Thursday, March 31, 2011

கிரிக்கெட் கேரக்டர்கள்: ராஜு & பட்டப்பா

தொடர்ந்து கிரிக்கெட் மேட்ச்களே எழுதி வந்ததால், சற்று மாறாக இம்முறை எங்களுடன் விளையாடிய இரு சுவாரஸ்ய கேரக்டர்கள்:

ராஜு 

ராஜு எங்கள் ஊர் கிரிக்கெட் டீமில் மிக முக்கிய பவுலர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவன். எங்கள் கிரவண்டுக்கு அருகிலேயே இருக்கும் காவேரி தியேட்டரில் இடைவேளையின் போது முறுக்கு, கடலை மிட்டாய் விற்பான்.

ராஜு பத்து பன்னிரண்டு அடிகள் தான் ஓடி வந்து வீசுவான். ஆனால் பந்து மிக வேகமாக சரியாக விக்கெட் நோக்கி வரும். எந்த பந்தை தவற விட்டாலும் நிச்சயம் க்ளீன் பவுல்ட் தான்.

எங்கள் கிரவுண்டின் ஆப் மற்றும் லெக் சைட் இரண்டிலுமே நாங்கள் அடித்து ஆடுவதில் சிரமம் இருந்தது. வலப்பக்கம் ஒரு குளம் இருக்கும். இடப்பக்கமோ அரசு ஆஸ்பத்திரி. வலப்பக்கம் அடித்தாலாவது குளத்திலிருந்து போய் எடுத்து வந்து விடலாம். இடப்பக்கம் எனில் ஆஸ்பத்திரி ஆயிற்றே!  முடிந்த வரை இடப்பக்கம் ஷாட் அடிக்காமல் தான் ஆடுவோம். நான்கு மற்றும் ஆறு ரன்கள் நேரே ( ஸ்டிரைட் ஷாட்) அடித்தால் தான் உண்டு. இதனால் எங்கள் ஊரில் பலரும் லெக் சைடில் சற்றே வீக் தான். இதை அறிந்த ராஜு மிக சரியாக பந்தை காலுக்கு அருகே இறக்குவான். பந்து காலில் படாமல் காலை நகர்த்தினால் ஸ்டம்ப் எகிறும்.

ஒரு முறை ராஜு போட்ட பந்து என் காலை நன்கு பதம் பார்த்து விட்டது. நாங்கள் ஆடுவது கார்க் பந்து. கல் போல இருக்கும். கால் நன்கு வீங்கி விட்டது. தஞ்சை சென்று டாக்டரிடம் காட்ட,  ஆபரேஷன் செய்யணும் என்று கூறி விட்டார் ! எங்கள் ஊரில் உள்ள பழனி செல்வம் என்ற அருமையான டாக்டர் மிக சாதாரணமாக வீக்கத்தை முழுவதும் கீறி எடுத்து, கட்டு போட்டு சரி செய்து என் வேதனையை முடித்தார். " ஆபரேஷன்...ஆயிரக்கணக்கில் செலவு" என பயந்த எங்களுக்கு, பத்து ரூபாயில், ஐந்து நிமிடத்தில் வைத்தியம் முடிந்து விட்டது ! இன்னமும் அந்த பெரிய தழும்பு ராஜுவையும், பழனி செல்வம் டாக்டரையும் நினைவு படுத்தும் விதமாய் என்னுடன் உள்ளது.

எங்கள் ஊரில் சரியான மைதானம் இல்லாததால் அம்மாபேட்டை அல்லது மன்னார்குடி சென்று தான் மேட்ச் ஆடுவோம். மேட்ச் விளையாட பேருந்து அல்லது ரயில் என எதில் சென்றாலும், செல்லும் பதினோரு பேரில் நான்கைந்து பேர் தான் டிக்கெட் எடுப்பார்கள். மற்றவர்கள் ஓசி தான் !! பஸ் என்றாலாவது சற்று மதித்து,   நான்கைந்து பேர் டிக்கெட் வாங்குவர். ரயில் எனில் சுத்த மோசம். என்னை போன்ற ஒரு சில பயந்தாங்கொள்ளி தான் டிக்கெட் எடுப்பார்கள். பெரும்பாலான நண்பர்கள் எடுக்க மாட்டார்கள். ரயில் என்பது அரசு நமக்காக விட்ட இலவச வாகனம் என்பது அனைவரின் கருத்தாக இருந்தது.

ஒரு முறை ரயிலில் டிக்கெட் செக்கர் வந்து விட்டார். வழக்கமாய் நாம் செல்லும் ரயில்களில் உள்ளது போல் ஒரு கம்பார்ட்மென்ட்டிலிருந்து அடுத்ததற்கு நேரே உள் வழியே செல்ல முடியாது. டிக்கெட் எடுக்காத ராஜு அடுத்த கம்பார்ட்மென்ட்டுக்கு, ஓடும் ரயிலின் வெளிப்புறம் வழியாக கம்பியை பிடித்தவாறே ஊர்ந்து , ஊர்ந்து சென்றான். இது பெரிய ஹீரோயிச வேலை போல் நாங்கள் ஆச்சரியமாக பார்த்தோம்.

மிக ஏழ்மையில் பிறந்த, முறுக்கு விற்ற, ரயிலில் டிக்கெட் எடுக்காத ராஜு இப்போது ?? போலிசாக உள்ளான் !!

பட்டப்பா

பட்டப்பா ஒரு சுவாரஸ்யமான மனிதர். எங்களை விட மிக சீனியர். எங்கள் அண்ணன் செட். ஒல்லியாக உயரமாக இருப்பார். வெள்ளை நிறம். பார்ப்பதற்கு கோபக்காரர் போல் தெரியும். பவுலிங் போடும் போது முகத்தை மிகவும் மாற்றி கொண்டு, பல்லை கடித்தவாறு பயமுறுத்துவது போல் வந்து வீசுவார். பார்க்கும் எங்களுக்கு குச்சி எகிறும் அல்லது பாட்ஸ்மென் செத்தான் என்று தோன்றும். ஆனால் சீனியர் டீமில் உள்ள எல்லாரும் அவரை மிக சாதாரணமாக ஆடுவார்கள். ஆச்சரியமாக இருக்கும்.

பட்டப்பா மிலிடரியில் வேலை பார்த்தார். பின் அதிலிருந்து சொல்லாமலே வந்து விட்டார். இப்படி பாதியில் வர கூடாது என்றும், அவ்வாறு வந்ததால், அவரை கைது கூட செய்யலாம் என்றும் பேசி கொள்வார்கள். இது பற்றி கவலை படாமல் பட்டப்பா கிரிக்கெட் ஆடி வந்தார். அப்போதெல்லாம் சொல்லுவார். " மெட்ராஸ், டில்லி மாதிரி பெரிய ஊர்ல உள்ளவங்க நல்லா பேட்டிங் பண்ணுவானுங்க. ஆனா நம்ம மாதிரி இன்டீரியர் ஊர்லதான் நல்ல பவுலர்கள் கிடைப்பாங்க ! " யோசித்து பார்த்தால் இது சரி என்றே தோன்றுகிறது.

மிலிடரியிலிருந்து வந்த பின் பட்டப்பா எந்த வேலைக்கும் போகாமல் ஊரில் சும்மாவே சுற்றி வந்தார். " சும்மா இருப்பது" ஒரு மனிதனை எப்படியெல்லாம் அழிக்கும் என கண் முன்னே பார்த்தோம். குடி பழக்கம் வந்தது. மிக டீசன்ட் ஆக அறியப்பட்ட மனிதர், தெருக்களில் சும்மாவே சுற்றி வருவதோடு, யாரிடமாவது அனாவசியமாய் சண்டை வளர்த்தார். அனைவரும் அவரை தவிர்க்க ஆரம்பித்தனர். அவருக்கு மன நிலை சரியில்லை என்றும், யார் யாரிடம் என்னென்ன பிரச்சனை செய்தார் என்றும் பல விதமாய் கதைகள்..

எங்கள் மருந்து கடையில் நான் இருக்கும் போது பட்டப்பா ரோடில் சென்றால், மேலே ஏறி வந்து என்னிடம் பேசி விட கூடாதே என்று பயமாய் இருக்கும். சில நேரம் நான் இருக்கும் போது கடைக்கு வந்து சம்பந்தமில்லாமல் பேசி, சத்தமாய் சிரித்து செல்வார். சிறிது சிறிதாக ஒரு மனிதன் வீழ்வதை நாங்கள் பார்த்து கொண்டிருந்தோம்.

கல்லூரியில் படித்த போது, விடுமுறையில் ஊருக்கு சென்றேன். என் நண்பன் மது என்னை பார்த்ததும் முதலில் சொன்னான் " டேய் பட்டப்பா இறந்திட்டாருடா !!"

மனது மிக வலித்தது. செய்தியை உள் வாங்க ரொம்ப நேரம் ஆனது. குடியாலும், மன நிலை பாதிக்கப்பட்டதாலும் அவர் மரணம் நிகழ்ந்தது. அப்போது அவருக்கு முப்பத்தைந்து வயது இருந்திருக்கலாம் ! அவரை பார்க்கும் போதெல்லாம் பயந்த நாங்கள், அவர் மரணத்திற்காக ஏன் மிகவும் வருந்தினோம் ? விடை தெரிய வில்லை !!

                                                                                                      (கிரிக்கெட் சீரீஸ் முற்றும்...)

Tuesday, March 29, 2011

வைரமுத்துவின் "1000 பாடல்கள்" விமர்சனம்

28.3.2011 தேதியிட்ட உயிரோசை இதழில் பிரசுரமான நூல் விமர்சனம்...
****
விஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள "ஆயிரம் பாடல்கள்" தொகுப்பை சமீபத்தில் வாசித்தேன். 1200 பக்கங்களில் மிக கனமான ஒரு தொகுப்பு!

நிழல்கள் துவங்கி எந்திரன் வரை என அட்டையில் சொல்லப்பட்டாலும், அதையும் தாண்டி இன்னும் வெளி வராத களவாடிய பொழுதுகள் வரை தேர்ந்தெடுக்கப்பட்ட திரை இசை பாடல்கள் இந்த தொகுப்பில் உள்ளன.

கலைஞர் முன்னுரையில் பழைய கவிஞர்களில் சிலரை பற்றி நிறையவே சொல்லி விட்டு, பின் வைரமுத்துவை புகழ்கிறார். இதனையடுத்து வைரமுத்து தன் முன்னுரையில் இளைய ராஜாவுடன் வந்த பிரிவிற்கு தன் அறியாமையே காரணம் என்கிறார் " அதிகப்படியான சுய மரியாதையும் ஒரு வித அறியாமையே !!" தொகுப்பின் இறுதியில் பொருளடக்கம் (படங்கள்/ பாடல்கள் வாரியாக) அகர வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு படத்தின் இயக்குனர் மற்றும் இசை அமைப்பாளர் பெயரும் பாடல்களுடன் சேர்த்து பதிவு செய்தது நம்மை மலரும் நினைவுகளுக்கு இட்டு செல்கிறது.

முதல் பக்கத்திலும் பின் பாடல்கள் இடையேயும் வைரமுத்து வாங்கிய ஐந்து தேசிய விருதுகளும் குறிப்பிடபட்டுள்ளது. தமிழன் என்கிற முறையில் நாம் நிச்சயம் பெருமை கொள்ளலாம். எனினும் முதலாவது விருது " அந்த நிலாவை தான் நான் கையிலே பிடிச்சேன்" பாடலுக்கு என்பது ஆச்சரியப்படுத்துகிறது. அந்த பாடல் இடம் பெற்ற முதல் மரியாதையிலேயே " பூங்காத்து திரும்புமா?" உள்ளிட்ட பல அர்த்தமுள்ள பாடல்கள் இருந்தன. அதே வருடம் வந்த சிந்து பைரவியில் வைரமுத்து எழுதிய எத்தனை பாடல்கள் அற்புதமானவை! இவற்றை விடுத்து, விடலை காதல் கிலுகிலுப்பை சொன்ன "அந்த நிலாவை தான்" பாடல் முதல் விருதை பெற்று தந்துள்ளது ! இரண்டாவது மற்றும் மூன்றாம் விருதுகள் "சின்ன சின்ன ஆசை" (ரோஜா) மற்றும் போறாளே பொன்னுதாயி (கருத்தம்மா) ஆகியவற்றிற்காக கிடைத்துள்ளது. நான்காவது விருது சங்கமம் படத்தில் வரும் " முதல் முறை கிள்ளி பார்த்தேன்" பாடலுக்கு !! ம்ம் ஒன்னும் சொல்றதுக்கு இல்லை! ஐந்தாவது முறை " தெய்வம் தந்த பூவே" (கன்னத்தில் முத்தமிட்டால்") என்ற அற்புதமான பாட்டிற்காக !!

