Sunday, December 30, 2018

ஏற்காடு - ஒரு ஷார்ட் ட்ரிப்

வ்வருடம் இரண்டு நாட்கள் ஏற்காடு சென்று வந்தோம். ஏற்காடு பற்றி ஒரு சிறு குறிப்பு....

ஏற்காடு .. எப்படி சென்றடையலாம்?

சேலம் வரை ரயிலில் சென்று விட்டு அங்கிருந்து 2 மணி நேர பேருந்து பயணத்தில் ஏற்காடு மலை ஏறுவது சிக்கனமான வழி. குடும்பத்துடன் சென்றால், சேலத்தில் இருந்து காரில் செல்லலாம். 1500 ரூபாய் போல் காருக்கு (ஒரு வழி) வாங்குகிறார்கள்.

என்ன பார்க்கலாம்?

லேடிஸ் சீட், ஜென்ட்ஸ் சீட் இவையெல்லாம் வியூ பாயிண்ட்கள்.

நாங்கள் சென்ற நேரம் அரசு பூங்கா இருந்த இடத்திலேயே மலர் கண்காட்சி வைத்திருந்தனர். ஊட்டி மலர் கண்காட்சி அளவு அற்புதம் இல்லை என்றாலும் மனைவி மற்றும் மகள் மலர் கண்காட்சியை ரசித்தனர்.

பொட்டானிக்கல் கார்டன் .. நாங்கள் சென்ற நேரம் சற்று வெய்யில் கொளுத்தியது எனவே ஒரு மணி நேரத்துடன் முடித்து கொண்டோம்.. வெய்யில் சற்று குறைவெனில் நிறைய நேரம் சுற்றி வரலாம்

ஏற்காட்டின் முக்கிய அடையாளம் அதன் ஏரி.  படகு சவாரிக்கு குறைந்த அளவு கட்டணம் வாங்குவதாலோ என்னவோ கூட்டம் சற்று அதிகமே. நாங்கள் படகு சவாரி செல்லவில்லை. நேரம் இருப்பின் நிச்சயம் ஒரு ரவுண்ட் அடிக்கலாம்.ஊரின் நடுவில் இருக்கிறது இந்த ஏரி. கடைத்தெரு முழுமையும் ஏரிக்கரையை ஒட்டியே உள்ளது. போலவே பல்வேறு தாங்கும் விடுதிகள், அண்ணா பார்க், ஏற்காட்டின் ஒரே திரை அரங்கம் என அனைத்தும் ஏரியை ஒட்டியே அமைந்துள்ளது.

எத்தனை நாள் டூர் போதுமானது? 

நிச்சயம் இரண்டு நாளில் மிக நன்றாக சுற்றி விடலாம். அதற்கு மேல் தங்குவது ஹனிமூன் ஜோடிகளுக்கு மட்டும் வேண்டுமானால் சரியாய் இருக்கும். பிறருக்கு போர் அடித்து விடும்

தங்குமிடம் 

நாங்கள் தங்கியது ஹோட்டல் ஷேர்வராய் -சில். மிக பெரிய ஏரியா. ஏராள மரங்கள் மற்றும் பசுமை. சாப்பாடும் நன்று  (உணவு விலை சற்று அதிகம்) .. இரவு வேளையில் நிச்சயம் கேம்ப் பயர்  ஏற்பாடு செய்கிறார்கள். நாங்கள் பார்த்த இரு நாளும் யாரும் பெரிதாய் ஆடவில்லை. பலரும் சிறு சிறு குடும்பமாக வந்தது காரணமாய் இருக்கலாம். 10-15 பேர் சேர்ந்து வந்திருந்தால்  கேம்ப் பயர்  அருகே கேம்ஸ் ஆடி நிறைய மகிழ்ந்திருப்பர்.

ஹோட்டலில் பல்வேறு 1500 துவங்கி பல்வேறு விலையில் தினசரி அறைகள் உள்ளன. ஏரியில் இருந்து நடக்கிற தூரம் தான். தயக்கமின்றி பரிந்துரைக்கும் நல்ல ஹோட்டல் தான் இது

மேலும் 700 ருபாய் வாடகையில் துவங்கி பல்வேறு  ஹோட்டல்களும் உள்ளன. சாப்பாடு மற்றும் தங்குமிடம் விலை குறைவாக இருப்பதால் ஏற்காட்டை ஏழைகளின் ஊட்டி என்று கூறுவர்

கிளைமேட் / வெதர் 

வருடம் முழுதும் பார்த்தாலும் 30 டிகிரி தாண்டாது - 13 டிகிரிக்கு கீழே போகாத ஊர் இது. மே இறுதியில் சென்ற போது - காலை 10 மணி முதல் சற்று வெய்யில் அடித்தாலும் தினசரி மழையும் பெய்யவே செய்தது

தியேட்டர் 

குட்டி ஊரில் அதிசயமாக ஓர் தியேட்டர். அதன் பெயரும் சேர்வராயர் ! நாங்கள் தங்கிய ஹோட்டல் நிர்வாகம் தான் இந்த திரை அரங்கையும் வைத்துள்ளனர்.

