Saturday, November 28, 2009

அணு அளவும் தமிழ் இல்லை (டிவி விமர்சனம்)


சூப்பர் சிங்கர் ஜூனியர்: (விஜய் டிவி)

வார நாட்களில் TV பக்கம் போக நேரம் குறைவே. இருந்தாலும் இரவு 9 மணிக்கு சூப்பர் சிங்கர் ஜூனியர் மட்டும் பார்க்கிறோம்.

குட்டி பசங்க பாட்டு கேட்க நல்லா இருக்கு. ஸ்ரீ காந்த்ன்னு ஒரு குட்டி பையன் -அஞ்சு அல்லது ஆறு வயசு இருக்கும். முகத்தை சீரியஸா வச்சிக்கிட்டு பாடுவான். செம காமெடியா இருக்கு பார்க்க. மோனிஷான்னு ஒரு பெண் பம்பாயில் இருந்து வந்து நன்றாகவே பாடுகிறாள். இன்னொரு பெண் பெயர் நினைவில்லை (இவள் பெயரும் ஸ்ரீயில் தான் துவங்கும்) மழலை குரலில் நன்கு பாடுகிறாள்.

இந்த வாரம் மனோ ஏதோ voice trainer ஆனந்த் வந்த பிறகு தான் பசங்க ரொம்ப நல்லா பாடுறதாக ஒவ்வோருதருக்கும் சொன்னது 20 மச் (பின்னே 20 பேருக்கும் இப்படியே சொன்னாராக்கும் !!)

நம்ம சின்மயி போயிட்டு திவ்யா வந்தோன மனசு ஒப்பலை (என்னது உப்பலைன்னு படிச்சிங்களா .. கண்ணை டெஸ்ட் பண்ணுங்க). ஆனா தனுஷ் சொல்ற மாதிரி அம்மையார் "பார்த்தா பிடிக்காது; பார்க்க பார்க்க பிடிக்கும்" ரகம். இப்போ.. ஹி ஹி .. நல்லா ஒரு மாதிரி வாட்ட சாட்டமா இருக்காங்கப்பு...

நமக்கு நல்லா பாடுனதா தோனுபவர்களை கூட மேல் சாதியில் சரியா பாடலை, கீழ் சாதியில் சரியாய் பாடலை என்று judgesசொல்றாங்க. ஒன்னும் பிரிய மாட்டேங்குது. (ஓ!!. அது சாதி இல்லையா? வேற எதோ ஒன்னு).

ஒன்னு கவனிச்சிங்களா? இந்த காமெரா மேன் எல்லாம் பார்வையாளரில் உட்கார்ந்திருக்கும் வல்லிய ஆண்டீஸ் தான் கான்பிகிறாங்க. நாலைஞ்சு காமெராமேனில் ஒருத்தர் இதுக்காகவே வாழ்க்கையை அர்பனிசிட்டாருன்னு நினைக்கிறேன்.

டீலா நோ டீலா (சன் டிவி)

நான் பார்ப்பது என்னவோ அந்த 26 பொட்டிக்காக தான்.. சரி சரி அந்த பொட்டி உடன் நிற்கும் சின்னஞ்சிறு auntyகளுக்காக.. எனக்கு சில doubts :

முதல் டவுட்:

26 பொட்டியிலும் என்ன பணம் இருக்குன்னு அதை ஓட்டும் போதே நடத்துறவங்களுக்கு தெரியும் தானே.. ?அப்போ முதல் முறை பொட்டி தேர்வு செய்யும் போதே அதில் என்ன பணம் இருக்குன்னு அவங்களுக்கு தெரியும். அப்புறம் என்ன புதுசு புதுசா offer தர்றது?

அடுத்த டவுட்:

அது எப்படி வரும் ஒவ்வொருவரும் சரியாய் ஒன்னுலேருந்து ரெண்டு லட்சத்துக்குள் ஜெயிச்சிட்டு போறாங்க?

கடைசி டவுட்:

ஏம்பா இந்த ப்ரோக்ராம்மிலாவது அந்த பணத்தை ஜெயிச்சவருக்கு சரியா குடுக்கிரீங்கலாப்பா?

ஹை டி (சுட்டி டிவி)

உங்களில் எத்தனை பேர் இந்த நிகழ்ச்சி பற்றி அறிவீர்களோ தெரியலை. ஆனா இந்த கார்ட்டூன் கதையை காலையில் ஸ்கூல் போகும் முன் என் பெண் பார்க்க கூடவே ஹவுஸ் பாசும் பார்க்கிறாங்க. படு பயங்கர செண்டிமெண்ட் கதையா இருக்கு. அடிக்கடி பார்பவர்களை அழ வைக்கிறாங்க. முக்கிய characters - 2 குட்டி பெண்கள் என்பதால் பசங்க இந்த தொடர் பக்கம் வருவதில்லை.

டைட்டில் போடும் போது ஹைடி கை நீட்டி நீட்டி நடப்பது போல் வீட்டில் ஆள் ஆளுக்கு நடந்திட்டு இருக்கோம்.

அணு அளவும் பயம் இல்லை (விஜய் டிவி)
ஒரே நேரத்தில் நிறைய பேரை சைட் அடிக்கிறேன் என ஹவுஸ் பாஸ் இந்த ப்ரோக்ராம் பார்க்கும் போதெல்லாம் திட்டுவாங்க. ஆனா என் பெண் விடா பிடியா பார்க்கணும் என்பாள். அதுனாலே நாமளும் வெங்காயம் உரிச்சிகிட்டே பார்க்கிறோம்..

போட்டியில் தைரியமா பங்கெடுப்பதை பாராட்டி தான் ஆகனும். பல விஷயம் ஆண்களால் கூட முடியாதது தான்.

ஆனா இந்த லக்ஷ்மி ராய் வந்த பிறகு இது தமிழ் நிகழ்ச்சியா இங்கிலீஷ் நிகழ்ச்சியான்னு சந்தேகம் வந்துடுச்சு. 15 இங்கிலீஷ் வாக்கியங்களுக்கு நடுவே ரெண்டு தமிழ் வார்த்தைகள் பேசுறாங்க. லக்ஷ்மி ராய் தான் இப்படின்னா, சீரியலில் தமிழில் அழும் மற்றவங்களும் இதில் பீட்டர் தான் விடுவேன்னு அடம் பிடிக்கிறாங்க. " நாராயணா இந்த கொசு தொல்லை தாங்க முடியலை நாராயணா"

Thursday, November 26, 2009

வாரம் ஒரு Blogger - இந்த வாரம் - பா. ரா

குட் பிளாக்ஸ்


வைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை
விடை தேடும் பயணம்
ஈடிபஸ்
வாரம் ஒரு Blogger - இந்த வாரம் - பா. ரா
என் டைரியில் இருந்து அப்பாவின் பக்கங்கள்!

பா. ரா புண்ணியத்தில் முதல் முறை யூத் விகடனின் குட் ப்லாக்ஸ் பகுதியில்..




