Saturday, December 28, 2013

2013 - சிறந்த 10 தமிழ் பட பாடல்கள்

ருட இறுதி வந்தாலே கை குறுகுறு என்கிறது.

பயம் வேண்டாம்.. சென்ற வருடங்கள் போல அதிக பதிவுகள் வராது; ஒரே ஒரு காரணம், நேரமில்லை !

இன்று வெளியூர் பயணம் துவங்குகிறது. பார்த்தவற்றில் சிறந்த 10 தமிழ் படங்கள் பற்றி பின்னர் எழுத எண்ணம் (நேரமிருப்பின்...)

ப்ளாகை அதிகம் வாசிக்காத மகள் பாட்டு என்றதும் - என்னோடு அமர்ந்து - இந்த 10 பாடல் லிஸ்ட்டை இறுதி செய்து கொடுத்தாள் ..:)

இவ்வருடத்தில் அதிகம் ரசித்த 10 பாடல்கள் இங்கு..
**********
கடல் - மூங்கில் தோட்டம்

டாப் 10 பாடல்களில் மற்ற பாடல்களுக்கு ரேன்க் இல்லை.  ஆனால் நம்பர் ஒன் மட்டும் இப்பாடல் தான். ... வருடம் முழுக்க - கேட்க கேட்க தெவிட்டவே இல்லை !



பியூர் ரகுமான் மேஜிக்....!  மெலடிக்கு  Definition இப்பாடல்.

அற்புதமான பாடல்களை சினிமா இயக்குனர்கள் படமாக்கும்போது கொடுமைப்படுத்துவது புதிதல்ல. மணிரத்னம் இப்பாடலை எப்படி சிதைத்தார் என இங்கு பார்க்கலாம்



ராஜா ராணி - சில்லென ஒரு மழை துளி

ராஜா ராணியில் பல பாடல்கள் அட்டகாசம் என்றாலும் இப்பாடலை தேர்ந்தெடுத்தது.... படமாக்கதிற்காக !

இப்பாடலின் பல இடங்கள் சென்னையில் தான் படமாக்கியதாக சொல்கிறார்கள். சென்னையில் இவ்வளவு அழகான இடங்களா என ஆச்சரியமாக இருக்கிறது !

சின்ன சின்ன சுவாரஸ்யங்கள் பாட்டு முழுதும் தெரியும்... பாரில் தண்ணி அடித்த பெண்ணை,  பெண் பார்க்க போகும் போது பார்ப்பது, திரும்பி கொண்டே பலூன் வெடிக்கும் சீக்ரெட் இப்படி...



வருத்தபடாத வாலிபர் சங்கம் - பாக்காதே பாக்காதே

மூங்கில் தோட்டத்திற்கு அடுத்து இவ்வருடம் அதிகம் ரசித்த பாடல் இதுவே . அப்பாடலை விட அதிக முறை இதன் வீடியோ வடிவத்தை பார்த்திருப்பேன்.. காரணம்..

1. என்னை மிக கவர்ந்த ஹீரோ மற்றும் ஹீரோயின்  .........

2. பாடல் கேட்க + பார்க்க செம சுவாரஸ்யம் !



" இந்த ஒரு பார்வையாலே தானே நானும் பாழானேன் " இந்த வரிகள் ஸ்ரீ திவ்யாவிற்கு அற்புதமாய் பொருந்துகிறது !சின்ன சின்ன முகபாவமாகட்டும் சிரிப்பாகட்டும் ஆண்களை கிளீன் போல்டாக்கி விடுகிறது.

பாட்டை அதன் அழகு கெடாமல் ரசனையுடன் படமாக்கிய இயக்குனருக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்.

அழகாகவும் இருந்து நன்கு  நடிக்கவும் செய்யும் நடிகைகள் கிடைப்பது மிக அரிது. ஸ்ரீ திவ்யா இன்னும் 10 வருஷமாவது தமிழில் நடித்து நம்மை மகிழ்ச்சிக்குள்ளாக்கட்டும் !



தலைவா - யார் இந்த சாலையோரம்

தலைவா படம் படு தோல்வியுற்றாலும் இந்த பாடல் ரசிக்கும்படி இருந்தது. விஜயை கிண்டல் செய்ய எத்தனையோ விஷயம் உண்டு; ஆனால்  டான்ஸ்சில் அசத்தி விடுகிறார்...அசத்தி  !



தங்க மீன்கள் - ஆனந்த யாழை மீட்டுகிறாய்

தந்தை - மகளின் நட்பைச் சொல்லும் இப்பாடல் ஒரே ஒரு மகளை பெற்ற எனக்கு பிடிப்பதில் ஆச்சரியமில்லை தான் !

இந்த பாட்டை பார்க்கும்போதெல்லாம் நானும், மகளும் தான் தெரிகிறோம்.. மகள்களை பெற்ற எத்தனை அப்பாக்களுக்கு இதே மாதிரி உணர்வு இருக்கிறதோ தெரிய வில்லை !



ஒவ்வொரு தந்தையும் உலகின் அத்தனை சந்தோஷங்களும் தன் மகளுக்கு கிடைக்க வேண்டுமென்று நினைக்கிறான்.. போலவே துயரத்தின் நிழல் கூட தன் மகள் மேல் படக்கூடாது என இளவரசி போல் வளர்க்கிறான். .(வாழ்க்கை அவளுக்கு பின்னர் வேறு வித முகத்தை காட்டுவது தனிக்கதை.....)

