Wednesday, October 31, 2012

புயலுக்கு முந்தைய சென்னை

சென்னையை நீலம் புயல் இன்னும் சிறிது நேரத்தில் தாக்கவுள்ளது. இதன் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என தெரிகிறது. புயலுக்கு முந்தைய ரிப்போர்ட் இது. இப்போதே காற்று மிக மிக அதிகமாக (புயல் போலவே) வீசுகிறது.
**
காலை அலுவலகம் வரும்போதே டூ வீலர் காற்றில் ஆட துவங்கி விட்டது. வண்டி ஓட்டுவது மிக கடினமாய் இருந்தது.

பல தனியார் நிறுவன ஊழியர்கள் பணிக்கு வந்து விட்டனர். புயல் காரணமாக மதியத்துக்கு மேல் நிர்வாகம் அவர்களை வீட்டுக்கு
அனுப்பி விட்டது. சில இடங்களில் இரவு நேர பணி செய்வோருக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது



சென்னை மக்கள் எப்போதும் sincerityக்கு பெயர் போனவர்கள். இன்றும் பல நிறுவனங்களில் 90 சதவீத அட்டெண்டன்ஸ் இருந்தது.

கூகிள் பிளஸ்சில் வெவ்வேறு ஊரிலிருக்கும் நிலையை நண்பர்கள் பகிர்ந்து கொண்டிருந்தனர். அடித்த காற்றில் டூ வீலர் ஓட்டுபவரின் ஹெல்மெட் பறந்து போனதாக ஒரு நண்பர் குறிப்பிட்டிருந்தார்.

மாயவரம், பூம்புகார் உள்ளிட்ட இடங்களில் மிக அதிக மழை மற்றும் காற்று என்று நண்பர்கள் தெரிவித்தனர்

என் பெண்ணுக்கு நவம்பர் 1- யூனிட் டெஸ்ட்கள் ஆரம்பம் ; அதற்கு இரு நாட்கள் முன் லீவு. அவர்கள் பள்ளியில் நோட்டுகளை வாங்கி வைத்து கொண்டு பரீட்சைக்கு முதல் நாள் தான் தருவார்கள் ( பசங்க எப்படி படிப்பார்கள் என்ற யோசனையே கிடையாது ) ஒவ்வொரு நாளும் லீவு விட விட ஜாலி ஆனாள் அவள். அரசே லீவ் விட்டால் கூட, அவர்கள் பள்ளியில் லீவு என அறிவித்தால் மட்டுமே லீவு என எடுத்துகொள்ள முடியும். பல முறை அரசு லீவு என அறிவித்த பின்னும் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளி வைத்துள்ளனர்

காலை காம்பவுண்ட் மேலே இருக்கும் தொட்டி எல்லாம் இறக்கி தரையில் வைத்தோம்; ஆனால் அப்படியும் காற்றில் அவை விழுந்து உடைய துவங்கி விட்டன. எங்கள் வீட்டினருகில் இருக்கும் அனைத்து கார்களிலும் அவற்றின் கவர்கள் கிழிந்து பறக்க ஆரம்பித்து விட்டது. சில வீடுகளில் பிளாஸ்டிக் டேன்க் மூடிகள் உடைந்து பறந்து வந்து விழுகிறது.

எங்கள் அலுவலக காம்பவுண்ட் உள்ளே பல நாய்கள் எப்போதும் இருக்கும் அவற்றின் ஓலம் பெரிதாக இருக்கிறது. அவை மிக பயந்து போயிருக்கின்றன.

ரயில்கள் மதியத்துக்கு மேல் நிறுத்தப்பட்டு விட்டன. வீட்டுக்கு செல்வோர் பஸ்ஸை தான் நாட வேண்டியுள்ளது.

பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டது. எப்போது வருமோ தெரியாது.

இந்த நிமிடம் வரை விமான போக்குவரத்து நிறுத்தப்படவில்லை. புயல் ஆரம்பித்தால் நிறுத்தப்படலாம் !

மாலை ஆறு முதல் எட்டு வரை புயல் அடிக்க கூடும்

பிற தகவல்களை கரண்ட் இருந்தால் பின்னர் பகிர்கிறேன் !

*****
புயலில் கடைபிடிக்க எச்சரிக்கை என தட்ஸ் தமிழ்/ தளிர் சுரேஷ் பகிர்ந்த சில தகவல்கள் &  அவசர உதவி நம்பர் இதோ:

மின்கம்பங்கள் சாயலாம்

பொதுவாக மழைகாலத்தில் தேங்கிக் கிடக்கும் மழைநீரில் மின்சாரம் பாய்வதற்கு வாய்ப்பிருக்கிறது. புயல் காலங்களில் முறிந்து விழும் மரங்கள், மின்கம்பங்கள் அருகே செல்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

மரங்கள் விழலாம் - கீழே ஒதுங்காதீர்கள்

புயலடித்துக் கொண்டிருக்கும் நிலையில் மரங்களின் கீழே மழைக்கு பாதுகாப்பு என ஒதுங்கி நிற்பதைத் தவிர்க்க வேண்டும். தேவையில்லாமல் மழை நீரில் நடந்து போவதைத் தவிர்க்கவும்

சுவிட்சுகளை முடிந்தவரை ஆப் செய்யுங்கள்

புயல் காற்று வீசும் நிலையில் வீடுகளில் மின்சாதனங்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களுக்கான சுவிட்சுகளை கூடுமானவரை அணைத்தே வைக்கவும்.

மெழுகுவர்த்திகள் ஸ்டாக் இருக்கட்டும்

மின்சாரம் துண்டிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் வீட்டில் மெழுகுர்த்திகளை போதிய அளவில் வைத்துக் கொள்வது நல்லது.

தற்போதைய நிலம் புயலுக்கான முன்னெச்சரிக்கையின் போது வானிலை மையமும் கூட தகவல் தொடர்பு சாதனங்கள் பாதிக்கப்படும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.

அவசர உதவிக்கு...

புயல் மற்றும் மழை வெள்ளம் குறித்த விவரங்களை அறிய சென்னையில் தகவல் மையம் திறக்கப்பட்டிருக்கிறது. இதன் தொலைபேசி எண்: 044-28447727 .

சென்னையில் புயல், மழை பற்றிய அறிய 044-28447734 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
***
தொடர்புடைய பதிவு:

சென்னை புயல்: After effects : நேரடி அனுபவம் + படங்கள் : இங்கு வாசிக்கலாம்

வானவில்: வேளச்சேரி- தூத்துகுடி-ரம்யா நம்பீசன்

ப்பதிவு வெளியிடப்படும் நேரம் சென்னையில் மழை பொத்து கொண்டு ஊற்றுகிறது. நீலம் புயல் எந்நேரமும் தாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் நம்ம "சமூக கடமை"யை ஆற்றாமல் இருக்கமுடியுமா? இதோ வானவில் ..

வாசித்ததில் பிடித்த செய்தி

தூத்துக்குடி நகரத்தின் நோ பார்க்கிங் ஏரியாவில் வாகனங்கள் இருந்தால், காவல் துறை அதிகாரிகள் வித்யாசமான முறையில் அதை கையாளுகிறார்கள். வாகனங்களில் ஒரு ஸ்டிக்கர் ஒட்டி விடுகிறார்கள். அதில் " பண்பாளர்களே ! போக்குவரத்துக்கு இடையூறாய் இப்படி வாகனம் நிறுத்துவது சரியா? என்று எழுதப்பட்டிருக்கிறது. இவ்வாறு ஒட்டப்படும் ஸ்டிக்கர் மீண்டும் எளிதில் அகற்ற முடியாத படி இருப்பதால், அந்த வாகனங்கள் ஒரு முறை போக்குவரத்து விதிகளை மீறியவை என்பதும் தெளிவாக தெரிகிறது.

இந்த நடவடிக்கையால் அந்த வாகனங்கள் மட்டுமல்ல, பிற வாகனங்களும் விதிகளை மீறுவது குறைகிறதாம். மாற்றி யோசி என்பதை நிஜமாவே செஞ்சுருக்காங்கப்பா ! பாராட்டுகளும் வாழ்த்துகளும் !

அழகு கார்னர்

பொண்ணு மூக்கும் முழியுமா இருக்குன்னு சொல்லுவாங்களே... அது இது தான்...


வருடத்துக்கு ஒரு அட்டகாசமான தமிழ் படத்தில் நடித்திடுறார் இந்த அம்மணி. சென்ற வருடம் இவர் நடித்த குள்ள நரி கூட்டம் பார்த்த போதே அய்யாசாமி கிளீன் போல்ட். இவரது இந்த வருட ஹிட் பிட்சா ! இன்னும் பார்க்கலை.. இவருக்காகவே பார்க்கணும் !

சம்பவம்

வேளச்சேரி விஜயநகர் பஸ் ஸ்டாண்ட் தாண்டி என் அலுவலகம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருக்கிறேன். முன்னே வேகமாக ஓடும் பஸ்ஸிலிருந்து திடீரென ஒருவன் மல்லாக்க விழுந்தான். என் பைக்கிற்கு சற்று முன்னே ஒருவன் இப்படி திடீரென விழுந்து மிரள மிரள விழிக்க வண்டியை ஓரம் கட்டினேன். அதற்குள் சைக்கிளில் சென்ற ஒருவர் ஓடி போய் தூக்கினார். பின் மண்டையில் ரத்தம் வருதா என உற்று பார்த்து விட்டு மிக வேகமாக அந்த இடத்தை தேய்த்து விட்டார். அருகிலிருந்த கையேந்தி பவன் கடைக்காரர் ஓடி வந்து தண்ணீர் கொடுத்தார். அவன் சென்ற பஸ் அவன் விழுந்ததும் நிறுத்தப்பட்டிருந்தது. ஒரு நண்பன் மட்டும் இறங்கி இவனருகே வந்து விட்டான். பெரிய அடி இல்லை என தெரிந்ததும் பஸ் இவர்களை விட்டு விட்டு சென்று விட்டது.

எந்த கல்லூரி என்றால் ஒரு கிலோ மீட்டரிலிருக்கும் குருநானக் என்றனர். " மண்டை உடைஞ்சா என்ன ஆறது? உள்ளே போனாதான் என்ன?படிக்கட்டில் தான் தொங்கணுமா?" என ஆள் ஆளுக்கு அட்வைஸ் செய்ய, இரு மாணவர்களும் ஏதும் பேசாமல் கல்லூரி நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

எனக்கு ஆச்சரியமாய் இருந்த விஷயம் ஒருவன் ரோடில் விழுந்ததும் உதவ பலர் ஓடி வந்தது தான். இன்னும் மனிதகளிடம் இரக்கம் எங்கோ ஓரத்தில் இருக்கிறது போலும் !

கிரிக்கெட் கார்னர்

சாம்பியன்ஸ் லீக் இருபது ஓவர் போட்டி அதிக வரவேற்பின்றி நடந்து முடிந்துள்ளது. சென்னை, மும்பை, டில்லி, கல்கத்தா ஆகிய ஐ. பில் எல் அணிகள் சென்றாலும் டில்லி மட்டும் தான் செமி பைனல் வரைக்குமாவது வந்தது. நம்ம ஐ. பி. எல் கிங்குகள் எல்லாம் இந்திய மண்ணில் தான் வெளுப்பார்கள் போலும் ! ஆஸ்திரேலிய அணியான சிட்னி சிக்சர் இந்த கோப்பையை வென்றது. இத்தனைக்கும் பாட்டிங்கில் சொல்லிக்கொள்ளும் படி அங்கு யாரும் இல்லை !

அடுத்து இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டிகள் தொடங்குகிறது. சச்சின் இதிலாவது ஏதாவது உருப்படியாய் contribute செய்கிறாரா என பார்ப்போம் !

போஸ்டர் / QUOTE கார்னர்



கழிப்பறை இல்லாத வீடுகளுக்கு நோ திருமணம் !

" கழிப்பறை இல்லாத வீடுகளுக்கு எந்த பெண்ணும் மணமகளாக செல்ல கூடாது" என்று திருவாய் மலர்ந்துள்ளார் மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ். இது எந்த அளவு சாத்தியம், நாட்டில் கழிப்பறை இல்லாத வீடுகள் எத்தனை கோடி, கிராமத்து மண பெண்ணுக்கு இதை சொல்லுமளவு உரிமை தரப்பட்டுள்ளதா என பல கேள்விகள் எழுகிறது.

நிற்க. வீடுகளை விடுங்கள். நம் நாட்டில் போதுமான அளவு பொது கழிப்பிடங்கள் உள்ளனவா? அவை ஒழுங்காய் பரமாரிக்கப்படுகிறதா? சமீபத்தில் வெளியில் சென்ற போது, பொதுகழிப்பிடம் தேடி நெடு நேரம் அலைந்து திரிந்து கடைசியில் ஒரு மருத்துவ மனையில் நைசாய் உள்ளே போய் வேலையை முடித்து விட்டு வர வேண்டியதாயிற்று.
பொது சுகாதாரம் என்கிற விஷயத்தில் இந்தியா செல்ல வேண்டிய தூரம் ஏஏஏஏஏஏராளம் !

பதிவர் பக்கம்

இருவர் உள்ளம் என்கிற தலைப்பில் ப்ளாக் எழுதுகிறார் ஒரு நண்பர். ப்ளாகின் லிங்க் இதோ

உடல் நலம் குறித்த தகவல்கள் இவர் ப்ளாக் முழுதும் கொட்டி கிடக்கிறது. பல்வேறு காய்கள், பழங்கள் இவற்றின் பலன்கள் மற்றும் சிறு சிறு வியாதிகள் போக என்ன செய்யலாம் என்பது போன்ற தகவல்களுக்காகவே இந்த ப்ளாக் இயங்குவது நல்ல விஷயம். வாசித்து பாருங்கள் !

Tuesday, October 30, 2012

டிவி மெக்கானிக் வாழ்க்கை : அறியாத தகவல்கள்

ங்கள் வீட்டு டிவி திடீரென ஒரு நாள் உடல்நலமின்றி போனது . தானாகவே சரியாகும் என சில நாள் பொறுத்திருந்து பார்த்தால் , அப்படி ஒன்றும் நடக்கலை. டிவி பார்க்காமல் இருப்பது நல்லது தான் எனினும், வேறு வித பின் விளைவுகள் வரும்போல் இருந்தது. வாரக் கடைசிகளில் பெண் " ரொம்ப போர் அடிக்குது; எங்காவது ஷாப்பிங் போகலாம்" என்று சொல்ல, "ஆஹா; டிவி இல்லாததால் வந்த வினையா? இதுக்கு டிவியை சீக்கிரம் சரி பண்ணிடலாம் என மெக்கானிக் ஒருவரை வரவழைத்தேன்.



மாசிலாமணி என்கிற அந்த மெக்கானிக் வந்து சேர்ந்தார். மிக பருமனான உருவம். கட கட கடவென பேசுகிறார். இவரிடம் இந்த பேட்டி எடுக்கும் எண்ணமே இல்லை. அவர் பாட்டுக்கு டிவி சரி செய்ய, நான் வழக்கம் போல் புத்தகம் படித்துக் கொண்டு அரை தூக்கத்தில் தான் இருந்தேன். விடாமல் அவர் பேசியதில் கொஞ்சமாய் அவரிடம் பேசலானேன். பாதி தூரம் தாண்டியதும் " பேட்டிக்கான பொறி தட்ட" எழுந்து உட்கார்ந்து விட்டேன்.

