Friday, December 31, 2010

வீடுதிரும்பல் விருதுகள் 2010

எழுத்தாளர் சுஜாதா வருடா வருடம் செய்யும் பணி இது. அவர் மானசீக சிஷ்யன் கடந்த சில வருடங்களாக தொடர்கிறேன். இந்த வருட விருதுகள் &இந்த ஆண்டின் சில முக்கிய நிகழ்வுகள்.


சினிமா விருதுகள்

சிறந்த இசை அமைப்பாளர்

ரஹ்மான் (விண்ணை தாண்டி வருவாயா & எந்திரன்)
G.V. பிரகாஷ் குமார் (மதராச பட்டினம், ஆயிரத்தில் ஒருவன்)

சிறந்த பின்னணி இசை : இளைய ராஜா (நந்தலாலா)

சிறந்த பின்னணி பாடகர்: விஜய் பிரகாஷ் (ஹோசன்னா & காதல் அணுக்கள்)

சிறந்த பாடகி : ஆண்ட்ரியா (இதுவரை இல்லாத உணர்விது- கோவா; Who's the Hero- மன்மதன் அம்பு)
 
சிறந்த சண்டை பயிற்சி: பீட்டர் ஹெயின் (எந்திரன்)
 
சிறந்த நகைச்சுவை நடிகர்: சந்தானம் (பாஸ் என்கிற பாஸ்கரன் )

சிறந்த வில்லன்: பிரகாஷ் ராஜ் (சிங்கம்)

சிறந்த கலை இயக்குனர் : செல்வ குமார் (மதராச பட்டினம்)

சிறந்த ஒளிப்பதிவு: ரத்னவேலு (எந்திரன்)

சிறந்த நடிகர்: ரஜினி (எந்திரன்) (இது சர்ச்சையாகும் என்று தெரிந்தே எழுதுகிறேன். வேறு யாருக்கு குடுக்கலாம்? நீங்களே சொல்லுங்க)


சிறந்த புது முக நடிகர்: மிஷ்கின் (நந்தலாலா)

சிறந்த நடிகை : அஞ்சலி (அங்காடி தெரு)

சிறந்த நடிகை சிறப்பு பரிசு: அனுஷ்கா (சிங்கம்) (அந்தந்த ஆண்டு யார் தலைவியோ அவங்களுக்கு இப்படி சிறப்பு பரிசு தரப்படும்... கண்டுக்காதீங்க )

சிறந்த புது முக நடிகை: ஓவியா (களவாணி)

சிறந்த திரைக்கதை: சுசீந்திரன் (நான் மகான் அல்ல)

சிறந்த இயக்குனர்: ஷங்கர் (எந்திரன்)

சிறந்த புது முக இயக்குனர் :  சற்குணம் (களவாணி)

****** 

தமிழ் டிவி சேனல்களில் சிறந்த நிகழ்ச்சிகள் :

1. கலைஞர் டிவியின் நாளைய இயக்குனர்

2.ஜீ தமிழின் டாப் 10 செய்திகள்

3 .விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் (முதலில் ஜூனியர்; பின் சீனியர்)


அரசியலில் அசத்தியவர் :நிதிஷ் குமார் (பீகாரில் பெரிய வெற்றி) 

விளையாட்டில் இரு வீழ்ச்சி & எழுச்சி :

செஸ்: ஆனந்த் பல்கேரியாவில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில்  வென்றாலும், வருடம் முழுதும்  சோபிக்க வில்லை. அவரை விட மேக்னஸ் கார்ல்சன் என்ற நார்வே வீரர் ஆண்டு முழுதும் நன்கு ஆடி அசத்தினார். 

கோல்ப்: டைகர் வுட்ஸ் முதலிடத்தை இழக்க, லீ வெஸ்ட்வுட் அந்த இடத்தை பிடித்தார். 


மறைந்த முக்கிய தலைவர்கள்: 

ஜோதி பாசு (இவர் கண்கள் இறந்த பின் தானம் செய்ய பட்டது அற்புத விஷயம்)

கருணாகரன் (கேரளா முன்னாள் முதல்வர். கறை படியா கைக்கு சொந்த காரர் என மலையாளி நண்பர் சொல்ல கேள்வி) 

மறக்க முடியாத "வரவேற்பு": இலங்கை அதிபர் ராஜபக்சேக்கு  லண்டனில் கிடைத்தது


கோர்ட் தீர்ப்புகள் : 


அசத்தல்: ராமர் கோவில் குறித்த தீர்ப்பு.  ஹிந்து முஸ்லிம் இரு தரப்பு மக்களையும் சற்று திருப்தி படுத்த, சற்று பெருமூச்சு விட வைத்தது 

கொடுமை: போபால் விஷ வாயு குறித்த தீர்ப்பு..

சென்னை: நல்லதும் கெட்டதும்

நல்லது: வுட்லேண்ட்ஸ் ஹோட்டல் இருந்த இடத்தில அற்புதமான பூங்கா திறப்பு 

கெட்டது: மிக அதிக குழந்தைகள் கடத்தல் & காய்கறி விலை சாமானியர்கள் வாங்க முடியாத படி சென்றது 

முக்கிய திருமணங்கள் : 

1 .சானியா மிர்சா -ஷோயப் மாலிக் (இது முடிவதற்குள் எவ்வளவு டிராமா??)

2.சசி தரூர் -சுனந்தா (மந்திரி பதவி போனாலும் மறக்காமல் மணந்தார்)

3.டோனி - சாக்ஷி (திடீர் திருமணம்)

கிரிக்கெட் சந்தோஷங்கள்:

1. சச்சினின் பார்ம் . டெஸ்டில் ஏழு  செஞ்சுரி, ஒன் டேயில் இருநூறு அடித்த முதல் மனிதர், டெஸ்டில் ஐம்பது செஞ்சுரிகள் என தல அசத்திய வருடம் இது.

2.இந்திய அணியும் இந்த ஆண்டு முழுதும் தொடர்ந்து நன்கு ஆடி ஆச்சரிய படுத்துகிறது.

3.சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியோ ஐ.பி. எல் மற்றும் சாம்பியன் லீக்ஸ் ரெண்டும் ஜெயித்து நம்மை குஷிபடுத்தியது.

4. ஆஸ்திரேலியாவின் வீழ்ச்சி மற்றொரு சந்தோஷம்.(எவ்ளோ நாள் தான் அவங்களே டாமினேட் செய்வது?)


டாப் சர்ச்சைகள்: 
தமிழக அளவில்:  நித்யானந்தா- ரஞ்சிதா குறித்த செய்திகள், படங்கள்
இந்திய அளவில்:  

1. ஸ்பெக்ட்ரம் ஊழல் (மத்திய அரசு JPC-க்கு ஒத்து கொள்ளுமா? இனியாவது பார்லிமென்ட் நடக்க விடுவாங்களா? )
2. ராடியா - ராடியா
3. காஷ்மீர் தொடர் கலவரங்கள் 
4. டில்லி காமன் வெல்த் கேம் (சர்ச்சை தாண்டி துவக்க விழா & மொத்த டோர்னமென்ட் உலகை அசத்தியது நல்ல விஷயம்) 

உலக அளவில்: விக்கி லீக்ஸ் ( இதன் ஓனரை, மிக அதிக தண்டனை பெற வேண்டுமென  பொய் கேஸ் போட்டு அமெரிக்கா தற்போது துரத்துவது நம் நாட்டை போல இருக்கு!!)

கிரிக்கட்டில் : லலித் மோடியின் வீழ்ச்சி & பாகிஸ்தான் வீரர்கள் மீதான குற்ற சாட்டுகள். 


பதிவுலகில்: வேணாம் விடுங்க. நான் சர்ச்சைக்குள் சிக்க விரும்பலை..:))

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் !! 

Thursday, December 30, 2010

2010 : சிறந்த 10 படங்கள் & 5 மொக்கை படங்கள்

சிறந்த பத்து பாடல்களை தொடர்ந்து சிறந்த பத்து படங்கள் தொகுப்பு இது. 

இது வசூல் ரீதியிலான அலசல் ரிப்போர்ட் அல்ல. அத்தகைய ரிப்போர்ட் கேபிள் ஏற்கனவே அருமையாய் எழுதிட்டார். நம்பர் 1 , 2  என்றில்லாமல் பொதுவாய் ரசித்த படங்களை பகிர்கிறேன். 

யோசித்து பார்க்கையில் கலைஞர் குடும்ப நிறுவனங்கள் தான் பெரும்பாலான வெற்றி படங்களை தந்துள்ளனர்.  மற்ற நிறுவனங்களுக்கும் இந்த தேர்வில் குறைந்தது 40 சதவீதமாவது இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் பட்டியல் இட்டேன். அதனாலும் வேறு சில காரணங்களாலும் கலைஞர் குடும்ப நிறுவன படங்கள் சில இந்த லிஸ்டில் வரமால் போகலாம். 

முதலில் அப்படி இந்த லிஸ்டில் மிஸ் ஆகும் படங்கள் சுருக்கமாய்:


பையா 

சில படங்கள் எந்த மன நிலையில் பார்க்கிறோமோ அதனாலும் பிடிக்காமல் போகும். பையா ஏனோ ரொம்ப செயற்கையான படமாய் இருந்தது. தமன்னா அப்போது நான் ரசித்து கொண்டிருந்த போதும் பையா கவரவே இல்லை.

மதராச பட்டினம் 

நிச்சயம் ஒரு வித்தியாச முயற்சி. அந்த காலத்து சென்னையை பார்க்க ரொம்ப மகிழ்ச்சியாய் இருந்தது. பாடல்கள் மற்றும் ஹீரோயினால் ஈர்த்தாலும் அளவுக்கதிகமான சோகம் இரண்டாம் பாதியில் மூட் அவுட் ஆக்கியது. மேலும் டைட்டானிக்கின் தழுவல் என்பது உறுத்தி கொண்டே இருந்தது. 

மைனா 

புது நடிகர், நடிகைகளால் நேச்சுரல் சம்பவம் போல இருந்தது பிளஸ். வலிந்து திணித்த சோக முடிவு மற்றும் பள்ளி பெண் காதல் இவை மைனஸ்.

எதிர் பார்க்க வைத்து ஊத்தி கொண்ட 5 படங்களை அடுத்து பார்ப்போம்.

சுறா 

சன் டிவி தயாரித்தும் காப்பாற்ற முடியாமல் போன படம். கதை, லாஜிக் எதுவும் இல்லை. வடிவேலு இருந்தும் சிரிப்பு இல்லை. கதாநாயகி வழக்கமான லூசு பெண்.  ஒரு காட்சி கூட ரசிக்க முடியாத படிக்கு ஒரு பெரிய நடிகர் & பேனர் படம் .விஜய் கதை கேட்டு நடித்தாரா என்பது பெரிய கேள்வி குறி.  

கோவா 

என்ன தைரியத்தில் இப்படி ஒரு கதையை படமாக எடுக்க சவுந்தர்யா & வெங்கட் பிரபு துணிந்தனரோ? வெங்கட் பிரபுவின் முந்தைய வெற்றிகளால் நிறைய எதிர் பார்க்க வைத்து நிறைய ஏமாற்றிய படம். பிரேம்ஜிக்கு தந்த ஹீரோ போன்ற பில்ட் அப்பும் ஹோமோ செக்சுவல் தீமும் படம் தோர்க்க முக்கிய காரணங்கள்.  

அசல் 

என்னத்த சொல்றது!! சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் சந்திரமுகியில் சம்பாதித்ததை இதிலே கோட்டை விட்டனர். கதை வெளி நாடு அது இதுன்னு சுத்தினாலும் கொஞ்சம் கூட ஈர்க்கவில்லை. பாவனா இன்னொரு லூசு ஹீரோயின். சரண் கடைசியா எப்ப ஹிட் படம் குடுத்தார் என்பது அவருக்கே மறந்திருக்கும், 

வ குவார்டர் கட்டிங் 

இப்படி ஒரு கதை ஓடும்னு எப்படி நினைச்சாங்களோ? கதை, நடிப்பு, பாட்டு, காமெடி எதுவுமே கிளிக் ஆகாத படம். 

தில்லாலங்கடி 

சன் டிவி தயாரித்தும் நிச்சயமான தோல்வி படம். ஆனால் இந்த வரிசையில் உள்ள மற்ற படங்களை விட கொஞ்சம் பெட்டர் என்பேன். காரணம் வடிவேலு காமெடி ரசிக்கும் படி இருந்தது. கதை காதுல பூ. இயக்குனர் ராஜாவிற்கு முதல் தோல்வி படம் 

இனி சிறந்த பத்து படங்களை பார்க்கலாம். 

பாஸ் என்கிற பாஸ்கரன் 

சாதாரண கதை, சொன்ன விதத்தால் கவர்ந்தது. சந்தானம் காமெடி மனம் விட்டு சிரிக்க வைத்ததது. பல தட்டு மக்களையும் படம் சென்று சேர்ந்ததை அலுவலக நண்பர்கள் கமெண்டுகள் மூலம் அறிய முடிந்தது. ஒரே கடி ஹீரோயின்..(நயன் எப்பவமே நமக்கு பிடிக்காது!!)

