Showing posts with label தேவகுமார். Show all posts
Showing posts with label தேவகுமார். Show all posts

Friday, August 30, 2013

வீடுதிரும்பல் மோகனின் வெற்றிக்கோடு - வெற்றி பெறுமா ? FIRST ON NET

வெற்றிக்கோடு - புத்தக விமர்சனம் -FIRST ON NET - தேவகுமார் 

நான் டில்லியில் வேலை பார்த்த Law Firm-ல் இருந்த பெண்கள் சற்று மேனா மினுக்கிகள். ஒரு நாளைக்கு மூன்று முறை மேக் அப் போட்டு manicure- ஐ பற்றி தீர விவாதித்து, Perfume-ஐ தெளித்து கொள்ளாமல், Perfume cloud ஏற்படுத்தி, தங்களை வாசனை செய்து கொண்டு , படாடோபமாக இருப்பார்கள்.

என் நண்பன் அவளது தோழி ஒருத்தியை திருச்சூரில் இருந்து அலுவலகத்திற்கு அழைத்து வந்தான். எந்த ஒப்பனையும் இல்லாமல், கோதுமை நிறத்தில், எளிமையான சுடிதாரில் சுருள் சுருளான முடியோடு வந்த அந்த பெண்ணை பார்த்து என் அலுவலக பெண்கள் வெவ்வேறு விதத்தில் சொன்ன ஒரே விஷயம் - She looks so fresh !

நமக்கு அதிகம் பரிச்சயமில்லாத எடுத்து காட்டுகளோடு வெளியாகும் சுய முன்னேற்ற கட்டுரைகளுக்கு மத்தியில் - மோகன்குமாரின் வெற்றிக்கோட்டை படிக்கும் போது - எனக்கு அந்த freshness -ம், படாடோபம் இல்லாத அழகும், மினுக்கி கொள்ளாத உண்மையும், மிக நெருக்கமான உணர்வும் வந்து போனது.

எங்கோ யாருக்கோ நடந்ததை சொல்லாமல் - தனக்கு நடந்த அனுபவங்களையே கட்டுரையாக்கி இருப்பது - அவரது தைரியத்தையும், கட்டுரைகளில் உண்மை தவிர வேறொன்றும் இல்லை என்பதையும் சொல்லி செல்கிறது. " My life is my message " என்பது மாதிரி !

மோகன்குமாரை எனக்கு 22 ஆண்டுகளாக தெரியும். 1991-ல் முதலாண்டு சட்டம் படித்த போது - ராக்கிங்கில் பழக்கமாகி, அப்போது நான் பாலகுமாரனை படிப்பேன் என்று சொன்னதையும் மன்னித்து (!) என்னை தம்பியாக்கி கொண்டார் . அவர் வழி நான் நடந்தேன். (கொஞ்சம் அரைகுறை !) அவர் ACS -ல் சேர்ந்தார். நானும் சேர்ந்தேன். (இன்னும் முடிக்க வில்லை) அவர் தினமும் எழுதுகிறார். நான் என்றேனும். அந்த வகையில் மோகன்குமார் எனக்கு குருநாதர்

கல்லூரி காலத்தில் அவரது கவிதைகளில் " சுழித்து ஓடும் சலன ஆறு " என்பது ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வரும். அந்த சலனங்களிலிருந்து, பயங்களிலிருந்து மீண்டு எப்படி வெற்றியாளர் ஆனார் என்கிற ஆச்சரிய குகையின் " அண்டா காகசம் - அபூ காகுசம் " தான் இந்த கட்டுரைகள்
*****
சுய வெறுப்பு மற்றும் கோபம் குறித்த கட்டுரைகள் " நமக்கு நிகழ்ந்த அனுபவங்கள் ஆயிற்றே " என்று பலரையும் எண்ண வைக்கும்

                               

குறிப்பாக சுய வெறுப்பு பற்றிய கட்டுரையில் " நடந்ததை மாற்ற கடவுளாலும் கூட முடியாது" என்று அவர் சொல்லும்போது - அந்த செய்தி எவ்வளவு ஆழமானது என்பதை தாண்டி - இந்த புரிதல் எவ்வளவு பயனுள்ளது என்பது தான் எனக்கு தோன்றுகிறது

மனதின் அத்தனை குற்ற உணர்வுகளையும், கசப்புகளையும் களைந்து எறிந்து - நம்மை வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு இந்த புரிதல் நகர்த்தி செல்லக்கூடும். " இன்று புதிதாய் பிறந்தோம் " என்ற பைபிளின் வரிகளும் சொல்வது இதை தானோ ?

                                                             

கோபத்தின் காரணம் எந்த நிகழ்வும் அல்ல - உங்களின் எதிர்பார்ப்பு என்பதாகட்டும், சண்டை போட்டவர்களிடம் அடுத்த நாள் நான் பேசி விடுவேன் என்பதாகட்டும், பக்கத்துக்கு வீட்டு காரனிடம் அன்போடு பழகுவதன் அவசியம் சொல்வதாகட்டும் ( அவன் பத்த வைக்கும் பரட்டை ஆகி விடாமல் தடுக்க ) - இவை அனைத்தும் அன்பாலேயே காரியத்தை சாதித்து விடலாம் என ஆச்சரியப்படுத்துகின்றன !
**********


" பெரியோர் ஆசியும் ரோல் மாடலும்" என்பது சுய முன்னேற்ற கட்டுரைகளுக்கு புதிதான கோணம்.

உங்கள் Idol-ஐ கண்டுபிடியுங்கள். அதே நேரம் உங்கள் Identiy - ஐ கை விடாதீர்கள் என்பது எவ்வளவு உண்மை !

இப்புத்தகம் புதுப்புது முன்னேற்றத்தின் காரணிகளை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. நம்மை பின்னிழுக்கும் ஆமை என பொறாமையை அடையாளம் காட்டும் ஒரு கட்டுரை " உங்களை உங்கள் நண்பருடன் ஒப்பிட்டு உங்களை நீங்களே அவமானப்படுத்திக் கொள்ளப்போகிறீர்களா ?" என கேட்கும் போது நமக்கு நம்மையே பிடிக்க ஆரம்பிக்கிறது. அதுவே வெற்றியின் ஒரு பக்கம் தான்.

பல நுணுக்கங்களை சொல்லிச்செல்கிற அதே போக்கில், அதனால் விளையும் நன்மைகளையும் (பல சமயங்களில் அது சுய நலமாகவே இருந்தாலும்) சொல்வது சுவாரஸ்யம்.

Corporate Life-ல் கற்று கொள்கிற முக்கிய பாடம் - எது செய்தாலும் அதில் Return of Investment (ROI) என்ன என பார்க்க வேண்டும். இப்புத்தகத்தில் ஒவ்வொரு நுணுக்கத்திற்கும் ஒரு ROI- ஐ சொல்வது - இந்த கட்டுரைகள் ஒரு Seasoned executive-ஆல் எழுதியதால் சாத்தியப்பட்டது !
***********
திரு. சோம. வள்ளியப்பன் எனக்கு கல்லூரி காலத்தில் வகுப்பெடுத்தார். நான் தொடர்ந்து கவனிக்கும், வியக்கும் - சில விதங்களில் பின்பற்றும் மனிதர் அவர். அவரது நேர மேலாண்மை ஆச்சரியம் தரும். அப்போது அவர் ஒரு மேல் நாட்டு நிறுவனத்தில் - மதுராந்தகத்தில் வேலை பார்த்தார். அலுவலக பேருந்தில் பயணிக்கும் நேரத்திலும் எழுதி கொண்டே பயணித்தவர். மோகன் குமார் முன்னுரை யாரிடம் கேட்கலாம் என்று என்னிடம் கேட்டபோது முதலில் ஞாபகத்தில் வந்தவர் திரு. சோம. வள்ளியப்பன்.
                         


ஒரே நேரத்தில் Corporate executive ஆகவும் இருந்து கொண்டு வெவ்வேறு தளங்களில் சுணக்கம் இல்லாமல் வெற்றிகரமாக இயங்கும் மோகன் குமாரின் கட்டுரைகளுக்கு சோம. வள்ளியப்பன் சரியான முன்னுரையாளர் என்பது என் எண்ணம்.

திரு. வள்ளியப்பன் தனது முன்னுரையில் சொல்கிறார் " தேவைப்படுகிறவர்கள் - எதிர்பார்க்கிறவர்கள் மிகவும் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இது போன்ற புத்தகங்கள் அவசியம் தேவை.

குருவின் சொல் மந்திரம் !

                                                                                                                       தேவகுமார் 

*************
முதல் கருத்துரை வழங்கிய தேவகுமாருக்கு நன்றி !

நாளை காலை புத்தகம் குறித்த பிரபல பதிவர் ஒருவரின் கருத்துக்கள் வீடுதிரும்பலில் இடம் பெறும் !

****
வீடுதிரும்பல் மோகன்குமார் எழுதிய வெற்றிக்கோடு புத்தகம் அச்சிடப்பட்டு - விற்பனைக்கு தயாராகிவிட்டது. அகநாழிகை புத்தக கடையில் கிடைக்கிறது..

https://www.facebook.com/aganazhigai

Photo: வீடுதிரும்பல் மோகன்குமார் எழுதிய வெற்றிக்கோடு புத்தகம் அச்சிடப்பட்டு - விற்பனைக்கு தயாராகிவிட்டது. அகநாழிகை புத்தக கடையில் கிடைக்கிறது.. 

https://www.facebook.com/aganazhigai

****
சனி, ஞாயிறு விழா குறித்த விபரங்கள் இதோ -



இரு நாளில் தங்களுக்கு எப்போது வசதிப்படுமோ அன்று அவசியம் கலந்து கொள்க ! உங்கள் வருகையும் இந்த எளிய, உண்மையான எழுத்துக்கு நீங்கள் தரும் ஆதரவும்  எங்களை மகிழ்ச்சிப்படுத்தும் !

Friday, January 11, 2013

எஸ் ரா : பயணங்களும் பரவசங்களும் ...ஒரு இனிய அனுபவம் !

பயணங்களும் பரவசங்களும் - எஸ் ராமகிருஷ்ணன் 
- By: தேவகுமார் 

சங்கம் 4 ன் ஒரு பகுதியாக எஸ்ரா பயணங்களும் பரவசங்களும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

அரசியல் காரணங்களால் சங்கமம் நிறுத்தப்பட்ட சூழலில், புது (சிறு) வடிவம் கொண்டு சங்கம் - 4 என, இந்த வருடம் நிகழ்ந்தது (சங்கமம் நிகழ்ச்சியின் அமைப்பாளர்களில் Fr. கஸ்பராஜ் மட்டுமே சங்கம் 4 - இல் தெரிந்த முகம்). சங்கமம் அளவிற்கு வீச்சு இல்லை ஆயினும்  நன்றாகவே நிகழ்ந்ததாக தெரிகிறது. நான் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் தியோடர் பாஸ்கரன், எஸ்ரா மற்றும் செல்வராஜ் (முன்னாள் தஞ்சை பல்கலைகழக துணை வேந்தர்) ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.