ஊட்டி போன்ற ஊர் செல்லும்போது அந்த குளிரில் திரை அரங்கம் சென்று பார்ப்பது எனக்கு மிக பிடிக்கும். ஒவ்வொரு வாரமும் - அன்று ரிலீஸ் ஆகும் புது படம் திரை இடப்படுகிறது. நாங்கள் சென்ற போது பாஸ்கர் ஒரு ராஸ்கல் நடந்து கொண்டிருந்தது அதற்கான விமர்சனங்கள் ரொம்ப சுமார் என்பதால் செல்லவில்லை.

திரை அரங்கை - இரு காட்சிகளுக்கு இடையே உள்ள இடைவெளியில் எட்டி பார்த்தோம், நன்றாக பராமரிக்கிறார்கள். ஏற்காடு செல்லும்போது நேரம் இருந்தால், ஓரளவு நல்ல படம் இருந்தால் நிச்சயம் ஒரு வித்தியாச அனுபவத்திற்காக கண்டு களிக்கலாம்

உணவகம் 

ஹோட்டல் பிரபாகரன் என்றொரு ஹோட்டல் .. ஏரிக்கு பக்கம்... ரவுண்டானா மிக அருகே உள்ளது. இது நல்ல ஹோட்டல் என்று சிலர் பரிந்துரைக்க - ஒரு இரவு இங்கு சாப்பிட்டோம். வித விதமான பரோட்டா, குருமா, இட்லி, தலைக்கறி என சுவையாகவே இருந்தது. நல்ல கூட்டம் ...ஹோட்டலின் பிரபலத்தை காட்டியது !

நிறைவாக...

ஏற்காடு

பிளஸ் 

13 டிகிரி முதல் 30 டிகிரிக்குள் எப்போதும் இருக்கும் கிளைமேட்
அதிக செலவு வைக்காத சுற்றுலா
பல இடங்களுக்கு நடை அல்லது ஆட்டோவில் சென்று விடலாம்; கார் அவசியமில்லை

மைனஸ் 

பார்க்க அதிக இடங்களில்லை ; 2 நாளுக்கு மேல்  தங்க இயலாது

நல்ல சீசனில் நண்பர்கள் அல்லது உறவினர் குடும்பங்களுடன் சென்றால் மட்டுமே முழுமையாக என்ஜாய் செய்யலாம்...

Tuesday, October 2, 2018

செக்கச் சிவந்த வானம்- விமர்சனம்

முதலில் இரு விஷயங்களை கூறி விடுகிறேன். நான் மணிரத்னம் படங்களை ரசிப்பவன்; மவுன ராகம், நாயகன், அலை பாயுதே போன்றவற்றை பல முறை பார்த்தவன்.இருப்பினும் பலரும் கொண்டாடும் செக்க சிவந்த வானம் - கவரவில்லை.

எனக்கு பிடித்ததா இல்லையா என்பது முக்கியம் இல்லை; படம் சர்வ நிச்சயமாய் ஹிட். திங்கள் மாலை காட்சிகள் - 3 நாள் முன்பே நிரம்பி விட்டது. (நாங்கள் பார்த்தது வேளச்சேரி PVR-ல் மாலை காட்சி ) போட்ட காசுக்கு மேல் 2 மடங்காவது வசூல் பார்ப்பர்


எச்சரிக்கை ... Spoiler alert ...

பல சஸ்பென்ஸ்கள் தெரிய வரும் வாய்ப்புண்டு; கதை தெரிய வேண்டாம் என நினைப்போர் அடுத்த பாராவை மட்டும் ஸ்கிப் செய்துவிடுங்கள்..

கதை 

ப்ரகாஷ் ராஜை அரவிந்த்சாமி போட்டு தள்றார்
அரவிந்த்சாமியை அருண் விஜய்  போட்டு தள்றார்
அருண் விஜயை சிம்பு போட்டு தள்றார்
சிம்புவை விஜய் சேதுபதி போட்டு தள்றார்

அப்ப.. விஜய் சேதுபதியை?

அவரை யாரும் போட்டு தள்ள முடியாது .. ஏன்னா அவர் ஒரு போலீஸ் !!

இப்படி ஒரே குடும்பத்தில் ஒருத்தரை ஒருத்தர் போட்டு தள்ளி ஜாலியா வாழுறாங்க ....

இதாங்க கதை !!

என்ன தலை சுத்துதா?

மேலே சொன்னதை தவிர்த்து ....

ஜோதிகாவை கொன்னு போட்டது யாரு, சிம்பு காதலி கதையை முடிச்சது யாரு, மன்சூரலி கான் , மற்றும் மாமா பாத்திரத்தை கொன்றவர்கள் யார் யார், கடைசியில் எத்தனை பேர் உயிர் தப்பிச்சாங்க னு - கரெக்ட்டா சொல்றவங்களுக்கு மெட்ராஸ் டாக்கீஸில் பரிசே தரலாம் !

