Showing posts with label கீற்று. Show all posts
Showing posts with label கீற்று. Show all posts

Sunday, June 10, 2012

சிறகிசைத்த காலம்: பள்ளிபருவ நினைவுகள்

திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலை பள்ளி நூற்றாண்டு விழாவில் " சிறகடித்து பறந்த என் பள்ளி நாட்களில் " என்ற தலைப்பில் பல்வேறு இலக்கிய வாதிகளும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு பேசியுள்ளனர். பிரபஞ்சன், எஸ். ரா, பொன்னீலன், நாசர், திலகவதி, லெனின், பவா. செல்லத்துரை, ஞானி, தங்கர் பச்சான், மருது ஆகியோர் விழாவில் பேசியதன் தொகுப்பும், கூடவே அவர்கள் படைப்போன்றும் சிறகிசைத்த காலம் என்கிற இந்த புத்தகத்தில் இடம் பெறுகிறது. புத்தக சந்தையில் வாங்கிய இப்புத்தகம் இப்போது தான் முழுமையாய் வாசிக்க முடிந்தது.

விழாவில் பேசிய பிரபஞ்சனின் பேச்சுடன் தான் புத்தகம் துவங்குகிறது. பின்னர் பேசிய பலரும் மேற்கோள் காட்டி, பாராட்டிய பேச்சு இது. " ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வீட்டு பாடம் என்கிற ஒன்று தர கூடாது. ஏழு அல்லது எட்டு மணி நேரம் மாணவர்களை தங்கள் கட்டு பாட்டில் வைத்து விட்டு, அதன் பின்னும் வீட்டு பாடம் தருவதில் அர்த்தமில்லை" என்கிறார் பிரபஞ்சன். பள்ளி கூடம் உண்மையில் எதையும் கற்று தருவதில்லை என்றும் " ஊர் சுற்றி பார்ப்பவன் தான் அறிவாளியாக இருக்க முடியும்" என்கிறார்.

பிரபஞ்சனின் " மரி என்கிற ஆட்டுக்குட்டி" சிறுகதை நெகிழ்த்துகிறது. மரி என்கிற பத்தாம் வகுப்பு மாணவியை பள்ளியிலிருந்து நீக்க வேண்டும் என அவள் வகுப்பு ஆசிரியரிடம் கூறுகிறார் தலைமை ஆசிரியர். பல நாட்கள் பள்ளிக்கு வருவதில்லை, வந்தாலும் அவள் நடவடிக்கை சரியில்லை போன்றவையே காரணங்கள். அவள் வகுப்பு ஆசிரியர் அவள் இல்லம் சென்று அவள் நடவடிக்கைக்கான காரணம் உணர்கிறார். அவளின் வாழ்க்கை உண்மையில் பரிதாபத்திற்குரியது. அன்பின் மூலமே அவளை சரிப்படுத்துகிறார். மிக அருமையான கதை இது. முடிவில் "மரி விசும்பி விசும்பி அழுதாள்" என முடிக்கிற போது நமக்கும் மனம் பாரமாகி போகிறது. அன்பை கரு பொருளாய் கொண்டு எழுதும் பிரபஞ்சன் போன்ற எழுத்தாளர்கள் மிக குறைவு.

எழுத்தாளர் பொன்னீலன் பேச்சில் இரண்டு சம்பவங்கள் நம்மை அதிர வைக்கின்றன. முதலாவது அவர் ஆசிரியர் பற்றிய ஒரு சம்பவம்: அவரது ஆசிரியர் ஒருவர் தன் குழந்தை இறந்த போது கல்லூரிக்கு வந்து முதல் இரண்டு வகுப்புகள் பாடம் எடுத்து விட்டு, மாணவர்களிடம் " என் பெண் இறந்து விட்டாள்; அதனால் நான் அடுத்த வகுப்பு வர மாட்டேன். மதியம் நிச்சயம் வந்து விடுவேன்" என சொல்லி சென்றாராம். அதன் படி மதியம் வந்து சோகத்தை துளியும் காட்டாது பாடம் எடுத்தாராம் ! எப்படி பட்ட உன்னத ஆசிரியர் எல்லாம் நம் மண்ணில் இருந்திருக்கின்றனர் !