பயணங்களை பற்றி பேசும்போதெல்லாம் புது பொம்மை கிடைத்த ஒரு சிறு குழந்தை மாதிரி எஸ்ரா மாறுவதை இம்முறையும் (ஜனவரி 4) கண்டேன். சில விஷயங்கள் அவர் வேறு இடத்தில் பகிர்ந்து கொண்டது தான் ;  இரண்டாம் முறை அவர் பேசி கேட்கும் போதும், புது உணர்வை கொடுத்தது.

பேசும் போது ஒரு இடத்தில் சொன்னார்: (பேசிய இடம் அடையாரின் கரையில் இருக்கும் தமிழ் இசை அரங்கம்) " இந்த அடையாறு கடலில் கலக்காமல் கடலுக்கு அருகில் வந்து ஒரு மேட்டில் ஏறி இந்த கடலில் கலந்து விட மாட்டோமா என ஏக்கத்தோடு பார்க்கிறது".

பார்வையாளர்களும் அப்படிதான் நினைத்து இருப்பார்கள் - எஸ்ராவின் பயண அனுபவத்தின் மிக அருகில் அவர் நம்மை அவர் பேச்சால் கொண்டு போய் விடுகிறார், கேட்கும் நமக்கும் அவரோடு பயணங்களில் கலந்து விட மட்டோமா என ஒரு ஏக்கம் வருகிறது.




தான் சிறுவனாய் இருந்தபோது வீட்டின் படியில் இருந்து வீதியை வேடிக்கை பார்த்ததில் இருந்து அவரது பயணங்களை பேச ஆரம்பித்தார். மாட்டு வியாபாரிகளோடு பக்கத்து ஊர் சந்தைக்கு இரவில் சென்றது, இரவின் பாதைகள் எவ்வளவு இனிமையானவை; மாட்டு வியாபாரிகள் வாசனைகளை மட்டுமே வைத்து எப்படி மரங்களையும் வழியில் இருக்கும் பூச்சி மற்றும் பாம்புகளை அடையாளம் கண்டுகொள்கிறார்கள் என அவர் பேசிய போது, எனக்கு இரவில் எங்கள் கடலை வயல்களுக்கு நட்சத்திர வெளிச்சத்தில் தண்ணீர் காட்டியது நினைவுக்கு வந்து போனது.

அவர் கண்ணகி கோவலனின் வழி (வலி) தடங்களின் வழியே செய்த பயணத்தை பற்றி பேசினார். அதில் ஒரு சிரத்தையும் உண்மையும் தெரிந்தது. அவ்வளவு சிரமங்களிடையே எப்படி அவரால் பயணம் செய்ய முடிந்தது, கண்டிப்பாய் அளவுக்கு மீறிய பயண ஆசையும், அதி தீவிர தேடலும் இருந்தால் மட்டுமே அது முடியும். அவர் பேசும்போது சொல்கிற விஷயங்கள் ஆச்சர்யமானவை.

பூம்புகாரில் நடுக்கடலுக்கு படகேறி போய் அங்கே ஆழ்கடலில் இருந்து நல்ல தண்ணீரை மீனவர்கள் மொண்டு கொடுத்தது ஆச்சர்யம். அது அந்த கடலின் கீழ் பழைய பூம்புகார் நகரம் இருக்கிறதோ என எண்ண தோன்றுகிறது. சிலபதிகாரத்தை அது நடந்த இடங்களுக்கெல்லாம் போய் படித்து, மிச்சம் இருக்கிற சிலபதிகார அடையாளங்களை பார்த்து வந்ததை அவர் சொன்ன போது நான் அதில் எவ்வளவு சிரமம் இருந்து இருக்கும் என நினைத்தி கொண்டிருக்க, எஸ்ரா சொன்னார் " எனக்கு என் பயணத்தை பற்றிய எந்த புகாரும் இல்லை" (எவ்வளவு கொடுத்து வைத்த ஜீவன் அவர்).

பயணங்கள் ஒருவரின் அடையாளத்தை இழக்க செய்கிறது. பயணத்தின் போது நமை அடையாளம் கண்டு கொள்பவர்கள் மிகவும் குறைவு, நீங்கள் நீங்களாக இருக்கலாம் என்பது. எனக்கு இப்படி தோன்றியது - வெவ்வேறு ஊர்களுக்கு நீங்கள் பயணம் போகும் போது உங்களின் அடையாளம் களைந்து, ஒரு பொதுவான மனிதராக மாறிவிடுவீர்கள் என்பதுதான். அவர் சொன்னதில் இன்னுமொரு கவனிக்க வேண்டிய தகவல் ஒரு பயணத்தின் ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கும் மனிதர்களின் உடைகள், உணவு, வீடுகள் போன்றவை மாறிக்கொண்டே இருக்கும்... எவ்வளவு சரி !

உங்களுக்கு மறக்க முடியாத பயண சம்பவம் என்ன என்று பார்வையாளர் கேட்டதற்கு, அவர் மத்திய பிரதேசத்தில் பயணிக்கையில் ஜுரம் வந்து எந்த நேரத்திலும் மயங்கலாம் என்னும் நிலையில், ஏதோ ஒரு நிறுத்தத்தில் இறங்கியதுதான் அவருக்கு தெரியும், விழித்தபோது ஒரு மருத்துவமனையில் இருந்திருக்கிறார். அவரை அங்கு சேர்த்த மனிதர், இவர் கண் விழித்ததும் நடந்ததை சொல்லி விட்டு இவரிடம் வேறு எதுவும் பேசாமல், பணம் வாங்காமல் சென்று இருக்கிறார். எஸ்ரா சொன்னார் இப்படி பட்ட மனிதர்கள் தான் எனது பயணத்திற்கு தைரியம் கொடுக்கிறார்கள், இன்னும் மனித நேயம் குறைந்துவிடவில்லை என்பதை நிருபித்து கொண்டே இருக்கிறார்கள்.

அவர் ஒரு அழகிய மழை போல பேசி கொண்டே போனார். அவர் பேசுவதற்கு முன், அவரின் கையில் இருந்த குறிப்பில் வெவ்வேறு ஊர்களின் பெயர்களை எல்லாம் எழுதி இருந்தார். ஆனால் அவற்றை பற்றி ஒன்று கூட பேசாமல், ஒரு திட்டமிடபடாத பயணத்தை போலே ஒன்றில் இருந்து வேறொன்றுக்கு மாறி கொண்டே போனார், ஆனாலும் அவர் பேச்சு தறியில் நெய்யப்படும் ஒரு அழகிய பட்டு துணியை போலே நம் கண் முன்னாலே உருவாகி கொண்டு இருந்தது.

எஸ்ராவிடம் நாம் தனியே பேசும்போதும் சரி, அவர் மேடையில் உரை நிகழ்த்தும்போதும் சரி , நமக்கு தெரிவது அவரது அன்பும், ஆழ்ந்த அனுபவங்களும் மனித நேயம் சார்ந்த நுணுக்கமான பார்வையும் தான். இந்த பேச்சும் அப்படிதான். மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பேச்சு... எஸ். ராவினுடையது !

                                                                                                                          தேவகுமார் 

Tuesday, January 8, 2013

ஓட ஓட ஓட தூரம் குறையல!

ஓட ஓட ஓட தூரம் குறையல!-                                           BY : தேவகுமார்.

டந்த சில வருடங்களின் எந்த நிகழ்வும் குறிப்பை எனக்கு ஞாபகத்தில் இல்லை. நமக்கு மகிழ்ச்சியான நிகழ்ச்சியாகவே அது இருந்தாலும் அது நிகழ்ந்தது 2011 - ஆ, இல்லை 2012 - ஆ என்ற சந்தேகம் வருகிறது. வாழ்க்கை அவ்வளவு வேகத்தில் போகிறது. வருடங்கள், நாம் பார்த்தவுடன் சரேலென மறைந்து விடும் சாரை பாம்பு மாதிரி, வந்த வேகத்தில் ஓடி மறைகிறது. 'நாளைய' பதற்றங்கள் 'இன்றை' நம்மிடம் இருந்து களவாடுகின்றன. இது இந்த சந்ததி சந்திக்கிற மிக முக்கிய பிரச்சனை.

இதற்கு காரணங்கள் என்ன - உங்களின் கால்களை (கைகளை!) சுற்றிய பாம்பாய் இருக்கும் PDA, அலுவலகத்தை வீட்டுக்கு கொண்டு வந்து எந்த நேரமும் அலுவலகத்தை பற்றியே நினைக்க வைக்கிறது. உறவுகளையும் நண்பர்களையும் நாம் பார்த்து கொள்கிற தருணங்கள் குறைந்துகொண்டே போகிறது (நான் மும்பை-க்கு மாறிய போது, எனது நீண்ட கால நண்பர் சொன்னார் - நீ மும்பைக்கு வருவது சந்தோஷமாய் இருக்கிறது. நீ இருக்க போகிற இடம் ஈஸ்ட் நான் இருப்பது வெஸ்ட், பார்த்து கொள்ள முடியுமான்னு தெரியலை. நீ வெஸ்ட்-கோ நான் ஈஸ்ட்-இக்கோ வந்தா பார்த்துக்கலாம்).

ஒரு நாடகத்துக்கோ ஒரு இசை நிகழ்ச்சிக்கோ நாம் போய் எவ்வளவு நாட்கள் ஆகிறது ! ஒரு வருடம் நம் நினைவில் நிற்க வேண்டுமானால், நிறைய நிகழ்வுகளை அதற்குள் நாம் இட்டு நிரப்பவேண்டும். பாயசத்தின் சுவை பாயசத்தில் இல்லை, அதில் நமக்கு கிடைக்கிற முந்திரியிலும் திராட்சையிலும் இருக்கிறது.

சமீபத்தில் Aakar Patel - இன் கட்டுரையை படித்த போது அதில் இருந்த சுவையை மீறி என் கண்ணுக்கு தெரிந்தது ஒரு வருடத்தில் இத்தனை சுவையான விஷயங்களை செய்ய முடியுமா என்பதுதான்.



Aakar Patel

Please read it at: 


நான் புரிந்து கொண்டது இதுதான், வருடத்தின் இனிப்பு பிரதேசங்களை விரிவாக்குவதுதான் அந்த வருடத்தை நினைவில் நிற்கும் வருடமாக மாற்றுவதற்கான வழி. 