திரைக்கதை 

கதை சஸ்பென்சோடு தான் நகர்கிறது...அடுத்து என்ன நடக்கும் என்ற ஊகத்துடனும் - பல முக்கிய சஸ்பென்ஸ்கள்க்கு  கிளைமாக்சில் விடை சொல்லப்படுகிறது.

பாடல்கள் எதுவும் முழுமையின்றி ஆங்காங்கு துண்டு துண்டாக ஒலிப்பதால் வேண்டிய இம்பாக்ட் கிடைக்கவில்லை

ரஹ்மானின் பின்னணி இசை கச்சிதம். இது இல்லாவிடில் படத்தை எப்படி உட்கார்ந்து பார்ப்போம் என  நினைத்து கூட பார்க்க முடியவில்லை

முக்கிய பாத்திரங்கள் எல்லோரும் கெட்டவர்கள் (பெண்களை தவிர்த்து) இந்த விஷயம் புதிது; படத்தின் பாதி வரை சஸ்பென்ஸ் மற்றும் பில்ட் அப் ஓகே ; பாதிக்கு மேல் தொடர் மரணங்கள் அலுப்பூட்டுகிறது

துப்பாக்கி தூக்கியவன் துப்பாக்கியால் தான் சாவான் என்ற பழைய செய்தியை சொல்ல ஒரு மணிரத்னம் படமா?

படம் தப்பிக்க காரணம் - முக்கிய பாத்திரங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட அர்விந்த் சாமி, விஜய் சேதுபதி, சிம்பு என புகழ் பெற்ற நடிகர்களும், அவர்களின் பாணியில் வலம் வருவதும் தான்.. மேலும் ரஹ்மான் இசை !

அதீத கொலைக்கு பெண்கள் உச் கொட்டுவது தியேட்டரில் தெளிவாய் கேட்கிறது

மொத்தத்தில் 

படத்தின் வெற்றியில் மணிரத்னம் மகிழலாம், மகிழட்டும். ஆனால் அவரிடம் இருந்து நாம் எதிர்பார்ப்பது நிச்சயம் நல்ல படங்களை..... இப்படி எதோ ஒரு விதத்தில் ஹிட் அடிக்கட்டும் என்ற ரீதியிலான மசாலா அல்ல !


Friday, July 13, 2018

வானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்

பார்த்த படம்- இரும்பு திரை 

பார்த்து ஓரிரு மாதம் ஆகிவிட்டது; ப்ளாக் இப்போது தான் எழுதுவதால் படம் பற்றி சில வரிகள்...

நிச்சயம் வித்யாசமான கதைக்களன்.. சொல்லப்படவேண்டிய விஷயம் தான் .. ஆன்லைனில் நாம் தரும் பல்வேறு தகவல்கள் எப்படி விற்கப்படுகிறது -அது எவ்வாறு தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பது தான் பின்புலம்.

Image result for irumbu thirai

ஆனால் தேவைக்கு சற்று அதிகமாகவே பயமுறுத்திவிட்டனர். நெட்பாங்கிங் பயன்படுத்துவதே ரிஸ்க்; ஆன்லைனில் பொருள் வாங்குவது - தகவல் தருவதே அபாயம் என சற்று ஓவரா தான் போயிட்டாங்க. ஒரு லிமிட் உடன் நிறுத்தியிருக்கலாம்.

தனி ஒருவன் போல வில்லன் காரக்டர் மிரட்டலாக வைத்து எடுக்க எண்ணம் போலும். அந்த அளவு இல்லாவிடினும் அதில் முக்கால் பங்காவது கலக்குகிறார் வில்லன் அர்ஜுன்.

ஒரு டூயட் கூட இல்லாமல் செல்கிறது படம். விஷால் குடும்பம் குறித்த டீட்டையிலிங் குறைத்திருந்தால் கதை இன்னும் ஷார்ப் ஆக இருந்திருக்கும்

வித்தியாச பின்புலனுக்காக நிச்சயம் ஒரு முறை காண வேண்டிய படம் !

இப்படம் - எங்க ஊர் மடிப்பாக்கம் - குமரன் தியேட்டரில் பார்த்தோம். தனி ஒருவனுக்கு பிறகு மீண்டும் இந்த தியேட்டருக்கு இப்போது தான் செல்கிறோம். அப்படம் பார்த்த போது தியேட்டர் மிக நன்றாக பராமரிக்கப்படுவது குறித்து எழுதியிருந்தேன்.. இப்போது பார்த்தால் சீட்கள் கிழிந்தும் - கழிவறை சுத்தமின்றியும் இருக்கிறது; இன்னொரு முறை இங்கு அழைத்து வராதீர்கள் என மகளும் மனைவியும் சொல்லும்படி ஆகிவிட்டது; வேளச்சேரி PVR-ம் பீனிக்ஸ் மாலும் தான் சரி ... போலிருக்கிறது !

