Thursday, January 31, 2013

கடல் பாடல்கள்: AR ரகுமானின் மாஸ்டர் பீஸ்.. ஆடியோ + விமர்சனம் !

ணிரத்னத்தின் கடல் நாளைக்கு வெளியாகிறது.

Draft-ல் கொஞ்ச நாள் தூங்கி விட்டு இன்று வெளியாகிறது பாடல் விமர்சனம் !

மொத்தம் 7 பாட்டு இருக்கு. நிச்சயம் 3 அல்லது 4 பாடல்கள் Outstanding!

நெஞ்சுக்குள்ளே உம்மை முடிஞ்சிருக்கேன்

பாடியவர்: சக்திஸ்ரீ கோபாலன்
இயற்றியவர்: வைரமுத்து

ஆல்பத்தில் முதலில் ரிலீஸ் ஆனது இந்த பாட்டு தான். அனைவரும் இப்பாட்டை ஆஹோ ஓஹோ என சிலாகிக்க, சற்று எதிர்பார்ப்போடு கேட்டதாலோ என்னவோ அதிகம் கவரலை. பின் மற்ற பாடல்களும் வந்து சேர - இப்போ "நெஞ்சுக்குள்ளே " - ஸ்ட்ராங்காய் உள்ளிறங்கி விட்டது.



பொதுவாய் ஆண்களுக்கு, ஆண் குரல்  பாடும் பாடல்களும், பெண்களுக்கு பெண் குரல் பாடும் பாடல்களும் தான் அதிகம் பிடிக்கும் என நினைக்கிறேன். காரணம் காதல் பாடலை நம் மனதுக்கு பிடித்தவரை நினைத்து கொண்டு கேட்கிற பழக்கம் எதோ ஒரு காலத்தில் நம்மிடம் வந்து ஒட்டி கொள்கிறது. எனக்கு மிக பிடித்த பெண் குரல் தனி பாடல்கள் மிக குறைவாக தான் இருக்கும். அந்த லிஸ்ட்டில் இணைகிறது இப்பாடல்.



பாடல் முழுக்க முழுக்க ரகுமான் மேஜிக் தான். மயக்கும் துவக்க இசை, ஊஞ்சலாடும் மெட்டு, அர்த்தமுள்ள வரிகள், இனிய குரல்.. என நெஞ்சை நிறைக்கிறது. கேட்டு பாருங்கள்....!

அன்பின் வாசலிலே

பாடியவர்: ஹரிசரண்
இயற்றியவர்: மதன் கார்க்கி

பம்பாய் உள்ளிட்ட படங்களில் ரகுமான் இசையில் கேட்ட வேறு சில பாடல்களை நினைவு படுத்துது. பெரிதாய் கவரவில்லை என்று தான் சொல்லணும்

எலேய் கீச்சான்

பாடியவர்: AR ரகுமான்
இயற்றியவர்: மதன் கார்க்கி

ரகுமான் இசை அமைத்து பாடியுள்ள இந்த பாட்டு கடல் வாழ்க்கையையும் காதலையும் ஒரு சேர நமக்கு அறிமுகம் செய்கிறது. மீண்டும் ஒரு அட்டகாச மெட்டு ! ரகுமான் ரொம்ப என்ஜாய் செய்து பாடியிருக்கிறார்.



ஆரம்பத்தில் கேட்கையில் பாடல் வரிகள் முழுசாய் புரியவில்லை. இது ஒரு குறை தான். இதை மீறி இப்பாட்டை ரசிக்க ஒரு எளிய வழி உண்டு.

பாட்டை சிஸ்டத்தில் ஓட விட்டு,  காதில் கேட்ட படியே, இந்த லிங்கில் பாடல் வரிகளை ஒரு முறை மட்டும் படித்து பாருங்கள். உங்களை அறியாமல் முகத்தில் சிரிப்பலை பரவும். அடுத்த முறை பாடல் வரிகளை படிக்க வேண்டாம். பாட்டு கேட்கும் போதே ரசிக்கலாம்



"வா..... லே ... கொண்டா .. லே கட்டுமரம் கொண்டா....லே
குண்டு மீனை அள்ளி வர கொண்டா...லே " என கோரஸ் பாடும் இடமும், "

"ஒரு ஒரு தரம் உரசுற; பொசுக்குன்னு உசுரை உசுப்புற " என்று ரகுமான் பாடும் இடமும், மிக மெதுவாய் பாடல் முடிவதும் இப்போதைக்கு பிடித்தமான இடங்கள்.

வந்தாச்சு என்பதை முழுசாய் சொல்லாமல் வந்தாச் என ரகுமான் சொல்லி போவது அழகு :)
*****
மகுடி மகுடி

பாடியவர்கள்: ஆர்யன் தினேஷ் கனகரத்னம், சின்மயி
இயற்றியவர் : ஆர்யன் தினேஷ் கனகரத்னம்

ஸ்பீடாக போகிற வித்யாசமான பாட்டு. மகுடி மகுடி என்கிற வார்த்தைகளே மறுபடி மறுபடி ஒலிக்கிறது. நடுவில் சின்மயி கொஞ்சம் பேசுகிறார் (ஆம் பேசுகிறார்). வித்தியாச பாட்டு என்கிற அளவில் மட்டும் தான் இப்போதைக்கு வைக்க முடிகிறது

மூங்கில் தோட்டம்

பாடியவர்: அபை ஜோத்புரக்கர், ஹரிணி
இயற்றியவர்: வைரமுத்து

நண்பர் ரகுவிடம் சில வாரம் முன் பேசும்போது கேட்டார் " கடல் பாட்டு கேட்டீங்களா? எப்படி இருக்கு? " " நெஞ்சுக்குள்ளே தான் இப்போதைக்கு புடிக்குது" என்று நான் சொல்ல, " என்ன இப்படி சொல்லிட்டீங்க? மத்த பாட்டும் கேளுங்க .. அட்டகாசமா இருக்கு " என்றார். மற்ற பாட்டுகள் நெஞ்சுக்குள்ளே பாட்டை பீட் செய்ய முடியும் என்று அவர் சொன்னதை என்னால் ஏற்கவே முடியவில்லை.. எல்லாம் மூங்கில் தோட்டம் பாட்டு கேட்கும் வரை !

தான் தாண்டும் உயரங்களை, அடுத்தடுத்து அனாயசமாக தாண்டி போகும் ரகுமானை எப்படி பாராட்டுவது என்று தெரியாமல் விழிக்கிறேன்.

மிக மிக மெதுவான பாட்டு. இவ்வளவு ஸ்லோ பாட்டு போட எவ்வளவு துணிச்சல் வேண்டும் ! அதையும் சூப்பர் ஹிட் ஆக்கி நம்மை கிறுகிறுக்க வைக்கிறார்.

மூங்கில் தோட்டம்
மூலிகை வாசம்
நிறைஞ்ச வானம்
நீ பாடும் கீதம்
பவுர்ணமி இரவு
பனி விழும் காடு
ஒத்தையடி பாதை
உன் கூட பொடி நடை
இது போதும் எனக்கு
இ...து போதுமே... !
வேறென்ன வேணும்
நீ போதுமே..!

இரண்டு வார்த்தைகளில் ஒவ்வொரு வரியும் - புது கவிதை போல  இருக்கு. அதை அட்டகாச பாட்டாக மாற்றிய ரகுமான் ... வாட் எ ஜீனியஸ் !

" கொளத்தாங்கரையிலே" போன்ற வார்த்தைகளை கேட்கும் போது கிராமத்தில் வளர்ந்த ஒருவரால் மட்டுமே இத்தகைய வரிகளை எழுத முடியும் என தெளிவாக தெரிகிறது. தேசிய விருதுக்கான களத்தில் வைரமுத்து இந்த முறையும் போட்டியில் இருப்பார். கூடவே இப்பாடலை பாடிய ஹரிணியும்... !

 உங்களுக்கு மெலடி பிடிக்கும் என்றால், நிதானமாய் இந்த பாட்டை கேட்டு பாருங்கள். சான்சே இல்லை ! சிம்ப்ளி சூப்பர்ப் !

ஒரே ஒரு பிரச்சனை. 2- 3 தடவை கேட்டு, பாட்டும் பிடிச்சுட்டா, அப்புறம் தினம் 10 முறை கேட்க வைக்கும் இந்த பாட்டு.. I am literally addicted to this song now !


*****

சித்திரை நிலா

பாடியவர்: விஜய் யேசுதாஸ்
இயற்றியவர்: வைரமுத்து

மிக மெதுவாக துவங்கி பாதிக்கு மேல் வேகம் பிடிக்கிற பாட்டு. மனம் நொந்துள்ள  நாயகனுக்கு ஆறுதலும் ஊக்கமும் சொல்கிறது

"புதைக்கின்ற விதையும்
முயற்சி கொண்டால் தான்
பூமியும் கூட தாழ் திறக்கும் "

"துயரத்தில் இருந்தே காவியம் தோன்றும்
தோல்வியில் இருந்தே ஞானங்கள் தோன்றும் "

என செல்கிறது. ஜேசுதாஸ் பாடவேண்டிய பாட்டு... அவர் மகன் விஜய் ஜேசுதாஸ் பாடியுள்ளார்.
***
அடியே

பாடியவர் சித் ஸ்ரீராம்
இயற்றியவர்: மதன் கார்க்கி
 *******  
இன்னொரு அட்டகாச பாட்டு. கேட்டவுடன் இது ரகுமான் பாட்டு என சொல்லி விடலாம்.



பாடகர் சித் ஸ்ரீராம் யார், வேறு பாட்டு பாடியுள்ளாரா என தெரிய வில்லை. காதலின் கிறுக்கு தனத்தை அழகாய் வரிகளில் கொண்டு வந்துள்ளார் மதன் கார்க்கி.
*********
மொத்தத்தில் : தமிழில் மட்டுமல்ல, இந்திய இசை உலகின் இன்றைய முடிசூடா மன்னன் ரகுமான் என மீண்டும் ஒரு முறை நமக்கு நினைவு படுத்துகிறது இந்த ஆல்பம் !

கடல் பாடல்கள்..... ரகுமானின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்று ! அவசியம் கேளுங்கள் !
****
அண்மை பதிவு 

கன்யாகுமரி :சில கசப்பான உண்மைகள் 

Wednesday, January 30, 2013

வானவில்: காந்தி நினைவு நாளில் விஸ்வரூபம் - பாக்யராஜ்- பூஜா குமார்

படித்ததில் பிடித்தது

தோழி என்கிற பெண்கள் இதழ், குங்குமம் நிறுவனத்திலிருந்து வருகிறது. இதில் பிரபலங்கள் தங்கள் மனைவி பற்றி எழுதி வருகிறார்கள். எஸ். ராமகிருஷ்ணன், பாக்யராஜ் போன்றோர் எழுதியதை வாசித்தேன். இதில் பாக்யராஜ் எழுதியது செம நெகிழ்ச்சி.

பாக்யராஜ் பிரவீனாவை திருமணம் செய்து அவர் மரணம் அடைந்தது தெரியும் அல்லவா? அதன் பின் பாக்யராஜ் இலக்கின்றி சுற்றி வந்திருக்கிறார். அவருக்கு தாய், தந்தையும் இல்லை. பிரவீனாவின் தோழி தான் பூர்ணிமா.  அவர் வீடு இருக்கும் பம்பாய்க்கு ஒரு முறை பாக்யராஜ் சென்ற போது, பூர்ணிமாவை திருமணம் செய்து கொண்டால் என்ன என தோன்றியிருக்கிறது. வெளிநாட்டுக்கு ஷூட்டிங் செல்லும் பூர்ணிமாவிடம் " நீ அங்கு போயிட்டு எனக்கு போன் செய்" என்று கூற, பூர்ணிமா போன் செய்தபோதெல்லாம் பாக்யராஜ் இல்லாமல் (அப்போ மொபைல் இல்லை) விஷயம் தள்ளி போனது. கடைசியாய் அவர் போனில் பேசியபோதும் பாக்யராஜ் காதலை சொல்லலை.

பூர்ணிமா இந்தியா வந்த பின் நேரில் பார்த்து காதல் சொல்லி அப்புறம் ஒரு வழியாய் திருமணம் நடந்துள்ளது.

பல வருடங்கள் கழித்து அதே வெளிநாட்டுக்கு பூர்ணிமா மற்றும் பாக்யராஜ் சென்றபோது ஒரு கோவிலுக்கு அழைத்து சென்ற பூர்ணிமா, " நீங்கள் அப்போது வெளிநாடு போயிட்டு போன் செய் என்றபோதே உங்கள் காதலை சொல்லத்தான் என்று நினைதேன்; அப்படி நடந்தால் உங்களுடன் சேர்ந்து இங்கு வருவதாக பிரார்த்தனை " என கூற நெகிழ்ந்து போனாராம் பாக்யராஜ்.

கேட்க சினிமா சீன் மாதிரியே இருக்கு இல்ல?

ஆனந்த் கார்னர்

We can save many relations, if we understand the fact that people are not difficult, they are different.

விஸ்வரூபம் - பூஜா குமார் : சிறு குறிப்பு

பெரும் போராட்டத்துக்கு பின் தமிழகத்தில் ரிலீஸ் ஆகுது விஸ்வரூபம் ! வழக்குகள் இருக்கட்டும் பாஸ் நாம வேற விஷயம் பேசுவோம் !

நாயகி பூஜா குமார் - இந்த படத்தில் அறிமுகம் என்று நினைக்கிறீர்களா? இல்லை... இதற்கு முன் நடித்திருக்கிறார். எப்போதா? அதிகமில்லை ஜென்டில் மேன் ! சுமார் 13 வருஷத்துக்கு முன் கேயார் இயக்கிய காதல் ரோஜாவே பட ஹீரோயின் தான் இந்த அம்மணி.

                                           

அதன் பின் ஹிந்தி, அமெரிக்கா என பல இடம் சுற்றி விட்டு இப்போது கமல் படத்தில் ரீ என்ட்ரி.  வயது.. 36 ! இன்னும் கல்யாணம் ஆகலை (ரொம்ப முக்கியம்!) 

போஸ்டர் கார்னர்



பதிவர் பக்கம் - இருவர் உள்ளம்

மருத்துவ தகவல்கள் குவிந்து கிடக்கும் ஒரு தளம் - இருவர் உள்ளம்.

பல இடங்களில் இருந்து தகவல் சேகரித்து தருகிறார் கடைசியில் எங்கிருந்து திருடியது என்று மறக்காமல் சொல்கிறார் :) உடல் நலம் குறித்து அக்கறை கொண்டோருக்கான வலைப்பூ இது !

