Thursday, February 25, 2016

சேதுபதி & மிருதன் : விமர்சனம்

சேதுபதி விமர்சனம் 

90 களில் சேதுபதி ஐ. பி. எஸ் என்றொரு விஜயகாந்த் படம் - ஏவியெம் தயாரிப்பில் வந்தது. இப்போது 2016 ல் - விஜய்சேதுபதி நடிப்பில்..!!

தீயவர்களை ஒடுக்கும் நல்ல போலிஸ் கதை தான்.. ஆனால் ட்ரீட் மேன்ட்டில் சற்று வித்யாசம் காட்டியிருக்கிறார்கள். குறிப்பாக - போலிஸ் குடும்பம் பற்றி படங்கள் அதிகம் பேசுவதில்லை (தங்க பதக்கம் போன்ற ஒரு சில படங்கள் தவிர்த்து) ரம்யா நம்பீசன் என்ற அழகிய மனைவி - மற்றும் குழந்தைகளுடனான ஹீரோவின் பாசம் - முக்கிய அம்சமாக படம் நெடுகிலும் வருகிறது..



போலிஸ் ஹீரோ - வில்லனை பிடிக்க போய் ஒரு பெரும் பிரச்சனைக்குள் சிக்கி கொள்கிறார். அதிலிருந்து எப்படி மீண்டார் என்பது - த்ரில்லர் பாணியில் திரைக்கதை அமைத்துள்ளனர்.

விஜய் சேதுபதி கெட் அப், அன்பு, ரொமான்ஸ் எல்லாம் ஓகே ; நடையில் தான் (சினிமா) போலீஸ்க்கான கம்பீரம் மிஸ்ஸிங்.

ரம்யா நம்பீசன். .அழகு..  ! செமையாய் வெயிட் போட்டு எல்லா பக்கமும் ஒரே அளவில் இருக்கிறார்..

படத்தில் நான்கைந்து சுவாரஸ்ய - கைதட்டல் வாங்கும் சீன்கள் உண்டு.

குறிப்பாக "நான் யாரு" பாடல் முதன் முறை வில்லனுக்கு பின்னணியில் - அவர் பாத்திரத்தை establish செய்ய ஒலிக்கிறது. அதே பாட்டு பின் ஹீரோவிற்கு ஒலிக்கும்போது காட்சிகள் பட்டாசு.

சேதுபதி - அவுட் ஸ்டாண்டிங் அல்ல.. பாஸ் மார்க் !

மிருதன் விமர்சனம் 

ஆங்கிலத்தில் "சோம்பி"யை பின்னணியாக கொண்ட பல படங்கள் வந்துள்ளனவாம். (நான் கண்டதில்லை) ; தமிழுக்கு இது புதுசு.

சோம்பி கதையில் - அண்ணன்- தங்கச்சி செண்டிமெண்ட்- காதல் மேட்டர் எல்லாம் நுழைத்துள்ளனர் (தமிழ் என்று வந்தபின் இவற்றை செய்து தானே ஆகணும் !)



வழக்கமான கதையின்றி - ஒரு வித்யாசமான முயற்சிக்கு பாராட்டு... குறிப்பாக குறைந்த அளவு செலவு மற்றும் தொழில் நுட்பத்தில் படம் முழுதும் எடுத்துள்ளது பாராட்டுக்குறியது.

ஆனால்  ஒவ்வொரு நிமிடத்துக்கும் எத்தனை பேர் சாகிறார்கள் என போட்டியே வைக்கலாம். அந்த அளவு தீபாவளி துப்பாக்கி போல ஜெயம் ரவி சுட்டு தள்ளி கொண்டே இருப்பது ஆயாசமாக இருக்கிறது.

தங்கைக்காக ரிஸ்க் எடுப்பது ஓகே; ஒரு தலையாய் காதலிக்கும், -  யாரோ ஒருவனை மணக்க நிச்சயமான பெண்ணுக்காக - ஒரு மனிதன் உயிரையே தருவாரா என்ன ?

படம் மாஸ் ஹிட் ஆனால் இன்னொரு பாகம் எடுக்கலாம் என்கிற ஆசையுடன் இரண்டாம் பாகத்திற்கு கொக்கி போட்டு முடிக்கிறார்கள்.

மிருதன் - வித்யாச படம் விரும்புவோருக்கு மட்டும்  !


Thursday, February 11, 2016

விசாரணை -தமிழின் இரண்டாவது மிகச்சிறந்த படமா ?

விசாரணை

ட்ரைலர்- மற்றும் பிற விமர்சனங்கள் மூலம் இந்நேரம் கதை பலருக்கும் தெரிந்திருக்கும்



சந்தேக கேசில் அழைத்து செல்லப்படும் 4 இளைஞர்கள் - துன்புறுத்தி குற்றத்தை ஒப்பு கொள்ள சொல்கிறது ஆந்திர காவல் துறை.. ஒருவழியாய் அதில் தப்பி தமிழக காவல் துறை வசம் வருகிறார்கள் ...