"பஸ்சுக்கு காசு இருக்காடா
என கேட்கும் அண்ணனிடம்
எப்படி சொல்வேன்
தங்க வந்த கதையை".

சொல்ல முடியாத வலி ஒன்று தோன்றுகிறதா பா. ரா வின் இந்த கவிதை வாசித்து? இந்த வலி தான் பா. ரா வின் எழுத்தெங்கும் விரவி கிடக்கிறது.

பா. ரா சிவகங்கையை சேர்ந்தவர். 44வயதாகும் இவர் B Sc படித்திருக்கிறார். இவரது blog பெயர் கருவேலநிழல். Blog -ல் எழுத வந்து ஆறு மாதம் கூட ஆக வில்லை. அதற்குள் 125 Followers. 75 பதிவுகளை நெருங்கி விட்டார். பெரும்பாலும் கவிதைகள் தான். சில நேரம் நண்பர்கள் தொடர் அழைப்பு அழைத்தால் கட்டுரை பாணியில் எழுதுகிறார். அது தவிர தானாகவே சில நேரம் மட்டுமே கட்டுரை எழுதுகிறார்.

15 வருடங்களுக்கும் முன் கவிதைகள் எழுதி கணையாழி உள்ளிட்ட இதழ்களில் பிரசுரம் ஆகி உள்ளது. பின் இலக்கியம் என்பதெல்லாம் மறந்து போக வேண்டிய நிலைமை ... குடும்ப சூழல் (சற்று கடன் சுமை) காரணமாக வேலை நிமித்தம் சவூதி வந்தார். கடந்த ஏழு ஆண்டுக்கும் மேலாக சவூதி வாசம்.

************

அப்பா இன்னும் வரலை
எனக்கூறும்
மகனின் பொய்யை
கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

வீட்டினுள்
இருந்தபடி.

"போயிட்டாருப்பா"
என திரும்பும்
மகனின் முகம்
காண இயலாததாய்
இருக்கிறது.

கடன்காரனாக
இருப்பதையும் விட
கொடுமையானது
சில நேரம்...

தகப்பனாய்
இருப்பது.
- பா. ரா
************
பா.ரா வை பற்றி எழுத மிக முக்கிய காரணம் இரண்டு. ஒன்று: அவரது எழுத்தில் தெரியும் அன்பு. அடுத்தது: பா.ரா blog-ல் எழுதும் விதம் நம் அனைவரை விட சுவாரஸ்யமானது.

இதனை பா. ரா வின் வரிகளிலேயே கேட்போம்: (கேள்வி பதில் முறையில் மெயிலிலேயே வாங்கப்பட்டது)
************
தங்கள் படைப்புகளை எழுதி வெளியிடுவது?

எனக்கு கணினி அறிவு சொற்பமே. தம்பியும் (பெரியப்பா மகன் கண்ணன்). தம்பியின் நண்பரும் (ரமேஷ்) கெனடாவில் பணி புரிகிறார்கள்.என் எழுத்து ஆர்வம் புரிந்து தளம் தொடங்கி இப்ப வரையில் அவர்கள்தான் பேணுகிறார்கள்.பின்னூட்டம் மட்டும் இட பழகி கொண்டேன்.

எழுதி அவர்களுக்கு மெயில் பண்ணுகிறேன்.அவர்கள் பதிகிறார்கள்.உலகம்தான் என்னவெல்லாம் விந்தை செய்கிறது.வந்த புதிதில்,ஒரு கடிதம் எழுதிவிட்டு காத்து கிடந்த காலங்கள் நினைவு வருகிறது,மோகன்...

கவிதை உங்களுக்கு எப்படி பழக்கம்? பிடித்த கவிஞர் யார்?

எல்லோரையும் போலவே காதலில் தோற்று கவிதை எழுத தொடங்கினேன். பிடித்த கவிஞர் ,கல்யாண்ஜி!

தாங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் ? இதற்கு முன் என்னென்ன வேலை பார்த்துள்ளீர்கள்?

சவுதி மன்னரின் மகனுக்கு பசியாற்றும் வேலை.(வெயிட்டர்) என் தளத்தில்"அனுபவ நீதிக்கதை"எனும் தலைப்பில் இந்த வேலை கிடைத்த கதையை சற்று புனைந்து பதிந்து இருக்கிறேன்.

20 வயதில் திருமணம் முடிந்தது. ( 20 வயதிலா? பாவம் பா. ரா நீங்கள் ) முதலில் வெங்காய கடை,காய்கறி வியாபாரம்,ஒரு வருடம் prc-(பாண்டியன் போக்கு வரத்து கழகம்)இல் பணிபுரிந்தேன், எல்.ஐ.சி. ஏஜென்ட்,போட்டோ வீடியோ,கடைசியாக சவுதி வந்தேன்.

எதிர் காலத்தில் எழுத்தில் இன்னும் என்னென்ன செய்யும் யோசனை வைத்துள்ளீர்கள்?

ப்ளாகில்-என்று எதுவும் இல்லை மக்கா. எந்த திட்டமிடலும் இல்லை. தோனுகிரதை எழுதி அனுப்புகிறேன். ரமேஷ்,கண்ணன் பதிகிறார்கள்.இன்னும் ஓட்டளிக்க தெரியவில்லை.

************
இத்தனை பேர் ரசித்து படிக்கும் பா.ரா விற்கு பதிவுகள் இடுவது, ஓட்டு போடுவது போல பல விஷயங்கள் தெரியாது என்பது தான் சுவாரஸ்யமே!! தனக்கு பின்னோட்டம் இடுவோர் பெயரை கிளிக் செய்து தான் அவர்கள் blog படிக்கிறார்!

பா. ரா அடிக்கடி உபயோகம் செய்யும் வார்த்தை: "மக்கா". (வட்டார சொல் வழக்கு என நினைக்கிறேன்) அவரை சிலர் உரிமையாக "சித்தப்பா" என்கின்றனர். சில பெண்கள் "அண்ணா" போட (அதென்னங்க அண்ணா? Safety-க்காகவா?), ஒரு அளவுக்கு மேல் "அண்ணா போஸ்ட் புல் ஆகிடுச்சு; இனி யாரும் சொல்லாதீங்க" என சொல்லும் படி ஆகிடுச்சு அவருக்கு.
************
சிலர் அனுபவத்தால் எழுதுவர். வேறு சிலரோ கற்பனையால் எழுதுவர். பா.ரா எழுதுவது பெரும்பாலும் அன்பால் தான். அன்பே இவரது எழுத்துக்களுக்கு அடி நாதமாக உள்ளது.

முதல் முறை அவரது எழுத்தை விரும்பி வாசிக்கும் நவாசுதீனை சந்தித்த கதையை சுவாரஸ்யமாக பதிவு செய்துள்ளார். வாசிக்க: புரை ஏறும் மனிதர்கள் - ஒன்று

ISD கால் போட்டு பல தமிழக நண்பர்களுக்கு பேசுகிறார். என்னோடு பேசிய போதும் ரொம்ப நாள் தெரிந்த மனிதர் மாதிரி பேசினார் . என் ஹவுஸ் பாஸ் மற்றும் குழந்தைக்கும் அன்பை சொன்னார்.

