Showing posts with label உணவகம் அறிமுகம். Show all posts
Showing posts with label உணவகம் அறிமுகம். Show all posts

Tuesday, May 16, 2017

மின்ட் ஸ்ட்ரீட்டில் ஒரு சுவாரஸ்யமான Food Walk...

Food Walk ...சென்னையின் சில இடங்களில் மிகப் பிரபலம் ! அதில் முக்கியமானது ... சென்னை பாரிஸ் கார்னர் அருகிலுள்ள மின்ட் ஸ்ட்ரீட் Food walk.

அண்மையில் நண்பர்கள் சிலர் மின்ட் ஸ்ட்ரீட்டில் Food Walk சென்றோம்..ஏற்கனவே சென்று அனுபவம் உள்ள திரு.  முரளி ரங்கராஜன் எங்களை முன்னின்று அழைத்து சென்றார்

மாலை 4 மணிக்கு எங்கள் பயணம் வேளச்சேரி ரயில் பயணத்தில் துவங்கியது. ரயிலை விட்டு இறங்கியதும் முதல் மற்றும் முக்கிய வேலையை பார்த்து விட்டு (வேறென்ன செலஃபீ தான் !) நடக்க துவங்கினோம்



அரசு மருத்துவ கல்லூரி மாணவர் விடுதி வழியே பூக்கடை போலீஸ் ஸ்டேஷன் அருகே சென்று இடது புறம் திரும்பி சற்று தூரம் சென்றால் மின்ட் ஸ்ட்ரீட் வந்து விடுகிறது

மேத்தா பிரதர்ஸ் மித்தாய் வாலா

நாங்கள் முதலில் சென்ற கடை..இங்கு வடா பாவ் தான் பிரசித்தி பெற்றது. நாங்கள் சாப்பிட்டதும் அதுவே !





வடா பாவ்.........உருளை கிழங்கு நன்கு வேக வைக்கப்பட்டு ஒரு தவாவில் கடுகு, பச்சை மிளகாய், பூண்டு, மஞ்சள் மற்றும் உப்பு  உள்ளிட்டவை சேர்க்கப்படுகிறது. சூடு குறைந்த பின் எலுமிச்சம் பழம் சைசில் உருண்டையாக உருட்டப்படுகிறது. இது பெங்கால் கிராம் மற்றும் கடலை மாவுடன் கலந்து  - உடன் சோடா மற்றும் உப்பு சேர்த்து  நன்கு வறுக்கப்படுகிறது. அற்புதமான போண்டா தயார். இதனுடன் சுவையான சட்னி (Green Chutney made of Coriander and garlic powder)  மற்றும் ஒரு Stuffed  Pav/ Bun சேர்த்து பரிமாறுகிறார்கள்.



நண்பர்கள் பலரும் ரசித்து சாப்பிட்ட உணவுகளில் இதுவும் ஒன்று !

காக்கடா ராம்பிரசாத் 

நாங்கள் சென்ற கடைகளில் குளிரூட்டப்பட்ட வசதியுடன், அமர்ந்து சாப்பிடும் படி இருந்த ஒரே கடை இது தான். பாதி பேர் தான் உள்ளே சென்று அமர்ந்து சாப்பிடுகிறார்கள்.   பெரும்பாலான மக்கள்   வெளியில் வாங்கி அங்கேயே சாப்பிட்டு .விடுகிறார்கள்.


ஆலூ டிக்கா, பாதாம் பால்  மற்றும் ஜிலேபி ஆகியவை இங்கு சாப்பிட்டோம்.

ஆலூ டிக்கா - தவாவில் நெய் ஊற்றி மிக நன்றாக வறுக்கப்பட்டு (deep fry ) செய்யப்படும் ஒரு உணவு. டிக்காவை துண்டு துண்டாக்கி - கடைந்த தயிர் அதன் மேலே ஊற்றப்பட்டு - சாட் மசாலா, ஜீரக பவுடர், தனியா, இனிப்பு சட்னி உள்ளிட்டவை சேர்க்கப்படுகிறது. இதனுடன் ப்ரெஷ் பன்னீர்  மற்றும் சீஸும் சேர்ந்து தரும்போது.. சாப்பிட ஓஹோ என்று இருக்கும். வயிறும் சீக்கிரம் நிரம்பிவிடும்.



பாதாம் பால் .. Simply Superb !

பாதாம் பால் பற்றி ஒரு நண்பர் சொன்னது "காலையில் ஓடும் முன் குடிக்க சிறந்த beverage இது !  பால் மற்றும் Almond இரண்டும் ஓடும் முன் குடிக்க மிகவும் உகந்தவை  !! "

(ரன்னிங் பிரியர்களாயிற்றே.. பல நேரம் .. ரன்னிங் பற்றி பேச்சு வராமல் இருக்காது !)

நிச்சயம் செல்ல வேண்டிய / தவற விடக்கூடாத கடைகளில் ஒன்று இது

லஸ்ஸி கடை

காக்கடா கடைக்கு அருகிலேயே உள்ளது ஏரியாவில் புகழ் பெற்ற லஸ்ஸி கடை.

காக்கடா கடைக்கு பக்கத்தில் ஒரு ஜைஜான்டிக் மனிதர் நின்று கொண்டிருக்கிறார். அவர் தான் லஸ்ஸி கடை ! அகில உலகிலும் இப்படி ஒரு லஸ்ஸி கடையை காண முடியாது ( கடை என ஒன்று இல்லாமல் தெருவில் நிற்கும் ஒரு மனிதரே கடை !)

அவரிடம் லஸ்ஸி வேண்டும் என்றதும், எத்தனை வேண்டும் என விசாரிக்கிறார். நாங்கள் காக்கடாவில் ஏற்கனவே ரவுண்ட் கட்டியதை பார்த்ததாலோ என்னவோ, உங்களால் முழு டம்பளர் லஸ்ஸி குடிக்க முடியாது; பாதி டம்பளர் எல்லாருக்கும் தருகிறேன் என்றார்.

பாதி டம்பளர் லஸ்ஸி 70 ரூபாய். முழு லஸ்ஸி  140 ரூபாய்.

அருகில்.. எதோ ஒரு சிறு இடத்தில் லஸ்ஸி தயாராகிறது; மொபைல் மூலம் ஆர்டர் தர அதிக காத்திருப்பின்றி,  சில நிமிடத்தில் லஸ்ஸி வந்து விட்டது.

எவ்ளோ பெரிய டம்பளர் !!!!!

கெட்டியான தயிர், சர்க்கரை, saffron இவை சரியான விகிதத்தில் சேர்க்கப்பட்டு - பெரிய சைஸ் கிளாசில் தரப்படுகிறது.

பாதி டம்பளர் லஸ்ஸி குடிக்க குறைந்தது 5 நிமிடம் எடுத்து கொண்டேன். லஸ்ஸியை சிறிது சிறிதாக முழுக்க என்ஜாய் செய்து ரசித்து ருசித்து குடிக்க வேண்டும்..நாக்கில் சென்று ஒட்டி கொள்கிறது லஸ்ஸி.. முடியும் போது ஒரு பிளசண்ட் ஷாக். அடியில் அட்டகாசமான பால்கோவா.. வாவ் !

தஞ்சை அன்பு லஸ்ஸியை பீட் செய்ய உலகில் இன்னொரு லஸ்ஸி இருக்குமா என நினைத்து கொண்டிருந்தேன்.. சென்னையின் இந்த லஸ்ஸி நிச்சயம் அன்பு லஸ்ஸியை தோற்கடித்து விடும்.



ஓனர் தினேஷ் சோனி.. ராஜஸ்தானில் இருந்து இங்கு வந்து செட்டில் ஆன wrestler ! குடித்து முடித்து விட்டு ஓனருடன் ஒரு செலஃபீ எடுத்து கொண்டோம். கிளம்பும் முன் அவரிடம் "இதுவரை இவ்வளவு அருமையான லஸ்ஸி குடித்ததே இல்லை; ரொம்ப அருமையா இருந்தது" என சொல்ல " எல்லாம் கடவுள் செயல் " என சொல்லிய படி வானத்தை பார்த்தார் . முகத்தில் மகிழ்ச்சியும் நிறைவும் தெரிந்தது.