ஒவ்வொரு பாடலிலும் அந்த பாடல் பற்றியோ, அது எழுதும் போது நிகழ்ந்த சம்பவமோ மிக சுருக்கமாய் சொல்லப்பட்டுள்ளது.

இவர் எழுதிய முதல் பாடல் "இது ஒரு பொன் மாலை பொழுது" என நாம் அறிந்தாலும், இவர் எழுதி வெளி வந்த முதல் பாடல் ரஜினி நடித்த காளியில் "பத்ரகாளி" என்கிற தகவல் ஆச்சரியம் தருகிறது. நாத்திக வாதியான வைரமுத்து எழுதி வெளியான முதல் பாடல் கடவுள் பற்றி !!

மணிரத்னத்துடன் இவருக்கு உள்ள நெருக்கமும், புரிதலும் பல சம்பவங்களில் தெரிய வருகிறது. ஒரு முறை சாதாரணமாய் பேசி கொண்டிருக்கும் போது " காதலுக்கு நிறமுண்டா?" என்று மணிரத்னம் கேட்க அதிலிருந்து பிறந்த பாடல் தான் "பச்சை நிறமே..பச்சை நிறமே" என்கிறார். பம்பாய் படத்தில் "பூவுக்கென்ன பூட்டு" பாடல் எழுதிய சம்பவமும் சுவாரஸ்யம். வேறு படத்திற்கு பாடல் எழுத அவர் வழக்கமாய் செல்லும் நாகேஸ்வர ராவ் பூங்காவில் இருக்கும் போது மணி ரத்னம் அங்கேயே வந்து அவரை பிடித்து எழுதிய பாடலை நிறுத்தி விட்டு நடுவில் எழுதி வாங்கி போனதாக சொல்கிறார்.
மிக குறைந்த நேரத்தில் (எட்டே நிமிடங்கள்) எழுதப்பட்ட பாடல் பாஷா படத்தில் எழுதப்பட்ட " ரா ரா ராமையா" !என்கிறார். அடேங்கப்பா. ..அந்த பாடல் இன்றைக்கும் பலராலும் எளிமையான தத்துவங்களுக்காக நினைவு கூறப்படுகிறது. அந்த பாடலை எட்டு நிமிடத்தில் எழுதினர் என்பது ஆச்சரியம் தருகிறது.

மனைவி ஊருக்கு போய் விட்டால், அவள் புடவையை தலைக்கு வைத்துக்கொண்டு படுத்தால் தான் தூக்கம் வருகிறது என்று சொன்னாராம் ஒரு நண்பர். அதனை வைத்தே " சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு" பாடல் எழுதினாராம் !

திருடா திருடா படத்தில் இடம் பெற்ற " ராசாத்தி என் உசுரு என்னுதில்ல" பாடல் கேட்டு விட்டு " இந்த பாடல் எனக்கல்லவா எழுதபட்டிருக்க வேண்டும்" என செல்ல சண்டை போட்டாராம் பாரதி ராஜா !

வைரமுத்துவின் கவிதை தொகுப்பிலிருந்த பல பாடல்கள் சினிமாவில் எடுத்து கையாள பட்டுள்ளது. குறிப்பாக " யாக்கை திரி" "மூங்கில் காடுகளே" போன்றவை கவிதையாக இருந்து பின் பாடலானவை.

1980-ல் நிழல்களில் துவங்கி 1987-ல் காதல் பரிசு வரை இளையராஜா இசையில் எழுதி உள்ளார். இளையராஜா வை பிரிந்து, ரகுமான் 1992-ல் வரும் வரை இவர் நிலை சற்று சிரமமாகவே இருந்திருப்பதை உணர முடிகிறது. அவரே முன்னுரையில் இந்த காலத்தை பற்றி " என் பாடல்கள் இந்த காலத்தில் சரியான நபர் இன்றி தவித்தது" என்கிறார் (ம்ம் அந்த காலத்தில் அவரை ஆதரித்தவர் சந்திரபோஸ். அன்புள்ள அப்பா வெளிவந்த போது, வைரமுத்து " தமிழின் சிறந்த இசை அமைப்பாளர் என்றால் அது சந்திரபோஸ் தான்" என்கிற ரீதியில் பேசியதை அவர் மறந்திருக்கலாம். நான் மறக்கவில்லை).

தான் இயக்கிய அனைத்து படங்களிலும் தன்னை பயன்படுத்திய ஒரே இயக்குனர் என "சரண்" பற்றி கூறுகிறார். வைரமுத்து கொடைக்கானலிலும், ரகுமான் லண்டனிலும் இருந்தவாறு தொலை பேசியிலேயே எழுதபட்ட பாடல் "பாபா கிச்சு கிச்சு தான்" என நினைவு கூறுகிறார்.

இலங்கை தமிழர் படுகொலை பற்றி "விடை கொடு எங்கள் நாடே" மற்றும் "வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே" என கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இரு பாடல்கள் எழுதியது பற்றி நெகிழ்வாய் பகிர்கிறார்.

பாடல் வரிகளில் எளிமை தான் நம்மை மிகவும் கவர்கிறது. பம்பாய் படத்தில் "கண்ணாளனே" பாடலில் "உன்னை பார்த்தெந்தன் தாய் மொழி மறந்தேன்".. எப்போது கேட்டாலும் நான் வியக்கும் வரி இது. உருதுவை வீட்டில் பேசும் அந்த முஸ்லீம் பெண் காதலை எப்படி சொல்கிறாள்.. இந்த வரியில்..!! கதையின் ஆணி வேரையே இந்த வரியில் தொட்டு விடுகிறார் வைரமுத்து.

பாடல்களில் மிக பெரிய பாடலாக " சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்" இருக்க, பல பாடல்கள் மிக சிறிய பாடல்களாக புத்தகத்தில் பார்க்கும் போது தெரிகிறது. உதாரணமாய் மிக புகழ் பெற்ற "மேகமே மேகமே " பாடல் (பாலைவனச்சோலை) பத்து வரிகளும், 36 வார்த்தைகளும் மட்டுமே கொண்டுள்ளது. இது போல பல பாடல்களும் பத்து வரி பாடல்களாக உள்ளன. இசை உடன் கேட்கும் போது நமக்கு அது பெரிய பாடலாக தெரிகிறது போலும்.

மேலும் தொலை காட்சி சீரியல்களுக்கு இவர் எழுதிய பாடல்களும், தனி தொகுப்பிற்கு இவர் எழுதிய பாடல்களும் கூட இந்த தொகுப்பில் உள்ளது.

நிற்க. முக்கியமான சமாச்சாரத்திற்கு வருவோம். புத்தக விலை என்ன தெரியுமா? 600 ரூபாய் ! நீங்கள் தீவிர சினிமா பாடல்கள் ரசிகனாகவோ அல்லது வைரமுத்து பிரியராகவோ இருந்தாலொழிய இவ்வளவு விலை கொடுத்து வாங்குவது சற்று சிரமமே. இந்த இரண்டு கேட்டகரியில் நீங்கள் வராவிடினும், இந்த புத்தகத்தை நீங்கள் வாசிக்கலாம்.... உங்கள் நண்பர்கள் யாரும் அதை வாங்கியிருந்தால்..

நான் அப்படி தான் வாசித்தேன். !!

Monday, March 28, 2011

அம்மாபேட்டை கிரிக்கெட் டோர்னமெண்ட்

தஞ்சாவூருக்கருகே உள்ளது அம்மா பேட்டை. இதன் அருகில் உள்ள உக்கடை என்ற ஊரின் கிரிக்கெட் டீம் தொடர்ந்து அம்மா பேட்டையில் கிரிக்கெட் டோர்னமென்ட் நடத்தி வந்தனர். அப்படி ஒரு டோர்னமென்ட் பற்றி தான் இந்த பதிவு. 

எங்கள் சீனியர் டீமில் உள்ள எல்லோரும் வேலை கிடைத்து வெவ்வேறு ஊருக்கு சென்று விட, என் வயதை ஒத்தவர்கள் தான் டீமில் இருந்தனர். எங்கள் டீமில் சிலரை அறிமுக படுத்துகிறேன்:

ரவி: ரவி தான் ஓபனிங் பேட்ஸ்மன். தன்னை "கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்" என சொல்லி கொள்வான். பாஸ்ட் பவுலிங்கை உரித்து எடுப்பான். ஆப் சைடில் ரொம்ப அருமையாக ஆடுவான். இந்த இரண்டு ப்ளஸ்களால் எல்லா அணியும் ரவியை மிகவும் மதிப்பார்கள். ஆனால் ரவிக்கு உள்ள வீக்னெஸ் எங்களுக்கு தான் தெரியும். எப்படி ஆப் சைடில் ஸ்டிராங்கோ அதற்கு நேர் எதிராய் லெக் சைடில் செம வீக். இதை கூட போக போக கொஞ்சம் சரி செய்து கொண்டு, லெக்சைடில் பந்து வந்தால் சிங்கிள் எடுக்க கற்று கொண்டான். அடுத்த வீக்னெஸ் மெதுவாக பந்து வீசினால் உடனடியாக அவுட் ஆகி விடுவான். அவன் கூட பிறந்த ட்வின் சகோதரனான ராமு மிக சாதாரண பவுலர். ஆனால் ராமு பந்து போட்டால் ரவி " போங்கடா.. இவன் எல்லாம் பந்து போட்டா ஆட மாட்டேன்" என்று கத்துவான். காரணம் ராமு நின்று நிதாரணமாய் ஸ்டம்ப் நோக்கி போட்டால் உடனடியாக ரவி பவுல்ட் ஆகி விடுவான். ஆனால் ரவி ஓபனிங் என்பதால் வேக பந்து வீச்சை மட்டுமே சந்தித்து வெளுத்து கட்டினான். இந்த டோர்னமெண்டில் எங்கள் அணியில் மட்டுமல்ல அனைத்து டீம்களிலும் அதிக ரன் எடுத்தது ரவி தான் !

பாபு: ரவியுடன் சேர்ந்து ஆடும் மற்றொரு ஓபனிங் பேட்ஸ்மன். பொறுமையாய் ஆடி ரவிக்கு நிறைய ஸ்டிரைக் தந்து விடுவான். மேலும் இந்த டோர்னமெண்ட்டில் பாபு ஓபனிங் பவுலிங்கும் போட்டான் !! அவன் வேக பந்து வீச்சாளனும் கிடையாது, ஸ்பின்னும் இல்லை. எதோ ஒரு சென்டிமெண்டில் அவனை தொடர்ந்து ஓபனிங் பவுலிங் போட வைத்தனர்.

பிரபா: இவன் தான் டீம் கேப்டன். உள்ளூரில் எங்களுக்குள் டீம் பிரித்து ஆடும் போது கூட கேப்டன் ஆக இல்லாத பிரபா எப்படி டோர்னமென்ட் ஆடும்போது கேப்டன் ஆனான் என்பது ஒரு புதிரே. பிரபா ஒரு பவுலர். ஆப் கட்டர் பந்து வீசுவான். இந்த டோர்னமெண்டில் எங்கள் அணிக்காக அதிக விக்கட்டுகள் எடுத்தது இவன் தான். ஒரு மேட்சுக்கும் அடுத்த மேட்சுக்கும் இடையில் உள்ளூரில் ஆடும் போது பொடியன்கள் கூட இவன் பவுலிங்கை அடித்து நாசம் செய்வார்கள். ஆனால் வெளியூரில் இவன் ஆப் கட்டர்கள் புரியாமல் அவுட் ஆகி கொண்டே இருந்தனர்.

சரி டோர்ணமண்டிற்கு வருவோம். லீக் ஆட்டத்தில் எங்கள் அணி தொடர்ந்து நன்கு ஆடி அசத்தியது. மற்ற அணிகள் டாஸ் ஜெயித்தால் பேட்டிங் எடுப்பார்கள். நாங்களோ பவுலிங் எடுப்போம். எதிர் அணியை குறைந்த ரன்களுக்கு அவுட் ஆக்கி விட்டு. அந்த ரன்களை எளிதில் அடித்து ஜெயிப்பதே எங்கள் வழக்கமாய் இருந்தது. பெரும்பாலும் விக்கெட் இழப்பின்றியோ, ஓரிரு விக்கெட் மட்டுமே இழந்தோ வென்று வந்தோம். எங்களுக்கே இது ஆச்சரியமாய் தான் இருந்தது.