இவர் நெடுந்தொலைவில் இருப்பதால் அன்புக்காக ஏங்கி, இவ்வாறு எழுத்தில், பேச்சில் அன்பு தெரிகிறதா அல்லது எப்போதும் இப்படி தானா என தெரிய வில்லை.
************
வெளி நாட்டில் இருப்பதால் அன்புக்காக ஏங்குவது நன்றாகவே தெரிகிறது. மேலும் நேரத்தை எப்படி செலவு செய்வது என்பதும் ஒரு பிரச்சனையாக இருந்திருக்கிறது. இந்த நேரம் தான் Blog உலகம் அவருக்கு கண்ணன் மற்றும் ரமேஷ் மூலம் அறிமுகம் ஆகி இருக்கிறது. தற்போது இவர் வாங்கிய லேப் டாப் மூலம் இந்த ரெண்டு பிரச்னையும் ஓரளவு குறைந்துள்ளது.

கேபிள் ஷங்கர் தந்தை இறந்த செய்தி கேட்டு, தனது தந்தை குறித்த பதிவு ஒன்று எழுதியிருக்கிறார்.. எத்தனை நேர்மையான எழுத்து !! நேரம் கிடைக்கும் போது வாசித்து பாருங்கள். புரை ஏறும் மனிதர்கள்-இரண்டு


இவரது கவிதைகளை அகநாழிகை வாசுதேவன் தொகுத்து புத்தகமாய் கொண்டு வருகிறார். புத்தகம் அநேகமாய் வந்திருக்கும். அல்லது ஒரு சில தினங்களில் வந்து விடும். இதற்கும் அவர் எந்த முயற்சியும் எடுக்க வில்லை. வாசு தேவன் அவரிடம் சில முறை கேட்டு ஒப்புதல் வாங்கியிருக்கிறார்.

இணையம் பல பிரச்சனைகளை தீர்க்கிறது. பல புது உறவுகளை தருகிறது பா. ரா என்ற மனிதருக்கு தான் அது எத்தனை ஆச்சரியங்களையும், நட்பையும், அன்பையும் தந்துள்ளது!!

முடிக்கும் முன் மீண்டும் ஒரு பா. ரா கவிதை

பொட்டு சரியாவென
கேட்கிறாள்
புறப்படும் அவசரத்திலும்..
காசு தந்து
கலைத்தவனிடம். - பா. ரா


பா. ரா பற்றி அறிந்தவர்கள் பின்னூட்டத்தில் மேலும் பல சுவாரஸ்யமான தகவல் தரும் படி கேட்டு கொள்ள படுகிறார்கள்.

அடுத்த வாரம்: விக்னேஷ்வரி

பிடிச்ச பத்து, பிடிக்காத பத்து

பிடிச்ச பத்து, பிடிக்காத பத்து ரொம்ப நாளா ஓடிட்டு இருந்தது. நம்மளையும் மதிச்சு இப்போ யூத்து கேபிள் ஷங்கர் கூப்பிட்டுருக்கார்.

இந்தப் பதிவோட விதிகள்:

1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும். (நான் இதை இந்தியான்னு எடுத்திருக்கேன்)

2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்

3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும்.

4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.

5. இந்த லிஸ்டில் நீங்க சொல்றவரு இப்ப உயிரோட இருக்கணும்.


1.அரசியல்வாதி

பிடித்தவர் : ரொம்ப யோசிச்சா கம்யுநிஸ்டுங்க சில பேர் (நல்ல கண்ணு போல) அதிகம் பணம் சேர்க்காம இருப்பது தெரிகிறது. (அதுக்காக கம்யுநிசம் பிடிக்குமா என்றால் " சாரி - நோ ")

பிடிக்காதவர்: 99.9999% அரசியல் வாதிகள் அனைவரும். (நம்ம நாடு உருப்படாம இருக்க காரணமே இவங்க தான்)

2. நடிகர்

பிடித்தவர் :

ரஜினி (For giving entertaining cinema )
கமல்ஹாசன் ( Variety -க்காக பல படங்கள்)
விக்ரம் (கடும் உழைப்பு மற்றும் காத்திருப்பால் வென்றமைக்காகவும், திறமைக்காகவும்)
நல்ல performance எங்கு பார்த்தாலும் பிடிக்கவே செய்கிறது உதாரணம் சூர்யா (கஜினி, பிதா மகன்).

பிடிக்காதவர் : சிம்பு (ஓவர் பந்தா ஒடம்புக்கு ஆகாதுன்னு யாராவது சொன்னால் தேவலை)

3. நடிகை

பிடித்தவர் : தமன்னா, கத்ரீனா, ஸ்னேஹா, அசின் மற்றும் ப......லர். (தனி பதிவு விரைவில் போடுறேன்.)

பிடிக்காதவர் : விஜய குமாரி (பழைய நடிகை; படத்தில் வந்த ரெண்டாவது நிமஷம் அழ ஆரம்பிப்பாங்க; கடைசி வரை அழுதுட்டு செத்து போய்டுவாங்க)

4. இயக்குனர்:

பிடித்தவர் :

1. மணிரத்னம் (சிக்கலான விஷயத்தை அழகாக கையாளுவதால்)
2. ஷங்கர் ( கருத்து, காமெடி, பிரம்மாண்டம், நல்ல பாடல்கள் என அனைத்தும் கலந்து எப்போதும் entertaining ஆன வெற்றி படம் தருவதால் )
3. மகேந்திரன் ( உதிரி பூக்களை மறக்க முடியுமா? )
4. பாசில் (எப்போதும் அன்பை சொல்லும் படம் எடுத்ததால்)

பிடிக்காதவர் : பேரரசு (இவர் டைரக் ஷனே கொடுமை!! இதில் face expression இல்லாமல் நடிச்சு வேறே கொல்லுவாரு ).

5. தொழிலதிபர்

பிடித்தவர் : இன்போசிஸ் நாராயண மூர்த்தி (என்ன ஒரு vision !! A very straight forward business man)
ரத்தன் டாடா (Another straight forward & courageous business man)

பிடிக்காதவர் : மாறன் பிரதர்ஸ் (தனது துறையில் மற்றவர்கள் வளர்வது பிடிக்காததால்).

6. எழுத்தாளர்

பிடித்தவர் :
எஸ். ராமகிருஷ்ணன்.
பிரபஞ்சன், பாவண்ணன், வண்ண நிலவன் (மூவருக்கும் சில கதைகள் மட்டும் பிடிக்கும்)

உயிரோடு என்று இல்லா விட்டால் 1 to 3 சுஜாதா இருந்திருப்பார் .