நான் மகான் அல்ல

பழி வாங்கும் கதையை செம விறுவிறுப்பாக சொல்லியிருந்தனர். வில்லன்கள் சாதாரண இளைஞர்களாக காட்டியிருந்தது வித்யாசமாயிருந்தது. துவக்கம் முதல் வில்லன்கள் டிராக் தனியே, ஹீரோ பற்றி தனியே காட்டி கொண்டு போய் ஒரு புள்ளியில் ஒன்றாய் சேர்த்தது அருமை. அதிலும் துவக்கத்தில் ஹீரோ பற்றிய ஒரு காட்சி முடியும் போது அதே இடத்தில வில்லன்கள் பற்றிய டிராக் துவங்குவது போல் பார்த்து பார்த்து செய்திருந்தார் இயக்குனர். சற்று அதிகமான வன்முறை மட்டுமே குறை.

களவாணி

மறுபடி மறுபடி பார்த்தாலும் சிரிக்க வைக்கிற படி எடுத்த இயக்குனர் சற்குணத்திற்கு பாராட்டு. பள்ளி பெண் காதலிப்பது போல் காட்டியதற்காக அவருக்கே ஒரு குட்டு. கலைஞர் குடும்பம் தாண்டி பிற நிறுவனங்கள் எடுத்த படங்களில் லாபம் பார்த்த சில படங்களில் இதுவும் ஒன்று. 


இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் 

இப்படி ஒரு கான்சப்ட் எடுத்த தைரியத்துக்காகவே சிம்பு தேவனை பாராட்டலாம். செட்டுகள், நடிகர்கள், காமெடி என ரசிக்க வைத்தது படம். சன் அல்லது துரை அழகிரி மூலம் வெளி வந்தால் இன்னும் பெரிய வெற்றி பெற்றிருக்கும். 

எந்திரன்

எவ்வளவோ எதிர் பார்க்க வைத்து அத்தனையும் பூர்த்தி செய்தது. எனக்கு தெரிந்து காலை ஏழு மணி காட்சி தொடர்ந்து ஒரு வாரம் பல மல்டிபிலக்ச்களில் ஓடியது எந்திரனுக்கு மட்டும் தான். அந்த ஷோ கூட ரொம்ப சீக்கிரம் புல் ஆகியது! 

முதல் பாதி அசத்தல். இரண்டாம் பாதி எனக்கு பிடிக்கா விடினும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களிலும் பலர் ரசித்தனர்.  ரஜினி ஷங்கர் & டீம் உழைப்பு பிரம்மிக்க வைத்தது. இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த படம்.  

அங்காடி தெரு 

விளிம்பு நிலை மனிதர்களுக்கான கதை ஜெயகாந்தன் அதிகம் எழுதுவார். அது போல ஒரு கதை. ரொம்ப இயல்பாயும் வலியுடனும் அவர்கள் வாழ்வை உணர வைத்தது. ஹீரோ ஹீரோயின் இருவருமே ரொம்ப அருமையாய் நடித்திருந்தனர். கடைசியில் ஹீரோயின்னை தேவையின்றி கால் இழக்க வைத்தது தவிர்த்திருக்கலாம். தமிழில் ஒரு நல்ல சினிமா! 

தமிழ் படம்

தமிழில் இப்படி ஒரு spoof  படம் பார்ப்பது நமக்கு புதிய அனுபவம். ரொம்ப யோசிக்காமல் சிரித்தால் சிரித்து கொண்டே இருக்கலாம். வெகு சிலர் கடி ஜோக்ஸ் என்று சொன்னாலும் பெரும்பாலான மக்கள் ரசித்து சிரித்தனர். இது மாதிரி கேரக்டர் சிவாவுக்கு செமையாய் பொருந்துது. ஆமாம் இந்த பட இயக்குனர் அடுத்த என்ன படம் பண்றார்?   

விண்ணை தாண்டி வருவாயா 

பாடல்கள் செம ஹிட் ஆகி படம் மீதான ஈர்ப்பை உண்டாக்கி விட்டது. அழகான சிம்பு & திரிஷா, லொகேஷன், வித்யாசமான முடிவு இவற்றால் கவர்ந்தது. திரிஷா காரக்டர் செம இன்டரஸ்டிங். நல்ல குணம் மட்டுமே இல்லாமல் மனிதர்களுக்கு இருக்கும் குழப்பமும் ஊசலாட்டமும் சேர்த்து திரிஷாவை காட்டியதற்கு கவுதம் மேனனுக்கு பாராட்டு. 

நந்தலாலா 

ஜப்பானிய தழுவல் என்ற போதும் உணர்வுகளால் கலங்க வைத்த படம். வெற்றி பெறாத போதும் தமிழில் என்றும் நினைவு கூற தக்க படம். 


சிங்கம்

A perfect Entertainer! சூரியாவுக்கு அவர் சட்டை போல கேரக்டர் பிட் ஆனது.  அனுஷ்காஆஆ .....!!! கதை, காமெடி, சில நல்ல பாட்டு, பைட், ஹீரோ - வில்லன் மோதல், அதில் ஹீரோ புத்தி சாலிதனமாய் வெற்றி என பாப்கார்னுடன் உட்கார்ந்து சிரித்து பார்க்க கூடிய படம்.  
***
டிஸ்கி: நாளைக்கும் வருட இறுதி அலசல் பதிவொன்று வெளியாகலாம்.   

Wednesday, December 29, 2010

2010: சிறந்த பத்து பாடல்கள்

இந்த வருடத்தின் சிறந்த பத்து பாடல்களின் தொகுப்பு. இது என் ரசனை சார்ந்து அமைந்ததே. உங்களின் ரசனை நிச்சயம் மாறுபடலாம்.

(சென்ற ஆண்டு : 2009-ன் சிறந்த பாடல்கள் தொகுப்பு  பற்றிய பதிவு இதோ)

எந்த வித ரேங்கிங்கும் (No: 1, No: 2) இல்லாமல் பிடித்த 10 பாடல்கள்...

பூக்கள் பூக்கும் தருணம் (மதராச பட்டினம்)
இசை: G.V.  பிரகாஷ் குமார்

(பாடியவர்கள்: ஹரிணி ரூப் குமார் ஆண்ட்ரியா)

கஜலில் ஆரம்பித்து ஹிந்துஸ்தானி உள்ளிட்ட பல்வேறு தளங்களில் பயணிக்கும் பாடல். சந்தேகமே இன்றி இந்த வருடத்தின் சிறந்த மெலடிகளில் ஒன்று. படமாக்கப்பட்ட விதமும் கவிதை. பாடலுக்கான குரல்கள் சரியான தேர்வு.

"நேற்று தேவை இல்லை. நாளை தேவை இல்லை. இன்று இந்த நொடி போதுமே" .

"எந்த மேகம் இது எந்தன் வாசல் வந்து இன்று ஈர மழை தூவுதே . "

காதலை சொல்லும் அற்புத வரிகள்..

கஜலில் இயல்பாய் இருக்கும் சோகமும் அழகும் உயிர்ப்போடு இந்த பாடலில்..



இதுவரை இல்லாத உணர்விது (கோவா)

இசை: யுவன் ஷங்கர் ராஜா (பாடியவர்கள் ஆண்ட்ரியா & அஜீஷ்)

மற்றொரு அற்புதமான டூயட் பாடல். காதலை முதலில் சொல்வதில் ஆண்/ பெண் இருவருக்கும் உள்ள தயக்கம் இப்பாடலின் கரு. பாடலில் மெட்டு ஒரே சீராக இல்லாமல் சற்று மாறி கொண்டே இருப்பது கூட துடிக்கும் அவர்கள் மன நிலையை தான் உணர்த்துவதாக தோன்றுகிறது (அடடா குறீயிடெல்லாம் புரிய ஆரம்பிச்சுடுச்சே!! இலக்கிய வாதி ஆகிடுவோமோ?) சூப்பர் சிங்கர் ஜெயித்த அஜீஷ் பாடிய முதல் பாடல் ! முதல் பாட்டே அவருக்கு அருமையான பாட்டாக அமைந்து விட்டது. (என்ன ஒன்னு .. படம் ஓடலை; அதுக்கு அவர் என்ன செய்வார் பாவம்).


வா வா நிலவை பிடிச்சு தரவா (நான் மகான் அல்ல) 
இசை: யுவன் ஷங்கர் ராஜா பாடியவர்: ராகுல் நம்பியார் 

நல்ல மெட்டு, பீட், அருமையான வரிகள் என அனைத்தும் அருமையாய் அமைந்த பாடல் இது. முதல் சரணத்துக்கு முன் வரும் ப்ளுட் இசை யுவனின் தந்தை ராஜாவை நினைவு படுத்துகிறது. (இது பாராட்டு தான்!!) 

கவலை நம்மை சில நேரம் கூறு போட்டு கொண்டாடும். .
தீயினை தீண்டி வாழும் போதே தீபத்தில் வெளிச்சம் உண்டாகும் ...

இவை மட்டுமின்றி இன்னும் பல வரிகளும் அருமை. (இதே படத்தில் இறகை போலே பாடல் கூட நல்ல மெலடி தான்) 

காதல் அணுக்கள் (படம்: எந்திரன்)

இசை: A.R. ரஹ்மான்
(பாடியவர்கள்: ஸ்ரேயா கோஷல், விஜய் பிரகாஷ்)

எந்திரனில் சில பாடல்கள் அருமை. என்றாலும் ஒரே பாட்டு சொல்லனும்னா பல காரணங்களால் காதல் அணுக்கள் பாட்டு வந்துடுது. முதலாவதா அறிவியல் வார்த்தை/ உண்மைகளால் எழுதிய இந்த பாட்டின் பின்னணி.   ஆண் குரல் (விஜய் பிரகாஷ் ) இது வரை கேட்காத ஒரு குரலா இருக்கு. படமாக்கப்பட்ட இடமும் இது வரை பார்க்காத அட்டகாசமான லொகேஷன். ரஜினியில் ஸ்டைல் & ஐஸ்வர்யா ராய் கிரேஸ் இவை பாடலை பார்க்கும் போதும் ரசிக்க வைக்கின்றன. இந்த பாட்டு பிடிக்க இன்னும் ஒரு காரணமும் உண்டு. ஸ்ரேயா கோஷல் !!

ஜில்லா விட்டு படம்: ஈசன்

(இசை ஜேம்ஸ் வசந்தன் பாடியவர்: தஞ்சை செல்வி)


இந்த பாடல் படமாக்கப்பட்ட விதம் இன்னும் பார்க்க வில்லை. பார்த்தால் பிடிக்குமோ இல்லையோ தெரியலை. தமிழ் படத்தின் mandatory குத்து பாட்டாக எடுக்க பட்டுள்ளதாக படித்தது உறுத்துகிறது.

பாடலில் உள்ள பெண்ணின் கதை & சோகம் நிஜம் போலவே உணர வைக்கிறது. அருமையான கிராமத்து இசை, புது குரல், முக்கியமாய் பாடலின் வரிகள் இவற்றால் நினைவில் நிற்கும் பாடல்..

ஏய் துஷ்யந்தா (படம்: அசல்) இசை: பரத்வாஜ் 
பாடியவர்கள் குமரன், சுர்முகி
இந்த பாடல் எப்படி இந்த லிஸ்டில் வந்தது என சிலர் ஆச்சரிய படலாம். ஒரே காரணம் பழைய " பார்த்த ஞாபகம் இல்லையோ" பாடலை சில இடங்களில் ரீமிக்ஸ் செய்தது தான் ! துவங்கும் போதே அந்த பாடலின் ஹம்மிங் தான் உபயோகித்துள்ளனர். மேலும் பார்த்த ஞாபகம் இல்லையோ பாடல் வரும் இடங்கள் அனைத்தும் இனிமை. பாடலை திரையில் பார்க்கும் போது இப்படத்திற்காக இளைத்த பாவனா செம கியூட்.. (ஹி..ஹி..)

துளி துளி மழையாய் வந்தாளே.. (படம்: பையா)
இசை: யுவன் ஷங்கர் ராஜா (பாடியவர்: ஹரிசரண்)

மழையும் காதலும் கலந்த இப்பாடல் இந்த வருடத்தின் சிறந்த சோலோ மெலடிகளில் ஒன்று. மழை பாடல்களுக்கென்று ஒரு அழகு உண்டு. அதை இந்த பாடலிலும் காண முடியும். காதலியின் வருகையை மழையின் வருகையோடு ஒப்பிடுவது நைஸ்.

மெட்டு, இசை, பாடிய விதம் எல்லாம் ரொம்ப எளிமையாக இருந்தாலும் என்னவோ ஒன்று இந்த பாடலை ஈர்க்க வைக்கிறது.

ஜிங்கு சிக்கா (படம்: மைனா) 
இசை: இமான்

பாட்டில் அடிக்கடி வரும் "ஜின்க் சிக்கா" வும் ரீப்பிட்டாகும் இசையும் இனிமை. பாடலை  படமாக்கிய  விதமும் - அந்த பஸ், சாதாரண மனிதர்கள் , வெளியே உள்ள பசுமை, என ரசிக்கும் படி இருந்தது. இதே படத்தில் "கையை பிடி" பாடலும் கேட்பதற்கு ரொம்ப சுகமான பாடல் தான்

ஹோசன்னா & மன்னிப்பாயா (விண்ணை தாண்டி வருவாயா) 
இசை: A.R. ரஹ்மான்      

உண்மையில் இந்த இரண்டு பாடல்களில் ஒன்றை மட்டும் சொல்ல ரொம்ப சிரமமாய் இருக்கு. ஹோசன்னா ரொம்ப ஸ்டைலிஷ் பாடல் என்றால் மன்னிப்பாயா அதன் உணர்வுகளால் மனதை தொடுகிறது. மன்னிப்பாயாவில் "அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்" என திருக்குறள் கேட்கும் போது மனது நெகிழ்கிறதென்றால், ஹோசன்னா நடுவில் ஆங்கில வரிகள் டான்ஸ் ஆட தோன்றுகிறது.

