Monday, April 30, 2012

டிவியில் மேதின சிறப்பு நிகழ்ச்சிகள்.. எதை பார்க்கலாம்? லிஸ்ட்

விசேஷ தினம் வந்தால், நண்பர்கள் டிவி நிகழ்ச்சிகளையும், கூடவே வீடுதிரும்பலையும் நினைப்பது வழக்கமாகி விட்டது! :))

"டிவி எல்லாம் நான் பார்க்குறது இல்லை " என்று சொல்வது ஒரு Fashion ! ஆனாலும் இன்னொரு பக்கம் டிவி பாப்போம். நான் கூட அப்டி தான் (நம்ம ப்ளாக் படிக்காத) சில பேர் கிட்டே டிவி பாக்குறதில்லைன்னு சொல்வேன் !

டிவி சிறப்பு நிகழ்ச்சி லிஸ்ட் போடும் காப்பிரைட் நம்ம ப்ளாகுக்கு  மட்டும் தான் ! இதை பார்த்து யாரும் ஆரம்பிக்க படாது ! ஆமா சொல்லிட்டேன் !  :))

மஞ்சளில் தந்திருப்பது நான் பார்க்க போவது. மேலும் நீங்கள் பார்க்கலாம் என நான் பரிந்துரைப்பது. உங்கள் ரசனைக்கேற்ப நீங்கள் வேறு நிகழ்ச்சியும் பார்க்கலாம் (வேற ஒண்ணுமில்லை. அதெப்படி மஞ்சளில் போட்டு இதை பாருங்க என நீ சொல்லலாம் என சென்ற முறை ஒருத்தர் சட்டையை பிடிச்சு பின்னூட்டத்தில் உலுக்கிட்டார். சொம்பு பலமா அடி பட்டுருச்சு )

வாங்க நிகழ்ச்சிக்கு போவோம் !

விஜய் டிவி

காலை 9 மணிக்கு : அன்புள்ள அப்பா - ஜெயம் ரவி தன் தந்தை மோகன் பற்றி

காலை 10 மணிக்கு : ஓகே ஓகே ஒரு பார்வை

காலை 12 30மணிக்கு : நண்பன் நூறாம் நாள் விழா

மதியம் 3 மணிக்கு : வழக்கு எண் : 18 /9 : பல இயக்குனர்கள், பாலாஜி சக்திவேலை வாழ்த்தி பேசுகிறார்கள் (ஏம்பா பொங்கலுக்கு தமிழ் வருஷ பிறப்புக்கெல்லாம் கூட இந்த பட சிறப்பு நிகழ்ச்சி இருந்துச்சேப்பா? நீங்க இன்னும் முடிக்கலை? படம் ஓடுறதை விட அதிக நாள் சிறப்பு நிகழ்ச்சி ஓட்டுறீங்க ! ஆமா !)

மாலை 5 மணிக்கு : நண்பன் திரைப்படம் (நம்ம விமர்சனம் : இங்கு )

5 மணிக்கு போடும் படம் 10 மணி வரை ஓடுது ! அஞ்சு மணி நேரம் !!அப்ப எவ்ளோ விளம்பரம்னு பாத்துக்குங்க ! புது படம் வாங்க கொடுத்த காசை விஜய் டிவி யும் சம்பாதிக்க வேணாமா?

இரவு 10 மணிக்கு: அஜீத் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சி ( அஜீத் பிறந்த நாளும் அதுவுமா காலை முதல் இரவு வரை விஜய் குறித்த நிகழ்சிகள் என்று பேர் வந்துட கூடாதேன்னு balance பண்றாங்கோ !!)

சன் டிவி : 

காலை 6 . 45 மணிக்கு : சுகி சிவம் மே தினம் பற்றி பேசுகிறார்

காலை 7 மணிக்கு : நடிகர் நடிகைகளின் முதல் சம்பளம்

காலை 8 மணிக்கு : சிரிப்பு கொண்டாட்டம் (சின்னி ஜெயந்த், சொர்ணமால்யா பங்கு "பெரும்" காமெடி)

காலை 8 .30 மணிக்கு : வடிவேலு மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகிறார்

காலை 10 மணிக்கு : ஓகே ஓகே : படத்தில் விடுபட்ட காமெடி காட்சிகள் (நிச்சயம் பாக்கணும்)

காலை 11 மணிக்கு : முனி காஞ்சனா பார்ட் - 2 திரைப்படம்

மதியம் 2 மணிக்கு சிறப்பு திரைப்படம் : ராஜ "பட்டை" சே ! ராஜபாட்டை !( கணினிக்கே படத்தை பத்தி தெரியது பட்டைன்னு சரியா அடிக்குது ! இதையும் மீறி படத்தின் சில பகுதிகளை நீங்க பார்த்தா நடக்கும் விளைவுக்கு நாம் பொறுப்பல்ல !

மாலை 4 .30   மணிக்கு: கருணாஸ் புது படம் : சிறப்பு நிகழ்ச்சி

மாலை 5   மணிக்கு: கலாட்டா குடும்பம் : தங்கம் Vs செல்லமே டிவி சீரியல் குடும்பங்கள் கலந்து கொள்ளும் கேம் ஷோ (சீரியல் விரும்பி பார்ப்போர் இதனை பார்க்க கூடும்)

மாலை 6 மணிக்கு: போக்கிரி படம் (எத்தனாவது தடவை சார் போடுறீங்க??)

விஜய் டிவியின் நண்பன் படத்துக்கு எதிரா, சன்னில் அதே நேரத்தில் புது படமான ராஜ பாட்டை போடலை பார்த்தீங்களா? அது தான் சன்னின் டெக்னிக். நண்பன் Vs ராஜபாட்டை எனில் மிக எளிதா நண்பன் ஜெயிச்சிடும். சற்றே டப் பைட் கொடுக்க இன்னொரு விஜய் படமான போக்கிரி தான் ரைட்டு என முடிவு செய்துள்ளனர். வடிவேலுவின் சூப்பர் காமேடிக்காகவாவது அவ்வப்போது வருவோமில்ல. அதான் !

ஜெயா டிவி

காலை 7.30 மணிக்கு : மாலை பொழுதின் மயக்கத்திலே படம் சிறப்பு கண்ணோட்டம் (காலையில் முதல் நிகழ்சியிலேந்து ஆரம்பிச்சிடீங்களா?)

காலை 9 மணிக்கு : சீர்காழி சிவசிதம்பரம் வழங்கும் சிறப்பு தேன் கிண்ணம் (அவருக்கு பிடித்த பழைய பாடல்கள்)

காலை 11 .30 மணிக்கு : போடிநாயக்கனூர் கணேசன் - உலக தொலைகாட்சிகளில் முதன் முறையாக சூப்பர் ஹிட் அதிரடி படம் (அப்டி தான் சொல்றாங்க) - ஹரி குமார் நடித்தது !

மதியம் 3 மணிக்கு : மனம் கொத்தி பறவை- சிவா கார்த்திகேயன் நடித்த படம். சிவா மற்றும் பட குழுவினர் பங்கேற்பு

மாலை 4 மணிக்கு : நடன இயக்குனர் ரகு வின் -50ஆவது வருட திரை அனுபவம் ஒட்டி பாராட்டு நிகழ்ச்சி

கலைஞர் டிவி

காலை 9 மணிக்கு : மே தின சிறப்பு கேம் ஷோ

காலை 10 மணிக்கு : பாஸ் என்கிற பாஸ்கரன் ( சந்தானம் இருந்தும் கூட, நயனுக்கு பயந்து நான் இந்த சேனல் பக்கம் அந்த நேரம் வர மாட்டேன்)

மதியம் 2 30 மணிக்கு : எடிசன் -2011ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள்

மாலை 5 மணிக்கு : ஸ்டன்ட் மாஸ்டர்கள் பேசுகிறார்கள்

மாலை 5 .30 மணிக்கு : விண்ணை தாண்டி வருவாயா திரைப்படம் ( நண்பன் விளம்பர இடைவேளையின் போது இங்கு வந்து விடலாம் !)

இரவு 9 மணிக்கு - மசாலா கபே பட குழு பேசுகிறது (இந்த சிறப்பு நிகழ்ச்சி மட்டும் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்ப்போம். அஞ்சலி சார் !)
****
நேயர்களே... சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்தையும் சேனல் மாற்றி மாற்றி கண்டு களியுங்கள் ! மனைவியிடம் கண்டபடி திட்டு வாங்கி மே தினத்தை கொண்டாடுங்கள் !

Sunday, April 29, 2012

Hunger Games :ஆங்கிலபட விமர்சனம்

னைவி இதுவரை எக்ஸ்பிரஸ் அவிநியூ பார்த்ததில்லை. ஒரு முறை போகலாமே என்றார். வெறும் எக்ஸ்பிரஸ் அவிநியூ போனால் பர்ஸ் பழுத்துடும் என்பதால் படத்துக்கு கூட்டி போய் அப்படியே எக்ஸ்பிரஸ் அவிநியூ சுற்றி காட்டி விடலாம் என திட்டம் தீட்டினேன். அப்படி பார்த்தது தான் Hunger Games !

படத்துக்கு விரிவான விமர்சனம் எழுதிய ரெவரி மற்றும் கருந்தேள் ஆகியோருக்கும் இப்படத்தை எனக்கு பரிந்துரைத்த மெட்ராஸ் பவன் சிவகுமாருக்கும் நன்றிகள் !

கதை  

வட அமெரிக்காவில் வருங்காலத்தில் கதை நிகழ்கிறது. புரட்சி செய்த மக்களை ஒடுக்கும் அரசாங்கம் இனி ஒரு முறை புரட்சி வெடிக்க கூடாது என்பதற்காக வருடா வருடம் நடத்துவது தான் " Hunger Games " . அந்த நாட்டில் உள்ள 12 மாவட்டங்களில் இருந்து ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாக மொத்தம் 24 பேர் தேர்ந்தெடுக்க படுகிறார்கள். இவர்கள் 12 வயது முதல் 16 வயதுக்கு உட்பட்டவர்கள். இந்த 24 பேரும் ஒரு காட்டில் விடப்படுகிறார்கள். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டு, காட்டில் மறைந்து வாழ்ந்து மீதம் உள்ளவர் அனைவரும் இறந்த பின் மீளும் ஒருவர் தான் அந்த ஆண்டில் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். அவர் அரசாங்கத்துக்காக வேலை பார்ப்பார்.

இதற்கான தேர்வு, பெயர்களை சீட்டு குலுக்கி போட்டு எடுக்கின்றனர். 12ஆவது மாவட்டத்தில் இருக்கும் கேட்னிஸ் தன் தங்கை பெயர் சீட்டில் வர, அவளுக்கு பதில் நான் செல்கிறேன்" என்று கூறி போட்டியில் இறங்குகிறாள். அவளுக்கு ஒரு காதலன் உண்டு. அவனிடம் தன் தாயாரையும், தங்கையையும் பார்த்து கொள்ள சொல்லி விட்டு செல்கிறாள்.   அதே மாவட்டத்திலிருந்து, அவள் வீட்டுக்கு அருகில் இருக்கும் பீட்டா என்பவன் வருகிறான்.

