கோவாவின் முக்கிய பீச்களான பாகா (Bhaga ) & கலங்கட் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்..
கோவா - வடக்கு கோவா மற்றும் தெற்கு கோவா என இரு பிரிவுகளை கொண்டது. வடக்கு கோவாவில் தான் பல முக்கிய பீச்கள் மற்றும் பீச் விளையாட்டுகள் உள்ளன. தெற்கு கோவாவில் உள்ள பீச்கள் அதிகம் மக்கள் செல்லாதவை.. மிக அமைதியானவை.. வெளி நாட்டவர் வந்து சன் பாத் எடுக்க கூடிய இடங்கள்.... (ஆஹா அப்ப அங்கே தான் போகணும் அப்படிங்கறீங்களா? ரைட்டு !)
பாகா மற்றும் கலங்கட் பீச் - இந்த 2 இடத்தில் மட்டும் தான் மிக அதிக அளவு பீச் விளையாட்டுகள் நிகழ்கின்றன.
ஏன் பீச் விளையாட்டு விளையாட வேண்டும் ?
கோவாவில் இருக்கும் எல்லா பீச்களையும் சும்மா பார்த்து, கால் நனைத்தால் போதுமா? ஒவ்வொரு ஊரின் சிறப்பம்சத்தை பொறுத்து அமைக்கப்படும் இத்தகைய விளையாட்டுகளை அவசியம் விளையாட வேண்டும்... அது தான்... Fun part யே ! உதாரணமாய் குளு மனாலி சென்றால் - பனிக்கட்டி சருக்கல் - ஆற்றில் செல்லும் ரிவர் ராப்டிங் செல்லாமல் வரவே கூடாது.. அங்கு பனி அதிகம் என்பதால் அதை அடிப்படையாய் கொண்டு விளையாட்டுகள் இருக்கும்; )
நாங்கள் பாகா பீச்சிற்கு சென்ற முதல் நாள் மாலையே சென்று விட்டோம். நாங்கள் சென்று சேர்ந்த போது மாலை ஆறு மணி. எனவே விளையாட்டுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு விட்டன.
காதலியின் பிறந்த நாளை கடற்கரையில் கேக் வெட்டி இந்த ஜோடி கொண்டாடியது; அந்த நிகழ்வை அவர்கள் காமிராவில் வீடியோ எடுக்க சொல்லி அவர்கள் கேட்டது... அடியேனை ! |
கோவா முழுவதும் இருப்பது அரேபியன் கடல் தான் என்றாலும், ஒவ்வொரு பீச்சும் மாறுபடுவது அது எந்த சூழலில் அமைந்திருக்கிறது என்பதில் தான்... பாகாவை பொறுத்த வரை அதனை சுற்றி ஒரு புறம் மலை அழகாக விரிந்து கிடக்கிறது. மேலும் பெரிய கரை.... அதன் ஓரத்தில் சன்பாத் எடுக்க பல படுக்கைகள் அமைத்திருக்க, காதலர்களும், வெளிநாட்டவரும் அதில் படுத்த வண்ணம் கடலை ரசிக்கின்றனர் ...
உணவின் சுவை அற்புதம். சில மீன்கள், பெரிய நண்டு போன்றவை அங்கேயே காட்சி பொருளாக வைத்துள்ளனர்.
அதை பார்த்து இந்த மீன் அல்லது நண்டு வேண்டும் என்று சொன்னால், அதன் பின் சமைக்கிறார்கள்.
ஹோட்டல் அமைக்கப்பட்டுள்ள விதமே - ஒரு சினிமா செட் போல ரசிக்கும் வண்ணம் உள்ளது.
பாகா - நாங்கள் சென்றது மாலை நேரம் என்பதால் கடலில் கால் நனைத்து விட்டு - சற்று உலாத்தி விட்டு- மேற்சொன்ன ஹோட்டலில் உணவை முடித்து கொண்டு கிளம்பி விட்டோம்,
அடுத்து - கலங்கட் பீச் பற்றி பார்ப்போம்.....
