Sunday, April 30, 2017

பாகுபலி -2 சினிமா விமர்சனம்

ந்திய திரை உலகில் இப்படி ஒரே படம் ...இரண்டு பாகங்கள் வந்திருக்குமா என தெரியவில்லை..பல செகண்ட் பார்ட் படங்கள் -முதல் படத்தின் வெற்றியால் அடுத்த சில ஆண்டுகள் கழித்து புதிதாய் - அதன் தொடர்ச்சியாய் வருவது போல புதிதாய் யோசித்து எழுதப்படும். இங்கு கதை எழுதிய போதே இரண்டு பாகம் என முடிவெடுத்து விட்டார் ராஜமவுலி. இதற்கு எவ்வளவு தைரியம் இருந்திருக்க வேண்டும் ! முதல் பாகம் தோல்வி என்றால் அடுத்த பாகம் பற்றி யோசித்திருக்கவே முடியாது !

நல்ல வேலையாக முதல் பாகம் வெற்றி..அதில் பதில் சொல்லாமல் விட்ட பல விஷயங்கள் -இரணடாம் பாகம் மேல் எதிர்பார்ப்பை கூட்டியும் விட்டது.

நிச்சயம் முதல் பாகத்தை விட அட்டகாசமான ஒரு படைப்பு.. பாகுபலி 2. முதல் பாகம் தந்த மகிழ்வை விட அதிக பட்ச சந்தோசம்..அனுபவத்தை தரவே செயகிறது (ஒரு சில விஷயங்களில் மட்டுமே முதல் பாகம் - இதை விட அருமை..என்னவென பின்னர் பார்க்கலாம் )

கதை

தந்தையை கொன்றவனை பழி வாங்கி, ராஜ்யத்தை மீண்டும் கைப்பற்றுவது தான் பாகுபலி 2

ஆனால் மேற்சொன்ன வரி -கடைசி 20 நிமிடம் மட்டுமே. 2 மணி நேரத்திற்கும் மேல் செல்லும் அமரேந்திர பாகுபலியின் கதை நெஞ்சை உருக்கி விடுகிறது

மேலோட்டமாக பார்த்தால் இப்படம் மகாபாரத்தில் இருந்து inspire ஆனதோ என யோசிக்க தோன்றுகிறது..ராஜ்யத்துக்காக சண்டையிடும் (ஒன்று விட்ட) சகோதரர்களின் போராட்டம் தான் இரு கதையிலும் மைய புள்ளி.

Related image

பிளஸ்

ஒன்றா இரண்டா..அடுக்கி கொண்டே போக வேண்டும்.

முதல் விஷயம்; கதை மற்றும் திரைக்கதை; அது பல்வேறு ஆச்சரியங்களை, துரோகங்களை, நேர்மையைச்  சொல்லி செல்கிறது. இந்த கதையால் தான் பிரம்மாண்டம் துவங்கி மற்ற அனைத்துமே சாத்தியம் ஆனது

அடுத்தது.. பிரபாஸ்..என்ன ஒரு அற்புதமான பாத்திரம்...அந்த தந்தையுடையது. சத்தியத்துக்காக  யாரையும் எதிர்க்கும், தன் ஆட்சியை கூட விட்டுத்தரும் இத்தகைய பாத்திரம்...வாவ் ! ப்ரபாஸ் அதற்கு மிக பொருத்தம்  !  சிரிப்பு, நக்கல், கோபம், ஏமாற்றம் இப்படி அத்தனை உணர்வுகளையும் காட்ட வேண்டிய கேரக்டர்..இதை விட அற்புத பாத்திரம் வாழ்நாளில் கிடைத்து விடாது

அனுஷ்கா .. அழகின் உச்சத்தில் படம் துவங்கி பெரும்பான்மை காட்சிகளும் எடுத்து விட்டனர். அனுஷ்கா கடைசியாய் அழகாய் இருந்த படம் " என்றே விளம்பரம் செய்யலாம் !

என்ன ஒரு அனாயசமான ஹீரோயின் அறிமுக காட்சி...அனுஷ்கா வரும் முதல் காட்சியிலேயே அசத்தி விடுகிறார். போலவே -தவறு செய்யும் எவரையும் எதிர்த்து கேட்கும் தைரியம்.. மாமியாருக்கும் இவருக்கும் நடக்கும் பல உரசல்களில் நெருப்பு பறக்கிறது

சத்யராஜ் - கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றான் என்பதே முக்கிய பேச்சாக இருந்தாலும் இப்படம்   பார்த்து முடிக்கும் போது நீங்கள் கட்டப்பாவை வெறுக்க மாட்டீர்கள்;விரும்பவே செய்வீர்கள். படத்தின் மிக முக்கியமான, ரசிக்க வைக்கும் காரெக்டர் சத்யராஜுக்கு.  அட்டகாசமாய் செய்துள்ளார்.

ரம்யா கிருஷ்ணன் பாத்திரம் பல வண்ணங்களில் பயணிக்கிறது. பிறந்த குழந்தையை ராஜாவாக அறிவிக்கும் காட்சியெல்லாம் goosepumps வரவைக்கும் காட்சிகள். இது போன்ற கைதட்டல் வாங்க வைக்கும் காட்சிகள் (யானை மீது பிரபாஸ் ஏறும் காட்சி. சண்டைக்கு நடுவே சில நொடியில் அனுஷ்காவிற்கு 3 அம்புகள் விட சொல்லித்தரும் காட்சி) ஆங்காங்கு வந்த வண்ணமே உள்ளது ....