நிறைய டிரைனிங் தந்து அவர்களை அனுப்புகிறார்கள். மக்களுக்கு பயம் வர வைக்க, அவர்கள் செய்யும் அனைத்து நடவடிக்கையும் டிவி மூலம் நாடு முழுதும் ஒளி பரப்படுகிறது.

முதல் நாளே 24 பேரில் பாதி ஆட்கள் இறக்கிறார்கள். நான்கைந்து பேர் மட்டுமே மீதம் உள்ள நிலையில் " ரூல் மாற்ற பட்டு விட்டது. ஒரே மாவட்டத்தை சேர்ந்த ஆண், பெண் இருவரும் உயிருடன் இருந்தால் இருவரும் வென்றவர்கள்" என அறிவிக்கிறார்கள்.

இதனால் பீட்டாவை தேடி சென்று கண்டுபிடிக்கிறாள் கேட்னிஸ். அவர்கள் இருவர் மட்டும் கடைசியில் உயிருடன் இருக்க " ரூல் மாற்ற பட்டு விட்டது. ஒருவர் தான் உயிரோடு இருக்கலாம் " என   மீண்டும் பல்டி அடிக்கிறது அரசாங்கம் . " இந்த ஏமாற்று வேலையை சகிக்க முடியாது இருவரும் விஷம் சாப்பிட்டு சாகலாம் என கேட்னிஸ்   சொல்ல" , அவர்கள் அப்படி செய்வதற்குள்,  நாட்டில் புரட்சி வெடிக்கும் என்கிற பயத்தில்  " இல்லை இருவருமே வென்றவர்கள்" என விளையாட்டை முடிக்கிறார்கள்.

இருவரும்  ஊருக்கு திரும்பி வர, ஊர் அவர்களை மகிழ்வுடன் வரவேற்கிறது !

#############

Heroine Jenniffer Lawrence
 இந்த ஆக்ஷன் oriented படத்தில் மிக முக்கிய பாத்திரம் கேட்னிசாக நடித்த ஜெனிபர் லாரன்ஸ் தான் ! இதுவரை பெண்களை மையமாக வைத்து வந்த எந்த ஆக்ஷன் oriented படமும் பெறாத வெற்றி, இந்த படம் பெற்றதாக சொல்கிறார்கள்.

கேட்னிசாக வரும் ஜெனிபர் லாரன்ஸ் என்னா நடிப்பு ! அற்புதம் ! முகபாவம், உடல் மொழி, உழைப்பு அனைத்திலும் அசத்துகிறார். துவக்கத்தில் அவரை பார்க்கும் போது மிக சாதாரணமாக தெரிந்தாலும் போக போக அந்த " பெரிய சைஸ் பாத்திரத்தை " அனாயாசமாக சுமக்கிறார்.

இதே பெயரில் வந்த நாவலை தான் படமாக்கி உள்ளனர். கதை களனும் சரி, திரைக்கதையும் சரி செம வித்யாசம் ! ஹாலிவுட்டில் மட்டும் தான் இத்தகைய படங்களை காண முடியும் !

குறிப்பாக வன்முறை எவ்வளவோ இருக்க வாய்ப்புள்ள இந்த கதையில், ஒருவரை ஒருவர் கொல்லும் அத்தகைய காட்சிகளை, பார்ப்பவர்கள் மனதை பாதிக்காதவாறு Fade out முறையில் சில நொடிகளில் காட்டி போவதை மிக ரசித்தேன். நம் தமிழ் படத்தில் சாதா சண்டையிலேயே ரத்தம் கொப்பளிக்கும் ! ஹும் :((

படத்தில் ரசித்த சில காட்சிகள் :

ரூ என்கிற சிறுமியை கேட்னிஸ் காப்பாற்றி வருவாள். ஆனால்  ரூ  கொல்லப்பட, தன்னை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வந்து தாக்கலாம் என்கிற நிலையிலும், கேட்னிஸ் பொறுமையாய் காட்டில் உள்ள பூக்களை பறித்து, இறந்த ரூவை சுற்றி மலர்களால் அலங்கரித்து விட்டு, இதனை நிச்சயம் டிவியில் பார்ப்பார்கள் என மக்களை பார்த்து அவளுக்கு மரியாதை செய்ய சொல்லும் காட்சி அட்டகாசம் ! (இதன் தொடர்ச்சியாய் ரூ இருந்த மாவட்டத்தில் புரட்சி வெடித்து பின் அடக்கப்படுகிறது )

Hunger Games ஆட்டத்துக்கு முன் அதற்கு தரும் டிரைனிங், அதில் அசத்தும் கேட்னிஸ், அங்கு வரும் குடிகார டிரைனர் என பல விஷயங்கள் நம்மை ஈர்க்கிறது

அரசாங்கம் என்பதும் அரசியல் வாதிகளும் இரட்டை நாக்கும், மோசமான மனதும் கொண்டவர்கள் என்பதை பூடகமாக சொல்கிறார்கள் (இலங்கை நினைவு வருவதை தவிர்க்க முடியவில்லை)

இந்த படத்தில் ஹீரோ பாத்திரம் கிட்ட தட்ட டம்மி தான் ! பெண் சிங்கம் போல ஹீரோவை காப்பாற்ற போராடுவது Heroine தான் !

போர், கொலைகள், விளையாட்டு என்று போனாலும் அதன் அடிநாதமாய் அன்பும், சக மனிதனை நேசிப்பதையும் அழுத்தமாக சொல்வதற்கு Hunger Games டீமுக்கு ஒரு சல்யூட் !


தியேட்டர் நொறுக்ஸ்

மனைவி, மகள் அனைவருக்குமே படம் மற்றும் தியேட்டர் மிக பிடித்தது.

ஆங்கில படம் தான் எனினும், ஆங்கில சப் டைட்டில்களுடன் போட்டார்கள். முன் பகுதியில் வரும் வசனங்களை நன்கு புரிந்து கொள்ள இது உதவியது. பின் பகுதியில் அதிக வசனம் இல்லை. Action தான் !

இது மாதிரி மல்டிபிலக்ச்களில் மிக சரியான நேரத்துக்கு (சில நேரம் அஞ்சு நிமிஷம் முன்பாகவே) படம் போட்டுடுறாங்க.

முன்பெல்லாம் படம் துவங்கும் முன் சோப்பு மற்றும் நகை கடை விளம்பரம் போடுவாங்க. இடைவேளையில் புது பட டிரைய்லர் போடுவாங்க. எக்ஸ்பிரஸ் அவின்யூவில் இது உல்ட்டாவா நடக்குது. முதலில் டிரைய்லர் ! இடைவேளையில் தான் விளம்பர படங்கள் !

எக்ஸ்பிரஸ் அவின்யூவுக்கு நம்மை மாதிரி சாதாரண மிடில் கிளாஸ் மக்கள் மிக குறைவாக தான் வருவார்கள் என நினைக்கிறேன். அங்கு வரும் மக்கள் (குறிப்பாய் பெண்கள்) உடைகள் மற்றும் பேச்சை பார்த்தால் நாம் இருப்பது சென்னையா என சந்தேகமாய் உள்ளது. குறிப்பாய் இந்த படம் சென்று திரும்பும் போது எங்களை தவிர யாரும் தங்களுக்குள் தமிழில் பேசி பார்க்க வில்லை. ஆங்கில படம் உள்ளே மட்டுமல்ல வெளியிலும், கவுண்டர்களிலும் ஆங்கிலம் மட்டுமே பேசுகிறார்கள் !

நாங்கள் சென்று அமரும் போதே சீட்டில் இருந்த அனைவரும் நிறைய ஸ்நாக்ஸ் உடன் அமர்ந்து சாப்பிடும் வேலையை ஆரம்பித்திருந்தனர் (எல்லாம் எக்ஸ்பிரஸ் அவின்யூவில் வாங்கியது தான் ! வெளி உணவு தான் அனுமதிப்பதே இல்லையே !). எங்களுக்கான இரவு உணவு டிக்கெட் புக் செய்யும் போதே Order செய்திருந்தேன். இடை வேளைக்கு முன் இதனை தருகிறார்கள். இப்படி ஆர்டர் செய்து சாப்பிட்டது அன்று நாங்கள் மட்டும் தான் ! வேறு யாருக்கும் அப்படி வரவில்லை. எல்லாரும் தாங்களே வேண்டியதை போய் வாங்கி கொள்கிறார்கள் !

படத்தின் டிரைலர் 

***********
வித்யாசமான கதைக்காகவும் ஜெனிபர் லாரன்சின் அட்டகாச நடிப்பிற்காகவும் அவசியம் இந்த படத்தை பார்க்கலாம் !

Saturday, April 28, 2012

திண்டுக்கல் சிறுமலை திராட்சை தோட்டத்தில் இனிய அனுபவம்

மீபத்தில்  திண்டுக்கல் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. திண்டுக்கல் மற்றும் அருகே உள்ள அம்பாத்துரை, சின்னாளபட்டி.. காந்தி கிராமம் பற்றி ஒரு பார்வை. !

ரயிலில் சென்றால் திண்டுக்கலுக்கு பின் ஐந்தே நிமிடத்தில்  அம்பாத்துரை  வருகிறது. சென்னையிலிருந்து செல்லும் ரயில்களில் மதுரை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் மட்டுமே அம்பாத்துரையில் நிற்கிறது. இல்லாவிடில் திண்டுக்கல்லில் இறங்கி பின் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அம்பாத்துரைக்கு பஸ் பிடித்து செல்ல வேண்டும்.

அம்பாதுரைக்கு மிக அருகில் உள்ள கிராமங்கள் சின்னாளபட்டி.. காந்தி கிராமம். அவற்றுக்கு அருகில் உள்ள டவுன் என்றால் அது அம்பாத்துரை தான் !

ரயிலில் நானும் நண்பன் மணியும் சென்றோம். அஞ்சால் அலுப்பு மருந்துக்கு Third ஏ. சி கோச்சில் விளம்பரம் செய்திருந்தனர். "அஞ்சால் அலுப்பு மருந்து ஜலதோஷம்.... உடம்பு வலி..கை கால் உளைச்சல் இவற்றுக்கு ஒரே தீர்வு அஞ்சால் அலுப்பு மருந்து " என்று டிவியில் விளம்பரம் பார்த்து நொந்திருப்பீர்களே அதே மருந்து தான் ! எப்படி தான் Third ஏ. சி யில் பயணம் செய்வோர் இந்த விளம்பரம் பார்த்து கடையில் போய் "அஞ்சால் அலுப்பு மருந்து தாங்க" என கேட்டு வாங்குவாங்கன்னு நம்ம்ம்பி விளம்பரம் செய்தாங்களோ தெரியலை !

ரயிலில் பயணிக்கும் போது நடந்த ஒரு bizarre நிகழ்ச்சி. டாய்லட் சென்ற ஒருவர் கதவை ஒழுங்கா சாத்தலை. அனேகமா லாக் போட்டு பூட்டாம , வெறுமனே சின்னதா திறந்து மூடும் லாக் மட்டும் போட்டுட்டு உள்ளே போனார் போல. காற்றிலோ வேறு யாரோ அதை வெளியிருந்து திறந்து விட, கதவு திறந்து கிடக்கிறது. அடுத்த ஸ்டேஷனில் இறங்க வெளியே வந்த மக்கள் இந்த கொடுமையை பார்த்து விட்டு நொந்து நூடுல்ஸ் ஆகி போனார்கள். ரயிலில் அவசரதுக்கு போனாலும் கதவை ஒழுங்கா பூட்டிட்டு போகணும் என்று தெரிஞ்சுக்குவோம் மக்களே !