பிடிக்காதவர் : ராஜேஷ் குமார்

7. இசையமைப்பாளர்

பிடித்தவர் : பழைய இளையராஜா, இன்றைய ஹாரிஸ் ஜெயராஜ் (எப்படி தான் சொல்லி சொல்லி ஹிட் songs தாராரோ?)

பிடிக்காதவர்: சங்கர் கணேஷ் (சின்ன வயதில் MSV vs இளையராஜா என நண்பர்களிடையே பெரும் சண்டை நடக்கும் ; அப்போ இளையராஜா கட்சி என்பதால் MSV பிடிக்காது என்பேன்)

8. காமெடியன்:

பிடித்தவர் : பழைய கவுண்டமணி (மன்னன், நடிகன், சின்ன தம்பி), இப்போ வடிவேலு . உயிரோடு இல்லாதவர்களில் : நாகேஷ் (What an actor!!);

பிடிக்காதவர் : மொக்கை போடும் போது விவேக்

9. பதிவர்

பிடித்தவர் :

ரேகா ராகவன் ( Blog-ல் பல விஷயங்களை எனக்கு அறிமுகம் செய்தவர்)
கேபிள் சங்கர் மற்றும் நரசிம் (கிட்ட தட்ட ரெண்டு பெரும் தான் எனக்கு ரோல் மாடலா இப்ப உள்ள மன நிலைக்கு தெரியிறாங்க.. வெரைட்டியா எழுதுறாங்க .. நானும் ஒரு நாள் இவங்களை போல ஆகணும்னு ஒரு (நப்) ஆசை)

மற்றும் எனது blog-ஐ தொடர்ந்து படித்து ஊக்குவிக்கும், அன்பு காட்டும் அனைவரும்.

பிடிக்காதவர் : யாரும் இல்லை (எழுதுறது எவ்ளோ கஷ்டம்னு எழுதி பார்த்தா தெரியும் !!)

10. பழமொழி (saying)

பிடித்தது: Never, never, never give up !!

பிடிக்காதது: அழுகிற ஆம்பளையும், சிரிக்கிற பொம்பளையும் நம்ப கூடாது (உணர்ச்சிகள் அனைவருக்கும் பொதுவே. இதில் ஆண் என்ன பெண் என்ன?)

நான் கூப்பிடும் நால்வர்:

ரிஷபன்
ஈரோடு கதிர்
ஜெட் லி
வெங்கட் நாகராஜ்

Wednesday, November 25, 2009

அன்பு

சாப்பிட்டு கொண்டிருந்த ராகவன் தட்டை தூக்கி எறிந்தான். தட்டு குழம்பு  வைத்திருந்த  பாத்திரம்  மேல் பட்டு  கீழே விழுந்தது. தட்டிலிருந்த சாதம் தரையெங்கும்  சிதறியது.
 
நித்யா ஓடி வந்து குழம்பு பாத்திரத்தை எடுத்தாள். அதற்குள் முழுதும் கொட்டி விட்டது.
 
" மனுஷன் நிம்மதியா சாப்பிட முடியலே. சாப்பிடும் போது தான் எல்லா பிரச்னையும் பேசணுமா?" பெருங்குரலில் கத்தினான். நித்யா ஏதும் பேசாமல் தரையை சுத்தம் செய்யும் வேலையில் இருந்தாள்.



 
" இது இல்லை .. அது இல்லை.. எல்லாம் இப்ப தான் பேசணுமா?"
 
"இல்லைன்னா இல்லைன்னு தானேங்க சொல்ல முடியும்?"
 
" அதுக்கு இதான் நேரமா? வந்ததும் வராததுமா சொல்ல வேண்டியது; இல்லாட்டி சாப்பிடும் போது பேச வேண்டியது. .. ச்சே! "
 
முகுந்த் சத்தமில்லாமல் சாப்பிட்டு கொண்டிருந்தான். பத்தாம் வகுப்பு படிக்கும் அவனுக்கு நாளைக்கு அரையாண்டு பரீட்சை. " ஆரம்பிச்சிட்டாங்களா? இன்னைக்கு படிச்சா மாதிரி தான்" 
 
முகுந்த் சாப்பிட்டு  முடித்து விட்டு அந்த வீட்டில் இருந்த ஒரே தனி அறையினுள் நுழைந்தான். வெளியில் சத்தம் இன்னும் குறைந்த பாடில்லை.

" நான் என்ன உங்க அப்பன் மாதிரி தினம் பணம் பாக்கிறவனா?  இருபது தேதிக்கு மேல் முழி பிதுங்குது. ரெண்டு பஸ் விட்டுட்டு ஆர்டினரி பஸ் பிடிச்சு வர்ரேன்"
 
" வீட்டுக்கு வேண்டிய பொருள் எல்லாம் மாச ஆரம்பத்திலயே வாங்கினா தான் என்ன? "

இந்த கேள்விக்கு ராகவனிடம் பதில் இல்லை. உள்ளே சென்று சட்டையை எடுத்து மாட்டி கொண்டு கிளம்பினான். முகுந்த், அப்பா கை கூட கழுவாமல் சட்டை மாட்டி கொண்டு கிளம்புவது பார்த்து தடுக்க முயன்றான்.
 
"அப்பா.. போகாதீங்கப்பா.. நாளைக்கு எனக்கு பரீட்சை" 
 
" அதாண்டா கிளம்பறேன். இருந்தா சண்டை வந்துட்டே இருக்கும்" 
 
சில வினாடி நின்று  மொபைலை எடுத்து கொள்ளாலாமா என யோசித்தான் . பின் வேண்டாமென  எடுக்காமல்  கிளம்பினான்.  

"அம்மா. ஏன் அவரை தடுக்கலை"
 
"விடுறா. துர்கா பவன் போய் சாப்பிட்டுட்டு வருவாரு. வேற எங்கே போவாரு? "
 
"உனக்கு சாப்பாடு? "
 
"எங்கே? இருந்த குழம்பை கொட்டிட்டாரு..வெறும் சாதத்தை எப்படி சாப்பிடறது? " 

***** *********** *********

சற்று நேரம் தெருவினுள் நடந்த பின் தோன்றியது. "எங்கே போவது? " மனதினுள் இன்னும் கோபம் குறைய வில்லை. "வைக்கிற இடத்தில இவளை வச்சிருக்கணும்; ரொம்ப இடம் குடுத்திட்டேன் "

“மத்தவனுங்க  மாதிரி  நான் தம் அடிக்கிறேனா.. தண்ணி அடிக்கிறேனா? என்னோட அருமை இவளுக்கு தெரியவே இல்லை" மனதிற்குள் சுய இரக்கம் பெருகியது.  

"சுந்தர்  ரூமுக்கு போகலாமா? இருப்பானா? போன் வேற எடுக்காம வந்துட்டோம்"
 
போன் இல்லாத போது தான் நிறைய பேருக்கு பேசணும்னு தோணும். பணம் கம்மியா எடுத்துட்டு வரும் போது நிறைய வாங்கனும்னு தோணுவது போல்...
 