பிற்பகுதியில் இன்னுமொரு குற்றம் - இன்னொரு விசாரணை - சில்லிட வைக்கும் கிளைமாக்ஸ் ...

3 உண்மை சம்பவங்களை அடிப்படையாய் வைத்து கதை நகர்கிறது

முதலாவது சந்திர குமார் என்கிற ஆட்டோ ஓட்டுனர் - தன் வாழ்வில் நடந்ததை எழுதிய "லாக் அப்" அனுபவம்..

இரண்டாவது - ஆடிட்டர் ஒருவர் விசாரணையின் போது "தற்கொலை" செய்து கொண்ட நிகழ்வு..

இறுதியாக நாம் கேள்விப்படும் ATM என்கவுன்ட்டர்கள்..

விசாரணையின் போது போலிஸ் கொடுக்கும் டார்ச்சர், ஸ்டேஷனில் நிகழும் மரணம் (கஸ்டடியல் டெத்) & என்கவுன்ட்டர்  என 3 வித கொடூரங்களை படம் தொட்டு செல்கிறது.

முதல் பகுதியில் நால்வரும் வாங்கும் அடிகள்.. நிச்சயம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பார்க்க அஞ்சுவர்.



முதல் பகுதியில் போலிஸ் டார்ச்சருக்கு உள்ளாவோர் ஏழைகள்.. அன்றாடங் காய்ச்சிகள். முகவரி இல்லாமல் பூங்காவில் உறங்குபவர்கள்.. இரண்டாம் பகுதியில் மிக பெரும் ஆடிட்டர் டார்ச்சருக்கு ஆளாகிறார்.. ஏழைகள் மட்டுமல்ல, ஆட்சியில் இருப்போருக்கு எதிர் பக்கம் என்றால் - பணம் உள்ளோருக்கும் இந்நிலை நிகழலாம் என்கிற உண்மையை சொல்லாமல் சொல்கிறது திரைக்கதை.

விமர்சனத்தில் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.. இப்படத்தில் வில்லன் - காட்டப்படவே இல்லை; கண்ணுக்கு தெரியாத ஒரு அதிகார மையம் - அவர்கள் தான் போலிசை ஆட்டி படிக்கிறார்கள் என்று.. மிக சரியான பார்வை அது !

தினேஷ், சமுத்திரகனி, கிஷோர் மூவர் நடிப்பும் வெகு இயல்பு, சின்ன சின்ன பாத்திரங்களில் வருவோரும் கூட திறமையான நடிப்பை வெளிக்காட்டுகிறார்கள் ..

நல்ல விஷயங்களை கூறியாயிற்று.. இனி மற்றவை..

இப்படத்திற்கு விகடனில் 61 மார்க் தந்திருந்தனர். இது 16 வயதினிலே விற்கு பிறகு மிக அதிக மார்க் வாங்கிய படமாம் ! அவ்வளவு மார்க் சரியா?

நிச்சயம் சரியில்லை என்றே நம்புகிறேன். தமிழில் கடந்த 40-45 ஆண்டுகளில் வந்த படங்களில் இது இரண்டாவது சிறந்த படமென நிச்சயம் நான் கருதவில்லை. விகடன் போடும் மார்க் வரிசையில் 50 மார்க் வாங்க வேண்டிய படமிது.. விஜய் டிவி நடுவர்கள் போல விகடனும் இப்படி சில நேரங்களில் புரியாத புதிராகி விடும்...




பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் படத்திற்கு விகடன் 50 மார்க் தந்த நினைவு.. அந்த வரிசையில் - அதே போன்ற தரத்தில் - அதே அளவு மார்க் பெற வேண்டிய படம் தான் விசாரணை..

விசாரணை - நல்ல படம் பார்க்க எண்ணுவோர் காண்க !

*********

அண்மை பதிவு :

இறுதிசுற்று-பூலோகம்- ஈட்டி- தற்காப்பு- கதகளி சினிமா விமர்சனங்கள்  

Tuesday, February 9, 2016

இறுதிசுற்று-பூலோகம்- ஈட்டி- தற்காப்பு- கதகளி சினிமா விமர்சனங்கள்

இறுதி சுற்று

மையக்கதை - சக் தே இந்தியா (ஹிந்தி) யை ஒட்டியது தான்.. காதல் பரிமாணமும்,  தனி நபர் விளையாட்டும் தான் வித்யாசம்...

இருந்து விட்டு போகட்டும்..

நிச்சயம் ஒரு ரசிக்கத்தக்க முயற்சி..



மிக முக்கிய காரணம் மாதவன் மற்றும் ரித்திகா ! மாதவன் பாத்திர படைப்பு.. அட்டகாசம் ! மனிதர் அலட்டிக்கொள்ளாமல் அற்புதமாய் செய்துள்ளார்..

ரித்திகா .. சூப்பர்ப் ! நிஜ குத்து சண்டை பெண்ணை ஹீரோயின் ஆக்கியதில் உள்ளது இயக்குனரின் சாமர்த்தியம். கிளைமாக்சில் ரித்திகா வில்லனை உதைப்பதும், மாதவன் மீது தாவி ஏறுவதும் அமர்க்களம் !  படம் முழுவதும் ரசிக்கும் படி பெர்பார்ம் செய்துள்ளார் (தொடர்ந்து நடிப்பாரா??? )

நாசர் மற்றும் ராதா ரவி நிறைவு.