காலை நேரம் நாங்கள் சென்ற மார்ச் இறுதியிலும் கூட செம குளிராக இருந்தது. இதற்கு காரணம் அருகில் இருக்கும் சிறு மலை தான். .


கொடைக்கானல் மலை அடிவாரத்தில், திண்டுக்கலுக்கும் கோடை ரோடுக்கும் இடையே உள்ளது இந்த ஊர். இந்த ஊரில் இருக்கும் சிறுமலை, ஏலகிரி போல 21 கொண்டை ஊசிகளுடன் கூடிய, சிறிய, அழகிய மலை. இங்கு மலையின் மேலே நல்ல குளிராக இருக்குமென்றும் கூறினர். திண்டுக்கல் மற்றும் அம்பாதுரையில் உள்ள வி.ஐ. பி கள் மலை மேல் நிறைய நிலம் வாங்கி வைத்து, தாங்கள் சென்று தங்க மட்டும் சில கெஸ்ட் ஹவுஸ் கட்டி வைத்துள்ளனராம். மலை மேலே செல்ல அரசு பேருந்து உள்ளது. ஆனால் நாம் சென்று தங்க வேறு லாட்ஜ் எதுவும் கிடையாது. அங்கு கெஸ்ட் ஹவுஸ் வைத்திருக்கும் நபர்களை தெரியுமானால், அவர்கள் மூலம் அங்கு தங்கலாம்.

சிறுமலைக்கு கீழ் விவசாயம் செய்ய நல்ல சூழல் நிலவுகிறது. எனவே மலையின் கீழ் உள்ள அம்பாதுரையில் பல்வேறு பழம், பூ போன்றவை சாகுபடி செய்யப்படுகிறது.

திராட்சை தோட்டம் முதன் முதலில் பார்த்தது இங்கு தான். அடடா ! என்ன அழகு !! கொடி போல் வளரும் திராட்சை தோட்டத்தில், கொடி படர ஊன்றப்பட்ட குச்சிகளை தவிர  தரையில்  எதுவும் இல்லை.

நாளா புறமும் குச்சிகள் இருக்க, அதன் மேல் பசுமையாக கொடிகள்.. ஆங்காங்கு திராட்சைகள். பார்க்கவே அற்புதமாக உள்ளது. திராட்சை தோட்டம் பார்க்காத நண்பர்கள் இந்த வீடியோ அவசியம் பாருங்கள்.



இங்கு கருப்பு திராட்சை தான் சாகுபடி செய்கிறார்களாம். பச்சை  திராட்சை  சாகுபடி செய்ய செலவு அதிகம் ஆகுமாம். திராட்சை தவிர அவரை, ரோஜா, துளசி (ஆம்... துளசி) இவையும் சாகுபடி நிறையவே நடக்கிறது.

இங்குள்ள பல்வேறு தோட்டங்களிடையே பயணித்தது ஒரு மறக்க முடியாத அனுபவம். இந்த மரத்தை பாருங்கள்



பத்து கை ராவணன் போல் என்ன ஒரு அழகு !

நாங்கள் பார்த்த தோட்டத்தில் சில கின்னி கோழிகள் சுதந்திரமாய் சுற்றி திரிந்தன.



அவை ஏன்   வளர்க்கிறீர்கள் என கேட்ட போது, தூரத்தில் ஆள் வந்தாலும் இவை சத்தம் எழுப்பும் என்றும் அப்போது தோட்டத்தின் உள்ளே உள்ளவர்கள் வெளியே வந்து யார் வந்துள்ளார் என பார்க்கலாம் என்றும் கூறினார். திருட்டு நடக்காமல் தடுக்க இவை உதவுகின்றன !

செல்லும் வழியில் சிடி-க்களை நூலில் கட்டி வயலில் கட்டியிருந்ததை காண முடிந்தது. இவற்றிலிருந்து வரும் வெளிச்சம் பார்த்து விட்டு காக்காக்கள் பழங்களை கொத்தாதாம் ! கிராமத்து மக்களிடம் கற்று கொள்ள எவ்வளவோ இருக்கு !

அம்பாத்துரையில் மீன்கள் செம பிரெஷ்-ஆக கிடைக்கின்றன. அருகில் இருக்கும் டேமில் மீன் பிடித்து உடனே ஊருக்கு விற்பனைக்கு வருவதால் விலை குறைவாக ஆனால் புதிதான மீன்கள் எங்கும் கிடைக்கின்றன.

அம்பாதுரையில் ஒரு தோட்டத்தில் உள்ள அழகிய குளம் இது



***********
அம்பாத்துரை மற்றும் அதை சுற்றி நிறைய தோட்டங்களும் காடுகளும் இருப்பதால் மக்கள் மிக சாதாரணமாக வேட்டைக்கு செல்கின்றனர்.
"ஏம்பா நேத்து (வேட்டைக்கு) போனியே? என்ன கிடைச்சுது?" என பரஸ்பரம் விசாரித்து கொள்கிறார்கள். முயல், காட்டு பன்றி போன்றவை வேட்டையில் கிடைக்க, தம் குடும்பத்துக்கு எடுத்து கொண்டு மற்றதை விலைக்கோ, நண்பர்களுக்கோ கொடுத்து விடுகிறார்கள். வெய்யில் காலம் என்றால் விலங்குகள் உள்ளே சென்று பதுங்கி விடும் என்றும் மழை காலத்தில் தான் நன்கு வெளியே வரும், அப்போது எளிதாக வேட்டை ஆடலாம் என்று கூறினர்.

 இந்த ஊரிலேயே தயாரிக்கப்படும் குளிர் பானம் "காதலோ". இதனை ஊர் மக்கள் காதலோ என சொல்லாமல், "லவ்வோ" என சொல்கின்றனர்.



திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் ரோட்டின் மேல் இந்த ஊர் அமைந்துள்ளதல்லவா? இந்த ரோடு சில வருடங்களுக்கு முன் தான்   தங்க நாற்கர சாலை ஆகியுள்ளது.


இதன் பின் நிலங்களின் விலை இங்கு கிடு கிடு என ஏறிவிட்டதாம். முன்பு ஐந்து லட்சத்துக்கு ஒரு ஏக்கர் விற்ற நிலங்கள் மூன்று வருடங்களில் 75 லட்சம் என்றால் பார்த்து கொள்ளுங்கள் ! இதிலிருந்து அறியும் நீதி: உங்களுக்கு தெரிந்து எங்கேனும் நேஷனல் ஹை வே வர போகிறது எனில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கி விட்டால் அடுத்த சில ஆண்டுகளில், ஹை வே வந்த பிறகு பல மடங்கு லாபம் ஈட்டி விடலாம் !
****************

அதீதம் ஏப்ரல் 13 இதழில் வெளியானது !

****************
அடுத்த நிறைவு பகுதியில் :

திண்டுக்கல் பெயர் காரணம் 


காந்தி கிராமம் - ஒரு "மாதிரி" கிராமம் 


புடவைக்கு புகழ் பெற்ற சின்னாளபட்டி 


கே. ஆர் விஜயாவுக்கு ஏரோபிலேன் வாங்கி தந்த தொழிலதிபர்
****************
டிஸ்கி: நண்பர்களே நாளை ஞாயிறு காலை 9 மணிக்கு சத்யம் தொலைக்காட்சியில் கிரிக்கெட் குறித்த விவாதத்தில் நானும் பதிவர் சிவகுமாரும் பங்கேற்கும் நிகழ்ச்சியை அவசியம் கண்டு, தங்கள் கருத்துகளை பகிருங்கள்

Friday, April 27, 2012

டிவியில் கலக்கி வரும் பதிவர்கள்; உங்களுக்கும் வாய்ப்பு !


தமிழகத்தில் சமீபத்தில் துவக்கப்பட்ட செய்தி சேனல் சத்யம் தொலைக்காட்சி. இத்தொலைக்காட்சியில் தினசரி காலை ஒன்பது முதல் பத்து மணி வரை ஏதேனும் ஒரு நல்ல தலைப்பில் ஒரு மணி நேரம் விவாதம் நடக்கிறது. இந்த விவாதத்தில் தொடர்ந்து நம் பதிவர்கள் பலர் பங்கேற்று அசத்தி வருகிறார்கள்.


இரு நாட்களுக்கு முன் கிழக்கு பதிப்பகம் பத்ரியும் டோண்டு ராகவனும் " சாதி வாரி கணக்கெடுப்பு தேவையா?" என்கிற தலைப்பில் விவாதம் செய்தனர். நேற்று ஏப்ரல் 26 அன்று சென்னை யூத் பதிவர்களின் வழிகாட்டி, பிரபல தொழிலதிபர், பதிவர், கவிஞர், எழுத்தாளர் KRP செந்தில் அவர்களும் அஞ்சாசிங்கம் செல்வினும் " காதல் திருமணம் சிறந்ததா? பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் சிறந்ததா? " என்று விவாதம் செய்தனர். நீங்கள் இதனை பார்க்க தவறி இருந்தால் விரைவில் நிகழ்ச்சி யூ டியூப் மூலம் வலையேற்றம் செய்யப்படும் என தொழிலதிபர் KRP செந்தில் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து வரும் ஞாயிறு காலை ஒன்பது முதல் பத்து மணி வரை "கிரிக்கெட் ஆர்வம் இந்தியர்களுக்கு நல்லது செய்கிறது/ தேவையில்லை; கேட்டது செய்கிறது" என பதிவர் மெட்ராஸ் பவன் சிவகுமாரும், வீடுதிரும்பல் மோகன் குமாரும் பங்கேற்கிறார்கள்.

அடியேன் "கிரிக்கெட் ஆர்வம் இந்தியர்களுக்கு தேவை; அது நல்லது செய்கிறது" என்று பேச உள்ளேன். வீடுதிரும்பலை தொடர்ந்து வாசிக்கும் தங்களிடம் இரு கோரிக்கை :

i ) ஞாயிறு காலை என்பதால் வீட்டில் நீங்கள் இருக்க நிச்சயம் வாய்ப்பு உண்டு. எனவே நிகழ்ச்சியை பார்த்து உங்கள் கருத்தை பகிருங்கள். மேலும் நிகழ்ச்சியில் போன் மூலமும் தொடர்பு கொண்டு கேள்வி கேட்கலாம். தற்போது தான் பிரபலமடையும் டிவி என்பதால் எளிதில் தொலைபேசி லைன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் குரலை நீங்கள் டிவியில் கேட்க, உங்கள் நண்பர்களுடன் போனில் பேச, எங்களை கலாய்க்க ஒரு வாய்ப்பு !
ஒரு வேளை போனில் பேச முடியாவிடினும் கூட நிகழ்ச்சி பார்த்து விட்டு உங்கள் கருத்தை கூறுங்கள்

 ii) "கிரிக்கெட் ஆர்வம் இந்தியர்களுக்கு தேவை; அது நல்லது செய்கிறது" என்ற தலைப்பிற்கு நல்ல பாயிண்டுகள் இருந்தால் பின்னூட்டத்திலோ, snehamohankumar@yahoo.co.in என்கிற எனது மெயில் ஐ.டி க்கோ சொல்லுங்கள்.