ஸ்ரீராம் பார்த்தசாரதியின் அற்புத குரல், முத்துகுமாரின் வரிகள்.. கேட்டு ரசியுங்கள்




விஸ்வரூபம் - உன்னை காணாத நான் இங்கு

பாடல் வரிகள் தெளிவாக புரியும் படி இருப்பதும், சங்கர் மகாதேவன் மிக நன்றாக பாடியிருப்பதும், ஆண்ட்ரியா மற்றும் பிற பெண்களும்  கியூட்



மரியான் - இன்னும் கொஞ்ச நேரம்

அற்புதமான மெட்டு மற்றும் இசையால் நம் மனதை மயக்குவது ரகுமானுக்கு கை வந்த கலை..அந்த வரிசையில் இன்னொரு மெலடி இது.

தனுஷ்- பார்வதி இருவரின் நடிப்பும் எப்படி மிளிர்கிறது..! படம் சொதப்பலாக அமைந்ததில் சற்று வருத்தமே .



பரதேசி - அவத்த பையா 

பரதேசி படம் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது; ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு நல்ல கிராமிய பாடல்... அவத்த பையா



எதிர் நீச்சல் - பூமி என்னை சுத்துதே 

மீண்டும் இன்னொரு சிவகார்த்திகேயன் பாட்டு. பாண்டிச்சேரியின் அழகான தெருக்கள்..ஜோக்கர் இப்போ ஹீரோ ஆனேன் போன்ற வரிகள் என பாடல் என்னை மட்டுமல்ல பலரையும் ஈர்த்து விட்டது.

இப்படத்தில் வரும் " எதிர் நீச்சலடி " பாடலும் எனக்கு இதே அளவு பிடித்த இன்னொரு பாடல் !



நேரம் - பிஸ்தா

மெலடி மீது தான் இயல்பாக மோகம் என்றாலும், இப்படி ஜாலியான பாட்டை கேட்டால் வீட்டிலேயே குத்தாட்டம் போடுவதுண்டு...  பலரையும்  இவ்வருடம் ஈர்த்த இன்னொரு ஸ்பீட் பாடல் காசு .. பணம் .. துட்டு.. மணி ..

அர்த்தமே இல்லாமல் .. அதே சமயம் கேட்க செம ஜாலியாய் இருப்பதால் இந்த பாடல் ரொம்பவே பிடித்து விட்டது !



**********
டாப் - 10 பரிசீலனையில் இருந்த மற்ற சில பாடல்கள்...

இவன் வேற மாதிரி - லவ்வுலே லவ்வுலே 



வத்திக்குச்சி - குறுகுறு கண்ணாலே 



******************
சென்ற வருட சிறந்த பாடல்கள் லிஸ்ட் ...

2009- சிறந்த 10 பாடல்கள் : இங்கு 

2010- சிறந்த 10 பாடல்கள் : இங்கு 

2011- சிறந்த 10 பாடல்கள் : இங்கு 

2012- சிறந்த 10 பாடல்கள் : இங்கு 

Wednesday, December 25, 2013

வானவில் - இரண்டாம் உலகம் - மாஸ் - பொன்மாலை பொழுது

பார்க்காத படம் - இரண்டாம் உலகம்

என்னதான் பல நண்பர்கள் இப்படத்தை பற்றி நெகடிவ் ஆக எழுதினாலும், " செல்வராகவன் படம் ....  எப்படி பார்க்காமல் இருப்பது?"  என அற்புதமான, நல்ல பிரிண்ட் வந்ததும் பொறுமையாக DVD வாங்கி வந்தேன்.

ஒரு வெள்ளியன்று மாலை படம் போட்டு பார்க்க துவங்க, சற்று நேரத்தில் " அப்பா, தூங்காதே ; எழுந்திரு " என மகள் எழுப்பினாள் . 3 முறை இதே கதை நடந்தது. !



கொஞ்ச நேரம் கழித்து பார்த்தால் - எனது மனைவி மற்றும் மகளும் தூங்கி விட்டனர். சரி வாங்க படுக்க போகலாம் என்று படத்தை ஆப் செய்து விட்டு தூங்க சென்று விட்டோம்

மறுநாள் விடாகண்டர்களாக எனது மனைவி மற்றும் மகள் - பகல் நேரத்திலேயே படத்தை போட்டு பார்க்க - இம்முறையும் கால் வாசி படத்தில் இருவரும் தூங்கி விட்டனர்..

இதற்கு மேல் ரிஸ்க் எடுத்து கரன்ட் பில்லை  அதிக படுதிக்குற மாதிரி இல்லை !

தூக்கம் சரியே வராமல் பாதிக்கப்பட்டவர்கள் இப்படத்தின் நல்லதொரு பிரிண்ட் வாங்கி தினம் இரவில் பார்த்து இன்புறலாம் !

மாஸ் ஹோட்டல் ஆதம்பாக்கம்

பதிவர் நண்பர் - மயில் ராவணன் இந்த ஹோட்டல் பற்றி அவ்வப்போது சொல்லியிருக்கிறார். பல முறை இந்த ஹோட்டல் வழியே செல்ல நேர்ந்தாலும் உண்ண முடிந்ததில்லை.

அண்மையில் நண்பன் நந்து சென்னை வந்திருந்த போது அவனது மகனுடன் நாங்கள் இருவரும் சென்றிருந்தோம்.