அகர்வால் மிஸ்தான் பந்தர் 

நாங்கள் பானி பூரி சாப்பிட்ட இந்த கடை - வழக்கமாய் நாம் சாப்பிடுகிற பானி பூரி தரத்திலேயே இருந்தது.



இங்கு நாங்கள் வேறு எதுவும் சாப்பிட்டு பார்க்க வில்லை

கணேஷ் கூல் பார் (கரும்பு ஜுஸ் கடை)

மின்ட் தெருவில் இருந்து ஆவுடையப்பன் தெரு செல்லும் முனையில் உள்ளது இந்த கரும்பு ஜுஸ் கடை. எப்போதும் கூட்டம் அள்ளுகிறது.



12 ரூபாய்க்கு ஐஸ் போட்ட ஜுசும், 15 ரூபாய்க்கு ஐஸ் இல்லாத ஜுசும் கிடைக்கிறது. ஆஹா ஓஹோ இல்லை. கொடுத்த காசுக்கு நிச்சயம் நல்ல ஜுஸ்.



நிறைய நடப்பதாலும், இனிப்பு சாப்பிடுவதிலும் நிறையவே தாகமாய் இருக்கும். எனவே கரும்பு ஜுஸ் தாகத்தை தணிக்க பெரிதும் உதவியது !

சீனா பாய் டிபன் சென்டர் 

டிபன் சென்டர் என ஹோட்டல் போல பெயர் இருந்தாலும், இதுவும் ஒரு சிறு கடை தான்.


NSC போஸ் ரோடில் இருக்கும் இக்கடையில் சீஸ் முறுக்கு மற்றும் காக்ரா சாண்ட் விச் இரண்டுமே .. மிக ரசிக்கும் வண்ணம் இருந்தது.



சீஸ் உள்ளிட்டவை சிக்கனம் பார்க்காமல் போடுகிறார்கள். சின்ன கடை என்றாலும் லாபம் பார்க்காமல் - கொடுத்த பணத்திற்கு நியாயம் செய்கிறார்கள்...



அவசியம் செல்ல வேண்டிய சாப்பிட்டு பார்க்க வேண்டிய உணவு வகைகள் இவை. சின்ன விஷயம்: இவை இரண்டுமே தயார் செய்ய சற்று நேரம் எடுக்கிறது !

பொடி இட்லி கடை

பயணத்தின் இறுதியில் சாப்பிட்டது பொடி இட்லி கடை. சிறிய சைஸ் இட்லிகள் (மினி இட்லி அளவு அல்ல.அதை விட நிச்சயம் பெரிது; நமது வழக்கமான இட்லியை விட சற்று சிறிது )


பொடியுடன் நெய் ஊற்றப்பட்டு இட்லி மணக்கிறது. வயிறு ஏற்கனவே நிரம்பி இருந்ததால் ஆளுக்கு ஒவ்வொரு இட்லி மட்டுமே சாப்பிட்டோம். நிச்சயம் வித்தியாச சுவை; முயற்சித்து பார்க்க வேண்டிய கடை

சில குறிப்புகள் :

* வார நாட்களின் மாலை ஏராள மக்கள் பர்சேஸ் செய்ய வருவதால் கூட்டம் அதிகமாயிருக்கும். ஞாயிறு பாதி கடைகள் இருக்காது. எனவே சனிக்கிழமை மாலை Food walk க்கு செல்வது நல்லது 

* காரில் செல்வதை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. மின்ட் ஸ்ட்ரீட்டில் பார்க் செய்வது மிக கடினம். ஒருவேளை கார் எடுத்து சென்றால் உயர் நீதி மன்றம் அருகே நிறுத்தி விட்டு நடக்க வேண்டும். 

* ரயில் என்றால் Fort ஸ்டேஷனில் இறங்கி நடக்கவேண்டும். கிட்டத்தட்ட முக்கால் கிலோ மீட்டர் நடை இருக்கும். அல்லது Fort ஸ்டேஷனில் இருந்து ஒரு ஆட்டோ மூலம் மின்ட் ஸ்ட்ரீட் வரை சென்று அங்கிருந்து நடையை துவங்கலாம்.



* மின்ட் ஸ்ட்ரீட் ரொம்ப நீட் ஆகவெல்லாம் இருக்காது. இதை மனதில் கொள்க ! கார், பைக், சைக்கிள், ரிக் ஷா, ஆட்டோ எல்லாம் - இரண்டு பக்கமும் செல்லும்; ( ஒன் வே என்று சொல்கிறார்கள். பார்த்தால் அப்படி தெரியலை ) வாகனங்களுக்கு இடையில் கிடைத்த கேப்பில் புகுந்து செல்லவேண்டும்.  

மின்ட் ஸ்ட்ரீட் 

* வாங்கும் உணவு வகைகளை அவசியம் பிரித்து சாப்பிடவும்.கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டால் தான் பல இடங்களில் சாப்பிட்டு முயல முடியும். 

* அவசியம் ஏழெட்டு நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் செல்லுங்கள். உணவு சாப்பிடுவது ஒரு சந்தோசம் என்றால் அரட்டை அடித்தபடி அவர்கள் தரும் கமெண்ட்களுடன் செல்வது தான் சிறப்பே !

 நிறைவாக ...

இந்த Food walk சென்ற பலரும் அண்மையில் நண்பர்களானவர்கள் தான். (எனக்கு மட்டுமல்ல.. ஒரு சிலர் தவிர்த்து ஏராளமானோர் ஓரிரு வருடத்தில் வைப்ரன்ட் வேளச்சேரி வந்தவர்களே) ஆயினும் எந்த சிறு தயக்கமும் இன்றி இந்த Food walkல் ஒரே தட்டில் .....ஆளுக்கு ஒரு கை எடுத்து சாப்பிட தயங்கவே இல்லை.

எந்த ஒரு உணவையும் யாரும் முழுமையாக சாப்பிட வில்லை ( கரும்பு ஜுஸ் தவிர) ..எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் தான். அநேகமாய் பலரும் அன்று இரவு டின்னர் சாப்பிட்டிருக்க மாட்டார்கள் ! அந்த அளவு இனிப்பு மற்றும் ஸ்நாக்சிலேயே வயிறு நிரம்பி விட்டது.



வேளச்சேரியில் கிளம்பி - சென்னை Fort சென்று - அத்தனை வகை உணவுகளை சாப்பிட்டு, ஆங்காங்கு தொடர்ந்து மினரல் வாட்டர் பாட்டில் வாங்கி குடித்த படியே இருந்தும் கூட, ஒருவருக்கான செலவு ..200 ரூபாயை கூட தாண்டவில்லை..

 இவ்வளவு குறைவான செலவில் - உணவால் வயிறும், உடன் வந்த நண்பர்களால் மனதும் நிறைந்து போனது.. !

அனைத்தும் கூடி வந்தால்.. ஒரு நான் வெஜ் Food walk (அத்தோஸ்) விரைவில் நடக்கலாம் !

நன்றி:

புகைப்படங்கள் -  வடிவேல் & ஆரத்தி

அடிஷனல் தகவல்கள் - ஹேமா ஸ்ரீகாந்த் & பாஸ்கர் 

Saturday, April 29, 2017

ஹோட்டல் ராஜ்புத்ரா, நங்கநல்லூர் ...A Must visit for foodies !

களுக்கு தேர்வு முடியும் நாளன்று ஹோட்டல் சென்று சாப்பிடுவது தொன்று தொட்டு வரும் வழக்கம். கல்லூரி சென்ற பின்னும் தொடர்கிறது

நங்கநல்லூரில் இன்னும் ஓரிரு வேலைகள்.. கூடவே இரவு சாப்பாடு ஹோட்டல் ராஜ்புத்ராவில்...

எங்கு இருக்கிறது?

