Monday, December 31, 2012

2012- திரைப்படம் + அரசியல்: சீரியஸ் & காமெடி விருதுகள் !

திரைப்படம்/ அரசியல்/ விளையாட்டு சார்ந்து இந்த வருடத்தின் சீரியஸ் + காமெடி விருதுகள் மற்றும் சில முக்கிய நிகழ்வுகள் இதோ.
******
திரைப்படம்

சிறந்த இயக்குனர்: பாலாஜி சக்திவேல் (வழக்கு எண் )சிறந்த புதுமுக இயக்குனர் : கார்த்திக் சுப்புராஜ் (பீட்சா)

சிறந்த நடிகர்: விஜய் சேதுபதி (பீட்சா)

சிறந்த நடிகை: சமந்தா (நான் ஈ& நீதானே)

சிறந்த புதுமுக நடிகர் :  தினேஷ் ( அட்ட கத்தி )

சிறந்த புதுமுக நடிகை : லட்சுமி மேனன் ( கும்கி, சுந்தரபாண்டியன்)

சிறந்த கவிஞர்: வைரமுத்து (நீர்ப்பறவை)

சிறந்த இசை அமைப்பாளர் : இமான் (கும்கி)

சிறந்த வசனகர்த்தா: ஜெயமோகன்/ சீனு ராமசாமி (நீர்ப்பறவை)

சிறந்த ஒளிப்பதிவாளர் : சுகுமார் (கும்கி)

சிறந்த காமெடி நடிகர் : சந்தானம் ( ஒரு கல் ஒரு கண்ணாடி)

சிறந்த பொழுதுபோக்கு/ கமர்ஷியல் படங்கள்: துப்பாக்கி & நான் ஈ

சமூக கருத்தை சொன்ன சிறந்த படம்: வழக்கு எண் 18/9

சிறந்த பின்னணி பாடகர் : விஜய் பிரகாஷ் ( நாணி கோணி - மாற்றான் & என்ன சொல்ல ஏது சொல்ல - மனம் கொத்தி பறவை)

சிறந்த பின்னணி பாடகி : சைந்தவி (உயிரின் உயிரே- தாண்டவம் & மனசெல்லாம் மழையே - சகுனி )

அரசியல்

அதீத லாபமடைந்தவர் : துணை கொ. ப. செ பதவியுடன் இன்னோவா காரும் பெற்றவர் ( மூணு வருடத்தில் கோடீஸ்வரர் கன்பர்ம்)

அதிர்ச்சி தீர்மானம்: சில்லறை வர்தகத்தில் அந்நிய முதலீடு அனுமதி

மிக சிறந்த ஜோக்: " என்னாது? மிக அதிக மின்வெட்டு தமிழகத்தில் இருக்கா? இதை ஏன் எந்த அமைச்சரும் என் கவனத்துக்கு கொண்டு வரவே இல்லை?"

அமைச்சர்கள்

Exit : செங்கோட்டையன், அக்ரி. கிருஷ்ண மூர்த்தி, வேலுமணி, சிவா சண்முகம், ஜெயகுமார் (சபாநாயகர்)

Entry : பி. மோகன், சிவபதி, முக்கூர் சுப்ரமணியன் , தனபால் (சபாநாயகர்)

தமிழக துயரம்: வரலாறு காணாத மின்வெட்டும், பஸ், பால், மின்கட்டண உயர்வும்

பலே பல்டி : சசி நீக்கமும், சேர்ப்பும்

மின்வெட்டுக்கு அடுத்து தமிழர்களை மிரட்டியது : டெங்கு காய்ச்சல்

2013 -ன் கவலை: வறட்சி, தண்ணீர் பஞ்சம்

கிரிகெட்

சிறந்த கிரிகெட் வீரர்கள்: மைக்கேல் கிளார்க், விராட் கோலி

சிறந்த Comeback : யுவராஜ்

வீழ்ந்த சுவர்கள்: டிராவிட், லக்ஸ்மன்

MISCELLANEOUS

பயமுறுத்தி புஸ் ஆகியவர் : மாயன்

முக்கிய மரணங்கள்: ஐ. கே குஜ்ரால், பால் தாக்கரே, வீரபாண்டி ஆறுமுகம்

கவனம் ஈர்த்த இளம் பதிவர்: திடங்கொண்டு போராடு சீனு

பதிவர்களை பதுங்க வைத்தது : 66 A

சிறந்த "You are Dismissed " விருது : நித்யானந்தா - (மதுரை ஆதீனம் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டது )

என்னா கண்டுபிடிப்புடே : கடவுள் துகள் (ஹிக்ஸ் போஸான்)
நான் ஏதும் தவற விட்டிருந்தால் சொல்லுங்கள் நண்பர்களே !

நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் !

Sunday, December 30, 2012

2012-ல் எப்படி இருந்தது அமெரிக்கா + புத்தாண்டு தீர்மானங்கள் !

சுஜாதா எழுத்துக்களை கரைத்து குடித்தவர் பாலஹனுமானா - தேசிகனா என பட்டிமன்றமே வைக்கலாம். அப்படி ஒரு தீவிர சுஜாதா ரசிகர் நண்பர் பாலஹனுமான் !

தான் படித்த நல்ல விஷயங்களை மட்டும் ப்ளாகில் தொடர்ந்து பகிர்கிற இவரை நேரில் சந்திக்கும் போது பல விஷயங்களை, அனுபவங்களை சரளமாய் பேசினார். " ஏன் உங்கள் எண்ணங்களை எழுதுவதே இல்லை? எழுதுங்களேன்" என்றால், " ஆம். சில நண்பர்கள் இதை சொல்லத்தான் செய்றாங்க; செய்யணும் " என்றாரே ஒழிய அந்த "தவறை" செய்யவே இல்லை :)

விடுவோமா நாம்? 2012-ல் அமெரிக்கா குறித்தும், புத்தாண்டு தீர்மானங்கள் பற்றியும் அவரிடம் எழுதி வாங்கி விட்டோம். தன் ப்ளாகிலேயே எழுதாத நண்பர் பால ஹனுமானின் சிறப்பு பதிவுகள் இதோ :

****
2012-ல் எப்படி இருந்தது அமெரிக்கா - பாலஹனுமான்

எல்லாக் கருத்துக் கணிப்புகளையும் முறியடித்து, இரண்டாவது முறை​யாக அமெரிக்க அதிபராகி விட்டார் ஜனநாயகக் கட்சியின் ஒபாமா.2008 தேர்தல் மாதிரி இந்த முறை அவருக்கு பெரிதாக ஆதரவு அலையும் இல்லை. அவரை உற்சாகமாக தேர்ந்தெடுத்த மக்களுக்கு கடந்த நான்கு வருடங்களில் அவர் அளித்த ஏமாற்றங்கள் ஒன்றா இரண்டா ?

•பொருளாதார சரிவு

•வேலையில்லாதோர் எண்ணிக்கை உயர்வு

•வாக்களித்தபடி போர் நிறுத்தங்கள் நடைபெறவில்லை

•படைகள் வாபஸும் முழுமை பெறவில்லை

பாவம், ஒரு விதத்தில் அவரைச் சொல்லியும் குற்றமில்லை. முந்தைய அதிபர் புஷ் நிர்வாகத்தில் நடந்த குளறுபடிகளை சரிசெய்வதிலேயே அவரது பாதி நேரம் போய் விட்டது.

கடந்த ஆட்சிக் காலத்தில் அவரது சாதனைகளை இப்போது பார்ப்போம்.

•அமெரிக்காவுக்கு சவாலாக இருந்த ஒசாமா பின்லேடன், லிபிய அதிபர் கடாபி ஆகியோரைத் தீர்த்துக்கட்டியது.

•நாடுதழுவிய ஒபாமா ஹெல்த்கேர்

•கட்சிப் பாகுபாடுகளை மறந்து ஒபாமா எதிர்க்கட்சிக்காரர்களுடன் பாராட்டும் நல்லுறவு.

•நாடெங்கும் சுற்றுச்சூழல் மாசுக்கட்டுப்பாட்டைக் குறைக்க எடுத்துவரும் பெரு முயற்சிகள்.

•தக்க சமயத்தில் அமெரிக்க கார் தொழிலுக்குக் கை கொடுத்துத் தூக்கிவிட்ட புத்திசாலித்தனம்.

இப்படி தன்னுடைய பாபுலாரிட்டி ரேட்டிங்கும் சரிந்து வந்த நிலையில், ஒபாமாவின் இந்த வெற்றிக்குக் கை கொடுத்தவர் வேறு யாரும் இல்லை. அவரது போட்டியாளரான ரோம்னியேதான். வரியில்லாமல், பொருளாதாரத்தை மீட்டெடுப்பேன், வேலை வாய்ப்பைப் பெருக்குவேன் என்றெல்லாம் உதார் விட்டவர் அதை எப்படி செயல்படுத்தப் போகிறேன் என்ற தெளிவான திட்டத்தை அறிவிக்கத் தவறியது ஒரு மிகப் பெரிய சொதப்பல்.

'கடுமையான பாதை... தொலைதூரப் பயணம். அமெரிக்காவின் வளர்ச்​சிக்காக ரோம்னியுடன் சேர்ந்து சிந்திக்க நான் விரும்புகிறேன். அவரு​டைய யோசனைகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்’ என்று அறிவித்திருக்கிறார் ஒபாமா. 'ஒபாமா நல்ல ஆட்சி நடத்திட இறைவனைப் பிரார்த்திக்கிறேன்’ என்று வாழ்த்து சொல்லி இருக்கிறார் ரோம்னி. இந்த அரசியல் நாகரிகம் வரவேற்கத்தக்கது.

ஒபாமாவுக்கு மீண்டும் ஒரு சான்ஸ் கிடைத்திருக்கிறது. இந்த முறையாவது அவர் சொன்னதைச் செய்வாரா ? பொறுத்திருந்து பார்ப்போம்.

வாழ்க அமெரிக்கா! வளர்க ஜனநாயகம்!
###################################

புத்தாண்டு தீர்மானங்கள் - பால ஹனுமான்

********************************************************************
புத்தாண்டுத் தீர்மானங்கள் என்பது ரப்பர் கண்டு பிடித்த காலத்திலிருந்தே வந்திருக்க வேண்டும். போன வருஷம் செய்த தப்புக்களையும் அபத்தங்களையும் அழித்துவிட்டு இந்த வருஷம் புதுசாக ( தப்பில்லாமல் ) ஆரம்பிக்கலாம் என்ற எண்ணம். நன்றாக யோசித்துப் பார்த்தால் இந்த ஆதார குணம் நம் எல்லோருக்கும் இருக்கிறது.


புது நோட்டு வாங்கும் போது அழகாக எழுத வேண்டும் என்று முதல் இரண்டு பக்கம் எழுதிவிட்டு, பிறகு கோழிக் கிறுக்கலாகப் போகும். அடுத்த புது நோட்டு வாங்கும் வரை.

தேர்வு எழுதும் போதும் முதல் பக்கம் அழகாக எழுத ஆரம்பிப்போம் பிறகு அதே கோழி வந்து கிறுக்கிவிட்டுப் போகும்.

இது எல்லாவற்றுக்கும் பொருந்தும். புது வீடு, புது கார், புது மனைவி... இவை எல்லாம் வருடா வருடம் வருவதில்லை. ஆனால் புது வருடம் வருகிறது. வாழ்க்கையில் நமக்கு ரிவைண்ட் பட்டன் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று முதல்வன் படத்தில் வரும் வசனம் தான் நினைவுக்கு வருகிறது.

இந்த வருடமும் தீர்மானங்கள் போட உத்தேசம்... நீங்களும் உபயோகப்படுத்திக்கொள்ளலாம். பிரச்சனை வந்தால் நான் அதற்கு பொறுப்பு இல்லை. நான் ஏற்கனவே இவற்றைக் கடைப்பிடிப்பவ(ன்)(ள்) என்றால் உங்களுக்குக் கடைசியில் ஒரு தீர்மானம் வைத்திருக்கிறேன்.

“New year resolutions are meant to be broken.” ( இந்த மாதிரி ஆங்கிலத்தில் ஏதாவது சொன்னால் யாரோ பெரியவர் சொல்லியிருக்கிறார்கள் என்ற எண்ணம் வரும் அதனால் )

1. நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை (Ego) விட்டு விடுவேன்.

2. அர்த்தமில்லாமலும், பின்விளைவு அறியாமலும் பேசிக் கொண்டேயிருப்பதை விட்டு விடுவேன். (Loose Talk)

3. எந்த விஷயத்தையும், பிரச்சனையையும் நாசூக்காகக் கையாளுவேன். (Diplomacy) விட்டுக் கொடுப்பேன். (Compromise)

4. சில நேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணர்வேன், (Tolerance)

5. எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக்கொண்டிருக்க மாட்டேன்.

6. எனது கருத்துகளில் உடும்புப் பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்வேன். (Flexibility)

7. மற்றவர்களுக்குரிய மரியாதையை காட்டவும், இனிய, இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவற மாட்டேன். (Courtesy )

8. புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும்கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ள மாட்டேன்.

9. பிரச்சனைகள் ஏற்படும்போது அடுத்தவர் தான் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல், நானே பேச்சைத் துவங்க முன்வருவேன்.

10. அட இவை எல்லாம் நான் கடைப்பிடிப்பவன் வேறு ஏதாவது இருக்கா ? என்று கேட்பவர்களுக்கு இந்த தீர்மானம் - பிளாக் எழுதுவதை/படிப்பதை விட்டுவிடுவேன் :-)

வீடு திரும்பல் வாசகர்கள் அனைவருக்கும் பாலஹனுமானின் புத்தாண்டு வாழ்த்துக்கள் ! Inline image 1

Saturday, December 29, 2012

விளையாட்டு உலகம் -2012 : பத்து முக்கிய நிகழ்வுகள் !

ளம் பதிவர்களில் என் ரசிப்புக்குரியவர் : மெட்ராஸ் பவன் சிவகுமார். சீரியஸ் விஷயத்தை கூட நகைச்சுவை  குழைத்து எழுதும் இவர் எழுத்து  பத்திரிக்கையில் வெளிவர தகுதியானது ! எழுதுவதை விட ஆணித்தரமாய், நேரில் , தான் நம்பும் விஷயங்களுக்காக விவாதம் செய்யக்கூடியவர். தமன்னா ரசிகர் என்பதை தவிர மற்றபடி ரொம்ப நல்ல மனிதர் :)

இவரிடம் எனக்கு ஒரே ஒரு வேண்டுகோள் உண்டு: அதை உங்கள் முன் இங்கு வைக்கிறேன்.

சிவா தம்பி, நீங்கள் இப்போது கூட வக்கீலுக்கு படிக்கலாம். ஆந்திராவில் பல யூனிவர்சிட்டிகள் வக்கீல் படிப்பை கரஸ்-சில் தருகிறார்கள். நிச்சயம் அந்த துறையில் நீங்கள் ஷைன் செய்வீர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நோ ஜோக்ஸ். சீரியசாய் யோசியுங்கள் !
**************
விளையாட்டு -2012 : பத்து முக்கிய நிகழ்வுகள் - மெட்ராஸ்பவன் சிவகுமார்
****
லக விளையாட்டு அரங்கில் 2012 ஆம் ஆண்டு நடந்த பத்து முக்கிய நிகழ்வுகள் பற்றி வீடு திரும்பல் வாசகர்களுக்கு பகிர்வதில் மகிழ்ச்சி. சர்வதேச விளையாட்டை பொருத்தவரை பத்து நிகழ்வுகள் என்பதே மிகச்சிறிய எண்ணிக்கைதான். ஆண்டாண்டு தோறும் பல்வேறு அதிர்ச்சிகள்,ஆச்சர்யங்கள் மற்றும் சாதனைகளை நிகழ்த்தும் உலக விளையாட்டு போட்டிகளில் 2012 ஆம் ஆண்டின் சிறந்த/முக்கிய பத்து நிகழ்வுகளாக நான் கருதுபவை கீழ்வருமாறு:

* ஒலிம்பிக்: சீனாவின் ஆதிக்கத்தை தகர்த்து கடைசி நாட்களில் லாங் ஜம்ப் செய்து 46 தங்கங்களுடன் அமெரிக்கா முதலிடம் பெற்றுவிட்டது. இந்தியா அதிக பதக்கங்களை வென்றதும் மகிழ்ச்சியே.