இங்கு ஸ்பெஷல் - புரோட்டா தான் ! சாப்ட் ஆக - டெலிசியஸ் புரோட்டா மற்றும் சுவையான குருமா - தற்போது மாடியில் ஏசி அறையும்  இயங்குகிறது ! டிவியில் கிரிக்கெட் பார்த்தவாறு - ஜாலியான அரட்டையுடன் பரோட்டாவை  சுவைத்து மகிழ்ந்தோம்

விமர்சன பாணியில் சொல்லணும்னா , மாஸ் ஹோட்டல் - மரண மாஸ் ! டோன்ட் மிஸ் இட் !

இடம் - ஆதம்பாக்கம், வண்டிக்காரன் தெரு மிக அருகில் !

படித்ததில் பிடித்தது 

Plan while others are Playing,
Listen while others are Talking,
Study while others are Sleeping,
Decide while others are Delaying,
Prepare while others are Daydreaming,
Act while others are Thinking,
Begin while others are Procrastinating, and
Persist while others are Quitting.

கிரிக்கெட் கார்னர்

அண்மையில் இந்தியா - தென் ஆப்ரிக்கா இடையே நடந்த முதல் டெஸ்ட் பல சுவாரஸ்யங்களை தந்தது.

* இந்திய பேட்ஸ்மேன்கள் வேக பந்துக்கு திணறுவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்திருக்க, கோலி மற்றும் புஜாரா ஆட்டம் - அசத்தி விட்டது !

புஜாரா - ட்ராவிடுக்கு சரியான replacement   ! அதற்குள் எப்படி சொல்லலாம் என்பவர்கள் புஜாராவின் ஆவரேஜ் 70 என்பதை அறிக !

புஜாரா விரைவில் ஒரு நாள் போட்டிகளிலும் இடம் பெற வேண்டும். அடுத்த உலக கோப்பை வெளிநாட்டில் நடக்க உள்ளதால் - புஜாராவும் ஒரு நாள் அணியில் இடம் பெறுவது அவசியம் !

கோலி - இரண்டாம் இன்னிங்க்சில் செஞ்சுரி தவற விட்டது சிறு வருத்தமே.

மற்றபடி இளம் வீரகளில் தனது determination  மற்றும் aggressiveness- ஆல் பெரிதும் கவர்கிறார் கோலி !

இறுதி நாளில் அவ்வளவு பெரிய ஸ்கோர் அடிக்கவே முடியாது என்று நினைத்ததை பொய்யாக்கி டீ  வில்லியர்ஸ்  மற்றும் டூ ப்ளஸ்சி ஆடிய ஆட்டம் இந்திய பார்வையாளர்களை டென்ஷன் ஆக்கி விட்டது

இருவரும் அவுட் ஆனதால் ஜஸ்ட் எஸ்கேப் !

அடுத்த ஆட்டத்தில் இன்னும் பவுன்சி பிட்ச் இந்தியர்களை எதிர் நோக்கும் என தோன்றுகிறது !

தொல்லை காட்சி என்ன ஆச்சு ?

திங்கள் அன்று தொடர்ந்து வெளியாகிய தொல்லை காட்சி மிக அதிகம் பேர் வாசிக்கும் ஒரு பதிவாக இருந்து வந்தது

இப்போதெல்லாம் பதிவு எழுதுவதே குறைந்து விட்டது என்றாலும் டிவி பார்ப்பது அநேகமாய் நின்று விட்டது.

மகள் 10 ஆம் வகுப்பு படிக்கிறார். எனவே  கேபிள் கட் செய்ய பட்டு விட்டது !

குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகள் மட்டும் கணினி மூலம் அனைவரும் பார்த்து கொள்கிறோம்

டிவி இல்லாமல் இருப்பதால் அனைவரும் நிறையவே பேசி கொள்கிறோம். இதில் நல்லதும் இருக்கு.. கெட்டதும் இருக்கு...

நல்லது சரி என்ன கேட்டது என்கிறீர்களா ? நிறைய பேசினால் கடைசியில் சண்டையில் போய் சில நேரம் முடிந்து விடுகிறது... !

என்னா பாட்டுடே 

தமிழின் மிகச் சிறந்த 100 பாடல்கள் என பட்டியலிட்டால், அதில் இடம் பிடிக்கத் தக்க பாடல் இது ! (ஆடியோ வடிவத்தை சொல்கிறேன் )

வைரமுத்து எழுதிய முதல் பாடல் இது என்பதுடன், இன்னும் ஏராள சம்பவங்கள் இக்கதை பற்றி சொல்லுவர். வைரமுத்து மனைவி பெயர் பொன்மணி என்பதால் - "பொன் " என்று துவங்கும் படி தனது முதல் பாடல் அமைத்ததாகவும், இப்பாடல் ரிக்கார்டிங் நடந்த அன்று தான் வைரமுத்து- பொன்மணி தம்பதிக்கு முதல் குழந்தை பிறந்ததாம் !

பல வரிகள் அற்புதம் என்றாலும் ...

"வானம் எனக்கொரு போதி மரம்;
நாளும் எனக்கது சேதி தரும் " என்ற வரிகளும்

" வான மகள் நானுகிறாள்; வேறு உடை பூணுகிறாள் " என்ற வரிகளும் இன்றைக்கும் ரசிக்க வைக்கிறது  !

பாடலில் நடிக்கும் ராஜசேகர் பின்னாளில்  ராபர்- ராஜசேகர் என ஒளிப்பதிவாளர் - இயக்குனர் ஆனார். இன்று சரவணன் - மீனாட்சியில் குயிலி கணவராக நடிப்பவர் இவரே !

