Thursday, December 29, 2016

2016 சிறந்த பத்து படங்கள்

இறுதி சுற்று

வழக்கமான ஸ்போர்ட்ஸ் பட டெம்ப்லேட் தான். ஆனால் ஹீரோயின் தான் இங்கு சர்ப்ரைஸ் பாக்கெட். நிஜ பாக்ஸரை நடிக்க வைக்கும்போது அவர் நடிப்பில் சோடை போக வாய்ப்பு மிக அதிகம்; ஆனால் ரித்திகா சிங் நடிப்பிலும் பிய்த்து  உதறினார்.

Related image

மாதவனின் majestic நடிப்பு, சந்தோஷின் பாடல்கள், விளையாட்டில் இருக்கும் அரசியல் (அதிலும் பெண் என்பதால் சந்திக்கும் பிரத்யேக கொடுமைகள் )- இயல்பான இயக்கம் என படம்  மின்னியது.

 இறுதி சுற்று விமர்சனம் : இங்கு

விசாரணை

வெற்றி மாறன் தமிழில் குறிப்பிடத்தகுந்த, நம்பிக்கைக்குரிய இயக்குனராக மீண்டும் ஒரு முறை தன்னை நிரூபித்த படம்.

போலீஸ் விசாரணையின் பல முகங்களை காட்டி நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியது; நிஜ வாழ்வில் நடந்த சம்பவத்தின் பிரதிபலிப்பு என்பது கூடுதல் வலி.

ரத்தமும் வன்முறையும் சற்று அதிகம் (நியாயம் தான் எனினும்) ; அது மட்டும் தான் எனக்கு பிடிக்க வில்லை; மற்றபடி அற்புதமான படம் !

 விசாரணை விமர்சனம் : இங்கு

விசாரணை -தமிழின் இரண்டாவது மிகச்சிறந்த படமா ?

பிச்சைக்காரன்

எப்படி இந்த பெயரில் படம் எடுக்கிறார்கள்; இந்த படம் பார்த்தேன் என சொல்லவே மக்கள் யோசிப்பார்களே .. படம் பெயர் சொல்லி டிக்கெட் வாங்க கூட யோசிப்பார்களே என  நினைத்திருந்தேன்.அதையெல்லாம் மாற்றி அட்டகாசமாக படம் எடுத்து மிக, மிக பெரும் வெற்றி  பெற்றனர்.

Image result for pichaikaran

என்ன ஒரு வித்யாசமான கதைக்களன்.. பின் அதனை ரசிக்கும் வண்ணம் திரைக்கதையாக்கிய விதம். அட்டகாசம் !

நல்ல இயக்குனரான  சசி நீண்ட இடைவெளிக்கு பின் வந்தாலும், தரமான படமொன்றை தந்தார். விஜய் ஆண்டனியின் கதை தேர்வு தான் அவரை இதுவரை காப்பாற்றி வருகிறது

பிச்சைக்காரன்- இந்த வருடத்தின் தவற விடக்கூடாத ஒரு படம் !

 பிச்சைக்காரன் விமர்சனம் : இங்கு 

தோழா

 பணக்காரன்-ஏழை இடையே இருக்கும் நட்பை காமெடி கலந்து சொல்லி  ஜெயித்தனர். நாகார்ஜுனா நடிப்பு பெரும் பாராட்டை பெற, கார்த்தியின் காமெடி மக்களிடம் நன்கு எடுபட்டது

தோழா விமர்சனம் : இங்கு

24

இந்த வருடம் வந்த படங்களில் எனக்கு ரொம்ப பிடித்த படம்; செம வித்யாசமான கதை. சொன்ன விதமும் கிளாஸ். (நான் ஒரு வாட்ச் மெக்கானிக் என அவ்வப்போது போடும் ரம்பம் தான் திருஷ்டி பொட்டு!)

Image result for 24 tamil movie

ஒரு ஹாலிவுட் பட ரேன்ஜுக்கு இருந்த இந்த படம் ஓடவில்லை ! எல்லா புது முயற்சியையும் வரவேற்கும்    தமிழகம் இந்த முயற்சியை ஏனோ கை விட்டது  !

24 விமர்சனம் : இங்கு 

கபாலி

இந்த வருடத்தில் மிக பெரும் hype உடன் வெளியான படம். அந்த hype ஐ வைத்தே ஓரளவு காசு பார்த்து  விட்டனர்.

Image result for kabali

நல்ல படம் தான்.. .......

தான் என்று இழுக்கிறோம் பாருங்கள் .. அது தான் விஷயம். மெட்றாஸில் இருந்த செறிவு இந்த படத்தில் இல்லை; ஏகப்பட்ட பாத்திரங்கள்.. எல்லோர் மீதும் சந்தேகிக்கும் வண்ணம் அமைந்த திரை கதை..

கதை எதை நோக்கி செல்கிறது.. கபாலி மனைவியை தேடி கண்டு பிடிப்பது தான் கதையா? அல்லது வில்லன்களை ஒழிப்பதா.. குழம்பி போகிறோம்...

முடிவு .. நிச்சயம் பாராட்டும் வண்ணம் இருந்தது; சுஜாதா கதை போல நம் முடிவிற்கு விட்டது  அருமை.

கபாலி. இன்னும் நன்றாக வந்திருக்க வேண்டிய படம்.

 கபாலி விமர்சனம் : இங்கு

தெறி

விஜய்க்கு இன்னொரு கமர்ஷியல் ஹிட்; இரட்டை வேடம் - குழந்தையின் கியூட்னஸ் இரண்டாலும் படம்  தப்பித்தது; கையை கடிக்காத ஒரு வெற்றி படம் என்கிற அளவில் மட்டும் பட்டியலில் சேர்த்துள்ளேன்.