நங்கநல்லூர் இரண்டாவது மெயின் ரோடு - ஹயக்ரீவர் கோயிலுக்கு சற்று க்ராஸாக எதிர் பக்கம் உள்ளது.கர்நாடகா வங்கி இருக்கும் அதே பில்டிங்.

என்ன விசேஷம்
வட இந்திய உணவுகள் தான் இங்கு ஸ்பெஷல்

நாங்கள் சாப்பிட்டது

Starters


பன்னீர் மலாய் டிக்கா

Main Course



Stuffed குல்ச்சா
பன்னீர்  பிரைட் ரைஸ்
கடாய்பன்னீர்

Dessert



Sizzling ப்ரவுனி with ஐஸ் க்ரீம 




சுவை 

அனைத்துமே ரசிக்கும் படி இருந்தது. சைட் டிஷ் ஆக வாங்கிய கடாய்பன்னீர்
 குறிப்பிட்டு சொல்ல வேண்டும். அதி அற்புத சுவை அது. நெய் அதிகம் விட்டிருக்கிறார்களா ... சுவை அள்ளுதே என மனைவியிடம் கேட்க அவர் " வெண்ணை நிறைய யூஸ் பண்ணிருக்காங்க " என்றார்

Sizzling ப்ரவுனி with ஐஸ்க்ரீம் சுவை சுமார் தான் . குறிப்பாக இந்த ஐஸ் க்ரீம் வாங்க காரணம் - சூடும் குளிரும் கலந்து -அது பொங்கி வரும் அற்புதம் தான். இங்கு ஏனோ அது அரை தூக்கத்தில் கொட்டாவி விடுகிறது. சுவையில் பழுதில்லை ( இந்த ஐஸ்க்ரீம் வேளச்சேரி ஸைடூனில்  தாறு மாறாய் இருக்கும்)

விலை:

சற்றே அதிகம் தான். மேலே சொன்ன ஐட்டம்ஸ் சாப்பிட 800 ரூபாய் ஆனது. சுவை, ஆம்பியன்ஸ் இவற்றை கணக்கில் கொண்டால் அதிகமாய் தெரிய வில்லை

ஸ்பெஷல் அட்ராக்ஷன்

அருமையான ஆம்பியன்ஸ்..மெல்லிசை (Instrumental music) ஒலித்து கொண்டே இருக்கிறது. நல்ல செர்வீஸ் (சனி, ஞாயிறு மட்டும் காத்திருந்து சாப்பிட வேண்டுமாம் ) வார நாட்களில் எவ்வித காத்திருப்பும் இன்றி விரைவாய் உண்ண முடிகிறது



அற்புதமான ஓவியங்கள் சுவர்களை அலங்கரிக்கிறது; ஓவியங்கள் பாகுபலி படம் போல ரிச் லுக் கொடுத்து விடுகிறது. நல்ல ஏ.சி - அற்புத சுவை என எல்லா பக்கமும் திருப்தி தருகிற ஹோட்டல்.



வித்தியாச பின்னணியுடன் ஒரு நல்ல ஹோட்டல் விரும்புவோர் அவசியம் ஒருமுறை செல்ல வேண்டிய ஹோட்டல் இந்த ராஜ்புத்ரா !



புகைப்படங்கள் : ஸ்நேஹா 

Friday, August 23, 2013

உணவகம் அறிமுகம்: மடிப்பாக்கம் அல் - நூர் பிரியாணி கடை !

டிப்பாக்கம் பொன்னியம்மன் கோவில் பேருந்து நிலையத்துக்கு அருகில் புதிதாய் முளைத்துள்ளது இந்த அல் - நூர் பிரியாணி கடை !

வந்து 2 மாதம் தான் ஆகிறது. கீழே ஹோட்டல் நடத்தும் இளைஞரின் வீடு. மொட்டை மாடியில் கூரை போட்டு, உள்ளே பால்ஸ் சீலிங் செய்து ஹோட்டல் கெட் அப் கொண்டு வந்துள்ளனர்.


2 நண்பர்கள் புதிதாய் சேர்ந்து இந்த பிசினஸ் துவங்கியுள்ளனர். சென்னையில் ஒரு பெரிய ஹோட்டலில் இருந்த சமையல் காரரை அழைத்து வந்துள்ளனர். மனிதர் தந்தூரி ஸ்பெஷலிஸ்ட்-டாம் ! பிரியாணியில் இப்ப தான் பயிற்சி எடுக்கிறார் போலும் !




மட்டன் பிரியாணி - 120
சிக்கன் பிரியாணி - 80
குஸ்கா - 60

மட்டன் பிரியாணி - செம காரம் ! செயற்கையாய் எதோ கலர் வேறு போட்டு தொலைக்கிறார்கள் :(

சிக்கன் மற்றும் குஸ்கா பிரியாணி ஓகே

பிரியாணி சில நேரம் நன்றாகவும் ஒரு சில நேரம் சொதப்பலாகவும் இருக்கிறது !

வெரைட்டி வேண்டுவோர் ஒரு முறை மட்டும் முயற்சிக்கலாம். நிச்சயம் ஓஹோ அல்ல. ஜஸ்ட் அவரேஜ் பிரியாணி இது !

Friday, August 16, 2013

உணவகம் அறிமுகம் - மஸ்த் கலந்தர்

மஸ்த் கலந்தர் சென்னையில் அடையாறு, வேளச்சேரி அசோக் நகர் மற்றும் OMR  ரோடில் கிளைகள் உள்ள ஒரு வட இந்திய உணவகம் 



நண்பர் ரகுவும் நானும் இந்த ஹோட்டலுக்கு கொஞ்ச நாள் முன்பு சென்றோம் 

100 ரூபாய் முதல் 169 ரூபா வரை பல காம்போ பேக் இங்கு கிடைக்கும். இவற்றில் சப்பாத்தி டைப் உணவும் அரிசி வகையும் இருக்கும் 

இது தவிர கபாப்  வகைகளும் பரோட்டா வகைகளும் தனியாகவும் தருகிறார்கள் 

நாங்கள் சாப்பிட்டவை 

சப்பாத்தி (அல்லது புல்கா) உடன் அரிசி ஐட்டம் (புலாவ்) ஸ்வீட் சேர்ந்த எளிய காம்போ பேக் 150 ரூபாய்  

செலிபரேஷன் காம்போ - தான் இங்கு உள்ளத்தில் அதிக விலை - ( 169 ரூபாய்) இதில் 3 பூரி புலாவ், பன்னீர் க்றி மற்றும் குலூப் ஜாமூன் தருகிறார்கள் 

ப்ளஸ் 

ஹோட்டலில் பெரிதும் கவர்வது அதன் ambience தான். கண்ணை கவரும் சிகப்பு கலர் சோபாக்கள் - மிக மிக சுத்தமான ஹோட்டல் - இவை நிச்சயம் மனதுக்கு நெருக்கமாக்கி விடும் 


விலை பொதுவாக சற்று அதிகம் என்றாலும் - காம்போ பேக் 170 ரூபாயை தாண்டாமல் இருப்பது ஆறுதல் 

நாங்கள் சாப்பிட்டதில் ரொம்ப பிடித்தது பூரி மற்றும் குலோப் ஜாமூன் தான்  

அதிக கூட்டமில்லை காத்திருக்காமல் சாப்பிடலாம் 

மைனஸ் 

சப்பாத்திக்கான சைட் டிஷ் மற்றும் புலாவ் வகைகள் பெரிதாய் ஈர்க்காமல் போகின்றன. இது மிக பெரிய ஏமாற்றம் (அவை தானே முக்கியமாய் நன்றாய் இருக்கணும் ?)



மேலும் 150  ரூபாய்க்கு அவர்கள் தருகிற அளவு மிக குறைவு போட்டோவில் காம்போ - 22 ஐட்டம் அது இதென்று பெரிய சைசில் போட்டோ எடுத்து போடுகிறார்கள் ஆனால் தட்டில் அவை மினி சைசுக்கு இருக்கிறது ; ஒரு காம்போ பேக் சாப்பிட்டு விட்டு வயிறு நிரம்பி விட்டது என நமக்கு நாமே சொல்லி கொள்ள வேண்டியது தான் !

