும்) நிச்சயம் என்ஜாய் செய்வார்கள். மற்றபடி குழந்தைகள் இன்றி பெரியவர்கள் செல்ல இப்படத்தை நிச்சயம் பரிந்துரைக்க முடியாது ! ( பெரியவர் யாருக்கேனும் படம் பிடிக்கிறது என்றால் அவர் அதி தீவிர ரஜினி ரசிகனாய் இருக்க வேண்டும் ! )

அடுத்து ரஜினியை வைத்து ரெகுலர் படமே செய்யுங்க சௌந்தர்யா .. திரைக்கதை & இயக்கத்தில் சற்று கவனத்துடன் !

Friday, May 23, 2014

கோட்டூர் புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம் ஒரு பார்வை

றிஞர் அண்ணா நூலகம் துவங்கி சில ஆண்டுகள் ஆகி விட்டன. இப்போது தான் முதல் முறை  செல்ல வாய்த்தது .



கோடை விடுமுறை..மகள் மற்றும் விருந்தினர் குழந்தைகளுடன் ஒரு ஞாயிறு காலை நூலகம் சென்றோம். கார் மற்றும் பைக் பார்க்கிங் மிக வசதியாக நிறைய இடம் கொடுத்துள்ளனர். (அண்மையில் தான் கார் ஓட்ட கற்று கொண்டதால் பார்க்கிங் சற்று மிரளுவேன். இங்கு எந்த பிரச்னையும் இல்லை)

நுழையும் போது முழு செக்கிங் செய்கிறார்கள். குடிநீர் தவிர வேறெதுவும் உள்ளே அனுமதி இல்லை. எந்த வித பைகளும் (லேடீஸ் ஹாண்ட் பேக் உட்பட) அனுமதிப்பதில்லை.



உள்ளே வந்ததும் துவக்கத்திலேயே பார்வையற்றோர்க்கான ப்ரேய்லி பகுதி... அதன் எதிரில் காம்பெடடிவ் தேர்வுகளுக்கு படிப்போருக்கான பகுதி... இதனை தாண்டி கட்டிடத்தின் மையப்பகுதிக்கு வந்தால் - மேல் தளம் வரை நடுவில் முழுதும் ஓபன் ஆக இருக்கும்படி உள்ள அழகான கட்டமைப்பு வாவ் சொல்ல வைக்கிறது.



முதல் தளம் செல்ல மட்டும் எஸ்கலேட்டர். அதன் அருகிலேயே ஸ்நாக்ஸ் சாப்பிட சிறு கடை.. இதனை தவிர இங்கு கேண்டீன் போன்றவை இல்லை ( முழு நாளும் இருந்து படிப்போர்க்கு காண்டீன் இருந்தால் நலமாய் இருக்கும் !

முதல் தளமே மிக அதிக மக்கள் செல்ல கூடிய தளமாக இருக்கும் ! காரணம் இங்கு தான் செய்தி தாள்கள், வார இதழ்கள் பிரிவு ஒரு புறமும், இன்னொரு பக்கம் குழந்தைகளுக்கான பகுதியும் உள்ளது

குழந்தைகள் பகுதிக்கு 14 வயது வரை மட்டுமே அனுமதி என போட்டிருந்தாலும் அதை விட பெரிய பள்ளி, கல்லூரி மாணவர்களும் செல்கிறார்கள். யாரும் பெரிதாக கேள்வி கேட்பதில்லை. தாய் அல்லது தந்தை ஒருவர் மட்டும் குழந்தையுடன் செல்லலாம் என்பது இன்னொரு விதி. இதுவும் கூட பெரிய அளவு பின்பற்றப்படுவதில்லை. பெற்றோர் இருவருமே உடன் செல்கிறார்கள்

குழந்தைகள் பகுதி மிகுந்த கலை ரசனையோடு வடிவமைக்கப்பட்டுள்ளது.  ஒரு மரம் போல ஆர்ட்வொர்க் செய்து வைத்திருப்பதாகட்டும், அந்த பகுதியில் உள்ள சேர்கள் ஆகட்டும், சுவற்றுக்குள்ள வண்ணம் என அனைத்துமே ரசிக்கும்படி உள்ளன.



நம்ம வீட்டி குட்டீஸ் அதிக நேரம் இருந்த பகுதி இதுவே.

ஒரு பக்கம் குழந்தைகள் விளையாட கணினியும் உண்டு ( அதான் வீட்டிலேயே கணினியும் கையுமாய் இருக்கிறார்களே.. இங்கும் அதனை தரணுமா ?). கணினியில் விளையாட்டு விஷயங்கள் மட்டுமே உண்டு என நினைக்கிறேன் (அங்கிருந்த குட்டி பசங்கள் அனைவரும் விளையாட மட்டுமே செய்தனர் !)

" சத்தம் போடாதீர்கள்" என்று எழுதியது ஒரு புறமிருக்க - ஏழெட்டு வயது குட்டி பசங்க அங்கும் இங்கும் ஓடி, அமர்க்களம் செய்கிறார்கள். " தம்பி சண்டை போடாதீங்க" என்று லவுட் ஸ்பீக்கர் வைக்காத குறையாக அங்கிருந்த நூலகர் அடிக்கடி கூவி கொண்டிருந்தார்

Photo


செப்டமபர் 15, 2010 ல் நூலகம் துவங்கப்பட்டுள்ளது  தினம் காலை 9 முதல் 8 வரை திறந்திருக்கும். (ஞாயிறு உட்பட) ; தீபாவளி, பொங்கல், சுதந்திர தினம் போன்ற வருடத்தில் 10 தினங்கள் மட்டுமே விடுமுறை.

அய்யா திறந்த நூலகம் என்பதால் அம்மா அப்புறம் எதுவும் புத்தகம் வாங்க வில்லையாம். முதலில் வந்த புத்தகங்கள் மட்டுமே இன்னும் இருக்கின்றனவாம். செய்தி தாள்கள், வார இதழ்கள் மட்டும் தொடர்ந்து வாங்குகிறார்கள் போலும்

நூலகத்தில் அமர்ந்து படிக்கும் வசதி மட்டுமே உண்டு. புத்தகத்தை வெளியே எடுத்து செல்லும் வசதி கொண்டு வரப்பட வில்லை.

Photo

நூலகம் முழுவதுமே சென்ட்ரலைசுட் ஏ. சி. ! இப்படி ஏ . சி யுடன் கூடிய அற்புத லைப்ரரி - மக்கள் இன்னும் கூட நன்கு பயன்படுத்தி கொள்ளலாம் என தோன்றியது

நூலகர்கள், செக்கியூரிட்டி ஆட்கள்  என 100 பேராவது பணி புரிவார்கள் என நினைக்கிறேன்.  ... 8 மாடி கட்டிடம் ஆயிற்றே... முதல் மாடி பற்றி தான் சொன்னேன்... மற்ற மாடிகளில் என்னன்னே துறைகள் உண்டு என இந்த புகைப்படம் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்:(புகைப்படம் மேலே க்ளிக் செய்து பெரிதாக்கி படிக்கலாம் )



நம்ம பசங்க குட்டீஸ் பிரிவில் இருக்கும் போது மற்ற தளங்களுக்கு விசிட் அடித்து ஆர்வமுள்ள பகுதிகளை மட்டும் கண்டு வந்தேன். குறிப்பாக தமிழ் சிறுகதை, நாவல், கட்டுரை  பகுதிகள்...

நிச்சயம் ஏரளாமான நூல்கள் உண்டு எனினும் இன்னும் கூட நிறையவே செய்யலாம்.. இந்நூலகதிற்கு..

ஒவ்வொரு தளத்திலும் கழிவறை இருந்தாலும் அவ்வளவு சுத்தமாக இல்லை என்பது சற்று வருத்ததிற்குரிய விஷயம்.

நூலகத்தை சுற்றி வரும்போது கலைஞரும், ஜெ - வும் மனதில் நிழலாடுகிறார்கள்.

சென்னையில் இருந்தும் இதுவரை செல்லாவிடில் நிச்சயம் ஒரு நல்ல விஷயத்தை மிஸ் செய்கிறீர்கள்.. ஒரு முறை மட்டுமல்ல மீண்டும் மீண்டும் செல்ல வேண்டிய அற்புத இடம் அண்ணா நூலகம்..

