Wednesday, March 31, 2010

ஒரு தற்கொலை - மூன்று கோணங்கள்

மீட்டிங்கில் இருந்தபோது மொபைல் மௌனமாய் அதிர்ந்தது. " ஆட்டோ டேவிட்" என்ற பெயர் பார்த்து உடன் வெளியே வந்து பேசினேன். குழந்தையின் ஆட்டோ காரர்.

" சார்...உங்க தெருவில ஒரு டெத் ஆயிடுச்சு"
"யாரு டேவிட்?"
"உங்க வீட்டுக்கு நாலு வீடு தள்ளி இருக்காரே.. ரவி.. அவர் முதல் பொண்ணு தூக்கு மாட்டி செத்துடுச்சு சார் "
அதிர்ந்தேன் " யாரு கயலா? எட்டாவது தான் படிக்கிறா அவளா? "
"ஆமா சார்".

கயல்.. பதிமூன்று வயது பெண்.. ஒல்லியாக கருப்பாக கண்ணாடி அணிந்திருப்பாள். அவளது தங்கை ஐந்தாவது படிப்பவள். எப்போதும் தெருவில் சைக்கிள் ஒட்டியவாறு இருப்பாள். அவளை அடிக்கடி நான் கிண்டல் செய்வேன். கயல் வயதுக்கு வந்த பெண் என சற்று தள்ளி இருப்பது வழக்கம்.

சென்ற வருடம் கயல் பெரியவளான போது மண்டபத்தில் வைத்து பெரிய விழாவாக செய்தார்கள். பதிமூன்று வயது பெண்ணுக்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்தது?

அதன் பின் மீட்டிங்கில் மனம் செல்ல வில்லை. எனது பாஸிடம் சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்பி விட்டேன்.

வண்டி ஓட்டும் போது ஏதேதோ நினைவுகள். எனக்கும் பதினோரு வயது பெண் உள்ளதால், இந்த வலி, அதன் தாக்கம் அதிகமாய் உணர முடிகிறது.

தெருவிற்குள் நுழையும் போது போலீஸ் ஏற்கனவே வந்திருந்தது. ஹாலில் கயல் கிடத்தபட்டிருந்தாள். பள்ளி யுனிபார்மில் தூங்குவது போல் தான் இருந்தாள்.

போலீஸ் கயலின் அம்மா அப்பா தவிர மற்றவர்களை வெளியே அனுப்பி விட்டு வரிசையாய் கேள்வி கேட்க ஆரம்பித்தனர். நான் ஹாலுக்கு சற்று வெளியே உள்ள திண்ணையில் நின்றதால் அவர்கள் பேசுவது தெளிவாக கேட்டது

கோணம் - 1

" யார் முதலில் பார்த்தது? "

" நான் சாப்பிட வீட்டுக்கு வந்தேன்; ரொம்ப நேரம் தட்டி கதவு திறக்கலை; ஜன்னல் வழியா தூங்குராலோன்னு பார்த்தேன். பேனில் தொங்கிட்டுருந்தா சார் " கயலின் அப்பா விம்மினார்.

" அவங்க அம்மா எங்க போய்ட்டாங்க? "

" சார் நான் மகளிர் சுய உதவி குழுல இருக்கேன்; அங்கே கூடை பின்ன கத்து தராங்க; அதுக்கு போயிருந்தேன்"

அம்மா போனது எத்தனை மணி, அப்பா வந்தது எந்த நேரம் என கேள்விகள் நீண்டது.

" மேலிருந்து இறக்கினது யாரு? "

"பக்கத்துல கட்டிட வேலை நடக்குது; அங்கே வேலை செய்றவங்க தான் வந்து பூட்டை உடைச்சு அவளை இறக்கினாங்க"

" இப்படி தொங்கினவளை இறக்கிருக்க கூடாது.. எப்படி நீங்களா இறக்கலாம்? நாங்க செய்ற வேலையை நீங்களே செய்வீங்களா? "

" சார் உயிர் இருக்கும்னு நினைச்சேன். உடனே டாக்டர் கிட்டே தூக்கிட்டு ஓடினேன். பாத்துட்டு உயிர் போய்டுச்சுன்னு சொல்லிட்டார்"

எனக்கு அருகிலிருந்தவரிடம் எப்படி போலீஸ் வந்தாங்க என நான் கேட்க, " கயல் அப்பா தான் போய் போலீசில் சொன்னார். பிரச்சனை ஆகிட கூடாதுன்னு தான்" என்றார்.

கேள்விகள் வேறு திசையில் செல்ல ஆரம்பித்திருந்தன.

" பெரியவளாகிட்டாலா? "

" ஆகிட்டா. போன வருஷம்.."

" கடைசியா எப்ப மென்சஸ் வந்தது? "

பதில் சொல்லாமல் கயல் அம்மா கதறினார். " ஐயோ கயலு என்ன கேள்வி கேக்குறாங்க"

" சொல்லும்மா" அதட்டினார் எஸ். ஐ.

" போன வாரம் தாங்க வந்துது"

"உண்மையாவா"

" ஆமாங்க"

" படிப்பில எப்படி"

"ரொம்ப சுமாரா தாங்க படிப்பா"

" திட்டுவீங்களா?"

" படி; டிவி பாக்காதேன்னு சொல்லுவேன்" கயல் அம்மா விசும்பலோடு சொன்னார்.