அவர் பகிர்ந்த மற்றொரு நெகிழ்வான சம்பவம் அவர் பள்ளி கல்வி இயக்குனராக இருக்கும் போது நிகழ்ந்துள்ளது. திருநெல்வேலி அருகே ஒரு கிராமத்து பள்ளி. அந்த பள்ளியில் ஆறாம் வகுப்பிற்கு சரியான கூரை இல்லை. இரண்டு குச்சிகளை வைத்து அதன் மேல் கீற்றை போட்டு ஒரு ஆசிரியை அற்புதமாக பாடம் நடத்துகிறார். வரலாற்று பாடத்திற்கு ஒரு மேப் கூட இன்றி எவ்வளவு அழகாய் அவர்களுக்கு மேப்பில் இருக்க கூடிய ஒவ்வொரு ஊரையும் விளக்கினார்; அவர்கள் அதனை எப்படி ஒரு விளையாட்டாக செய்து பயின்றனர் என்பதை பார்த்து கண் கலங்கி நின்ற உணர்வை பகிர்கிறார்.

பிரபஞ்சன், தான் சந்தித்த ஆசிரியர்களில் பத்துக்கு இரண்டு பேர் தான் நன்கு பாடம் நடத்த கூடியவர்களாக இருந்தார்கள் என்கிறார். ஆனால் பொன்னீலனோ அதற்கு நேர் மாறாக ஓரிரு ஆசிரியர்கள் தான் சரியில்லாமல் உள்ளதாக சொல்கிறார். இவை இரண்டிலிருந்தும் மாறுபட்டு திலகவதி "ஆசிரியரை பிடித்தால் பாடம் பிடிக்கும். எனவே ஆசிரியரை தனக்கு பிடித்தமானவராய் மாற்றி கொள்ள வேண்டும்" என்கிறார்.

இங்கு பேசிய இலக்கிய வாதிகள் அனைவரும் தாங்கள் கணக்கில் வீக்காக இருந்ததை கூறியிருக்கிறார்கள். தங்கர் பச்சான் ஒரு படி மேலே சென்று " கணக்கு சரியாக வராதவர்கள் தான் பெரிய கலைஞர்களாக வர முடியும்" என்கிறார்.

படைப்புகளில் பல நம் மனதை தொடுகிறது.

சுந்தர ராமசாமியின் "நாடார் சார்" சிறுகதை பள்ளிக்கு வருகிற புது ஆசிரியர் வருடம் தோறும் குறிப்பிட்ட பள்ளியுடன் கால் பந்தில் தோற்கும் மாணவர்களை அந்த ஆண்டு எப்படி ஜெயிக்க வைக்கிறார் என சொல்கிறது. அந்த பள்ளியும், ஆசிரியர்களும், அவர்கள் அரசியலும் கூட அழகாய் வெளிப்படுகிறது. ஆட்டத்தில் வென்றாலும் கூட ஆசிரியர் மனம் வருந்தும்படி ஒரு சம்பவம் இறுதியில் நடக்கிறது. கதை அத்துடன் நிறைவுறும் போது நமக்கு மனம் வலிக்கிறது.

தங்கர் பச்சானின் "குடி முந்திரி" சிறுகதை அவரது எழுத்தாற்றலை நமக்கு உணர்த்துகிறது. கிராமத்திலிருந்து டவுனுக்கு சென்று படிக்கும் கல்லூரி மாணவன் தந்தையிடம் "ஷூ" கேட்கிறான். தந்தை ஷூவிற்கு பணம் தர, பல ஆண்டுகளாக வருமானம் தந்த குடிமுந்திரி மரத்தை வெட்டுகிறார். அந்த பையன் இதனால் வருத்ததுடனே அந்த ஷூவை அணிகிறான். அவனது தந்தை இறந்த பின் அந்த ஷூ அணிவதை நிறுத்தி விட்டாலும், தூக்கி எறிய மனமின்றி ஒவ்வொரு முறை வீடு மாறும் போதும் அதனை எடுத்து கொண்டே செல்கிறான்.

கதை விவசாயிகள் வாழ்வு, சென்னையின் கலாசாரம் என பல விஷயங்களை தொட்டு செல்கிறது. குடி முந்திரி மரம் ஷூ ஆக உருமாறுவதும், அந்த ஷூ ஒரு நபரிடமிருந்து கடைசியில் வேறு நபரிடம் செல்வதும், மாற்றத்தை வலியுடன் உணர்த்துகிறது.

பவா. செல்லத்துரை மற்றும் திலகவதியின் சிறுகதைகளும் மனதை தொடவே செய்கிறது.