கலைஞர் செய்த நல்ல விஷயங்களில் இதுவும் ஒன்று... அம்மா இதனை உதாசீனம் செய்யாமல் - கவனித்தால் நன்று !

Monday, May 19, 2014

வானவில்- 101 சோடியங்கள் - மோடி- தி. மு. க - கேஸ் லீக்

பார்த்த படம் - 101 சோடியங்கள் (மலையாளம் )

சிறுவர்கள் குறித்த படங்கள் எப்போதும் என்னை ஈர்ப்பவை...மேலும் கூகிள் பிளஸ் -சில் வடகரை வேலன் இப்படம் பற்றி பரிந்துரைத்திருந்தார்.

வித்யாசமான கதைக்களன் தான். வறுமையில் வாடும் ஒரு சிறுவனின் குடும்பம்.... தந்தை வேலை இழந்து - மீண்டும் அதனைப் பெற போராடி கொண்டிருக்கிறார்.   சிறுவனின் பள்ளி ஆசிரியர் அவனுக்கு ஒரு சிறு Project work தருகிறார்... வாழ்க்கை குறித்து 101 கேள்விகள் அவன் எழுதி கொண்டு வந்தால் - 101 ரூபாய் தருவதாக கூற, அந்த 101 கேள்விகளை தேடி அவன் செல்லும் பயணமும், சற்றே நெகிழ வைக்கும் 101 -வது கேள்வியுமே படம்..



உண்மையை முதலில் சொல்லி விடுகிறேன். படம் என்னை பெரிய அளவு கவர வில்லை. மிக மிக மெதுவாக ஒரு ஆர்ட் பிலிம் போல நகர்ந்ததும், ஆங்காங்கு தூங்க வைத்ததுமே காரணங்கள்... ரொம்ப கஷ்டப்பட்டு மீண்டும் மீண்டும் விழித்து தான் பார்க்க வேண்டியிருந்தது. படத்தின் பெரும் மைனஸ் இதுவே.

மெதுவாய் நடந்து வருவது, சும்மாய் அமர்ந்திருப்பது இவற்றையெல்லாம் ரொம்ப நேரம் காட்டும் ஆர்ட் பிலிம் வகையறாவில் லேசாக படம் சென்று சேர்ந்து கொள்கிறது

பொறுமையாய் பார்த்தால் முதலில் சொன்னபடி நிச்சயம் வேறுபட்ட கான்செப்ட் தான். சிறுவன் நன்கு நடிக்கிறான். ஆனால் நம் மனதில் சென்று மிக பெரும் தாக்கத்தை எல்லாம் ஏற்படுத்தவில்லை

சுஜாதாவின் பல கதைகளில் இளமையின் அறியாமையை தொலைத்து பெரியவர்கள் உலகில் நுழையும் தருணம் பற்றிய குறிப்புகள் இருக்கும். இப்படம் சொல்லும் செய்தியும் அதுவே !

இன்டேன் கேஸ் லீக் - எமெர்ஜென்சி !!

ஞாயிறு காலை ஹவுஸ் பாஸ் கேஸ் லீக் ஆகிறது -  இண்டேனுக்கு போன் செய்யுங்கள் என்றார். பில்லில் உள்ள எமெர்ஜென்சி நம்பருக்கு போன் செய்தால் - அது தவறான எண் என்கிறது.  இணையத்தில்,  ஜஸ்ட் டயலில் என எல்லா இடத்தையும் முயற்சித்தாலும் இன்டேன் எமெர்ஜென்சி நம்பர் கிடைக்கவே இல்லை. 

ஒரு நம்பர் இருக்கிறது - அதற்கு போன் செய்தால் நான்கு மணி நேரமாக " நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் பிசி ஆக உள்ளார் - சிறிது நேரத்துக்கு பின் தொடர்பு கொள்ளவும் " என்கிற பல்லவி தான்.. 

வெறுத்து போய் கடைசியில் லோக்கல் மெக்கானிக் கடையில் சரணடைந்து அவர் மூலம் சரியானது 

இன்டேன் எமர்ஜென்சி எண்ணை கூட மக்கள் ரீச் ஆக முடியாமல் வைத்திருப்பது ஆச்சரியத்தையும் சங்கடத்தையும் தருகிறது. இது ஞாயிறு என்பதாலா? மற்ற நாட்களிலும் இதே கதையா தெரிய வில்லை !

அழகு கார்னர் 


என்னா பாட்டுடே - காதல் கவிதைகள் படைத்திடும் நேரம்... 

சில பாட்டுகளை கேட்கும் போதே - அதனோடு சேர்ந்து சில இடங்கள் அல்லது சம்பவங்கள் நமக்கு நியாபகம் வந்து விடும். 

நீடாமங்கலத்தில் நண்பன் தேனுவின் வீடு. அற்புதமான மியூசிக் பிளேயர் அமைத்திருந்தான். பெரிய அறை .. அதில் தேனு, மது, கோபி, ஐயப்பன், நான் குழுமி இருப்போம். இந்த பாடலை ஒலிக்க விட்டுவிட்டு விளக்கை அணைத்து  விடுவோம்... 

அடடா ! மாஜிக் ! மாஜிக் ! இளையராஜா இசையில் வயலின்கள் இழைவது மனதை நெகிழ வைக்கும். " இந்த பாட்டை கேட்டால் எனக்கு கண்ணுல தண்ணி வந்துடும் " என்பான் தேனு. "இதுக்கெல்லாம் கண்ணுல தண்ணி வருமாடா " என சிரிப்போம் நாங்கள் ... 

படம் வரும் முன்பே இப்பாட்டை பல முறை கேட்டு விட்டோம். அந்த சில மாதங்களில் - தினமும் எத்தனையோ பாட்டுகள் கேட்டாலும், அங்கிருந்து கிளம்பும் முன் நேயர் விருப்பமாக இப்பாடலை மீண்டும் ஒரு முறை ஒலிக்க விடுவோம்.. குறிப்பாக பாடல் துவங்கும் போது வரும் ராஜாவின் மியூசிக் தான் எங்கள் அனைவரின் விருப்பமாக இருந்தது...

கோபுர வாசலிலே என்கிற இப்படத்தின் அத்தனை  பாடல்களும் சூப்பர் ஹிட் என்றாலும் படம் மரண மொக்கையாகி எங்களை எல்ல்லாம் வருந்த வைததது தனிக்கதை.. 

இன்றைக்கும் மது, கோபி அல்லது தேனுவை காணும்போது "காதல் கவிதைகள் " பாட்டு பற்றி பேச்சேடுத்தாலே  - உடன் ஒரு  புன்னகை அனைவர் முகத்திலும் மலரும்.. 



போஸ்டர் கார்னர்



மோடியின் வெற்றி... 

பா.ஜ. க வெற்றி குறித்து அனைவரும் கருத்து கூறி விட்டனர். நம் பங்குக்கு ஏதேனும் சொல்லாவிட்டால், ரவுடி என சமூகம் ஒப்பு கொள்ளாது.

இத்தேர்தலில் பா.ஜ. க வெற்றி பெற வேண்டும் என்று தான் நானும் நினைத்தேன். கோத்ரா சம்பவம் ஒன்றையே வைத்து அவர் எதிர்ப்பாளார்கள் இது நாள் வரை ஜல்லி அடித்ததை மாற்றி   இனி அவர் ஆட்சியை வைத்து குற்றம் கண்டு பிடிக்கலாம் ( இவர்கள் ஆதரவு அரசியல் வாதிகள் எல்லாம் உத்தம புத்திரர்கள் போல அவர்கள் பேசுவதை கண்டால் சிரிப்பு தான் வரும் ). கோத்ரா சம்பவத்தை பொறுத்தவரை - அதனை மோடி தூண்டி விட்டிருப்பார் என நிச்சயம் நான் கருத வில்லை; ஒரு முதல்வராக அதனை விரைவில் அவர் அடக்க  தவறினார்...

மோடி இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் அல்ல என தனது ஆட்சியில் நிரூபிப்பார் என நம்புகிறேன் ( ராமர் கோவில் பற்றிய கோஷம் எதுவும் இத்தேர்தலில் கிளம்ப வில்லை  .. இல்லையா ?)