பாடல் வரிகளிலும் ரெண்டு பாடலும் போட்டி போடுகின்றன.

" ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே! என மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே.."

"ஒரு நாள் சிரித்தேன்.. மறு நாள் வெறுத்தேன்.. உனை நான் கொள்ளாமல் கொன்று புதைத்தேனே"

இப்படி ரெண்டு எதிர் எதிர் பாடல்களை ஒரே படத்தில், ஒரே உணர்வின் பின்னணியில் வைத்த ரகுமானுக்கு வந்தனம்!!

காதல் வந்தாலே (சிங்கம்) இசை: தேவி ஸ்ரீ பிரசாத்

எப்போது கேட்டாலும் எழுந்து ஆட வேண்டும் போல் தோன்ற வைக்கும் பாடல். இதனை எழுதும் போது கூட இந்த பாடல் ஒலித்து கொண்டிருக்க, பின்னங்கால்கள் தாளம் போட்டு கொண்டிருக்கின்றன.

பாடலை என்னெனவோ கேமரா டிரிக் (ஹைட்! ஹைட்! ) செய்து எடுத்திருந்தாலும் சூரியாவை யார் பார்த்தது??  அனுஷ்கா அம்மணி உதட்டை சுழித்து கண் அடித்தது சன் டிவி புண்ணியத்தில் இன்னும் நினைவிலேயே உள்ளது. இந்த வருடத்தின் முக்கிய நிகழ்வுகளுள் ஒன்று அந்த கண்ணடி :))

உங்களது விருப்ப பாடல் இதில் இருந்ததா? இருந்தால் சொல்லுங்கள். இல்லா விடில், உங்களுக்கு எந்த பாட்டு இந்த வருடம் பிடித்தது. பகிருங்கள்.   

Thursday, December 23, 2010

வாங்க முன்னேறி பார்க்கலாம் பகுதி : 11: பெரியோர் ஆசியும் ரோல் மாடலும்

மனம் விட்டு பேச 


உங்கள் மனதை ஏதோ ஒரு விஷயம் சில நாளாக அழுத்தி கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தை எப்படி சரி செய்வது என குழம்பி கொண்டிருக்கிறீர்கள். அப்போது உங்கள் பெற்றோர் அல்லது அலுவலகத்தில் நீங்கள் மிக மதிக்கும் நபருடன் பேச,  உங்கள் மனதில் உள்ள குழப்பத்திற்கான ஒரு நல்ல தீர்வை பேச்சோடு பேச்சாக அவர்கள் மிக சாதாரணமாய் சொல்லுவதை கவனித்துள்ளீர்களா? எனக்கு இது பல முறை நிகழ்ந்துள்ளது.இத்தனைக்கும் அவர்களிடம் நமது பிரச்னையை நாம் வெளிப்படையாக சொல்லியிருக்க கூட மாட்டோம். அவர்களும் நமது பிரச்சனைக்கு நேரடியான தீர்வாக இல்லாமால் நமக்கு ஒரு ஒளி உள்ளுக்குள் சடாரென எரியும் வண்ணம் சொல்லுவார்கள்.  அது தான் பெரியவர்கள்!! 

குறிப்பாய் ஒவ்வொரு தாய் தந்தையும் தன் குழந்தைகள் பற்றி பெரிதும் அறிந்து வைத்திருப்பார்கள். பெற்றோருக்கு தெரியாது என நினைத்தால் கூட, அந்த விஷயத்தின் ஒரு சிறு பகுதியாவது அவர்களுக்கு தெரிந்தே இருக்கும். இதனால் தான் நாம் எப்போது குழப்பத்தில் உள்ளோம், ஏன் தடுமாறுகிறோம் என்பது போன்ற விஷயங்கள் அவர்களுக்கு அத்துப்படி. மேலும் முந்தைய காலத்தில் இதே போன்றதோர் விஷயத்தில் குழம்பி, தவித்து பின் எப்படி மீண்டோம் என்பதை நாம் மறந்திருப்போம். அவர்கள் சரியாய் நமக்கு நினைவு படுத்தி, அதே போல் இந்த விஷயத்தையும் தாண்டுவோம் என்ற நம்பிக்கை தருவார்கள். 


ங்கள் பையனுக்கு ஒரு பிரச்சனை. பள்ளியில் பக்கத்தில் அமரும் மாணவன் பேச மாட்டேன் என்கிறான். "அவன் ரெண்டு நாளாய் பேசலை. எனக்கு என்னவோ போலிருக்கு. பள்ளிக்கு போக பிடிக்கலை" என்கிறான். நீங்கள் என்ன செய்வீர்கள்? முதலில் உங்களுக்கு இது சாதாரண விஷயம் என்பது தெரியும். நிச்சயம் அவர்கள் இருவரும் விரைவில் பேசி விடுவார்கள்   என்பதும் தெரியும்.  இதையே அவனிடம் சொல்கிறீர்கள். ஓரிரு நாட்களில் பையன் " அப்பா நீங்க சொன்னது சரி தான். சண்டை சரி ஆகிடுச்சு" என்கிறான் சிரித்த படி.. சிறுவர்களுக்கு பக்கத்தில் அமரும் நண்பன் பேசாதது பெரிய பிரச்சனை. நாம் அதையெல்லாம் பல ஆண்டுகள் முன் கடந்து வந்துள்ளோம்.. இன்று நமக்கோ வேலையிலோ வேறு ஏதாவதோ பிரச்சனை.. இதை நம்மை விட பெரியவர்களிடம் பேசினால், நிச்சயம் அவர்கள் இதனை எப்படி எதிர் கொண்டோம் என சொல்வார்கள்.

எழுத்தாளர் சுஜாதா ஒரு முறை சொன்னார்: " நாம் எல்லோரும் ஒரே மாதிரியான வாழ்க்கையை தான் வாழ்கிறோம்!!" இதனை எந்த அர்த்தத்தில் சொல்லியிருப்பார்? ஒவ்வொருவரும் அந்தந்த வயதில் சில பிரச்சனைகளை எதிர் கொண்டு கடந்து வருகிறோம். மாணவனாய் இருக்கையில்  படிப்பதே பிரச்சனை. பின் வேலை தேடுவது. பருவ வயது குழப்பங்கள். திருமணம் நடக்க ஆகும் தாமதம், குழந்தை பிறக்க கொஞ்ச நாள் ஆனாலும் வரும் ஏக்கம், குழந்தை பிறந்த பின் அதற்கு சிறு உடல் நலமின்மை எனினும் நாம் படும் சங்கடம்.. இந்த உணர்வுகள் எல்லாம் ஒவ்வொரு மனிதரும் கடந்து தானே வருகிறோம்?  இதை தான் சுஜாதா எல்லோரும் ஒரே மாதிரியான வாழ்க்கையை தான் வாழ்கிறோம் என்கிறார். 

நம்மை போல ஏற்கனவே இதே போன்ற அனுபவம் கடந்து வந்த பெரியவர்களிடம் மனம் விட்டு பேசும் போது நிச்சயம் " இதுவும் கடந்து போகும்" என்ற நம்பிக்கையை தங்கள் வாழ்க்கை உதாரணங்கள் மூலம் நமக்கு சொல்லி தருவார்கள். 

நிச்சயம் எல்லா விஷயங்களையும் எல்லா பெரியவர்களிடமும் பேசி விட முடியாது. பேசுபவர் தைரியம் தர கூடியவராய் இருக்க வேண்டும். நம்மை மேலும் பயமுறுத்துபவராய் இருக்க கூடாது.  நாம் பேசுவதை ரகசியம் காப்பவராய் இருக்க வேண்டும். இதெல்லாம் உள்ள நபர் என நமக்கு எப்படி தெரியும்? அனுபவம் மற்றும் உள்ளுணர்வில் தான் சாமி! இத்தகைய சில பெரியவர்கள் அனுபவத்தில் நான் கண்டுள்ளேன். உங்களுக்கும் நிச்சயம் அருகில் அத்தகையவர்கள்  இருப்பர்.

இன்னொரு முக்கிய விஷயம்: பெரியவர்களிடம் ஒரு விஷயம் பற்றி பேசுவதால் முழுக்க முழுக்க அவர்கள் சொன்ன படி தான் நடக்க வேண்டுமென்பதில்லை. அவர்களிடம் நமக்கு தேவை அந்த குறிப்பிட்ட பிரச்னையை கையாள தேவையான தைரியம் தான். அதற்கு மேல் அவர்கள் சொன்னதில் ஓரிரு விஷயங்கள் நமக்கு பயன் படும் என்றால் எடுத்து கொள்ளலாம். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.   You are the best judge of yourself. சொல்பவர் எத்தனை விஷயங்கள் சொன்னாலும் அதை நமக்கு தகுந்த மாதிரி Customize செய்து கொள்வது நாமாக தான் இருக்க முடியும்.

பெரியோர் ஆசி

உங்களில் எத்தனை பேர் இதனை நம்புகிறீர்கள் என அறியேன். ஆனால் பெரியோரிடம் ஆசிர்வாதம் வாங்குவது மிக மிக நன்மை பயக்கும் என உறுதியாய் நம்புகிறேன். அவர்கள் காலில் விழுந்து வணங்கி பெறும் ஆசி தான் உண்மையில் சிறந்தது. நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று மனதார நம்மை வாழ்த்தும்/ பிரார்த்திக்கும் நல்ல உள்ளங்களின் ஆசி நிச்சயம் நமக்கு நல்லது செய்யும்.

இது என்ன சாதாரண விஷயம், இன்றைக்கும் என் பெற்றோரிடம் பிறந்த நாள் அன்று ஆசி வாங்க தான் செய்கிறேன் என்று யாரேனும் நினைத்தால், மீண்டும் சொல்கிறேன். இது பிறந்த நாள் அன்றோ / பெற்றோர் மட்டுமோ குறித்ததல்ல. உறவினர்/ அருகில் உள்ளோர் என எவ்வளவு பெரியோரிடம் ஆசி வாங்குகிறோமோ அவ்வளவும் நல்லதற்கே.

ஒரு குட்டி கதை: ஒரு மகான் அரசவைக்கு வருகிறார். அவரிடம் அரசர் காலில் விழுந்து ஆசி வாங்குகிறார். மந்திரிக்கு அரசர் இப்படி காலில் விழுவது பிடிக்க வில்லை. " நீங்கள் போய்  காலில் விழுவதா? " என கேட்கிறார். அரசர் அவரிடம் ஒரு ஆட்டு தலை,  புலி தலை, ஒரு மனித தலை மூன்றும் கொண்டு வர சொல்கிறார். மந்திரிக்கு எதற்கு என்று புரியா விடினும் அரசர் சொல்லிய படி செய்கிறார். அவருக்கு ஆட்டு தலை எளிதாக கிடைக்கிறது. புலி தலை சற்று சிரமமாகவும், மனித தலை கிடைக்க ரொம்ப கஷ்டப்பட்டும் அடைகிறார்.  மூன்றுடன் அரசரிடம் வர, அரசர் இப்போது இந்த மூன்றையும் யாருக்காவது விற்று விடு என்கிறார். ஆட்டு தலையை உடனே விற்று விட முடிகிறது. புலி தலை வாங்க ஆள் இல்லை. சற்று அலைந்து அதனையும் ஒருவரிடம் குடுத்து விடுகிறார். ஆனால் மனித தலையை வாங்கவோ, சும்மா கூட வைத்து கொள்ளவோ யாரும் முன் வரவில்லை. இப்போது அரசர் சொல்கிறார்: இது தான் நம் தலையின் நிலை. இப்படி யாரும் வாங்க விரும்பாத தலை எதற்கு இறுமாப்பு கொள்ள வேண்டும்? இத்தகைய தலையை நம்மை விட பெரியவர்கள் காலடியில் வைத்து வணங்குவதில் என்ன தவறு என்று கேட்கிறார். 

பெரியவர்களிடம் ஆசி பெறுவதில்  இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று நாம் அவர்கள் மேல் வைத்திருக்கும் மரியாதையை பல நேரங்கள் அவர்களுக்கு காண்பிப்பதில்லை.   இது அதனை காண்பிக்க ஒரு சந்தர்ப்பம். மேலும் நம்மை நன்றாக இருக்க வேண்டும் என அவர்கள் மனதார வாழ்த்துவது நிச்சயம் பலிக்கும் என நம்புகிறேன்.

குறிப்பாய் அடுத்த தலைமுறைக்கும் இந்த பழக்கத்தை நாம் சொல்லி தர வேண்டும். துவக்கத்தில் நமது வற்புறுத்தலால் நம்மோடு சேர்ந்து அவர்கள் செய்தாலும் கூட பின் இதன் பலன்களை அவர்களும் உணர்வார்கள். 

ரோல் மாடல் 

ஒரு குறிப்பிட்ட துறையில் நீங்கள் சாதிக்க நினைத்தால் செய்ய வேண்டிய மற்றொரு நல்ல விஷயம்: அந்த துறையில் புகழ் பெற்ற ஒருவரை உங்கள் ஆதர்சம் ( Idol) ஆக குறித்து கொள்வது. ஆதர்சம் நீங்கள் வேலை செய்யும் அல்லது செய்த நிறுவனத்தில் உள்ள ஒரு அதிகாரி ஆக இருக்கலாம். உங்கள் தந்தை அல்லது அண்ணனாக இருக்கலாம். நீங்கள் பார்க்காத ஒரு நபராக கூட இருக்கலாம். 