விழாவில் பேசிய பலரும் நமது கல்வி முறையை குறை கூறியும், அது மாற்ற படவேண்டும் என்று பேசினாலும், அதே கல்வி முறை எந்த மாற்றமுமின்றி தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

இந்த புத்தகம் ஒரு வித்யாசமான அனுபவம் தரும் என்ற எண்ணத்தில் புத்தக சந்தையில் வாங்கினேன். அதனை நிச்சயம் தரவே செய்தது. . தொகுத்து வெளியிட்ட பவா. செல்லத்துரை & நெடுஞ்செழியனும் அகம் பதிப்பகத்தாரும் பாராட்டுக்கு உரியவர்கள்.

*********
ஜூன் 4, 2012 தேதியிட்ட கீற்று இணைய இதழில் வெளியானது  

Tuesday, May 15, 2012

சிரிப்பு டாக்டர்- என்.எஸ்.கேயின் காமெடி அனுபவங்கள்

கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட "கலைவாணர் என் எஸ்.கே "சிரிப்பு டாக்டர்" என்கிற புத்தகம் சமீபத்தில் வாசித்தேன்.


புத்தகத்தின் முதல் அத்தியாயத்திலேயே என். எஸ். கே யின் பல வித்தியாச குணங்களை சொல்லி புத்தகம் முழுதும் வாசிக்கும் ஆவலை தூண்டி விடுகிறார் நூலாசிரியர்  

என். எஸ். கே ஒரு நாள் இரவு மொட்டை மாடியில் படுத்திருக்கிறார். அப்போது ஒரு திருடன் வந்து மொட்டை மாடியில் குதிக்கிறான். அவனை பார்த்து விட்டு மனைவி மதுரம் " யாரோ திருட்டு பய" என்கிறார். என். எஸ். கே எழுந்து பார்க்கிறார். அவன் திருடன் தான். ஆனால் என். எஸ். கே தன் மனைவியிடம் இப்படி சொல்கிறார்: " என்னுடன் நாடத்தில் நடித்தவன்; வாச கதவு தாழ் போட்டதால் இப்படி வந்துருக்கான் " என சொல்லி விட்டு அவனுக்கு சாப்பாடு போட்டு பணம் தந்து அனுப்புகிறார். இது தான்   என். எஸ். கே !

இன்னொரு சம்பவம். இவர் நிறுவனத்தின் கணக்கு வழக்கு பார்த்து விட்டு வருமான வருவாய் அதிகாரி ஹனுமந்த ராவ் கணக்குகளை கொண்டு வந்தவரிடம் " என்னயா நிறைய தர்மம், தர்மம் -னு கணக்கு எழுதிருக்கு. எப்படி நம்புறது?" என்று கேட்க, என்னெனவோ சொல்லியும் அவர் நம்பாததால், இப்படி சொல்லியுள்ளார். " சார் நீங்க வேணா இப்ப நேரா போய் என். எஸ். கே யை பாருங்க. உங்களை யாருன்னு சொல்லிக்காம, உங்க மகள் கல்யாணத்துக்கு வேணும்னு பணம் கேளுங்க. தர்றாரா இல்லையா பாருங்க " என சொல்ல, அதிகாரி ஹனுமந்த ராவ் அதே போல் போய் ஆயிரம் ரூபாய் பெண் கல்யாணத்துக்கு வேண்டும் என கேட்டுள்ளார். பணம் தர என். எஸ். கே ஏற்பாடு செய்யா, அதை பார்த்து விட்டு ஆச்சரியமான ஹனுமந்த ராவ் இப்படி சொல்லி விட்டு கிளம்புகிறார்: " ஐயா கிருஷ்ணா, உனக்கு உங்க அப்பா தப்பான பேர் வச்சிட்டார். உனக்கு கர்ணன்னு தான் பேர் வச்சிருக்கணும். பணம் தர்மம் தருவேதேல்லாம் சரி. இனியாவது அதுக்கு ஒரு வவுச்சர் வாங்கிக்குங்க" 

கலைவாணர் தன் இறுதி காலத்தில் பண வசதி இன்றி மருத்துவ மனையில் இருந்த போது எம். ஜி ஆர் அவரை பார்க்க வரும் போதெல்லாம் பண கட்டை அவர் படுக்கைக்கு கீழ் வைக்க, " ராமச்சந்திரா. பணமா தராம காசா மாத்தி கொடு இங்கே இருக்க ஏழைகள் எல்லாருக்கும் அப்ப தான் தர முடியும் " என்றாராம். தன்னை பார்க்க வருவோர் வாங்கி வரும் பழங்கள், ஹார்லிக்ஸ் இவற்றையும் கூட மற்ற ஏழைகளுக்கு கொடுத்து விடுவாராம் என். எஸ். கே.