" ஏன் இன்னிக்கு ஸ்கூலுக்கு போகலை? "" பத்தாவது பரீட்சை நடக்குது; பாதி நாள் தான் ஸ்கூல்; மத்தியானமா போவா" 

" ஸ்கூலில் திட்டு வாங்குவாளா? "

"ஆமாங்க; ரொம்ப கண்டிப்பான ஸ்கூல் அது படிக்கலைன்னா அடிப்பாங்க; திட்டுவாங்க”.

அது கோ- எட் பள்ளியா என எஸ். ஐ. உறுதி செய்து கொண்டார்.

"கடைசியா எப்ப திட்டினதா சொன்னா ? "

"ரெண்டு நாள் முன்னாடிங்க"

கோணம் - 2

நான் வெளியே வந்தேன். அவர்களுக்கு நேர் எதிர் வீட்டில் வித்யா என்ற பெண்ணிடம் தான் அவள் டியுஷன் படித்தாள். அவர்கள் வீட்டினுள் சென்று நின்றேன். தெருவில் உள்ள இன்னும் சில பேரும் அங்கு தான் நின்று கொண்டிருந்தனர். வித்யா அழுது ஓய்ந்திருந்தாள். " என்ன வித்யா.. உன் கிட்டே தான சாயங்காலம் முழுக்க இருப்பா? என்ன காரணமா இருக்கும்? "

" அவ ரொம்ப டிப்ரஷனில் இருந்தா அங்கிள்..எனக்கு வாழவே பிடிக்கலைன்னு அடிக்கடி சொல்லுவா"

" என்னம்மா இது!! அவங்க அம்மா கிட்டே சொல்ல வேண்டியது தானே? "

" சொல்லிருக்கேன்; அவங்க பெருசா எடுத்துக்கலை. சைகியாடரிஸ்ட் கிட்டே அப்பாயின்மன்ட் வாங்கி தந்தேன். அது எக்மோர் ரொம்ப தூரம்ன்னு போகலை; அப்புறம் பக்கத்தில் வேளச்சேரியில் கூட ஒரு டாக்டர் பேர் சொல்லி, போங்கன்னு சொன்னேன்; போகலை"

கயலின் பக்கத்துக்கு வீட்டு அம்மா பேச ஆரம்பித்தார். " அவளுக்கு எங்கே பொண்ணு மேல அக்கறை? சும்மா ஊர் சுத்திக்கிட்டே இருப்பா; புருஷன் தான் சம்பதிக்கிறாநேன்னு பேசாம இருக்க வேண்டியது தானே? இந்த கூடை பின்ன கத்துக்கிட்டு என்ன செய்ய போறா? இப்ப பொண்ணு போயிட்டாளே"

வித்யாவின் அம்மா அதனை ஆமோதித்து பேசினார் " பசங்க பள்ளி கூடத்தில் இருந்து வந்து பசியோட கிடக்கும்; இது எங்காவது போய்டும்; சும்மா அடி, உதை.. வயசுக்கு வந்த பொண்ணை எவ்ளோ திட்டுறது, அடிக்கிறது? கொஞ்சம் கூட அவ மேல அக்கறை இல்லை "

போலீஸ் கயல் வீட்டிலிருந்து வெளியே வர பேச்சை நிறுத்தினர்.
" ஆம்புலன்சுக்கு சொல்லியாச்சா? "
"வந்திட்டுருக்கு சார்".

இதனிடையே ஒரு புகை பட காரர் வந்து கயலை போட்டோ எடுத்து கொண்டிருந்தார்.

எஸ். ஐ பக்கத்துக்கு வீடுகள், கயலின் தங்கை என ஒவ்வொருவராக விசாரித்து கொண்டிருந்தார்.

ஆம்புலன்ஸ் வந்து விட, கயல் போஸ்ட் மார்டம் செய்யபட எடுத்து செல்லபட்டாள்.

கயலின் அம்மாவின் அழுகை மிக அதிகமானது. " இன்னும் கொஞ்ச நேரம் பாத்துக்குரேங்க.. விடுங்க.. எல்லாத்துக்கும் ஆசை படுவாளே.. எல்லாம் வாங்கி தருவோமே; இப்ப இதுக்கும் ஆசை பட்டாளே.. காலையில் கூட ரப் நோட்டு கேட்டா.. வாங்கிட்டு வந்து குடுத்தேனே.. "

கயலின் தந்தை கம்பியை பிடித்தவாறு தலை குனிந்து நின்று கொண்டிருந்தார்.. அழ வில்லை; அவர் அழுதால் நல்லாயிருக்குமே என தோன்றியது.

" ம்ம் இந்த பூமியில் அவளுக்கு உப்பும் தண்ணியும் அவ்ளோ தான். போய்ட்டா " என்றா வித்யாவின் அம்மா. ஆம்புலன்ஸ் புறப்பட்டது. கயல் அம்மா, உறவினர்கள் அழுகையில் எனக்கும் அழுகை எட்டி பார்த்தது .