கால்கள் சுந்தர் ரூம் நோக்கி நடக்க ஆரம்பித்தது.

***** *********** *********

"வாடா என்ன இது லுங்கியோட? "
 
"ப்ச்.. ஒன்னும் கேக்காதே மாப்ளே”

"வீட்லே சண்டையா"
 
"ம்"
  
"உக்காரு. துணி துவைச்சிட்டு இருக்கேன். வந்துடுறேன்" 
 
அருகிலிருந்த புத்தகத்தை எடுத்து படிக்க முற்பட்டான். மனசு பதிய வில்லை. 
 
சுந்தர் தனிக்கட்டை. 40  வயதுக்கு மேல் ஆகியும் திருமணம் செய்ய வில்லை.  "குடுத்து வச்சவன்" என அடிக்கடி சொல்லுவான் ராகவன்.
 
அடுத்த அரை மணியில் சுந்தர் வந்து சேர்ந்தான். 

" என்னடா .. சாப்டியா?
 
என்ன பதில் சொல்வது இதற்கு? பாதி சாப்பாட்டில் தூக்கி எறிந்தாயிற்று.   "ம்" என்று சொல்லி வைத்தான்.
 
"என்னடா அப்படி சண்டை? "
 
"சாப்பிடும் போது இது இல்லை அது இல்லைன்னு குறை சொல்றாடா. மனுஷன் நிம்மதியா சாப்பிட முடியலை; தட்டை தூக்கி எறிஞ்சுட்டு வந்துட்டேன் "
 
"அட  பாவி.. சமையல் பண்ணும் போது எவ்ளோ எரிச்சல் வரும் தெரியுமா? முன்ன பின்ன சமைச்சு பாத்திருக்கியா? சமைக்கும் போது பொருள் இல்லன்னா என்ன தான் பண்றது சொல்லு" 
 
ராகவன் அமைதியாய்  இருந்தான். " உன் பையனுக்கு எக்ஸ்சாம்ன்னு சொல்லிட்டிருந்தே"
 
"........."
 
" டேய்.  சின்ன வயசில் என் அம்மா, அப்பா இப்படி தான் சண்டை போட்டுப்பாங்க அது என் மனசை எவ்ளோ பாதிச்சுது தெரியுமா? இப்போ பார். அம்மா, அப்பா போன பிறகு என்னை பாத்துக்க ஆள்  இல்லாம தனியா  கிடக்கிறேன். உன்னை பாத்து குடுத்து வச்சவன்னு நினைச்சிட்டு இருக்கேன்.. நீ என்னடான்னா ..."
 
" அட போடா. இக்கரைக்கு அக்கரை பச்சை. நான் உன்னை தான் அப்படி சொல்லுவேன்"  
 
"டேய். நம்ம வாழ்க்கையே ஒரு சினிமா மாதிரி தான். எல்லாம் தான் இருக்கும் இதில். சண்டை, கோபம், அழுகை, இப்படி எல்லாம் தான் இருக்கும் . வெறும் ஜாலி மட்டும் குடும்பத்திலே எதிர் பார்த்தா எப்படி? என் வாழ்க்கையை பாரு. அதில ஒன்னுமே இல்லடா. டாகுமெண்டரி படம் மாதிரி வெறுமையா கிடக்கு"
 
ராகவன் யோசிக்க ஆரம்பித்தான்.

"வெறுப்புக்கு பதில் வெறுப்பு இல்லடா. அன்பு தான் அதுக்கு சரியான பதிலா இருக்க முடியும். நீ தட்டை தூக்கி எரிஞ்சியே.. உன் வீட்டுக்கார அம்மா அப்போ என்ன பண்ணாங்க? "

ராகவன் யோசித்தான். நித்யா ஏதும் செய்ய வில்லை. தரையை தான் கூட்டினாள் என்பது நினைவில் வந்தது.

"கோபமா சொல்லும் போது நீ சொல்றது நல்ல விஷயமா இருந்தா கூட மெசேஜ் போய் சேர்ரதில்லை.. அதை புரிஞ்சிக்கோ..எதையும் பொறுமையா மெதுவா தான் சொல்லணும் ..இப்போ நான் சொல்ற மாதிரி"

***** *********** *********
"என்னம்மா அப்பாவை  இன்னும் காணும்? ஹோட்டல் போயிட்டு வந்திடுவாருன்னே" 

"தெரியலேயேடா.. எங்க போனாரோ? " நித்யாவிற்கு பயம் வந்தது "ஒன்னு கிடக்க ஒன்னு செஞ்சிட போறார். ச்சே நான் தான் தப்பு பண்ணிட்டேன். சாப்பிட்டு முடிச்சோன சொல்லிருக்கணும்"

கேட்  திறக்கும் சத்தம் கேட்டது. நித்யா எட்டி பார்த்தாள். ராகவன், துர்கா பவன்  சாப்பாட்டு பார்சலுடன் உள்ளே வந்து கொண்டிருந்தான் .

***** *********** *********

### உரத்த சிந்தனை நடத்தும் குடும்ப உறவுகள் குறித்த சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது

Monday, November 23, 2009

பதிவர்கள் சந்திப்பு - சில கேள்விகள்

பதிவர்கள் சந்திப்பு பற்றி அறிந்ததில் இருந்து செல்ல மிகுந்த ஆர்வமுடன் இருந்தேன். கடந்த 2 வாரமாய் மழையால் நடக்காத சந்திப்பு, இம்முறை செம ஷார்ட் நோடிஸில் காந்தி சிலைக்கு பின்னே நடந்தது. ஐந்தரை மணி என போட்டிருந்தாலும் 5.45 வரை யாரையும் காணும். முன்னே பின்னே தெரியாத மக்களை அடையாளம் எப்படி காண்பது என சற்று குழம்பி போனேன். ஒரு வழியா ஜெட் லி மற்றும் அவரது நண்பர் (சரவணன் என நினைக்கிறேன்) ஆகியோரை பார்த்தேன். சிறிது நேரத்திலேயே நரசிம், Dr . ப்ருநோ, பைத்திய காரன் (சிவ ராமன்), ஜ்யோவ் சுந்தர், அதியமான், அதிஷா, லக்கி,ஆதி, முரளி கண்ணன், அனுஜன்யா மற்றும் பலர் வந்து சேர்ந்தனர். சிறப்பு விருந்தினர்: கவிஞர் வா. மணிகண்டன். அவரது நண்பர் நரன் (இவரிடமும் ஏகப்பட்ட நவீன கவிதை வாசம்). அனைவரும் ஒரு circle-ஆக அமர்ந்து அறிமுகம் செய்தவாறு பேச துவங்கினோம்.