மேற்சொன்ன சம்பவங்கள் அனைத்தும் முதல் அத்தியாயத்திலேயே உள்ளது ! இப்படி படு சுவாரஸ்ய அறிமுகத்துடன் துவங்குகிறது புத்தகம்.

மளிகை கடை வேலை, டென்னிஸ் கோர்ட்டில் பந்து பொறுக்கி போடும் போடும் சிறுவன் வேலை என பார்த்து வந்தார் என். எஸ். கே. மாலை நேரத்தில் நாடக கொட்டகையில் முறுக்கு விற்க போகும் போது நாடகம் முழுதும் பார்த்து அதில் வரும் பாடல்களை எப்போதும் பாடுவாராம்.  இதை பார்த்து விட்டு அவர் தந்தை அவரை ஒரு நாடக குழுவில் சேர்த்து விட, சிறு சிறு பாத்திரங்களில் நடித்து பின் முக்கிய சிரிப்பு நடிகர் ஆனார் என். எஸ். கே. அதன் பின் திரைப்படத்தில் நுழைந்து கலக்கியவருக்கு  வந்த பெரும் சோதனை லட்சுமி காந்தன் கொலை வழக்கு.

அப்போது பிரபலமாக இருந்த பாகவதர் மற்றும் என். எஸ். கே இருவரும் அந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள். லட்சுமி காந்தன் நடிகர்களை பற்றி எழுதும் மஞ்சள் பத்திரிக்கை நடத்தி வந்துள்ளார். அதில் பாகவதர் மற்றும் என். எஸ். கே பற்றி தவறாக எழுதியாதால், அவர்கள் ஆள் வைத்து லட்சுமி காந்தனை  கொன்றனர் என்பது வழக்கு. இது பல வருடங்கள் நடந்து அதுவரை இருவரும் ஜெயிலில் இருக்க நேரிட்டது. பின் திறமை வாய்ந்த ஒரு வக்கீலின் வாதத்தால் மேல் முறையீட்டில் இருவரும் விடுதலை ஆகினர். 

விடுதலைக்கு பின் பாகவதர் பெரிதாய் சோபிக்காமல் போனார். ஆனால் அதன் பின் தான் என். எஸ். கே-க்கு கலை வாணர் என்கிற பட்டம் கிடைத்தது. தன் திரை வாழ்வின் பல வெற்றி படங்களை தந்ததும் "நல்ல தம்பி" உள்ளிட்ட படங்களை அவர் இயக்கியதும் அதன் பின் தான்.

அந்த காலம் பற்றி சில வித்யாசமான தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது. நாடக குழுக்களில் நடிப்போர் சண்டை போட்டு கொண்டு ஊருக்கு ஓடி விடுவார்களாம்; பின் திரும்ப வந்து அதே குழுவில் சேர்ந்து கொள்வார்களாம். அனைத்து குழுவிலும் இது நடக்குமாம்.

இழந்த காதல் என்கிற நாடகம் அனைவருக்கும் பொதுவான ஒன்றாம். ஏதாவது ஒரு நாடக குழு கஷ்டத்திலோ அல்லது நஷ்டத்திலோ இருந்தால் இழந்த காதல் நாடகம் கொஞ்ச நாட்கள் போட்டால், நஷ்டத்திலிருந்து மீண்டு விடுவார்களாம் ! 

எம்.ஜி. ஆர் அறிமுகமான அதே சதி லீலாவதி படத்தில் தான் என். எஸ். கே யும் அறிமுகமானார் என்பது ஆச்சரியமாய் உள்ளது. 

என். எஸ். கே ஏற்கனவே திருமணம் ஆனவர். அதை மறைத்து மதுரத்தை மணந்துள்ளார். இறுதி வரை அவருடன் தான் வாழ்ந்துள்ளார். முதல் அமநிவி என்ன ஆனார் என்கிற தகவல் புத்தகத்தில் இல்லை. 

அந்த காலத்திலேயே பல பன்ச் டயலாக்குகள் இவர் பிரபலம் ஆக்கியுள்ளார். அதில் முக்கியமான பன்ச் இது : " இவரு சொன்ன சொன்னது தான். எவரு? இவரு !" இதனை ஒரு காலத்தில் அனைவரும் சொல்லி திரிவார்களாம் !

ஐம்பது வயதுக்கு மேல் மனிதன் வாழ கூடாது; நான் அதற்குள் இறந்து விடுவே என மதுரத்திடம் சொல்லி கொண்டே இருப்பாராம். அதன் படி ஐம்பது வயதுக்குள் இறந்து விட்டார்.  