காந்தி நினைவு நாள் 

இன்று காந்தி நினைவு நாள். காந்தி பட இறுதி ஊர்வல காட்சியில் பின்னணியில் ஒலிக்கும் குரல் இவ்வாறு சொல்லும் :

"என் வாழ்க்கைதான் நான் உங்களுக்கு விட்டு செல்லும் செய்தி என்றவர். வரலாற்றை படிக்கும் போது இப்படியும் ஒருவர் வாழ முடியுமா என அதிசயிக்கும் வாழ்க்கை வாழ்ந்தவர். "

" ஒரு தனி மனிதர் ; எந்த செல்வமும் சொத்தும் இல்லாதவர். எந்த நாட்டையும் ஆளவில்லை. இடுப்பு கச்சையுடன் இருந்த சாதாரண மனிதர். சுதந்திரம் வாங்க தன் நாட்டுக்கே தலைமை வகித்தவர். தனது சத்தியத்தாலும் பணிவினாலும் மாமன்னர்களை விட வலிமையானவர்.

இதோ......எந்த பதவியிலும் இல்லாத, எந்த நாட்டையும் ஆளாத இம்மனிதரின் இறுதி ஊர்வலத்தில் அனைத்து உலக தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்  "



பொறுமையும், எடுத்த காரியத்தில் உறுதியாய் நிற்கும் பிடிவாத குணமும் உம்மிடம் வியக்கும், பின்பற்ற நினைக்கும் குணங்கள் ! வணங்குகிறோம் மகாத்மா !

அய்யாசாமி கார்னர்

நண்பர்கள் நந்து மற்றும் மோகன் அழைத்த மீட்டிங்குக்கு நந்துவோடு சென்றார் அய்யாசாமி. வடக்கு உஸ்மான் சாலை விவேக் சிக்னல் அருகே காத்திருக்கையில் அந்த மனிதரை பார்த்தனர். எம். ஜி ஆர் போல உடை அணிந்து கொண்டு தொப்பி, கூலிங் கிளாஸ் சகிதம் ஆடிக்கொண்டிருந்தார். விவேக்ஸ் வாகன பார்க்கிங்கில் தான் அந்த டான்ஸ் நடந்து கொண்டிருந்தது. அய்யாசாமி முதலில் எதோ டிவி சீரியல் ஷூட்டிங் என்றே நினைத்தார் அப்படி ஏதும் இல்லை. அந்த மனிதர் பாட்டுக்கு புல் மேக் அப்புடன் டான்ஸ் ஆடுவது, சிக்னலில் நிற்கும் மற்றவர்களை பார்த்து கையசைப்பது என இருந்தார்.

அய்யாசாமிக்கு சுவாரஸ்யம் தாங்கலை. நண்பன் நந்துவிடம் "" டேய் அவர் ஏன் இப்படி ஆடுறாருன்னு போய் கேட்கலாம் வாடா " என்றதும் நந்து டென்ஷன் ஆகிட்டார். " டேய் ஒருத்தராவது அந்த ஆளு பக்கத்திலே போறாங்களா பாரு. நீ மட்டும் எண்டா இப்டி இருக்கே? " என்று சொல்லும்போதே, மேற்படி நபர் ஆடியது போதும் என தனது பைக்கை எடுத்து கொண்டு கிளம்பி விட்டார். எம். ஜி ஆர் படம் உள்ளிட்ட பல சமாசாரம் அந்த வண்டியில் இருந்தது . கூடவே ஒரு விளக்குமாறும் சொருகப்பட்டிருக்க,  அதை பார்த்த அய்யாசாமி " நல்லவேளை அவர் கிட்டே போகலை " என பெருமூச்சுடன் வண்டியை கிளப்பினார்.

அன்றிரவு, போதையில் இதை சொல்லி சொல்லி நண்பர்கள் குமுறியதை முழுசாய் சொன்னால், அய்யாசாமி இமேஜ் டோட்டல் டேமேஜ் ஆகிடும் :)

Tuesday, January 29, 2013

பிசினஸ் வெற்றிகதைகள் : சக்சஸ் சீக்ரெட்ஸ் !

பிசினஸ் வெற்றிக்கதைகள்: விகடன் பிரசுர வெளியீடு. எஸ். பி அண்ணாமலை எழுதியது. தமிழகத்தில் உள்ள பல்வேறு பிரபல பிசினஸ் மேன்களை பேட்டி எடுத்து, அவர்கள் வெற்றி கதையை பதிவு செய்துள்ளார்.

                         

அந்த நிறுவனத்துக்கே சென்று பல்வேறு புகை படங்களுடன், சுவாரஸ்யமான முறையில் வெளிக்கொண்டு வந்துள்ளனர் இந்த புத்தகத்தை

சுய தொழில் தொடங்க நினைப்போருக்கும், ஏற்கனவே சுய தொழில் புரிவோருக்கும் நிச்சயம் பல நல்ல Sparks இப்புத்தகத்தில் உண்டு. இதிலிருந்து நான் ரசித்த சில துளிகள் இங்கே பகிர்கிறேன் :

******
சசி அட்வர்டைசிங் M .D சாமிநாதன்

கூச்சம் தவிர். இது தான் தொழில் முனைவோருக்கு தேவையான பாலிசி. எதையும் விட கூடாது. எல்லா கதவையும் முட்டி பார்த்துடணும்

இதயம் நல்லெண்ணெய் - முத்து

ஒரு பொருளின் தரம் சுத்தமாக இருந்தால் ஆயிரம் வருஷம் கூட அந்த தொழிலில் நிலைத்து நிற்க முடியும். வாடிக்கையாளர் நமக்கு கடவுள் எனும்போது கடவுளுக்கு படைக்கும் பொருள் எவ்வளவு சுத்தமாக இருக்க வேண்டும்? நல்ல பொருள் கொடுத்தால் வாடிக்கையாளர்கள் நம்மிடம் திரும்ப திரும்ப வருவார்கள். தரமற்ற பொருள் கொடுத்தால் பொருள் தான் திரும்ப வரும். வாடிக்கையாளர் வர மாட்டார்

ஒரு தொழிலில் வளர்ச்சியை எப்படி கண்டுபிடிப்பது? போட்டியாளர்களை வைத்தோ ஏற்ற இறக்கங்களை வைத்தோ இல்லை. ஒவ்வொரு மாதத்துக்கும் தொழில் எந்த அளவு வளர்ந்துள்ளது என்பதை வைத்து தான் !

லயன் டேட்ஸ் பொன்னுத்துரை

சின்ன சின்ன விஷயங்கள் கூட சமயத்தில் பெரிய சாதனைகளுக்கு விதையாகி விடும். யார் எங்கே எந்த விஷயம் சொன்னாலும் அதை நான் கவனமா காத்து கொடுத்து கேட்பேன். கொட்டை இல்லாம பேரிச்சம்பழம் விற்கும் எண்ணம் ரோடில் இரண்டு பேர் பேசி கொண்டு போவதை வைத்து செய்து பார்த்த முயற்சி தான்

நாங்கள் புதிய தொழில் ஆரம்பித்த போது கிண்டல் செய்தவர்களே அதிகம். இத்தகைய கேலி, கிண்டல்களால் சோர்ந்து விடாமல் இலக்கு நோக்கி போய் கொண்டே இருக்க வேண்டும்.

**
நீல்கிரிஸ் ராஜா

நம்மிடம் பணியாற்றும் ஊழியர்களை எப்போதும் நம் குடும்பத்தில் ஒருவராய் நடத்த வேண்டும். அந்த அன்பு தான் விசுவாசமான ஊழியர்களை பெற்று தரும்.

நாம் செய்யும் தொழிலுக்கு ஒரு போட்டியாளர் இருக்கும் போது அதிக கவனம் தேவை. லாப சதவீதத்தை எவ்வளவு குறைவாக வைத்து வாடிக்கையாளரை தக்க வைத்து கொள்ள முடியும் என்று பார்க்க வேண்டும். செலவுகள் போக 10 சதவீத லாபம் போதும் என்ற மனநிலை இருந்தால் தான் அதிக வாடிக்கையாளரை கவர முடியும்

***
சுகுணா சிக்கன் சுந்தர்ராஜன்

ரிஸ்க் எடுப்பவர்கள் மட்டுமே தொழில் நடத்துபவர்களாக இருப்பார்கள் கவனித்துள்ளீர்களா? அதிலும் சரியான பாதையில் புதிய சிந்தனையோடு அதிக ரிஸ்க் எடுக்க துணிபவர்கள் சாதிக்கிறார்கள்

*******
கெவின் கேர் ரங்கநாதன்

என்ன தான் பிசினஸ், பிசினஸ் என்று அலைந்தாலும் குடும்பத்துக்கான நேரம் ஒதுக்க தவற கூடாது. வாரத்துக்கு ஐந்து நாட்கள் பிசினஸ் வேலை மீதம் இரண்டு நாட்கள் குடும்பத்துக்கு மட்டும் தான்

*******
ஈகிள் டயரி பிரதாப்

நாம் எந்த தொழிலில் இருந்தாலும் சரி நம் தயாரிப்புகள் நம்மையே முதலில் திருப்தி படுத்த வேண்டும். எங்கோ எதுவோ தப்பாக நடக்கிறது என்று தோன்றினால் அதை பற்றியே சிந்தனையிலேயே இருந்தால் புதுப் புது யோசனைகள் தன்னால் வந்து விழுந்து தயாரிப்புகளை தரமாக்கி விடும்

*******
சௌபாக்கியா கிரைண்டர் வரதராஜன் 

சக்சஸ் என்பது ஒரு கூட்டு முயற்சி. நாம் நினைப்பதை ஊழியர்கள் சரியாக செயல்படுத்தினால் தான் இலக்கை வேகமாக அடைய முடியும். ஊழியர்களுக்கும் நமக்கும் இடையே பிரச்சனைகளோ, மன குறையோ இருக்க கூடாது என்று தான் வருடத்துக்கு ஒரு முறை சுற்றுலா அழைத்து செல்கிறேன்
******
புரோபஷனல் கூரியர் சுசீலன்

எந்த தொழிலாக இருந்தாலும் இது நமக்கு தெரியாதே என்று சோர்ந்து விடாமல் திடமான ஆர்வம் இருந்தால் எல்லா தொழிலிலும் வெற்றி பெற முடியும். கூரியர் தொழிலுக்குள் என்னை ஈடுபடுத்தி கொண்டு முன்னேற காரணம் ஆர்வம் தான். முதலீடு என்று பார்த்தால் அலுவலகம் வைக்க செய்த செலவு மட்டும் தான்

*****
மெடிமிக்ஸ் சோப் நிறுவன தலைவர் கே. பி சித்தன்

லாபம் வருகிற காசை தொழிலில் மேலும் மேலும் முதலீடு செய்து கொண்டே இருக்க வேண்டும். வந்த வரை லாபம் என்று மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை எடுத்து கொண்டே போனால் தொழிலில் வளர்ச்சி இருக்காது

**********
காளீஸ்வரி பயர் வொர்க்ஸ் செல்வராஜ்

பணியாளர்களை பொறுத்த வரை ஒரு வேலை சொன்னால் அதை துடிப்போடு " முடியும்" என்று சொல்பவரை என் அருகிலேயே வைத்து கொள்கிறேன். "முயற்சிக்கிறேன்; கொஞ்சம் டயம் கொடுங்க " என்பவர்கள் இரண்டாம் வட்டத்தில் இருப்பார்கள். எடுத்தவுடன் " அது சிரமம்ங்க" என்பவரை எப்போதும் வெளி வட்டத்தில் தான் வைக்கிறேன். அருகில் சேர்ப்பதில்லை

*****
வாய்ப்பு கிடைத்தால் அவசியம் வாசியுங்கள் இந்த பிசினஸ் வெற்றி கதைகளை !

பெயர்: பிசினஸ் வெற்றி கதைகள்
ஆசிரியர்: எஸ். பி அண்ணாமலை
விகடன் பிரசுரம்
பக்கங்கள்: 224
விலை: ரூ : 100
*******
அண்மை பதிவுகள்:

உணவகம் அறிமுகம்: தேவர் ஹோட்டல் தஞ்சாவூர்

தொல்லைகாட்சி: சிவகார்த்தி- லொள்ளு சபா - சூப்பர் சிங்கர் T- 20 பைனல்...






Monday, January 28, 2013

தொல்லைகாட்சி: சிவகார்த்தி- லொள்ளு சபா - சூப்பர் சிங்கர் T -20-பைனல்

சிவகார்த்திகேயன் பேட்டி 

சன் டிவியில் திடீர்னு ஒரு வார நாள் காலையில் பார்த்தா - சூரிய வணக்கத்தில் சிவ கார்த்திகேயன் பேசிட்டு இருக்கார். என்னடா இது லீவு நாள் கூட இல்லை; இன்னிக்கு இவரை மாதிரி ஒரு பிரபலத்தை கூட்டி வந்திருக்காங்களே என வியப்போடே பார்த்தேன்

சிவகார்த்திகேயன் நிச்சயமா ஒரு செம என்ட்டர்டேயினர். தொகுத்து வழங்கினாலும் சரி, பேட்டி தந்தாலும் சரி சிரிக்க வச்சிடுறார் (நடிக்கும் போது தான் அந்தளவு Flow வர மாட்டேங்குது )

பள்ளியில் படிக்கும் போது தினம் நெற்றியில் 3 பட்டை போட்டு கொண்டு போனதும், கல்லூரி வந்ததும் செய்த அலம்பல்களும், அஜீத்துடன் முதல் படத்தில் (ஏகன்) நடித்த போது அவர் எப்படி பேசினார் என பேசி காட்டியதும், விஜய் உள்ளிட்ட பலரை மிமிக்ரி செய்ததும் அட்டகாசம் ! ஹீரோவாக இல்லாமல், சந்தானம் போல காமெடியன் ஆனால் செமையாய் கலக்குவார் என தோன்றுகிறது.

சீரியல் பக்கம் : ராஜ குமாரி

சன் டிவி யில் இன்று முதல் தொடங்குகிறது " ராஜ குமாரி" சீரியல். காசியில் மிக பெரும் பகுதி படமாக்கப்பட்டது இந்த சீரியலில் தான் என்கிறார்கள். ரம்யா கிருஷ்ணன் தனக்கு பேர் வாங்கி தந்த நீலாம்பரி என்கிற பெயரில் நடிக்கிறார். தினம் இரவு 8.30 க்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் நம்ம டிகிரி தோஸ்த் ஒருத்தர் பணி புரிந்துள்ளார்.

பிளாஷ்பேக் : லொள்ளு சபா 

இன்றைய சந்தானத்தின் விசிட்டிங் கார்ட் இந்த சீரியல் தான். ஒவ்வொரு ஹிட் படத்தையும் எடுத்து கொண்டு அநியாயத்துக்கு கலாய்ப்பார்கள். பாஷா, சின்ன கவுண்டர் போன்ற உல்ட்டாக்கள் இன்றும் நினைவில் இருக்கிறது. சந்தானத்தின் டைமிங் காமெடி மற்றும் இயக்கிய ராம்பாலாவின் புத்தி சாலித்தனம் இரண்டும் சேர்ந்து, தொடர்ந்து பார்க்க வைத்தது.

சினிமாவை கலாய்த்த சந்தானத்தை சினிமா துறையினர் வெறுக்காமல், வாரி அணைத்து கொண்டனர். திறமைக்கு சில நேரங்களில் உரிய மரியாதை கிடைத்து விடுகிறது !