செமி பைனல் வரை தோற்காமலே வந்து விட்டோம். செமி பைனல், டோர்னமென்ட் நடத்தி வந்த உக்கடை அணியுடன் நடந்தது. அந்த  அணி முதலில் பேட் செய்தது. உக்கடை அணியின் கேப்டன் விளையாடும் போது, நான் மிட் விக்கெட்டில் நின்று கொண்டிருந்தேன். எனது பீல்டிங் பற்றி சொல்ல வேண்டுமெனில், சென்னை -28 படத்தில் பிரேம்ஜி எப்படி "நல்ல பீல்டரோ" அதே போல் தான் நான். அந்த படத்தில் அவர் சொல்லும் " டேய் நான் எப்பவாவது கேட்ச் பிடிச்சு பார்த்திருக்கியா?" தான் நமக்கும் ஒத்து வரும். உக்கடை அணியின் கேப்டன் அடித்த ஒரு ஷாட் என் தலைக்கு மிக மேல், நன்கு தள்ளி சென்று கொண்டிருந்தது. எதற்கும் இருக்கட்டுமே என நான் கையை நீட்ட, பந்து அதிர்ஷ்ட வசமாய் என் கையில் ஒட்டி கொண்டது. பேட்ஸ்மன் விக்கித்து நின்று விட்டார். நல்ல பீல்டருக்கே அது செம கேட்ச் தான். எங்க டீம் ஆட்கள் சிரி சிரியென சிரித்து தீர்த்தனர்.

எங்கள் அணி மறுபடி விக்கெட் இழப்பின்றி அந்த ஸ்கோரை அடித்து ஜெயித்தது. இப்போது எல்லா அணிக்கும் நீடாமங்கலம் அணி என்றால் ஒரு கிலி வந்து விட்டது.

இறுதி போட்டி தஞ்சை அணியுடன். நாங்கள் மிக நம்பிக்கையுடன்  இருந்தோம். தஞ்சை அணியில் முந்தய ஆட்டங்களில் ஆடாத புது வீரர்களை களம் இறக்கி விட்டனர். இவர்களில் சிலர் டிஸ்ட்ரிக்ட் மட்டும் லீக் போட்டிகள் ஆடுபவர்கள். முதலில் ஆடிய தஞ்சை அணி மற்ற அணிகளை போல் இன்றி எங்கள் பவுலிங்கை துவைத்து எடுத்து விட்டனர். 140 ரன் போல அவர்கள் எடுக்க, அதனை எடுக்க முடியாமல் எங்கள் அணி ஆல் அவுட் ஆகியது. பெரிய டோர்னமென்ட் வெல்லும் ஆசை இப்படியாக முடிந்தது

இருந்தாலும் "அம்மாபேட்டை டோர்னமெண்டில் ரன்னர்ஸ் தெரியுமா? " என ரொம்ப நாள் சொல்லி கொண்டு தான் இருந்தோம் !

Tuesday, March 22, 2011

மன்னர்குடியுடன் பரபரப்பான கிரிக்கெட் மேட்ச்

மன்னார்குடி (சுருக்கமாய் மன்னை ) எங்கள் ஊரான நீடாமங்கலதிலிருந்து 13 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. எங்கள் ஊரை விட பல மடங்கு பெரிய ஊர். எங்களுக்கெல்லாம் அது ஒரு "டவுன்". இப்படி டவுனில் உள்ள மன்னை டீம் எங்களை விட நன்றாக ஆடுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. எங்கள் ஊரில் உள்ள "பெரிய டீம்" பல முறை மன்னையுடன் ஆடி அத்தனை முறையும் தோற்றது. மன்னையுடன் நாங்கள் ஆடிய அந்த மறக்க முடியாத மேட்சை பார்க்கும் முன் வேறு ஒரு தகவல்.

எங்கள் ஊரின் பெரிய டீம் கிரிக்கெட்டுக்காக எத்தனை முறை பணம் வசூல் செய்துள்ளனர் !! டோர்னமென்ட் விளையாடுவது , புதிதாய் கிரிக்கெட் கிட் வாங்குவது என எதற்கும் வசூல் வேட்டை ஆரம்பித்து விடும். அப்படி தான் அந்த முறையும் வசூல் நடந்தது.   ஊரில் கொழும்பு ஸ்டோர் என்ற பெயரில் ஒரு மளிகை கடை இருந்தது. இசுலாமியர்கள் நடத்தி வந்த கடை. அவர்களிடம் தான் முதலில் வாங்குவார்கள். எந்த கேள்வியும் கேட்காமல் அதிக பணமும் போடுவார்கள். இப்படி வசூல் நடந்து புதிதாய் பேட் உட்பட நிறைய கிரிக்கெட் கிட் வாங்கப்பட்டது.

பணம் தந்தவர்களில் சிலர் " என்னப்பா புதுசா பேட் எல்லாம் வாங்கியாச்சா? எப்போ அடுத்த மேட்ச்?" என்று கேட்டு கொண்டே இருப்பர்கள். அப்போது தான் மன்னையுடன் மறுபடி மேட்ச் வந்தது.

அந்த காலத்தில் செல்போன் இல்லாமல் , பல வீடுகளில் போனும் இல்லாமல் எப்படி மேட்ச் ஆட தேதி குறித்தார்கள் தெரியுமா? யாராவது ஒரு நபர் (தூதர் போல) எந்த ஊருடன் கிரிக்கெட் ஆடணுமோ அந்த ஊருக்கு போகணும். அங்கு போய் கேம் விளையாடலாமா என்று கேட்டு தேதி குறித்து விட்டு வர வேண்டும். ம்ம் கிரிக்கெட் மேல் எவ்வளவு காதலுடன் அப்போதெல்லாம் இருந்திருக்க வேண்டும்!


(போட்டோவில் மன்னையின் புகழ் பெற்ற ராஜ கோபாலசாமி கோயில்)

மன்னை மேட்சுக்கு வருவோம். வழக்கம் போல் எங்கள் சீனியர் கிரிக்கெட் டீம் அடி வாங்கவே செய்தது. இரண்டு இன்னிங்க்ஸ் உள்ள டெஸ்ட் மேட்ச் ஆடினர். முதலில் பேட் செய்த மன்னை அணி நூற்று நாற்பது ரன் அடித்தது. பின் ஆடிய எங்கள் அணி அறுபதுக்கு ஆள் அவுட். மன்னை எங்களை பாலோ ஆன் ஆட சொல்லியிருக்கலாம். ஆனால் அவர்கள் ஆடினார்கள். ஓரிரு விக்கெட் இழப்புக்கு ஐம்பது ரன் போல அடித்து விட்டு டிக்ளர் செய்து விட்டனர்.  130 ரன் அடித்தால் வெற்றி. இவ்வளவு அதிக ரன்கள் மன்னை உடன் நாங்கள் அடித்ததே இல்லை. அதுவும் நான்காவது இன்னிங்க்ஸ் வேறு.

ஆனால் யாரும் எதிர் பாராமல் மேட்ச் சூடு பிடித்தது. எங்கள் அணி சற்று நன்கு ஆடியது. சந்தானம் என்று ஒரு ப்ளேயர். மிக நன்றாக ஆட, எங்கள் அணி ரன்களில் முன்னேறி கொண்டே இருந்தது. மறுபக்கம் விக்கெட்டுகளும் விழுந்த வண்ணம் இருந்தன. கடைசியில் பத்து ரன் எடுத்தால் நாங்கள் வெற்றி. ஒரு விக்கெட் மட்டுமே கை வசம் உள்ளது. சந்தானம் நாற்பதுக்கு மேல் எடுத்து விளையாடி கொண்டிருக்க மறு முனையில் சிங்கிள் சுந்தரம் விளையாடினார். சிங்கிள் சுந்தரம் பெயருக்கேற்ற படி சிங்கிள் மட்டும் தான் எடுப்பார். இவரை வைத்து கொண்டே சந்தானம் மீதம் உள்ள ரன்களையும் பெரும்பாலும் எடுத்து விட்டார். நாங்கள் ஜெயிக்க மூன்று ரன்கள் உள்ள போது திடீரென "இது தான் கடைசி ஓவர்" என முடிவானது.

நாங்கள் ஜெயிக்க மூன்று ரன். அவர்களுக்கு தேவை ஒரு விக்கெட். கடைசி ஓவர். டென்ஷன் ! டென்ஷன் ! ! எப்படியோ இரண்டு ரன்கள் எடுக்கப்பட்டு விட்டன.கடைசி மூன்று பந்துகள். ஒரு ரன் எடுக்க வேண்டும். இரண்டு பந்துகளில் சிங்கிள் சுந்தரம் ரன் எடுக்க முடிய வில்லை. கடைசி பந்து. சுந்தரம் பேட்டை சுழற்ற பந்து பேட்டில் படவில்லை. ஆனாலும் சுந்தரம் ரன் எடுக்க, ஓட ஆரம்பித்து விட்டார். விக்கெட் கீப்பர் பந்தை ஸ்டம்ப் நோக்கி வீச முயல்கிறார். மறு முனையில் சந்தானம் ஓடவே இல்லை. அம்பயர் பொதுவாய் பேட்டிங் அணி ஆள் தான் நிற்பார். அவர் பிடித்து சந்தானத்தை தள்ளி விட்டு ஓட சொல்ல, சந்தானம் அந்த ரன்னை ஓடி எடுத்து விட்டார்.

மன்னை அணியுடன் முதலும் கடைசி முறையுமாக நாங்கள் வென்றோம் !! சந்தானத்திடம் ஏன் ஓட வில்லை என்று கேட்டதற்கு " அடுத்த ஓவர் நான் தானே ஆட போகிறேன். அப்போ அடிச்சிக்கலாம்" என நினைத்தேன் என்றார். அது கடைசி ஓவர், கடைசி பந்து என்பதே அவருக்கு தெரிய வில்லை!!

மன்னை அணியால் எங்களிடம் தோற்றதை டைஜஸ்ட் செய்யவே முடிய வில்லை. "இன்னொரு சின்ன மேட்ச் (ஒரு இன்னிங்க்ஸ் மட்டும்) ஆடி விட்டு போங்கள்" என்று சொல்ல, எங்கள் அணி சிரித்து மழுப்பி திரும்பி விட்டது.

கிரிக்கெட்டை விட சுவாரஸ்யமாய் அடுத்து ஒரு சம்பவம் நடந்தது. "இப்போ தான் பணம் வசூல் செய்து முடிச்சோம். மேட்ச் ஜெயிச்சிட்டோம். இதுக்கு ஒரு பேனர் எழுதி வச்சிட வேண்டியது தான்" என்று முடிவு செய்து எங்கள் வெற்றி பற்றி ஒரு பேனர் எழுதி ஊரின் முக்கிய இடத்தில் வைத்தனர். அதில் " மன்னை உடன் நடந்த பரபரப்பான மேட்சில் கடைசி பந்தில் நீடாமங்கலம் அணி வெற்றி பெற்றது" என்று எழுத பட்டிருந்தது. இதனை ஊரில் பலரும் நின்று வாசித்து விட்டு மகிழ்ச்சி உடன் சென்றனர். மேட்ச் விளையாடாத என் பெயரும் கூட 13 அல்லது 14 ஆவது நபராக அதில் எழுத பட்டிருந்தது. (என்னோட அண்ணன் தான் டீம் கேப்டன். அந்த போர்ட் எழுதியது எங்கள் கடை மாடியில் உள்ள பொன். தேசிங் என்ற பெயிண்டர்.  பேர் வந்தது இவர்கள் உபயம்!!)

இந்த போர்ட் எங்கள் ஊர் மக்கள் பார்த்து மகிழ்ந்தது இருக்கட்டும். ஊருக்கு வேறு வேலையாக வந்த மன்னை கிரிக்கெட் டீமை சேர்ந்த ஒருவரும் படித்து விட்டார். மன்னை டீம் ஆட்களுக்கு இது தெரிய வர, "அட பாவிங்களா. நாம டிக்ளேர் செய்து குடுத்ததால் ஜெயிச்சிட்டு, இப்போ இப்படி போர்ட் வைக்கிறாங்க" என கடுப்பாகி மறுபடி மேட்சுக்கு அழைத்த வண்ணம் இருந்தனர்.