மதியம் 2 மணி அளவில் கலங்கட் பீச் சென்றடைந்தோம்.... ஏராளமான பீச் விளையாட்டுகள் நடக்கின்றன.
குறிப்பாக பாரா சைலிங், பம்பர், பனானா ரைட் போன்ற நான்கு விளையாட்டுகள் சேர்த்து 1500 ரூபாய் வாங்குகிறார்கள். தனி தனி என்றால் கிட்டத்தட்ட இதே ரேட் வந்து விடும். நன்கு பீச் விளையாட்டை என்ஜாய் செய்யும் ஆள் என்றால் இந்த பேக்கேஜ் எடுத்து கொள்வது நல்லது. ஒவ்வொரு விளையாட்டு முடிந்ததும் எது free - ஆக உள்ளதோ அதற்கு சென்று விடலாம். ஒவ்வொன்றாய் வாங்கினால்... ஒவ்வொரு முறை சென்று டிக்கெட் வாங்க வேண்டும்.. காத்திருக்க வேண்டும்...
விளையாட்டுகள் பற்றி ...
பாரா சைலிங்
விளையாட்டுகளில் சற்று காஸ்ட்லி இது தான். ஒரு ஆளுக்கு 600 ரூபாய். தவற விட கூடாத விளையாட்டு இது. கோவா போன்ற வெகு சில இடங்களில் மட்டுமே விளையாட முடியும்.
10 அல்லது 12 பேரை ஒரு படகில் நடுக்கடலுக்கு அழைத்து செல்கிறார்கள். அங்கு இன்னொரு படகிற்கு நம்மை மாற்றி ( துப்பாக்கி பட கிளை மாக்ஸ் இந்த நேரம் நியாபகம் வருகிறது !) அந்த படகில் ஒரு பாராசூட்டை அமைக்கிறார்கள். பின் நம் இடுப்பில் பாராசூட் ஹூக்கை கட்டிவிட்டு நம்மை மேலே ஏற்றி கடலின் நடுவே 100- 150 அடி உயரத்தில் பறக்க வைக்கிறார்கள்..
வாவ்... அட்டகாசமான உணர்வு அது...
படகில் இருப்போருக்கு 200 ரூபாய் டிப்ஸ் தந்தால் - "டிப் "(Dip ) என்று சொல்லி நம்மை ஆரம்பத்திலும், கடைசியிலும் கடல் தண்ணீரில் சற்று முங்க வைக்கிறார்கள்.
டிப் "(Dip ) அவசியம் செய்யுங்கள். செம ஜாலியாக இருக்கும். மேலும் அவர்களுக்கு டிப்ஸ் தந்து டிப் செய்வோருக்கு மட்டும் தான் 5 நிமிடம் போல பறக்க வைக்கிறார்கள். மற்றவர்களை ஓரிரு நிமிடத்தில் இறக்கி விடுகிறார்கள்.
டிப்புக்கு எவ்வளவு பணம் என்பதில் மட்டும் சரியாக பேசி வைத்து கொள்ள வேண்டும். சில இடங்களில் ஒவ்வொரு முறைக்கும் 200 ரூபாய் என சில நேரம் "3 முறை டிப் செய்தோம் 600 ரூபாய் தா " என கேட்கும் நிகழ்வும் நடக்கிறதாம்... எங்கள் போட்டில் அப்படி நடக்க வில்லை. 200 ரூபாய் என்பது ஸ்டாண்டர்ட் ஆக வைத்திருந்தனர்.
முதல் முறை பாரா சைலிங் செல்லும்போது மனைவி மற்றும் மகள் இருவருமே வர வில்லை- நான் மட்டுமே சென்றது அவ்வளவு உகப்பாக இல்லை. காரணம் ... அங்கிருக்கும் எல்லாரும் குருப்பாக தான் வருகிறார்கள். ஒருவர் மேலே பறக்கும் போது கீழிருந்து கை தட்டி, குரல் எழுப்பி உற்சாகப்படுத்துகிறார்கள். நாமும் மேலே பறக்கும் போது கையசைத்து நமது மகிழ்வை சொல்ல யாரேனும் வேண்டும் இல்லையா ?