ஆமாம் இந்த வகை காமெடி + உல்ட்டா தொடருக்கு இன்னும் கூட நிறைய Viewers இருப்பார்களே.. ஏன் மறுபடி அவர்களோ வேறு டீமோ தொடங்க கூடாது?

குட்டி சுட்டீஸ்

இமான் அண்ணாச்சி குட்டீசுடன் அதகளம் செய்கிறார். வீட்டில் நாம சின்னதா கிண்டல் செய்தாலே முறைக்கும் மனைவிகள், இமான் அண்ணாச்சி தங்களை பார்வையாளர் வரிசையில் உட்கார வைத்து விட்டு ஓட்டும் போது விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.

எல்லா குழந்தைகளிடமும் " உங்க வீட்டுல யார் யாரை அடிப்பாங்க? உங்க அம்மா- அப்பாவுக்குள்ளே சண்டை வருமா? " என்று கேட்கிறார் பசங்க அடிச்சு விடுதுங்க. என்னா கற்பனை திறன் ! அழகா டிரஸ் பண்ணி அதை விட அழகா குழந்தைகள் பேசும் இந்நிகழ்ச்சி குட்டீஸ் இருக்கும் வீடுகளில் பாபுலர் ஆகிடுச்சு. இதுவரை பார்க்காவிடில் ஞாயிறு மாலை ஆறு மணிக்கு கண்டுகளியுங்கள் !

கிரிக்கெட் கார்னர்

ஆண்டர்சன், சுவான் போன்ற நல்ல பவுலர்கள் இல்லாததாலோ என்னவோ இந்தியா இங்கிலாந்தை ஒரு நாள் தொடரில் (3-2) வென்றது. இந்த கம்பீரை கட்டி கொண்டு ஏன் தான் அழுகிறார்களோ தெரியலை. 

துவக்க ஆட்டக்கார்கள் பார்ம், வீக் ஆன வேக பந்து வீச்சாளர்கள், யுவராஜ் பேட்டிங், வாரி வழங்கும் அஷ்வின் என பல பிரச்சனைகள் - வெற்றிக்கு முன் தெரியாமல் போய் விட்டது. ஜடேஜா இந்திய மண் என்பதாலோ என்னவோ அசத்தி விட்டார்.

தோனி விரைவில் டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெற்று விடுவார் என்கிறார்கள் பார்க்கலாம்

சூப்பர் சிங்கர் T -20-பைனல் 

சாய் சரண் அணியும், பூஜா அணியும் பைனலில் மோதிக்கொண்டன. மொத்தம் 9 ஜட்ஜுகள் ! T -20- முழுவதுமே, ஒவ்வொரு மேட்சிலும் இரு டீமுக்கும் இடையில் அதிக வித்யாசம் இருக்க கூடாது; அப்போது தான் கடைசி பாட்டு வரை பார்ப்பார்கள் என மார்க்குகள் இரண்டு அணிக்கும் ஒரே மாதிரி போட்டு வந்தனர். இதுவே அவர்களின் நம்பக தன்மையை குறைத்து விட்டது. இதனை பார்க்கும் ரசிகர்கள் எப்படி கண்டுபிடிக்காமல் போவார்கள் என underestimate செய்தனரோ தெரியலை. உதாரணமாய் எதிர் எதிரே பாடும் இருவரில் ஒருவர் Outstanding ஆக பாடுவார். இன்னொருவர் மிக சுமாராக பாடுவார். நன்கு பாடியவருக்கு 10 மதிப்பெண்ணும், சுமாராய் பாடியவருக்கு 9 மார்க்கும் தருவார்கள். பார்க்கும் நமக்கு காண்டாகும்

பைனலில் பொத்தி வச்ச மல்லிகை மொட்டு பாட்டை ஷ்ரவன்- பிரியங்கா ஜோடி பாடியது அட்டகாசமாய் இருந்தது. இதே பாட்டை எஸ் பி. பி மேடையில் பாடினால் கூட இஷ்டத்துக்கு மாற்றி பாடுவார். ஆனால் ஷ்ரவன் அப்படியே நிஜ பாட்டை கேட்கும் விதத்தில் பாடியது அருமை. பிரியங்கா குரல் தேன் போல் இனிக்கிறது. நமக்கு தெரிந்து பிரியங்காவின் பாடல் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. தமிழகத்தின் அட்டகாசமான பாடகியாக பிரியங்கா வருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பாடலை இங்கு கேட்டு ரசியுங்கள்




நிற்க பைனல் எந்த அணி ஜெயித்தது என தெரியலை. நீங்கள் பார்த்திருந்தால் சொல்லுங்கள் !
***
அண்மை பதிவுகள்:

உணவகம் அறிமுகம்: தேவர் ஹோட்டல் தஞ்சாவூர் 

வீட்டில் போலிஸ் தேடல் (Search Warrant ) - ஏன் எதற்கு எப்படி?

விஸ்வரூபம் - தடை சரியா? மக்கள் கருத்து

Sunday, January 27, 2013

உணவகம் அறிமுகம்: தேவர் ஹோட்டல், தஞ்சாவூர்

ஞ்சையில் இருக்கும் அருமையான ஹோட்டல்களில் ஒன்று தேவர்ஸ் ! எதனால் அந்த பெயர்; வைத்து நடத்துபவர்கள் அந்த சாதியினரா என்ற விஷயமெல்லாம் தெரியாது ! அந்த அரசியலுக்கு போகாமல், வாங்க ஹோட்டலுக்கு போவோம் !

தஞ்சையிலேயே ரெண்டு மூணு பிராஞ்ச் இருந்தாலும் ராஜப்பா நகர் பிராஞ்ச் தான் சிறந்தது ! காலை 8 மணி முதல் 11 வரை அல்லது மாலை 8 டு 10 சென்று பாருங்கள். நூறு பேர் அமர்ந்து சாப்பிட கூடிய இந்த ஹோட்டலில் அமர இடம் இருக்காது. காத்திருந்து தான் அமரணும் !

அண்ணன் வீட்டுக்கு செல்லும்போது குடும்பத்துடன் கோவில் அல்லது வேறு இடம் சென்று விட்டு வந்தால், இங்கு வந்து தான் குடும்பத்துடன் சாப்பிடுவோம்.

டிபன் வகைகளில் பொங்கல் தான் இங்கு ஸ்பெஷல் (விலை: ரூ. 35); சமீபத்தில் காலை ஆறு மணிக்கு இங்கு சாப்பிட சென்றோம். சுட சுட தந்த பொங்கல் "வாரே வா" என்று இருந்தது. அதிகம் நெய் இன்றியும் கூட தொடும்போதும், சாப்பிடும் போதும் ...வழு வழு என வழுக்கி கொண்டு ஓடும் ! முந்திரி நிறைய போட்டு இருந்தாலும் கூட சாப்பிட்டு முடித்து வயிறு ரொம்ப full ஆன மாதிரி இருக்காது. இங்கு பொங்கல் சாப்பிட்டும் மதியம் சரியான நேரத்தில் பசி எடுப்பது ஆச்சரியம் !

சாம்பார் சின்ன வெங்காயம் நிறைய உரித்து முழுசாய் போட்டு அசத்துவார்கள். தேங்காய் சட்னி பல இடங்களில் சற்று புளித்து போன மாதிரி ஆகிடும். இங்கு கொஞ்சம் கொஞ்சமாய் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒரு முறை அரைப்பார்கள் போலும் ! எப்போதும் பிரெஷ் - ஆய் மட்டுமின்றி அட்டகாசமாயும் இருக்கும் தேங்காய் சட்னி !


பூரி சுட சுட எடுத்து வந்து மிக ஹைஜினிக் ஆக போர் ஸ்டெப்ஸ்  மூலம் பரிமாறுவார்கள். As usual...  அருமை !

"எக்சல் அடை" என சொல்லி  இரண்டு  அடை தருவார்கள். இந்த இரு அடையும் ஒன்றாய் சாப்பிட்டால் வேறு ஏதும் சாப்பிட முடியாது. வயிறு நிரம்பி விடும் !

மதிய சாப்பாடு - பல நேரம் இங்கு பார்சல் வாங்கி சாப்பிட்டுள்ளோம். ஒரு பார்சல் சாப்பாடு வாங்கினால் மிக தாராளமாய் இரண்டு பேரால் சாப்பிட முடியும் ! தஞ்சை அண்ணன் வீட்டில் தான் எங்க குடும்பத்தினர் கெட் டுகெதர் (மூன்று சகோதரர், ஒரு சகோதரி குடும்பங்கள்) எப்போதும் நடக்கும். வீட்டில் எத்தனை பேர் உள்ளனர் என கணக்கு எடுத்து வரும் எண்ணை இரண்டால் வகுத்து தான் பார்சல் சாப்பாடு வாங்குவது வழக்கம்.


 வார இறுதியில் இங்கு கிடைக்கும் பருப்பு உருண்டை குழம்பு மிக பிரசித்தம். வீடுகளில் மட்டுமே செய்கிற இந்த பருப்பு உருண்டை குழம்பு மிக அருமையாய் இருக்கும் என்றார் அண்ணன். ஒருமுறை அதையும் ஒரு கை பாக்கணும் !

தஞ்சை செல்லும்போது அவசியம் சாப்பிட்டு பாருங்கள் !

கடை: தேவர் ஹோட்டல்
வகை: சைவம்
முகவரி: ராஜப்பா நகர், மெடிக்கல் காலேஜ் ரோடு, தஞ்சாவூர்
***
அண்மை பதிவு


தொல்லை காட்சி: சிவகார்த்தி- லொள்ளு சபா- சூப்பர் சிங்கர் T -20 பைனல்

Saturday, January 26, 2013

வீட்டில் போலிஸ் சோதனை (Search Warrant) : ஏன் எதற்கு எப்படி?

ரு வீடு அல்லது நிறுவனத்தில் முழுதாய் சோதனை இட வழங்கப்படுவது சோதனை ஆணை (Search Warrant ). இது கீழ்க்காணும் விஷயங்களுக்காக வழங்கப்படலாம்

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாமல் இருக்கும் ஆவணங்கள் அல்லது பொருட்களை கைப்பற்றுவதற்காக

களவுப் பொருட்கள், போலி ஆவணங்கள் போன்றவை இருக்க கூடும் என சந்தேகம் உள்ள வீட்டை சோதனையிட

அரசாங்கம் தடை செய்த வெளியீடுகள் அங்கிருக்கிறது என தகவல் வந்தால் அவற்றை கைப்பற்ற

சட்ட விரோதமாக/ தவறான முறையில் அடைத்து வைத்திருக்கும் நபரை தேடி கண்டு பிடிக்க

****
மேலே சொன்ன காரணங்களுக்காக குறிப்பிட்ட இடத்தை சோதனையிடவும், ஆட்சேபத்திற்குரிய பொருட்களை கைப்பற்றவும் போலிசுக்கு சோதனை ஆணை (Search Warrant) அதிகாரம் அளிக்கிறது.


இத்தகைய ஆணை காண்பிக்கப்பட்ட பின் வீட்டின் உள்ளே நுழைய அனுமதி மறுத்தால், போலிஸ் சட்டபூர்வமாக வீட்டினுள் நுழைய பலாத்காரத்தையும் பயன்படுத்தலாம்

குறிப்பிட்ட நபர் தன் வசம் (உடல் அல்லது உடைக்குள்) சில பொருட்களை மறைத்து வைத்திருக்கிறார் எனில் அவரையும் சோதனை இடலாம். அது பெண்ணாய் இருந்தால் அவரை ஒரு பெண் போலிஸ் தான் சோதனையிட வேண்டும்

போலிஸ் கடைபிடிக்கவேண்டிய நடைமுறை: 

அந்த பகுதியில் வசிக்கும் இரண்டு மரியாதைக்குரிய நபர்களை சோதனையில் கூடவே இருக்கும் படி செய்யவேண்டும்.

அவர்கள் முன்னிலையிலேயே சோதனை நடக்கவேண்டும். கட்டிடடத்தின் உள்ளே சோதனை நடக்கும்போது சாட்சிகள் கட்டிடத்தின் வெளியே நின்றால் சோதனை சட்ட விரோதமானதாகி விடும்.

அந்த இடத்தில கைப்பற்றிய பொருட்கள், அவை எந்த இடத்திலிருந்து கைப்பற்ற பட்டன என்று பட்டியலிடவேண்டும்

அந்த பட்டியலில் சாட்சிகள் கையொப்பம் பெறவேண்டும்

யார் வீடு சோதனை இடப்படுகிறதோ அவரும் உடனிருக்க அனுமதிக்க வேண்டும். அவர் கேட்டு கொண்டால் பொருட்களின் பட்டியல் நகலை அவருக்கு தரவேண்டும்

நீதிமன்றம் அழைத்தால் ஒழிய அந்த இரு சாட்சிகளும் நீதிமன்றம் வந்து சாட்சி அளிக்க தேவை இல்லை

சோதனையிடப்படும் இடத்தில் குடியிருப்பவரின் உரிமைகள்

எந்தவொரு குற்றசாட்டிலும் தன்னை சம்பந்தப்படுத்தக் கூடிய ஆவணத்தை அல்லது பொருளை தர சொல்லி போலிஸ் கட்டாயபடுத்த முடியாது. இப்படி எந்த பொருளையும் சோதனை இட அல்லது கைப்பற்ற நீதிமன்ற ஆணை அவசியமாகிறது

சோதனையிடப்படுபவர் தன் வீட்டை போலிஸ் சோதனை இடும்முன் நீதிமன்ற ஆணையை பார்க்கலாம். அதன் பின்பே போலிஸ் உள்ளே நுழைய அனுமதிக்கலாம். நீதிமன்ற ஆணை இன்றி போலிஸ் உள்ளே நுழைவதை தடுக்க வீட்டாருக்கு உரிமை உண்டு

நீதிமன்றம் வீட்டில் குறிப்பிட்ட சில இடங்களை மட்டும் பரிசோதிக்க அனுமதி தந்திருந்தால், அந்த இடங்களை மட்டும் பார்க்குமாறு கூறலாம்.
***
டிஸ்கி : ACS Institute-விழாவில் நடந்த லட்சுமன் சுருதி இசை நிகழ்ச்சி இன்று ராஜ் டிவி-யில் காலை 10 மணி முதல் 12.30 வரை, குடியரசு தின சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிறது. நண்பர்கள் முடிந்தால் பார்க்கவும். 