Related image



பின்னணி இசை நன்று

ஒளிப்பதிவு  ஒவ்வொரு ஷாட்டிலும் தெறிக்கும் பிரம்மாண்டம்.. இவை இரண்டையும் ரசிக்க தியேயேட்டரில் பார்த்தால் மட்டுமே சாத்தியம்

ராணா -  அட்டகாசமான உடல்- நரித்தந்திரம்.. இந்த பாத்திரத்துக்கு வேறு எவரும் பொருந்தியிருக்கவே முடியாது

நாசரின் கர்ஜனையும் தந்திரமும்..படம் நெடுகிலும் வருகிறது (கடைசியில் இவரை மட்டும் கொல்லாமல் விடுகிறார்கள் . அடுத்த பாகம் பற்றி மிக லேசான எண்ணம் இருக்குமோ என்னவோ )

பாடல் காட்சிகளில் மட்டுமே டப்பிங் படம் என தெரிகிறது; மற்ற காட்சிகளில் உதட்டசைவு மிக சரியாக பொருந்துகிறது. இரு மொழி படம் போல....தமிழ், தெலுகு இரண்டு வசனமும் பேசி நடித்த மாதிரி இருக்கிறது லிப் சிங்க் பார்க்கும் போது !

மைனஸ் 

இந்த படத்துக்கு மைனஸ் சொல்ல மனமே வரவில்லை; இருப்பினும் ஒரு தலைப்பட்சமாக - சும்மாவே படத்தை உயர்த்தி பிடிக்கிறேன் என நினைக்க கூடாது எனதற்காக மட்டுமே சில மைனஸ் சொல்கிறேன்

பாடல்கள் ரொம்ப சுமார் (முதல் பார்ட் பாடல்கள் நன்று ) போலவே போர் காட்சிகளிலும் முதல் பாகம் இதை விட அருமை. (இருப்பினும் மீண்டும் சொல்கிறேன் .....சந்தேகமே இல்லை..முதல் பாகத்தை விட இரண்டாம் பாகமே சிறந்தது )

முதல் பாதியில் வரும் அனுஷ்கா சம்பந்தமான இரு பாடல்களையும் வெட்டி கடாசி விடலாம்.போர் !! இந்த இடங்கள் படத்தின் வேகத்தை லேசாய் குறைக்கிறது 

பைனல் அனாலிசிஸ் 

இப்படத்துக்கு 120/ 150 ரூபாய் தருவதும் சரி - பாடம் காண 3 மணி நேரம் செலவிட்டதும் சரி.. தவறு என நினைக்க வாய்ப்பே இல்லை !

ராஜமவுலி.. இவரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. இந்திய திரை உலகின் சிறந்த படங்களை பட்டியலிட்டால் பாகுபலியை ஒதுக்கி விட்டு பேசமுடியாது !

Awesome experience.. Emotional Roller coaster ride.. Cinema lovers.. Don't miss it.Watch it in theaters !

*****
அண்மை பதிவு

பவர் பாண்டி & காற்று வெளியிடை : சினிமா விமர்சனம்

Saturday, April 29, 2017

ஹோட்டல் ராஜ்புத்ரா, நங்கநல்லூர் ...A Must visit for foodies !

களுக்கு தேர்வு முடியும் நாளன்று ஹோட்டல் சென்று சாப்பிடுவது தொன்று தொட்டு வரும் வழக்கம். கல்லூரி சென்ற பின்னும் தொடர்கிறது

நங்கநல்லூரில் இன்னும் ஓரிரு வேலைகள்.. கூடவே இரவு சாப்பாடு ஹோட்டல் ராஜ்புத்ராவில்...

எங்கு இருக்கிறது?

நங்கநல்லூர் இரண்டாவது மெயின் ரோடு - ஹயக்ரீவர் கோயிலுக்கு சற்று க்ராஸாக எதிர் பக்கம் உள்ளது.கர்நாடகா வங்கி இருக்கும் அதே பில்டிங்.

என்ன விசேஷம்
வட இந்திய உணவுகள் தான் இங்கு ஸ்பெஷல்

நாங்கள் சாப்பிட்டது

Starters


பன்னீர் மலாய் டிக்கா

Main Course



Stuffed குல்ச்சா
பன்னீர்  பிரைட் ரைஸ்
கடாய்பன்னீர்

Dessert



Sizzling ப்ரவுனி with ஐஸ் க்ரீம 




சுவை 

அனைத்துமே ரசிக்கும் படி இருந்தது. சைட் டிஷ் ஆக வாங்கிய கடாய்பன்னீர்
 குறிப்பிட்டு சொல்ல வேண்டும். அதி அற்புத சுவை அது. நெய் அதிகம் விட்டிருக்கிறார்களா ... சுவை அள்ளுதே என மனைவியிடம் கேட்க அவர் " வெண்ணை நிறைய யூஸ் பண்ணிருக்காங்க " என்றார்

Sizzling ப்ரவுனி with ஐஸ்க்ரீம் சுவை சுமார் தான் . குறிப்பாக இந்த ஐஸ் க்ரீம் வாங்க காரணம் - சூடும் குளிரும் கலந்து -அது பொங்கி வரும் அற்புதம் தான். இங்கு ஏனோ அது அரை தூக்கத்தில் கொட்டாவி விடுகிறது. சுவையில் பழுதில்லை ( இந்த ஐஸ்க்ரீம் வேளச்சேரி ஸைடூனில்  தாறு மாறாய் இருக்கும்)

விலை:

சற்றே அதிகம் தான். மேலே சொன்ன ஐட்டம்ஸ் சாப்பிட 800 ரூபாய் ஆனது. சுவை, ஆம்பியன்ஸ் இவற்றை கணக்கில் கொண்டால் அதிகமாய் தெரிய வில்லை

ஸ்பெஷல் அட்ராக்ஷன்

அருமையான ஆம்பியன்ஸ்..மெல்லிசை (Instrumental music) ஒலித்து கொண்டே இருக்கிறது. நல்ல செர்வீஸ் (சனி, ஞாயிறு மட்டும் காத்திருந்து சாப்பிட வேண்டுமாம் ) வார நாட்களில் எவ்வித காத்திருப்பும் இன்றி விரைவாய் உண்ண முடிகிறது



அற்புதமான ஓவியங்கள் சுவர்களை அலங்கரிக்கிறது; ஓவியங்கள் பாகுபலி படம் போல ரிச் லுக் கொடுத்து விடுகிறது. நல்ல ஏ.சி - அற்புத சுவை என எல்லா பக்கமும் திருப்தி தருகிற ஹோட்டல்.