***********
போட்டோ நன்றி: ஆதி @ தாமிரா. மீதம் போட்டோ காண: http://www.aathi-thamira.com/2009/11/211109.html
**********
பைத்தியக்காரன் தான் பல்வேறு கேள்வி கணைகளை வீசினார். Yorker, Bouncer என அவர் வீசிய பல்வேறு கேள்விகளுக்கு மணிகண்டன் சமாளித்து ஆடினார். கேள்வி கேட்ட விதத்தில் ஒரு வழி பண்ணாம விடறதில்லை என்ற ரீதியில் பேசிய பைத்தியக்காரன், கடைசியில் "ஷோக்கா ஆடுனேப்பா!!" என கட்டை விரலை தூக்கி மகிழ்ச்சி தெரிவித்தார்.

மணிகண்டன், கவிதை எழுத வரும் எவரும் முதலில் வைரமுத்து போன்றோரின் பாதிப்பில் எழுத வருவதாகவும், பின் நல்ல கவிதை தேடி, படித்து , எழுதும் பாணி மாறுவதாகவும், தனக்கும் அதுவே நடந்ததாகவும் சொன்னார்.

" நிசப்தமான இந்த இரவின் விளிம்பில் உன் விரல்களில் இருந்து உதிரும் வார்த்தைகள்" என்ற தனது கவிதையை சொல்லி, பலரும் இது சத்தமில்லா இரவில் இருவர் பேசுவதாக நினைக்கின்றனர். ஆனால் இது செக்ஸ் மற்றும் அந்த நேரத்தில் விரல்கள் பேசுவதை குறிப்பதாக சொன்னார். சுந்தர ராமசாமி (பசுவய்யா என்ற பெயரில்) மொத்தமே 107 கவிதைகள் தான் எழுதி இருந்தாலும் அவரது கவிதைகளை தான் முக்கியமான ஒன்றாக கருதுவதாக சொன்னார். மேலும் தற்போதைய கவிஞர்களில் குறிப்பிடதக்கவராக முகுந்த் நாகராஜ் உள்ளதாகவும் சொன்னார்.

"இலக்கியம் என்றால் என்ன? ", "கவிதைகள் புரிந்து கொள்ள பட வேண்டுமா?", " கவிதை, கட்டுரை என படைப்பாளி பிரிப்பது தேவையா?' , "பின்னூட்டங்கள்.." என விவாதம் நன்றாகவே போனது.

ஜ்யோவ் சுந்தர் நகுலனின் சில கவிதைகளை சிலாகித்து பேசினார். பிரம்ம ராஜனின் சில கவிதைகள் ஒரு வரி விட்டு விட்டு - அதாவது odd number வரிகள் முதலிலும், Even number வரிகள் பின்னரும் படித்தால் தான் புரியுமாம்!! அப்படி ஏன் எழுத வேண்டும் என்ற கேள்விக்கு, இது ஒரு ஒளிந்து பிடித்து விளையாட்டு மாதிரி என்ற பதில் வந்தது!!

அப்துல்லா guest appearance போல் நடுவில் வந்து, நடுவில் சென்றார். கேபிள் ஷங்கர் வந்ததும் கூட்டத்தை முடித்து விட்டனர்

டீ கடை சென்று அங்கு ஒரு விவாதம் தொடர, நானும் அதிய மானும் நேரமாச்சுன்னு எஸ்கேப்.

சிலரிடம் கேட்க வேண்டிய கேள்விகள்:

ஜெட் லி: Blog-ல் அசத்தும் நீங்க கூட்டத்தில் ஏன் இவ்ளோ மௌனம்?
அனுஜன்யா : எப்படி சார் யூத்து மாதிரியே இருக்கீங்க?
முரளி கண்ணன்: நீங்க P.H.D செய்வது Mechanical Engineering -ஆ? சினிமாவிலா?
நரசிம்: அது எப்படி அப்பாவி மாதிரி கேள்வி கேக்குறீங்க?
பைத்திய காரன்: உங்க மனைவி கிட்டே தைரியமா கேள்வி கேப்பிங்களா?

மொத்தத்தில்: இந்த டீ, முருக்குக்கெல்லாம் காசு தந்த புண்ணியவான் யாருப்பா?

********************* *********** **********

தமிழிஷ் மற்றும் தமிழ் மணத்தில் வாக்களிக்க மறவாதீர்கள்!!

Friday, November 20, 2009

வாரம் ஒரு Blogger : இந்த வாரம்: ரேகா ராகவன்


இணையம் (Blog ) தரும் பல்வேறு இனிய அனுபவங்களில் முக்கியமானது அது அறிமுகப்படுத்தும் நட்புகள். பொதுவாய் தனது வேலையையே செய்யும் இன்னொரு நபரை நாம் போட்டியாளராக எண்ணுவோம். அதை விடுத்து, ஒருவருக்கொருவர் உதவும், உரிமையாய் கிண்டல் செய்யும் இந்த blog உலகம் அற்புதமாய் இருக்கிறது.

இந்த அழகிய நட்புகளை வாரம் ஒவ்வொன்றாய் எழுதும் எண்ணம்.

இந்த வாரம்: பதிவர் ரேகா ராகவன்.


ரேகா ராகவன் என்றதும் பெண் எழுத்தாளர் என எண்ணாதீர்கள். ராகவன் அரசு துறையில் (Fisheries Department) வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். ஓய்வு காலத்தை பயனுள்ள வழியில் கழிக்க blog-ல் எழுத துவங்கினார். இதற்கு முன்பே இவரது கதைகள் விகடன் உள்ளிட்ட பல புத்தகங்களில் வந்துள்ளன. ரிஷபன், ரவி பிரகாஷ், சத்ய ராஜ் குமார், கே.பி.ஜனா, புதுவை சந்திர ஹரி போன்ற சிறு கதை எழுத்தாளர்கள் இவரது நண்பர்கள். (முழு லிஸ்ட் தர வில்லை. மன்னிக்க.) கவிதை, கதை, கட்டுரை என பல பாணிகளிலும் சரளமாக தனது 2 blogs-ல் எழுதி வருகிறார். வெங்கட் நாக ராஜ் உள்ளிட்ட இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்து பல யோசனைகள் சொல்லி வருகிறார்.

அவரது Blog address-ம் அதில் எனக்கு பிடித்த கவிதை ஒன்றும்

http://rekharaghavan.blogspot.com/

http://anbesivam2009.blogspot.com/


மிச்சம்

வீட்டை பாகம் போட்டு
பிரித்துக் கொடுத்தவருக்கு
கடைசியில் கிடைத்தது
வீட்டுத் திண்ணையில் வாசம்.

- ரேகா ராகவன்


நிற்க. இவருடன் எனக்கு நிகழ்ந்த incident-க்கு வருவோம்.