Friday, January 25, 2013

விஸ்வரூபம் தடை சரியா? மக்கள் கருத்து

அமுதன், வழக்கறிஞர், ஆலந்தூர்

கமலுக்கு நடப்பது ரொம்ப அநியாயம். ஒரு படைப்பாளியாக அவர் தன் படைப்பை மக்கள் முன் வைக்க தடை செய்வது எந்த விதத்திலும் சரி என தோன்ற வில்லை. அப்புறம் எதற்கு சென்சார் போர்டு என்று ஒரு அமைப்பு இருக்கு? இத்தனைக்கும் அந்த சென்சார் போர்டில் ஒரு இஸ்லாமிய உறுப்பினரும் இருந்திருக்கிறார். ஒரு படத்தை பொறுத்த வரை சென்சார் போர்டு சொல்வது தான் இறுதி என்கிற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு என்ன ஆனது? இத்தனை நாள் விஜய காந்த் தன் படங்களில் காட்டிய போது பேசாமல் இருந்தவர்கள் இப்போது ஏன் கோபப்பட வேண்டும்? கமல் மீது மட்டும் ஏன் எப்போதும் அம்பு எய்யப்படுகிறது? ஒரு இந்துவை தீவிரவாதியாக காட்டினால் தவறில்லையா? அப்போது இந்து அமைப்புகள் எதிர்க்காதா?


ஒரு படைப்பாளி Creative - ஆக இருக்கவே தனி மனநிலை வேண்டும். இத்தனை பிரச்சனைகளையும் சந்தித்த பிறகும் Creative - ஆக இருப்பது பெரும் சிரமம். கமல் என்றைக்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரானவராக அறியப்பட்டதில்லை என்பதையும் நாம் யோசிக்க வேண்டும்.

பதிவர் சீனு (திடங்கொண்டு போராடு)

இன்று காலை காட்சிக்கு 3 டிக்கெட் புக் செய்திருந்தேன். படம் முதல் நாள் முதல் ஷோ பார்க்கணும் என மிக ஆவலாக இருந்தேன். தமிழகத்தில் தடை செய்யப்பட்டது ரொம்ப வருத்தமாக இருக்கு. ஆரோ 3 - D சவுண்ட் டெக்னாலஜியில் வரும் முதல் இந்திய படம் இது தான். உலக அளவில் இதற்கு முன் ரெட் டெயில்ஸ் என்ற ஒரே படம் தான் வந்திருக்கு. இப்படி டெக்னாலஜியை எவ்வளவோ முன்னே கொண்டு போகும் படம் என்பது தான் என் ஆர்வத்துக்கு காரணம்

டிக்கெட் காசு என்ன செய்வாங்கன்னு தெரியலை. தியேட்டருக்கு போன் செய்தால் , போனே எடுக்கலை. மூணு டிக்கெட்டுக்கு ஐநூறு ரூபாய் என்பது எனக்கு பெரிய அளவு பணம் தானே ? இதனால் படம் ரிலீஸ் ஆகாட்டி கூட தியேட்டருக்கு அந்த ஷோ நேரம் போய் என்ன செய்றதுன்னு கேட்கணும். ஹும் !

ரவிகுமார் மடிப்பாக்கம்

டிரைலரில் பார்க்கும் போதே முஸ்லிம்களை சற்று புண்படுத்தும் விதமாக  தான் சித்தரிப்பது சர்வ நிச்சயமாக தெரிகிறது. இருந்தும் கமல் அப்படி இல்லவே இல்லை என மறுத்து வந்தார். இப்போது முஸ்லிம் இயக்கத்தினர் தங்கள் மனம் வருந்தும் படி இருப்பதாக சொல்கிறார்கள். இஸ்லாமியர் பண்டிகையான மிலாடி நபி நாளில் இப்படம் ரிலீஸ் ஆகியிருக்க வேண்டியது.

படம் ரிலீஸ் ஆனபின் போராட்டம், தியேட்டர் ரகளை என்றெல்லாம் ஆகாமல் இந்தஅளவில் நின்று விட்டதே என கமல் உடனடியாக தேவையான காட்சிகளை நீக்கி விட்டு படத்தை ரிலீஸ் செய்ய பார்க்க வேண்டும்.

ரமேஷ், வேளச்சேரி

எனக்கு தெரிந்து சமீபத்தில் டேம் 999 -என கேரளாவில் எடுத்த படம் தான் தமிழகத்தில் திரையிட தடை விதிக்கப்பட்டது. அது கேரளாவின் பக்கம் மட்டுமே பேசுவதாக, தமிழர்கள் உணர்வை காயப்படுத்தும் என்று அந்த நடவடிக்கை எடுத்தனர்.

இவ்வளவு பெரிய படம் வெளிநாட்டில் பல இடங்களில் ரிலீஸ் ஆகிறது. தமிழகத்தில் மட்டும் ரிலீஸ் ஆகலை. மற்ற இடத்தில் ரிலீஸ் ஆனதால், மிக விரைவில் (இன்னும் ஓரிரு நாளில்) DVD -ல் வெளிவந்து விடும். DVD வந்த பின் தமிழகத்தில் ரிலீஸ் ஆனால் அப்புறம் காசு கொடுத்து தியேட்டர் போய் யார் பார்ப்பார்கள்? தமிழகம் தான் இப்படத்துக்கு மிக பெரும் மார்கெட். அது அடி வாங்க போகிறது. கமலுக்கு மிக பெரிய நஷ்டம் காத்திருக்கிறது. இது வருந்த வேண்டிய ஒரு விஷயம்.

பழனியப்பன், குரோம்பேட்டை

நான் படமெல்லாம் அதிகம் பாக்குறதில்லை. கமல் படம் ஏதும் இப்போ வர போகுதா என்ன ?

வீரராகவன், பல்லாவரம்

DTH -க்கு முதலில் பணம் கட்டியிருந்தேன். அதிலும் படம் வரலை. இப்போ சனிக்கிழமைக்கு டிக்கெட் எடுத்திருந்தேன். அதுவும் போச்சு. தியேட்டர் காரங்க பணத்தை ரிட்டன் பண்ணுவாங்கன்னு நினைக்கிறேன். கமலுக்கு உள்ள நஷ்டத்தை ஒப்பிட்டா நம்ம நஷ்டம் கம்மி தான்.

இவ்வளவு பிரச்சனைக்கு பிறகு அடுத்த தடவை தியேட்டர் போய் இந்த படம் பாக்க தயக்கமா தான் இருக்கு.

படம் ரிலீஸ் ஆன பின் ரெண்டு மூணு நாலு இவ்வளவு சர்ச்சை மற்றும் விளம்பரத்தால் ஓடுமே ஒழிய அதுக்குப்புறம் என்ன ஆகும்; கூட்டம் வருமான்னு தெரியலை.

ஒண்ணு மட்டும் நிச்சயம். " இதுக்கு போயி ஏன் இவ்ளோ பிரச்சனை நடந்துச்சு ; அப்படி ஒண்ணும் இல்லியே" ன்னு நிறைய பேர் சொல்லுவாங்க. "சர்ச்சைக்குரிய விஷயம் என்ன இருக்கு " அப்படிங்கற கண்ணோட்டத்தில் தான் பலரும் படம் பாக்க போறாங்க. ஏமாற போறாங்க

கோகுல கிருஷ்ணன், சென்னை

கமலை நினைச்சா ரொம்ப கவலையா இருக்கு. நிச்சயம் கடந்த சில நாளில் அவர் தூங்கிருக்கவே மாட்டார். நம்ம தலைமுறையின் மிக சிறந்த நடிகருக்கு நாம் தரும் பரிசு இது தானா ?

அஸ்கர் அலி, சென்னை

துப்பாக்கி படத்தில் இஸ்லாமிய மதத்தினரை மட்டுமே தீவிரவாதியாய் காட்டியிருந்தனர். அதற்கு எதிர்ப்பு கிளம்பிய பின் அந்த காட்சிகளை நீக்குவதாக படக்குழுவினர் கூறினர். இப்படி சொல்லப்பட்டு ஐந்து நாள் கழித்து தியேட்டரில் இரண்டாம் முறை படம் பார்க்கிறேன் ஒரு காட்சியும் கட் செய்யப்படலை. அதற்கு பிறகேனும் கட் செய்தனரா என தெரியாது. அதை விட மோசம் இணையத்திலும் DVD -லும் இன்றைக்கும் உலவும் துப்பாக்கி படம் அத்தகைய காட்சிகள் அனைத்தையும் கொண்டதாகவே உள்ளது.

இதைவிட இஸ்லாமியர் மனம் வருந்த தக்க காட்சிகளை நீக்கி விட்டு படம் வருவது நல்லது தானே?

இன்னொரு விஷயம். தமிழ் சினிமாவில் இஸ்லாமியர்களை தீவிர வாதிகளாக தான் காட்டுகிறார்கள். எங்கோ ஒரு சிலர் செய்யும் அத்தகைய செயலால் கோடிக்கணக்கான முஸ்லீம்களை சந்தேக கண் கொண்டு பார்ப்பதை, அதனால் அவர்கள் படும் வருத்தத்தை, மை நேம் இஸ் கான் போல தமிழில் ஏன் காட்ட மறுக்கிறார்கள்? தீவிரவாதியாய் காட்டும் படம் 10 வருகிறது எனில் எங்கள் வேதனையை காட்டும் படங்களும் அதே அளவு வரலாம் இல்லையா?

பாலகுமார் வழக்கறிஞர்

இந்த தடை சரியா தவறா என்ற விஷயத்துக்குள் நான் செல்ல விரும்பவில்லை. ஜனவரி 26 அன்று நீதிபதிகள் படத்தை பார்க்கிறார்கள். வெங்கட்ராமன் என்கிற நீதிபதி மிக அறிவாளி . நேர்மையாளர். நிச்சயம் சரியான தீர்ப்பை தருவார்.

கமலின் தசாவதாரம் கூட வழக்குகளில் சிக்கி கொண்டது. அந்த கதையே என்னுடையது என்றார் ஒருவர். இன்னொரு பக்கம் சைவ- வைணவ சண்டை வேறு. அப்போது நீதிமன்றம் தான் கமலுக்கு உதவியது. இம்முறையும் நீதிமன்றம் மூலம் விரைவில் விஸ்வரூபம் ரிலீஸ் ஆகும் என நினைக்கிறேன். ஒன்று அப்படியே ரிலீஸ் ஆகலாம். அல்லது சில கட்- களை பரிந்துரைக்கலாம். தமிழக அரசை பொறுத்த வரை " நாங்கள் தடை செய்தோம்; இப்போது நீதிமன்றம் தான் அனுமதித்துள்ளது " என்ற நிலைப்பாடு எடுக்க கூடும். ஆனால் நீதிமன்ற ஆணைப்படி எந்த Cut-ம் இன்றி படம் வந்து, இஸ்லாமியர்கள் தியேட்டர்களில் எதிர்ப்பை காட்டினால் என்ன ஆகும் என்று தெரிய வில்லை. ஜனவரி 26- பிரச்சனைக்கு ஒரு முடிவு தெரிய வரும்

****
 இவ்விஷயத்தில் உங்கள் கருத்து என்ன? சொல்லுங்கள் !
****
தொடர்புடைய பதிவுகள் :

விஸ்வரூபம் பாடல்களில் எத்தனை ஓகே?

Thursday, January 24, 2013

திருநெல்வேலி, கன்யாகுமரி பயணம் - ஜாலி டிரைலர் + படங்கள்

திருநெல்வேலி, கன்யாகுமரி சென்று வந்து 1 மாதமாகிடுச்சு. அந்த பயணம் பற்றி இன்னும் 1 வரி கூட எழுத ஆரம்பிக்கலை என்ற குற்ற உணர்வு தினம் உறுத்துகிறது (குற்ற உணர்வு எதனால் என்கிறீர்களா? நம்மை ஒரு ப்ளாகர் + எழுத்தாளராக மதித்து, திருநெல்வேலியின் 2 பிசியான டாக்டர்கள், தங்கள் பல்வேறு வேலைகளையும் தள்ளி வைத்து விட்டு, எங்களை எல்லா இடத்துக்கும் அழைத்து சென்று, ஊரின் சிறப்புகளை மிக விரிவாக கூறினார்கள். அவர்களுக்காகவேனும் அவற்றை எழுதியே ஆகணும்)

இப்போதைக்கு டிரைலர். மெயின் பிக்ச்சர் நிச்சயம் விரைவில் துவங்கும் !

அந்த சூரியனைத்தான் நான் கையில புடிச்சேன்..

(கன்யாகுமரி..... சூரிய உதயத்தில்)



திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா - புகைப்படம், வீடியோ - எக்ஸ்க்ளூசிவ் தகவல்கள் + பதிவு


அலோ வள்ளுவரா? ஒரு பேட்டி எடுக்கணும்.. இதோ வந்துக்கிட்டே இருக்கேன்; ஓடிடாதீங்க

 (கமண்ட் நன்றி : வெண்பூ )

இத்தனை அழகிய கடற்கரை இதுவரை கண்டதில்லை. உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை !

பல பாரதிராஜா சினிமாக்களில் இந்த ஊரை பார்த்துள்ளீர்கள். கண்டுபிடிக்க முடியுதா?

பத்மநாபபுரம் அரண்மனை - இதுவரை காணாத Rare வீடியோக்கள் - ஒன்லி அட் வீடுதிரும்பல்
வருஷம் 16- படத்தில் "பழமுதிர் சோலை" என பாடிய படி கார்த்திக் சைக்கிள் ஒட்டுவாரே அந்த பாலம். பேர் தெரியுமா? 


அரசியலுக்கு போற ஐடியா வேறு இருக்கா? அவசியமான பயிற்சி தான் !


இந்த யானைக்கும் சரவணபவன் ஓனருக்கும் என்ன சம்பந்தம் ?
தமிழகத்தின் புகழ் பெற்ற இக்கோவிலை கண்டுபிடிக்க முடிகிறதா? 
                 


காமராஜர் நினைவகத்தில் எடுத்த அரிய புகைப்படங்கள் ....ஏராளமாய் உங்களுக்காக காத்திருக்கு 


நோ பேட்டி வித் திஸ் அம்மா ; டோன்ட் வொர்ரி கய்ஸ் ; ஜஸ்ட் ரிலாக்சிங் !

டாக்டர் வெங்கடப்பன் மற்றும் அவர் மகன் பிரகாஷ் உடன் - திருச்செந்தூர் கோவிலில் (கோவிலில் ஒரு அம்மணி சாமி வந்து ஆடிய ஸ்பெஷல் டான்ஸ் - வீடியோவில் பகிரப்படும் )

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்

மிஸ்டர் விவேக் @ கன்யாகுமரி


அலைகள் மேலே வந்து, வந்து மோத ஒரு ஜாலி பயணம் !


அட்டகாச குளியல் @ திப்பரப்பு
இதன் வீடியோ நிச்சயம் பகிர மாட்டேன். பயம் வேண்டாம் !
மானாட ..............

மயிலாட ........... எங்கே?

கூரை வீடுய்யா; விழுந்துட போகுது !

இது வேறயா?


விரிவான பயணக்கட்டுரை.. விரைவில்...!