ஆதர்சம் என்பது அவரை போலவே காப்பி அடிப்பது என்பதற்கல்ல. அவர் ஒரு சாதாரண மனிதர்; அவரால் சாதிக்க முடியும் என்றால் என்னாலும் முடியும் என உறுதி கொள்ளவும், சாதிக்க அவர் பின்பற்றிய சில வழிகளை நீங்களும் பின் பற்றவும் மட்டும் தான். மற்றபடி அவர் வழியில் போனாலும் உங்களுக்கென்று ஒரு தனித்தன்மை (Identity)  கிடைக்கவே செய்யும். 

என்னுடைய ஆதர்சம் யார் என்று சொன்னால் நீங்கள் சிரிக்க கூடும். "அவர் இங்கே?  இவர் இங்கே?" என. இருந்தாலும் சொல்கிறேன்.  என் ஆதர்சம் எழுத்தாளர் சுஜாதா. இதற்கு காரணம் மிக எளிமையானது. சுஜாதா அறுபது வயது வரை தன் தொழிலை விடாமல் செய்து வந்தார். கூடவே இயலும் போது எழுதினார் (அதுவே எவ்வளவு!!) அதே போல நானும் என் வேலை பாதிக்கா வண்ணம் இயலும் போது எழுத எண்ணுகிறேன். அவர் பின் பற்றிய விஷயங்களில் தொடர் வாசிப்பு, விடாமல் எழுதுவது .. இவற்றை நானும் உபயோகிக்கிறேன்.   "Aim for Moon; You will get stars" என்பார்கள். . சுஜாதா அடைந்ததில் ஒரு சதவீதமேனும் வாழ்வில் எட்ட வேண்டும் என நினைக்கிறேன். அப்படி எட்டினாலே நாமும் ஒரு சிறு பிரபலம் ஆகி விடுவோம் தானே!!

யாருமே பயணிக்காத வழியில் கால் தடம் பதித்து புது வழியை உருவாக்குவோர் வெகு சிலரே. ஏற்கனவே ஒருவர் சென்று வெற்றி கரமாய் செய்ததை பின்பற்றி நாமும் முன்னேறுவது சுலபம். அறிவியலில் கூட இப்படி முதலில் ஒருவர் செய்த கண்டுபிடிப்பை அடுத்து மெருகேற்றியவர் முதல்வரை விட அதிக பிரபலம் ஆனது நடந்து தான் உள்ளது!!

இப்படி ரோல் மாடல் என்பது நாமும் அவரை போல் முன்னேற உத்வேகமும் முன்னேற தேவையான மனோ நிலையையும் கொடுக்கும் 
****
பொதுவாக நாம் யாரோடு இருக்கிறோமோ அவர்கள் குணத்தை நாமும் கொஞ்சம் கொஞ்சமாய் அடைகிறோம். இதனால் தான் நம்மை விட அறிவாளிகளுடன் அதிகம் இருப்பது நல்லது.ஆங்கிலத்தில் Always be with smart people என்பார்கள். பெரியோர் நட்பும் அத்தகையதே.  அவர்களுடன் அதிகம் பழகுவதும் பிரச்சனையின் போது அவர்களுடன் மனம் விட்டு பேசுவதும் நமக்கு நிச்சயம் நல்லது செய்யும். கூடவே பெரியவர்கள் ஆசியும் சேர்ந்து விட்டால் நம் முன்னேற்றம் நிச்சயம் நடந்தே தீரும். 

Monday, December 20, 2010

அய்யாசாமி பங்கேற்ற டிவி நிகழ்ச்சி

அய்யாசாமி கலந்து கொண்ட டிவி நிகழ்ச்சி பற்றி ஏற்கனவே சொல்லியிருந்தேன். கார சாரம் என்கிற இந்நிகழ்ச்சி நாளை இரவு 9   மணி முதல் 10 மணி வரை பொதிகை டிவியில் (தூர்தர்ஷன்) ஒளிபரப்பாகிறது. என்னாது பொதிகை டிவி-ன்னா என்னவா?? நோ நோ அப்படியெல்லாம் கேக்கபடாது. தமிழ் நாடு எனில்  உங்க வீட்டில் தேடி பாருங்க நிச்சயம் இருக்கும்.. மற்ற மாநிலங்கள் பற்றி தெரியலை..  

(இது அய்யாசாமி பங்கேற்ற நிகழ்ச்சி அல்ல. ச்சும்மா ஒரு படம்!)


இதை தனி பதிவாக போட வேண்டுமா என தயக்கம் இருந்தாலும் தூர்தர்ஷன் பற்றி நீங்கள் அறிய ஒரு வாய்ப்பு என்பதால் இப்பதிவு..


 

**தலைப்பு: மனிதர்களுக்கு மகிழ்ச்சி - திருமணத்துக்கு முன்பா? திருமணத்துக்கு பின்பா? அய்யாசாமி எந்த தலைப்பில் பேசியிருப்பார்னு சொல்லுனுமா என்ன ..ஹிஹி 

** அய்யாசாமி இதுவரை சன் டிவி, விஜய் டிவி, வசந்த் டிவி,  இமயம் டிவி (கடைசி ரெண்டு டிவி-யும் தெரியாதா? ரைட்டு!!) போல பலவற்றில் வந்திருந்தாலும்  தூர்தர்ஷனில் இது முதல் முறை. 2009 ஆண்டு மட்டும் ஆறேழு டிவிக்களில்   வந்ததால், அவருக்கே போர் அடிச்சிடுச்சு.  இந்த வருடம் கலைஞரில் கருத்து யுத்தத்துக்கு கூப்பிட்டாக..  விஜய் டிவியில் "நாளை நமதே" க்கு கூப்பிட்டாக.. பொதிகையில் ஏற்கனவே இதே கார சாரத்துக்கு கூப்பிட்டாக.. (ஜப்பானில் ஜாக்கி சான் கூப்பிட்டாக ரேஞ்சுக்கு என்னா பில்ட் அப்பு) அப்போதெல்லாம் போகாத ஐயா சாமி இம்முறை தூர்தர்ஷனை ஒரு முறையாவது பார்க்கணும் என கிளம்பிட்டார். 

**சும்மா சொல்ல கூடாது. தூர்தர்ஷன் - தூர்தர்ஷன் தான். ஏரியாவே எவ்வளவு பெருசு!  ஏகப்பட்ட மரங்கள்!! நிறைய ஸ்டுடியோக்கள். எல்லாமே பெரிய அளவில் உள்ளன.  இது மாதிரி ஸ்டுடியோ எல்லாம் சன், விஜய்யில் கூட இல்லை. இதை வச்சிக்கிட்டு எவ்ளோ அருமையா நிகழ்ச்சி செய்யலாம். ம்ம் 

**மற்ற டிவிகளில் போனில் தொடர்பு கொண்டு பேசும் போது எப்படி பேசுறோம் என தெரிந்து கொள்ள நம்மை கொஞ்சம் பேச சொல்லி பார்ப்பார்கள். இங்கு அப்படி ஒன்னும் இல்லை. ஐயா சாமி நீண்ட நாள் நண்பர் மணியுடன்  (அவர் எதிர் அணி) இந்நிகழ்ச்சியில் பேசினார். 

**நிகழ்ச்சி பத்து மணிக்கு என சொல்லியிருந்தனர். தெரிந்த நண்பர் ஒருவர் மற்ற டிவி போல இல்லை; பத்து என்றால் 11 மணிக்காவது ஆரம்பிச்சுடுவாங்க என சொல்லியிருந்தார். ஆனால் சிறப்பு விருந்தினர் TP கஜேந்திரன் 1 மணிக்கு வர அப்புறம் தான் நிகழ்ச்சி ஆரம்பமானது. மூணு மணி நேரம் வெயிடிங்!!  நல்ல வேளை நீண்ட நாள் கழித்து நண்பரை இன்று பார்த்ததால் ஐயா சாமி அவருடன் பேசி நேரத்தை ஓட்டினார். 

**"திருமணத்துக்கு முன் மகிழ்ச்சி" அணியில் ஒரு நேரம் போதிய ஆட்கள் இல்லாமல் ஈ ஆடியது. கோ ஆர்டினேட் செய்யும் பெண் அய்யாசாமியை "அந்த அணியில் வந்து பேசுங்க; வேணும்னா முன் வரிசையில் கூட உட்காருங்க" என்று கேட்க, அய்யாசாமி தன் சீட்டை கெட்டியா பிடிசிகிட்டு " மாட்டேன்.. மாட்டேன்" என அடம் பிடித்து இடம் பிடித்தார்.

**நிகழ்ச்சி நடத்திய (காம்பியர்) ஜான்,  தான் அதிகம் பேசாமல் அனைவருக்கும் பேச வாய்ப்பு தந்து நன்கு நடத்துகிறார்.

**இன்னும் டிடியில் நிழல்கள் ரவி போன்ற "இளம் ஹீரோக்கள்" நடித்த சீரியல்கள் தான் வருவது அங்கிருந்த போஸ்டர்கள் பார்த்து அறிய முடிந்தது

*மேலும் போஸ்டர்களில் உண்ணா விரதம்; வேலை புறக்கணிப்பு போன்றவையும் காண முடிந்தது (பொது துறை நிறுவனம்!!)

**அய்யாசாமிக்கு நான்கு முறை பேச வாய்ப்பு வந்தது. "கொஞ்சம் எடிட் ஆனால் கூட ரெண்டு அல்லது மூணு நிச்சயம் ஒளி பரப்பாகும்" என்கிறார். "ஓரிரு முறை கிளாப்ஸ் கூட வாங்கினேன்" என்கிறார் சிறு பிள்ளை போல.. 

**திருமணத்துக்கு பின்பு தான் மகிழ்ச்சி என்று தீர்ப்பு வரும் என நினைத்திருந்த அய்யாசாமிக்கு நிகழ்ச்சியை நடத்தியவர் தந்த தீர்ப்பு கேட்டு செம ஷாக். ஏன் ? நிகழ்ச்சி பார்த்து தெரிஞ்சுக்குங்க.

**மழை பெய்து ஓய்ந்த ஓர் சனிக்கிழமை காலை.. எனவே அய்யாசாமி ரெயின் கோட் சகிதம் சென்றிருந்தார். நிகழ்ச்சி முடிந்து டிரைன் வந்து ஏறிய பின்  தான் ரெயின் கோட் நினைவுக்கு வர, ஓடும் டிரைனில் இருந்து விஜய காந்த் போல குதித்து டிவி ஸ்டேஷன் சென்று மீண்டும் எடுத்து வந்தார். 

**பொதிகை டிவி தெரியலை பார்க்கலை என நீங்கள் சொன்னால்,   உலகம்  முழுதும்  தெரிகிற பிரபல  டிவியில் சீக்கிரமே  வந்து பேசுவேன் என மிரட்டுகிறார். இதுக்காகவாவது நாளை இரவு பார்த்துடுங்க.. ஒன்பது மணி.. பொதிகை டிவி.

**நிற்க எனக்கு ரெக்கார்டிங் செய்யும் வசதி இல்லை. நீயா நானா கருத்து யுத்தம் போன்ற நிகழ்ச்சிகள் யூ டியுபில் யாராவது வலை ஏற்றம் செய்கின்றனர். இந்த நிகழ்ச்சி யாரும் வலை ஏற்றம் செய்வது போல் தெரிய வில்லை. காரசாரம் என்ற இந்நிகழ்ச்சி யூ டியுபில் இருந்தால் தெரிவியுங்கள் அல்லது யாராவது இதனை ரிக்கார்ட் செய்ய உதவினால் மிக்க நன்றி உடையவன் ஆவேன். :))

Friday, December 17, 2010

வானவில் கராத்தே கிட்டும் தமிழ்மணம் விருதுகளும்

பார்த்த படம் : கராத்தே கிட்

ஜேடன் ஸ்மித் என்னும் சிறுவன் மற்றும் ஜாக்கி சேன் நடித்த படம். இந்த வருடம் வெளியாகி வெற்றி பெற்ற இப்படத்தை இப்போது தான் பார்க்க முடிந்தது. 12 வயது ஜேடன் ஸ்மித்தை குங்பூவில் ஜாக்கி சேன் பயிற்சி தந்து ஒரு பெரிய டோர்னமென்ட் ஜெயிக்க வைப்பது தான் ஒரு வரி கதை. நாம் இத்தகைய கதையை எம். குமரனில் கூட ஜெயம் ரவி, பிரகாஷ் ராஜ் வைத்து பார்த்துள்ளோம். ஆனாலும் அவர்கள் எடுக்கும் விதம் very natural !


ஜாக்கி ஐம்பது வயது மனிதராக (கிட்டத்தட்ட செகண்ட் ஹீரோ) நடித்துள்ளார். தன் மனைவி, குழந்தை எப்படி இறந்தார்கள் என ஜாக்கி சொல்லி விட்டு அழும் காட்சியில் நல்ல நடிகர் என்பதை நமக்கு உணர்த்துகிறார். படத்தில் எனக்கு பிடித்தது சில வசனங்கள் தான்: உதாரணத்திற்கு: " கெட்ட மாணவன்னு யாரும் கிடையாது. கெட்ட ஆசிரியர் தான் உண்டு". கிளைமாக்ஸ்சில் , " உனக்கு திறமை இருக்குன்னு எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சு; இன்னும் என்ன நிருபிக்கணும்?" " எனக்கு கொஞ்சம் பயம் மிச்சமிருக்கு. அது போகணும்" இப்படி.. இது வரை பார்க்கா விடில், ஒரு முறை பாருங்கள்.