80 களில் சென்னை ட்ராபிக் மற்றும் பேருந்துகள் பாடலில் காண காமெடியாக உள்ளது

வயலின் மற்றும் ப்ளூட் விளையாடும் இப்பாடலை கேட்டு ரசியுங்கள் !



நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்த்துமஸ் நல் வாழ்த்துகள் !

Tuesday, December 24, 2013

என்றென்றும் புன்னகை - சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் கதையா என்று  அலுக்க வைக்காமல் சுவாரஸ்யமாக செல்லும் படம் என்றென்றும் புன்னகை !

தமிழ் சினிமாவில்  " ஒரு டிபரண்ட் ஆன லவ் ஸ்டோரி " என அடிக்கடி சொல்வார்கள். இப்படம் மெய்யாலுமே அத்தகைய ஒரு கேட்டகரி தான் !

கதை 

தனது அம்மா  - அப்பாவை விட்டு ஓடி போனதால் பெண்களை வெறுக்கிறார் ஜீவா. நெருங்கிய நண்பர்கள் வினய் மற்றும் சந்தானம் ! இவர்கள் மூவரும் கல்யாணமே செய்து கொள்ள மாட்டேன் என " மொட்டை பசங்களாக" சுற்றி வர, வினய் மற்றும் சந்தானம் திடீரென ஒரு நாள் கல்யாணம் செய்து கொள்கிறோம் என கிளம்பி விடுகிறார்கள். நண்பர்களை பிரிந்த ஜீவா - திருமணம் செய்து கொண்டாரா என்பதை சொல்கிறது இரண்டாம் பாதி.

பிடித்தது - 

த்ரிஷா !

அம்மணி 15 வருஷத்துக்கு மேலா நடிக்கிறார். இப்படத்தில் செம கியூட் !  நாள் ஆக - ஆக தான் நடிப்பில் மெச்சுரிட்டி கூடுது . வெரி குட் பெர்பார்மான்ஸ் !




ஜீவா - செம வித்யாசமான பாத்திரம். வில்லனே இல்லாத இக்கதையில் நெகடிவ் பாத்திரம் என்றால் - அது ஜீவா மட்டும் தான். ஈகோ-வின் extreme -ஐ  ஜீவா பாத்திரம் வழியே காண்பிதுள்ளார் இயக்குனர்.

கோபம் வர வைக்கும் ஜீவா பாத்திரம் மீது - இறுதி கட்டங்களில் நமக்கு இரக்கம் வர - இயக்குனர் ஜெயித்து விட்டார் !

சந்தானம் - சிறு இடைவெளிக்கு பின் சிரிக்க வைத்துள்ளார். ( சில பழைய ஜோக் மற்றும் சில அசிங்க காமெடியை குறைவான அளவென்பதால் மன்னிக்கலாம் !)

தண்ணி அடித்து விட்டு வந்து மனைவி முன் சந்தானம் அடிக்கும் லூட்டி - 5 நிமிடம் நம்மை விடாமல் சிரிக்க வைத்தது



அழகு ஆண்ட்ரியா ! நடிகையாகவே  வந்து போகிறார்.

இடைவேளைக்கு பின் த்ரிஷா - ஜீவா சம்பந்தப்பட்ட காட்சிகள் - அவர்கள் நட்பு +  சண்டையை மிக இயல்பாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்லியிருப்பது ! இருவருமே அனுபவம் வாய்ந்த நடிகர்கள் என்பதால் இக்காட்சிகளை மிக ரசிக்க முடிகிறது !

பிடிக்காதது 

இசை - "ப்ரியா - ப்ரியா" தவிர மற்ற பாட்டுகள் ரொம்ப சுமார். காதல் கதைக்கு பாடல்கள் ரொம்ப முக்கியம். ஹாரிஸ் சொதப்பிட்டார்

படம் எந்த அவசரமும் இன்றி நிதானமாக நகர்கிறது - இது தொய்வு விழுந்த உணவர்வை சற்று தருகிறது

***********
மொத்தத்தில்

நிச்சயம் பார்க்க கூடிய டீசண்ட் படம்;

காமெடி மற்றும் ஜீவா -த்ரிஷாவுக்காக ஒரு முறை பார்க்கலாம் !

Wednesday, December 18, 2013

நவீன சரஸ்வதி சபதம், இன்சிடஸ் -2 & மெமரீஸ் - விமர்சனம்

ண்மையில் கண்ட ஒரு ஆங்கிலம், ஒரு தமிழ் மற்றும் ஒரு மலையாள படம் பற்றிய சுருக்கமான விமர்சனம் இது:

இன்சிடஸ் -2  (ஆங்கிலம்) 

பொதுவாய் மிரட்ட வைக்கும் பேய் படங்களை சுத்தமாய் பார்க்காத ஆள் நான். சின்ன வயதிலிருந்தே  அப்படியே வளர்ந்தாச்சு. இனிமேயா மாற்றி கொள்ள முடியும் ?

ஆனா நம்ம வீட்டம்மாவுக்கு பேய் (படங்கள்) என்றால் உசிரு.! :)



பெண் வேறு இந்த படத்தை பார்த்தே ஆகணும் என அடம் பிடிக்க, ஒரு நள்ளிரவில் DVD -ல் பார்க்க துவங்கினோம்.