மொத்தத்தில்: 

வித்யாசமான கடை என ஒரு முறை செல்லலாம் நிச்சயம் மறுபடி மறுபடி செல்ல தூண்ட வில்லை !

மேலதிக தகவல்கள் 

மஸ்த் கலந்தர் 
அடையாறு,  ( Ph: 45587649)
வேளச்சேரி ( Ph: 43558381)
அசோக் நகர் ( Ph: 64558381) மற்றும் 
OMR  ரோடில் ( Ph: 6454 8381) 
கிளைகள் உண்டு 


Saturday, August 10, 2013

உணவகம் அறிமுகம் - ஹோட்டல் புஹாரி, வேளச்சேரி

ஹோட்டல் புஹாரி - எக்மோர் மற்றும் அண்ணா சாலையில் இருக்கும் இவர்களின் ஹோட்டலின் கிளை இப்போது வேளச்சேரிக்கும் வந்துள்ளது

வந்த ஓரிரு மாதத்திலேயே மிக நன்றாக பிரபலமாகி விட்டது குறிப்பாக வார இறுதிகளில் மிக அதிக கூட்டம். எப்படிங்க ஹோட்டல் ஆரம்பிச்சு இவ்ளோ சீக்கிரம் கூட்டம் வருது என்றால் " புஹாரி என்கிற பேர் அப்படிங்க " என சிரிக்கிறார் மெனு கேட்பவர்.



நாங்கள் ஆர்டர் செய்தது :

ஹைதராபாத் பிரியாணி
கோதுமை பரோட்டா
Fish Curry
சிக்கன் Curry

ஹைதராபாத் பிரியாணி அற்புதமாய் இருந்தது. மிக லேசாக ஹைதராபாத் சென்ற போது சாப்பிட்ட பிரியாணியை நினைவு படுத்தியது இது !

கோதுமை பரோட்டா + சிக்கன் Curry - மிக மிக டேஸ்ட்டியாய் இருந்தது. Fish Curry யில் உள்ள மீன்கள் சிறிய சைஸ் எனினும் ஒரு சின்ன முள் கூட இல்லை; சிக்கன் Curry & Fish Curry இரண்டுமே சற்று இனிப்புடன் இருந்தன !

சுவையில் - எங்கள் மூவரையும் முழுமையாய் திருத்தி படுத்தியது இந்த ஹோட்டல்.

இடியாப்பம், பாயா, மட்டன் சுக்கா, பேப்பர் சிக்கன் பிரை போன்றவையும் மிக நன்றாக இருக்கும் என இன்னொரு முறை சென்ற வந்த அலுவலக நண்பர்கள் கூறினர்

Bad Experience !!

ஒரு முறை இங்கு குடும்பத்துடன் சாப்பிட்டு விட்டு, இன்னொரு நாள் பார்சல் வாங்கலாம் என வீக் எண்டில் சென்று வெறுத்து போய் விட்டேன். 25 பேருக்கு மேல் காத்திருக்க ஒவ்வொருவருக்கும் டோக்கன் போட்டு தருகிறார்கள். டாக்டர் வீட்டில் காத்திருப்பது போல் ஒரு மணி நேரம் காத்திருக்க நேருகிறது. 5 நிமிஷத்துக்கு தான் ஒவ்வொருவர் டோக்கன் நம்பராக அழைக்கிறார்கள் நம் முறை வர குறைந்தது அரை மணி நேரம் முதல் 1 மணி நேரம் ஆகிடுது கொடுமை !

ரேட் கார்னர்

Buhari Hotel, T. Nagar Menu

Fish Curry ; Chicken Curry போன்றவை - 150
புபே லஞ்ச் மற்றும் டின்னர் - Rs 450. அன் லிமிட்டட் - இதுவரை முயற்சி செய்ததில்லை.

நான் வெஜ் பிரியர்கள் அவசியம் ஒரு முறை விசிட் அடிக்கலாம்; நிச்சயம் ரசிப்பீர்கள் என நம்புகிறேன் !

Friday, August 2, 2013

உணவகம் அறிமுகம் - ஹோட்டல் லட்சுமி நரசிம்மா, சோளிங்கர்



மேலே உள்ள படத்தை பாருங்கள் - இந்த கட்டிடம் என்னவாக இருக்கும் என ஊகிக்க முடிகிறதா ? சினிமா தியேட்டர் மாதிரி இல்லை?

சிம்மா - சிம்மா - நரசிம்மா - என உறுமும் கேப்டன் படம் ஓடும் தியேட்டர் இல்லை இது- சோளிங்கரில் இருக்கும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மா ஹோட்டல் தான் இது ! சோளிங்கர் கடவுள் பெயரிலேயே இயங்குது இந்த ஹோட்டல்.

ஒரு காலத்தில் சோளிங்கர் சென்றால் சாப்பிட சரியான ஹோட்டல் இருக்காது. குறிப்பாக குடும்பத்துடன் சென்றால் - அங்கிருக்கும் சிறு ஹோட்டல்களில் சாப்பிடுவது பெரும் சிரமம். அந்த குறையை தீர்க்க கடந்த வருடம் துவங்கியது தான் இந்த ஸ்ரீ லட்சுமி நரசிம்மா ஹோட்டல் !


ஹோட்டல் மட்டுமல்ல - மேலே லாட்ஜும் இயங்குகிறது

ஒரு முறை மீல்சும் - இன்னொரு முறை டிபனும் சாப்பிட்டுள்ளேன்

டிபன் வகைகளில் பூரி, பொங்கல், கிச்சடி, தோசை இவையெல்லாம் - 20 ரூபாய் என்கிற ஸ்டாண்டர்ட் ரேட் ! தோசைகளில் காளான் தோசை, காலி பிளவர் தோசை, கொத்தமல்லி தோசை என ஏராள வித்தியாச வெரைட்டிகள் உண்டு.

லஞ்சுக்கு - சாம்பார், கார குழம்பு, ரசம் எல்லாமே ஓகே. குறை சொல்கிற அளவிலோ வயிற்றை பதம் பார்க்கிற அளவிலோ இல்லை

இந்த ஹோட்டல் தவற விட கூடாத ஹோட்டல் அல்ல. சோளிங்கர் கோவிலுக்கு சென்றால் - நீங்கள் செல்ல தக்க ஒரே ஹோட்டல் இது தான் ! அதனாலேயே இங்கு அறிமுகம் செய்யப்பட்டது !

****
மேலதிக தகவல்கள் :

ஸ்ரீ லட்சுமி நரசிம்மா ஹோட்டல்
சோளிங்கர் - பேருந்து நிலையம் அருகில்
வகை: வெஜ் மட்டும்

Saturday, July 27, 2013

உணவகம் அறிமுகம் - சுவாமீஸ் கபே, ஆதம்பாக்கம்

செயின்ட் தாமஸ் ரயில் நிலையத்தை ஒட்டி அமைந்துள்ளது கருணீகர் தெரு. இங்கு உள்ள சிறிய - கடை சுவாமீஸ் கபே. பல நேரங்களில் கடைக்கு செல்ல வேண்டும் என்று தேடி கொண்டே சென்றாலும் கடையை தாண்டி சென்று விடுவோம்...காரணம் கடை மெயின் ரோடில் இருந்தாலும் சிறியதாக உள்ளதால் இருப்பதே எளிதில் தெரியாது !

ஒரு பத்துக்கு - பதினைந்து கடை - 150 சதுர அடியில் எப்படி ஒரு ஹோட்டல் இருக்க முடியும் என்று கேள்வி எழுகிறதல்லவா?

ஹோட்டலில் கிட்சனே இல்லை ! வீட்டில் தயார் செய்து உணவு கொண்டு வந்து விடுகிறார்கள். பில் தர ஒரு நபர்; பின் பார்சல் தரவும் அங்கேயே சாப்பாடு உண்போருக்கு எடுத்து தரவும் - இருவர். அவ்வளவு தான் கடை.



