Sunday, July 31, 2016

வானவில்: முத்தின கத்திரிக்காய்- மெட்ரோ - ஏ.. சண்டக்காரா

பார்த்த படம்: முத்தின கத்திரிக்காய்

சுந்தர் சி. நடித்த படம் - நிச்சயம் கொஞ்சம் காமெடியாய் இருக்கும்; ஒரு சனிக்கிழமை மாலை நல்ல விதமாய் போகும் என நினைத்து பார்த்தோம்; பெண் 7 மணிக்கே தூங்கி விட்டாள் ! ஹவுஸ் பாஸ் வேறு வேலை பார்க்க போய் விட்டார். இதிலேயே படம் எப்படி என புரிந்திருக்கும் !

ஜனரஞ்சக மனிதரான சுந்தர் சி எப்படி தவறான படத்தை ரீ மேக் செய்ய திட்டமிட்டோரோ !!

ஒரு காலத்தில் அம்மாவை லவ் பண்றார்.. 20 வருஷம் கழிச்சு அவரின் பெண்ணை மணக்கிறார் ஹீரோ..இதில் பழைய அம்மணி (இப்போ மாமியார்) வேற லவ் பார்வை பாத்து கிட்டே  இருக்கார்  கொடுமைடா சாமி.. !

படத்தின் இறுதியில் வரும் டுவிஸ்ட் மட்டும் கொஞ்சமே கொஞ்சம் சுவாரஸ்யம்.. அதற்காக உங்களின் ரெண்டரை மணி நேரத்தை வீணாக்க வேண்டாம் !

அழகு கார்னர் 
ஹெல்த் கார்னர்

வாக்கிங் செல்லும் போது பின் பற்ற கூடிய முக்கியமான விஷயம் ஒன்று: சாலைகளின் வலது பக்கம் நடக்கவும் !

வாகன ஓட்டிகள் இடது பக்கம் வருவார்கள்.. நாம் நமது வலப்பக்கம் நடப்பது நல்லது.. இப்படி நடக்கும் போது வாகனங்கள் நமக்கு முன்னர் வரும்.. எனவே உரசி வந்தால் கூட தள்ளி போய் விடுவது எளிது.. வாகனங்களும் சேர்ந்து நாமும் இடப்பக்கம் நடந்தால் பின்னாலிருந்து ஒரு கார் வந்து முட்டினால் கூட நமக்கு தெரியாது.. அரிதாக வாக்கிங் செல்லும் போது நடக்கும் விபத்துகள் இப்படி நடக்கவும் வாய்ப்புண்டு..

இது எனது சொந்த கருத்தல்ல; உடல்பயிற்சி குறித்த பல்வேறு புத்தகங்களில்  சொல்லப்பட்ட ஒரு கருத்து.. முடிந்தவரை நான் பின்பற்றுகிறேன் !

பார்த்த படம் 2: மெட்ரோ 

நிச்சயம் ஒரு வித்தியாச கதைக்களன். செயின் பறிப்பு என்கிற பின்னணி ... ஒரு குடும்பம் ... செயின் பறிக்கும் இளைஞர் கும்பல் மறுபுறம்.. விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள். அனாவசிய பாடல், சண்டைகள் இன்றி எடுத்த விஷயத்துக்கு நியாயம் செய்திருக்கிகின்றனர்.

இருப்பினும் வன்முறை அதிமாகியதால் படத்துக்கு A Cerficate கிடைத்தது. இந்த படத்தை அவசியம் காண வேண்டிய பெண்களை இது வராமல் செய்து விட்டது.. படம் பரவலாக பாராட்ட பட்டாலும் தோல்வி படமாகி விட்டது

நல்ல படம் விரும்புவோர் ஒரு முறை நிச்சயம் காணலாம் இந்த மெட்ரோவை !

என்னா பாட்டுடே  - ஏ.. சண்டக்காரா 

இறுதி சுற்று படமே - மிக ரசித்து பார்த்த ஒன்று; படம் எப்படி என்பதற்கு ஒரு சாம்பிள் இந்த பாடல்.

மெலடியில் ஒரு வித்யாசமான முயற்சி.. சந்தோஷ் நாராயண் திறமை அட்டகாசமாக வெளிப்படும் பாட்டு,

எல்லாவற்றுக்கும் மேல் பாடலை பார்க்கும் போது ரசிப்பது ஒன்று மட்டுமே; ரித்திகாவின் நடிப்பு; முகபாவம் மற்றும் புன்னகை.. சான்ஸே இல்லை ! முதல் படம் போலவே இல்லை அவர் நடிப்பு.. ஒரு பாக்ஸர் ஆன அவர் சண்டை காட்சிகளில் நன்கு நடித்ததில் ஆச்சரியம் இல்லை; இப்பாடல் உள்ளிட்ட பிற காட்சிகளில் அவர் நடிப்பு மிக இயல்பாகவும் ரசிக்கும் படியும் இருந்தது தான் ஹை லைட்தத்துவம் (நானே ஜிந்திச்சேன்!)

ஒவ்வொரு மனிதருக்கும் எப்போதும் - எதோ ஒரு விஷயம் அல்லது கவலை மனதை அழுத்தி கொண்டே தான் இருக்கும். தினசரி வேலைகள் எல்லாமே நன்கு செய்து கொண்டிருந்தாலும் மனதின் மூலையில் அந்த கவலை இருந்து கொண்டிருக்கும். மாணவர் எனில் - தேர்வில் என்ன மார்க் வாங்குவேன்.. பெரியவர்கள் எனில் - நம் பிள்ளைக்கு நல்ல வேலை/ திருமணம் நடக்குமா - இப்படி ஏதேனும் ஒன்று ...

இத்தகைய கவலைகள் இல்லாத நபர்களே இல்லை.. மனதில் சின்ன அளவில் இருக்கும்வரை இதில் பிரச்சனை இல்லை. சிலர் இதனையே திரும்ப திரும்ப யோசித்து Depression என்கிற நிலைக்கு சென்று விடுகிறார்கள்..

நாம் பின்பற்ற வேண்டிய முக்கியமான  விஷயம்: எதற்கும் பெரிதாக கவலை கொள்ளாமல் இருப்பது தான்..

ஒரு வருடம் முன்பு எதோ ஒன்றுக்கு கவலை கொண்டோம்.. இன்று அதே கவலையா இருக்கிறது? வேறு ஒன்று இல்லை.. ?? அப்படி.. எல்லா பிரச்சனைகளும் சரியாகி விடும்..

காலத்தை விட அற்புத மருந்து எதுவுமே இல்லை !

தொலைக்காட்சி கார்னர் 

* விஜய் டிவி இரவு 9.30 -டன்  சீரியல்களை முடித்து விட்டு 45 நிமிட ப்ரோக்ராம்கள் இரண்டு ஒளிபரப்புகிறது; 9.30 முதல் 10.15 வரை கலக்க போவது யாரு நிகழ்வின் சிறந்த பகுதிகளை காண்பிப்பதால்- தூங்கும் முன் சற்று நேரம் மனம் விட்டு சிரித்து விட்டு உறங்கி செல்ல முடிகிறது !

* சென்ற வார நீயா நானாவில் - ஆண்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்களா என இரண்டு பக்கமும் பெண்கள் (மட்டும் ) பேசினர் .. அது என்ன சார் நியாயம்.. ஆண்கள் மகிழ்ச்சியா இருக்காங்களா என சொல்ல கொஞ்சம் ஆண்களாவது வேணாமா? நிகழ்ச்சி கொஞ்சம் செக்ஸ் சார்ந்தும் சென்றது... பெண்கள் ரொம்ப பூடகமாய்,  அதே நேரம் இந்த விஷயத்தை அழகாக பேசினார்கள்..

Sunday, July 24, 2016

வானவில்: அரவிந்த்சாமி - HDFC ATM பிரச்சனை - இரவு வாக்கிங்

ஆயிரம் பதிவுகள் பற்றி ...

சென்ற கபாலி விமர்சனம் -1000வது பதிவு; சினிமா விமர்சனம் என்பதால் 1000 பற்றி வேறு எதுவும் சொல்லவில்லை;

2011-முதல் 2013 வரை தீவிரமாக பிளாகில் எழுதி வந்தவன், ACS இன்ஸ்டிட்யூட் வேலைகள் மிக அதிக நேரம் எடுத்து கொள்ள, பதிவு எழுதுவது குறைந்தது.

சில மாதங்களுக்கு முன் பார்க்கும்போது ஆயிரம் பதிவுகளுக்கு இன்னும் 50-60 பதிவுகள் தான் தேவை என்பதை அறிய, அதுவே கடந்த சில மாதங்களில் தொடர்ந்து எழுத உத்வேகம் தந்தது; நடுவில் அவ்வப்போது பழைய பதிவுகளை பப்லிஷ் செய்து வந்ததையும் ஓரிரு மாதமாய் குறைத்து விட்டு முழுக்க புதிய பதிவுகள் மட்டுமே..

நிச்சயம் கடந்த சில மாதங்கள் போல் தொடர்ந்து எழுதும் உத்தேசம் இல்லை.. இயலும் போது மட்டும் எழுத கூடும்; வாரம் புதிதாய் ஒரு பதிவேனும் எழுத எண்ணம்.. மேலும் பழைய பதிவு வாரம் ஒரு முறை re publish ஆகலாம்

பயணம் சார்ந்த பதிவுகள் தான் அதிகம் விரும்பப்படுகிறது என்பது நண்பர்கள் அவ்வப்போது பேசும்போது தெரிகிறது..

ஊக்கம் தரும் அனைத்து நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி !

தொல்லை காட்சி  (டிவி கார்னர் ) 

கணவன்- மனைவி - கணவரின் தாயாருடன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி ஜீ தமிழில் -ஆஹா மாமியார் ஓஹோ மருமகள். அநேகமாய் இளம் ஜோடிகளை தான் தேர்வு செய்கிறார்கள். கண்ணை கட்டி விட்டு -அரங்கில் சேர் எங்கு இருக்கிறது என கண்டு பிடித்து அமர சொல்வது; சினிமா சம்பந்தமான சில எளிய கேள்விகள் என ஓரளவு சுவாரஸ்யமாக செல்கிறது..
*********
புது சரவணன் மீனாட்சி - அதே பழைய கதை என்றாள் பெண்..சரவணன் - மீனாட்சி 2 குடும்பத்துக்கும் பகை - ரெண்டு பேர் அப்பாவுக்கும் ஆகவே ஆகாது  என்கிற ரீதியில் செல்கிறது. புது ஹீரோ ரியோவுக்கு நடிப்பு நிச்சயம் வரலை.. போக போக improve செய்தால் தான் உண்டு !
*********
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியில் அரவிந்த் சாமி - மணி ரத்னம் நட்பு பற்றி ஒருவர் கேட்டார்; அரவிந்த்சாமி முதல் படத்தில் நடித்த போது - முதல் நாளே பலரும் பாராட்டினாராம். உடனே அவர் மணிரத்னத்திடம் போய் " எனக்கு இந்த படத்துக்கு என்ன நேஷனல் அவார்ட் கிடைக்கும் - சிறந்த நடிகருக்கா? சிறந்த துணை நடிகருக்கா? என்று கேட்டாராம் ! மணிரத்னம் அண்மையில் ஒரு கெட் டுகேதரில் இதனை சொல்லி சொல்லி சிரித்தாராம்..அரவிந்த்சாமி " நான் எல்லாத்தையும் முயற்சி பண்ணி பார்த்துடுவேன்; குறிப்பா என்னால் செய்ய முடியாதுன்னு நான் நினைக்கிற விஷயத்தை எடுத்து செய்து பார்ப்பேன்; இன்னிக்கு வரை நான் தமிழ் நல்லா பேச மாட்டேன்; இந்த நிகழ்ச்சி நடத்த வாய்ப்பு வந்த போது தமிழ் நல்லா பேச முடியாதுன்னு தெரிஞ்சும் - அதை இம்ப்ரொவ் செய்ய ஒரு சான்ஸ் என ஒப்பு கொண்டேன்; இப்படி நிறைய விஷயம் - என்னால் செய்ய முடியாததை  எடுத்து செய்வேன் .. அப்புறம் நல்லா வந்துடும் " என்றார் . Very good attitude !

HDFC வங்கி ATM ஒரு முக்கிய பிரச்சனை

அநேகமாய் எல்லா வங்கி ATM களிலும் - ATM கார்டை வைத்து விட்டு எடுத்து விடலாம். ஆனால் HDFC வங்கி ATM வித்யாசமானது; ATM கார்டை மிஷின் சற்று நேரம் விழுங்கி விட்டு பின் வெளியே தள்ளும்; வெகு சில நேரங்களில் கார்ட் உள்ளே போய் மாட்டி விடுவதும் உண்டு; எனக்கும் அப்படி ஒரு முறை நடந்துள்ளது; நல்ல வேளையாக வங்கி இருக்கும் இடத்திலேயே உள்ள ATM என்பதால் - உடன் வங்கியில் புகார் செய்தேன்; விபரம் சேகரித்து கொண்டு மறு நாள் வந்து வாங்கி கொள்ளுங்கள் என்றனர். மறுநாள் சென்று வாங்கி வந்தேன்.. இந்த ஒரு நாள் நீங்கள் கார்ட் உபயோகித்து பணம் எடுக்க முடியாது என்கிற பிரச்சனை வேறு

HDFC வங்கியும் பிற வங்கிகள் போல கார்டை உள்ளே விழுங்காமல் வெளியில் வைத்து எடுக்கிற மாதிரி செய்தால் நன்றாய் இருக்கும் !

QUOTE CORNER


Think big, and your deeds will glow.
Think small, and you will fall behind.
Think that you can, and you will.
It is all in the state of mind.

என்னா பாட்டுடே   -புத்தம் புது காலை

அலைகள் ஓய்வதில்லைக்காக எழுதப்பட்ட இப்பாடல் அப்படத்தில் இடம் பெறவில்லை; 25 ஆண்டுகளுக்கு பிறகு இளையராஜா இசையமைத்த மேகா படத்தில் மீண்டும் ரீ மிக்ஸ் செய்து பயன் படுத்தப்பட்டது.

பெரும்பாலான ரீ மிக்ஸ் பாடல்கள் எனக்கு பிடிப்பதில்லை; இப்பாடல் அதற்கு ஒரு விதிவிலக்கு

புத்தம் புது காலை பாடலை திரையில் பார்க்க முடிவது முதல் காரணம்; அடுத்து ஹீரோயின் ஸ்ருஷ்டி ..அடடா.. என்னா அழகு. மிக லேசாய் (ஒரு சுற்று ) எடை அதிகம் எனினும்- அந்த சிரிப்பும் dimple -ம் மனதை கொள்ளை அடிக்கிறது

இப்பாடலை அதிகாலை நேரத்தில் இயற்கை சார்ந்து தான் படமாக்கியிருக்க வேண்டும்; படத்தில் வேறு விதமாய் பயன்படுத்தினாலும், சில சின்னச்சின்ன விஷயங்களால் பாடல் கவரவே செயகிறதுஹெல்த் கார்னர் 

நடை பயிற்சி மீண்டும் துவக்கியிருக்கிறேன் (அவ்வப்போது விடுவதும், பின் தொடர்வதும் வழக்கம் - கடந்த 7 ஆண்டுகளில் - வருடத்தில் பாதி நாட்களாவது நடந்திருப்பேன்)

நேரமே இல்லை என்று செல்வோருக்கு ஒரு சின்ன ஐடியா; இரவில் நடக்கலாம். இரவு என்று நான் சொல்வது 8 மணி முதல் 10 மணி வரை.

மாலை வீடு திரும்பி - சாப்பிட்டு விட்டு கூட 30-45 நிமிடம் நடக்கலாம். சாப்பிட்ட பின் நடக்கலாமா என்றால் - நடக்காமலே இருப்பதை விட - சாப்பிட்ட பின் நடப்பது தப்பே இல்லை !

இதனை தொடர்ந்து செய்து பார்த்து விட்டு தான் சொல்கிறேன்.

சாப்பிட்ட பின் நடப்பதில் நல்ல விஷயங்கள் சில உள்ளன..

முக்கியமாய் - அது மிக ரிலாக்ஸ்ட் ஆன நேரம்; வேறு வேலை எதுவும் மனதை உறுத்தாது; வெயில் அடிக்காது- இதனால் சோர்வாகமால் நடக்கலாம். சாப்பிட பின் நடப்பதால் - உறங்கும் முன் உண்ட உணவு செரித்து விடுகிறது; இதனால் எடை கூடும் வாய்ப்பு குறையும்.

ஒரு விஷயத்துக்காக தான் யோசிக்க வேண்டும்: நடந்து விட்டு வந்தால் தூக்கம் வருமா?

வரும்..!  நாம் நடக்க தானே செயகிறோம்... ஓடவில்லையே.. ஓடினால் தூக்கம் மிக லேசாக தொந்தரவாகலாம் - நடந்து விட்டு வந்து அடுத்த அரை மணியில் உறங்கினால் கூட எந்த பிரச்சனையும் இல்லை..

கூட யாரேனும் வந்தால் நலம்; இல்லா விடில் ஆபிஸ் முடிந்து வீட்டுக்கு வந்து பின் வாக்கிங் கிளம்புவது சற்று கடினம். வீட்டில் உள்ள யாரையேனும் ஜோடி சேர்த்து கொள்ளுங்கள்; பேசி கொண்டு நடப்பது பரம சுகம்.

விருப்பம் உள்ளோர் முயன்று பாருங்கள்.. இரவு வாக்கிங் !

Friday, July 22, 2016

கபாலி சினிமா விமர்சனம் : 1000 வது பதிவு !

ப்ளாகில் இது 1000வது பதிவு !

இன்று காலை வரை படம் பார்ப்போம் என தெரியாது.. நண்பன் - வழக்கறிஞர் பாலா உதவியால் டிக்கெட் கிடைத்தது; இல்லாவிடில் முதல் 3 நாளுக்குள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை  !

கதை 

விரிவாய் கதை சொல்லி உங்கள் சுவாரஸ்யம் கெடுக்க விரும்ப வில்லை; 

கெட்டவர்களை அழிக்கும் மாஸ் ஹீரோ கதை தான். கூடவே மனைவி-மகள் சென்டிமென்ட் - நட்பு- துரோகம் இவையும் பின்னணியில் .ப்ளஸ் 

ரஜினிக்கு அவரது வயதுக்கேற்ற பாத்திரம்.. நடிக்கவும், ஸ்டைலில் பிரகாசிக்கவும் நிறைய ஸ்கோப்... ரஜினி இல்லாத ஷாட்களை விரல் விட்டு எண்ணி விடலாம்..

ராதிகா ஆப்தே மற்றும் தன்ஷிகா Perfect casting ! இவர்களுடனான ரஜினியின் சென்டிமென்ட் - பெண்களிடம் ஓரளவு எடுபட கூடும்

பல ரஜினி படங்களில் கதையே இருக்காது; இங்கு நிச்சயம் கதை உண்டு.. திரைக்கதை இன்னும் ஷார்ப் & சுவாரஸ்யமாய் இருந்திருக்கலாம் :(

படத்தின் இறுதிநிமிடத்தில்  ஒரு துப்பாக்கி வெடிக்கிறது.  யார் மீது வெடித்தது என காட்டாமல் - பார்வையாளர் முடிவுக்கே விடுவது செம !

படத்தின் துவக்கம்- இன்டெர்வல் பிளாக் இரண்டும் அட்டகாசம்.

திரைக்கதை முழுதும் சில சின்ன சின்ன டுவிஸ்ட்- சஸ்பென்ஸ்கள் புதிதாய் வெளிப்பட்டு கொண்டே இருக்கிறது; உண்மையில் இவை இல்லாவிடில் படம் பார்ப்பது மிக கஷ்டமாகியிருக்கும் !

சந்தோஷ் நாராயண் பின்னணி இசை மற்றும் 2 பாடல்கள் (மட்டும்) அருமை

நெகட்டிவ் 

கேங்ஸ்டர் படம்- க்ரைம் கதை - ஆனால் படம் மிக மெதுவாய் நகர்கிறது; இடைவேளை வர ஒண்ணரை மணி நேரம் ஆகிய உணர்வு.. பிற்பகுதியில் நிச்சயம் ஓர் lag உள்ளது

 கதை மலேஷியாவில் நடப்பதால் ரஜினி உள்ளிட்டோர் பேசும் சில வார்த்தைகள் புரியவில்லை; அவற்றை திரும்ப திரும்ப வேறு பேசுகிறார்கள். எங்கள்/ பின் வரிசையில் பலர்  " அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் " என கேட்டு கொண்டே இருந்தனர்

கடைசி அரை மணி நேரத்தில் ரத்தம்/ வன்முறை சற்று அதிகம்..

துரோகம் படம் முழுதும் வருகிறது; இதனால் எல்லா பாத்திரங்களையும் சந்தேகிக்கிற மாதிரி ஆகி விடுகிறதுதியேட்டர் நொறுக்ஸ் 

நீண்ட நாள் கழித்து ரஜினி படம் முதல் நாள்- முதல் ஷோ; PVR  -வேளச்சேரியில் பார்த்தோம்;

ரஜினி ரசிகர்கள் கூட்டம் எக்கச்சக்கம்... முதல் 10-15 நிமிடம் பேப்பர்களை தூக்கி வீசி, எழுந்து நின்று டான்ஸ் ஆடியதில் ... ஆங்காங்கு பல இளம் பெண்கள் !! எங்கள் பின் சீட்டில் ஒரு நண்பர் குழு.. அதில் ஒரே ஒரு பெண்.. அவர் தான் முதல் 15 நிமிடம் தொடர்ந்து கத்தி கொண்டிருந்தார்.. போக போக ரஜினி ரசிகர்களும் சைலன்ட் ஆகி விட்டனர்..