நிறைய பேர் இப்பொழுது பேச ஆரம்பித்து இருக்கும் விஷயம் - slow down; இது economic slow down - இல்லை, வாழ்க்கையை மெதுவாக்குவது. Harry R. Lewis, Dean of Harvard College, அவரது மாணவர்களுக்கு எழுதிய கடிதத்தின் தலைப்பே "slow down", 



நீங்கள் தேர்ந்தெடுத்த படிப்பில் சிறப்புற வேண்டுமெனில் உங்கள் நண்பர்களோடு நேரத்தை செலவிடுவதும், ஒவ்வொரு நாளிலும் திட்டமிடாத நேரங்களை (unstructured time) வைத்துகொள்வதும் அவசியம் என்பது அவர் சொன்ன பல விஷயங்களில் ஒன்று.
பள்ளியில் படிக்கும் போது play while play, study when study, என்று சொல்வார்கள். இப்பொழுது நிறுவனங்கள் work when work, vacation when at vacation என்று சொல்ல ஆரம்பித்து இருக்கின்றன. Daimler ஒரு படி மேலே போய், நீங்கள் vacation - இல் இருக்கும் போது ஏதாவது mail வந்தால் அதை automatic - காக delete செய்து விட்டு, mail அனுப்பியவருக்கு நீங்கள் இல்லாத நேரத்தில் உங்களின் வேலையை கவனிபவரின் முகவரியை கொடுத்து விடும். நீங்கள் vacation - இல் இருந்து வரும் போது, உங்கள் inbox நிரம்பி வழிந்து உங்களுக்கு ulcer கொடுக்காது.

வாழ்க்கையை மெதுவாக்குவது என்பது, வேலைகளை தள்ளி போடுவதில்லை, மாறாக சரியான நேரத்தில் முடிப்பது. ஒரே நேரத்தில் பல வேலைகளை இழுத்து போட்டு கொள்ளாமல், ஒரு வேலையை எடுத்து அதை மட்டும் மிக சரியாக முடிப்பது, அதுவும் முதல் தடவையிலேயே. நான் வேலை பார்த்த ஒரு கம்பெனியில் "getting it right at the first time" என்ற ஒரு project - ஐ கொண்டு வந்தார்கள், அது எவ்வளவு productivity - ஐ கூட்டியது என்பது அதிசயம். மேஜிக் !

நிதானமாய் மார்கழி மாதத்தில் பெண்கள் கோலம் போடுவது மாதிரி, புள்ளிகளாய், கோடுகளாய், இலைகளாய் கோலத்தை உருவாக்குவது. கோலம் போட்ட பின், பெண் இடுப்பில் கைவைத்து கொண்டு கோலம் போட்ட பெண்ணை அந்த கோலத்தை ஒரு நிமிடம் ரசிப்பாரே, அது மாதிரி நம் வேலையை நாமே ரசிப்பது.

முடிவில் (outcome) அதிக கவனம் செலுத்தாமல், வேலையின் செய்முறையில் கவனம் செலுத்துவது. உதாரணமாக, இனிமேல் யாருக்கும் காட்டமான மெயில் அனுப்பமாட்டேன் என முடிவு செய்வதை விட, இனி ஒவ்வொரு மெயிலையும் இரு முறை முழுதாய் படித்து விட்டுதான் அனுப்புவேன் என முடிவுசெய்வது. இந்த வருடம் இவ்வளவு sales target - ஐ எட்டுவேன் என்பதை விட ஒவ்வொரு நாளும் இத்தனை பேரிடம் என் product-ஐ பற்றி பேசுவேன் என முடிவு செய்வது.

சரி, வருடத்தின் ஆரம்பத்தில் ஏன் இந்த புலம்பல். இரண்டு காரணங்கள் முக்கியமானவை. ஒன்று மிகவும் ஆபத்தானது, அது - வாகனம் ஓட்டி கொண்டே மொபைலில் பேசுபவர்களை பார்க்கும் போது, இவ்வளவு விபத்து நடந்தும் ஏன் இவர்கள் திருந்தவில்லை என எனக்கு தோன்றிய எண்ணம். இரண்டாவது மொபைலில் பேசி கொண்டே சிறுநீர் கழிக்கிறவர்களை பார்க்கும் போது இதற்கு கூடவா நமக்கு நேரமில்லாமல் போய்விட்டது என தோன்றியது. இவற்றுக்கெல்லாம் அடிப்படை காரணமாய் நான் நினைப்பது, "ஒன்றே செய் நன்றே செய்" என்பதை எங்கோ நாம் சவுகரியமாக மறந்தது தான்.

வாழ்க்கையை மெதுவாக்குவோம். புத்தாண்டு வாழ்த்துக்கள் !

Monday, November 12, 2012

லியோனி தீபாவளி சிறப்பு பட்டிமன்றம் - பழைய சரக்கு பழைய பாட்டில்

லியோனி தீபாவளி சிறப்பு பட்டிமன்றம் - பழைய சரக்கு பழைய பாட்டில் 
By: தேவகுமார்
    
லியோனியின் பட்டிமன்றத்தை கேட்டது/பார்த்தது இது மூன்றாம் முறை. SULAFEST போய் விட்டு திரும்புகையில் நானும் என் நண்பரும் (பானு - I miss you!), பழைய பாடலா புதிய பாடலா பட்டிமன்றத்தை கேட்டு கொண்டே வந்தோம். அவ்வளவு கிண்டல், கேலி, பாடல் - இத்தனை நாள் இதை கேட்காமல் விட்டோமே என வருத்தம் வந்தது. அதே ஜோரோடு டெல்லியில் நடந்த அவரது பட்டிமன்றத்துக்கு (என் அத்தையுடன்) போய் ஒரு குழாயடி சண்டையை பார்த்து வந்தேன். தலைப்பு ஏதோ - ஆண்களா பெண்களா என்பதாக இருந்தது. அந்த பயத்தில் இருந்து வெளியே வருவதற்குள் என் அம்மா அப்பா ஆசைப்பட்டார்கள் என்பதால் அவர்களை இந்த தீபாவளி சிறப்பு பட்டிமன்றத்துக்கு கூட்டி சென்றேன். ஆறு மணி பட்டிமன்றத்துக்கு 5.15 இக்கு எல்லாம் அங்கு இருந்தோம் ஒரு சீட் கிடைக்கவில்லை. ஒரு ஆயிரம் பேருக்கு மேல் அமரக்கூடிய அரங்கம். நிரம்பி வழிந்தது.

திரைப்படங்களில் சிறப்பாக காதலை சொன்னது அன்றைய படங்களா இன்றைய படங்களா? தலைப்பை பார்த்தவுடனேயே எனக்கு தோன்றியது - ஆஹா! இது லியோனியின் பேட்டை ஆயிற்றே என்பது தான்.

லியோனி வந்த போது விசில் பறந்தது. அந்த இடமே ஒரு ஆர்பரிப்போடு இருந்தது. வழக்கம் போல் லியோனி கலகலபோடு ஆரம்பித்து வைத்தார் பின் வந்தவர்களும் குறை வைக்காமல் பேசினார்கள் . நிறைய பாடல், இரண்டு வரி பேச்சாளர் பாட மீதி வரியை லியோனி பாடினார். அரசியல் நையாண்டியும் இருந்தது - என்னை சபாநாயகரே என அழைக்காதீர்கள், அப்புறம் நானும் மூணாவது வரிசையில  போய் உட்காரனும்; நாங்க ரெண்டு பேரும் உங்க வீட்டுகார அம்மாவை போய் பார்க்க வேண்டி இருக்கும் - அதுக்கு லியோனி - பார்த்தா மட்டும் என்ன ஆயிட போகுது, இன்னுமாயா நம்புறீங்க? - இப்படி ஆங்கங்கே அரசியல் சொருகல்கள் ......(நாம் உட்காந்து இருப்பது கலைஞர் அரங்கம் என்பதை நினைவு படுத்திக்கொண்டே இருந்தது).

                    

பேசியதில் எனக்கு நினைவில் நிற்பது குமரி அமுதவன் பேச்சுதான். சிறப்பான கருத்தோடு தலைப்பை ஒட்டி பேசினார். நகைச்சுவையோடு இல்லை ஆயினும் சிந்திக்க வைத்தது அவர் மட்டும்தான் ! மற்றவர்கள் எல்லோரும் (லியோனி உட்பட) எந்த தலைப்பை கொடுத்து இருந்தாலும் இதையேதான் பேசி இருப்பார்கள். அதுவும், கவிஞர்  இனியவன் ... - ஐயோ, யாரப்பா இவருக்கு கவிஞர் பட்டம் கொடுத்தது? இவர் ஒரு பட்டி மன்ற பவர் ஸ்டார் (இதை நான் பாராட்டாய் சொல்லவில்லை). 

Ultimate சொதப்பல் லியோனியின் தீர்ப்புதான். சிறு வர்த்தகத்தில் அந்நிய முதலீடு வந்தால் பெட்டி கடையில் வெள்ளை காரன் பீடி விற்பான் என ஆரம்பித்து, எதையோ சொல்லி (சொதப்பி)  அன்றைய காதலே என முடித்தார்.

பட்டிமன்றத்தை விட சுவாரசியம், அங்கு நடந்த விஷயங்கள் தான். சிறு பிள்ளைகள் கொஞ்ச நேரத்தில் போராகி அரங்கத்தின் உள்ளே ஓடி பிடித்து விளையாட ஆரம்பித்தார்கள். ஒரு பிள்ளை அம்மாவை தேடி கொண்டு இருந்தது. அவரவர்கள் கொண்டு வந்த சிப்ஸ், பழங்கள், பால் தயிர் சாதங்கள் (பிள்ளைகளுக்கு) திறந்து வைத்து மொசுக்கி கொண்டே பட்டிமன்றம் பார்த்தது இன்னும் சுவாரஸ்யம். நிகழ்ச்சி முடிந்த பின்னர் நிறைய பேர் நடுவர் இருக்கையில் அமர்ந்து படம் எடுத்துகொன்டனர்.


ஒரு பையன் நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்தே பின் பக்கம் பார்த்து கொண்டே உட்கார்ந்து இருந்தான். நாமும் அப்படி உட்காரும் காலம் வெகு தொலைவில் இல்லை.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் !

தேவகுமார்
***
அண்மைய பதிவு:

தொல்லைகாட்சி: நாஞ்சில் சம்பத்- உங்களில் யார் பிரபுதேவா: இங்கு வாசிக்கலாம் !

Tuesday, October 11, 2011

சில்க் ஸ்மிதா - வண்டி சக்கரம் மீண்டும் சுழலுகிறது

கட்டுரை : தேவா

டெல்லி, மும்பை, புனே நகர பத்திரிகைகளில் Dirty Pictures பற்றின teasers (தமிழில் இவற்றை "உசுப்பேற்றிகள்" என சொல்லலாமா?) வெளி வர ஆரம்பித்து விட்டன. யூ டியூபில் இந்த படத்தின் முன்னோட்டத்தை மட்டும் இதுவரை 9,00,000 முறை பார்த்து இருக்கிறார்கள். இந்த படத்தை பற்றின கட்டுரைகள், சில்க் ஸ்மிதாவை பற்றின சிறுசிறு செய்திகள், தற்கொலை செய்து கொண்ட நடிகைகளை பற்றின விஷயங்கள், வெளிவந்து இந்த படத்தினை பற்றிய எதிர்பார்ப்பை மக்களிடம் உசுப்பேற்றி விடுகின்றன. சில்க் ஸ்மிதா தென்னாட்டில் தான் அதிகம் நடித்தார் என்றாலும், வடநாட்டிலும் அவர் வெகுவாக அறியப்படுகிறார் (Thanks to Midnight masalas!).

