Tuesday, February 28, 2017

வானவில்- லன்ச் பாக்ஸ் சினிமா - அதிமுக அரசியல் -சென்னை கிளைமேட்

லன்ச் பாக்ஸ் ( ஹிந்தி )

மும்பையில் டப்பா வாலாக்கள் மதிய சாப்பாட்டை  கொண்டு வந்து தரும்போது இருவரின் சாப்பாடு முற்றிலும் மாறிப்போய் விடுகிறது. இதில் ஒரு வித்தியாச காதல்  உதிக்கிறது;

Related image

ஆண் - மனைவியை இழந்தவன்- ஓரிரு  மாதத்தில் ரிட்டையர் ஆக போகிறவன்.. பெண்.. கணவனால் முழுதும் நிராகரிக்கப்படும் ஒருத்தி.. மேலும் கணவன் இன்னொரு பெண்ணோடு உள்ள தொடர்பினால் இவளை கண்டு கொள்வதே இல்லை..

இந்த இருவருக்கும் கடிதம் மூலம் காதல்  வளர்கிறது. ஒரு கட்டத்தில் அந்த பெண் கணவனை தூக்கி எறிந்து விட்டு வெளியே வர நினைக்கிறாள்.. கடித காதலனுடன் அவள் இணைந்தாளா என்ற கேள்விக்கு பதில் சொல்லாமல் விடையை நம் ஊகத்திற்கு விட்டு படத்தை நிறைவு செயகிறார்கள்

நிச்சயம் வித்யாசமான படம் .. சந்தேகமே இல்லை. இர்பான் கான் மற்றும் நிம்ரத் கவுர் நடிப்பு  அட்டகாசம். திரைக்கதை - இயக்கம் இரண்டும் பாராட்டும் வண்ணம் இருந்தது.

வசூல் ரீதியிலும் வெற்றி பெற்ற இப்படத்தை ..........நல்ல படம் விரும்புவோருக்கு நிச்சயம் பரிந்துரைக்கிறேன் !

டெக்கான் கிரானிக்கில்

டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில பதிப்பு சென்னைக்கு வரும் முன் டெக்கான் கிரானிக்கில் பத்திரிக்கை ஒரு கலக்கு கலக்கியது; டைம்ஸ் ஆப் இந்தியா வந்த பின் டெக்கான் சுத்தமாய் படுத்து விட்டது என நினைக்கிறேன்.

பல பெட்ரோல் பங்குகளில் காலை வேளை டெக்கான் கிரானிக்கில் பத்திரிக்கை இலவசமாய் தருகிறார்கள். புதிதாக வந்த பத்திரிக்கைக்கு தான் இப்படி பிரபலமாகும் வரை இலவசமாய் தரும் வேலை நடக்கும். இங்கு டெக்கான் கிரானிக்கில் வந்து பல ஆண்டுகள் ஆனபின்னும் இது நடக்கிறது. பல மாதங்களாக கவனிக்கிறேன். இது தொடர்கிறது ! பத்திரிக்கை நடத்துவது எவ்வளவு பெரிய கஷ்டமான காரியமாக மாறி வருகிறது !!

ரசித்த பதிவு - ஹானர்ஸ் செல்வகுமார்

பதிவர் யுவகிருஷ்ணா போலியோவால் பாதிக்கப்பட்டு - கல்லூரியில் சீட்டு மறுக்கப்பட்டு போராடி, கொஞ்சம் கொஞ்சமாய் வாழ்வில் உயர்ந்த செல்வகுமார் என்பவரை குறித்து எழுதிய கட்டுரை - அற்புதமானதோர் தன்னம்பிக்கை கட்டுரை.. 

இக்கட்டுரையை நீங்கள் இங்கு வாசிக்கலாம் !

//அனுதாபம் என்பதும் ஒருவகை அன்புதான். அதை மறுக்கக்கூடாது. நாம் மற்றவர்களிடமிருந்து கொஞ்சம் மாறுபட்டிருக்கிறோம் என்று அவர்கள் நம் மீது அன்பு செலுத்துகிறார்கள். திருப்பரங்குன்றம் கோயில் படிகளில் நான் தவழ்ந்து ஏறும்போது சில வடநாட்டு யாத்ரீகர்கள் காசு கொடுப்பார்கள். கவுரவம் பார்க்காமல் அதை வாங்கிக் கொள்வேன். மகிழ்ச்சியோடு போவார்கள். அந்த காசை கொண்டுபோய் கோயில் உண்டியில் போடுவேன். ‘பிச்சைக்காரன்னு நெனைச்சியா?’ என்று அவர்களிடம் நான் கோபத்தை காட்டியிருந்தால், அவர்களது அன்பை மறுக்கக்கூடியவனாக ஆகியிருப்பேன். ஏ.ஆர்.ரகுமான், ஆஸ்கர் விருது வாங்கும் மேடையில் சொன்னாரே, ‘அன்பு வழி என் வழி’ என்று. என்னுடைய வழியும் அதுதான். அன்பு வழியை தேர்ந்தெடுப்பவர்களுக்கு தோல்வியே இல்லை// 

அருமை !

அழகு கார்னர் 

மஞ்சிமா மோகன் 

பயணத்துக்கு தமிழில் ஒரு டிவி !!

தமிழில் ட்ராவல் XP என்றொரு சானல் அண்மை காலமாக ஒளிபரப்பாகி வருகிறது;தமிழ் டப்பிங்கில் இந்தியா மற்றும் உலக நாடுகள் பலவற்றை சுற்றி .காட்டுகிறார்கள். மேலும் அங்குள்ள சிறப்பம்சங்களும் பேசுகிறார்கள்.பயணத்தில் ஈடுபட்டுள்ளோர்க்கு இந்த சானல் நிச்சயம் சுவாரஸ்யமாக இருக்கும் !

அதிமுக அரசியல் 

பிரேக்கிங் நியூஸ் எல்லாம் முடிந்து - ஆட்சி (!!) பொறுமையாக துவங்கி  விட்டது.

ஜெ அவர்கள் விலக்கி வைத்த TTV தினகரன் ஒரே நாளில் கட்சியில் சேர்க்கப்பட்டு அன்றே துணை பொது செயலாளர் ஆனதெல்லாம் அநியாயம் ! தொண்டர்கள் இதையெல்லாம் கேள்வி கேட்கவே மாட்டார்களா?

இன்னொரு பக்கம் செங்கோட்டையன் இந்த ஆட்சி சசிகலா வழி காட்டுதலின் படி தான் நடக்கிறது என்று பேட்டி  கொடுக்கிறார். கொடுமைடா சாமி !

அலுவலகத்தில் சில தீவிர அதிமுக நண்பர்கள்  இருக்கிறார்கள்.அவர்கள் எல்லாருமே சென்னைக்கு வெளியே சொந்த ஊரை  கொண்டவர்கள். சசிகலாவை தீவிரமாக  வெறுக்கிறார்கள். பன்னீர் மற்றும் தீபா தான் உண்மையான அதிமுக என சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். (தீபாவை எப்படி சார் ஏத்துக்குறாங்க !!)

அடுத்த சில வருடங்களில் அதிமுக மிக மிக  வலுவிழக்கும்.எப்போது சட்ட மன்ற தேர்தல் நடந்தாலும் திமுக எளிதில் நிச்சயம் வெற்றி  பெறும் (சட்ட மன்ற தேர்தல் என்று தான் சொன்னேன். பஞ்சாயத்து தேர்தல் எப்படி போகும் என தெரிய  வில்லை; பல நேரம் ஆளும் கட்சி தான்  பஞ்சாயத்து தேர்தலில் பல தகிடுதத்தங்களுடன் ஜெயிக்கும் )

மிக வலுவிழந்த ஒரு முதல்வர் நீண்ட நாள் நீடிப்பது தமிழகத்திற்கு எந்த விதத்திலும் நல்லது இல்லை.. ! புது investments வராது;  நல்ல ப்ராஜெக்ட்கள் கிடைக்காது ; மாநிலத்தின் முன்னேற்றமே சற்று  பின் தங்கி விடும் !!

சென்னை கிளைமேட் 

என்னை போல காலையில் வாக்கிங் போகும் ஆசாமிகளுக்கு சென்னையின்  கிளைமேட் ஒரு நூதனமான பிரச்னையை தருகிறது; காலை 6 மணி வரை வெளிச்சம் எட்டி பார்க்காமல் இருளோன்னு இருக்கிறது. சரி வெளிச்சம் வரட்டும் என்றே காத்திருப்பேன் (இருட்டில் நடக்கும் போது பாம்பை மிதித்தால் என்னாவது என்ற பயம் ஒரு காரணம்... !)  ஆறு - ஆறே காலுக்கு வெளிச்சம்  வருகிறது;அடுத்த அரை மணியில் வெய்யில் சுளீர் என அடிக்க ஆரம்பித்து  விடுகிறது. ஒன்றரை மணி நேரம் நடை + ஓட்டத்தில் 10 கிலோ  மீட்டர் தூரம் தினம் கடக்க  நினைப்பேன். இந்த இருள் + வெய்யில் சேர்ந்து செய்யும் சதியால் சில நேரம்  முடிவதில்லை.

கோடை துவங்குகிறது.. பார்க்கலாம்.. இனியாவது வெய்யில் அதிகம் இல்லா வெளிச்சம் ஒரு மணி நேரமாவது நீடிக்கிறதா என !

Monday, February 27, 2017

எமன் சினிமா விமர்சனம்

ரே வரியில் சொல்லணும் என்றால் "தந்தையை கொன்றவனை மகன் பழி வாங்கும் கதை"! ஆனால் பின்புலம் அரசியல் என்பதால் அவ்வளவு எளிதாக இல்லை திரைக்கதை;

மண்ணாசை , பெண்ணாசை..... இந்த இரண்டையும் விட மோசமானது  பதவி ஆசை..படம் தொட்டு செல்லும் முக்கிய செய்தி இது !

Image result for எமன் movie

பாசிட்டிவ் 

எடுத்து கொண்ட விஷயத்தை விட்டு அகலாமல் செல்கிறது கதை...அதிகம் பழக்கமில்லாத அரசியல் களம் என்பது இன்னொரு சுவாரஸ்யம்.

ஒன்றுமே இல்லாத ஒருத்தன் அரசியலில் எப்படி வளர முடியும் என்கிற "அமைதி படை" டைப் கதை ஓரளவு ஈர்க்கிறது

அரசியல் வாதிகளை பற்றி தைரியமாய் சொன்ன விதம் பாராட்டுக்குரியது; கதையில் பூத கண்ணாடி வைத்து தேடினாலும் நல்ல அரசியல் வாதியே காணும் ! ஹீரோவே கூட சின்ன பதவிக்கு வரும் முன் தன் முக்கிய எதிரிகளை போட்டு தள்ளி விட்டு தான் வருகிறார்.(நான் செய்வது குற்றம் இல்லை; தப்பு செய்தவர்களுக்கு கொடுப்பதற்குபேர் தண்டனை  என்கிறார்..)

சார்லி மற்றும் விஜய் ஆண்டனியின் தந்தையை கொன்றவராய் வரும் முக்கிய வில்லன்..இப்படி சிலரின் நடிப்பு perfect !

நெகட்டிவ் 

ஒரு சிலர் தவிர கதையில் வரும் எல்லா பாத்திரங்களும் ஹீரோவை போட்டு தள்ள பார்க்கிறார்கள். வில்லன்கள்/ கெட்டவர்கள் எண்ணிக்கையை எண்ணவே முடியாது !!

யாராவது யாரையாவது போட்டு தள்ள வேண்டும் என்றே பெரும்பாலும் பேசுகிறார்கள். ரத்தம்/வன்முறை அதிகம் என்பதால் - படம் பெண்களுக்கு பிடிக்காமல் போக வாய்ப்புகள் அதிகம்

விஜய் ஆண்டனி பொதுவாய் அண்டர் பிளே  தான் செய்வார்; உணர்ச்சிகளை அதிகம் காட்டாத நடிப்பு அவருடையது; ஆனால் இந்த பாத்திரத்துக்கு - சில காட்சிகளிலாவது இன்னும் கொஞ்சம் பெட்டராக நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்

Image result for எமன் movie

ஹீரோயின்.. ஸ்கொப்பும் சரி..நடிப்பு, அழகு எல்லாமே சுமார் தான்.

தனது சொந்த படத்தில் பாடல்களை நன்றாய் தருவார் விஜய் ஆண்டனி.இம்முறை அதுவும் தவறி விட்டது

மொத்தத்தில் 

Good ....but could have been better !

அரசியல் என்கிற வித்தியாச கதை களனுக்காக ஒரு முறை காணலாம் இந்த எமனை !

Friday, February 24, 2017

வானவில்: Ghasi Attack- தந்திரா - மிருணாளினி-ஆசிஃப் பிரியாணி

பார்த்த படம் : Ghasi Attack

1971ல் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடலில் நடந்த ஒரு சண்டையை பற்றி சொல்லும் படம் தான் காசீ அட்டாக்.

இந்தியாவில் முதல் submarine story என்று பெரும் எதிர்பார்ப்புடன்  கடந்த வாரம் வெளியானது. பாகுபலி புகழ் ராணா ஹீரோவாக நடிக்க, இன்னும் சிலர் முக்கிய பாத்திரங்களில்..