கோணம் -3

ஆம்புலன்சும் போலீஸ் வேணும் சென்ற பின் வீட்டினுள் சென்றேன். அந்த அறை!! ஓரிருவர் நின்றிருந்தனர். வித்யா அம்மா கையில் ஒரு காகிதம்.
" என்னமோ இங்கிலிசில் எழுதிருக்கு. என்னான்னு புரியலை" என சொல்லி கொண்டிருக்க, " குடுங்க" என கேட்டு வாங்கினேன். அவள் உறவுக்கார பெண் ஒருத்தி அவள் ரப் நோட்டிலிருந்து அந்த கடிதத்தை எடுத்திருந்தாள். ஆங்கிலத்தில் தெளிவாக அடித்தல் திருத்தல் இன்றி எழுதி இருந்தாள். யாருக்கு எழுதப்பட்டது என்ற தகவலோ, என்று எழுதப்பட்டது என்ற விபரமோ இல்லை. அந்த கடிதம்….

“நீ ஏன் நேற்று வர வில்லை? நேற்று நீ வருவாய் என காத்திருந்து ஏமாந்தேன். உனக்கு நினைவிருக்கா உன்னை நான் எப்போது பார்த்தேன் என? அப்போது நாம் ஐந்தாவது படித்து கொண்டிருந்தோம். உன்னை தோழி வீட்டில் பார்த்தேன். என்ன பேர் என கேட்க " ராஜ்... பிரின்ஸ் ராஜ்" என உன் பள்ளி கூடம் பேர் சேர்த்து சொன்னாய். உன்னுடம் இருக்கும் நேரம் எனக்கு எவ்வளவு சந்தோசம் தெரியுமா? என்னை சிரிக்க வைப்பது நீ மட்டும் தான். ஒரு முறை நீ என்னை தள்ளி விட நான் கீழே விழுந்து அழ ஆரம்பித்து விட்டேன். அப்போது நீ என்னை " இதுக்கெல்லாமா அழுவாங்க? " (இது மட்டும் தமிழில் எழுத பட்டிருந்தது) என தேற்றினாய். நீ சொன்ன ஜோக்குகளை என்னால் மறக்க முடிய வில்லை. உன்னையும் தான். அனைத்துக்கும் நன்றி “.

" என்ன? என்ன?" என்றார் வித்யா அம்மா. " ஒண்ணுமில்லை. சும்மா எதோ எழுதிருக்கா" .. கயல் அப்பாவை தேடி அவரிடம் அந்த கடிதத்தை தந்தேன். மிக சாதாரணமாய் வாங்கி உள்ளே வைத்து கொண்டார். ஏற்கனவே படித்திருக்கலாம்!!

அதிர்ச்சியாக இருந்தது!! பதிமூன்று வயது பெண்!!

இன்னும் சிறிது நேரத்தில் பள்ளியிலிருந்து ஆட்டோவில் வர போகும் எனது பெண்ணுக்காக காத்திருக்க ஆரம்பித்தேன். மனம் அவளிடம் இதனை எப்படி சொல்வது என யோசிக்க ஆரம்பித்திருந்தது.

Friday, March 26, 2010

வானவில் - சென்னை பதிவர் சந்திப்பு - திவ்யாவின் இட வேளை

சூப்பர் சிங்கர் இட வேளை

சூப்பர் சிங்கர் ஜூனியரில் கடைசி எட்டு contestants- க்கு வந்திருக்காங்க. திட்டிக்கிட்டேயாவது தொடர்ந்து பாத்துடுறோம். அநேகமாய் ரோஷன் அல்லது அல்கா தான் ஜெயிப்பாங்கன்னு தோணுது. அதென்னவோ, இப்படி Boys & Girls சேர்ந்து கலந்து நடந்து கொள்ளும் பல நிகழ்ச்சிகளில் Boys-க்கு தான் முதல் பரிசு கிடைக்குது. இந்த முறை talent வச்சு பார்த்தால் அல்காவிற்கு தான் கிடைக்கணும். பார்ப்போம். நடுவராக வரும் சித்ரா ஒவ்வொரு முறையும் " நல்லா பாடுனீங்க" என ஆரம்பிச்சு " எனக்கு ஒன்னே ஒன்னு தான்" என சொல்லி விட்டு மளிகை கடை லிஸ்ட் மாதிரி குறைகளை அடுக்குவார். " மத்த படி ரொம்ப நல்லா இருந்துச்சு". அதை விட காமெடி இந்த வாரம் திவ்யா, "விளம்பர இட வேளை " என சொல்லிகொண்டிருந்தார்!! இடைவேளை இந்த சேச்சி கிட்டே மாட்டி இட வேளை ஆகிடுச்சு!!

வாரம் ஒரு சட்ட சொல் Robbery & Dacoity - வித்யாசம்

வீடு புகுந்தோ, வழியில் செல்வோரை மிரட்டியோ திருடுவது Robbery எனப்படும். நான்கு அல்லது அதற்கு மேற்பட்டோர் ஆயுதங்களுடன் இதே வேலையை செய்தால் அது Dacoity எனப்படும். Dacoity-யில் வெட்டு, குத்து, ரத்தம் இதற்கான சாத்தியங்கள் அதிகம். பூலான் தேவி, வீரப்பன் போன்றோர் Dacoits என்ற வகையில் வருவார்கள். Needless to say, Robbereres-ஐ விட Dacoits-க்கு தண்டனை அதிகம்.

அய்யா சாமி

அய்யா சாமி சிக்னல் கிட்டே வரும் போது தான் சிக்னல் சரியா சிகப்புக்கோ, மஞ்சளுக்கோ வரும்!! அய்யா சாமி வர்றாரேனனு, ஒரு நாளாவது சரியா பச்சை சிக்னலை யாராவது வைக்க கூடாது? ம்ம்...