இனி அவர் பேசியதில் இருந்து:

" நமக்கு சொந்த ஊர் திருவண்ணாமலை. சென்னைக்கு வந்து முப்பது வருஷம் ஆகுது. என்னை பாத்தா என்ன வயசு தெரியுது? "

" நாப்பது இருக்குமா சார்?"

மகிழ்ச்சியாகி " அம்பத்தி மூணு ஆச்சு. ப்ளஸ் டூ முடிச்சிட்டு டிவி மெக்கானிசம் டிப்ளமோ படிச்சேன். கல்கத்தாவில் இருக்கும் ஒரு டிவி கம்பனி அப்போ வேலைக்கு ஆள் எடுத்துது. அதோட சென்னை பிரானச்சில் நான் வேலைக்கு சேர்ந்தேன். இருபது வருஷம் அதே கம்பனியில் வேலை. அந்த கம்பனி மூடிட்டாங்க. அப்புறம் நானே சொந்தமா வேலை பார்க்க ஆரம்பிச்சிட்டேன். "

" எனக்கு ஒரே பொண்ணு. அதுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. ஒரு தம்பி இருக்கான். எனக்கு பதினேழு வருஷம் கழிச்சு பிறந்தவன். அவனை மூணாவதில் இருந்து நான் தான் வீட்டில் வச்சி படிக்க வைக்கிறேன். அவன் எனக்கு பையன் மாதிரி தான். நிறைய பேர் அவனை என் தம்பின்னு நினைக்க மாட்டாங்க. பையன்னு தான் நினைப்பாங்க. அவனிடமே " உங்க அப்பா எங்கன்னு என்னை பத்தி கேட்பாங்க . இப்போ அவன் பெங்களூரில் இருக்கான்"

தன் மகளுடன் சேர்த்து தன் தம்பியையும் மகன் போல சொல்கிறாரே என ஆச்சரியமாய் இருந்தது !

" இப்போல்லாம் எல்லாரும் LCD டிவி தான் வாங்க ஆரம்பிச்சிட்டாங்க; LCD தவிர மற்ற டிவி எல்லாம் இனிமே படுத்துடும். இப்போ முப்பதாயிரத்துக்கு நல்ல LCD டிவி கிடைக்குது. போக போக இன்னும் விலை குறையும். லாஸ்ட் ரெண்டு வருஷத்தில் LCD டிவி விலை செமையா குறைஞ்சிருக்கு "

அவர் முதலில் டிவி ரிப்பேர் பார்த்த காலம் பற்றி கேட்க, " அப்போல்லாம் எங்களுக்கு ரொம்ப நல்ல மரியாதை இருந்தது. டிவின்னாலே மக்களுக்கு புதுசு இல்லையா? அப்படி புது விஷயம் சரி பண்ற ஆளுங்களை மரியாதையோடு பார்த்தாங்க. இப்போ அந்த மரியாதை எல்லாம் குறைஞ்சு போச்சு. இப்போ எல்லாரும் ஐ. டி கம்பனியில் சாப்ட்வேர் வேலை பார்க்க தான் விரும்புறாங்க. இப்போ TV-க்கள் ரொம்ப ரொம்ப அதிகமாகிடுச்சு. ஆனா மெக்கானிக்குங்க முன்பு இருந்த அளவு கூட இல்லை".

" முத முதல்லே டிவி வந்தப்போ தூர்தர்ஷன்லே ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் தான் நிகழ்ச்சி இருக்கும். அப்புறம் டில்லி டிவி வந்துச்சு ; தமிழ் நிகழ்ச்சி முடிந்தவுடனே ஹிந்தி நிகழ்ச்சின்னு சொல்லி அதை காட்டுவாங்க. இப்போ எவ்ளோ சேனல். எவ்ளோ நிகழ்ச்சி ! ஆனா மக்கள் ஏன் தான் இவ்ளோ நேரம் டிவி பாக்குறாங்களோ தெரியலை ! ஏதோ டிஸ்கவரி சேனல் மாதிரி நமக்கு தெரியாத, நாம நேர்ல பார்க்காத விஷயம்னாலும் பரவாயில்லை. ஆனால் அதை எங்கே பாக்குறாங்க. வேற எதை எதையோ பாக்குறாங்க "

இந்த வேலைக்கு என்ன படிக்கணும் என்று கேட்டதற்கு " பிளஸ் டூ முடிச்சவுடன் இதுக்குன்னு டிப்ளமோ கோர்ஸ் இருக்கும். அதை படிக்கணும். அப்புறம் ஒரு டிவி கம்பனியிலோ அல்லது டிவி ரிப்பேர் கடையிலோ சேர்ந்து வேலை பார்த்து தொழில் கத்துக்கணும். அப்புறம் தான் தனியா கடை போடவோ அல்லது தானே தனியா வீடுகளுக்கு போய் ரிப்பேர் செய்வதோ முடியும்.

இந்த தொழிலுக்கு ரொம்ப முக்கிய விஷயம் பொறுமை. சில வேலைகள் சீக்கிரம் முடியும். சில விஷயம் ரொம்ப லேட் ஆகும். நாங்களும் டாக்டர் மாதிரி தான் சார். டாக்டர் எப்படி உடம்புக்கு என்னன்னு பார்த்து மருந்து தர்ராறோ அது மாதிரி நாங்க டிவிக்கு என்ன பிரச்சனைன்னு பார்த்து சரி செய்யணும். டாக்டர் கிட்டே நோயாளி வாய் திறந்தாவது என்ன பிரச்சனைன்னு சொல்லுவான். எங்களுக்கு அதுவும் கிடையாது. நாங்களே என்ன பிரச்சனைன்னு கண்டுபிடிக்கணும். அதான் நிறைய பொறுமை வேணும்னு சொன்னேன். பொறுமை இல்லாதவங்க இந்த தொழிலில் இருக்க முடியாது. கொஞ்ச நாளில் இது நமக்கு சரி படாதுன்னு ஓடிடுவாங்க "

கம்பனியில் இருந்து வரும் டிவி மெக்கானிக்குகள் பற்றி கேட்க, " இப்போல்லாம் கம்பனிகளில் பாலிடெக்னிக் அல்லது டிகிரி முடிச்ச ஆட்களை தான் எடுக்குறாங்க. அதுக்கு மேலே டிவி ரிப்பேர் படிப்பும் படிச்சிருக்கணும். முன்னே எல்லாம் வெறும் டிவி பற்றி டிப்ளமோ படிச்சால் போதும். இப்போ அப்படி இல்லை. நிறைய பேர் படிச்சு முடிச்சிடுறதால், டிப்ளோமா படிச்ச ஆட்களை தான் எடுக்குறாங்க. அவங்க எல்லாருக்கும் டிரெயினிங் தர்றாங்க. ஆனா எல்லாரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஸ்கூலில் படிக்கிற எல்லாரும் நல்லா படிச்சிடுறாங்களா என்ன ? அங்கேயும் நல்லா படிக்காதவங்க இருப்பாங்க இல்லை? அப்படி தான். பெரிய கம்பனியில் இருந்து வரும் மெக்காநிக்கில் சில பேர் நல்லா இருப்பாங்க. சில பேர் ஒழுங்கா பாக்க மாட்டாங்க. நல்லா பாக்குற மெக்கானிக்கா இருந்தா கம்பனியில் டிவி ரிப்பேர் பண்ணுவது நல்லது தான் "

நீங்கள் ஏன் தனி கடை வைக்க வில்லை என்று கேட்க " மக்கள் தனி கடை வச்சிருந்தா படுத்தி எடுத்துடுவாங்க. எல்லாருக்கும் உடனே டிவி வேணும். எல்லாரும் அவசர படுத்துவாங்க. அதையெல்லாம் நான் நேரில் பார்த்துட்டு தான் கடை வைக்க கூடாதுன்னு விட்டுட்டேன். இப்போ பாருங்க. உங்க வீட்டுக்கே வந்து டிவியை நான் பாக்குறேன். இதே கடைன்னா, டிவி எடுத்துட்டு போக ஒரு செலவு, கொண்டு வர ஒரு செலவு. வீட்டில் வந்து ரிப்பேர் பார்த்தா இந்த செலவு மிச்சம் !"

"மெக்காநிக்குகளே குறைவு என்றால் உங்களுக்கு நிறைய டிமாண்ட் இருக்கும் இல்லையா? " என்று கேட்க, "அப்படி சொல்ல முடியாதுங்க; சில நேரம் வேலை இருக்கும். சில நேரம் இருக்காது. இதை ஒண்ணும் பண்ண முடியாது " என்றார்.

டிவி ரிப்பேர் செய்பவர்கள் வேறு என்ன ரிப்பேர் பார்ப்பார்கள் என்று கேட்டால் " முன்பு ரேடியோவும் சேர்த்து பார்த்தனர். இப்போ FM ரேடியோ 150 ரூபாய்க்கு கிடைக்குது. வாங்கி யூஸ் பண்ணிட்டு தூக்கி போட்டுடுறாங்க. யாரும் மறுபடி ரிப்பேர் செய்வதில்லை. டிவி தவிர இப்போ சி. டி பிளேயர் ஓரளவுக்கு ரிப்பேருக்கு வருது; அவ்வளவு தான்" என்றார்.

கலைஞர் தந்த டிவியை மக்கள் எப்படி உபயோகிக்கிறார்கள் என்று கேட்டதும் சிரித்து கொண்டே சொன்னார். " டிவி இல்லாதவங்க யாருமே இல்லீங்க. அதை ரெண்டாவது டிவின்னு யூஸ் பண்றாங்க. சில நேரம் இது மாதிரி டிவி ரிப்பேர் ஆகிட்டா அது சரி ஆகும் வரை மட்டும் அதை யூஸ் பண்றாங்க" என்றார்.

டிவி மெக்கானிக்குகள் குடும்பத்தை எப்படி சமாளிக்கிறார்கள் என்று கேட்டதும் " கம்பனியில் வேலை பார்ப்பவர்களுக்கு ஏழு அல்லது எட்டாயிரம் சம்பளம் இருக்கும். தனி கடை வைப்பவர்களும் சரி, என்னை மாதிரி வீட்டுக்கு போய் டிவி ரிப்பேர் செய்பவர்களும் சரி அதே அளவு தான் சம்பாதிப்பார்கள். எப்படியோ வாழ்க்கையை ஓட்ட வேண்டியது தான் "

அவர் இருப்பது வாடகை வீடா என்று கேட்க, " இல்லை. வாடகை கொடுத்து எனக்கு கட்டுப்படி ஆகாது. என் தம்பி வாங்கின வீடு. அவன் பெங்களூரில் இருக்கான். அவன் வீட்டில் நான் இங்கே இருக்கேன்" என்று சொல்லி விட்டு கிளம்பினார்.

அவரை சந்தித்ததில் தம்பியை மகனை போல் எண்ணும் அண்ணன் - அண்ணனுக்கு குடியிருக்க தன் வீட்டை தந்துள்ள தம்பி என வித்தியாச மனிதர்களை அறிந்து கொள்ள எனக்கும் ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது !
****
தொடர்புடைய பதிவுகள்:


சலவை தொழிலாளி வாழ்க்கை: அறியாத தகவல்கள்: இங்கு

கூர்க்கா வாழ்க்கை அறியாத தகவல்கள் : இங்கு

பெங்களூர் ஆட்டோ காரர் பேட்டி : இங்கு

Monday, October 29, 2012

தொல்லை காட்சி- மனதோடு மனோ- மாற்றான்- ஜான்சி ராணி

விஜய் டிவி யும் புது படங்களும்

ஒரு புது படம் டிவி யில் போட்டால் எவ்வளவு நாள் கழித்து மறுபடி அதே படத்தை போடலாம்? ஆறு மாசம்? ஒரு மாசம்? ஒரு வாரம்? போட்ட மறு நாளே போடுறாங்க சார் விஜய் டிவி யில் ! மெரீனா படம் இந்த ஆயுத பூஜை அன்று போட்டனர். மறுபடி அடுத்த நாளே வேறு புரோகிராம் இல்லாமல் மீண்டும் மெரினாவை ஓட விட்டார்கள் ! அம்மா - ஐயா இருவர் சார்பின்றி இருக்கு என விஜய் டிவி பக்கம் ஒதுங்கினால் அங்கும் இப்படி ஒரு கொடுமை நடக்குது !!

இதே விஜய் டிவியில் போட்ட இன்னொரு புது படம்: தோனி ! இதுக்கு என் பெண்ணோட கமன்ட்: விஜய தசமி அன்னிக்கு படிக்கணும்ன்னு சொல்லுவாங்க. இவங்க என்னா படிக்க வேண்டாம்னு மெசேஜ் சொல்ற படத்தை இன்னிக்கு போடுறாங்க !"

"ஆஹா ! வா பெண்ணே வா.. வருங்கால ப்ளாகர் ஆகி சமூக பங்காற்று ! அந்த கெப்பாசிட்டி உன்கிட்டே இருக்கு" என்று சொல்லி, வாங்கி கட்டி கொண்டேன் !

ஜெயா டிவியில் மின் பற்றாக்குறை"

முதல்வர் அம்மா ஜெயா டிவியில் வந்து "மின் பற்றாக்குறை" (மின்வெட்டு இல்லிங்களாம்;மின் பற்றாக்குறையாம் ) பற்றி நிறைய பேசினார். இதற்கு முந்தைய தி.மு.க மற்றும் இப்போதைய மத்திய அரசு தான் காரணம். மேலும் தாங்கள் எடுக்கும் அனைத்து முயற்சியும் பலிக்காமல் போக என்னென்ன காரணம், etc, etc

சென்னை தாண்டி மற்ற ஊர்களில் இதை பார்த்திருப்பார்களா என்றே தெரியலை (கரண்ட் இருந்தால் தானே பார்க்க? இருக்கும் நேரம் மற்ற உருப்படியான வேலை பார்ப்பார்களா? ஜெயா டிவி போடுவார்களா)

நிற்க அம்மா பேசிய விஷயத்துக்கு வருவோம்

" பிரசவ வலி எவ்ளோ கஷ்டம் என்பதை கேட்க யாரும் தயாராய் இல்லை. குழந்தை எப்படி இருக்கு; அதை சொல்லுங்கள்" என்று ஒரு பழமொழி உண்டு.

மக்களுக்கு தேவை மின்சாரம். விளக்கங்கள் கேட்க, நம்ப யாரும் தயாராய் இல்லை.

சீரியல் பக்கம் - ஜான்சி ராணி

ஜீ (Zee ) டிவி மிக பாப்புலர் ஆகா விட்டால் கூட, அதில் வந்த நல்லதொரு சீரியல் ஜான்சி ராணி.