குறிப்பாக மேரி கோம் இரண்டு பிள்ளைகளுக்கு தாயான பிறகும் குத்துச்சண்டையில் வெண்கலம் வென்றது இந்திய மகளிர் மேலும் முனைப்புடன் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் ஆர்வத்தை அதிகரிக்க முக்கிய காரணமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

* க்ரிக்கெட்: 2011 உலக சாம்பியன் இந்தியாவின் டப்பா 2012 இல் முக்காபுலா டான்ஸ் ஆடிவிட்டது. விக்கட் கீப்பர் மற்றும் முன்னணி பேட்ஸ்மேன் ஆக பெர்பாம் செய்வது கொடிது. அதனினும் கொடிது இவ்விரண்டுடன் கேப்டன் பதவியை திறம்பட செய்வது. அதிலும் பலகோடி க்ரிக்கெட் ரசிகர்களை கொண்ட இந்திய அணியில் இப்பேற்பட்ட பொறுப்பில் இருப்பது. பாவம் தோனி. ஒருநாள் க்ரிக்கட் போட்டிகளில் மட்டுமே தலைமை தாங்கிவிட்டு டெஸ்ட், T20 கேப்டன் பதவிகளை இளையவர்களுக்கு தருவதே சரியான முடிவாக இருக்க முடியும். இந்தியா தவிர்த்து எந்த முன்னணி அணியும் மூன்று வகை பார்மேட்களுக்கும் ஒரே கேப்டனை வைத்திருக்கவில்லை என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்.

* டென்னிஸ்: முன்னிலை வீரர்கள் சரிக்கு சமமாக மோதிக்கொண்டது இவ்வாண்டுதான். ஆஸி ஓப்பனில் ஜோகோவிக் நடாலை வீழ்த்தினார் என்றால் அதற்கு பழிவாங்கி ப்ரெஞ்ச் ஓப்பனில் அவரை சாய்த்து கோப்பையை வென்றார் நடால். விம்பிள்டனில் பெடரர் ஆன்டி முர்ரேவை அடித்தால் ஒலிம்பிக் தங்கப்பதக்க போட்டியில் முர்ரே பெடரரை மண்ணை கவ்வ வைத்தார்.


இறுதியாக அமெரிக்க ஓப்பனில் ஜோகோவிக்கை வென்றார் முர்ரே. அனல் பறந்த ஆடவர் டென்னிஸில் இவ்வாண்டு விஸ்வரூபம் எடுத்துள்ளது முர்ரே என்பதில் சந்தேகமில்லை.

* க்ரிக்கெட்: அதிர்ச்சி மற்றும் கவலை தந்த சம்பவங்களில் ஒன்று இது. பாகிஸ்தானின் கண்பார்வையற்றோர் ஆடவர் கிரிக்கெட் அணி T-20 போட்டிகளில் இந்தியாவுடன் மோத பெங்களூர் வந்தது. அப்போது அந்த அணியின் கேப்டன் ஜீஷான் அப்பாஸி அருந்திய குடிநீரில் சோப்பு துகள்கள் இருந்ததால் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.


அது ஆசிட் என்றும், இந்தியாவிற்கு பொறுப்பில்லை என்றும் வழக்கம்போல பாகிஸ்தான் மகுடி வாசிக்க பிறகு ஒரு வழியாக இருதரப்பும் சமாதானம் ஆனது. கண்பார்வையற்றோர் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பது அனைத்து நபர்களுக்குமான பாடமாகிப்போனது இந்நிகழ்வு.

* செஸ்: 'அறிவிற்சிறந்தவன் இந்தியனே' என்பதை அகிலத்திற்கு நிரூபித்து இருக்கும் தமிழன். ஐந்தாம் முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் இந்த சதுரங்க சாம்ராட்.


பால்ய வயது முதலே செஸ்ஸை தவிர வேறொன்றும் அறியேன்' என லட்சிய காய்களை துல்லியமாக நகர்த்தி இந்த இடத்தை அடைந்துள்ளார் ஆனந்த். CNN - IBN சேனல் 'சிறந்த இந்தியன் - 2012' விருதை தந்து இவரை கௌரவித்துள்ளது.

* சைக்ளிங்: லான்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங்...உலக சைக்ளிங் என்றதும் உடனே நினைவிற்கு வரும் பெயர். உலகின் மிக முக்கிய போட்டியாக கருதப்படும் டூர்-டி-பிரான்ஸ் சைக்கிள் போட்டியில் 1999 முதல் 2005 வரை தொடர்ந்து ஏழு முறை பட்டம் வென்ற ஒரே வீரர். கேன்சரில் இருந்து மீண்டு வந்தவர். ஆனால் 2012 இல் இவருக்கு பேரிடி காத்திருந்தது. போட்டிகளில் போதை மருந்து உட்கொண்டார் என்பதால் இவர் வென்ற அனைத்து பட்டங்களும் பறிக்கப்பட்டன. அண்டம் போற்றிய மிதிவண்டி வீரரை வாழ்க்கை வண்டி மிதித்த ஆண்டு இந்த 2012.

* ஹாக்கி: முன்பொரு காலத்தில் உலகையே ஆட்டிப்படைத்த இந்திய ஹாக்கி அணி 2012 ஒலிம்பிக்கில் இப்படி ஒரு பெருவீழ்ச்சியை சந்தித்தது எனக்கு ஆச்சர்யம் அல்ல. இது குறித்து எனது தளத்தில் ஒலிம்பிக் முன்னோட்ட பதிவொன்றில் எழுதி இருந்தேன்.

க்ளிக் செய்க: லண்டன் ஒலிம்பிக் - 3

மிஞ்சிப்போனால் வெண்கலம் என்பதே எனது அப்போதைய கணிப்பு. அதையும் ஹாக்கி வல்லுனர்கள் சிலரிடம் கலந்துரையாடிய பிறகே கூறினேன். இந்திய ஹாக்கி பிளவுபட்டு இருப்பினும் புதிய வீரர்கள் நம்பிக்கை தருவார்கள் என அவர்கள் கூறினர். ஆனால் ஒலிம்பிக்கில் கடைசி இடத்தை அடைந்து மானத்தை கப்பலேற்றியது இந்திய அணி. இறுதி நிமிடங்களில் எதிரிகளை கோலடிக்க விடுதல், ஐரோப்ப வீரர்களின் உடல்திறன் மற்றும் தொழில்நுட்பத்துடன் போட்டி போடாமல் இருப்பது இந்தியாவின் மைனஸ். தேசிய விளையாட்டான ஹாக்கி விரைவில் மறுமலர்ச்சி பெறும் என நம்பும் ஹாக்கி ரசிகர்களில் ஒருவனாக நானும் கன்னத்தில் கை வைத்து காத்திருக்கிறேன்.

* கங்னம் ஸ்டைல்: 2012 இல் உலக விளையாட்டு ரசிகர்கள் இவ்வாண்டு அரங்கைத்தாண்டி கொண்டாடியது கொரிய பாடகர் சை ஆடிப்பாடிய கங்னம் ஸ்டைல் பாடலைத்தான். சும்மா அதிரி புதிரி ஹிட். உபயம்: க்ரிக்கெட் வீரர் க்ரிஸ் கெய்ல்.

http://www.youtube.com/watch?v=60MQ3AG1c8o

*தடகளம்: மேற்கிந்தியத்தீவு கிரிக்கெட் வீரராக வரவேண்டியவர். விதிவசத்தால்(!) ஓட்டப்பந்தய வீரரானார் ஜமைக்காவின் உசேன் போல்ட்.


2012 ஒலிம்பிக்கில் 100, 200 & 4* 100 மீட்டர் ரிலே என மூன்றிலும் தங்கம் வென்று நிலமதிர வைத்த கருப்பு மின்னல். இவருக்கு கடும் சவாலை தந்து வருபவர் 'தி பீஸ்ட்' என்று வர்ணிக்கப்படும் யோஹன் ப்ளேக்(ஜமைக்கா). அடுத்த ஆண்டு பீஸ்ட்டின் Feast ஐ எதிர்பார்க்கலாம்.

* பாரா ஒலிம்பிக்ஸ்: மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் போட்டிகளை மீடியா மற்றும் ரசிகர்கள் பெரிதும் கண்டு கொள்ளாதது வருத்தத்திற்கு உரியது. 2012 லண்டனில் நடந்த இப்போட்டிகளில் 95 தங்கங்களை வென்று முதலிடம் பிடித்தது சீனா. அதற்கடுத்து மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடான இந்தியா ஒரே ஒரு வெள்ளியுடன் 67-வது இடத்தையே பிடித்தது. அந்த அளவிற்கு இருக்கிறது மாற்றுத்திறனாளிகளை இந்தியா ஊக்குவிக்கும் லட்சணம். வெள்ளி வென்றவர் கர்நாடகாவின் உயரம் தாண்டும் வீரர் கிரிஷா நாகராஜேகவுடா(வயது 24).


போலியோவால் இடது கால் செயலற்று போனது இவருக்கு. இவரது தந்தை ஒரு ஏழை விவசாயி. இருந்தும் மகனின் விளையாட்டு ஆர்வத்திற்கு தடைபோடவில்லை. NGO ஒன்றின் உதவியால் லண்டன் சென்றி சரித்திரம் படைத்துள்ளார் கிரிஷா.

-மெட்ராஸ்பவன் சிவகுமார்
அண்மை பதிவுகள் :

2012- அசத்திய 10 சிறுபடங்கள் + 5 சூப்பர் ஹிட் படங்கள்

2012: 10 சூப்பர் ஹிட் பாடல்கள் : ஒலியும், ஒளியும்   2012 : 

இந்திய அரசியல் : ஒரு பார்வை - வேங்கட சீனிவாசன்

2012 : தமிழகம் : டாப் 10 சம்பவங்கள் - சமீரா

Friday, December 28, 2012

2012: அசத்திய 10 சிறு படங்கள் + 5 சூப்பர் ஹிட் படங்கள் !

முஸ்கி : தினம் இரு பதிவுகள் என்பது அலுப்பாய் இருக்கிறது. நாளை முதல் தினம் ஒரு பதிவு மட்டுமே !

**********
2012- ஐ சிறுபடங்களின் ஆண்டென எந்த தயக்கமும் இன்றி சொல்லலாம் ! மிக பெரிய ஸ்டார், பெரிய பட்ஜெட் இவற்றை நம்பி ஓடிய தமிழ் திரை உலகம் புதிய இயக்குனர்களின் வித்தியாச ஐடியாக்களுக்கு, சிகப்பு கம்பளம் விரித்து பொதுமக்கள் வரவேற்பதை உணர்ந்து மீனிங்புல் சினிமா பக்கம் 2013-ல் திரும்பினால் அதுவே மிக நல்ல மாறுதலாய் இருக்கும் !

இந்த வருடம் அசத்திய 10 சிறுபடங்களும், 5 பெரிய பட்ஜெட் படங்களும் இதோ :

1. வழக்கு எண் : 18 / 9

நீண்ட நாளாக டுக்கப்பட்டு இவ்வருடம் வெளியான பாலாஜி சக்திவேலின் படம். அவரது டிரேட் மார்க் - க்ளைமாக்சில் அதிர வைப்பது தான். அதை இப்படத்திலும் சரியே செய்திருந்தார்.

பள்ளியில் படிக்கும் இளம் வயதினரின் காதலையே மீண்டும் மீண்டும் எடுத்தாலும், இவரது படங்களை பார்த்தால், அடலசன்ட் வயது மாணவர்களே கூட பள்ளி காலத்தில் காதலிக்க யோசிப்பார்கள். வன்முறை, ஆபாச காட்சிகள் இன்றி படமெடுக்கும் பாலாஜி சக்திவேல் போன்ற இயக்குனர்கள் தமிழ் திரை உலகிற்கு அவசியம் தேவை.

தொடர்புடைய  பதிவு:: வழக்கு எண் 18 / 9 : ஒரு வழக்கறிஞர் விமர்சனம்

2. காதலில் சொதப்புவது எப்படிசெம ஜாலியான படம் ! இயக்குனர் பாலாஜி அனுபவிச்சு படத்தை எடுத்திருந்தார். அமலா பால் பாத்திரம் தான் ரொம்ப பிடித்தது. பல பெண்களின் ஒட்டு மொத்த பிரதிபலிப்பாய் அப்பாத்திரம் தெரிந்தது. வருட துவக்கத்தில் வந்து இவ்வருடம் வெளியான பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு பிள்ளையார் சுழியாய் இப்படம் இருந்தது.

தொடர்புடைய  பதிவு: காதலில் சொதப்பிட்டாங்களா?

3. நான்

ஆச்சரியப்பட வைத்த படம். இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனிதான் ஹீரோ என்றபோது,  ரிலீஸ் ஆகி ஒரே வாரத்தில் மறைந்து போகும் எத்தனையோ படங்களில் ஒன்றாக இருக்கும் என நினைத்தேன். மாறாக இயக்குனர்  ஜீவஷங்கரின் வித்தியாச திரைக்கதையில் விஜய் ஆண்டனிக்கு அந்த பாத்திரம் நிரம்பவே பொருத்தமாக இருந்தது.

"தப்பு செய்பவன் தண்டனை பெறுவான்" என்கிற வழக்கமான முடிவிலிருந்து கிளைமாக்சில் மாற்றி யோசித்தது ஆச்சரியம். சில பாடல்களும் ரசிக்கும்படி அமைந்து படம் போட்ட முதலுக்கு மேல் எடுத்து விட்டது. ரசிக்கும்படியும் இருந்தது.

தொடர்புடைய பதிவு: நான் - விமர்சனம்
4. அட்டகத்தி

"ஒரே காதல் ஊரில் இல்லையடா " என்ற ஒப்பற்ற (!!??)  தத்துவத்தை அடிப்படையாக கொண்டது அட்டகத்தி ! ஹீரோ நடிப்பில் அசத்தியிருந்தார்.  ஒரு ஹீரோயினும் கூட செம அழகு.

ஆசை ஒரு புல்வெளி, ஆடி போனா ஆவணி போன்ற பாடல்கள் மனதை கொள்ளை அடித்தன. படம் ஜஸ்ட் பார்டர் பாஸ் என்றாலும் ரசிக்க வைத்த படைப்பு.

5. மதுபானக்கடை

பலரையும் விழிகளை உயர்த்த வைத்த படம். கருத்து சொல்கிறேன் என்று ஜல்லி அடிக்காமல் ஒரு காண்டிட் காமிராவின் லாவகத்துடன் டாஸ்மார்க் பாரை கண் முன் காட்டியது. இயக்குனர், ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர் - என பலருக்கு இது ஒரு நல்வரவு.

தொடர்புடைய  பதிவு: மதுபானக்கடை - விமர்சனம்

6. கலகலப்பு

விமல், சிவா, அஞ்சலி, ஓவியா நடித்த இப்படத்தை சிறு படம் என்கிற பிரிவில் வைக்க முடியுமா என தெரிய வில்லை. இருப்பினும் ஹீரோ விமல் பெரிய ஸ்டார் அந்தஸ்து இல்லாதவர் என்கிற காரணத்தால் இதனை சிறுபடம் என்று கொள்கிறேன்

சாதாரண கதை தான். ஆனால் கரக்ட்டான ஸ்டார் கேஸ்ட் அமைந்ததில் பாதி வேலை நல்லபடியே முடிந்து விட்டது. தமிழகம் அஞ்சலி பைத்தியம் பிடித்து திரிந்த நேரத்தில் படம் வந்து ஹிட் அடித்தது. நம்ம நண்பர் கேபிளும் இந்த படத்தில் பணியாற்றினார் என்பது கூடுதல் மகிழ்ச்சி

7. தடையற தாக்க

அழகு, நடிப்பு திறன் எல்லாம் இருந்தும் பெரிதாய் சோபிக்காத அருண்விஜய்க்கு பெரும் நம்பிக்கையை தந்த படம். மீண்டும் மீண்டும் ஒரு படம் ஜெயிக்க வித்தியாச திரைக்கதையும் இயக்குனருமே காரணம் என்பது நிரூபணம் ஆகிறது.

படத்தில் பெண்களின் உள்ளாடை வைத்து சில காட்சிகள் வைத்திருந்தது அருவருப்பாய், ஒரு திருஷ்டி பரிகாரமாய் இருந்தது. மற்றபடி தமிழ் திரை உலகுக்கு இன்னொரு நல்ல புது இயக்குனரை இப்படம் தந்தது

தொடர்புடைய  பதிவு: அருண் விஜய்க்கு மறுவாழ்வு தந்த தடையற தாக்க

8. அம்புலி

படம் பெரிய திரையில் பார்க்க தவறி விட்டேன் ( Great Miss !). சமீபத்தில் சன் டிவியில் போட்ட போது 3 - D எபக்ட் இன்றி பார்த்தேன்.