விளையாட்டு  குறித்த எல்லா படங்களும் அதில் உள்ள பாலிடிக்ஸ் பற்றி சொல்லத் தவறுவதில்லை.. (சொல்லாமல் இருக்க முடியாது தான்.. விளையாட்டில் பாலிடிக்ஸ் நீக்கமற நிறைந்திருப்பதால் !)

ரித்திகா மற்றும் அவர் அக்கா -இடையே உள்ள உறவை - இயக்குனர் - பெண்ணாக இருப்பதால் ரொம்ப அருமையாக கையாண்டுள்ளார்.

அழகான  பீல் குட் மூவி.. நல்ல சினிமா விரும்பி பார்க்கும் ரசிகர்கள் அவசியம் காணலாம் !

பூலோகம்

குத்து சண்டை குறித்து அண்மையில் வெளியான இன்னொரு படம்.. இதுவும் கூட வட சென்னை பின்னணியே !

மீடியாவை ரவுண்டு கட்டி அடிக்கும் திரைக்கதை - சென்சேஷன் தேடி எப்பவும் அலையும் விஜய் டிவி பற்றி சொல்கிறார்களோ என்று நினைக்க வைத்தது.



ஜெயம் ரவி - கடும் உழைப்பு மற்றும் Apt performance ! (இருப்பினும் விகடனில் இந்த படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகர் விருது தந்ததில் எனக்கு உடன் பாடில்லை.. )

ஜன நாதன் படங்களில் இருக்கும் கம்மியூநிசம் இதிலும் உண்டு..

தேவையற்ற காட்சிகள் ஏதுமின்றி - கதை நேர் கோட்டில் பயணிக்கிறது..

பாடல்கள் நன்றாய் இருந்திருந்தால் படம் இன்னும் பெரிதாய் பேசப்பட்டிருக்கும்...

நேரமிருப்பின் ஒரு முறை கண்டு களிக்கலாம் !

கதகளி

வழக்கமான பழிவாங்கல் கதை தான் - திரைக்கதை மற்றும் முடிவில் மட்டும் சின்ன வித்யாசம்..

படம் துவங்கி கொஞ்ச நேரத்தில் வில்லன் இறக்க, அவரை கொன்றது யார் என்று நகர்கிறது படம் ..



2 மணி நேரம் தான் ரன்னிங் டைம் ; ஆனால் முக்கால் வாசி படம் ஒரே நாளில் நடப்பதால், எதோ 4 மணி நேரம் ஓடுகிற மாதிரி ஒரு பீலிங்..

மிக பெரிய ஆறுதல்.. ஹீரோயின் கேத்ரினா தெரசா.. அம்மணி சற்று பூசினார் போல் இருந்தாலும், முக பாவம் மற்றும் நடிப்பு - கியூட்.

கதகளி .. சுமார்..

ஈட்டி

சில மாதங்களுக்கு முன்பு பார்த்த படம். இருப்பினும் நீங்கள் தவற விடாமல் பார்க்க வேண்டும் என்பதால் எழுதுகிறேன்

இன்னொரு ஸ்போர்ட்ஸ் கதை.. நிச்சயம் வித்யாசமான பல விஷயங்களை உள்ளடக்கியுள்ளது..

குறிப்பாக ஹீரோவுக்கு - சின்னதாக அடிபட்டு  ரத்தம் வந்தாலே - நிற்காது என்கிற விஷயம்..



அதர்வா சிக்ஸ் பேக்கில் மிரட்டுகிறார். அவரின் கடும் உழைப்பு + Dedication படம் முழுதும் தெரிகிறது. மறைந்த நடிகர் முரளியின் மகன் அவருக்கு பெருமை சேர்க்கும் படி வளர்ந்து வருவது மகிழ்ச்சி தருகிறது.

ஸ்ரீ திவ்யா - அழகு..

ரசிக்கத்தக்க ஒரு படம்.. இது வரை காணாவிடில் நிச்சயம் பாருங்கள்.. ! Surely, you will enjoy it !

தற்காப்பு 

ஆரம்பத்தில் நல்ல கதைப்பா; கொஞ்சம் வித்யாசமா முயற்சி பண்ணிருக்காங்கன்னு தோணுச்சு. போக போக, அதுவும் படம் முடியும்போது .. ரணகளம் !



ஹீரோ -வில்லன்- தெருவில போறவன், வர்றவன், ஒரே சீன் வந்தவன் இப்படி எல்லாரையும் போட்டு தள்றாங்க கிளை மாக்சில்..  படம் புடிச்ச ஒளிப்பதிவாளராவது உயிர் புழைச்சாரான்னு தெரியலை..

கொடுமைடா சாமி  !

********
அண்மை பதிவு :

விசாரணை -தமிழின் இரண்டாவது மிகச்சிறந்த படமா ?

Related Posts Plugin for WordPress, Blogger...