Wednesday, January 23, 2013

வானவில் : விஸ்வரூபம் கதை- சச்சின் தெரு- ஆரோகணம்

பார்த்த படம் - ஆரோகணம் 

ஆரோகணம் படம் நன்றாக இருப்பதாக பலரும் சொன்னதால் சமீபத்தில் பார்த்தேன். மிகச் சிறிய அளவு மனநிலை பாதிக்கப்பட்ட (அதுக்கு எதோ ஒரு பேர் சொல்றாங்க; மறந்துடுச்சு) ஒரு பெண்ணின் கதை. டாகுமெண்டரி போல செல்லும் அபாயம் இருப்பதை உணர்ந்து, அவரை குடும்பத்தினர் காணாமல் தேடுவதாக ஒரு புறமும் அவருக்கு விபத்து நடந்தது என மறுபுறமும் (அலை பாயுதே !) சொல்லி செல்கிறார்கள்.

லக்ஷ்மி ராமகிருஷ்ணா இயக்குனரென்பதால் பெண்களின் உணர்வுகள் நன்றாகவே வெளிவந்துள்ளது. முக்கிய பாத்திரத்தில் சரிதா தங்கை விஜி. இவரது பெண்ணாக வருபவர் அழகு. பதிவர் நண்பர் சுரேகாவும் கூட சிறு பாத்திரத்தில் வருவதை காண மகிழ்ச்சியாக இருந்தது.

சற்று முயன்றால் படம் இன்னும் நன்றாக வந்திருக்க கூடும். விரைவில் டிவியில் போடும்போது கண்டுகளியுங்கள் ஆரோகணத்தை !

அய்யாசாமி கார்னர்


அய்யாசாமியின் பால்ய கால நண்பன் நந்து சென்னை வந்தபோது போனில் அழைத்தார். பரஸ்பர நலம் விசாரிப்புகளுக்கு பிறகு அய்யாசாமியின் ப்ளாக் பற்றி பேச்சு செல்ல, சில பதிவுகள் பற்றி தஞ்சாவூர் பாஷையில் வண்டை வண்டையாக திட்ட ஆரம்பித்தார் நந்து. பொறுமையாய் கேட்ட அய்யாசாமி, " ரைட்டு விடு. எப்படி பாத்தாலும் நீ என்னோட வாசகரா போய்ட்டே; நம்ம வாசகர்கள்லே சில பேர் இப்படித்தான், அப்பப்ப நம்மை திட்டுவாங்க. எழுத்தாளர்னு ஆயாச்சுன்னா இதெல்லாம் சகஜம் தானே " என்றதும் எதிர் முனையில் கெட்ட வார்த்தைகள் வலுத்தது.

நிற்க. 35 வருட நண்பர்களான நந்து மற்றும் மோகன் , அய்யாசாமியின் எழுத்துலக பணிகள் பற்றி "விலா"வாரியாய் விசாரிக்க ஒரு மீட்டிங்குக்கு ( கிளப்) கூப்பிட்டிருக்கிறார்கள். "போனாலும் செத்தோம்; போகாட்டியும் செத்தோம்" என புலம்பிக் கொண்டிருக்கிறார் அய்யாசாமி !
இந்த வார ரிலீஸ்: விஸ்வரூபம்


பல தடைகளை தாண்டி இவ்வார வெள்ளியன்று ரிலீஸ் ஆகிறது விஸ்வரூபம். நிறைய சர்ச்சைகள் இருப்பதே படத்துக்கு பெரும் பப்ளிசிட்டி ஆகி விட்டது. முதல் 3 நாள் அனைத்து ஷோ சென்னை தியேட்டர்களில் நிரம்பி விட்டது. ஞாயிறு வரை நீங்கள் டிக்கெட் புக் செய்யலை எனில் மடிப்பாக்கம் குமரன் போன்ற சின்ன தியேட்டர்களில் பார்த்தால் தான் உண்டு !

கமலின் இயக்கம் மேல் எனக்கு சற்று பயம் தான். நம்மை போல ஓரளவு படித்த, நிறைய சினிமா பார்க்கும், ரசிக்கும் விமர்சிக்கும் மக்களுக்கே அவர் இயக்கும் படங்கள் முழுதாய் புரிவதில்லை என்பது என் கருத்து. விஸ்வரூபத்தில் இக்கருத்து பொய்யானால் மகிழ்ச்சியே !

வலைபாயுதேவில் ஷேக் என்பவர் இப்படி எழுதியிருந்தார்: கமல் பெருமையுடன் வழங்கும் என்பதற்கு பதில் பொறுமையுடன் வழங்கும் என போட்டிருக்கலாம் # விஸ்வரூபம் !

அடுத்த சில வரிகள் விஸ்வரூபம் பற்றி இணையத்தில் உலவி வரும் கதை உள்ளது. வேண்டாமெனில் அடுத்த பத்திக்கு தாவி விடவும் !!

அமெரிக்காவில் இருக்கும் கமல் கத்தக் டான்ஸ் மாஸ்டர். அவரை காதலித்து மணக்கிறார் புதுமுகம் பூஜா. இருவருக்கும் சண்டை வர கமலை விட்டு பிரிய காரணம் தேடி ஒரு டிடக்டிவ் வைக்கிறார். கமல் உண்மையில் யார் என்று தெரியும் போது அதிர்ந்து போகிறார்... இப்படி போகுதாம் கதை !

இரு மகிழ்வான செய்திகள்

ஹிந்துஸ்தான் சாம்பர் ஆப் காமர்சின் கார்பரேட் அபேர்ஸ் கமிட்டியின் உறுப்பினராகவும், ACS இன்ஸ்டிடியூட் கிளையான Chennai West Study Circle -க்கு டெபுடி கன்வீனர் (துணை தலைவர்) ஆகவும் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளேன்.

இதில் டெபுடி கன்வீனர் பதவி மிக சுவாரஸ்யமாக உள்ளது, எந்த அணியிலும் வைஸ் கேப்டனுக்கு மிக அதிக பொறுப்பிருக்கும். திட்டமிடல் தொடங்கி ஓடியாடி வேலை செய்வது வரை. என்ஜாயிங் இட் !

இவற்றால் இணையம் பக்கம் உலா வருவது பெருமளவு குறைகிறது. இப்போதெல்லாம் பதிவு போடுவதுடன் இணைய சேவை முடிந்து விடுகிறது.

ஒவ்வொரு நாளும் பாதி நேரம் துறை சார்ந்த நண்பர்களுடன் போனில் அளவளாவ வேண்டியிருக்கிறது. ஓர் மனிதனுக்கு நிறைய நண்பர்கள் எனில், நிறையவே மகிழ்ச்சி என்பது உண்மை தான் ! லைப் இஸ் பியூட்டி புல் !

நிற்க . ACS Institute-விழாவில் நடந்த லட்சுமன் சுருதி இசை நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை ராஜ் டிவி-யில் காலை 10 மணி முதல் 12.30 வரை, குடியரசு தின சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிறது. நண்பர்கள் முடிந்தால் பார்க்கவும்.

சென்னை ஸ்பெஷல் : சச்சின் தெரு 

மடிப்பாக்கத்தில் உள்ள ஒரு தெருவின் பெயர் சச்சின் தெரு ! பல ஊர்கள் சுற்றியிருந்தாலும் தமிழகத்தில் சச்சின் பெயரில் ஒரு தெரு இருப்பதை எங்கள் மடிப்பாக்கத்தில் தான் கண்டேன். இது ஒரு புறம் மகிழ்ச்சி எனினும், இன்னொரு வருத்தமும் உண்டு. இந்த தெருவில் எத்தனை வீடுகள் இருக்கும் என நினைக்கிறீர்கள்? பத்து வீடு கூட இல்லை ! இவ்வளவு சின்ன தெருவுக்கா சச்சின் பெயர் வைக்கணும் என்கிற எண்ணமும் இந்த தெருவை கடக்கும் ஒவ்வொரு முறையும் வந்து போகிறது !

போஸ்டர் கார்னர் 



உடல்நலம் + படித்ததில் பிடித்தது :

வெளியிடங்களில் சூப் சாப்பிடுவதை தவிர்ப்பது நலம் ஏன்?

நல்ல காய்கறிகளில் தான் சூப் தயாரிக்கிறார்களா என நிச்சயம் சொல்ல முடியாது

சூப் சூடாக இருக்க நிறைய சுடவைப்பதால் காய்கறிகளில் உள்ள சத்து குறைகிறது

சூப் திக்காக இருக்க சோள மாவு அதிகம் சேர்ப்பார்கள் உருளை கிழங்கை வேக வைத்து மசித்து கலப்பார்கள். இதனால் உடல் பருமன் கூடும்

அசைவ சூப்பிற்கு பயன்படுத்தும் கறிகள், எலும்புகள் தரமானதாக வாங்குகிறார்களா என்பது தெரியாது

சூப் நல்ல நிறமாக காட்ட கலர்ஸ் சேர்ப்பார்கள் இவை ஆரோக்கியமானதல்ல

ஒரு கப் சூப்பிற்கு இவ்வளவு தான் உப்பு சேர்க்க வேண்டும் என்ற அளவு உண்டு. இதனை பல இடங்களில் பாலோ செய்வதில்லை. அதிக உப்பு உடல் நலனுக்கு கேடு .

*****
அறிவிப்பு: நண்பரின் வீடு சென்னை மேடவாக்கத்தில்  வாடகைக்கு  உள்ளது. 3 பெட் ரூம், தனி கார் பார்க்கிங், அருமையான போர் தண்ணீர் மற்றும் பஞ்சாயத்து தண்ணீர் உள்ள வீடு. பேருந்து நிறுத்தத்தில் இருந்து 5 நிமிட நடையில் உள்ளது. தேவைப்படுபவர்கள் 90030 12871 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளவும் 

Tuesday, January 22, 2013

தஞ்சை விவசாயி வாழ்க்கை -பேட்டி -படங்கள்

மீபமாய் தஞ்சைக்கு மிக அடிக்கடி செல்ல நேர்கிறது. உடல் நலமில்லாத அம்மா, உறவினர் விழாக்கள் என தஞ்சை மட்டுமின்றி மன்னார்குடி, வடுவூர், கோட்டூர் என பல ஊர்களுக்கு கடந்த ஒரு மாதத்தில் பயணம் செய்துள்ளேன் . டிசம்பர், ஜனவரி மாதங்களில் வயல்கள் சற்று பசுமையாய், செழிப்பாய் இருப்பதாய்த் தான் தோன்றியது. ஆனால் கோட்டூர் அருகே உள்ள ஊரில் விவசாயி ஒருவரிடம் பேசியபோது விவசாயம் பற்றி மிக வருத்தத்துடன் பேசினார். அவர்கள் பேசியதில் இருந்து சில பகுதிகள் :



என்னோட பேர் ராமமூர்த்தி. நாப்பது வருஷமா விவசாயம் பண்றேன் 

தஞ்சை, நாகை அதை சுற்றியுள்ள இடங்கள் விவசாயத்துக்குன்னு புகழ் பெற்ற இடங்களா ஒரு காலத்தில் இருந்தது இங்கு மூன்று போகம் அறுவடை செய்த காலம் ஒன்று உண்டு. அப்புறம் அது இரண்டு போகம் ஆச்சு. இப்போ சம்பான்னு ஒரு போகம் தான் அறுவடை நடக்குது. ("போகம் என்றால் என்ன" என்று தெரியாதவர்களுக்கு மட்டும் : ஒரு முறை நடவு நட்டு, நான்கு மாதம் கழித்து அறுவடை செய்வது தான் ஒரு போகம் . இப்படி வருடத்துக்கு மூன்று முறை அமோகமாய் அறுவடை செய்த நிலை மாறி, வருடத்துக்கு ஒரே முறை தான் அறுவடை செய்கிறார்களாம் பல விவசாயிகள் !)

சில பேர் இப்போ ரெண்டாம் போகமா உளுந்து போடுறாங்க.. உளுந்து போடணும்னா, மார்கழி ஆரம்பத்தில் (டிசம்பர் இறுதிக்குள் ) நெல் அறுவடை முடிச்சிட்டு, மார்கழி கடைசிக்குள் போட்டா தான் உண்டு. இல்லாட்டி சரியா வராது. தை மாசம் நெல் அறுவடை செய்பவர்கள் உளுந்து போட முடியாது.

" இப்போதெல்லாம் ஆள் வச்சு வேலை வாங்க முடியலை. ஒரு ஆள் சம்பளம் குறைஞ்சது 300 ரூபா ஆகுது. நாள் முழுசும் வேலையும் இருக்காது. ஆனா இந்த அளவாவது பணம் குடுத்தா தான் அவங்களால் வரமுடியும். ஏன்னா ஒரு நாளைக்கு இங்கு வந்துட்டா அப்புறம் மதியத்துக்கு மேலே வேற எங்கும் அவங்க வேலைக்கு போக முடியாது இல்லையா? "

இப்போ எல்லாம் எல்லா வேலைக்கும் மெஷின் வந்துடுச்சு. விதையை தெளிக்க மட்டும் ஒரு ஆள் இருந்தா போதும். அதை முழுக்க நிரவி விட மெஷின் இருக்கு. அப்புறம் களை இருந்தா எடுக்க ஆள் வேணும். அவ்ளோ தான். உரம் தூவுறது எப்பவுமே ஒரு ஆள் செய்ற வேலை தான். அறுவடைக்கே மெஷின் வந்துடுச்சு. கதிரை அறுத்து நெல்லை தனியா மெஷின் பிரிச்சு கொடுத்துடும்.