பைனல் வெர்டிக்ட் 

ரஜினி ரசிகர்களுக்கு நிச்சயம் மிக பிடிக்கும்... மற்றவர்களுக்கு படம் ஜஸ்ட் ஓகே தான்.

இணையம் அல்லது கணினியில் பார்த்தால் சுத்தமாய் பிடிக்காது ! சந்தேகமே இல்லை

கபாலி : Worth Rs. 120; Nothing more; nothing less !

உடல் எடை குறைக்க செய்யும் ஹெர்பாலைப் - ஒரு நேரடி அனுபவம்

மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள்..

அடையார் ஆனந்தபவனில் சாப்பிட்டு விட்டு வெளியே வரும்போது சில பேர் நின்று கொண்டு உங்க உயரம்/ எடை செக் பண்றோம்; இலவச ஆலோசனை என்றார்கள். சரி.. சும்மாதானே என செக் செய்ததும் உங்க வெயிட் ரொம்ப அதிகம் - இதை எப்படி குறைப்பது, கொழுப்பு எப்படி குறையும் - இலவச ஆலோசனை - இந்த இடத்தில் நடக்குது; முடிஞ்சா நாளைக்கு வாங்க என்றனர்..

மறுநாள் தெரியாமல் அவர்கள் சொன்ன இல்லத்துக்கு சென்று விட் டேன்.

ஒரு நபர் ஹெர்பாலைப் மூலம் -  எப்படி இளைத்தேன் - அதனால் என்ன பலன் வந்தது; அப்புறம் இதனை ஒரு தொழிலாக செய்து மாதம் லட்ச கணக்கில் எப்படி சம்பாதித்தேன் என்ற விஷயம் பேசினார். பின் ஒரு சில நாட்கள் இந்த உணவு இலவசமாக தருகிறோம்; பிடித்தால் தொடருங்கள் என்றனர்.சரி முயன்று தான் பார்ப்போமே என்று தொடங்கினேன்

க்ரீன் டீ போல ஒரு பானம்.. அப்புறம் மில்க் க்ஷேக் போன்ற ஒரு  பானம்.. இது தான் உணவு.

காலை மற்றும் இரவில் இந்த உணவை சாப்பிடுங்கள்; மதியம் வழக்கமான உணவை சாப்பிடுங்கள் என்கிறார்கள்; இது தொடக்கத்தில்; பின் 3 வேலையும் இது மட்டுமே உணவு.

எனக்கு காலை இந்த உணவு சாப்பிடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை; மதியம் வழக்கமான உணவு சாப்பிட்டு விடுகிறோம்; இரவில் தான் பிரச்சனை; அந்த மில்க் க்ஷேக் சாப்பிட்டு சில மணி நேரங்களில் பசி வந்து விட - வேறு என்ன சாப்பிட இருக்கு என தேடி சாப்பிட்டு விடுவேன் (இவை நிச்சயம் சாப்பிட கூடாது !!அப்போது தான் பலன் கிடைக்கும் )

நான் துவங்கும் போது அவர்களிடம் தெளிவாக ஒன்று சொல்லி விட்டேன்; நான் மட்டும் தான் முயலுவேன்; வேறு யாரையும் இந்த டீலர்ஷிப்பில் சேர்க்கும் வேலை செய்ய மட்டேன் என..

முதல் சில நாட்கள் இலவசத்துக்கு பின் காசு கொடுத்து வாங்க வேண்டும். வாங்கினேன். அந்த பவுடர் சற்று விலை அதிகம்... மாதம் சில ஆயிரங்கள் வந்து விடும்..

சரியாக ஒன்னரை மாதம் சாப்பிட்ட நினைவு.. ஓரிரு கிலோ எடை குறைந்தது..

பின் வெவ்வேறு காரணங்கள் .. தொடராமல் விட்டு விட்டேன்..

இந்த ஹெர்பாலைப் குறித்து குமுதம் ஹெல்த் இதழில் வந்த கட்டுரையின் ஒரு பகுதி மட்டும் இங்கு தருகிறேன் 

உடலை இளைக்க செய்கிற சத்து பானங்கள் எவ்வளவு ஆபத்தானவை? உண்மையில் அவை என்ன செய்கின்றன? இது பற்றி மருத்துவர்களின் கருத்து என்ன? 

அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளை மட்டும் தான் மருத்துவர்கள் பரிந்துரைக்க முடியும். அத்தகைய மருந்துகளில் இந்திய அரசின் மருத்துவ குறீயிடு சான்றிதழ் இருக்கும். மருந்துகள் 14 வகையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின் தான் இந்த அங்கீகாரம் கிடைக்கும். உடலை குறைக்கும் பவுடர்கள் இந்த வகையை சேர்ந்தவை இல்லை என்று கூறும் மருத்துவர்கள் இவற்றை தொடர்ந்து எடுத்து கொள்வோர் குடலும் ரத்த குழாய்களும் நைந்து போகும் என்கின்றனர். மேலும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு மூளை மற்றும் நரம்பு மண்டலமும் கூட பாதிக்கப்படுமாம் !

பொதுவாக சிறுகுடலுக்குள் குறைந்த பட்சம் மூணு லிட்டர் தண்ணீர் இருக்க வேண்டுமாம், பருமனை குறைக்கும் பவுடர்கள் எடுத்துகொல்லும்போது அது உள்ளே போய் ஒரு ஸ்பான்ஜ் மாதிரி அத்தனை தண்ணீரையும் உறிஞ்சி விடுகிறதாம். இதன் காரணமாக கிட்னிக்கு செல்ல வேண்டிய தண்ணீர் தடுக்கப்பட்டு கழிவுகள் வெளியேறாமல் கிட்னிகள் பாதிக்கப்படுகிறது. 
*********
மீண்டும் எனது அனுபவத்துக்கு வருவோம் 

வெறும் மில்க் க்ஷேக் வகை உணவு 3 வேளை சாப்பிட்டால் நிச்சயம் எடை குறையவே செய்யும். ஆனால் வாழ்நாள் முழுதும் இதனை தொடர்வது மிக கடினம்.. செலவும் மிக அதிகம். நிச்சயம் சற்று வசதியானவர்கள் மட்டுமே வாங்க முடியும் 

அடுத்து அவர்கள் இதனை ஒரு மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் ஆக அடுத்த ஆளை சேர்ப்பதில் மிக குறியாக இருக்கிறார்கள். இது பெரிதும் எரிச்சலை தரும் ஒரு விஷயம். எப்படி ஆம்வே என்றாலே காத தூரம் ஓடுகிறோமோ அவர்களை போன்ற இன்னொரு கூட்டம் தான் இந்த ஹெர்பா லைப் ...

இதனை வியாபாரமாக தான் அணுகுகிறார்கள். உடல் எடை குறைப்பு என்பது பலரும் விரும்புவதால் அதனை வைத்து மற்ற பொருட்கள் விற்பனையில் இறங்குகிறார்கள் 

உடல் எடை குறைய சரியான டயட்.. வாக்கிங்; ஜாகிங், ஜிம் சென்று ட்ரையினர் மூலம் நிதானமாக குறைப்பது இதுவே நன்று.. 

இப்போதும் சில ஹோட்டல்களில் சாப்பிட்டு விட்டு வரும்போது இந்த ஏமாற்று கும்பல் வந்து நம்மிடம் பேசுவதை காண்கிறேன்.. "வேண்டாம் சார் " என்று சிரிப்போடு மறுத்து விட்டு நகர்ந்து விடுகிறேன் 

அண்மை பதிவு 

கபாலி சினிமா விமர்சனம்

Thursday, July 21, 2016

வானவில்: கபாலி ஜுரம் : அப்பா; ஆக்ஷன் ஹீரோ பிஜு விமர்சனம்

பார்த்த படம்: அப்பா 

இயக்குனர் சமுத்ரகனிக்கு கருத்து சொல்வதென்றால் ரொம்ப ஆசை போலும்; நாடோடிகள் துவங்கி அவர் இயக்கும் எல்லா படங்களிலும் கருத்து சொல்லி  விடுவார்; இம்முறை கொஞ்சம் ஓவர் டோஸ்...

மகனை அவன் போக்கில் வளர்க்கும் அப்பா சமுத்திரக்கனி. படிப்பை மட்டுமே கருத்தில் கொள்ளும் இன்னொரு அப்பா; இருக்கிற இடமே தெரிய கூடாது என சொல்லி வளர்க்கும் மற்றொரு அப்பா - இப்படி மூவரின் கதை எனும் அவுட்லைன் நன்றாக தான் இருக்கிறது. ஆனால் Execution என்று வரும்போது - பள்ளி கூடங்களின் பணம் பறிக்கும் (கொலை கார???) கும்பல், இள வயது காதல் என பல்வேறு பக்கம் ஊசலாடி இறுதியில் தேவையான தாக்கத்தை தராமல் போகிறது..

சாட்டை படமும் பள்ளி மாணவர்கள் குறித்தானது தான்.. அது மிகச் சரியே எந்த விஷயத்தை பேசுகிறதோ அதனை சுற்றியே சூழன்றது.. வெற்றியும் கண்டது.. இங்கு இலக்கு எது என்ற தெளிவில்லை.. எனவே இறுதி அவுட்புட் சரியில்லாமல் போய் விட்டது..

அழகு கார்னர் ரசித்த எழுத்து 

கீழ்க்காணும் முடிவெட்டும் அனுபவம் வாசித்து பாருங்கள். எழுதியது யாராய் இருக்கும் என ஊகியுங்கள்; விடை.. இதே வானவில்லில் இருக்கிறது !!
************
மெரிக்காவில் முடிவெட்டிக் கொள்ள முதலில் சலூனுக்குப் போன் செய்து 'அப்பாயிண்ட்மென்ட்' வாங்கிக் கொள்ள வேண்டும். (இங்கே இறந்து போவதற்குக் கூட 'அப்பாயிண்ட்மென்ட்' இல்லையெனில் கஷ்டம் தான்.) முடிவெட்டகம் உள்ளே போனால் சுத்தமாக வெளிச்சமாக இருக்கிறது. 'ஸ்க்ரீன்' தந்தி பேப்பர்கள் எல்லாம் கிடையாது. கல்லாவில் ஒருத்தனைத் தவிர மற்ற எல்லாரும் பெண்கள் தான். இளம் பெண்கள் !