ஒரு சந்தேகம்

காலை நேரத்தில் வாக்கிங் செல்பவர்களும் சரி, ஜிம் போன்ற இடங்களுக்கு செல்பவர்களும் சரி ஒரு நகரத்தின் மொத்த population-ல் மிக மிக குறைவான சதவீதமே உள்ளனர். ஆனால் டாஸ்மார்க், பார், இவற்றில் பார்த்தால், வாக்கிங் செல்வோர், ஜிம் செல்வோரை விட பல மடங்கு கூட்டம் வீக் என்ட் மட்டுமல்லாது வார நாளிலும் நிரம்பி வழிகிறது. இது ஏன்? தங்கள் உடலை சரியாக பார்த்து கொள்ளும் எண்ணம் ஏன் மக்களுக்கு இயல்பாகவே இல்லை? இந்த உடல் ஒரு முறை தான் கிடைக்கும்; இதனை சரியாக அவரவர் தான் பார்த்து கொள்ள வேண்டும் என்பது ஏன் இயல்பாக வருவதில்லை? ( கொஞ்சம் சீரியாசாகிட்டனோ?)

சென்னை ஸ்பெஷல்: இணைய எழுத்தாளர்கள் குழுமம் துவக்கம்

சென்னை இணைய எழுத்தாளர்கள் குழுமம் வரும் 27/03/10 சனிக்கிழமை துவங்க பட உள்ளது. அனைவரும் அவசியம் வாருங்கள். ஹவுஸ் பாஸ் அனுமதி தந்தால் நானும் வருவேன் :)) My application is still pending before "Her lordship".

நாள் : 27/03/10

கிழமை : சனிக்கிழமை
நேரம் : மாலை 6 மணி

இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்
6. முனுசாமி சாலை,
மேற்கு கே.கே.நகர்.
சென்னை.

IPL கார்னர்

சென்ற முறை எல்லாம் எந்த டீம்கள் semi finals வரும் என்பது சற்று சஸ்பென்ஸ் ஆகவே இருந்தது. ஆனால் இம்முறை மும்பை இந்தியன்ஸ், பெங்களூர் ராயல் சேலன்ஜர்ஸ், ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் ஆகியோர் semi finals வருவார்கள் போல் தெரிகிறது. நிச்சயம் semi finals வர போகாதவர்கள் பட்டியலில் பஞ்சாப், ராஜஸ்தான், (சற்று வருத்தமாக இருந்தாலும்) சென்னை இருக்க கூடும். மூன்று அணிகளும் அவ்ளோ மோசமாக ஆடி வருகின்றன. ராஜஸ்தான் மட்டும் கொஞ்சம் விழிச்சது போல் தெரியுது.Semi Finals செல்லும் நான்காவது அணி டில்லி ஆக இருக்கலாம். எனது இந்த ஊகங்கள் தவறானால் முதலில் மகிழ்வது நானாக தான் இருப்பேன். அப்போ தான் matches சுவாரஸ்யமாக போகுதுன்னு அர்த்தம்.

கில்க்ரிச்டுக்காகவே டெக்கான் சார்ஜர்ஸ் ஜெயிக்கணும் என நினைக்கிறேன்; சென்ற முறை ஜெயித்த அணி எனும் போது, இம்முறை ஜெயிக்க probability மிக குறைவே ; அடுத்து மும்பை அல்லது பெங்களூரு ஜெயிக்க வாய்ப்புகள் அதிகம். இதில் பெங்களூர் மட்டும் ஜெயிக்காமல் இருக்க கடவது. (என்ன இருந்தாலும் நமக்கு தண்ணி தராத பசங்க தானே?)

Monday, March 22, 2010

சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் என்ன நடந்தது? - நேரடி அனுபவம்

நேற்று சென்னை சேப்பாக்கம் stadium-ல் நேரடியாக சென்னை சூப்பர் கிங்க்ஸ் Vs பஞ்சாப் மேட்ச் பார்த்தேன். நான் சென்னை சூப்பர் கிங்க்ஸ் தீவிர ரசிகன் கிடையாது. ஆனாலும் சென்னை மீது உள்ள பாசத்தில் கொஞ்சமேனும் அந்த டீம் மீதும் இருக்க தானே செய்யும்!!. நேற்று நீங்கள் டிவி-யில் பார்க்காத சில விஷயங்கள் இதோ..

* மாஜி கிரிக்கட் வீரர் & அம்பயர் வெங்கட் ராகவன் பிட்சுக்கு முதல் ஆளாய் வந்து விட்டார். ரொம்ப நேரம் அங்கேயே நின்று பலருடனும் பேசியவாறு இருந்தார். பின் ஸ்ரீ காந்தும் அவருடன் சேர்ந்தார்.

* ஸ்டேடியதுக்கு ரெண்டு மணி நேரம் போல் முன்னே போனால் தான் நல்ல இடம் கிடைக்கும். நானும் அப்படி போய்ட்டேன். ரஞ்சித் மற்றும் இன்னொரு பாடகர் சரியான பாடல்கள் பாடி மக்களை மகிழ்வித்தனர். பலர் சீட்டிலேயே ஆட ஆரம்பித்து விட்டனர்.