ஒரு நபரால் சில கோணங்களில் மட்டும் தான் யோசிக்க முடியும். உங்களின் வெவ்வேறு கருத்துகள் சேர்ந்தால் அது வாதத்துக்கு வலு சேர்க்கும். பல முறை டிவி நிகழ்ச்சிகளில் பேசும் போதும் பயன்படுத்தும் யோசனை தான் இது. நண்பர்கள் சொல்வதில் மனதுக்கு சரி என படுவதை நிகழ்ச்சியில் பேசுவது வழக்கம்.

நம்ம மெட்ராஸ் பவன் சிவகுமாரை நேரில் பார்த்து பேசிருக்கீன்களா? மனுஷன் ஆணிதரமா விவாதம் செய்வார். "வக்கீலா ஆகவேண்டிய ஆள்யா நீ" என அடிக்கடி சொல்வேன் நான். அவரோடு விவாதம் செய்வதை நினைத்தால் தான் basement ஆடுது !

எனவே அவருக்கு ஆதரவு பாயிண்டுகளாக தராமல் நமக்கு தேவையான பாயிண்டுகளை அவசியம் தாருங்கள் ! பின்னூட்டத்திலோ மெயிலுக்கோ உங்கள் கருத்துகளை எழுதுங்கள் !

*******

மேலும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சத்யம் தொலைக்காட்சியில் பேச உங்களுக்கு விருப்பமெனில் கீழ்க்காணும் பதிவர்களை தொடர்பு கொள்ளுங்கள்

அஞ்சாசிங்கம்: 9444125010
பிரபாகரன்: 8015899828
*******


சத்யம் சேனல் பலர் வீடுகளில் தெரியவே செய்கிறது. இந்த நிகழ்ச்சி பற்றி அறிந்த பின் எங்கள் டிவியில் தேட, அந்த சேனல் இருப்பது தெரிந்தது.

இன்று அல்லது நாளை சத்யம் டிவி எந்த சேனலில்/ எந்த எண்ணில் வருகிறது என்பதை உங்கள் டிவியில் பார்த்து வைத்து கொள்ளுங்கள். ஒரு வேளை உங்கள் வீட்டு டிவியில் சத்யம் டிவி வரவில்லை எனில் சத்யம் டிவி நிகழ்ச்சிகளை இணையத்திலும் பார்க்கலாம். அதற்கு இந்த சுட்டிக்கு செல்லுங்கள் .

இதுவரை அரட்டை அரங்கம், நீயா நானா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பேசி உள்ளேன். அங்கெல்லாம் பேச்சாளர்களே முப்பது பேருக்கு மேல் இருப்பர். நமக்கு பேசும் வாய்ப்பு குறைவாய் தான் கிடைக்கும். ஆனால் இந்த நிகழ்ச்சியில் தலைப்பை ஆதரித்து ஒருவரும், எதிர்த்து ஒருவரும் மட்டுமே பேசுகிறார்கள். ஒருங்கிணைப்பாளராக டிவி நிருபர் ஒருவர் உள்ளார். அவ்வளவு தான் ! நிகழ்ச்சியும் ஒரு மணி நேரம் வருவதால் நம் கருத்துகளை நிறைய சொல்ல வாய்ப்பு கிடைக்கும் !

உங்கள் ஆதரவையும் வாழ்த்துகளையும் எதிர்நோக்குகிறோம் !

மறந்து விடாதீர்கள் வரும் ஞாயிறு காலை ஒன்பது மணி: சத்யம் தொலைக்காட்சி !

Wednesday, April 25, 2012

வானவில் 85: ஐ.பி.எல் ஆச்சர்யம்-சென்னை கால் ஆட்டோ-இலவச லேப்டாப்

ஐ.பி.எல் ஆச்சரியங்கள்

ஐ.பி.எல் துவங்கும் முன் சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூர் ஆகிய நான்கு அணிகள் தான் நன்கு ஆடும் என நினைத்தோம் . ஆனால் இப்போதுள்ள நிலையில் டில்லி, ராஜஸ்தான், புனே ஆகிய அணிகள் நன்கு ஆடுகின்றன !

மலிங்காவுக்கு காயம் பட்டு ஆட முடியாதது மும்பைக்கு பெரும் பின்னடைவு. கொல்கத்தா மற்றும் சென்னையின் Form முன்னும் பின்னுமாய் உள்ளது. சென்னை வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம் என ஒரு வெற்றி ஒரு தோல்வி என்று போய் கொண்டுள்ளது

டில்லி செமி பைனல் செல்வது அநேகமாய் நிச்சயம். மற்ற அணிகளை சொல்ல முடியாத நிலை.

எதிர் பார்த்த படி நடக்கும் ஒரே விஷயம் பெங்களூருக்காக டீ வில்லியர்சின் அட்டகாச ஆட்டம் தான்.

நிற்க. மேட்சை பேப்பரிலும் இணையத்திலும் தான் அதிகம் follow செய்கிறேன். டிவியில் பார்ப்பதை பெரிதும் குறைத்து விட்டேன்.

இலவச லேப்டாப்


சென்னை கல்லூரிகளுக்கு இலவச லேப்டாப் தரும் பணி ஜரூராக நடக்கிறது. அரசு மற்றும் தனியார் கல்லூரியில் மூன்றாம்/ இறுதி ஆண்டு படிப்போருக்கு இது கிடைக்கிறது. மாணவர்களுக்கு கணினி பயன்பாடு கற்று கொள்ள உதவும் என்கிற அளவில் நல்லது தான். ( ஆனால் நம் இளைய சமுதாயம் இணையத்தை சேட் செய்ய தான் நிறைய பயன்படுத்துகிறது என்பது வேறு விஷயம்)

அரசு டிவியை ஆயிரம் ரூபாய்க்கு பலரும் விற்றது போல் லேப்டாப் வியாபாரமும் இனி நன்கு நடக்கும். உங்களுக்கு அவசரமாய் கணினி வாங்க வேண்டுமெனில் சற்று பொறுங்கள். ஐந்தாயிரம், ஆறாயிரம் ரூபாய்க்கு இந்த லேப்டாப்கள் விரைவில் விற்பனை துவங்கும்

நாட்டி- அஜூ கார்னர்

முன்பு நாட்டி கார்னர் எழுதியது நினைவிருக்கலாம். இப்போது நாட்டி- அஜூ சேர்ந்தே தான் லூட்டி அடிப்பதால் இருவரையும் பற்றி சேர்த்து தான் எழுத வேண்டியதாகிறது.

வெய்யில் அதிகம் என்பதால் தினம் குளிக்கின்றனர் நாட்டி- அஜூ இருவரும் ! ஒரு சின்ன இரும்பு வலை கூண்டில் வைத்து தான் குளிப்பாட்டுவோம். வெளியே சும்மா வைத்து குளிப்பாட்டினால், பறந்து போய் அருகிலுள்ள இந்தியன் டாய்லட்டில் விழுந்து விட கூடும் என்கிற பயமே காரணம் !

நாட்டிக்கு குளிக்க பிடிக்காது. ஓரமாக போய் ஒண்டி கொள்வாள். அஜூ செம ஜாலியாக குளிப்பான். கீழே நின்று கொண்டு தலையை தூக்கி முகத்தை நமக்கு காட்டி " தண்ணீர் ஊற்று" என காண்பிப்பான். Mug-ல் எடுத்து ஊற்றினால் வலிக்கும் என கைகளால் தான் தண்ணீர் எடுத்து எடுத்து ஊற்றுவோம்.

குளித்த பின் நாட்டியை மட்டும் சிறு துணி வைத்து துவட்டுவோம். அஜூ இன்னும் எங்கள் கைகளில் வர ஆரம்பிக்க வில்லை.

குளித்து உடல் நன்கு காய்ந்த பின் சிறு குழந்தைகளுக்கு பசிப்பது போல் நன்கு பசித்து இருவரும் சாப்பிடுவார்கள்

பதிவர் அறிமுகம்- நிரஞ்சனா


சுஜாதாவின் சிறுகதை ஒன்றை அடிக்கடி பலரிடமும் நினைவு கூறுவேன். கதை முழுதும் ஞாபகம் இருக்குமே தவிர அதன் தலைப்பு தெரியாது. அந்த சிறுகதையின் தலைப்பு " ஒரு சிக்கலில்லாத காதல் கதை" என நிரஞ்சனாவின் பதிவை வாசிக்கையில் அறிந்தேன். கதையை குறித்து விரிவாய் அறிய நிரஞ்சனாவின் இந்த பதிவை வாசியுங்கள்.

சுவாரஸ்யமாக எழுதுகிறார் நிரஞ்சனா. எல்லாரையும் அங்கிள் என்றும், சிஸ்டர் என்றும் கூப்பிடுவது வேடிக்கையாக இருக்கிறது :))

ரசித்த கவிதை

ஓடும் ரயிலில்
அடம் பிடித்து
வாங்கிய குழலில்
அதை விற்றவன்
வாசித்த பாடலை
சலிக்காமல்
தேடிக் கொண்டிருக்கிறது
குழந்தை - முகுந்த் ராஜ்

சென்னையில் கால் ஆட்டோ

நண்பர் ஒருவர் முக புத்தகத்தில் இந்த விளம்பரம் பகிர்ந்திருந்தார்.  

சென்னையில் கால் ஆட்டோ என்று தெரிந்ததும் மிக மகிழ்ந்தேன். இங்கு பகிரும் முன் சில விவரங்கள் கேட்டு பின் எழுதலாம் என நினைத்து கால் செய்தால் அந்த தொலை பேசி எண் வேலை செய்யலை. இதை நடத்துவது கேட்ஸ் இந்தியா என்கிற பெரிய நிறுவனம். இன்னும் இந்த சேவை தொடர்கிறதா, புது தொலைபேசி எண் என்ன தகவல்கள் தெரிய வில்லை. நண்பர்கள் தெரிந்தால் சொல்லவும்.

அட்சய திரியையும் அய்யாசாமியும்


நேற்று அட்சய திரியை ! அய்யாசாமி ஒரு நகைக்கடைக்கு தன் வண்டியில் சென்று இறங்கினார். இறங்கும்போதே ராஜ மரியாதை கிடைத்தது. மற்ற வண்டிகளை "உள்ளே போய் பார்க் செய்ங்க" என்று சொன்ன செக்யூரிட்டி, அய்யாசாமிக்கு மட்டும் கடை அருகில் இடம் ஒதுக்கி இறங்க சொன்னார். இவ்ளோ மரியாதைக்கு காரணம் அய்யாசாமி நகை கடைக்கு ஒரு பெரிய சூட் கேசுடன் சென்றது தான் ! படியேறி உள்ளே போகும் வரை அவர் அருகிலேயே ஒரு செக்யூரிட்டி முன் வாசல் வரை வந்தார். அனைவர் பார்வையும் சூட் கேஸ் மேல் தான் !

உள்ளே போன அய்யாசாமி நேரே சிட் செக்ஷன் சென்று, சீட்டு பணமான சில ஆயிரம் ரூபாய்களை கட்டினார். பின் வந்த வழியே நடையை கட்டினார்.