அற்புத சென்னை கிளைமேட் 


சென்னைக்கு என்ன ஆனது.. நான்கைந்து நாளாக வெய்யில் அதிகமின்றி பகலும் கூட இனிதாக இருக்கிறது; மதியம் ஒருமணிக்கு வெளியில் சென்று விட்டு இல்லம் திரும்பினால் வெய்யில் மெல்லிய மந்தகாசமாக அடிக்கிறது.  மாலையில் அளவோடு மழை பெய்து மகிழ்விக்கிறது. சென்னையை சிலருக்கு பிடிக்காத ஒரே காரணம் அதிக வெய்யில் தான்..வெளியூர் ஆட்கள் சென்னைக்கு  டிசம்பர் - ஜனவரியில் வருவதை விரும்புவதும் இதனால் தான். இப்போதைய கிளைமேட் போல் வருடத்தில் பாதி நாள் இருந்தாலே சென்னை சொர்க்கமாகி விடும்!

போனில் வரும் மரண தகவல் 

கடந்த சில மாதங்களில் இரண்டு முறை - நண்பர் தவறியதாக அவரது போனில் இருந்தே தகவல் வந்தது. நண்பர் மரணத்துக்கு பின் அவர்கள் உறவினர் - அவரது போனில் இருந்தே - இறந்தவரின் நண்பர்களுக்கு அனுப்பினர்...

இனி இது வழக்கமாகி விடுமா? நான் இறந்த பின்னும் எனது போனில் இருந்து தான் குடும்பத்தினர் தகவல் அனுப்புவார்களா என சிந்தனை ஓடியது

நண்பர் போனில் இருந்தே அவர் இறந்த தகவல் வருவது பெரும் அதிர்வை/ அதிர்ச்சியை உண்டாக்கவே  செய்கிறது!

அண்மையில் இறந்தவர் - 56 வயது; மகனுக்கு திருமணம் முடிந்த மறுநாள் உடல் நலம் குன்றியது. மகனுக்கு ரிசப்ஷன் நடக்க இருந்ததை இதனால் தள்ளி வைத்தனர். மருத்துவ மனையில் இருந்த போதும் அடுத்த சில நாளில் இதய பாதிப்பால் - இறந்துவிட்டார்

மனிதர் 56 வயதில் - 80 வயதுக்கான உழைப்பை கொடுத்து விட்டார். எப்போதும் வேலை-வேலை தான். மிக அவசரமாக தான் தொலை பேசியில் பேசுவார். தன்னால் முடிந்ததை விட அதிகம் இழுத்து போட்டு கொண்டு செய்துள்ளார் என இப்போது தான் யோசிக்கிறேன்

நிதானமாக - ரசித்து வாழ்வது எத்தனை முக்கியம் என்பதை இவரது மரணம் உணர்த்தியது !

படித்ததில் பிடித்தது 

ஒரு விஷயத்தை நன்றாக செய்து முடிப்பதோடு உன் வேலை முடிந்தது. உன்னை பற்றி பேசுவதை மற்றவர்களுக்கு விட்டு விடு

பிக் பாஸ்

பிக் பாஸ் என்பது 100 நாள் நடக்கும் ஒரு சீரியல். இதில் பல விஷயங்கள் (எல்லாம் அல்ல !) ஸ்க்ரிப்ட் தான் !

தினம் சண்டை வரவேண்டும் என்பது அவர்களுக்கு இடப்பட்ட கட்டளை போல.. அப்போது தான் சுவாரஸ்யம் இருக்கும் என. ஆனால் எரிச்சல் தான் வருகிறது

இவ்வாரம் பாலாஜி,  நித்யா,பொன்னம்பலம் மற்றும் யாஷிகா எலிமினேஷனுக்கு நாமினேட் ஆகியுள்ளனர். பாலாஜி,  நித்யா- வை அவ்வளவு சீக்கிரம் விட்டு விட மாட்டார்கள். (இந்த சீரியலில் முக்கிய சஸ்பென்ஸ் அவர்கள் இருவரும் மீண்டும் இணைவார்களா என்பது தான்...ஆகவே... )


யாஷிகா போன்ற அழகு பெண்ணை அவ்வளவு சீக்கிரம் அனுப்புவது சிரமம்.. எனவே பொன்னம்பலம் தான் கிளம்புவார் என நினைக்கிறேன்

ஆனால் இணையத்தில் மிக அதிக சப்போர்ட் இருப்பது பொன்னம்பலத்துக்கு தான். மாறாக மிக அதிக எதிர்ப்பு இருப்பது யாஷிகாவிற்கு.