 விமர்சனம் : இங்கு

தெறி படம் எப்டி பேபி ?சினிமா விமர்சனம்

தர்ம துரை

இந்த ஆண்டு விஜய் சேதுபதி  ஆண்டு;எத்தனை படம் நடித்து விட்டார்..  அடேங்கப்பா. ரெக்க போல ஒரு சில தவிர்த்து பலவும் கையை கடிக்காமல் காப்பாற்றி விட்டது.

Image result for tharmathurai

தர்மதுரை மருத்துவ துறை - காதல் தோல்வி இந்த இரண்டு விஷயத்தையும் சற்று வேறு கோணத்தில் பார்க்க உதவியது; துணுக்கு எழுத்தாளராக ஒரு ஹீரோயின் பாத்திரம் அமைந்தது அழகு.

நல்ல கதை- சொன்ன விதமும் அருமை; மருத்துவர்கள் மீதுள்ள மதிப்பு உயரும் வண்ணம் படத்தை அழகாய்  முடித்திருந்தனர்.

தர்மதுரை விமர்சனம் : இங்கு 

கொடி 

தனுஷ் நடிப்பில் வெளியான கொடி எனக்கு பிடித்திருந்தது; முழுக்க முழுக்க அரசியலை கதை களமாய் கொண்ட படங்கள் அரிது (அமைதிப் படை அப்படியான ஒரு படம்)

Image result for kodi film

இரண்டு தனுஷ் மற்றும் த்ரிஷா மூவர் பாத்திரங்களும் வித்யாசமான முறையில் அமைக்க பட்டிருந்தது. படம் பெரிய வரவேற்பை பெறாவிடினும் சொல்ல வந்த விஷயத்தை விட்டு எங்கும் நகராமல் - சிறிதும் divert ஆகாமல் சென்ற இப்படம் இவ்வருடத்தில் குறிப்பிடத்தக்க படங்களுள் ஒன்று.

கொடி விமர்சனம் : இங்கு

ரஜினி முருகன்

வருடத்தின் முதல்  ஹிட் (பொங்கல் ரிலீஸ் ) ; சிவா நடித்து இவ்வருடம் வெளிவந்த இன்னொரு படமான ரெமோ கையை கடிக்காமல் ஓடினாலும் அது என்னை சுத்தமாய் கவர வில்லை;

ரஜினி முருகன் பார்க்கும் போது ஜாலியாக சிரிக்க  முடிந்தது;வெளியில் வந்ததும் எந்த காமெடியும் நினைவில் இல்லை ! குடும்பத்துடன் தியேட்டர் சென்று ஜாலியாய் சிரித்து மக்கள் இதனை பெரும் வெற்றி  படமாக்கினர்.

ரஜினி முருகன்: விமர்சனம் : இங்கு 

****
பின்குறிப்பு: 1) ஜோக்கர் படம் அருமை என பலரும்  கூறினர்;இன்னும் பார்க்க வில்லை.

2) பிற மொழி படங்களில் நான் பார்த்தவற்றில் சிறந்தவை :

ஆங்கிலம் : Sully
ஹிந்தி : Dungal & Pink
மலையாளம் : Charlie
***
2015 ஆம் ஆண்டின் சிறந்த 10 படங்கள் இங்கே 

2012 ஆம் ஆண்டின் சிறந்த 10 படங்கள் இங்கே !

2011ஆம் ஆண்டின் சிறந்த 10 படங்கள் இங்கே !

2010ஆம் ஆண்டின் சிறந்த 10 படங்கள் இங்கே !

2009 ஆம் ஆண்டின் சிறந்த 10 படங்கள் இங்கே !

Monday, December 26, 2016

வானவில்: லைட்ஹவுஸ் ஒரு பார்வை-மெக்டொனால்ட்ஸ் ஏமாற்று வேலை- ஜெயலலிதா தெரு

சென்னை லைட் ஹவுஸ் - ஒரு விசிட் 

அண்மையில் சென்னை கலங்கரை விளக்கம் சென்று வந்தோம். மெரினா பீச்சில் - கமிஷனர் அலுவலகம் தாண்டி ஆல் இந்தியா ரேடியோவிற்கு எதிரில் உள்ளது கலங்கரை விளக்கம் !

9 மாடி கட்டிடத்தின் மேல் செல்ல லிப்ட்டில் மட்டுமே அனுமதி (படிக்கட்டில் நோ !) சிறிது நேர காத்திருப்பிற்கு பின் 9 வது மாடிக்கு சென்று பின் அங்கிருந்து ஒரு மாடி மட்டும் படியேறி மேல்பகுதி வந்து சேர்கிறோம். ஞாயிறு என்பதால் நல்ல கூட்டம்; சில இடங்களில் மட்டும் காற்று பிய்த்து கொண்டு அடிக்கிறது; அனைவரும் போட்டோ எடுப்பதில் மட்டும் ஆர்வம் காட்டுகிறார்கள். மாலை நேரம்.. பீச், எதிரில் உள்ள கிரிக்கெட் கிரவுண்ட், காமராஜர் சாலை வாகனங்கள் என 10-15 நிமிடம் பார்த்து விட்டு திரும்ப வேண்டியது தான்..



கீழே சின்னதாய் - கலங்கரை விளக்கம் குறித்த கண்காட்சி உள்ளது. நுழைவு கட்டணம் - 20 ரூபாய்.

பெரிய எதிர்பார்ப்பின்றி ஒரு முறை விசிட் அடிக்கலாம் லைட் ஹவுஸிற்கு !

இப்படியும் நடக்குது  மெக் டொனால்ட்ஸ்சில்   

அண்மையில் வேளச்சேரி மெக் டொனால்ட்ஸ் கடைக்கு சென்ற போது "கார்ட் வேலை செய்யாது" என எழுதி  போட்டிருக்க,2000 ரூபாய்க்கும் சில்லறை இல்லை என்ற நிலையில், இருந்த நூறுகளை தேற்றி அதற்கேற்ப ஆர்டர் செய்யும் நிலை..