போவோமா நாங்க? நாங்கல்லாம் யாரு??

Monday, March 21, 2011

வானவில்: சூப்பர் சிங்கரும், காலிறுதி போட்டிகளும்

அய்யாசாமியும் சூப்பர் சிங்கரும்   

அய்யாசாமி, டிவியில் தொடர்ந்து பார்க்கும் நிகழ்ச்சிகளில் விஜய் டிவி சூப்பர் சிங்கரும் ஒன்று. சமீபத்தில் ரொம்ப மனம் உடைந்த குரலில் " இனி சூப்பர் சிங்கர் பார்க்க மாட்டேன்" என்றார். ஏன் என்று கேட்டதற்கு சோகம் ததும்ப சொன்னார். " எஸ். மதுமிதாவை எலிமினேட் செஞ்சுட்டாங்கப்பா !" " அது என்ன எஸ். மதுமிதா?" 

" இதிலே ரெண்டு மதுமிதா உண்டு. எஸ். மதுமிதா தான் அவுட்டு. இன்னொரு மதுமிதா இன்னும் பாடுது" 

 " அப்படி என்ன எஸ். மதுமிதா கிட்டே விஷேஷம்?"முகத்தில் ஒளி வர
அய்யாசாமி சொன்னார்: " அந்த பொண்ணு என்ன அழகு! ச்சே ! சான்சே இல்லை! கண்ணு, மூக்கு, முகம் எல்லாமே செம ! தெரியுமா? " என்றவரிடம் 

"ஆமாம் அந்த பொண்ணு எப்படி பாடும்" 

 " யாருக்கு தெரியும்? அந்த பொண்ணு வந்தாலே நமக்கு காதெல்லாம் அடைச்சிடுது !!".

சர்த்தான் !! நான்கு நாள் தாடியெல்லாம் வளர்த்து சோக கீதம் பாடிய அய்யாசாமி, பின் தாடி எடுத்து விட்டு சூப்பர் சிங்கர் பார்க்க ஆரம்பித்து விட்டார்.  கேட்டால், "எஸ். மதுமிதா நிச்சயம் மறுபடி வந்துடுவா; பார்வையாளராவாவது கூட்டி வந்து உட்கார வைப்பாங்க; நீ வேண்ணா பாரேன்" என்கிறார் நம்பிக்கையுடன்.

சட்ட சொல்: வாய் வழி & எழுத்து வழி சாட்சிகள் (Oral &Documentary Evidence)

சாட்சிகளை வாய் வழி & எழுத்து வழி சாட்சி என இரண்டாக பிரிக்கலாம். இரண்டில் கோர்ட் அதிகம் நம்புவது எதை தெரியுமா? எழுத்து வழி சாட்சியை தான்!! மனிதனை சட்டம் கூட நம்புவதில்லை. இதற்கு காரணம் ஒரு மனிதன், அவன் கேட்டதை சொல்லும் போது அதில் கற்பனையும் கலந்திருக்கலாம். அல்லது அவன் வேண்டுமென்றே பொய் சொல்லலாம். ஆனால் ஆவணங்கள் பொய் சொல்வதில்லை. கடிதம், பத்திரங்கள் போன்றவை எழுத்து வழி சாட்சிகள். முடிந்த வரை இவற்றிக்கு தான் நீதி மன்றங்கள் அதிக முக்கிய துவமும், அவை இல்லாத போது, அல்லது போதாத போதே வாய் வழி (மனித) சாட்சிகளையும் கருத்தில் கொள்ளும்.

பார்த்த படம் : தூங்கா நகரம்

பத்திரிக்கை & பதிவர் விமர்சனங்கள் படித்ததனால் அதிக எதிர்பார்ப்பு இல்லை. நாடோடிகள் பாதிப்பில் எடுத்துள்ளனர்.. (புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொண்ட கதை தான்). நண்பர்கள் சேர்ந்து, உயிர் நண்பனின் திருமணத்தன்று அவனை கொல்ல துணிவதாய் காட்டும் போது சற்று விறுவிறுப்பு வருகிறது. இந்த பகுதி மட்டுமே சுவாரஸ்யம். படத்தில் வரும் ஏகப்பட்ட டாஸ்மாக் காட்சிகளை தவிர்த்து இது போன்று மூளையை உபயோகிக்கும் காட்சிகளால் படத்தை நகர்த்தி இருந்தால் நன்றாய் இருந்திருக்கும். பாடல்கள் ஒன்றும் தேறலை. இயக்குனரே ஒரு நண்பன் பாத்திரத்தில் நடித்துள்ளார். ம்ம் அவருக்கு பிளாஷ்பேக்குகள் மேல் என்ன அப்படி ஒரு காதலோ? பிளாஷ்பேக்குக்குள் பிளாஷ்பேக்.. அதற்குள் இன்னொரு பிளாஷ்பேக்.. என படமே பிளாஷ்பேக்குகளில் நகர்கிறது. லியோனி ஒரு பட்டிமன்ற கேசட்டில் சொல்லுவாரே. " செத்து போயிட்டாருன்னு பார்த்தா ஆவியா வந்து நாலு பாட்டு படிப்பாரு"ன்னு.. அதை மாதிரி க்ளைமேக்சிலும் பிளாஷ்பேக் !! யப்பா முடியலை. கண்ணை கட்டுது!!

ரசித்த கவிதை 

காட்சியில் இல்லையென்றால்
காணாமல் தான் போவாய்
காணாமல் போனதுக்காக
கவலை படுவார் யாருமில்லை
அவரவரே பொறுப்பு
அவரவர் பாத்திரத்துக்கு
எவர் கையையும் எதிர் பாராது
எதுக்காகவும் அலட்டி கொள்ளாது
ஏனென்ற விசாரம் விடுத்து
இருந்து கொண்டே இரு
இருக்கும் வரை இருந்து கொண்டே இரு
எப்படியும்
                                      (எழுதியவர் பெயர் தெரிய வில்லை)

வாக்காளர் பட்டியல் குளறுபடிகள்  

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், அதற்கான புகைப்பட அட்டை வாங்கவும் பல முறை அலைந்து நொந்து போய் விட்டேன். இதுவரை அதிகாரிகள் சொன்னபடி மூன்று முறை விண்ணப்பம் தந்தும் பெயர் சேர்க்க படவே இல்லை. கடந்த இரு ஆண்டுகளில் பல முறை சென்று கேட்டும், எந்த ரெஸ்பான்சும் இல்லை. இது எனக்கு மட்டுமல்ல, பலருக்கும் இப்படி தான் நடக்கிறது என்பதை,  நான் அலைகிற ஒவ்வொரு முறையும் பலரும் சொல்ல கேட்கிறேன். இந்த விண்ணப்பங்களை நம்மிடமிருந்து வாங்கி தருகிற பள்ளி ஆசிரியர் ஒருவரே மனம் நொந்து சொன்னார்: " இப்படி தான் சார் செய்றாங்க. நாங்க வாங்கி குடுக்க தான் முடியும். பேர் அவங்க தானே சேர்க்கணும். எத்தனை தடவை குடுத்தாலும் சேர்க்க மாட்டேங்கிறாங்க". 

இத்தனை முறை அலைந்தும் எந்த ரெஸ்பான்சும் இல்லா விடில் வேறென்ன செய்ய முடியும்? "இவனுங்க கொள்ளை அடிச்சு சம்பாதிக்க, நாம ஏன் ஓட்டு போடணும்?" என்று வெறுத்து போய் "பேரும் சேர்க்க வேண்டாம்; வோட்டர்ஸ் ஐ. டி யும் வேண்டாம்" என விரக்தியுடன் அமர்வதை தவிர. ("வக்கீலுக்கே இந்த நிலைமையா" என்று கேட்காதீர்கள். கோர்ட் செல்லும் வக்கீல் என்றால் வழக்கு கூட தொடருவார்கள். எனக்கு இருக்கும் வேலைகளில் இதற்கு வழக்கு தொடர்ந்து விட்டு இவர்கள் பின்னே அலைய முடியாது. )

இந்த தேர்தல் முடிந்து, அடுத்த ஆட்சி மாறிய பின், மீண்டும் படையெடுப்பை தொடர வேண்டும். உங்களில் யாருக்கேனும் பெயர் சேர்க்க சரியான வழி தெரிந்தால் சொல்லுங்கள்.

கிரிக்கெட் கார்னர்

உலக கோப்பையில் லீக் போட்டிகள் முடிந்து காலிறுதி போட்டிகள் துவங்குகின்றன. இதில் வலுவான அணிகள் வெல்லவே வாய்ப்புகள் அதிகம்.

செமி பைனல் செல்ல வாய்ப்புள்ள அணிகள்:

பாகிஸ்தான் (மேற்கு இந்திய தீவை தோற்கடித்து .. )
தென் ஆப்ரிக்கா ( நியூசிலாந்தை தோற்கடித்து .. )
இலங்கை ( இங்கிலாந்தை தோற்கடித்து .. )

இந்தியா Vs ஆஸ்த்ரேலியா ஆட்டம் தான் எப்படி முடியமென சொல்ல முடிய வில்லை. ஆஸ்த்ரேலியா பவுலிங் & பீல்டிங்கில் சிறந்து விளங்கினாலும், பேட்டிங்கில் சற்று வழிகிறார்கள். இந்தியாவோ பவுலிங் & பீல்டிங்கில் மட்டுமல்ல கடைசி பத்து ஓவர்கள் விளையாடுவதிலும் முன்னேற வேண்டியுள்ளது. இந்த மேட்ச் பற்றி சித்து சொன்னார்:" உலக கோப்பை Charity-க்காக நடத்த வில்லை. நம்ம ஊரானா அஹமதாபாதில் நடக்கிறது மேட்ச். பிட்ச் ஸ்பின் எடுக்கிற மாதிரி தயார் செய்ய வேண்டும். அப்போது தான் கொழும்புவில் பாகிஸ்தானிடம் தோற்ற மாதிரி ஆஸ்த்ரேலியா தோற்கும்" உண்மை தான்! ஆஸ்த்ரேலியா அணியில் சரியான சுழற் பந்து வீச்சாளரும் இல்லை. இந்நிலையில் பிட்ச் ஸ்பின் எடுத்தால் நன்றாக இருக்கும். இந்த புதன் முதல் சனி கிழமை வரை காலிறுதி ஆட்டங்கள். கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் !

ஜப்பான் !!

ஜப்பான் பற்றி கேள்வி படும் விஷயங்கள் அந்த நாட்டின் மீது மிகுந்த மரியாதை ஏற்படுத்துகிறது. பூகம்பம் நடந்த அன்று ரயில்கள் ஓடாமல் லட்சகணக்கான மக்கள் சாலையில் சென்றுள்ளனர். எப்படி தெரியுமா? சாலை ஓரத்தில்... வரிசையாக... அமைதியாக ! நம் ஊரில் பெரிய தலைவர் இறந்தால் முதலில் கடைகளை உடைத்து கொள்ளை அடிப்பார்கள். ஜப்பானில் பலரின் உடமைகள் தெருவில் கிடந்தும், ஒரு இடத்தில கூட மற்றவர் பொருளை யாரும் அபகரிக்க வில்லை. வாழ்க்கையில் முன்னேற மட்டுமல்ல ஒரு மிக பெரும் இயற்கை பேரழிவை எப்படி எதிர் கொள்வது என்பதையும் ஜப்பானியர்களிடம் நாம் கற்று கொள்ள வேண்டும்.

Tuesday, March 15, 2011

கிரிக்கெட் : ரயில்வே காலனி மேட்ச்

ஞாயிற்று கிழமையும் அதுவுமாய் "அதிகாலை எட்டு மணிக்கு" நண்பன் நந்து என்னை எழுப்பினான். " எழுந்திரு. ரயில்வே காலனி பசங்க மேட்சுக்கு கூப்பிட்டுருக்காங்க"

இதை கேட்டதும் உறக்கம் போய் சுறுசுறுப்பு வந்துவிட்டது. எங்கள் ஊரில் ரெண்டு டீம்கள் கிரிக்கெட் ஆடி வந்தன.நாங்கள் ஆடிய டீம் தவிர ரயில்வே காலனியில் ஒரு டீம் உண்டு. இவர்கள் எங்களிடம் பல முறை விளையாடி அத்தனை தடவையும் தோற்றுள்ளனர். அந்த நேரத்தில் வெளியூர் மேட்ச் சென்றால் சர்வ நிச்சயமாய் நாங்கள் தோற்று வந்தோம். எனவே ரயில்வே காலனி டீம் தான் எங்களுக்கு ஒரே ஆறுதல்.