ஆனால் அந்த சிறிய இடத்தில் எப்போதும் கூட்டம் நிரம்பியிருக்கும்.

வேளச்சேரி போளி ஸ்டால் பற்றி எழுதும்போது 25 ரூபா சாப்பாட்டு கடை என்று எழுதியிருந்தேன் அல்லவா ? கிட்டத்தட்ட அதே மாதிரி கான்செப்ட் இங்கும் ! இங்கு பல உணவு வகைகள் 20 ரூபாய் தான் !

பூரி, பரோட்டா, சப்பாத்தி, தோசை மட்டுமல்ல - மதியத்துக்கு அனைத்து கலந்த சாதமும் 20 ரூபாய் தான்.

வருகிற கஸ்டமர்களில் 90 % பார்சல் தான் வாங்குகிறார்கள். நின்ற படி சாப்பிடுவோர் அரிது.

இட்லி, தோசை என்ன வாங்கினாலும் - இரு வகை சட்னிகள் மற்றும் சாம்பார் அருமை !



பரோட்டா, பூரி, இடியாப்பம் போன்றவை நன்றாக இருந்தாலும், வீட்டில் செய்து கொண்டு வந்து, ஹாட் பேக்கில் வைத்து தருவதால், சப்பாத்தி மற்றும் தோசை அவ்வளவு நன்றாக இருப்பதில்லை

இட்லி, பரோட்டா அல்லது கலந்த சாதம் - வீட்டில் செய்த உணவு - மிக குறைந்த விலையில் சாப்பிட இக்கடையை நாடலாம் !

மேலதிக தகவல்கள்

சுவாமீஸ் கபே
கருணீகர் தெரு
ஆதம்பாக்கம்

Saturday, July 20, 2013

உணவகம் அறிமுகம் - ரிலாக்ஸ் பாஸ்ட் புட்ஸ், நங்கநல்லூர்

எங்கே 

நங்கநல்லூர் ரயில்வே சப் வே அருகில்.. தில்லை கங்கா நகர் 36 வது தெருவில் !

அருகிலேயே ரிலாக்ஸ் ஹாட் டீ என்ற தேநீர் கடையும் இவர்களே வைத்துள்ளனர்.


எப்போ 

காலை ( இட்லி, பூரி உள்ளிட்ட வெஜ் உணவுகள் மட்டும்)

மதியம் - சாப்பாடு - சாம்பார் உள்ளிட்ட வெஜ் உணவு; மீன் குழம்பு, சிக்கன் குழம்பு நஹி. ஆனால் மீன் வறுவல், ஆம்லெட் கிடைக்கும் !

இரவு - இப்போ தான் கூட்டம் அள்ளுது. பிரைட் ரைஸ், பரோட்டா, நூடுல்ஸ் என உணவு அமர்க்களப்படுது

ஸ்பெஷல்

லாப் பரோட்டா என்று ஒரு வித பரோட்டா தருகிறார்கள். அடிப்படையில் முட்டை பரோட்டா தான். கல்லில் பரோட்டா மாவு போடும்போதே, முட்டையை உடைத்து ஊற்றி அதன் இதழ்களை மூடுகிறார்கள். மெத்து மெத்தென்று - அவ்வளவு அருமை ! வீட்டில் அனைவரின் விருப்ப உணவு இதுவே !
லாப் பரோட்டா 


சாதா பரோட்டாவும் அட்டகாசம் ! சிக்கன் குருமா - எக்ஸ்ட்ரா காசு வாங்காமல் தருகிறார்கள். நல்லாவே இருக்கு

பிரைட் ரைஸ், நூடுல்ஸ் அனைத்துமே சுட சுட சாப்பிட்டால் நன்றாகவே இருக்கு

சாப்பிட்ட உணவுகள் எதுவும் எந்த குறையும் சொல்ற மாதிரி இல்லை

Money Money Money !

பரோட்டா - Rs . 10
முட்டை பரோட்டா - Rs . 30
வெஜ் நூடுல்ஸ், பிரைட் ரைஸ், - Rs . 50
Egg நூடுல்ஸ், Egg பிரைட் ரைஸ், - Rs . 55
சிக்கன் நூடுல்ஸ், சிக்கன் பிரைட் ரைஸ், - Rs . 60

இன்ன பிற ..............

ரொம்ப சின்ன கடை. உள்ளே இரண்டே மேஜைகள். ஏழெட்டு பேர் தான் அமரலாம். வெளியே கடை வாசலில் அதே போல சில மேஜைகள். அவ்வளவு தான். இருப்பினும் - சில குடும்பங்கள் கூட உள்ளே வந்து அமர்ந்து செல்கின்றன பார்சலும் நிறையவே மூவ் ஆகிறது

நல்ல டேஸ்ட் - நியாயமான விலை - கொடுத்த காசுக்கு நிஜமா வொர்த் ! மறுபடி செல்ல தூண்டுது இக்கடை !

*************
அண்மை பதிவுகள் :

மனதை உலுக்கிய ஹிந்தி படம் - The Attacks of 26/11


Saturday, July 6, 2013

உணவகம் அறிமுகம் - ரத்னா கபே, வேளச்சேரி

பேச்சிலராக திருவல்லிகேனியில் இருந்த போது ரத்னா கபேயில் சாப்பிட்டிருக்கிறேன். குறிப்பாக அப்போது சற்று செலவு சுருக்கமாக செய்யவேண்டும் என்பதற்காக அவர்களின் ஸ்பெஷல் உணவான இட்லி சாம்பார் ரெகுலராய் சாப்பிடுவது வழக்கம்.


ரொம்ப வருடங்கள் கழித்து மீண்டும் ரத்னா கபே.. இம்முறை - குடும்பத்துடன்.

காலத்திற்கு தகுந்தபடி இவர்களும் மாறுகிறார்கள். உள்ளே நுழைந்து அமர்ந்ததுமே பல காம்போ பேக்குகள் நம் கருத்தை கவர்கின்றன. குறிப்பாக 5 வித தோசை - மசாலா தோசை, பொடி தோசை , ஆனியன் தோசை உள்ளிட்ட 5 வகைகள் ஒரே ஆர்டரில் தருகிறார்கள். செம சுவாரஸ்யம் !

நம்ம ஆர்டருக்கு வருவோம்.

நாங்கள் ஆர்டர் செய்தது :

சாம்பார் இட்லி
கைமா இட்லி
பரோட்டா (ஹீ ஹீ )
பூரி
பன்னீர் தோசை
***



ரத்னா கபே வந்துட்டு சாம்பார் இட்லி சாப்பிடாமல் போவதா? இரண்டு இட்லிகளை சாம்பாரில் நன்கு முழுக வைத்து எடுத்து வந்தார்கள். சுட சுட சுவையான சாம்பார்.. அடடா ! சாம்பார் இட்லி ரத்னா கபே போல் எங்கும் வராதுங்க சார் !

கைமா இட்லி என்பது வேறொன்றும் இல்லை. குட்டி குட்டி இட்லிகளை நன்கு பிரை செய்து தருகிறார்கள். மொறு மொறு வென crispy - ஆக இருக்கு.

பரோட்டா சிறிய அளவே ஆயினும் முறுகலாக இருந்தது & குருமா மற்ற இடங்களை விட வித்தியாச சுவை. இரண்டுமே அசத்தல்.

பன்னீர் தோசை - மசால் தோசை டைப் தான். மசாலாவிற்கு பதில் உள்ளே பன்னீர் இருக்கும். ஒவ்வொரு சட்னியும் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டது

அனைத்து உணவும் முடித்ததும் ஒரு காபி வாங்கி சாப்பிட்டோம். அடடா .. கும்பகோணம், தஞ்சாவூர் காபி போல அவ்வளவு சுவை !

மேலே சொன்ன அனைத்தும் மிகுந்த சுவையுடன் சாப்பிட்டும் பில் - 250 தான் வந்தது !( Non ஏ. சி )

ரத்னா கபே - திருவல்லி கேணி, போரூர், வேளச்சேரி என 4 இடங்களில் இருக்கு. அவசியம் ஒரு முறை சென்று பாருங்கள் !