முதலில் ஒருத்தி மல்லாக்க வைத்து பின்னாலிருந்து நெற்றி வரை வெந்நீர் கொட்டி, ஷாம்பூ போட்டு அலம்பி விடுகிறாள். அதன்பின், மார்புவரை பிளாஸ்டிக் போர்த்தி சொட்டச் சொட்ட மற்றொருத்தியிடம் அனுப்புகிறாள். அவள்தான் பிரதான முடிவெட்டி; நளினமான விரல்களையே சீப்பாக உபயோகப்படுத்தி பிரித்து பிரித்து உச்சியில் கத்திரி போடுகிறாள். ஈரத் தலையாதலால் மயிர் நாலா பக்கமும் பறப்பதில்லை. பேச்சு அதிகம் இல்லை.

அவ்வப்போது, ஒரு டயட் - கோக்கை சப்பிக் கொள்கிறாள். சில வேளைகளில் நிறுத்தி, எதிர்க் கண்ணாடி மூலம் "ஓகே?" என்று கேட்கிறாள். நானும் 'ஓகே' என்று தலையாட்ட தொடர்கிறாள். அதன் பின் வாசனாதி திரவியங்களை பிஸ்ஸ்ஸி ஏர்டிரையர் போட்டு உஷ்ணக் காற்றால் கூந்தலை உலர்த்தி 'பப்' என்று பண்ணி விடுகிறாள்.

இப்போது எலக்ட்ரிக் மிஷினால் அங்கங்கே கொரிக்கிறாள். கடைசியில் சிற்சில சிற்ப வேலைகள்; நம் ஊர் போலவே கழுத்தில் பவுடர் போட்டு போர்வையை உதறிவிட்டுப் பின்னாடி கண்ணாடி காட்டுகிறாள். "ஓகே?". நான் தலையை ஆட்ட, நாற்காலியை காலால் அழுத்தி விடுவிக்கிறாள். சார்ஜ் ? 20 டாலர் ! அவளுக்கு டிப் தனி !

- எழுதியவரை ஊகித்தீர்களா? வாத்தியார் சுஜாதா அன்றி வேறு யார் !

பார்த்த படம் 2: ஆக்ஷன் ஹீரோ பிஜு (மலையாளம்)

கதையே  இல்லாமல் ஒரு வெற்றிப்படம் எடுக்க முடியமா? முடியும் என நிரூபித்துள்ளது இந்த குழு.

முழுக்க முழுக்க சிறு சிறு சம்பவங்களால் மட்டுமே படம் நகர்கிறது.    கதை என்று எதுவும் இல்லை;

ஒரு போலிஸ் ஆபிசரின் டயரி குறிப்பே படம். அவர் சந்திக்கும் வழக்குகள் - அதை அவர் எப்படி டீல் செய்கிறார் என்பது தான் கதை- திரைக்கதை எல்லாமும்..

அலுவலகத்தில் சொல்வார்கள்.. ஒவ்வொரு ஊழியருக்கும் அவரது பாஸ் தான் முதல் HR மேனேஜர் என்று.. நிஜ HR அடுத்த கட்டம் தான். போலவே எந்த ஒரு கேசும் முதலில் வருவது போலீசிடம் தான் .. அவரால் தீர்க்க முடியாவிட்டால் தான் கோர்ட் என நம்புபவர் ஹீரோ நிவின் பாலி; இவர் தரும் தீர்ப்புகள் மற்றும் ட்ரீட் மென்ட்கள் வித்தியாசமானவை..

ஹீரோயின் என்று ஒருவர் எப்போதேனும் ஒரு முறை எட்டி பார்க்கிறார். மற்ற படி பெரிதாய் அவருக்கு ரோல் இல்லை.

நிச்சயம் ஒரு வித்தியாச முயற்சி.. ஒரு முறை காணலாம் !

 போஸ்டர் கார்னர் நம்முள் இருக்கும் குழந்தை தனத்தை தொலைக்காமல் இருப்பது பெரிய வரம்..  இல்லையா?

தமிழக மாணவரின் சாதனை 

மிக கடினமான CA தேர்வில் தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீராம் என்கிற மாணவர்  இந்தியாவில் முதல் இடம் பெற்றுள்ளார். 21 வயது மட்டுமே நிரம்பிய இந்த இளைஞர் இன்டெர்மீடியட் படிக்கும்போதும் ஏழாவது ரேங்க் வாங்கியவர்.


சேலத்தை சேர்ந்த இவர் சென்னையில் பயின்று வந்தார். CA, ACS போன்ற தேர்வுகளுக்கு தயார் செய்ய சென்னை ஒரு மிக சிறந்த  இடமாக திகழ்கிறது. சென்ற வருடமும் சென்னையை சேர்ந்த ஜான் பிரிட்டோ என்கிற மாணவர் தான் CA தேர்வில் இந்தியாவில் முதல் இடம் பெற்றார்..!!

கபாலி ஜுரம் 

தமிழகத்தை மட்டுமல்ல உலகின் பல இடங்களிலும் கபாலி ஜுரம் பரவிக்கொண்டிருக்கிறது. முதல் 3 நாட்களில் டிக்கெட் கிடைத்தால் பெரிய .விஷயம்.

இயக்குனர் பல்வேறு பேட்டிகளில் சொன்னதை வைத்து பார்க்கும் போது கதை இது தான்:

மலேஷியாவில் வாழும் தமிழர் கபாலி; அங்கு தமிழர்களுக்கு ஒரு பிரச்சனை வர பொங்கி எழுகிறார். மக்கள் தலைவர் ஆகிறார்..

இந்த கதையில் என்ன வித்யாசமாக இருக்கிறது என புரியவில்லை. திரைக்கதை நன்றாக இருந்தால் படம் சுவாரஸ்யமாக இருக்கும்..

எப்படி இருந்தாலும் குறைந்த பட்சம் 200 கோடி முதல் 3  நாளில் எடுத்து விடுவர்....

நாங்கள் இன்னும் டிக்கெட் எடுக்கவில்லை.. அநேகமாய் முதல் 4 நாள் கழித்தே பார்ப்போம் என ...நினைக்கிறேன்.

இணையத்தில் வெளியாகியிருக்கும் கபாலி பட விமர்சனம் இது .. உண்மையா..  கற்பனையா என்று தெரியவில்லை !

Tuesday, July 19, 2016

தொல்லை காட்சி - கலக்கபோவதுயாரு பைனல்; சரவணன் மீனாட்சி புதுசு-பழசு

கலக்க போவது யாரு பைனல் ஒரு பார்வை

ஒரு வருடமாய் நடந்த கலக்க போவது யாரு ஒரு வழியாய் முடிவுக்கு வந்தது.

ஹீரோவை விழாவிற்கு கூப்பிட்டால் வழக்கமாய் பரிசு வழங்கும் முன்னரோ அல்லது கடைசி அரை மணிக்கு முன்போ தான் கண்ணில் காட்டுவார்கள். இங்கு ஓப்பனிங்கே சிவ கார்த்திகேயனை வைத்து தான் !

போட்டியாளர்கள், ஜட்ஜ் -இவர்களை அழைக்கும் முன் சிவாவை தான் மாலை போட்டு மரியாதை செய்து அரை மணி நேரம் அதிலேயே ஒட்டி உட்கார வைத்தார்கள்...

அப்புறம் தாடி பாலாஜி மைக்கேல் ஜாக்சன் போல் ஆடுகிறேன் என மொக்கையை போட - எப்பய்யா பைனல் ஆரம்பிப்பீங்க என மக்களை கத்த  விட்டு -அப்புறம் நிகழ்ச்சியை ஆரம்பித்தார்கள்..

இதை விட சுமாரான கலக்க போவது யாரு பைனல் இருந்திருக்கவே முடியாது.. எப்படித்தான் சானலை மாற்றாமல் முழு நிகழ்ச்சி பார்த்தோம் என தெரியலை !!

வழக்கமாய் கலக்கும் முல்லை- கோதண்டம் துவங்கி பலரும் மிக சுமாரான பெர்பார்மன்ஸ்.. அதிலும் சிலரது பங்களிப்பு ஓரிரு நிமிடங்களில் முடிந்து விட்டது (எடிட்டிங்??)

அதை விட கொடுமை.. இறுதி முடிவுகள்.. முதல் பரிசு குரேஷிக்கு கொடுத்தார்கள்.. அதையாவது ஏற்று கொள்ளலாம்.இரண்டாம் பரிசு அறந்தாங்கி நிஷா....உண்மையில் அந்த அம்மணி பைனல் வந்ததே பெரிது.. இதில் இரண்டாம் பரிசு வேறு.. அந்த அம்மாவிற்க்கே அதை நம்ப முடியவில்லை..

நிச்சயம் இரண்டாம் பரிசு நவீனுக்கு தந்திருக்க வேண்டும்.. அன்று அருமையாக செய்தது நவீன் தான்.. சிவகார்த்திகேயன் கூட எழுந்து சென்று கட்டி பிடித்து பாராட்டினார்..

விஜய் டிவி இப்படி ஏதாவது Controversy செய்தால் மக்கள் அதை பற்றி நிறைய பேசுவார்கள் ; நினைவில் கொள்வார்கள் என்றே  செய்கிறார்கள் போலும் !!

ஹாட் ஸ்டார் -கோல்டு ஸ்டார் -யூ டியூப் இப்படி எதிலும் பார்த்து நேரத்தை வீணாக்காதீர்கள் !!

சரவணன் மீனாட்சி - பழசு 

இரவு உணவு சாப்பிடும்போது அவ்வப்போது பார்க்கிற வழக்கம் உண்டு.. சரி வேட்டையனும், மீனாட்சியும் சேர்ந்தார்களா என தெரிந்து கொள்ள ரொம்ப நாள் கழித்து கடைசி எபிசோட் பார்க்கலாம் என கண்டோம்..

வேட்டையனும், மீனாட்சியும் இறுதியில் சேர்ந்தே விட்டார்கள்.. அது மட்டும் தான் கடைசி எபிசோட்.. இறுதியில் அவர்கள் காரில் செல்ல - எதிரில் அடுத்த புது சீரியலில் வரும் மீனாட்சி வருவதாகவும் - இவர்கள் அவரின் கதையை கேட்க அப்படியே அடுத்த அத்தியாயம் ஆரம்பமாவதாகவும் காட்டி முடித்தார்கள்..

மீனாட்சிக்கு -வேட்டையனை பிடிக்க ஆரம்பித்து 200- 300 எபிசோட் ஆகிடுச்சு .. இந்த கிளைமாக்ஸை ஒரு வருஷம் முன்னாடியே வச்சிருக்கலாம்.. ஹூம்

சரவணன் மீனாட்சி - புதுசு 

விடாக்கண்டன்- கொடா கண்டன் பாணியில் - ஒரு நாள் கேப் விடாமல் அடுத்த  சரவணன் மீனாட்சி ஆரம்பித்து விட்டார்கள்.சரவணன் மீனாட்சி சீரியல்களில் ஹீரோயின் மட்டுமல்ல - ஹீரோவும் பலரும் ரசிக்கும் ஆளாய் இவர்கள் பிடிப்பது தான் முக்கிய விஷயம். இம்முறை சன் டிவி காம்பியர் ரியோ-வை கூட்டி வந்திருக்கிறார்கள். இவருக்கு இளம் பெண் ரசிகைகள் எக்க சக்கம் என பெண் சொல்லி கொண்டிருக்கிறார்..