இவருக்கு முதலில் நான் ஒரு மின் அஞ்சல் அனுப்பினேன். அடுத்த சில மணிகளில் எனக்கு தொலை பேசினார். பரஸ்பர அறிமுகம் முடிந்ததும் நேரே மேட்டருக்கு வந்து விட்டார். எங்களது முதல் தொலைபேசி உரையாடலை கேளுங்க:


" உங்க blog-நிறைய மாத்தனும். போட்டோ கூட போடாம வச்சிருக்கீங்க. இப்படி எல்லாம் இருந்தா படிக்க இன்டரஸ்டா இருக்காது. முதல்ல போட்டோ போட கத்துக்குங்க!!". எப்படி போட்டோ போடுவது என உடனே சொல்லி தந்தார். பின் "என்னங்க நீங்க தமிழிஷில் இன்னுமா blog ஐ சேக்கல? " என்றார். "தமிழிஷா? அப்படின்னா?" என்றேன். நேரில் இருந்தால் ரெண்டு குடுத்திருப்பார் என நினைக்கிறேன். :) லைனிலேயே வைத்து கொண்டு தமிழிஷில் எப்படி இணைப்பது என்று சொன்னார். அவரும் அந்த பக்கம் online-ல் பார்த்து இணைத்தது கண்டு தான் நிம்மதி ஆனார்.

" ஹிட் கவுன்ட்டர் போடலை. கிளாக் வைக்கலை. என்ன பண்றீங்க நீங்க" என ஒவ்வொன்றாய் சொன்னார். நேரில் இருந்தால் மவுசும் கி போர்டும் என்னிடமிருந்து வாங்கி தானே செய்து முடித்திருப்பார் என நினைக்கிறேன். HTML -ல் எப்படி விளையாடலாம், அதன் பயன் என்ன என்று சொன்னார். நமக்கு இந்த ஹிட் கவுன்ட்டர் மட்டும் போடவே தெரியலை. (அதன் பின் பல முறை பேசும் போதெல்லாம் "என்ன ஹிட் கவுன்ட்டர் போடலை?" என சொல்லி கொண்டே இருந்தார்). இன்று தான் நம்ம அதி பிரதாபன் அந்த வேலையை செய்து தந்தார்.


"இது வரை உங்க க்ளோஸ் பிரண்ட்ஸ் தான் படிச்சாங்க. இப்போ தமிழிஷில் சேத்துட்டீங்க இல்ல? என்ன ஆகுதுன்னு பாருங்க" என்றார். உடனே அடுத்த மேட்டருக்கு வந்தார். " சர்வேசன் கதை போட்டியில கலந்துக்குங்க. இன்னும் மூனு நாள் தான் இருக்கு. உடனே எழுதி அனுப்புங்க" என்றார். அந்த 15 நிமிடங்களில் நான் அதிகம் பேசியது "சரி சார்" தான்.

அவரது நண்பர்கள் மின் அஞ்சல் முகவரி எல்லாம் தந்து தான் எப்படி அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் பதிவு வந்ததும் தெரிய படுத்துவேன் என மாதிரி மெயிலும் அனுப்பினார்.

நீங்கள் ஒன்றை கவனித்தீர்களா? இது அனைத்தும் அவருடன் நான் பேசிய முதல் Telephone call-ல் நிகழ்ந்தது !


அதன் பின் பல நாட்கள் தினம் ஒரு முறையாவது பேசுவோம். தனது பையன் திருமண வேலையாக வெளியூர் சென்றவர் அங்கிருந்து call செய்து, "நான் மெயிலே பார்க்கலை. உங்க கதைக்கு எத்தனை ஓட்டு விழுந்தது?" என்று நியாபகமாக கேட்டார். நான் குழந்தையின் குதுகலத்துடன் " சார் பத்து ஓட்டுக்கு மேலே விழுந்துடுச்சு " என்றேன். " Very Good. 9 -க்கு மேலே விழுந்தா தான் Popular article- ஆகும்" என திருப்தி ஆனார்.


" எல்லாரோடதும் படிக்கணும். எல்லாருக்கும் ஓட்டு போடணும்" என சொல்லி தந்தார். இன்று வரை நான் படிப்பதில் பெரும்பாலானவற்றிற்கு ஓட்டு போட்டு வருகிறேன். ரொம்ப controversial matters தவிர. (பின்ன நமக்குன்னு ஒரு image இருக்குல்ல; அது கெட்டு போக கூடாதுல்ல:) )


நமது படைப்புகள் படித்து விட்டு மிக encourage -செய்து பதிவிடுவார். யூத் விகடனில் வந்த கவிதைகள் வாசித்து விட்டு " ஆறு கவிதையும் அழகாய் தர வேறு யாரால் முடியும்" என comment போட்டு எனக்கே அதிர்ச்சி ஊட்டினார்.

எனது அலுவலக நண்பரிடம் ரேகா ராகவன் பற்றி சொன்னேன். உடனே ஒரு அழகான கருத்தை சொன்னார். " நீங்க ஒரு நாளைக்கு 10 மணி நேரம் computer-ல் இருக்கிறவர். உங்களுக்கு தெரியாததை கவர்மேண்டில் இருந்து ரிட்டையர் ஆனவர் சொல்லி தரார் பாருங்க. ரொம்ப net savvy -ஆ இருக்காரே! ஆச்சரியம் தான்" என்றார். உண்மையான மதிப்பீடு இது! எனக்கு தெரிந்து கவர்மேண்டில் வயதான பலர் இன்னும் கணினி பற்றி தெரியாமல் இருக்கிறார்கள்.

அவரது blog-ஒரு முறை பாருங்கள். தினம் ஒரு மிக நல்ல saying போடுகிறார். தற்சமயம் பையன் திருமண வேலைகளில் ரொம்ப busy -ஆக உள்ளார். அவரது பழைய பதிவுகள் படித்து பாருங்கள். குறிப்பாக விகடன் போன்றவற்றில் வெளியான அவரது கதைகள்.

ராகவன் சார்.. உங்களோட சேவை தமிழ் நாட்டுக்கு தேவை ; நிறைய எழுதுங்க. இன்னும் நிறைய பேரை உருவாக்குங்க.

ராகவன் பற்றி அறிந்த அவரது நண்பர்கள், அவரை பற்றி மேலும் சுவாரஸ்யமான தகவல் பின்னூட்டத்தில் தந்தால் மிகவும் மகிழ்வோம்.


அடுத்த வாரம்: பா. ரா

ராகவன் சாருக்காக ஒரு வோட்டு எனக்காக ஒரு வோட்டு போடுங்கள் பார்க்கலாம்...

Tuesday, November 17, 2009

முயற்சி



முயற்சி

குரங்கு பெடலில்
சைக்கிள் ஒட்டியும்
முட்டி தேய விழுந்து
ரத்தம் பார்த்திருக்கிறேன்.

நீந்த தெரியாமல்
தண்ணீர் குடித்து
நீருள் வீசிய அண்ணனை
ஏசியிருக்கிறேன்..

தேர்வுக்கு
முந்தைய வாரத்தில்
தலையணை நனைய
பயந்து அழுதிருக்கிறேன்..

பிரச்னைகள்
விஸ்வரூபம் எடுக்கையில் எல்லாம்
விக்கித்து நின்றிருக்கிறேன்..