Saturday, June 29, 2013

உணவகம் அறிமுகம் - கார்த்திஸ் ஹாட் கிட்சன், தாம்பரம்

தாம்பரம் காந்தி ரோடில் இருக்கிறது கார்த்திக் ஹாட் கிட்சன் என்கிற இந்த சிறிய கடை. பிரபு என்கிற 24 வயது இளைஞர் கேட்டரிங் படித்து விட்டு துவங்கியிருக்கிறார். இள ரத்தம்.... புதிதாய் செய்து பார்க்கணும், படித்த நல்ல விஷயங்களை முயற்சிக்கணும் என்கிற ஆர்வம் நிறையவே இருக்கிறது.


ஓபன் கிச்சனில் எந்த உணவாயினும் சொன்ன பின் தான் செய்ய துவங்குகிறார்கள். "எந்த உணவும் 4 மணி நேரத்துக்கு மேல் வச்சிக்க கூடாது சார்; புட் பாய்சன் ஆக வாய்ப்பு இருக்கு அதான் அப்பப்போ தயார் செஞ்சு தர்றோம்" என்கிறார் பிரபு (எவ்வளவு நாள் இந்த வைராக்கியம் தாங்குமோ?)

20 ரூபாய்க்கு அருமையான பூரி - கிழங்கு தருகிறார்கள் .....! பெரிய சைஸ் ஸ்பெஷல் தோசை 25 ரூபாய்.. தேங்காய் சட்னி, கார சட்னி, சாம்பார் முட்டைக்கான மசாலா (இலவசம் பாஸ் !) என வெரைட்டியாக சைட் டிஷ் வைக்கிறார்

பரோட்டா பெரிதாக மிக மென்மையாக இருக்கிறது. " பரோட்டாவில் முட்டை போடணும் சார்; அப்ப தான் சாப்ட்நெஸ் வரும்" என தொழில் ரகசியம் பகிர்கிறார் பிரபு

முட்டைக்கான தொக்கு மற்றும் தேங்காய் சட்னி நன்றாகவே இருந்தது

மதியம் சாப்பாடு - 50 ரூபாய்க்கு அன் லிமிடட் தருகிறார்களாம்.. மீன் குழம்பு, சிக்கன் குழம்பு உட்பட.

விலை குறைவாய், அளவும் அதிகமாய் இருப்பது கடை புதிதாய் துவங்கப்பட்டதாலா என்று தெரியலை இப்போதைக்கு குட் !

மேலதிக தகவல்கள்

கடை: கார்த்திக் பாஸ்ட் புட்
காந்தி ரோடு, தாம்பரம்
வகை: வெஜ் மற்றும் நான் வெஜ்

Saturday, June 22, 2013

உணவகம் அறிமுகம் - திண்டுக்கல் வேலு பிரியாணி

வேளச்சேரியில் ஷாப்பிங் முடித்து இரவு பத்து மணியளவில் டின்னர் சாப்பிட கடை தேடினோம். ஒரு வழியாக திண்டுக்கல் வேலு பிரியாணி கடைக்கு வந்து சேர்ந்தோம்.

                                    

வேளச்சேரி ரயில் நிலையம் மிக அருகே உள்ளது திண்டுக்கல் வேலு பிரியாணி கடை. மேம்பாலத்திலிருந்து பார்த்தாலே கடையின் போர்டு பெரிதாக தெரியும்.

டேஸ்டுக்காக ஒரு பிரியாணியும், பெண் சாப்பிடும் விதம் வேறு சில உணவுகளும் ஆர்டர் செய்தோம்

வேலு பிரியாணி என்று பெயர் உள்ளதே தவிர மற்ற வகை உணவுகள் தான் நிறையவே உள்ளது.

நாங்கள் சாப்பிட்டவை

சிக்கன் பிரியாணி -1
எக் பிரைட் ரைஸ்
சிக்கன் கொத்து பரோட்டா
எக் நூடுல்ஸ்

பரோட்டா, சப்பாத்தி போன்ற எதற்கும் குருமா தர மாட்டார்களாம் ! சைட் டிஷ் தனியாக ஆர்டர் செய்ய வேண்டும் என்றனர். சைட் டிஷ் ஒவ்வொன்றும் 150 முதல் 200 வரை விலை !

சீக்கிரமே உணவுகளை தந்து விட்டனர்

பிரியாணி ரொம்ப சுமார் தான். எக் பிரைட் ரைஸ் மற்றும் கொத்து பரோட்டா தான் நன்றாக இருந்தது. நூடுல்ஸ் ஜஸ்ட் ஓகே

ஒவ்வொரு ஐட்டமும் 120 முதல் 150 ரூபாய் ரேஞ்சில் இருக்கிறது (நான், ரொட்டி தவிர்த்து ). விலை சற்று அதிகம் தான். விலைக்கேற்ற தரம் இருக்கிறது என்று சொல்ல முடியாது

ஹோட்டல் தூரத்தில் இருந்து பார்க்கும்போது மெயின் இடத்தில் இருக்கிற மாதிரி தெரிந்தாலும், அருகில் போனால் சூழல் சற்று சரியில்லை. அருகிலேயே கால்வாய் ஓடுகிறது. (மினி கூவம் !! )

ஒரு இடத்தின் சுத்தத்தை அறிய அங்கு டாய்லெட் எப்படி வைத்துள்ளனர் என்பதை வைத்து அறியலாம் ! ஹோட்டலில் சாப்பிடும் அரை நீட்டாக இருந்தாலும், டாய்லெட் மோசமாக வைத்துள்ளனர். மாடியில் ஹோட்டல்- டாய்லெட் கீழே தரை தளத்தில் மட்டுமே; அதுவும் மோசமான நிலையில் :(

வேலு பிரியாணி - Value for money அல்ல !

Saturday, June 15, 2013

உணவகம் அறிமுகம் - வேளச்சேரி 25 ரூபா உணவு கடை

உடுப்பி கிருஷ்ணா போளி ஸ்டால் என்பது அந்த கடை பெயர். வேளச்சேரி விஜய நகர் பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ளது.



பெயரில் தான் போளி ஸ்டாலே ஒழிய - சுற்று வட்டம் முழுக்க டிபன் மற்றும் வெரைட்டி ரைஸ் வகைகளுக்கு தான் இக்கடை மிக பிரபலம் ! கூட்டம் எப்போதும் இருக்கும் கடை இது !


கடையின் சிறப்பே 25 ரூபாயில் - சப்பாத்தி , பரோட்டா, ஸ்பெஷல் தோசை துவங்கி - மதியம் பல வெரைட்டி ரைஸ் வகைகளும் வழங்குவது தான்.

சின்ன கடை என்றாலும் - ஏராளமான உணவு வகைகள் இங்கு இருக்கும். பொங்கல், பூரி, கிச்சடி, ஏழெட்டு வகை தோசைகள் (ஆனியன் தோசை, பொடி தோசை, etc ), இட்லி, கேசரி - என சுவர் முழுதும் வரிசை வரிசையாக - இங்கு கிடைக்கும் உணவுகளை லிஸ்ட் செய்துள்ளனர்

வேளச்சேரி சுற்றி ஏராள ஐ. டி மற்றும் BPO நிறுவனங்கள் உள்ளன இங்கு பணிபுரியும் பேச்சிலர்களுக்கு இந்த கடை செம அட்ராக்ஷன். இங்கு உட்கார்ந்து சாப்பிடும் வசதி கிடையாது.



கடையின் இரண்டு பக்கமும் தட்டை மேலே வைத்து விட்டு நின்று கொண்டே சாப்பிடும் படி ஏற்பாடு செய்துள்ளனர். மக்களும் எந்த கம்பிலேயிண்ட்டும் இன்றி நின்றவாறு சாப்பிட்டு விட்டு செல்கிறார்கள்

காலை டிபன் - 6.30 முதல் 10.30 வரை
லஞ்ச் - மதியம் 12 முதல் 3 வரை
மாலை 4 to 6.30 ஸ்நாக்ஸ் (வடை, போண்டா வகையறாக்கள் )
7 முதல் 10 வரை இரவு உணவு

- என காலை ஆறு முதல் - இரவு 10.30 வரை நான் ஸ்டாபாக இயங்கும் கடை இது !