இளையராஜாவின் இசை, PC ஸ்ரீராம் கேமரா, DFT படித்தவர்களின் வருகை இவைபோலதான் தமிழ் சினிமாவின் எண்பதுகளில், 90 - களின் ஆரம்பத்தில், சில்க் ஸ்மிதா ஒரு முக்கிய கூறாக இருந்தார். சில்க் ஸ்மிதா பாடல்கள் இல்லாத திரைப்படங்கள் டிஸ்டிரிபியூடர்களால் அவ்வளவாக விரும்ப படவில்லை. லயனம், தமிழ்நாட்டில் வயது வந்தவர்களுக்கான படங்களில் ஒரு benchmarking படம் என்றுதான் சொல்லவேண்டும் (ஆங்கிலத்தில் Sirocco மாதிரி). சில்க் படங்கள் ஓடிய திரையரங்குகளில் ஆண்களின் வெப்ப மூச்சு காற்று விரவி இருந்தது.

எங்கள் ஊரில் எல்லா நிகழ்வுக்கும் திரைப்பட பாடல்களை பெரிய ஸ்பிகர்களில் ஒலி பரப்புவார்கள். எழவு வீடுகளில் முதல் பாடல் "போனால் போகட்டும் போடா" என்றால் கடைசி பாடல் "சில்க்கோட கையால வாங்கிகுடி" என்பது தான், திருமண வீடுகளில் முதல் பாடல் "பூமுடிப்பாள் இந்த பூங்குழலி" என்றால் இரண்டாவது அல்லது மூன்றாவது பாடல் "சில்கின்ன கையால வாங்கிகுடி" என்பதகாத்தான் இருக்கும். நிகழ்ச்சிகள் மாறினாலும், சில்க்கின் ஆதிக்கம் மாறாது. திருவிழாவின் ரெகார்ட் டான்சில் நீங்கள் கேட்கவே வேண்டாம்... எங்கெங்கு காணினும் சில்க் மயம்தான்.

சில்கை பற்றி பேசும்போது கண்டிப்பாக மூன்றாம் பிறை, கோழி கூவுது, அலைகள் ஓய்வதில்லை போன்றவற்றை பற்றி நினைவுகொள்ளாமல் இருக்க முடியாது. ஆனால் அவருக்கு அந்தமாதிரியான படங்கள் அதிகம் வாய்க்கவில்லை என்பது தமிழ் திரையுலகில் பெரிய ஆச்சர்யமான விஷயம் ஒன்றும் இல்லை. சில்க், "அம்மன் கோவிலுக்கு போகலாமா"என கேட்டால் கூட அவர் "அடல்ட்ஸ் ஒன்லி போகலாமா" என்பதாகத்தான் நம் காதில் விழும்படி நம் தமிழ் சினிமா நம்மை மாற்றிவிட்டது.
சில்க் ஸ்மிதாவின் காலத்தில் டிஸ்கோ சாந்தி, பபிதா, அனுராதா போன்றவர்கள் இருந்தாலும் சில்க் ஸ்மிதா அளவிற்கு அவர்கள் பிரபலம் அடையாமல் போனதன் காரணம் அவர்களிடம் சில்கிடம் இருந்த "பட்டை சாராய" கவர்ச்சி இல்லாதுதான். அவரிடம் அடிப்படையில் ஒரு அழகிய நடிப்பு திறனும் பட்டை தீட்டாத கவர்ச்சியும் இருந்தது. அவரது ஆடைகளை அவரே வடிவமைத்து, அவரே அவரது மேக் அப்பை செய்து கொண்டது அவரை மற்ற கவர்ச்சி நடிகைகைளிடம் இருந்து வேறு படுத்தி காட்டியது.

ஆமாம், இன்றைய படங்களில் கவர்ச்சி நடனங்கள் இல்லையே, ஏன்? ஹிப்பிகள் இப்பொழுது எங்கே இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு, மதன் சொல்வார், அவர்கள் உங்கள் ஒவ்வொருவரின் உள்ளும் ஒளிந்து கொண்டு இருக்கிறார்கள். அப்படிதான், இந்த கவர்ச்சி நடிகைகள் எல்லோரும் ஒவ்வொரு கதாநாயகிக்குள்ளும் ஒளிந்து இருக்கிறார்கள். மேலும், இன்டர்நெட் வந்து இந்த சாப்ட் போர்ன் என்பதை கொஞ்சம் காலி செய்துவிட்டது. என்னிடம், இன்னுமொரு தியரி இருக்கிறது. இந்த கவர்ச்சி நடிகைகள் இருந்த காரணத்தால் தான், மிகச்சிறந்த நடிகைகள் நமக்கு கிடைத்தார்கள் - ஸ்ரீ வித்யா, சுஜாதா, ரேவதி, ராதிகா, ஷோபா , ரோகினி, ஊர்வசி... இதற்கு காரணம் கவர்ச்சி நடிகைகள் கவர்ச்சியை கவனித்து கொள்ள, அந்த கதாநாயகிகள் கதையையும் நடிப்பையும் கவனித்து கொண்டார்கள். இன்று...? வேண்டாம் அந்த விவாதத்தை விட்டுவிடுவோம்...


சில்க் பற்றிய என் மாயையை உடைத்தது, அனிதா பிரதாப் (வேலுப்பிள்ளை பிரபாகரனை இரண்டு முறை பேட்டி எடுத்த செய்தியாளர்) எழுதிய "In the veils of Sorrow" என்கிற செய்தி கட்டுரைதான்.

அனிதா பிரதாப்

இந்த கட்டுரை முதலில் 'சண்டே' பத்திரிகைளும் பின் அவரது "island of Blood" என்ற புத்தகத்திலும் வெளி வந்தது. இந்த கட்டுரை வந்த அந்த பத்திரிகை பத்து மடங்கு விலை போனதாம் (1 ரூபாய் பத்திரிகை 10 ரூபாய்). அந்த கட்டுரையில் அவர் ஷோபாவை பற்றியும் சில்க் ஸ்மிதாவை பற்றியும் எழுதி இருப்பார். சில்க் வந்து என் முன்னால் அமர்ந்தபோது அவர் அந்த வீட்டு வேலைக்காரி இல்லை, அவர் தான் சில்க் என்று நம்ப மிகவும் நேரம் எடுத்தது; பழுப்பேறிய சல்வார் கமீஸில், சீர்கழிகப்பட்ட, உதாசினபடுதப்பட்ட, அழுக்கான (Wan, Wasted and unwashed) பெண்ணாக சில்க் என் முன்னால் வந்து அமர்ந்தார் என்கிற அவரது எழுத்தை படிக்கிற போது நமக்கு சோகம் கவ்வுகிறது. ஒரு காலத்தில் தமிழ் சினிமாவை தன் சாரைப் பார்வையிலும், மினுக்கும் உதடுகளிலும் கவர்ந்து வைத்து இருந்தவர் பின் எப்படி இப்படி ஆனார் என்பது இன்னுமொரு கட்டுரைக்கான விஷயம்.

Dirty Pictures வித்யா பாலன் நடிப்பில், ஏக்தா கபூர் தயாரிப்பில் வெளி வருகிற படம். நஸ்ருதீன் ஷா, துஸார் கபூர், இம்ரான் காஷ்மி ஆகியோரும் இந்த படத்தில் உள்ளார்கள். இது சில்க் சுமிதாவின் வாழ்க்கையை அடிப்படையாய் வைத்து எடுக்கப்படுகிற படம். மிக பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிற இந்த படம் டிசம்பர் 2 அன்று (சில்க் சுமிதாவின் பிறந்த நாள்) வெளி வர இருக்கிறது. எனகென்னமோ வித்யா பாலனால் சில்க் சுமிதாவை திரையில் கொண்டு வரமுடியும் என தோன்றவில்லை, காரணம் சில்க் சுமிதாவை சுற்றி யாராலும் (சில்க் உட்பட) அறிந்து கொள்ள முடியாத ஒரு கவர்ச்சி காற்று இருந்ததுதான். மேலும், "கவர்ச்சியான வித்யா பாலன்" என்பதே ஒரு Oxymoron, என்னை பொறுத்த வரை. ஒரு வேளை, இந்த படத்தை சில்க் பற்றின கதை என சொல்லி விட்டு நடிகைகளை பற்றின ஒரு பொதுவான கதையாக எடுக்கிறார்களோ என்னவோ - அதுவும் சாத்தியமே, ஏனென்றால் சில்க் சுமிதாவின் கதையும் மற்ற நடிகைகளின் கதையும் வேறுவேறு அல்ல தானே! டிசம்பர் 2 வரை காத்திருப்போம்.

கட்டுரை : தேவா

Sunday, August 7, 2011

நண்பர்கள்: நின்றுபோன நீருற்றுகள்

எழுதியவர்: தேவகுமார் 

நண்பர்கள் தினத்தில் என் நண்பர்களை பற்றி நினைத்து கொண்டு இருக்கும் போது, திடீர் என்று இறந்து போன நண்பர்களை பற்றின ஞாபகம் வந்தது. வழியில் தவறவிட்ட அந்த நண்பர்களை பற்றின குறிப்பு தான் இந்த பதிவு.

ஜெயசீலன்: என்னோடு ஆறாவதில் இருந்து எட்டாவது வரை படித்தவன். பக்கத்துக்கு ஊர்காரன். நானும், அவனும் சேர்ந்துதான் பள்ளிக்கு சைக்கிளில் போவோம் (நான் குரங்கு பெடல் அவன் முக்கோணம்!). நாங்கள் ஏழாவது போன போது, அவனின் அத்தை மகளும் சேர்ந்து கொள்ள, எங்கள் சைக்கிள் பயணம் இனிமையாய் ஆனது (நானும் முக்கோணத்திற்கு மாறியிருந்தேன்). அவன் ஏழாவது படிக்கும் போதுதான் கதை எழுத ஆரம்பித்தான் (நாங்கள் இரும்புக்கை மாயாவியின் பிடியில் இருந்தே வெளிவராத சமயம் அது!). அவன் கதையில் வந்த இளைஞர்கள் புல்லெட் வைத்து இருந்தார்கள்; பாலியஸ்டர் சட்டை அணிந்து இருந்தார்கள்; கள்ள சாராய பானைகளை உடைத்தார்கள்; சீட்டாடும் இடத்தில கலகம் செய்தார்கள். அப்போதே கதை சோறு போடாது என எப்படி அவனுக்கு தெரியும் என தெரியவில்லை, என்னவாக ஆகபோகிறாய் என கேட்டால், கதாசிரியர் என சொல்லாமல், கண்டக்டர் என சொல்வான். எட்டாவது முழுஆண்டு விடுமுறையில் அவன் திடீர் என்று இறந்து போனான். என்ன காரணம் என யாருக்கும் தெரியாத நிலையில், எப்போதும் காரணம் தெரியாத இறப்புக்கு சொல்லும் காரணத்தையே சீலனின் மரணத்திற்கும் சொன்னார்கள் - அது, மூலையில் ரத்த நரம்பு வெடித்துவிட்டது. இருந்திருந்தால் ஒரு கதாசிரியர் ஆகவோ, அவனுக்கு பிடித்த பேருந்து நடத்துனர் வேலைக்கோ போயிருப்பான். எந்த கதையிலாவது புல்லெட் ஓடும்போது, அல்லது சிவப்பான பேருந்து நடத்துனரை பார்க்கும்போது நான் ஜெயசீலனை நினைத்து கொள்கிறேன்.