ஆங்கில படத்துக்கு ஆங்கில சப் டைட்டில் இருந்தும் கூட படத்தை புரிந்து கொள்வது மிக கடினமாக இருந்தது. ஒரு மாதிரி குன்சாக கலந்து பேசி தான் கதையை புரிந்து கொள்ள வேண்டியிருந்தது

கதை பற்றி எது சொன்னாலும் சுவாரஸ்யம் குறைந்து விடும்.

வீடுதிரும்பல் பரிந்துரை - பேய் மற்றும் ஹாரர் பட பிரியர் என்றால் பாருங்கள். 2 நிமிடத்துக்கு ஒரு முறை அலற/ திடுக்கிட வைக்கிறார்கள்.

நவீன சரஸ்வதி சபதம் 

ரொம்ப மாடர்ன் ஆன சிவலோகம். கணினியில் ஜாலியாக விளையாடும் சிவன். ஆங்கிலம் பேசும் பார்வதி என ஆரம்பம் நல்லா தான் இருந்துச்சு. Plot கூட சுவாரஸ்யமே. ஆனால் இடைவேளைக்கு மேல் உட்கார முடியலை ! பாதி படத்துக்கு பின் ரம்பம்னா ரம்பம் - கழுத்து அறுந்து போச்சு.

ஹீரோயின் நிவேதா தாமஸ் ஓரளவு நல்லா இருந்தார். அவரும் பாதி படத்துக்கு மேலே வர வாய்ப்பு இல்லாம போயிடுது.



வீடுதிரும்பல் பரிந்துரை - டிவியில் போடும்போது முதல் பாதி மட்டும் பார்க்கலாம் !

மெமரீஸ் ( மலையாளம்)

படம்னா இது படம் ! அட்டகாசம் !

க்ரிப்பிங்  ஆன ஒரு கதை. சுவாரஸ்யமான திரைக்கதை. நகம் கடிக்க வைக்கும் காட்சிகள். புத்திசாலி தனமான கிளைமாக்ஸ் என எல்லா விதத்திலும் கவர்கிறது படம்.



பிரிதிவி ராஜ் - ரொம்ப இயல்பா நடிச்சிருக்கார். மற்ற பாத்திரங்களும் Very apt !

மனைவியை இழந்து வாடும் ஒரு போலிஸ் காரர் கதை என்ற விதத்தில் வேட்டையாடு விளையாடு வாசம் இருந்தாலும் - அந்த ஒரு வரியுடன் ஒற்றுமை நின்று விடுகிறது ! இது டோட்டலி வேற விதமான படம் !

வீடுதிரும்பல் பரிந்துரை -   அவசியம் பாருங்கள் இந்த மலையாள படத்தை !

Wednesday, December 11, 2013

வானவில் 11-12-13

பார்த்த படம் 1- வில்லா - பீட்சா - 2

சற்று வித்யாசமான கதை களம் தான். ஆனால் அமானுஷ்ய காட்சிகள் இதோ வருது, அதோ வருது என சொல்லி சொல்லி கடைசியில் தூக்கம் தான் வந்தது.

ஒரே வீட்டுக்குள் நடக்கும் சம்பவம் என்பதால் பீட்சா - 2 என்று விளம்பரம் செய்தனர் போலும். ஆனால் பீட்சா -வின் செய்நேர்த்தி இங்கு மிஸ்ஸிங்.

கதை பற்றி என்ன சொன்னாலும் சுவாரஸ்யம் குறைந்து விடும். ஒரு முறை பார்க்க தக்க படம் தான் ! நேரமிருந்தால் காணுங்கள் !

பார்த்த படம் -2 - ஜன்னல் ஓரம் 

விமல், பார்த்திபன், விதார்த் நடித்த மலையாள ரீ மேக்.



மலை பகுதியில் பயணிக்கும் பேருந்தும், அதை ஒட்டிய நகைச்சுவையும் சற்று கிச்சு கிச்சு மூட்டியது. ஆனால் பின் க்ரைம் த்ரில்லர் போல சென்று எங்கோ திசை மாறி விட்டது

நடிகர்கள் விஜய், சூர்யா துவங்கி பலரும் நடிக்க வந்த போது மிக சுமாராகவும், பின் நடனம், சண்டை, நடிப்பு என எல்லா டிபார்ட்மெண்ட்டிலும் சிறிது சிறிதாக வளர்ச்சி அடைவது வழக்கம். ஆனால் விமல் சற்றே வித்யாசமாக - ஆரம்ப படங்கள் ( பசங்க மற்றும் களவாணி)  ஓரளவு நன்கு நடித்தவர் அதன் பின் ஒரே வித நடிப்பில் அலுப்பூட்டுகிறார்.

இதே படத்தில் நடித்துள்ள விதார்த் எவ்வளவு அனாயசமாக நடிக்கிறார் ! விமல் தம்பி நடிப்பில் கற்று கொள்ள நிறைய இருக்கு !

ஒரு சுமாரான மலையாள படம் - அதை ரீ மேக் செய்து இன்னும் சோதித்து விட்டனர்.

ரொம்ப ரொம்ப சுமார் !

அய்யாசாமி கார்னர் 

" எப்ப கார் வாங்க போறே ?" - 1998

" டேய் .. ஒரு கார் வாங்குடா " - 2003

" ஏண்டா கார் வாங்க மாட்டேங்குறே ? என்ன தாண்டா உனக்கு பிரச்சனை ?" - 2008

" அப்பா.. இந்த வருஷத்துக்குள்ளே ஒரு கார் வாங்கிடு ... இல்லாட்டி அவ்ளோ தான். உன்கூட நான் பேசவே மாட்டேன் " - 2013

அண்ணன், அக்கா, நெருங்கிய நண்பர்கள் என பலரும் 15 வருடத்துக்கும் மேலாய் திட்டி தீர்த்து விட்டனர். அப்போதெல்லாம் மசியாத அய்யாசாமி மகளின் பேச்சுக்கு மட்டும் கட்டுப்பட்டு விட்டார்...