எனக்கு மிக பெரிய சந்தோஷம் பா.ஜ. க விற்கு தனிப்பெரும்பான்மை கிடைத்ததும், காங்கிரசுக்கு கிடைத்த மரண அடியும் தான்... பெரும்பான்மை இருப்பதால் முடிவுகள் தைரியமாக எடுக்கலாம் எனினும் இனி மோடியின் சவால் - உள் கட்சியை சமாளிப்பதில் உள்ளது. வெற்றி பெற்ற தினத்தன்று அத்வானி பேசிய பேச்சுக்கு அவருக்கு வட்ட செயலாளர் பதவி கூட தரக்கூடாது என்றே நினைக்கிறேன் (கஷ்டம் தான் !)

தமிழக முடிவுகளும் நிச்சயம் ஆச்சரியம் + அதிர்ச்சியை தந்தன. தி.மு.க பெரிய அளவில் சோர்வடைய வேண்டியதில்லை. சென்ற தி. மு. க ஆட்சியின் போதும் கூட  முதல் 3 ஆண்டுகள் அ .தி.மு.க கதை முடிந்தது என்று தான் பலரும் நினைத்தனர். மாரத்தான் போல கடைசி ரவுண்ட் ஓட்டம் தான் முக்கியம். இதில் முக்கிய விஷயம் அடுத்த முறை வெல்ல வேண்டுமெனில் பா. ம.க. , தே.மு. தி. க போன்ற கட்சிகளுடன் நெருங்கி சென்று கூட்டணிக்குள் கொண்டுவருவதும், விலைவாசி உயர்வு, மின் வெட்டு போன்றவற்றை  எதிர்த்து பெரும் தொடர் போராட்டங்கள் நடத்துவதும் அவசியம் செய்ய வேண்டியவை.  கலைஞர் ரிட்டையர் ஆவதும் கூட உடனடி தேவை தான் (அடுத்த தேர்தலில் அவரை முன்னிறுத்தியா தி. மு. க ஓட்டு கேட்க முடியும் ?).. ஆனால் அது நடப்பது மிக மிக சந்தேகமே !

வாசித்த புத்தகம் - சுஜாதாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் 

புகழ் பெற்ற எழுத்தாளர்களின் சிறுகதைகளை பிறர் தேர்ந்தெடுத்து தொகுப்பது  வழக்கம். இப்புத்தகம் - சுஜாதா தனது சிறுகதைகளில் சிறந்ததென அவரே செலெக்ட் செய்தவை. அது பற்றி ஒரு முன்னுரையும் எழுதி உள்ளார்.

பல வடிவங்களில் கோலோச்சிய சுஜாதாவின் எழுத்து - எல்லா வடிவிலுமே பிடிக்கும் என்றாலும் முதல் இடம் தரணும் என்றால் - அது அவரது சிறுகதைக்கு தான்.

இந்த தொகுப்பில் நான் கவனித்த விஷயம் - ஏராள கதைகளில் ஒரு சோகம் இழையோடுகிறது... குறிப்பாக முடிவு... பொதுவாக சுஜாதா எழுத்தில் இப்படிப்பட்ட உணர்வு எனக்கு என்றும் வந்ததில்லை.. ஆனால் இத்தொகுப்பில் குறைந்தது பாதி கதைக்கும் மேல் சோக உணர்வு மேலோங்கி நிற்கிறது...

இருப்பினும் சுஜாதாவின் எழுத்துக்கள் வழு வழுவென்று வழுக்கி கொண்டு ஓடுகிறது....

சுஜாதாவின் மிக புகழ் பெற்ற கதைகளான நகரம் (மதுரை மருத்துவமனை பற்றியது) பிரயாணி ( ரயிலில் நிகழும் பயணம்) அடங்கிய இத்தொகுப்பு சுஜாதா ரசிகர்களுக்கு நிரம்ப பிடிக்கும் !

நிற்க. முதன் முறையாய் எனது பெண்ணும் கூட இதில் நான்கைந்து கதைகள் வாசித்தாள் !

Thursday, May 15, 2014

மீண்டும் தஞ்சைக்குப் போகலாம்.....

ஞ்சைக்கு இன்னொரு விசிட்... இம்முறை 4 நாள் வேறெங்கும் செல்லாமல் தஞ்சையில் மட்டுமே கழிந்தது. சில அனுபவங்கள் இங்கு பதிகிறேன்...



* யிலில் சென்று இறங்கியதும், இதுவரை நேரில் பார்த்திராத ஒரு நண்பர் அருகில் வந்து " என்ன மோகன்குமார் .. எப்படி இருக்கீங்க ? " என்று பேசினார். அடுத்த வரி " என்னை அடையாளம் தெரியுதா ?"

"ம்ம்.. தெரியுது.. நாடோடி இலக்கியன் (கூகிள் பிளஸ் புகழ்) " என்று சொல்ல " ஆமாம். நிஜ பேர் பாரி " என்றார்.

ரயில் ஏற்கனவே மிக தாமதம் என்பதால் இருவரும் அதிகம் பேசாமல் கிளம்ப - மகள் கேட்டாள் " யாரு அவரு ? ப்ளாகரா ?"

" ப்ளாக் வாசிப்பவரா ? " என கேட்காமல் ப்ளாகரா என கேட்கிறாளே என்ற ஆச்சரியத்துடன் " ஆமாம்" என்றேன்...

வீட்டிலே உள்ளவங்களுக்கு கூட ப்ளாக் உலகில் - படிப்பது ,  எழுதுவது இரண்டும் ஒரே க்ரூப் தான் என தெரிஞ்சிருக்கு !

* களுடன் தஞ்சையை அடிக்கடி சுற்றி வந்தேன். சாந்தி தியேட்டரிலிருந்து விஜயா தியேட்டர் செல்லும் சாலையில் செல்லும்போது ஒரு விஷயம் மிக ஆச்சரியப்படுத்தியது. அந்த சிறிய சாலையில் இரண்டு புறமும் டைலர் கடைகள்......25- 30 கடைகள் வரிசையாக இருக்கும் போலும். செல்ல செல்ல, இன்னும் இன்னும் இன்னும் என டைலர் கடையாகவே இருக்க, எப்படி இது என சிரிப்பும் வியப்பும் எட்டி பார்த்தது.

முன்பும் இத்தெருவில் சில டைலர் கடைகள் இருக்கும் என்றாலும் இந்த அளவிற்கு இல்லை ! அனைத்து கடைகளிலும் உடைகளும் ஏராளாமாக தைக்க வந்திருந்ததையும் கவனிக்க முடிந்தது.

ஞ்சையில் நாங்கள் இம்முறை பார்த்து வியந்த இன்னொரு விஷயம் திருவள்ளுவர் தியேட்டரை ஒட்டி உள்ள " முருகன் புத்தக கடை" .. அடேங்கப்பா ! தஞ்சையில் இவ்வளவு பெரிய புத்தக கடையா ? 2-3 நூலகங்களை ஒன்றாய் சேர்த்தது  போல் பறந்து விரிந்து இருக்கிறது,. பாட புத்தகங்கள் தொடங்கி அனைத்து வகை தமிழ் இலக்கியமும்  இங்கு கிடைக்கிறது. மேலும் ஆங்கில புத்தகங்களும் கூட குவிந்து கிடக்கிறது. இத்தனை வருடம்  தஞ்சையில் இருந்தும் இப்படி ஒரு புத்தக கடை தெரியாமல் இருப்பது சற்று வெட்கமாக இருந்தது.

தஞ்சையில் சில நாள் இருப்பது போல் சென்றால் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே திருவள்ளுவர் தியேட்டர் முன்பு இருக்கும் இக்கடைக்கு அவசியம் ஒரு விசிட் அடியுங்கள் !