பதிவுலகில் ரசித்தது 

டுபுக்கு பதிவுலகில் காமெடியாக எழுதுவதில் ரொம்ப வருடங்களாக முன்னணியில் இருப்பவர். அவ்வப்போது காணாமல் போய் மீண்டும் வருவார். அவரது சமீபத்திய பதிவான ஸ்பென்சர் நினைவுகள் செமையாய் சிரிக்க வைத்தது. வாசித்து பாருங்கள்.

சென்னை ஸ்பெஷல் 

தமிழகம் முழுதும் மழை இவ்வருடம் எக்கச்சக்கமாய் பெய்தாலும் சென்னையில் ஒட்டு மொத்தமாய் குறைவாய் தான் பெய்துள்ளது. சென்னை வானம் பார்த்த பூமி போல ஆகி விட்டது. நிறைய மழை பெய்தால் தான் போரில் தண்ணீர் இருக்கும். இல்லா விடில் கோடை மற்றும் அதன் பிந்தைய காலங்களில் புழங்கும் தண்ணீர் கூட காசு தந்து வாங்க வேண்டும். இந்த விஷயத்தில் 2011 எப்படி இருக்க போகிறதோ? சென்னையை சுற்றி பார்க்க வெளியூர் மக்கள் வர இந்த டிசம்பர் மாதம் தான் சிறந்தது. வெயில் குறைவாய் சற்று பனியுடன், பாட்டு கச்சேரிகளும், அதை கேட்க வந்த NRI -களுமாய் சென்னைக்கு டிசம்பரில் தனி கலர் வந்து விடும்.

 கிரிக்கட் கார்னர் 

நியுசிலாந்தை இந்தியா துவைத்து துவம்சம் செய்து விட்டது. டெஸ்டில் 1- 0 என்று நாம் ஜெயித்த போது அதை Under achievement என்று நினைத்தோம். ஆனால் ஒரு நாள் போட்டிகளில் முக்கிய புள்ளிகள் பலரும் இல்லாமலே 5 - ௦0 என கலக்கி விட்டனர். பெங்களூரில் நடந்த மேட்ச் தான் உண்மையிலே சற்று போட்டி இருந்தது. இதில் யூசுப் பதான் அடித்த செஞ்சுரி மூலம் உலக கோப்பைக்கான அணியில் துண்டு போட்டு இடம் பிடித்து விட்டார்.

அய்யாசாமி ரசித்த டுவிட்டர்

என்ன தான் கணக்கில் பெரிய புலியா இருந்தாலும், குக்கர் ஆப் ( off ) செய்ய வேண்டிய சரியான நேரத்தை எந்த ஆணாலும் சொல்ல முடியாது. (அடடா.. நம்ம படுற கஷ்டத்தை சரியா சொல்லிருக்காங்கப்பா).


தமிழ் மணம் விருதுகள்

தமிழ் மணம் ஆண்டு விருதுகள் பரிந்துரை முடிந்து வாக்களிப்பு நடந்து வருகிறது.  நான் பரிந்துரைத்த பதிவுகள் இதோ: 

சுய தேடல், பகுத்தறிவு, ஆன்மிகம் பிரிவில்: இதற்கு வாக்களிக்க   இங்கே க்ளிக் செய்யவும்.

இந்த பிரிவில் "வாங்க முன்னேறி பார்க்கலாம் : பகுதி 8 அன்பு"  பதிவு உள்ளது.

தமிழ் மொழி, கலாச்சாரம், வாலாறு, தொல்லியல் பிரிவில் :

இதற்கு வாக்களிக்க  இங்கே க்ளிக் செய்யவும்.

இந்த பிரிவில் "எழுத்தாளர் சுஜாதாவுடன் சில அனுபவங்கள்"  பதிவு உள்ளது.

பெண்கள் பிரச்சனைகள் திருமங்கைகள் வாழ்வியல் சிக்கல்கள் பிரிவில்: இதற்கு வாக்களிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

இந்த பிரிவில் "வேலைக்கு செல்லும் பெண்கள்"  பதிவு உள்ளது.

ஒவ்வொரு பதிவர் நண்பருக்கும் தனித்தனியே மெயில் அனுப்பியுள்ளனர். அதிலிருந்து நேரே தமிழ் மணம் சென்று(ம்)   அந்தந்த பிரிவில் வாக்களிக்கலாம்.

தொடர்ந்து வீடு திரும்பல் வாசிக்கும் நண்பர்கள் உங்கள் அன்பை காண்பிக்க வேண்டிய தருணம் இது. அவசியம் வாக்களியுங்கள். என்னையும் ஆதரியுங்கள். :)))

Tuesday, December 14, 2010

150 வது பதிவு : முன்னேறி பார்க்கலாம் பகுதி 10 உடல் நலம்

முன்னேற்றத்துக்கும் உடல் நலத்துக்கும் என்ன சம்பந்தம் என யாரேனும் புருவம் உயர்த்துகிறீர்களா? முன்னேற்ற படிக்கட்டுகளில் ஏறும் சுவாரசியத்தில், உடல் நலனை கவனிக்காமல் விட்டால் உங்களால் உங்கள் வெற்றியை முழுதும் சுவைக்க முடியாமல் போய் விடும்.

இந்த விஷயத்தை நீங்கள் இரு விதமாய் அணுகலாம். " உடல் தொந்தரவு ஏதும் இல்லையே. அப்படி ஏதும் வரும் போது பார்த்து கொள்ளலாம்; இப்போதிருந்தே இது பற்றி கவலை பட என்ன அவசியம்?"  மற்றொன்று "வருமுன் காக்கும்" அணுகுமுறை. என்னை பொறுத்த வரை இரண்டாவது அணுகுமுறை நிச்சயம் நல்லது என்பேன்.

ஒரு காலத்தில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை நாற்பது வயதில் பலருக்கு எட்டிப் பார்க்கும். நாற்பது வயதில் இவை ஒரு முறை வந்து விட்டால் பின் வாழ் நாளின் கடைசி வரை அந்த நோய்கள் நம் உடன் பிறப்பாகி விடும். அவற்றோடு வாழ நாம் பழகிக்கொள்ள வேண்டியது தான். ஆனால் இன்றைய மாறிய சூழலில் முப்பதுக்கும் குறைவான வயதிலேயே கூட இத்தகைய நோய்கள் பலருக்கு வரத் துவங்கி விட்டது. எனவே நாற்பது வயதுக்கு பின் டயட், உடற் பயிற்சி இவற்றை பார்த்து கொள்ளலாம் என நினைத்தால் தயவு செய்து மாற்றி கொள்ளுங்கள்.

இன்றைக்கும் உங்கள் தெருவில் காலை அல்லது மாலை நேரத்தில் பலர் நடைப்பயிற்சி செய்வதை பார்க்கலாம். இவர்களில் பெரும்பாலானோர்  நாற்பது, ஐம்பது வயதுகளில் உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு அநேகமாய் சர்க்கரை நோய் அல்லது ரத்த அழுத்தம் வந்து, மருத்துவரின் ஆலோசனைப்படி இந்த நடைப்பயிற்சியில் இருப்பார்கள். அவர்களிடம் பேசிப்பார்த்தால், இந்த நோய்கள் வருமுன்னே இத்தகைய பயிற்சி செய்திருந்தால்,  நோயே வந்திருக்காதே என்ற வருத்தம் இருப்பதை நிச்சயம் உணரலாம்.

எனது தனிப்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன். இந்த பதிவில் சுய புராணம் சற்று அதிகம் இருக்கலாம். காரணம் உடற் பயிற்சி விஷயத்தில் மற்றவர்களை உதாரணம் காட்டுவது எளிது. ஆனால் நாமே அதனை செயல் படுத்தினால் தான் இதனை சொல்ல தகுதி இருக்கும் என நினைக்கிறேன். சுய புராணம் என நினைப்போர் எந்த நிலையிலும் இந்த பகுதியை தவிர்க்கலாம்.

சிறு வயது முதலே நான் சற்று பூசிய உடல் வாகு தான். எப்போதுமே சற்று அதிக வெயிட் என்ற எண்ணம் என்னுள் இருந்து கொண்டே இருக்கும். இதற்காக ஏதேனும் செய்ய வேண்டும்; நடை பயிற்சி அல்லது ஓட்டம் இப்படி செய்ய வேண்டும் என அடிக்கடி நினைப்பேன். சில காலம் அவற்றில் ஈடு படுவேன். மழையின் போது சாலைகள் சரியில்லை  என விட்டுவிடுவேன்.ஒரு முறை நிறுத்தினால் மறுபடி ஆரம்பிக்க ரொம்ப காலம் ஆகும்.(இது மாதிரி ஆட்கள் நாட்டில நிறைய பேர் உண்டு) திருமணத்திற்குப் பின் சிறிது சிறிதாக இன்னும் கூட எடை கூடிக்கொண்டு போனது. அதிகம் நடக்காமல் ஒரே இடத்தில் உட்கார்ந்து பார்க்கும் அலுவலக வேலையும் ஒரு காரணம். இது இந்த பதிவை வாசிக்கும் உங்களுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்.

ஒரு முறை புது நிறுவனத்தில் சேரும் போது ஹெல்த் செக் அப் செய்த போது, சற்று கொலஸ்ட்ரால் இருப்பது தெரிந்தது. பெரிய அளவு பிரச்சனை இல்லை என மீண்டும் கண்டு கொள்ள வில்லை. அடுத்த இரண்டு வருடம் கழித்து ரத்த அழுத்தம் மிக லேசாக எட்டி பார்த்தது. டாக்டர் "மருந்து சாப்பிட வேண்டாம். சற்று பொறுத்திருந்து பார்க்கலாம்" என சொல்ல, இப்போது நான் விழித்துக் கொண்டேன்.

எடையை குறைத்தால், பார்டரில் இருக்கும் உயர் ரத்த அழுத்தம் குறையலாம் என கேள்விப்பட, அலுவலகத்தில் இருக்கும் ஜிம்முக்கு செல்ல ஆரம்பித்தேன்.

ஜிம் என்றால் அதுவரை வெயிட்டுகளை தூக்குவது, உடலை "கரளை கரளை" யாக ஆக்குவது என்று நினைத்தவனுக்கு ஜிம்முக்கு செல்ல ஆரம்பித்த பிறகுதான், "ஏரோபிக்ஸ்" என்று தனி வகை இருப்பது தெரிய வந்தது. ஏரோபிக்ஸ் சற்று அந்நிய வார்த்தை போல் தெரிந்தாலும் ஓடுதல், நடத்தல், சைக்கிளிங் செய்தல் போன்றவை தான் அவை. இவற்றை மட்டுமே தீவிரமாய் செய்ய ஆரம்பிக்க, முதல் மூன்று மாதங்களில் ஐந்து கிலோ எடை குறைந்தது. மிக மகிழ்ச்சி ஆகி விட்டது. சட்டை, பேன்ட் அடுத்த சிறிய சைஸ் வாங்க ஆரம்பித்தேன். அதன் பின் எடை கொஞ்சமாய் தான் குறைந்தது. எனது உயரத்திற்கு இருக்க வேண்டிய சரியான வெயிட்டுக்கு வந்து விட்டாலும், இதனை தக்க வைத்து கொள்ள தொடர்ந்து செல்வது அவசியமாகிறது. நாள் முழுதும் வேலை பார்த்து விட்டு மாலையில் பாட்டு கேட்டவாறே செய்யும் உடற் பயிற்சி நிச்சயம் உடலுக்கும் மனதுக்கும் நல்ல மாறுதலாக (relaxation) உள்ளது. நீண்ட நாள் கழித்துப்பார்க்கும் பலரும் எப்படி இந்த அளவு இளைத்தீர்கள் என கேட்கும் போது மிக மகிழ்ச்சியாக இருக்கும்.

இந்த இடத்தில ஒரு சிறு தகவல்: உங்கள் உயரத்தை செண்டி மீட்டரில் அளவெடுங்கள். உதாரணமாய் உங்கள் உயரம் 170 செண்டி மீட்டர் எனில், அதில் நூறை கழித்தால் உங்கள் ஐடியல் எடை ( 70 கிலோ ) வரும். இது ஒரு தோராயமான கணக்கு தான். இதை தவிர Body Mass Index என்பது போல பல விஷயங்கள் இருந்தாலும் " உயரத்தில் நூறை கழிப்பது" ஒரு தம்ப் ரூல் டெஸ்ட்.

இப்படி தொடர் உடற் பயிற்சிக்கு பின் மறுபடி உடல் பரிசோதனை செய்த போது கொலஸ்ட்ரால், உயர் ரத்தஅழுத்தம் அனைத்தும் நார்மல் ஆக இருந்தது. இந்த ரிசல்ட் பார்த்ததும் உடற் பயிற்சி மேல் காதல் இன்னும் அதிகமாகி விட்டது.

இதை படிக்கும் உங்களை போலவே நானும் ரொம்ப வருடங்களாக " எக்சர்சைஸ் செய்யணும், செய்யணும்" என நினைத்த ஆசாமி தான். இப்போது செய்ய ஆரம்பித்து அதன் பலனை முழுதும் அனுபவிக்கிறேன். இது உங்களுக்கும் சாத்தியம் தான் !!