ஜான்சி என்கிற ஊருக்கு ராணியாக இருந்தவர் கதையை சற்று மசாலா தூவி எடுத்துள்ளனர். ஹிந்தி டப்பிங் சீரியலான இது, முன்பு தமிழில் ஒளிபரப்பாகி முடிந்தது. அதன் பெரும் வெற்றியை அடுத்து மீண்டும் மாலை ஐந்தரை மணிக்கு மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது. பல கஷ்டங்களை தாண்டி, எடுத்த குறிக்கோளில் உறுதியாய் நிற்கும் ஜான்சிராணியின் இந்த நிஜ கதை நிச்சயம் inspitrational story !

மனதோடு மனோ



ஜெயா டிவியில் " மனதோடு மனோ " நிகழ்ச்சி பாடகர் அல்லது இசை அமைப்பாளர் ஒருவரின் திரை உலக அனுபவங்கள் பற்றி ஜாலியாய் பேசுகிறது.

இதில் சமீபத்தில் LR ஈஸ்வரி வந்து பேசினார்/ பாடினார். "மாலை நேரத்து மயக்கம் " " பட்டத்து ராணி பார்க்கும் பார்வை" போன்ற சில மறக்க முடியாத பாடல்கள் பாடினாலும் ஆடி மாதம் ஸ்பீக்கரில் இவர் பாட்டுகளை கேட்டு கேட்டே மிரண்டு போன தலைமுறையை சேர்ந்தவர்கள் நாங்கள். என் நண்பன் வழக்கறிஞர் பாலா இவர் பாட்டு கேட்டாலே டென்ஷன் ஆகி     " பாட்டை நிறுத்து; நிறுத்து" என கத்த துவங்கி விடுவான். இப்படி இவரை முழுசாய் வெறுப்போரும் உண்டு.

குறிப்பிட்ட நிகழ்ச்சியில் தெரிய வந்த ஆச்சரிய விஷயம்: பல மகமாயி பாட்டுகள் பாடி பெரும் புகழடைந்த, எப்போதும் பெரிய அளவு குங்குமம் வைக்கும் ஈஸ்வரி நிஜத்தில் ஒரு கிருத்துவர் ! ஈஸ்வரி என்கிற பெயரே சினிமாவிற்கு மட்டும் தான் போலும் !

மாற்றான் பற்றி KV ஆனந்தும் சூர்யாவும்

KV ஆனந்தும் சூர்யாவும் வெவ்வேறு சானல்களில் மாற்றான் பற்றி மாய்ந்து மாய்ந்து பேசினார்கள். (நம்ம பதிவர்கள் பார்த்தா போன் ஒயர் பிஞ்சு ஒரு வாரம் ஆகுது என கமன்ட் அடித்திருப்பர்)

படம் மிக சுமார் என்றாலும், அதனை எடுக்க எவ்ளோ கஷ்டப்பட்டுள்ளனர் என்று பார்க்க பாவமாய் தான் உள்ளது. ஒவ்வொரு காட்சியையும் இரண்டு முறை (வெவ்வேறு தினங்களில்) நடிக்கும் சூர்யா, லொகேஷன் சிரமங்கள், சண்டையில் உள்ள பிரச்சனை என ரொம்ப உருக்கமாய் பேசினார்கள். திரைக்கதையிலும் அதே மாதிரி மெனக்கேட்டிருக்கலாமே சார் !

நீயா நானாவில் ஆர்ட்ஸ் கல்லூரி மாணவர்கள்

செம சுவாரஸ்ய தலைப்பு ம் விவாதமும் இந்த வாரம் நடந்தது. " ஆர்ட்ஸ் கல்லூரி மாணவர்களின் கல்லூரி வாழ்க்கை" தான் தலைப்பு.

அட்டக்கத்தி படம் போல சுவாரஸ்ய கானா பாட்டு சிலர் பாடி முதல் ரவுண்டில் அசத்தி விட்டனர். சென்னை கல்லூரிகள் அனைத்தின் பெயரையும் சேர்த்து பாட்டு, பின் ஸ்டாபிங் வைத்து பாட்டு என செம காமெடியாய் இருந்தது.

அடுத்தடுத்த ரவுண்ட்களில் மாணவர்கள் மேல் உள்ள குற்றச்சாட்டுகள் பற்றி பொது மக்கள் பேச, அதற்கு மாணவர்கள் தங்கள் பக்கத்தை பேசினர். தமிழருவி மணியன் பேச்சு மிக அருமையாய் இருந்தது.  ரொம்ப நாள் கழித்து  ஒரு நல்ல நீயா நானா நிகழ்ச்சி இது. நீங்கள் பார்க்காவிடில் இணையத்தில் பார்க்க முயலுங்கள் !

****
வல்லமை அக்டோபர் 29, 2012 இதழில் வெளியானது

Saturday, October 27, 2012

சூப்பர் சிங்கர் ஜூனியர் பைனல் : ஒரு பார்வை

சூப்பர் சிங்கர் ஜூனியர் கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து ஓரளவு பார்த்தோம். குழந்தையின் படிப்பு , சமையல் எல்லாம் முடிந்து ஒன்றாய் சாப்பிடும், டிவி பார்க்கும் நேரம் அது. சீரியல் அழுகைக்கு இது பரவாயில்லை என்கிற காரணம் தான் !

பட்டம் வென்ற ஆஜித் 
 பைனல் நிகழ்ச்சி நேற்று நடக்கும் வரை சுகன்யாவிற்கு தான் நான் சப்போர்ட் செய்து கொண்டிருந்தேன். ஆனால் நேற்று சுகன்யா பாடியது ரொம்ப சுமார். ஆஜித் மற்றும் பிரகதி இடையே தான் போட்டி என்பது தெளிவாய் அனைவருக்கும் தெரிந்து விட்டது.

வென்றவர்கள் விபரம் (கடைசி இடத்திலிருந்து):

கெளதம்

பாட்டும் நானே முதல் ரவுண்டில் பாடினான். ஆனால் ரகுமான் முன்பு பாடும் போது " விடுகதையா இந்த வாழ்க்கை?" பாட்டு மிக தவறான பாட்டு செலக்ஷன். மக்கள் ஓட்டு போடும் இத்தகைய இடங்களில் இவ்வளவு சுமாரான சோக பாட்டு பாடுவது ஈர்க்கவே ஈர்க்காது. அதே படத்தில் ஒருவன் ஒருவன் முதலாளி போன்ற துள்ளல் பாட்டு தான் மக்களிடம், கூட்டத்திடம், டிவி பார்ப்போரிடம் எடுபடும்.

இவர் நான்காவதா ஐந்தாவது என தெரியாமல் - சுகன்யா மற்றும் கெளதம் நான்கு ஐந்தாம் இடங்கள் என முடித்து விட்டனர் (விரைவில் அது சரியே தெரியலாம்)

சுகன்யா

நேற்று முதல் பாட்டு நன்கு பாடினாள். ஆனால் இரண்டாவது ரவுண்டில் அஞ்சலி அஞ்சலி பாட்டு சொதப்பல். மேலே சொன்னது போல் கூட்டத்தில் எடுபடும் பாட்டே இல்லை. இப்பாட்டு பாடியதுமே சுகன்யாவிற்கு முதல் இரண்டு இடங்களில் சான்சே இல்லை என புரிந்தது.

யாழினி

பலருக்கும் பிடித்த சிறுமி. செம எனர்ஜி. ஏற்கனவே சாதக பறவைகள் ஆர்கெஸ்ட்ராவில் பாடுகிறாள். கொஞ்சம் நிலவு பாட்டை மிக நன்கு பாடினாள். இவளுக்கு மூன்றாம் இடம் கிடைத்ததில் எந்த சர்ச்சையும் இல்லை.

நிச்சயம் நல்ல பாடகியாய் வருவாள் யாழினி. எந்த சந்தேகமும் இல்லை !

பிரகதி

டைட்டில் ஜெயிப்பார் என பலரால் எதிர்பார்க்கப்பட்ட பெண். எனக்கென்னவோ பிரகதியை பார்க்கும் போது சின்ன வயது த்ரிஷா பார்க்கிற மாதிரி இருக்கும். நேற்று முதல் பாட்டு பாட ஆரம்பித்த போது மிக சுமாராய் ஆரம்பித்தாலும் அந்த பாட்டை முடிக்கும் போது மிக அட்டகாசமாக பாடி முடித்தார் பிரகதி. அடுத்து பாடிய "மையா மையா " பாட்டு பிச்சு உதறிட்டார். இரண்டாம் ரவுண்டில் மிக நன்கு பாடியது இவர் தான் என சொல்லணும்

பிரகதிக்கு முதல் இடம் வந்தால் "வேறு பல சர்ச்சைகள்' வந்திருக்கும். இரண்டாம் இடம் பிரகதிக்கு என்பதை அனைவரும் ஏற்று கொண்டு விட்டனர் என்றே சொல்ல வேண்டும் (அரை மார்க்கில் முதல் இடம் போச்சாம் )

ஆஜித்

               

நேற்று மாலை ஜிம்மில் (வாரத்தில் அஞ்சு நாள் மாலை நேரம் போறேனாக்கும் :))) சில நண்பர்கள் ஆஜித் தான் ஜெயிப்பான் என்று பேசினர். அப்போது " பெரிய குழந்தைகள் இருக்கும் போது சிறுவன் ஜெயிப்பது கஷ்டம். " என சொல்லி கொண்டிருந்தேன். ஆனால் நேற்று ஆஜித் பாடிய முதல் பாட்டான " வந்தே மாதரம்" அனைவரையும் கவர்ந்து இழுத்து விட்டது. அந்த பாட்டு பாடி கொண்டிருக்கும் போதே என் பெண், மொபைலை தேடி எடுத்து ஆஜித்துக்கு ஓட்டு போட ஆரம்பித்து விட்டாள். (இரு நாளுக்கு முன் இணையம் வழியே சுகன்யாவிற்கு ஓட்டு போட்டிருந்தோம். )

வந்தே மாதரம் கிளாசிக்கல் பாட்டா என்று சந்தேகம் இருந்தாலும், அந்த பாட்டு அனைவரையும் எளிதில் கனக்ட் செய்யும் பாட்டு. நம் தேசிய கீதம் போல அந்த பாட்டு அனைவருக்கும் மனதில் பதிந்து விட்டது. அவன் பாடிய விதமும் அருமை.

அடுத்து "சில பூக்கள்" பாட்டும் அசத்தலாய் பாடினான். நேற்று பாடிய ஐவரில் முறையாய் சங்கீதம் கற்காத ஒரே சிறுவன் -இருப்பதில் இளையவன் பட்டம் வென்றது ஆச்சரியமான, மகிழ்வான விஷயம் தான் ! நம்ம காவேரி தண்ணி குடித்து வளர்ந்த ஆஜித் - உனக்கு இந்த மாமாவின் வாழ்த்துகள் !

நிகழ்ச்சி நடக்கும் போது நான் போட்ட சில முகநூல் குறிப்புகள் :

##  26 ஆம் தேதி பைனல் ன்னு சொல்லிட்டு 27-ஆம் தேதி காலை வரை இழுக்கிறாங்க விஜய் டிவியில #

##  பாட்டு பாடின குழந்தைங்க எல்லாம் வீட்டுக்கு வந்து உட்கார்ந்து பைனல் முடிவு அனவுன்ஸ் பண்றதை பாத்துக்கிட்டிருக்காங்க. லைவ் புரோகிராமாம் :))

நண்பர் சுகுமார் சுவாமிநாதனின் முகநூல் குறிப்புகள்  

##  நீங்க லைவ்னு சொல்றதை கூட மன்னிச்சுடுவேன்.. ஆனா புரோக்ராம் முடிஞ்சு வின்னர் அனௌன்ஸ் பண்ண பிறகும் வோட்டு போடுங்க வோட்டு போடுங்கன்னு டி.வியில சொல்லிக்கிட்டு இருக்கீங்க பார்த்தீங்களா... நீங்கள்ளாம் நல்லா வருவீங்க..நல்லா வருவீங்க #Vijay TV Super Singer Junior 3

##  அடக்கடவுளே... ஏ.ஆர்.ரஹ்மான் நைட்டுலதான் பிரஷ்ஷா மியூசிக் போடுவாராம்.. அவரையே சொக்கி சொக்கி தூங்கி விழ வச்சிட்டாய்ங்க இந்த விஜய் டி.வி. # Vijay TV Super Singer Junior 3

விழாவில் இதர துளிகள் :

துவங்கும் போது மா. கா. பா மற்றும் பாவனாவை காட்ட , பாவனா மணி இப்போ நாலு ஆகுது என்றார். அப்போ நம் கிளாக்கில் ஏழு மணி. மூணு மணி நேரம் மெதுவா ஓடுச்சா நிகழ்ச்சி? கொடுமைடா சாமி !

இரவு 11.45-க்கு போட்டியில் ஜெயித்தவர்கள் விபரம், நிகழ்ச்சி நேரே பார்த்தவர்கள் மூலம் இணையத்தில் வந்துடுச்சு. ஆனால் அவர்கள் இரண்டு மணி நேரம் கழித்து அதிகாலை 1.45-க்கு தான் டிவியில் முடிவுகளை அறிவித்தனர் !



இந்த சீசனில் முதல் பத்தில் வந்த ரக்ஷிதா, ஜெயந்த் உள்ளிட்ட சிறுவர்- சிறுமியர் ரிசல்ட் அறிவிக்க சற்று முன் வந்து பாடினர். அட்லீஸ்ட் அதே மேடையில் நாமும் பாடி விட்டோம் என்று மகிழ்ச்சி அவர்களுக்கு இருந்திருக்கும். பாய்ஸ் பட " மாத்தி யோசி" பாட்டை அனைவரும் சேர்ந்து அருமையாய் பாடினர்

வழக்கமாய் பாட்டு பாடி டான்ஸ் ஆடும் பாடகி சுசித்ரா இம்முறை ஆப்சென்ட். மற்ற பாடக பாடகிகள் முழு அட்டெண்டன்ஸ் போட்டிருந்தனர்.

மனோவிற்கு பிறந்த நாள் என கேக் வெட்டி கொண்டாடினர். கோட் உள்ளே மனோ போட்டிருந்த பல கலர் கொண்ட சட்டை சான்சே இல்லை :)



AR ரகுமான் வருவதை மிக சஸ்பென்ஸ் ஆக வைத்திருந்தனர். இது டிவி பார்ப்போரிடம் கூட நல்லா ரீச் ஆச்சு. பாடும் சிறுவர்கள் அத்தனை பேரும் ஒருவர் விடாமல் " என்னால் நம்ப முடியலை. நான் காண்பது கனவா நினைவா? ரகுமான் சாரை நான் நேரில் பார்க்கிறேனா?" என்று பேசியது கடி ! ஒருவர் சொன்னால் ரைட்டு அடுத்தடுத்து ஐந்து பேரும் அதே டயலாக் ஒப்பிச்சா எப்புடி??

ரகுமான் வந்த பின் சிறுவர்கள் பாடுவதற்கு, ரகுமான் முக பாவனைகளையே காமிரா நெடு நேரம் காட்டியது.