ஞ்சையில் நிறைய ஷேர் ஆட்டோக்கள் புழங்க தொடங்கி விட்டன. இதில் ஆச்சரியமான விஷயம் மிக அதிக தூரத்துக்கும் குறைவான அளவு தான் பணம் வாங்குகிறார்கள். உதாரணமாக லட்சுமி சீவலில் இருந்து வல்லம் செல்ல - 8-9 கிலோ மீட்டர் இருக்கும். ஷேர் ஆட்டோவில் 7 ரூபாய் தான் டிக்கெட். குறைவான தொகை என 3 ரூபாய் கூட வாங்குகிறார்கள் ( சென்னையில் பல ஷேர் ஆட்டோக்கள் 10-க்கு குறைவாக வாங்குவதில்லை என்பது நினைவுக்கு வந்தது )

* ஞ்சை பாலாஜி நகர்/  TPS  நகர் பேருந்து நிலையம் அருகே புதிதாக ஒரு காபி கடை துவங்கப்பட்டுள்ளது. 10, 12, 15 என மூன்று ரேட்டில் கிடைக்கும் காபி அட்டகாசமான சுவை. (விலை - அளவை பொறுத்து மட்டுமே மாறுகிறது, மற்றபடி தரம் ஒன்றே) ; இக்கடையை குறிப்பிட காரணம் - இக்கதையை நடத்தும் நபர் (ஓனரும் அவரே - காபி மாஸ்டரும் அவரே) சென்னையில் ஒரு நல்ல வேலையில் இருந்ததை  விட்டு விட்டு இப்போது இக்கடை துவங்கியுள்ளார் !

* லக்ஷன் தினம் நாங்கள் சென்றிருந்தோம். முக்கிய கட்சியிலிருந்து "சாதாரண மனிதர்கள் " குடும்பங்களுக்கு ரூ. 500 சப்ளை ஆகிக் கொண்டிருந்தது. எலக்ஷன் கமிஷன் மிக நியாயமாக தேர்தல் நடத்துகிறது ;எந்த தவறும் நடக்க விடுவதில்லை என்பது எவ்வளவு பெரிய பம்மாத்து ! ஹூம்

ஞ்சை போய் விட்டு பழைய பஸ் ஸ்டாண்ட் அன்பு கடையில் லஸ்ஸி அல்லது பால் குடிக்காமல் வர முடியுமா... ? வெய்யிலுக்கு இதமாக லஸ்ஸி .. அதே அற்புத சுவை.. இப்போது விலை 20 ரூபாய். குடிக்க, குடிக்க " அய்யய்யோ .. காலி ஆகுதே !" என வருத்தம் எட்டிப்பார்க்க , குடித்து முடித்ததும் இன்னும் ஒன்று குடிக்கலாமா என்ற சலனம் ஒரு புறம் எழும்ப,  வண்டியை எடுத்துகிட்டு விடு ஜூட்....

* ஞ்சையில் இருந்த காலங்களில் நான் அதிக நேரம் செலவழித்த இடங்கள் - தியேட்டர்கள் தான் ! அவற்றை ஒவ்வொன்றாக மகளுக்கு சுற்றி காண்பித்தேன். ராஜா கலையரங்கம் தியேட்டர் இன்னும் இருப்பது ஆச்சரியப்படுத்தியது. ( இன்னமும் அவளோட ராவுகள் போன்ற படங்கள் தான் ...... ) யாகப்பா தியேட்டர் மூடி விட்டதாக சொன்னார்கள். தியேட்டர் இருந்த இடத்திற்கு கூட செல்ல முடியவில்லை. ஞானம் தியேட்டர் ஞானம் ஹோட்டலாகி ரொம்ப வருஷம் ஆகிறது. ஜூபிடர், திருவள்ளுவர் போன்றவை எப்படியோ காலம் தள்ளி கொண்டிருக்கின்றன. ராணி பேரடைஸ் - பிக் சினிமாஸ் ஆன பின் இன்னும் ஒரு முறை கூட படம் பார்க்க வில்லை.

* ஞ்சையில் சில கடைகளில்  " கரண்ட் இல்லாத போதும் சிராக்ஸ் எடுக்கப்படும் " என பெரிய எழுத்தில் எழுதி போட்டுள்ளது புன்னகையை வரவழைக்கிறது. மின் வெட்டு எலக்ஷன் நேரம் வரை சற்று அடக்கி வாசித்தாலும் மற்றபடி - மிக மிக அதிகம் தான்.

* துவரை தஞ்சையில் செல்லாத ஒரு இடத்துக்கு சென்று நிறைய தகவல்கள் சேகரித்துள்ளேன். அது பற்றி தனியாக பின்பு....

* எப்போது பேட்டரி குறைந்தாலும் சொந்த ஊருக்கு சென்று வந்தால் உடல் மற்றும் மனது ரீ சார்ஜ் ஆன மாதிரி ஆகிவிடுகிறது... கவனித்துள்ளீர்களா  ? 

Tuesday, May 13, 2014

சூப்பர் சிங்கர் ரோஷன் உடன் ஒரு சந்திப்பு

சூப்பர் சிங்கரில் பைனல் வரை வந்த ரோஷன்... எங்கள் தெருவிற்கு அடுத்த தெருவில் தான் கடந்த சில  வருடங்களாகவே குடியிருக்கிறான். அடுத்த தெரு என்றாலும் - 50 மீட்டர் தான் தூரம்.. பல முறை அவனது வீட்டிலும் சாலைகளிலும் பார்ப்பது உண்டு.  அவனை பார்த்து புன்னகைத்தால், வெட்கத்துடன் சிரித்த படி சென்று விடுவான். என்றாவது ஒரு நாள் அவனை நிறுத்தி பேசணும் என்று எண்ணி, எண்ணி அண்மையில் தான் அது சாத்தியமானது..

ஈஸ்டர் தினம்.. சாலையில் செல்லும் போது அவர்கள் வீட்டிலிருந்து பாடல் வழிகிறது " நான் தான் சகல கலா வல்லவன் " .. கேட்டபடியே சென்று விட்டு - அரை மணி கழித்து திரும்பும் போது மீண்டும் இன்னொரு பாடல் கசிகிறது " நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள் "

சரி.. இன்றைக்கு அவனை நேரில் பார்த்து விடலாம் என அவர்கள் இல்லத்தின் உள்ளே சென்றேன்...

ரோஷன் ஹாலிலேயே லேப்டாப் உடன் அமர்ந்திருந்தான்.. அப்போது பாட்டு பாடியது? அவனது தம்பி ராபின்... ! இது அங்கு சென்றபின் தான் உணர முடிந்தது

உள்ளே ராபினுக்கு அவனது தந்தை பாட்டு பயிற்சி தந்து கொண்டிருந்தார்.

நான் ரோஷன் மற்றும் அவனது தாயுடன் பேசிக்கொண்டிருந்தேன்

ரோஷன் குடும்பம் முதலில் கோட்டூர் புரத்திலிருந்துள்ளது. இங்கு சொந்தமாய் வீடு வாங்கி கொண்டு 3 வருடம் முன்பு தான்  வந்துள்ளனர். ரோஷனுக்கு ஒரு தம்பி மற்றும் ஒரு தங்கை. அப்பா பெப்சிகொவில் விற்பனை துறையில் பணியாற்றுகிறார்

தற்போது +2 அக்கவுண்ட்ஸ் க்ரூப் படிக்கும் ரோஷன் C A படிக்க விருப்பம் என்று சொல்ல, எங்கள் ACS கோர்ஸ் பற்றியும் அவனிடம் பகிர்ந்து கொண்டேன். நான் அவனது துறை சார்ந்து தான் படித்துள்ளேன் என்பதை அறிந்ததும் நன்கு பேசத் துவங்கினான் ரோஷன்.

முறைப்படி கர்னாடிக் எல்லாம் கற்று கொள்ள வில்லை என்றும், ஹிந்துஸ்தானி சமீபத்தில் கற்று கொண்டதாகவும் சொன்னான். முக்கிய பயிற்சி அப்பாவிடமிருந்து தானாம் !.

ரோஷன் தாய் மற்றும் தந்தை பேச்சில் மலையாள வாடை தெரிகிறது. ரோஷனின் பேச்சில் சுத்தமாய் இல்லை. இங்கேயே பிறந்து வளர்ந்தமையால் இருக்கலாம்...

சிறிது நேரத்தில் ரோஷனின் தந்தையும் எங்கள் பேச்சில் வந்து சேர்ந்து கொண்டார்.

+2 என்பதால் ரோஷன் தற்போது படிப்பில் கவனம்  செலுத்த,அவனது தம்பி ராபின் தான் தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் மற்றும் சன் சிங்கரில் கலக்கி வருகிறான்.