(தேவாவின் புகைப்படம் அவசரத்துக்கு கிடைக்க வில்லை. 23 வருடமாய் தொடரும் நட்பு, நண்பர்கள் தினத்துக்கு பொருத்தமாய் இருக்கும் என இந்த புகைப்படம் பகிர்கிறேன்.அனைவருமே வக்கீல்கள்!-மோகன் குமார்)

விஜய சந்திர பிரகாஷ்: நான் அவனின் பேருக்கே பெரிய விசிறி. பேருக்கு பொருத்தமாய் கம்பீரமாய் இருப்பான் VCP. இவன் என் சட்ட கல்லூரி தோழன். சென்னை பசங்களை தவிர என் வகுப்பில் சரளமாய் ஆங்கிலம் பேச தெரிந்தவன் இவன் மட்டும் தான் (ஊட்டி கான்வென்ட் படிப்பு).

எதை பற்றியும் ஒரு கருத்து வைத்து இருப்பான். IPKF - ஐ கடுமையாக விமர்சிக்கும் அதே வேலையில் ஜனநாயக தேர்தல் மட்டுமே இலங்கைக்கான தீர்வு என 1991 - யில்லேயே சொன்னவன். தினமும் ஒரு ஆங்கில செய்திதாளும், வாரம் ஒரு ஆங்கில வார பத்திரிகையும் படிக்கவேண்டும் என எங்களுக்கு அறிவுரை சொன்னவன் (இன்று வரை அதை நான் பின்பற்றுகிறேன்) . "Single woman are not my kind" என James Bond மாதிரி பேசி எங்களை அசர அடித்தவன். நன்றாக படித்தவன் அவன். மூன்றாம் ஆண்டு இறுதியில் அவன் இறந்து விட்டதாக எங்களுக்கு கொஞ்ச நாள் கழித்து தகவல் வந்தது. முதலில் அவன் உடல் நலம் இல்லாமல் இறந்து விட்டதாக நாங்கள் நினைத்தோம். அது தற்கொலை என ஊட்டி போய்வந்த ஒரு நண்பன் சொன்னபோது நாங்கள் நம்பவில்லை. இன்று வரை அதை நான் நம்பவில்லை, VCP ஒரு தைரியசாலி.

செந்தில் குமார்: இவன் என் வகுப்பு தோழன் எனினும் இவன் என் அப்பாவிற்குதான் கூட்டாளி. எங்கள் பக்கத்து வயல்காரன். என் அப்பாவிடம் அவ்வளவு விளக்கமாய் விவசாயத்தை பற்றி பேசுவான் (இந்த பட்டம் நீங்க கடலை போடுங்க, நெல்லு வேண்டாம்; பசுங்கன்னுக்கு கொம்பு சுட்டுடிங்க). இவன் ஏறக்குறைய எங்கள் சுற்றுவட்டாரத்தில் இருந்த எல்லா பள்ளியிலும் படித்தான். தம்மம்பட்டி, முருங்கபட்டி (எங்கள் ஊர்), புத்தனாம்பட்டி, திருச்சி, மீண்டும் எங்கள் ஊர், இப்படி பல பள்ளி சுற்றி வந்தான் செந்தில். எங்கள் பள்ளியில் இவனுக்குதான் நிறைய பட்டப்பேர். வயதுக்கு மீறிய வளர்ச்சி என்பதால் 'குண்டன்' என ஆரம்பித்து எத்தனையோ பேர்கள்.

ஏழாவது வகுப்பில் பூங்கோதை டீச்சர் தெர்மாஸ் குடுவை பற்றி பாடம் எடுக்கும் போது, யார் வீட்டில் தெர்மாஸ் குடுவை இருக்கிறது என கேட்க, நாங்கள் திருதிரு என விழித்தோம் (நாங்கள் தெர்மாஸ் குடுவையை கண்ணில் கூட கண்டதில்லை!) செந்தில் மட்டும் எழுந்து எங்கள் வீட்டில் ஏழு தெர்மாஸ் குடுவை இருக்கிறது என சொல்ல, டீச்சர் அசந்து போய் தீர விசாரித்ததில், அவன் சொன்னது தெர்மாஸ் குடுவை இல்லை, சுரக்காய் குடுவை என தெரிய வர, அன்றில் இருந்து அவன் 'தெர்மாஸ் குடுவை' எனவும் அழைக்கப்பட்டான். அவனது பட்ட பேர்களை இலகுவாய் ஏற்று கொண்டவன். அவனும் பட்ட பேர் வைப்பதில் கில்லாடி. கருப்பாய் இருப்பவனுக்கு 'கரிபால்டி' என பேர் வைத்து எங்கள் பள்ளிக்கு ஒரு புதிய பட்டப்பேரை உருவாக்கி கொடுத்தவன் அவன். செந்தில் பள்ளியில் நன்றாக படித்தவன் இல்லை. பத்தாவது பன்னிரெண்டாவது இரண்டிலுமே தவறி பின் தேறியவன். ஆனால் அவன் BA (Economics) (National College, Trichy) படித்த போது Statistics (வேப்பம்காய்!) பாடத்தில் 83 மதிப்பெண் வாங்கி ஆச்சர்ய படுத்தினான். எப்படிடா? என கேட்டபோது, "ஒண்ணுமில்ல, புதுசா சேர்ந்து இருக்கிற (லேடி) Lecturer எனக்கு Statistics concepts எல்லாம் நல்லா வருது, நல்லா படிச்சா நிறைய மார்க் வாங்கலாமின்னு சொன்னங்க, அதான் Try பண்ணினேன்" என அவன் சொன்னது எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. ஒரு வேளை அந்த Lecturer மாதிரி எல்லோரும் அவன் மீது நம்பிக்கை வைத்து கொஞ்சம் பாராட்டி இருந்தால் அவன் தற்கொலை செய்து கொண்டு இருக்க மாட்டானோ எனத் தோன்றுகிறது. "உங்க பையன் ஊருக்கு வரும்போது எங்க வீட்டுக்கு வரதே இல்ல" என செந்தில் அப்பா கோபித்து கொள்வதாய் என் அப்பா சொல்வார். நான் அவர்கள் வீட்டுக்கு போகாமல் இருப்பதற்கு காரணம், அவர்கள் வீட்டில் 'தெர்மாஸ் குடுவை' இல்லாததாக கூட இருக்கலாம்.

****
உங்கள் நண்பர்களில் யாரையேனும் நீங்கள் தவறவிட்டு இருந்தால், அவர்கள் வீட்டுக்கு ஒரு நடை (என் போல் இல்லாமல்) போய்விட்டு வாருங்கள். அவர்களின் பெற்றோர்களுக்கு இதமாய் இருக்கும்.

உங்களுக்கும், என் நண்பர்களுக்கும் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்!

எழுதியவர்: தேவகுமார் 

Sunday, June 19, 2011

அவன் இவன் விமர்சனம் By தேவகுமார்


பாலாவின் படங்களில் அனாயசமான கிண்டல் (எங்கள் ஊர் மொழியில் "கிரித்துருவம்") விரவி இருக்கும் ("தமிழ் நாட்டுல தமிழ தப்பு தப்பா பேசுனா ஜனங்க நம்புறாங்க, நான் என்ன பண்ணட்டும்?" என்பது மாதிரியான கிண்டல்கள்). அது இந்த படத்தில் அதிகமாய் இருக்கும் என எண்ணி போனது என் தவறு என நினைகிறேன். ஓரிரண்டு இடங்களை தவிர, யாராலும் சிரிக்க முடியவில்லை. பாலா ஒரு சிறந்த இயக்குனர் என்பது அவர் ஓரிரண்டு இடங்களில் அசால்டாய் ஆடியதில் தெரிகறதே தவிர, பல இடங்களில் அவர் சறுக்கி இருக்கிறார். 

விஷாலும் (வால்ட்டர் வணங்காமுடி) ஆர்யாவும் (கும்புடறேன் சாமி) அண்ணன் தம்பிகள் (ஒரு அப்பா இரண்டு அம்மா). அப்பா தேர்வு ஆச்சரியம் - சூப்பர் சிங்கரில் பாடகர்களுக்கு குரல் பயிற்சி தந்தவர்! வால்ட்டர் கொஞ்சம் பெண் தன்மையோடு, தெற்று பல்லோடு, மாறு கண்ணோடு இருக்கிறார், கும்புடறேன் சாமி ஒரு ஜாலி டைப். (பிதாமகன் விக்ரம், சூர்யாவை நினைக்காமல் இருக்கமுடியவில்லை). இவர்கள் கள்ளதொழில் செய்கிற குடும்பத்தை சேர்த்தவர்கள் (திருடலேன்னா சாமி குத்தம் ஆயிடும்!). வால்டருக்கு திருட வரவில்லை, அவர் நாட்டமெல்லாம் கலைத்துறையில்... கும்புடறேன் சாமி ஒரு கைதேர்ந்த திருடன். இவர்கள் கமுதி கோட்டை ஜமிந்தரோடு (RK. குமார்) நெருக்கமாய் இருக்கிறார்கள். அவரை ஒருவன் கொன்று விட அவனை விஷாலும் ஆர்யாவும் பழி வாங்குவதாய் கதை முடிகிறது. 

படத்தின் அழகான விஷயங்கள் என்றால் - விஷாலின் நடிப்பு. விஷால் நிஜமாகவே அசத்தி இருக்கிறார் . அவர் திருடியதை போலீஸ் கான்ஸ்டபில் (அவர் விஷாலின் காதலியா என கடைசி வரை புரியாத புதிராக!) மயக்கி பேசி வாங்கி செல்லும்போது விஷால் காட்டும் முக பாவம் அழகு. அவரது உடை வித்தியாசம், அதை அவர் கையாளும் விதமும் அருமை. விஷால் போடும் சண்டை அசத்தல். இசை இன்னொரு அழகான விஷயம். அம்பிகா இன்னொரு ஆச்சர்யம் (அம்மாவா ஒரு ரவுண்டு வருவாரோ?!?). ஜமிந்தாரக வரும் RK. குமார் (his 'Highness') நடிப்பது மாதிரியே இல்லை, இவர் படத்தின் முக்கிய பலம்.