நிஜமாக ஓட்டுகளை எடுத்தால் யாஷிகா தான் அவுட் ஆக வேண்டும்... எலிமினேஷனில் மேட்ச் பிக்சிங் இருக்கா என்பது இவ்வார இறுதியில் தெரியும் !

கவிதை பக்கம்

தகப்பனாக இருப்பது
---------------------------------

“அப்பா இன்னும் வரலை”
எனக் கூறும்
மகனின் பொய்யைக்
கேட்டுக்கொண்டு இருக்கிறேன்,

வீட்டினுள்
இருந்தபடி.

“போயிட்டாருப்பா”
எனத் திரும்பும்
மகனின் முகம்
காண இயலாததாய்
இருக்கிறது.

கடன்காரனாய்
இருப்பதையும்விடக்
கொடுமையானது

சிலநேரம்...

தகப்பனாய்
இருப்பது.

- பா. ராஜாராம்

இக்கவிதையை எழுதிய அற்புதமான மனிதர் பா. ராஜாராம் மறைந்தது இந்த வாரம் கிடைத்த இன்னொரு அதிர்ச்சி !

கிரிக்கெட் கார்னர்

இந்திய கிரிக்கெட் அணி வெளிநாடு செல்லும்போதெல்லாம் எனது எதிர்பார்ப்புகளை குறைத்தே வைத்து கொள்வேன். இம்முறை அற்புத பார்மில் இருக்கும் இங்கிலாந்து அணியை 20-20ல் 2-1 என வென்றது மிக ஆச்சரியம் + மகிழ்ச்சி. வென்ற இரண்டு மேட்ச்சும் நிறைய பந்து மீதம் இருக்கும் போது வென்றனர். தோன்ற மேட்ச் கடைசி வரை கொண்டு சென்றனர்.

ஹர்டிக் பாண்டியா நல்லதொரு பவுலிங் ஆல் ரவுண்டர் ஆக உருவாகி வருவது நிறைவு. சில நேரம் கண்டிஸ்டன்ட் ஆக இருப்பதில்லை என்றாலும் கூட இவர் போன்ற மல்டி டைமன்சன் வீரர் அவசிய தேவை தான் !

KL ராகுல் எனக்கு மிக பிடித்த வீரர்களுள் ஒருவர்.  அவருக்கு நிறைய வாய்ப்புகள் தற்போது வழங்க துவங்கியுள்ளார். பயன்படுத்தி கொண்டால் இந்திய அணிக்கும் அவருக்கும் மிக நல்லது !

நேற்று துவங்கிய ஒரு நாள் தொடரிலும் முதல் போட்டியை 40 ஓவரில் விளாசி அட்டாகாசமாக துவங்கியுள்ளது இந்திய அணி.

குல்தீப் பந்து வீச்சில் ஆறு  விக்கெட் எடுக்க, ரோஹித் இன்னொரு பெரிய சதம் அடித்து வெற்றி தேடி தந்துள்ளார். இங்கிலாந்து மண்ணில் இந்தியா இதுவரை ஒரு நாள் போட்டி தொடர் வென்றுள்ளதா என தெரியவில்லை; ஆனால் அப்படி வெல்ல இது நல்லதொரு வாய்ப்பு ! பார்க்கலாம் !

Friday, July 6, 2018

வானவில்-டிக் டிக் டிக் - நீட் தேர்வுகள்- பிக் பாஸ் 2

டிக் டிக் டிக் -விமர்சனம்

சென்னையை ஒரு asteroid தாக்கி பெரும் உயிர் சேதம் நடக்க போகிறது  - அதனை தடுக்க 5 பேர் கொண்ட குழு வானிற்கு செல்கிறது..அவர்கள் வென்றார்களா என்பதே டிக் டிக் டிக்

Image result for tik tik tik

நல்ல விஷயங்கள் முதலில்: தமிழின் முதல் ஸ்பேஸ் பிலிம் என்று தான் மார்க்கெட்டிங் செய்தனர். அவ்விதத்தில் வித்யாசமான படம். ஹீரோ - ஹீரோயின் உண்டு. அவர்களுக்குள் காதல் இல்லை- அவர்கள் ஜோடியும் இல்லை- அனாவசிய பாடல்கள் இல்லை. அங்கங்கு கிச்சு கிச்சு மூட்டும் காமெடி - சின்ன சஸ்பென்ஸ் (அதன் விடையை கிளை மாக்சிற்கு மிக முன்பே சொல்லி விடுகிறார்கள்)  ....

பிரச்சனை என்னவென்றால்- டிக் டிக் டிக் என்ற பெயருக்கேற்ப அடுத்து என்ன நடக்குமோ என்ற பரபரப்பு சிறிதும் இன்றி மிக நிதானமாக செல்வது தான் !  விறுவிறுப்பாக இருந்திருந்தால் படம் இன்னும் பெரிய வெற்றி அடைந்திருக்கும்  !