அன்று கூட சூப்பர் சிங்கர் ஜூனியரில் ஒரு குறிப்பிட்ட நிலையில் செலெக்ட் ஆகி விட்டு அப்போது தான் இல்லம் திரும்பியிருக்கிறார்கள். உடனே அடுத்த சில நாட்களில் வரும் நிகழ்ச்சிக்கான பயிற்சி !!

ராபின் எந்தெந்த நிகழ்ச்சியில் தற்போது வருகிறான், எங்கெங்கு பாடுகிறான் என்று தாயும் தந்தையும் பெருமை பொங்க பகிர்ந்து  கொண்டனர்.

சூப்பர் சிங்கர் பற்றியும் ஜட்ஜ்கள் பற்றியும் கூட கொஞ்சம் பேசினோம்.

அலுவலகத்தில் ஒரு முக்கிய பொறுப்பில் இருந்து கொண்டு ஒவ்வொரு முறை தனது மகன்கள் பாடும்போதும் விடுப்பு எடுத்து கொண்டு கூடவே செல்லும் அவனது தந்தையை - மனம் விட்டு பாராட்டினேன்.

அவர்கள் படிக்கும் வேல்ஸ் பள்ளியும் கூட இது போன்ற திறமைகளை நன்கு ஊக்குவிப்பதாக மகிழ்ச்சியாக  சொன்னார்.பல பள்ளிகள் "படிப்பு படிப்பு " என விடுப்பே தர மாட்டார்கள்; அதனால் தான்  அங்கு சேர்க்க வில்லை" என்றும்  கூறினார்.



ரோஷனின் தம்பி - ராபின் - குட்டி பையன் . ரோஷன் போல இன்றி சற்று சதைபிடிப்புடன் இருப்பதால் செம அழகாக இருக்கிறான்.

இருவரை விட இன்னும் கியூட் அவர்கள் தங்கை. ஆறு வயது தான் இருக்கும். கண்ணில் குறும்பு கொப்பளிக்கிறது. அண்ணன்கள் இருவரும் பாட மட்டுமே செய்வார்களே ஒழிய முகத்தில் எந்த ரீ ஆக்ஷனும் இருக்காது. இவளது முகத்திலோ அத்தனை முகபாவங்கள் வந்து போகிறது...

எங்கள் வீட்டில் கிளிகள் இருக்கின்றன என்றதும், வந்து பார்க்கணும் என்று ரொம்ப ஆசைப்பட்டாள் குட்டி பெண். ரோஷன் அல்லது அப்பாவுடன் இன்னொரு முறை வா என்று கூறி விட்டு விடை பெற்றேன்.

படிப்பு, படிப்பு என இருக்கும் இந்த காலத்தில் இத்தகைய பிற திறமைகளை ஊக்குவிக்கும் ரோஷன்- ராபின் தந்தை தான் வீடு நோக்கி நடக்கும்போது மனதில் நிறைந்திருந்தார் .. !

Saturday, May 10, 2014

வானவில் - ரியோ-2-டமால் டுமீல்- மேக்ஸ்வெல் - அந்தி மழை பொழிகிறது

பார்த்த படம் -1 ரியோ -2


கோடை விடுமுறை வீக் எண்ட் முழுவதுமே மகள் மற்றும் மச்சான் குழந்தைகளுடன் கழிகிறது. அவர்களுடன் ஏதேனும் சினிமா அல்லது சென்னையின் குறிப்பிடத்தக்க இடத்திற்கு சென்று கொண்டிருக்கிறோம்.

ரியோ -2 பார்க்கணும் " 2 கிளிகள் பற்றிய படம் " என மகள் சொல்ல , நாங்கள் வளர்க்கும் கிளிகள் கதை போல இருக்கும் என நம்ம்ம்ம்ப்பி புக் செய்தேன். கடைசியில் இது ஒரு கார்ட்டூன் படம். பசங்க செமையாக என்ஜாய் செய்தார்கள். எனக்கு தான் படத்தில் ஒன்றவே முடியவில்லை. (பொதுவாக கார்ட்டூன் படங்கள் பார்த்து அதிகம் பழக்கம் இல்லை )

2 வயது முதல் 15 வயது வரை உள்ள குட்டி பசங்க நன்கு ரசிக்கிறார்கள் ,, . மேலும் சில பெண்மணிகளும் கூட படம் பார்த்து விட்டு " சூப்பரா இருந்தது இல்ல?" என்று பேசியபடி சென்றனர்...

வீட்டில் குட்டி பசங்க இருந்தால் அவர்களுக்காக மட்டும் செல்லலாம் ரியோ - 2

பார்த்த படம் -2 டமால் டுமீல் 

தமிழில் சின்ன பட்ஜெட் படங்கள் சுவாரஸ்யமாக தொடர்ந்து வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அண்மையில் தான் என்னமோ நடக்குது நன்கு உள்ளது என எழுதினேன். அதற்கு முன்பே வந்த டமால் டுமீல் இப்போது தான் காண முடிந்தது.



இப்படத்து கதையை- விமர்சனத்தில் நம்ம உண்மை தமிழன் அண்ணனால் கூட தெளிவாக எழுதி விட முடியாது. டைரக்டர் எப்படி தயாரிப்பாளருக்கு சொல்லி புரியவும் ரசிக்கவும் வைத்தார் என்பதே ஆச்சரியம் தான். படத்தையும், கதையும் படம் பார்த்து தான் புரிந்து கொள்ளவும் ரசிக்கவும் முடியும்

பாண்டசி டைப் கதை தான். நிஜத்தில் நடக்க வாய்ப்புகள் குறைவு. ஆயினும் படம் பார்க்கும் போது அப்படி தோன்றாத அளவு கொண்டு செல்கிறார்கள்.

வைபவ் - தனி ஹீரோவாக முதல் படம் - நன்றாகவே  செய்துள்ளார். பிரபலம் ஆகாத ஹீரோ என்பதால் - அந்த பாத்திரமாக நம்மால் பார்க்க முடிகிறது. நமது அபிமான ரம்யா நம்பீசனுக்கு தான் அதிக ஸ்கோப் இல்லை.

த்ரில்லர் படம் - ஒரு அளவிற்கு மேல் புன்னகையும் வரவழைப்பது கலக்கல் ஆக உள்ளது.

அவசியம் ஒரு முறை பார்க்கலாம் - டமால் டுமீல்.

ஐ. பி. எல் கார்னர் 

மிக சுமாரான அணியை - குறிப்பாக மிக மிக வீக் பவுலிங் வைத்து கொண்டு பஞ்சாப் ஒவ்வொரு மேட்சையும் - க்ளோஸ் ஆக கூட இல்லாமல் - ரொம்ப நல்ல மார்ஜினில் ஜெயித்து வருகிறார்கள்.  மேக்ஸ்வெல் மற்றும் மில்லர் இருவரின் பேட்டிங் தான் முக்கிய காரணம். இவர்கள் டாமிநேஷனில் ஒவ்வொரு மேட்சிலும் கிட்டத்தட்ட 200 ரன் எடுத்து விடுகிறது இந்த அணி.

மேக்ஸ்வேல் ஆட்டம் தான் இந்த ஐ. பி எல் லில் ஹைலைட். மரண அடி ! 5 பந்து தான் அமைதியாக இருக்கிறார். அதுக்கு பிறகு பூஜை போட்டு விடுகிறார். " டேய் இவன் எப்படி போட்டாலும் அடிக்கிறாண்டா !" கதை தான்... குறிப்பாக ஸ்பின் பவுலிங் போட்டால் மேக்ஸ்வேல்லுக்கு நாவில் எச்சில் ஊறி விடும். திருநெல்வேலி அல்வா சாப்பிடுற மாதிரி பிரிச்சு மேய்ந்து விடுகிறார். ரவிச்சந்திரன் அஷ்வினை கேட்டால் மிச்ச கதை சொல்வார்...

பஞ்சாப் தான் இந்த வருடத்தின் பார்ம் அணி. மேலும் சென்னை மற்றும் ராஜஸ்தான் இவையும் செமி பைனல் செல்லும் என்று நம்புகிறேன்.