Image result for ghazi attack

உண்மையில் படம் என்னை பெரிதாக ஈர்க்க வில்லை; நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவங்கள் ஏதும் இல்லை; போர் படத்தில் எந்த காட்சியும் நம்மை சீட் நுனிக்கு கொண்டு செல்லவில்லை; ஜெயிக்க போவது இந்தியா தான்  என முன்பே தெரியும் என்பதால் - பாத்திரங்களில் யார் உயிரோடு மிஞ்சுவர் என்ற எதிர்பார்ப்பு மட்டுமே இருக்கிறது. மேலும் படம் மிக மெதுவாக நகர்கிறது

காசீ அட்டாக் - Avoidable

ரசித்த பதிவு.. சாணை பிடிப்பவரின் பேட்டி

வீடுதிரும்பலில் முன்பெல்லாம் சாதாரண மனிதர்களின் பேட்டி இடம் பெறும். அத்தகைய ஓர் பேட்டியை விகடனில்  வாசிக்க முடிந்தது. சாணை பிடிப்பவரின் பேட்டி ! நிச்சயம் நமது எழுத்தை விட பல மடங்கு அருமையாக எழுதியிருக்கிறார்கள்.. விகடனில்.. குறிப்பாக அந்த நிருபர் அதிகாலை  துவங்கி நாள் முழுதும் அந்த சாணை பிடிப்பவருடன் பயணித்தது ஆச்சரியமாக உள்ளது.

வானவில்லில் சாணை பிடிப்பவருடன் பேசியதை ஒருமுறை குறிப்பிட்டிருந்தேன். இவர்களை காணும் போதல்லாம் எனக்கு வரும் ஆச்சரியம் எப்படி அவ்வளவு வெயிட் தூக்கி கொண்டு இவ்வளவு தூரம் நடக்கிறார்கள் என்பது தான். இப்பதிவு அதை பற்றி மிக முக்கியமாக பேசுகிறது.

பேட்டியின் முடிவில் இந்த தொழில் தான் எனக்கு சோறு போடுது; ஆனா எங்க காலத்து பிறகு இந்த தொழிலே இருக்க கூடாது என்று அவர் சொல்லுவதும் அதற்கான காரணமும் நெகிழ்ச்சி ..

பேட்டியை இங்கு வாசிக்கலாம்.

அழகு கார்னர் 

Mirnalini Ravi (Dubsmash) - Nagal
மிருணாளினி 
Image result for mrinalini ravi




Dubsmash புகழ் மிருணாளினி முதல் முறை தமிழ் படமொன்றில் நடிக்கிறார். பார்க்கலாம்.. அம்மணி பெரிய திரையில் சாதிக்கிறாரா என !

உணவகம்: ஆசிஃப் பிரியாணி

Demonetization துன்பம் உச்சத்தில் இருந்த நேரம்.. ஒரு மதிய நேரம் ஆசிஃபி பிரியாணி கடைக்கு சென்றோம். அந்த நேரம் எல்லா கடைகளிலும் டெபிட்/ கிரெடிட் கார்ட் கூட இயங்கவில்லை. இருப்பினும் கடை ஹவுஸ் புல் ஆக இருந்தது !

எல்லா உணவு வகையும் 250 முதல் 300 ரூபாய் ரேஞ்சிலேயே இருக்கிறது; விலை சற்று அதிகம் தான். இருப்பினும் அளவு கூடுதலாக உள்ளது; ஒரு பிரியாணி என்று ஆர்டர் செய்தால் - நிச்சயம் அதனை ஒரே ஆள் சாப்பிட முடியாது; 2 பிரியாணி வாங்கினால் 3 பேர் சாப்பிடலாம்.

அட்டகாசமான டேஸ்ட் .. பிற கடை பிரியாணிகளை விட கொஞ்சம் வித்யாசமாக இருந்தது; நெய் அடிச்சு விட்டிருந்தனர் ! நிச்சயம் கொஞ்சம் குறைக்கலாம் !

பிரியாணி பிரியர்கள் அவசியம் ஒரு முறை விசிட் அடிக்கலாம்.. !

ஆசிப் பிரியாணி கடைக்கு சென்னையில் 10க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன.. நாங்கள் சாப்பிட்டது மடிப்பாக்கத்தில் !

கிரிக்கெட் கார்னர் 


இந்திய ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட்டில் இந்தியா இவ்வளவு மோசமாக உதை வாங்கும் என யாரும் நினைத்திருக்க முடியாது. கடைசி 2 பவுலர்கள் தவிர மற்ற எல்லாருமே பேட்டிங் செய்ய கூடிய இந்திய அணி 105 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது அநியாயம். போலவே கடைசி விக்கெட்டுக்கு அவர்களை 60 ரன் அடிக்க விட்டதும் ! இந்த பிட்சில் 350 போன்ற நான்காவது இன்னிங்ஸ் ஸ்கொர் அடிப்பதெல்லாம் நடக்காத காரியம். அடுத்தடுத்த மேட்சிலாவது இந்தியா நிமிரும் என நம்புவோம் !


என்னா பாட்டுடே : தந்திரா 

அதே கண்கள் படத்தின் தந்திரா பாடல்.. நெகட்டிவ் பாத்திரத்தில் வரும் பெண்மணியை அடிப்படையாக கொண்டது. படத்தில் ஆங்காங்கு வரும் இப்பாட்டில் அதிசயிக்க வைப்பது ஒவ்வொரு முறை பாடல் வரும்போதும் அந்த பெண் பாத்திரம் தரும் ஆச்சரியம்..



கீச்சு கிளிகள் ..(From Twitter )

பெருங்காயம்™ ‏@Perungayam 

நானும் இந்த தமிழ்நாட்டுக்கு ஒரு நல்லது நடந்துடாதான்னு காத்துகிட்டு இருக்கேன் அத தவிர எல்லாம் நடக்குது

மதுரையான் ‏@CitizenSaravana

சசிகலாவை ஒரு நாள் கூட முதல்வராக இருக்கவிடாமல் செய்ததே ஓபிஎஸ்’ன் முதல் வெற்றிதான். தமிழகமக்கள் இதை எப்போதும் மறக்கமாட்டார்கள்

ஆல்தோட்டபூபதி ‏@thoatta

ஸ்டாலின் தன்னை பார்த்து சிரிக்காதவாறு இருக்க, சட்டசபையில் சோட்டா பீம் மாஸ்க் அணிந்து வர எடப்பாடியார் ஐடியா செய்துள்ளார்

டிமிட்ரி இவ்நோஸ்கி‏@karthekarna

எம்ஜிஆர்-அம்மா-தீபா பேரவை எம்ஜிஆர் அம்மாவுக்கு ஏன்டா தீபா பேர வைக்கணும்?

Wednesday, February 22, 2017

Airlift & Seventh day.. தவற விடக்கூடாத .படங்கள்... சினிமா விமர்சனம்

ஏர்லிப்ட் (Airlift - Hindi) 

குவைத்தில் வாழும் பிசினெஸ் மேன் அக்ஷய் குமார். 1980களில் ..... ஒரு நாள் அவர்கள் வாழ்க்கை திசை மாறுகிறது.

சதாம் ஹுசைன் குவைத் மீது குண்டு மழை பொழிகிறார். குவைத்தியர்களை கொன்று குவிக்கிறது ஈராக் ராணுவம்.


Related image

பணக்காரரான அக்ஷய் குமார் நினைத்தால் தன் குடும்பத்தோடு சேர்ந்து விமானத்தில் இந்தியாவிற்கு பறந்திருக்க முடியும். ஆனால் முதலில் தனது அலுவலக ஊழியர்கள்.. பின்னர் அங்கு வாழும் இந்தியர்.. இவர்களை காப்பாற்ற எண்ணி - அவரது நண்பர்களுடன் சேர்ந்து - அனைவரும் ஒன்றாய் இந்தியா செல்ல எடுக்கும் முயற்சிகளே  .. படம்.

இறுதியில் ......இந்தியன் ஏர்லைன் நிறுவனம் - 488 விமானங்கள் மூலம் 1500க்கும் மேற்பட்ட இந்தியர்களை பத்திரமாக இந்தியா கொண்டு வந்து சேர்த்த சம்பவத்துடன் படம் நிறைகிறது..

ஆனால் அது நடப்பதற்குள் அக்ஷய் மற்றும் குழு மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிறார்கள். குறிப்பாக இந்திய அரசியல்வாதிகள்.. நமது red tapism..!!!

ஒரு நிஜ சம்பவத்தை எப்படி சுவாரஸ்ய படமாக்கலாம் என்பதற்கு இப்படம் ஓர் நல்ல  உதாரணம்.

அக்ஷய் குமார்.. அட்டகாசமான நடிப்பு. படத்தை நாம் பெரிதும் ரசிக்க மிக முக்கிய காரணம் இவரே. சாதாரண மனிதரான இவர் - ஒரு உள்ளுணர்வு உந்தலில் தான் அனைவருக்குமாக சேர்ந்து .போராடுகிறார். துவக்கத்தில் மனைவியே இதனை எதிர்க்கிறார்.. "ஏன் வாழ்க்கையை ரிஸ்க் எடுக்கிறாய்.. நாம் மட்டும் இந்தியா போய் விடலாமே" என்கிறார். போகப்போக அவரும் புரிந்து கொண்டு  ஒத்துழைக்கிறார்.

அக்ஷய் குமாரை எப்போதும் எதிர் கேள்வி கேட்கும் ஒரு பாத்திரம் சுவாரஸ்யமான படைப்பு; போலவே குவைத்தில் இருக்கும் சதாம் படையின் தலைவராக வருபவரும் இயல்பான நடிப்பிலேயே மிரட்டுகிறார்

Image result for airlift

கடைசி 10 நிமிடங்களில் - தேசிய உணர்வை தட்டி எழுப்பி எமோஷனல் ஆக முடிக்கிறார்கள்.

2016 ஜனவரியில் வெளியான இந்த இந்தி படம் .. ஒரே நேரம் விமர்சர்கள் பாராட்டையும் வசூலையும் சேர்த்தது..

தவற விடக்கூடாத ஒரு நல்ல படம்.. Airlift !

செவென்த் டே (Seventh day ) 

மலையாள திரை உலகில் தான் இப்படிப்பட்ட அழகிய த்ரில்லர்கள் காண கிடைக்கின்றன.

போலீஸ் அதிகாரி பிரிதிவிராஜ் - சாலையில் செல்லும்போது  - அவரது ஜீப் ஒரு  பைக் மீது மோதுகிறது. விபத்தில் அடிபட்டவனைக் கொண்டு போய் மருத்துவமனையில்  சேர்க்கிறார்.ஆனால் அன்றிரவே அவன் தற்கொலை செய்து கொள்கிறான். ஏன் அப்படி  நடந்தது என அவர் செய்யும் இன்வெஸ்டிகேஷன்  தான் படம் !

மேலே சொன்ன 2 வரியிலேயே பல விஷயம் தலை கீழாவது தான் திரைக்கதை ! படம் முழுதுமே அந்த மர்மத்தின் பல விஷயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுகிறது;  கடைசி 10 நிமிடத்தில் ஏராள சஸ்பென்ஸ்கள்  தெரிய வருவது.. செம சுவாரஸ்யம்; படம் முடிந்த பின் ஒரு திகீர் சஸ்பென்ஸ்சும் போனஸாக சொல்லி ஸ்டைலாக படத்தை முடிக்கிறார்கள்.

பிரிதிவிராஜ் மிக இயல்பான நடிப்பு; படத்தை முழுவதும் சுமப்பது  இவரே. நம்ம ஜனனி ஐயர் அழகிய சிறு பாத்திரத்தில்  வருகிறார்.

Image result for the seventh day malayalam movie

குற்றத்தின் காரணம் பணம் என்ற ரீதியில் சென்று.. கிளைமாக்சில் பெண் தான் அடிப்படை என மாறி - முடியும் நிமிடம் ....எல்லாவற்றிற்கும் மேல் பணம் இருப்பதை சொல்லி  அசத்துகிறார்கள்.

மாறிக்கொண்டே இருக்கும் பாத்திரங்கள்.. உண்மைகள்.. நிச்சயம் ஒரு வித்தியாச அனுபவம் தரும்.

த்ரில்லர் விரும்பிகள் மிக ரசிக்க கூடிய படம் - செவென்த் டே !

Monday, February 20, 2017

படிப்பில் ஜெயிப்போர் வாழ்வில் தோற்கிறார்களா? ஸ்டேட் பஸ்ட் மாணவன் பேட்டி

மாநிலத்தில் முதல் மாணவனாய் வந்த ஸ்ரீநாத் பேட்டி தொடர்கிறது.

முதல் பகுதி : இங்கே

*****
நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் அந்த அறையில் ஒரு ஷெல்ப் - அது முழுக்க ஸ்ரீநாத் வாங்கிய பரிசு பொருட்கள், கோப்பைகள் என நிரம்பி வழிகிறது.


" ஸ்டேட் பர்ஸ்ட் வந்ததுக்கு என்ன பரிசு அம்மா - அப்பா வாங்கி தந்தாங்க? "

" கம்பியூட்டர் பழசாயிடுச்சு. அதனால் புது கம்பியூட்டர் வாங்கி தந்தாங்க. அப்புறம் நிறைய ஷீல்ட் வந்துட்டதால அதை வைக்கிறதுக்கு இதோ இந்த தனி ஷெல்ப் வாங்கி தந்தாங்க"

"டென்த் படிக்கும்போது வேற பொழுதுபோக்கு ஏதும் கிடையாதா ?"