* பெண்களுக்கு அரசியலில் 33% இட ஒதுக்கீடு எப்போ வருமோ தெரியாது. ஆனால் நேற்று ஸ்டேடியத்தில் குறைந்தது 25% பெண்களே ! ஆன்டிகள், கணவனுடன் வந்த பெண்கள் தவிர மற்றவர்கள் மிக மிக டைட் ஆன பனியனும் ஜீன்சும் அணிந்து மக்களை மகிழ்வித்தனர். ஆண்களில் பலர் ஏதோ தாங்களே match ஆடுவது போல கேன்வாஸ் shoe-வுடன் தான் வந்திருந்தனர்.

* ஒரு 35 வயது மதிக்க தக்க பஞ்சாபி தன் மூன்று ஆண் குழந்தைகளுடன் வந்திருந்தார். ஒவ்வொருவரும் தலைக்கு டர்பன் கட்டி குட்டியாக இருந்தது செம அழகாக இருந்தது

* ஸ்டேடியத்தில் சாப்பிட பிரட், சாக்லேட், cool drinks போன்ற சில பொருள்கள் தான் கிடைத்தது (அதுவம் செம விலை); இரவு சாப்பாடு எதுவும் கிடைக்காதது பலருக்கும் பெரிய பிரச்சனை தான்.

* இது வரை எந்த மேட்சிலும் விளையாடாத எண்டினி (Ntini) ரொம்ப ஜாலியாக ரசிகர்களை பார்த்து கை அசைதவாரே சுற்றி வந்தார். (ஆடினால் என்ன ஆடா விட்டால் என்ன, available ஆக இருந்தாலே முழு பணம் கிடைக்குமே !!) வாழ்க்கையை மகிழ்வாக வாழும் அந்த carribean attitude ரசிக்க முடிந்தது.

* மேட்ச் ஆரம்பிக்கும் முன் ரெண்டு டீமும் பவுலிங் மற்றும் கேட்சிங் பயிற்சி செய்தனர். சும்மா சொல்ல கூடாது. இதுக்கு ரொம்ப நல்லா பயிற்சி தர்றாங்க. குறிப்பா பஞ்சாப் டீமில் டாம் மூடி சரியா டிரில் எடுத்தார். பவுண்டரியில் நிற்க வச்சிட்டு லைனை தாண்டாமல் கேட்ச் பிடிப்பது வரை பயிற்சி தந்தார்

* சியர் கேள்ஸ் ஆடியதில் டிவியில் நாம் பார்ப்பது ரொம்ப குறைவு. ஒவ்வொரு ஓவருக்கும் முன் தமிழ் பாடல்களுக்கு இவங்க ஆட்டம் செம ஜாலியா இருந்தது. " அப்படி போடு, போடு". " அம்மாடி, ஆத்தாடி" மாதிரி பாட்டுகள் ஸ்பிகரில் ஒலிக்க, பீட்டை வச்சிக்கிட்டே சரியா ஆடுறாங்க !!

* ஒரு நேரம் யுவராஜ் எங்கள் ஸ்டான்ட் அருகே fielding செய்த போது, எனது பின் வரிசையில் ஒரு குட்டி பையன் " யுவி, யுவி" என கத்தியாவரே இருந்தான். யுவராஜ் பார்க்கவே இல்லை.

* சென்னை டீமில் இருவர் No 8 சட்டை அணிகின்றனர். இருவர் பெயரும் முரளி தான்!! ஒருவர் முரளிதரன். அடுத்தது முரளி விஜய் !! (வேண்டுமானால் அடுத்த முறை கவனியுங்கள்)

* மேட்ச் பற்றி ஒன்னுமே சொல்லலையே என்கிறீர்களா? மோகன் லால் நடிச்ச கிலுக்கம், சித்திரம் மாதிரி மலையாள படம் பாத்துருக்கீங்களா? படம் முழுக்க சிரிக்க வச்சிட்டு கடைசியில் சோகமா முடிச்சு கனத்த மனதோட வெளியே அனுப்புவாங்க; அது போல சென்னை ஜெயிக்கும்னு கடைசி வரை நினைக்க வச்சி, கடைசியில் தோற்றது மக்களை நோக அடித்து விட்டது. Completely outplayed என்றால் கூட மக்கள் சாதரணமா எடுத்துப்பாங்க; இப்படி ஈசியா ஜெயிக்க வேண்டிய மேட்சை தோத்தது பெரிய ஷாக் பல பேருக்கு. கோனி ( Gony ) மேல் தான் பலருக்கும் கோபம். பவுளிங்கில்லும் நிறைய ரன் தந்தார். கேட்ச் ஒன்று விட்டதோடு, முக்கிய நேரத்தில் நிறைய பந்துகள் வீணாக்கினார். பலரும் கடைசியில் Gony-யை திட்டி கொண்டிருந்தனர்.

எனக்கும் கூட இனி தொடர்ந்து IPL matches பார்க்க கூடாது அப்படிங்கற அளவு கோபம்.. எத்தனை தடவை இப்படி முடிவு பண்ணிருக்கோம்!! ம்ம்ம் !!!