ஆளுங்களை வச்சு வேலை வாங்குறதை விட மெஷினில் வேலையை முடிக்கிறது ஈசியாவும், செலவு கம்மியாவும் ஆகுது . இதனால் மனுஷனை வச்சு வேலை வாங்கறது ரொம்ப குறைஞ்சிடுச்சு. விவசாய வேலையை மட்டுமே நம்பி அவங்களால் வருஷம் முழுக்க இருக்க முடியாது. இப்ப விவசாயமே நாலஞ்சு மாதம் மட்டும் தானே நடக்குது ! அதனால் பல பேரு மெட்ராசு, திருப்பூர் இப்படி ஊர்களுக்கு வேலைக்கு போயிடுறாங்க. சொந்த நிலமும் இல்லாம, இங்கேயே விவசாய வேலை மட்டும் பார்த்துக்கிட்டு இருக்கிற ஆட்கள் மிக குறைவு தான்
அந்த ஊரில் உள்ள சிறு பாலம் மற்றும் ஆறு
"எல்லா நேரமும் நெல் மட்டும் தான் பயிர் செய்யணுமா? கரும்பு போடக்கூடாதா? " என்று கேட்க, " இங்கு களிமண் பூமியாக இருப்பதால் கரும்பு அவ்வளவு நல்லா வராது. வந்தால் கூட, அதை விற்பதற்குள் போதும் போதும்னு ஆகிடும். ஏதாவது சர்க்கரை ஆலையிடம் தான் கரும்பை வாங்கி கொள்ள சொல்லி கேட்கணும். அவர்கள் கட்டிங் ஆர்டர் தரணும் (கரும்பை எப்போது வெட்டலாம் என்கிற ஆர்டர் சர்க்கரை ஆலை காரர்கள் தான் சொல்வார்களாம் ! இது தான் கட்டிங் ஆர்டர் ) 

கமிஷன் வாங்கணும்குற எண்ணத்தில் வேணும்னு கட்டிங் ஆர்டர் தாமதம் பண்ணுவாங்க. இதெல்லாம் ஒரு முறை பார்த்தா வெறுத்து போயி அப்புறம் கரும்பு சாகுபடி பண்ணவே தோணாது “

"நெல் சாகுபடி பண்ற வங்களை பொறுத்தவரை, கொஞ்சம் நிலம் இருக்கவங்க பாடு தான் ரொம்ப கஷ்டம். அஞ்சு, பத்து ஏக்கர் வெவ்வேறு இடத்தில் இருந்தா ஒரு இடத்தில் சரியா விளையாட்டியும், தண்ணி இல்லாட்டியும் இன்னொரு இடத்தில் நல்லா விளைஞ்சிடும் அதனால் நஷ்டம் வராம தப்பிச்சுடுவாங்க"

"அறுவடை முடிஞ்சவுடன் அவங்கவங்க வீட்டுக்கு தேவையான அளவு நெல்லை எடுத்துக்கிட்டு, மீதியை அரசாங்கமே அதுக்குன்னு வச்சிருக்கும் கடை மூலமா விப்போம். நெல் மூட்டை வரிசையா அங்கு அடுக்கி கிடக்கும். நெல்லில் ஈரம் எப்படி இருக்குன்னு பாத்துட்டு அதுக்கு தகுந்த படி விலை நிர்ணயம் செய்யும். வேண்டாத ஆளு அல்லது அப்பாவி மனுஷன்னா அதிக ஈரம்னு சொல்லி கம்மி விலைக்கு எடுத்துக்குவாங்க"
நடுவில் சாலை.. இருபுறமும் கண்ணுக்கெட்டிய தூரம் வயல்வெளிகள் 
"சாதாரண விவசாயிக்கு மிக முக்கிய பிரச்சனை ஆற்றில் தண்ணி இல்லாதது தான். நிறைய விவசாயிகள் ஆத்து நீரை தான் நம்பியிருக்கோம். நிறைய நிலம் வச்சிருக்க ஆளுங்க தான் போர்வெல் போட முடியும். அதுக்கு அம்பதாயிரம் பணம் செலவாகிடும். சாதாரண ஆட்களால் இவ்ளோ செலவு பண்ணி போர்வெல் போட முடியாது. "

"மேட்டூர் அணை எப்ப திறப்பாங்கன்னு பொறுத்து தான் நாங்க வயலுக்கு தண்ணி பாய்ச்ச முடியும். இப்ப கூட நாலு நாளில் மேட்டர் அணை திறப்பாங்கன்னு ரேடியோ நியூசில் சொன்னாங்க. கதிர் நல்லா வர்ற வரை ஒவ்வொரு ஸ்டேஜிலும் பயிருக்கு நல்லா தண்ணி தேவை".

"மழையும் இப்போல்லாம் ரொம்ப குறைஞ்சுடுச்சு அதுவும் இந்த வருஷம் மிக மோசம். மழை அதிகம் இருந்தா கூட பயிர் தப்பிச்சுக்கும். சாயாது. ரொம்ப பெரிய புயலா இருந்தா தான் பயிர் சாயும். ஆனா தண்ணி இல்லாம படுற கஷ்டம் தான் பெரும் கஷ்டமா இருக்கு. யாரை குத்தம் சொல்றது ? அரசாங்கத்து கிட்டே தண்ணி இல்லை. இருந்தா திறந்து விடுவாங்க. காவிரியில் நமக்கு வேண்டிய தண்ணியை கர்நாடகா காரங்க திறந்து விட மாட்டேங்கு ங்குறாங்க. அதை விட்டா கூட இவ்ளோ பிரச்சனை இருக்காது"

வெறும் விவசாயத்தை நம்பி இருக்க முடியாதுன்னு ஆகிடுச்சு. இதோ இவர் இப்போ ஒரு பெட்டி கடை வச்சிருக்கார் நான் கோவில் வேலை செய்றேன்

விவசாயத்தில் லாபம் இல்லைன்னு தெரிஞ்சு தான் எல்லாரும் நிலத்தை பிளாட் போட்டு விக்க ஆரம்பிச்சிட்டாங்க. இப்படியே போனா பெரிய ஆளுங்க மட்டும் தான் நம்ம தமிழ் நாட்டில் விவசாயம் செய்வாங்க. ஏற்கனவே அரிசி ஆந்திரா மாதிரி பல மாநிலத்தில் இருந்து வருது இது இன்னும் அதிகம் ஆகிடும்

"அடுத்தடுத்த தலைமுறையில் யாரும் விவசாயம் செய்யப்போறதில்லை மத்த தொழில் மாதிரி இல்லையே இது. வேற சின்ன தொழில் அழிஞ்சா, அது அழிஞ்சதுன்னு வருத்தம் மட்டும் தான் இருக்கும் ஆனா விவசாயம் அழிஞ்சா அது எல்லாரையும் தானே பாதிக்கும் ? "

என்று கேள்வியுடனே தன் பேச்சை முடித்தார்.

அவரிடம் பேசி முடித்து விட்டு திரும்ப வரும்போது நெல்லை ஜெயந்தாவின் இந்த கவிதை திரும்ப திரும்ப மனதில் ஓடி கொண்டிருந்தது.

தஞ்சையில் நஞ்சை உண்டு
சாகுபடி ஆனது

தஞ்சையில் நஞ்சை உண்டு
சாகும்படி ஆனது !


******
அதீதம் ஜனவரி 15, 2013 பொங்கல் சிறப்பிதழில் வெளியான கட்டுரை 

Monday, January 21, 2013

அலெக்ஸ் பாண்டியன் எனும் காவியம் - விமர்சனம்

ன்ன தான் நண்பர்கள் அலெக்ஸ் பாண்டியனை நாசம் செய்தாலும், ரெண்டு படத்துக்கு முன் வரை பிடித்த கார்த்தி, இன்னமும் பிடிக்கும் சந்தானம் மற்றும் அனுஷ்கா இருப்பதால் படத்தை பார்க்காமல் இருக்க முடியலை.

பழைய படங்களில் எடுத்தவுடனே பாட்டு போடுவார்கள். இந்த படத்தில் எடுத்தவுடனே சண்டை...அதுக்கு நடுவிலேயே டைட்டில் போடுகிறார்கள். சண்டைன்னா சண்டை உங்க வீட்டு சண்டை, எங்க வீட்டு சண்டை இல்ல... உலக சண்டை ! நூறு கிலோ மீட்டர் வேகத்தில் போகும் ரயிலில் பாலம் மேலிருந்து குதிப்பது, ரயில்வே டிராக்கில் அஞ்சு நிமிஷம் சண்டை போட்டு விட்டு, பின் பறக்கும் ரயிலில் ஓடி வந்து ஏறி கொள்வது, காற்றில் அரை கிலோ மீட்டர் பறந்து போய் வில்லன்களை அடிப்பது என மயிர் கூச்செறிய வைக்கிறார்கள்.


நிற்க. கார்த்தியை பார்த்த அடுத்த நொடியே உலக பெண்கள் அனைவரும் அவர் பின் ஹிப்னாடிசம் ஆன மாதிரி அலைகிறார்கள் என சகுனியில் காட்டியதை இங்கும் தொடர்கிறார்கள். இதை விரைவில் நிறுத்தி கொள்வது கார்த்திக்கு நல்லது !

3 அக்கா தங்கச்சிகளாம் ..அவங்க கார்த்தியை தங்கள் வீட்டிலேயே வச்சிக்கிட்டு 24 மணி நேரமும் வச்ச கண் வாங்காம பாப்பாங்களாம்; வரிசையில் நின்னு கார்த்தியோடு நெஞ்சோடு நெஞ்சு மோதிப்பாங்களாம்.  கார்த்தி வாயில் வாய் வச்சு ஊதுவாங்களாம்.... எந்த ஊரிலேயா பொண்ணுங்க இப்படி நடந்துக்குறாங்க.. இதையெல்லாம் பெண்கள் அமைப்பு எதிர்க்க மாட்டாங்களா?

ரேணிகுண்டா படத்தில் அழகான ஹீரோயினாக வலம் வந்த சனுஷாவை தங்கைகளில் ஒருவராக்கி ஜொள்ளு விட வைத்திருக்கிறார்கள். கொடுமையான ரோல் செய்ய, ஏன் தான் சனுஷா ஒப்பு கொண்டாரோ தெரியலை.

படத்தில் அடுத்து என்ன நடக்க போகிறது என பத்து வயது சிறுவன் கூட சொல்லலாம். அப்படியிருக்கு திரைக்கதை ! ஓடும் காரை கார்த்தி, ஒரு அரிவாள் வைத்து தூக்கி எறிவது காமெடியின் உச்சம்.

தொடர்ந்து எப்பவும் ஜெயிலில் இருக்கிறார் ஹீரோ. நடு நடுவே தான் வெளியில் வருகிறார்; இப்படிப்பட்டவர், முதல்வரின் மகளான தன்னை கடத்தும் போது, அவரையே லவ் பண்ணிடுறார் அனுஷ்கா. நல்லா இருங்கடே !

தலைவி கூட சில கிளு கிளுப்பான காட்சியில் மனோபாலா நடிக்கும்போது நமக்கு ஸ்டமக் - பர்ன் ஆகிறது.

மனோபாலா காமெடி பார்ட் சிறு ஆறுதல். போலவே சந்தானம் சற்று டபிள் மீனிங்கில் ஆங்காங்கு பேசினாலும் ஓரளவு சிரிக்க வைக்கிறார்

தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையில் தக்க தையா பாட்டு கேட்க ஜாலியாக இருந்தது (இடை இடையே சந்தானம் காமெடி வசனம் வரும் பாட்டு இது) ஆனால் படத்தோடு பார்க்கும்போது ஏற்கனவே சிக்கி சின்னாபின்னமான நிலையில்  எந்த பாட்டும் ரசிக்க முடியாமல் போகிறது.

இயக்குனர் சுராஜ் இதுவரை எடுத்த படங்களில் மருதமலை தான் வடிவேலுவின் போலிஸ் காமெடியால் இன்றும் நினைவில் நிற்கிறது. மற்றபடி மாப்பிள்ளை போன்ற படங்களில் மரண மொக்கை போட்டவர் அவர். கார்த்தி எப்படித்தான் தனது சொந்த படத்தை நம்பி கொடுத்தாரோ !

படம் ஜனவரி 11- பொங்கலுக்கு முன் ரிலீஸ் ஆனபோது அடுத்த 4 நாளில் செமையா கல்லா கட்டிடுவாங்க என நினைத்தேன். ஆனால் நம்ம மக்கள் எவ்வளவு விவரம் பாருங்க. முதல் 2 நாளிலேயே இணையம் மற்றும் மவுத் டாக் மூலம் படம் பற்றிய விபரம் தெரிந்துவிட, மூன்றாவது - நாள் டிக்கெட்டுகள் அனைத்து தியேட்டரிலும் காலியாக இருந்தது !

கார்த்தி - நீங்க ஆக்ஷன் ஹீரோ கனவை மூட்டை கட்டி விட்டு நல்ல ஸ்க்ரிப்ட்டை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டிய காலம் வந்து விட்டது.

இந்த படத்தை முழுமையா பார்த்தவர்கள் தமிழகத்தில் அனேகமா இல்லை என சொல்லப்படுகிறது. படம் போட்ட 10 நிமிடத்திலிருந்து, இடைவேளை என பல நேரங்களில் எகிறி ஓடியவர்களே அதிகமாம் ! படம் முடிந்த பின் வரும் பேட் பாய் பாட்டு வரை விடாமல் பார்த்தவன் என்கிற முறையில் - எனது மன தைரியத்தை பாராட்டி ஏதாவது பரிசு குடுக்க முடியுமா டைரக்டர் சார்?

Saturday, January 19, 2013

புத்தக சந்தையில் என்ன புக் வாங்கலாம்? பதிவர்கள் பரிந்துரைக்கும் லிஸ்ட்

புத்தக சந்தையில் நமது பதிவர்கள் என்ன புத்தகங்கள் வாங்கினர் என்கிற லிஸ்ட் இது. அவரவர் வாசிப்பு மற்றும் ரசனை குறித்து இது பெரிதும் மாறும் என்றாலும், என்ன புத்தகம் வாங்கலாம் என உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும் என்பதால் இங்கு பகிர்கிறேன்

கூகிள் பிளஸ், தனி மெயில், சென்ற பதிவின் பின்னோட்டம் ஆகியவற்றில் வந்த லிஸ்ட் இது.


பதிவர் ராமசாமி கண்ணன்

நகஸலைட் அஜிதாவின் நினைவுக்குறிப்புகள் - தமிழில் குளச்சல் யூசுப்
ஸ்ரீ சக்ரபுரி - சுவாமி ஒம்கார்
இலட்சுமணப் பெருமாள் கதைகள்
புதிய அறையின் சித்திரம் - மண்குதிரை
உறுமீன்களற்ற நதி - இசை
மதுவாகினி - ந.பெரியசாமி
கடல் நினைவு - தூரன் குணா
இல்லாத மற்றொன்று - பூமா ஈஸ்வரமூர்த்தி
பறவைக் கோணம் - எஸ்.ரா
ஆறாவடு - ஜெயந்தன்
பறவைகளும் சிறகுகளும் - பாஸ்கர் சக்தி
தற்காலச் சிறந்த கவிதைகள் - தொகுத்தது விக்ரமாதித்யன்
சூடிய பூ சுடற்க - நாஞ்சில் நாடன்
என் பெயர் ஜிப்சி - நக்கிரன்
21ஆம் நூற்றாண்டு சிறுகதைகள் - கீரனூர் ஜாகிர் ராஜா
சாயாவனம் - சா. கந்தசாமி
வெக்கை - பூமணி
மீனைப்போல் இருக்கின்ற மீன் - கல்யாண்ஜி
விசாரணைக் கமிஷன் - சா.கந்தசாமி
பூரணி பொற்கலை - கண்மணி குணசேகரன்
சுய விமர்சனம் - கீரனூர் ஜாகிர் ராஜா
பீக்கதைகள் - பெருமாள் முருகன்
மீனுக்குள் கடல் - பாதசாரி
மகாமுனி - ரமேஷ் பிரேம்
பால்ய காலம் - சிறுவர் சிறுகதைகள் தொகுப்பு கீரனூர் ஜாகிர் ராஜா
செடல் - இமையம்
யுரேகா என்றொரு நகரம் - எம்.ஜி.சுரேஷ்
அட்லாண்டிக் மனிதனும் மற்றும் சிலரும் - ,,
எம்.ஜி.சுரேஷ் கட்டுரைகள்
சிலந்தி - எம்ஜி.சுரேஷ்
நடுகை - வண்ணதாசன்
அபாயம் - ஜோஷ் வண்டேலூ
எரியும் பனிக்காடு
பின் நவினத்துவம் என்றால் என்ன - எம்.ஜி.சுரேஷ்
கறுப்பு வெள்ளைக் கதைகள் - ரமேஷ் பிரேம்
நான் ஆத்மநாம் பேசுகிறேன் - ராணி திலக்
வலசை - நேசமித்ரன் , கார்த்திகை பாண்டியன்

 பதிவர் ஸ்ரீராம் (நம்ம ப்ளாக் )

1001 இரவுகள்,
மோகமுள்,
தி. ஜா சிறுகதைத் தொகுப்பு முதல் பாகம்,
முத்து காமிக்ஸ்,
வாலியின் நானும் இந்த நூற்றாண்டும்,
ஸ்ரீ வைஷ்ணவம்,
மௌனத்தின் அலறல்
காலச்சக்கரம்,
ரங்கராட்டினம்...