ஆம். நேற்றைய தினம் அய்யாசாமி ஒரு கார் புக் செய்துள்ளார். தனது 42 ஆவது வயதில் - இன்று காலை முதல் சின்சியர் சிகாமணியாக கார் டிரைவிங் க்ளாஸ்ம் செல்ல துவங்கி விட்டார்.

ஆகவே - மடிப்பாக்கம் மற்றும் வேளச்சேரியில் - நடந்தோ - டூ வீலரிலோ பயணிக்கும் மக்கள் சற்று எச்சரிக்கையாக இருக்கும் படி அறிவுறுத்தப்படுகிறார்கள்

தவளை கதை 

ஓரிடத்தில் மலை ஏறும் போட்டி நடக்கிறது. அதில் கலந்து கொள்ள நிறைய தவளைகள் தயாராக இருக்கின்றன.

அது செங்குத்தான மலை என்பதால் " இதில் எப்படி ஏறுவது?" என்கிறது ஒரு தவளை. இன்னொரு தவளை யோ  "இதில் யாரும் ஏறவே முடியாது" என்கிறது.

" இதில் ஏறுபவர்கள் யாரும் உயிரோடு இருப்பதில்லை" என்கிறது மூன்றாவது தவளை

இப்படியே ஆளுக்காள் சொல்ல ஏறும் முன்பே தவளைகள் துவண்டு போகின்றன.

போட்டி ஆரம்பித்து சில தவளைகள் ஏற முயன்றும் கூட அந்த காமன்ட்கள் ஏற்படுத்திய பயத்தில் அவையும் கீழே விழுந்து விடுகின்றன

இதில் ஒரே யொரு தவளை மட்டும் எப்படியோ தட்டு தடுமாறி எப்படியோ உச்சிக்கு போய் பரிசும் வாங்கி விட்டது

அப்புறம் தான் தெரிந்தது பரிசு பெற்ற அந்த தவளைக்கு காத்து கேட்காது என்கிற விஷயம் !

நம்மை சுற்றி நடக்கும் பல விஷயங்களில் நாமும் காது கேட்காதவர்கள் போல் நடந்து கொண்டால் நாமும் நம் இலக்கை ஜெயித்த அந்த தவளை போல் அடையலாம்"  இந்த கதையை ஒரு விழாவில் சொன்னது சூப்பர் ஸ்டார் ரஜினி !

என்னா பாட்டுடே 

இன்றைய தேதியை கவனித்தீர்களா?

11-12-13 !  வித்யாசமான நாள் இல்லை ?

டிசம்பர் 11- பாரதியார் பிறந்த நாள். டேப் ரிக்கார்டர் இருந்த கல்லூரி காலத்தில் ஒரு கேசட் முழுதும் பாரதியார் பாடல்களை ரிக்கார்ட் செய்து கேட்டு கொண்டிருப்பேன்.



நிற்பதுவே நடப்பதுவே - ராஜாவின் இசையில், ஹரீஷ் ராகவேந்திராவின் இனிய குரலில்...




போஸ்டர் கார்னர்


முகநூலில் கிறுக்கியவை

எந்த ஒரு செயலையும் தொடங்குவது தான் கடினம். தொடங்கிய பின் மற்றவை தானாகவே நடக்கிறது. நம்மில் பலரும் எத்தனையோ விஷயங்களை "அப்புறம் செய்யணும்" என்றே துவங்காமல் இருந்து விடுகிறோம்.

போலவே தொடங்கிய ஒரு நல்ல விஷயத்தை சரியாக முடிப்பது இன்னொரு பெரிய சாலஞ்ச். (மாடிக்கு ஒரு பீரோவை தூக்கி செல்லும்போது கடைசி சில படிகளில் நிரம்ப திணறுவோம்.. நினைவிருக்கா? எந்த ஒரு போட்டி ஓட்டத்திலும் கடைசி சில நிமிடம் இழுத்து பிடித்து ஓடுவது தான் மிக பெரிய சவால் !)

எப்படி தொடங்குவது, எங்கே சரியாக முடிப்பது இதை சரியாக செய்ய துவங்கினால் - நினைத்த எதையும் அடையலாம் !

எதையும்.. எதையும்.. எதையும்... !

இதையே வடிவேலு பாணியில் சொல்லணும்னா " எதையும் ப்ளான் பண்ணி செய்யணும்... ஓகே?"

************
அருமையான (!!??) சிந்தனையெல்லாம் வண்டி ஓட்டும் போது மனதில் வந்து, வண்டியை நிறுத்தும்போது மறைந்து போகிறது.

நம்ம முகநூல் பிரபலங்கள் எல்லாம் எப்படித்தான் நினைவில் வச்சு போடுறாங்களோ ?

Friday, December 6, 2013

வேலை செய்யும் நிறுவனத்தை இணையத்தில் திட்டலாமா?

ன்றைக்கு இணையத்தில் எழுதுவோரில் பெரும்பாலானோர் இந்தியாவிலோ, வெளிநாட்டிலோ - ஏதோ ஒரு நிறுவனத்தில் பொட்டி தட்டுவோர் தான். சொந்த தொழில் புரிந்தவாறே தொடர்ந்து எழுதும் சிலர் உண்டெனினும் அவர்களை விரல் விட்டு எண்ணி  விடலாம் !