அப்போ சூட் கேஸ்? சம்மரில் அய்யாசாமி டூர் போக போறார். அதுக்கு சூட் கேஸ் கவர் வாங்க தான் அந்த சூட் கேசை எடுத்து வந்தது ! உள்ளே ஒண்ணுமில்லை !  " நல்லவேளை ! செக்யூரிட்டிக்கு நாம Chits செக்சன் தான் போனோம் என தெரியாது " என எண்ணியவாறு பக்கத்திலிருந்த சூட்கேஸ் கவர் கடையை நோக்கி வண்டியை விட்டார் அய்யாசாமி ...!

Tuesday, April 24, 2012

பயமுறுத்தும் மருத்துவர்கள்: இது நியாயமா?

ங்கள் அம்மாவுக்கு சமீபத்தில் உடல்நிலை மிக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்து, இருபது நாளுக்கு பிறகு டிஸ்சார்ஜ் ஆகி வீடு வந்தார். அம்மா இருந்த இந்த இருபது நாளில் டாக்டர் இரண்டு முறை "இன்னும் ஒரு நாள் கூட தாங்காது; அனைவருக்கும் சொல்லி அனுப்பி விடுங்கள்" என சொல்லி, வெவ்வேறு இடத்திலிருக்கும் மகன்-மகள் மற்றும் அம்மாவுடன் கூட பிறந்த தம்பி-தங்கைகள் என பலரும் ஓடி வந்தோம். இரு முறையும் அம்மாவுக்கு டாக்டர்கள் சொன்ன மாதிரி எதுவும் நடக்க வில்லை என்பது மகிழ்வான விஷயம் தான். இந்த இரு முறையும் ஐ. சி. யூ வெளியே சில நாட்கள் அட்டெண்டர் ஆக அமர்ந்திருந்த போது சில விஷயங்கள் கவனிக்க முடிந்தது.

ஐ. சி யூ க்கு மிக அதிகமாக வருவது ஹார்ட் அட்டாக் நோயாளிகள் தான். ஐ. சி. யூ க்கு அழைத்து வருவோரிடம் எந்த வித நம்பிக்கையும் மருத்துவர்கள் தருவதில்லை. " பிழைக்கிறது கஷ்டம் தான். பார்க்கலாம். " என்று தான் சொல்கிறார்கள். இது பற்றி விசாரித்த போது மருத்துவர்கள் பொதுவாய் பாசிடிவ் ஆக சொல்லவே மாட்டார்கள் என தெரிய வந்தது. பாசிடிவ் ஆக சொல்லி, பின்னர் வேறு ஏதாவது ஆகி, நோயாளி இறந்து விட்டால், உறவினர்கள் பிரச்சனை செய்து சண்டை போடும் நிகழ்வுகள் நடக்கிறதாம் !

அதுவே "பிழைக்கிறது கஷ்டம் " என்று கூறி விட்டு, பின் நோயாளி பிழைத்தால், " பிழைக்க முடியாத ஆளையும் பிழைக்க வச்சிட்டார் மகராசன்" என வாழ்த்தி விட்டு மகிழ்வோடு பில் கட்டி விட்டு போகிறார்களாம் !

மருத்துவர்களின் லாஜிக் இருக்கட்டும். அவர்கள் இப்படி நம்பிக்கை தராமல் பேசுவதால் என்ன நடக்கிறது தெரியுமா?

உறவினர்கள் அனைவரும் மிக கவலையுடன் அழுது புலம்பியவாறே இருக்கின்றனர். நோயாளியிடம் நேரடியாக கூறா விட்டாலும் தங்கள் உணர்வுகள் மூலம் "பிழைப்பது சிரமம்" என்கிற உணர்வை உடன் இருப்போர் நோயாளிக்கு தெரிவிக்கவே செய்கின்றனர்.

பிழைப்பது சிரமம் என எங்கள் அம்மாவை சொன்னதால், நடந்த சில விஷயங்களை கூறுகிறேன். எங்களில் சிலர் அம்மாவிடம் போய் "உனக்கு ஏதும் நிறைவேறாத ஆசை இருக்கா? எதுவா இருந்தாலும் சொல்லு. வேற யாரையும் பார்க்கணும் என நினைக்கிறியா?" என்றெல்லாம் கேட்டு கொண்டிருந்தோம். இது அம்மாவுக்கு, தான் இறக்க போவதால் தான் இப்படி கேட்கிறார்கள் என்பதை மறைமுகமாக தெரிவிக்கும் தானே?

நோயாளிகள் பிழைப்பது பாதி மருந்தினால் என்றால், மீதம் பெரும்பகுதி நம்பிக்கையில் மட்டுமே. இது மருத்துவர்களுக்கும் நன்கு தெரியும். இருந்தும் அவர்கள் நம்பிக்கையை தங்கள் சுய நலத்துக்காக குலைப்பது எப்படி சரியாகும்? மருத்துவர்கள் இதனை உணர்ந்து இப்படி அனாவசியமாக பயமுறுத்தாமல் இருப்பது நல்லது !

***
ங்கள் வீட்டுக்கருகில் நடந்த இன்னொரு சம்பவம் பகிர்கிறேன்

சிங்கப்பூரில் பெண் மருத்துவராக இருக்கிறார் அவர். அவர் கணவரும் குழந்தைகளும் மட்டும் இங்கு சென்னையில் உள்ளனர். பெண் மருத்துவரின் கணவர் பெயரை ரவி என்று வைத்து கொள்வோம். ரவிக்கு சர்க்கரை நோய் உண்டு. காலில் கொப்பலமும், தோல் பிரச்னையும் வந்துள்ளது. டாக்டரிடம் காட்ட, சர்க்கரை நோயால் தான் இப்படி நடந்தது என்றும் கட்டை விரலை ஆப்பரேஷன் செய்து எடுக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார் .

ரவி, சிங்கப்பூரிலிருக்கும் தன் டாக்டர் மனைவியிடம் இதை தெரிவித்துள்ளார். அவர் " கொஞ்ச நாள் பொறுங்கள் நான் இந்தியா வரும்போது பார்த்து கொள்ளலாம்" என சொல்ல, ரவியோ தான் பாட்டுக்கு அந்த ஆபரேஷனுக்கு உடன்பட்டு கட்டை விரல் அகற்றப்பட்டு விட்டது.

இனி தான் இருக்கு விஷயம் !!

கட்டை விரலை எடுத்த பின்னும் ரவிக்கு மீண்டும் மீண்டும் காலில் கட்டி மற்றும் தோல் பிரச்சனை வந்திருக்கிறது ! இன்னொரு டாக்டரிடம் காட்ட அவர் " சர்க்கரை நோய் அதிகமாகி விட்டது. இதய நோய் வந்து விட்டது. பை பாஸ் ஆபரேஷன் செய்ய வேண்டும் என கூறியிருக்கிறார். உடனே செய்யா விட்டால் பிரச்சனை ஆகி விடும் என்றும் கூறி இருக்கிறார்.

விஷயம் கேள்விப்பட்ட ரவியின் மனைவி சிங்கப்பூரிலிருந்து கிளம்பி வந்து விட்டார். அடுத்த சில வாரங்கள் இதற்காக பல மருத்துவர்களிடம் அலைந்து திரிந்து காலில் வந்தது தோல் வியாதி தானே அன்றி வேறு ஏதும் இல்லை என்று கண்டறிந்துள்ளார். தோல் மருத்துவர் தந்த மருந்து எடுத்து கொண்டதும், காலில் இருந்த கொப்பளம் மற்றும் தோல் பிரச்சனை முழுதும் சரியாகி விட்டது . ரவியின் கால் கட்டை விரல் போனது தான் மிச்சம் ! பை பாஸ் ஆபரேஷன் ஆகாமல் தப்பி விட்டார் ரவி !

நினைத்து பாருங்கள் ! தங்கள் சுய நலனுக்காக எப்படி என்ன ஆப்பரேஷன் செய்யலாம் என்று கணக்கு போடும் மருத்துவர்களும் இருக்கவே செய்கிறார்கள். குறிப்பாய் நீங்கள் தனியாகவோ, நிறுவனம் மூலமோ "இன்சூரன்ஸ் பாலிசி" வைத்திருப்பதாக சொன்னால் அவர்களின் அணுகுமுறை மற்றும் பேச்சு ரொம்பவே மாறி விடுகிறது.

கடவுளுக்கு இணையாக கருதக் கூடிய ஒரு தொழில் இருக்குமாயின் அது மருத்துவ துறை தான். அந்த துறையில் தான் இப்படி பட்ட புல்லுருவிகளும் உள்ளனர் !

நம்மை போன்ற மனிதர்களின் பயமே மருத்துவர்கள் பணம் செய்ய வைப்பாக அமைந்து விடுகிறது ! நண்பர்களே நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் ! குறிப்பாய் ஆபரேஷன் என்றால் இரண்டு அல்லது மூன்று ஒபினியன் வாங்காமல் முடிவு எடுக்காதீர்கள் !

**********
கீற்று  ஏப்ரல் 21 , 2012 இதழில் வெளியானது. 

Monday, April 23, 2012

ஓகே ஓகே வெற்றி பெற்றது எப்படி ?


வாங்க சார் வாங்க ; இது ஒரு கல் ஒரு கண்ணாடி பட விமர்சனம் தான். ஆனா அப்புடி சொன்னா நீங்க பாட்டுக்கு போய் கிட்டே இருப்பீங்கன்னு தெரியும். அதான் ஏதோ பெரிய ஆராய்ச்சி பண்ணி கண்டு பிடிச்ச மாதிரி " ஓகே ஓகே வெற்றி பெற்றது எப்படி?"ன்னு தலைப்பு வச்சா, கப்புன்னு நீங்க சிக்கிடீங்க. சரி வந்தது வந்துட்டீங்க விமர்சனத்தை படிச்சுட்டு செய்ய வேண்டிய முறையை (பின்னூட்டம், ஓட்டு,etc ) செஞ்சுட்டு போங்க ஓகே?

தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத கதைங்க. ஹீரோயினை பாத்தவுடன் ஹீரோவுக்கு லவ் வந்துடுது. அப்புறம் அவர் பின்னாடியே அலையிறார். ஹீரோவுக்கு ஒரு திக் பிரண்டு ! ஹீரோயின்,  ஹீரோ லவ்வை ஒத்துக்காம செமையா அலைய விடுறாரு. அப்புறம் லவ் பண்றாரு. திடீர்னு ரெண்டு பேருக்கும் சண்டை வந்துட, அப்பா பார்த்த மாப்பிள்ளையை கல்யாணம் பண்ண ஹீரோயின் ஒத்துக்கிறாரு . கட்டிக்க போறவன் கிட்டேயிருந்து ஹீரோ அவளை எப்படி அபேஸ் பண்ணார் அப்படிங்கறது தான் இது வரை சொல்ல படாத கதை !
*******
ஒரு படத்துக்கு கதை முக்கியமில்லை. ஹீரோ ஹீரோயின் அது கூட சுமாராவோ, கொடுமையாவோ இருந்தாலும் பரவாயில்லை. நல்ல திரைக்கதை, அட்டகாசமான காமெடி இவை இருந்தாலே மக்கள் மனம் விட்டு சிரித்து படத்தை ஓட வைத்து விடுவார்கள் எனபதற்கு இன்னொரு உதாரணம் ஓகே ஓகே.