சாஃட் ட்ரிங்க்ஸ் வந்து சேர, " இதை ஆர்டர் செய்யவே இல்லையே!" என்றதும் " இது free - பா" என்றால் மகள்..

பின் சற்று யோசித்து விட்டு மகளே   கேட்டாள் : "நாம நினைச்சதை விட 150 ரூபாய்க்கு மேல் அதிகமா இருக்கு" என்று கவுண்ட்டரில் போய் கேட்க, அது   சாஃட் ட்ரிங்க்ஸ்க்கான பணம் என தெரிந்தது.

இதற்கு ஏன் இலவசம் என சொல்லி தலையில் கட்டணும்? அப்புறம் அதை பில்லில் போடணும்? (காம்போ என போட்டு விடுவதால் பலர் கவனிப்பதில்லை !)

அமர்ந்திருக்கும் அனைத்து டேபிள்களிலும் கோக் அல்லது பெப்சி என ஏதேனும் ஒரு சாஃட் ட்ரிங்க்ஸ்  இருப்பதை அப்புறம் தான் கவனித்தேன் !

என்னமா ஏமாத்துறாங்க ! ஹூம் !

எதிர்பார்ப்பில் - புரியாத புதிர் 

புதுமுக இயக்குனரின் புரியாத புதிர் ட்ரைலர் வித்யாசமாக உள்ளது; ஏற்கனவே வெளியான இப்பட பாடல்கள் ரசிக்கும் வண்ணம்  உள்ளன. த்ரில்லர் சப்ஜெக்ட்... ட்ரைலர் தரும் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்தால் .. மகிழ்ச்சி !



வேளச்சேரி வியாபாரிகளின் புலம்பல் 

புயலால் இணையம் உள்ளிட்ட சேவைகள் பாதித்தது ஒருபுறம் என்றால், வேளச்சேரியில் இன்னொரு பிரச்சனை. விஜய நகர் பேருந்து நிலையம் எதிரில் மேம்பாலம் ஒன்று அமைக்கும் பணி  நடைபெறுகிறது ; இதனால் சாலைகள் தோண்டியதில், பல கடைகளில் இணைய இணைப்பும் - Debit / Credit சேவையும் இல்லை ! அவை வேலை செய்யலை.. இதனால் பிரதமரின் கனவான பணமில்லா வர்த்தகம் நடக்க முடியவில்லை; பண வர்த்தகம் மட்டுமே சாத்தியம் ! அதிலும் 2000 ரூபாய் நோட்டு- அதற்கான சில்லறை இன்மை.. போதிய அளவு 100 ரூபாய் நோட்டுகள் இல்லாதது.. இதனால் விஜய நகர் பேருந்து நிலையம் அருகிலுள்ள பல கடைகளில் வியாபாரம்  படுத்து விட்டது.. மருந்து கடைகள் கூட இதற்கு விதி விலக்கில்லை. பரிதாபம் !

போஸ்ட்டர் கார்னர் 



சென்னையில் ஜெயலலிதா தெரு

நடை பயிற்சி மேற்கொள்ளும் போது வெவ்வேறு ரூட் மற்றும் தெருக்களில் நடக்கும் வழக்கும் உண்டு. அப்படி ஒரு முறை நடக்கும் போது வேளச்சேரி/ மடிப்பாக்கம் இரண்டும் சந்திக்கும் இடமான கைவேலி அருகே ஜெயலலிதா தெரு என்ற பெயர் பலகை கண்டேன். முன்னாள் முதல்வர் .. எனவே அவர் பெயரில் தெரு இருப்பதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் அவரை இப்படி பெயர் சொல்லி அழைப்பதே மரியாதை குறைவு என எண்ணும் அவர் ஆட்சி காலத்திலேயே இந்த தெரு இருந்து வந்திருக்கிறது.. அம்மா  ஜெயலலிதா தெரு என்றிருந்தால் ஆச்சரியம் வந்திருக்காது .. ஜெயலலிதா தெரு என்பது தான் புருவம் உயர்த்த வைத்தது !

Saturday, December 24, 2016

அமீர்கானின் Dangal-ஹிந்தி பட விமர்சனம்


ருமை, அற்புதம், அட்டகாசம், சிறப்பு இன்னும் என்னென்ன சூப்பர் லேட்டிவ் தோன்றுகிறதோ அனைத்தையும் சொல்லி விடுங்கள்.. எல்லாமே இப்படத்துக்கு suit ஆகும்.. அது தான் Dungal !

காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற கீதா மற்றும் பபிதா என்ற 2 இந்திய பெண்களின் உண்மை கதை Dangal (யுத்தம்) என்கிற படமாக வந்துள்ளது. இந்த பெண்களின் தந்தை/ அவர்களின் பயிற்சியாளராக மஹாவீர் சிங் என்கிற பாத்திரத்தில் அமீர் கான் !


ஸ்போர்ட்ஸ் படங்கள் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் template இதிலும் உண்டு: சாதாரண வீரர்களை கோப்பையை வெல்ல செய்யும் பயிற்சியாளர் ! இங்கு மிக முக்கிய வித்யாசம். இது நிஜத்தில் நடந்த சம்பவங்களின் தொகுப்பு.. மேலும் அந்த பயிற்சியாளர் .. அப்பெண்களின் தந்தை !

முதல் 10 நிமிடம் தாண்டி அமீர் கான் தெரியாமல் - மஹாவீர் தான்  தெரிகிறார். அதிகப்படியாக நடிக்காமல் - தேவைக்கேற்ப அட்டகாசமாய் underplay செய்துள்ளார் அமீர். அந்த பாத்திரம் மிக சுவாரஸ்யமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.. காமன் வெல்த் போட்டி நடக்கும் போது அவர் சொல்லும் strategy கள் அருமை என்றால்- இறுதி போட்டியை அவர் பார்க்க முடியாமலே போவதும், தேசிய கீதம் ஒலிப்பதை வைத்தே எந்த நாடு வென்றது என அவர் உணர்ந்து கொள்வதும் நெகிழ வைக்கிறது !