அவர் இறப்பிற்கு பின்னும் புத்தகம் வேறு ஏதேதோ சம்பவங்கள் சொல்கிறது. பின் திடீரென ஒரு பாராவில் கலைவாணர் அரங்கம் திறக்க பட்டதை சில வரிகளில் சொல்லி முடிகிறது.  

முதல் அத்தியாயத்துக்கு எடுத்து கொண்ட சிரத்தையை கடைசி அத்தியாயங்களில் காட்ட வில்லை. 

என். எஸ். கே நடித்த 102 படங்களின் பட்டியலும் இறுதியில் தரப்பட்டுள்ளது 

கலைவாணர் என்ற மாமனிதரின் வாழ்க்கையையும், கூடவே அந்த கால நாடக உலகம் மற்றும் தமிழ் சினிமாவையும் நிச்சயம் அறிய முடிகிறது இந்த புத்தகத்தில் !

நூல்: சிரிப்பு டாக்டர் 
ஆசிரியர்: முத்து ராமன் 
பக்கம்: 164
விலை: 70
வெளியீடு: கிழக்கு பதிப்பகம் 
புத்தகம் வாசிக்க தந்தமைக்கு நன்றி : பதிவர் ரகு


கீற்று ஏப்ரல் 29 இதழில் வெளியான கட்டுரை . 

Tuesday, April 24, 2012

பயமுறுத்தும் மருத்துவர்கள்: இது நியாயமா?

ங்கள் அம்மாவுக்கு சமீபத்தில் உடல்நிலை மிக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்து, இருபது நாளுக்கு பிறகு டிஸ்சார்ஜ் ஆகி வீடு வந்தார். அம்மா இருந்த இந்த இருபது நாளில் டாக்டர் இரண்டு முறை "இன்னும் ஒரு நாள் கூட தாங்காது; அனைவருக்கும் சொல்லி அனுப்பி விடுங்கள்" என சொல்லி, வெவ்வேறு இடத்திலிருக்கும் மகன்-மகள் மற்றும் அம்மாவுடன் கூட பிறந்த தம்பி-தங்கைகள் என பலரும் ஓடி வந்தோம். இரு முறையும் அம்மாவுக்கு டாக்டர்கள் சொன்ன மாதிரி எதுவும் நடக்க வில்லை என்பது மகிழ்வான விஷயம் தான். இந்த இரு முறையும் ஐ. சி. யூ வெளியே சில நாட்கள் அட்டெண்டர் ஆக அமர்ந்திருந்த போது சில விஷயங்கள் கவனிக்க முடிந்தது.

ஐ. சி யூ க்கு மிக அதிகமாக வருவது ஹார்ட் அட்டாக் நோயாளிகள் தான். ஐ. சி. யூ க்கு அழைத்து வருவோரிடம் எந்த வித நம்பிக்கையும் மருத்துவர்கள் தருவதில்லை. " பிழைக்கிறது கஷ்டம் தான். பார்க்கலாம். " என்று தான் சொல்கிறார்கள். இது பற்றி விசாரித்த போது மருத்துவர்கள் பொதுவாய் பாசிடிவ் ஆக சொல்லவே மாட்டார்கள் என தெரிய வந்தது. பாசிடிவ் ஆக சொல்லி, பின்னர் வேறு ஏதாவது ஆகி, நோயாளி இறந்து விட்டால், உறவினர்கள் பிரச்சனை செய்து சண்டை போடும் நிகழ்வுகள் நடக்கிறதாம் !

அதுவே "பிழைக்கிறது கஷ்டம் " என்று கூறி விட்டு, பின் நோயாளி பிழைத்தால், " பிழைக்க முடியாத ஆளையும் பிழைக்க வச்சிட்டார் மகராசன்" என வாழ்த்தி விட்டு மகிழ்வோடு பில் கட்டி விட்டு போகிறார்களாம் !

மருத்துவர்களின் லாஜிக் இருக்கட்டும். அவர்கள் இப்படி நம்பிக்கை தராமல் பேசுவதால் என்ன நடக்கிறது தெரியுமா?

உறவினர்கள் அனைவரும் மிக கவலையுடன் அழுது புலம்பியவாறே இருக்கின்றனர். நோயாளியிடம் நேரடியாக கூறா விட்டாலும் தங்கள் உணர்வுகள் மூலம் "பிழைப்பது சிரமம்" என்கிற உணர்வை உடன் இருப்போர் நோயாளிக்கு தெரிவிக்கவே செய்கின்றனர்.