*****
பதிவர் மெட்ராஸ் பவன் சிவகுமார்

வட்டியும் முதலும் - ராஜூமுருகன்
(தோழர்) ஜீவா சில நினைவுகள் - மா.பாலசுப்ரமணியம்
தமிழர் உணவு - பக்தவத்சல பாரதி
பிரதாப முதலியார் சரித்திரம் - மாயூரம் வேதநாயகம் பிள்ளை
அரவாணிகள் - மகாராசன்
வாத்யார் (எம்.ஜி.ஆர்) - ஆர். முத்துகுமார்
கணிதமேதை ராமானுஜன் - ரகமி
மாதந்திர சினிமா இதழ்கள்:
காட்சிப்பிழை, அந்திமழை.

பதிவர் எறும்பு (ராஜகோபால்)

புலிநகக்கொன்றை - பி .ஏ.கிருஷ்ணன்
மீனாட்சி புத்தக நிலையத்தில் பழைய சுஜாதா புத்தகங்கள்
எட்டுத்திக்கும் மத யானை - நாஞ்சில் நாடன்
Aghora 1 : At the left hand of god by Robert E. Svoboda
Aghora 2 : Kundalaini by robert E Svoboda
Aghora 3 : Law of karma by robert E Svoboda


பதிவர் பபாஷா (பலாபட்டறை  ஷங்கர்)

பாதையில்லா பயணம் - பிரமிள் (வம்சி)
மூன்றாம் பிறை வாழ்வனுபவங்கள் - மம்மூட்டி (வம்சி)
கொல்லனின் ஆறு பெண் மக்கள் - கோணங்கி (வம்சி)
ரப்பர் - ஜெயமோகன் (கவிதா)
நவீன வேளாண்மை (விவசாய இதழ்)
இவர்கள் - நகுலன் (காவ்யா)
வாக்குமூலம் - நகுலன் (காவ்யா)
நாய்கள் - நகுலன் (காவ்யா)
கண்ணாடியாகும் கண்கள் - (காவ்யா)
சமவெளி - வண்ணதாசன் (சந்தியா) இராமசாமி கண்ணனுடையது :)
ஸ்ரீசக்ரபுரி - ஸ்வாமி ஓம்கார் (அகநாழிகை)
தாசன் கடை வழியாக அவர் செல்வதில்லை - வண்ணநிலவன் (நற்றிணை)
ஈராறுகால்கொண்டெழும் புரவி - ஜெயமோகன் (சொல் புதிது)

பதிவர் Bogan R

கோபி கிருஷ்ணன் முழுத் தொகுப்பு
முகலாயப் பேரரசில் பெர்நியரின் பயணங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பில் உலக இலக்கியம்
அபினவகுப்தர்-ஜி டி தேஷ்பாண்டே
சொல் என்றொரு சொல் -ரமேஷ் பிரேம்
ஜீவன் லீலா -காகா காலேல்கர்
வடக்கே முறி அலிமா -கீரனூர் ஜாகிர் ராஜா
தியான தாரா -பிரமிள்
எனது பயணங்களும் மீள் நினைவுகளும் -வில்லியம் ச்லீமேன்
இந்து ஞானம்-ஷிதி மோகன் சென் (படித்து முடித்துவிட்டேன் )
இந்து மதம்-குரு நித்ய சைதன்ய யதி
முக்குவர்-வறீதையா கான்ஸ்டாண்டின்
 நில அதிர்வுமாநிகளே நன்றி
சிதைவுகளின் ஒழுங்கமைவு -ரமேஷ் பிரேம்
ஆரோக்கிய நிகேதனம்
சுரேந்திரநாத் சென்
செடல் -இமயம்
ஹிந்திச் சிறுகதைகள் தொகுப்பு
நக்சலைட் அஜிதாவின் நினைவுக் குறிப்புகள்
ஞாயிற்றுக் கிழமை மதியம் உறங்கும் பூனை
வலசை
திசை எட்டும் பழைய இதழ்கள்
கங்கை கொண்ட சோழன் -பாலகுமாரன்
முத்து காமிக்ஸ் மற்றும் லயன் காமிக்ஸ் இதழ்கள்
Fifty shades of Grey-E.L.James
The adventures of rusty-Ruskin Bond
****
அருண்மொழித்தேவன்

நாடோடித்தடம் - ராஜ சுந்தரராஜன் - தமிழினி- 250/-
எல்லா நாளும் கார்த்திகை - பவா செல்லதுரை - வம்சி - 130/-
எரியும் பனிக்காடு - பி.எச்.டேனியல் - தமிழில்.இரா.முருகவேள் - விடியல் - 150/-
பஞ்சாபி சிறுகதைகள் - சாகித்திய அக்காதமி
ஹிந்தி சிறுகதைகள் - சாகித்திய அக்காதமி
CIA - என்.சொக்கன் - மதி - 100
வெள்ளெருக்கு - கண்மணி குணசேகரன் - தமிழினி - 90/-
திருக்குர்ஆன் - தமிழில் - 50/-
அழியாத கோலங்கள் - தமிழில் தலை சிறந்த காதல் சிறுகதைகள் - தொகுப்பு- கீரணூர் ஜாகீர் ராஜா - 200
இரவு - ஜெயமோகன் - தமிழினி - 140/-
கன்னட சிறுகதைகள் - - சாகித்திய அக்காதமி
மண் பொம்மை - சாகித்திய அக்காதமி
எனது நினைவலைகள் - - சாகித்திய அக்காதமி
ஒரு வழிப்பறி கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமுலம் - பிலிப் - தமிழில் - போப்பு - 550/-
திசையெல்லாம் நெருஞ்சி - சு. வேணுகோபால் - தமிழினி - 50/-
மீனுக்குள் கடல் - பாதசாரி - தமிழினி - 15/-
ஆராவடு - சயந்தன் - தமிழினி - 120/-
அஞ்சலை - கண்மணி குணசேகரன் - தமிழினி -230/-
***
ராஜ் முத்து குமார்

மாற்று வெளியில் - சித்திரக் கதை இதழ்
பணம் - KRP செந்தில் குமார் - டிஸ்க்கவெரியில்
பனி மண்டலக் கோட்டை (பழைய காமிக்ஸ் புக்) - ஸ்டால் 300 இல்.
Activity book - சிங்க ரோஹிணியில்
Fun with Activity CD- பெபிள்ஸ்
முத்து காமிக் ஸ் (ஸ்டால் 343)

பதிவர் சீனு   , திடங்கொண்டு போராடு

தலைமைச் செயலகம் - சுஜாதா
திரைக் கதை எழுதுவது எப்படி - சுஜாதா
அல்வா - பினாத்தல் சுரேஷ்
மதராசபட்டினம் டூ சென்னை - பார்த்திபன்
வாஷிங்டனில் திருமணம் சாவி
இல்லாதவன் ஜெயகாந்தன்
பத்திரிக்கைக்கு எழுதுவது எப்படி - லோகநாயகி
பொன்னி - ராம கிருஷ்ணன்
ஜெயகாந்தன் சிறுகதைகள் ஒரு ஆய்வு
இருண்ட வீடு பாரதிதாசன்
புதுமைப் பித்தன் கட்டுரைகள்
பிரபல கொலை வழக்குகள்
 பேய் அமானுஷ்ய கதைகள் அடங்கிய புத்தகம்
 சினிமா வியாபாரம் - கேபிள் சங்கர்
 கண்ணதாசன் பாடல் பிறந்த கதை
 கண்ணதாசன் வாழ்க்கை வரலாறு
****
பதிவர் லதாமகன்

என் பெயர் ஜிப்சி - நக்கீரன்
வனசாட்சி - தமிழ் மகன்
ஒரு லோட்டா ரத்தம் - பேயோன்
கூகை - சோ- தர்மன்
வெள்ளி சனி ஞாயிறு திங்கள் செவ்வாய் வியாழன் - பெருமாள்முருகன்
அதீதனின் இதிகாசம் - பிரேம் ரமேஷ்
மீனின் சிறகுகள் - தஞ்சை பிரகாஷ்
மகாமுனி - பிரேம் ரமேஷ்
சாராயக்கடை - ரமேஷ் பிரேதன்
மதுக்குவளை மலர் - வே.பாபு
கிருஷ்ண நிழல் - முகுந்த் நாகராஜன்
கோணல் பக்கங்கள் - 1,2,3 - சாரு நிவேதிதா
மழைமான் - எஸ்.ரா
தோல் - டி.செல்வராஜ்
க - ராபர்ட் கலாஸ்ஸோ
மீனைப்போலவே இருக்கிற மீன் - கல்யாண்ஜி
உருள்பெருந்தேர் - கலாப்பிரியா
தமிழ் நாடு பயணக்கட்டுரைகள் - ஏகே செட்டியார்
சின்மயி விவகாரம் மறுபக்கத்தின் குரல் - மாமல்லன்
கரமுண்டார் வீடு - தஞ்சை பிரகாஷ்
சம்பத் கதைகள் தொகுதி 1 - விருட்சம் வெளியீடு
ஒரு வெயில் நேரம் - நர்சீம்
காக்கைகள் கொத்தும் தலைக்குரியவன் - வம்சி பதிப்பகம்
இருபது வெள்ளைக்காரர்கள் - அய்யனார் விஸ்வநாத்
ஆளண்டா பட்சி - பெருமாள் முருகன்
மீன்கள் துள்ளும் நிசி - நிலாரசிகன்
நினைவுகள் சுமந்தலையும் யாத்ரீகன் - அபி.மதியழகன்
மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் - கதிர்பாரதி
நாடோடித் தடம் - ராஜ சுந்தரராஜன்
கோபி கிருஷ்ணன் படைப்புகள் - நற்றிணை பதிப்பகம்

****
உங்கள் லிஸ்ட்டை நீங்க பின்னூட்டத்தில் சொல்லலாம் !

****
அண்மை பதிவுகள்:

சென்னை புக் பேர் 2013 : பெஸ்ட் டீல்ஸ் 

கண்ணா லட்டு தின்ன ஆசையா - Laugh Riot - விமர்சனம் 

சமர் விமர்சனம் 

சென்னை புத்தக கண்காட்சி: பிளஸ், மைனஸ் - ஸ்டால் & நிகழ்ச்சி விபரங்கள்

Friday, January 18, 2013

பாண்டி- மியூசியம், படகு சவாரி, காகித தொழிற்சாலை அனுபவம் -நிறைவு பகுதி

சுண்ணாம்பாறு படகு குழுமம்

பாண்டியிலிருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் சுண்ணாம்பாறு படகு துறைக்கு ஒரு நாள் டூரில் அழைத்து செல்கிறார்கள். பேக் வாட்டர் படகு சவாரி எப்படி இருக்கும் என அறிய அவசியம் இதில் பயணிக்கலாம்.

இருபது நிமிட பயணம் எனில் நபருக்கு ஐம்பது ரூபாய். அதுவே நாற்பது நிமிடமெனில் நூறு ரூபாய் - ஆனால் இதில் அதிக தூரம் பயணிக்கலாம். மேலும் நடுவில் இருக்கும் மணல் திட்டில் இறக்கி விட்டு, அங்கு சற்று பேசி அலைகளில் கால் நனைத்து விட்டு பின் மறுபடி வரலாம். நாங்கள் ஒரு நாள் டூர் என்பதால், பல இடங்கள் கவர் செய்யணும் என - அனைவரும் இருபது நிமிட பயணம் தான் சென்றோம்

படகு பயணம் பல வித மனிதர்களை அவர்களுக்குள் இருக்கும் குழந்தைத்தனத்தை காட்டுகிறது. ஓர சீட்டுக்கு போட்டியிடும் மனிதர்கள், மனைவியை எப்போதும் போட்டோ பிடிக்கும் ஹனி மூன் கணவன், இறுகிய முகத்துடன் போட்டை இயக்கம் டிரைவர்... இப்படி..
 

கடலுக்கு நடுவே ஒரு பறவை நீரில் தலையை அமிழ்த்தி , அமிழ்த்தி வெளியே வந்த காட்சி அவ்வளவு அழகாய் இருந்தது. என்னை மறந்து ரசித்து கொண்டிருந்தேன். காமிரா கையிலிருப்பது சற்று தாமதமாய் உறைக்க , போட்டோ எடுக்கும் முன் போட்டும் நகர்ந்து விட்டது. பறவையும் காணும்.

என்னுடன் பஸ்சிலும் அந்த போட்டிலும் வந்த பத்து பேர் கேரளாவில் இருந்து வந்தவர்கள். சென்ட்ரல் எக்சைஸ் துறையில் இருப்போர் ஒரு டிரைனிங்கிற்காக வந்ததாகவும் , அப்படியே ஒரு நாள் இங்கு சுற்றி பார்ப்பதாகவும் சொன்னார்கள். டிரைனிங் இருந்த இரு நாட்களும் மாலையில் அங்கிருந்த கடைகளில் ஷாப்பிங் மற்றும் பீச் சென்று வந்துள்ளனர். கூட ஒரு நாள் தங்கி பாண்டியில் முக்கிய இடங்களை பார்த்து பின் ஊருக்கு செல்கின்றனர். 
 

பாண்டியில் சமீபமாய் ரவுடியிசம் அதிகம் ஆகி விட்டதாக சொல்லப்படுகிறது. படகு குழுமம் அருகே உள்ள இந்த பாலத்தில் தான் சமீபத்தில் பெரிய க்ரைம் சம்பவம் நடந்துள்ளது. ஒரு கைதியை ஜெயிலில் இருந்து கோர்ட்டுக்கு போலிஸ் அழைத்து செல்லும் போது இந்த பாலத்தில் தான் கையெறி குண்டு வீசி அந்த போலிஸ் ஜீப்பை தாக்கி, அந்த கைதியை கொன்றுள்ளனர் எதிர் கோஷ்டியினர்.
********
படகு குழுமம் அருகே நிறைய இளம் பெண்கள் ஓவியம் வரைந்து கொண்டிருந்தனர் என்ன என்று விசாரித்த போது, ஒரு சமூக சேவை நிறுவனம், இவர்களுக்கு ஓவிய பயிற்சி அளிப்பதாகவும், மாதம் ஒரு முறை பல டூரிஸ் ஸ்பாட்களுக்கு இவர்களை அழைத்து சென்று அந்த சூழலை இவர்கள் ஓவியம் வரைய வைப்பதாகவும் சொன்னார்கள்.
 