உடற் பயிற்சியுடன் செய்ய கூடிய மற்றொரு நல்ல செயல் : யோகா மற்றும் மூச்சுப்பயிற்சி. இதனை கற்றுத்தர பல நல்ல இயக்கங்கள்  உள்ளன. நான் கற்றது வேதாத்திரி மகிரிஷி அவர்களின் "வாழ்க வளமுடன்" அமைப்பின் மூலம். காலையில்  20 நிமிடங்கள் இதற்கென செலவழித்தால் பல நன்மைகளை நாம் உணரலாம். தியானமும் கற்று தரப்பட்டாலும் எனக்கு அது சரியே கை கூடவில்லை. மூச்சுப்பயிற்சி மற்றும் யோகா மட்டும் விடாது செய்கிறேன். திரு. கருணாநிதி அவர்கள் வேதாத்திரி மகிரிஷி நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசும் போது தனது ஆரோக்கியத்திற்கு  மூச்சுப்பயிற்சியும் ஒரு காரணம் என்றார்.

மூச்சுப்பயிற்சி நமக்கு தொடர்ந்து உடலில் இருக்கும் சில தொந்தரவுகளை மாத்திரை இன்றியே நீக்க வல்லது. எனக்கும் சில உடல் தொந்தரவுகள் மூச்சுப்பயிற்சியால் சரியாவதை அனுபவ பூர்வமாய் உணர்ந்தேன். மூச்சு பயிற்சியும் யோகாவும் வாழ்க வளமுடன் அமைப்பு மூலம் தான் செய்ய வேண்டுமென்பதில்லை. உங்களுக்கு விருப்பமான எந்த நிறுவனத்திலும் கற்கலாம்.

உடற் பயிற்சி செய்யாத காலத்தில் தேவையற்ற உணவு பொருட்களை தவிர்க்க முடிவதில்லை. அதே நேரம் ஒவ்வொரு நாளும் கஷ்டப்பட்டு உடற்பயிற்சி செய்து விட்டு மறுபுறம் வெயிட் போடும் நொறுக்கு தீனி உண்ணலாமா என மனம் கேள்வியெழுப்புகிறது. உண்மையில் அப்போது தான் உணவிலும் கட்டுப்பாடோடு இருக்க துவங்குகிறோம்.

சாமியார் போல சுவையுள்ள உணவு பொருட்களை முழுமையாய் தவிர்க்க வேண்டுமென்பதில்லை. எதையும் அளவோடு சாப்பிட வேண்டும். அது தான் முக்கியம்.

நாம் சாப்பிடும் உணவின் மேல் நம் பெயர் ஏற்கனவே எழுதப்பட்டிருக்கும் என்பார்கள். பிறந்தது முதல் இறக்கும் வரை இவ்வளவு தான் சாப்பிட வேண்டும் என்பதை இறைவன்/ இயற்கை முதலிலேயே முடிவு செய்து விடுகிறது. சிலர் அந்த அளவை விரைவிலேயே அடைந்து விடுகின்றனர். அந்த அளவை மெதுவாக அடைய, அடைய இன்னும் அதிக நாள் சுவையுள்ள உணவுகளை உண்ணலாம். ஆயுளும் நீடிக்கும்.


உணவு பற்றி இன்னொரு முக்கிய விஷயம்: நாக்கிற்கு அதிக சுவை தரும் உணவுகள் (இனிப்புகள், நொறுக்கு தீனி போன்றவை) உடலுக்கு தீங்கே தருகின்றன. அதே நேரம் நாவிற்கு சுவை தாராத உணவுகள் பெரும்பாலும் ( பச்சை காய்கறிகள், வெந்தயம் போன்றவை) உடலுக்கு நல்லது செய்கின்றன.

உடல் நலனுக்காக  எப்போதும் செய்கிற/ நீங்களும் செய்யகூடிய இன்னும் சில விஷயங்கள்:

1. பழங்கள், காய்கறிகள் நிறைய சாப்பிடுதல்.

அலுவலகம் செல்லும் நாட்களில் வீடு வந்தால் பழங்கள் சாப்பிடுவதையும், சனி, ஞாயிறு மட்டும் முறுக்கு அல்லது மிக்சர் போன்ற சமாச்சாரங்கள் அளவோடு சாப்பிடுவதையும் வழக்கமாக்கி கொள்ளலாம்.  பழங்கள் நிறைய சாப்பிடுவது மல சிக்கல் நீக்கம், உடலில் நல்ல ரத்தம்/ சக்தி சேருதல் போன்ற பல நல்ல பலன்கள் அளிக்கிறது.  ..

2. உணவில் பூண்டு வெங்காயம் நிறைய சேர்த்து கொள்ளுதல் 

பூண்டை பார்த்தால் விடுவதில்லை. பாக்கிய ராஜுக்கு முருங்கை காய் போல நமக்கு  பூண்டு. பூண்டு குழம்பு, பூண்டு ரசம், பூண்டு சட்னி என பெரும்பாலும் தினம் சமையலில் இருக்கும். ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் இரண்டும் எட்டி பார்த்ததன் விளைவு. இப்போது இரண்டுமே இல்லை.

3. ஏழு அல்லது எட்டு மணி நேர தூக்கம்

விழாக்கள் அல்லது வெளியூர் செல்வது போல ஒரு சில நாட்கள் மட்டும்  குறைந்தாலும்,   பெரும்பாலும் ஏழு அல்லது எட்டு மணி நேரம் தூங்கி விடுதல் நலம்.  தூக்கம் குறைந்தால்  பிரச்ச்சனையாயிடும்.
 
4. உடலில் எந்த தொந்தரவு இருந்தாலும் டாக்டரை சந்திப்பது 
 
சளி போன்ற சிறு விஷயங்கள் ஓகே. நாமே கூட சமாளிக்கலாம்.  உடல் குறித்த நம் பயங்கள் தீர்க்க வேண்டிய நபர் டாக்டர் தான்.  அவரிடம் பேசி விட்டால் பிரச்சனை நம்முடையதல்ல அவருடையது; அவர் சரி செய்ய வேண்டும்; நாம் ஒத்துழைக்க வேண்டும்.
 
5. வருடாந்திர உடல் பரிசோதனை


இது இந்த லிஸ்டில் சமீபத்தில் சேர்ந்தது. என்ன தான் இருந்தாலும் "அடிக்கடி இரவில் சிறுநீர் போகிறோமோ? சர்க்கரை நோய் இருக்குமோ? இடுப்பு பக்கம் வலிக்கிறதே? கிட்னி பிரச்சனை இருக்குமோ" போன்ற சந்தேகங்கள்/ பயங்கள் ஒரு பக்கம் இருந்து கொண்டே தான் இருக்கும். இவை முழுதாய்  போக வேண்டுமானால் வருடாந்திர உடல் பரிசோதனை தான் சிறந்தது. பொதுவாக நாற்பது வயதுக்கு மேல் வருடம் ஒரு முறை உடல் பரிசோதனை எடுக்க வேண்டும் என்பார்கள். இன்றைய சூழலில் முப்பதுக்கு மேலே கூட, 1 அல்லது 2 வருடத்திற்கொரு முறை எடுக்கலாம். வேடிக்கை என்னவென்றால் உங்களில் பலரை போல நானும் " ஏதாவது நோய் என சொல்லி விட்டால் என்ன செய்வது? எப்படி எதிர் கொள்வது?" என்று தான் பயந்து சோதனை செய்யாமல் இருந்தேன்.ஆனால் இந்த சோதனை செய்த பிறகு உடல் குறித்து வந்திருக்கும் தைரியம் அசாத்தியமாய் உள்ளது. இதற்காக செய்த 1500 ரூபாய் செலவு அது தந்த தைரியத்திற்கே சரியாய் போச்சு.  
 
**
சமீபத்தில் வந்த ஒரு எஸ். எம். எஸ்  " நிறுவனத்தில் கீழ் நிலையில் வேலை செய்பவர்கள் வாக்கிங் செல்ல நினைக்கிறார்கள்.  மானேஜர்கள்  வாக்கிங் செல்கிறார்கள்.  CEO-க்கள் கோல்ப்   விளையாடுகிறார்கள்"  
 
சிரிப்பு வர வைத்தாலும் இது மிக உண்மை தான். பணம் வந்து சேர்ந்த பிறகு தான் உடல் நலன் மேல் அக்கறை வர வேண்டுமென்பதில்லை. அதற்கு முன்பே அக்கறை வந்து விட்டால் நீங்கள் நினைத்தது எதையும் அடைய அதுவே பெரிய அடித்தளமாய் இருக்கும்.

சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் இவற்றின் வருகையை தவிர்க்கவும், நாளடைவில் இவை இதயத்தையும் பாதித்து ஹார்ட் அட்டாக் வராதிருக்கவும் நாம் செய்ய வேண்டியது 45 நிமிட உடற் பயிற்சி தான்.

குறிப்பாய் நாம் வசிக்கும் பகுதியிலேயே 45 நிமிடம் தினம் நடப்பது பல விதங்களில் மிகச்சிறந்தது. நம் ஏரியாவில் நடக்கும் விஷயங்களை தெரிந்து கொள்ளவும், பலரையும் பார்த்து புன்னகைக்கவும், அன்றைய தினத்தில் செய்ய வேண்டிய வேலைகளை பிளான் செய்யவும் இந்த 45 நிமிடங்கள் உதவும்.

ஒரு குடும்பத்தில் நடக்க கூடிய சோகங்களில் பெரியதொரு சோகம் சம்பாதிக்கும் நபரின் மரணம். அவரின் மரணம் அந்த குடும்பத்தை நிலை குலைய வைத்து விடும். என்ன தான் இன்சுரன்ஸ் பாலிசி, சேமிப்பு இருந்தாலும் முன்பு இருந்த வாழ்க்கை முறையை ( Life style ) அதன் பின் குடும்பத்தாரால் வாழ முடியாது. இதனை தவிர்க்க சற்று உடல் பயிற்சியும், உடல் குறித்த அக்கறையும் (பயமல்ல; அக்கறை ) நிச்சயம் தேவை. உங்களுக்காக இல்லா விட்டாலும் உங்கள் குடும்பத்திற்காக தினம் 45 நிமிடம் செலவிட உறுதி கொள்ளுங்கள்.  வாரத்தில் ஐந்து அல்லது ஆறு நாட்களுக்கேனும். இதனை தொடர்ந்து செய்ய முடிந்தால் நம் மேல் நமக்கே பெரிய மரியாதையும் நம்பிக்கையும் வருகிறது. முயற்சித்து தான் பாருங்களேன் !!                                            


                                                                    (தொடர்ந்து முன்னேறுவோம்) 

Monday, December 13, 2010

ஈசன் & ஆடு களம் பாடல்கள் விமர்சனம்



படம்: ஈசன்  
இசை :ஜேம்ஸ் வசந்தன்;
****


பாடல் 1: ஜில்லா விட்டு ஜில்லா வந்த 


(பாடியவர்: தஞ்சை செல்வி ;  பாடல் : மோகன் ராஜன்  )

நாதஸ்வரத்தை வாசிக்கும் முன் ஊதி பார்க்கும் சத்தத்துடன் ரொம்ப சாதாரணமாக ஆரம்பிக்கிறது பாடல்.  ஒரு பெண்ணின் கதையை சொல்லும் மிக கனமான, வருத்தமான பாடல்.  நம் நாட்டு புற பாடல்கள் பலவும் போல கனமான விஷயத்தை அருமையான இசை வாத்தியங்களுடன் இப்பாடல் சொல்லுகிறது. எங்கள் தஞ்சை மாவட்டத்தில் விழாக்களிலும் தெருவிலும் கேட்ட பாடல்களை நினைக்க வைக்கிறது. துவக்கத்தில் கேட்கும் போது இசைக்காகவே தான் ரசிப்போம் (குறிப்பாய் திரும்ப திரும்ப ஒரே விதமாய் ஒலிக்கும் இசை - நாதஸ்வரம் என நினைக்கிறேன்.. மிக அருமை ) .  பாடல் வரிகளை  உற்று கேட்டால் மனம் கனத்து போகிறது. சமீபத்து பாடல்களில் என்னை அதிகம் கவர்ந்த அதே சமயம் disturb-ம் செய்த பாடல் இது.  



பாடல் 2:கண்ணில் அன்பை சொல்வாளே
(பாடியவர் : பத்மநாபன் பாடல்: நா. முத்து குமார் ) 

காதலி பற்றி காதலன் பாடும் தனி (Solo) பாடல் 

"கண்ணில் அன்பை சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே..
துன்பம் என்னை தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே
சில நேரம் புன்னகையாலே பூக்கள் தந்திடுவாள் 
சில நேரம் சண்டைகளாலே என்னை வென்றிடுவாள்" 

என துவங்கும் போது நிறைய எதிர் பார்க்க வைக்கிறது. ஆனால் போக போக 1980 / 1990 காலத்து பாடல் கேட்பது போல் உள்ளது. "உறவென்னும் வார்த்தைக்கு அர்த்தம் இவளிடம் கண்டேன்; என்றும் இவள் சொந்தம் வேண்டும்" என்பதெல்லாம் ரொம்ப பழைய சமாச்சாரம் இல்லையா முத்து குமார் சார்?