சீனியர்/ ஜூனியர் சூப்பர் சிங்கரில் இதுவரை பைனல் வரை வந்த பெரும்பாலானோர் மேடைக்கு வந்து பாடினர் (அல்கா தவிர்த்து )

நிறைவாக: நிகழ்ச்சி நடத்துவோரிடம் ஒரே வேண்டுகோள்: முதல் சீசனில் இருந்து பார்க்கிறேன். போக போக பைனல் முடியும் நேரத்தை அதிமாக்கி கிட்டே தான் போறீங்க ! இரவு பன்னிரண்டு மணிக்குள்ளாவது நிகழ்ச்சியை முடிக்க பாருங்க . முடியல !
*****
இஸ்லாமிய நண்பர்களுக்கு இனிய பக்ரீத் நல் வாழ்த்துகள் !


Friday, October 26, 2012

மடிப்பாக்கம்-பகலில் கொலை-கொள்ளை- அதிர்ச்சியில் வியாபாரிகள்

நாங்கள் குடியிருக்கும் மடிப்பாக்கத்தில், பட்டப்பகலில் நகைக்கடையில் கொள்ளை நிகழ்ந்ததாக இணையத்தில் நேற்று மாலை தகவல் வந்தது. வீட்டுக்கு சென்றதும் தொலை காட்சியிலும் செய்தி காண முடிந்தது. மேலும் இதில் கடையிலிருந்த இளைஞர் மரணம் என்றும் தெரிய வந்தது.


இது குறித்த பத்திரிகை செய்தியை இங்கு வாசிக்கலாம்.

இன்று காலை அலுவலகத்துக்கு சதாசிவம் நகர் வழியே செல்லும் போது ஒரு இடத்தில் ஏகமாய் கூட்டமும் போலிஸ் ஜீப்பும் நிற்க, நமது நிருபர் புத்தி விழித்து, வண்டியை நிறுத்தி விட்டு கூட்டத்தில் சென்று ஐக்கியமானேன்.

தோளில் துண்டுடன் இருக்கிறார் கடை ஓனர்

 நேற்று கொலை/ கொள்ளை நடந்த பாலாஜி பேங்கர்ஸ் & ஜுவல்லர்ஸ் என்கிற கடைக்கு வெளியில் தான் நூற்று கணக்கான வியாபாரிகள் நின்று கொண்டிருந்தனர். அந்த ஏரியாவின் அனைத்து கடைகளும் மூட பட்டிருந்தன. பேசி கொண்டிருந்தவர்களில் பெரும்பாலானோர் ஹிந்தியில் பேசி கொண்டதால் அவர்கள் அடகு கடை வைத்திருக்கும் மார்வாடிகள் என ஊகிக்க முடிந்தது. ஒரு சில தமிழ் வியாபாரிகளும் இருக்கவே செய்தனர்.

இந்த கடை மடிப்பாக்கத்தின் முக்கிய பகுதியில் உள்ளது. ஐம்பது மீட்டரில் சதாசிவம் நகர் பேருந்து நிறுத்தம் ! அங்கு எந்நேரமும் பத்துக்கும் மேற்பட்டோர் பேருந்துக்கு காத்திருப்பர் . கடைக்கு நேர் எதிரில் எப்போதும் கூட்டமாக இருக்கும் பெரிய டாஸ் மார்க் கடை. இந்த அடகு கடைக்கு வலப்பக்கம் ஒரு சிராக்ஸ் கடை, இடப்பக்கம் எலக்டிரிக்கல் கடை மிக மிக அருகில் உள்ளன.

மிக அருகில் கடைகள் 

நேற்று மாலை நான்கு மணிக்கு கடையில் வேலை செய்யும் மதன்சிங் என்கிற பையன் ( 16 வயது ) தனியாக இருந்துள்ளான். முதலாளி மோகன்லால் வெளியில் சென்றுள்ளார். அந்த நேரம் வந்த கொள்ளை கும்பல் மதன்சிங்கை லாக்கர் ரூமுக்கு இழுத்து சென்று அவனை கொன்று விட்டு அங்கிருந்து மூன்று கிலோ நகைகளை கொள்ளை அடித்து விட்டு சென்று விட்டது.

எப்படி ஒரு கடை வீதியில் பகலில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது என்று பலருக்கும் புதிராய் உள்ளது. "ரெண்டு மூணு பேரா வந்திருக்கணும். சத்தம் கேட்காமல் வாயை பொத்திருப்பாங்க; அதான் பக்கத்து கடையில் கூட பையனின் சத்தம் கேட்கலை" என அங்கிருந்தவர்கள் பேசிக்கொண்டனர்.


ஒரு ஓரமாக கடை ஓனர் மோகன்லால் தோள் மீது ஒரு துண்டு போட்டபடி மிக சோகமாய் நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த இரு பெண்கள் அவரிடம் பேசினார்கள்." ஐயா பையன் இப்படி போயிட்டானே !" என்று அந்த பெண்மணிகள் பேசவும் மோகன்லால் சேட் அழ ஆரம்பித்து விட்டார். நிற்க முடியாமல் கடை படிக்கட்டில் போய் அமர்ந்து கொண்டு துண்டால் முகத்தை மூடி கொண்டு குலுங்க, அந்த பெண்மணிகளும் அழுது கொண்டிருந்தனர்.

ஒருவர் அந்த பெண்களிடம் " நகை ஏதும் அடகு வச்சிருக்கீங்களா?" என கேட்க " ஆமா வச்சிருக்கோம். அது போனா போயிட்டு போகுது. பையன் போயிட்டானேப்பா. பச்ச புள்ளை. அவனை கொல்ல எப்படி மனசு வந்துச்சோ. நேத்து டிவியிலே பாத்ததுலே இருந்தது மனசே சரியில்லை. பாவம்யா அந்த புள்ளை !" 

அவர்கள் மட்டுமல்ல அங்கு நின்ற அனைவருமே அந்த பையன் இறப்புக்கு தான் மிக அதிகம் வருந்தினர். போலிஸ் யாரு செஞ்சதுன்னு கண்டுபிடிச்சா நகை திரும்ப கிடைக்கும். ஆனா பையன் கிடைப்பானா? " என்பதே பலரின் வருத்தமாய் இருந்தது. மேலும் இந்த விஷயத்தில் அரசிடமிருந்து சரியான அறிவிப்பு வராவிடில் சாலையில் அமர்ந்து தர்ணாவில் இறங்க வேண்டியது தான் என்றும், எப்போது வரை இதற்கு காத்திருப்பது என்றுமே அங்கு பேச்சாக இருந்தது

சற்று நேரத்தில் கருப்பு துணி (ரிப்பன் போல) கொண்டு வரப்பட, அதை நறுக்கி அனைவரும் கருப்பு ரிப்பன் சட்டையில் குத்தி கொள்ள துவங்கினர்.



எனக்கும் ஒன்று தரப்பட, நானும் குத்தி கொண்டேன்

நின்று கொண்டிருந்த வியாபாரிகள் பலரும் பயத்தில் சற்று உறைந்து தான் போயிருந்தனர். ஒவ்வொருவரும் இந்நிலை தனக்கு வந்தால் என்ன ஆவது என்று உள்ளூர பயம் இருக்க கூடும் !

"CCTV காமிரா இருந்திருக்கு. ஆனா அதை கழட்டி எல்லாத்தையும் எடுத்து போயிட்டாங்க. அதனால யாரு செஞ்சதுன்னு தெரியலை எவ்ளோ பிளான் பண்ணி செஞ்சிருக்காங்க பாருங்க " என பேசி கொண்டனர்.

எதிரில் டாஸ்மார்க் வாசலில் போலிஸ் ஜீப் நின்று கொண்டிருந்தது. நான்கைந்து போலீசார் அதில் இருந்தனர்



இறந்த பையனின் பெற்றோருக்கு ராஜஸ்தானுக்கு தகவல் தரப்பட அவர்கள் சென்னைக்கு வந்து கொண்டிருக்கின்றனர். போஸ்ட்மார்டம் ஆன பின் உடல் ஒப்படைக்க படும்.

உண்மையில் இந்த விஷயத்தில் அரசு முன்னெச்சரிக்கையாய் என்ன செய்திருக்க முடியும் என தெரியவில்லை. இணையத்தில் இந்த சம்பவம் குறித்த செய்திகளை படிக்கும் போது ஒன்று புரிகிறது. இது போல் பல சம்பவங்கள் சென்னையில் ஆங்காங்கு நடந்துள்ளது. இதன் பின் இருக்கும் குழு பிடிக்கப்பட்டால் இத்தகைய கொடூரங்கள் குறைய கூடும் !

நூற்றுகணக்கான முறை இதே ரோடில் பயணம் செய்தும் கூட இக்கடையை ஏறிட்டும் பார்க்காத என்னை போன்றோர் இனி இந்த வழியே போகும் போது இந்த கடையை ஒரு முறை பார்த்து விட்டு , அந்த சிறுவனுக்காக ஒரு பெருமூச்சுடன் கடக்க கூடும்.

காலேஜ் காமெடி போஸ்டர்கள் +சட்ட ஆலோசனை

முதலில் சில ஜாலியான புகைப்படங்கள் பார்த்து என்ஜாய் செய்யுங்க. அப்புறமா சட்ட கேள்வி பதில் காத்திருக்கு.

நிற்க. இப்படி காமெடி படங்களுடன் சட்ட ஆலோசனை தருவதால் சொல்ல வேண்டிய செய்தி சற்று டைல்யூட் ஆகி விடுவதாக ஒரு கருத்து நிலவுவதால் இத்துடன் சட்ட ஆலோசனையில் காமெடி படங்களுக்கு டாட்டா பை பை.

இனி  சட்ட ஆலோசனை இரு கேள்வி-பதில்களாக , இத்தகைய படங்கள் இன்றி வெளிவரும். 












சட்ட ஆலோசனை

கேள்வி: ரவிச்சந்திரன் சென்னை

வணக்கம். எனது தந்தையின் தந்தை (தாத்தா)வின் பெயரில் ஒரு வீடு உள்ளது. அதில் எனது அண்ணன் தற்காலிகமாக குடிஇருந்தார். அப்போது அவர் வீட்டு வரி கட்டினார். அதில் வரி கட்டியவர் என அவர் பெயர் போட்டு, பின்பு அவர் பெயர் மட்டும் வருவது போல் செய்து இருக்கிறார். தற்போது அந்த வீட்டை தனக்கே உரிமை என்றும் அவருக்கே தர வேண்டும் அனைவரையும் கட்டாயப்படுத்துகிறார்.

நாங்கள் நான்கு சகோதரர்கள். என்ன செய்வது?

பதில்:

உங்கள் தாத்தா சொத்தில் உங்கள் அண்ணன் இருந்து கொண்டு அவர் பெயரில் வரி கட்டுவதாக கூறி உள்ளீர்கள். உங்கள் தந்தை பற்றி ஏதும் சொல்லவில்லை. உங்கள் தாத்தா உயில் ஏதும் எழுதி வைக்கவில்லை என கருதுகிறேன்.

மற்ற சகோதரர்கள் அனைவரும் சேர்ந்து சொத்தை பாகப்பிரிவினை செய்து தரச் சொல்லி அவர் மேல் வழக்கு தொடர்வது தான் இதற்கு சிறந்த வழி. இப்படி வழக்கு தொடர்ந்தாலே அவர் இறங்கி வர வாய்ப்புண்டு.

வழக்கு நடக்கும் போது அவர், தான் தான் வரி கட்டுவதாகக் கூறினால். அவர் தான் மூத்த மகன் எனில் வரி அவர் பெயரில் கட்ட நீங்கள் தற்காலிக அனுமதி தந்ததாகக் கூறலாம்.

நீங்கள் அவசியம் உங்களுக்கு தெரிந்த நல்ல வழக்கறிஞரை நாடி உடனே வழக்கு தொடர ஏற்பாடு செய்யுங்கள்.

*******
சட்ட ஆலோசனை வல்லமை  அக்டோபர் 12,2012 இதழில் வெளியானது  

Thursday, October 25, 2012

பேட்டி: பசுமை விடியல் : தினம் 1 மரம் சாத்தியமா என்ன?

திவுலகில் நிஜமாகவே நல்ல விஷயங்கள் என்று ஏதும் நடக்கிறதா என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. இத்தகைய சந்தேகங்களுக்கு விடை தரும் விதத்தில் ஆங்காங்கு சில மிக நல்ல முயற்சிகள்/ செயல்கள் நடக்கவே செய்கின்றன. அவற்றில் ஒன்று பசுமை விடியல் !   



மரம் வளர்ப்பதை ஊக்குவிக்கும் பொருட்டு இவர்கள் பல்வேறு நல்ல விஷயங்களை செய்து வருகிறார்கள். தினம் ஓர் மரம் நடுதல், இலவச மரக்கன்று நடுதல் மற்றும் சுற்று சூழல் விழிப்புணர்வுக்காக ஏராள களப்பணிகள் செய்து வரும் இந்த குழுவில் பலரும் வலைப்பதிவர்கள் என்பது மகிழ்வான விஷயம்.

இதன் நிர்வாகிகளிடம் வீடுதிரும்பலுக்காக எடுத்த பேட்டி இதோ. சில எடக்கு மடக்கான, கோபப்படுத்தும் கேள்விகளுக்கும் பொறுமையாய் பதில் தந்த பசுமை விடியல் நிர்வாகிகளுக்கு நன்றி !

***********
பசுமை விடியல் துவக்கும் எண்ணம் எப்போது வந்தது? இதனை துவக்க ஏதும் காரணம் உண்டா?

நாம் வாழும் சமூகத்திற்கு ஒரு சிறிய பங்களிப்பையாவது கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் மலர்ந்தது பசுமைவிடியல்.

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் என்பதை குறிக்கவே Environmental And Social Transition Trust (EAST) என எங்கள் தொண்டு நிறுவனத்துக்கு பெயரிட்டோம். EAST முறைப்படி அரசாங்க பதிவு பெற்றது. தகுந்த நேரம் அமைந்ததும் அந்த நிறுவனத்தின் கீழ் பசுமைவிடியல் என்ற இயக்கத்தை ஜனவரி மாதம், 2012 தொடங்கினோம்.

இந்த இயக்கத்தின் பின்னணியில் இருக்கும் நபர்கள் யார்?

ஈஸ்ட் டிரஸ்ட் நிறுவனர் திரு.ஜோதிராஜ்
பசுமைவிடியல் சேர்மன் திருமதி.கௌசல்யா
ப்ராஜெக்ட் டைரக்டர் திரு.ISR.செல்வகுமார்
ப்ராஜெக்ட் ஹெட் திரு.பிரபு கிருஷ்ணா
ப்ராஜெக்ட் எக்ஸ்சிகியுடிவ் திரு.சூர்யபிரகாஷ்

இங்கே இந்த பதவி என்பது நிறுவனத்தின் நிர்வாக வசதிக்காக...மற்றபடி இது தன்னார்வலர்களின் டீம் ஒர்க். நால்வரில் ஒருவரின் சம்மதம் இல்லையென்றாலும் பசுமைவிடியலில் எந்த ஒன்றும் செயல்படாது.