பிழைப்பது சிரமம் என எங்கள் அம்மாவை சொன்னதால், நடந்த சில விஷயங்களை கூறுகிறேன். எங்களில் சிலர் அம்மாவிடம் போய் "உனக்கு ஏதும் நிறைவேறாத ஆசை இருக்கா? எதுவா இருந்தாலும் சொல்லு. வேற யாரையும் பார்க்கணும் என நினைக்கிறியா?" என்றெல்லாம் கேட்டு கொண்டிருந்தோம். இது அம்மாவுக்கு, தான் இறக்க போவதால் தான் இப்படி கேட்கிறார்கள் என்பதை மறைமுகமாக தெரிவிக்கும் தானே?

நோயாளிகள் பிழைப்பது பாதி மருந்தினால் என்றால், மீதம் பெரும்பகுதி நம்பிக்கையில் மட்டுமே. இது மருத்துவர்களுக்கும் நன்கு தெரியும். இருந்தும் அவர்கள் நம்பிக்கையை தங்கள் சுய நலத்துக்காக குலைப்பது எப்படி சரியாகும்? மருத்துவர்கள் இதனை உணர்ந்து இப்படி அனாவசியமாக பயமுறுத்தாமல் இருப்பது நல்லது !

***
ங்கள் வீட்டுக்கருகில் நடந்த இன்னொரு சம்பவம் பகிர்கிறேன்

சிங்கப்பூரில் பெண் மருத்துவராக இருக்கிறார் அவர். அவர் கணவரும் குழந்தைகளும் மட்டும் இங்கு சென்னையில் உள்ளனர். பெண் மருத்துவரின் கணவர் பெயரை ரவி என்று வைத்து கொள்வோம். ரவிக்கு சர்க்கரை நோய் உண்டு. காலில் கொப்பலமும், தோல் பிரச்னையும் வந்துள்ளது. டாக்டரிடம் காட்ட, சர்க்கரை நோயால் தான் இப்படி நடந்தது என்றும் கட்டை விரலை ஆப்பரேஷன் செய்து எடுக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார் .

ரவி, சிங்கப்பூரிலிருக்கும் தன் டாக்டர் மனைவியிடம் இதை தெரிவித்துள்ளார். அவர் " கொஞ்ச நாள் பொறுங்கள் நான் இந்தியா வரும்போது பார்த்து கொள்ளலாம்" என சொல்ல, ரவியோ தான் பாட்டுக்கு அந்த ஆபரேஷனுக்கு உடன்பட்டு கட்டை விரல் அகற்றப்பட்டு விட்டது.

இனி தான் இருக்கு விஷயம் !!

கட்டை விரலை எடுத்த பின்னும் ரவிக்கு மீண்டும் மீண்டும் காலில் கட்டி மற்றும் தோல் பிரச்சனை வந்திருக்கிறது ! இன்னொரு டாக்டரிடம் காட்ட அவர் " சர்க்கரை நோய் அதிகமாகி விட்டது. இதய நோய் வந்து விட்டது. பை பாஸ் ஆபரேஷன் செய்ய வேண்டும் என கூறியிருக்கிறார். உடனே செய்யா விட்டால் பிரச்சனை ஆகி விடும் என்றும் கூறி இருக்கிறார்.

விஷயம் கேள்விப்பட்ட ரவியின் மனைவி சிங்கப்பூரிலிருந்து கிளம்பி வந்து விட்டார். அடுத்த சில வாரங்கள் இதற்காக பல மருத்துவர்களிடம் அலைந்து திரிந்து காலில் வந்தது தோல் வியாதி தானே அன்றி வேறு ஏதும் இல்லை என்று கண்டறிந்துள்ளார். தோல் மருத்துவர் தந்த மருந்து எடுத்து கொண்டதும், காலில் இருந்த கொப்பளம் மற்றும் தோல் பிரச்சனை முழுதும் சரியாகி விட்டது . ரவியின் கால் கட்டை விரல் போனது தான் மிச்சம் ! பை பாஸ் ஆபரேஷன் ஆகாமல் தப்பி விட்டார் ரவி !

நினைத்து பாருங்கள் ! தங்கள் சுய நலனுக்காக எப்படி என்ன ஆப்பரேஷன் செய்யலாம் என்று கணக்கு போடும் மருத்துவர்களும் இருக்கவே செய்கிறார்கள். குறிப்பாய் நீங்கள் தனியாகவோ, நிறுவனம் மூலமோ "இன்சூரன்ஸ் பாலிசி" வைத்திருப்பதாக சொன்னால் அவர்களின் அணுகுமுறை மற்றும் பேச்சு ரொம்பவே மாறி விடுகிறது.