வித்தியாச பின்னணியுடன் ஒரு நல்ல ஹோட்டல் விரும்புவோர் அவசியம் ஒருமுறை செல்ல வேண்டிய ஹோட்டல் இந்த ராஜ்புத்ரா !



புகைப்படங்கள் : ஸ்நேஹா 

Sunday, April 23, 2017

பவர் பாண்டி & காற்று வெளியிடை : சினிமா விமர்சனம்

பவர் பாண்டி

இயக்குனராக தனுஷின் முதல் படம்..

"வயதான பெற்றோரை மதியுங்கள்; நம்ம அம்மா தானே; அப்பா தானே என அவர்களின் உணர்வுகளையும், பேச்சையும் அலட்சியம் செய்யாதீர்கள்" என்கிற கருவை மையமாக வைத்து எழுதியிருக்கிறார் தனுஷ்.

Image result for power pandi

கதையின் கரு  மற்றும் கடைசி 30 நிமிடம் அருமை; ஆனால் அந்த 30 நிமிடம் தரும் புன்னகை - படம் முழுதிலும் - குறிப்பாக முதல் பகுதியில் வர தவறி விடுகிறது. திரைக்கதையை லேசாக செதுக்கியிருந்தால் இன்னும் அட்டகாசமாக வந்திருக்கும் !

ரசித்த விஷயங்கள்

முதலில் இசை .......ஸீன் ரோல்டன் ..வாவ் ! படத்தோடு சேர்த்து தான் பாடல்களை முதலில் கேட்டேன். முதல் முறை கேட்கும் போதே ரசிக்க வைத்தது.

அதை விட முக்கியமாக பின்னணி இசை.... ராஜா-ரகுமானை விட்டு விடுங்கள்.. அவர்கள் வேறு லீக்... இன்றைய இசை அமைப்பாளர்களின் அனிருத், சந்தோஷ் நாராயணன் போன்றோரின் பின்னணி இசையை விட நிச்சயம் அழகாக-  படத்துக்கு மிக பொருத்தமாக செய்துள்ளார்..

ஜோக்கர் பட பாடல்களில் கவர்ந்தவர் - இங்கு மீண்டும் தனது முத்திரையை பதித்து நம் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளார்

நடிப்பில் பலரும் apt என்றாலும் எனக்கும் ரொம்ப பிடித்தது ரேவதியுடையது..மிக இயல்பான நடிப்பு..!

ராஜ்கிரண் தான் முதல் ஷாட் துவங்கி கடைசி வரை படத்தை சுமப்பது; நல்ல பெர்பாமென்ஸ் என்பதில் சந்தேகம் இல்லை..ஆனால் இவர் சம்பந்தப்பட்ட சில காட்சிகளில் இருக்கும் செயற்கைத்தனம் தான் சற்று உறுத்துகிறது

பிரசன்னா, தனுஷ், DD, மடோனா, விஜய் டிவியில் வரும் காமெடி நடிகர் என பலருக்கும் ரசிக்கும்படியான கேரக்டர்..

முக்கால் வாசி படம் சுமார் என்றாலும் கடைசி அரை மணியில் நிச்சயம் ரசிக்க வைத்து நெகிழ்வோடு மகிழ்ச்சியாக அனுப்புகிறார்கள்

Image result for power pandi

ரேவதி- ராஜ்கிரண் பேசும் சில ரொமான்ஸ் டயலாக் மக்களிடம் அமோகமாய் ரீச் ஆகிறது

அனைத்து பாடலையும் பின்னணியில் ஒலிக்க வைத்தது நைஸ்

மைனஸ் 

இப்படத்திற்கும் அநேக சண்டைகள் தேவையே இல்லை; அதிலும் ராஜ்கிரண் ஒரு அடி அடித்தால் மனிதர்கள் பறப்பதும், எழ முடியாமல் விழுந்து விடுவதும் சீரியஸான காமெடி..

முன்பே சொன்னது போல் திரைக்கதையில் இருக்கும் எதோ ஒரு செயற்கைத்தனத்தை குறைத்திருந்தால் படம் இன்னும் உயரத்தை தொட்டிருக்கும்

பைனல் வெர்டிக்ட் 

நல்ல கதை- மிக நல்ல இசை - தேர்ந்த நடிப்பு - சிறிதும் ஆபாசம் இல்லாத - குடும்பத்துடன் காணக்கூடிய படமாக்கம் - இவற்றிற்காக சிறு குறைகளை மறந்து விட்டு நிச்சயம் காணலாம் !

காற்று வெளியிடை 

ரகுமான் உயிரைக்  கொடுத்து பாடல்கள் தருவதும் - மணிரத்னம் அவற்றை வைத்து கொண்டு படு மொக்கையான படங்கள் தருவதும் அவ்வப்போது நடக்கும் விஷயம் தான். திருடா திருடா துவங்கி, ராவணன், கடல் போன்ற அதி அற்புத பாடல்கள்-ஆனால் திராபையான படம் லிஸ்ட்டில் - லேட்டஸ்ட் வரவு.. காற்று வெளியிடை

Image result for kaatru veliyidai

எதற்காக இந்த படம் எடுத்தார்?என்ன சொல்ல விரும்பினார்? பெண் உரிமையா? பெண்களை மதிக்க வேண்டும் என்றா? அப்படி தான் குன்ஸாக ஊகிக்க வேண்டியிருக்கிறது

கார்த்தி பாத்திரம் - மற்றும் மீசை இல்லாத கெட் அப் - இரண்டுமே காலை வாரிவிட்டது.. அதற்கு மேல் அவரின் முக பாவங்கள்.. !!! ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனவர் திடீரென தமிழ் செய்யுளை ஒப்பிக்கிறார் பாருங்கள்..கொடூரம் !