**
இது தவிர மெய்யான இன்பம் என்ற பாடல் இரவு வாழ்க்கை பற்றி சொல்கிறது. பாடல் ஓரளவு நன்றாக இருந்தாலும் திரும்ப திரும்ப ஒலிக்கும் "மெய்யான இன்பம் இந்த போதையாலே" என்று போதையை போற்றும் வரிகளால் சற்று பிடிக்காமல் போகிறது. மற்ற பாடல்கள் நான்கைந்து முறை கேட்டும் கூட இதுவரை அதிகம் ஈர்க்க வில்லை.
**
படம்: ஆடுகளம் 
இசை : GV பிரகாஷ் குமார்




பாடல் 1: ஒத்த சொல்லால  
(பாடியவர் : வேல்முருகன் ) 

தாரை தப்பட்டையுடன் அமர்க்களமாக ஆரம்பிக்கிறது பாட்டு. பாடல் முழுதும் மெட்டு அங்கங்கு மாறி கொண்டே இருப்பது ரொம்ப இனிமையாக உள்ளது. மெட்டு &  பீட் இரண்டிற்காகவும் இந்த பாடல் பலரையும் நிச்சயம் கவரும். சில இடங்களில் கோரசாக பாடுவது போல் உள்ளதால் பாடல் வரிகள் சரியே புரிய வில்லை என்பது மட்டுமே சிறு குறை. 

பாடல் 2 : யாத்தே யாத்தே 
(பாடியவர் : GV பிரகாஷ் குமார்   பாடல்: சிநேகன் ) 

செமையான இசையுடன் கூடிய பாட்டு. இந்த பட ஆல்பத்தில் முதலில் ஹிட்டான பாடல் இது தான். பாடியது இசை அமைப்பாளர் GV பிரகாஷ் குமார் என்பது ஆச்சரியமான தகவல்.  

வெள்ளை நிறமான பெண்ணை,

" வெள்ளாமை வச்சுத்தான் வெளுத்தாங்களா? உன்னை வெயிலுக்கு காட்டாம வளத்தாங்களா"  என்பது புன்னகை வர வைக்கிறது. மெதுவாகவும் பின் வேகம் கூடியும் மறு மறு படி செல்கிறது பாடல். அடுத்த வருடத்து ஹிட் பாடல்கள் லிஸ்டில் ( படம் ரிலீஸ் 2011 தானே? )இடம் பிடிக்க போகும் பாடல் 

வெற்றி மாறன் இந்த இரு பாடல்களையும் எப்படி படமாக்கியிருப்பார் என்பதை பார்க்க ஆவலாக உள்ளேன். (நான் நிச்சயம் தனுஷ் ரசிகன் இல்லை !!) 

பாடல் 3: அய்யையோ நெஞ்சு அலையுதுடி 

 அப்பா & மகன் ( SPB & சரண் ) சேர்ந்து பாடிய அபூர்வ பாடல். ஆனால் பாட்டு ஒரு டூயட் !! பெண் குரலாக பிரசாந்தினி உண்டு. இந்த வயதிலும் SPB குரல் என்னமாய் குழைகிறது! இழைகிறது !! சரண் குரல் எங்கே என்று தான் தெரிய வில்லை. கேட்க கேட்க இன்னும் பிடிக்கும் என்றே தோன்றுகிறது. 

வெண்ணிலவே என்று ஆரம்பிக்கும் மிக மெதுவான (ஆவ்வ்) பாடல் இந்த தொகுப்பில் திருஷ்டி பரிகாரம் போல் உள்ளது.

இதை தவிர பொல்லாதவன் படத்து  ராப் பாதிப்பில் யோகி பாடிய ராப் பாடல் ஒன்றும் உண்டு. (செண்டிமெண்ட்??). இந்த பாடல் நடுவில் வரும் கிராமத்து திருவிழா அறிவிப்புகள் சற்று சுவாரஸ்யமாக உள்ளன. 

இந்த ஆல்பம் இப்போது கேட்க நன்றாக இருந்தாலும், ஒரே பயம் படம் சன் பிக்சர்ஸ் வெளியீடு. படம் வரும் முன்பும் பின்பும் பாட்டு வரிகளை அடிக்கடி டிவியில் போட்டு அலுக்க வச்சிடுவாங்களோன்னு தோணுது :((

டிஸ்கி: வானவில் மற்றும் வாங்க முன்னேறி பார்க்கலாம் மட்டும் கடந்த சில வாரங்களாக வருவதால் சற்று மாறுதலாக இந்த பாடல்கள் விமர்சனம்...  

Wednesday, December 8, 2010

வாங்க முன்னேறி பார்க்கலாம் பகுதி 9: சுய வெறுப்பு

முன்னேற தேவையான குணங்களில் அன்பு என்கிற பாசிடிவ் குணத்தை தொடர்ந்து "சுய வெறுப்பு" என்கிற நெகடிவ் குணம். 

ஒவ்வொரு மனிதனும் மிக அதிகம் நேசிப்பது தன்னைத்தான். அவன் மிக அதிகம் வெறுப்பதும் கூட தன்னையே தான். சற்றே  முரணாக   தோன்றினாலும் இந்த வாக்கியம் முழுக்க முழுக்க உண்மை.

ஒவ்வொரு மனிதரும்  அவரவர் எண்ணங்கள் மற்றும் ஆசைக்கு தான் அதிக முக்கியத்துவம் தருவோம். எனவே ஒவ்வொருவரும் தன்னைத்தான் அதிகம் நேசிப்பர் என்பதை எளிதில் ஒப்பு கொள்ளலாம். ஆனால் தன்னைத்தான் அதிகம் வெறுப்பது என்பது எப்படி நேர்கிறது?

ஒவ்வொரு மனித மனமும் பல்வேறு மர்மங்கள் அடங்கிய காடு. தனது குறைகள், தவறுகள் இது அத்தனையும் முழுதாய் அவரவருக்கு மட்டுமே தெரியும். மனைவி/ நண்பர் இவர்களிடம் தன்னை பற்றி பெரும்பாலான விஷயங்கள் (90 முதல் 95% வரை )  சொல்லியிருந்தாலும் கூட,  அந்த மீதமிருக்கும் 5 % யாரிடமும் சொல்ல முடியாமல் தடுமாறுகிறோமே அங்கு தான் சுய வெறுப்பின் வேர் உள்ளது. 

சுய வெறுப்பு பெரும்பாலும் அவரவரின் கடந்த காலம் மற்றும் அப்போது செய்து தவறுகள் மூலம் உண்டாகிறது. உண்மையில், ஒரு தவறை செய்யும் போது அது தவறு என நம் மனதுக்கு தெரிவதில்லை. தெரிந்தால் பெரும்பாலும் அந்த தவறை செய்வதில்லை. (சிகரெட், குடி பழக்கம் போன்றவை இதில் விதி விலக்கு; அதனை தவறு என தெரிந்தும் செய்கிறார்கள். செய்பவர்களே விட நினைக்கிறார்கள். முடிவதில்லை). இப்படி தவறு என தெரியாமல் செய்து விட்டு, பிற்காலத்தில் அதனை நினைத்து வருந்துகிறோம்.. "எத்தனை பேர் மனதை கஷ்டபடுத்தினோம்" என மனம் குமைகிறோம். இது ஒரு அளவிற்கு மேல் போனால் மன நோயாகும் வாய்ப்பும் உண்டு எனினும் பெரும்பாலானவர்கள் அந்த அளவுக்கு செல்வதில்லை. 

கடந்த கால தவறுகளை எண்ணி வருந்துவது தவறா? நிச்சயம் தவறில்லை. அது ஒரு அளவோடு இருந்தால் ! 

எனது அலுவலக வாழ்க்கையின் துவக்கத்தில் வேலை பார்த்த நிறுவனத்தில் சில நல்ல வாழ்க்கை முறையும் கற்று தரப்பட்டது. அங்கு சொல்லி தந்த முக்கிய விஷயங்களில் ஒன்று "Legitimize your past ". அதாவது கடந்த காலத்தில் நாம் நடந்து கொண்டவை அனைத்தும் அந்தந்த சூழல், வயது காரணமாக தான் நடந்தது. எனவே அதற்காக நம் மீது இருக்கும் வெறுப்பை களைவது ஒரு வாழ்க்கை முறையாகவே (Process) அந்த நிறுவனத்தில் செய்யப்பட்டது. இத்தகைய பழைய கால வெறுப்பு/ எண்ணங்களை "பாகேஜ் (Baggage)" என்று சொல்வார்கள். இத்தகைய பாகேஜ் மேலும், மேலும் சேர்த்து நாம் சுமக்க சுமக்க அது நமக்கு கெடுதல் செய்வதோடு, நம் முன்னேற்றமும் தடைபடும். எனவே தான் இத்தகைய சுய வெறுப்பை/ பாகேஜ்ஜை களைய வேண்டும் என அங்கு சொல்லி தர பட்டது. 

இந்த வரிகளை ஒரு முறை வாசியுங்கள்: 

" On no account brood over your errors. Take the learning alone. Rolling over the muck is not the best way of getting clean".

எத்தனை உண்மை இது ! உங்கள் பழைய தவறுகளுக்காக சில நிமிடங்கள் வேண்டுமானால் உங்களை நீங்களே திட்டி கொள்ளலாம். இனி இப்படி நடக்க கூடாது என உறுதி (Resolution ) எடுத்து கொள்ளலாம். இதனால் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால், மனமார அவர்களிடம் மன்னிப்பும் கேட்கலாம். அதற்கு மேல் அந்த விஷயத்தை பற்றி வருத்தமோ கவலையோ பட கூடாது.  இப்படி கடந்த காலம் பற்றி அதிகமாக கவலைப்படுவது நேர விரயம் மட்டுமல்ல, மனதிற்கும் கேடு.
**
என் வீட்டுக்கருகே புதிதாக ஒரு குடும்பம் குடி வந்தது. வயதான அம்மா, அப்பா, அவர்களது பெண் மற்றும் அவர்களின் பேத்தி இருந்தனர். அந்த சிறு குழந்தையின் தந்தை வீட்டில் இல்லை.  அந்த வயதானவர் என்னிடம் அவ்வப்போது பேசுவார். ஒரு முறை ரொம்ப நேரம் மனம் விட்டு பேசினார். அப்போது தனது சொந்தக்கார பையனைத்தான் தனது பெண்ணுக்கு மணம் முடித்ததாகவும் அலுவலகத்தில் நடந்த ஒரு விபத்தில் அவர் மரணம் அடைந்ததாகவும் மிக வருத்தத்துடன் சொன்னார். " நான் தான் விடாப்பிடியா நின்னு இந்த கல்யாணத்தை முடிச்சேன். சொந்த காரங்க சில பேர் வேண்டாம்னு சொன்னாங்க. என்னால் தான் எல்லாம் ! என்னால் தான் என் பொண்ணுக்கு இந்த நிலைமை" என சொல்லிக்கொண்டே போனார். 
அவரிடம் நான்  கேட்டேன். " சார் கடவுளாலும் முடியாத விஷயம்  ஒண்ணு  உண்டு. அது என்ன தெரியுமா? " 

"......."

" நடந்ததை மாற்ற அவரால் கூட முடியாது" 

சில நொடிகள் மௌனத்திற்கு பின், சில துளி கண்ணீருடன் என் கைகளை அவர் பிடித்து கொண்டார். அவர் முகம் முன்பை விட சற்று தெளிவாக மாறுவதை என்னால் நன்றாக உணர முடிந்தது. 

நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள் என பலரிடமும் அடிக்கடி நான் சொல்லும் வரிகள் இவை:

"கடவுளாலும் முடியாத விஷயம் ஒன்று உண்டு. நடந்ததை மாற்ற அவராலும் முடியாது ! "

இதனை முதல் முறை படிக்கும் போது நான் எப்படி உணர்ந்தேனோ, அதே வகை அதிர்வை இந்த வரிகளை கேட்டு அவர்கள் ஒவ்வொருவரும் உணர்வதை பல முறை கவனித்துள்ளேன். 

இந்த வரிகள் உண்மையில் தனிப்பட்ட முறையில் எனக்குப் பெரும் தெளிவை கொடுத்துள்ளது. இதனை உண்மையாக உணர்ந்த பிறகு கடந்த காலம் குறித்து கவலைப்படுவது அநேகமாக குறைந்து விட்டது. சில நேரம் நாம் முன்பு செய்த தவறுகள் புதிதாக இப்போது தான் புரிய வரும். அப்போது சில நொடிகள் மட்டும் என்னை நானே திட்டிக்கொண்டு, இனி இவ்வாறு செய்ய கூடாது என சொல்லிக்கொண்டு மீண்டு விடுவேன்.
***
சுய வெறுப்பு,  நாம் செய்யும் தவறுகளை விரைவில் களையாமல் அல்லது அதனை குறித்த குற்ற உணர்ச்சியை நெடு நாள் மனதில் சுமப்பதால் வருகிறது.

உள்ளுக்குள் எப்போதோ செய்த சில தவறுகள் இன்னும் இருக்கிறது எனில் ஒன்று மட்டும் செய்யலாம். குறிப்பிட்ட நபரிடம் மன்னிப்பு கேட்டு வெளிப்படையாய் பேசுவது அல்லது அவர் உயிருடனே இல்லை அல்லது வேறு காரணத்திற்காக பேச முடியாது எனில் உங்கள் குற்ற உணர்ச்சியை களைய  வேறு ஏதாவது பிரயாசித்தம் செய்து விடலாம். அநாதை இல்ல குழந்தைகளுக்கு ஒரு நாள் அன்னதானம் அல்லது யாராவது ஒரு ஏழை குழந்தைக்கு படிக்க பணம் கட்டுவது இப்படி ஏதாவது ஒன்று செய்யலாம். இங்கு நான் எந்த தவறை வேண்டுமானாலும்  செய்து விட்டு பிரயாசித்தம் செய்தால் போதும் என்று சொல்ல வரவில்லை. உங்களை அறியாமல் நீங்கள் செய்த பழைய தவறுகளை மறக்க, அதற்கு பதிலாக இன்னொரு நல்ல காரியம் செய்யுங்கள் என்று தான் சொல்கிறேன். 
**
தினசரி நான் செய்யும் சிறு சுய பரிசோதனையை இங்கு பகிர்கிறேன். புத்தகங்கள் மூலம் அறிந்த ஒன்று தான். எனினும் பெரும்பாலும் இதனை மாலை நேரம் நான் செய்வது உண்டு. 