பெண் போலீஸ் கான்ஸ்டபிள் இன்ஸ்பெக்டரை அண்ணா என அழைப்பது, இப்படி சில இடங்களை சொல்லலாம். நிற்க. சில இடங்களில் நகைச்சுவை very subtle and super. "என்னடா பேரு, கும்புடறேன் சாமி" - "நாங்க மட்டும்தான் உங்களை கும்புடறேன் சாமின்னு சொல்லனுமா, நீங்களும் சொல்லணும்தான் இந்த பேரை வச்சி இருக்கேன்!",

இந்த படத்தில் மிக பெரிய குறை, கதை இல்லாததுதான். காட்சிகள் கறிக்கடையில் தொங்குகிற கறித்துண்டுகள் மாதிரி தொங்குகிறது. திடீர் என்று சூர்யா வருகிறார். ஏன் வந்தார் எதற்கு வந்தார், கதைக்கும் அவர் வந்ததுக்கும் என்ன சம்பந்தம், புரியவில்லை. Highness - இடம் இருந்து அவரது சொத்துகளை ஒருவர் ஏமாற்றியதை அடிக்கடி சொன்னாலும் அதை பற்றி தெளிவாய் சொல்லுகிற மாதிரி ஒரு காட்சியும் இல்லை. அடி மாடுகளை ஒருவன் வாங்கி விற்பதை Highness போலீசிடம் சொல்வதும் அவனை போலீஸ் அரெஸ்ட் செய்வதும் குழப்பமாய் இருக்கிறது - அவன் செய்த தவறென்ன? மாடுகளை அவன் வதைப்பது மாதிரி தெரியவில்லை; பரந்த புல்வெளியில் மாடுகள் இருக்கின்றன, சண்டையின் போது தவிடு பறக்கிறது, அப்படி என்றால் அவன் மாடுகளை ஒழுங்காகத்தான் வைத்திருக்கிறான். மாடுகளை வாங்கி அடிமாடுகளாய் விற்பதற்கு லைசென்ஸ் தேவை இல்லை, அப்படி இருக்கையில் எப்படி போலீஸ் அவனை கைது செய்தது? இந்த விஷயம் தான் பிற்பாதியின் அடிப்படை காட்சி, இதில் எப்படி பாலா சறுக்கினார்?

பாலாவின் படங்களில் பெண் பாத்திரங்கள் வலிமை ஆனவை. ஆனால் இந்த படத்தில் பெண் பாத்திரங்கள் வலிமை அற்றவை என்பதை தாண்டி, கதாநாயகிகள் கதை நடக்கும் இடத்திற்கு அந்நியமாய் தெரிகிறார்கள். அம்பிகா போன்ற பாத்திரங்களும் வசை பாடுபவையாய் இருக்கின்றன. இன்னொரு முக்கிய விஷயம், சில இடங்களில் வசனங்கள் அருவருப்பை உண்டாக்குகின்றன. அவை கதைக்கு தேவையென சால்ஜாப்பு சொல்ல முடியாது, அவற்றை தவிர்த்தும் நல்ல விதமாய் எழுதி இருக்கலாம் (கனி இருப்ப?). போலீசை கிண்டல் அடிப்பது ஆண்டாண்டு காலமாய் தமிழ் சினிமாவில் நடக்கிறது, அதை பாலாவும் செய்திருப்பது கொடுமை...

முதல் மதிப்பெண் வாங்குகிற மாணவன் திமிராய் படிக்காமல் தேர்வுக்குப்போய் just pass mark வாங்கியது மாதிரி இருக்கிறது இந்த படம். இயக்குனருக்கு தேவை அதிக பொறுப்புணர்ச்சி. இந்த படத்தை பொறுத்தவரை பாலாவிடம் அது குறைந்து இருப்பது தெரிகிறது. நீங்கள் இந்த படத்தை "தமிழ் தொலைகாட்சிகளில் முதல் முறையாக" வரும்போது பார்ப்பது நலம்.

இவன் அவன் (பாலா) இல்லை!!

விமர்சனம்: தேவ குமார்

Monday, May 9, 2011

கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் !

கல்யாண சாப்பாடு செலவு குறித்த நண்பன் தேவா கட்டுரையும், அதற்கு மாற்று கருத்து ஒன்றும்...
**
கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! (By தேவ குமார்)

ஒரு திருமண பந்தியில் அமர்ந்து இருக்கீர்கள். கொஞ்சம் சாதமும் சாம்பாரும் பரிமாறிவிட்டு, அவ்வளவுதான் என சொல்லி விடுகிறார்கள். ஒரு கூட்டு இல்லை, கறி இல்லை, இனிப்பு இல்லை,ஏன் ரசம், தயிர் கூட இல்லை - எப்படி இருக்கும்? மொய் பணத்தை திரும்ப வாங்கிக்கலாம் என தோன்றும் இல்லையா (என்னது, சாப்பிட்டு பார்த்து சாப்பாடு எப்படி இருந்ததோ அதுக்கு தகுந்த மாதிரி தான் மொய் வைப்பிங்களா? கை கொடுங்க!!)

சமீபத்தில் KV தாமஸ், மத்திய உணவு துறை அமைச்சர் இவ்வாறு சொன்னார் "திருமணத்தில் நிறைய உணவு வீணாவதால், ஒரு விதமான உணவு வகை மட்டுமே பரிமாற வேண்டும் ! இப்படி செய்வதால், குறைந்தது 20% -30% உணவுவீணாவதை தவிர்க்க முடியும். இதற்காக அரசாங்கம் ஒரு சட்டத்தையோ அல்லது கைட்லைன்கலையோ (Guidelines ) கொண்டு வரும்".  இப்படியாக இந்த விஷயம் ஹிந்துவும், அவுட்லுக்கும் கட்டுரை எழுதும் அளவிற்கு போய் விட்டது !!

நான் முதல் முதலில் கலந்து கொண்ட டெல்லி திருமணம் கொஞ்சம் மயக்கம் தர கூடியது. அது ஒரு Government Contractor - வீட்டு திருமணம். பெரிய விளையாட்டு திடலில் பந்தலிட்டு, 32 வகை (பஞ்சாபி, சவுத் இந்தியன், அரபிக், இட்டாலியன் இப்படி போனது லிஸ்ட்!) உணவு பரிமாற பட்டது. ஊறுகாய் கவுன்ட்டர் ஒரு ஊறுகாய் கடை மாதிரி இருந்தது. என்னை அந்த திருமண வீட்டுக்காரர் சவுத் இந்தியன் கவுன்ட்டர்க்கு கூட்டி போய், இந்த தோசை மாஸ்டர் சென்னையில் இருந்து கூட்டி வந்து இருக்கோம், தோசையை சாப்பிட்டு பார்த்து authenticக்கா இருக்கான்னு சொல்லுங்க என்றார். அந்த மாஸ்டரும் நிறைய நெய் போட்டு மசாலா தோசை தர, அந்த இரவு மசால் தோசையோடு நிறைவு பெற்று (32 வகை உணவு இருந்தும்) அந்த மாஸ்டர் என் வயிற்றெரிச்சலை வாங்கி கட்டி கொண்டார்.

அப்படி திருமணம் நடத்தும் ஒரு Government contractor - இடம், உங்கள் மகள் திருமணத்தில் ரொட்டியும், ஒரு சப்ஜியும் தான் பரிமாற வேண்டும் என சொன்னால்,அவருக்கு அதை புரிந்து கொள்ளவே இரண்டு நாள் ஆகும்!! அது கூட பரவாயில்லை, தமிழ் திருமணத்தில் ஒரு வகை தான் பரிமாற வேண்டும் என்றால், எதை பரிமாறுவது? இட்லி, சட்டினி? அல்லது தயிர் சாதம்? அல்லது பாயசம் மட்டும்? என்ன கொடுமை சார் இது... ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயம், யாரும் சாப்பாட்டை அதிகமா குறை சொல்ல மாட்டாங்க!

ஆனால், இந்த proposal - இல் இருக்கிற கொஞ்சூண்டு காமெடியை புறம் தள்ளி வைத்து, அதில் உள்ள அடிப்படை விஷயத்தை பார்த்தால், அது அவசியமான விஷயமாகத்தான் தோன்றுகிறது... ஒரு திருமணத்தில் இவ்வளவு செலவு செய்ய வேண்டுமா? மேற்கத்திய நாடுகளில் இவ்வளவு விமரிசையாக திருமணத்தை நடத்துவது இல்லையே (ஒரு வேளை , ஒன்றுக்கு மேற்பட்ட திருமணத்தை ஒருவர் செய்ய வேண்டிய சாத்தியம் இருப்பதாலோ?) நமது திருமண முறை இத்தனை நீட்டி முழக்கி இருப்பதற்கான காரணம், அந்த காலத்தில் போக்கு வரத்து இல்லை, திருமணத்துக்கு போக, வரவே சில வாரங்கள் ஆகும், எனவே "வந்தது வந்தாங்க கொஞ்ச நாள் இருந்துட்டு போகட்டுமே" என நினைத்து, திருமண சடங்குகளை நீட்டினார்கள். ஆனால், இந்த காலத்திற்கு இந்த முறை பொருந்துகிறதா? திருமண நேரத்தையும், செலவையும் இப்போதாவது சுருக்க வேண்டாமா? இவ்வளவு செலவு செய்வது சரியா? அதுவும் கடன் வாங்கி செலவு செய்பவர்களை பார்த்தால் பாவமாகவும், வீம்புக்காக இப்படி செலவு செய்கிறார்களே என வருத்தம் ஆகவும் இல்லையா?

அதற்காக நான் "அத்தான் வீட்டில் கல்யாணம்... அவரவர் வீட்டில் சாப்பாடு" என்று சொல்லவில்லை. நூறு பேருக்கு மிகாமல், ஒரு நேர விருந்தோடு திருமணத்தை நிகழ்த்துதல் நலம் இல்லையா என்பதுதான் என் கேள்வி. இரண்டு குருவிகள் இணைந்து அழகிய கூடு கட்டுவது பார்க்க எவ்வளவு அழகாகவும் எளிமையாகவும் இருக்குமோ அப்படி இருக்கவேண்டும் திருமணமும்... குடும்ப அந்தஸ்து, வறட்டு கௌரவம் (சானியா திருமணத்தில் நாட்டு பிரச்சனையை இழுத்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?) தவிர்த்து
இரண்டு இளைய உள்ளங்களின் இணைவாக அது நிகழ்ந்தால், சுகம்... !

***********
இன்னொரு மாற்று கருத்து (By மோகன் குமார்)
தேவா அவசியம் யோசிக்க வேண்டிய விஷயம் பற்றி தான் எழுதியிருக்கிறார். ஆயினும் இதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன.

1 . நூறு பேருக்கு மட்டும் அழைப்பு என்பது இன்றைய நிலையில் மிக சிரமம். கணவன்- மனைவி இரண்டு பக்கமும் நெருங்கிய உறவினர், உடன் வேலை செய்பவர், தெருவில் உள்ளோர், சிறு வயது முதல் தொடரும் நண்பர்கள்.. இப்படி அனைவரும் அழைக்க விரும்பும் லிஸ்ட் பெரிது. இது பெண்- மாப்பிள்ளை இரண்டு வீட்டுக்கும் வேறு தனி தனியே சேர்த்தால் இன்னும் அதிகமாகும். (நூறு பேர் மட்டும் தான் அழைக்க வேண்டுமென்றால் டில்லியில் உள்ள தேவா, சென்னையிலிருக்கும் என்னை தன் பிள்ளை திருமணதிற்கு கூப்பிடுவாரா ? :))

2 . இன்று பெரும்பாலானோர் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் தான் பெறுகின்றனர். எனவே தன் குடும்பத்தில் நடக்கும் மிக பெரிய விசேஷமான தன் குழந்தை திருமணத்தில் தெரிந்த அனைவரையும் அழைக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.