Thursday, March 18, 2010

வானவில் - ஐ.பி.எல் & மரண வாக்குமூலம்

சென்னை ஸ்பெஷல் : ஒரே நாளில் திருப்பதி தரிசனம்

IRCTC ரயில் சேவை பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். சனி, ஞாயிறுகள் தவிர மற்ற தினங்களில் சென்னையிலிருந்து திருப்பதி ரயிலில் சென்று ஒரே நாளில் தரிசனம் பார்த்து வரும் அருமையான வசதி உள்ளது. அதி காலை 6.25 கிளம்பும் திருப்பதி சப்தகிரி express-ல் சென்று விட்டு, அன்று இரவு 8.30--க்கு திரும்ப சென்னை வந்து விடுகிறார்கள். பத்மாவதி அம்மையாரும் கூட தரிசனம் செய்கிறார்கள் . காலை மற்றும் மதிய உணவு, தர்ஷன் டிக்கெட், டிரைன் செலவு எல்லாம் சேர்த்து பெரியவர்களுக்கு Rs. 1200ம், குழந்தைகளுக்கு Rs.960-ம் சார்ஜ் செய்கின்றனர். AC Chair car - எனில் ருபாய் 450 அதிகம்.

படித்ததில் பிடித்தது

அடைய முடியா பொருளின் மீது ஆசை தீராது!! - தேவ தாஸ்

IPL தமாக்கா

IPL மேட்ச்கள் ஆரம்பமாயடுச்சு. 8 டீம்கள் . ஒவ்வொரு டீமும் மற்ற டீமுடன் ரெண்டு முறை விளையாடுவது ரொம்பவே அதிகம். கொஞ்ச நாள் கழிச்சு யாருடன் யார் விளையாடியதில் யார் ஜெயித்தார் என ஞாபகம் வச்சிக்கவே முடியாது. சரியா பசங்களுக்கு பரீட்சை நேரத்தில் IPL வருது. தினம் கண் முழிச்சு பார்த்தா எல்லோரும் தூங்கிய பிறகு நாம தூக்கம் வராம முழிக்க வேண்டியிருக்கு. பார்க்கவும் முடியாம பார்க்காம இருக்கவும் முடியாம திரிசங்கு சொர்க்கமா இருக்கு!!

அய்யா சாமி

அய்யா சாமிக்கு கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் ஆகிடுச்சு; மனுஷன் இன்னும் ஒழுங்கா தோசை ஊத்த கத்துக்கலை. நிறைய தடவை தோசையை கருக்கிடுறார். அட அவருக்கு ஊத்தும் போது கருக்கினா பரவால்லைங்க. அவங்க வீட்டம்மாவுக்கு ஊத்தும் போது கருக்கிடுறார். அப்புறம்?? ம்ம்.. அப்பளம் தான்

செல் போன் விபத்துக்கள்

செல் போன் பேசியவாறே டிரைவர் வண்டி ஓட்டி சமீபத்தில் பேராவூரணி பள்ளி குழந்தை இறந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மூன்று மாதத்தில், டிரைவர் செல் போன் பேசி மரணம் நிகழ்வது இது எட்டாவது முறையாம். எப்போது தான் வண்டி ஓட்டுபவர்களுக்கு இந்த தெளிவு வருமோ? அரசாங்கமும் சற்றும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.. மீண்டும் மீண்டும் இது போன்ற செய்தி கேள்வி படுகையில் மனது ரொம்பவும் சங்கட படுகிறது.

வாரம் ஒரு சட்ட சொல்: மரண வாக்குமூலம்

மரண படுக்கையில் இருக்கும் ஒருவர் தருகிற வாக்கு மூலம் மரண வாக்குமூலம் எனப்படுகிறது. சுய நினைவுடன் இருக்கும் போது அவர் வாக்கு மூலம் தந்திருக்க வேண்டும். டாக்டர் அல்லது நடு நிலையான மூன்றாம் நபரிடம் இதனை அவர் அளிக்கலாம். இதனை நீதிபதி முன் வழங்க முடிந்தால் அதன் weightage சற்று அதிகம். மரண படுக்கையில் இருக்கும் நபர் பொய் சொல்ல மாட்டார் என்பது சட்டத்தின் எதிர் பார்ப்பு. சினிமாக்களில் நாம் இந்த காட்சி அவ்வபோது பார்த்திருக்கலாம். சில நீதி மன்றங்கள் இந்த மரண வாக்கு மூலத்தை வைத்தே தீர்ப்பு தருவதும் உண்டு, சில நேரங்களில் இதை தவிர இன்னும் evidence தேவை என்று கூறுவதும் உண்டு.


ஒரு சந்தேகம்

60 வயது-க்கு மேல் உள்ள ஆண்கள் பெரும்பாலும் ஒல்லியாக இருக்கிறார்கள். இத்தனைக்கும் அவர்களில் பலர், 30-40 வயதில் குண்டாக இருந்தவர்களும் உண்டு. ஆனால் 60 வயது -க்கு மேல் பெண்கள் பெரும்பாலும் குண்டாகவே உள்ளனர். இது ஏன்? பெண்கள் விஷயத்திலாவது மெனோபாஸ், யூடரஸ் அகற்றுதல் போன்ற காரணங்களால் வெயிட் போடுது என சொல்லலாம். ஆண்கள் ஏன் வயதான பின் ஒல்லியாகிறார்கள்? விடை தெரிந்தால் பின்னூட்டத்தில் பகிருங்கள்.