பசுமைவிடியலின் இணையதளத்தை திரு இசக்கிசுப்பையா MLA துவக்கி  வைக்கிறார்.
பசுமை விடியலின் முதல் மரக்கன்றாக செண்பக மரத்தை நட்ட - உலக சாதனை சிறுமி  விசாலினி கையில் உள்ளது லாப்டாப்  
தவிர இப்பொழுது தமிழகம் முழுவதும் 200க்கும் மேற்பட்டோர் தங்களை பசுமைவிடியலுடன் இணைத்துக்கொண்டுள்ளனர். 1000 மேற்பட்ட நபர்கள் முகபுத்தகம் மூலம் ஆதரவு தெரிவித்துள்ளனர். தினம் ஒரு மரம் திட்டத்தில் பங்குபெறும் அத்தனை பேருமே பசுமைவிடியலின் அங்கத்தினர்களே !

இதுவரை எவ்வளவு மரக்கன்று நட்டுள்ளீர்கள்? எந்த இடங்களில் அதிகம் நடுகிறீர்கள்?

எங்கள் நோக்கம் மரம் நட வேண்டும், மரம் நடுவதை ஊக்குவிக்க வேண்டும் ! கணக்குக்காக நாங்கள் மரம் நடுவதில்லை.

இடம் பொறுத்தவரை எங்களுக்கு எல்லைகள் கிடையாது, உலகம் முழுதும் இதை பரப்ப விருப்பம், தற்பொழுது காஞ்சிபுரம் , மற்றும் திருநெல்வேலி நண்பர்கள் இதனை மிக அருமையாக எடுத்து செல்லும் விதம் நாங்கள் மற்ற இடங்களை சென்றடையும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை எங்களுக்கு உணர்த்துகிறது.

மரக்கன்று நடுவது பெரிதில்லை. அதற்கு தொடர்ந்து தண்ணீர் ஊற்ற வேண்டும். மாடுகள் போன்றவை சாப்பிடாமல் காப்பாற்ற வேண்டும். அதற்கு என்ன விதமான நடவடிக்கை எடுக்கிறீர்கள்?

இதுவரை நாங்கள் நட்ட, நட்டு கொண்டிருக்கும் கன்றுகள் ஏதாவது ஒரு வழியில் எங்கள் உறுப்பினர்களின் பார்வைக்கு கீழ் வருவதால் எங்களுக்கு மேற்கண்ட பிரச்சனைகள் வரவில்லை, ஆனால் வருங்காலங்களில் பிரச்சனை ஏற்படலாம் என்பதால் அடுத்து நடைபெற போகும் பசுமைவிடியலின் இரண்டாம் குழும சந்திப்பில் இதற்கான திட்ட முன்னெடுப்பை மேற்கொள்ள உள்ளோம்.

தினம் ஒரு மரக்கன்று என்பது நடைமுறையில் சாத்தியமாகிறதா? என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்கிறீர்கள்?

மக்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால் சாத்தியமில்லை. எதிர்கொள்ளும் பிரச்சனையும் இதுதான். ஒரு மரம் தானே நடுவோம் என்று ஆர்வத்துடன் ஏராளமான நண்பர்கள் முன் வரவேண்டும்.

இத்திட்டத்தில் இணைய என்ன செய்யவேண்டும் ?

ஒரு மரக்கன்றை நட்டு புகைப்படம் எடுத்து நட்டவர், ஊர், மரக்கன்று பெயர்களை குறிப்பிட்டு tree@pasumaividiyal.org என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பவும். புகைப்படம் பசுமைவிடியல் முகநூலில் வெளியிடப்படும்.

சென்னை போன்ற இடங்களில் வீட்டில் மரம் நட இடம் மிக குறைவு. செடி உள்ளிட்ட விஷயங்களை வளர்க்க இயக்கத்தில் நீங்கள் ஊக்குவிப்பதில்லையா?

நேரில் சந்திக்கும் பலரிடமும் மொட்டைமாடியில் தோட்டம் போடுவது, இருக்கும் சிறு இடத்தில் காய்கறி , மூலிகைச்செடிகள், கீரை வகைகள் போன்றவற்றை பயிரிடுவதை வலியுறுத்தி வருகிறோம், எங்கள் தளங்களில் இதை குறித்த செய்திகளை எழுதியும், தொடர்ந்து அதிக அளவில் செயல்படுத்தவும் இருக்கிறோம் .

தெருவில் மரம் நட வேண்டுமெனில் அதனை பாதுகாக்க தேவைப்படும் இரும்பு வலை தான் மிக முக்கியம். அப்போது தான் மாடு சாப்பிடாமல் இருக்கும். அதன் விலை அதிகமாக உள்ளது. இதற்கு ஸ்பான்சர் கிடைப்பார்களா?

தெரியவில்லை, எங்களை பொருத்தவரை நாங்கள் பணஉதவி கேட்டது இல்லை. ஸ்பான்சர் என்று யாரும் இதுவரை எங்களுக்கு இல்லை. அவ்வாறு இரும்பு வலைகளை தருவதற்கு ஸ்பான்சர் கிடைத்தால் நல்லது. தெருக்களிலும், பெரிய ரோடுகளிலும் தயக்கமின்றி நிறைய மரங்களை நடலாம்.

இனி வரும் காலத்தில் பொருட்செலவை பொறுத்து சொந்தமாக Tree Guard கொடுக்க ஏற்பாடு செய்யலாமா என ஆலோசிக்கிறோம்.

உங்கள் இயக்கம் மூலம் காஞ்சிபுரத்தில் நடந்து வரும் நல்விஷயங்களை பகிர்ந்து கொள்ளுங்களேன்

நல்ல எண்ணத்தோடு ஒரு விதை விதைத்தால், நீரூற்றா விட்டாலும் விருட்சமாக வளரும் என்பதை காஞ்சிபுரத்தில் நடந்த முதல் மீட்டிங் நிருபித்துவிட்டது . அருள் என்ற மனிதன் எங்களுக்கு கிடைத்த சொத்து என்றே சொல்வோம்.

கெவின்கேர் நிறுவனத்தில் வேலை செய்யும் MBA படித்த இந்த இளைஞர் தன் ஊரில் பல மரக்கன்றுகளை நட்டு, தினமும் காலையில் வண்டியில் தண்ணீர் கொண்டு சென்று எல்லா மரத்திற்கு ஊற்றிய பின்னரே வேலைக்கு செல்கிறார். இதை ஒரு கடமையாக ஆத்மதிருப்தியுடன் செய்து வருகிறார். தற்போது காஞ்சிபுரத்தில் பசுமைவிடியலின் சார்பில் நடக்கும் அத்தனை நல்லதுக்கும் முக்கிய காரணமாக இவர் இருக்கிறார்.

காஞ்சிபுரம் பள்ளியில் மரக்கன்றுகள் நட்டபோது ISR. செல்வகுமார் & பிரபுகிருஷ்ணா

அருளை தொடர்ந்து பாலகிருஷ்ணன் சார், செந்தில், கிருஷ்ணகுமார் என்று இருபதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தற்போது எங்களுடன் இணைந்து முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். இதில் திரு. பாலகிருஷ்ணன் சென்னையை சேர்ந்தவர், ஆர்வத்தின் காரணமாக வார இறுதிநாட்களில் காஞ்சிபுரம் சென்று களப்பணிகளை கவனித்து வருகிறார். மூன்று கிராமத்தில் (ஒரு மாத காலத்திற்குள்) எங்கள் பணிகள் நடந்துவருகின்றன. இதன் எண்ணிக்கை நாளை மேலும் அதிகரிக்கலாம்.

பள்ளி, கல்லூரி போன்ற இடங்களில் காலி இடம் அதிகமாக இருக்கும். அங்கு மரம் நடுவது எளிது. அவர்களை அணுகுகிறீர்களா? எப்படி வரவேற்கிறார்கள்?

அணுகும் போது இதுவரை சாதகமான பதில்கள் தான் கிடைத்துள்ளன. காஞ்சிபுரத்தில் இரண்டு பள்ளிகளில் நட்ட மரக் கன்றுகளை நண்பர்கள் சென்று கவனித்து வருகிறார்கள். இதர பள்ளி, கல்லூரிகளையும் தொடர்பு கொண்டு வருகிறோம்.

அடுத்ததாக காஞ்சிபுரத்தில் சில பள்ளிகளில் சுற்றுச்சூழல் குறித்த ஒரு கட்டுரை போட்டி ஒன்றை பசுமைவிடியல் நடத்த இருக்கிறது. அதன் ஆரம்ப கட்ட வேலைகளை தற்போது துவங்கி இருக்கிறோம் என்பதை இங்கே தெரிவிப்பதில் மகிழ்கிறோம்

உள்ளூர் அல்லது வெளியூர் விருந்தினர் வீட்டுக்கு செல்லும் போது அங்கு இடம் இருந்தால் சுவீட் வாங்கும் போது கூடவே ஒரு மரக்கன்றும் வாங்கி நட சொல்லி உங்கள் இயக்கம் ஊக்குவிக்கலாமே..? அவர்கள் அதனை பார்க்கும் போதெல்லாம் நம்மை நினைத்து கொள்வார்களே ?

இதனை இதுவரை எங்களுக்குள் பேச்சளவில் சொல்லிவந்தோம்.இனி மற்றவர்களிடம் கொண்டு செல்ல முயலுகிறோம். தங்களின் ஆலோசனைக்கு நன்றிகள்.

மரம் நடுவது மட்டும் தான் பசுமைவிடியலின் பணியா அல்லது வேறு ஏதும் இருக்கிறதா?

கண்டிப்பாக மரம் நடுவது மட்டும் அல்ல. குப்பைகளை அகற்றுவது, மறுசுழற்சி போன்ற திட கழிவு மேலாண்மை திட்டத்தை கிராமங்களில் செயல்படுத்த விரும்புகிறோம். அங்குள்ள மக்களின் கருத்துக்களையும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஆலோசனைகளையும் சேகரித்து வருகிறோம். அனைத்தும் சாதகமானதும் செயலில் முழுவீச்சில் இறங்கவேண்டும்.

பிளாஸ்டிக் பயன்பாட்டின் கேடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் இதற்காக ஒரு பேரணி ஒன்றையும் நடத்தினோம்.

குடியிருப்பு பகுதிகளில் சீமை கருவேலமரம் அகற்றுவது தொடர்பான விழிப்புணர்வு வேலைகள் ஒரு புறம் நடக்க இருக்கிறது.
திருநெல்வேலியில் ஒரு திருமண விழாவில் பசுமைவிடியல் 1000 மரக்கன்றுகளை வழங்கியது. திரு.பிரபு கிருஷ்ணா ஸ்ரீவில்லிப்புத்தூர் திரு.ரத்னவேல் அவர்களுக்கு மரக்கன்றை வழங்குகிறார்.

மக்களிடையே இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பது தொடர்பான பணிகளை செய்ய ஆயுத்தம் செய்துகொண்டிருக்கிறோம்.

இயன்றவரை இயற்கையோடு தொடர்புடைய அத்தனை பணிகளிலும் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கவேண்டும் என்பதே எங்கள் அனைவரின் நோக்கம்.

முக்கியமான ஒரு கேள்வி 'நாங்கள் மரம் நடுகிறோம் சரி அதை உங்களுக்கு ஏன் அனுப்பவேண்டும்? விளம்பரம் தேடுவதை போல் இருக்கிறதே...?'

ஒவ்வொரு மனிதனும் மரம் நடுவதின் அவசியத்தை உணரும் போது நாங்கள் வேலையற்றவராகி விடுகிறோம். எங்களுக்கும் அதுதான் வேண்டும் !!

ஆனால் இங்கு அந்த விழிப்புணர்வு இன்னும் இல்லை என்பதே உண்மை. ஒருவர் மரம் நடுகிறார் அதை எங்களுக்கு அனுப்புகிறார்...இதன் மூலம் அவர் தான் செய்த நற்பணியை எண்ணி மகிழ்கிறார்...நான் பசுமையை காக்க முயற்சிக்கிறேன் என்று தன்னை தானே என்கரேஜ் செய்து கொள்கிறார்... பிறரையும் ஊக்கப்படுத்துகிறார். அவர்களும் இதை பின்பற்றலாம்...!

நடுவது ஒரு மரம் ஆனால் மரம் நடுவதன் அவசியம் பலர் மனதில் விதைக்கப்படுகிறது.

ஒரு மரம் மட்டும் நட்டு பல மரங்கள் நட்டதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவது தான் விளம்பரம். ஒரு மரத்தை நட்டு பல மரங்களை நடவைக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது எப்படி விளம்பரம் ஆகும்...?

சக பதிவர் நண்பர்களிடமிருந்து இந்த இயக்கத்துக்கு என்ன விதமான உதவியை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

எல்லோரையும் மரம் நடச் சொல்லுங்கள் :-)

பசுமை விடியலின்

முகநூல் முகவரி - https://www.facebook.com/PasumaiVidiyal
இணைய தளம் - pasumaividiyal.org

****
நிற்க. பசுமை விடியல் இயக்கத்தால் மிகவும் ஈர்க்கப்பட்ட நான், எங்கள் சென்னை வீட்டில் மரம் நட இடம் இல்லாததால், தஞ்சை சென்றபோது அண்ணன் வீட்டில் மரம் ஒன்று நட்டு விட்டு வந்தேன்.



நண்பர்களே, நீங்களும் உங்கள் பங்கிற்கு உங்கள் வீட்டிலோ, நண்பர்கள் அல்லது உறவினர் வீட்டிலோ ஒரு மரம் நடவும். இந்த தகவல் மற்றும் படத்தை பசுமை விடியலுக்கு அனுப்பவும். நன்றி !

Wednesday, October 24, 2012

ஆபாச படம் தெரிவதால் இன்ட்லியில் தொடர்வோர் பட்டையை நீக்கவும் !

நண்பர்களே,

உங்கள் ப்ளாகில் இன்ட்லியில் தொடர்வோர் என்கிற பட்டையை இணைத்திருந்தால் அதை உடனடியாக நீக்கவும். அதில் தற்போது ஆபாச படம் தெரிகிறது.

சற்று முன் வீடுதிரும்பல் ப்ளாகை பார்த்த நான் இந்த விஷயம் ( ஆபாச படம் ) பார்த்து அதிர்ச்சி ஆனேன். முதலில் நம் ப்ளாகில் தான் பிரச்சனையோ என்று குழப்பம் வந்தது.

கூகிள் பிளஸ்சில் நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் இதே செய்தியை பகிர்ந்திருந்தார். அப்புறம் தான் இது இன்ட்லி பட்டையால் வந்தது   என புரிந்தது.

இது தற்காலிகமான பிரச்சனை ஆக தான் இருக்க வேண்டும். விரைவில் இன்ட்லி இதை கவனித்து சரி செய்யும் என நம்புவோம். ஆபாச படம் நம் ப்ளாகில் தெரிய வேண்டாம் என்பதால் இன்ட்லி தொடர்வோர் பட்டையை தற்காலிகமாக நீக்கவும்.

இன்ட்லி தளத்தில் அவர்களை எப்படி தொடர்பு கொள்வது (Contact us ) என்ற தகவல் இல்லை. யாருக்கேனும் இன்ட்லி குழுமத்தின் மெயில் முகவரி தெரிந்தால் அவர்களுக்கு இந்த விஷயத்தை தெரிவிக்கவும்

நன்றி !