"சீக்கிரமா குளிச்சிட்டு வா. பதினோரு பேரே தேற மாட்டாங்க போலருக்கு".

"ஏன் ராஜுவுக்கு என்ன ஆச்சு?"

ராஜு மட்டுமல்ல, ரவி, பாபு, மோகன் என நன்கு விளையாடும் பலரும் அன்று ஊரில் இல்லை. இது தெரிந்து தான் அன்று மேட்சுக்கு கூப்பிட்டார்களா என்ற சந்தேகம் கொஞ்சம் கூட இல்லாமல் ரயில்வே காலனியுடன் மேட்ச் என்ற மகிழ்ச்சி தான் மனம் முழுதும் நிறைந்திருந்தது.

ஒரு வழியா பதினோரு பேரை தேற்றி விளையாட ஆரம்பித்தோம். அவர்கள் அணிக்கு செந்தில் கேப்டன். எங்கள் அணியில் முக்கிய புள்ளிகள் இல்லாததால் என்னை கேப்டன் ஆக்கினார்கள். டாசில் ஜெயித்து பேட் செய்தோம். நந்து ஒரு பக்கம் விளையாடி கொண்டிருக்க மறுபுறம் விக்கட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. நான் விளையாட இறங்கினேன். நந்துவுக்கும் எனக்கும் பேட்டிங்கில் செம அண்டர்ஸ்டாண்டிங் உண்டு. நான் சுமாரான பாட்ஸ்மேன் தான். ஆனால் நந்துவுடன் ஆடும் போது என்னை அவுட் ஆக்குவது ஏனோ சிரமம் ! நான் சிங்கிள் எடுத்து தந்தால், அவன் மறு முனையில் வெளுப்பான். அன்றைக்கு அதுவும் நடக்கலை. நான் சீக்கிரமே ரன் அவுட் ஆகிட்டேன். எங்கள் டீம் 28 ரன்னுக்கு ஆல் அவுட்.

ரயில்வே காலனி நண்பர்கள் முகத்தில் செம மகிழ்ச்சி. முதல் முறையாய் எங்களை வீழ்த்த போகும் பரவசம் அவர்களிடம் !

அன்றைக்கு எங்களிடம் கஸ்தூரி, நந்து என இரண்டே நல்ல பவுலர்கள் தான் இருந்தனர். 20 ஓவர் மேட்சில் அவர்கள் இருவரும் ஆளுக்கு நான்கு ஓவர் போட்டு விட்டால் மற்ற ஓவருக்கு என்ன செய்வது என நான் குழம்பிய படி இருக்க, கஸ்தூரியும் நந்துவும் அதற்கு அவசியமே இல்லை என்கிற மாதிரி அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்து தள்ளினர். ஆறு ஓவர் முடிவில் எட்டு விக்கெட்டுகள் விழுந்து விட்டது. இருவருக்கும் இன்னும் ஒரு ஓவரே பாக்கி. கஸ்தூரியும் நந்துவும் " நாங்க முடிச்சிடறோம்" என அந்த ஒரு ஓவரையும் வீசி விட்டனர். அப்போது ஆடிய செந்தில் புத்திசாலித்தனமாக அந்த ரெண்டு ஓவரில் விக்கெட் விடாமல் நின்று விட்டான்.

அவர்கள் ஜெயிக்க இன்னும் எட்டு ரன் தேவை. எங்களுக்கு ரெண்டு விக்கெட்!

மதன் என ஒரு சின்ன பையன் வேகமாய் ஓடி வந்து, மெதுவாய் பந்து வீசுவான். அவனும் நானும் தான் பந்து வீசியாகனும் . மதன் போட்ட ஓவரில் ரெண்டு ரன் எடுத்தனர். அந்த ஓவரின் கடைசி பந்தில் ஒருவன் பவுல்ட்; ஸ்டம்ப் கீழே விழாமல் பந்து ஸ்டம்ப்புகளுக்கு இடையில் புகுந்து சென்று விட்டது. பந்து போன இடத்தை காட்டி அவுட் தான் என சண்டை போட்டு அந்த நபரை அனுப்பினோம்.

எனது அடுத்த ஓவரில் மூன்று ரன் எடுத்தனர். அவர்கள் ஜெயிக்க மூன்று ரன் தேவை. எங்களுக்கு ஒரு விக்கட்!

மதன் மறுபடி பந்து வீசினான். செந்தில் அடித்த சரியான ஷாட் கவர்சில் இருந்த பீல்டர் கையில் நேரே சென்று அமர்ந்தது ! சற்று நேரம் ஆனது நிலைமை முழுதும் புரிய !! ஆம் .. இரண்டு ரன் வித்தியாசத்தில் நாங்கள் வென்று விட்டோம்! மகிழ்ச்சியில் நாங்கள் செமையாக குதிக்க, செந்தில் சோகமாக கிரவுண்டில் உட்கார்ந்து விட்டான். ரயில்வே காலனியால் கடைசி வரை எங்கள் அணியை ஜெயிக்கவே முடிய வில்லை!

மேட்ச் நடந்ததென்னவோ ரெண்டரை மணி நேரம். ஆனால் நாங்கள் அந்த மேட்ச் பற்றி மதியம் முதல் இரவு வரை, கட்டை சுவரிலும் எங்கள் கடையிலும் அமர்ந்து பேசி பேசி தீர்த்தோம்.. ம்ம்ம் அது ஒரு காலம் !!

Monday, March 14, 2011

வானவில்: கிரிக்கெட் தோல்வியும், விருதகிரியும்

கிரிக்கெட்: இந்தியாவின் நிலை 

உலக கோப்பையில் இந்தியா தென் ஆப்ரிக்காவிடம் தோற்றதுபற்றி "இது தான் இந்தியாவிற்கு முதல் தோல்வி" என்று சிலர் சொல்கிறார்கள். யோசித்து பாருங்கள்: இந்தியா ஜெயித்தது எல்லாம் பங்களாதேஷ், அயர்லேந்து, நெதர்லேந்து என்ற பிள்ளை பூச்சிகளை தான். இங்கிலாந்திடம் ஜெயிக்க வேண்டிய மேட்ச் "டை" செய்தனர். தென் ஆப்ரிக்காவிடம் நல்ல நிலையில் இருந்து, பின் தோற்றனர். இந்த இரு நல்ல அணிகளுடன் நாம் விளையாடியதில் பல ஒற்றுமைகள்: முதலில் நாம் டாஸ் வின் செய்தோம் ; நாற்பது ஓவர் வரை சரியான பேட்டிங்; பின் செம சரிவு; நமது சொதப்பல் பவுலிங்...இப்படி.தோனி & கிர்ஸ்டன் கவனித்து கற்று கொள்ள நிறைய உள்ளது.  இன்னும் சரியான அணியே எது என்று முடிவு செய்ய முடியாமல் இந்தியா இருப்பது பெரும் சோகம். சென்னையிலாவது அஸ்வினுக்கு வாய்ப்பு தர வேண்டும். 

"பி"பிரிவில் தென் ஆப்ரிக்கா முதல் இடத்திலும் இந்தியா இரண்டு அல்லது மூன்றாம் இடத்திலும் வர கூடும். "A"பிரிவில் ஆஸ்திரேலியா முதல் இடத்தில் வருவது கிட்ட தட்ட உறுதி ! கால் இறுதியில் தென் ஆப்ரிகா நியுசிலாந்துடன் விளையாடி ஜெயிக்கும். போலவே ஆஸ்திரேலியா இங்கிலாந்து அல்லது பங்களாதேஷ் உடன் ஆடி ஜெயிக்கும். இப்போதைக்கு ஆஸ்திரேலியா &  தென் ஆப்ரிக்கா அரை இறுதி செல்ல வாய்ப்புகள் பிரகாசமாய் உள்ளது. இந்தியா கால் இறுதியில் இலங்கை அல்லது பாகிஸ்தானுடன் விளையாடும்!! தன் ஆட்டத்தை மிக drastic ஆக improve செய்யா விடில் நாக் அவுட் நிலையில் இந்தியா எங்கு வேண்டுமானாலும் அடி வாங்கி திரும்பி விடும் அபாயம் உள்ளது. சச்சின் தனது நூறாவது சதத்தை நெருங்குவது மட்டுமே நமக்கெல்லாம் ஆறுதல் !


அம்மா பதிவை படித்த அம்மா

கடந்த சில வருடங்களாகவே இரண்டு மாதத்திற்கு ஓர் முறை அம்மா மருத்துவ மனையில் அட்மிட் ஆகி பத்து நாள் இருந்து பின் வீடு திரும்புவது  தொடர்கிறது. இதனால் அடிக்கடி நான் தஞ்சை செல்ல வேண்டிய சூழ்நிலை. இம்முறை சென்ற போது அம்மா பற்றிய பதிவை பிரின்ட் எடுத்து சென்றிருந்தேன். மருத்துவ மனையில் உள்ள டிவியில் இந்தியா தென் ஆப்ரிக்காவிடம் தோற்ற மேட்சை நான் பார்த்தபடி இருக்க, அம்மா மிக மிக மெதுவாய் பதிவை வாசித்தார். வாசிக்கும் போதே முகத்தில் சிரிப்பும் மகிழ்ச்சியும். "ரொம்ப நல்லா எழுதியிருக்கேடா. எனக்குன்னு இவ்ளோ நேரம் ஒதுக்கி எழுதியிருக்கியே. நல்லா எழுதறே" என்றார். அந்த பிரிண்ட் அவுட்டை என்னிடம் திரும்ப தந்து, " பத்திரமா வச்சிக்கோ" என்று சொல்ல, " என்னோட கம்பியூட்டரில் இருக்கு. அதில் நான் படிச்சிப்பேன். இது உனக்கு தான்" என்றேன். மகிழ்வுடன் வைத்து கொண்டார். தன் மற்ற மகன், மகளிடம் காண்பிக்க கூடும்.

பின்னூட்டங்களும் நானே எழுதியது என நினைத்து அதில் சிலவற்றை பற்றி மாற்று கருத்து சொன்னார். "அது எல்லாம் நான் எழுதலை மற்றவர்கள் எழுதியது; புக்கில வர்ற கடிதம் மாதிரி இது" என்று பின்னூட்டத்தை புரிய வைக்க முயன்றேன். புரிந்ததா இல்லையா தெரியலை!

தஞ்சை அப்டேட்

தஞ்சை பெரிய கோவில் ஆயிரமாவது ஆண்டு விழா சமீபத்தில் ஆயிரம் டான்சர்கள் நடனமாட, அமர்க்களமாய் நடந்ததை அறிந்திருப்பீர்கள். இதற்கு முன் பெரிய கோவில் சென்றால் சந்நிதியில் பத்து பேர் இருப்பார்கள். அவர்கள் சென்று விட்டால் மீண்டும் பத்து பேரோ, சில நேரம் நாம் மட்டும் தனியே நின்று கூட வணங்கலாம். ஆனால் ஆயிரமாவது ஆண்டு விழா முடிந்து பல மாதங்கள் ஆனாலும் கோயிலில் கூட்டம் நிரம்பி வழிகிறது.நேரே சந்நிதி சென்ற நிலை போய், எப்போதும் பெரிய கியூ .. ம்ம் பார்க்கலாம் ..எத்தனை நாளைக்கு மக்களின் இந்த ஆர்வம் நீடிக்கிறதென!


டிவி பக்கம்

ஜீ தமிழ் நல்ல சேனல். இதில் வரும்

ஜான்சி ராணி( சரித்திர தொடர்;  இந்தி டப்பிங்) மற்றும்
இரவு பத்து மணிக்கு வரும் டாப் டென் செய்திகள் (தமிழகம் / இந்தியா/ உலகம்/ விளையாட்டு என தனி தனி பிரிவுகளில்)

ஆகிய இரண்டும் மிக நல்ல நிகழ்ச்சிகள். இவை இரண்டும் பற்றி முன்பே குறிப்பிட்டுள்ளேன். டப்பிங் எனினும் மற்றொரு நல்ல நிகழ்ச்சி "சபாஷ் இந்தியா" இந்தியாவில் சாதனை செய்யும் பலரை அந்த சாதனையுடன் காட்டுகின்றனர். வார நாட்களில் தினம் இரவு எட்டு முப்பதுக்கு ஒளி பரப்பாகிறது. முடிந்தால் பாருங்கள்.