இதையும் பாத்து தொலைக்கணும் போல !!

அச்சம் தவிர் 

விஜய் டிவி அச்சம் தவிர் - என்றால் ஜீ தமிழிலும் அப்படியே - அச்சு அசல் அதே மாதிரி ஒரு நிகழ்ச்சி நடக்கிறது.. ஒரே வித்யாசம்.. ஜீ தமிழில் கணவன் மனைவியாக சேர்ந்து இந்த சாகசத்தில் ஈடுபடுகிறார்கள் ...

அதிலும் இந்த வாரம் ரெண்டு டிவி யிலும் ஒரே விதமான போட்டி.. ஒரு ஏரிக்கு நடுவே மிக உயரத்தில் சின்ன கொடி கட்டி - அதை உயரத்தில் ஏறி எட்டி பிடித்து தண்ணீரில் தூக்கி எறிய வேண்டும்... அனைத்து கொடிகளையும் எடுத்த பின் தொபுக்கடீர் என தண்ணீருக்குள் குதிக்க வேண்டும்..

டிட்டோவாக ரெண்டு சானலும் இதே கான்செப்ட் தான் செய்து கொண்டிருந்தது..

ஒன்று மட்டும் புரிந்தது.. ரெண்டு பேரும் வேற எங்கோ ஒரு இடத்தில் சுட்டுருக்காங்க !!

Friday, July 15, 2016

பரம்பிக்குளம் : என்ன பார்க்கலாம்.. எங்கு தங்கலாம்?

ரம்பிக்குளம்.. இந்த ஊரின் பெயரோ, அதன் சிறப்புகளோ, இப்பயணம் செல்லும் வரை சிறிதளவும் அறிந்ததில்லை. டாப் ஸ்லிப் செல்லலாம் என்பதே எண்ணமாக இருந்தது. இணையத்தில் டாப்ஸ்லிப் மற்றும் பரம்பிக்குளம் சென்று வந்த பலரும், " Skip Topslip and Stay in Parambikkulam only" என்றே எழுதியிருந்தனர்.. இது ஓரளவு உண்மையே !ஏராள மக்கள் பரம்பிக்குளம் பற்றி எழுதியதால் தான் அங்கு சென்று தங்குவது குறித்து திட்டமிட்டேன்..

பொள்ளாச்சியில் இருந்து 12 கிலோ மீட்டர் சின்னதாக மலை ஏறினால், டாப்ஸ்லிப் வந்து விடும். அங்கிருந்து இன்னும் சில கிலோ மீட்டர்கள் மலை ஏறினால் பரம்பிக்குளம் !

இங்கு தங்க முன்பே நீங்கள் வனத்துறையிடம் பேசி அனுமதி வாங்க வேண்டும்.

இவர்களின் தொலை பேசி எண் : 94422 01690 / 91

ஹனி கோம்ப், டென்ட், ஐலண்ட் என மூன்று வித தங்கும் அறைகள் உள்ளன.

ஹனி கோம்ப்

சொந்தமாக காரில் வருபவர்களுக்கு இந்த தங்கும் வசதியை  தான் பரிந்துரைக்கிறார்கள். இவர்கள் சபாரி (Safari) தங்கள் சொந்த காரில் தான் செல்லவேண்டும்.

பரம்பிக்குளம் ஊரின் மையப்பகுதியில் இந்த தங்கும் விடுதி உள்ளது. நாங்கள் தங்கியது இங்கு தான்.

டென்ட்கற்களால் ஆன சுவராக இல்லாமல் - துணிகளால் ஆன டென்ட்; மற்றபடி கூரை எல்லாம் ஆஸ்பேஸ்ட்டஸ் ஷீட் அல்லது அதற்கு இணையான ஷீட்டுகளால் ஆனவை.

டென்ட்டில் தங்குவது சில காரணங்களுக்காக  நல்லது.

இங்கு தங்குவோரை மாலை நேரம் சபாரி அழைத்து செல்கிறார்கள். மாலை நேரம் சபாரி சென்றால் மட்டுமே ஏதேனும் விலங்குகளை கண்ணில் காண வாய்ப்பு உள்ளது. பகல் நேர சபாரியை விட மாலை நேர சபாரி நிச்சயம் மிக சிறந்தது.
மேலும் மறுநாள் காலை இவர்களை ட்ரெக்கிங் அழைத்து செல்லும் இடமும் கூட ரொம்ப அழகாக இருக்கும் என்கிறார்கள்.

தங்குவது, சாப்பாடு அனைத்திற்கும் சேர்த்து பணம் முதலிலேயே வாங்கி விடுகிறார்கள்.

டென்ட் மற்றும் ஹனி கோம்ப் இரண்டிலும் - மூவர் அடங்கிய குடும்பத்திற்கு 3 வேளை சாப்பாடு தங்கும் வசதி சேர்த்து 4,000 போல் வரும்.  Reasonable & value for money !

ஹனி கோம்ப் சாப்பாடு மிக மிக அருமை; நான் வெஜ் - வெஜ் இரண்டுமே உண்டு. Unlimited food...Very hygienic !

ஐலண்ட்

இருப்பதிலேயே மிக சிறந்த தங்கும் வசதி என்றால் இது தான் என்கிறார்கள். பெயருக்கு ஏற்றார் போல் ஒரு தீவின் நடுவே தான் தங்கும் இடம் உள்ளது. ஒரே ஒரு காட்டேஜ் தான். அதிக பட்சம் 5 பேர் மட்டுமே தங்க அனுமதி. படகில் ஒன்னரை மணி நேரம் பயணம் செய்து தங்கும் இடத்தை அடைய வேண்டும். சமைத்து தர அங்கேயே ஆட்கள் இருப்பர். சபாரி உள்ளிட்ட மற்ற ஆக்டிவிட்டி அவர்களே அழைத்து செல்வார்கள். மேலும் ஆங்காங்கு இருக்கும் இன்னும் சில குட்டி தீவுகளுக்கு அழைத்து செல்வார்கள் என்கிறார்கள்.
********
பரம்பிகுளத்தில் என்ன விசேஷம் என்று பார்ப்போம் :

உள்ளே நுழையும் போதே நமக்கு ஒரு கைட் (Guide) ஒதுக்கி விடுகிறார்கள். அவர் நம்மோடு தான்   நாம் திரும்பும் வரை வருவார். காட்டில் வழி காட்டுவது/ நம்மை பாது காப்பது ஒரு புறம் என்றால், நம்மை குறிப்பிட்ட இடங்கள் தவிர வேறு எங்கும் இறங்க அனுமதிக்க மாட்டார் ! (அவருக்கு instructions அப்படி)

தங்கும் இடத்திற்கு செல்லும் முன் சிற்சில வியூ பாயிண்ட்களை காட்டுகிறார். அவையெல்லாம் ஓஹோ அல்ல. கொடைக்கானல் சென்றால் கூட்டி சென்று ஆங்காங்கு வியூ பாயிண்ட் என பள்ள தாக்கை காட்டுவார்களே .. அதே மாதிரி தான்.

Bamboo rafting என ஒரு படகு சவாரிக்கு அழைத்து போகிறார்கள்.. ஆஹா.. சொர்க்கம் போன்ற இடம் அது.. !சுற்றிலும் பச்சை பசேலென்று புல்வெளி பற்பல ஏக்கர்களுக்கு விரிந்து கிடக்கிறது .. அதன் நடுவில் மிகப்பெரும் ஏரி .. சுற்றிலும் மலைகள்.. புல்வெளியில் இருந்து ஏரி இருக்கும் இடம் சற்று பள்ளத்தில் உள்ளது. இது மிக அழகான ரம்மியத்தை தந்து விடுகிறது.

ஏரி இருக்கும் இடத்தில் நாம் சென்று நின்றால் - சற்று உயரத்தில் எங்கெங்கும் பசும் புல்வெளி. மேலே மலைகள் .. அதன் மேல் படர்ந்து செல்லும் மேகங்கள் என அட்டகாசமாய் இருக்கிறது.நம்மை படகு சவாரிக்கு தான் இங்கு அழைத்து போவார்கள். அது முடித்து விட்டு அந்த புல்வெளி உள்ளிட்ட இடங்களில் குறைந்தது ஒரு மணி நேரமாவது செலவிடுங்கள். அருமையான கிளை மேட், அற்புதமான சுற்று புறம் என ரொமான்டிக் ஆக இருக்கும் .. !இந்த படகு சவாரி செய்யும் இடம் நாம் தங்கும் விடுதியான ஹனி பாட் அருகே தான் உள்ளது. நீங்கள் அங்கு தங்கும் ஓரிரு நாளில் - மறுபடி மறுபடி கூட இந்த Bamboo rafting இடத்திற்கு செல்லலாம். தப்பே இல்லை !! நிச்சயம் என்ஜாய் செய்வீர்கள்

படகு சவாரி இங்கு சற்றே வித்யாசமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மூங்கில்களில் ஆன இந்த படகுகள் பாதுகாப்பானவை. மூழ்க வாய்ப்புகள் மிக குறைவு. அண்மை காலமாய் தான் இத்தகைய படகுகள் பயன் படுத்தப்படுகின்றன.

பரம்பிகுளத்தில் தங்குவோரை காலை ட்ரெக்கிங் அழைத்து செல்கிறார்கள். பசுமை, நம்மை தவிர யாரும் இல்லாத காடு .. இங்கு நல்ல கிளைமேட்டில் நடப்பது  சுகமாய் உள்ளது.
பல நூறு  ஆண்டுகள் பழமையான பெரும் மரம் ஒன்றை அழைத்து சென்று காட்டுகிறார்கள். 5 அல்லது 6 பேர் கைகளை முழுவதும் விரித்து சுற்றி நின்று பிடித்தால் தான் மரம் முழுதும் கை கோர்க்க முடியும்.இந்த மரம் பார்க்க மாலை நேரம் அழைத்து சென்றார் எங்கள் கைட். அப்போது தான் கொஞ்சம் விலங்குகள் காணலாம் என்பதே  காரணம். மான் மற்றும் மிக அருகில் காட்டெருமைகள்  பார்த்தோம்.நாம் தங்கும் ஹனி கொம்ப் காட்டேஜ்  அருகே மாலை நேரம் பழங்குடியினரின் டான்ஸ் நடக்கிறது. இது அந்த அளவு நன்றாக இல்லை; பாட்டும் சரி நடனமும் சரி... ஆவேரேஜ்.

நிறைவாக..