என்றாலும் கூட
நான் நீந்துகிறேன்..
தேர்வுகளை வெல்கிறேன்

முயற்சி தரும் சுகத்தில்
லயித்து வாழ்கிறேன்...

*

சமத்துவம்

கணவனை இழந்த
அடுத்த வீட்டு சிவகாமி
பத்தாம் நாள்
பூவும் போட்டும் விடுத்து
திரு நீறு அணிந்தாள்...

மனைவியை இழந்த
எதிர் வீட்டு முருகையன்
மூணாம் மாசம்
துக்கமெல்லாம் தலை முழுகி
பட்டு வேட்டி அணிந்தான்...

*

முன்னேற்றம்

வேக வேகமாய் போனால் தான்
முன்னே போக முடியும்...

முன்னே போன சந்தோஷம்
மனசுள் இருந்தாலும்
புற்கள் மிதி பட்ட வருத்தம் மட்டும்
நெருடலாக நினைவினிலே...

*
புரிதல்

ஒன்றன்
அருகில் உள்ள போதல்ல
ஒன்றை விட்டு
தூரமான பின்பே
ஒன்றைப் புரிய முடியும் !
*

வேலை

படிக்கட்டுகள்...
புன்சிரிப்புகள்...
அலைக்கழிப்புகள்...
நிராகரிப்புகள்...
எனினும்
என்னுள் உண்டு
நம்பிக்கை...

*

நேயம்

எல்லோருக்கும் தர
என்ன உண்டு என்னிடம்
புன்னகை தவிர...

*
குறிப்பு: இந்த கவிதைகள் யூத் விகடனில் நேற்று பிரசுரம் ஆனது. தற்சமயம் யூத் விகடனில் முகப்பு பக்கத்தில் ( Front page) இணைக்கப்பட்டுள்ளது.

Link: http://youthful.vikatan.com/youth/Nyouth/mohankumar16112009.asp

கவிதைகளில் ஏதேனும் ஒன்று பிடித்தாலும் தமிழிசில் ஓட்டு போடுங்க.. நன்றி..

Wednesday, November 11, 2009

அடுத்த வீட்டு பெண் -'சர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009'


தெருவில் நுழையும் போதே மக்கள் ஆங்காங்கு நின்று பேசியவாறு இருந்தனர். ஏதோ வித்யாசமாய் உணர்ந்தேன். வண்டியை நிறுத்தி விட்டு அருகில் சென்றேன்.

" வித்யா தீ வச்சுகிட்டா சார் !" அதிர்ந்தேன்.

வித்யா என் பக்கத்து வீட்டு பெண். கல்யாணமாகி ஏழு வருடமாகிறது. ஒரு பெண் பள்ளியில் படிக்கிறாள்.

"இப்போ வித்யா ?"

"ஆஸ்பத்திரிலே இருக்கா "

"அவங்க அம்மா அப்பாவுக்கு சொல்லியாச்சா?'

"வந்துட்டாங்க... வீட்டுக்குள்ளே போலீஸ் இருக்காங்க. நாங்க உள்ளே போகலை. நீங்க வக்கீல்னு சொல்லிட்டு கொஞ்சம் போலீசில் பேசி பாருங்க. "

நான் அவள் வீட்டுக்குள் நுழைந்தேன். போலீஸ் அதிகாரியிடம் என்னை அறிமுகப்படுத்தி கொண்டேன். அவர் என்னிடம் விசாரிக்க தொடங்கினார்.

"அடிக்கடி சண்டை வருமா சார்?"

"ஆமாம். வழக்கமா உள்ளது தான்"

" அவங்க ஹஸ்பண்ட் குடிப்பாரா?"

தயங்கினேன். "சும்மா சொல்லுங்க"

"ஆமாம். அதனால் தான் பல நேரம் சண்டை"

"ம்ம்..நான் இப்ப ஹாஸ்பிட்டல் போறேன். நீங்க வர்றீங்களா?'

"சரி.. வீட்டில் சொல்லிட்டு வந்துடுறேன்".

வழியில் சப் இன்ஸ்பெக்டர் பொதுவான சில விஷயமும் வித்யா பற்றியும் பேசி கொண்டிருந்தார். வித்யா, கணவனிடம் பட்ட கஷ்டங்களை எனக்கு தெரிந்த வரை சொல்லி கொண்டிருந்தேன்.

"சில நாள் குடி போதையில் தெருவிலயே விழுந்து கிடப்பார். பல நேரம் அவர் அடிச்சு வித்யா, பொண்ணு ரெண்டு பேருக்கும் காயம் ஆயிருக்கு"

"வாரத்துக்கு ரெண்டு கேசாவது பாக்கிறோம் சார். அநேகமா ஒன்னு புருஷன் பொண்டாட்டி சண்டை.. இல்லாட்டி மாமியார் நாத்தனார் கொடுமை..அந்த பொண்ணோட புருஷன் நம்பர் இருக்கா? "

"இல்லை சார்"

" பாருங்க.. பக்கத்துக்கு வீட்டு காரங்க நம்பர் கூட இல்லாம வாழ்றோம்".

மருத்துவ மனை வந்து விட்டது. வித்யா பெற்றோர் கதறியவாறு இருந்தனர். என்னை பார்த்ததும் அழுகை அதிகமானது. "நீங்க எல்லாம் இருக்கீங்கன்னு இருந்தோமே!! அந்த சண்டாள பாவி தான் இப்படி பண்ணிட்டான். பணம் வேணும்ன்னு கேட்டுருக்கான். இவள் பீஸ் கட்டணும்னு தரலை. எரிச்சுட்டான் படு பாவி"

"உங்க மருமகன் எங்கே?"

" தெரியலே சார். போன் பண்ணா சுவிட்ச் ஆப்-ன்னு வருது".

" அநேகமா அந்த ஆள் வேலையா தான் இருக்கும். ... உங்க பொண்ணு ஏதாவது பேசினாளா? "

"உள்ளே விடலை சார்"

சப் இன்ஸ்பெக்டர் எங்களை உள்ளே அழைத்து போனார். தீ காயம் அதிகம் என்றும் பிழைப்பது கடினம் என்றும் தெரிய வந்தது.

வித்யாவை அந்த நிலையில் பார்ப்பது கொடுமையாக இருந்தது. கழுத்துக்கு கீழ் அநேகமாய் எரிந்திருந்தது.

சப் இன்ஸ்பெக்டர் குனிந்து மெல்ல பேசினார். "ஏம்மா.. எப்படி நடந்தது?"

வித்யா ஏதும் பேசலை. விழித்து எங்களை பார்க்க முயற்சித்தாள்.

"சொல்லும்மா.. அந்த படு பாவி தானே.. சொல்லு...அந்த சண்டாளன் தான்னு சொல்லு;"

வித்யா முதலும் கடைசியுமாய் மெல்ல முனகினாள். "அவுக தான்.. அவுக தான்.. அவுக தான்.. "
Related Posts Plugin for WordPress, Blogger...