வானவில்: ரிட்சி ஸ்ட்ரீட்-நதியா- வடிவேலு

இணைய பக்கம் அறிமுகம்

சென்னையில் உள்ளோர் அனைவருக்கும் தெரிந்த ஒரு தெரு ..ரிட்சி ஸ்ட்ரீட் ! குறைந்த விலை என்பதோடு, இங்கு கிடைக்காத எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களே இல்லை என்பதால் மிக பிரபலம்! இந்த தெருவிற்கென தனி இணைய தளம் இப்போது வந்துள்ளது.

 http://www.ritchiestreet.info/ என்கிற இந்த தளத்தில் நூற்றுக்கணக்கான கடைகள் பெயரும் அங்கு கிடைக்கும் பொருள்கள் அவற்றின் விலை என்ன என்பதும் அறிய முடிகிறது. நீங்களும் இந்த தகவலை பயன்படுத்தி கொள்வீர்கள் என நம்புகிறேன்


அழகு கார்னர்

நான் முதன் முதலா ஒரு ஹீரோயினை ரசித்தேன் என்றால் அது இவர் தான் ! பூவே பூச்சூடவா வந்த போது விடலை பருவத்திலேயே கிறுக்கு பிடிக்க வைத்தார். இன்னிக்கும் ஜம்முன்னு இருக்கார்.



வெயிட் போடாமல் பார்த்துகிட்டா வயசே தெரிவதில்லை பாருங்க !

பார்த்த படம் காசனோவா மலையாளம்

மோகன்லால் நடித்த மலையாள படம். ப்ளே பாய் ஹீரோ திடீரென  மனம் மாறி ஒரு பெண்ணை உண்மையாய் காதலிக்கிறார். ஹீரோயினை சில வில்லன்கள் கொன்று விட, அவர்களை வித்தியாச முறையில் பழி வாங்குகிறார் ஹீரோ.

புளித்து போன இந்த கதையை முழுதும் வெளிநாடுகளில் படமாக்கி உள்ளனர். ஷ்ரேயா, லட்சுமி ராய் உள்ளிட்ட ஹீரோயின்கள் தான் சற்று ஆறுதல்

இதில் இன்னொரு கொடுமை: எங்கேயும் காதல் என்றொரு ஜெயம் ரவி நடித்த படம் வந்ததல்லவா? ப்ளே பாய் பாத்திரத்தில் அவர் வருவதும், இதில் மோகன்லால் வருவதும் அப்படியே பல காட்சிகள் டிட்டோ !

இந்த மொக்கை படம் எப்போதாவது டிவி யில் போட்டால் சானல் மாற்றி விடுவது உத்தமம் !

QUOTE CORNER

Opinions are like hand watches. Every one's watch shows different time. But every one believes that their time is correct.

ரசித்த காமெடி

வடிவேலுவின் காமெடியில் மிக ரசிக்கும் ஒன்று   இந்த பார்ட்.

லேடன் கிட்டே பேசுறியா? லேடன் ..............பின் லேடன் !



படித்து மிரண்ட விஷயம்

குமுதம் சிநேகிதியில் வித்யாசமான மாற்றான்கள் என ஒரு இரட்டையர் பேட்டி படித்தேன். கேரளாவில் வசிக்கும் இந்த இரட்டையர்கள் தங்களை போலவே இரட்டையராய் பிறந்த சகோதரிகளை மணந்துள்ளனர். திருமணம் ஆன நாள் முதல் - முதலிரவு துவங்கி இன்று வரை இந்த இரண்டு ஜோடிகளும் ஒரே அறையில் தான் தூங்குவார்களாம். இதிலேயே சற்று மிரண்டு போன நான் அடுத்த கேள்வி பதிலில் இன்னும் மிரண்டேன்

"இப்படி ஒரே ரூமில் படுக்கும் போது ஆள் மாறாட்டம் நடுக்குமா?" என கேட்க, "நாங்கள் இருவரும் அவர்கள் இருவரில் யாருடன் வேண்டுமானாலும் தாம்பத்யம் வைத்து கொள்வோம். எங்களை பொறுத்த வரை நாங்கள் நால்வர் இல்லை. ஒருவர் தான்" என்று கூறியிருக்கிறார்கள் !

ஐம்பது வயதுக்கு மேல் ஆகிறது இவர்களுக்கு. இப்போதான் காலம் கெட்டு போச்சு..கெட்டு போச்சு என்கிறோம். ஆனால் இருபது வருஷத்துக்கு முன்பிருந்தே இத்தகைய கதைகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன !

சென்னையில் ஒரு மழைக்காலம்

மிக தாமதமாக துவங்கியுள்ளது சென்னையின் மழைக்காலம். ஆகஸ்ட், செப்டம்பரில் வழக்கமாய் பெய்யும் அளவு மழை இன்றி போர்வெல் எல்லாம் வற்றி போய் விடும் என்கிற பயம் இருக்கும் போது நல்ல வேளையாய் வந்து சேர்ந்தது.

முதல் நாள் வரை ஓரிரு மணி நேரம் ஏ. சி போட்டு உறங்கிய காலம் போய், திடீரென மின்விசிறி (Fan ) கூட இன்றி உறங்குகிறோம். புரட்டாசி முடிந்து ஞாயிறு கறிக்கடைக்கு சென்றால் எல்லாரும் ஸ்வெட்டர் போட்டு கொண்டு நிற்பதை காண வேடிக்கையாய் இருந்தது

குழந்தை பள்ளி செல்லும் / திரும்பும் நேரம் தவிர மற்ற நேரம் மிக அதிக மழை பெய்ய வேண்டும் என நினைக்கிறது என் மிடில் கிளாஸ் மனது !

சென்னை ஸ்பெஷல் : 38 அடுக்கு மாடி - சென்னையின் மிக பெரிய கட்டிடம்

சென்னையின் மிக உயர கட்டிடம் என்றால் எல். ஐ. சி யை தான் நினைப்போம்.. அது ஒரு காலம். அப்புறம் அதை விட உயர மாளிகைகள் எவ்வளவோ வந்து விட்டன. இப்போது சென்னையின் மிக உயர 38 அடுக்கு கட்டிடமாக OMR- ரோடில் வரவுள்ளது. இது அலுவலக கட்டிடம் அல்ல.. அடுக்கு மாடி குடியிருப்பு தான் !

அக்ஷயா பில்டர்ஸ் கட்டப்போகும் இந்த கட்டிடத்தில் ஒவ்வொரு தளத்திலும் ஒரு வீடு மட்டுமே ! ஒவ்வொரு வீட்டின் அளவும் 6700 சதுர அடி . (இரண்டரை கிரவுண்டுக்கும் மேல்) இப்படி ஒரு தளத்துக்கு ஒன்றாக 31 வீடுகள் வருகிறது. அப்ப, மீதம் ஏழு தளங்கள்? ரெஸ்டாரன்ட் ஒரு தளத்தில், கிளப், ஸ்பா போன்றவை ஒவ்வொரு தளத்தில் இப்படி அட்டகாச வசதிகள் கொண்ட இந்த ப்ராஜக்ட்டில் ஒரு வீட்டின் விலை அதிகமில்லை ஜென்டில் மேன் 7 கோடி ரூபாய் தான் !

ஹலோ எங்கே ஓடுறீங்க? வீட்டை புக் பண்ணவா?

Tuesday, October 23, 2012

நீர்ப்பறவை -மனதை கவ்வும் பாடல்கள் - விமர்சனம்

மீபத்தில் வெளியான பாடல்களில் நம் மனதை பெரிதும் கவர்ந்து போவது நீர் பறவை பட பாடல்கள் தான். தென் மேற்கு பருவகாற்றுக்கு இசை அமைத்த ரகுநந்தன் இசை ! பல பாடல்கள் மிக மென்மையாய் மனதை வருடி போகிறது.

சார்.........சுனைனா சார் !
பற பற பறவை ஒன்று என்கிற பாடல் மூன்று முறை ஒலிக்கிறது. பாடல் வரிகளில் சிற்சில மாற்றங்கள் இருந்தாலும் மெட்டு மற்றும் இசை மூன்று பாட்டிலும் அப்படியே இருக்கு ! பெண் குரலில் ஒலிக்கும் பாடல்களை சின்மயி ஒரு முறையும், ஸ்ரேயா கோஷல் இன்னொரு முறையும் பாடி உள்ளனர்.

பற பற-வில் உயர பறப்பது  சின்மயியின் குரலே ! ஸ்ரேயா கோஷல் தான் எனக்கு அதிகம் பிடிக்கும் என்றாலும், சின்மயி பாட்டின் உணர்வை/ அர்த்தத்தை மிக நன்கு உணர்ந்து பாடி உள்ளது அந்த பாட்டை  சிறக்க  வைக்கிறது.

கடலுக்குள் சென்ற காதலனுக்காக பெண் பாடும் வரிகளை பாருங்கள் :  

ஊரெங்கும் மழையும் இல்லை.
வேறெங்கும் புயலும் இல்லை
என்றாலும் நெஞ்சில் இடி இடிக்குதே

நீரின் மகன் எந்தன் காதலன்
நீரின் கருணையில் வாழுவான்
இன்று நாளைக்குள் மீளுவான்
எனது பெண்மையை ஆளுவான்

இயக்குனர் சீனு ராமசாமி,  GV பிரகாஷ், இசை அமைப்பாளர் ரகுநந்தன்  

ஜி. வி பிரகாஷ் - ஆண் குரலில் வரும் அதே பாட்டில் மிக அதிக கிறித்துவ வார்த்தைகள் பயன்படுத்தபட்டுள்ளது. ஊழியம், ஆசீர்வாதம், விவிலியம், ஸ்தோத்திரம், பரிசுத்தம் என ரொம்பவே அதிகமா போயிட்டார் கவிஞர் வைரமுத்து !

(இப்போது கிருத்துவர்கள் எதிர்ப்பால் இந்த வரிகளில் சில மாற்றப்பட உள்ளதாக செய்திகள் சொல்கின்றன).

ஆண் குரல் பாடலில் "பெட்ரோல் மீது தீயை போல உந்தன் மீது பற பரவென பரவுது மனசு " என்கிற வரிகளும் அதை பாடி முடித்த பின் வருகிற வயலினும் சரி மனதை கொள்ளை அடிக்கிறது. வயலின் மற்றும் பிளூட் பாடல் முழுதும் அசத்துவது பழைய இளையராஜா பாட்டை கேட்கும் பீலிங் அப்படியே தருது.

மீனுக்கு சிறு மீனுக்கு என்னும் பாடல்  (விஜய் பிரகாஷ், ஹரிணி) அழகான டூயட். இப்பாடலின் மிக அழகான பகுதி சரணத்தில் "அடடா முத்தம் பறிக்கிற வழி.. இது தான் குறுக்கு வழி" என்று பாடும் போது மெட்டை முழுவதுமாய் மாற்றி Beat-டையும் மாற்றி அடிக்கும் இடம் தான். இந்த பாடலிலும் விவிலியம், திருமறை  உள்ளிட்ட வார்த்தைகளை கவிஞர் விடவில்லை :((

தேவன் மகளே (பிரசன்னா, சைந்தவி) மற்றொரு டூயட். காதல் மலர்ந்தவுடன் வருகிற பாட்டு என நினைக்கிறேன். வயலினின் உபயோகம் மிக நன்கு தெரிந்து வைத்திருக்கிறார் இசை அமைப்பாளர்.

ஹரிஷ் ராகவேந்திரா பாடும் ரத்த கண்ணீர் என்னும் பாட்டு மாண்டேஜ் பாடலாக கதையை ஒட்டி வரக்கூடும். சுய பச்சாதாபம் அதிகமாய் ஒலிக்கும் இப்பாட்டு இப்போதைக்கு அதிகம் ஈர்க்க வில்லை.

அம்மா செண்டிமெண்ட் பாடலான "யார் வீட்டு முகமும்" ஒரு மெலடி.  வரிகள் புரிகிற மாதிரி பாடியுள்ளார் அனந்த் அரவிந்த்.

மொத்தத்தில்:    பற பற, மீனுக்கு சிறு மீனுக்கு, தேவன் மகளே  ஆகிய பாடல்களால் இந்த ஆல்பத்தை நன்கு ரசிக்க முடிகிறது.

ரகுநந்தன்: உங்க கிட்டே நாங்க நிறைய எதிர்பார்க்கிறோம் ! அடிச்சு ஆடுங்க சார் !
****
அனைவருக்கும் இனிய நவராத்திரி மற்றும் பூஜா வாழ்த்துகள் !

Monday, October 22, 2012

தொல்லை காட்சி : 7 C -யும், ஹவுஸ்புல்லும்

ஜெயா தொலை காட்சியில் புதிய நிகழ்ச்சி ஹவுஸ்புல் 

ஒரு கோடி ரூபாய் பரிசு என அறிவிப்புடன் பரபரப்பாய் வருகிறது ஜெயா டிவியில் ஹவுஸ்புல் என்கிற புது நிகழ்ச்சி. அலுவலகம் மற்றும் கல்லூரியில் " தம்போலா " என்கிற பெயரில் விளையாடுவோமே அதே விளையாட்டு தான் இது ! தம்போலா ஒரே அறையில் அமர்ந்து ஆடுவோம். இங்கு நடத்துவோர் டிவியிலும், கலந்து கொள்வோர் வீட்டிலும் இருக்கிறோம் அவ்வளவு தான் வித்யாசம் !

அவர்கள் சொல்கிற தொலைபேசி எண்ணுக்கு நாம் போன் செய்ய வேண்டும். அவர்கள் " விஸ்வநாதன் ஆனந்த் எந்த விளையாட்டில் புகழ் பெற்றவர் " போன்ற மிக கடின கேள்விகள் கேட்கிறார்கள். போன் செய்யும் அனைவருமே அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லி விடுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஆயிரக்கணக்கில் பரிசு தருகிறார்கள்.

பார்க்கிற என் பெண்ணே " என்னப்பா இது கால் பண்ற எல்லாருக்கும், ஒவ்வொரு நிமிஷத்துக்கும் பல ஆயிரம் ரூபாய் தர்றாங்க. நிஜமா குடுப்பாங்களா? " என்கிறாள்

பார்க்கலாம் நிகழ்ச்சி மக்களிடம் எடுபடுகிறதா என !

டிவியில் பார்த்த படம் - சேது

கே டிவியில் சேது படம் பார்த்தோம். பொதுவாய் கே டிவி பக்கம் போவதே இல்லை. ஒரு படம் பார்க்க ஆரம்பித்தால் விளம்பரத்துடன் சேர்த்து மூன்று மணி நேரம் வீணாகி விடும் என்பதால். அதுவும் பெரும்பாலும் பார்த்த படங்களாக வேறு இருக்கும் ! வார இறுதியில் வேறு நல்ல படம் இல்லாததால் கே டிவி பக்கம் செல்ல வேண்டியதாயிற்று.