பரம்பிக்குளம் ஏன் செல்லவேண்டும்?

கிளை மேட் தான் முதல் காரணம். நாங்கள் சென்ற ஜுன் மாதம்  ஓரிரு மணி நேரம் தான் வெய்யில்  வெளியே வந்தது; மற்றபடி இதமான தட்ப வெப்பம். அவ்வப்போது மழை பெய்கிறது; பெய்து முடித்ததும் சூழல் இன்னும் அழகாகி விடுகிறது.

அடுத்த காரணம் பசுமை மற்றும் காடு.. எங்கெங்கு காணினும் பசுமை தான். மேலும் அதிக கூட்டம் இல்லாத இடமாக இவை இருக்கின்றன.

முன்பே எழுதிய படி Bamboo rafting செய்யும் இடம் கொள்ளை அழகு.

விலங்குகள் பார்ப்பது முழுக்க முழுக்க அதிர்ஷ்டம் சார்ந்ததே; அதனை போனஸ் ஆக மட்டும் எடுத்து கொள்ளுங்கள்.

மிக ரிலாக்ஸ்ட் ஆக 1 அல்லது 2 நாள் சென்று கிளை மேட்டை நன்கு என்ஜாய் செய்து வர ஏற்ற இடம்.. பரம்பிக்குளம் !

தொடர்புடைய பதிவுகள்

டாப்ஸ்லிப்- என்ன பார்க்கலாம்? எங்கு தங்கலாம்?

பொள்ளாச்சி- டாப்ஸ்லிப்- பரம்பிகுளம் பயணம் -புகைபடங்கள் 

டாப் ஸ்லிப்- பழங்குடி மக்கள் + மாணவர்கள் வாழ்க்கை-ஓர் அனுபவம்

Wednesday, July 13, 2016

வானவில்- களி-உழவன் எக்ஸ்பிரஸ்-தஞ்சை ரயில் அனுபவங்கள்

பார்த்த படம்: களி (மலையாளம்) 

துல்கர் மற்றும் சாய் பல்லவி நடித்த களி கொஞ்சம் வித்யாசமான படம்.

துல்கர்- சாய் பல்லவி இளம் கணவன்- மனைவி. துல்கர் இயல்பிலேயே மிக கோபக்காரர். இதனால் அலுவலகத்திலும் சரி, தனி வாழ்க்கையிலும் சரி யாருக்கும் பிடிக்காதவராய் இருக்கிறார்.

ஒரு இரவின் கார் பயணத்தில் மோசமான ஒரு சாலையோர ஹோட்டலில் இந்த ஜோடி சாப்பிட நேருகிறது; சாப்பிட்டு முடிக்கும்போது கையில் பணம் இல்லை; எப்படி பணத்தை செட்டில் செய்தனர்; எப்படி அங்கிருந்து கிளம்பினார் என பதை பதைக்க வைத்து சொல்கிறது இரண்டாம் பகுதி..நிச்சயம் வித்தியாச கதைக்களன் தான். ஆனால் முதல் பகுதியில் துல்கர் கோபக்காரர் என்கிற ஒரு வரிக்கு மேல் வேறு எதுவும் இல்லை; இரண்டாம் பகுதி தான் படத்தை தாங்கி நிற்கிறது.. நம்மையும் அந்த இருளுக்கு, பயணத்திற்கு அழைத்து சென்று விடுகிறார்கள்..Gripping !!

துல்கர்- சாய் பல்லவி நடிப்பு மற்றும் வித்தியாச கதைக்காக நிச்சயம் ஒரு முறை காணலாம் !

வாசித்த புத்தகம்: நிர்வாண நகரம்

சுஜாதாவின் க்ரைம் நாவல்.. துவக்கத்திலேயே சிவராஜ் என்கிற பாத்திரத்தை அறிமுகம் செய்து அவன் சென்னையை பழி வாங்க போகிறான் என்கிறார். பின் ஒவ்வொரு மரணமாக நிகழ்கிறது. மரணங்களுக்கு பொறுப்பேற்று சிவராஜ் போலீசுக்கு கடிதங்கள் எழுதுகிறான்.

கணேஷ்- வசந்த் அவனது திருமணத்தன்று அவனை நெருங்கி பிடிக்கிறார்கள். அப்போது தான் அக்கொலைகள் எதுவும் அவன் செய்தது இல்லை; அட்டென்சன் வேண்டி கொலைகள் நடந்த பின் இப்படி கடிதமெழுதுவது அவன் வேலை என தெரிகிறது.. அவனை எதுவும் செய்யாமல் விட்டு விட்டு நகர்கிறார்கள் கணேஷ் -வசந்த்.

சிவராஜ் அந்த கொலைகளை செய்யவில்லை என்கிற இறுதி சஸ்பென்ஸ் நம்மால்  ஊகிக்க முடியாத ஒன்று..

சென்னை 30-40  வருடங்களுக்கு முன் எப்படி இருந்தது என சுஜாதா வரிகளில் தொடர்ந்து வாசிப்பது செம சுவாரஸ்யம்..

அழகு கார்னர் ரயில் பயணம் - அனுபவம் : 1

தஞ்சைக்கு இம்முறை உழவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தபோது எனக்கு, மனைவி மற்றும் மகள் மூவருக்கும் தனி தனி கம்பார்ட்மெண்ட்கள்  ஒதுக்கப்பட்டிருந்தது.இத்தனைக்கும் ஓரிரு மாதம் முன் நிறையவே டிக்கெட் இருக்கும் போது புக் செய்தது  தான்.  இறுதியில் மனைவி, மகள் வராமல் நான் மட்டும்  செல்ல வேண்டிய நிலை.. அவர்கள் டிக்கெட் கான்சல் செய்தாகி விட்டது  ..

ரயிலில் சென்றபின் பார்த்தால் - பல குடும்பங்களும் இதே வித பிரச்சனையில் உழன்று கொண்டிருப்பது தெரிய வந்தது.. ஒரே குடும்பம்.. ஒன்றாய் புக் செய்தவர்கள் வெவ்வேறு .. கம்பார்ண்ட்மெண்ட்டில்.என்ன தான் நடக்கிறது . IRCTC யில்.?

ரயில் பயணம் - அனுபவம் 2:

மேலே சொன்ன அதே காரணம்.. எனது சீட்டிற்கு  அருகில் ஒரு வயதான தம்பதியை பிரித்து விட்டனர். அந்த கணவர் கேட்டு கொண்டதால் கம்பார்ட்மெண்ட் மாறி அவரது இருக்கையை நான் எடுத்து கொண்டேன்..

நள்ளிரவு 12.15 மணி இருக்கும். தாம்பரத்தில் ஏறி ஒருவர் என்னை எழுப்பி, " இது என் சீட்டு " என்றார். "சந்திரசேகர் என் பேரு; பெர்த் நம்பர் 44 "  என சொல்லி கொண்டிருக்கும் போது டிக்கெட் செக்கர் வந்து  சேர்ந்தார்.

அவரிடம் நான் சீட் மாறி உறங்குவதை ஏற்கனவே சொல்லி, இந்த இருக்கைக்கு உரியவர் தனது டிக்கெட்டை காட்டி விட்டு தான் சென்றிருந்தார்.. இப்போது ஒரு புது குழப்பம்...

புது பயணியிடம் நான் " சார் உங்க டிக்கெட் காட்டுங்க " என்றேன்.. " அது என் Wife கிட்ட இருக்கு. அவங்க பக்கத்து கம்பார்ட்மெண்ட்டில் இருக்காங்க" என்றார். டிக்கெட் செக்கர் " SMS ஆவது காட்டுங்க" என்றார். மனிதர்  விழித்தார் !

அப்புறம் பார்த்தால் தேதி குழப்பம்.. இரவு 12.15 க்கு தாம்பரம் வரும் ரயில்.. எனவே தேதி மாற்றி புக் செய்து விட்டனர்.. இதை டிக்கெட் செக்கர் சொன்னதும் புது பயணி அசடு வழிந்து விட்டு கிளம்பினார்

எனக்கு தூக்கம் பறி போனது தான்  மிச்சம்.ஆயினும் "ஒரே பெர்த் நம்பர் இருவர் பெயரும் (சந்திர சேகர்) ஒன்று- அடுத்தடுத்த நாள் பயண சீட்டு என்பது ஆச்சரியமான ஒற்றுமையாய் இருந்தது.

ரயிலில் நமக்கு என்ன பெர்த் ஒதுக்கப்பட்டுள்ளதோ அதில் தூங்குவதே உத்தமம் என எண்ணி கொண்டேன் !

போஸ்டர் கார்னர் 

Monday, July 11, 2016

டாப் ஸ்லிப்- பழங்குடி மக்கள் + மாணவர்கள் வாழ்க்கை-ஓர் அனுபவம்


டாப் ஸ்லிப்பில் யானை சவாரி சென்ற போது பாகன் சொன்ன சில தகவல்கள்:

20க்கும் மேற்பட்ட யானைகள் டாப் ஸ்லிப்பில் உள்ளன. இவை ஒவ்வொன்றையும் பார்த்து கொள்ள 2 பேர் வேலைக்கு உள்ளனர்.. மொத்தம் 40 ஆட்கள்.. அவர்களில் பலரும் தற்காலிக பணியாளர்கள் தான்.. வெகு சிலரே நிரந்தர  ஊழியர்கள்..

 யானையை குளிப்பாட்டுவது, சாப்பாடு தருவது போன்றவை இவர்களின் வேலைகள். மக்கள் யானை மேல் சவாரி செய்ய தினம் 2 அல்லது 3 யானைகள் வரும். மற்றவை பகல் முழுதும் காட்டில் ஊர் சுற்றி விட்டு மாலை 5 மணிக்கு சாப்பிட வந்து விடும். பின் அவற்றை கட்டி போட்டு விடுகின்றனர்.இந்தியா முழுதும் யானைகளை இவ்வாறு பராமரிக்கும் இடங்கள் பல உள்ளன. எனவே இவர்களை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் அனுப்பி வைப்பர். அப்படி நாம் பேசிய பாகனும் பல இடங்கள் சென்று  வந்துள்ளார்.மழை, வெய்யில் என எல்லாவற்றிலும் யானையுடன் சேர்ந்து அலையனும்.. இது தான் இவர்களின் வாழ்க்கை.. இவர்களில் அநேகமாய் பலரும் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள்தான்.நமது பாகனுடன் அவர் மகனும் உதவிக்கு கூட வந்து கொண்டிருந்தார். " அவன் காலேஜ் படிச்சிருக்கான்; சும்மா இப்போதைக்கு என் கூட வர்றான். அவ்ளோ தான். இதே தொழிலுக்கு அனுப்ப மாட்டேன். அவனுக்கு தனியா ஒரு தொழில் செய்ய ஏற்பாடு செய்யணும்" என்றார் பாகன்.