ஹீரோயின் பாத்திரம் தான் ரசிக்க தக்க ஒரே விஷயம்..அவரின் நடிப்பையும் அழகையும் பலரும் பாராட்டினாலும் எனக்கு அவ்வளவு தூரம் பிடிக்க வில்லை. இந்த மாதிரி ஓவர் வெள்ளை ஹீரோயின்கள்  என்றாலே எனக்கு அலர்ஜி.

ஓகே கண்மணியில் இளைஞர்கள் பல்சை சரியாக பிடித்தவர்  இம்முறையும் அப்படி முயன்றுள்ளார்.. ஆனால் க்ளீன் போல்ட்..

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் மணி சார் !

இணையத்தில் ரசித்து சிரித்த இப்படம் குறித்த ஒரு பதிவு :


Wednesday, April 19, 2017

இருக்கம் தீவு.. முன்பின் பார்த்திராத நண்பர்களுடன் ஒரு த்ரில் பயணம்

ரு ட்ரிப் போகிறோம் என்றால்.. யாரோடு செல்வோம்? நமது குடும்பத்துடன்? நண்பர்களுடன்?

முன் பின் தெரியாத 25 பேருடன் ஒரு ட்ரிப் சென்றால்  எப்படி இருக்கும்?

சென்னை ட்ரெக்கிங் கிளப் பல வருடங்களாக வெற்றி கரமாக இதைத் தான் செய்து வருகிறது !!




மிக குறைந்த செலவில், ஏற்கனவே அவ்விடத்திற்கு சென்ற அனுபவ சாலிகள் guide செய்ய சென்னை ட்ரெக்கிங் கிளப் பல ட்ரெக் ஏற்பாடு செய்கிறது.

அண்மையில் - சென்னையில் இருந்து 100 கி மீ தொலைவில் உள்ள இருக்கம் தீவு என்கிற இடத்திற்கு 28 பேர் கொண்ட குழு சென்று  வந்தோம்.ஏப்ரல் 14 மதியம் துவங்கி மறுநாள் மதியம் முடிந்தது எங்களின் பயணம்

28 பேரில் யார் யாரிடம் கார் உள்ளது என விசாரித்து ஆர்கனைஸர்ஸ் - 7 பேரை காருடன் வரும்படி  கூறியிருந்தனர். மற்றவர்கள் அந்த 7 காரில் ஏறிக்கொள்ள எங்கள் பயணம் இனிதே துவங்கியது



செல்லும் ரூட் சற்று தெரியாத இடம் எனவே ஒரு சில கார்கள் வழி மாறிப்போக ஆர்கனைஸர்ஸ் அவர்களை தொடர்ந்து கண்காணித்து சரியான வழிக்கு  வரவைத்தனர்.

இரவு 8 மணியளவில் ஆரம்பாக்கம் என்கிற ஊரை அடைந்தோம். அங்கிருந்து பேக் வாட்டர்சில் ஒரு மணி நேர படகு பயணம்

28 பேருடன் படகோட்டியும் இணைந்து கொள்ள படகு சவாரி துவங்கியது. அருமையான நிலா வெளிச்சம் ... வேறு எந்த வெளிச்சமும் இல்லை.. நிலா தண்ணீரில் பட்டு நீரின் அழகை கூட்டியது.. மிக லேசாக ஆடும் நீரலைகளை ரசித்த படி பயணித்தோம்

உடன் வந்த நகுல், மினு போன்ற நண்பர்களுடன் அறிமுகமாகி அவர்கள் சென்று வந்த அருமையான பயணங்கள் பற்றி பேசத்துவங்கினோம்

27 வயதே ஆகும் நகுல் - இதுவரை தனியாக மற்றும் குடும்பத்துடன் சேர்ந்து - இந்தியாவில் 22 மாநிலங்களை சுற்றி வந்து  விட்டார்.சுற்றி வருவது எனில் மாநிலத்தில் கால் வைத்து விட்டு போவது  அல்ல.அங்குள்ள அனைத்து முக்கிய இடங்களையும் பார்த்து விடுவது !

சிறிது நேரம் நண்பர்களுடன் பேசிய பின் தான் உணர்ந்தேன்.. நானோ, நகுலோ மட்டுமல்ல இந்த  படகில் பயணிக்கும் ஒவ்வொரு நபரும் பயணத்தை மிக தீவிரமாக காதலிப்பவர்கள் தான் !

அடிக்கடி நான் நினைப்பதுண்டு: ஒரு மனிதன் எந்த அளவு பணம் சம்பாதித்துள்ளான் - அவன் ஸ்டேட்டஸ் என்ன ...இவையல்ல ஒரு மனிதனை  தீர்மானிப்பது. வாழும் காலத்தில் அவன் எவ்வளவு மகிழ்வோடு வாழ்ந்தான் என்பது தான் மிக மிக முக்கியமான விஷயம்.. அந்த விதத்தில் பயணத்தை காதலிக்கும் மனிதர்கள் - மிக மகிழ்வான நபர்களாய் இருப்பதை கவனித்துள்ளேன்..

ஒரு மணி நேர பயணத்துக்கு பின் நாங்கள் செல்ல வேண்டிய இடம் வந்து விட்டது.  மனிதர்கள் யாருமில்லாத ஒரு தீவு.. அங்கு தான் காலை வரை கழிக்க போகிறோம்..



இறங்கிய உடனே சாப்பிட்டு வேலை துவங்கி  விட்டனர். பார்பேகியூ சிக்கன் சமைக்க  ஏற்பாடுகள்  நடந்தன. சில நண்பர்கள் கற்கள் சென்று எடுத்து வர - தீ மூட்டி சமையலை ஆரம்பித்தனர்.



வெஜ் மட்டும் சாப்பிடுவோருக்கு பன்னீர் மசாலா தயார் ஆனது. சப்பாத்தி மற்றும் சிக்கன் கிரேவி சென்னையிலேயே தயாரித்து எடுத்து வந்து விட்டனர் சரவணன், விக்னேஷ் மற்றும் விஷ்ணு ஆகிய ஆர்கனைஸர்ஸ்..