சேது - இரண்டாம் பகுதி -ஒவ்வொரு முறை பார்க்கிற போதும் மனதை பிசைந்து விடும். விக்ரமுக்கு இந்த படத்துக்கு சிறந்த நடிகர் விருது மத்திய அரசு எப்படி தராமல் போனது என்று புரிய வில்லை !

பி. ஆர். பந்துலு குறித்த நிகழ்ச்சி

பி. ஆர். பந்துலு ! மாபெரும் இயக்குனர். சிவாஜி மற்றும் எம். ஜி . ஆரை வைத்து பல ஹிட் படங்கள் தந்தவர். இவரை பற்றி இவரது மகள் ஒளிப்பதிவாளர் விஜயலட்சுமி மற்றும் மகன் ஜெயா டிவியின் "திரும்பி பார்க்கிறேன்" நிகழ்ச்சியில் பேசினர்.

சுதந்திர போராட்டம் குறித்த நல்ல படங்கள் என இந்தியாவில் பத்து படங்கள் தான் உண்டு என்றும் அதில் மூன்றை இயக்கியவர் தங்கள் தந்தை என்றும் கூறியவர்கள், கப்பலோட்டிய தமிழன் பெரும் தோல்வி என்றும் அதில் தங்கள் தந்தைக்கு பெரும் நஷ்டம் என்றும் கூறினர். மேலும் இன்று 125 நாளுக்கு மேல் ஓடும் கர்ணன் படம் வெளிவந்த காலத்தில் பெரும் தோல்வி படமாய் இருந்ததை சற்று வருத்தத்தோடு பகிர்ந்து கொண்டனர்.

ஆரம்பத்தில் சிவாஜியோடு தொடர்ந்து பணியாற்றிய பந்துலு ஏனோ தனது கடைசி பத்து வருடங்களில் எந்த சிவாஜி படமும் இயக்க வில்லை. 1964 - ல் பந்துலு -சிவாஜி காம்பினேஷனில் வெளியான கர்ணன் மற்றும் முரடன் முத்து தான் இந்த ஹிட் காம்பினேஷன் இணைந்து பணியாற்றிய கடைசி படங்கள் !

சீரியல் பக்கம்: 7 C

சமீபத்தில் வந்த சாட்டை படத்தின் கதையும் இந்த தொடரின் அவுட்லைனும் ஏறக்குறைய ஒன்று தான் என நினைக்கிறேன். அவ்வப்போது விஜய் டிவி யில் காட்டும் டிரைலரிலேயே இந்த சீரியலின் கதை மற்றும் போக்கை ஊகிக்க முடிகிறது. வழக்கமாய் சீரியல் பார்க்கும் குடும்ப தலைவிகள் மற்றும் வயதானவர்களை தவிர்த்து விட்டு பள்ளி செல்லும் சிறு வயது மக்கள் பார்த்தால் மற்றவர்களும் பார்ப்பார்கள் என்ற எண்ணத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

சூப்பர் சிங்கர் அப்டேட்

அதென்னவோ தெரியலை .. ஜுனியரோ , சீனியரோ எந்த சீசன் நடந்தாலும் சூப்பர் சிங்கரில் இறுதி போட்டிக்கு முன் சென்னை சிட்டி செண்டர் சென்று மாடியில் நின்று கொண்டு பாடி தீத்துடுவாங்க. இம்முறையும் அது தொடர்ந்தது.அதன்பின் ப்ரீ பைனல் என்று சொல்லி இரண்டு ரவுண்ட் பாடினார்கள்

இறுதி போட்டியில் சுகன்யா அல்லது பிரகதி வெல்ல வாய்ப்புகள் மிக மிக அதிகம் என தோன்றுகிறது. இப்போது பாடுபவர்களை வைத்து பார்த்தால் சுகன்யா தான் வரவேண்டும். அவர் மலையாளி என்பதே அவருக்கு ஒரே மைனஸ். இந்த வாரம் ஐந்து பைனலிஸ்ட்டுகளும் பாடகர் ஹரிஹரனுடன் பாடுகிறார்கள். இதனை தொடர்ந்து வருகிற வெள்ளிகிழமை (அக்டோபர் 26 அன்று) இறுதி போட்டி நேரடி ஒளிபரப்பாகிறது. 

ஆயுத பூஜை சிறப்பு நிகழ்ச்சிகள்

பல டிவிக்களும் ஆயுத பூஜைக்கு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் காத்திருக்கின்றன. விஜய்யில் சிறப்பு படம் தோனி இதுவரை பார்க்கா விடில் பார்க்கலாம். சன் டிவியில் ஒரு கல் ஒரு கண்ணாடி படம் திரையிட உள்ளனர். உதயநிதி ஸ்டாலின் தயாரித்த படம் என்பதால் கலைஞர் டிவியில் தானே வரும்? எப்படி சன் டிவி போனது என தெரியவில்லை. மற்றபடி ஏற்கனவே போட்ட பல படங்கள் தான் போடுகிறார்கள். விஷால் மற்றும் சமீரா ரெட்டி என்கிற இரு ஹீரோக்கள் நடித்த வெடி படம் போடும்போது அந்த படம் போடும் சானல் பக்கமே போகாமல் இருக்கவும் என எச்சரிக்கை தருகிறேன். அப்புறம் உங்கள் இஷ்டம் !

Saturday, October 20, 2012

தென்றலின் கனவு : பதிவர் சசிகலா புத்தக விமர்சனம்

தென்றல் என்கிற வலைப்பூவில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வருபவர் -சசிகலா. இவரது கவிதைகள் தென்றலின் கனவு என்கிற பெயரில் புத்தகமாக வெளிவந்துள்ளது.

கணவர் ரவிசங்கர், மகன்கள் இனியவன், இளையவன் படங்கள் புத்தகத்தின் பின் (உள்) அட்டையில் உள்ளது வித்யாசமாய் இருக்கு !

காற்றோடு முட்டி மோதி என்கிற கவிதை நகர வாழ்வில் சிக்கி திணறி தாமதமாய் வேலைக்கு போகும் பெண்ணின் துயரை சொல்லி செல்கிறது.

உடல் ஊனம், வளர்ப்பு பிராணிகள் பற்றி ஆங்காங்கு சில கவிதைகள் இருந்தாலும் காதல் தான் மிக அதிகமாய் பொங்கி வழிகிறது

அழைக்க மாட்டாய்
என தெரிந்தும்
நொடிக்கொரு முறை
எடுத்து பார்க்கிறேன்
அலை பேசியை !
 


காதல் வந்த பிறகு என்கிற சிறு கவிதையில் (இக்கவிதை 84-ஆம் பக்கமும் மறுபடி பிரசுரம் ஆகியுள்ளது ! புத்தகத்திலும் ஒரு மீள் பதிவு !) பெண்களுக்கு காதல் வந்தால் என்ன மாறுதல் வருகிறது என சொல்கிறார். ஆண்களுக்கு இத்தகைய பெண்களின் உணர்வுகள் ஆச்சரியமாய் தான் இருக்கும். பெண்கள் இத்தகைய கவிதைகளை ஒரு விதத்தில் ரசித்தால் ஆண்கள் இப்படியும் அவர்கள் நினைப்பார்களா என யோசிப்பார்கள் !


கொடுங்கள் கொடுத்து கொண்டே இருங்கள்
உங்களுடையது என்று எதுவும் இல்லை
என்று ஒரு கவிதையில் சொல்லும் கவிஞர், இந்த புத்தக வெளியீட்டு படங்களை புகைப்படம் எடுத்து தந்தமைக்கு எனக்கு இன்னும் பணம் செட்டில் செய்ய வில்லை :))

இறந்து போன அம்மாவை அரை நாள் விடுப்பில் வா; மடியில் தலை சாய்த்து படுக்க வேண்டும் எனும் பெண்ணின் உணர்வுகள் நெகிழ்த்துகிறது

சில சுமாரான கவிதைகளுக்கு பின் ஒரே பக்கத்தில் இரு நல்ல கவிதைகளையும் பார்க்க முடிகிறது உதாரணத்துக்கு ஒன்று

எந்த விருந்தினருக்காக
என் வீட்டு வாழை மரத்தில்
இலை கழுவி கொண்டிருக்கிறது
மழை !

எந்திரத்தனமான உலகில் என்னும் கவிதையில் ஆண் -பெண் இருவரும் வேலைக்கு போகும் நகர வாழ்க்கையின் கொடுமை அப்படியே வெளிப்படுகிறது. நாங்களும் இதை அனுபவ ரீதியாக உணர்ந்துள்ளோம் !

பெண்களுக்கு உரித்தான possessiveness- காதலன் மீது கோபம் என்றால் பூனை குட்டியை உதைப்பதிலும், இன்னொரு ஆண் காதலனுடன் வண்டியில் போனால் கூட பொறாமை வருவதிலும் வெளிப்படுகிறது

சமையலறையும்
சலவை துணியுமே
உலகம் என்றிருந்தேன்
கவிதையின் அறிமுகம்
கிடைக்கும் வரை

என்கிற வரிகள் ஒரு பெண்ணின் சுயம் தேடும் தேடலை அழகாய் வெளிப்படுத்துகிறது.

மொத்தத்தில் :

பெண்களின் உணர்வுகளை அழகாய் பதிவு செய்துள்ள சசிகலாவிற்கு வாழ்த்துகள் ! தொடர்ந்து எழுதுங்கள் !

Friday, October 19, 2012

மணாலி-வசிஷ்டர் கோவிலும் நாங்கள் தங்கிய ஹோட்டலும்

வஷிஸ்ட் கோயில்

Add caption
 மணாலியில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது வஷிஸ்ட் கோயில். கோயிலுக்கு நூறு மீட்டர் தூரத்தில் நம் கார் நிறுத்தப்பட்டு விடுகிறது. பின் நடக்க வேண்டும். கொஞ்சம் மலையாக உள்ளதால் வயதானவர்கள் நடக்க சற்று சிரம படுவர்.



நடக்கும் வழியில் நிறைய கடைகள் இருந்தன. பெரிய ஷால் எல்லாம் விற்கின்றனர். வெளியே நின்று உங்களை வற்புறுத்தி அழைத்து சென்று "பணமே தர வேண்டாம்; வி.பி. பி முறையில் அனுப்பி வைப்போம். கொஞ்சம் அட்வான்ஸ் மட்டும் தந்து விட்டு போங்க" என்கிறார்கள். மெத்தைக்கு போட துணி, போத்தி கொள்ள எல்லாம் சேர்த்து நாலாயிரம் என்கிறார்கள். நம்மை மாதிரி வெய்யில் தேசத்துக்கு தேவையே இல்லை. விசாரித்து விட்டு எஸ் ஆனோம்



சுடு நீர் உள்ள குளம் மிக புகழ் பெற்றது. 33000 கோடி கடவுள்களும் வந்து குளித்ததாக ஐதீகம். இங்குள்ள கடவுள் சிவன். இவரை வணங்கி விட்டு குளத்தில் ஒரு சிலர் குளித்தோம்.


பெண்களுக்கு தனி இடம். பிரைவசி உடன் ஆண்கள் காண முடியாத படி தனியாக உள்ளது.

ரோடாங் மணால்சு ஹோட்டல்


நாங்கள் தங்கிய ரோடாங் மணால்சு ஹிமாச்சல் டூரிசத்தின் ஹோட்டல். மணாலியில் ஒரே ஒரு முக்கிய கடை தெரு தான் உள்ளது. இதை மால் ரோடு என்பர். இதற்கு அருகிலும் நிறைய லாட்ஜுகள் உள்ளன. ஆனால் இந்த ரோடாங் மணால்சு அந்த இடத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. ஒவ்வொரு முறையும் வெளியே வர கார் அல்லது ஆட்டோ தேவை. இது மட்டுமே பிரச்சனை. மற்ற படி அருமையான உணவு. பனி படர்ந்த மலை அறையில் இருந்து தெரிகிறது. மிக மிக அற்புத கார்டன். பெண்கள் மிக மிக ரசித்து என்ஜாய் செய்கிறார்கள். ஹோட்டலில் இருக்கும் போதெல்லாம் என் பெண் , அறையில் இருக்காமல் கார்டனுக்கு சென்று விடுவாள். மனைவியும் கூட தான் !

ஹவுஸ்பாஸ் / பூக்கள் கார்னர்



காலை மற்றும் இரவு இரு வேளை நல்ல உணவு சாப்பிட்டோம். மதிய சாப்பாட்டுக்கும் சேர்த்து அவர்கள் பணம் வாங்குவதால், நீங்கள் கேட்டால், மதியத்துக்கு பிரேட் போல ஏதாவது பேக் செய்து காலையிலேயே தருகிறார்கள்.
ஹோட்டலில் உள்ள கார்டன் (நடப்பது யாரோ அறியேன்)
Details about the hotel:


Website: http://www.himachalhotels.in/Hotel-Rohtang-Manalsu/

Hotel Rohtang Manalsu

Tel. No. +91 177 2860601, 2860630, 2661073

email:booking@himachalhotels.in
****
மணாலியில் எல்லா கடைகளும் செம கூட்டமாய் உள்ளது. டூரிஸ்ட் கூட்டம். மருந்து கடை முதல் பெட்டி கடை வரை சரி கூட்டம் ! எந்த பொருள் வாங்கவும் கடையில் சற்று நின்று தான் வாங்கி வரணும்

அங்கு மரங்கள் நிறைய உள்ளதால் மரத்தில் நம் பெயர் அல்லது நாம் சொல்லும் மற்றவர்கள் பெயர் எழுதி தருகிறார்கள். நல்ல தரமுள்ள மரத்தில் எழுத நூறு ரூபாய் போல் தான் வாங்குகிறார்கள்.

ரூமுக்கு வெளியே கார்டன்; உள்ளே பெயர் பலகை இரண்டும் உங்கள் கவனத்திற்கு

அதில் சில கலை வேலைப்பாடு வேறு செய்து தருகிறார்கள். மச்சான் குடும்பத்துக்கு ஓரிரண்டு வாங்கி வந்தோம். அவர்கள் வேலை பாடுகளை பார்த்து மிக மகிழ்ந்தார்கள்

ரோஜா படத்தின் ஷூட்டிங் நிறைய இங்கு எடுத்துள்ளார்கள். காஷ்மீர் என்று சொன்னாலும் கூட பல காட்சிகள் இங்கு எடுத்தது தான். நாங்கள் போன போது எந்த ஷூட்டிங்கும் நடக்கலை. டூரிஸ்ட் அதிகம் உள்ள இந்த நேரம் ஷூட்டிங் விட மாட்டார்களாம். குளிர் காலத்தில் தான் ஷூட்டிங் விடுவார்களாம்

HPTC - பஸ் மூலம் லோக்கல் இடங்களுக்கு செல்லலாம் எனினும் அவர்கள் சுற்றி பார்க்க 45 நிமிடம் மட்டுமே தருவார்கள். அதற்குள் நாம் எல்லாம் இடமும் பார்த்து விட்டு வரவேண்டும். சற்று காஸ்ட்லி என்றாலும் ஒரு கார் எடுத்து கொண்டால், நம் விருப்ப படி பார்த்து வர சௌகரியம் ஆக இருக்கும். கூட இன்னும் ஓரிரு குடும்பங்கள் சேர்ந்து விட்டால் நன்கு என்ஜாய் செய்யலாம்.