எந்த ஒரு நிறுவனமும் "அற்புதமான ஒன்று " என சொல்லி விட முடியாது .. எந்த மனிதரிடம் தான் குறைகளே இல்லை..நிறுவனமும் மனிதர்களால் ஆனது தானே ?

நான்கு பேர் எங்கு ஒன்றாய் சேர்ந்தாலும் -  பாலிடிக்ஸ்-சும் சேர்வது இயல்பு. நிறுவனமும் விதி விலக்கல்ல. "வல்லான் வைத்ததே சட்டம்" என்பது  எங்கும் பொருந்தும் !

முஸ்தீபுகள் போதும். விஷயத்துக்கு வருவோம்..

Blog- பேஸ்புக் - கூகிள் பிளஸ் - டுவிட்டர் என இணையத்தின் பல இடங்களிலும் நமது கருத்துக்களை, வருத்தங்களை, சந்தோஷத்தை, ஏமாற்றத்தை பகிர்ந்த வண்ணம் இருக்கிறோம். இதில் நாம் வேலை செய்யும் நிறுவனத்தில் நமக்கு கிடைக்கும் கசப்பான அனுபவம் பற்றி எழுதலாமா என்பது பற்றி சில கருத்துக்கள் இங்கு ......
***************
னக்கு தெரிந்து இணையத்தில் எழுதுவோரில் 90 % க்கும் அதிகமானோர் தங்கள் நிறுவனத்தின் குறைகளை பற்றி மூச்சு விடுவதில்லை .. ஆனால் ஒரு சிலர் அவ்வப்போது தங்கள் மேனேஜர் மீதும், நிறுவனம் மீதும் சில வருத்தங்களை பதிவு செய்யவே செய்கிறார்கள். இப்பதிவு அவர்களுக்காக தான் !

வள வளா என்று இழுக்காமல் நேரடியே சொல்லி விடுகிறேன் - என்னை பொறுத்த வரை - நாம் வேலை செய்யும் நிறுவனம் - அல்லது அங்கு கிடைக்கும் கசப்பான அனுபவம் அல்லது மனிதர்கள் பற்றி  எழுதுவதை முழுதும் தவிர்க்க வேண்டும் என்றே நினைக்கிறேன் ! இதனை ஒரு பதிவராக மட்டுமல்லாது - ஒரு நிறுவனத்தின் சட்ட விஷயங்களை நிர்வகிக்கும் மனிதராகவும் சொல்கிறேன் என்பதை அறிக !

ஏன் நிறுவனம் பற்றி  எழுத கூடாது?

சட்ட ரீதியான விஷயங்களுக்கு முன் தார்மீக ரீதியில் சில விஷயங்கள் :

வீடோ, அலுவலகமோ - எல்லா இடங்களிலும் பிரச்சனைகளும்,  புரிந்து  கொள்ளாமையும் இருக்கவே செய்யும். அதற்காக வாயை மூடி கொண்டிருக்க வேண்டுமென்று இல்லை. அந்தந்த பிரச்சனைகளை அங்கங்கே சந்திக்க வேண்டும்.

எனக்கும் நிறுவனங்களில் பல முறை கருத்து வேறுபாடுகள் வருவதுண்டு. அவற்றை அங்கேயே சர்வ நிச்சயமாக பேசி விடுவேன். எதையும் உள்ளுக்குள் வைத்து கொண்டு குமுறுவது ரத்த அழுத்தத்தை தான் அதிகரிக்கும்.

ஆனால் கருத்து வேறுபாட்டை முடிந்த வரை எவ்வளவு மென்மையாக சொல்ல முடியுமோ அவ்வளவு மென்மையாக சொல்ல முற்படுவேன். சில நேரங்களில் நம் பேச்சு எடுபடும். பல நேரங்களில் படாது. சின்ன விஷயம் என்றால் வடிவேலு மாதிரி "ரைட்டு விடு " என போய் விடுவேன்.

நமது எண்ணங்களுக்கு மாறான - சில அடிப்படை விஷயங்களில் கருத்து வேறுபாடு எனில் - அவற்றுக்காக வேலையை உதறிய சம்பவம் 3 முறை எனக்கு நடந்திருக்கிறது. அந்த ஒவ்வொரு நிகழ்விலும்  எனக்கு உடன்பாடில்லாத விஷயங்கள் தொடர்வதால் - பொறுமையாக ஓரிரு மாதத்தில் வேறு வேலை பார்த்து கொண்டு வெளியில் வந்திருக்கிறேன்.

அத்தகைய நிகழ்வுகளின் போது எனது குடும்பம் மற்றும் மிக நெருங்கிய ஒரு சில நண்பர்கள் தவிர மற்ற யாரிடமும் (குறிப்பாக புதிதாக இண்டர்வியூ செல்லும் இடத்தில்) ஏற்கனவே வேலை செய்த நிறுவனத்தின் குறைகளை பற்றி பேசியது கிடையாது. காரணம் ரொம்ப சிம்பிள் -  வேற கம்பனியை பற்றி தவறாய் பேசுபவன் நாளை நம் கம்பனி பற்றியும் இப்படி பேசுவான் என இன்டர்வியூவில் உள்ளவர்கள் நினைப்பார்கள் என்ற லாஜிக் தான் !