அப்படி எல்லாம் இல்லை; வாலிபால் கிரிக்கெட் ரெண்டுமே சின்ன வயசிலிருந்து தொடர்ந்து ஆடுறேன். இரண்டிலும் தஞ்சை டிஸ்ட்ரிக்டுக்காக ஆடிருக்கேன். பத்தாவதில் கூட மேட்ச் ஆட போனேன் டீச்சர்கள் " ஸ்ரீநாத் மேட்ச் போவதால் மார்க் குறைய கூடாது பாத்துக்க என சொல்லிட்டு அனுமதிச்சாங்க "

" இவ்ளோ ஏன் அங்கிள் .. இங்கிலீஷ் ஒன் பரீட்சை முடிஞ்சு அடுத்த நாள் இங்கிலீஷ் டூ பரீட்சை. நான் மறுநாள் பரீட்சை வச்சிக்கிட்டு ஈவனிங் போயி கிரிக்கெட் ஆடிட்டுருன்தேன். எங்க ஏரியாவில் ஒரு ஸ்கூல் டீச்சர் இருக்கார் கரக்ட்டா அவர் பார்த்துட்டு திட்டினார்"

"பொதுவா பத்தாவதில் முதல் ரேன்க் வருபவர்கள் + 2 வில் மறுபடி முதல் மார்க் வாங்குவதில்லை. இது ஏன்னு நினைக்கிறே ?

ஸ்டேட் பஸ்ட் வந்தோன நிறைய பேர் பாராட்டி பாராட்டி கொஞ்சம் ஓவர் கான்பிடெண்ட் ஆகிடுராங்கன்னு நினைக்கிறேன். அத்தோட ஸ்டேட் பஸ்ட் வாங்க நிறைய உழைப்போட கொஞ்சோண்டு லக்கும் வேணும் அங்கிள். அந்த லக் ஒரு தடவை வரலாம் மறுபடி அதே ஆளுக்கு இன்னொரு தடவை லக் அடிக்கிறது கஷ்டம் தானே?"

முதல்வருடன் பரிசு வாங்குகிற மாதிரி அங்கிருக்கும் படத்தை பார்த்து விட்டு அந்த அனுபவம் பற்றி கேட்க,

முதல்வருக்கு இடப்பக்கம் முதலாவதாக ஸ்ரீநாத்

" முதல் மூணு ரேன்க் வாங்கியவர்கள் முதல்வர் கையால் பரிசு வாங்குவார்கள். என்னை தவிர ரெண்டாவது ரேன்க் வாங்கிய 6 பேர், மூணாவது ரேன்க் வாங்கிய 15 பேர் என அன்னிக்கு மொத்தம் 22 பேர் வந்திருந்தாங்க. முதல்வர் கிட்டே எப்படி நடந்து போகணும், எப்படி கை நீட்டி பரிசு வாங்கணும் என ரிகர்சல் எல்லாம் ரொம்ப நேரம் நடந்தது.

முதல்வர் எங்களை வந்து பார்த்து பரிசுகளை கொடுத்தார் ஒரு நிமிஷம் போல தான் அவர் கூட இருக்க முடிந்தது; வேறு விழா இருந்ததால் கிளம்ப வேண்டியாகிடுச்சுன்னு நினைக்கிறேன் "

உனக்கு அண்ணன் தம்பி யாரும் இருக்காங்களா ?

எனக்கு ஒரே அண்ணன். இஞ்சினயரிங் முடிச்சிட்டு வேலைக்கு போயிட்டான். அண்ணன் என் அளவு அதிகமா மார்க் வாங்கலை ஆனா அவன் செம புத்திசாலி. எதையும் உடனே கத்துப்பான் சுவிம்மிங், கார் டிரைவிங் இப்படி எதுவுமே டக்கன்னு கத்துக்கிட்டான். அவன் தான் எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷன்

அண்ணனை பற்றி பேசும்போது அன்பும், மகிழ்ச்சியும் நிரம்ப கண்கள் விரிய பேசுகிறான்

படிப்பில் ஜெயிப்பது ஒரு பக்கம். வாழ்க்கையில் ஜெயிப்பது என்பது இன்னொரு பக்கம். நமக்கு தெரிஞ்ச பிசினஸ் அல்லது பொது உலகில் பிரபலமா இருக்கவங்க யாரும் படிப்பில் முதல் மார்க் வாங்கினவங்க இல்லை. அதே போல் மாநிலத்தில் முதல் மார்க் வாங்கியவங்க அப்புறம் என்ன ஆனாங்க அப்படின்னும் தெரியவே இல்லை. இல்லியா ? இது ஏன்னு நீ யோசிச்சிருக்கியா ?

ம்ம் மே பீ படிப்பு, படிப்புன்னு அவங்க மத்த விஷயத்தில் கான்சென்ட்ரேட் பண்ணாம இருந்திருப்பாங்களோ என்னவோ ? தெரியலை அங்கிள்.

என்னை பொறுத்த வரை நிச்சயம் எஞ்சியரிங் சம்பந்தமா படிக்க போறேன். அது என்ன படிப்பு அப்படிங்கறது நான் அதுக்கான என்ட்ரன்ஸ்சில் வாங்குற மார்க் பொறுத்து தெரியும்

இன்னொண்ணு : நிச்சயம் படிச்சு முடிச்சு வேலைக்கு போனபிறகு மத்தவங்களுக்கு என்னால முடிஞ்ச உதவி பண்ணனும்னு யோசனை இருக்கு. அது என்ன விதமானதுன்னு தெரியலை. ஆனா நிச்சயம் எதோ ஒண்ணு செய்வேன்.

(அலாக்ரிட்டி என்ற நிறுவனத்தில் பணி புரியும் போது அதன் தலைவரான அமோல் கர்னாட் (சமீபத்தில் தான் புற்று நோய்க்கு இரையானார்) சொல்வார்: " முதல் ரேன்க் வாங்குறவங்க ஆபிசில் ஜெயிக்க மாட்டாங்க என்று சொல்வது ரொம்ப பெரிய தப்பு ! முதல் ரேன்க் வாங்குவது சாமான்ய விஷயம் இல்லை. அதுக்கு எவ்வளவு உழைப்பு, டிசிப்ளின், Focus எல்லாம் வேணும் ! அப்படிப்பட்டவன் கம்பனிக்காக கண்டிப்பா நல்லா உழைக்கவும் தான் செய்வான். அவனால் கம்பனியில் ஷைன் பண்ண முடியலை என்றால் நம்ம சிஸ்டத்தில் தான் எதோ தப்பு !" )

அரசு தேர்வில் நல்ல மார்க் எடுக்க பொதுவா என்ன செய்யணும் ?

நான் என்ன செஞ்சேன்னு சொல்றேன். கிளாசில் நன்கு பாடம் கவனிச்சுடுவேன் அது ரொம்ப முக்கியம். டவுட் வந்தா உடனே எழுந்து கேட்டுடுவேன். சில டீச்சர்ஸ் Flow போயிடும்னு கடைசியா கேட்க சொல்லுவாங்க அப்போ மட்டும் கடைசியா கேட்பேன். இல்லாட்டி தனியா பார்த்தாவது கேட்பேன். நான் டியூஷன் ஏதும் போகலை அதனால் கிளாசில் சொல்லி கொடுப்பது தான் முக்கியம் (முதல் ரேன்க் வாங்கியவன் டியூஷன் ஏதும் போகலை என்கிற தகவல் ஆச்சரியமா இருந்தது )

தினம் கொஞ்ச நேரம் கிளாசில் கவனிச்சதை மறுபடி ஒரு தடவை படிச்சு பார்ப்பேன். சனி, ஞாயிறு நல்லா படிப்பேன். பாடத்தை முதல் முறை படிக்கும் போது கதை புக் படிக்கிற மாதிரி படிச்சு அதில் என்ன இருக்குனு தெரிஞ்சுப்பேன். பள்ளிகளில் வைக்கிற டெஸ்ட், அது டெய்லி டெஸ்ட்டாஇருந்தாலும் அதுக்கு ஒழுங்கா படிச்சிடுவேன்

எல்லா பரிட்சையும் டைம் சரியா மேனேஜ் பண்ணி எழுதணும். அது ரொம்ப முக்கியம். முப்பது நிமிஷம் முன்னாள் எல்லா கேள்வியும் எழுதி முடிக்க திட்டம் போடணும். அப்போ தான் 15 நிமிஷம் முன்பாவது முடிக்கலாம். அந்த 15 நிமிஷம் திரும்ப படிக்க, அண்டர்லைன் செய்ய யூஸ் ஆகும்.

பிளாக், ப்ளூ , வயலட் - இந்த மூணு பேனா மட்டும் வச்சிருப்பேன்; பளுவில் எழுதுவேன் சில நேரம் தலைப்பு ( Heading ) மட்டும் பிளாக் கலரில் தருவேன். வயலட் கலர் முக்கிய பாயிண்ட்ஸ் அண்டர்லைன் செஞ்சு காட்ட பயன்படுத்துவேன்

எழுதும் போது ஒண்ணு 1,2,3 ன்னு பாயிண்ட் வைஸ் எழுதணும். இல்லாட்டி குட்டி குட்டி தலைப்பு போட்டு அதற்குள் மற்ற விஷயங்கள் எழுதணும். அப்ப தான் திருத்துரவங்களுக்கு ஈசியா இருக்கும்

அந்த கேள்விக்கு சம்பந்தமான எல்லா ரிலவன்ட் பாயிண்ட்டும் எழுதிடணும். எதையும் மிஸ் பண்ண கூடாது. அதே நேரம் தேவையில்லாத கதையும் விட கூடாது. எவ்ளோ எழுதுறோம் என்பது முக்கியமே இல்லை. சரியா எழுதுறோமா என்பது தான் முக்கியம்

(ஸ்ரீநாத்தை விட ஓரிரு வயது சிறியவளான என் பெண்ணும் உடன் வந்திருந்தாள். " நீ ஸ்ரீநாத் மாதிரி பஸ்ட் வரணும்னு இல்லை; ஆனா நல்ல மார்க் வாங்க உனக்கு சில ஐடியா கிடைக்கலாம்" என்று சொல்லி தான் அழைத்து சென்றிருந்தேன். பதிவு சம்பந்தப்பட்ட விஷயங்களில் பல அடி தூரம் தள்ளியே நிற்கும் அவள், படிப்பு சம்பந்தப்பட்ட பேட்டி என்பதால் தானாகவே வந்தாள். நிச்சயம் அவளுக்கு இந்த குறிப்புகள் உபயோகமாக இருந்திருக்கும் )

எந்த ஒரு ஸ்டூடன்ட் நினைச்சாலும் ஸ்டேட் பஸ்ட் வர முடியுமா?


இண்டரஸ்ட்டும், Focus ம் இருந்தால் நிச்சயம் நல்ல மார்க் யாரும் வாங்கலாம். டெண்தை பொறுத்த வரை ஹார்ட் வொர்க் பண்ணா யார் வேண்ணா ஸ்டேட் பஸ்ட் வரலாம்னு சொல்லலாம். ஆனா + 2 வில் Basic Potential -ம் கொஞ்சம் வேணும். அப்போ தான் நல்லா படிக்க முடியும்; மார்க் வாங்க முடியும்னு தோணுது

நிச்சயமா ஸ்டேட் பஸ்ட் வாங்க ஏற்கனவே சொன்ன மாதிரி முதல்ல ஹார்ட் வொர்க். அப்புறம் கொஞ்சம் அதிர்ஷ்டம் ரெண்டும் வேணும்.

****
பேசி முடித்து, புகைப்படம் எடுத்து கொண்டு விடை பெற்றேன்.

ஸ்ரீநாத்: தற்போது போனிலும், மெயிலிலும் என்னோடு தொடர்பில் இருக்கிறான். தஞ்சையில் எனக்கு கிடைத்த இன்னொரு நண்பன் !

Thursday, February 16, 2017

வானவில் :ஜெ மரண மர்மங்கள் -எடப்பாடியும் ஒ பி எஸ்சும்-காதலர் ஸ்பெஷல் நீயா நானா

பார்த்த படம் : கசபா (மலையாளம் )

மலையாளத்திலும் இப்படிப்பட்ட படங்கள் வரும் என்று இப்போது தான் தெரிந்து கொண்டேன். கமர்ஷியல் படம் எடுக்க நினைத்து படு சுமாரான படம் தரும் நம்ம தமிழ் சினிமா மாதிரியே இருக்கிறது.

கல்யாணம் ஆகாத போலீஸ் அதிகாரியாக மம்மூட்டி ! பெண்கள் எல்லாம் அவர் மேல் விழுந்து விழுந்து காதலிக்கிறார்கள். அண்ணன் அதை சைலண்ட்டாக என்ஜாய் செய்து கொண்டு அடுத்த கட்டம் செல்லாமல் போலீஸ் வேலையை பார்க்கிறார் ! விபச்சார விடுதி நடத்தும் வில்லனுக்கும் இவருக்கும் நடக்கும் Tug of war தான் படம் !

மம்மூட்டியை தவிர சொல்லி கொள்கிற மாதிரி எதுவும் இல்லை .. நம்ம சரத் குமார் மகள் வரலட்சுமி நெகட்டிவ் பாத்திரத்தில் படித்துள்ளார்.. வில்லன் கூட தமிழ் நடிகர் சம்பத் தான் ! (சென்னை 28/ கோவாவில் நடித்தவர் !)