ஹீரோ முதல் ஷாட்டில் தூக்கத்திலிருந்து எழுப்பப்படுகிறார். முதல் காட்சியில் சரி. அப்புறம் நிறைய காட்சியில் அப்படியே இருக்காரே ? ஏன் சார்? வித விதமான விலை உயர்ந்த கூலிங் கிளாஸ் போட்டு எப்போதும் கண்ணை மறைத்து கொள்கிறார் சத்யமில் டிக்கெட் கிழிக்கும் வேலை பார்க்கும் இந்த ஹீரோ. (தனது கண் சின்னதாய் இருக்கு என உதயநிதிக்கு ஏதும் காம்பிலக்சா தெரியவில்லை).


இந்த பாத்திரத்தில் ஜீவா அல்லது ஆர்யா (அதாவது இயக்குனர் ராஜேஷின் முதல் இரு பட ஹீரோக்கள்) நடித்திருந்தால் படம் இன்னும் ஹிட் ஆகியிருக்கும் என இதுவரை பல நண்பர்கள் சொல்லி விட்டனர். உண்மை தான். ஆனால் ஏறக்குறைய அதே மாதிரி பாத்திரத்தை மறுபடி அவர்கள் நடித்தால், backfire ஆக சான்ஸ் உண்டு. இந்த பாத்திரத்துக்கு எனது சாய்ஸ் கார்த்தி தான் ! சிறுத்தையில் சந்தானத்துடன் அடித்த லூட்டி போல இதில் இன்னொரு களத்தில் பின்னியிருப்பார்.

நிற்க. உதயநிதி அவ்வளவு மோசமாக நடிக்க வில்லை என்றும் சொல்ல தான் வேண்டும். விஜய் மற்றும் சூர்யா தங்கள் முதல் சில படங்களில் நடித்ததை விட நன்றாகவே நடித்துள்ளார். இன்னொரு விஷயம் இந்த படமே உதயநிதி ஹீரோ ஆக மட்டுமே எடுக்கப்பட்டது. இன்னொரு பெரிய ஹீரோ வைத்து எடுத்தால் இன்னும் சில கோடி அதிகம் கூட தயாரிப்பாளராக அவருக்கு கிடைத்திருக்கலாம். ஆனால் இங்கு முக்கியம் உதயநிதி அறிமுகம் தான். அது இப்போது ஒரு வெற்றி படத்தில் நிகழ்ந்து விட்டது. இனி ஆன்  ஸ்க்ரீனில் தன் தவறுகளை பார்த்து தெரிந்து கொண்டு மாற்றி கொண்டால் உதயநிதி நிச்சயம் ஒரு ரவுண்ட் வரலாம் (தொடர்ந்து நடிப்பதானால் அவர் உடனே டான்ஸ் கிளாஸ் போவது அவசியம். ஜிம்மில் செய்யும் எக்சர்சைஸ் மாதிரி கையை தூக்கி தூக்கி அவர் ஆடும் ஸ்டெப்சுக்கு தியேட்டர் செமையாக கை தட்டி சிரித்து மகிழ்கிறது !)

அடுத்து சந்தானம் ! "ஹாய் டூட்" என சந்தானம் குரல் தொலைபேசியில் ஒலிக்க துவங்குவது முதல் கடைசி காட்சி வரை சந்தானத்துக்கு கிடைக்கும் கை தட்டலையும் சிரிப்பொலியும் சமீபத்தில் எந்த படத்திலும் காண வில்லை. இந்த படம் இந்த அளவு ஓட இவரும் இயக்குனர் ராஜேஷும் தான் மிக முக்கிய காரணங்கள் ! இவருக்கு கிடைத்த டயலாக்ஸ், அதை அவர் பேசும் வாய்ஸ் மாடுலேஷன், அவரது முக பாவங்கள் என அவர் வரும் எந்த காட்சியிலும் நாங்கள் சிரிக்காமல் இருக்க வில்லை. நான் தான் இப்படி சிரிக்கிறேன் என நினைத்தால், மனைவியும் மகளும் முன் சீட்டில் விழுந்து எழுந்து சிரித்து கொண்டிருந்தனர். சான்சே இல்லை ! உள்ளத்தை அள்ளி தா படத்தில் கவுண்டர் அசத்தியது போல் இப்படத்தில் அசத்தியிருக்கிறார் சந்தானம் ( இந்த படமும் அந்த பட Genre தான் .. நோ கதை ஒன்லி காமெடி)

துவக்கத்தில் சந்தானம் வர போகிறார் என சொல்லிவிட்டு ரோடில் வரும் BMW காரை காட்டுகிறார்கள். அட சந்தானம் இதிலா வருகிறார் என நினைத்தால் சில நொடிகள் கழித்து அந்த BMW கார் ஸ்க்ரீனின் ஒரு புறமாக செல்ல, அதன் பின்னே வரும் சந்தானத்தின் ஜானவாச கார் தெரிகிறது. சிரிப்பில் தியேட்டர் குலுங்குகிறது ! இது மாதிரி காட்சிகளை visualize செய்த இயக்குனரை பாராட்டியே தீர வேண்டும் !

ஹீரோ சந்தானம் காசில் கோட் வாங்க, அப்போது சந்தானம் தரும் முக பாவங்கள் செம ! அது போல நான்ஸ்டாப்பாக சிரிக்க வைக்கும் சில காட்சிகள்.... ஏரோபிளேனில் ஏறி விட்டு ஹீரோ மற்றும் சந்தானம் அடிக்கும் லூட்டி, போலிஸ் ஸ்டேஷன் மற்றும் சாமியார் காட்சிகள் ஹீரோயின் வீட்டுக்கு போய் அவர் அம்மாவிடம் " நீங்க அருமையா வயலின் வாசிப்பீங்களே அதுக்கு நான் ரசிகன்" என சந்தானம் பேசுவது இப்படி அடுக்கி கொண்டே போகலாம்...

ஒரு காட்சியில் சந்தானமும் உதயநிதியும் காரில் செல்ல, சந்தானம் " ஒன்னை அவள் நிறைய அவமான படுத்திட்டா; இன்னும் நீயெல்லாம் எதுக்கு வாழறேன்னே தெரியல" என்று சொல்ல, ஹீரோ காரை நிறுத்த சொல்லி விட்டு மறுபுறம் இருக்கும் பீச்சை நோக்கி ஓடுகிறார். சந்தானமும் பின்னால் " டேய் ஓடாதே. தற்கொலை பண்ணிக்காதே" என்று கத்தி கொண்டே ஓட, "யாருடா தற்கொலை பண்ணிக்க போறா? நான் ஒன்னுக்கு அடிக்க போறேன் " என ஹீரோ கத்தி கொண்டே ஓட, சந்தானமும் இரு நானும் வர்ரேன் என சொல்லி கொண்டு ஓட இன்டர்வெல் ப்ளாக் விடுகிறார்கள் ! படம் முழுக்க இது மாதிரி சின்ன சின்ன காமெடிகள் தான்.

இங்கே நாமும் ஒரு இன்டர்வெல் விடுகிறோம் !

*****************
தியேட்டர் நொறுக்ஸ்

ஐநாக்ஸில் சனி காலை ஒன்பதரை மணி காட்சி பார்த்தோம். நான்கு நாள் முன்னர் ஆன்லைனில் பார்த்த போது மற்ற காட்சிக்கு ஐநாக்ஸில் டிக்கெட் இல்லை !

ஐநாக்ஸில் இன்டர்வெல் மிக கொஞ்ச நேரமே விடுகிறார்கள். பாத் ரூம் போய் விட்டு அதிக கூட்டம் இல்லாத கடையில் ஏதேனும் ஒரு பொருள் வாங்கி கொண்டு உள்ளே வந்தால் அதற்குள் படம் போட்டுடுறாங்க !

சந்தானம் பேசும் பல இடங்களில், ஜோக் முடித்ததும் நிஜ விசில் வைத்து ஊதி கொண்டிருந்தனர். ஆனால் அது தொந்தரவாக இல்லாமல் ஜாலி ஆக தான் இருந்தது. "வேணாம் மச்சான் வேணாம் இந்த பொம்பளை காதலு" பாட்டுக்கு இருந்த சத்தத்தையும் விசிலையும் பார்த்தால் "நாம் பார்ப்பது ஐநாக்ஸ் தானா ? லோக்கல் தியேட்டரா? " என சந்தேகம் வந்து விட்டது !

ஷூட்டிங்கின் போது நடந்த சொதப்பல்களை,படம் முடிந்த பின் காண்பிக்கிறார்கள். பொதுவாய் படம் முடியும் முன் பலரும் எழுந்து வெளியே போய் விடுவார்கள். இங்கு படம் முடிந்து அந்த குட்டி குட்டி Blooper சீன்கள் முடியும் வரை ஒருத்தர் கூட எழுந்து போகலை ! ஒரு நல்ல காமெடி படத்தை மக்கள் எப்படி கொண்டாடுகிறார்கள் பாருங்கள் ! *****************
ஹீரோயின் சந்தானம் சொல்ற மாதிரி "வெறும் பச்சை மைதா மாவு " தான் ! இன்னொரு காட்சியில் ஒருவர் அவரை ஆண்டி என்கிறார். ஹன்சிகா பேசாமல் இருந்தால் அழகு ! பேச ஆரம்பித்தால் அவர் பேசும் வசனத்துக்கும் முக பாவத்துக்கும் சம்பந்தமே இல்லை. இத்தனைக்கும் சின்ன வயசிலிருந்து நடிக்கிறாராம் ! மொழி புரியாமல் நடிப்பதன் அவஸ்தை இது ! குண்டாக இருப்பது தெரிய கூடாது என பெரும்பாலும் முழு கை அல்லது முக்கால் கை சட்டை போடுகிறார். (பாடல்களில் வழக்கம் போல் தாராளம்) குஷுபுவுடன் இவரை ஒப்பிடுவது சரியல்ல. குஷ்பூ துவக்கத்திலிருந்தே ஓரளவு நடிக்க தான் செய்தார்.

ஸ்னேஹா ஒரு காட்சியில் ஏர் ஹோஸ்டஸ்சாக வருகிறார். அப்போது அவரை பார்த்து ஜொள்ளு விடுவது ஹீரோவும் சந்தானமும் மட்டும் அல்ல, நாமும் தான். படம் முழுக்க இவரே ஹீரோயினா நடிச்சிருக்கலாம் என தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை !

படத்தில் ஹீரோவுக்கு தண்ணி பாட்டிலின் ஸ்மெல் பார்த்தாலே செம கிக் ஏறி விடுவதாக காண்பித்திருப்பது செம ! நிஜத்தில் நாம் அவ்வப்போது அத்தகைய நண்பர்களை பார்த்திருப்போம் ! இந்த பார்ட் குறிப்பாய் பதிவர் கார்க்கியின் ஏழு பாத்திரத்தை நினைவூட்டுகிறது !

வசனங்கள் பல இடத்தில் சிரிக்க வைக்கிறது. "பெண்கள் ரோடில் ஏன் எப்போதும் முகத்தை மூடி கொண்டு தீவிர வாதி மாதிரி போறாங்க?" என்ற கேள்வியும் அதற்கான பதிலும் இளைஞர்களை செமையாக குஷிப்படுத்துகிறது !