கடவுளுக்கு இணையாக கருதக் கூடிய ஒரு தொழில் இருக்குமாயின் அது மருத்துவ துறை தான். அந்த துறையில் தான் இப்படி பட்ட புல்லுருவிகளும் உள்ளனர் !

நம்மை போன்ற மனிதர்களின் பயமே மருத்துவர்கள் பணம் செய்ய வைப்பாக அமைந்து விடுகிறது ! நண்பர்களே நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் ! குறிப்பாய் ஆபரேஷன் என்றால் இரண்டு அல்லது மூன்று ஒபினியன் வாங்காமல் முடிவு எடுக்காதீர்கள் !

**********
கீற்று  ஏப்ரல் 21 , 2012 இதழில் வெளியானது. 

Tuesday, April 10, 2012

சிவகுமாரின் " என் கண்ணின் மணிகளுக்கு": விமர்சனம்

சிவகுமார் " என் கண்ணின் மணிகளுக்கு" என்கிற தலைப்பில் பேசிய உரை புத்தகமாக வந்துள்ளது. இதனை தற்போது வாசிக்க வாய்ப்பு கிடைத்தது.

2009-ஆகஸ்ட் 17 அன்று கோவை தியாகராயர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களிடையே ஆற்றிய இந்த உரை சில மாதங்களில் தீபாவளி அன்று விஜய் டிவியில் ஒளி பரப்பாகி மிகுந்த வரவேற்பை பெற்றது.

புத்தக வடிவில் வாசிப்பதில் சில சௌகரியங்களும் சங்கடங்களும் உள்ளன.  சில இடங்களை  பொறுமையாய் மறுபடி மறுபடி வாசிக்க முடியும். இது நல்ல விஷயம். அதே நேரம் சிவகுமார் பேச்சின் ஸ்பெஷாலிட்டி அவர் சிறு துண்டு சீட்டு கூட இல்லாமல் முழு உரையையும் மனனம் செய்து,   அருவி போல் பேசும் அழகை நாம் வியப்பது தான். அந்த அனுபவம் புத்தகத்தில் கிடைப்பதில்லை. மேலும் அவர் வரைந்த ஓவியங்கள், அவர் செய்து காட்டும் யோசாசன போஸ்கள்  இவையும் புத்தகத்தில் மிஸ்ஸிங். 

துவக்கத்தில் தன் இளமை பருவம் பற்றி ஒளிவு மறைவின்றி கூறுகிறார்.

மின்சாரம் கழிப்பிட வசதி இரண்டும் இல்லாத ஊரில் பிறந்து வளர்ந்தது, படித்த விதம், குடும்ப சூழல் இப்படி நிறைய சொல்கிறார். மிக சாதாரண நிலையிலிருந்து முன்னேற நினைக்கும் எவருக்கும் இந்த பகுதி மிக பயனுள்ளதாய் இருக்கும்.

யோகாசனம் மிக இளம் வயதில் கற்றதையும் இன்று வரை அதை தொடர்வதையும் அது எப்படி தனக்கு உதவியது என்பதையும் விரிவாக சொல்வது நம் எத்தனை பேருக்கு உறைக்குமோ, நாமும் யோகசானம் கற்போமோ தெரிய வில்லை.

ஆங்காங்கு கம்பராமாயணம், பாரதி பாடல்கள், கண்ணதாசன் வரிகள் இவற்றை மேற்கோள் காட்டுகிறார்

1980 முதல் இன்று வரை பத்தாவது மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் மாநிலத்தில் முதல் இடம் பெற்ற ஐந்து மாணவர்களுக்கு பரிசு தருவதை பற்றி கூறும் போது இப்படி சொல்கிறார்

" மாநிலத்தில் முதல் இடம் பெற்ற அஞ்சு பேருக்கு பரிசு என்பதில் 1983-வரை ஆண்டுக்கு ஒரு மாணவி இருந்தார் 

1989 ,1990 ல் 2 மாணவி 3 பையன் என ஆச்சு
1997 ,1998 ல் 3 மாணவி 2 மாணவன்
2000-க்குப்புறம் அஞ்சு பரிசும் பெரும்பாலும் மாணவிகள் தான் வாங்குறாங்க

மாணவர்களே ! பாத்துக்குங்க. அவங்க பின்னாடி சுத்திட்டு  நீங்க கோட்டை விட்டுடுவீங்க. ஆனா அவங்க படிச்சுடுவாங்க"

என மாணவர்களுக்கு புரிகிற விதத்தில் சொல்வது சுவாரஸ்யம் !