நண்பர் ரகுவின் வரிகளில் .....

"நமக்கு அடையார் ஆனந்த பவன் பாஸந்தியைப் போன்றது, இயக்குனர் ஹரீஷுக்கு ஹாரர் ஜானர் கதைகள். திருட்டு விசிடி பிரச்னையை சமாளிக்க இந்த டீம், 3டி'யில் படத்தை எடுத்தது மிக புத்திசாலித்தனமான முடிவு.

தமிழ்நாட்டில் இன்றும் பல கிராமங்களில் ஏதாவதொரு ஏரியாவை பற்றி ஒரு பேய் கதை இருக்கும். கிராமத்தில் ஒரு ஹாரர் கதை, அதுவும் 3டி'யில் என்பது படத்திற்கு மேலும் சுவாரஸ்யம் கூட்டியது !"

9. நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணும்

சில படங்கள் நாம் பார்க்கும் மனநிலை மற்றும் சூழல் சார்ந்தே பிடிக்கும் அல்லது பிடிக்காமல் போகும்; பாண்டிச்சேரியில்  படத்தை கிண்டலடிக்கும் மக்களிடையே பார்த்ததால் அதிகம் பிடிக்கா விடினும், நண்பர்கள் பலரும் நேரில் பேசும்போது இப்படத்தை பெரிதும் ரசித்ததாக சொல்கிறார்கள். சற்று இழுவை மற்றும் நாடகத்தன்மை என்கிற குறைகளை தவிர்த்து நல்ல முயற்சியே !

தொடர்புடைய  பதிவு:  நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணும் விமர்சனம்

10. பீட்சா


வாட் எ பிலிம் ! " மாத்தி யோசி" என்பதை சரியே செய்தவர் பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தான் ! விஜய் சேதுபதி நடிப்பு, ரம்யாவின் சொக்க வைக்கும் அழகு, இயக்குனரின் தைரியமான முயற்சி என கடைசி பால் சிக்ஸில் நம்ம டீம் மேட்ச் ஜெயிக்கும் உணர்வை தந்தது இப்படம் !

தொடர்புடைய பதிவு  : பீட்சா : காசு கொடுத்து படம் பார்த்து பயப்படணுமா
******
இனி பெரிய பட்ஜெட் சூப்பர் ஹிட் படங்கள் 5

11. நண்பன்

3 இடியட்சின் சின்சியர் ரீ மேக். ஒரு பக்கம் அமீர்கான் அளவு விஜய்யால் நடிக்கவே முடியாது என்று சொல்வோர் இருந்தாலும், ஏராள நடுநிலையோர் கல்லூரி மாணவன் பாத்திரத்துக்கு அமீர்கானை விட விஜய் நன்கு பொருந்தினார் என்றே சொன்னார்கள். சத்யராஜ் மற்றும் சத்யன் காமெடி + நடிப்பு, ஜாலியான பாட்டுகள் என குடும்பத்துடன் குதூகலமாய் முதல் நாளே பார்த்து ரசித்த படம் இது !

விமர்சனம்: நண்பன் நிச்சய வெற்றி 

12. ஒரு கல் ஒரு கண்ணாடி

சென்ற கோடை விடுமுறைக்கு நமக்கு கிடைத்த ஜாலி பட்டாசு ஓகே ஓகே. தியேட்டரில் மக்கள் படத்தை ரசித்து சிரித்து கொண்டாடியதை பார்க்க அவ்ளோ அருமையா இருந்தது. சந்தானத்தின் காரியர் கிராப்- பை இப்படம் எங்கேயோ கொண்டு போயிடுச்சு. ராஜேஷ் மற்றும் சந்தானத்தால் கரை ஏறிட்டார் நடிகர் உதயநிதி. அடுத்த படத்தில் தன்னை நிஜமா நிரூபிக்கணும் !

தொடர்புடைய பதிவு: : ஓகே ஓகே வெற்றி பெற்றது எப்படி ?

13. நான் ஈ

இந்த வருடத்தின் மிகப்பெரும் ஆச்சரியங்களில் ஒன்று (மற்றது : பீட்சா). ஈ என்கிற சிறு உயிரனத்தை வைத்து எவ்வளவு சுவாரஸ்யமான காட்சிகள் வைத்திருந்தார் இயக்குனர் ! சமந்தாவின் அழகும், வில்லன் சுதீப்பின் நடிப்பும் பிளஸ் என்றாலும், கதை, திரைக்கதை, இயக்கம் இவற்றை கையாண்ட ராஜமவுலியின் ராஜ வெற்றி இப்படம் !

14. துப்பாக்கி

ரொம்ப என்ஜாய் செய்து பார்த்த விஜய்யின் இன்னொரு படம். லாஜிக் என்பது மருந்துக்கும் இல்லை என்றாலும் கூட, மக்கள் இப்படத்தை வாரி அனைத்து கொண்டதை படம் ரிலீஸ் ஆகி 40 நாள் ஆகியும் தென் தமிழகத்தில் இன்னமும் கூட பெரிய தியேட்டர்களில் ஓடுவதன் மூலம் அறிய முடிகிறது.

தொடர்புடைய பதிவு: : துப்பாக்கி எவ்ளோ பெரிய ஹிட்?

15. கும்கி

படம் வெளியாகும் முன்பே பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி விட்டன. படம் பார்க்கும் முன்பே பலருக்கும் பாடல் வரிகள் மனப்பாடம் ! செம ஜாலியான காட்சிகள், குழந்தைகளை கவரும் யானையை சுற்றி நகரும் கதை, அற்புத லொகேஷன் இவற்றால் படம் நன்கு ரீசிவ் செய்யப்படுகிறது. படத்தின் முடிவை மாற்றியிருந்தால் இன்னும் பெரிய வெற்றி பெற்றிருக்கும் என்றே இன்னமும் கருதுகிறேன்

தொடர்புடைய பதிவு: கும்கி விமர்சனம்

*****
2011ஆம் ஆண்டின் சிறந்த 10 படங்கள் இங்கே !


2010ஆம் ஆண்டின் சிறந்த 10 படங்கள் இங்கே !

2009 ஆம் ஆண்டின் சிறந்த 10 படங்கள் இங்கே !

*****
நாளைய பதிவு:

2012-ல் விளையாட்டு உலகம் : By : மெட்ராஸ்பவன் சிவகுமார்

தமிழகம்- 2012 - டாப் 10 சம்பவங்கள்

திவர் சமீரா - பதிவுலகிற்கு புதியவர். ஆகஸ்ட் 2012 சென்னையில் நடந்த பதிவர் மாநாட்டில் கிடைத்த ஊக்கத்தில் பதிவெழுத துவங்கியவர். சமூகம் குறித்தும் தனது சுற்றுப்புறம் குறித்தும் மிகுந்த ஈடுபாடும், அக்கறையும் கொண்ட இவரிடம் வீடுதிரும்பளுக்காக தமிழகம் 2012 -ல் எப்படி இருந்தது என்று எழுத சொல்லி வேண்டுகோள் வைக்க, இதோ அவர் எழுதிய தமிழகத்தின் டாப் 10 சம்பவங்கள் உங்கள் பார்வைக்கு .....

**********
தமிழகம்- 2012 டாப் 10 சம்பவங்கள் - சமீரா

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

கடந்த ஆண்டில் தமிழகத்தில் நிகழ்ந்த சில குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை அசைபோடுவதே இப்பதிவு!!

நல்லதும் சங்கடங்களும் நிறைந்த பத்து நிகழ்ச்சிகளை உங்களுடன் பகிர்கிறேன்.

1. கூடங்குளம் சார்ந்த நிகழ்வுகள் - இந்த அணுவுலை ஆரம்பிக்கப்பட்டபோது அதைப்பற்றி அறிந்தவர் மிக குறைவு.


இப்போது அதற்கு எதிர்ப்பு வந்த பிறகு தெரியாதவர்கள் மிக மிக குறைவு. உச்சநீதி மன்றம் தனி நபருக்கு தீங்கு ஏற்பட்டாலும் அதை தொடர்ந்து செயலாற்றுதல் கூடாது என கூறியும், இன்னும் மூடப்படாத கூடங்குளம் அணுவுலை மக்களுக்கு ஒரு பெரிய அச்சுறுத்தல் தான்...! இவ்வளவு எதிர்ப்புக்கு பின்னும் அங்கு பணி தொடர்வது நம் அரசியலைப்பு சட்டம் ஒரு விசித்திரமானது என விளங்க வைக்கிறது!

2. காவிரி நதி நீர் - காவிரி உற்பத்தியாவது மட்டுமே கர்நாடகம். அது பாய்ந்து வளம் கொழிப்பது தமிழ்நாட்டில். அணைபோட்டு தடுக்கும் உரிமையை யார் கர்நாடகத்திற்கு கொடுத்தது எனபது மட்டும் விளங்கவில்லை. காவிரி நதிநீர் ஆணையம், உச்சநீதி மன்ற தீர்ப்பையும் மீறி நடக்கும் தைரியமும் ஒரு தனி மாநிலத்திற்கு இருப்பது நம் நாட்டின் சட்ட திட்டத்தில் இருக்கும் உறுதி மற்றும் நிலைபாட்டை காட்டுகிறது!!

3. அந்நிய முதலீடிற்கு ஆதரவு தரும் நம் மாநில கட்சிகள். இருநூறு ஆண்டுகள் நாம் அடிமை பட்டது போதாது இன்னும் சில நூறு ஆண்டுகளாவது பிறர் பிடியில் நாம் இருக்க வேண்டும் என நினைக்கும் அற்ப மனிதர்களின் சூழ்ச்சிகள்.. வால்மார்ட் அதிகார பூர்வமாக அறிவிக்கும் முன்பே சில இடங்களில் அதற்கான விற்பனை கிடங்குகள் தொடங்கப்பட்டு, அதற்கான கார்பரேட் அட்டைகள் வழங்கப்பட்டதற்கு நானும் ஒரு சாட்சி தான்.

4. பள்ளிகளில் நடக்கும் கொள்ளைகள் - கட்டண தொல்லைகள் அனைவரும் அறிந்ததே! சமீப காலத்தில் அனைவரையும் திகிலடைய செய்த ஒரு சம்பவம் பள்ளி பேருந்தின் மோசமான பராமரிப்பு. பிள்ளைகளின் பாதுகாப்பு, பெற்றோர்களின் நேரமின்மை கருதி பள்ளி வாகனங்களில் பெற்றோர் அனுப்புகின்றனர். ஆனால் அதற்கும் இப்போது பயப்படும் நிலையை ஏற்படுத்தியது: பள்ளி மாணவி பேருந்து ஓட்டையில் விழுந்து உரிழந்த சம்பவம்! மாணவியின் பெற்றோர் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரையும் உலுக்கிய துயர சம்பவம் அது. இதற்கு காரணம் பள்ளி நிர்வாகமா? உரிமம் அளித்த RTO அலுவலகமா? தெரியவில்லை !

5. ஒரு பள்ளி மாணவன் தன ஆசிரியையை கத்தியால் குத்தி கொலை செய்த நிகழ்ச்சி பள்ளியில் நிகழ்ந்த இன்னொரு கொடுமை ! அவன் இந்த வழியை கையாண்டதற்கு சொல்லும் காரணம், அச்சமயம் அவன் பார்த்த ஒரு இந்தி படத்தில் இப்படி ஒரு காட்சி இருந்ததாம். அவனும் அதையே பின்பற்றினானாம் ! உண்மையில் அவனை தூண்டியது அவனுள் இருந்த ஆசிரியரின் மேலான காழ்ப் புணர்ச்சியா? சினிமாவின் தாக்கமா? பெற்றோரின் அரவணைப்பின்மையா? அல்லது ஆசிரியரின் அணுகுமுறையா? இதில் எல்லோருக்குமே பங்கு உண்டு என்றே தோன்றுகிறது. என்று தீருமோ இது போன்ற அனர்த்தங்கள்?????
**************************************************************************************************
என்னடா புத்தாண்டில் இப்படி ஒரு சோகமயமான நினைவுகளையே அசை போடவைத்து விட்டதாக எண்ண வேண்டாம். சில நினைவுகள் கசப்பாக இருந்தாலும் அவை பாகற்காய் போன்று பயனுள்ளது. ஒரு விழிபுணர்வுக்கு வழிவகுப்பது.

நெல்லிக்காய் கடிக்கும் பொது அதன் சுவை முகம் சுளிக்க வைத்தாலும், கடைசியில் தொண்டையை விட்டு இறங்கும் போது இனிக்கவே செய்யும். அதுபோல சில நல்ல தகவல்களை அடுத்த ஐந்தாக தருகிறேன்.

6. TNPSC - எனும் அரசு வேலைவாய்ப்பு முறையில் ஏற்பட்ட மாற்றம் பாராட்டத்தக்கது. கணினி மயமாக்கப்பட்டதால் தற்போது தேர்வு எழுதிய அனைவரும் தாங்களே தங்களின் cut-off எனப்படும் மதிப்பெண் விபரங்களையும், தாங்கள் தேர்வு செய்யப்பட்டதையும் (Ranking) எனப்படும் தகுதி நிலை ஆகியவற்றை தெளிவாக அறியலாம். இதன் மூலம் இடைத்தரகர்களால் நடக்கும் முறைகேடுகள் நடக்க வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

7. மேலும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கவுன்செல்லிங் அந்தந்த மாவட்டங்களிலேயே நடைபெற்று, பெண் ஆசிரியர்களின் போக்குவரத்து சிரமங்கள் குறைக்கப்பட்டுள்ளது. அவர்களின் பணி நியமன ஆணையும் அந்தந்த மாவட்டங்குளுக்கு தனி போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டு சென்னையில் வழங்கப்பட்டது.

8. பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை அவர்களின் பெயரில் நேரிடையாக வங்கிகளில் வழியாக வைப்பு நிதியாக கொடுக்கபடுகிறது. மேலும் சத்துணவில் 13 வகையான உணவுகள் சேர்க்கப்படவுள்ளது. சத்துணவு மாணவர்களுக்கு அந்தந்த பள்ளி சீருடைகள் இலவசமான வழங்கபடுகிறது. ஆனாலும் இதெல்லாம் நல்லபடி சரியான முறையில் பயனாளர்களுக்கு சென்றடைய வேண்டும் அது தான் நமது வேண்டுகோள்!!!

9. இந்தியாவிலேயே முன்னோடியாக மாற்று திறனாளி குழந்தைகளுக்கு மாநில ஆதார வள மையம் தமிழ்நாட்டில் மே மாதம் தொடங்கப்பட்டு செயல்பட்டுவருகிறது. மன நலம் குன்றிய குழந்தைகளுக்கான இந்த பள்ளியில் அவர்களின் எதிர்காலத்திற்கு வித்திடும் வகையில் இந்த மையம் செயல்பட்டு வருவது பாராட்டத்தக்கது. இதில் என் நெருங்கிய உறவினர் குழந்தையும் பயன்பெற்றுவருகிறான்.

10. எய்ட்ஸ் விழிபுணர்வுக்கான செஞ்சுருள் விரைவு ரயில் டெல்லி-யில் இருந்து புறப்பட்டு தமிழ்நாட்டில் சென்னையில் முகாமிட்டு கன்னியாகுமரி -யில் தன் விழிப்புணர்வு பயணத்தை நிறைவு செய்தது. எய்ட்ஸ், காசநோய், மலேரியா, பன்றி காய்ச்சல், மகபேறு, குழந்தை நலம் சார்ந்த விழிபுணர்வுகள் மக்கள் மத்தியில் ஏற்படுத்த இளைஞர் தினத்தன்று இந்த முகம் நடைபெற்றது.

இறுதியில் மிக முக்கிய ஒரு தினத்தை நினைவுகூர்ந்து இந்த பதிவினை நிறைவு செய்கிறேன். ஆகஸ்ட் 28-ம் நாள் சென்னையில் நடைபெற்ற முதல் தமிழ் பதிவர் தினம் இந்த ஆண்டின் மறக்க முடியாத நாள் என்றால் அது மிகையில்லை. பல நட்புகளையும் உறவுகளையும் அறிமுகபடுத்திய அற்புத தினம் அது!!!

இந்த ஆண்டில் மீண்டும் ஒரு பதிவர் சந்திப்பில் அனைவரையும் சந்திக்கும் ஆவலுடன் விடைபெறுகிறேன்.

நன்றி!