நிற்க. ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் இடையே நடந்த மேட்ச்சில் நம்ம அமித் மிஸ்ரா ரன் அவுட் ஆனது சூப்பர் காமெடி. இந்த லின்க்கில் கண்டு சிரியுங்கள் :

http://matchcentre.starsports.com/cricket/160/175947/1326919

என்னா பாட்டுடே - அந்தி மழை பொழிகிறது 

தமிழின் கிளாசிக் பாடல்களில் ஒன்று.

எஸ். பி. பி திரையில் பாடுவது, மாதவியின் அற்புத அழகு, 80 களில் சென்னையின் சாலைகள், பேருந்துகள் என பாடலில் நிறைய சுவாரஸ்யங்கள் இருந்தாலும் - மீண்டும் மீண்டும் ரசிக்கவும் நெகிழவும் வைப்பது ராஜாவின் இசை தான்.. என்ன மாதிரி ஆர்கிஸ்ட்ரேஷன் ! ச்சே.. இந்த மனுஷனுக்கு இணையா இன்னொரு ஆளை சொல்லவே முடியாது !



போஸ்டர் கார்னர் 



டிவி பக்கம் - சன் டிவி சூர்ய வணக்கத்தில் கற்றது தமிழ் ராம் 

சூர்ய வணக்கத்தை அவ்வப்போது பார்ப்பது வழக்கம். காரணம் தொகுப்பாளினி அஞ்சனா ஹீ ஹீ

அண்மையில் கற்றது தமிழ் ராம் தேசிய விருது வாங்கியதை அடுத்து அவரிடம் பேசினர். ராம் தனது இரண்டு படங்களிலும் ஹீரோவை அவரை போலவே தாடி + கண்ணாடியுடன் படைத்தது - மேலும் அந்த பாத்திரங்களை eccentric ஆக காண்பித்தது அவரது பாத்திரம் தான் அப்படி எதிரொலித்ததோ என எண்ண வைத்தது. ஆனால் நிகழ்ச்சியில் மிக இயல்பாய் - புரியும்படி - மனதிலிருந்து பேசினார் ராம்.


மற்ற இயக்குனர் படங்களில் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு " நான் எழுதிய பாத்திரம் என்பதால் ஹீரோவின்  உணர்வுகள் எனக்கு தெரியும்; அதனால் நடித்து விட்டேன். மற்ற இயக்குனர் எழுதும் கதையில் நடிகனான நான் ஷைன் பண்ணுவேனா என்பது சந்தேகம் தான் " என ஓபனாக கூறினார்.

பாலுமஹேந்திரா பற்றி சொல்லும்போது " அவரிடம் ரொம்ப பிடித்த விஷயம் அவரது மன்னிக்கும் மனது தான். சமயத்தில் அவர் போன் செய்தால் அதை அட்டெண்ட் செய்யாமல், அல்லது அவர் கூப்பிட்டும் சென்று பார்க்காமல் இருந்துள்ளேன். அப்படி இருந்தும் அடுத்த முறை சென்றால் " ஏண்டா கூப்பிட்டும் வரலை?" என்று கேட்டுவிட்டு அப்புறம் சமாதானமாகி விடுவார். அவர் நிலையில் நான் இருந்தால் கூட அவ்வளவு சீக்கிரம் கோபம் சரியாகி இருக்காது"

சென்னை ஸ்பெஷல் 

நுங்கம்பாக்கம் அண்ணா மேம்பாலம் அருகே இருக்கும் லேண்ட்மார்க் புத்தகக்கடை - காலி செய்வதால் எல்லா புத்தகம் மற்றும் பொருட்களுக்கும் 70 % நேரடி டிஸ்கவுன்ட் தருகிறார்களாம். முகநூலில் அதிஷா மற்றும் ப்ரியா கல்யாணராமன் பகிர்ந்திருந்தனர். இன்றோ நாளையோ செல்ல திட்டமிட்டுள்ளேன். முடிந்தால் நீங்களும் லேண்ட்மார்க் கடையை ஒரு எட்டு எட்டி பாருங்கள் !

Tuesday, May 6, 2014

கோவா- கப்பலில் ஒரு இனிய பயணம்- வீடியோக்களுடன்

கோவாவின் தலைநகரம் - பனாஜி சிட்டி. இங்குள்ள துறைமுகத்தில் இருந்து தினம் மாலை வேளையில் கப்பலில் ஒரு இனிய பயணம் நிகழ்கிறது. ஒவ்வொரு நாளும் குறைந்தது 5000 முதல் 10000 வரை மக்கள் பயணிக்கிறார்கள்.



டிக்கெட் வாங்கி விட்டு உள்ளே செல்லவே மிக பெரிய கியூ... வெளியிலேயே நின்ற படி சில ஏஜென்ட்கள் டிக்கெட் விற்கிறார்கள். அதே விலையில் தான் விற்பதால் அங்கேயே வாங்கினோம்...

மாலை 5 மணி முதல் எட்டு மணி வரை இந்த பயணம் தொடர்கிறது... ஒவ்வொரு கப்பலிலும் 500 பேராவது பயணிப்பர்.

திருப்பதி போல கியூவில் நின்று பொறுமையாய் மக்கள் கப்பலில் ஏறுகிறார்கள். டிக்கெட் விலை ஒருவருக்கு ரூ. 200



கப்பல் இரண்டு தளத்தை கொண்டது. அமரும் வரை - கடலின் ஓர இருக்கை - மாடி இருக்கை என்றெல்லாம்    அடித்து பிடித்து அமர்ந்தாலும் கப்பல் செல்ல துவங்கியதும் பாதி பேருக்கு மேல் இருக்கையில் இருப்பதில்லை.. எழுந்து நடப்பதும்,  நின்றபடி கடலை வேடிக்கை பார்பதுமாய் இருக்கிறார்கள்.

கப்பல் நிரம்பும் வரை கிளம்பாமல் காத்திருக்கிறார்கள். மிக விரைவாகவே நிரம்பி விடுகிறது..

கப்பல் கிளம்ப துவங்கும்  போதே - கப்பலுக்குள் அமைக்கப்பட்டுள்ள மேடையில் மைக் பிடித்தபடி ஒருவர் வந்து பேசத்துவங்கி விடுகிறார். அதன் பின் ஒரு மணி நேர பயணம்.. பின் கப்பல் திரும்பும் வரை அந்த மேடையில் தொடர்ந்து பாட்டு, டான்ஸ் தான்....



முதலில் குழந்தைகளை மட்டும் அழைத்து பாடல்கள் இசைத்து ஆட வைக்கிறார்கள். பின் கணவன்- மனைவி ஆகியோரின் டான்ஸ் - அப்புறம் ஆண்கள் மட்டும் - பின் பெண்கள் மட்டும் - கடைசியாக யார் வேண்டுமானாலும் வந்து ஆடலாம் என அறிவிக்கிறார்கள்.

குழந்தைகள் ஆடும்போது - பெற்றோர் ஆர்வமாக தங்கள் குழந்தைகளை மேடை மீது ஏற்றி விட, அதில் பாதி பேர் மட்டுமே ஆட, நிறைய குழந்தைகள் ஆடாமல் விழித்த படி நின்று கொண்டிருந்தனர் ...



எல்லா நேரமும் டான்ஸ் மட்டும் தான் ஆடுவார்கள் என அறியாமல் கணவன்- மனைவி மேடைக்கு வாருங்கள் என்று அழைத்த போது அய்யாசாமி மற்றும் அவர் மனைவி மேடையேறி விட்டனர்.




டான்ஸ் என்று அறிவித்ததும் திருமதி. அய்யாசாமி திரு திரு என விழிக்க, அய்யாசாமி நைசாக இறங்கி போயிடலாம் என அழைத்து வந்து விட்டார் ( அய்யாசாமி எதோ ஒரு விதமாய் ஆடுவார் என்றாலும், தனியே எப்படி ஆடுவது?)