சாப்பாடு தயார் ஆனதும் பிளேட் எங்கே என கேட்டால், பலரும் பிளேட் கொண்டு வரவில்லை...(எல்லோரும் தட்டு கொண்டு வர வேண்டும் என முன்பே கூறியிருந்தனர்) இருந்த சின்ன சின்ன பிளேட் வைத்து ஒரே தட்டில் பலரும் சாப்பிட்டனர்...

இந்த நண்பர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்தே சில மணி நேரம் தான் ஆகிறது.. ஆனால் அதற்குள் ஒரே தட்டில் சாப்பிடும் சூழலை காலம் ஏற்படுத்தி தருகிறது !!

சாப்பாடு துவங்கிய நேரம் துவங்கி கேலி, கிண்டல், கலாட்டா துவங்கி விட்டது. சிலம்பரசன், விக்னேஷ், ராகவ் ஆகியோர் அடித்த இடைவிடாத ஜோக்குகளில் சிரிக்காத நபர்கள் இருக்கவே முடியாது.

பின் கேம்ப் பயர் மூட்டி அரட்டை அடித்தபடி இருந்தோம்.. சிறிது சிறிதாய் தூங்க துவங்கினர்.. ஏற்கனவே அறிமுகமான ஆர்கனைசர்கள் ஒரு ஓரமாய் சென்று அரட்டை அடிக்க ஆரம்பித்தனர்...



இந்த பயணம் வரும் வரை எனது மிக பெரிய பிரச்சனை .. இரவு தூக்கம் தான்... அதனாலே தான் இத்தகைய பயணத்தை பலமுறை ஒத்தி வைத்தேன்.. எப்படி ஓபன் ஸ்பேசில் தூங்குவது என்ற பயமும், தயக்கமும் மிக இருந்தது. ஆனால் ஆர்கனைஸர்ஸ் கீழே போட தார்பாய் கொண்டு .வந்திருந்தனர். மேலும் போர்த்தி கொள்ள நான் போர்வை கொண்டு சென்றிருந்தேன்.. எனவே 4-5 மணி நேரம் நிம்மதியாய் தூங்கி விட்டேன்..

காலை எழுந்ததும் பறவைகளை காண .. எங்கள் பயணம் துவங்கியது..

பல வண்ணங்களில் அழகழகான பறவைகள் .. காமிரா கொண்டு வந்தோர்.. அந்த அற்புத தருணங்களை பதிவு செய்த வண்ணம் இருந்தனர்.. பறவைகள் பற்றி தெரிந்தோர் .. அவற்றின் பெயரை அறிமுகம் செய்தனர்..




சற்று தூரம் சென்று படகை ஓரமாக நிறுத்தி விட - நான்கு பக்கமும் வண்ண வண்ண பறவைகளை கண்டு வியந்தோம்..

நாங்கள் பார்த்த பறவைகளின் பெயர்கள்:

1.     Spotted Pelican
2.     Black Headed Gull
3.     Indian Cormorant
4.     Caspian Tern
5.     Whiskered Tern
6.     River Tern
7.     Painted Stork
8.     Pacific Golden Plover
9.     Black Headed Ibis
10. Greater Flamingo
11. Red Wattled Lapwing
12. Brahminy Kite
13. Swift
14. Intermediate Egret
15. Grey Heron
16. Black Tailed Godwit
17. Red Rumped Swallow




பின் படகிலேயே இன்னொரு இடம் வந்து காலை சமையல் தயார் ஆனது. புவ்வா (உப்புமா) என்பதால் மிக சீக்கிரம் தயார் ஆகி விட, மீண்டும் ஒரே பிளேட்டில் பல பேர் சாப்பாடு...

புகைப்படம் எடுத்து கொண்டு, ஒவ்வொருவரும் பயணம் எப்படி இருந்தது என பேசிவிட்டு - படகில் ஆரம்பக்கம் நோக்கி பயணமானோம்..



மொத்த செலவை கணக்கிட்டு ஒவ்வொருவரும் 500 ரூபாய் தரவேண்டும் என்று  கூறினர்.

100 கி மீக்கு மேல் காரில் பயணம், இரு வேலை சாப்பாடு, இரு முறை ஒரு மணி நேர படகு சவாரி, இடை இடையே நொறுக்கு தீனி இப்படி எல்லாம் சேர்த்து 500 ரூபாய் தான் ஒருவருக்கு மொத்த செலவு என்பது சான்ஸே இல்லை ! நாம் குடும்பத்துடன் சென்றால் 4-5 ஆயிரமாவது குறைந்தது ஆகும் !

புது மனிதர்கள்.. அவர்கள் மூலம் தெரிய வரும் .அனுபவங்கள்.. செய்திகள் இவை இப்பயணத்தில் கிடைக்கும் இன்னொரு அற்புதமான விஷயம்..



கரையை அடைந்ததும், காரை எடுத்து கொண்டு மகிழ்வான நினைவுகளுடன் சென்னை நோக்கி பயணமானோம்.

இது சென்னை ட்ரெக்கிங் கிளப்பில் எனது முதல் பயணம்.. இத்தகைய பயணங்கள் இனி அவ்வப்போது தொடர எல்லாம் வல்ல எனது மனைவியை வேண்டி.. இப்பதிவை முடிக்கிறேன் !
***
புகைப்படங்கள்:
நன்றி

சரவணன் 
ராகவ்  
இளங்கோ
யுவராணி
***

இந்த பயணம் பற்றி உடன் பயணித்த மதுமிதா என்கிற பிளாகரின் பதிவை இங்கே வாசிக்கவும் !


Wednesday, April 12, 2017

மறக்க முடியாத சுவை.. திருவையாறு ஆண்டவர் அல்வா கடை ..ஒரு அனுபவம் !