அன்புடன்

சமீரா

Thursday, December 27, 2012

“Hobbit” : ஆங்கில சினிமா விமர்சனம்


சினிமாத்தன்மைப் படுத்துகிற திறமை -ராஜசுந்தரராஜன்

---------------------------------------------------------------
“Hobbit” நாவல் வாங்கித் தந்து ஒரு வருஷம் ஆகிவிட்டது. எங்கள் பாப்பா அதை வாசிக்க முயன்று கைவிட்டு விட்டாள். முதல் அத்தியாய 33 பக்க அறிமுகமும் அவ்வளவா எளிமை இல்லாத ஆங்கிலமும் காரணம் ஆகலாம். ஆகவே “ஹாபிட்” படத்துக்குப் போவதற்கு முன் அவளுக்கு அந்தக் கதையை ஓரளவுக்குச் சொன்னேன்:

பில்போ ஒரு ஹாபிட். ஹாபிட் குள்ளர்களை விடக் குட்டையாக இருப்பார்கள். காலில் முடிமுளைத்திருக்கும். அதனால் அவர்கள் நடக்கும்போது சத்தம் வராது. திருடுவதற்கு அது வசதியாக இருக்கும். குள்ளர்களுக்குத் தாடி இருக்கும். ஹாபிட்களுக்குத் தாடி இருக்காது.

குள்ளர்கள் பேராசை பிடித்தவர்கள். ஒருகாலத்தில் ‘லோன்லி ஹில்’ என்கிற மலையை ஒட்டி டேல் என்கிற நகரை அமைத்து, த்ரார் மகன் த்ரெய்ன் ஆட்சியில் செல்வச் செழிப்போடு வாழ்ந்தார்கள். ‘ஸ்மௌக்’ என்கிற ட்ராகன் அங்கே வந்து டேல் நகரை அழித்துவிட்டு, தங்கம் வெள்ளி ரத்தினங்களை ‘லோன்லி ஹில்’ அரண்மனைக்குள் குவித்து அதன் மேல் படுத்து உறங்கி வருகிறது. த்ரெய்னின் மகன் தோரின் தலைமையில், மொத்தம் 13 குள்ளர்கள் அந்த லோன்லி ஹில் மலையை அடைந்து அதிலிருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு செல்வத்தை எடுத்து வர முடிவு செய்கிறார்கள்.காண்டால்வ்ப் ஒரு மாயாவி (wizard). அவருக்கு அந்த நிலப் பகுதிகளும், மலைப் பாதைகளும், எங்கெங்கே என்னென்ன ஆபத்து இருக்கும் என்பதெல்லாம் தெரியும். குள்ளர்கள் காண்டால்வ்பின் உதவியை நாடுகிறார்கள். அவர் முடிந்தமட்டும் உதவுவதாக ஒத்துக்கொள்கிறார்.

பில்போவின் மலைப்-பொந்து-வீட்டில் சந்தித்து அவர்கள் அந்த சாகசப் பயணத்தைத் திட்டமிடுகிறார்கள். பில்போவுக்கு சாகசத்தில் நாட்டம் இல்லை என்றாலும் ஆர்வக் கோளாறில் ஒத்துக்கொள்கிறான். ஒரு குதிரை, பதினான்கு குள்ளக் குதிரைகளில் பயணம் தொடங்குகிறது.

மலைக்காட்டு வழியில் காண்டால்வ்ப் காணாமல் போகிறார். மழை கொட்டுகிறது. மழைநீர் ஒடையில் உணவு மூட்டைகள் அடித்துச் செல்லப்படுகின்றன. பசியில் வாடுகிறார்கள். அப்போது எட்டத்தில் நெருப்பு வெளிச்சம் தெரிகிறது. வேவு பார்க்க பில்போவை அனுப்புகிறார்கள். அங்கே மூன்று ட்ரால்கள் (இருட்பூதங்கள்), நெருப்பில் இறைச்சி சுடுகின்றன. “நேற்றைக்கும் ஆடு; இன்றைக்கும் ஆடு; நாளைக்கும் ஆட்டுக் கறிதானா? மனுஷக்கறி தின்னு நாளாகுதே!” என்கிறது ஒரு பூதம். பில்போ பூதங்களின் ஒரு பர்ஸைக் கையாடுகிறான். அந்த பர்ஸ், “யார் நீ?” என்று சத்தம் எழுப்புகிறது. பில்போ பூதங்களிடம் மாட்டிக்கொள்கிறான். அவனைத் தேடி வரும் குள்ளர்களும் மாட்டிக்கொள்கிறார்கள். குள்ளர்களைச் சுட்டுச் சாப்பிடுவதா சூப் வைத்துச் சாப்பிடுவதா என்று பூதங்களுக்குள் வாக்குவாதம் வருகிறது. அப்போது காண்டால்வ்ப் அங்கே வந்து பூதங்களின் குரலில் பேசிக் குழப்பி அதுகளுக்குள் சண்டை மூட்டி, நேரத்தைக் கடத்துகிறார். விடிந்துவிடுகிறது. சூரிய ஒளி பட்டதில் பூதங்கள் பாறைகளாய் மாறிவிடுகின்றன.

பூதங்கள் தங்கி இருந்த குகையில் தேவையான உணவும், ஒரு வாளும், ஒரு குறுவாளும், ஒரு கத்தியும் கிடைக்கின்றன. வாளை காண்டால்வ்பும், குறுவாளை தோரினும், கத்தியை பில்போவும் எடுத்துக் கொள்கிறார்கள். அங்கிருந்து மலையேறி, சறுக்கி இறங்கும் ஓர் அருவிக்கரை இறக்கத்தில், யாழ்வலர் (Elves) வாழும் ரிவெண்டல் என்னும் கந்தர்வ நகரில் தங்குகிறார்கள். அந் நகரின் அரசனான எல்ரோண்ட், இவர்கள் கைப்பற்றி வந்த வாள்கள் பாதாளச் சாத்தான்களான கோபுலின்களை (goblin) அழிப்பதற்கு என்றே செய்யப் பட்டவை; கோபுலின்கள் பக்கத்தில் வந்தாலே அவை ஒளிரும் என்கிறார்.

ரிவெண்டலை விட்டுப் புறப்பட்டு, மஞ்சு மலைகளை (Misty Mountains) கடக்கிற சமையம் எதிரும் புதிருமான இடி புயல் மழையில் சிக்கிக் கொள்கிறார்கள். பாறைப் பூதங்கள் ஆவேசம் கொண்டெழுந்து, குன்றுகளைத் தகர்த்தெடுத்து வீசி அடித்துக்கொள்கின்றன. தப்பிக்க ஒரு குகைக்குள் ஒதுங்குகிறார்கள். இவர்கள் அசந்த நேரம் அந்தக் குகையின் சுவர் பிளந்து, குள்ளர்களும் குதிரைகளும் கோபுலின்களால் தூக்கிச் செல்லப் படுகிறார்கள். பில்போவின் கூச்சலில் விழித்துக்கொள்கிற காண்டால்வ்ப், தன் கைக்கோலில் இருந்து நெருப்பை உண்டாக்கி ஏழெட்டுக் கோபுலின்களைக் கொன்று போடுகிறார். காண்டால்வ்பை வெளியே விட்டுக் குகைச்சுவர் மூடிக்கொள்கிறது.

பாதாளத்தில், கோபுலின்களின் ஒரு பெரும் கூட்டம் இருக்கிறது. அவர்களின் தலைவன் ‘கிரேட் கோபுலின்’, தோரினின் கையில் இருக்கும் வாளைக் கண்டு, கடுப்பாகி, குள்ளர்களைச் சங்கிலியால் பிணைக்கச்செய்து அடித்து வதைக்கிறான். நெருப்பு வளர்த்து அவர்களைப் பொசுக்கப் போகையில், மறு பக்கத்தில் இருந்து உள்ளே புகும் காண்டால்வ்ப், கிரேட் கோபுலினைத் தன் வாளால் வெட்டிக் கொன்றுவிட்டு, குள்ளர்களைத் தன் பின்னால் ஓடிவரும்படி சொல்ல, தப்பித்து ஓடுகிறார்கள். அந்த ஓட்டத்தில் தவறி, அதள பாதாளத்தில் விழுகிறான் பில்போ.

இருட்டுக்குள் வழுக்கல் தரையில் ஊர்ந்து நகரும் பில்போவின் உடம்பில் ஏதோ தட்டுப்படுகிறது. அது ஒரு மோதிரம். அதை எடுத்துத் தன் பைக்குள் போட்டுக் கொள்கிறான். அந்த இருட்குகையின் மறுகோடியில் ஒரு ஏரி இருக்கிறது. அதன் நடுவில் ஒரு தீவு. அதில் இருந்து கரையில் இருக்கும் பில்போவைப் பார்க்கிறது கோல்லம் (Gollum). பிதுங்கித் துருத்திய கண்களும் பாசிபடிந்த வழுக்கல் உடம்பும் கொண்ட ஒரு பிராணி அது. பில்போவைப் பிடித்துத் தின்பதற்காக அது கரைக்கு வருகிறது. அவன் கோல்லத்திடம் தனக்கு வெளியே போக வழிகாட்டித் தரச் சொல்லிக் கேட்கிறான். கோல்லம் ஒரு தந்திரம் செய்கிறது. மாறி மாறி விடுகதை போட வேண்டும் என்றும், தான் ஜெயித்தால் அவன் உணவாக வேண்டும் என்றும், அவன் ஜெயித்தால் வழிகாட்டப் படுமென்றும் சொல்கிறது. பில்போ ஒத்துக்கொள்கிறான். ஒரு கட்டத்துக்கு மேல் பில்போவுக்கு விடுகதை ஒன்றும் தோன்றாமல், “என் பைக்குள் என்ன இருக்கிறது?” என்று கேட்டு வைக்கிறான். அதற்குப் பதில் தெரியாத கோல்லம், அவனை அவன் அறியாமல் கொல்வதற்குத் தன்னிடம் உள்ள ஒரு பொருளைத் தேடுகிறது. அது அந்த மோதிரம்தான். அதை விரலில் மாட்டிக் கொண்டால் நம் உருவம் பிறர் கண்ணுக்குத் தெரியாது. அந்த மோதிரம் தொலைந்து அதுதான் பில்போவின் பைக்குள் இருக்கிறது என்று யூகித்ததும், கோல்லம் பில்போவைத் துரத்துகிறது. பில்போவின் விரலில் தற்செயலாக அந்த மோதிரம் செருகிக்கொள்ள, அவன் காணாமல் போகிறான். கோல்லம் அவனைத் தாண்டி ஓடுகிறது. அவனுக்கு மோதிரத்தின் மகிமை புரிந்துவிடுகிறது. வெளிவாசல் துளையை மறித்து உட்காரும் கோல்லத்தின் தலைக்குமேல் தாவி, அப்பால் காவல் இருக்கும் கோபுலின்கள் கண்ணிலும் படாமல் தப்பி, மலையின் மறுபக்கம் வந்து சேருகிறான். அங்கே, அவனைத் தவறவிட்டு வந்துவிட்டோமே என்று கவலை கொண்டிருக்கும் தன் கூட்டாளிகளோடு சேர்கிறான்.

அங்கிருந்து இறங்கி நடக்கையில், ஒரு வெட்ட வெளி குறுக்கிடுகிறது. அங்கே, ஓநாய்கள் (wargs) பாய்ந்து வருகின்றன. இவர்கள் மரங்களின் மேல் ஏறிக்கொள்கிறார்கள். ஓநாய்கள் கூடி மாநாடு போடுகின்றன. ஓநாய்கள் கோபுலின்களின் நண்பர்கள். காண்டால்வ்ப் தன் கைக்கோலைக் கொண்டு நெருப்பு உண்டாக்கி ஓநாய்களின் மீது வீசுகிறார். ஓநாய்களின் மயிருடம்பில் தீப்பற்றி, ஒன்றிலிருந்து இன்னொன்று என்று பரவிக் கூச்சல்குழப்பம் ஆகிறது. அந்நேரம், கோபுலின்கள் அங்கே வந்து, ஓநாய்களில் தீயை அணைத்து, இவர்கள் ஏறி இருக்கும் மரங்களில் படரும்படி செய்கின்றன.

மலைமுகட்டில் இருக்கும் கழுகரசன் இதைப் பார்க்கிறான். அவன் தன் கழுகுப் படையோடு கீழிறங்கி வந்து, மரங்களில் தொங்கிக்கொண்டு இருக்கும் பில்போ, காண்டால்வ்ப், குள்ளர்களைத் தூக்கிக்கொண்டு தன் சிகரத்தில் போய் இறக்கி விட்டு அவர்களுக்கு உணவும் கொடுக்கிறான்.
*

இது வரைக்குமான கதையைத்தான் படம் ஆக்கி இருக்கிறர்கள் என்று ‘கருந்தேள்’ ராஜேஷ் எழுதி வாசித்து இருந்ததால், நானும் இதுவரைக்கும் கதைசொல்லி எங்கள் பாப்பாவைப் படம்பார்க்கக் கொண்டு போனேன். நான் சொன்னது போல் புத்தகத்தில் இருக்கும் இந்தக் கதையை இயக்குநர் பீட்டர் ஜேக்ஸன் எப்படி எல்லாம் வெட்டி ஒட்டித் திருத்தி இருக்கிறார் என வெள்ளித் திரையில் கண்டுகொள்க! பெரிதெனப் பட்ட சில மட்டும் இங்கே:

(இந்தக் கதையில், பரபரப்புக் காட்சிகள் (action scenes) என்று எனக்குப் பட்டவை, 1. Trolls encounter, 2. Thunderstorm, 3. Wargs encounter and Eagles help. காட்சிகள் 2-உம் 3-உம் இடைவேளைக்குப் பிறகு கைகொடுக்கும்; இடைவேளைக்கு முன், காட்சி 1 மட்டும் போதாதே என்று நினைத்தேன்.)

***
வயதான பில்போ கதை சொல்வது போல் படம் தொடங்குகிறது. ‘புத்தகத்தில் இப்படி இல்லையே!’ என்று குழம்பினேன். இளம் வயது ஹாபிட் ஒருவனைக் காட்டினார்கள். “பில்போ யங் மேனா இருந்தப்போ...” என்றேனா, “இல்ல, அது ஃப்ரொடோ...” என்றாள் எங்கள் பாப்பா. அவள் ‘லார்டு ஆஃப் த ரிங்ஸ்’ படம் பார்த்து இருப்பாள் போல. அந்தமட்டில், இயக்குநர் என்ன செய்கிறார் என்று எனக்கு விளங்கிவிட்டது.

அப்புறம் ‘டேல் நகரின் மீது தன் இடதுகாலைப் பதிக்கும் ட்ராகன்’ அட்டூழியம் திறப்புக் காட்சிப் பரபரப்பானது. பயணத்தின் இடைவழியில் ஒரு கதைசொல்லல் என, ‘கனிமச் சுரங்கத்தில் கோபுலின்களோடு த்ரார் நடத்தும் போர்’ மற்றொரு விறுவிறுப்புக் காட்சியானது. போதாது என்று, இந்தக் கதைக்குச் சம்பந்தமே இல்லாத ‘முயல்வண்டி விரட்டல் ரடகாஸ்ட் (Radagast)’ நகைச்சுவைப் பரபரப்புக் காட்சியும் சேர்க்கப்பட்டு இருந்தது. நான் பாப்பாவுக்குச் சொன்ன கதையில் அது இல்லை ஆகையால், “அவர் யாரு?” என்று கேட்டாள். கொஞ்சம் குழம்பி, அப்புறம், “காண்டால்வ்போட கஸின்” என்று இடைவேளையில் சொன்னேன்.

பாறைப்பூதப் புயல்மழைக் காட்சியில் அவ்வளவாய் மழை இல்லாதது ஒரு குறை. விடுகதைக் காட்சியில், “ஒண்ணுமே புரியலையே!” என்று சொன்ன எங்கள் பாப்பாவுக்கு, “கோல்லம் அப்படித்தான் நிறைய S சேர்த்துப் புரியாமப் பேசும்” என்று சொன்னேன். ஆனால் அந்தக் காட்சியின் அரிபரி எனக்கும் ஏமாற்றமாகத்தான் இருந்தது. போலவே, உச்சகட்டக் காட்சியில், இயக்குநர் பில்போவுக்குக் கொடுத்திருக்கிற பாய்ச்சலும் எனக்கு ரசிக்கவில்லை.