படம் முழுதும் விரவியிருக்கும் காமெடி - சீரியஸ் சப்ஜெக்ட்டை இலகுவாக்குகிறது.

மகாவீர் மற்றும் அவரது இரு பெண்களின் கதை தான் இது; மற்ற சிறு பாத்திரங்களும் ரசிக்கும் வண்ணம் உள்ளன. குறிப்பாய் கதை முழுதும் சொல்லும் அந்த சொந்த கார பையன், மஹாவிரின் மனைவி, கோழி கடை வைத்திருக்கும் நபர் .. இப்படி ஏராளம்.. கீதா வளர்ந்த பின் வரும் கோச் பாத்திரம் தான் சற்று வில்லன் போல் ஆக்கி விட்டனர் (நிஜ வாழ்விலும் அப்படியா அல்லது கதைக்காக அவ்வாறு செய்தனரா என தெரிய வில்லை )

Wrestling போட்டியை - அதன் விதிகளை நமக்கு எளிதாக கற்று கொடுத்து விடுகிறார்கள்; எப்படி அடித்தால்/ விழுந்தால் எவ்வளவு பாயிண்ட் என்பது துவங்கி, Wresting போட்டி முழுவதுமே 4 முதல் 6 நிமிடத்தில் முடிந்து விடும் என்பது வரை !

சண்டை காட்சிகள் மிக துல்லியம் .. நிஜ Wresting பார்ப்பது போலவே தான் உள்ளது..



அமீர் இப்படத்திற்காக - மஹாவீர் பாத்திரத்துக்காக நிஜமான தொப்பையுடன்  நடித்துள்ளார்.படத்தின் துவக்கத்தில் வரும் 10 நிமிட காட்சிகளில் உள்ள உடலை 6 மாதம்  பயிற்சி செய்து பின்னர்  எடுத்துள்ளனர்.எப்படி உடலை .ஏற்றினார், எப்படி இறக்கினார் என்பது யூ டியூபில் உள்ளது; பாருங்கள்.



லகானை விட இப்படம் பல மடங்கு சிறந்தது என சிலர் எழுதிய போது சிரிப்பாக  இருந்தது;ஆனால் படம் பார்த்ததும் அது நிச்சயம் சரி என புரிந்தது; லகான், தாரே ஜாமீன் பர் இப்போது Dungal என சிறந்த படங்களை அமீர் தயாரிப்பது பெருமையளிக்கிறது !

மிகக் கவர்வதும் நெகிழ வைப்பதும் திரைக்கதை தான்.  நிஜத்தில் நடந்த சம்பவங்கள் என்பதால் கதை மாற்ற முடியாத  ஒன்று; குறிப்பாக போட்டிகளில் எந்த பாயிண்ட்களில் , எத்தனை செட்களில் வென்றார்கள் எதையுமே மாற்ற முடியாது; ஆனால் அவர்கள் வாழ்வில் எந்த சம்பவங்கள் சினிமாவுக்கு செட் ஆகும் என்பதை புத்தி சாலித்தனமாக திரைக்கதை  அமைத்துள்ளனர்.

திரைக்கதை, இயக்கம், அமீர் மற்றும் பாத்திமா - இந்த 4 பேருக்குமே நிச்சயம் சில விருதுகள் காத்திருக்கிறது !

டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை ஐந்துக்கு - நான்கரை ஸ்டார் தந்து விட்டு "   Forget Demonetization ; just go and watch Dungal" என எழுதியிருந்தது. மிக சரியான விமர்சனம் !

பள்ளி சிறுவர்களுக்கு குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு அவசிய அவசியம் காண்பிக்க வேண்டிய படம் !

ஹிந்தி மற்றும் மலையாள படங்கள் சப் டைட்டிலுடன் பார்ப்பது வழக்கம். ஆனால் இப்படம் தமிழில் ஜாஸ் சினிமாஸில் கண்டோம். நிறைய Wrestling சண்டை காட்சிகள் என்பதால் டப்பிங்க் சிங்க் ஆகாத பிரச்சனை இல்லை; எங்களுக்கு டப்பிங் படம் போல தெரியவே இல்லை; பெண் இன்னொரு முறை தியேட்டர் சென்று பார்க்கணும் என வறுபுறுத்தி வருகிறாள் !!

இந்த வருடத்தில்  மட்டுமல்ல,இதுவரை வந்த இந்திய சினிமாக்களில் ஒரு மிக சிறந்த படம் இது.

Dungal - Don't miss it !
****
தொடர்புடைய பதிவு

அமீர்கான் அசத்திய நான்கு படங்கள்

http://veeduthirumbal.blogspot.com/2011/02/blog-post_23.html

Friday, December 23, 2016

அடையார் ப்ரோக்கன் பிரிட்ஜ் - ஒரு பார்வை

சென்னை ப்ரோக்கன் பிரிட்ஜ் பற்றி அவ்வப்போது கேள்விப்பட்டிருக்கிறேன்.. ரொம்ப நாள் அது வட சென்னையில் இருக்கிறது என்று  நினைத்திருந்தேன். இணையத்தில் தேடி பார்க்கும் போது தான் அது பெசன்ட் நகர் பீச்சிற்கு மிக அருகே உள்ளது என தெரிந்தது.



எங்கே இருக்கிறது? 

பெசன்ட் நகர் பீச் சென்றுள்ளீர்களா? அதன் ஒரு புறத்தில் KFC மற்றும் திண்டுக்கல் தலப்பா கட்டி பிரியாணி கடை உள்ளது; தலப்பா கட்டி கடையை ஒட்டி பீச் அருகிலேயே ஒரு சாலை  செல்லும்;கொஞ்ச தூரம் குடிசை பகுதிக்குள் புகுந்து செல்ல வேண்டும். சரியாக ஒரு கிலோ மீட்டர் அப்படி பயணித்தால்  ப்ரோக்கன் பிரிட்ஜ்ஜை அடையலாம்.