வெய்யில் காலம் என்றால் - 5 மணிக்கு துறைமுகத்தை அடைவது நல்லது.. கியூவில் நின்று அடுத்த அரை மணியில் கப்பலில் ஏறினால் ஆறு மணிக்கு கப்பல் கிளம்பும்.. ஒரு மணி நேரம் சென்று விட்டு வருவதற்குள் - கடலில் சூரிய அஸ்தமனம் கண்டு ரசிக்கலாம். மேலும் திரும்ப  வரும்போது அழகிய பனாஜி நகரம் வண்ண மயமான விளக்குகளால் ஜொலிப்பது அட்டகாசமான காட்சி. அழகான ஹோட்டல்கள், மிதக்கும் கப்பல்கள் (கேசினோ) போன்றவையும் பயணத்தில் நம்மை கவரும் மற்ற விஷயங்கள்..



கப்பலிலேயே ஸ்நாக்ஸ் மற்றும் ட்ரிங்க்ஸ் ( ஆம் .. பீர், ஹாட் உட்பட ) விற்கிறார்கள். அந்த விற்பனையும் அமோகமாய் நடக்கிறது.

நிலா அது  வானத்து மேலே 

கோவா செல்லும்போது அவசியம் பனாஜி நகரை ஒரு முறை சுற்றி வரவும், இந்த கப்பல் பயணத்தையும் தவற விடாதீர்கள்.

கோவா - சில குறிப்புகள் 

கோவாவை ஆண்டவர்கள் ஆங்கிலேயர்கள் அல்ல; போர்சுகீசியர்கள்; எனவே பாண்டிச்சேரியின் சில தன்மைகள் இங்கு உண்டு. ஆனால் பாண்டிச்சேரியை விட பல மடங்கு அழகும் சுவாரஸ்யமும் கோவாவிற்கு உண்டு

பனாஜி சிட்டியில் ஒரு வீடு 


தலை நகரில் கூட நமது சென்னை அல்லது மற்ற சிட்டி அளவெல்லாம் டிராபிக் இல்லை; மிக நிதானமாக கழிகிறது பொழுதுகள்.

கோவாவில் என்னை பெரிதும் கவர்ந்த அம்சம் - அதன் வெரைட்டி தான். கோவா நகரத்தின் ஸ்டைலை கொண்டுள்ளது; இன்னொரு பக்கம் அக்மார்க் கிராமம் போல உள்ளது. பல்வேறு பீச்கள் மற்றும் Backwaters இருப்பதால் கேரளாவில் இருக்கிறோமோ என்று சந்தேகம் வருகிறது. பாதைகள் ஹில் ஸ்டேஷன் போல !  இப்படி ஒரே இடத்தில அத்தனை இடங்களின் குணங்களையும் காட்டுவது செம சுவாரஸ்யம் !



 கோவாவில் கல்லூரி செல்லும் மாணவ மாணவியர் கூட யூனிபார்ம் அணிகிறார்கள். கேட்டால் - டூரிஸ்ட் மற்றும் மாணவர்களுக்கு வித்யாசம் தெரியாது ; அதனால் இந்த ஏற்பாடு என்கிறார்கள்.

டிசம்பர் 25 முதல் ஜனவரி 3 வரை வருடாந்திர கோவா பெஸ்டிவல் நடக்கும். கோவாவில் மிக அதிக கூட்டம் கூடும் நேரம் இதுவே . அறை வாடகை எல்லாம் கன்னா பின்னாவென்று பிய்த்து கொண்டு போகும். இந்த 2 வாரம்  பள்ளி, கல்லூரிகள் மட்டுமல்ல அரசு அலுவலகம் கூட அநேகமாய் இயங்காது என்கிறார்கள். அலுவலகம் திறந்திருந்தாலும் ஓரிருவர் மட்டும் இருப்பராம் ; வேலை எதுவும் நடக்காதாம்

பனாஜியில் நிதானமாய் நாங்கள் அடிக்கடி சுற்றி வந்தோம். அழகான குட்டி நகரம். பகலில் ஒரு வித  முகமும் இரவில் இன்னொரு அழகும் காட்டுகிறது பனாஜி சிட்டி.



ஜூன் 18 என்ற பெயரில் பனாஜியில் ஒரு தெரு ( வெள்ளையனே வெளியேறு போல - போர்சுகீசியர்களை வெளியேற சொன்ன நாள் ஜூன் 18, 1946 என்பதால் இந்த பெயர்)

கோவாவில்  இனிப்புகள் அதிகம் பிரபலம் இல்லை; முந்திரி மற்றும் இதர நட்ஸ் (Nuts) தான் இங்கு அவசியம் வாங்க சொல்லி பரிந்துரைக்கிறார்கள். அந்த கடைகள் சிலவும், ஜூன் 18 உள்ளிட்ட பனாஜியின் சில முக்கிய தெருக்களையும் இந்த வீடியோவில் காணலாம்.




இஞ்சினியரிங் போன்றவை இங்குள்ளோருக்கு உகப்பான படிப்பு அல்ல. போலவே மருத்துவமும் கூட அநேகமாய் யாரும் படிப்பதில்லை. அவர்கள் பீ. காம் போன்ற ஆர்ட்ஸ்  படிப்பையே அதிகம் படிக்கிறார்கள். மேலும் ஹோட்டல் சம்பந்தமான கோர்ஸ் என்றால் நிறைய பேர் படிப்பதாக சொன்னார்கள் (படித்து விட்டு கோவாவில் ஹோட்டலில் வேலை பார்க்கலாம் அல்லவா?)

படிக்கா விட்டாலும் பிரச்சனையே இல்லை; படிக்காதோர் அதிகம் நாடும் தொழில் கார் ஓட்டுவது தான்; நான் கூட அதிகம் படிக்கலை என சிரித்த படி சொன்னார் எங்கள் கார் டிரைவர் !

(கோவா குறிப்புகள் தொடரும்.)

Saturday, May 3, 2014

வானவில் -நான் சிகப்பு மனிதன்-இறையன்பு -அஞ்சான்

பார்த்த படம் - நான் சிகப்பு மனிதன் 

நிச்சயம் ஒரு வித்யாச முயற்சி தான்.



சட்டென்று தூக்கம் வரும் " நார்கோலெப்சி " பற்றி தமிழ் சினிமா இயக்குனர்கள் எப்படி இவ்வளவு நாள் விட்டு வைத்தார்கள் என தெரியவில்லை. பழைய படம் ஒன்றில் நாகேஷுக்கு இதே வித பிரச்சனை உண்டென காமெடி பகுதியில் பயன்படுத்தியிருப்பர்-  நார்கோலெப்சி பற்றியெல்லாம் சொல்லாமல்.. படம் பெயர் நினைவில்லை. ஆயினும் இதையே கதையின் மைய புள்ளியாக வைத்து பின்னப்பட்ட விதம் அருமை (ஆங்கில பட பாதிப்புகள் இருக்கலாம். அறியவில்லை)

ஹீரோவின் பாத்திரத்தின் வித்தியாசத்துடன் திருப்தி அடைந்து விடாமல்,  ஹீரோயின் மற்றும் வில்லி பாத்திரம் இரண்டையுமே இதுவரை தமிழில் பார்த்திராத விதத்தில் படைத்துள்ளார் இயக்குனர். விஷாலை மணக்க எந்த எல்லைக்கும் செல்லும் லட்சுமி மேனன் பாத்திரம் ஆச்சரியப்படுத்துகிறது என்றால் - இனியா பாத்திரம் அதை விட சூப்பர். குறிப்பாக தனது கடைசி காட்சியில் இனியா அறைக்குள் இருந்து கத்தியவாறே வந்து பேசும் டயலாக்.!

இனியா மற்றும் அவர் கணவர் போன்ற ஆட்கள் இருப்பார்களா ?  நிச்சயம் செய்தி தாளில் இது மாதிரி எத்தனையோ கதைகளை வாசிக்க தானே செய்கிறோம்......

இனியாவின் கணவர் பாத்திரம் தான் (நல்லா பார்த்த முகமா இருக்கு... யார் சார் அந்த நடிகர்?) அநியாயத்துக்கு புத்திசாலியாக, ஏமாற்று காரனாக - ஆனால் அனைவரும் அவரை நம்பும்படி அமைத்தது சற்று உறுத்துகிறது

படத்தின் முக்கிய குறை - மிரட்டலான இடைவேளைக்கு பின் 10-15 நிமிடம் படம் படுத்து விடுகிறது. இந்த நேரம் ஹீரோயின் தூங்கிய படி இருக்க ஹீரோ ஒரு பாட்டு பாடுகிறார் பாருங்கள்... அது மட்டும் இன்னும் அரை மணி கழித்து வந்திருந்தால் தியேட்டரில் குறட்டை சத்தங்கள் கிளம்பியிருக்கும் ..