ஜப்பானில் நிகழ்ந்த பேரழிவு 

ஜப்பான் எனக்கு மிக பிடித்த நாடு... கடினமாய் உழைக்கும் ஜப்பானியர்களுக்காகவே! கடந்த சில நாட்களாக அங்கு நிகழ்ந்த இயற்கை சீற்றம் மனதை உலுக்குகிறது. எனது நண்பர் நடராஜ் டோக்கியோவில் உள்ளார். துணை அமைப்பை சேர்ந்த நடராஜ் ஏழு குழந்தைகளுக்கு கடந்த ஆறு ஆண்டுகளாக ஸ்பான்சர் செய்து வருகிறார். அவருக்கு உதவி தேவைப்படும் குழந்தைகளை அறிமுக படுத்தும் ஒரே நபர் இங்கு நான்! துணை மூலம் அறிமுகமானாலும் கடந்த ஆறு ஆண்டுகளில் மிக நட்பாகி விட்டோம்.

முதல் நாள் அவரது தொலை பேசி ரீச் ஆகவே இல்லை. மறு நாள் தான் பேச முடிந்தது. டோக்கியோவில் பெரிய பாதிப்பு இல்லை என்றும் அனைவரும் நலம் என்றும் சொன்னார். பேஸ்புக்கில் அடிக்கடி இனி அப்டேட்ஸ் தருகிறேன் என்றார். 

இத்தகைய நிகழ்வுகள் சீனா அல்லது இந்தியாவில் நிகழ்ந்தால் உயிரிழப்பு பல லட்ச கணக்கில் இருந்திருக்கும். ஜப்பான் மிக முன் யோசனையாக வீடு 
கட்டும் முறையிலும் , பிற எச்சரிக்கைகளிலும் முனைப்போடு இருந்ததால், பொருள் இழப்பு மிக அதிகம் , மனிதர்கள் இழப்பு பத்தாயிரம் என்கிற அளவில் உள்ளது. தங்கள் கடின உழைப்பால் ஜப்பானியர்கள் மீண்டு எழுவார்கள்.. நம்பிக்கை இருக்கிறது. 


ரசித்த கவிதை

நான் எல்லோரிடமும் புன்னகைக்கிறேன்
குறிப்பாக மளிகை கடைக்காரனிடம்
பொருட்களை அவன் நிறுத்தும் போது
எனக்கு சாதகமாக
ஒரு சிறு சாய்வை ஏற்படுத்துவான் என புன்னகைக்கிறேன்

எனது அன்றாட தேவைகளின் விலை
மிகவும் கூடி விட்டது
எனவே காய்கறி வியாபாரியிடம் கூட
புன்னகைக்கிறேன்

மாலை நேரத்திற்குள்
இன்னும் பல உதவிகள் வேண்டி
என் புன்னகை அனைத்தையும்
செலவழித்து விட்டேன்

என் கை வசம்
புன்னகை ஏதும் இல்லை
வீட்டிற்கு கொண்டு செல்ல

                                                 மோதிலால் ஜாத்வாணி (சிந்தி)

பார்த்த படம்: விருதகிரி

இந்த படம் பார்த்து ரொம்ப நாளானாலும் இப்போது தான் பகிர்கிறேன். "வாசபி" படத்தை சரத் குமார் ஜக்கு பாய் என எடுத்து கையை சுட்டு கொண்டார். அதையே விஜய காந்த் திருநங்கைகள் பிரச்சனை, தமிழ் நாடு அரசியல் எல்லாம் கலந்து விருதகிரி ஆக்கியுள்ளார். காமெடியன் இல்லா விட்டாலும் கேப்டனே அந்த குறையை போக்கி விடுகிறார். பெரும்பகுதி படம் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டினர் எல்லாரும் ஆங்கிலத்தில் பேசினாலும் simultaneous ஆக அவர்களுக்கு தமிழ் டப்பிங் கொடுத்து "புதுமை" செய்துள்ளார் கேப்டன். பார்க்க செம சிரிப்பாக உள்ளது. படத்தில் ஒரு நிமிடமே வந்து போகும் நண்டு, சுண்டு கேரக்டர்கள் கூட கேப்டனை வானளாவ புகழ்ந்து பேசுகிறார்கள். வில்லன்களே இவரை புகழும் போது வயிற்றை பிடித்து கொண்டு நாம் சிரிப்பது உறுதி. மற்றபடி கேப்டனின் ஸ்பெஷாலிட்டி சண்டைகள் & லெக் கிக்குகள்... இவையும் இருக்கின்றன. படத்தில் நிறுத்த முடியாமல் தொடர்ந்து சிரிக்க வைத்த காட்சி ஒன்று உண்டு. படத்தில் வரும் முக்கிய பெண் பாத்திரம் பெயர் ப்ரியா. இவர் காண வில்லை என்பதை கேப்டன் இப்படி சொல்லுவார் : "BBriyaa இன்னும் கிடைக்கலை !" . கலக்குங்க கேப்டன். இன்னும் நிறைய படம் டைரக்ட் பண்ணுங்க. பார்த்து சிரிக்க நாங்க இருக்கோம்!

Wednesday, March 9, 2011

கிராமத்து கிரிக்கெட் நினைவுகள்

உலக கோப்பை நடக்கும் நேரத்தில், எங்கள் கிராமத்தில் நாங்கள் ஆடிய கிரிக்கெட் பற்றி எழுதுகிறேன்.

எங்களுடன் விளையாடிய சுவாரஸ்யமான ஒரு நபர் தான், இந்த கட்டுரையின் நாயகன்.அவர் எங்கள் ஊரில் வசித்தாலும், பக்கத்துக்கு ஊரில் வேலை பார்த்தார். வயதில் சற்று பெரியவர் என்பதால் சார் என்று அழைப்போம்.

சார் தன்னை லெக் ஸ்பின் பவுளர் என்று சொல்லி கொள்வார். ஆனால், பந்து அப்படி ஒன்றும் ஸ்பின் ஆகாது. கிரீஸுக்கு சற்று வெளியே மெதுவாய், நேராய் வந்து அல்வா போல இறங்கும். என்னை போன்ற படு சுமாரான பேட்ஸ் மேன் கூட வேண்டிய பக்கம் விளாசலாம்.

அவரது பவுலிங் ஆக்ஷ்ன் செம காமெடியாக இருக்கும். கையை முழுதாய் சுற்றி பந்தை எரியாமல், கக்கத்துக்கு கீழிருந்தே எறிவார். இது பார்க்க, சர்வ நிச்சயமான 'த்ரோ' போல் இருக்கும். ஆனால், தான் த்ரோ செய்வதாக சார் எப்போதும் ஒப்புக்கொள்ள மாட்டார்.

அவரை யாரவது த்ரோ செய்வதாக கேட்டால், தனது பவுலிங்கை யார் யார் எல்லாம் சரி என ஒப்பு கொண்டனர் என்று பட்டியல் போடுவார். மேலும், பல உள்ளூர் - வெளியூர் ஜாம்பவான்கள் எல்லாம் தனது பவுலிங்கில் க்ளீன் பவுல்ட் ஆனதாகவும், வெங்கட் ராகவனுக்கு பிறகு சிறந்த ஸ்பின் பவுலர் என்றால், அது தான் தான் என்றும் கூச்சப்படாமல் அள்ளி விடுவார்.

அந்த காலக்கட்டத்தில் சார் வீட்டில் மட்டுமே டி.வி. இருந்ததால், அங்கு சென்று தான் கிரிக்கெட் மாட்ச் பார்ப்போம். ஆட்ட சுவாரஸ்யத்தில் யாராவது நகம் கடிச்சால் போச்சு... "அய்யயோ... எச்சில் பண்ணிட்டான்..." என உடனே கொல்லைக்கு கூட்டிட்டு போய் தண்ணீர் தந்து கையை கழுவ சொல்லி கூட்டி வருவார்.

இவர் குறித்த மூன்று முக்கிய சம்பவங்களாவன:

சம்பவம் - 1

மன்னார்குடி டீமுடன் ஒரு கிரிக்கெட் மேட்ச் ஆட போயிருந்தோம். நான் அப்போது பார்வையாளர்தான். எங்கள் ஊர் "பெரிய டீம்" ஆடியது.

முதலில் மன்னார்குடி டீம் ஆடியது. செமையாய் அடி பின்னி எடுத்தனர். நடுவில் நம்ம சார் பவுலிங் போட வந்தார். முதல் பந்து போட்டதுமே "த்ரோ த்ரோ" என சிலர் கத்தினர்.

பின் ஒருவன் எழுந்து, "டேய் சும்மா இருங்கடா... ஆள் நல்லா அல்வா மாதிரி பந்து போடுறார்" என்றதும், பேசாமல் இருந்தனர். சார் பவுலிங்கில் (!!?) சும்மா வெளுத்து எடுத்தனர்.

சாரின் ஒரு பந்தை ஸ்ட்ரெயிட் பவுண்டரிக்கு அடித்தான் ஒரு பேட்ஸ்மேன். மிட் ஆஃப் அண்ட் லாங் ஆனில் நின்ற ஃபீல்டர்கள் போய் பந்தை எடுக்கவில்லை.

சார் கேட்டதற்கு, "நீங்களே போய் எடுத்துக்குங்க" என்று சொல்லி விட்டனர்!

சாருக்கெல்லாம் பவுலிங் தந்து மானத்தை வாங்குறாங்க என்று கேப்டன் மேல் கோபம் அவர்களுக்கு. பின், சாரே ஓடி போய் பவுண்டரியிலிருந்து பந்தை எடுத்து வந்து அடுத்த பந்தை வீசினார். இதை இன்னமும் சொல்லி சொல்லி சிரிப்போம்.

பின்னர், எங்க டீம் பேட்டிங் செய்து 40 ரன்னுக்கு ஆள் அவுட் ஆகியது. இதில் கடைசியாக இறங்கிய நம்ம சார் "0- நாட் அவுட்".

சம்பவம் - 2

தனது திறமையை டீம் சரியாக யூஸ் பண்ணலை என சாருக்கு ரொம்ப வருத்தம்.

மன்னார்குடி டீம் எங்களை மறுபடி ஃபாலோ ஆன் ஆட சொன்னது. சார் இந்த முறை ஓபனிங் பேட்ஸ்மேன் ஆக செல்வேன் என்றார்.

"வேண்டாம் சார். முதல் ஓவர் பாண்டியன் போடுவான். போன இன்னிங்க்ஸ்-ல் ஆறு விக்கெட் எடுத்தான் அவன்" என்றான் ஒருவன்.

சார், "போடா.. சோழனாவது.. பாண்டியனாவது," என்று முதல் ஆளாக பேட் செய்ய போய்விட்டார்.

முதல் ஓவர் பாண்டியன் தான் போட்டான். முதல் பந்து... சாரின் ஸ்டம்ப்ஸ் ரெண்டு தெறித்து விழந்தது.

பேட்டை க்ரீஸ் அருகிலேயே வைத்து விட்டு பெவிலியன் திரும்பினார் சார். (அவுட் ஆனால் பேட்-ஐ இப்படி வைத்து விட்டு வருவது சாரின் ஸ்டைல்).

அந்த மேட்ச்சில் வழக்கம் போல் தோற்றோம். ஆனாலும் இன்றும் அந்த மேட்ச் நினைவில் இருப்பதற்கு இந்த ரெண்டு நினைவுகளும் தான் காரணம்.

சம்பவம் - 3

நம்ம சாருடன் நடந்த மற்றொரு அனுபவம் சற்று வித்யாசமானது.  ஒரு முறை நீடாவில் மாலை கிரிக்கெட் சூடு பிடித்தது. ஒரு குறிப்பிட்ட பவுலர் உடம்பை குறி வைத்து பாடிலைன் பவுலிங் போட்டு மிரட்ட, எங்கள் அணி தோற்றது. மேட்ச் முடிந்து பேசி கொண்டிருக்கும் போது " அவன் அப்படி பவுலிங் போட்டிருக்க கூடாது" என்று நான் பேச, நம்ம சார் அதை மறுத்தார். " அவன் அப்படி ஒண்ணும் அடிக்கனும்னு பந்து வீசலை; யாராலையும் சொல்லி வச்சு ஒருத்தரை பவுலிங்கில் அடிக்க முடியாது தெரியுமா? " என்றார்.


" ஏன் சார் சொல்லி வச்சு அடிக்கிற மாதிரி போட முடியாது? நான் போடுவேன் சார்" என்றேன். " பார்க்கலாம்" என சொல்ல பந்தயம் ஆனது.