என்ன ஒன்று - சுற்றுப்புற சுத்தம் மட்டும் இன்னும் சற்று improve செய்யலாம் !

இங்கு வெவ்வேறு தருணங்களில் - பொங்கல் (நெய் !!!) , தோசை, கிச்சடி ( காய்கறிகள் நிறைய) , சாம்பார் சாதம், வடை, போண்டா உள்ளிட்டவை சாப்பிட்டுள்ளேன். கொடுத்த காசுக்கு வயிறும் மனதும் நிறையும் !

மேலதிக தகவல்கள் :

உடுப்பி கிருஷ்ணா போளி ஸ்டால்
17, டான்சி நகர் , இரண்டாவது தெரு
தரமணி லிங்க் ரோடு , வேளச்சேரி
(விஜய நகர் பேருந்து நிலையத்துக்கு மிக அருகில் )

Friday, May 17, 2013

உணவகம் அறிமுகம் - சூப்பர் ராயல் ரெஸ்டாரன்ட், பள்ளிக்கரணை


ள்ளிக்கரணை நூறடி ரோடு அருகில் காமாட்சி மருத்துவமனை to - பல்லாவரம் செல்லும் வழியில் - நல்லதொரு ஹோட்டல் இல்லை என்ற குறையை போக்கியுள்ளது இந்த சூப்பர் ராயல் ரெஸ்டாரன்ட்.

வந்து ஒரு வருடம் ஆகிறது. முதலில் காலை வேலை டிபன் மட்டும் போட்டு வந்தனர் பின் இரவு டிபனும் சேர்த்தனர் நான்கைந்து மாதமாக மதிய சாப்பாடும் துவக்கி விட்டனர்.




தமிழ் சினிமா போல 4 நண்பர்கள் சேர்ந்து நடத்தும் கடை இது. நால்வருமே வெவ்வேறு பணியில் இருப்பவர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித டியூட்டி நேரம். ஒருவர் பகல் நேர வேலை; இன்னொருவர் யூ. கே ஷிப்ட், மற்றவர்க்கு இரவு பணி. தங்கள் வேலை நேரம் போக மாறி மாறி கடையில் இருந்து கவனிக்கிறார்கள். சனி ஞாயிறில் சில நேரம் மட்டும் கடை நடத்தும் நண்பர்களை இங்கு ஒன்றாக பார்க்க முடியும்

சேலம் அருகிலுள்ள ஆத்தூரை சேர்ந்த இவர்கள் - தங்கள் ஊர் சுவையில் உணவு வழங்குவது தான் சிறப்பு. குக், வேலைக்கான ஆட்கள் எல்லாமே அங்கிருந்து தருவித்ததால் இது சாத்தியமாகிறது

காலை நேரத்தில் வழக்கமான இட்லி, தோசை வகைகள், பூரி, பொங்கல். சப்பாத்தி போன்றவை கிடைக்கும். மதியம் சாப்பாடும் உண்டு. பிரியாணியும் உண்டு. இவர்களின் உணவுகளில் மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுவதும், நிறைய மூவ் ஆவதும் பரோட்டா, சப்பாத்தி மற்றும் ரவா தோசை.

ஆனால் நான் விரும்பி செல்வது இரவு உணவுக்கு தான். குறிப்பாக இவர்களின் கொத்து பரோட்டா, முட்டை வீச்சு பரோட்டா மற்றும் கலக்கி ஆகியவை நான் விரும்பி சாப்பிடுபவை.



ஓபன் கிட்சன் என்பதால் அவர்கள் உங்களுக்கு உணவு தயாரிப்பதை நீங்கள் பார்க்க முடியும். கொத்து பரோட்டாவிற்கு - பரோட்டாவை நன்கு பிய்த்து போட்டு, நிறைய, நிறைய வெங்காயம் போட்டு, ஒரு முட்டையை உடைத்து ஊற்றி அவர்கள் தயார் செய்யும் லாவகம் எப்போதும் கவரும். குறிப்பாக பரோட்டவை எல்லோரும் தோசை கரண்டியால் கொத்துவார்கள். ஆனால் இங்கு அவர்கள் 2 டம்ளர் வைத்து கொண்டு , அதை திருப்பி பிடித்து கொத்துவார்கள்.

வெங்காயம் அதிகம் போட்டு, முட்டையும் கலந்து சுட சுட தயார் ஆகும் கொத்து பரோட்டா தான் அட்டகாசமாக இருக்கும் (விலை : 50)

முட்டை வீச்சு பரோட்டா - பெயருக்கேற்றபடி முட்டை போட்டு தயார் ஆகும் பரோட்டா. ஓரத்தில் முட்டையின் மஞ்சள் கரு தெரிய மெத்து மெத்தென்று தயார் ஆகி வரும். வெரி டேஸ்ட்டி !

இவர்களின் சைவ குருமா அந்த அளவு நன்றாக இல்லை என்பது தான் ஒரு குறை. சிக்கன் க்ரேவி காசு கொடுத்து வாங்கினால் தான் காம்பினேஷன் சரியே வொர்க் அவுட் ஆகும்.

இட்லி 5 ரூபாய்; பரோட்டா - 10 ரூபாய்; முட்டை வீச்சு - 20; ஆம்லெட் வகைகள் - 10; கொத்து பரோட்டா - 50 ரூ என இருக்கும் இவர்கள் விலை பட்டியல் நம் பர்சை பதம் பார்க்காத வண்ணம் இருக்கிறது. கூடவே இவர்களின் ஆத்தூர் சுவையும் சேர்ந்து கொள்ள கடையில் கூட்டம் அதிகமாகி கொண்டே போவதை தொடர்ந்து கவனிக்க முடிகிறது.

***********
பின்குறிப்பு :

அண்மையில் காலமான பதிவர் பட்டாப்பட்டி அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக அவரது ஏழாம் நாள் காரியம் நடக்கும் நாளை (சனிக்கிழமை) பதிவுகள் வெளியிடவேண்டாம் என பதிவர் நண்பர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பிற நண்பர்களுக்கும் இந்த வேண்டுகோளை பகிர்கிறோம்.

பட்டாப்பட்டி அவர்களுக்கு அஞ்சலி; அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் !

Saturday, May 11, 2013

உணவகம் அறிமுகம் : White pepper ரெஸ்டாரன்ட், வேளச்சேரி

வேளச்சேரி - விஜய நகர் பேருந்து நிலையத்திலிருந்து குரு நானக் மற்றும் பீனிக்ஸ் மால் செல்லும் சாலையில் உள்ளது இந்த உணவகம்.

சைனீஸ், இந்தியன், தந்தூரி வகைகள் என்ற அறிவிப்பு பலகை பார்த்து விட்டு சற்று தயக்கத்தோடு தான் உள்ளே நுழைந்தோம். ஆனால் எங்களை முழுவதும் திருப்தி படுத்தி விட்டது இங்குள்ள உணவுகள்..




ஞாயிறு மாலை என்பதால் நல்ல கூட்டம். உள்ளே நுழையும் போது அதிர்ஷ்டவசமாக இடம் கிடைத்து விட்டது. எங்களுக்கு பின்னாலேயே வந்த இரு குழுக்கள் சற்று காத்திருக்க வேண்டியதாயிற்று.

அகலம் அதிகமில்லாத குறுகலான கடை. ஆனால் வால் போல் நீளமாக இருக்கிறது. 15 குழுக்களாவது அமர்ந்து சாப்பிட மேசைகள் உள்ளன

நாங்கள் ஆர்டர் செய்தது :

மஷ்ரூம் சூப்
சிக்கன் டிக்கா ரோல்
பட்டர் நான்
தந்தூரி பரோட்டா
கடாய் பன்னீர்
பிரைட் ரைஸ்...