படத்தின் ஆச்சரியங்களில் ஒன்று அந்த காமெடி ஹீரோயின் ! அழகாய் தெரிய கூடாது என அவருக்கு பல்லில் கிளிப் மாட்டி விட்டுள்ளனர். இளைய காமெடி நடிகை என ஆர்த்தி மட்டுமே உள்ள நிலையில் நிச்சயம் இவர் ஹிட் ஆகி விடுவார். நடிப்பில் முதல் படம் மாதிரியே தெரிய வில்லை. குட் !

பின்னணி இசையில் காமெடி சீனுக்கு ஹாரிஸ் செம சீரியஸ் பின்னணி இசை தருவது நன்கு எடுபடுகிறது. பாடல்கள் அவசியமே இல்லை எனினும் கேட்க கேட்க ஓகே ஆகி விடும் ! டிரைய்லரில் கேட்டு கேட்டே பாடல்கள் நமக்கு பழகியவை ஆகி விட்டன !

அகிலா அகிலா பாட்டில் அனைவரும் ஒரு மாதிரி ஆட, ஸ்க்ரீன் ஓரமாய் ஒரு டான்சர், தனியாய் தான் பாட்டுக்கு கூத்து அடித்து கொண்டே இருப்பது கியூட் !

சென்னை பிரியர்களுக்கு இந்த படம் நல்ல ட்ரீட். டைடல் பார்க் Overbridge, மயிலாப்பூர், மெரீனா பீச் என சென்னையின் பல இடங்களை திரையில் காண மகிழ்வாய் உள்ளது.

சண்டை ஏதும் இல்லை என்பது பெரிய ஆறுதல் ! நெளிய வைக்காமல் குடும்பத்துடன் பார்க்கிற மாதிரி இருப்பது படத்தின் நல்ல விஷயம்.

படத்தின் மைய கதை, காதலர்கள் சேர்வார்களா என்பது பற்றியெல்லாம் எந்த கவலையும் இன்றி அடுத்து எப்ப சிரிக்கலாம் என்கிற ஒரே எண்ணத்தோடு தான் படம் பார்க்கிறோம்.

இயக்குனர் ராஜேஷ், ஒரே கதையை வைத்து கொண்டு, ஒவ்வொரு படத்திலும் தன் முந்தைய பட வெற்றியை தாண்டி விடுகிறார் என்பது ஆச்சரியமான விஷயம் ! இப்படம் கோடையில் வெளியானதால் முதல் இரண்டு படங்களை நிச்சயம் பீட் செய்யும். சந்தானம் இன்றி இவர் படம் எடுப்பாரா, எடுத்தால் எப்படி இருக்கும் என்பது முக்கியமான கேள்வி !

சீரியசாக யோசிக்காமல் கொடுத்த காசுக்கு சிரிக்கணும் என்கிற முடிவோடு போனால் நிச்சயம் சிரித்து ரசிக்கலாம் !

ஓகே ஓகே சென்று ....வென்று வாருங்கள் !

Saturday, April 21, 2012

ஐடி முடித்தவுடன் வேலையில் சேர்வது எப்படி?


கல்லூரி புராஜக்டுகளும், சர்டிபிகேட் படிப்புகளும் வெற்றியின் மாஜிக் ஃபார்முலா!

முத்து ராமலிங்கம்   புராஜக்ட் மானேஜர் - மெட்லைஃப் - நியூயார்க்

*************
நண்பர் முத்து ராமலிங்கம் Facebook மூலம் அறிமுகமானவர். கல்லூரி மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பயன் தரும் இந்த பேட்டி கம்பியூட்டர் உலகம் மாத இதழுக்காக அவர் தந்தது. அவர் அனுமதியுடன் இன்னும் நிறைய இளைஞர்களுக்கு சேர வேண்டும் என்கிற எண்ணத்தில் இங்கு பகிரப்படுகிறது
*************
டி துறையில் அடிப்படை தெரிந்திருந்தாலே, கை நிறைய சம்பளம் என்கிற காலம் போயே போச்சு. இப்போது அனுபவஸ்தர்களுக்கு மட்டுமே அழைப்பு. ஐடி துறை தவிர அதைச் சார்ந்த வேறொரு துறை பற்றிய அறிவும் இருப்பவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு. ஆனால் ஒரு மாணவன் எப்படி அனுபவஸ்தனாக கல்லூரியை விட்டு வெளி வர முடியும்? ஐடி படிக்கிற மாணவன், வேறொரு துறையின் அனுபவத்தை பெறுவது எப்படி? ஐடி மாணவன் படிப்பு முடித்தவுடனே வேலை வாய்ப்பு பெறுவது எப்படி?

மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இந்தக் கேள்விகளுக்கு மெட்லைஃப், நியூயார்கிலிருந்து பதில் சொல்லியிருக்கிறார் திரு. முத்து ராமலிங்கம்

சம்பிரதாயமான ஆனால் அவசியமான கேள்வி.  உங்களைப் பற்றி சொல்லுங்களேன்.

படித்தது டிப்ளோமா மற்றும் BCA பட்டப் படிப்பு. 15 சான்றிதழ் படிப்புகள். (15 International Certificates) IT இல் கடந்த 12 வருடங்களாக வேலை செய்கிறேன். என்னுடைய முதல் வேலையாக சாதாரண ஹார்ட்வரே எஞ்சினியராக ஆரம்பித்தேன். தற்போது இங்கு ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ப்ராஜெக்ட் மேனேஜராக வேலை செய்கிறேன்

உங்களுடைய பணி எப்படிப் பட்டது?

நிறுவனங்கள் உபயோகப் படுத்தும் மென்பொருள்கள், ஹார்ட்வேர்,நெட்வொர்க், பாலிசி மற்றும் வழிமுறைகளை பின்பற்றி தகுந்த (Security) பாதுகாப்பு முறைகளை ஏற்படுத்திக் கொடுத்து கண்காணிப்பதே என் வேலை. செக்யூரிட்டி என்றதும், போலீஸ் போல யூனிஃபார்ம் போட்டுக் கொண்டு, கையில் துப்பாக்கியுடன் வாசலில் நிற்கிற வேலை என்று நினைத்துவிடாதீர்கள் .

டேட்டா செக்யூரிட்டின்னு சொன்னா, ஏதோ யூனிஃபார்ம் மாட்டின அமெரிக்க காவல்காரன்னுதான் எங்கம்மாவும், சொந்தக்காரங்களும் நினைக்கறாங்க..(மீண்டும் சிரிப்பு). அவங்க  அப்படி நினைக்கறதுல தப்பு இல்ல. ஆனா மாணவர்களுக்கே ஐடி துறை பற்றிய புரிதல் கம்மியா இருக்குன்னு நினைக்கறேன்.

மாணவர்கள் ஐடி துறையைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளவில்லைன்னு சொல்றீங்களா?

ஆமாம். ஐடி தொடர்பான படிப்பு என்றால், ஹார்டுவேரா? சாஃப்டுவேரா? என்று இரண்டே கேள்விகளைத்தான் கேட்கிறார்கள். ஆனால் ஐடி துறை இப்போது இந்த இரண்டையும் எப்போதோ தாண்டி மிகப் பரவலாகிவிட்டது. ஹார்டுவேர் என்று எடுத்துக் கொண்டால் Networking, Routing, Firewall என்று நீண்டு கொண்டே போகும். அதே போல சாஃடுவேர் என்றால் Coding, Tester, Database Administrater என்று ஏகப்பட்ட பிரிவுகள். மாணவர்களுக்கு இதில் எது தனக்கு விருப்பம் என்பதை படிக்கும்போதே உணர்ந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப சான்றிதழ் (Certificate) படிப்புகளையும் முடிக்க வேண்டும்முன்பெல்லாம் BCA, MCA, BE Computer Science முடித்தாலே வேலை கிடைத்துவிடும். ஆனால் தற்போதைய நிலை வேறு. மாணவர்களுக்கு அவர்களுடைய டிகிரி தவிர, சான்றிதழ் படிப்புகளும் கட்டாயம் தேவைப்படுகிறது.

சான்றிதழ் (Certificate) படிப்புகள் என்றால் என்ன?

முன்பு பட்டங்களை தகுதியாக வைத்து (Degree based) வேலை தந்தார்கள். தற்போது திறமைகளை அடிப்படையாக வைத்துதான் (Skill based) வேலை. CISCO, Microsoft, Linux, ORACLE போன்றவை மிகப்பெரிய சர்வதேச ஐடி நிறுவனங்கள். இவர்களுடைய மென்பொருள்கள் அல்லது வன்பொருள்கள்தான் தற்போது உலகெங்கும் பயன்படுத்தப்படுகின்றன. எனவே ஐடி துறையில் வேலை தேடும்போது, இவர்களின் மென்பொருள் அல்லது வன்பொருள் பற்றிய அடிப்படை அறிவைப் பெற வேண்டும். இதற்கென சான்றிதழ் (Certificate) தேர்வுகள் உள்ளன. உங்கள் விருப்பம் மற்றும் திறமைகளின் அடிப்படையில் அவற்றில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும். அதை எடுத்துக் கொண்டு ஜாப் மார்கெட்டுக்குள் நுழைய வேண்டும். போகப் போக ஒன்றுக்கு மேற்பட்ட சர்டிபிகேட்டுகளை படித்து வாங்கிக் கொள்ளலாம். இதற்காக கல்லூரி முடிக்கும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. கல்லூரியில் படிக்கும்போதே ஈடுபடலாம்.

சான்றிதழ் படிப்புகள் இவ்வளவுதானா? இன்னமும் இருக்கின்றனவா?

நான் சில உதாரணங்களைத்தான் கூறியுள்ளேன். இது போல எவ்வளவோ சான்றிதழ் படிப்புகள் உள்ளன. PCI for ATM Cards, .Net, Java, Share Point, Web logic என்று சொல்லிக் கொண்டே போகலாம். இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும். எப்போதெல்லாம் மைக்ரோசாஃப்ட், ஆரகிள் போன்ற நிறுவனங்கள் புதிய மென்/வன் பொருள்களை அறிமுகப்படுத்துகின்றனவோ அப்போதெல்லாம் அது குறித்த ஒரு சான்றிதழ் படிப்பும் உருவாகிவிடும். சுருக்கமாகச் சொன்னால் பட்டப்படிப்பு மட்டும் போதவே போதாது. சான்றிதழ் படிப்புகளை கட்டாயம் மாணவர்கள் படிக்க வேண்டும்.

சான்றிதழ் படிப்புகளைப் படித்தால் மைக்ரோசாஃப்ட், கூகுள், ஆரகிள் யாஹீ போன்ற நிறுவனங்களில் வேலை கிடைக்குமா?

நீங்கள் திறமைசாலியாக இருந்தால் நிச்சயம் கிடைக்கும். அதைவிட முக்கியமாக இன்று ஐடி என்பது எல்லா துறைகளிலும் இருக்கிறது. மருத்துவமனைகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், வங்கிகள், தொலை தொடர்பு துறை, விண்வெளி, சூப்பர் மார்கெட், விமானத் துறை, பங்கு வர்த்தகத் துறை என எல்லா துறைகளிலும் ஐடி உள்ளது. எனவே இவற்றில் ஏதாவது ஒரு துறை பற்றிய அடிப்படை அறிவும், அங்கு பயன்படுத்தப்படும் மென்பொருள், வன்பொருள் பற்றிய அறிவும் தற்போதைய தேவை. அதற்கேற்ப உங்கள் சர்டிபிகேட் படிப்புகளை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். அப்படிப் படித்தால் ஐடி துறையில் மட்டுமல்ல, ஐடியை சார்ந்திருக்கும் எல்லா துறைகளிலும் உலகமெங்கும் வேலை வாய்புகள் கொட்டிக் கிடக்கின்றன. இதைச் சொல்லிக்கொண்டிருக்கும் நான் தற்போது ஒரு சர்வதேச இன்சூரன்ஸ் நிறுவனத்தின் ஐடி துறையை நிர்வகித்துக் கொண்டிருக்கிறேன்.