குதிரைகூட ஏறத் தெரியாத ஹாபிட் யாருக்குக் குறியீடு? தொழில்வல்ல பேராசைக்காரக் குள்ளர்கள் யாருக்குக் குறியீடு? இடதுகால் பதித்தழிக்கும் ட்ராகன் யாருக்கு? வெள்ளைத்தோல் எல்வ்ஸ் யாருக்கு? காண்டால்வ்ப் யார்? கழுகுகள் யார்? ஓநாய்கள்? கோபுலின்கள்? சற்று யோசித்தால், உலக அரசியலில் டொல்கீன் எந்தப் பக்கம் என்று புரியக் கூடும்.

வீட்டில் இருந்த புத்தகத்தை எடுத்துக் காட்டி, பாப்பா தன் விளையாட்டுத் தோழிகளிடம், “இந்தப் படத்தைப் பார்த்துட்டேனே!” என்றாள். “எப்படி இருக்கு?” என்ற அவர்களுக்கு, “சூப்பர்!” என்கிறாள்.

-ராஜசுந்தரராஜன்
*************
 அண்மை பதிவு:

2012 - அசத்திய 10  சூப்பர் ஹிட் பாடல்கள்

2012-ல் இந்திய அரசியல்


2012-அசத்திய 10 சூப்பர்ஹிட் பாடல்கள்: ஒலியும்,ஒளியும்

ப்ளாக் துவங்கிய மூன்று வருடத்தில் தவறாமல் செய்கிற ஒரு விஷயம் - சிறந்த பத்து படங்கள் மற்றும் சிறந்த பத்து பாடல்கள் தேர்வு செய்வது.

2009- சிறந்த 10 பாடல்கள் : இங்கு

2010- சிறந்த 10 பாடல்கள் : இங்கு

2011- சிறந்த 10 பாடல்கள் : இங்கு

இவ்வருட சிறந்த பாடல்களை இப்போது பார்க்கலாம். முதல் இடம்- இரண்டாம் இடம் என்றெல்லாம் பிரிக்காமல் நான் ரசித்த 10 பாடல்கள் தொகுப்பு இது !
*********
1. பற பற பறவை ஒன்று

படம்: நீர் பறவை
இயற்றியவர் : வைரமுத்து
பாடியவர்: GV பிரகாஷ் குமார்
இசை: ரகுநந்தன்
**********
GV பிரகாஷ் குமார் என்ற பிரபல இசை அமைப்பாளர் அதிகம் பிரபலமாகாத இன்னொரு இசை அமைப்பாளர் படத்தில் பாடியதே ஆரோக் கியமான ஒரு நிகழ்வாய் இருக்கிறது. ரகுநந்தன் மிக நம்பிக்கை தரும் இசை அமைப்பாளர். ஒளிப்பதிவு, சுனைனா என்று பாட்டை ரசிக்க இன்னும் பல காரணங்களும் கூட உண்டு :)

 ********
2. ஆசை ஒரு புல்வெளி
*****
படம் : அட்ட கத்தி 
இயற்றியவர் :கபிலன்
பாடியவர்கள்: பிரதீப், கல்யாணி நாயர்

இசை: சந்தோஷ் நாராயணன்

********
நல்ல மெலடி எப்போதும் மனதை கவர்ந்து விடும். மிக சிறிய, மெதுவான  பாட்டு தான். ஆனால் மனதை சுண்டி இழுத்து விடுகிறது. பாடல் படமாக்கப்பட்ட விதமும் ரசித்து செய்துள்ளனர்.
3. ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் 

படம் : கழுகு
இயற்றியவர் : சிநேகன்
பாடியவர்கள்: கிருஷ்ணராஜ், வேல்முருகன் சத்யன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
**********
நடு ரோடு, சிறு பார் (Bar ) , அருகே ஒரு ஆட்டோ ஸ்டாண்ட், - இவை தான் பாட்டின் லொகேஷன். ஹீரோ மட்டுமல்லாது கருணாஸ் மற்றும் தம்பி ராமையாவுக்கும் பாட்டில் சரி சமமான முக்கியத்துவம் உண்டு.
மிக எளிதான பீட், தெளிவாய் புரியும் வரிகள், ரசிக்க வைக்கும் டான்ஸ் இவற்றால் இந்த பாட்டு ஈர்த்தது. குறிப்பாய் டி ஷர்ட்டை எடுத்து முகத்தை மூடி கொண்டு ஆடுவது கியூட். கடைசியில் ஸ்வட்டர் அணிந்த சில பெண்களும் சேர்ந்து ஆடும்போது இன்னும் ரசிக்கும்படி உள்ளது.

எப்போது டிவியில் போட்டாலும் சானல் மாற்றாமல் ரசிக்கிற பாட்டு இது

4. மனசெல்லாம் மழையே

படம் : சகுனி
இயற்றியவர் : நா முத்து குமார்
பாடியவர்கள்: சோனு நிகம், சைந்தவி
இசை: GV பிரகாஷ் குமார்
**************
சகுனி படம் வெளிவரும் முன்பே இந்த பாடல் மிக ஹிட் ஆகிவிட்டது. படம் ஒரு மாபெரும் மொக்கை என்பதால் இந்த நல்ல மெலடியை நாம் தள்ள முடியாது இல்லையா ?

பாடலுக்கு அற்புதமான வெளிநாட்டு லொகேஷன்கள் நிச்சயம் ஒரு பிளஸ். இப்போது கேட்டாலும் இந்த மெலடி ரசிக்க முடிகிறது

5. என் பிரண்டை போல யாரு மச்சான்

************
படம் : நண்பன்
இயற்றியவர் : விவேகா
பாடியவர்கள் : கிருஷ் & சுஜித் 
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
************
நண்பனில் அஸ்க லஸ்கா உள்ளிட்ட பல பாட்டுகள் ஹிட் ! நட்பின் வலிமையை சொல்லும் இப்பாட்டு தான் எனது பேவரைட்.

 6. வேணாம் மச்சான் வேணாம் 
***
படம் : ஒரு கல் ஒரு கண்ணாடி
இயற்றியவர் : நா. முத்து குமார்

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: வேல்முருகன், நரேஷ் ஐயர்

*****
ஹாரிஸ் ஜெயராஜ் தனது முந்தைய பாடலான " அவ என்னை என்னை தேடி வந்த அஞ்சலை" யில் இருந்து தான் இந்த பாட்டை உருவியிருந்தார். ஆனால் அது எத்தனை பேருக்கு தெரியும் ? படம் ரிலீஸ் ஆகி ஒரு வாரம் கழித்து, ஞாயிறு காலை ஒன்பது மணி காட்சி தியேட்டரில் பார்க்கிறோம். இந்த பாட்டுக்கு தியேட்டரில் பலர் டான்ஸ் ஆட ஆரம்பித்து விட்டனர். டான்ஸ் ஆடாத மக்களும் கூட பீட்டுக்கு ஏற்ப கை தட்டி கொண்டிருந்தனர்

மிக எளிதான டான்ஸ் மூவ்மென்ட். இதனால் உதயநிதி ஸ்டாலினும் கஷ்டப்படாமல் ஆடிவிட்டார்.

சந்தானத்தின் காமெடி படத்தில் மட்டுமல்ல இந்த பாட்டிலும் ஒரு பெரிய பிளஸ். பாட்டில் சைகையிலேயே சில விஷயம் அவர் சொல்வது செம !
7. காற்றை கொஞ்சம் நிற்க சொன்னேன்

படம்: நீதானே என் பொன்வசந்தம்
பாடியவர்: கார்த்திக்
இசை: இளைய ராஜா

***********
ராஜா மறுபடி இசை ராஜ்ஜியம் செய்த படம்.  சாய்ந்து சாய்ந்து உள்ளிட்ட பல பாடல்கள் அருமை ! இசைக்காகவே இந்த பாட்டை மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது. பட ரிசல்ட் சற்று  ஏமாற்றம் தந்தாலும் ராஜாவின் இசையை குறை சொல்லவே முடியாது !

8. என்ன சொல்ல ஏது சொல்ல 

படம்: மனம் கொத்தி பறவை
இயற்றியவர் : யுகபாரதி

பாடியவர்கள்: விஜய் பிரகாஷ், சின்மயி
இசை: இமான்
***********
இந்த படத்தில் பல பாட்டுகள் அட்டகாசம்.  ஒரே பாடல் என்பதால் மட்டுமே இந்த பாடலை குறிப்பிடுகிறேன். இசை அமைப்பாளர் இமானின் வளர்ச்சி ஆச்சரியப்படுத்துகிறது. சாதாரண, ஆனால் கேட்சி டியூன், தெளிவாய் புரியும் வரிகள் என்பதையே தன் தாரக மந்திரமாய் கொண்டுள்ளார் இமான்.

படத்தின் பாடல்களை மூனாரை ஒட்டி எடுத்துள்ளனர். ஹீரோயினும் பசுமையான பின்னணியும் பாட்டை கேட்க மட்டுமல்ல பார்க்கவும் பிடிக்க வைத்து விடுகிறது

9. நாணி கோணி

படம்: மாற்றான் 
பாடியவர்கள்: விஜய் பிரகாஷ், ஷ்ரேயா கோஷல்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
*******************
அழகான மெட்டு, விஜய் பிரகாஷ் மற்றும் ஷ்ரேயா கோஷலின் இனிய குரலால் இன்றும் ரசித்து கேட்கிற பாட்டு இது. படமாக்கத்தில் "கோ" பட அமளி துமளி சாயல் தெரிந்தாலும் கூட லொகேஷன்கள் ரசிக்கும்படி உள்ளது10. அய்யய்யோ ஆனந்தமே
**********
படம்: கும்கி
இசை: இமான்
பாடலாசிரியர் : யுகபாரதி
**********

பட்டி தொட்டியெல்லாம் ஒலித்த இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் பாடல்கள் கும்கியில் இருந்தது ! இப்பாட்டை, பாடல் முடியும் போது வரும் இசைக்காகவே ர்வு செய்துள்ளேன். படமாக்கலும் அற்புதம். போலவே  சொல்லிட்டாளே அவ காதலை பாட்டும் சரி, அந்த அருவியும் சரி மறக்க முடியாத படி அமைந்து விட்டன

***********
உங்களுக்கு பிடித்த பாடல் இந்த வரிசையில் இருக்கிறதா ?

நல்ல பாடலை நான் தவற விட்டிருந்தாலும் சொல்லுங்கள் !

***********

Wednesday, December 26, 2012

2012-ல் இந்திய அரசியல்: டாப் 10 சம்பவங்கள் !

வேங்கட சீனிவாசன் - கையளவு மண் என்கிற தனது ப்ளாகில் அரசியல், சுற்றுப்புறம், நதிகள் உள்ளிட்ட பல்வேறு  சமூக  விஷயங்களை  பற்றி எழுதி வருபவர்.   வீடுதிரும்பலுக்காக இந்திய அரசியல் கடந்த ஓராண்டில் சந்தித்த சம்பவங்களை திரும்பி பார்க்கிறார் நண்பர் வேங்கட சீனிவாசன் !
***********
2012-இல் இந்திய அரசியல் : வேங்கட சீனிவாசன்*********
2012….

சென்ற ஆண்டில் செய்தித்தாள்களின் முதல் பக்கங்களை அலங்கரித்த முக்கிய அரசியல் நிகழ்வுகளைப் பார்ப்போம்...

1. குடியரசுத் தலைவராக திரு.பிரணாப் முகர்ஜியும் தேர்ந்தெடுக்கப்பட குடியரசுத் துணைத் தலைவர் (மாநிலங்கள் அவையின் தலைவரும் இவரே) திரு.ஹமித் அன்சாரி மீண்டும் அப்பதவிக்கு இரண்டாம் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்;

2. ஏழு மாநிலங்களில் (பிப்ரவரியில் 5 மாநிலங்களிலும் டிசம்பரில் இரண்டிலும்) சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றன. இரண்டில் காங்கிரஸும் இரண்டில் பாஜக-வும் வென்றன. ஒரு மாநிலத்தில் இரண்டும் சம அளவு உறுப்பினர்களும் ஒரு மாநிலத்தில் இரண்டுக்கும் மூன்றாவது நான்காவது இடமும், ஒரு மாநிலத்தில் மாநில கட்சியும் வெற்றி பெற்றன.

3. த்ரிணாமுல் காங்கிரஸின் தினேஷ் த்ரிவேதி கட்சித் தலைமையின் விருப்பத்திற்கு மாறான இரயில்வே நிதிநிலையறிக்கையை வெளியிட்டதால் கட்சியால் பதவியிலிருந்து இறக்கப்பட்டார்.

4. ஒரிஸாவில் பிஜு ஜனதா தளத்தின் சட்டமன்ற உறுப்பினரும் சுக்மா மாவட்ட ஆட்சியாளரும் மாவோயிஸ்டுகளால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

5. 2ஜி விவகாரத்தில் 122 உரிமங்கள் உச்ச நீதிமன்றத்தால் மறுக்கப்பட முதலில் அதை எதிர்த்து மனு செய்த மத்திய அரசு பின்னர் அந்த மனுவைத் திரும்பப் பெற்றது. மறு ஏலத்தில் ஊழலில் கணிக்கப்பட்ட அளவு ஏலத்தொகை கிடைக்கவில்லை.

6. அஸ்ஸாமில் மத/இனக்கலவரங்கள் வெடித்து பல குடும்பங்கள் வீடு, உடமைகளை இழந்தன. நாட்டின் பிற பாகங்களில் வசித்து வந்த வடகிழக்கு பகுதி மக்களுக்கு எதிராக வதந்திகளால் பரவ பதட்டமடைய நேரிட்டது.

7. ஐநா-வில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை ராணுவம் நடத்திய மனித உரிமை மீரல்களை விசாரிக்க வேண்டும் என்ற தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தது.

8. மும்பை தீவிரவாதத் தாக்குதல்களில் பிடிக்கப்பட்ட அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டான்.

9. (பிறந்த தேதி விவகாரத்தில்) அரசுக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கை தரைப்படைத் தளபதி திரும்பப் பெற்றார்.

10. சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டு அதன் காரணமாக கூட்டணியிலிருந்து த்ரிணாமுல் காங்கிரஸ் வெளியேறியது. ஆனாலும் நாடாளுமன்ற வாக்கெடுப்பில் ஒன்றுக்கொன்று எதிர்நிலை எடுக்கும் முலாயம் சிங்-இன் சமாஜ்வாதி கட்சியும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் காங்கிரஸுக்கு உதவின.
******************
இவற்றைத் தவிர தெலுங்கானா, கூடங்குளம் அணுமின் உலை எதிர்ப்பு, கேரளக்கடலில் இத்தாலியக் கப்பல் மாலுமிகளால் இரு மீனவர்கள் கொல்லப்பட்டது, மம்தா பானர்ஜி ஊடகங்களையும் எதிர்கருத்துக்களை கையாண்ட விதமும், ஏர்-இந்திய விமானிகளின் வேலை நிறுத்தமும், கிங்-பிஷர் நிறுவணத்தின் நிதி நிலைமையும், ராகுல் காந்தி கட்சிப் பொறுப்பை ஏற்பது (அல்லது பொறுப்பேற்பதில் காட்டும் தயக்கம் என்று கூற வேண்டுமோ?), ’டைம்’ பத்திரிகை பிரதமரின் கையாளாகாதத்தனத்தை விமர்சித்தமையும் முக்கியச் செய்திகளாக இடம் பெற்றன.

முக்கிய 10 நிகழ்வுகளில் சில குறித்து இன்னும் சற்று விரிவாக பேசுவோம்

சுதந்திர இந்தியா-வின் மக்களாட்சி என்கிற தேரை இழுத்துச் செல்லும் அரசுக் குதிரையின் கடிவாளமாக விளங்கும் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க நடந்தத் தேர்தல் தான் முதல் முக்கிய நிகழ்வு. கடிவாளத்தின் பிடி என்னவோ பிரதமரிடம் தான் இருக்கிறது.