திருவையாறு..பெயரைக் கேட்டதும் இங்கு நடக்கும் இசை விழா பலருக்கும் நினைவுக்கு வரும்.  கர்நாடக சங்கீதம் பற்றி அதிகம் அறியாத என்னை போன்ற தஞ்சை வாசிகளுக்கு திருவையாறு என்றால் சர்வ நிச்சயமாக "ஆண்டவர் அல்வா  கடை" தான் நியாபகம் வரும்.

Related image

சிறிய ஊர் என்றாலும் வெளியூர் பேருந்துகள் 3 இடத்தில் நின்று போகும் ஊர் திருவையாறு. இதில் பேருந்து நிலைய நிறுத்தத்தில் இருந்து கூப்பிடு தூரத்தில் உள்ளது ஆண்டவர் அசோகா கடை.

பழமையான சிறிய கடை. குறுகலான அந்த இடத்தில் சுறுசுறுப்பாக நான்கைந்து ஊழியர்கள் அல்வா, அசோகா மற்றும் காரம் கட்டிக்  கொண்டிருக்கிறார்கள். வாடிக்கையாளர்களுக்கு நிற்கவே இடமில்லை; முதுகு சுவற்றில் உரசும் நிலை என்றாலும்.. எந்த குறையும் சொல்லாமல் பொறுமையாய் நின்று பார்சல் வாங்குகிறார்கள்.

உள்ளூர் மற்றும் சுற்றுப்புற  கிராம மக்கள் ஒரு புறம் என்றால் - திருவையாறு கடந்து செல்லும் டவுன் காரர்களும் கடையை விரும்பி நாடுகிறார்கள்.

உள்ளே நுழையும் போதே கடையின் ஓனர் கணேச மூர்த்தி " வாங்கய்யா... என்ன வேணும்யா? தம்பி .. ஐயாவை கொஞ்சம் கவனி " என இன்முகத்துடன்  வரவேற்பார். நெற்றில் பெரிய பட்டையும் ஒரு ரூபாய் நாணயம் சைசுக்கு குங்குமம் இல்லாமல் கணேச மூர்த்தி ஐயாவை காண முடியாது ! அரிதாக இவர் கல்லாவில் இல்லாத நேரம் ஒரு வயதான பெண்மணி (அவரது மனைவியாய் இருக்கலாம்) அமர்ந்திருப்பார் ...

இப்போது ஒரு சின்ன பிளாஷ் பேக்கிற்கு செல்வோம்
*********
எப்படி வந்தது  அசோகா?

 இரண்டாம் உலக போர் சமயம்....கோதுமை  மற்றும் ஜீனி (சென்னையில் சர்க்கரை என்பார்கள்!) கடும் தட்டுப்பாடு.. இருந்த இருப்பு அனைத்தையும் போர் முனைக்கு அனுப்பியதாலோ என்னவோ, கோதுமை, ஜீனி இல்லாமல் அல்வா உள்ளிட்ட எந்த  இனிப்பும் தயாரிக்க முடியவில்லை.

அப்போது திருவையாறில் இதே ஆண்டவர் கடை நடத்தி வந்த திரு. சுப்பையர் கோதுமை, ஜீனி- இரண்டும்  இல்லாமல் எப்படி இனிப்பு செய்வது என யோசிக்கிறார். அதன் விளைவாய் அவர் மனதில் உதித்ததே - அசோகா ! கோதுமைக்கு பதிலாக பயித்தம் பருப்பும், ஜீனிக்கு பதிலாக சர்க்கரையும் (நிஜ சர்க்கரை என்பது வெல்லத்தை பவுடர் செய்வது .. !)  போட்டு ஒரு இனிப்பு தயார் செய்கிறார்.. அது தான் அசோகா !

மிக விரைவிலேயே அசோகா பெரும் புகழ் பெற்று விட்டது. பக்கத்து ஊர்களான மாயவரம், திருச்சி , பெரம்பலூர், புதுக்கோட்டை என பல இடங்களில் இருந்த பணக்காரர்கள் மாட்டு வண்டி கட்டிக்கொண்டு வந்து அசோகா வாங்கி சென்றனர்.

போர் முடிந்து கோதுமை, ஜீனி கிடைக்க ஆரம்பித்ததும் அசோகா தயாரிக்கும் முறையில் மாறுதல் வந்து விட்டது. அன்று முதல் கோதுமை, ஜீனி சேர்த்தே அசோகா தயார் செய்யப்படுகிறது. பயித்தம் பருப்பு மற்றும் சர்க்கரைக்கு டாட்டா சொல்லி விட்டனர் !

இன்னொரு முக்கிய விஷயம்.. இக்கடையை துவக்கிய / அசோகாவை கண்டுபிடித்த சுப்பையருக்கும், இன்று கடையை நடத்தும் கணேச மூர்த்தி அவர்களுக்கும் எந்த ரத்த சம்பந்தமும் இல்லை.

 பிளாஷ் பேக் ஓவர்.பேக் டு நிகழ் காலம் !
************

Image result for thiruvaiyaru ashoka halwa andavar shop
ல்வாவிற்கும்,அசோகாவிற்கும் ஆறு வித்யாசத்திற்கு மேலும் சொல்லலாம். முக்கியமான ஒரு வித்யாசம். அல்வாவை கத்தியில் வெட்டி எடுத்து தருவார்கள். அசோகாவை ஸ்பூனில் மட்டும் தான் .......விற்பனை செய்பவரால் கூட எடுக்க முடியும். கத்தி பயன்படாது.

இனிப்பு மற்றும் காரம் பார்சல் வாங்கும் இடத்திற்கு இன்னொரு புறம் விசாலமான அறை .. அங்கு ஹோட்டல் போல 15 டேபிள், சேர் போட்டு - மக்கள் சாப்பாடு சாப்பிடுவதை போல வாழை இலையில் அசோகா மற்றும் கோதுமை அல்வாவை ருசித்துக் கொண்டிருக்கிறார்கள்.