Thursday, October 18, 2012

Ferrari Ki Sawaari -2012- ஹிந்தி சினிமா விமர்சனம்

சிறுவர் வாழ்க்கையை பின்னணியாக வைத்த படங்கள் எப்போதுமே நம்மை கவர கூடியவை. அதிலும் பலருக்கும் பிடித்த கிரிக்கெட் பின்னணியில் அமைந்த கதை எனும்போது நம் ஆர்வம் இன்னும் கூடும் தானே?

*********
கிரிக்கெட் விளையாடுவதையே லட்சியமாக கொண்ட ஒரு சிறுவன் கயோ. அவனது தந்தை ரூசி (ஷார்மன் ஜோஷி) மற்றும் தாத்தா (போமி இராணி ) ஆகியோருடன் வசிக்கிறான். தாயார் இறந்து விட, வீட்டில் இருப்பது இந்த மூன்று ஆண்கள் மட்டுமே. மிக அருமையாக கிரிகெட் ஆடும் கயோ இங்கிலாந்தில் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் பயிற்சி வகுப்புக்கு செல்ல விரும்புகிறான். அதற்கு ஒண்ணரை லட்சம் பணம் தேவைப்பட, அதை திரட்ட அவன் தந்தை பல இடங்களிலும் முயன்று தோற்கிறார்.


பெராரி காரை ஒரு நாள் கல்யாண ஊர்வலத்துக்கு பெற்று தந்தால் ஒண்ணரை லட்சம் பணம் தருவதாக ஒருவர் சொல்ல, கிரிக்கெட் வீரர் சச்சினிடம் மட்டுமே அந்த கார் உள்ளது என தெரிந்து அதனை நைசாக எடுத்து வருகிறார் ரூசி. கிடைக்கிற ஒண்ணரை லட்சத்தை மறந்து போய் காரில் வைத்து விட்டு வந்து விடுகிறார்.

பணம் மறுபடி கிடைத்ததா? கயோ லார்ட்ஸ் சென்று கிரிக்கெட் ஆடினானா என்பது படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

படத்தில் என்னை ஆச்சரியப்பட வைத்த முதல் விஷயம் ஹீரோயினே இல்லாமல் ஒரு முழு படம் எடுத்திருப்பது தான். தமிழில் இப்படி ஹீரோயின் இல்லாமல் ஒரு படம் பார்த்த நினைவு இல்லை ! (உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் ). வித்யா பாலன் ஒரு குத்து பாட்டுக்கு மட்டும் வந்து போகிறார்.

அடுத்து சிறுவனின் தந்தையாக வரும் ஷார்மன் ஜோஷி நடிப்பில் பெரிதும் கவர்கிறார். அவரது சிரிப்பு அந்த பாத்திரத்துக்கு பெரிதும் பொருந்துகிறது. ஒரு தந்தையின் ஏக்கம், நேர்மையான அரசு ஊழியர் என்கிற பெருமிதம், வயதான தந்தை மீது காட்டும் மரியாதை என பலவித உணர்ச்சிகள் காட்டும் அட்டகாசமான பாத்திரம். மிக அருமையாக நடித்துள்ளார் ஷார்மன் ஜோஷி. த்ரீ இடியட்சில் (தமிழில் ஜீவா செய்த ரோலில்) நடித்தவர் இவர். தனி ஹீரோவாக இது முதல் படம் என்று நினைக்கிறேன். வெரி வெல் டன்.

தாத்தாவாக வரும் போமன் இராணி இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவர். ஒவ்வொரு பாத்திரத்துக்கும் எவ்வளவு வித்யாசம் காட்டுகிறார். துவக்கத்தில் கிரிக்கெட் ஆடாதே என்று சொல்வதில் துவங்கி கிளைமாக்சில் பேரனுக்காக மக்கள் பேசும்போது பெருமையாக தலை அசைப்பது வரை அவர் வரும் காட்சிகளில் எல்லாம் அசத்தலான நடிப்பை தருகிறார் !

கிரிக்கெட் வீரனாக வரும் சிறுவன், விளம்பரங்களில் நடிக்கும் ஒரு மாடல் என்று அறிகிறேன். கிரிக்கெட் நன்கு ஆடும் பையனாக பார்த்து எடுத்துள்ளனர். கடைசி காட்சியில் அப்பாவிடம் " லார்ட்ஸ் போனாதான் கிரிக்கெட்டர் ஆவேனா? " என்று பேசும் போது மனதில் நிற்கிறான்.

சில சின்னச் சின்ன பாத்திரங்கள் செம சுவாரஸ்யமாக உள்ளது. சச்சின் வீட்டு செக்யூரிட்டி ஆக வரும் குண்டு மனிதர் வெள்ளந்தி பேச்சில் கலக்குகிறார். " ஸ்கூட்டருக்கும் ரெண்டு சீட் தான். பெராரிக்கும் ரெண்டு சீட் தான்" என்று இவர் அப்பாவி ஆக பேசும்போது சிரிக்காமல் இருக்க முடியாது.

கிரிக்கெட் சங்க தலைவர் பாத்திரம் மூலம் கிரிக்கெட்டில் நடக்கும் அரசியலை செமையாக காட்டி உள்ளனர்.

ஒரே நேரத்தில் இருநூறு கல்யாணம் செய்து வைக்கும் அரசியல் வாதி, அவரது Eccentric  மகன் கதையை நகர்த்த உதவுகின்றனர்.

படத்தில் குறைகளும் இல்லாமல் இல்லை.

சச்சின் காரை இரண்டு முறை எடுத்து வருவது முழுக்க காதில் பூ ரகம் தான். இதுவே ரியலிஸ்டிக் படம் என்ற நிலையில் இருந்து பான்ட்டசி (fantasy ) என்ற தளத்துக்கு எடுத்து போய் விடுகிறது.

மிக நேர்மையான ஹீரோ அந்த நேர்மையால் தனக்கு கிடைத்த நல்ல பெயரை அடிப்படையாய் வைத்தே அடுத்தடுத்து தவறு செய்யும் போது உறுத்துகிறது

இந்த வருடம் ஜூன் மாதம் வெளியான இப்படம் தயாரிப்பாளர் கையை கடிக்காத அளவில் போட்ட காசை எடுத்து தந்ததாக தெரிகிறது.

நேரம் இருந்தால் இந்த ஜாலியான ஹிந்தி படத்தை ஒரு முறை பாருங்கள் !

Wednesday, October 17, 2012

வானவில்- தஞ்சை-நீலிமா ராணி- IRCTC


மெட்ராஸ்ல இருக்கவங்க தான் மனுஷங்க; நாங்கல்லாம் மண்ணுங்க !

மீபத்தில் அதிகாலை நாலே முக்காலுக்கு தஞ்சை சென்று இறங்கிய சில நிமிடங்களில் கரண்ட் போயிந்தே !  இருட்டில் தட்டு தடுமாறி மாரிஸ் கார்னர் அருகே உள்ள அம்பாள் டீ கடைக்கு வந்தேன். ஒரு டீ சொல்லி விட்டு " கரண்ட் எப்ப சார் வரும்?" என்று கேட்க, ஏற இறங்க பார்த்து விட்டு " தம்பி வெளியூரில் இருந்து வர்றீங்களா? எப்ப வரும்னு சொல்லவே முடியாதுங்க. மெட்ராஸ்ல இருக்கவங்க தான் மனுஷங்க; நாங்கல்லாம் மண்ணுங்க. எங்களுக்கெல்லாம் எதுக்குங்க கரண்ட்டு ? " என்றார். "அடடா நல்ல வரவேற்பா இருக்கே" என்று நினைக்க, " விருந்தாடியெல்லாம் நாம அனுப்பி வைக்க வேணாம். அவங்களே இங்கே உள்ள நிலைமை பார்த்துட்டு மெட்ராஸ் ஓடிடுவாங்க; பல பேருக்கு இது நடக்குது " என தொடர்ந்தார் !

வீட்டுக்கு சென்றதும் அவர் சொன்னது உண்மை என்று புரிந்தது. இன்வர்டர் வீட்டில் இருந்தாலும் கூட இந்த அளவு கரண்ட் கட்டுக்கு கதைக்கே ஆவாது ! பகல் முழுசும் கரண்ட் இல்லாவிட்டால் கூட இன்வர்டர் போடாம இருந்தா இரவு ஓரளவு தாக்கு பிடிக்கும். நள்ளிரவு கூட ஒரு மணி நேரம் மாற்றி மாற்றி கரண்ட் கட் பண்றது கொடுமை !

டிவி பார்ப்பது அங்கு பெரிதும் குறைஞ்சிடுச்சு. கரண்ட் இருக்க நேரத்தில் அவசரமா சமையல் செய்வது, கீசர் போட்டு குளிப்பது போன்ற வேலைகள் செய்கிறார்கள். நிலைமை ரொம்ப மோசமா தான் இருக்கு :(

தஞ்சையில் பதிவர் சந்திப்பு

தஞ்சையில் பதிவர்கள் ஜோசப் பால்ராஜ், சென் மற்றும் மருத்துவர் மயிலன் ஆகியோர் சந்தித்து உரையாடினோம். ஜோசப் சுவாரஸ்யமாய் பல விஷயங்கள் பகிர்ந்து கொண்டார்.


மணற்கேணியில் நடத்திய போட்டிகள் குறித்த அனுபவங்கள், இருதய மாற்றம் செய்த செந்தில்நாதன் நோய் குறித்தும் அவரது இப்போதைய நிலை குறித்தும் பல தகவல்கள் (அவருக்கு சிறந்த கோ- ஆபரேஷன் தந்த நோயாளி என சிங்கப்பூரில் அவார்ட் தந்துள்ளனராம். மேலும் சிங்கப்பூர் அரசு உறுப்பு தானத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறது என்பதும், உறுப்புகள் விரைவில் கிடைப்பதால் சிங்கப்பூரில் இத்தகைய ஆப்பரேஷன் செய்வது மிக நல்லது என்றும் அவர் பேச்சினூடே தெரிய வந்தது)

அப்துல்லா மணிஜி,டாக்டர் புருனோ உள்ளிட்ட பல பதிவர்கள் பற்றி நிறைய சுவாரஸ்ய தகவல்கள் பேசி சிரித்தோம்.

டாக்டர் மயிலன் தனது ஆப்பரேஷன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

மாலை ஐந்தே முக்கால் முதல் ஏழு வரை ஜாலியாய் பேசி கொண்டிருந்தோம். ஏழு மணிக்கு கரண்ட் போச்சு. நல்லவேளை முன்னமே சில போட்டோ எடுத்துட்டோம்.

இனிய சந்திப்புக்கும் தேநீருக்கும் நன்றி நண்பர்களே ! மீண்டும் சந்திப்போம் ஜோசப், சென் & மயிலன் !

அழகு கார்னர்

இந்த அம்மணி கிட்டே என்னமோ ஒரு ஈர்ப்பு இருக்கு.. என்னான்னு சொல்ல தெரியலை. தமிழ் சினிமா இவரை சின்ன பாத்திரத்திற்கு மட்டுமே பயன்படுத்தினாலும் சின்ன திரையில் கலக்கிக் கொண்டிருக்கிறார் ! இவருக்கு இணையத்தில் பெரிய  ரசிகர்  பட்டாளமே  இருக்குங்கோவ் !


பதிவர் பக்கம்

இந்த வாரம் நாம் குறிப்பிட விரும்பும் பதிவர் உடல்நலன் குறித்து நல்ல பதிவுகள் எழுதுபவர். உங்களில் பலருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கலாம். துரை டேனியல் !

எப்போதும் பிறருக்கு பயன்தரும் தகவல்களையே பதிவாக எழுதுவார் இவர் !

நம் உடலில் உள்ள Body clock எப்படி இயங்குகிறது என்பது குறித்த அவரின் இந்த பதிவை வாசியுங்கள்.

தொடர்ந்து அசத்துங்க துரை டேனியல் !  

காணாமல் போன கல்லூரி மாணவன்

                             

இந்த புகைப்படத்தில் உள்ள பதிவர் அமைதி அப்பாவின் உறவினர் மகன் சுகிலன் கடந்த சில நாட்களாக காண வில்லை. பதினெட்டு வயதுள்ள இவர் சென்னையில் சத்திய சாய் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு M.B.B.S படித்து வருகிறார். ஒரு மாதமாய் பெற்றோரை பார்க்காததால், ஊருக்கு வருகிறேன் என சொல்லிவிட்டு பஸ்ஸில் ஏறி வேதாரண்யம் சென்றுள்ளார். கடைசியாக " பஸ்ஸில் ஏறிவிட்டேன்; பெருங்களத்தூர் தாண்டி விட்டது" என வீட்டுக்கு பேசி உள்ளார். மறுநாள் வீட்டுக்கு வரலை. போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. கல்லூரி சென்று விசாரித்ததில் படிப்பில் பிரச்சனையோ காதல் விவகாரமோ இல்லை என தெரிந்துள்ளது. செல்போன் சிக்னல் கடைசியாக வேதாரண்யம் அருகே நாகூரில் கிடைத்ததாக போலிஸ் கூறியுள்ளது.

கல்லூரி மாணவர்கள் இப்படி காணாமல் போவதும் நடக்கிறது என்கிற எச்சரிக்கைக்காகவும் இதை பகிர சொல்லி பதிவர் அமைதி அப்பா தெரிவித்திருந்தார்.

மேற்கண்ட சுகிலன் பற்றி தகவல் தெரிவிக்க 9486766404, 9442577348 என்கிற எண்களை தொடர்பு கொள்ளவும். 

QUOTE CORNER

Certain is it that there is no kind of affection so purely angelic as of a father to a daughter. In love to our wives there is desire; to our sons, ambition; but to our daughters there is something which there is no words to express. ~Joseph Addison

அப்பா- மகள் உறவு குறித்த quote இன்று போட ஒரு காரணமிருக்கு. இன்று என் மகள் ஸ்நேகா பிறந்த நாள்.


IRCTC டார்ச்சர் !

IRCTC சைட் என்று ஒன்று இருக்கிறதே. அது மனுஷனை மிருகம் ஆக்கிடும் போல. கம்பியூட்டரை தூக்கி எறியாதது தான் பாக்கி.

ஒரு காலத்தில் இந்த சேவை எவ்வளவு நல்லா இருந்தது ! இப்போ பல லட்சம் மக்கள் யூஸ் செய்கிறார்கள் என்றால் அதற்கு தகுந்த மாதிரி பேன்ட்விட்த் அதிகமாக்கணும். இல்லாட்டி இந்த சேவையை கடாசிட்டு எல்லாரும் போய் கியூவில் நின்னு வாங்கிக்குங்கன்னு சொல்லணும். முடியலை பாஸ் ! ஒரு வாரமா , ஒவ்வொரு நாளும் பத்து முறைக்கு மேல் பல நேரத்தில் முயற்சி பண்ணி வெறுத்து போயிட்டேன் ! கொடுமை. இனி ஊருக்கு போக ஏஜன்ட் மூலம் தான் டிக்கெட் போடணும் போல !

Related Posts Plugin for WordPress, Blogger...