இந்த புத்தகத்தில் சிவகுமார் சொன்ன இன்னும் சில சுவாரஸ்ய வரிகள் அவர் எழுத்திலேயே இதோ :

"நல்லா படிச்சு வேலைக்கு போன பிறகு காதலிங்க. நானே சப்போர்ட் பண்றேன். ஆனா தோலை காதலிக்காதீர்கள். உள்ளத்தை காதலியுங்கள். தோல் எப்படியும் ஒரு நாளைக்கு சுருங்கும். சலிப்பு தட்டிடும்"

"உங்க அம்மா -அப்பாவுக்கு தெரியாம, அவங்களை ஏமாத்திட்டு கல்யாணம் பண்ணிக்காதீங்க. திரும்பி படுக்க முடியாம, பத்திய சாப்பாடு சாப்பிட்டுட்டு உங்களை வயித்தில் சுமந்தவ அம்மா. உங்களை பிரசவிக்கும் போது மரணத்தின் வாயிலை தொட்டு பார்த்தவ. அந்த தாய்க்கு சொல்லாமல் செய்யாதீர்கள் "

"ஒரு ஆண் கல்யாணத்துக்கு அப்புறமாவது திருந்தணும். அவனை நம்பி ஒரு பெண் வந்த பிறகும் திருந்தலைன்னா உருப்படவே மாட்டான்"

"அந்நியர்கள் நம் நாட்டை 26 முறை படை எடுத்துள்ளனர். ஆனால் நாம் எந்த நாட்டையும் ஒரு முறை கூட படை எடுத்ததில்லை. இதிலேயே தெரியும் நம் நாடு எவ்வளவு சிறப்பான நாடு என".

"இந்தியாவில்107 கோடி பேர் இருக்கோம். ஒருத்தர் முகம் மாதிரி இன்னொருவர் இருப்பதில்லை. டிவின்சுக்கு கூட சிறு வித்யாசம் இருக்கும் இயற்கையின் அதிசயம் இது தான்".

"ஒரு காலத்தில் நம் சமூகத்தில் பெண் ஆதிக்கம் தான் இருந்தது. இயற்கையை எதிர்த்து போராடும் போது, புலியோடு சண்டை போடும் போது பெண்களை பின்னே தள்ளிட்டு வச்சிட்டான் ஆண்" .

"காந்தி,  லிங்கன் மாதிரி நிறைய சாதிச்சவங்க  அழகில்லாதவங்க தான். கண்ணதாசன் சொல்வார்

அழகில்லாத உருவத்தை ஒதுக்காதீர்கள். அதற்குள்ளும் ஒரு ஆன்மா தவித்து கொண்டிருக்கிறது

அழகான உருவத்தை வணங்காதீர்கள். அதற்குள்ளே ஆணவம் தலை தூக்கி நிற்கிறது

பணக்காரன் வீட்டு வாசல் படி ஏறாதீர்கள். அங்கு உங்களுக்கு அவமானம் காத்து கொண்டிருக்கிறது !

*********
இந்த புத்தகம் மட்டுமல்லாது சிவகுமாரின் அனைத்து பேச்சுகளையும் மோசர்பேர் நிறுவனம் டீவிடீ-யாக கொண்டு வந்துள்ளது. சிவகுமார் குரலிலேயே கேட்க விரும்புவோர் இந்த டீவிடீ வாங்கலாம் !

புத்தக சந்தையில் இந்த புத்தகம் வாங்கிய போது நிறைய கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் இதனை வாங்குவதை பார்த்து மகிழ்வாக இருந்தது.

இளைஞர்களுக்கு தேவையான விஷயத்தை, அவர்களுக்கு பிடித்த விதத்தில் சுவாரஸ்யமாக சொன்ன சிவகுமார் நிச்சயம் நம் பாராட்டுக்குரியவர் !
************
புத்தக பெயர்:  " என் கண்ணின் மணிகளுக்கு" 
ஆசிரியர் : சிவகுமார்
பதிப்பகம் : அல்லையன்ஸ் 
பக்கங்கள் : 72
விலை Rs. 55

**************
கீற்று  9  ஏப்ரல் 2012  தேதியிட்ட இதழில்  வெளியானது
Related Posts Plugin for WordPress, Blogger...