சென்று அமர்ந்து சப்ளையர் அண்ணனிடம் "அசோகா கொடுங்கண்ணே" என்று சொல்ல சுடசுட அசோகாவும் கூடவே தாராளமாய் மிக்சரும் வைத்து  தருகிறார். அசோகாவை வாயில் வைத்தவுடன் கரைகிறது. உள்ளம்
பூரிக்கிறது. அவசரமே படாமல் நிதானமாய் - ரசித்து ருசித்து சாப்பிட்டு விட்டு " அண்ணே .. கோதுமை அல்வா"  என்றதும் - அதையும் இலையில் வைத்து இம்முறை காராசேவு காம்பினேஷனில் தருகிறார்.



அசோகாவிற்கு நான் சளைத்தவனா என்ன என அது ஒரு பக்கம் அதகளம் செய்கிறது !

அல்வாவை சாப்பிடும் போது இந்த ஊர் மக்களை எண்ணி மனம் பொறாமை கொள்கிறது. கூடவே " இந்த ஊரில் சக்கரை நோயாளிகள் எண்ணிக்கை எக்கச்சக்கமாய் இருக்கணும் " என்ற நினைப்பும் எட்டிப் பார்க்கிறது

சாப்பிட்டு முடித்து விட்டு வீட்டிற்கு பார்சல் வாங்க, விலை பட்டியலை பார்த்தால் எல்லாமே சென்னையில் இருப்பதை விட 40 % குறைவான விலை  !

Related image

ஆனால் சுவையில் சென்னை அல்வா மற்றும் அசோகா இதற்கு அருகில் கூட வர முடியாது ! இதற்கு மிக முக்கியமான காரணம்.. திருவையாறின் காவிரி நீர் மற்றும் அந்த மண்.. இந்த இரண்டின் சுவையும் அசோகாவில் தெரிவது தான் என்கிறார் இதே மண்ணில் பிறந்து வளர்ந்தவரான எனது நண்பர் மருத்துவர் வேங்கடப்பன். (திருநெல்வேலி சென்றபோது நமக்கு பல்வேறு இடங்களை  சுற்றி காட்டியதுடன் அவை பற்றி விரிவாக விளக்கியவரும் இவர் தான்.. !)

இதே ஆண்டவர் அல்வா கடைக்கு இரண்டு கட்டிடம் தள்ளி இயங்கி வருகிறது..... வேங்கடப்பன் அண்ணன்  திரு முருகப்பன் நிர்வகிக்கும் பாவை மெடிக்கல்ஸ் !

சுவையில் ஆண்டவர் அசோகாவிற்கு அருகில் கொஞ்சமேனும் வரக்கூடிய அசோகா என்றால் - தஞ்சையில் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள " ஒரிஜினல் திருவையாறு  ராமன் நெய் அசோகா" கடை மட்டுமே !

இனிப்புகளில் ஆண்டவர் அல்வா கடையில்  வேறு வகைகள் இருந்தாலும் அசோகா மற்றும் அல்வா தான் முதல் இரு இடங்களை அனாயசமாக  பெறுகிறது.காரம் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப  வாங்கி செல்கிறார்கள்.

ஊரில் அசோகா கடைகள் இன்னும் சிலவும் உள்ளன.. அங்கெல்லாம் இங்கு நடக்கும் பிசினஸ்ஸில் 10 % நடந்தாலே அதிகம் தான்..

அதி அற்புத சுவை..  மிக நியாயமான விலை.. திருவையாறு செல்லும்போதோ - அல்லது அதன் வழியே செல்லும் போதோ - ஆண்டவர் அல்வா கடைக்கு அவசியம் ஒரு விசிட் அடியுங்கள்.. நிச்சயம் எனக்கு நன்றி சொல்வீர்கள் !

Sunday, April 9, 2017

ஆட்டம்- பாட்டு கொண்டாட்டத்துடன் ஒரு மாரத்தான்.. படங்கள் +குறிப்பு

ன்று சென்னையில் நடந்த அண்ணா நகர் மாரத்தான் மிக இனிய அனுபவமாக இருந்தது. இதனை நடத்திய அண்ணா நகர் டவர் டுவிஸ்டர் குழுவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.



* இந்த இலவச மாரத்தான் 4 வாரம் வரை ரிஜிஸ்டர் செய்ய ஓபன் ஆக இருந்தது (பொதுவாய் இலவச மாரத்தன்ங்கள் இவ்வளவு நாள் ஓபன் ஆக இராது)  இது பற்றி அந்த குழுவிடம் கேட்டபோது, "நிறைய பேரை ரன்னிங் பக்கம் வரவைக்க தான் நடத்துகிறோம்;எனவே  ஸ்பாட் ரிஜிஸ்திரேஷன் கூட கொடுக்கவே செய்தோம் "என்றனர். அவர்கள் எண்ணிய படி இன்று பல முதல் முறை ஓடும் நண்பர்களை காண முடிந்தது



* தண்ணீர், பிஸ்கட், பழங்கள் ஒரு கிலோ மீட்டருக்கும் குறைவான தொலைவில் தந்து கொண்டே இருந்தனர். இந்த அளவு செர்வீஸ் -நாம் பணம் தந்து ஓடும் ஓட்டத்தில் கூட  காண்பது கடினம் !

*  அற்புதமான ஹெல்த் கான்ஷியஸ் சாப்பாடு.

* டவர் டுவிஸ்ட்டர் குழுவினர் முழுக்க வாலண்டியரிங்கில் தான் ஈடுபட்டனர். யாரும் ஓடவில்லை.



* ஓட்டம் முடிந்ததும் சில entertainment நிகழ்ச்சி வைத்திருந்தனர். பெண்கள் புல்லட்டில் அட்டகாசமாக பவனி வர, அடுத்து சூப்பரான குழு நடனம் துவங்கியது. 17 வயது முதல் 50 வயது வரை உள்ள ஆண்களும் பெண்களும் ஆடிய ஆட்டம்.. கலக்கல். நிறைய பிராக்டிஸ் செய்திருக்க வேண்டும். ஸ்டேப் எல்லாம் சரியாக -அனைவரும் ஒரே விதமாக போட்டனர் !!