பொழுது போகாத ஒரு ஞாயிறு மாலை பார்த்து வைத்தோம். நீங்கள் ரெண்டரை மணி நேரத்தை வீணாக்க வேண்டாம்.. !

எடப்பாடி Vs ஒ பி எஸ்

உச்ச நீதி மன்ற தீர்ப்பு நெத்தி அடியாக வந்தது; குன்ஹா என்ற அற்புத நீதிபதியின் தீர்ப்பை அப்படியே டிக் அடித்த உச்ச நீதி மன்ற நீதிபதிகள் - அவர் சொன்ன தண்டனை மற்றும் அபராதத்தையுமே சரியென உறுதி செய்ய சசிகலா ஜெயிலுக்கு செல்லும் முன் அடுத்த அடிமையை தயார் செய்தார்

எடப்பாடி பற்றி தற்போது சுழன்று வரும் ஒரு தகவல்: Demonetisation பிரச்சனையின் போது அவருக்கு மிக மிக மிக வேண்டிய ஒருவர் 5.70 கோடி - 2000 ரூபாய் நோட்டுகளுடன் பிடிக்கப்பட்டு தற்சமயம் சிறையில் உள்ளாராம்.. இவரா அடுத்த முதல்வர் என குரல்கள் எழுகின்றன.

இதுவரை கவர்னர் மௌனம் சாதித்தது சசிகலா வழக்கு தீர்ப்புக்கு தான். இனியும் தாமதம் செய்யாமல் Composite Floor test க்கு உத்தரவிடுவதே நல்லது ! அதாவது எந்த ஒருவரையும் பதவியேற்க அழைக்காமல் - சட்ட சபையில் இருவரும் ஒரு மினி தேர்தல் நடத்தி அதில் 118 ஓட்டுகள் பெறுபவர் முதல்வர் என அறிவிக்கலாம். இல்லாத பட்சம் ஜனாதிபதி ஆட்சி மற்றும் மறு தேர்தல் நடத்தலாம். இதை தவிர வேறு சாத்தியங்கள் இருப்பதாக தெரியவில்லை

100 பேர் போல எடப்பாடி பக்கம் இருப்பதால் அவர் முதல்வர் ஆகவே வாய்ப்புகள் அதிகம். இல்லையேல் மறு தேர்தல் !

நிற்க. தமிழகத்தில் முன்னாள் முதல்வர் அப்போல்லோவில் அனுமதிக்கப்பட்டது துவங்கி தொடர்ந்து ஏதேனும் ஒரு பரபரப்பு இருந்து கொண்டே தான் இருக்கிறது.

இன்னொன்று ..அப்போல்லோ மர்மம் துவங்கி, ஜல்லி கட்டு, ஆட்சி மாற்றம் என ஒவ்வொரு விஷயமும் தேவைக்கு அதிகமான காலம் ஜவ்வு மாதிரி இழுத்து கொண்டே போகிறது.. கவனித்தீர்களா?

என்னா பாட்டுடே - ஓகே கண்மணி- மலர்கள் கேட்டேன் 

காதலிப்போர் இதை காதல் பாடலாக கொள்ளலாம்; ஆனால் இதனை கடவுள் நோக்கிய பாட்டாக கூட யோசிக்க முடியும்... ! எளிய வரிகள். அருமையான மெட்டு.. சித்ராவின் குரல் அற்புதம் !

மலர்கள் கேட்டேன் வரமே தந்தனை
தண்ணீர் கேட்டேன் அமுதம் தந்தனை
எதை நான் கேட்பின் உனையே தருவாய்

காட்டில் தொலைந்தேன் வழியாய் வந்தனை
இருளில் தொலைந்தேன் ஒளியாய் வந்தனை
எதனில் தொலைந்தால் நீயே வருவாய்

பள்ளம் வீழ்ந்தேன் சிகரம் சேர்ந்தனை
வெள்ளம் வீழ்ந்தேன் கரையில் சேர்ந்தனை
எதனில் வீழ்ந்தால் உன்னிடம் சேர்ப்பாய்



டிவி பக்கம் : காதலர் தின ஸ்பெஷல்  நீயா நானா 

ஒவ்வொரு வருடமும் காதலர் தின நீயா நானா வைப்பது விஜய் டிவியின்  வழக்கம்.இம்முறை காதலும், சினிமா பாடல்களும் என்ற தலைப்பில் ஒரு மணி நேரம் பேசினர் (இப்போதெல்லாம்  பல நீயா நானா ஷோக்கள்  ஒன்றரை மணி நேரமாவது செல்கிறது; ஏனோ இந்நிகழ்ச்சி சரியே ஒரு மணி நேரத்தில் முடித்தனர் )

நன்கு பாட்டு பாடும் ஆண்கள் .. பெண்களை impress செய்ய  முயற்சிக்க,அதற்கு பெண்கள் கொடுத்த கமன்ட் எல்லாம் " நாம எந்த உலகில் இருக்கோம் ?" என யோசிக்க வைத்தது. " சார்.. அவரை அப்படியே கடிச்சு சாப்பிடலாம்  போல இருக்கு சார் " .. இது ஒரே ஒரு  உதாரணம்.

காதல் பாடல்கள் ஒரு மனிதனின் வாழ்வோடு எப்படி இணைகிறது என்ற நல்ல லைனை - நீயா நானா டீம் - கொஞ்சம் சொதப்பி விட்டனர். ஹூம் :(

அழகு கார்னர் 

Image result for manjima mohan
மஞ்சிமா மோகன்

ஜெ மரண மர்மங்கள் 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மரணம் குறித்து நக்கீரன் கோபால் அவர்கள் 
எழுப்பும் சில கேள்விகள் இந்த வீடியோவில் உள்ளது. 

மிக முக்கியமான கேள்வி.. ICU வில் CCTV இல்லாதது சரி.. அவர் இருந்த தளத்தில் காரிடார் 
துவங்கி மற்ற அனைத்து இடங்களிலும் எப்போதும் இருக்கும் CCTV காமிராக்கள் ஏன் வேலை 
செய்யவில்லை அல்லது அகற்றப்பட்டன? 

மேலும் செப்டிசீமியா நோய் என்றும்,இன்னும் முன்னால் வந்திருந்தால் பிழைத்திருக்கலாம் 
என்றும் பீலே சொல்வதை சுட்டி காட்டி - முன்னே ஏன் அழைத்து செல்ல வில்லை 
என்பதற்கும் நிச்சயம் பதில் தேவை 

இந்த விஷயத்தில் நியாயமான நீதி விசாரணை நடந்தால் பல உண்மைகள் வெளிவரும். 

Monday, February 13, 2017

பத்தாம் வகுப்பில் அதிக மார்க் வாங்குவது எப்படி? மாநிலத்தில் முதல் மாணவன் ஸ்ரீநாத் - பேட்டி

மீபத்தில் தஞ்சை சென்ற போது அண்ணனும் நானும் பைக்கில் சென்று கொண்டிருக்கிறோம். வண்டியை திடீரென நிறுத்திவிட்டு " அங்கே பார்" என்றார் அண்ணன்.

ஒரு வீட்டின் காம்பவுண்டுக்குள் இரண்டு சிறுவர்கள் கிரிக்கெட் ஆடி கொண்டிருந்தனர். " ஸ்ரீ .. இங்கே வா " என்று கூப்பிட்டார். " என்ன அங்கிள்" என்ற படி கிரிக்கெட் பேட்டுடன் ஓடிவந்தான் அந்த சிறுவன்.

" அந்த 3 மார்க் என்ன ஆச்சு? ".

சற்று தயக்கத்துடன் " தமிழில் 97 தான் போடுவாங்க அங்கிள்; புல் மார்க் போட மாட்டாங்க " என்றபடி வெட்கத்தில் நெளிந்தான்.

அண்ணன் அந்த சிறுவனை எனக்கு அறிமுகபடுத்தினார் " இவன் பேரு ஸ்ரீநாத்; போன வருஷம் ஸ்டேட் பஸ்ட். 497 மார்க். 4 சப்ஜெக்டில் செண்டம். தமிழில் 97. இதுவரை 496 தான் அதிகபட்ச மார்க்கா இருந்தது. இவன் பண்ணது தான் தமிழக ரிக்கார்ட்" என்று என்னிடம் சொல்லிவிட்டு " இங்க்லீஷில் எப்படிப்பா நூறு மார்க் போட்டாங்க? ஆச்சரியம்தான்" என அவனிடம் பேச ஆரம்பித்திருந்தார் அண்ணன்.



மாநிலத்தில் முதல் மார்க் , இதுவரை யாரும் செய்யாத படி -497 மார்க் வாங்கியவன், ரொம்ப ஜாலியாக தன்னை விட 2 வயது இளையவனுடன், சுவற்றை ஸ்டம்ப் ஆக்கி கிரிக்கெட் ஆடிய விதத்தில் நிச்சயம் ஒரு பதிவுக்கான செய்தி இருந்தது.

" தம்பி நான் ஒரு Blog வச்சிருக்கேன். அதில் ஒரு ஆர்ட்டிகிள் எழுதணும். உன்கிட்டே பேசணுமே "

"சரி அங்கிள். நான் அப்புறம் உங்க வீட்டுக்கு வர்ரேன் "

இப்படி சொல்பவர்கள் அநேகமாய் டிமிக்கி கொடுப்பார்கள் என அவனது போன் நம்பர் வாங்கி கொண்டு விடைபெற்றேன்.

போகும்போது அண்ணன் சொன்னார் " நான்,  ஸ்ரீநாத் எல்லாம் ஏரியாவில் ஒண்ணா கிரிக்கெட் ஆடுவோம். ஸ்ரீநாத் ஸ்டேட் பஸ்ட் வந்த அன்னிக்கு குடும்பத்தோட அவன் வீட்டுக்கு போய்ட்டோம். ஒரே கொண்டாட்டமா இருந்தது. ஏரியா முழுக்க அங்க வந்துடுச்சு "

வெளியே சென்ற வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பின் ஸ்ரீநாத்தை தொலைபேசியில் " ஸ்ரீநாத் நாம மீட் பண்ணலாமா?" என அழைக்க, " அங்கிள் நான் கிளம்பி அங்க வரவா? " என்றான் " வேண்டாம் ஸ்ரீநாத்; நானே உங்க வீட்டுக்கு வர்ரேன்; உங்க வீடு தான் தெரியுமே "

மாநிலத்தில் முதல் மாணவன் என்கிற தலைக்கனம் சிறிதும் இல்லாமல் " நான் அங்கே வரட்டுமா அங்கிள்? " என்றதிலேயே ஸ்ரீநாத்தை பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. நேரில் பேசிய பின் இன்னும் நிறையவே... !
********
ஸ்ரீநாத்தின் அப்பா பேங்கில் வேலை பார்க்கிறார். அம்மா ஹவுஸ் வைப். நான் சென்ற போது இருவருமே வீட்டில் தான் இருந்தனர். வீட்டு ஹாலில் அமர்ந்து நாங்கள் பேச துவங்க, " ரூமுக்குள் போய் உட்கார்ந்து பேசுங்க எங்க முன்னாடி பேசினா ஸ்ரீநாத் பேச தயக்க படலாம் " என ஸ்ரீநாத் அறைக்குள் அமர்ந்து பேச சொல்கிறார்கள்.

நாங்கள் பேசும்போது அவனோடு கிரிக்கெட் விளையாடிய சிறுவனும் உடன் இருந்தான். கேஷுவலாக பேச துவங்கினோம்

"உன்னோட சின்ன வயசு படிப்பெல்லாம் எப்படி இருந்தது? "

" ஏழாவது வரை நவபாரத் மெட்ரிகுலேஷனில் படிச்சேன். அப்போ முதல் ரேன்கேல்லாம் வரமாட்டேன். ஆனா மூணு ரேங்கிற்குள் நிச்சயம் வருவேன். எட்டாவது வரும்போது தான் பொன்னையா ராமஜெயம் பள்ளிக்கு வந்தேன். அப்பலேந்து +2 வரை அங்கு தான் படிக்கிறேன். பொன்னையா ராமஜெயம் காலேஜ் கூட இருக்கு; Prist University ன்னு சொல்லுவாங்களே அது தான் "

" ஸ்டேட் பஸ்ட் வாங்கனும்னு aim பண்ணி படிச்சியா?" 

" நிச்சயமா இல்லை. எங்க ஸ்கூலில் பாயிஸ் செக்ஷன் தனி. அடுத்த தெருவில் கேர்ள்ஸ் செக்ஷன் இருக்கு. எப்பவும் பாயிஸ் செக்ஷன் முதல் மார்க் வருதா இல்லை கேர்ள்ஸ் செக்ஷன் முதல் மார்க் வருதான்னு போட்டி இருக்கும். நாங்கல்லாம் பாயிஸ் செக்ஷன் தான் வரணும்னு நினைப்போம். அப்படி தான் ஆரம்பத்தில் நினைச்சேன்".