3 . நமது கலாசாரம் சற்று சிக்கலானது. கல்யாண நேரத்தில் உள்ள அதீத
வேலை காரணமாக கல்யாண பத்திரிக்கை தர மறந்ததால் முறிந்து போன உறவுகளும் நட்புகளும் கூட உண்டு என்பதையும் நாம் மறக்க கூடாது.

4 . இன்றைக்கும் நாம் சென்று வந்த கல்யாணத்தில் நடந்த நிகழ்வுகளை மறந்து விடுவோம். ஆனால் அந்த சாப்பாடை மட்டும் மறக்க மாட்டோம். நான் சென்று வந்த திருமணங்களில் எங்கு சாப்பாடு அற்புதமாக இருந்ததோ அதை மனதில் ஒரு Yardstick-ஆக வைத்திருப்பேன். இன்னொரு அற்புத சாப்பாடு அடுத்த சில மாதம் அல்லது வருடங்களில் வந்து தான் அதை beat செய்யும். இது பலருக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்.

5 . ஒரே வகை உணவு எனில் இசுலாமியர் வீட்டு திருமணங்களில் செய்வது போல பிரியாணி தான் செய்ய வேண்டுமோ? அந்த திருமணங்களில் சாப்பிடுவது ஒரே வித உணவு எனினும் திருப்தி ஆக தான் வந்து விடுகிறோம். ஆனால் இந்து திருமணங்களில் அநேகமாய் நான்வெஜ் செய்வது இல்லை.

6. எனக்கென்னவோ இந்த விஷயத்தில் மக்களின் சென்சிடிவ் உணர்வுகள் காரணமாய் அரசு இப்படி ஒரு சட்டம் இயற்றாது என்றே தோன்றுகிறது. ஒரு வேளை சில கைட்லைன்கள் தரலாம். அவை எந்த அளவு பின் பற்றப்படும் என்பது கேள்வி குறிதான் .

நிற்க இவை எல்லாம் இன்னொரு பார்வை இந்த விஷயத்தில் வேண்டும் என்பதால் எழுதப்பட்டவையே.

திருமணங்களில் சாப்பாட்டில் மட்டுமல்ல, மண்டபம், பத்திரிக்கை, உடைகள் போன்ற பல விஷயத்தில் தேவைக்கு அதிகமாக செலவு செய்கிறோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. திருமணத்திற்கு எடுக்கிற உடைகள் கூட அதன் பின் ஒரு சில முறைக்கு மேல் நாம் போடுவதில்லை (உருவம் இருவருக்குமே ரொம்பவும் மாறி போய் உடை பற்றாமல் போய் விடுகிறது). ஆனால் இப்படி ஒரு சில முறை மட்டுமே போடப்படும் உடைக்கு எத்தனை ஆயிரம் செலவு செய்கிறோம்?

 "எவ்வளவு பவுன் நகை போடுவீர்கள்?" என்கிற கேள்வி இல்லாமல் எந்த திருமணமும் இன்றைக்கும் நடப்பது இல்லை. நகை, வரதட்சணை பெண்ணை பெற்றவர்களை வேதனைக்குள்ளாக்குகிறது. 

பலரும் தங்கள் வாழ் நாள் சேமிப்பு முழுக்க பெண் திருமணத்தில் செலவழித்து விட்டு பின் அவர்கள் ஓய்வு காலத்தில் கஷ்டப்படுகிறார்கள். என் வீட்டுக்கருகில் ஒரு பெரியவர் சொந்த வீட்டை விற்று, தன் ஓய்வூதியம் முழக்க செலவழித்து தன் இரண்டு பெண்களுக்கும் திருமணம் செய்தார். இன்று வாடகை வீட்டில் இருந்து கொண்டு கடைசி காலத்தை தள்ள, 65 வயதில் வேலைக்கு போகிறார். 

சாப்பாட்டு செலவு, மண்டபம்,உடைகள் என அனைத்திலுமே நாம் செலவை குறைக்க வேண்டியது அவசியமே. இரு வீட்டாரும் பேசி ஒப்பு கொண்டு நடந்தால் மட்டுமே இது சாத்தியம் என தோன்றுகிறது.

இந்த விஷயத்தில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Tuesday, April 26, 2011

சத்ய சாய்பாபா - ஒரு பார்வை

எழுதியவர்  தேவகுமார்



ன் அம்மா வீட்டவர்கள் திராவிட கழகத்தை சார்ந்தவர்கள். அவர்களின் தாக்கம் எனக்கு எப்போதும் உண்டு. அப்போது நான் சட்டம் முதல் ஆண்டு, 18 வயது. என் வகுப்பு தோழன், சத்யா சாய் பாபா கைகடிகாரம் ஒன்றை காற்றில் இருந்து வரவழைத்ததை சொன்னபோது, "ஏன் அவர் சுவர் கடிகாரத்தை வரவழைக்கவில்லை" என கேட்டேன். அவன் என் கன்னத்தில் பளார் என அறை விட்டான். ஒரு 18 வயது இளைஞனை சத்ய சாய் பாபா எப்படி இப்படி ஆட்கொண்டார், அவனுக்கு எப்படி கேள்வி கேட்காத நம்பிக்கை வந்தது? நான்கு வருடம் கழித்து அவனே என்னிடம் வந்து கன்னத்தில் அறைந்ததிற்கு மன்னிப்பு கேட்டான். "பாபாவை நான் இப்போ follow பண்றதில்ல, ஏமாந்துட்டேன்" என அவனே சொன்னான். என்ன ஆயிற்று?

டெல்லியில் உள்ள எனது தோழர் ஒருவர் சொன்ன கதை ஆச்சரியம் ஆனது. அவரின் காதல் தோல்வி சத்ய சாய் பாபாவை வைத்து நிகழ்ந்தது. என் நண்பரும் அவரது முன்னால் காதலியும் அவரவர் பெற்றோரிடம் தங்கள் காதலை சொல்ல, பெற்றோர்களும் ஒப்பு கொள்ள, ஒரே சந்தோசம். பெண் வீட்டார் சொன்ன ஒரு கண்டிஷன் என் நண்பருக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. அந்த கண்டிஷன், சத்ய சாய் பாபா இந்த திருமணதிற்கு ஒப்பு கொள்ள வேண்டும். பாபா ஏன் மறுப்பு சொல்ல போகிறார், அது ஒரு formality - ஆக தான் இருக்கும் என நினைத்து, புட்டபர்த்திக்கு பெண் வீட்டாரோடு போனார், என் நண்பர். அப்போதுதான் அவருக்கு தெரிந்தது, அவர்கள் கையில் ஒரு கடிதத்தோடு கூட்டத்தில் நிற்க வேண்டும், அந்த கடிதத்தில் திருமணத்தை பற்றி எழுதி இருக்கும். பாபா, அந்த கடிதத்தை கையில் வாங்கினால் அவருக்கு சம்மதம், இல்லை என்றால், அவருக்கு சம்மதம் இல்லை. இவர்களும் ஏழு நாட்கள் வரிசையில் நிற்க, பாபா கடைசிவரை கடிதத்தை வாங்க வில்லை. என் நண்பரின் திருமணமும் அந்த பெண்ணோடு நிகழவில்லை. of course, அதைவிட ஒரு அருமையான தோழியோடு அவருக்கு திருமணம் ஆகியது என்பது, வேறு விஷயம். எப்படி அந்த பெண் குடும்பத்தால் இப்படி கண்மூடி தனமாக பாபாவை நம்ப முடிந்தது, அவர்களை ஆட்படுத்தியது எது?

எப்படி, ஏன், எவ்வாறு என எல்லா கேள்விகளையும் கடந்து நின்றவர், சத்ய சாய் பாபா - அவரை நம்பியவர்களுக்கு. சிலருக்கு - எப்படி, ஏன், எவ்வாறு என எல்லா கேள்விகளாலும் துளைக்கப்பட்ட , பற்பல சிக்கல்களில் மாட்டிய , அவைகளுக்கான எந்த விதமான பதிலையும் தராத ஒரு "வித்தைகாரராகவே" அவர் காலமாகி இருக்கிறார். பலருக்கு - அவர் நல்லவரா இல்ல கெட்டவரா என்கிற குழப்பம்தான்.

என்னை பொறுத்தவரை, அவர் செய்த சமூக சேவை அளவிட முடியாதது. இதய அறுவை சிகிச்சையை இலவசமாக மிக சிறந்த வசதிகளோடு எத்தனை பேரால் கொடுக்கமுடியும்? இத்தனை கல்வி கூடங்களை, இந்த சந்தை சமூகத்தில் எத்தனை பேரால், இலவசமாக நல்ல தரத்தோடு நடத்த முடியும்? இத்தனை அந்நிய செலாவணியை எத்தனை பேரால் சமூக சேவைக்காக இந்தியாவிற்கு கொண்டு வரமுடியும்? அரசாங்க திடங்களுக்காக எத்தனை சமய மடங்கள் பொருளுதவி செய்து இருக்கின்றன? இப்படி யாரும் செய்ததில்லை என்பதல்ல, செய்தவர்கள் குறைவு.

ஒன்றல்ல இரண்டல்ல, நூறல்ல - 750 கிராமத்திற்கு தண்ணீர் வசதி செய்து கொடுத்தவர் சாய் பாபா (அந்த திட்டம் பெரிய தோல்வி என்று சொல்பவர்களும் உண்டு). அந்த கிராமங்களில், பெண் பிள்ளைகள் பிறந்தால் சந்தோஷ படுவார்களாம் - தண்ணீர் குடம் தூக்க இன்னொரு தலையும், இடுப்பும் கிடைத்ததே என ! அவர்கள் தண்ணீருக்காக மைல் கணக்கில் நடக்க வேண்டும். 45 ஆண்டு கால பிரச்சனையை ஒரு தனி மனிதரால் தீர்க்க முடிந்தது என்றால், அது அதிசயம் தான். ஒரு வேளை, இந்த பெரிய அதிசயத்தை நிகழ்த்தத்தான் அவர் மோதிரம் வரவழைப்பது, செயின் வரவழைப்பது என சின்ன சின்ன அதிசயங்களை செய்தாரோ? தெரியவில்லை.

இப்போது பாபா 40,000 கோடி சொத்தை விட்டு செல்கிறார், மிகப்பெரிய ஊழலும், வஞ்சகமும் அதை சுற்றி நிகழும். அது, பாபாவை சுற்றியிருந்த மர்மங்களை விட மோசமானதாக இருக்கும் என்பது எவ்வளவு நிச்சயமோ, அதே அளவிற்கு நிச்சயம் - பாபாவை சுற்றியிருந்த மர்மங்களை காலம் மறக்கடிக்கும்; அவர் செய்த காரியங்கள் நல்ல காரியங்கள் என்றால் அவை காலம் கடந்து நிற்கும் - என்பதும்தான்.

