Tuesday, May 5, 2015

உத்தம வில்லன் - சினிமா விமர்சனம்

திரை உலகின் உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகனுக்கு - ஒரே நேரம் இரு அதிர்ச்சி தகவல்கள் கிடைக்கின்றன. அவனது வாழ்வைப் புரட்டி போடும் அந்த தகவல்கள் ..அவனுக்குள் நடக்கும் மாற்றங்கள்.. இவையே உத்தம வில்லன்...

ஹீரோவின் நிஜக் கதை ஒன்று - அவன் நடிக்கும் சினிமா மற்றொன்று - என ஒரே நேரத்தில் இரு தளங்களில் பயணக்கிறது படம்..

முதலில் நல்ல விஷயங்கள்..

வித்யாசமான கதை சொல்ல முயன்றதற்கு முதல் பாராட்டு. இப்போது வரும் படங்களில் இருந்து பெரிதும் மாறுபட்டது இப்படம்.. மேலும் அதிகம் சொல்லப்படாத ஒரு கதை தான்..



மனோரஞ்சன் என்கிற நடிகனின் கதை மனதைத் தொடுகிறது. புகழின் உச்சத்துக்கு ஒரு மனிதன் தரும் விலை... அவன் படும் வலி போன்றவை மிக இயல்பாக சொல்லப்படுகிறது.. அவனது உறவுகள் அனைத்தும் மிகச் சரியான முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளன.

முதல் கதையில் - ஒவ்வொரு பாத்திரத்துக்கும் ஒரு தனித்தன்மை - ஜீவன் இருக்கிறது. காரக்டர் ஸ்கெட்ச் பக்கா.

வழக்கமாய் கமல் படத்தில் அவர் ஆதிக்கம் தான் அதிகமாய் இருக்கும்.. ஆனால் - இங்கு அவர் மௌன சாட்சியாக பார்க்க - மற்றவர்கள் ஸ்கோர் செய்கிறார்கள். சில காட்சிகளில் கமலை தூக்கி சாப்பிடும் எம். எஸ். பாஸ்கர் மற்றும் பார்வதி மேனனை பார்க்க மகிழ்வு கலந்த ஆச்சரியமாக உள்ளது !


கிரிக்கெட் பந்தை எறிந்தவாறே கமல் மகனுடன் பேசும் காட்சி- அழகு. முதலில் மிகக் கோபத்துடன் வேகமாக பந்தை எறியும் மகன் போகப்போக மெதுவாய் எறிவதும் - வெளியில் நிற்கும் ரசிகர்கள் ரீ ஆக்ஷனும் .. என அக்காட்சி ஒரு கவிதை..

மற்றொரு காட்சியில் பார்வதி மேனன் கமல் அறைக்குள் வருவார்.. அப்போது வெளியில் மிகப் பெரிய தோட்டம் இருக்கும்... பார்வதி மேனன் உள்ளே நுழையும் போது பின்னணியில் - அந்த தோட்டம் இன்னொரு பக்கம் நகர துவங்கும்... அப்போது தான் அது ஒரு செட்டிங் என்பது நமக்கு புரியும்.. இப்படி சின்னச் சின்னதாய் புன்னகைக்க வைக்கும் காட்சிகள் + வசனங்கள் ஆங்காங்கே..

கிப்ரான் பின்னணி இசையில் அசத்தி உள்ளார்.. ஆனால் - பாடல்கள் ஓரிரண்டு தவிர மற்றவை சுமார்.

கே. பாலச்சந்தர் அந்த பாத்திரத்துக்கு தேர்வு செய்தது மிக பொருத்தம்.. கமல் மற்றும் அவருக்கு நிஜத்தில் இருக்கும் பிணைப்பு - அப்படியே பாத்திரத்துக்கு கடத்தப்படுகிறது..

ஆண்ட்ரியா - அழகுய்யா !

பூஜா குமார் எனக்கு அதிகம் பிடிக்காவிடினும்  மனைவி மற்றும் மகள்  "செம அழகு" என வர்ணித்து கொண்டிருந்தனர் .



படத்தின் முடிவு.. சுஜாதாவின் கதை போல... மக்களின் ஊகத்திற்கே விடுகிறார்கள்...(ஆண்ட்ரியாவின் அழுகை மூலமே முடிவை ஊகிக்க வேண்டியுள்ளது)

படம் ஒரு நல்ல மெசேஜ் சொல்கிறது - அன்பு காட்டவும், மன்னிப்பு கேட்கவும், கடமையை செய்யவும் தாமதிக்கவே கூடாது - ஒரு மனிதனின் இறுதி முடிவு எப்போதும் நேரலாம் என்பதே அது.. ! போலவே - சாகா வரம் என்பது வரம் அல்ல- சாபம் என்பதுவும் ....

இனி மைனஸ்..

இதுவரை வாசித்ததை வைத்து படம் நல்லதொரு அனுபவம் தரும் என நினைத்தால் - மன்னிக்க....

உத்தமன் பகுதியில் - காமெடி கதை செய்கிறோம் என ஜல்லியடித்துள்ளனர்.. கமலுக்கு 23 ஆம் புலிகேசி போல ஒரு காமெடி செய்யணும் என ஆசை போலும் - ஆனால் அம்முயற்சி படு தோல்வி என்று தான் வருத்தத்தோடு சொல்ல வேண்டியுள்ளது (அட்லீஸ்ட் அப்பகுதிக்கு க்ரேசி மோகனை பயன்படுத்தியிருக்கலாம் !!)



கமலின் நீண்ட நாள் ரசிகையான நம்ம ஹவுஸ் பாசுக்கே படம் பிடிக்க வில்லை என்பதையும் சொல்லியாக வேண்டும் !

படத்தின் தலைப்பை - வில்லன் உத்தமன் என வைத்திருக்கலாம்.. அந்த இரண்டாம் பகுதி (உத்தமன்) கதை தான் - அன்பே சிவம் ரேஞ்ஜில் வர வேண்டிய இப்படத்தை - நம்மவர் லெவலுக்கு கொண்டு செல்கிறது...

உண்மையில் கமலின் இப்படத்தை - அவர் நடித்த நம்மவருடன் தான் ஒப்பிட முடியும்.. அப்படத்திலும் கமலுக்கு கேன்சர்.. விரைவில் இறக்க போகிறார் என்று தான் கதை நகரும்... உத்தம வில்லன் - ஒட்டு மொத்தமாய் தரும் அனுபவம் மற்றும் பெறப் போகும் வெற்றி (??!) இரண்டும் நம்மவர் படத்தை ஒத்ததே !

உத்தம வில்லன் - கமல் ரசிகர்கள் தியேட்டரிலும், ஏனையோர் - ஓரிரு மாதத்தில் சின்னத் திரையிலும் கண்டு மகிழலாம் !
Related Posts Plugin for WordPress, Blogger...