"நான் டென்த் படிச்ச வருஷம் தான் சமசீர் கல்வி முதல் முறையா அறிமுகம் ஆனது. எங்களுக்கு ஆகஸ்ட் மாசம் தான் புக் வந்தது. அதற்கு பிறகு தான் பாடங்கள் விரைவா நடத்தப்பட்டது"

டென்த் வந்த பிறகு தொடர்ந்து எல்லா பரிட்சையிலும் ஸ்கூல் பஸ்ட் வாங்கிட்டு இருந்தேன். கடைசி ரிவிஷனில் 490 மார்க்குக்கு மேல் வாங்கும்போது தான் " தஞ்சை மாவட்டத்தில் முதல் மார்க்" வாங்க வாய்ப்பு இருக்குமோ என தோணுச்சு. ஆனா ஸ்டேட் பஸ்ட் பத்தி எப்பவும் நினைக்கலை; எனக்கே ரொம்ப ஆச்சரியம் தான் அது "

ரிசல்ட் வந்த அன்னிக்கு என் நண்பன் வீட்டிலே கம்பியூட்டரில் எங்க மார்க் பாத்துக்கிட்டு இருந்தோம். அவன் மார்க் பார்த்துட்டு, அடுத்து என் மார்க் பார்த்தால் 4 செண்டம்; மொத்தம் 497 என தெரிந்தது. இவ்ளோ மார்க் இதுவரை யாரும் எடுத்ததில்லையே என நினைச்சிட்டு இருக்கும் போது அருகில் இருந்த அவன் வீட்டு டிவி யில் " மாநிலத்தில் முதல் மாணவன் தஞ்சையை சேர்ந்த ஸ்ரீநாத் " என்று அனவுன்ஸ் செய்தார்கள். மார்க் பார்த்த அடுத்த நிமிஷமே டிவி மூலம் நான் ஸ்டேட் பஸ்ட்டுன்னு தெரிய வந்தது

" உடனே ஸ்கூல்க்கு போயிட்டேன். நிறைய டிவி, பத்திரிக்கை எல்லாம் அங்கே வந்துட்டாங்க. ஸ்கூலில் எல்லாருக்கும் செம மகிழ்ச்சி. பசங்க என்னை அப்படியே தூக்கிட்டாங்க"


" அடுத்த ரெண்டு நாள் ரொம்ப excited -ஆ இருந்தது அங்கிள். அப்போ நடந்த விஷயங்களை இன்னும் நம்பவே முடியலை; நிறைய விஷயம் ஞாபகத்தில் கூட இல்லை ஒரு மாதிரி பாதி நினைவோட தான் இருந்தேன் "

ரெண்டு நாளில் நிறைய டிவி காரர்கள், பேப்பர் காரர்கள் வீட்டுக்கு வந்தாங்க போனில் பேசினாங்க.

"+2 விற்கு பின் நீ என்ன படிக்கணும்னு பிளான் பண்ணிருக்கே ? "

"+ 2 வில் மேக்ஸ் குரூப் எடுத்திருக்கேன். IIT போகணும்கிறது தான் முதல் பிளான். அது கிடைக்காட்டி N .I .T அல்லது பிட்ஸ் பிலானி இதில் ஏதாவது கிடைச்சா நல்லாருக்கும். அதுவும் இல்லாட்டி அண்ணா யூனிவர்சிட்டியில் எஞ்சினியரிங் எடுப்பேன்" 

"இப்போதைக்கு IIT உள்ளிட்ட இடங்களுக்கான என்ட்ரன்ஸ் தேர்வுக்கு தயார் செஞ்சுகிட்டு இருக்கேன். அம்மா அப்பாவுக்கு நான் CBSE -ல் படிச்சிருந்தா IIT மாதிரி கோர்ஸ் போக ஈசியா இருக்கும்னு சற்று வருத்தமா இருக்கு. ஸ்டேட் போர்ட் என்பதால் நான் மிக அதிக மார்க் எடுக்கணும் என்ட்ரன்சில் ".

"எனக்கு எப்பவும் பிசிக்ஸ் , கெமிஸ்ட்ரி தான் ரொம்ப பிடிக்கும். IIT -ல் படிச்சிட்டு ரிசர்ச் சயின்டிஸ்ட் ஆகணும்னு ஆசை.அதுக்கு அதிக பணம் கிடைக்காதுன்னு சில பேர் சொல்றாங்க அதை பத்தி கவலையில்லை எனக்கு பிடிச்ச வேலை செய்யணும் அதான் முக்கியம் "

"டென்த் படிக்கும் போது தினம் எவ்ளோ நேரம் படிப்பே ? "

"தினம் 3 மணி நேரம் படிப்பேன். பரீட்சை நேரம் என்றால் மட்டும் 6 மணி நேரம் படிப்பேன். பள்ளி நாட்களிலும் சரி, தேர்வின் போதும் சரி 6 மணி நேரம் தூங்குவேன்". 

"இப்போ + 1 வந்துட்டே; அடுத்த வருஷம் மறுபடி முதல் ரேன்க் வாங்கணும்னு பிரஷர் இருக்கா? "

"வீட்டில் நிச்சயமா கொஞ்சம் கூட இல்லை; பள்ளியிலும் வெளியிலும் தான் நிறைய பிரஷர் வருது. பாக்கிறவங்க எல்லாம் " +2 வில் பஸ்ட் வந்துடுவே தானே-ன்னு கேட்குறாங்க "

"பாடத்தை தாண்டி தவிர வேற ஏதும் படிப்பியா ?"

"அறிவியல் சம்பந்தமான புக்ஸ் (சில பேர்கள் சொல்கிறான்) படிப்பேன் அப்துல் கலாம் புக்ஸ் நிறைய படிச்சிருக்கேன்" (அவனது அறையில் படிப்பை தாண்டி நிறைய புத்தகங்கள் கிடக்கிறது)

"உனக்கு நண்பர்கள் உண்டா? நல்லா படிக்கும் ஸ்டூடண்ட்ஸ் கொஞ்சம் தனிமை விரும்பிகளா இருப்பாங்க இல்லியா ?"

"அப்படியெல்லாம் இல்லை, எனக்கு ஏகப்பட்ட நண்பர்கள் இருக்காங்க".

அதுவரை கூடவே இருந்து நாம் பேசுவதை உன்னிப்பாக கவனித்த மாணவனை அறிமுகம் செய்கிறான். " இவன் எனக்கு ரெண்டு வருஷம் ஜூனியர். எப்பவும் என் கூட தான் கிரிக்கெட் விளையாடிட்டு இருப்பான். என் வகுப்பிலேயே நிறைய நண்பர்களும் கூட உண்டு, 

இந்த பையனும் IIT படிக்க தான் பிளான் பண்றான். " IIT ல் சீட் கிடைப்பது ரொம்ப கஷ்டம்டா; கிடைக்காட்டா நீ என்ன பண்ணுவே ? " ன்னு ஒரு தடவை கேட்டேன். " அடுத்த வருஷம் இன்னும் நல்லா தயார் செஞ்சுட்டு மறுபடி எழுதுவேன் " அப்படிங்கறான். எவ்ளோ உறுதியா இருக்கான் பாருங்க
****
சம்பிரதாயமான கேள்விகள் முடிந்து, embarassing கேள்விகளுக்குள் அடுத்து நுழைந்தோம் ..

பதிவு பெரிதாக செல்வதால், இதன் தொடர்ச்சி ஓரிரு நாளில்  வெளிவரும்..



நாளைய பதிவில்....

டென்த்தில் முதல் மார்க் வாங்குவோர்,  +2 வில் முதல் மார்க் வாங்குவதில்லையே ஏன்?

டென்த் முழு ஆண்டுபரீட்சைக்கு முதல் நாள் கிரிக்கெட் ஆடி மாட்டி கொண்ட ஸ்ரீநாத்

வாலிபால் மற்றும் கிரிக்கெட் - தஞ்சை மாவட்டத்தை பத்தாவது படிக்கையிலும் represent செய்து ஆடிய ஸ்ரீநாத்

மாநிலத்தில் முதல் மார்க் வாங்கியோர், வாழ்க்கையில் பெயர் சொல்லும் பிரபலமாக வந்துள்ளனரா? இல்லையெனில் ஏன்?
***
பேட்டியின் 2-ஆம் பாகம் இக்கேள்விகளுக்கான விடையுடன் ஓரிரு நாளில்  வெளியாகும்

Sunday, February 12, 2017

வானவில் - ஓ பி எஸ் vs சசிகலா - தள்ளி போகாதே- வாணி போஜன்

ஓ பி எஸ் vs சசிகலா 

ஓ பி எஸ் - ஜெ அவர்கள் சமாதியில் 40 நிமிடம் அமர்ந்துவிட்டு - பேசிய அந்த பிப்ரவரி 7 இரவில் - சமூக வலைத்தளங்களை பார்க்க வேண்டுமே.. அப்படியொரு தன்னெழுச்சி.. !

அடுத்த ஒரு வாரத்தில் தேர்தல் நடந்திருந்தால் , சமூக வலைதள மக்கள் மட்டும் வாக்களித்தால் 234 தொகுதியிலும் ஓ பி எஸ் தான் ஜெயித்திருப்பார்  !

ஆனால் சோசியல் மீடியா மட்டுமே உலகம் இல்லையே !

நிற்க. ஓ பி எஸ் உத்தமர் அல்ல- தேனியில் பாதி ஊரை -  கடந்த சில வருடங்களில் வாங்கி விட்டார் என்பது சோசியல் மீடியா நண்பர்களிலும் பலர் அறிவர் .........என்றாலும், சசிகலா ஆட்சிக்கு வரக்கூடாது என்ற எண்ணம் தான் ஓங்கி ஒலிக்கிறது.

Photo

118 என்பது தான் மெஜாரிட்டிக்கு தேவையான முக்கிய நம்பர் ! வெளிப்படையாய் 7 -8  MLA மட்டுமே ஓ பி எஸ் க்கு ஆதரவு தந்த நிலையில் இன்னும் 10-12 பேராவது சசி க்ரூப்பில் இருந்து வந்தால்  மட்டுமே சசி முதல்வர் ஆவதை தடுக்க முடியும்.

அல்லது கவர்னர் அசாதாரண சூழ்நிலை நிலவுவதாக கருதி -மத்திய அரசின் கருத்தும் அதுவாக இருப்பின் -  ஆட்சியை கலைக்கவும் செய்யலாம்.

எனவே ஆட்சி கலைக்கப்பாட்டால் ஒழிய - சசிகலா முதல்வர் ஆகத்தான் வாய்ப்புகள் அதிகம்.

மக்களின் விருப்பத்திற்கு மாறாக செயல்படுவதால் இப்போதுள்ள அதிமுக MLA க்களில் பலர் அடுத்த முறை தோற்பது உறுதி; அது பற்றி அவர்களுக்கு கவலை இல்லை;  நான்கரை வருடம் சம்பாதித்தால் போதும்.

Photo

அதிமுக என்கிற கட்சி ஜெவுடன் இல்லாது போய்விடும் என பலரும் நினைத்தனர்; இப்போது ஓ பிஎஸ் என ஒரு தலைவர் - பொது மக்களால் ஏற்று கொள்ளும் அளவில் வந்துள்ளார். அவர் தலைமையில் ஆட்சி அமைந்தால்- அதிமுக நிச்சயம் வலுப்பெறும். நடுநிலை மக்கள் கூட ஓபிஎஸ் மற்றும் அதிமுகவை ஆதரிக்க வாய்ப்புகள் அதிகம்.

மாறாக சசிகலா தலைமையில் ஆட்சி அமைந்தால் - அதனை நடுநிலையாளர்களும், அதிமுக அடிமட்ட தொண்டர்களும் விரும்ப மாட்டார்கள். அப்போது கட்சி பெரிதும் வலுவிழந்து போகும்.



இந்த அடிப்படை உண்மை கூட உணராமல் நடந்து கொள்ளும் சட்ட மன்ற உறுப்பினர்களை என்னவென்று சொல்வது?

சொத்து குவிப்பு வழக்கில் - தீர்ப்பு சசிகலாவுக்கு எதிராய் இல்லாது போனால், அவர் முதல்வர் ஆக வாய்ப்புகள் இன்னும் பிரகாசமாகும் .மாறாக தீர்ப்பு எதிராய் போனால், இன்னும் சுவாரஸ்ய காட்சிகளை காணலாம் !

Image may contain: 5 people, text

பார்த்த படம்: ஒப்பம் (மலையாளம் )

கண் தெரியாத மோகன்லால் ஒரு கொலையை துப்பறியும் கதை தான் ஒப்பம். கூடவே ஒரு கொலை காரனிடம் இருந்து ஒரு குழந்தையை காப்பாற்றும் பொறுப்பு அவருக்கு..

சற்று வித்தியாச கதைக்களம் தான்.. ஆனால் பாட்டு, சண்டை என மசாலா பட பாணியில் எடுத்தது  தான் இடறல்..

மோகன்லாலின் நடிப்பு மற்றும் வித்தியாச பிளாட்டுக்காக ஒரு முறை பார்க்கலாம் !

அழகு கார்னர் 
Image may contain: 1 person, closeup
வாணி போஜன் 
கிரிக்கெட் கார்னர் 

இந்தியா vs பங்களாதேஷ் இடையே நடக்கும் டெஸ்ட்டில் கோலி இன்னொரு 200 அடித்துள்ளார்.. தொடர்ந்து 4 சீரிஸாக -  குறைந்தது ஒரு 200 அடிக்கிறார் ! சென்ற மேட்சில் 300 அடித்த கருண் நாயரை விளையாட விடாமல் ஒதுக்கியது சற்று வருத்தம் தான். அப்புறம் Performance க்கு என்ன மரியாதை ??