போஸ்ட்டர் கார்னர்பிக் பாஸ் -2 

பிக் பாஸ் -1 ஓவியா இருக்கும் வரை பார்த்தேன். இந்த சீசன் சனி, ஞாயிறு பெரும்பாலும் பார்க்கிறேன். மற்ற நாள்  -அவ்வப்போது மட்டும்....

கடந்த வார இறுதியில் விஸ்வரூபம் 2 பாடல் ஒளிபரப்பை பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே ஒரு மணி நேரம் ஓட்டி ......கொலையாய் கொன்றார்கள். கமல் - என்னை பத்தி நானே சொல்ல கூடாது - நீங்க தான் சொல்லணும் என சொல்லிச் சொல்லி - மற்றவரை பேச வைத்து அகமகிழ்ந்தார். பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் ஆட்கள் - கமல் பட பாட்டு நன்றாக இல்லை என்றா சொல்லுவார்கள் ! ஆஹா ஓஹோ என்று அவர்கள் சொன்ன பாட்டு - எதுவும் சொல்லிக்கொள்கிற மாதிரியே இல்லை !

முதல் பார்ட்டில் வரும் "எவனென்று நினைத்தாய்" என்ன ஒரு  அட்டகாசமான பாட்டு. அதனை மறுபடி வேறு ராகத்தில் பாடுகிறேன் - என வாய்க்கு வந்த மாதிரி பாடி வைத்திருக்கிறார்கள்.

சரி பிக் பாஸுக்கு வருவோம்.

பிக் பாஸ் நினைத்தால் - யாரையும் நல்லவராக்கலாம். யாரையும் கெட்டவராக்கலாம். சென்ற வாரம் நித்யாவை வில்லி போல காட்டி விட்டு இவ்வார இறுதியில் கமல் குறும்படம் காட்டியபின் பார்வையாளர்களே  நித்யாவை நினைத்து கர்சீப் எடுத்து கண்ணை துடைக்கும் வண்ணம் செய்தனர்.

துவக்கத்தில் ஐஸ்வர்யாவின் குழந்தை தனம் ரசிக்கும்படி இருந்தது. இப்போது அந்த childishness  எங்கோ காணாமல் போய்விட்டது.

அனந்த் வைத்தியநாதன் - பொன்னம்பலம் இருவரும் பலரிடமும் ஒட்டாமல் - டாஸ்க்குகளில் கலந்து கொள்ளாமல் தள்ளி நிற்கிறார்கள். விரைவில் திரும்ப வந்து விடுவார்கள் என எதிர்பார்க்கலாம்

மஹத் தான் வாழ்கிறார் !

டேனியல் - மும்தாஸ் - யாஷிகா - ஜனனி ... இறுதி கட்டம் வரை வருவார்கள் என நினைக்கிறேன். ஓரளவு சர்ச்சை இன்றி நடப்பதும் matured ஆக பேசுவதும் டேனியல் தான். அவர் 100 நாள் இருப்பார் என்பது நிச்சயம் !

QUOTABLE QUOTE


Every one has some special talent. It is our duty to find ours and use them well.

டிவியில்  படம் - கவிக்குயில்

கவிக்குயில் என்றால் ....உடன் நினைவுக்கு வருவது பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் பாடிய "சின்ன கண்ணன் அழைக்கிறான்" பாடல் தான். இப்பாடல் படத்தின் மிக முக்கிய பகுதியாக படத்தை நிறைவு செய்யும் பாடலாகவும் இருக்கிறது.

இரண்டு காதல் ஜோடிகள்.. சிவக்குமார் - ஸ்ரீதேவி மற்றும்  ரஜினி - படாபட் (கதாநாயகிகள் இருவரும் இப்போது உயிருடன் இல்லை !)

சிவக்குமார் - ஸ்ரீதேவி காதல் சற்று எல்லை மீற ஸ்ரீதேவி கர்ப்பமாகிறார். சிவகுமார் ஓர் விபத்தில் நினைவிழக்க ஸ்ரீதேவியை பார்த்து  "யார் நீ ?" என்கிறார்.

பணக்கார குடும்பங்களாக சிவகுமார் மற்றும் படாபட் பெண் பார்த்து மணமுடிக்க முடிவு செய்கிறார்கள். மண மேடையில் எங்கோ ஒலிக்கும் சின்ன கண்ணன் பாடலை கேட்டு சிவகுமாருக்கு நினைவு திரும்ப - மாலையை தூக்கி எறிந்துவிட்டு ஸ்ரீதேவி நோக்கி ஓடுகிறார்.

படாபட் அப்பா திருமணம் திடீரென நின்றதால் வேலைக்காரர் ரஜினியை படாபட்டுக்கு தாலி கட்ட சொல்கிறார்.

இரண்டு ஜோடிகளும் இணைய சுபம் !

படம் பற்றி சிறு தகவல் கூட தெரியாமல் பார்த்ததால் -ஓரிரு மணி நேரம் பார்க்க முடிந்தது.(அந்த காலத்திலேயே 2 மணி நேரத்திற்கும் குறைவாய் ஓடக்கூடிய படம் !)