[அந்த பிரதமர் என்கிற இயந்திர மனிதரைக் கட்டுப் படுத்தும் ரிமோட் தற்போது யாரிடம் இருக்கிறது? என்று கேள்விக் கேட்கக் கூடாது]

குடியரசுத் தலைவராக திரு. பிரணாப் முகர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். பல்வேறுத் தலைவரகளின் பெயர்கள் யூகமாக வெளியிடப்பட்டுக் கொண்டே வர அதிலும் குறிப்பாக ஐ.மு.முன்னணிக்கு அப்போது ஆதரவளித்து வந்த த்ரிணாமுல் காங்கிரஸ் முன்னால் குடியரசுத் தலைவர் கலாமின் பெயரைப் பரிந்துரைக்க முயல, நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்த காங்கிரஸ் ஒரே நாளில் முகர்ஜியின் பெயரை சிபாரிசு செய்து சுதாரித்துக் கொண்டது. அதற்கு, முன்னரே மற்றொரு ஆதரவுக் கட்சியான தேசியவாத காங்கிரஸின் சங்மா (தே.கா. அவரை வெளியேற்றிவிட்டது தனிகதை) தன்னை முன்னிலைப் படுத்தி எதிர் கூட்டணியின் (தே.ஜ. கூட்டணி) பிஜு ஜனதாதளம், அதிமுக ஆகியவற்றின் ஆதரவுடன் நிற்க அக்கூட்டணியின் முக்கிய கட்சியான பாஜக-விற்கு என்ன முடிவெடுப்பது என்பதே புரியாத நிலையில், காங்கிரஸின் அறிவிப்புக்குப் பின்னர் கலாம் தான் போட்டி-யிட விரும்பாததை அறிவித்த நிலையில் வேறு வழியின்றி சங்மா-வை ஆதரித்தது.

கட்சி அடிப்படையில் முகர்ஜி ஆதரவாளர்கள் அதிகம் இருந்தாலும், இந்திரா ஆட்சியில் கட்சி மாறிப் போட்ட ஓட்டுகளில் திரு. சஞ்சீவ ரெட்டிக்கு வெற்றி கிட்டியது போல் தனக்கும் கிடைக்குமோ என்ற சங்மா-வின் எண்ணம் நிறைவேறவில்லை. முகர்ஜி-யே பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். குடியரசுத் தலைவர் பதவிக்கு ஆரம்பத்தில் அடிபட்ட பெயர்களில் முக்கியமான குடியரசுத் துணைத் தலைவர் திரு.அன்சாரி மீண்டும் அப்பதவிக்கு இரண்டாம் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த ஆண்டு இந்தியாவின் ஏழு மாநிலங்களில் பொதுத் தேர்தல்கள் நடைபெற்றன. முதல் பாதியில் (பிப்ரவரி-மார்ச் மாதம்) கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்திரபிரதேசம், உத்ராகாண்ட் ஆகிய மாநிலங்களிலும் பிற்பாதியில் (டிசம்பர்) குஜராத், ஹிமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் பொதுத் தேர்தல்கள் நடைபெற்றன. இதில் மணிப்பூர், ஹிமாசல மாநிலங்களில் காங்கிரஸும், கோவா, குஜராத் ஆகியவற்றில் பாஜக-வும், உ.பி.யில் சமாஜ்வாதி கட்சியும், பஞ்சாபில் அகாலிதளமும் வெற்றி பெற்றன. உத்ராஞ்சலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும் காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது.

இந்தத் தேர்தல்களில் அனைவராலும் கூர்ந்து கவனிக்கப்பட்டவை குஜராத் மற்றும் உத்திரபிரதேசத் தேர்தல்கள் தான். குஜராத்தில் மோதி தொடர்ந்து வெல்வதைத் தொடர்ந்து 2014-இல் மத்திய பொதுத் தேர்தலில் மத்திய அரசை நேக்கி நகர முயற்சிப்பது தான் இதன் முக்கியத்துவத்திற்குக் காரணம். ஆனால், காங்கிரஸோ கடந்த 4½ ஆண்டுகளில் மாநிலத்தில் கட்சியை வலுப்படுத்தாமல் கடைசி நேரத்தில் மத்திய தலைமையின் முடிவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையிலேயே இருக்கிறது (கிட்டத்தட்ட தமிழக காங்கிரஸின் நிலைதான். ஆனால், தமிழகத்தில் இரண்டு பெரிய கட்சிகள் இருக்கின்றன. குஜராத்தில் அது இல்லாததால் மோதிக்கு எதிரான வாக்குகள் காங்கிரஸுக்கு கிடைப்பதால் ஓரளவு இருப்பைக் காட்டிக் கொள்ள முடிகிறது).

கடந்த ஆறு மாதங்களாக ஊடகங்களாலும் மத்திய காங்கிரஸ் தலைமையாலும் மோதிக்கு எதிராகக் கூறப்படும் எந்தக் குற்றச்சாட்டையும் மாநில காங்கிரஸ் சுட்டிக் காட்டவில்லை என்பதிலிருந்தே அந்த மாநில கட்சி நடக்கும் விதம் புரிபடும். எனவே, தேர்தலுக்கு முன்னரே மோதியின் வெற்றி உறுதியாகிவிட்டது. சோனியாவும், ராகுலும் ஒரு நாள் மட்டுமே பிரசாரம் செய்தது அவர்களின் கையறு நிலையைக் காட்டிவிட்டது. ஆனால், இந்த வெற்றி மோதியின் பிரதமர் கனவை நிறைவேற்றும் என்று தோன்றவில்லை. காரணம், முதலில் பாஜகவிலேயே அவரை முன்னிறுத்த ஒத்த கருத்து இல்லை; அடுத்து, சங்பரிவாரம் அவரை இன்னமும் முழுமையாக ஏற்கவில்லை; மூன்றாவதாக, கூட்டணிகள் (அதிமுக, அகாலிதளம், சிவசேனா தவிர பெரும்பாலானவை, முக்கியமாக ஜனதாதளம்) அவரை ஏற்பதில் காட்டும் தயக்கம் ஆகியவையே. இவையனைத்தையும் விட முக்கிய காரணமாக ஒன்றைக் கூற வேண்டுமானால் அது சமீப காலமாக பாஜக கண்டு வரும் சரிவும் அக்கட்சியின் உட்கட்சிப் பூசல்களும் தான்.

கட்கரி, எதியூரப்பா விஷயத்தில் பாஜக-வின் ஊழல் எதிர்ப்பும் கட்சிக் கட்டுப்பாடும் ஆட்டம் கண்டு அது காங்கிரஸின் நகலாகவேத் தோற்றம் காணுகிறது. காங்கிரஸிலாவது நேரு குடும்பம் என்ற பசை கட்சியை இணைக்க இருக்கிறது. பாஜக-வில் சங்பரிவாரம் (குறிப்பாக ஆர்.எஸ்.எஸ்) தான் அந்த வேலையைச் செய்து வருகிறது. ஆனால் சங்பரிவாரத்தின் நடவடிக்கைகளே கட்சியை மக்களிடமிருந்து தள்ளி வைக்கிறதோ என்ற எண்ணம் அவர்களிடம் எழுந்துள்ளதால் எந்தப் பக்கம் செல்வது என்று புரியாமல் இருக்கின்றனர்.

மாநிலங்களின் தேர்தலில் குஜராத்திற்கு அடுத்த நிலையில் அனைவராலும் கூர்ந்து கவனிக்கப்பட்டது உத்திரபிரதேச தேர்தல் தான். காரணம், காங்கிரஸைப் பொறுத்தவரை இந்தத் தேர்தல் முழுக்க முழுக்க ஒரு குடும்பத்தினரால் ஒரு குடும்பத்தினருக்காக ஒரு குடும்பத்தின் மூலம் நடத்தப் பட்டதுஎன்பது தான். தேர்தல் பிரசாரத்தில் அக்குடும்பத்தின் நண்டு சிண்டுகள் கூட மேடையேற்றப்பட்டன. ஆனாலும், காங்கிரஸால் ஏற்கனவே இருந்த இடங்களைக் கூடத் தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலைதான் ஏற்பட்டது. ஒரு வருடத்திற்கும் மேலாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுலால் கூட கட்சியின் தோல்வியை தடுக்க முடியவில்லை. முலாயம் சிங் தனிப்பெரும் முன்னிலை பெற்றுத் தன் மகனை முதல்வராகவும் ஆக்கியது தான் நடந்தது.

இந்தத் தேர்தல்களைப் பொறுத்தவரை இவை முறைப்படி நடத்தப்பட்டு உரிய நேரத்தில் சரியான முறையில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஆட்சி மாற்றங்கள் இயல்பாகவும் நேர்மையான முறையிலும் வெளியிடப்பட்ட விதம் இந்திய மக்களுக்கு ஜனநாயகத்தில் உள்ள நம்பிக்கையை மேலும் வளர்க்கும் விதத்தில் இருந்தது என்றே கூறவேண்டும். தேர்தல்கள் பொதுவாக நேர்மையான முறையில் பாரபட்சமில்லாமல் முறைகேடுகள் இன்றியே நடத்தப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தை இவ்விஷயத்தில் பாராட்ட வேண்டும்.

அடுத்த முக்கிய நிகழ்வு,ஆண்டு துவங்கும் முன்னரே அரசுக்கு எதிராகத் தரைப்படைத் தளபதி வி.கே.சிங் உச்ச நீதிமன்றத்தில் (பிறந்த தின சர்ச்சையில்) வழக்குத் தொடுத்திருந்தார். இது அரசுக்கும் ராணுவத்திற்கும் இடையிலான பிணக்காக மாறிவிடும் அச்சம் தொடர்ந்தது. ஆனால், பிப்ரவரி மத்தியில் சிங் தன் வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். இந்தியாவுடன் சுதந்திரம் அடைந்த அண்டை நாடுகளின் ஜனநாயகம் பெரும்பாலும் அரசுக்கும் ராணுவத்திற்குமானப் பிணக்குகளினாலேயே அதிகம் பாதிப்படைந்தன என்பதை எண்ணிப் பார்க்கும் பொழுது இதன் முக்கியத்துவம் புரிபடும்.

ஊழல்களைப் பொறுத்தவரை இதுவரை ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை ஏதாவது ஒரு பெரிய ஊழலை நாம் சந்தித்துக் கொண்டே வந்திருக்கிறோம். 85-90களில் போபர்ஸ், 90-95களில் பங்குச் சந்தை (ஹர்ஷத் மேத்தா) ஊழல், 95-2000-இல் முத்திரைத் தாள் ஊழல், 2000-2005இல் 2ஜி ஒளிக்கற்றை 2005-10இல் நிலக்கரி ஊழல் ஆகியவை. ஆனால், இவை எதிலும் எந்த அரசியல்வாதியும் இதுவரைத் தண்டிக்கப் படவில்லை என்பது தான் நிலைமை. அரசியல்வாதிகள் தண்டிக்கப்படும் வரை இது போன்ற ஊழல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். நீதிமன்றங்கள் தண்டிக்காவிட்டாலும் மக்களாவது இவர்களைத் தொடர்ந்து தண்டிக்க வேண்டும்

என்னதான் ஜனநாயக முறையில் தேர்தல்கள் நடத்தப்பட்டாலும் இந்திய ஜனநாயகம் இன்னமும் முதிர்ச்சி அடையவில்லை என்று பெரும்பாலான ஊடகங்கள் விமர்சிக்கின்றன. குறிப்பாக, மத்தியில் பெரும்பான்மை கிடைக்காமல் கூட்டணி ஆட்சியில் (கடந்த இரு தசாப்தங்களாக) மாநிலக் கட்சிகளின் மிரட்டல்களுக்கு பணிந்து வருவதாக வட மாநில ஊடகங்கள் கருதுகின்றன. ஆனால், மத்தியில் கூட்டாட்சி மாநிலங்களில் சுயாட்சி என்ற (திராவிட கட்சிகளின் ஆரம்ப கால கோஷமாக இருந்தாலும்) நிலைதான் சரியென்று தோன்றுகிறது. வலுவான மத்திய அரசு இருந்த போது அது சிறு மாநிலங்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் பெரிய மாநிலங்களில் தங்கள் வாக்கு வங்கிகளைத் தக்க வைத்துக் கொள்வதற்கு ஏற்ற முடிவுகளையே எடுத்துவந்துள்ளன/வருகின்றன. உதாரணமாக, காவிரி, மீனவர்கள் கொல்லப்படுவது, அணுமின் உலை விவகாரங்களில் மத்திய அரசுகள் எடுத்துவரும் நிலையைக் கூறலாம். சில மாநிலக் கட்சி அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்திற்காக மத்திய அரசை மிரட்டுவதைக் கொண்டு இந்தக் கூட்டாட்சி முறையே தவறென்று கூற முடியாது. இதற்கு மக்கள் சரியானத் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பது தான் தீர்வாக இருக்க முடியும்.

வரும் ஆண்டுகளிலாவது இந்த முதிர்ச்சியை நாம் அடைய வேண்டும்…!

வேங்கட சீனிவாசன்
***
அண்மை பதிவு: வானவில்: சச்சின்-ஷாலினி- MAX  கடை அக்கிரமம் !

வானவில்: சச்சின்: ஷாலினி : Max கடை அக்கிரமம் !

பார்த்த படம் : டாடி கூல்

அப்பா குறித்த கதை என்பதாலும் மம்மூட்டி நடித்ததாலும் இந்த பட DVD வாங்கி வந்தேன்.

சி.ஐ. டி யாக இருக்கும் மம்மூட்டி வேலையில் அதிக சிரத்தை இன்றி பையனோடு விளையாடியவாறே இருக்கிறார். ஒரு குற்றவாளியை பிடிக்கும் நேரம் டிவியில் கிரிக்கெட் மேட்ச் பார்த்த படி தப்ப விட்டதால் சஸ்பெண்டு ஆகிறார். பின் இன்னொரு சாகசம் செய்து வேலையில் சேர, கொஞ்ச நாளில் அவரது மகன் கடத்தப்படுகிறார். மகனை எப்படி மீட்டார் கடத்தியது யார் என்பதை இறுதி பகுதிகள் சொல்கின்றன.

கதைக்களன் நன்றாயிருந்தாலும் எடுத்த விதத்தில் சொதப்பி விட்டனர். ஏனோ படத்தில் ஒரு விறுவிறுப்பே இல்லை. வில்லன் கூட்டம் முழுமையும் தமிழ் பேசும் ஆட்களாய் காட்டுவது உறுத்துகிறது.

சூப்பர் ஸ்டாராக இருந்த மம்மூட்டியின் சமீபத்து படங்கள் எதுவும் சொல்லி கொள்கிற மாதிரி இல்லாதது வருத்தமே !

அழகு கார்னர் 

ஷாலினி ! தமிழ் சினிமாவில் பிடித்த நடிகைகள் என்று பட்டியலிட்டால் அவசியம் இவர் பெயரையும் சொல்வேன் ! நடிப்பு, அழகு, டான்ஸ், புன்னகை என எல்லா விதத்திலும் கவர்ந்தவர். குறிப்பாக அவரது கண்கள்... மகிழ்ச்சி,
சோகம், பரிவு, காதல் அனைத்தையும் பேசி விடும். குழந்தை நட்சத்திரமாக ரொம்ப காலம் நடித்தாலும், ஹீரோயின் ஆனபின், மிக குறுகிய காலமே இருந்து, நல்லதொரு மனிதரை மணந்து சினிமாவிலிருந்து ஒதுங்கி விட்டார்.

அவரது கண்களையும் அழகையும் இந்த பாடலில் ரசியுங்கள் !

நமக்கு பிடித்த நடிகையும், மனைவிக்கு பிடித்த நடிகரும் இப்பாடலில் இருப்பதால், எப்போது டிவியில் போட்டாலும் இருவரும் சேர்ந்து ரசிக்கும் பாட்டு இது !மேக்ஸ் கடையில் செய்யும் அக்கிரமம்

MAX -  நமக்கு பிடித்த கடை என்று அவ்வப்போது சொல்லி வந்துள்ளேன். ஆனால் சமீபமாய் அவர்கள் செய்யும் வியாபார தந்திரம் எரிச்சலூட்டுகிறது. எப்பவும் ரெண்டாயிரம் வாங்கினால் ஐநூறு ரூபாய் பரிசு கூப்பன் இலவசம் என்கிறார்கள். அது எப்படி வருஷம் முழுக்க இப்படி தர முடியுமோ தெரியலை. ஆயிரம் ரூபாவுக்கு பர்ச்சேஸ் செய்பவரை ரெண்டாயிரத்துக்கு இழுத்து விடும் ஐடியா தான் இது.

அதை விட கொடுமை.. ஐநூறுக்கு கிப்ட் கூப்பன் என்கிறார்களே .. அதுக்கு அவர்கள் சொல்லும் பொருள் மட்டுமே வாங்க முடியும். எல்லாவற்றையும் வாங்க முடியாது. மட்டமான ஷூ, அல்லது செருப்பை காட்டி இது ஆயிரம் ரூபாய். ஐநூறு உங்க கிப்ட் கூபனுக்கு கழிச்சுக்குறோம்.. மீதம் ஐநூறு குடுத்து இந்த ஷூவை வாங்கிக்கலாம் என்கிறார்கள். அட பாவிகளா ! இந்த ஷூ ஐநூறுக்கு கூட வொர்த் இல்லியே .. இதை போயி வாங்க சொல்றீங்களே என நொந்தவாறு திரும்பினோம். எப்டி எல்லாம் ஏமாத்துறாங்க !

