மீண்டும் தூண்டில் கதைகள் 1995-ல் ஆனந்த விகடனில் வெளிவந்த சுஜாதாவின் சிறுகதை தொகுப்பு. ஒவ்வொரு வாரமும் அதன் பக்கங்களை கத்தரித்து, பத்திரமாய் எடுத்து வைத்து இன்னும் பாதுகாப்பாய் என்னிடம் பத்திரமாய் உள்ளது. சமீபத்தில் அதை மீண்டும் எடுத்து தலைவரின் மாஜிக்கை முழுமையாய் அனுபவித்தேன்.
மிக பிரசித்தி பெற்ற முதல் கதை (" கருப்பு குதிரை") - மேட்ச் பிக்சிங் பற்றியது. ஒரு அம்பயரின் பார்வையில் சொல்லப்படும் கதை ( அந்த அம்பயர் நம் வெங்கட் ராகவனை கண் முன் கொண்டு வருகிறார்). ஒரு மேட்சில் ஜெயிக்க அந்த அம்பயரை அணுக ( 50000௦௦௦ US டாலர்), அவர் மறுக்கிறார். ஆனால் இறுதியில் அங்கு விளையாடிய எதிர் அணி கேப்டன் மூலம் அதை போல இரு மடங்கு பணம் கொடுத்து மேட்ச் பிக்சிங் நடந்தது இறுதியில் தெரிகிறது ! இதன் பிறகு மேட்ச் பிக்சிங் பற்றி வேறு சில கதைகள் வந்திருக்கலாம். ஆனால் தம்ழில் இவ்வகை கதைகளுக்கு இது முன்னோடி என்று சொல்லலாம்
பெரியவர்கள் உலகம் என்கிற கதை ஒரு பள்ளி செல்லும் மாணவனின் பார்வையில் சொல்லப்படுகிறது. நல்ல தலைமை ஆசிரியர் மாற்றலாகி வேறு ஊருக்கு செல்ல போவதாக தெரிய வரும் மாணவர்கள் மிக அப்செட் ஆகிறார்கள். தலைமை ஆசிரியர் மனைவிக்கு மற்றொரு ஆசிரியருடன் உறவு இருப்பது அந்த சிறுவனுக்கு தெரிய வருகிறது. தலைமை ஆசிரியர் மாற்றலாகி போவதே இந்த தவறான உறவிலிருந்து பிரிக்கத்தான் என்றும் புரிகிறது அவனுக்கு ! இந்த விஷயம் கேள்வி பட்டதும் திடீர் பெரியவனாகி " நான் படிக்கணும்" என தான் டாவ் அடிக்கும் பெண்ணிடம் சொல்வதாக சொல்வது மட்டும் சற்று உறுத்துகிறது ! மாறுதல்கள் அவ்வளவு சீக்கிரமாய் நடக்குமா?
கார்பெட்டில் ரத்தம் முகத்தில் புன்னகை : இதுவும் கூட கணவன் இருக்கையில் இன்னொரு ஆணுடன் தொடர்பு வைத்திருக்கும் ஒரு பெண்ணின் கதை. ஒரு மரணம் நிகழ்கிறது, அது கொலையா தற்கொலையா என்பது தான் கதை.
"எல்லாமே இப்பொழுதே" - கதை செம சுவாரஸ்யம் ! சாதாரண வேலையில் இருக்கும் ஒருவன் ஒரு பெண்ணை காதலிக்கிறான். அவனது பணக்கார பாசும் அந்த பெண்ணை காதலிக்க, காதலன் விட்டு கொடுக்கிறான். ஒரு பணக்காரன் - ஒரு ஏழை எனும்போது அந்த பெண் பணக்காரனை தான் தேர்ந்தெடுப்பாள் என்பது யூகிக்க முடிந்தாலும் கதையின் இறுதியில் வரும் டுவிஸ்ட் அதிர வைக்கிறது. அங்கு கூட விஷயத்தை சுஜாதா முழுசாய் சொல்லாமல் நம் ஊகத்துக்கு விட்டு செல்வது அட்டகாசம் !
2887-ல் சில விலாசங்கள் என்கிற வருங்காலம் குறித்த கதை ஒன்று. செக்ஸ் என்பதே தடை செய்யப்பட காலம். ஒரு பையன் ஒரு பெண்ணின் விலாசம் தேடி போகிறான். எல்லாம் முடிகிறது. கடைசியில் தான் தெரிகிறது. அந்த பெண் கால் கேர்ள் அல்ல, வந்த பயன் தான் கால் பாய் என்பது ! இப்போதே இந்த "கால் பாய்" கலாசாரம் சென்னைக்கு வந்து விட்டது நடப்பதை சென்னையில் உள்ள பலரும் அறிவர் !
சொல்லும் விதம் நகைச்சுவையாய் இருந்தாலும் பல கதைகளில் முடிவில் சோகம் இழையோடுகிறது.
மொத்தத்தில்:
கையில் எடுத்தால் முடித்து விட்டு தான் வைக்கிற மாதிரியான சுஜாதா ஸ்பெஷல். இதுவரை வாசிக்கா விடில் அவசியம் வாசியுங்கள் !




