ரசித்த கவிதை

எந்தக் கிளையும் இதுவரை
முறிந்ததில்லை
பறவைகளின்

எடை தாங்காமல்.- வண்ண தாசன்

நீயா நானா

நீயா நானாவில் அதிக மதிப்பெண் பெற்ற கிராமப்புற மாணவர்கள் கலந்து கொண்டு பேசினர். கூலி வேலை செய்பவர், விவசாயி என பல்வேறு சாதாரண மனிதர்களின் குழந்தைகள் 1200க்கு 1100க்கு மேல் வாங்கியது ஒரு புறம் இருக்கட்டும்..

இவர்களில் நீட் தேர்வில் தேர்ச்சியுற்றோர் பலர் இருந்தாலும் - மருத்துவம் கிடைக்குமளவு மார்க் வாங்கியது ஒருவர் மட்டுமே.

நீட் இல்லாவிடில் இவர்களில் குறைந்தது 15 பேராவது மருத்துவம் சேர்ந்திருப்பர்.

இதனை பற்றி எழுத்தாளர் சமஸ் மிக அழகாக பேசினார். அரசின் நடவடிக்கைகள் - அரசையே நம்பியுள்ள ஏழைகளை பாதிக்கும்  வண்ணமும், அரசின் உதவி தேவையில்லாத மக்களுக்கே உதவிகள் கிடைப்பதாகவும் அவர் கூறியது சிந்திக்க வைத்தது

இந்த பிரச்சனைக்கு தீர்வு அரசியலில் இருந்து மட்டுமே கிடைக்கும் என்று சொன்னதும் சரியே !

மறுபுறம் பேசிய இன்னொரு கெஸ்ட் - இந்தியாவிலேயே தமிழகம் தான் படிப்பில் முன்னணியில் இருப்பதாகவும் நீட்டில் அதிக பேர் தமிழகத்தில் இருந்து சேராவிடினும் கூட  தமிழகம் கல்வியில் குறைந்து விடாது என்றும் கூறினார்.

நீட் ஏற்படுத்தும் தாக்கம் நமக்கு முழுதாய் புரிய இன்னும் கொஞ்ச காலம் ஆகும் !

**********
அண்மை பதிவு:

காலா - நடிகையர் திலகம் விமர்சனங்கள் 

Tuesday, July 3, 2018

காலா - நடிகையர் திலகம் விமர்சனங்கள்

ப்ளாக் வந்தபின்  இவ்வளவு பெரிய இடைவெளி வந்தது இப்போது தான். காரணங்கள் பல. சுய தொழில் தொடங்கிய பின் நேரமின்மை ஒரு காரணம். இன்னும் சிலவும் உண்டு....

தொலைபேசியிலும் மெயிலிலும் தொடர்பு கொண்டு எழுத சொன்ன ... நூற்று கணக்கான.. சரி விடுங்க... இரண்டு நண்பர்களுக்காக ... (ஒருவர் வேங்கடப்பன். மற்றொருவர் புதிதாக எழுத துவங்கியுள்ள செந்தில் குமார் என்கிற பதிவர் )

வாரம் ஒரு பதிவாவது எழுத ஆசை தான். பார்க்கலாம்

காலா 

காலா - ஒரு தோல்விப்படம் என்பது இந்நேரம் தெரிந்திருக்கும்.

காலா எனக்கு பிடிக்கவே செய்தது. அதன் முக்கிய காரணம் - பீஜேபி ஆதரவாளரான ரஜினியை வைத்தே - பீஜேபி செய்யும் பல செயல்களை படம் முழுதும் கிண்டல் செய்தது தான். வில்லன் நானா படேகர் செய்யும் அத்தனை விஷயமும்  அவர் எந்த கட்சியை சார்ந்தவர் என சொல்லிவிடுகிறது. மிச்சம் மீதி சந்தேகம் இருந்தால்  ரஜினி வாயாலேயே " சுத்தம் சுத்தம் னு சொல்லி ஏமாத்துறீங்க " என ஸ்வச் பாரத்தை கிண்டலடிக்கிறார்கள்.ரஜினி படங்களை பெரும்பாலும் தியேட்டரில் பார்க்கும் நான் - ரஜினி தூத்துக்குடி சென்று வந்தபின்  பேசிய பேச்சினால் நிச்சயம் தியேட்டர் சென்று பார்க்க கூடாது என முடிவு செய்தேன். இதே வித உணர்வு நிறைய நண்பர்களிடம் இருந்தது

தூத்துக்குடி சென்று வந்து ரஜினி அவ்வாறு பேசியது மிக நல்லது ! அப்போது தான் அவர் யார் என மக்களுக்கு புரிந்தது. இல்லாவிடில் காலாவில் அவர் பேசியதை வைத்து ஏழைகளின் காவலர் என எம்ஜியார் போல ஒரு கூட்டம் பில்ட் அப் தந்திருக்கும்.