யானை சவாரி செல்லும்போதே புலியின் கால் தடம் என காட்டுகிறார்; நேரில் பார்த்த அனுபவம் பகிர்ந்து  கொள்கிறார்.யானையை கண்டால் புலி ஒதுங்கி போய் விடுமாம். இவர்கள் இருக்கும் பக்கம் வராதாம். தள்ளி நின்று தான் பார்க்குமாம்.ஒரு வெளி நாட்டு பெண்மணி தனியாய் வந்திருக்கும் போது இப்படி ஒரு புலியை கண்டு விட்டு நூறுக்கும் மேற்பட்ட படங்கள் எடுத்ததாகவும், புலி அன்றைய மூடில் - நகராமல் இருந்ததாகவும் ஆச்சரியத்துடன் கூறிக்கொண்டு போனார்.
**********
டாப் ஸ்லிப்பில் நாங்கள் சென்ற மற்றொரு இடம் பழங்குடி மாணவர்களுக்கான பள்ளி. நீண்ட காலமாக இருந்து வரும் இப்பள்ளிக்கு  இந்திரா காந்தி துவங்கி பல அரசியல் வாதிகளும் வந்து மாணவர்களுடன் உரையாடி சென்றுள்ளனர்.

படிப்பு, தங்கும் வசதி என முழுக்க முழுக்க அனைத்தும் இலவசம் ! மாணவர்களை அங்கு  முழு நேரம் தங்கவே பரிந்துரைக்கிறார்கள். வீட்டுக்கு சென்று திரும்புவதை இரு காரணங்களுக்காக அனுமதிப்பதில்லை.முதலில் - தூரம்; மலை பகுதியில் குறைந்தது 6-7 கிலோ மீட்டர் நடந்து தான் பள்ளியை அடைய வேண்டும். இதனால் மாணவர்கள் சோர்வாகி படிப்பை தொடர தோன்றாமல் பாதியில் விட வாய்ப்புகள் அதிகம். மேலும் காட்டு பகுதி என்பதால் மாலை வேளைகளில் விலங்குகள் நடமாட்டம் நிச்சயம் இருக்கும். மாணவர்களின் பாதுகாப்பு கருதியும் கூட இங்கேயே தங்க சொல்கிறார்கள்.

மாணவர்கள் வீட்டிலிருந்து தான் வருவேன் என நிரம்ப அடம் பிடித்தால் முடிந்த வரை பேசிப்பார்த்து விட்டு - அவர்கள் போக்கிற்கு விட்டு விடுகிறார்கள். அதை விட முக்கியம் - மாணவர்கள்- சில வாரமோ, சில மாதமோ பள்ளிக்கு வராமல் -  பின் மீண்டும் வந்தால் கூட மற்ற பள்ளிகள் போல பெயரை இவர்கள் ரிமூவ் செய்து விடுவது இல்லை; எப்படியேனும் படித்தால் சரி என மீண்டும் சேர்த்து  கொள்கிறார்கள்.இந்த மாணவர்கள் பற்றி அங்கிருந்த ஆசிரியர்கள் பகிர்ந்து கொண்ட சில செய்திகள்:

பழங்குடி மாணவர்கள் உற்சாகமாக கவலையே இன்றி இருப்பார்களாம். அவர்கள் முகத்தில் சிரிப்பை எப்போதும் காணலாம். எதையும் செய்ய முடியாது என்று சொல்லவே மாட்டார்கள். நிச்சயம் முயற்சி செய்வார்கள். பெரும்பாலும் முடித்தும் விடுவார்கள்.

ஒற்றுமை மற்றும் அன்னியோன்னியம் மிகவும் அதிகம். ஒருவருக்கொருவர் தவறாமல் உதவி கொள்வார்கள். ஒருவருக்கு உடம்பு சரியில்லை என்றாலும் மற்றவர்கள் ஓடி, ஓடி உதவுவார்கள்.

படிப்பில் மிக கெட்டி என சொல்ல முடியாது. முடிந்தவரை படிப்பார்கள். இங்கு எட்டாம் வகுப்பு வரை தான் உள்ளது. பின் மலைக்கு கீழே பொள்ளாச்சி போன்ற ஊர்களில் சேர்ந்து படிக்க வேண்டும். அப்படி சென்று படிக்கும் மாணவர்கள் வெகு சிலரே.

இங்கு படித்து சில பெண்கள் - இன்ஜினியர் மற்றும் ஆசிரியை ஆகியுள்ளார். இங்கு படித்து விட்டு - பின் பொள்ளாச்சியில் கல்லூரி படிப்பை முடித்த ஒரு பெண்- இதே பள்ளியில் ஆசிரியை ஆக பணிபுரிகிறார். அவரை தான் ரோல் மாடல் போல மற்ற மாணவர்களுக்கு  சொல்கிறார்கள்.

இவர்களுக்கு ஆசிரியர்கள் நேரில் பாடம் நடத்துவது தவிர, கணினி மூலம் - தூர தேசத்திலிருந்தும்  சில தமிழக பெண்கள் இவர்களுக்கு இலவசமாக பாடம் கற்று தருகிறார்கள். ஸ்கைப் மூலம் தினம் ஒரு மணி நேரம் இவர்களுக்கு பாடங்கள் போதிக்கிறார்கள். மேலும் படிப்பின் அவசியம் உள்ளிட்ட தன்னம்பிக்கை தரும் விஷயங்களும் அவர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த வசதியும் இதற்கான செலவும் காக்னிசன்ட் நிறுவனம் செய்து தருகிறது.
மாணவர்களோடு உரையாடிய போது, அரசு அளித்துள்ள சலுகையும் - அதை சரியாக பயன்படுத்தி கொண்டால் - எப்படி நன்மை பயக்கும் என்றும் கூறினேன். படிப்பை எட்டாவதுடன் நிறுத்த வேண்டாம் என்பதையும் அவசியம் கல்லூரி வரை படிக்குமாறும் வேண்டினேன்.

ஆசிரியைகள் பழங்குடிகள் வாழ்க்கை பற்றியும் பல்வேறு ஆச்சரிய தகவல்கள் பகிர்ந்து கொண்டத்தில் சில பகுதிகள் மட்டும் இதோ:பழங்குடிகள் மிக கடுமையான உழைப்பாளிகள்; தனி குடித்தனம் என்கிற விஷயம் அவர்களை எட்டவே இல்லை; இன்னும் கூட்டு குடித்தன முறையை தான் கடை பிடிக்கிறார்கள். இவர்களில் பலர் இங்கு யானை பாகன் அல்லது வனத்துறை தரும் வேலையை செய்கிறார்கள்.

மிகுந்த சுய மதிப்பு கொண்டவர்கள். தங்களை யாரும் தவறாக பேசுவதோ, பார்ப்பதோ அவர்களுக்கு பிடிக்காது.

எதிர்காலம் பற்றி நிறைய யோசிப்பது, அதற்காக சேர்த்து வைப்பது - இதிலெல்லாம் அவர்களுக்கு சுத்தமாக ஈடுபாடு இல்லை; வாழும் வரை மகிழ்ச்சியாக வாழ வேண்டும். அவ்வளவு தான் அவர்களது பிலாசபி. இன்றைக்கு- இந்த வாரத்துக்கு சாப்பிட பொருளும், பணமும் இருந்தால் போதும் என்பதே இவர்களின் மனநிலை.

உணவு முறை, வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்வது, மகிழ்ச்சியுடன் எப்போதும் இருப்பது, கடுமையான உழைப்பு என இவர்களிடம் நாம் கற்று கொள்ள ஏராளம் உண்டு; அதே நேரம் சில அதிர்ச்சிகரமான - நம்மால் ஜீரணிக்க முடியாத சில விஷயங்களும் உண்டு. உதாரணமாக விவாகரத்து மிக எளிதில் நடக்குமாம். இரண்டு பேருக்கும் ஒத்து போகவில்லை என்றால்- ஊர் பெரியவர்கள் கூடி பேசி - பின் பிரிவது என முடிவானால்,  வீட்டின் கூரையில் உள்ள ஒரு குச்சியை எடுத்து இரண்டாக உடைத்து போட்டால் விவாகரத்து ஆகி விட்டது என்று அர்த்தம். இருவரும் பிரிந்து விட வேண்டியது தான் !கணவர் இல்லாமல் குழந்தையுடன் வாழும் பெண்கள் ஒரு புறம்; மனைவி பிரிந்த பின் - கணவரே குழந்தைகளை வளர்க்கும் பழக்கமும் பரவலாக உள்ளது. சிறிதும் மனம் தளராமல் குழந்தைகளை நல்ல படி வளர்த்து விடுவார்களாம். வரதட்சணை என்கிற ஒன்று சுத்தமாக இல்லை என்பதும் நல்ல விஷயமே !

இந்த பள்ளி  ஆசிரியர்கள், குறிப்பாக மாணவர்களுடன் ஓரிரு மணி நேரங்கள் செலவிட்டது இப்பயணத்தில் ஒரு மறக்க முடியாத நிகழ்வு.

(அடுத்த இறுதி பகுதியில் பரம்பிக்குளம்)

தொடர்புடைய பதிவுகள்

டாப்ஸ்லிப்- என்ன பார்க்கலாம்? எங்கு தங்கலாம்?

பொள்ளாச்சி- டாப்ஸ்லிப்- பரம்பிகுளம் பயணம் -புகைபடங்கள் 


Monday, July 4, 2016

வானவில்- இறைவி- ஒரு நாள் கூத்து-படிப்பு பற்றிய நீயா நானா

பார்த்த படம்: இறைவி 

நிரம்ப தாமதமாக தான் இறைவி பார்க்க முடிந்தது;

கார்த்திக் சுப்புராஜின் முதல் 2 படங்களும் ( பிஸ்ஸா, ஜிகிர்தண்டா) எனக்கு மிக பிடித்தமானவை.

முக்கால் வாசி வரை குறிப்பிட்ட திசையில் பயணித்து - கடைசி அரை மணி நேரம் திடீர் டர்ன் அடித்து வேறு பக்கம் பாய்ந்து செல்லும் (நான் மிகவும் ரசித்த) அதே பாணியை தான் இங்கும் கடை பிடித்துள்ளார்..ஆனால் விளைவுகள் தான் வேறுபட்டு விட்டது

ஒரு குடும்ப (!!??) கதைக்கு இந்த யூ டர்ன் பாணி ஒத்து வரவில்லை; மேலும் பெண்களை போற்றுகிறோம் என சொல்லிவிட்டு - 95% ஆண்கள் பற்றியே சொல்லி, இப்படியா பட்ட மாட்டை இந்த மரத்தில் தான் கட்டுவார்கள் என்கிற கதை மாதிரி - ஆண்கள் இப்படி நடப்பது பெண்களை பாதிக்கிறது என்கிறார்.. மனதில் பதிய மறுக்கிறது..