படகு சவாரி செய்யும் இடத்தில் மகிழ்ச்சியாக ஓவியம் வரைகிறார்கள் 

இங்கு இருந்த போது ஊரிலிருந்து ஒரு போன். பள்ளிக்கு பெண்ணுடன் பைக்கில் சென்ற மனைவி வண்டி சாவியை வண்டி பாக்சிற்குள் வைத்து பூட்டி விட்டார். வண்டி சாவியின்றி தவித்து கொண்டிருக்க, நான் தொடர்ந்து கொஞ்ச நேரம் அவர்களுக்கு போன் பேச வேண்டியதாய் இருந்தது. எனக்கு தெரிந்த ஒரு ஆட்டோ காரருக்கு அங்கிருந்தே நான் போன் செய்ய, அவர் பள்ளிக்கு சென்று, வண்டி பாக்சை எப்படியோ திறந்து சாவியை வெளியே எடுத்து தந்து உதவினார். பஸ்சிலும் பின் போட்டில் பாதி நேரமும் இதே டென்ஷனில் போனது. அங்கு பிரச்சனை சரியானது என்று தகவல் வந்ததும் தான் மனம் நிம்மதியானது. வெளியூரில் இருக்கையில் வீட்டில் பிரச்சனை என்றால் மனம் இப்படித்தான் ஆகிவிடும். யாருக்கும் இது பொதுவான உணர்வு தான்

போட்டிங் செல்லும்போது எடுத்த வீடியோ :




இந்த இடத்தில் சிறுவர்கள் விளையாட ஒரு பார்க் மற்றும் அதில் பலூன் சறுக்கல் உள்ளிட்ட பல விளையாட்டுகள் உள்ளன
*********
மியூசியம்

நான்கைந்து விதமான நாகரீகங்களின் சாம்பிள்கள் இந்த மியூசியத்தில் இருக்கின்றன. இந்தியாவை பொறுத்த வரை சோழர் கால நாகரிகம், பின் பாண்டியை ஆண்ட பிரன்ச்சு நாகரிகம் இவற்றை இங்கு அறிய முடிகிறது

டெர்ரகொட்டாவில் செய்த சில பொருள்கள், Beads பற்றி அறிவது எப்படி, அவற்றை படிப்பது எப்படி, அரிக்கன்மேடு என்கிற இடம் குறித்த வரலாறு, கிருஷ்ணதேவராயர் - அவரது மந்திரி அப்பாஜி ராவ் குறித்த சில தகவல்கள் - பொருட்கள், பழங்கால பிளேட்டுகள், பாத்திரங்கள், கற்கள் போன்றவை இங்கு பார்க்கலாம். நான் கவனித்தவரை வெளிநாட்டினர் தான் இத்தகைய விஷயங்களை மிக கூர்ந்து கவனித்து ரசிக்கின்றனர். அதிலும் ஒரு நாள் டூரில் நாம் சென்றால் இவற்றை காண அவர்கள் தரும் அரை மணி நேரத்தில் விரைவாக தான் சுற்றி வர முடியும்

இதற்கு மிக அருகிலேயே தான் கவர்னர் மாளிகை இருக்கிறது. சென்னையிலுள்ள கவர்னர் மாளிகையான ராஜ் பவனுடன் இதை ஒப்பிடவே முடியாது. இது வெறும் ஐயாயிரம் Sq Feet மட்டும் தான் இருக்கும் என்கிறார்கள்  

காகித தொழிற்சாலை 

அரபிந்தோ காகித தொழிற்சாலைக்கு அடுத்து நாங்கள் சென்றோம்.

தமிழ் சினிமாவில் மட்டுமே கண்ட "வேலை காலி இல்லை" என்கிற போர்டு இங்கு மாட்டப்பட்டிருபதை கண்டேன். சென்னையில் கூட எங்கும் இந்த போர்டு மாட்டி நான் பார்த்ததில்லை (அட்லீஸ்ட் நான் பாக்கலீங்கோ !)

காகிதம் தயாரிக்கப்படும் முறையை செய்து காட்டினர் : திருப்பூரில் இருந்து வரும் பனியன் மெட்டீரியலை துகள் துகளாக செய்து தண்ணீரில் ஊற வைக்கிறார்கள். பின் அதனை நன்கு கிரைனட் செய்து அங்குள்ள பெரிய டியூப் மூலம் செலுத்துகிறார்கள். இந்த mesh -ஐ ஒரு பிளேட் மேல் வைத்து ஒரே அழுத்து அழுத்தி விட்டு எடுத்து ஒரு கம்பளி தனி மேல் வைத்து காய வைக்கிறார்கள். கம்பளி மேல் வைக்கும் போது ஈரம் முழுதும் உறிஞ்சப்படுகிறது. பின் வெய்யிலில் சிறிது நேரம் காய வைக்கிறார்கள்

அடுத்த அறையில் ஒருவர் வெவ்வேறு நிற பெயிண்டுகளை பிரஷ் வைத்து தண்ணீரில் கரைக்கிறார் (ஏறக்குறைய வரைகிறார்) சென்ற அறையில் தயாரான பேப்பரை இந்த கலர் தண்ணீருள் அழுத்த அந்த வண்ணங்கள் இதில் டிசைன் ஆக ஒட்டி கொள்கிறது. பின் அது காய வைத்த பின் அந்த காகிதம் தயாராகிறது இது தான் கிப்ட் தாளாக நாம் பயன்படுத்துவது !

இங்கு தயாராகும் கிப்ட் தாள்கள் அடுத்த அறையில் ஒரு ஷூ ரூம் போல் வைத்துள்ளனர். எங்களில் சிலர் இவை கொஞ்சம் வாங்கினோம் மற்றபடி இந்தியாவில் இவை அதிகம் விற்பனை ஆவதில்லையாம். பெரும்பாலும் மேற்கத்திய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இவை ஏற்றுமதி ஆகிறதாம். பொதுவாய் காகிதங்கள் மரத்தில் தயாராகும் என்றும் இங்கு தான் காட்டனில் தயாராவதால் இவை சற்று காஸ்ட்லி என்றும் கூறினர்.

****
பாண்டி - பயண துணுக்ஸ் 

## அய்யாசாமி கல்யாணம் அட்டண்ட் செய்கிறேன் என்ற பெயரில் பதிவு தேத்த போனாலும், அவர் மனைவி அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து காலை சாப்பாட்டுடன் - கணவர் கொறிக்க முறுக்கு போன்றவை சுட்டு தந்தார். இப்படிப்பட்ட "ஆதரவான" மனைவி இருக்கும் வரை அவர் தினம் மொக்கை போடுவதை தடுக்கவே முடியாது !


## சென்னையிலிருந்து பாண்டி செல்ல ECR ரோடு வழியே ஒரு ரூட்டும் , தாம்பரம் வழியே இன்னொரு ரூட்டும் உள்ளது. பலரும் ECR ரூட்டினை prefer செய்கிறார்கள். சாலை நீட்டாக இருப்பதுடன், வழியெங்கும் வேடிக்கை பார்க்கவும் ஓரளவு விஷயங்கள் உண்டு ! குறிப்பாக பாண்டிக்கு சற்று முன் ஒரு அழகிய பெரிய தென்னந்தோப்பு கண்களை கவர்கிறது. அதில் ஏராளமான தென்னை மரங்கள் ஏழு போல வளைந்திருப்பது செம சுவாரஸ்யமாய் உள்ளது !

காந்தி ரோடில் இருக்கும் அருமையான பேக்கரி; காந்தி சாலையில் இருக்கும் இக்கடையில்  சில ஸ்பெஷல் உணவு பொருட்கள் பரிந்துரைத்து வாங்கி தந்தார் நம் நண்பர் வரதராஜலு 

மேலே உள்ள பேக்கரியை ஒட்டி உள்ள தெருவில் உள்ளது இந்த அருமையான இனிப்பு கடை; இங்கு ஜிலேபி மற்றும் கை முறுக்கு மிக புகழ் பெற்றது. அவையும் வாங்கி வந்தோம் 

** சென்னை டு பாண்டி 97 ரூபா டிக்கெட். கண்டக்டர் நூறு ரூபா வாங்கிட்டு பாக்கி அப்புறம் தர்ரேன் என்றார். அய்யாசாமி உடனே ஏழு ரூபா தேடி எடுத்து கொடுத்து " பத்து ரூபா திரும்ப தாங்க" என்றார். கண்டக்டர் அதையும் வாங்கி கொண்டு " பத்து ரூபா அப்புறம் தர்றேன். சில்லறை இல்லை" என்றதும் அய்யாசாமி காண்டாகிட்டார். கண்டக்டர் இங்கும் அங்கும் சென்று வரும்போது " சார் சில்லறை பாக்கி.." என்றும் "அந்த பத்து ரூபா " என்றும் வடிவேலு மாதிரி கேட்க கண்டக்டர் ஒரு வழியா இவர் நச்சரிப்பு தாங்காம 10 ரூபா குடுத்து கணக்கை முடிச்சார். அப்புறம் தான் அவர் மேலேந்து கண்ணை எடுத்து வெளியே வேடிக்கை பார்த்தார் அய்யாசாமி !

** ஒவ்வொரு முறையும் காலை நேர பஸ் பயணம் வயிற்றை பதம் பார்த்துடுது. எதுவும் சாப்பிட்டால் குமட்டும் என சாப்பிடாமல் போனால் அதுவும் புரட்டுது. சாப்பிட்டாலும் நிச்சயம் பிரச்சனை தான் ! பஸ்ஸில் இருந்து இறங்கி சற்று நேரம் ஒரு மாதிரியா தான் இருக்கும் ! லேசா வாமிட் பண்ணிட்டா சரியா போயிடும் !

## பாண்டி செல்லும் வழியில் ஒரு பாடாவதி இடத்தில் சாப்பிட நிறுத்துகிறார்கள். அங்குள்ள டாய்லெட் மகா கேவலமாய் இருக்கு ! தண்ணீரே சுத்தமாய் இல்லை ! வழக்கமாய் வரும் மக்கள் இது தெரிந்தோ என்னவோ பஸ்ஸை விட்டே இறங்காமல் பஸ்ஸில் அமர்ந்தே இருந்தனர் அந்த ஹோட்டலில் சென்று சாப்பிட்டு வந்த இரண்டே ஜீவன்கள் - டிரைவர் & கண்டக்டர் மட்டுமே. பஸ்ஸில் இருந்து இறங்கிய சிலர் டீ மற்றும் சிகரெட்டோடு திருப்தி அடைந்து விட்டனர் !

** சென்னை டு பாண்டிச்சேரி செல்லும் வழியில் பார்த்த சில ஊர்களின் பெயர்கள்: தட்டான் சாவடி, மண்டவாய், கலப்பட்டு, !அட போகிற வழியில் தான் இப்படி என்றால் பாண்டியிலும் சில பெயர்கள் நம்மை ஆச்சரிய படுத்தியது : பொம்மையார் பாளையம், பெரிய முதலியார் குப்பம் , நெல்லி தோப்பு!

** பாண்டியில் சில சிக்னல்களில் காத்திருப்பது சென்னையை விட அதிகமாக இருக்கும் போலும். குறிப்பாக இந்திரா காந்தி சிலை அருகே இருக்கும் சிக்னலில் சர்வ சாதரணமாக மூன்று நிமிடமெல்லாம் காத்திருக்க வேண்டியுள்ளது. அங்கு சிக்னல் கிளியர் ஆகும் நேரத்தை காட்டும் கடிகாரமே 180 நொடியிலிருந்து குறைய ஆரம்பித்தை பார்த்து சற்று டென்ஷன் ஆகி போனேன் !

## காந்தி ரோடில் உள்ள பாண்டியின் புகழ் பெற்ற காபி ஷாப் இது. அருமையான ஸ்நாக்ஸ்-ம் கூட கிடைக்கிறது.


ஒரு காபி குடித்து முடித்ததும், இன்னொன்று குடிக்கணும் என்கிற ஆர்வத்தை கட்டுபடுத்தியபடி நகர்ந்தேன் (அடுத்தது குடித்தால் திகட்டிடும். ஒன்றோடு நிறுத்திக்கணும் !)

##  பாண்டியில் ரோடு முழுக்க திறந்த சாக்கடை இருக்கிறது ஒரு புறம் என்றால், சிறுவர்கள் தங்கள் வீட்டிலிருந்து வெளியே வந்து, வீட்டின் வாசலில் நின்றபடி வாசலில் ஓடும் சாக்கடையில் ஒன் பாத் ரூம் அடிப்பதை காண முடிந்தது :((
                

## பாண்டியின் புகழ் பெற்ற சண்டே மார்கெட் தான் மேலே உள்ள படத்தில் பார்க்கிறீர்கள். பாண்டியில் இருக்கும் என் தோழி " சென்னையிலிருந்தெல்லாம் சண்டே மார்கெட் வந்து பொருட்கள் வாங்கி போவார்கள் " என செம பில்ட் அப் தந்திருந்தார். விலையை பார்த்தால் அப்படியெல்லாம் இல்லை. நிச்சயம் இங்கு கிடைப்பதை விட கம்மி விலையில் சென்னையில் பொருட்கள் கிடைக்கும் என்றே தோன்றியது. துணிகள் மற்றும் பெண்களுக்கான கை பைகள் தான் இங்கு மிக அதிகம் குவிந்து கிடக்கிறது

** பாண்டி முழுதுமே விஸ்கி, பிராந்தி விற்கும் பார்கள் தவிர ஆங்காங்கு சாராய கடைகளும் நிறையவே உள்ளது. ஒரு சில இடத்தில் இந்த வரிகளுடன் போர்டு மாட்டியிருப்பதை பார்த்தேன் : " பொது இடத்தில் குடித்து விட்டு உறங்காதீர்கள் ! திருடர்கள் உங்கள் பொருட்களை திருடி விடுவார்கள் "

அப்ப எந்த ரூபாவும் இல்லாமல் குடித்து விட்டு ரோடில் உறங்கினால் பரவாயில்லீங்களா சார் ?

** நான் சென்ற திருமணத்துக்கு முன்னாள் முதல்வர் வைத்தியலிங்கம் வந்திருந்தார். ஒரு சாதாரண காரில் சுற்றிலும் எந்த உதவியாளரும் இல்லாமல் அவர் தனியாய் வந்ததை காண ஆச்சரியமாய் இருந்தது !

****
பாண்டியில் பார்க்காமல் தவற விட்ட பிற முக்கிய இடங்கள்: லைட்ஹவுஸ், லக்ஷ்மி நரசிம்மர் கோயில், சுண்ணாம்பாறு மணல்திட்டு, ஆரோவில் பீச்.

2 அல்லது 3 நாள் பாண்டிச்சேரி சென்று பொறுமையாய் அதன் அழகை ரசித்து வாருங்கள்.
*******
பதிவர் வரதராஜலு அவர்களுக்கு நன்றிகள் ..மீண்டும் !

பாண்டி பயணம் நிறைவடைந்தது !
Related Posts Plugin for WordPress, Blogger...