எல்லாத்துக்கும் போராட்டம்னா தமிழ் நாடு சுடுகாடு ஆகிடும் என திருவாய் அருளினார் ரஜினி. இந்த படமோ போராட்டத்தை மட்டுமே அடிப்படையாய் கொண்டது. "நம்ம உடம்பு தான் நமக்கு ஆயதம். அதை வச்சு போராடுவோம் " என மக்களை தூண்டும் சினிமா முகமும், ரஜினியின் நிஜ முகமும் படம் பார்க்கும் பல நேரங்களில் வந்து போனதுவும் படம் பிடிக்க காரணங்கள்.

ஹீரோ பில்ட் அப் சுத்தமாய் இல்லாமல் போனது (க்யா ரே செட்டிங்கா என அமர்க்களமாய் ட்ரைலரில் காட்டி விட்டு - அந்த காட்சியில் யாரோ சிலர் வந்து ரஜினியை காப்பாற்றுகிறார்கள் ) - முடிவில் ரஜினி இறந்தாரா இல்லையா என சாதாரண மக்களால் புரிந்து கொள்ள முடியாதது, மிக முக்கியமாக தூத்துக்குடியில் ரஜினியின் பேச்சு இவற்றால் படம் தோல்வியை தழுவினாலும் - படம் பார்க்கும் போது இந்திய, தமிழக, தூத்துக்குடி அரசியல் கண் முன்னே வந்து புன்னகையை தருவிக்கிறது. இந்த படம் பார்க்க அந்த காரணம் மட்டுமே போதும் !

இரவுக்கு ஆயிரம் கண்கள் 

கிரைம் த்ரில்லர் - ரொம்ப நீட்டி முழக்கி, சுற்று சுற்றென்று சுற்றுகிறார்கள். சஸ்பென்ஸ் தெரியும் நேரம் மட்டுமே ஆச்சரியம்.

ஹீரோயின் அழகு. ....ஆனால் எப்போதாவது தான் வருகிறார்.

Image result for iravukku aayiram kangal

பார்த்து 2 வாரம் ஆனபின் கதை என்ன என்றால் - மூளையை கசக்க வேண்டியுள்ளது.

த்ரில்லர் வகையறா விரும்புவோர் - 2 மணி நேரம் பொழுது போக வேண்டுமெனில் பார்க்கலாம்.

நடிகையர் திலகம் 

பள்ளியில் படிக்கும் போது பாசமலர் பார்த்து விட்டு கண்ணீர் விட்டிருக்கிறேன். துடுக்குத்தனமான பாத்திரங்களில் நடிக்கும் சாவித்திரி வாழ்வில் இத்தனை பிரச்னைகள்  இருந்திருப்பது இப்போது தான் தெரிகிறதுகுறிப்பாக ஜெமினியின் பாத்திரம்.. உண்மையில் படத்தில் ரொம்ப அடக்கி வாசித்திருக்கிறார்கள். அவர்கள் குடும்ப நண்பரான ஆடிட்டர் ஒருவர் முகநூலில் ஜெமினி சாவித்ரியை எப்படி எல்லாம் கொடுமைப்படுத்தினார், சொத்துகளை அபகரித்தார் என எழுதியதை படிக்க மேலும் அதிர்ச்சி

சாவித்ரி கதையை நேரடியாய் சொல்லியிருக்கலாம். எனோ ஒரு ரிப்போர்ட்டர் பார்வையில் படம் செல்கிறது

கீர்த்தி மற்றும் துல்கர் இருவரும் அற்புத நடிப்பு. கீர்த்தி பல கோணங்களில் சாவித்ரியை நினைவு கூர்கிறார்.

திரை பிரபலங்கள் பலருக்கும் இருக்கும் பிரச்சனை தான். ஒரு காலம் வரை வாய்ப்புகள் நிறைய இருக்கும். பின்னர் வாய்ப்பு குறைந்ததும் தானாக சொந்த படம் எடுப்பார்கள். அது தோல்வியானால் சொத்தின் பெரும்பகுதி இழந்து விடுவார்கள். சாவித்ரிக்கும் அதுவே நிகழுகிறது.

கூடுதலாக இன்கம் டாக்ஸ் ரைட், விடாத குடிப்பழக்கம் - என தொடர் சோதனைகள்

ஒரு பிரபலத்தின் சிறிது சிறிதான முன்னேற்றம் மற்றும் அவர் வீழ்ச்சீ இரண்டும் சொல்கிறது படம்

சாவித்ரி என்றால் யார் என்றே தெரியாத என் மகள் மற்றும் அவள் தோழிகள் பலருக்கும் இப்படம் மிக பிடித்திருக்கிறது !

நல்ல சினிமா விரும்புவோர் அவசியம் பார்க்க வேண்டிய படம் !
Related Posts Plugin for WordPress, Blogger...