பாபாவின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

Saturday, April 9, 2011

அன்னா ஹசாரே உண்ணா நோன்பு ஒரு நேரடி அனுபவம்



டில்லியில் இருக்கும் எனது நண்பன் தேவா தனியார் நிறுவனத்தில் சட்ட ஆலோசகர். அன்னா ஹசாரே உண்ணா நோன்பில் கலந்து கொண்ட அவரது நேரடி அனுபவமும், அது குறித்த எண்ணங்களும் இதோ: 

டெல்லியில் இருக்கும் "ஜந்தர் மந்தர்" அந்தக்கால காலம் காட்டும் கருவிகளை கொண்டது. கடந்த நான்கு நாட்களாய் அது இன்றைய கால கட்டம் எதை நோக்கி நகர்கிறது என்பதனை காட்டுகிற இடமாய் மாறிவிட்டது. அது அன்னா ஹசாரே அவர்களால் நிகழ்ந்த அதிசயம். நானும் அந்த அதிசயத்தில் கலந்து கொண்ட மகிழ்ச்சியில் இதை உங்களோடு பகிர்கிறேன்.

ஊழல் சாத்தானின் லஞ்ச பழத்தை இந்தியா விழுங்கும் வேளையில் அதை தொண்டையிலேயே நிறுத்த முயன்ற நீலகண்டனை போல, இன்று அன்னா ஹசாரே! அவர் அதற்கு சொல்லுகிற மருந்து லோக்-பால் சட்டம். அந்த சட்டத்தை எழுத அரசாங்கம் கமிட்டி அமைத்த பின் அன்னா ஹசாரே அவரது நான்கு நாள் உண்ணா விரதத்தை கைவிட்டு இருக்கிறார். இது சர்ச்சில் சொன்னது போல "Now this is not the end. It is not even the beginning of the end. But it is, perhaps, the end of the beginning."

அந்த உண்ணா விரத இடத்தில ஏறக்குறைய 10000 பேராவது, அன்னா ஹசாரே உண்ணா விரதம் முடித்த வேளையில் இருந்திருப்பார்கள். அது ஒரு திருவிழா இடமாய் இருந்தது. ஆங்கங்கே வெவ்வேறு குழுவினர் ஆடி கொண்டும், கோசம் எழுப்பிக்கொண்டும் இருந்தார்கள். ஒரு குழு குப்பை வண்டியை இழுத்துக்கொண்டு சுற்றிவந்தார்கள் - ஊழல்வாதிகளை இதில் போடுங்கள் என்ற கோஷத்துடன்! Eruption against corruption என்ற கோஷம் கவர்வதாய் இருந்தது. அதில் பாதி பேர் கல்லூரி மாணவர்கள். பள்ளி குழந்தைகள் அவர்களது பள்ளி சீருடையில் வந்திருந்தார்கள் (அல்லது அவர்களின் பள்ளி கொடி பிடித்து வந்தார்கள்). அன்னா -விற்காய் jail - இக்கு கூட போவேன் என ஒரு பள்ளிசெல்லும் பாப்பா சொன்னது அனைவரையும் நிமிர செய்தது.

முன்னால் இராணுவத்தினர் வந்த போது கைத்தட்டுகள் அந்த இடத்தில அதிர்ந்தது (இன்னும் நாம் ஊழல் இல்லா இடமாய் நம்புவது ராணுவதினரைதான் போலும்). சில பேர் அவர்களது பிள்ளைகளை கூட்டி வந்து இருந்தார்கள் (நம் பிள்ளைகளின் காலத்திலாவது....?). எல்லா வயதினரும் எல்லா வகுப்பினரும் ஒருமித்து எழுப்பிய குரல் அரசாங்கத்தை drafting committee - ஐ அமைக்க செய்திருக்கிறது.

இதையெல்லாம் பார்க்கையில் தோன்றுவது இதுதான்:

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு - தழல்
வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?

இந்த லோக் பால் சட்டம் வந்து விட்டால் எல்லாம் சரியாகி விடுமா? இல்லை - அது ஒரு ஆயிரம் மைல் பயணம், இது அதன் முதல் தப்படி. அது தப்பான அடியாய் இல்லாமல் போனதில், அரசாங்கத்தின் கன்னத்தில் விழுந்த அடியாய் ஆனதில், மகிழ்ச்சியே! நாம் இந்த விஷயம் எப்படி பயணிக்க போகிறது என்பதை கவனிப்போம், எழுதுவோம்.

இந்த போராட்டம், முயற்சி வெற்றிபெற நாம் என்ன செய்யலாம்:

1. April 13 - இல் வாக்கு அளிக்கலாம்
2. நீங்களும் உங்கள் ஊரில் நடக்கும் அன்னா ஹசாரே ஊர்வலதிலோ அல்லது உண்ணாவிரத்திலோ கலந்து கொள்ளலாம்.
3. Traffic Light - ஐ jump பண்ணும்போது போலிசுக்கு லஞ்சம் கொடுக்காமல் Fine-ஐ கொடுத்து ரெசிப்ட் வாங்கிகொள்ளலாம்
4. லஞ்சம் கொடுக்கவோ வாங்கவோ மாட்டேன் என முடிவுக்கு வந்து விடலாம்.
5. கடைசி நிமிட அல்லாடல் இல்லாமல், சரியாய் திட்டமிட்டு செயல்படலாம். கடைசி நிமிடத்தில் அரசாங்க அதிகாரியிடம் போய் ஏதேனும் உதவியோ/ approval - ஓ கேட்டு போகும்போதுதான் உங்கள் நேரம் இன்மையை பயன்படுத்தி பணம் கேட்க அவர்களால் முடிகிறது (பெரும்பாலான நேரங்களில்)
6. இன்னும் என்ன செயலாம் என இந்த பதிவில் உங்கள் கருத்தை பதியலாம்!

எழுதியவர் : தேவ குமார்

Tuesday, August 31, 2010

தேவகுமார் பதிவு-" நான் வயதுக்கு வந்தபோது அது வாலிபன்"

என்னுடன் கல்லூரியில் படித்த நண்பன் தேவ குமார். தற்போது டில்லியில் வேலை பார்க்கிறார். தலை நகரில் இருந்தாலும் கிராமத்து நினைவுகள் இன்னும் ஈரமாய் அவருக்குள்...இதோ அவரின் மரம் பற்றிய ஓர் பதிவு..

****
நான் வயதுக்கு வந்தபோது அது வாலிபன்
(இது எங்கள் வீட்டில் இறந்து போன அரச மரத்துக்கு சமர்ப்பணம்)


"மரம் பார்க்க ஒரு ஜென்மம் போதாது என நண்பன் குமார்ஜி சொல்வான்" என ஆரம்பிக்கும் பா. ரா. வின் வலைமனையின் ஒரு பதிவு. எனக்கும் கூட அப்படித்தான். ஏனோ மரம் ரொம்ப பிடிக்கும் எனக்கு. நான் மரங்களோடு வளர்ந்தவன். எங்கள் வயல்களில் நிறைய மரங்கள் இருந்தன. மா, கொய்யா, தென்னை, பூவரசு, புங்கை, எட்டி, கூந்தல் பனை, ஈரபலா, நார்த்தங்காய் - இப்படி நிறைய மரங்கள். ஊர் திருவிழாவுக்கு எங்கள் தோட்டத்தில் இருந்துதான் கூந்தல் பனை தோரணத்துக்கு போகும். ஒரு மரத்தின் பெயரே எங்களுக்கு தெரியாது, அதை ஓட்டை மரம் என்று சொல்வோம். எங்கள் வீட்டின் எருமை மாட்டுக்கு கொம்பை இடிக்கும் பழக்கம் இருந்தது. அது எப்போதும் இந்த மரத்தில் தான் இடிக்கும், அதனால் ஓட்டை விழுந்தது. ஒரு நாள் அந்த ஓட்டையில் மாட்டின் கொம்பு மாட்டி லேசாய் ஒடிந்து போக, எல்லோரும் மரம் மாட்டை பழி வாங்கியதாய் சொன்னோம். அது தவறு. மரமும் நிலம் மாதிரி தான். அகழ்வாரை தாங்கும்...பழி வாங்காது...

எங்கள் வீட்டுக்கு முன் இருந்த அரச மரம்தான் எனக்கு மிகவும் பிடித்த மரம். நாலுபுறமும் கிளை பரப்பி, நான்கு ஐந்து ஆட்கள் கட்டி பிடிக்கும் அளவுக்கு பருமனான அந்த மரத்தை பார்த்து கொண்டே இருக்கலாம். நிமிடத்துக்கு ஒரு முறை உரு மாறும் மேகம் மாதிரி, அந்த மரமும் உரு மாறும், காற்று - அதில் ஊஞ்சலாடும் தாவணி பெண். அந்த மரம் ஒவ்வொரு காலத்திலும் வெவ்வேறு குரலில் பேசும், பழம் நிறைந்த நாட்களில் (பகலில்) குருவிகள் குரலில் (இரவில்) வொவாள்கள் குரலில், கோடை காலத்தில் சருகுகள் குரலில், ஆடி மாதத்தில் காற்றின் குரலில், இப்படி அந்த மரம் ஒரு பல குரல் மன்னன்.

அந்த மரத்துக்கு என்ன வயது என்றே யாருக்கும் தெரியாது. நான் வயசுக்கு வந்தப்பவே அது வாலிபனா இருந்தது என சொன்ன அப்பாயி, சமீபத்தில் இறந்தபோது அவர்களுக்கு 90 வயது. அந்த மரம் 100 வருஷத்துக்கு மேல் வாழ்ந்து இருக்கும் எனவே தோன்றுகிறது. அந்த மரதுக்கு வயசாச்சி என சொல்லி என் அப்பா அந்த மரத்தை வெட்டிவிட (வீட்டின் மேல் விழுந்து விடும் பயத்தில்), இப்போது எனக்கு பார்க்கிற எல்லா அரச மரமும் என் வீட்டையும் தோட்டத்தையும் நினைவுபடுத்துகின்றன.

டெல்லியில் என் வீட்டுக்கு அருகில் இருக்கும் பூங்காவில் நான் வாக்கிங் போகும்போது எப்போதும் ஒரு பெரியவர் அந்த சின்ன அரச மரத்திடம் நெடுநேரம் நின்றுகொண்டும் பேசிக்கொண்டும் இருப்பார். சில நாட்களுக்கு முன்னால் அவர் அந்த மரத்திடம் ஹிந்தியில் - சொல்லு, நான் அப்படிப்பட்டவனா, நான் உன் வீட்டுகாரிய அப்படி சொல்லி இருப்பேனா, உனக்கு என்னபத்தி தெரியும்தானே - கைகூப்பி பேசி கொண்டு இருந்ததை பார்க்கையில், பிள்ளைகளை வளர்க்கும் அதே ஆர்வத்தோடு ஒரு மரத்தையும் வளர்க்க வேண்டும்போல் இருக்கிறது. நாம் வயதாகி பேசுவதை காது கொடுத்து கேட்க ஒரு பிள்ளை வேண்டாமா!

***
(இந்த பதிவை எழுதியவர்: தேவகுமார் )
Related Posts Plugin for WordPress, Blogger...