எனது அனுபவம் சொல்வது - இதனை எழுத எனக்கு தகுதி இருக்கிறது என்பதற்காக மட்டுமே. மற்றபடி எனது சுய பெருமை பேச அல்ல !

ஆக - தார்மீக ரீதியில் சொல்ல வேண்டுமென்றால் - நிறுவனத்தின் நடவடிக்கைகள் பிடிக்கலை என்றால் பேசி பார்க்கலாம் - அப்போதும் அவர்கள் மாறலை என்றால் - பொறுமையாய் அடுத்த கடை பார்த்து விட்டு நடையை கட்டலாம்.(அதுக்குன்னு வருஷத்துக்கு ரெண்டு மூணு கம்பனி மாற சொல்லலை தம்ப்ப்ப்ரி )

சரி இப்போது சட்ட மற்றும் தனிப்பட்ட விஷயங்களுக்கு வருவோம் :

1. நாம் இணையத்தில் நிறுவனம் பற்றி எழுதியதை - தனது பாஸ் அல்லது HR படித்தால் என்ன நினைப்பார்கள்- என்ன ஆக்ஷன் எடுப்பார்கள் என்ற எண்ணம் இருப்பதால் தான் பலரும் எழுதுவதில்லை.

"அஞ்சுவது அஞ்சாமை பேதைமை "- உண்மையில் மேலே சொன்ன பயம் நல்லது !

இது பற்றிய கவலையில்லாதோர் தான் நிறுவனம் பற்றிய தங்கள் மனக்குமுறலை இணையத்தில் எழுதுகிறார்கள்.

நீங்கள் வேலைக்கு சேரும்போது பல்வேறு டாக்குமென்டுகளில் கையெழுதிட்டிருப்பீர்கள். அவற்றில் ஒன்று "Non Disclosure Agreement". இதில்
நிறுவனம் குறித்த எந்த ஒரு ரகசியத்தையும் வெளியில் சொல்ல மாட்டீர்கள் என்ற ஒரு வரி சர்வ நிச்சயமாக இருக்கும். கூடவே அப்படி சொன்னால் - அதற்கு என்ன தண்டனை என்பதுவும் கூட லேசாக சொல்லப்பட்டிருக்கும்.

நீங்கள் நிறுவனம் பற்றி எழுதுவதை அவர்களே பார்த்தால் -  முதலில் இதனைத்தான்  ("Non Disclosure Agreement") கையில் எடுப்பார்கள்.


நாம் சொல்கிற எந்த பதிலும் எடுபடாது. சில நேரங்களில் முதல் முறையே நாம் வெளியேற நேரிடலாம். சில நேரம் வார்னிங் தந்து பின் நமது இணைய நடவடிக்கையை தொடர்ந்து கண்காணிக்கலாம்

இணையத்தில் நிறுவனம் குறித்த நமது கோபத்தை பதிவு செய்வதை நாம் வேலை செய்யும் எந்த நிறுவனமும் விரும்புவதில்லை - பொறுத்து கொள்வதில்லை என்பதை அறிக !

2. புதிதாக ஊழியர்கள் வேலைக்கு வரும்போது, இணையத்தில் (குறிப்பாக முகநூல்) அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை பார்வையிடுவது பல்வேறு நிறுவனங்களில் pre induction -ன் ஒரு முக்கிய அங்கமாக மாறி கொண்டிருக்கிறது. என்னை போல நிறுவனத்தில் லீகல் வேலைகளை கவனிக்கும் நண்பர்கள் பலரும் இத்தகைய சம்பவங்களை பகிர்கிறார்கள்.

அரசியல் சார்ந்தோ, அல்லது சதா சர்வ காலம் முகநூலில் புழங்குபவராகவோ, தான் வேலை செய்யும் நிறுவனத்துக்கு எதிராய் எழுதுபவராகவோ இருந்தால் எடுத்தவுடன் நிராகரித்து "ஆபர் லெட்டர் " வழங்குவதையே நிறுத்தலாம்.

சில நிறுவனங்கள் இதை வேறு விதமாக அணுகுவர். பொய்யான எக்ஸ்பீரியன்ஸ் சர்ட்டிபிகேட் அல்லது இணைய புழக்கம் அதிகம் உள்ள மனிதர்கள் வேலைக்கு வந்து விட்டால் சரி கொஞ்ச நாள் போகட்டும் என அவர்கள் வேலையில் எப்படி இருக்கிறார்கள் என பார்ப்பார்கள். வேலையில் பிரச்சனை என்றால் - அதை சொல்லி அனுப்பாமல் மேலே சொன்ன இரண்டு காரணங்களில் ஒன்றை சொல்லி வெளியே அனுப்புவார்கள்.

"ஒரு கம்பனியில் வேலை இல்லாவிட்டால் இன்னொரு கம்பனி " என்று எளிதாக சொல்லலாம். ஆனால் " முன்பு வேலை செய்த நிறுவனம் பற்றி தவறாக எழுதிய நபர் புதிதாக வேலைக்கு சேரும் நம் நிறுவனம் பற்றியும் எழுத மாட்டார் என்பது என்ன நிச்சயம்?"  என எந்த நிறுவனமும் யோசிக்கும். இதனை நினைவில் கொள்க !

******************
ஏற்கனவே சொன்ன விஷயம் தான் - நிறுவனத்தில் ஒரு விஷயம் பிடிக்கா விடில் அங்கேயே பேசி விடுதல் உத்தமம் ! இணையத்தில் அல்ல !

நன்றி !
Related Posts Plugin for WordPress, Blogger...