எப்படி செல்லலாம்? 

கார் அல்லது பைக் இரண்டுமே  ப்ரோக்கன் பிரிட்ஜ்ஜிற்கு சற்று தூரம்வரை (மிக அருகில்)  செல்ல முடியும். பெசன்ட் நகர் பீச்சிலிருந்து நடந்து போனால் ஒரு கிலோ மீட்டர் தூரம் இருக்கும்.



எப்போது செல்லலாம்?

பகலில் மட்டும் தான் செல்ல முடியும் !  மாலை நான்கரை அல்லது 5 மணிக்கு மேல் போலீஸ் வந்து இங்கு இருக்க வேண்டாம் என அனுப்பி விடுவதாக சொன்னார்கள் (நாங்கள் சென்ற போது 4 மணி இருக்கும். நான்கரைக்கு  கிளம்பினோம்;அன்றைக்கு போலீஸ் அங்கு இல்லை !)

இருட்டிய பின் செல்வது பாதுகாப்பானது இல்லை; அதிகாலை சென்றாலும் கூட வெய்யில் இல்லாமல் நன்கு என்ஜாய் செய்யலாம்

என்ன விசேஷம்? 

உடைந்த நிலையில் ஒரு பாலம். எல்லா பக்கமும் கடல் நீர். சற்று தொலைவில் மிக பெரும் கட்டிடங்கள்.. இந்த வித்தியாச சூழலை  பார்த்து ரசிக்கவும், குறிப்பாக புகைப்படம் எடுக்கவும் செய்யலாம்....அவ்வளவே !

பாலம் எப்படி உடைந்தது? 

1967ல் கட்டப்பட்ட இப்பாலம் -10 வருடங்கள்  பயன்பட்டுள்ளது;பின் 1977ல் உடைந்த பின் இதனை கட்ட யாரும் நடவடிக்கை எடுக்க வில்லை.


எச்சரிக்கை !

இரவில் செல்லவேண்டாம். சிறந்த நேரம்.. அதிகாலை



பிரிட்ஜ் மேலே ஏற சற்று சிரமமே. ஆண்கள் மற்றும் உயரமான பெண்கள் ஓரளவு முயற்சியுடன் ஏறிவிடலாம். ஏற சிரமப்படுவோருக்கு நண்பர்கள் குனிந்து - என் மேல் ஏறி செல் என உதவுகிறார்கள் !!

 பெரிய எதிர்பார்ப்புடன் செல்ல வேண்டாம். எந்த செலவும் இல்லாமல் ஒரு வித்தியாச இடம் .. அவ்வளவே.. !

Sunday, December 11, 2016

சென்னை 28 : பார்ட் 2 - சினிமா விமர்சனம்

முதல் பார்ட் எடுத்து விட்டு - செகண்ட் பார்ட் வரும்போது நிறைய பாத்திரங்கள் காணாமல் போகும்; ஆனால் முதல் பார்ட்டில் இருந்த அநேக பாத்திரங்களையும் மீண்டும் எடுத்து கொண்டு, புதிதாய் சில காரெக்டர் சேர்த்து அமர்க்களம் செய்துள்ளனர் சென்னை -28 பார்ட் டூவில் !

Image result for chennai 28 2 jai

பாசிட்டிவ் 
- - -
முதல் பார்ட்டில் கதை என ஒன்று பெருசாய் இருக்காது; இங்கு கிரிக்கெட் தவிர கதை என ஒன்று பின்னணியில் இருக்கு; கூடவே கிரிக்கெட்டும்

கிரிக்கெட் மேட்ச் எல்லாம் சுவாரஸ்யம். ஷார்க் டீம் ஜெயிப்பது நாம் ஜெயிப்பது போல ஜாலியா இருக்கு

கரண்ட் விஷயங்கள் அனைத்தையும் தொட்டு போகிறார்கள்..

மிர்ச்சி சிவா அங்கு விட்டதை அப்படியே கன்டினியூ செயகிறார். வெரி நைஸ் !

வைபவ் நெகட்டிவ் பாத்திரத்தில் அசத்துகிறார். ஹீரோயின் ரசிக்கும் வண்ணம் உள்ளார்.

மனைவிகள் மேட்ச் பார்த்துட்டு தங்கள் பாணியில் ஐடியா தருவது கலக்கல்

ஷார்க்ஸ் டீம் வென்றது என வழக்கமான முடிவு போல் இல்லாமல் வித்யாசமாக முடித்துள்ளனர் (மூணாவது பார்ட்டுக்கு  வேறு பிட் போடுறாங்க !)

ஆங்காங்கு வரும் சிரிப்பு, பலருக்கும் பிடித்த கிரிக்கெட்டை பெரிய திரையில் பார்ப்பது இரண்டும் தான் படத்தை காப்பாற்றுகிறது

நெகட்டிவ் 
- - - -
முதல் மற்றும் மிக பெரிய நெகட்டிவ் பாடல்கள்... எதுவுமே ஈர்க்கலை; மேலும் பொருத்தமில்லாத இடங்களில் வந்து இம்சை செயகிறது

வெங்கட் பிரபு தன் தம்பிக்கு இப்படி முக்கிய துவம் தருவதை எப்போது தான் நிறுத்துவார்? திறமை இருந்தால் பாராட்ட மாட்டோமா? முன்னேறியிருக்க மாட்டாரா பிரேம் ஜி ?

சுத்தமாய் பல ஆண்டுகள் கிரிக்கெட்டே ஆடாதோர் எப்படி ஜெயிப்பார்கள் என்பது பெரிய கேள்விக்குறி; சைக்கிள் ஓட்டுற மாதிரி தான் கிரிக்கெட் ஆடுறதும் என ஒரு டயலாக் விடுறாங்க. அது சரியான ஒப்பீடு இல்லை.