மறு நாள் எட்டே பேர் தான் விளையாட சென்றோம். நானும் நந்துவும் ஒரு அணியிலிருக்க, சார் எதிர் அணியில் இருந்தார். நாங்கள் விளையாடி முடித்து விட, அடுத்து அவர்கள் பேட்டிங். எப்போது வேண்டுமானாலும் மழை வருமென்கிற மாதிரி இருந்தது. முதல் ஆள் அவுட் ஆனதும் சார் இறங்கினார். நந்துவிடம் போய் " டேய் பந்தை வெளியிலே போடு அவுட் பண்ணிட போறே; அடுத்த ஓவர் நான் போடும் போது அவர் ஆடணும்" என்றேன். அடுத்த ஓவர் ..நான் தான் வீசினேன். முதல் பந்து தரையில் இறங்காமல் நேரே சாரின் இடுப்பின் மேல் இறங்கியது. அடுத்த பந்து வீசுவதற்குள் மழை கொட்ட ஆரம்பித்து விட்டது. அனைவரும் மழையில் இருந்து தப்பி ஓடி ஒரு கட்டிட நிழலில் நின்று கொண்டிருந்தோம். சாருக்கு பந்து வீசி அவரை அடித்து விட்டேனென செம கோபம். யாரும் எதுவும் பேசலை. நந்து போன்ற சிலர் சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கி கொண்டு நின்றிருந்தனர்.

நிற்க. இந்த சம்பவத்திற்கு பிறகு இன்று வரை சார் என்னுடன் பேசுவதில்லை!

Monday, March 7, 2011

வானவில்: தங்க மழை.. விஜய்யின் காவலன்

கிரிக்கெட் கார்னர்

நேற்று இந்தியா அயர் லேண்டை ஒரு வழியா ஜெயித்தது. ஆனா அதை விட சென்னையில் நடந்த இங்கிலாந்து தென் ஆப்பிரிக்கா இடையிலான மேட்ச் செம இன்டரஸ்டிங் ஆக இருந்தது. இது மாதிரி லோ ஸ்கோரிங் மேட்ச் தான் டோர்னமேன்டிற்கு சுவாரஸ்யம் தருகிறது.(இது வரை இங்கிலாந்து விளையாடிய நான்கு மேட்ச்களுமே கடைசி வரை யார் ஜெயிப்பார்கள் என்று தெரியாத நிலை தான் கவனித்தீர்களா?) நேற்றைய மேட்சில் இங்கிலாந்து வென்றது இந்தியாவிற்கு நல்லது. எப்படி என்கிறீர்களா? தென் ஆப்பிரிக்கா எல்லா மேட்சும் ஜெயித்தால் இந்த குருப் அவர்கள் தான் டாப்பில் இருப்பார்கள். நமது குருப்பில் நாம் டாப்பில் வந்தால்தான்  எதிர் குருப்பில் உள்ள வீக்கான (நான்காம் இடத்தில உள்ள) அணியுடன் விளையாடலாம். எனவே செமி பைனல் வாய்ப்பு வலுக்கும்.

நமது ஆரம்ப ஊகங்களை பொய்யாக்கி இதுவரை பாகிஸ்தான் நன்கு விளையாடி வருகிறது. அதிலும் அப்ரிதி இந்த உலக கோப்பையில் மிக அதிக விக்கெட் வீழ்த்தியவராய் வர கூடும்.

நிற்க. தோனி இன்னும் பியூஷ் சாவ்லாவையே மலை போல் நம்பி இருக்கிறார். அஸ்வினுக்கு எப்போது தான் வாய்ப்பு தர போகிறாரோ? இரண்டு பாஸ்ட் பவுலர்கள் மட்டும் வைத்து விளையாடும் போது அஸ்வின் நிச்சயம் நல்ல சாய்ஸ். அவர் பவர் ப்ளேயிலும் பந்து வீச கூடியவர். இந்தியாவின் பீல்டிங் & பவுலிங் முன்னேறா விடில் நாம் கப் ஜெயிப்பது கடினமே !

பார்த்த படம்: காவலன்

விஜய்யை இப்படி பார்க்க எவ்வளவு நன்றாக உள்ளது ! மசாலா பஞ்ச்  டயலாக்குகள் பின்னால் போகாமல் இப்படி பட்ட கேரக்டர்களில் நடித்தால் நன்றாக இருக்கும். அசின் எப்போதுமே எனக்கு பிடிக்கும். துவக்கத்தில்  நமக்கு கோபம் வர வைக்கிற கேரக்டர் எனினும் நன்கு தான் நடித்திருந்தார். அதிசயமாக இந்த படத்தில் பாடல்கள் சில, படத்தோடு மிக சரியாக பொருந்தி, கேட்பதை விட படத்தோடு பார்க்க பிடிக்கிறது. வடிவேலுவும் அவ்வபோது சிரிக்க வைக்கிறார். கடைசி அரை மணி நேரம் நிச்சயம் ஆச்சரிய படுத்துகிறது. கிளைமாக்சில் சண்டை இல்லாமால் உணர்வுகளை வைத்தே அமைத்தது பெரும் ஆறுதல். விஜய்க்கு அடுத்து த்ரீ இடியட்ஸ்.. பன்ச் டயலாக்குகள் & குபீர் சண்டைகளிலிருந்து வெளி வந்து அடிக்கடி இப்படி படம் செய்தால் நன்றாயிருக்கும்.

சட்ட சொல்: ஹோஸ்டைல் விட்னஸ் 

வழக்கு துவங்கும் போது ஒரு சாட்சி ஒருவருக்கு எதிராக சாட்சி சொல்கிறார். ஆனால் அவரே பின்னர் தன் நிலையை மாற்றி கொண்டு ஆதரவாய் சாட்சி சொன்னால், அவரை ஹோஸ்டைல் விட்னஸ் என்று சொல்லுவார்கள். கிரிமனல் வழக்குகளில் பெரும்பாலும் வழக்கு பதிவு செய்வதும் சாட்சிகளை கொண்டு வருவதும் போலிசாக இருக்கும். அப்படி போலிஸ் கொண்டு வரும் சாட்சிகள் அவர்களுக்கு எதிராகவே போகும் நிலை வந்தால் "ஹோஸ்டைல் விட்னஸ் " என்பார்கள். அநேகமாய் அவரை எதிர் அணியினர் சரிக்கட்டியது ஒரு காரணமாய் இருக்கலாம். இப்படி மாற்றி பேசும் சாட்சிகள் நம்ப தன்மை இழப்பார்கள். நீதி மன்றம் அவர்கள் பேச்சை எடுத்துகொள்ள மாட்டார்கள். அப்ப என்ன பலன் என்கிறீர்களா? உங்களுக்கு எதிரான ஒரு சாட்சி நம்பக தன்மை இழந்து அவர் சாட்சியம் எடுத்து கொள்ள படாவிடில் அது நல்லது தானே! அது !!


டிவி பக்கம் 

சன் டிவியில் புதிதாய் சனி, ஞாயிறு இரவு எட்டு முப்பதுக்கு தங்க மழை என்று ஓர் நிகழ்ச்சி. பொது அறிவு கேள்விகள் சரி தவறு என்ற பதில்கள் சொன்னால் போதும். தங்க காசு பரிசாய் தருகிறார்கள் (டிவியில் தர்றாங்க; நிஜமா தர்றாங்களா?கலந்து கிட்டவங்களை தான் கேட்கணும்!) நிகழ்ச்சி கொஞ்சம் உலக விஷயங்களை தெரிஞ்சிக்கிற மாதிரி இருக்கு. நிகழ்ச்சியை நடத்தும் தேஜஸ்வினி (எங்கப்பா இருந்தார் இவ்ளோ நாளாய்?) அழகாய் இருக்கிறார். நன்றாக தமிழ் பேசி, நன்கு நடத்துகிறார். ஒரு முறை பாருங்களேன்.

அதீதத்தில் வீடு திரும்பல்

அதீதம் என்ற இணைய இதழ் சமீபத்தில் துவங்கப்பட்டது. மாதம் இரு முறை வரும் இந்த இதழ் இது வரை நான்கு இதழ்கள் வந்துள்ளது. இதில் வாரம் ஒரு ப்ளாகரை அறிமுக படுத்துகிறார்கள். இந்த இதழில் உங்களுக்கு நன்கு அறிமுகமான ஒரு ப்ளாகரை பற்றி எழுதியுள்ளார்கள். யாரா? அட.. அதை நானே எப்படி சொல்றது? இதோ இந்த லிங்கில் நீங்களே படிச்சிக்குங்க.

சிறு அறிவிப்பு


உலக கோப்பை நடக்கும் நேரத்தில் எங்கள் ஊரான நீடாவில் கிரிக்கெட் விளையாடிய நினைவுகளை பகிர உள்ளேன். மூன்று அல்லது நான்கு பதிவுகள் இந்த வரிசையில் வர கூடும். இந்த மினி தொடர் இந்த வாரம் புதன் அல்லது வியாழன் அன்று தொடங்கும்.


வாங்க முன்னேறி பார்க்கலாம் என்ன ஆச்சு என வினவும் நண்பர்களுக்கு : அடிக்கடி இடைவெளி வருவதால் மூன்று அல்லது நான்கு பகுதிகள் எழுதி விட்டே மறுபடிவெளியிட ஆரம்பிக்க உள்ளேன். அதுவும் விரைவில் தொடங்கலாம்.

அய்யா சாமி

தஞ்சையில் பிறந்து வளர்ந்த அய்யாசாமி, முதல் முறை தன் ஊரை தாண்டி போய் தங்கியது மதுரையில். தஞ்சை பக்கம் துணிகளை துவைக்கிற சோப்பை " சவுக்காரம்" என்று சொல்வார்கள். சோப் என்றால் அவர்களுக்கு உடலுக்கு போட்டு குளிப்பது மட்டுமே. மதுரையில் தங்கிய அய்யாசாமி, ஒரு பெரிய கடையில் சென்று " சவுக்காரம் குடுங்க" என்று கேட்டார். " சவுக்காரமா? அதெல்லாம் இல்லீங்க" என்று கூறி விட்டார்கள். சுற்று முற்றும் பார்த்த அய்யாசாமி கடையில் சவுக்காரம் இருக்கும் இடத்தை கண்டு பிடித்து விட்டார். அதனை காட்டி, " ஏங்க சவுக்காரம் வச்சுகிட்டே இல்லேங்குறீங்க" என கேட்க, " இதுவா சவுக்காரம்? இது சோப்புங்க" என சிரிக்க ஆரம்பித்து விட்டார் கடைக்காரர். சுற்றி இருந்தவர்களும் சவுக்காரம் என்ற வார்த்தை கேட்டு சிரிக்க, " அப்ப குளிக்கிற சோப்பை என்னன்னு சொல்லுவீங்க" என்றார் அய்யாசாமி . ""ம்ம் சோப்பு" " துவைக்கிறது ?" " அதுவும் சோப்பு தான் ". அப்ப எப்படிய்யா ரெண்டுத்துக்கும் வித்தியாசம் கண்டு பிடிப்பீங்க" என்ற கேள்விக்கு பதில் இல்லாமலே திரும்பினார்.

இப்போ சென்னை வாசியான பின் அவரும் ரெண்டையும் சோப்பு என்றே கூற ஆரம்பித்து விட்டார்.

Friday, March 4, 2011

ஹைதராபாத் பயண கட்டுரை நிறைவு பகுதி

ஹைதராபாத் பயண கட்டுரையின் நிறைவு பகுதி இது. விட்டு விட்டு எழுதியதை பொறுத்து கொண்டு வாசித்த நண்பர்களுக்கு நன்றி

முதலாவதாக இரு சிறு வீடியோக்கள். ராமோஜி பிலிம் சிட்டியில் எடுத்தது.

ஜப்பான் பெண்களின் நடனம்..இது செட்டிங்குகள் உள்ள இடம். சந்திரமுகி செட்டிங் தொடங்கி பல ராஜா கதைகள் இங்கு தான் எடுக்க படுகின்றன. பிலிம் சிட்டியில்   எடுக்கப்பட்ட மற்ற படங்கள் சில:
ஸ்பைடர்மேனும்   சாதாமேனும்           (வலது) படங்களின் சண்டை காட்சி நடக்கும் இடம்
 நாகார்ஜுனா சாகர் அணை

ஹைதராபாத் டூரிசம் காலை ஏழு மணிக்கு ஒரு நாள் டூரில் நாகார்ஜுனா சாகர் அணை அழைத்து சென்று திரும்புகிறார்கள். இதில்தான் சென்றோம்.  அந்த குளிரில் நம்மை ஏழு மணிக்கு வர சொல்லி விட்டு பஸ் மெதுவாக எட்டு மணி வாக்கில் வந்தது. 