மிக பெரிய மைதானம்.. ஆங்காங்கே நண்பர்கள் குழுக்களாக அமர்ந்து ரிலாக்ஸ்ட் ஆக உரையாடி விட்டு மிக மகிழ்வோடும், நிறைய இனிய நினைவுகளோடும் .கிளம்பினர்.



முகநூலில் இருக்கும் உள்ளதனைய உடல் குழு நண்பர்கள் குழுவில் 15க்கும் மேற்பட்டோர் இதில் இணைந்து  ஓடினோம். பலரை நேரில் சந்திப்பது இது முதல் முறை. ஓட்டம் துவங்கும் முன்னும் - அதன் பின்னும் சில மணி நேரங்கள் நண்பர்களுடன் இணைந்து உரையாடியது மிகுந்த மகிழ்ச்சியை தந்தது.


இன்றைய ஓட்டம் முடிந்த சில மணி நேரத்திலேயே அடுத்த மராத்தான் DHRM ஜுலையில் நடக்கிறது என அறிவித்தபடி நண்பர்கள் பலர் அதற்கு இன்று ரிஜிஸ்ட்டரும் செய்து விட்டார்கள்.. !

DHRM மாரத்தான் ரூட் மிக அற்புதமாக இருக்கும் என்கிறார்கள்.. !

I am waiting !

Saturday, April 1, 2017

விஜய் / சன் டிவியை துவைத்து காயப்போடும் கவண் : சினிமா விமர்சனம்

கதை 

Good Vs Evil கதை தான். நல்ல மீடியாவிற்கும் கெட்ட மீடியாவிற்கும் நடக்கும் சண்டை.. நன்மையே இறுதியில் வெல்லும் என்பதில் சந்தேகமா என்ன  !

Related image

திரைக்கதை, நடிப்பு, இயக்கம் 

படத்தின் சுவாரஸ்ய விஷயம் திரைக்கதை தான். ஷங்கர் படங்களில் மாஸாய் சில காட்சிகள் இருக்கும். இன்னும் சொல்லணும் என்றால் முதல்வன் பட இன்டெர்வியூ போலவே இங்கும் ஒரு அமர்க்கள இன்டெர்வியூ காட்சி..

பவர் ஸ்டாரை சரியாய் பயன்படுத்திய படங்களுள் ஒன்று கவண் ! " முட்டா பசங்களுக்குள்ளேயும் எதோ திறமை இருக்கலாம் சார்" என பவர் ஸ்டார் சொல்லும்போது விசில் தூள் பறக்கிறது

முதல் 15 நிமிடமும் இடைவேளைக்கு பின் ஆங்காங்கும் சற்று இழுக்கிறது. Lag !!  இருந்தாலும் அது பெரிதாய் தெரியாமல் அடுத்தடுத்து நல்ல காட்சிகள் வந்து காப்பாற்றி விடுகிறது

விஜய் சேதுபதிக்கு முதல் அரை மணி நேரம் கோரமான ஒரு ஹேர் ஸ்டைல். நல்லவேளை விரைவில் நார்மல் லுக்கிற்கு வந்து விடுகிறார். ஹீரோயிசம் அளவாய் தான் வைத்துள்ளனர். வானத்தை வில்லாய் வளைத்தார் என்று புருடா விடலை ... சண்டையும் கூட கிளை மாக்சில் தான் வருகிறது (அதையும் தவிர்த்திருக்கலாம்)

மடோனா - பூசிய உடல்வாகு..மிக மெலிதான ரொமான்ஸ் தான். ஒரே டூயட் உடன் நிறுத்தியது பெரும் ஆறுதல்

படத்தின் மிக சிறப்பான விஷயம் மற்றும் இப்படம் நீங்கள் காண - பரிந்துரைக்க மிக முக்கிய காரணம் 2

முதலில் -  படம் முழுதுமே மைண்ட் கேம்ஸ் தான் (தனி ஒருவன் போல) - இத்தகைய படங்கள் இயல்பாய் சுவாரஸ்யம் தந்து விடுகின்றன

இரண்டாவது -விஜய் டிவி, சன் டிவி -இவை நடத்தும் சில நிகழ்ச்சிகளை துவைத்து காய போட்டிருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சிக்கு பின் இருக்கும் அரசியல்.. சென்சேஷன் வெறியில் மீடியாக்கள் அடிக்கும் கூத்து இவற்றை சற்று மிகைப்படுதலுடன் இருந்தாலும் (சினிமாவில் அப்போ தான் எடுபடும் ) - கலக்கலாய் எடுத்துள்ளனர்.

கே வி ஆனந்த் படங்கள் பலவும் எனக்கு பிடிக்கும். நடுவில் ஒரு சில படங்கள் சறுக்கினாலும் மீண்டும் இப்படத்தில் நிமிர்ந்துள்ளது மிக மகிழ்ச்சி !
Image result for kavan

குறைகள் 

கே வி ஆனந்தின் ஆஸ்தான நட்சத்திரங்களான நண்டு ஜெகன், போஸ், அயன் பட வில்லன் (அதே ஹேர் ஸ்டைல்) போன்றோர் வருவது பழைய படங்களை நினைவூட்டுகிறது

ஆங்காங்கு வரும் தொய்வை சரி செய்திருக்கலாம்

ராஜேந்தருக்கு ஹைப்  அதிகம். அந்த அளவு அட்டகாச பாத்திரம் இல்லை; இருந்தாலும் அவர் செகண்ட் இன்னிங்ஸ் ஆட நிச்சயம் இப்படம் உதவும்

பாடல்கள் வெகு சுமார் (பின்னணி இசை ஓகே)

மொத்தத்தில்

நிச்சயம் ஒரு டீசண்ட் கமர்ஷியல் entertainer.. ஒரு வித்தியாச பின்புலத்துடன் !

Worth a watch !
Related Posts Plugin for WordPress, Blogger...