Thursday, March 11, 2010

முதல் பிள்ளை.. நடு பிள்ளை .. கடைசி பிள்ளை

ஒரு குடும்பத்தில் ரெண்டுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருப்பது சாதாரணமாய் இருந்தது ஒரு காலம். இப்போது பெரும்பாலும் குடும்பங்களில் ஒன்று அல்லது ரெண்டு குழந்தைகள் தான்.

முதல் பிள்ளை, நடு பிள்ளை, கடைசி பிள்ளை இவர்களுக்கென சில தனிப்பட்ட குணங்கள் உண்டு. அவற்றை இங்கு பட்டியலிட முயல்கிறேன். உங்களுக்கு நீங்கள் பொருத்தி பார்த்து கொள்ளலாம். ஒரே குழந்தை என்றால் அது "முதல் குழந்தை" category-ல் தான் பெரும்பாலும் வரும் என்கிறார்கள் அறிவியலறிஞர்கள்!

முதல் பிள்ளை..

** பொறுப்பானவர்கள்.
** குடும்ப கஷ்டம் உணர்ந்தர்வர்கள்.
** சற்று dominating tendency உள்ளவர்கள்.
** எல்லாவற்றிலும் சிறந்ததை எடுத்து கொண்டு மற்றதை அடுத்த குழந்தைகளுக்கு தருவார்கள்.
** வீட்டு வேலைகள் அதிகம் செய்ய மாட்டார்கள். தம்பி, தங்கைகளை பார்க்க விடுவார்கள்.

நடு பிள்ளை

** ரொம்ப balanced ஆன person ஆக இருப்பார்கள்.
** பொறுமை சாலிகள்
** நண்பர்கள் அதிகமாக இருக்கும்
** Attention முழுதும் முதல் மற்றும் கடைசி பிள்ளைக்கு கிடைக்க, இவர்கள் ** அதிகம் importance இன்றி வளர்ந்தவர்களாக இருப்பார்கள். இது குறித்த வருத்தம் சற்று இருக்கும்
** பல நேரங்களில் குடும்பத்திலும் பிற இடங்களிலும் வரும் சண்டைகளை தீர்த்து வைப்பவர்களாக இவர்கள் இருப்பார்கள்.
** முடிவெடுப்பதில் சற்று தடுமாற்றம் உள்ளவர்களாக இருக்க வாய்ப்பு உண்டு.
** இவர்கள் எல்லாவற்றுக்கும் முதல் குழந்தை உடன் போட்டி போட்டே, எதையும் பெற வேண்டி இருப்பதால் நல்ல போட்டியாளராக ( Competitive ) இருப்பார்கள்.

கடைசி பிள்ளை

** குறும்புகாரர்களாய் இருப்பார்கள்.
** செல்லம் அதிகம்.
** எல்லோராலும் பந்தாட படுவார்கள்
** Creative person ஆக இருக்கும் வாய்ப்பு அதிகம்
** ரிஸ்க் எடுக்க ஆசை படுபவர்களாக இருக்க கூடும்
** மற்றவர்கள் சொல்வதை கேட்டு நடப்பவர்களாக உள்ளதால் அலுவலகம் மற்றும் பொது இடங்களில் எளிதில் எல்லோரோடும் ஒத்து போய் விடுவார்கள்
** சில குடும்பங்களில் கடைசி பிள்ளை மட்டும் நல்ல வேலைக்கு போகாமல் இருப்பது உண்டு. (என் அம்மா என்னிடம் கடைசி பிள்ளையா இருந்து நீ நல்லா படிச்சு வந்தது ஆச்சரியம் தாண்டா என்பார்).
** அவர்கள் பல விஷயங்களில் மற்றவர்களை depend செய்பவர்களாக இருப்பார்கள்.

என்ன உங்களோடு ஒப்பீடு செஞ்சாச்சா? சரியா இருக்கா தப்பா இருக்கான்னு பின்னூட்டத்தில் சொல்லுங்க !

Friday, March 5, 2010

வானவில் - நித்யானந்தா- தில்லு துர- ஹோசானா

நித்யானந்தாவும் மீடியாவும்


நித்யானந்தா விஷயத்தை ஒவ்வொருவரும் எப்படி அணுகுகிறார்கள் என்பது சுவாரஸ்யமாக உள்ளது. முதலில் இதை வெளி படுத்திய சன் டிவி. இதனை பார்க்கும் audience -ல் சிறுவர்கள் இருப்பார்கள்; குடும்பத்தின் dining hall-ல் பார்க்க படும் என்பது பற்றி கவலை இன்றி திரும்ப திரும்ப ஒளி பரப்பியது. தின மலர் பத்திரிக்கை நித்யானந்தாவை விட ரஞ்சிதா மேலும், சினிமா உலகம் மீதும் தன் கோபத்தை தீர்த்து கொண்டது. இதற்கு முன் புவனேஸ்வரி விவகாரத்தில் சினிமா உலகம் தினமலரை எதிர்த்ததால் உள்ள கோபம்.!! இதை விட குமுதம் நிலை தான் செம சுவாரஸ்யம். இந்த விஷயம் வெளி வந்த பின்,  வந்த குமுதத்தில் கூட, நித்யானந்தா தொடர் உள்ளது (கடைசி நிமிடம் என்பதால் எடுக்க முடியலை போலும்) . ஆனால் விஷயம் வெளி வந்த உடனே " நித்யானந்தா லீலைகள் முழுதும் பார்க்க குமுதம் ஆன்லைனில் மெம்பர் ஆகுங்கள்" என தெரிந்த, தெரியாத அனைவருக்கும் மெயில் அனுப்பியது...!!