இந்திய டெஸ்ட் அணியில் தற்போது ரசிக்கிற விஷயம் அஷ்வின், சாஹா , ஜடேஜா என மூவரும் தொடர்ந்து அசத்தலான பங்களிப்பை பாட்டிங்கில் செய்வது தான். இவர்கள் பங்களிப்பால் தான் 400 வர வேண்டிய ஸ்கொர் 600 வரை பலமுறை எட்டுகிறது .

முதல் இன்னிங்க்சில் பங்களாதேஷ் ஆட்டம் ஆச்சரிய தக்க வகையில் உள்ளது; இந்த டெஸ்ட் டிரா ஆனால், அது இந்தியாவிற்கு அதிர்ச்சி ஆகத்தான் இருக்கும்

போஸ்டர் கார்னர் 



பையன் பச்சை குழந்தையாம்; மருமகள் மட்டும் குரங்காம்.. ரணகளம் :)

என்னா பாட்டுடே : தள்ளி போகாதே

தமிழ் சினிமா பாடல்களில் -  காதலனும் காதலியும் பாடும் டூயட்கள் தான் மிக  அதிகமிருக்கும்.இந்த பாட்டும் ஒரு டூயட் தான்.. ஆனால் அந்த டூயட் எங்கு ஆரம்பிக்கிறது என்பதை நிர்ணயித்த இயக்குனர் கவுதம் மேனன்.. சபாஷ்  வாங்குகிறார்.

மிக பெரும் விபத்து.. அப்போது துவங்குகிறது பாட்டு.. தியேட்டரில் பார்க்கும்போது " என்னய்யா இந்த இடத்துலே பாட்டா " என முதலில் தோன்றினாலும், போக போக பாட்டை எப்படி யோசித்துள்ளார் என புரிந்து ரசிக்க முடிந்தது .

அடிபட்டு கீழே விழும் அரை மயக்க நிலை.. அப்போது அவனுக்கு தோன்றும் எண்ணங்கள்- நினைவு. கனவு ..

இந்த கனவினூடே நிகழ் காலத்தில் நடப்பதை காட்டி கொண்டே செல்வது அழகு.. !




வாசித்த புத்தகம் கருப்பு வெள்ளை 

வரலாற்று சிறப்பு மிக்க மனிதர்களின் வாழ்க்கையை சுவாரஸ்யமாய் சொல்லும் புத்தகங்கள் மீது ஒரு ஈர்ப்பு உண்டு; அந்த வகையில் அமைதிக்கென நோபல் பரிசு வென்ற, அமெரிக்காவில் கறுப்பர் இன மக்களின் உரிமைக்காக போராடிய மார்ட்டின் லூதர் கிங் குறித்த இந்த புத்தகம் பல தகவல்களை சொன்னது.

அமெரிக்காவில் ஒரு காலத்தில் - கருப்பு இனத்தினர் பேருந்தில் கடைசி சில சீட்களில் தான் அமர வேண்டுமாம். முன் பக்கம் முழுதும் வெள்ளையருக்கு; அந்த பக்கம் காலியாக இருந்தால் கூட - கறுப்பர் அங்கு சென்று அமர அனுமதி இல்லை; மேலும் பள்ளி - கல்லூரியிலும் பல்வேறு பாகுபாடுகள்.

இவற்றை எதிர்த்து போராடி - அவற்றில் பலவற்றை தளர்த்த உதவியோரில் முக்கியமானவர் மார்ட்டின் லூதர் கிங்  ! அமைதிக்கான நோபல் பரிசு வென்று அடுத்த சில ஆண்டுகளில் ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கும் போது சுட்டு கொல்லப்பட்டார். அப்போது அவரது வயது வெறும் 39 ! காந்தியடிகளின் சத்யாகிரஹ முறைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர் பின்பற்றியது அஹிம்சை முறைகளை மட்டுமே  !

மார்ட்டின் லூதர் கிங் கண்ட கனவு நனவானாலும் கூட அதற்கு விலையாக அவர் உயிரை இளம் வயதில் தர நேர்ந்தது வருந்த வேண்டிய ஒரு விஷயம் தான் !
***
அண்மை பதிவு :

சிங்கம் 3 - சினிமா விமர்சனம்

Saturday, February 11, 2017

சிங்கம் 3 - சினிமா விமர்சனம்

கெட்டவனை அழிக்கும் போலீஸ் கதை ....!

ஒரே டெம்பிளேட் .... அதை வைத்து கொண்டே மூன்று பாகம் எடுத்து விட்டனர்.

எஸ் - 3 யில்....

நேர்மையான போலீஸ் அதிகாரி துரை சிங்கம். வெளிநாட்டிலிருந்து மருந்து கழிவுகளை இந்தியாவில் கொட்டும் கும்பலை கண்டு பிடித்து போட்டு தள்ளுகிறார். இடையே மனைவி அனுஷ்காவுடன் காதல்.. சுருதியின் ஒரு தலை காதல், சூரியின் போலீஸ் காமெடி.. இன்ன பிற

Singam 3 box office: Suriya’s Si3 gets a good response from the audience

ஹரியும் டாட்டா சுமோக்களும் 

ஹரிக்கு கார்களில் ஹீரோ அல்லது வில்லன் சீறி பாய்ந்து செல்லும் காட்சி இல்லாமல் ஒரு படம் எடுக்க முடியுமா தெரியவில்லை.. ! அட ....படம் முழுக்க வேண்டாம்.. 5 நிமிடத்தில் ஒரு சில முறையாவது கார்கள் சீறுகின்றன. இப்படி சர் சர்ரென்று பறந்தாலே, ஹீரோ வேகமாக நடந்தாலே திரைக்கதை பற பறப்பாகி விடுமா என்ன ?

சூர்யா, அனுஸ்கா, ஸ்ருதி 

சூர்யாவின் ஆக்சன் மற்றும் நடிப்பு தான் படத்தை தொடர்ந்து காண வைக்கிறது; மூன்று பாகத்திலும் நடித்த அனுஸ்கா .. இம்முறை ரொம்ப சுமாராக இருக்கிறார். உடல் பெரிதானது ஒரு பக்கம் என்றால் வயதும் தெரிகிறது

சூரி காமெடி சில இடங்களில் மட்டும் சிரிப்பை வரவைக்கிறது; பல இடங்கள் எரிச்சல் தான்.

புதுமுக வில்லன் ஹீரோவை விட குறைந்தது 10-15 வயது சின்னவர்.. கிளைமாக்சில் வெற்றுடம்பை காட்டி வியக்க வைக்கிறார்.

ஏராள நடிகர் பட்டாளம்.. சின்ன பாத்திரத்துக்கு கூட தெரிந்த முகங்களே வருகிறார்கள்.

Image result for singam 3

ஸ்ருதியை  விட அவர் தோழியாக வரும் சான்ரா அழகுய்யா ! தமிழ் திரை உலகம் இவருக்கு  இன்னும் நிறைய வாய்ப்புகள் தரலாம் (நேயர் விருப்பம் )

ஓடும் காரை துரத்திய படி ஓடி பிடிப்பது கூட ஓகே; படத்தின் இறுதியில்  விமானத்தை காரில் துரத்தி நிறுத்த வைப்பதெல்லாம் டூ மச் ஹரி சார் !!!

தமிழகத்தில் நடக்கும் அடுத்தடுத்த சென்சிடிவ் சம்பவங்களால் - தாமதம் செய்து கொண்டே வந்தனர்.. இப்போதும் ஆட்சி மாற்றம் ஒன்றுக்கான சூழ்நிலை நிலவுவதால் மக்கள் டிவி செய்திகளில் ஆர்வம் காட்டுகிறார்கள். வார இறுதியில் கூட ஹவுஸ் புல் ஆகாத நிலையில் படம் திணறுகிறது. 

நல்ல சூழலில் வந்திருந்தால் தப்பித்திருக்கலாம்.. இப்போதுள்ள நிலையில்.. வெற்றியை விடுங்கள்.. போட்ட காசை எடுப்பதே சிரமம் தான்..

தயவு செய்து அடுத்த பாகம் எடுக்காதீர்கள் ஹரி சார்.. உங்களுக்கு புண்ணியமான போகும் !

இப்படம் பற்றிய ஒரு ஜாலி வீடியோ மீம் இங்கு கண்டு களியுங்கள் !



Friday, February 10, 2017

உடல் எடை குறைப்பு: உணவாலா? உடற் பயிற்சியாலா: ஒரு நேரடி அனுபவம்

டல் எடை குறைப்பு பற்றி வாசிக்கும் போதெல்லாம் - நடப்பது, ஓடுவது மட்டுமல்ல-  டயட்டும் முக்கியம் என்ற வரியை பலரும் - பல விதமாய் எழுதி வாசித்துள்ளேன்.

"வயிற்றை காயப்போடுவதா? அது எங்க பரம்பரையிலேயே கிடையாது.. நெக்ஸ்ட்டு.." என கடந்து போயிருக்கிறேன்.

முதல் முறை 2009ல் கொலஸ்ட்ரால் மற்றும் உயர் ரத்த அழுத்தம் எட்டி பார்த்த போது ஜிம் சென்று - உடல் எடையை குறைக்க, ஒரே வருடத்தில்  கொலஸ்ட்ரால் &  உயர் ரத்த அழுத்தம் இரண்டுமே நார்மல் ஆனது. முதல் ஆண்டு மட்டும் எடை குறைந்ததே தவிர அடுத்த 4 ஆண்டுகளில் (2013 வரை )எடை ஏறவில்லை.. அவ்வளவே.

2013-ல் வெவ்வேறு காரணத்தால் ஜிம் செல்வதை நிறுத்த - அடுத்த 3 வருடத்தில் முன்பு இருந்ததை விட ஏகமாய் எடை கூடி விட்டது

எடையை குறைக்கணும் என மறுபடி தீவிர எண்ணம்... இம்முறை ஜிம்மை விடுத்து நடை மற்றும் ஓட்டம் - இவற்றில் இறங்கினேன்.

எப்போதெல்லாம் - எடை குறைப்பு- உடற் பயிற்சி இவற்றில் ஈடுபாடு வருகிறதோ - அப்போதெல்லாம் தினம் கொஞ்ச நேரமாவது உடல் நலன் சார்ந்து வசிக்கும் பழக்கமும் என்னை ஒட்டி கொள்ளும். அப்படி படித்தபோது கிடைத்த தகவல்களின் சுருக்கம் முதலில் .. அப்புறம் நான் என்ன செய்தேன் என பார்க்கலாம் ...

உங்களது சரியான எடை என்ன?

இதற்கு சில பார்முலாக்கள் உண்டு. மிக எளிதான ஒன்று உங்கள் உயரத்தை சென்ட்டிமீட்டரில் கணக்கிடுங்கள்.

உங்கள் உயரம் 170 செ.மீ எனில் - அதில் நூறை கழியுங்கள். 70. இது தான் உங்கள் அதிக பட்ச எடை. 70 வரை இருந்தால் - நீங்கள் சரியான எடையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். அதற்கு மேல் ஏழெட்டு கிலோ இருந்தால் - சற்றே பருமன்.. அதற்கு மேல் போனால் Obese - High risk category !

நாம் தினமும் சாப்பிடும் உணவுகள் உடலில் சென்று சேருகிறது; இவை தான் நாம் எல்லா செயல்களையும் செய்ய உதவுகிறது. எந்த ஒரு வேலையும் செய்யா விடினும் கூட -பல் துலக்குவது, குளிப்பது உள்ளிட்ட விஷயத்தில் நாள் ஒன்றுக்கு 1000 கலோரி வரை செலவாகும்.

ஒரு சாதாரண மனிதருக்கு - நாள் ஒன்றுக்கு - ஆண் எனில் 2000 கலோரி - பெண் எனில் 1800 கலோரி தேவை. (இதுவும் உங்கள் உயரம் குறித்து மாறும். 160 -180 சென்டி மீட்டர் உயரம் தான் பலரும் இருப்பார்கள் .. அவர்களுக்கு இந்த கலோரி அளவு அநேகமாய் அருகில் வரும் )

உங்களுக்கு நாள் ஒன்றுக்கு தேவை 2000 கலோரி; ஆனால் நீங்கள் 3 வேளை சாப்பாடு + காபி + ஸ்நாக்ஸ் என 3000 கலோரி தினமும் சாப்பிடுகிறீர்கள் ; வேறு உடற் பயிற்சியும் செய்ய வில்லை என்றால் - தினம் 1000 கலோரி அதிகம் சாப்பிடுகிறீர்கள் .. இது உங்கள் எடையை நிச்சயம் அதிகரித்தே தீரும் ! மாதம் ஒன்று அல்லது ஒண்ணரை கிலோ அதிகமானாலும் ஆகலாம் !

மேற்சொன்ன அதே நபரை உதாரணமாக எடுத்து கொண்டு தொடருவோம். 170 செ.மீ உள்ள  இந்த நபர் தற்போது 78 கிலோவில் இருக்கிறார். இவர் குறைந்தது 8 கிலோ குறைந்தால் தான் தனது சரியான வெயிட்டுக்கு வருவார். (70 அவருக்கு அதிக பட்ச எடை.. அதை விட இன்னும் ஓரிரு கிலோ குறைந்தால் மிக நல்லது )

அரை கிலோ எடை குறைய 3500 கலோரிகள் அதிகம் எரிக்க வேண்டும் ! ஒரு நாளைக்கு 500 கலோரிகள் எரித்தால் ஏழு நாளில் 3500 கலோரி எரித்து அரை கிலோ எடை குறையலாம். இது தான் அடிப்படை.