போஸ்டர் கார்னர் 


நாகர்கோவில் -கன்யாகுமரி - திருநெல்வேலி-குற்றாலம் பயணம் 

ஐந்து நாள் பயணமாக குடும்பத்துடன் நாகர்கோவில் -கன்யாகுமரி - திருநெல்வேலி - குற்றாலம் சென்று வந்தோம். மிக இனிய பயணம். பல வித்தியாச இடங்கள். ஏகப்பட்ட தகவல்கள் - நிறைய புது மனிதர்கள். நண்பர்கள். ("ஆஹா அடுத்த பயண கட்டுரை ஆரம்பிச்சிடுவானே இந்த ஆளு " என்ற உங்க மைண்ட் வாய்ஸ் இங்கே கேட்குது... )

நண்பன் டாக்டர் வெங்கடப்பன்- டாக்டர் மல்லிகா தம்பதியினர் அன்பில் திக்கு முக்காடி விட்டோம். வேலைகளை எல்லாம் ஒதுக்கி விட்டு இரு டாக்டர்களும் மூன்று நாட்கள் எங்களுடன் பல இடங்கள் வந்து ஒவ்வொரு இடத்தின் சிறப்பையும் பொறுமையாய் கூறினர்.

 பதிவர் உணவு உலகம் அவர்களுடன் திருநெல்வேலியில் 
திருநெல்வேலியில் ரயில் ஏறும்போது பதிவர் உணவு உலகம் சாரை பார்த்தேன். இனிமையான, இளமையான மனிதர். அதிகம் பேச முடிய வில்லை. நிச்சயம் இனி தொடர்ந்து தொடர்பில் இருப்போம் என நினைக்கிறேன்.(புகைப்படம் அவர் Facebook -ல் பகிர்ந்தது)

நான் ஊரில் இல்லாத 5 நாளும், (Draft -ல் இருந்து) வீடுதிரும்பலில் பதிவுகள் வெளியிட்ட நண்பர் ரகுவுக்கும் ஸ்பெஷல் நன்றிகள் !

சச்சின்

சச்சின் ஒரு நாள் போட்டியில் 49 சதத்துடன் (ஒரு வழியாய்) ஓய்வு பெற்றுள்ளார். என்னை பொறுத்த வரை இது Too little and Too late !

இந்தியாவில் தொடர்ந்து நடந்த ஏழு டெஸ்ட் மேட்ச்களில் (மூன்று மேட்ச் நியூசிலாந்து என்கிற ஓட்டை டீமுடன் ; நான்கு சுமாரான இங்கிலாந்து டீமுடன்) - 13 இன்னிங்க்ஸ்களில் தலைவர் அடித்தது ஒரே ஒரு 70 + மட்டுமே ! மற்ற அனைத்து இன்னிங்க்ஸ்சிலும் வழிசலோ வழிசல் ! இப்படி ஏழு மேட்சில் ஒருவர் வழிந்தும் இன்னும் தொடர்ந்து டெஸ்ட் அணியில் அவர் இடம் பெற்றால் அதை விட அசிங்கம் வேறேதும் இல்லை. "No individual is bigger than the game " என்பார்கள். ஆனால் BCCI, " Sachin is bigger than the game" என்று நினைக்கிறது;

சச்சினின் தீவிர ரசிகனான என்னை போன்றோரே வெறுக்கும் நிலைக்கு பின் அவர் ரிட்டயர் ஆவது கொடுமை ! இப்படி 13 இன்னிங்க்ஸ் வழிந்ததை மறைக்க தான், "டெஸ்ட்டை விட்டு துரத்தாதீர்கள்" என ஒன் டே மேட்ச்சில் ரிட்டயர் ஆகியுள்ளார் போலும் :((

விரல்கள் நன்றாக இருக்கையில் வீணையை விற்று விடு என்று துவங்கும் அழகிய கவிதை ஒன்று இருக்கிறது. அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து சச்சினுக்கு அனுப்பினால் நன்றாயிருக்கும்.

வருடாந்திர அலசல்கள் 

வீடுதிரும்பலில் இன்று மாலை முதல் துவங்குகிறது வருடாந்திர டாப் 10 அலசல்கள் ! வழக்கமாய் வீடுதிரும்பலில் வெளிவரும் டாப் 10 (சினிமா, பாடல்கள்,etc ) தவிர்த்து, பதிவர் நண்பர்கள் சிலர் பல்வேறு துறை குறித்தும் டாப் 10 எழுத உள்ளனர். வருட  முடிவுக்கு 5 நாட்களே உள்ள நிலையில்,  ஒரே நாளில் இரண்டு பதிவுகளும் கூட சில நேரம் வெளிவரலாம் ! பொருத்தருள்க ! 

Tuesday, December 25, 2012

உலகின் அழகிய சர்ச் வீடியோ + பஞ்சவடி ஆஞ்சநேயர்: ஒரு பார்வை

நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் !

***********
கிறிஸ்துமஸ் தினத்தன்று மிக அழகிய சர்ச் ஒன்றையும், பாண்டிச்சேரியின் முக்கிய சில கோவில்களையும் இப்பதிவில் பார்க்கலாம்.

சேகர்ட் ஹார்ட் சர்ச்

சாதாரண எதிர்பார்ப்போடு தான் சேகர்ட் ஹார்ட் சர்ச் உள்ளே நுழைந்தோம். ஆனால் உள்ளே சென்று அதிசயித்து போனோம்.பிரன்ச்சு கலையில் உள்ள மிக அழகிய சர்ச் இது. தலைக்கு மேல் நிமிர்ந்து பார்த்தால் உத்தரத்தில் கூட அற்புதமான கலை நுணுக்கங்கள் மிளிர்கிறது.பீம்கள் போல இருக்கும் பெரிய தூண்களிலும் பல்வேறு வேலைப்பாடுகள். ஏசுநாதரின் அழகிய படம், அந்த இடத்தின் தூய்மை என பல விஷயங்கள் மனதை கொள்ளை அடிக்கிறது.

இந்த நான்கு நிமிட வீடியோ அவசியம் காணுங்கள்:எங்களுடன் பஸ்ஸில் வந்திருந்த பலரும் ஹாவென வாய் பிளந்து வியந்து, வியந்து பேசிக்கொண்டிருந்தோம்.

சர்ச்சுக்கு ஒரு புறம் சிறிய தெரு செல்கிறது. குறுகலான அந்த தெருவும், அதன் அமைப்பும் நமக்கு மிக வித்யாசமாய் படுகிறது.

அருகருகே இரு குட்டி தெருக்கள் - ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு பெயர்கள்- பார்க்க காமெடியாய் இருக்கிறதுஇங்கு கூண்டு கிளிகள் பல வளர்க்கிறார்கள். என்ன செண்டிமெண்ட் என தெரியவில்லை.
*************
பஞ்சவடி ஆஞ்சநேயர்

பாண்டிச்சேரியிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில். ஐந்து முகங்களை கொண்டவராக 36 அடி உயரத்தில் பிரமாண்டமாக நிற்கிறார் ஆஞ்சநேயர்.

ராமேஸ்வரத்தில் வானர சேனைகள் சேர்ந்து பாலம் கட்டியபோது அங்கே ராமர் பாதம் பதித்த ஒரு கல்லை எடுத்து வந்து இங்கு வைத்திருக்கிறார்கள். 15 கிலோ எடை கொண்ட இந்த கல் சன்னதி முன்னே உள்ளே நீரில் போடப்பட்டிருக்க அவ்வளவு எடைக்கும் அது மிதக்கிறது !

36 அடி உயர ஆஞ்சேநேயரிடம் ரசிக்க ஏராள விஷயங்கள் இருக்கு. அந்த உயரத்துக்கும், அகலத்துக்கும் அவர்கள் கட்டியுள்ள பட்டு முதலில் ஈர்க்கிறது. காலடியில் நின்று அர்ச்சனை செய்கிறார் ஒருவர். துளசியை பத்து அடிக்கும் மேல் தூக்கி, தூக்கி போடுவதே பார்க்க வித்யாசமாக இருக்கிறது. அப்படி தூக்கி போடும் துளசி மிக சரியாக பல நேரங்களில் அவர் காலடியில் சென்று விழுகிறது (எல்லாமே பயிற்சி தானே !)

ஒரு அழகான தாத்தா - பேரனை இங்கு சந்தித்தேன். சாமி கும்பிட்டு விட்டு துளசி அனைவரும் எடுத்து கொள்ள, பேரன் துளசி எடுத்து உடனே சாப்பிட முற்பட்டான். தாத்தா " நம்ம தோட்டத்தில் எவ்வளவோ மண்டி கிடக்கு; அங்கே சாப்பிடுறானா பாரு; இங்கே வந்து சாப்பிடுறான் " என சொல்ல, 5 வயசு பேரன் " தாத்தா .. சாமி துளசி தான் தாத்தா சாப்பிடனும். வீட்டு துளசியையா சாப்பிடுவாங்க ? " என்று சிரிக்க, பக்கத்திலிருந்த பையனின் அம்மாவுக்கோ பெருமை தாங்கலை. " ஏன் மாமா - அவன் கிட்டே எப்பவும் பேசி பேசி வாங்கி கட்டிக்கிறீங்க ? " என்றதும், சிரித்தவாறே போகிறார் தாத்தா. அந்த மூவரின் அன்னியோன்னியமும் கோயில் முழுதும் சுற்றி வரும் போது பார்த்து ரசித்து கொண்டிருந்தேன்... அவ்வளவு அழகாய் இருந்தது !

ஐந்து முக ஆஞ்சனேயரில் நரசிம்ஹர், வராகர், ஹையகிரிவர் என ஒவ்வொரு பக்கம் ஒவ்வொருவர்- பின் பக்கம் இருக்கும் முகம் பிரகாரம் சுற்றி வரும்போது பார்க்கிற மாதிரி சரியாக அந்த இடத்தில் ஒரு ஜன்னல் வைத்துள்ளனர்.

பிரகாரத்தில் ராமர் பாதம் போல் இரு பாதங்களின் உருவங்கள் வைத்துள்ளனர். அதன் மேல் மக்கள் காசுகளை வைத்து வணங்குகிறார்கள். சற்று தள்ளி நிற்கும் வேஷ்டி & சட்டை அணிந்த கோயிலின் சிப்பந்தி ஒருவர் அப்படி வைத்து செல்லும் காசுகளை எடுத்து பத்திரபடுத்துகிறார்

கோயிலை பார்க்கும் போதே நமக்கு உடன் நினைவில் வருவது நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் தான். அப்படியே அதே போல உயரம்.. பிரகாரம் மற்றும் சுற்றியுள்ள எல்லா விஷயங்களும் அப்படியே நங்கநல்லூரை உரித்து வைத்துள்ளது. எப்படி என விசாரித்தால் ரமணி என்கிற கட்டிட நிபுணர் தான் இரு கோயில்களையும் கட்டினார் என்றும் அதனால் தான் இரண்டும் ஒரே மாதிரி இருப்பதாக சொல்கிறார்கள். அவரே கும்பகோணத்திலும் இதே பாணி ஆஞ்சநேயர் கோவில் ஒன்று கட்டியுள்ளாராம்.

நாங்கள் சென்ற சனிக்கிழமை மாலை அவ்வளவு கூட்டம் இல்லை. நங்கநல்லூர் கோவில் என்றால் சனிக்கிழமை மாலை ஒரு மணி நேரம் கியூவில் நிற்கணும். இங்கு நேராய் சென்று பார்க்க முடிகிறது. ஆஞ்சநேயரின் மூல நட்சத்திரம் அன்று பால் அபிஷேகம் நடக்கும் என்றும் அன்று தான் மிக அதிக கூட்டம் வரும் என்றும் கூறுகிறார்கள்.

கோவிலை நிர்வகிப்பது ஒரு தனியார் ட்ரஸ்ட். அவர்கள் ஒவ்வொரு ஞாயிறு காலை மூன்று மணி நேரம் இங்கு இலவச மருத்துவம் / சிகிச்சை தருகிறார்கள். இதனை சுற்று வட்டத்தில் உள்ள ஏழைகள் நன்கு பயன்படுத்துவதாய் கூறினார்கள்.

கோயிலில் எந்நேரமும் இலவச பிரசாதம் தருகிறார்கள். புளி சாதம், சர்க்கரை பொங்கல் என ஏதேனும் ஒன்று.. வரிசையில் நின்று வாங்கி சாப்பிட்டால் பாதி வயிறாவது நிரம்பி விடுகிறது. பஸ்ஸில் வந்த பலரும் இந்த அன்னதானத்துக்கு தங்களால் முடிந்த நன்கொடை செய்து விட்டு மன நிறைவுடன் கிளம்பினோம்,

மணக்குள விநாயகர்

பாண்டிச்சேரியின் மிக புகழ் பெற்ற கோயில் என்றால் அது மணக்குள விநாயகர் கோவில் தான் என்று நினைக்கிறேன். காரணம் நான் பார்த்த வரை பாண்டியில் மிக அதிக கூட்டம் இருந்தது இந்த கோவிலில் தான்.

குளம் மற்றும் மணல் அருகே இருப்பதால் பக்தர்களால் மணக்குள விநாயகர் என்று சொல்லப்பட்டு பின் தே பெயரை நிலைத்ததாக தெரிகிறது. பிரெஞ்சுக்காரர்கள் இங்கு வந்து ஆட்சி செய்யும் முன்பே இக்கோவில் இருந்ததாகவும், அவர்கள் ஒரு காலத்தில் இக்கோவிலை இடிக்க முயன்று தோற்றதாகவும் கோவிலின் இணைய தளம் கூறுகிறது !

மிக அதிகமான கூட்டம்.பெரிய வரிசை. நான் தள்ளி நின்று வணங்கி விட்டு தீபாராதனை பார்த்து விட்டு திருநீருடன் விடைபெற்று விட்டேன். கொதிக்க, கொதிக்க அற்புதமான சர்க்கரை பொங்கல். சான்சே இல்லை ! ரசித்து சாப்பிட்டேன்.

கடவுள் நம்பிக்கை உள்ளோர் பாண்டி சென்றால் அவசியம் செல்ல வேண்டிய கோவில் இது ! கோவில் வெளியில் உள்ள லட்சுமி என்கிற யானை மிக புகழ் பெற்றது. இது பற்றி இன்னொரு பதிவில் பார்ப்போம்.(ஆஹா ! ரைட்டு !)

பாண்டி பீச்சுக்கு மிக மிக அருகில், நடக்கிற தூரத்தில் தான் மணக்குள விநாயகர் கோவில் உள்ளது. இதற்கு ஒரு தெரு தாண்டி பஸ் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் செல்கிறது. அவற்றில் இறங்கி, நடந்து ஓரிரு நிமிடத்தில் கோவிலை அடையலாம்

பாண்டியின் இதர கோவில்கள்

பாண்டிச்சேரியின் ஏராளமான கோவில்களில் நான் சென்ற மற்றொரு கோவில் இந்த வன்னிய பெருமாள்.
மிக பழமை வாய்ந்த இக்கோவிலில் ஹயக்ரிவர் விக்ரஹம் தற்போது தான் வந்துள்ளதாகவும், விரைவில் கும்பாபிஷேகம் நடக்கும் என்றும் சொன்னார்

முக்கிய சாலையொன்றில் சிறிது தூரத்தில் வேதபுரீஸ்வரர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில்கள் உள்ளன. இரண்டுமே ஐநூறு ஆண்டுகளுக்கு மேலாக இருக்க கூடிய கோவில்கள்.

பாண்டிச்சேரிக்கு "குடிமகன்கள்" அதிகம் வருவது ஒரு புறம் இருக்க -  வயதானவர்கள், ஆன்மீக நாட்டமுள்ளவர்கள் வரவும், இங்கேயே தங்கி விடவும் இத்தகைய கோயில்களும், அரபிந்தோ ஆசிரமும் ஒரு முக்கிய காரணம் எனலாம் .