இந்த மனிதர் பிரம்மச்சரியத்தை பற்றியும் துறவி ஆவதையும் பற்றி பேசி எத்தனை ஆண்களும் , பெண்களும் துறவி ஆகியுள்ளனர்!! அவர்களை நினைத்தால் வருத்தமாக உள்ளது .

தில்லு துர

தில்லு துர பற்றிய விளம்பரங்கள் பின்னே ஒரு சிறு வரலாறு உள்ளது. கிட்டதட்ட 10 வருடங்களுக்கு முன் " புள்ளி ராஜாவுக்கு எயிட்ஸ் வருமா? " என இதே பாணியில் விளம்பரம் செய்தது எயிட்ஸ் கட்டுபாடு இயக்கம். அதன் பின் எயிட்ஸ் பற்றிய பல தகவல்கள் விளம்பரங்களில் வர துவங்கின. ஆனால் இவை மக்களுக்கு விழுப்புணர்வு என்ற நிலை தாண்டி, பய உணர்வையே தந்தது. இதன் negative impact மிக அதிகமாக, எயிட்ஸ் கட்டுப்பாடு இயக்கம் அதிகம் பயப்படுத்தாத படி தன் அணுகுமுறையை மாற்றி கொண்டது. இந்த முறை கூட பாருங்கள். முதலில் தில்லு துர என்று மட்டும் விளம்பரம் செய்து ஒரு ஆர்வம் வர வைத்தனர். பின் தில்லு துரக்கே குழப்பமா என்றனர். கடைசியாக " நம்பிக்கை மையம்" வந்து சோதனை செய்த பின் தில்லு துரக்கு குழப்பம் போயிடுச்சு என பாசிடிவாக முடித்து விட்டனர்!!

வினை விதைத்தவன்

பிஜேபி தலைவர் பிரமோத் மகாஜனை அவரது சகோதரரே சுட்டு கொன்றது அனைவருக்கும் நினைவிருக்கும். சுடப்பட்ட பின், 40 நாளுக்கும் மேல் கோமாவில் இருந்து இறந்தார் பிரமோத். இப்போது அவரை சுட்டு கொன்ற பிரவீன் மகாஜன் அவரை போலவே 40 நாளுக்கும் மேல் கோமாவில் இருந்து இறந்துள்ளார். ஏதாவது சொல்ல தோணுதா??

வாரம் ஒரு சட்ட சொல் இந்த வாரம் - பரோல் (Parole)

சிறை தண்டனை பெற்ற ஒருவர் தண்டனை முடியும் முன், குறிப்பிட்ட காலம் கோர்ட் அனுமதியுடன், வெளி உலகிற்கு வருவது பரோல் எனப்படும். கோர்ட் குறிப்பிட்ட காலம் முடிந்ததும், அவர் மீண்டும் சிறைக்கு சென்று விடுவார். (சமீபத்தில் மரணமடைந்த பிரவீன் மகாஜன் பரோலில் வெளியே இருந்த போது தான் இறந்தார்)


சமீபத்திய SMS :

இந்தியர்களின் பொதுவான சில குணங்கள்:

1. Bye சொன்ன பிறகும் பத்து நிமிஷம் பேசுவார்கள்.

2. ஒரு நிகழ்ச்சிக்கு சரியான நேரத்துக்கு வர வேண்டுமென்றால், அதற்கு 45 நிமிடம் முன்பு நிகழ்ச்சி ஆரம்பிபதாக இந்தியர்களிடம் சொல்ல வேண்டும்.

3. தங்களுக்கு வந்த Gift -டை பிறர் திருமணத்தில் பரிசாக கொடுப்பார்கள்.

4. அவர்களுக்கு நாட்டு பற்று கிரிக்கட் மேட்ச் நடக்கும் போதோ, போர் வரும் சூழலிலோ தான் வரும்.

ம்ம்.. இதில் எத்தனை நமக்கு ஒத்து போகும்னு நான் Check பண்ணிட்டேன். நீங்க??


சமீபத்தில் ரசிக்கும் பாடல்

விண்ணை தாண்டி வருவாயா படத்தில் " ஹோசன்னா" பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது. அற்புதமான மெட்டு. விஜய் பிரகாஷ் பாடியிருக்கும் விதம் அருமை. தாமரையின் பாடல் வரிகளும் அசத்துகிறது. இந்த வருட Top 10 பாடல்களில் இந்த பாடலுக்கு அநேகமாய் இடம் உண்டு.


ஐயா சாமியின் கவிதை


ஐந்து ருபாய் கடலை வாங்கி

ஒவ்வொன்றாய் கொறித்த பின்

மனதில் நின்றது

தவறி விழுந்த சில கடலை....

Wednesday, March 3, 2010

இரு கவிதைகள்


ருகருகே இருந்தாலும்
இணைவதில்லை முழுசாய்
கடலோடு அலைகள்..

*************

முதன் முறை பிரமிப்பாய்..
அடுத்த முறை சாதாரணமாய்
பின்னரதுவே பழகி போய்
இறுதியில் புளித்து போய்
எல்லாம்.. எல்லாம்...
Related Posts Plugin for WordPress, Blogger...