முதல் பார்ட் vs இரண்டாம் பார்ட் 

சந்தேகமே வேண்டாம்.. முதல் பார்ட் தான் தி பெஸ்ட் ! அதுக்கு காரணம் இப்படி ஒரு genre இதுவரை நாம் பார்த்ததே இல்லை; அதுவே நம்மை ஆச்சரியப்படுத்தி ரசிக்க வைத்தது

அடுத்து காமெடி.. அதிலும் நிச்சயம் முதல் பார்ட் மிக அசத்தியது; குறிப்பாக முதல் பார்ட்டில் மிர்ச்சி சிவா தன் காதலை அண்ணனின் சிறு மகள் முன் சொல்லி பழகுவார்; அதனை காட்சிப்படுத்திய விதமெல்லாம் சான்ஸே இல்லை ! அது போன்ற தியேட்டரை குலுங்க வைக்கும் காட்சிகள் இங்கு இல்லை; பவுலிங்கா .. பீல்டிங்கா கேள்வியெல்லாம் epic ! அது போன்ற காமெடியை இங்கு மீண்டும் அப்படியே காட்டி தப்பிக்க பார்க்கிறார்கள்.

Image result for chennai 28 2

விமர்சனம் ஒன்றில் - முதல் பார்ட்டில் சிக்ஸர் அடித்தார்; இரண்டாவது பார்ட்டில் பவுண்டரி அடித்துள்ளார் என குறிப்பிட்டனர். இதை விட மிக சரியாய் ஒரே வரியில் விமர்சிக்க முடியாது

சென்னை 28 பார்ட் டூ : வெங்கட் பிரபு பாணி காமெடி- கிரிக்கெட் இரண்டில் எந்த ஒன்று பிடித்தாலும் படத்தை நீங்கள் நிச்சயம் ரசிப்பீர்கள்.. !

Saturday, December 10, 2016

வானவில்:தமிழக அரசியல் நிலவரம் - கவலை வேண்டாம்

பார்த்த படம்: கவலை வேண்டாம் 

ஜீவா எப்போது கடைசியாக தனி ஹிட் படம் கொடுத்தார் என யாருக்காவது நியாபகம் இருக்கா? இதோ இன்னொரு ஜீவா படம் !

பிரிந்து வாழும் மனைவியுடன் - டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து போட ஒரு வாரம் மட்டும் சேர்ந்து வாழ சொல்கிறார் ஜீவா; அந்த ஒரு வாரத்தில் மன மாறுதல் ஏற்பட்டு இருவரும் சேர்வார்கள் என்பதை சொல்லணுமா என்ன ?

காமெடியை நம்பியே படமெடுத்துள்ளனர்...வேறு எந்த விஷயமும் இல்லை.. பார்க்கும் போது சிரித்து விடுகிறோம்.. ஆனால் அப்புறம் தான் அது மோசமான டபிள் மீனிங் வசனம் என புரிகிறது.. இப்படி இரட்டை அர்த்த வசனங்களில் தான் படம் முச்சூடும் நகர்கிறது.. ஹூம்

படம் பெட்டிக்குள் போனதில் எந்த ஆச்சரியமும் இல்லை !

அழகு கார்னர் 


டிவி பக்கம்: ஜோடி நம்பர் ஒன் 

T ராஜேந்தரை வைத்து கொண்டு மரண மொக்கை போடுகின்றனர். கூட இருக்கும் சதாவும் சரி இவரும் சரி, சுமாராக ஆடுவோரை கூட அருமை, ஆஹா ஓஹோ என்கிறார்கள்.. யாருமே வெளியேற்ற படுவதில்லை..

T ராஜேந்தர் அடுக்கு மொழியில் அறுத்து தள்ளுவதை கலந்து கொள்வோரே கேட்டு சிரி சிரி- யென சிரிக்கிறார்கள்.

மகள் டான்ஸ் நிகழ்ச்சி என இதனை தொடர்ந்து பார்த்து வந்தாள் .. அவளே விரைவில் ஒதுக்கி தள்ளி விடுவாள் என நினைக்கிறேன் !

தமிழக நிலவரம் 

ஒரு மாநில முதல்வர் இறந்து இவ்வளவு அமைதியாக - வன்முறையின்றி அடக்கம் செய்யப்பட்டு ஒரே நாளில் இயல்பு நிலை திரும்பியது ஆச்சரியமாக இருக்கிறது.. ! இதற்கு(ம்)  de monetization தான் காரணம் .. கையில் பணமில்லாததால் ரவுடிகளை கடைகள் உடைக்க பயன்படுத்த முடியவில்லை என்கிறார்கள் மோடி பக்தர்கள். எனக்கு அது சரியாக தோன்ற வில்லை; 2000 ரூபாய் நோட்டு கொடுத்தால் செய்ய மாட்டார்களா? அல்லது தஞ்சை இடை தேர்தலில் தந்தது போல் 500 ரூபா பழைய நோட்டு தந்தாலே ரைட்டு என இறங்க மாட்டார்களா?

நிச்சயம் முதல்வர் மரணத்தில் மர்மம் இருக்கிறது; 25 ஆண்டுக்கு முன் அமெரிக்காவில் எம்ஜியார் அவர்கள் இருந்த போது கூட சில புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டனர். ஏன் இப்போது எந்த படமும் எடுக்க வில்லை? வெளியிட வில்லை? ஏன் சசிகலா தவிர வேறு யாரும் முதல்வரை பார்க்க அனுமதிக்க பட வில்லை? இப்படி ஏராள கேள்விகளுக்கு விடையே இல்லை..