அணைக்கு சென்று சேர மதியம் ஆகி விடுகிறது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் மதிய சாப்பாடிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். சாப்பிட்டு விட்டு அங்கிருந்த இனிய சூழலை சற்று நேரம் ரசித்து கொண்டிருந்தோம். இங்கு நிறைய மலர்கள் & பட்டர்பிளை  இருக்க, ஐயா சாமி பட்டர்பிளையை வீடியோ எடுக்கிறேன் என கேமராவுடன் திரிந்தார். ம்ஹும் கடைசி வரை அவரால் பட்டர்பிளையை படம் பிடிக்க முடிய வில்லை. 
Dam

இங்கு காத்திருக்கும் நேரம் எங்களுடன் வந்த இரு ஆட்களால் மிக நீடித்தது. சாப்பிடும் நேரத்தில் இவர்கள் இருவரும் அங்கிருந்த பார் ஒன்றில் சென்று புகுந்து விட, பஸ் கிளம்பும் நேரத்தில் வெளியே வந்து விட்டு, பின் நிதானமாக போய் சாப்பிட்டு விட்டு வந்தனர். ம்ம் இப்படியும் மனிதர்கள்! மற்றவர்களை காக்க வைக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல்..!  குடி மனிதர்களை எப்படி ஆக்குகிறது!

குடித்த பின் எங்களுடன் பேருந்தில் வந்த கைடை (72 வயது மனிதர்) கிண்டல் செய்தவாரே வந்தனர். அவர் மிக பொறுமையாய் இருந்தார். கைடிடம் பேசிய போது அரசாங்கத்தில் இருந்து ஓய்வு பெற்றவர் என்பதும், கேன்சரில் தன் மனைவியை சமீபத்தில் தான் இழந்தார் என்பதும் தெரிந்தது. அதனை சொல்லும் போதே குரல் கமறி விட்டது. இந்த வயதான காலத்தில் உழைத்து சாப்பிட வேண்டிய நிலை இவருக்கு. ஒவ்வொரு நாளும் டூர் முடிய நள்ளிரவு ஆகி விடுகிறதென்றும் அதன் பின் தன் மகன் வீட்டை போய் தொந்தரவு செய்ய வேண்டி உள்ளது என்று குற்ற உணர்வுடன் சொன்னார் இவர்.
சாப்பிட்ட இடத்திலிருந்து பின் போட்டில் பயணம். அப்போது தான் அணை எவ்வளவு பெரிய இடத்தில கட்ட பட்டுள்ளது என்று புரிகிறது. ஆயிரக்கணக்கான மனிதர்கள் பல்லாண்டுகள் உழைப்பில் உருவானது இந்த அணை. பாறைகளை பல கிலோ மீட்டர் தூரம் குடைந்து இந்த நீர் தேக்கத்தை உருவாக்கியுள்ளனர்.


அரை மணி பிரயாணத்துக்கு பின் சென்ற இடத்தில் அணை கட்ட பட்ட தோண்டிய போது கிடைத்த பொருட்கள் கண் காட்சியாக வைத்துள்ளனர். இவை பார்த்து முடித்து விட்டு பின் மீண்டும் பயணித்து பஸ்சுக்கு வந்தோம். 

வரும் வழியில் எட்டிபட்டாளா நீர் வீழ்ச்சி காண கூட்டி சென்றனர். இரவில் நீர் வீழ்ச்சி பார்க்கவே சிரமம். ஆனால் நீர் வீழ்ச்சியில் விளக்குகள் (Light show) போட்டிருந்ததால் சற்று தெரிந்தது. இதன் அருகில் ஒரு முதலை பண்ணை உள்ளதாம். பகலில் வந்தால் பார்க்கலாம் என்றனர். 

நாங்கள் வந்த பஸ் இங்கு பன்க்ச்சர் ஆகி விட, கிளம்ப நெடு நேரம் ஆனது. இருட்டான இடம். நாங்கள் சென்னையில் போகும் வழியில் இருபது ரூபாய்க்கு வாங்கிய சிறு டார்ச் தான் பன்க்ச்சர் ஒட்ட உதவியது.

பாரடைஸ் ஹோட்டல்பாரடைஸ் ஹோட்டல் பிரியாணி ரொம்பவே ஸ்பெஷல் என்று கேள்வி பட்டு கிளம்பும் நாளன்று மதியம் சென்று சாப்பிட்டோம். யப்பா!! செவ்வாய் கிழமை.. மதிய நேரம்.. உட்கார இடம் இன்றி காத்திருக்க வேண்டியதாயிற்று.   இத்தனைக்கும் கிட்டத்தட்ட ஐநூறு பேருக்கு மேல் அமர்ந்து சாப்பிடும் அளவு இடம் உள்ளது. சிக்கன், மட்டன் இரண்டுமே வாங்கினோம். செம டேஸ்ட்டி! இங்கு பிரியாணியை படம் எடுக்க முயன்ற போது ஹவுஸ் பாஸ் & பெண் இருவரும் "இதை எல்லாமா போட்டோ எடுப்பார்கள்?" என கிண்டல் செய்து நிறுத்தி விட்டார்கள். :(((

பிர்லா மந்திர் கோயில் 


முழுக்க முழுக்க மார்பில்களால் ஆன அழகான கோயில். இதன் maintenance வியக்க வைக்கிறது. சிறு குப்பை கூட இல்லாமல் அப்படி ஒரு சுத்தம். இது ஒரு பெருமாள் கோயில் ஆயினும் புத்தர், சாய் பாபா, பிள்ளையார் உள்ளிட்ட மற்ற பல கடவுள்கள் சந்நிதியையும் பார்க்க முடிகிறது. ஆங்காங்கு இயேசு, புத்தர் போன்றோர் சொன்ன பொன்மொழிகளையும் காண முடிகிறது. கோயிலினுள் படம் எடுக்க அனுமதி இல்லை. கோயில் மேலிருந்து பார்க்க ஹைதராபாத் முழு வியூ தெரிகிறது.

கோயிலின் மொத்த படிகள் ஏறுவது கிட்ட தட்ட நான்கு மாடி   ஏறுவது போல. இவற்றில் மூன்று மாடி அளவிற்கு ஏற லிப்ட் உள்ளது. இது பலருக்கு தெரியாது. மிக சிலரே உபயோகிக்க பலரும் படி ஏறியே செல்கின்றனர். கோயிலுக்கு வந்தவர்களில் நிறைய தமிழ் குரலை கேட்க முடிந்தது

புத்தர் சிலை உள்ள அந்த ஏரி, பார்குகள் அனைத்தும் இந்த கோயிலுக்கு அருகில் தான் இருப்பதை உணர முடிகிறது. காலை ஏழு மணிக்கு திறக்கும் இக்கோயில் இரவு ஒன்பது மணி வரை திறந்துள்ளது (மதியம் பன்னிரண்டு டு மூன்று மணி வரை திறந்திருக்காது). ஹைதராபாத் செல்வோர் தவறாமல் போகும் இடங்களுள் இதுவும் ஒன்று.

கோல்கொண்டா கோட்டை
மெயின் சிட்டியிலிருந்து சற்று தொலைவில் (சுமார் 15 கிலோ மீட்டர்) உள்ளது கோல்கொண்டா கோட்டை. இது பதிமூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டை.  400 அடிகள் மலைமேல் ஏறுவது போல் ஏற வேண்டும். நாங்கள் நல்ல வெயிலில் சென்றதால் முக்கால் வாசி தூரம் மட்டும் ஏறி விட்டு திருப்தி அடைந்து திரும்பி விட்டோம். நான்கு கோட்டைகள் இதற்குள் உள்ளன.

பழைய காலத்தில் பயன்படுத்திய சில அரிய பொருட்கள் சேமித்து பார்வைக்கு வைத்துள்ளனர். மாலையில் நடக்கும் லைட்  ஷோ மிக அருமையாக இருக்கும் என்கின்றனர். 
சின்ன சின்னதாக நிறைய சுவாரஸ்யங்கள் இங்கு உள்ளன. தூரமாக உள்ள இரு சுவரில், ஒன்றிலிருந்து நீங்கள் பேசினால் அது மறு புறம் காது வைத்து கேட்டால் கேட்கிறது.   மற்றொரு குறிப்பிடத்தக்க இடம்..ராஜா மக்களை வந்து சந்திக்கும் இடம். இங்கு நீங்கள் கல்லை எறிந்தால் அது மேலே செல்லாமல் கீழே விழுந்து விடுகிறது. ராஜாவை பாது காக்க இந்த ஏற்பாடாம். 

இங்கு நுழைவு டிக்கட் மிக குறைவு (ஐந்து ருபாய்) என்பதால் ஏழை கல்லூரி காதலர்களின் பூங்காவாகவும் உள்ளது. 

ஹைதை : இன்னும் சில தகவல்கள்

** சென்னையில் பீச்சில் வரிசையாக சிலைகள் இருப்பது போல அங்கு ஹுசைன் சாகர் ஏரிக்கு அருகே ஏ..கப்பட்ட சிலைகள் உள்ளன. இந்த ஏரிக்கு நடுவே புத்தர் சிலை உள்ளது. படகில் சவாரி செய்து புத்தர் சிலையை அருகில் சென்று பார்க்கும் வசதி உள்ளது. ஆனால் ஏரி நம்ம கூவம் போல கருப்பாக உள்ளதால் நாங்கள் போகலை.

** காரில் செல்லும் போது தொடர்ந்து லோக்கல் எப். எம்.மில் தெலுகு பாடல்கள் கேட்டு கொண்டிருந்தோம். என்ன ஆச்சரியமெனில் பெரும்பாலான பாடல்கள் தமிழில் நாம் கேட்டவை தான். அவை தெலுகுக்கும் போயிருக்கின்றன !

**இங்குள்ள ஜூபிலி ஹில்ஸ் மிக பேமஸ். நாகார்ஜுனா, சிரஞ்சீவி, பால கிருஷ்ணா என அனைத்து பெரிய நடிகர்களும் இங்கு தான் வசிப்பதாக எங்கள் டிரைவர் பரவசத்துடன் கூறினார்.

** ஆட்டோவிற்கு மினிமம் 15 ரூபாய் வாங்குகிறார்கள் (சென்னையில் முப்பது!) ஆட்டோகள் கண்டிஷன் மோசமாக உள்ளது (வருஷா வருஷம் FC வாங்க வேண்டியதில்லை என்றார் ஒருவர். உண்மையா தெரியலை)
** ஜூனியர் காலேஜ் என நிறைய பார்க்க முடிகிறது. தமிழகத்தில் படிக்கும் +1, +2  அங்கு இவ்வாறு அழைக்க படுகிறது. இவற்றில் தனியாரும் உண்டு என்பதோடு நிறைய பேர் அரசாங்க அனுமதி ( Recognition ) இன்றியும் நடத்தி, பிரச்சனை நிறைய வருவதாக சொன்னார்கள்

**ஹைதையில் சாலைகள் அற்புதமாக உள்ளன. சென்னை போல் டேமேஜ் ஆன ரோடுகள் அநேகமாய் பார்க்கலை. நிறைய ஓவர் பிரிட்ஜுகள் உள்ளன. குறிப்பாய் மேதி பட்டினம் அருகே உள்ள ஓவர் பிரிட்ஜு 11 கிலோ மீட்டர் தூரத்திற்கு உள்ளது. விமான நிலையத்திலிருந்து ஊருக்கு செல்ல இது உதவுகிறது. ஹைதை விமான நிலையம் மிக மிக அழகானது என்றனர். பார்க்க வில்லை.

** எங்கள் நான்கு நாள் சுற்று பயணம் நல்ல படியாக முடிந்தது. நான்கு நாள் அதிகமும் இல்லாமல், குறைவாகவும் இல்லாமல் மிக சரியாக இருந்தது. சென்ற நேரமும் (டிசம்பர்) மிக சரியான நேரம். நல்ல சாப்பாடு, அருமையான இடங்கள், சந்தித்த சில நல்ல மனிதர்கள், நினைவில் சுமக்க பல இனிய நினைவுகள் வேறென்ன வேண்டும் நான்கு நாள் சுற்றுலாவில்?
(ஹைதை பயணம் முடிந்தது !)
Related Posts Plugin for WordPress, Blogger...