தினம் 500 கலோரி என வாரம் அரை கிலோ எடை குறைவது நிச்சயம் நல்ல- டாக்டர்கள் பரிந்துரைக்கும் விதமான உடல் எடை குறைப்பு.. அதிக பிரச்சனை வராது...

சரி.. தினசரி 500 கலோரிகள் எப்படி எரிக்கலாம் அல்லது குறைக்கலாம் ?

மேலே சொன்ன நமது 78 கிலோ நண்பர் தினம் ஒரு மணி நேரம் நடந்தால் நிச்சயம் 500 கலோரிகள் இருப்பார்; அது சிரமம் அரை மணி நேரம் தான் நடக்க முடியும் எனில் - தான் வழக்கமாய் சாப்பிடும் சாப்பாட்டை மிக கொஞ்சமாக குறைக்கலாம்; மாலை ஸ்நாக்ஸ் என்பதை - காய்கறிகளுக்கு (கேரட், வெள்ளேரி) மாற்றினாலே சில நூறு கலோரிகள் குறையும்.

இப்படி பாதி நடை + பாதி கலோரி குறைப்பு என செய்தும் தினம் 500 கலோரிகள் என வாரம் அரை கிலோ குறைக்கலாம்.

இதே மெத்தடில் நீங்கள் வாரம் ஒரு கிலோ குறைக்க வேண்டும் என்றால் - தினம் ஆயிரம் கலோரி குறைக்க/ எரிக்க வேண்டும்; இங்கு தான் உணவின் முக்கியத்துவம் மிக அதிகரிக்கிறது

தினம் நடையில் ஆயிரம் கலோரி எரிப்பது சற்று சிரமம் (குறிப்பாக துவக்க நிலையில் உள்ளோருக்கு ) எனவே அவர்கள் நிச்சயம் - கலோரி அதிகமுள்ள சில வகை உணவுகளை தவிர்க்கலாம்; உதாரணமாய் பூரி, பொங்கல், பரோட்டா, காய்கறியில் வறுவல் - மாலை ஸ்நாக்ஸ் இவற்றை குறைத்தாலே வாரம் சில ஆயிரம் கலோரி நிச்சயம் குறையும் !

சரி.. இம்முறை நான் செய்தது என்ன?

எப்படி இருந்த நான்( 82 கிலோ )

Displaying _20170113_165928.JPG
இப்படி ஆயிட்டேன் (74 கிலோ) 
                 
முதலில் அரை மணி நேர நடை என மெதுவாக துவங்கினேன். பின் 45 நிமிடம்.. அப்புறம் ஒரு மணி நேர நடைக்கு வந்து விட்டேன். பல நாட்கள் இருவேளை நடக்க ஆரம்பித்தேன்.

இரவு - சாப்பிட்ட பின் குறைந்தது 45 நிமிடம் நடப்பேன். இதனால் உண்ட உணவு உறங்கும் முன் நன்கு செரித்து விடுகிறது. வெயிட் போடாது.

காலை வெறும் வயிற்றில் நடப்பது எப்போதுமே மிக சிறந்தது; இந்நேரம் நேரடியே கொழுப்பை எரிக்கிறோம். இதுவும் செய்ததால் - 2 வழியிலும் கலோரிகள் எரிக்கப்பட்டன

அடுத்து..

தினம் என்ன அளவு சாப்பிடுகிறோம் என்கிற கலோரி கணக்கை குறிக்க ஆரம்பித்தேன்...

காலை உணவு கலோரி +மதிய  உணவு கலோரி + இரவு உணவு கலோரி - வாக்கிங் மூலம் எரித்த கலோரி இந்த தகவல் முழுதும் அந்த எக்ஸல் ஷீட்டில் இருக்கும்.

நாம் செயகிற செலவுகளை குறிக்க ஆரம்பித்தாலே செலவு செய்வது குறையும் என்பார்களே.. அதே போல் இப்படி குறிக்க ஆரம்பித்த பின் சாப்பிடும் பொருட்களை கலோரியோடு சேர்ந்து சிந்திக்க ஆரம்பித்தேன். சத்தியமாய் இதுவரை - பொருட்களை சுவை என்கிற கண் கொண்டு மட்டுமே பார்த்த எனக்கு - இப்படி கலோரி சார்ந்து சிந்திக்க வைத்தது - எக்ஸல் ஷீட்டில் குறித்த ஓரே காரணம் தான்..

இரண்டு வேலை நடக்கும் போது ஆயிரம் கலோரி எரிக்க முயல்வேன் (வெகு சில நாட்களே அது சாத்தியம். பல நாள் 700 கலோரி போல் எரிப்பேன்)

மேலும் மேலே சொன்ன பூரி, பொங்கல் போன்ற சமாச்சாரங்கள் - மாலை நேர ஸ்நாக்ஸ் தவிர்த்து- கலோரி intake மட்டு படுத்தினேன்

காலை நாம் சாப்பிடும் இட்லி மிக குறைவான கலோரி - 2 அல்லது 3 இட்லி நிச்சயம் சாப்பிடலாம். 300 கலோரி கூட தாண்டாது; தொட்டு கொள்ள - வெங்காய சட்னி- தக்காளி சட்னி போன்றவை OK. தவிர்க்க வேண்டியது- தேங்காய் சட்னி அல்லது மிளகாய் பொடி எண்ணெய்

மதியம் - சாதம்- குழம்பு + காய் .. சாதம் வழக்கமாய் சாப்பிடுவதில் ஒரு கை மட்டும் குறைத்தேன். பெரும் பிரச்சனை இல்லை..மேலும் வறுவல் இல்லாத காய்கறிகள் மட்டுமே சாப்பிட்டேன்

மாலை கொஞ்சம் பசிக்கும். இந்நேர உணவு.. கேரட், வெள்ளெரி அல்லது கொய்யா பழம். (காலையே வீட்டில் இருந்து எடுத்து போயிடனும் !)

இரவு அநேகமாய் 3 சப்பாத்தி .. சீக்கிரம் சாப்பிட்டு விடுவது நல்லது.

அலுவலகத்தில் இருக்கும் போது மட்டும் காலை + மாலை ஒரு காபி அல்லது டீ (வீட்டில் குடிப்பது.. விடுமுறை தினத்தில் மட்டுமே)

உணவில் ஸ்நாக்ஸ் தவிர்த்து போன்ற சிறு மாறுதல் தவிர மற்ற படி பெரிய வித்யாசம்    இல்லாததை கவனித்திருக்கலாம்.

உடற் பயிற்சியில் தினசரி எரித்த 700 கலோரியும் அநேகமாய் நேரடியே எடை குறைய உதவியது.

செப்டம்பர் 2016ல் 82 கிலோ இருந்த நான் டிசம்பர் முடியும் போது 75 கிலோவிற்கு வந்தது இப்படி உடற் பயிற்சி மற்றும் ஓரளவு உணவு கட்டுப்பட்டால் தான்.

முகநூலில் உள்ளத்தனைய உடல் என்கிற குழுவில் தினம் செய்கிற உடற் பயிற்சியை பகிர்வோம்; நம்மை போல் பலரும் பகிர்வர். நம்மை ஊக்குவிக்கவும் செய்வர். இக்குழுவில் சேர்ந்ததும் செப்டம்பரில் தான்.. ஆம். அதன் பின் உடற் பயிற்சி என்பது வழக்கமாகி போனது.      

இக்குழுவில் சில நண்பர்கள் ஓடுவதை பார்த்து 10 கி. மீ ஓட ஆரம்பித்தேன். எவ்வளவு நேரத்தில் முடிக்கிறோம் என்பது ஆரம்பத்தில் முக்கியமில்லை.. முடிப்பது மட்டுமே குறிக்கோள் ! இதுவரை ஏழெட்டு முறை 10 கி. மீ  ஓடியாச்சு. அடுத்த படியான  21 கி. மீ ஓட்டம் எப்போது துவங்கலாம் என லேசாக யோசனை மனதினுள்..

நமது சரியான உடல் எடைக்கு அருகில் இருக்கும்போது வருகிற சந்தோசம் மற்றும் நம்பிக்கை அலாதியானது. பார்க்கிற பலரும் செம பிட் ஆகிட்டீங்க என்று சொல்வது வேறு உற்சாகத்தை கூட்டும்.

இது நிரந்தரம் இல்லை. உடற் பயிற்சியில் உள்ள downside - கொஞ்ச நாள் விட்டால் வெயிட் போட்டு விடும்.. ! எனவே பயிற்சியை தொடர்ந்து கொண்டே இருக்கணும்.

தொடருவேன் என்று நம்புகிறேன்.. தவிர்க்க இயலாமல் எடை கூடினாலும், 3 மாதத்தில் நமது ஐடியல் எடைக்கு வர என்ன செய்ய வேண்டும் என்பதை நன்றாகவே அறிந்து கொண்டாயிற்று..

தினசரி பல் துலக்குவது,  குளிப்பது,சாப்பிடுவது போல - உடற் பயிற்சியும் ஆகிக்கொண்டு இருக்கிறது.. ! ஒரு நாள் செய்யாவிடினும் குற்ற உணர்ச்சி தலை தூக்கும். மறுநாள் மீண்டும் துவங்கி விடுவோம்..

மேலும் இப்படி பயிற்சி செய்யும் நண்பர்கள் - முகநூல் குழுவிலும், நம்ம ஏரியாவிலும் நிறையவே கிடைத்து விட்டார்கள்..

ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விஷயத்தின் மீது அதீத ஈடுபாடு.. எங்களுக்கு உடற் . பயிற்சியில்.

இந்த போதை நல்லது !

****
தொடர்புடைய பதிவுகள்

சென்னையின் மாபெரும் - விப்ரோ மாரத்தான்.. சில பாசிட்டிவ் & நெகட்டிவ்

பாடகர் நரேஷ் அய்யருடன் ஓடிய மாரத்தான் + மினி பேட்டி-படங்கள்

மராத்தான் ..சில தவறான புரிதல்கள்

முதல் மாரத்தான் அனுபவங்கள் 



Monday, February 6, 2017

வானவில் : துருவங்கள் 16- ராகவா லாரன்ஸ் - முதல்வர் சசிகலா

பார்த்த படம் : துருவங்கள் பதினாறு 

பாட்டு இல்லை; க்ரைம் கதை.. ஆனால் சண்டை இல்லை; ஹீரோயினும் இல்லை (கதையின் மையம் 2 இளம் பெண்களை ஒட்டியது; ஆனால் அவர்கள் வரும் நேரம் 15 நிமிடம் கூட இருக்காது !)

ராஜேஷ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா போன்றோர் எழுதும் க்ரைம் நாவல் போல ஒரு படம்.

கதை எதை நோக்கி நகர்கிறது.. என்ன நடக்கிறது என்பதெல்லாம் புரிய.. எந்த காட்சியையும் தவற விடாமல் உற்று நோக்க வேண்டியிருக்கிறது..

ஒரு கொலை.. அதனை பார்த்த வெவ்வேறு நபர்கள் .....அவர்கள் கோணத்தில் சொல்ல ..உண்மை கொஞ்சம் கொஞ்சமாக தெரிகிறது.. கடைசி 10 நிமிடத்தில் தான் முழு கதையும் நமக்கு புரிபடுகிறது.

கொலை செய்தவன் நல்லவன். கொலை செய்யப்பட்டவன் கெட்டவன்.. இந்த ஒரு வரியிலிருந்து தான் கதை பின்னப்பட்டிருக்க வேண்டும்..

நிச்சயம் வித்தியாச முயற்சி தான். ஆனால் மலையாளத்தில் இதை விட அற்புதமான த்ரில்லர்கள் வருகிறது. மும்பை போலீஸ் போன்ற படங்கள் கற்பனை செய்ய முடியாத அளவு சஸ்பென்ஸ் கொண்டது ! (படம் முழுதும் கொலையை துப்பறியும் போலீஸ்க்கு ....இறுதியில் அந்த கொலை செய்ததே தான் தான் என தெரிந்தால் அப்படி இருக்கும்.. ! அதற்கு மிக சரியான காரணமும் சொல்லியிருப்பர் மும்பை போலீசில் !)

துருவங்கள் 16 - படம் வெளியான போது நிறைய பாசிடிவ் விமர்சனங்களை கண்டது; இப்போது டோரேண்டில் நல்ல காப்பி வந்த பின் சிலர் பார்த்து விட்டு சுமார் தான் என முகநூலில் எழுதி வருகின்றனர்.

படம் சரியான வெற்றி  என்பதில் எந்த சந்தேகமும் இல்லை; சின்ன பட்ஜெட்டில் எடுத்து - நிறைந்த லாபம் அடைந்து விட்டனர்...

22 வயது இயக்குனரின் அடுத்த படம் நிச்சயம் எதிர்பார்க்க வைத்து விட்டது !

அழகு கார்னர் 

Image result for anandhi actress

ராகவா லாரன்ஸ் 

ராகவா லாரன்ஸ் மீது எனக்கு இதற்கு முன் நல்ல அபிப்ராயம் இருந்தது; நிறைய ஏழை குழந்தைகளை படிக்க வைக்கிறார்; முடிந்த வரை பிறருக்கு உதவுகிறார்.. இன்ன பிற..

சென்ற ஆண்டு விகடன் மூலம் 100 இளைஞருக்கு 1லட்சம் வீதம் தந்து ஒரு கோடி ரூபாய் அளவிற்கு தமிழக மக்களுக்கு உதவ போவதாக செய்திகள், படங்கள் அனைத்தும் வந்தன.