பாடல்கள் மிகப்பெரும் இடைஞ்சல்; நடிப்பை பொறுத்த வரை எஸ். ஜே. சூர்யா எப்போதும் குடிப்பது எரிச்சலை உண்டாக்கினாலும் மனுஷன் சில காட்சிகளில் அசத்துகிறார். அந்த தயாரிப்பாளர்- இயக்குனர் கிளைக்கதை மனதை தைக்கிறது (தயாரிப்பாளர் பாத்திரத்தில் போகப்போக கொஞ்சமே கொஞ்சம் சினிமாட்டிக் விஷயம் கலந்து விட்டார்)

பாபி சிம்மா -பாத்திரம் மிக வித்யாசமான ஒன்று. அஞ்சலி பாத்திரமும், நடிப்பும் குட்.

பல விஷயங்களில் செயற்கைத் தனம் படம் முழுதும் தெரிகிறது.. மக்கள் முட்டாள்கள் இல்லை; கார்த்திக்கின் சரியான 2 படத்தை கொண்டாடினர். இப்படத்தை புறம் தள்ளி விட்டனர்.. வித்தியாசமாய் முயல நினைத்ததில் தவறில்லை; ஆனால் திரைக்கதை மற்றும் Execution சொதப்பி விட்டது

இவ்வளவு சொன்னாலும் இறைவி அது தரும் சில சர்ப்ரைஸ்-களுக்காக டிவி யிலேனும் ஒரு முறை பார்க்க தகுந்ததே !

QUOTE CORNER 

The true measure of a man is how treats someone who can do him absolutely no good.

வாசித்த புத்தகம் : நில்லுங்கள் ராஜாவே 

சுஜாதாவின் வித்யாசமான நாவல் " நில்லுங்கள் ராஜாவே"; ஈர்க்கும் இந்த தலைப்பு கதையின் ஒரு மிக முக்கிய அங்கம்.

ஒரு சாதாரண மனிதனை ஹிப்னாடிஸ் செய்து இந்தியா வரும் - ஒரு வெளிநாட்டு  அதிபரை கொல்ல திட்டமிடுகிறார்கள். அதற்கு முன் இவர் இந்த வேலைக்கு சரிப்படுவாரா என அறிய - ஒரு சின்ன வேலை தருகிறார்கள். அது ஒரு போலீஸ் கேஸ் ஆகிவிட, கணேஷ்- வசந்த் வசம் வழக்கு செல்கிறது; அவர்கள் துப்பறிவதில் தான் - வெளிநாட்டு அதிபரை கொல்ல நடக்கும் சதி முறியடிக்கப்படுகிறது

கதையின் முடிவில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் (டாக்டர்கள் !!) வெளிநாடு தப்பி விட, யாரையும் கைது செய்யாமலே கதை முடிகிறது

எடுத்தால் இறுதி வரை ஒரே மூச்சில் முடிக்காமல் வைக்க முடியாமல் பர பரவென செல்லும் இந்த நாவல் தொடர் கதையாய் வந்த போது மக்கள் மிக ஆர்வமாய் வாசித்திருப்பர்.

தல-யின் அட்டகாசமான இந்த நாவலை வாய்ப்பிருந்தால் வாசியுங்கள் !

அழகு கார்னர் தத்துவம்

வீட்டில் சமீபத்தில் கார் பார்க்கிங் ஏரியா உயர்த்தப்பட்டது; அப்போது தரை தளம் போடும்போது பேவர் பிளாக் என்கிற வகை கற்கள் பாதிக்கப்பட்டது. முதன் முறை அப்போது தான் பேவர் பிளாக் பற்றி ஓரளவு அறிந்து கொன்டேன். விஷயம் அதை பற்றியல்ல.

பின் பல ஹோட்டல்கள், பிளாட்பாரங்கள் செல்லும்போதெல்லாம் எங்கு பேவர் பிளாக் போட்டிருந்தாலும் அது தவறாமல் கண்ணில் பட்டது; பேவர் பிளாக்கில் எத்தனை வகை உள்ளது; நம் வீட்டில் போட்டது என்ன வகை; இது என்ன விதமானது என கவனிக்கவும், யோசிக்கவும் செய்தது மனது...

இத்தனைக்கும் அவை அத்தனையும் புது இடங்கள் அல்ல, அலுவலகம் மற்றும் நான் சாதாரணமாக சென்று வரும் இடங்கள் தான்.

இது எனக்கு உணர்த்திய செய்தி இது தான்:

நமது சுற்றத்தில் நாம் கவனிப்பது மிக சிறிய பகுதியை மட்டுமே ..  ! நமக்கு தெரியாமலும், நாம் கவனிக்கமாலும் எத்தனையோ விஷயங்கள் நம்மை சுற்றி இருக்கிறது; ஆர்வம் வரும்போது மட்டுமே அதை தெரிந்து கொள்ள முற்படுகிறோம்..

பல விஷயங்களில் ஆர்வம் கொண்ட சிலரோ (உதாரணம்: எழுத்தாளர்கள் ) நிறைய விஷயங்களை கவனிக்கிறார்கள்; தெரிந்து கொள்கிறார்கள்..

Interest makes the difference !!

நீயா நானா - படிப்பும், பயணமும் 

நீயா நானாவில் பல டிகிரி வாங்கிய நபர்கள் ஒரு புறமும், பயணம் மூலம் கற்போர் மறுபுறமும் இருந்து பேசிய நீயா நானா ரொம்ப நாளுக்கு பின்  முழுதும் காண முடிந்த நிகழ்ச்சியாய் இருந்தது.

ஏராள டிகிரி வாங்கியோர் அதற்கு சரியான காரணம் எதுவும் சொல்லவே இல்லை; மேலும் இதனால் என்ன பலன் அடைந்தார்கள் என்ற கேள்விக்கும் எந்த விடையும் இல்லை. உண்மையில் அவர்களை செம காய்ச்சு காய்ச்சி விட்டனர் என்று தான் சொல்லவேண்டும்..

நிகழ்ச்சியில் பேசிய - 140 டிகிரி படித்த பார்த்திபன் அவர்கள் எனது நண்பர். அவர் ஒரு கம்பெனி செகரட்டரியும் கூட !

இந்நிகழ்ச்சியை முடிந்தால் இணையத்தில் காணுங்கள் !

பார்த்த படம்-2: ஒரு நாள் கூத்து 

இதுவும் ஒரு பெண்ணிய படம் தான் ! திருமணத்துக்கு நம் சமூகம் தரும் முக்கியத்துவம்;  திருமணமாகாமல் தாமதம் ஆகும் பெண்ணின் வலி போன்ற விஷயங்களை தொட்டு செல்கிறது

இயக்குனர் திறமை வாய்ந்தவர் என்பது தெளிவாக தெரிகிறது; வெவ்வேறு ஜோடிகள்.. ஒவ்வொருவருக்கும் சிற்சில பிரச்சனைகள் .. எல்லாம் சரியாகி ஒரு மகிழ்வான முடிவு வருகிற மாதிரி போக்கு காட்டி விட்டு அனைத்தையும் கிளை மாக்சில் நாசம் செய்கிறார். சில இயக்குனர்களுக்கு சோகமான முடிவு இருந்தால் தான் படம் மக்கள் மனதில் தங்கும் என ஒரு பொய்யான உணர்வு..

நடிப்பில் ரேடியோ ஜாக்கியாக வரும் ரித்விகா மட்டுமே கவர்கிறார். காமெடி மற்றும் ஹீரோக்கள் உள்ளிட்ட பிறர் நடிப்பு ஆவரேஜ் தான்

ஒரு நாள் கூத்து.. Skip it !

Friday, July 1, 2016

பீனிக்ஸ் மால்-எத்னி சிட்டி -என்னமா ஏமாத்துறாங்க !!

ண்மையில் சென்னை பீனிக்ஸ் மாலில் உள்ள எத்நிசிட்டி என்கிற துணிக்கடைக்கு சென்றோம்.
"3000 ரூபாய்க்கு துணி வாங்கினால் 1000 ரூபாய் இலவசம்" என்கிற வார்த்தைகள் கண்ணை கவர்ந்தன.

பெரும்பாலான துணிகள் 1400 ரூபாய் வகை; 2 வாங்கினால் 2800 தான் வரும்; மீதம் 200 ரூபாய் வாங்கினால் 1000 தள்ளுபடி என கூடவே நின்று சொல்கிறார்கள் சேல்ஸ் பெண்கள். 200 ரூபாய்க்கு மட்டுமல்ல 1000 ரூபாய் வரை எந்த துணியும் இல்லை !!

ஒரு வழியாய் 2 துணிகளே 3000 வரும்படி வாங்கிவிட்டு வந்தால் தான் அடுத்த சர்ப்ரைஸ்  காத்திருந்தது.

ஆயிரம் ரூபாய் டிஸ்கவுண்ட் இப்போது கிடையாது.  4 வவுச்சர்கள் ஒவ்வொன்றும் 250 ரூபாய்க்கு தருவார்களாம். அதை வைத்து குறிப்பிட்ட சில தினங்களில் வாங்கினால் மட்டுமே டிஸ்கவுண்ட்  (நாம் பர்சேஸ் செய்து 10 கழித்து இந்த ஆபர் துவங்குகிறது; அடுத்த 4 நாளில் முடிகிறது !!)

மட்டுமல்ல.. நீங்கள் அடுத்த முறை வாங்கும் போது - வாங்கும் ஒவ்வொரு 1000 ரூபாய் பில்லுக்கும் 250 ரூபாய் டிஸ்கவுண்ட். அதாவது அடுத்த முறை நீங்கள் நிச்சயம் 4 துணிகளாவது வாங்க வேண்டும். அவை ஒவ்வொன்றும் 1000 ரூபாய்க்கு மேல் இருக்க வேண்டும்.

ஆக முதலில் வாங்கும் 3000;  பின்பு மீண்டும் 4000 - மொத்தம் 7000க்கு துணி வாங்கினால் மட்டுமே 1000 ரூபாய் டிஸ்கவுண்ட் கிடைக்கும் ....அதுவும் 10 நாள் கழித்து சரியாய் 5 நாள்களுக்கு மட்டும் !!

"3000 ரூபாய்க்கு துணி வாங்கினால் 1000 ரூபாய் இலவசம்"  என்று கடைக்கு உள்ளே  வரவைத்து விட்டு பின்ப இப்படி ஏமாற்றுகிறார்கள்.

இதை விட மட்டமான ஸ்கீம் பார்த்ததே இல்லை என பீட் பேக் பார்ம் வாங்கி எழுதி தந்து விட்டு வந்தேன்

குறுகிய கால லாபம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு ஏமாற்றும் இப்படிப்பட்ட கடைகள் பக்கம் மக்கள் மறுபடி திரும்பி பார்க்கவே மாட்டார்கள் என்பதை இவர்கள் எப்போது உணருவார்கள்? 
Related Posts Plugin for WordPress, Blogger...