தினமும் ஒரு குறிப்பிட நேரத்தில் அன்றன்று நாம் செய்த நல்ல காரியங்கள்,  செய்த சிறு தவறுகள் இது பற்றி சிந்திப்பது. பெரும்பாலும் ஒவ்வொரு நாளும் நாம் செய்த நல்ல செயல்கள் தான் அதிகமாக இருக்கும். இதற்காக நம்மை நாமே பாராட்டி கொள்ளலாம். இந்த குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமல்ல, எப்போதெல்லாம் நாம் சிறு நல்ல செயல் செய்கிறோமோ, அப்போதெல்லாம் நம்மை நாமே " குட்" என பாராட்டி கொள்ளலாம். நமது சுய மதிப்பு (Self esteem) வளர, இது ஒரு நல்ல வழி. இப்படி நல்ல விஷயங்களை பாராட்டிய பிறகு, அன்று செய்த தவறுகளை குறித்து யோசிக்கலாம். நிச்சயம் அலுவலகத்திலோ, வீட்டிலோ, வெளியிலோ சிற்சில தவறுகள் தினமும்  செய்கிறோம். அப்படி நாம் செய்த தவறு நினைவுக்கு வரும்போது " இனி இந்த மாதிரி தவறு செய்ய கூடாது" என சொல்லி கொள்ளல் வேண்டும்.  இது படிக்க சற்று Theoretic ஆக தோன்றினாலும் தினமும் செய்ய துவங்கினால் இதன் பலன்களை நன்கு உணரலாம்.  இவ்வாறு தவறுகள் பற்றி அன்றே யோசித்து அவற்றை "டீல்" செய்து விட்டால், பின்னர் அது உள்ளுக்குள் சுய வெறுப்பாக வளராது. 

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்: நாம் எந்த ஒரு சிறு தவறும் செய்ய கூடாதேனில், ஏதும் செய்யாமல் பேசாமல் இருந்தால் தான் முடியும் (சும்மா இருப்பதுவே ஒரு பெரிய தவறு தான்!!) நிறைய விஷயங்களில் நம்மை நாமே ஈடு படுத்திக்கொள்ளும் போது, சில சிறு தவறுகள் நடக்கத்தான் செய்யும். அதனை சரி செய்து கொண்டு மேலே ஏறி போய்க்கொண்டே இருக்க வேண்டியது தான்.
**

சுய வெறுப்பு எட்டி பார்க்காமல் இருக்க நாம் செய்ய வேண்டிய இன்னொரு முக்கிய விஷயம்: மனதை சும்மா விடாதிருத்தல். மனதை எப்போதும் ஏதாவது உருப்படியான (Productive) விஷயங்களில் செலுத்தி கொண்டே இருக்க வேண்டும்.

எல்லோருக்கும் தெரிந்த பழமொழி தான்: " சும்மா இருக்கும் மனம் சாத்தானின் இருப்பிடம் "  (An Idle mind is devil's paradise). மனதை சும்மா விட்டால் அது உங்களுக்கு செமையாய் வேலை வைத்து விடும். அதனை உங்கள் வேலையாள் போல நல்ல வேலைகள் தந்து கொண்டே இருக்க வேண்டும். 

மனித மனம் ஏதாவது ஒரு சிறு நல்ல வேலை செய்து கொண்டிருந்தால் தான் தன்னை தானே மதிக்கிறதாம்!! புத்தகம் படிப்பது, டிவி பார்ப்பது எதுவாயினும் சரி.. உருப்படியான ஏதோ ஒன்றில் ஈடு படுத்தி கொண்டிருக்க வேண்டும். இவை ஏதும் செய்யாது,   மனம் காட்டும் மாய உலகம் பக்கம் போனால் அது நம்மை ஏமாற்றி, மிரட்டி முட்டாளாக்கி விடும். 

அலுவல்/ குடும்பம்/ தனிப்பட்ட வாழ்க்கை இவை மூன்றுக்கும் தனித்தனியே நல்ல குறிக்கோள்கள் இருந்தால் மனதை டீல் செய்வது சற்று எளிதாகி விடும். இந்த மூன்று விஷயங்களுக்கான குறிக்கோள்களில் ஒன்றை மாற்றி ஒன்றை நோக்கி வேலை செய்யச்சொல்லி மனதை திருப்பி விடலாம். 

தன்னை நேசிக்காதவனால் மற்றவரை நேசிக்க முடியாது! கடந்த கால சுய வெறுப்புகளிலிருந்து மீண்டு வாருங்கள்.  முன்னேற்றத்தின் அடுத்த சில படிகளில் நிச்சயம் ஏறி விடலாம். 

Monday, December 6, 2010

வானவில்: மன்மதன் அம்பு & நரசிம்


டிவி பக்கம்: மன்மதன் அம்பும் பதிவர்கள் நிகழ்ச்சியும்

விஜய் டிவியில் மன்மதன் அம்பு பட பாடல்கள் வெளியீடு ஐந்து மணி நேரத்திற்கும் மேல் போட்டார்கள். ஆவ்வ்..  ரெண்டு மணிக்கு மேல் நாலு மணி வரை விடாமல் பார்த்தேன். (காரணம் கடைசியில்) கமலுக்கு வயதாகி விட்டது நன்கு தெரிகிறது. பாடல்கள் ஏற்கனவே கேட்டாகி விட்டது. சில பாடல்கள் வழக்கமான தேவி ஸ்ரீ பிரசாத் ஸ்டைலில் உள்ளன. பெரிதாக கவர வில்லை. போக போக ஒரு சில பிடிக்கலாம். 
நிகழ்ச்சிக்கு வருவோம். ஜூனியர் சுப்பர் சிங்கர் சிறுவர்களை பாட வைத்து ரொம்ப நேரம் ஓட்டினார்கள்.  மாதவன், திரிஷா, கமல் என ஒவ்வொருவருக்கும் இன்ட்ரோ தந்து அவர்கள் பாடல்கள் பாடி, ஒரு வழியாய் பாடல் வெளியிட்டனர். கமல் எழுதிய கவிதை பற்றி நிச்சயம் பதிவர்களே பல விதமாய்  விவாதிப்பார்கள் என நினைக்கிறேன்.
பதிவர் நண்பர்கள் கேபிள், பலா பட்டறை ஷங்கர், பொன். வாசு போன்றோர் பங்கு பெற்ற நந்த லாலா சினிமா விவாதம்  இந்நிகழ்ச்சி முடிந்ததும் வருமென பார்த்திருந்தேன். சினிமா விவாதம் நிகழ்ச்சி ரெண்டரைக்கு வர வேண்டியது. மன்மதன் அம்பு சிறப்பு நிகழ்ச்சியால் நாலு மணிக்கு மேல் தான் வந்தது. அதிலும் சிக்கு புக்கு பற்றி பேசி இன்றைய கதையை முடித்து விட்டனர். ம்ம்ம் நண்பர்கள் நிகழ்ச்சி அடுத்த வாரம் தான் வரும் போலும்..என்னை போல பார்த்து ஏமாந்தவர்கள் எத்தனை பேரோ? 

ரசித்த SMS: 

No one knows what he is capable of until he tries. 

சம்பவம் 


சமீபத்தில் வீட்டுக்கு பக்கத்தில் வழக்கமாய் செல்லும் மளிகை/ காய்கறி கடைக்கு சென்றேன். அங்கேயே ஒரு சிறு PCO போன் உள்ளது. அதில் நெடு நேரமாக ஒரு சிறு பெண் ( 12 அல்லது 13 வயது தான் இருக்கும் ) பேசி கொண்டிருந்தாள். ரொம்ப நேரமாக பேசுவதால் சற்று நேரம் கழித்து கவனிக்க, சர்வ நிச்சயமாக தன் ஆண் நண்பனுடன் பேசுகிறாள் என்பது புரிந்தது. " வச்சிடுறேன்..வச்சிடுறேன்.." என பத்துக்கும் மேற்பட்ட தடவை சொல்லி அதன் பின்னும் ரொம்ப நேரம் பேசி கொண்டிருந்தாள். அவள் வீட்டில் நிச்சயம் போன் இல்லாமல் இருக்காது. வீட்டிற்கு தெரியாமல் பேசுவதால் தான் இப்படி! எனக்கு மிக மனதை தொந்தரவு செய்தது அவள் வயது தான். 12 அல்லது 13 என்பது நிச்சயம் காதலிக்கும் வயது இல்லை. அந்த பக்கம் பேசியவன் நல்லவன் போல் தெரிய வில்லை.  கடைக்காரரிடம் " இந்த கொடுமையெல்லாம் நீங்க பார்க்க வேண்டியிருக்கே" என கேட்க " ஆமாம்" என்றார் வருத்ததுடன்.  அந்த பெண் ஏமாறாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் வீடு வந்து சேர்ந்தேன்.

பார்த்த சினிமா : பொக்கிஷம் 


"பொக்கிஷம்" படம் இந்திய தொலை காட்சிகளில் முதல் முறையாக கலைஞர் டிவியில் பார்த்தேன். யப்பா சேரனுக்கு என்ன ஒரு தைரியம்!! என்ன தைரியத்தில் இப்படி ஒரு படம் எடுத்திருக்கார்!! இந்த காலத்தில் இப்படி ஒரு படமா? பார்க்காமல் காதல், கடித காதல், சுத்த தமிழ் என கொல்கிறார் நம்மை. தமிழ் நடிகர்களில் கறி சாப்பிடுவதில் ஸ்பெஷலிஸ்ட் ராஜ் கிரண் என்றால் அழுவதில் ஸ்பெஷலிஸ்ட் சேரன் தான். என்னமா அழுகிறார் தெரியுமா! தைரியம் இருந்தால் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். சிவாஜி போல சில நேரம் முக பாவம் காட்டுகிறார். அசுந்துட்டேன் போங்க. இவரின் தவமாய் தவமிருந்து எனக்கு மிக பிடித்த படம். சுத்தமாய் பிடிக்காத பட்டியலில் பொக்கிஷம் சேரும். உருப்படியான ஒரே விஷயம் இந்த படத்தில் வரும் " நிலா நீ வானம் காற்று மழை" பாடல் தான். ஹோட்டலுக்கு சாப்பிட போன நாங்கள் இந்த படத்தை பார்க்க அவசரமாய் வீடு வந்தோம். படம் ஆரம்பித்து 45  நிமிஷம்  ஆகியிருந்தது. கடைசியில் அனைவரும் பேசி கொண்டது " நல்ல வேளை 45  நிமிஷம்  லேட்டா வந்தோம்"  

அய்யாசாமி தரும் எச்சரிக்கை : 

"ஓட்டலுக்கு போய் பார்சல் வாங்கினால் நீங்க ஆர்டர் செய்த எல்லாம் கவரில் போட்டுட்டாங்களா என சரியா செக் பண்ணி வாங்குங்க. அடையார் ஆனந்த பவன், ஹாட் சிப்ஸ் தொடங்கி வீட்டுக்கு பக்கத்தில் உள்ள துர்கா பவன் வரை பல தடவை எனக்கு சப்பாத்தி போல ஏதாவது ஒரு ஐட்டம் குறைவா வச்சிடுறாங்க. அதுக்குன்னு மறுபடி அவ்வளவு தூரமா போக முடியும்? இருக்கிறதை வச்சி வாங்கி கட்டிக்கிட்டு சாப்பிட வேண்டியது தான். இது தான்னு இல்லை.. துணி கடையில் கூட சில நேரம் ஒரு சில பொருளை கவரில் போடாம விட்டுடுறாங்க. டிபன் மாதிரி இதை விட்டுட முடியுமா? அது எந்த ஊரா இருந்தாலும் மறுபடி போய் வாங்கிட்டு வர வேண்டியது தான். இப்போல்லாம் எது வாங்கினாலும் ஒன்னுக்கு ரெண்டு முறையா செக் பண்ணிட்டு தான் வீட்டுக்கு வர்றது..சொல்றதை சொல்லிட்டேன். ஏதோ நீங்களாவது வீட்டம்மா கிட்ட பாட்டு வாங்காம தப்பிச்சிக்குங்க ! " 

இணையத்தில் ரசித்தது 

நரசிம் எழுதிய கல்லூரி காலம் பற்றிய பதிவு வரிக்கு வரி ரசிக்க வைத்தது. அநேகமாய் வாசித்திருப்பீர்கள்.  (நர்சிம்முக்கு நானா அறிமுகம் தரனும்?) இல்லையேல் ஒரு முறை வாசியுங்கள் . உங்கள் கல்லூரி காலம் நிச்சயம் நினைவில் வரும்.. 

ரசிக்கும் விஷயம் : கத்ரினா கைப்


அழகு = கத்ரினா கைப். (இப்போதைக்கு)

இதற்கு மேல் சொல்ல ஏதுமில்லை

(சல்மான், ரன்பீர் கபூர் போன்ற வில்லன்களையோ, கத்ரினா பற்றிய தவறான வேறு சில விஷயங்களோ பின்னூட்டத்தில் பகிர்ந்து என்னிடம் சாபம் பெறாதீர்கள்..) :))

Related Posts Plugin for WordPress, Blogger...