இப்போது 100 இளைஞர்களில் - வா. மணிகண்டன் உள்ளிட்ட சிலர் பணம் தங்களை வந்தடைய வில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளனர். இது நிச்சயம் அதிர்ச்சி தரும் விஷயம்.

நிஜமாகவே பணம் தாராவிடில் எதற்கு அப்படி விளம்பரம் செய்ய வேண்டும்? பல அரசியல் செய்திகளுக்கு பாலோ அப் அப்டேட் போடும் விகடன் - இதற்கு ஏன் எந்த கருத்தும் - பின் தெரிவிக்க வில்லை ?

இப்படி சிலர் பணம் வரவில்லை என்று சொன்ன பிறகாவது ராகவா லாரன்ஸிடம் அது பற்றி கேட்டு கருத்து வெளியிட வேண்டாமா? கள்ள மௌனம் சாதிப்பதால் விகடன் மதிப்பும் சரிகிறது !

ராகவன் லாரன்ஸை பொறுத்த வரை அரசியல் மீது அவருக்கு ஒரு கண் என தெளிவாக தெரிகிறது; வரட்டும்.. ஆனால் நமது டிபிக்கல் அரசியல் வாதி போல் வெறும் அறிவிப்பு மட்டும் விட்டு - நிஜமாக உதவாத மனிதர் இவர் எனில்.. அப்புறம் இவருக்கும் மற்ற அரசியல் வாதிக்கும் என்ன வித்தியாசம்?

ராகவா லாரன்ஸ்- விகடன் இருவரும் வாய் மூடி இருப்பதில் அர்த்தமே இல்லை.. அவர்கள் பேச வேண்டிய தருணம் இது !

முதல்வர் சசிகலா 

ஓ. பன்னீர் செல்வம் ராஜினாமா செய்து சசிகலா முதல்வர் ஆவதை - சோசியல் மீடியாவில் உள்ள பெரும்பாலானோர் விரும்பவில்லை; தங்கள் ஏமாற்றத்தை - வருத்தத்தை காட்டி வருகின்றனர்.

மக்களால் நேரடியே தேர்ந்தெடுக்கப்படாத ஒருவர் - இதுவரை அரசியலில் எந்த பொறுப்பிலும் இல்லாதவர், மக்களுக்கு எந்த பணியும் செய்யாதவர் - நேரடியே ஒரு மாநில முதல்வர் ஆவதை மக்களால் ஏற்று கொள்ள முடியவில்லை; இது நிச்சயம் புரிந்து கொள்ளப்பட கூடிய ஒரு உணர்வு தான்.

அ திமுக எம் எல் ஏக்களை, மந்திரிகளை பொறுத்தவரை - "மீதமிருக்கும் நான்காண்டு காலத்தை சரியே பயன்படுத்திக்கொள்ளவேண்டும் " என்பதில் மட்டுமே கண்ணும் கருத்துமாய் இருக்கிறார்கள். முதல்வராய் யார் இருந்தால் என்ன... !! தனது கல்லா நிரப்புவதில் பிரச்சனை இருக்க கூடாது அவ்வளவே !

விரைவில் மக்களை கவரும் வண்ணம் சில குபீர் நல்ல திட்டங்கள் அறிவிக்கப்படலாம் !

தமிழகத்தில் இருக்கும் தலைவர்களில் இப்போதைக்கு நம்பிக்கை தரும் விதத்தில் இருப்பது ஸ்டாலின் மட்டுமே ! (அவர் 100 % தூய்மையானவர் என்று கூற வில்லை; ஆனால் இருக்கிற ஆப்ஷன்களில் - ஆந்திராவில் ஒரு சந்திரபாபு நாய்டு போல ஒரு ஆக்டிவ் முதல்வராய் இருக்க வாய்ப்புகள் அதிகம் !)

QUOTE CORNER



டிவி கார்னர் : விகடன் விருதுகள் 

முதன் முறையாக விகடன் சினிமா விருதுகளை நிகழ்ச்சியாக கொண்டாடினர்.

நான் ரசித்த விஷயம்.. ஒவ்வொரு கேட்டகரியிலும் கடந்த 5 ஆண்டுகளில் யார் யார் விருது வாங்கினர் என்பதை காண்பித்ததை தான்.. ! விகடன் விருதுகள் 75 % ஒத்து கொள்ளும் விதத்தில் இருக்கும். மீதம் 25 % ..இவருக்கு ஏன் வழங்கினார்கள் என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியாது !

சென்ற வருட சிறந்த ஹீரோ .. ரஜினியாம் !

உண்மையில் ரஜினி, SPB போன்றோரை விடுத்து - அடுத்தடுத்த ஜெனெரேஷன் பக்கம் செல்வது நல்லது.. இல்லையா?

பைரவா - நில்லாயோ 

ரேடியோவில் அடிக்கடி "நில்லாயோ" பாடல் ஒளி பரப்புகிறார்கள்.. சில முறை கேட்ட பின் - மெட்டும், பீட்டும் ரசிக்க வைத்து விட்டது.

திரையில் பாடலை சரியான முறையில் படமாக்க வில்லை - இருப்பினும் கேட்க நிச்சயம் இனிமையான பாடல் தான் .. நில்லாயோ !


*****

அண்மை பதிவுகள் :

போகன் சினிமா விமர்சனம்

2016 சிறந்த பத்து பாடல்கள் 

Sunday, February 5, 2017

2016 சிறந்த பத்து தமிழ் பாடல்கள்

ப்ளாக் துவங்கிய காலத்திலிருந்து வருடாந்திர சிறந்த பாடல்கள் எனது தெரிவு பகிராமல் இருந்ததில்லை; இவ்வருடம் ஏனோ இப்பதிவை முடித்து வெளியிட முடியாமலே போனது.. ஒரு வழியாய் இன்று பதிவை முடித்து வெளியிடுகிறேன் !

Image result for 2016 tamil film songs collage

ஜோக்கர் - செல்லம்மா 

எளிய வரிகள் .. உறுத்தாத இசை.. வித்தியாச பெண் குரல்.. படத்துடன் சேர்த்து பார்க்கும் போது பாடல் ஏற்படுத்தும் பாதிப்பு இன்னும் அதிகமாய் இருக்கும்..



இறுதி சுற்று - ஏய் சண்டைக்காரா

மென்மையான - இனிய பாட்டு.. அதை மேலும் அழகாக்குவது ரித்திகாவின் முக பாவங்கள்..



கபாலி- மாய நதி

கபாலியின் "மாய நதி" எனக்கு மட்டுமல்ல .. பலருக்கும் பிடித்த பாட்டாக இருப்பதை அறிய முடிகிறது.

புதிய பெண் கவிஞரின் பல வரிகள் அருமை. "தூய நரையிலும் காதல் மலருதே ! "

இன்றைக்கும் நேற்றைக்குமாய் மாறி மாறி செல்லும் காட்சிகளும் அழகு.



ரஜினி முருகன் - உன் மேலே ஒரு கண்ணு 

ரஜினி முருகனின் உன் மேலே ஒரு கண்ணு பாடல் .. குடும்ப விழாவில் நடக்கும் காதல் மற்றும் கொண்டாட்டத்தை அழகியலோடு படம் பிடித்திருந்தனர்..



தர்மதுரை - மக்க கலங்குதப்பா

வயதான மனிதர்கள் இறுதி ஊர்வலத்தில் ஆடும் குத்து பாட்டை இந்த அளவு அட்டகாசமாக போட்டிருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா ! கிராமங்களில் அநேக இறுதி ஊர்வலங்களில் .. இன்னும் ரொம்ப காலத்திற்கு இந்த பாட்டு நின்னு விளையாடும் !



ஒரு நாள் கூத்து : அடியே அழகே 

அதிகம் வெற்றி பெறாத படம் எனினும் இப்படத்தின் கதை சற்றே வித்தியாசமானது (முடிவில் தான் வேண்டி சோகத்தை வேண்டுமென திணித்தனர்) ; அடியே அழகே எனும் இப்பாடல் மென்மையும் இனிமையும் சேர்ந்து ரேடியோ டிவியில் திரும்ப திரும்ப விரும்பி ஒலி பரப்பும் பாடல்களில் ஒன்றானது



சேதுபதி - கொஞ்சி பேசிட வேணாம்

கணவன் - மனைவி ரொமான்ஸ் பாடல்.. கேட்க மட்டுமல்ல.. பார்க்கவும் ரசிக்கும் படி இருக்க முக்கிய காரணம்.. விஜய் சேதுபதி- ரம்யா; மொபைல்- டாப் ஒரு பாத்திரமாக பாட்டு முழுவதும் வருவது அழகு



அச்சம் என்பது மடமையடா - ராசாளி

இப்படத்தில் 3 அட்டகாச பாடல்கள் இருந்தாலும் - ஒன்றை மட்டும் சொல்லணும் என்றால் ..இப்பாட்டு தான். மெட்டு.. மற்றும் கர்னாடிக் மியூசிக்கை குழைத்து பாட்டை மிக வித்யாசமாக்கிய தன்மை. பல முறை கேட்டும் அலுக்காத பாட்டு !




தெறி - உன்னாலே என்  ஜீவன்

மெலடி பாடல்கள் தான் எனக்கு அதிகம் பிடித்தமானவை; மிக மெதுவாய் நகரும் இப்பாடலில் மெட்டும் மற்றும் இசை இரண்டுமே கவருகிறது..



ரெக்க  கண்ணம்மா கண்ணம்மா 

அதிகம் வெற்றி பெறாத இன்னொரு படத்திலிருந்து ஒரு மென்மையான மெலடி; மெட்டும், பெண் குரலும் மனதை என்னவோ செய்யும் !



*****
அண்மை பதிவுகள் :

வானவில்  : துருவங்கள் 16- ராகவா லாரன்ஸ் - முதல்வர் சசிகலா 

போகன் சினிமா விமர்சனம் 

Saturday, February 4, 2017

போகன் : சினிமா விமர்சனம்

டம் ரிலீஸ் ஆகி 2 நாள் கழித்து எழுதினால் இந்நேரம் கதையின் மைய நூல் எதை பற்றியது என்று அநேகமாய் பலருக்கும் தெரிந்திருக்கும். எனவே அதை சாய்சில் விட்டு விடலாம்

Image result for bogan tamil movie

பாசிட்டிவ் 

நிச்சயம் வித்தியாசமான கதை - முடிச்சு.. வழக்கமான காதல் அல்லது பழிவாங்கல் என்பதிலிருந்து வித்தியாசப்பட்டு நிற்பதே பெரிய விஷயம் !

யார் யாராக இருக்கிறார் என புரிந்து கொள்வதே சற்று குழப்பமாய் இருக்கும் படியான கதை .. என்றாலும் முடிந்த வரை எல்லாருக்கும் புரியும் படி தான் எடுத்துள்ளனர்..

டமாலு டமாலு மற்றும் செந்தூரா பாடல்கள் அருமை.

முதல் பகுதியில் அரவிந்த்சுவாமி Performance நைஸ் !

நெகட்டிவ் 

ஜெயம் ரவி மற்றும் அரவிந்த்சாமி எனும் போது தனி ஒருவன் நினைவில் வருவதை தடுக்க முடியவில்லை. அங்கு சாதாரண கதையை செம டைட்டான - அட்டகாச திரை கதையால் ஜெயிக்க வைத்தனர். இங்கு நேர் உல்ட்டா ! அதை விட நல்ல சுவாரஸ்ய கதை.. ஆனால் திரைக்கதை அங்கு போல் சுவாரஸ்யம் இல்லை !

படத்தில் நிஜமாய் ரசிக்க வைக்கும் நேரம் ....இடைவேளைக்கு முன்பான .. 40 நிமிடங்கள்.. இது தான் ரசிக்க வைக்கும் பகுதி.. இதே டோன்/ பீல்  படம் முழுதும் இருந்திருந்தால் படம் எங்கேயோ போயிருக்கும் !

Related image

பிற்பகுதியில் - ஜெயம் ரவியை நெகட்டிவ் பாத்திரத்திலும், அரவிந்த்சுவாமியை கண்ணீர் விட்டு அழும் நல்லவனாகவும் காண என்னவோ போல் இருக்கிறது. முதல் பாதியில் அசத்தும் அரவிந்த்சுவாமியை  இரண்டாம் பகுதியில் ரசிக்க முடியாமல் போகிறது.. இது தான் படத்தின் மிக பெரும் மைனஸ்..

வழக்கத்தை விட சற்று அதிக லூசுத்தனம் உள்ள ஹீரோயின்.. ஹூம்

இரண்டாம் பகுதியில் எத்தனை பேர் இறந்தார்கள் என போட்டியே வைக்கலாம் ! செத்து செத்து  விளையாடுறாங்க !

கடைசி 20 நிமிடம் சண்டை - அது இது என தேவையின்றி இழுக்கிறார்கள்

போகன் - நீங்கள்  சினிமா விரும்பி என்றால் மட்டும் அதிக எதிர்பார்ப்பின்றி ஒரு முறை காணாலாம்.. வித்தியாச கான்செப்ட்டிற்காக  !

****
அண்மை பதிவுகள் :

2016 சிறந்த பத்து பாடல்கள்

வானவில்  : துருவங்கள் 16- ராகவா லாரன்ஸ் - முதல்வர் சசிகலா 

Related Posts Plugin for WordPress, Blogger...