அரபிந்தோ ஆசிரமம் மற்றும் ஆரோவில் குறித்து அடுத்த பதிவில் பார்ப்போம்.
****
தொடர்புடைய பதிவுகள் :

பாண்டிச்சேரி பீச் ஒரு ஜாலி ரவுண்ட் அப்

தமிழக மின்வெட்டுக்கு பாண்டி ஆட்டோ காரர் சொன்ன தீர்வு


Monday, December 24, 2012

தொல்லைகாட்சி 2012-- சொல்வதெல்லாம் உண்மை- ஒரு வார்த்தை ஒரு லட்சம்

சொல்வதெல்லாம் உண்மை 


ஜீ - (தமிழ்) டிவி யில் மற்றவர்களுக்கு தெரிந்த ஒரே பிரபல நிகழ்ச்சி சொல்வதெல்லாம் உண்மை ! இதில் பலர் வந்து பேசும் கண்ணீர் கதைகள் சற்று செட் அப் என்று ஒரு சாரார் சொன்னாலும் கூட, இதே நிகழ்ச்சியில் ஒரு பெண் தன் தந்தை கொலை செய்து புதைத்ததை சொல்ல, அவர் கைதானதும் நடந்தது நீங்கள் அறிந்திருக்கலாம்,

நிற்க. வணக்க்க்க்க்கம் புகழ் நிர்மலா பெரியசாமி இந்நிகழ்ச்சி தொகுத்து வழங்கியது நிறைவுக்கு வந்து ஆரோகணம் பட இயக்குனர் " லட்சுமி ராமகிருஷ்ணா " இனி தொகுத்து வழங்க போகிறாராம். இவர் தொகுத்து வழங்குவதால் ஓரிரு எபிசொட் எப்படி இருக்கு என பார்க்கும் ஆவல் லேசாய் வருது (பார்த்ததும் ஆவல் காற்றாய் மறையவும் வாய்ப்புண்டு !)

ஒரு வார்த்தை ஒரு லட்சம்

விஜய் டிவியில் வரும் நல்ல நிகழ்ச்சிகளில் ஒன்று " ஒரு வார்த்தை ஒரு லட்சம்". நீங்கள் நிச்சயம் ஒரு முறையாவது பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். நடத்தும் ஜேம்ஸ் வசந்தன் பல வருடங்களாக நிகழ்ச்சி தொகுப்பாளாராக இருந்து, இப்போது இசை அமைப்பாளர் ஆன போதும், இதற்காக நேரமெடுத்து இதை நடத்துகிறார். தெளிவான உச்சரிப்பில் அழகான தமிழை பேசும் மிக சில தொகுப்பாளர்களில் இவரும் ஒருவர் !
முன்பு சினிமா அல்லது டிவி நட்சத்திரங்கள் இந்த கேம் ஆடினர். இப்போது பள்ளி மாணவ மாணவிகளுக்கு இதே நிகழ்ச்சி நடக்கிறது. நிச்சயம் கலந்து கொள்ளும் இருவரின் புரிந்துணர்வை பொறுத்தே வெற்றி அமைகிறது என தோன்றுகிறது. உங்களுக்கு தெரிந்த பள்ளி மாணவர்கள் இருந்தால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பரிந்துரைக்கலாம் !

ரஜினிக்காக ராகவா லாரன்ஸ் ஆடிய ஸ்பெஷல் டான்ஸ்

ராகவா லாரன்ஸ் திரை உலகிற்கு வர உதவியவர் என்கிற வகையில் ராகவா லாரன்ஸ் எப்போதுமே ரஜினியை மிக உயர்வாக பேசுவார். இவ்வருடம் ரஜினி பிறந்த நாளை முன்னிட்டு ராகவா லாரன்ஸ் ஸ்பெஷல் டான்ஸ் ஆல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை சன் மியூசிக்கில் அடிக்கடி போட்டு வருகிறார்கள். ரஜினி ரசிகர்களுக்காகவும், ராகவா லாரன்சின் நடன அசைவுகளுக்காகவும் இப்பாடலை இங்கு பகிர்கிறேன்.

துவக்கத்தில் அரை நிமிடம் ராகவா லாரன்ஸ் பேசிய பிறகு அவர் டான்ஸ் துவங்குகிறது.
பிளாஷ்பேக்: ஒளியும், ஒலியும்

டிவி பொட்டி ஊருக்கு வந்த காலத்தில், வெள்ளியன்று மாலை ஏழரை மணிக்கு தூர்தர்ஷனில் ஒளியும், ஒலியும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். எங்கள் எதிர் வீட்டுக்கு சரியே அந்த நேரத்துக்கு போய் அந்த நிகழ்ச்சி மட்டும் பார்ப்பது வழக்கம். பின் நம் வீட்டுக்கு டிவி வந்தபின், நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தால், " ஒளியும், ஒலியும்" என வெள்ளி மாலை வீட்டுக்கு வருவதும் நடக்கும் ! முதல் 2 பாட்டு மட்டும் புது படத்திலிருந்து போடுவார்கள். மற்றபடி சிவாஜி, எம் ஜி. ஆரின் பழைய பாடல்கள் ரஜினி கமல் பாடல்கள் என போகும்.

அந்த அரை மணி நேர ஒளியும், ஒலியும் தந்த மகிழ்வை, 24 மணி நேரமும் பாட்டு போடும் எந்த சானலாலும் செய்ய முடிய வில்லை !

என் வழி தோனி வழி 

சன் நியூசில் என் வழி தோனி வழி என்கிற நிகழ்ச்சி என்றைக்கெல்லாம் கிரிக்கெட் மேட்ச் இருக்கோ அன்று மாலை ஒளிபரப்பாகும். பாஸ்கி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் அவருடன் எப்போதும் வரும் மற்ற இருவர் ஞானி (எழுத்தாளர் அல்ல) மற்றும் பிரகாஷ். இதில் பிரகாஷ் என்பவர் கிரிக்கெட் பற்றி குருட்டாம்போக்கில் அடித்து விடுவார். அவர் பேசும் ஆங்கிலம் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும். ( வேண்டுமென்றே தான் அப்படி பேசுறார் !) எந்த அர்த்தமும் இல்லாத வாய்க்கு வந்த வார்த்தைகளை போட்டு அந்த வாக்கியத்தை அவர் பேசுவதை கேட்பதற்காக, மற்றவர்கள் பேசும் மொக்கைகளை பொறுத்து கொள்வேன். இயலும் போது பாருங்கள் !

டிஷ் டிவி Vs கேபிள் டிவி 

இந்த மாத இறுதியிலிருந்து செட் அப் பாக்ஸ் கட்டாயம் தேவை என்கிறார்கள். இதுவரை எங்கள் வீட்டில் லோக்கல் கேபிள் டிவி தான் வைத்துள்ளோம். நாங்கள் தமிழ் சானல்கள் தவிர ஆங்கில நியூஸ் சானல், கிரிக்கெட் போன்றவை தான் பார்ப்போம். லோக்கல் கேபிள் டிவி ஆப்பரேட்டர் மூலம் செட் அப் பாக்ஸ் வைப்பது நல்லதா அல்லது சன் டிவி போன்றவை மூலம் டிஷ் வாங்குவது நல்லதா? ரொம்ப அதிக செலவு இல்லாமல் மேலே சொன்ன சானல்கள் பார்க்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம். எந்த முறையை தேர்ந்தெடுக்கலாம் என கொஞ்சம் அட்வைஸ் செய்யுங்கள் நண்பர்களே !


Sunday, December 23, 2012

உணவகம் அறிமுகம்: தலப்பாக்கட்டி வேளச்சேரி

லப்பாக்கட்டு என்கிற பிரியாணி கடை ஒவ்வொரு ஏரியாவிலும் நான்கைந்து இருக்கிறது. இவையெல்லாம் தாங்களாகவே அந்த பெயர் வைத்து கொள்ளும் கடைகள் ! ஆனால் தலப்பாக்கட்டி என்கிற பெயரில் உள்ளது நிஜ தலப்பாக்கட்டி க்ரூப் தான். சென்னையில் எக்மோர், வேளச்சேரி உள்ளிட்ட சில இடங்களில் இவர்கள் கடை உள்ளது. மேலும் சில மால்களிலும் கூட இவர்கள் பிரான்ச் இருப்பதாக அறிகிறேன்.


முதலிலேயே ஒன்றை சொல்லி விடுகிறேன்: நண்பர் கேபிளுக்கு தலப்பாக்கட்டி பற்றி பெரிதாய் நல்ல அபிப்ராயம் இல்லை. போலவே நமது நண்பர் மெட்ராஸ்பவன் சிவாவும் போரூரில் உள்ள ஒரு mall-ல் இவர்கள் பிரியாணி சாப்பிட்டு விட்டு " மட்டன் பிரியாணி என்று சொல்லி போடுறாங்க. காசு மட்டும் நிறைய வாங்குறாங்க; ஆனா உள்ளே மட்டன் பீசை இல்லை" என்று வருத்தப்பட்டார்.

நான் சாப்பிட்டது மூன்று முறை - வேளச்சேரி - தலப்பாக்கட்டியில். மூன்று முறையும் எனக்கு பிடித்தே இருந்தது. ஒவ்வொரு பிரான்ச்சுக்கும் சுவை, அளவு எல்லாம் மாறுமா என்று தெரியலை. இங்கு பார்ப்பது வேளச்சேரி தலப்பாக்கட்டியில் சாப்பிட்ட அனுபவம் மட்டுமே !
**
முதல்முறை நண்பர் - ரகுவுடன் சென்று சாப்பிட்டேன். கடை காலை பதினோரு மணிக்கு துவக்குகிறார்கள். மதியம் ஒரு மணிக்கு மேல் வார நாளிலும் கூட்டம் அதிகம் வந்துடுது என்பதால் பன்னிரெண்டரைக்கே சென்று விட்டோம்.

இருவருக்கும் அரை பிளேட் சிக்கன் பிரியாணி மற்றும் சிக்கன் க்ரேவி ஆர்டர் செய்தோம்.

பிரியாணி வருவதற்குள் அங்குள்ள ambience வெகுவாக கவர்ந்தது. முதன் முதல் 1957-ல் திண்டுக்கல்லில் இவர்கள் கடை துவக்கியது , அப்போது எப்படி பிரியாணி தயாரித்தார்கள் போன்ற பழங்கால படங்கள் பார்க்க சுவாரஸ்யமாய் இருக்கிறது.

நாகசாமி நாயுடு என்பவர் 1957-ல் துவக்கிய ஆனந்த விலாஸ் பிரியாணி ஹோட்டல். நாகசாமி நாயுடு எப்போதும் தலையை சுற்றி "தலைப்பா " (டர்பன்) கட்டியிருப்பாராம். அதனால் இவர் துவக்கிய ஹோட்டல் பெயரும் பிற்காலத்தில் தலப்பக்காட்டி பிரியாணி ஆனது. இவர்கள் பறக்கும் சிட்டு என்கிற சீராக சம்பா அரிசியை வைத்து மட்டுமே பிரியாணி தயார் செய்கிறார்கள் போன்ற விபரங்கள் அங்கள்ள படங்கள் மற்றும் வரிகள் மூலம் அறிய முடிகிறது.

பிரியாணி மற்றும் க்ரேவி வந்து சேர்ந்தது. பிரியாணிக்கு தொட்டு கொள்ள அருமையான குருமா வேறு அவர்கள் தருகிறார்கள். எனவே நாங்கள் க்ரேவி வாங்கியிருக்கவே வேண்டாம் !

நிச்சயம் மற்ற கடை பிரியாணிகளை விட (இவர்களின் பிற பிரான்ச்சும் சேர்த்து சொல்கிறேன்) இவர்கள் சுவை வித்யாசமாகவும், அருமையாகவும் இருக்கிறது. பிரியாணி வரும் முன் சுவாரஸ்யமாய் பேசி கொண்டிருந்த நானும் ரகுவும் பிரியாணி சாப்பிட ஆரம்பித்ததும் காரியத்தில் கண்ணாய் இருந்தோம்.

சிக்கன் பீஸ்கள் எதுவும் சக்கையாக இல்லாமல் அற்புதமாய் இருந்தது. அவர்கள் இலவசமாய் தரும் க்ரேவி கூட சூப்பர் !

அரை பிளேட் பிரியாணியில் வயிறு நிரம்பி விடுகிறது. அதற்கு மேல் எதுவும் சாப்பிட வில்லை.

வேளச்சேரியில் இருக்கும் பதிவர் ரகு இங்கு அடிக்கடி சாப்பிட ஒரே ஒரு காரணம் சொன்னார் : " மத்த இடத்தில் பிரியாணி சாப்பிட்டா நைட்டு வரை வயிறு மந்தமா இருக்கும். நைட்டும் ஒழுங்கா சாப்பிட முடியாது. இங்கு சாப்பிட்டா நைட்டு வழக்கம் போல பசிக்க ஆரம்பிச்சுடும். அத்தோட எப்பவும் வயிறை பதம் பாத்ததே இல்லை "

உண்மை தான் ! அதன் பின் குடும்பத்துடன் இரு முறை சென்றபோதும் அவர்களும் மிக என்ஜாய் செய்தனர். அம்முறை மட்டன் பிரியாணி டேஸ்ட் செய்தோம். நன்றாகவே இருந்தது.

சிற்சில விமர்சனங்கள் இருந்தாலும் மக்கள் வெளியில் காத்திருந்து இடம் காலியான பின் சாப்பிட்டு செல்கிறார்கள்.

தலப்பாக்கட்டி பிரியாணி- வேளச்சேரியில் ஒரு முறை சாப்பிட்டு பாருங்கள் !
***
மேலதிக தகவல்கள்:

முகவரி :
38/1 பை பாஸ் ரோடு
வேளச்சேரி, சென்னை-42

Wesbite: http://www.thalappakatti.com

பிரியாணி விலை:

சிக்கன் அரை பிளேட் :  Rs.142  (Parcel: Rs. 150)
மட்டன் அரை பிளேட் :  Rs.155  (Parcel: Rs.165)
 ******************
டிஸ்கி 

கார்பரேட் கல்ச்சர் - நமக்கு நல்லது செய்கிறதா? கெடுதல் செய்கிறதா? இந்த வார நீயா நானா தலைப்பு -

நானும் அலவலக நண்பர்கள் சிலரும் பேசியுள்ளோம் ; இன்று இரவு 9 மணிக்கு விஜய் டிவியில் வரவுள்ளது (ப்ரோமோ வர ஆரம்பித்து விட்டதாக உடன் கலந்து கொண்ட நண்பர் சொன்னார்; பயணத்தில் இருப்பதால் ப்ரோமோ இன்னும் நான் பார்க்கலை )

ஒவ்வொரு அணியிலும் பேசிய ஒருவருக்கு Best participant - என பரிசு கொடுப்பார்கள்; கார்பரேட் கல்ச்சர் - நல்லது செய்கிறது என்று பேசிய அணியில் அப்பரிசு எனக்கு கிடைத்தது

ஷூட்டிங் அன்று மாலை ஊருக்கு போக வேண்டிய அவசரம்; பாதியில் கிளம்ப பார்த்தேன். Break விடாததால் தொடர்ந்து இருக்க வேண்டியதானது ; சீக்கிரம் கிளம்பினால் கிப்ட் கிடைச்சிருக்காது ! கிப்ட் - டேபிள் டாப் வெட் கிரைண்டர் என்று சொன்ன நினைவு ; அட்டை தான் அப்போது தருவர் ; கிப்ட் பின் அனுப்புவர் போலும்; நிகழ்ச்சி முடிந்து அவசரமாய் ஓடியவனை சட்டையை பிடித்து அட்ரஸ் கொடுத்துட்டு போங்க என்றதால் பரிசை நிஜமா அனுப்புவாங்கன்னு நினைக்கிறேன் :)

எங்கள் அணியில் பேசியதை விட எதிர் அணியில் பலர் நன்கு பேசியுள்ளனர் நான்கைந்து பேர் கணினி துறைக்கு முழுக்கு போட்டு விட்டு விவசாயம் செய்கிறார்கள்; எதிர் அணியில் பலரும் 10 வருடம் வேலை பார்த்த பின் கார்பரேட் வேண்டாம் என்று உதறி தள்ளி தற்போது விவசாயம் உள்ளிட்ட வேறு தொழில் செய்கிறார்கள். குறிப்பாய் கெளதம் என்ற இளைஞர் கதை அவசியம் கேளுங்கள் ! Inspirational !!

இப்போல்லாம் ரெண்டு மணி நேரம் ( 9 to 11) நீயா நானா ஓட்டுறாங்க. முடிந்த வரை மட்டுமாவது பாருங்க;

இணையத்தில் நிகழ்ச்சி லிங்க் கிடைத்தால் பின் பகிர்கிறேன்

இன்று இரவு 9 மணி - விஜய் டிவி பாருங்கள் ! உங்கள் கருத்துகளை பின் சொல்லுங்கள் !

நன்றி !
Related Posts Plugin for WordPress, Blogger...