நிச்சயம் இது பற்றி ஒரு நேர்மையான விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளியாகும் ! அது நடக்கும் என தோன்ற வில்லை :(

போஸ்டர் கார்னர் 



கிரிக்கெட் கார்னர் 

இரண்டாவது மற்றும்  மூன்றாவது டெஸ்ட் மேட்சில் இந்தியா எளிதில் வென்றது; நான்காவது டெஸ்ட் நிஜமான சவாலாக இருக்க போகிறது; மும்பை விக்கெட்டில் 400 ரன் எடுத்துள்ளது  இங்கிலாந்து. இவ்வளவு ரன் எடுத்த எந்த அணியும் தோற்றது இல்லையாம் !

கோலி மற்றும் புஜாரா தொடர்ந்து நல்லபடியே பாட்டிங் செய்ய, அப்புறம்  அஷ்வின்,ஜடேஜா போன்றோரின் பங்களிப்பால் தான் இந்தியா தப்பித்து வருகிறது. துவக்க மற்றும் நடுநிலையில் பிற பேட்ஸ்மேன்கள் சொதப்பி   வருகின்றனர்.

அஷ்வின் விக்கெட்டுகள், ரன்கள் இரண்டிலும் அசத்தி வருவது அட்டகாசம். (அதுக்காக இவர் பாட்டிங்கை லக்ஷ்மனுடன் ஒப்பிட்டு வருகிறது ஒரு கூட்டம்.. அநியாயம் !) 

Thursday, December 8, 2016

சைத்தான் & பிங்க் - சினிமா விமர்சனம்

பிங்க் - ஹிந்தி

இவ்வருடத்தின் ஒரு அட்டகாசமான படம். இக்காலத்திற்கு மிக தேவையான படமும் கூட.


ஒரு பார்ட்டியில் 3 ஆண்கள் - 3 பெண்கள் சந்திக்கின்றனர். குடிக்கின்றனர். பின்னர் அந்த ஆண்களில் சிலர் பெண்களிடம் தவறாக நடக்க முயல, ஒரு பெண் அவர்களில் ஒருவனை மிக மோசமாக தாக்கி விட்டு சென்று விடுகிறார்கள்.

வசதியும், பின்புலமும் உள்ள அந்த பையன் பெண்கள் விபச்சாரிகள் என்றும்,தன்னை தொழிலுக்கு அழைத்து விட்டு, மறுத்ததால் கொல்ல முயன்றனர் என்றும் போலீசில் புகார் செயகிறான். பெண்களுக்காக வழக்கையெடுத்து நடத்தும் அமிதாப் வழக்கை எப்படி எதிர்கொண்டார் என்பது ரசிக்கத்தத்தக்க இப்படத்தின் கதை.

மிக அற்புதமான கோர்ட் சீன்கள் - அமிதாப்பின் இயல்பான நடிப்பு - தாப்ஸி உள்ளிட்ட பெண்களின் பதை பதைப்பு ...என ரசிக்க ஏராள விஷயங்கள் !

அனைத்தையும் தாண்டி 2 விஷயங்கள் தான் இப்படத்தை ஒவ்வொரு இளம் ஆணும், பெண்ணும்  காண  வேண்டியதாக்குகிறது !

நோ என்பது ஒரு வார்த்தையில்லை; அது ஒரு முழுமையான  சென்டென்ஸ் ! ஒரு பெண் நோ சொன்னால் - அது உங்கள் தோழியோ, காதலியோ, மனைவியோ , செக்ஸ் ஒர்க்கரோ - யாராய் இருந்தாலும் தொடக்கூடாது என்பது மிக அருமையாக - மனதை தைக்கும் படி சொல்லியிருக்கின்றனர் !

போலவே ஆண்களுக்கும் பெண்களுக்கும் வளர்க்கும் விதத்தில்  காணப்படும் வித்யாசம்.. ரொம்ப தெளிவாக முகத்தில் அறைகிற மாதிரி சொல்லியிருக்கின்றனர்.

தவற விடக்கூடாத நல்லதோர் படம் ! அவசியம் காணுங்கள் !

சைத்தான் 

எழுத்தாளர் சுஜாதாவின் ஆ நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம்.

Image result for saithan movie

கணினி இன்ஜினையராய் இருக்கும் ஒருவனுக்கு மண்டைக்குள் குரல் கேட்கிறது; அது மாடிக்கு போ; கீழே குதி என்கிற அளவு மோசமாக போக, மன நல மருத்துவரை நாடுகிறார்கள். எதனால் அப்படி நடந்தது, எப்படி சரியானது என்பது 130 நிமிட படம்..

நிச்சயம் வித்தியாச கதைக்களன்.. சொன்ன விதமும்  ஓகே; ஆயினும் சற்று சைக்கோ தனம் நிரம்பியது என பெண்களுக்கு அதிகம் பிடிக்கவில்லை; பில்ட் அப் நன்றாக இருந்தது; காரணமும் நாம் எதிர் பார்க்காத புது மாதிரி  விஷயம் தான்.. இருந்தும் எதோ ஒன்று குறைகிறது. இரண்டாம் பாதி நிச்சயம் அதிகம் கவரவில்லை..

காஸ்டிங் - சரியான ஒன்றாக இருந்தது; நாசர், சாரு ஹாசன் உள்ளிட்ட பொருத்தமான நடிகர்கள்.. காதல், ரொமான்ஸ் இவற்றுக்கு வேலை மிக கம்மி

வித்தியாச திரைக்கதையை தேடி எடுக்கும் விஜய் ஆண்டனிக்கு வாழ்த்துகள்

இம்முறை முதல்வர் மரணமும் சேர்ந்து கொள்ள, படம் நொண்டியடிக்கிறது.

வித்தியாச த்ரில்லர் படம் விரும்புவோர் ஒரு முறை காணலாம்.