நிச்சயம் ஒரு முறை பார்க்கத்தக்க படம் - வன்முறை மற்றும் " A " காட்சிகள் உண்டு என்பதால் குழந்தைகளை தவிர்த்து விட்டு பார்ப்பது நல்லது.

டிவி பக்கம் - பொதிகையில் இறையன்பு 

ஒவ்வொரு ஞாயிறு மதியம் 3 மணிக்கு பொதிகையில் வெவ்வேறு தலைப்புகளில் மடை திறந்த வெள்ளம் போல - பேசுகிறார் இறையன்பு ஐ. ஏ எஸ். ! கேட்டு முடித்ததும் ஒரு பாக்கெட் குளுக்கோஸ் சாப்பிட்ட மாதிரி இருக்கு என்றாலும் அப்புறம் மறந்து தான் போகிறோம் என்பது வேறு விஷயம் :)

மாற்று திறனாளிகள் பற்றியும், கிரியேடிவ் திங்கிங் என்பது என்ன என்பது பற்றியும் இவர் பேசியதன் ஒலி வடிவம் கிடைத்தால் கேட்டு பாருங்கள் .. !

என்னா பாட்டுடே - உறவெனும் புதிய வானில்

ராஜவின் மேதைமை ஒவ்வொரு இன்ச்சிலும் தெரிகிற பாடல். நெஞ்சத்தை கிள்ளாதேயில் இடம் பெற்ற " உறவெனும் புதிய வானில்" .

அற்புத மெட்டு, இனிய கிட்டார் இசை என மயக்குது இப்பாட்டு

இயக்குனர் மகேந்திரனுக்கு டூயட் என்பது சுத்தமாக பிடிக்காது. தப்பி தவறி டூயட் இருந்தாலும் அதனை வாயசைத்து பாட மாட்டார்கள். டூயட் ஒரு புறம் சென்ற படி இருக்க - பாத்திரங்களின் உணர்வுகளை நமக்கு கடத்துவதையே இவரது பாடல்கள் செய்யும்

80 களில் பல பாட்டுகளையும் வீ. ஜி. பி கோல்டன் பீச்சில் படம் பிடிப்பது வழக்கம். இப்பாடலிலும் அதனை காண காமெடியாக உள்ளது. பாடல் இன்னும் நன்கு படமாக்காப்பட்டிருக்கலாம்... இதன் ஆடியோ வடிவம் நான் அடிக்கடி கேட்கும் ஒன்று... இப்பாடலை கேட்கும்போது நமக்கு வரும் மகிழ்ச்சியை, பாடலில் உள்ள ஒரே வரி சரியாக சொல்லிவிடும் 

" எந்தன் மனம் எங்கிலும் இன்பம் அது சங்கமம் "....!



ஐ. பி. எல் கார்னர் 

என்ன தான் திட்டினாலும், பிக்சிங்கோ என்ற சந்தேகம் இருந்தாலும் ஐ. பி. எல் பார்க்காமல் இருக்க முடிவதில்லை. பசங்களும் விரும்பி பார்ப்பதால், நம் வீடோ விருந்தினர் வீடோ எங்கே இருந்தாலும் - ஐ. பி. எல்  காணாமல் ஒரு நாளும் கழிவதில்லை . 

சென்னை மற்றும் பஞ்சாப் செமி பைனல் செல்வது எந்த அளவு நிச்சயமோ, அதே அளவு மும்பை செல்ல முடியாது என்பதும் உறுதி .. (அதிசயங்கள் நிகழ்ந்தால் ஒழிய) 

இந்த ஐ. பி. எல் லில் எனக்கு மட்டுமல்ல லட்சகணக்கான மக்கள் விரும்பும் ஹீரோவாய் மாக்ஸ்வெல்  உருவெடுத்துள்ளார். பஞ்சாப் ஜெயிக்கிறதோ இல்லையோ - அவர் 40 பந்து விளையாடினால் போதும்- மக்களுக்கு முழு entertainment காரண்டி ! அதற்கு குறைவான பந்துகளில் அவர் அவுட் ஆனால்  - ஏராள மக்கள் ஏமாந்து போகிறோம். தஞ்சை சென்றபோதும் இதே உணர்வை பலரிடமும் காண முடிந்தது.

மும்பை தவிர டில்லி அணியும் நிச்சயம் செமி பைனல் வராது என்று நினைக்கிறேன். மற்ற அணிகளில் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் வர வாய்ப்புகள் அதிகம். 

கொல்கத்தா மற்றும் சன்ரைசர்ஸ் இவையும் நல்ல அணிகளே. இரண்டிலும் பவுலிங் நல்ல விதத்தில் உள்ளது, பேட்டிங் தான் அடிக்கடி சொதப்பி விடுகிறது 

மே 18- சென்னை Vs பெங்களூரு மேட்ச் சேப்பாக்கத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர் குழந்தைகளுடன் பார்க்க திட்டமிட்டு வருகிறேன். டிக்கெட் வாங்கணும்... ! 

அஞ்சான் !!

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அஞ்சான் பட ஸ்டில்கள்  வெளியாகி உள்ளன. அவற்றில் நம்மை பெரிதும் கவர்வது ஹீ ஹீ சமந்தா தான்... சோ கியூட் !



படித்ததில் பிடித்தது

ஆங்கிலம் என்றாலும் அவசியம் வாசியுங்கள்.. குறிப்பாக திருமணமான ஆண்கள் அனைவரும்...

Must read for young men and women who got married ....

Brad Pitt About His Wife :

“My wife got sick. She was constantly nervous because of problems at work, personal life, her failures and problems with children.

She has lost 30 pounds and weighted about 90 pounds in her 35 years. She got very skinny, and was constantly crying. She was not a happy woman.

She had suffered from continuing headaches, heart pain and jammed nerves in her back and ribs. She did not sleep well, falling asleep only in the morning and got tired very quickly during the day.

Our relationship was on the verge of break up. Her beauty was leaving her somewhere, she had bags under her eyes, she was poking her head, and stopped taking care of herself.

She refused to shoot the films and rejected any role. I lost hope and thought that we’ll get divorced soon…

But then I decided to act on it. After all I’ve got the most beautiful woman on the earth. She is the idol of more than half of men and women on earth, and I was the one allowed to fall asleep next to her and to hug her shoulders.

I began to pamper her with flowers, kisses and compliments. I surprised her and pleased her every minute. I gave her lots of gifts and lived just for her. I spoke in public only about her. I incorporated all themes in her direction. I praised her in front of her own and our mutual friends.

You won’t believe it, but she blossomed. She became even better than before. She gained weight, was no longer nervous and she loved me even more than ever. I had no clue that she CAN love that much.

And then I realized one thing: The woman is the reflection of her man.

If you love her to the point of madness, she will become it. ” – Brad Pitt, A Secret of Love.

****
Relevant link is available here:

http://www.facebookquotes4u.com/2013/09/brad-pitt-secret-of-love.html

ரசித்த கவிதை 

மின்னைப்போல் நான் மறைய இருந்தேன்
விளக்கைப்போல் எனைச் சுடர வைத்தாய்

பொன்னைப்போல் நான் புதைந்திருந்தேன்
புடம் போட்டாய் - நகை ஆக்கி விட்டாய்

என்னைப்போல் நான் இருக்க நினைத்தேன்
ஏதோ வேதியல் செய்து விட்டாய்

உன்னைப்போல் எனை மாற்றி விட்டாய்
உன் உருவத்தில் என்னை வார்த்துவிட்டாய்

 - அப்துல் ரகுமான்

படித்ததில் பிடித்தது - ரசித்த கவிதை எல்லாமே "ஒரு மார்க்கமா " இருக்கே என நினைக்கிறீர்களா ? கரீட்டு... நாளை ஹவுஸ் பாஸ் பிறந்த நாள்.. அம்மணிக்கே இந்த கவிதை அர்ப்பணம் !


Related Posts Plugin for WordPress, Blogger...