உதாரணமாய் மற்றவர்கள் பறந்த போது அவரவர் நண்பர் அல்லது உறவினர் மிக உற்சாகமாய் குரல் எழுப்பினர்.பறந்தவரும் கீழே இருக்கு தம் நண்பரை பார்த்து மகிழ்ச்சியாய் கை அசைத்தனர். இதுவே நான் பறந்தபோது அப்படி எதுவும் இல்லாமல் அமைதியாய் பறந்தேன்.
பாரா சைலிங் முடித்து விட்டு வந்து மகளிடம் "ரொம்ப அருமையாக இருந்தது...மிஸ் செய்துடாதே... பயப்பட ஒன்றும் இல்லை; போட்டில் நீச்சல் தெரிந்த 3 போட் காரர்கள் உள்ளனர்.கீழே விழுந்தாலும் அவர்கள் வந்து தூக்கி விடுவார்கள் " என தைரியம் சொல்லி மீண்டும் ஒரு முறை பாரா சைலிங் சென்றோம்...
மகள் செமையாக என்ஜாய் செய்தாள் ...
மற்ற இரு விளையாட்டுகள்
ஜம்பர்
டியூப் ஒன்றில் நாம் அமர்ந்து கொள்ள அதனை ஒரு போட்டில் கட்டி விட்டு - Boat - நம்மை கடலுக்குள் இழுத்து சென்று நனைக்கிறது... இருவராக விளையாடும் விளையாட்டு இது. இதுவும் ரொம்ப ஜாலி ஆன ஒரு விளையாட்டே...
பனானா ரைட்
வாழைப்பழம் போல சைசில் இருக்கும் படகில் - 5- 6 பேரை கடலுக்குள் அழைத்து செல்கிறார்கள். செல்லும்போது அலைகள் நம் மீது அடிக்க - அதுவே ஒரு கொண்டாட்டம். பின் ஒவ்வொருவராய் கடலுக்குள் சற்று நேரம் டிப் செய்து வெளியே எடுக்கிறார்கள்...
இவை தவிர இன்னும் பல விளையாட்டுகளும் உள்ளன. .
முக்கிய விஷயம்.. கலங்கட் பீச் கரையை நீங்கள் தொட்டதுமே பல ப்ரோக்கர்கள் உங்களை சுற்றி சுற்றி வருவார்கள்... இந்த விளையாட்டுகளுக்கு அழைத்த படி.. டிக்கெட்டுக்கு மேல் 100 அல்லது 200 ரூபாய் வைத்து இவர்கள் சொல்கிறார்கள். அரசாங்கமே மொத்தமாய் அனைத்து போட்டிற்கும் சேர்த்து டிக்கெட் தருகிறது. அது எந்த இடம் என பார்த்து அங்கு சென்று டிக்கெட் வாங்கி கொள்ளலாம். அங்கு பார்கெயின் எதுவும் செய்ய முடியாது ( வேறு சில பீச்களில் தனி நபர்களே இத்தகைய விளையாட்டுகள் நடத்துகிறார்கள். அவர்கள் விலை சற்று அதிகம் சொல்வர். அங்கு பார்கெயின் செய்ய முடியும் )
முதலிலேயே சொன்னது போல பாகா & கலங்கட் - இந்த இரு பீச்களில் தான் வாட்டர் ஸ்போர்ட்ஸ் நிறைய இருக்கும். கலங்கட் மிக அதிக கூட்டம் இருக்கும். எனவே நீங்கள் விளையாடி முடிக்க நேரமாகும். பாகா - கூட்டம் சற்று குறைவு எனவே நன்கு என்ஜாய் செய்யலாம்..
கோவா செல்லும் எவராலும் - அங்கிருக்கும் எல்லா பீச்களையும் பார்ப்பது கடினம். பாகா மற்றும் கலங்கட் - இரண்டுமே தவற விடக்கூடாத பீச்...
***********
கோவா தலைநகரில் இனியதொரு கப்பல் பயணம்