Sunday, December 4, 2016

மாவீரன் கிட்டு - சினிமா விமர்சனம்


மாவீரன் கிட்டு: தலைப்பை கேட்டதும் என்ன தோன்றும்? இலங்கை தமிழர் போராளி கிட்டு அவர்கள் பற்றிய கதையோ என்று தானே.. அது தான் இல்லை ! இருப்பினும் இன்னும் ஒரு சமூக பிரச்சனையை தான் தொட்டுள்ளனர் !



கதை

மேல் சாதி- கீழ் சாதி என பாகுபாடு பார்க்கும் கிராமம் ஒன்று.. கீழ் சாதி மக்கள் என்று கூறி குறிப்பிட்ட சமூகத்தினர் சடலத்தை தங்கள் தெரு வழியே எடுத்து செல்ல கூடாது என்று கூறுகின்றனர்.. உயர் நீதி மன்றமே தீர்ப்பு தந்தும் அதை மதிக்க தயாராய் இல்லை சடலம் மட்டும் செல்லலாம் மற்றவர்கள் அல்ல என தூக்க கூட அனுமதிக்க வில்லை  .. படத்தின் இறுதியில் ஒரு மரணம் நிகழ்கிறது.. இம்முறை அம்மக்கள் அனைவரும் செல்கின்றனர்.. எப்படி என்பது தான் திரைக் கதை !

நடிப்பு

ஏறக்குறைய 2 ஹீரோ கதை.. விஷ்ணு மற்றும் பார்த்திபன்.. இருவருமே தங்கள் பாத்திரத்தை சரியாக செய்துள்ளனர்.

கருப்பு சட்டை, வேஷ்டி என படம் முழுதும் ஒரே காஸ்டியூமில் வந்தாலும் ஆழமான பாத்திரத்தில் அசத்துகிறார் பார்த்திபன்.

விஷ்ணுக்கு சவாலான பாத்திரம்.. இறுதியில் இப்படி தான் நடக்க போகிறது என தெரிவதால், அவர் பாத்திரம் பெற வேண்டிய இரக்கம் கிட்டாமல் போகிறது

ஸ்ரீ திவ்யா - முழுக்க காதலுக்கு முக்கிய துவம் தரும் கதை அல்ல. இருந்தும் தனது வாய்ப்பை சரியே பயன்படுத்தியுள்ளார்.

Image result for maaveeran kittu

எரிச்சல் வர வைக்கும் வில்லன் பாத்திரம் தொடர்ந்து வருகிறது.. ஹரி உத்தமனிற்கு  ! ஸ்டிரியோ டைப் ஆகாமல் பார்த்து கொள்ளுதல் நலம் (தொடரியிலும் இப்படி ஒரு மோசமான பாத்திரம் தான் அவருக்கு !)

இயக்கம்

சமூக அக்கறையுள்ள படம் எடுக்க நினைத்தமைக்கு வந்தனம். கதையில் சிறு காட்சி கூட தேவையில்லை என இல்லாமல் செல்கிறது படம்.

பாம்பு கடித்த பெண்ணை மாணவர்கள் தூக்கி சென்று காப்பாற்றும் காட்சி அருமை; சாதாரண தந்தை பாத்திரம்: மகளை கொன்று விட்டு போலீஸ் ஸ்டேஷன் செல்லும் காட்சி .. தமிழகத்தில் நடந்த சம்பவம் தான்.. அதிர்கிறது மனது

ஏனோ இரண்டாம் பாதி - முதல் பாதியின் விறுவிறுப்பையும், ரசிப்பையும் தர தவறி விடுகிறது.

கதையின் முக்கிய விஷயம்.. தெருவினுள் சடலம் மற்றும் அதனை தூக்கி செல்ல விடாமை.. உயர் நீதி மன்ற தீர்ப்பில் சடலம் மட்டும் செல்லலாம் என உள்ளது என காரணம் காட்டி - மறுபடி தீர்ப்பு வாங்கி வாருங்கள் என்கிறார்கள். முதல் முறை சரி.. அவசரமாய் அடக்கம் செய்ய வேண்டும்.. பின் நடந்ததை சொல்லி மீண்டும் ஒரு ஆர்டர் வாங்க முடியாதா என்ன? 

2 மணி நேர படம் .. 3 மணி நேரம் ஓடுவது போல் இருக்கிறது .. !


இமான் இசையில் சில பாடல்கள் இனிமை; பின்னணி இசை பொருத்தமாய் செய்துள்ளார். 

இயற்கை கொஞ்சம் சில லொகேஷன்கள் .. (அனைத்தும் தமிழகத்தில் தான் என நினைக்கிறேன் )

சூரியை ஏன் இவ்வளவு சின்ன பாத்திரத்தில் நடிக்க வைத்தனர் என தெரிய வில்லை; அவரும் அறிமுக படுத்திய இயக்குனர் என்பதால் நடித்து கொடுத்துள்ளார். மற்ற படி சினிமாவில் வராத பல முகங்கள் இயல்பாய் வந்து போகின்றனர்.. 

நிறைவாக 

சமூக அக்கறையுள்ள படம் தான்; ஆனால் இன்று மக்கள் அதிகம் எதிர்பார்ப்பது fun & entertainment என்பதால், படம் ஓட/ ஹிட் ஆக சாத்திய கூறுகள் மிக குறைவு !

தியேட்டர் கார்னர் 

ரொம்ப நாள் கழித்து சத்யம் தியேட்டருக்கு சென்றோம் (வேளச்சேரி அருகே வீடு என்பதால் பீனிக்ஸ் அல்லது PVR செல்வதே வழக்கம் )

சவுண்ட் சிஸ்டம், ஏசி எல்லாம் அருமை என்றாலும், சீட் இடைவெளி குறைவு - காருக்கு பார்க்கிங் 60 ரூபாயா? PVR மாலே பரவாயில்லை போலிருக்கு !

மற்றபடி மால் தவிர்த்த தியேட்டர்களில் சென்னையில் இதை விட சிறந்த தியேட்டர் இருக்கவே முடியாது !



Related Posts Plugin for WordPress, Blogger...