ஆனால் ஒரு மாணவனுக்கு எப்படி புதிய துறை பற்றிய அடிப்படை அறிவும், அனுபவமும் கிடைக்கும்?

ஒரு துறை சார்ந்த அறிவும், அனுபவமும் பெற வேண்டும் என்பதற்காகத்தான் கல்லூரிகளில் புராஜக்ட் தருகிறார்கள். மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த துறையை தேர்ந்தெடுக்க வேண்டும். பிறகு அந்த துறையில் சிறந்த நிறுவனங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன்பின் அந்த நிறுவனத்தில் தற்காலிக பயிற்சிக்கு அனுமதி பெற்று அங்கு உள்ள ஐடி தேவைகளை உணர்ந்து அதில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் நான் பார்த்தவரை மாணவர்கள் இந்த பயிற்சியை சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை.

மாணவர்கள் தங்கள் புராஜக்டுகளை விளையாட்டாக எடுத்துக்கொள்கிறார்கள் என்று குற்றம் சுமத்துகிறீர்களா?

பெரும்பாலான மாணவர்கள் விளையாட்டாகத்தான் எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் புராஜக்டுகளை செய்வதே இல்லை. பணம் கொடுத்து வேறு யாராவது செய்து வைத்திருக்கும் புராஜக்டுகளை வாங்கி, தங்கள் பெயர் போட்டு கல்லூரியில் சமர்ப்பிக்கிறார்கள். தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கிறார்கள் என்பதை பல மாணவர்கள் உணர்வதே இல்லை. புதிதாக ஒரு துறை பற்றிய அடிப்படை அறிவு, நிறுவனங்கள் இயங்கும் விதம், அங்கு பயன்படுத்தப்படும் மென்/வன் பொருள்கள் பற்றிய அடிப்படை அறிவை பெறும் வாய்ப்பை தாங்களே உதறுகிறார்கள். பணம்பெற்றுக் கொண்டு அவர்களுக்கு புராஜக்டுகளை விற்கிற நிறுவனங்களை உதாசீனப்படுத்த வேண்டும். கஷ்டப்பட்டு எப்படியாவது தங்கள் புராஜக்டுகளை தாங்களே முடிக்க வேண்டும். அங்கு கிடைக்கும் அனுபவத்துக்கு ஏற்ப, விருப்பத்துக்கு ஏற்ப சான்றிதழ் படிப்புகளையும் படிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இல்லையென்றால் ஐடி படித்து விட்டு மாரக்கெட்டிங், கணக்கு வழக்கு என்று தொடர்பில்லாத வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடும். பல மாணவர்கள் இந்த தவறைத்தான் செய்கிறார்கள்.

மாணவர்கள் உங்கள் அறிவுரையை ஏற்று பணம் கொடுத்து புராஜக்ட் வாங்காமல், தாங்களே செய்து முடிப்பார்கள் என்று அவர்கள் சார்பில் உறுதி அளிக்கிறோம். ஆனால் புராஜக்டுகளால் ஒரு பிரயோஜனமும் இல்லையென்று சில மாணவர்கள் புலம்புகிறார்களே...

யார் சொன்னது? இன்றைக்கு உலகத்தையே கட்டிப் போட்டிருக்கும் ஃபேஸ்புக் ஒரு கல்லூரி புராஜக்ட்தான். கல்லூரி நண்பர்கள் அனைவரும் ஒரே இடத்தில் வந்து பேசிப்பழகும் எண்ணத்தில் உருவாக்கப்பட்டதுதான் ஃபேஸ்புக். மார்க் ஜீகர்பர்க் என்கிற மாணவர் உருவாக்கிய இந்த புராஜக்ட்தான் இந்த நூற்றாண்டின் மிகப் பரபரப்பான புராஜக்ட். இது போல ஒவ்வொரு மாணவரும் க்ரியேட்டிவாக புராஜக்டுகளை சிந்திக்க வேண்டும். அதை கூட்டாகச் சேர்ந்து செய்து முடிக்க வேண்டும். இன்று முதலீட்டாளர்கள் சிறந்த புராஜக்டுகளை தேடிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் செய்து முடிக்கிற புராஜக்ட் ஃபேஸ்புக் போல ஒன்றாக அமைந்துவிட்டால் . . . யோசித்துப் பாருங்கள். நாளை உலகமே உங்கள் பின்னால் அணிவகுக்கும்.

நீங்கள் கூறுவது போல புராஜக்டை முடித்துவிட்டு, சான்றிதழ் படிப்பையும் முடித்துவிட்டு பணிக்குச் செல்லும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு எப்படி இருக்கிறது?
நான் ஏற்கனவே சொன்னதுதான். இந்த இரு அடிப்படை தகுதிகள் இல்லாதவர்கள்தான் தடுமாறுவார்கள். மற்ற அனைவருக்கும் மிகப் பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது

பிசினஸ் அனலிஸ்ட் -->ப்ரீ சேல் --> டெவலப்மெண்ட் டீம் ---> டீம் மேனேஜர்  ---> ஹாக்கிங்  --->  சானிடைசிங்  --->  டெஸ்டிங்  --->  குவாலிட்டி அனலைசிஸ்.  இது போல ஒவ்வொரு நிறுவனத்திலும் பல பிரிவுகள் உள்ளன. ஒரு உதாரணத்திற்கு நான் இவற்றை குறிப்பிடுகிறேன். உங்கள் திறமையும், விருப்பமும் உங்களை தாமாகவே இதில் ஏதாவது ஒரு பிரிவில் கொண்டு சேர்க்கும்.

நீங்கள் பணிபுரியும் துறையான Information Security பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். Information என்று நீங்கள் எதை குறிப்பிடுகிறீர்கள்?

 Information என்று நான் குறிப்பிடுவது தகவல். ஐடிக்கும், தகவலுக்கும் என்ன தொடர்பு என்று தோன்றும். அதை விளக்கி விடுகிறேன். ஒரு நிறுவனத்திற்கும் எப்படி அசையும்/அசையா சொத்துக்கள் உண்டோ, அதே போல தகவல் என்ற மிகப் பெரிய சொத்து உண்டு. சொல்லப் போனால் தகவல்கள் இல்லையென்றால் நிறுவனங்கள் இல்லை, வியாபாரம் இல்லை. அவற்றை நிர்வகிக்க சிறந்த ஐடி சொல்யூஷன் இல்லையென்றால், அந்த தகவல்கள் பத்திரமாக இருக்கும் என்ற உத்தரவாதம் இல்லை.

எனவே தகவல்களை வாங்கவும், சேமிக்கவும், பாதுகாக்கவும் சிறந்த ஐடி வழிமுறைகள் (Process) வேண்டும். அவற்றை தகவல் திருடர்களின் வைரஸ் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கும் வழி முறைகள் வேண்டும்

மாணவர்களுக்கு புரியும் வகையில் கொஞ்சம் எளிமைப்படுத்துவோமே... எத்தனை வகையான தகவல்கள் உள்ளன? அல்லது தகவல்களை எப்படி பிரிக்கலாம்?

ஒரு நிறுவனமோ அல்லது வங்கியோ அல்லது ஒரு மருத்துவமனையோ அவர்களின் தேவைகளைப் பொறுத்து தகவல்களில் பல வகைகள் உள்ளன..

ஆனால் சில தகவல்கள் (General) பொதுவான தகவல்கள்உதாரணமாக வாடிக்கையாளர்களின் தகவல்கள், அவர்களின் தயாரிப்புகள், பணப் பரிமாற்றங்கள்,வேலை செய்யும் நபர்களின் தகவல்கள், அவர்களின் ஆண்டு திட்டங்கள், எதிர்கால திட்டங்கள் மற்றும் மிக முக்கியமாக அவர்கள் உபயோகிக்கும் கணினிவிபரங்கள். சில தகவல்கள் வெளி ஆட்கள் யாருக்கும் தெரியக் கூடாது(Confidentiality) கோகோ கோலா சீக்ரட் ஃபார்முலா போல. சில தகவல்கள் வாடிக்கையாளர்களுக்கு மட்டும்(Partially), உதாரணமாக ATM பாஸ்வேர்டுகள். சில தகவல்கள் பொதுமக்களுக்கு(Public), இதற்கு உதாரணமாக ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தின் விதம் விதமான திட்டங்கள். .

இவ்வாறு தகவல்களின் தேவைகள் பொறுத்து(Availability) அதன் பாதிப்புகள் (Impact) பொறுத்து தகவல்களை வகை பிரிக்கலாம்

நீங்கள் சொல்லும்போதுதான் தகவல்கள் மிக முக்கியமானவை என்று புரிகிறது. தகவல்களை ஐடி எப்படி பாதுகாக்கிறது?

மிகச் சுருக்கமாகச் சொல்கிறேன். Information Security என்பது பெரிய குடை போல. அதன் கீழ் பல பிரிவுகள் இயங்குகின்றன.  தகவல்களை சேதப்படுத்துவது அல்லது திருடுவதுதான் ஹாக்கர்கள் மற்றும் வைரஸ் பரப்புவர்களின் நோக்கம். அவற்றை தடுக்க மிக முக்கியமாக மூன்று பிரிவுகள் உள்ளன. 1. உடனடி காவல் (IR Instant Response Team). ஆம்புலன்ஸ் போல இயங்கும் பிரிவு 2. வரும் முன் காவல் (Before attack). தடுப்பு மருந்து கொடுப்பது போன்ற பிரிவு. 3. சேத மதிப்பீட்டுப் பிரிவு (Risk assesment)

Information Security Management - இந்த துறைக்கென்ற சான்றிதழ் படிப்புகள் உள்ளனவா?
எக்கச்சக்கமாக உள்ளன. CEH,CISM, CISSP என்று சிலவற்றைக் குறிப்பிடலாம்.

மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு உங்களுடைய ஸ்பெஷல் டிப்ஸ் என்ன?
மாணவர்கள் கல்லூரியில் தரப்படும் புராஜக்டுகளை காப்பியடிக்காமல், தாங்களே சிந்தித்து, தாங்களே செய்ய வேண்டும். ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தபின்னும் தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்க வேண்டும். நிறைய சான்றிதழ் படிப்புகள் உள்ளன. விருப்பம், திறமை மற்றும் அப்போதைய வேலை டிமாண்டுக்கு ஏற்ப படித்து தங்கள் பயோடேட்டாவை மதிப்பு மிக்கதாக மாற்றிக் கொள்ள வேண்டும். எப்போது ஆலோசனை தேவைப்பட்டாலும் என்னை hithisisms@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாக அணுகலாம். ஆல் பெஸ்ட்!

Related Posts Plugin for WordPress, Blogger...