உணவை ஆர்டர் செய்து விட்டு காத்திருக்கும் போது அங்கு சாப்பிடும் மக்களை கவனிக்கிறேன். நண்பர்களோடு வந்து சாப்பிடும் ஐ. டி இளைஞர் கூட்டம், குடும்பத்தோடு வந்துள்ள மக்கள், மெல்லமாய் பேசியவாறு தேவைக்கதிகமாக சிரிக்கும் காதலர்கள்.. என எல்லா வித மக்களையும் இந்த
ரெஸ்டாரன்ட் கவர்ந்துள்ளது தெரிந்தது.

சூப்புக்கு சைட் டிஷ் போல பீட்ரூட்டை நீளமாக நறுக்கி மூன்று பீஸ் வைத்திருந்தனர். கூடவே ஒரு முழு மிளகாய் வேறு ! எப்படி மிளகாயை அப்படியே கடிக்க முடியும் என தயக்கம் இருந்தாலும் அது குடை மிளகாய் போல அதிக காரம் இன்றி சூப் உடன் சேர்ந்து கடித்து சாப்பிட நன்றாகவே இருந்தது

சிக்கன் டிக்கா ரோல் - இங்கு தான் முதன் முதலில் சாப்பிட்டு பார்த்தோம். பிஸ்சா போல ஒரு சமாச்சாரமாக தான் அது தெரிந்தது. பிஸ்சா மாதிரி ஒரு வஸ்து உருண்டையாக ஒரு ரோல் போல இருக்க, அதனுள்ளே சிக்கன் ஸ்டப் செய்திருந்தனர். நல்ல டேஸ்ட்.

பட்டர் நான் & காடாய் பன்னீர் - செம சுவையாக இருந்தது.

இங்குள்ள அனைத்து உணவுகளிலும் குறிப்பிட்டு சொல்லும் வித்தியாசம் ஒன்று உண்டு - அவர்கள் சாப்பாட்டில் பலவற்றை முழுசாய் போட்டு விடுகிறார்கள். கடாய் பன்னீரில் காஞ்ச மிளகாய் முழுசாய் (காம்புடன்) கிடக்கிறது. போலவே தனியா கூட அரைத்து தூளாக போடாமல் முழுசாய் போட்டுள்ளனர் !

எப்பவும் போல அனைத்து உணவையும் ஆளுக்கு கொஞ்சம் என ஷேர் செய்து சாப்பிட்டு முடித்தோம்.

பின் கடைசியாய் எங்கள் பெண் பலூடா ஆர்டர் செய்தாள். அவளுக்கு மட்டும் ஒரே ஒரு பலூடா ஆர்டர் செய்தோம்.


வந்த பின் கொஞ்சம் சாப்பிட்டு பார்க்க ஹவுஸ் பாஸ் தனக்கும் வாங்கி தந்தால் தான் ஹோட்டலை விட்டு வருவேன் ; இல்லா விட்டால் வர மாட்டேன் என்று அடம் பிடிக்க, அவரை அங்கேயே விட்டு செல்ல நல்ல வழி அது தான் என்றாலும், அதை சொல்ல மனமின்றி இன்னொரு பலூடா ஆர்டர் செய்தேன்.

"அடடா பலூடான்னா இது தான் பலூடா ! பேஷ் ! பேஷ் ! ரொம்ப நல்லாருக்கு !" என காசு செலவான கவலையை மறந்து நான் சொல்ல

" ஆமாங்க இனிமே இந்த வழியா போனா, இங்கே வந்து வெறும் பலூடா மட்டுமாவது சாப்பிட்டுட்டு போகணும் " என்றார் ஹவுஸ் பாஸ் !

அவர் சொன்னா அப்பீல் ஏது?

**********
மேலதிக தகவல்கள்: 

White pepper ரெஸ்டாரன்ட்
100 Feet Byepass Road
வேளச்சேரி

வீடுதிரும்பல் பரிந்துரை : ஒரு முறை நிச்சயம் செல்லலாம் !

Friday, April 26, 2013

உணவகம் அறிமுகம் - புதுகை தலப்பாகட்டி பிரியாணி

கீழ்கட்டளை பெட்ரோல் பேங்க் அருகில் உள்ளது புதுகை தலப்பாகட்டி பிரியாணி கடை. தலப்பாகட்டி பெயரை பலரும் வைத்து கொண்டாலும், நிஜ திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி போல வராது என்பது உண்மை தான்.

ஆனால் இங்கு சாப்பிட்ட பிரியாணி பெரிதும் கவர்ந்ததால் அவசியம் இந்த கடையை அறிமுகம் செய்ய நினைக்கிறேன்.

மதியமும் இரவும் மட்டும் தான் கடை உண்டு. மதிய வேளைகளில் பிரியாணி மட்டுமே கிடைக்கும். (பரோட்டா, தோசை உள்ளிட்டவை இரவில் மட்டுமே )

பிரியாணி விலை :

மட்டன் பிரியாணி - 1/2 - ரூ. 120
சிக்கன் பிரியாணி - 1/2 - ரூ. 80

சிக்கன் குஸ்கா - ரூ. 60
மட்டன் குஸ்கா - ரூ. 80

அதென்ன சிக்கன் குஸ்கா மற்றும் மட்டன் குஸ்கா ? குஸ்கா என்பது ஒன்று தானே என்றால், மட்டன் பிரியாணியில் பீஸ் இல்லாமல் தருவது மட்டன் குஸ்கா - அது சற்று விலை அதிகம்; சிக்கன் பிரியாணியில் இருந்து தரும் குஸ்கா 60 ரூபாய் தான் என்று விளக்கம் தருகிறார்கள்

இருந்தாலும் சிக்கன் பிரியாணி விலையும், மட்டன் குஸ்கா விளையும் ஒன்றாய் இருப்பது சற்று உறுத்த தான் செய்கிறது



சரி பிரியாணிக்கு வருவோம்.

வீட்டம்மா மற்றும் பெண் சிக்கன் பிரியாணி சூடு என்று சாப்பிடவே மாட்டார்கள். மட்டன் பிரியாணி அல்லது குஸ்கா தான் !

எனக்கோ மட்டன் பிரியாணி அதிகம் பிடிக்காது. மட்டன் பீஸ்கள் பல நேரம் சக்கை மாதிரி இருக்கும் என்பது என் அனுபவம்.

ஆனால் இங்கு மட்டன் பிரியாணி அட்டகாசமாய் இருந்தது. குறிப்பாய் பீஸ் ஒவ்வொன்றும் நன்றாக வெந்து, அல்வா மாதிரி சுவையாய் ரசித்து சாப்பிட முடிந்தது.

மசாலா மற்றும் காரம் சற்று அதிகம் என்றாலும் எப்பவோ ஒரு முறை காரம் சாப்பிடுவது ஓகே (சாப்பிட முடியாத அளவு அதிக காரம் இல்லை), பிரியாணிக்கு சைட் டிஷ் ஆன கத்திரிக்காய் கொத்சும் அருமை.

இந்த பிரியாணி சுவை புதுகை பக்கத்து ஸ்பெஷலா என்று தெரியவில்லை. புதுகை நண்பர்கள் டேஸ்ட் செய்து சொன்னால் தான் உண்டு .

மேலதிக தகவல்கள்

கடை பெயர்: புதுகை தலப்பாக்கட்டு பிரியாணி கடை

முகவரி: கீழ்கட்டளை HP பெட்ரோல் பேங்க் அருகில் (மேடவாக்கம்- பல்லாவரம் நாற்சந்தி அருகே)

நேரம்: மதியம் 12 முதல் இரவு 10 வரை

Friday, April 5, 2013

உணவகம் அறிமுகம் : அம்மா உணவகம்

ன்னுடன் அலுவலகத்தில் பணிபுரிந்த நண்பர் அனந்து முக நூலில் நான் உணவகம் அறிமுகம் லின்க் தரும்போதெல்லாம் " அம்மா உணவகம் சென்று விட்டு எழுதுங்கள்" என்று கேட்ட வண்ணம் இருந்தார். அவரின் விருப்பத்திற்கிணங்க இதோ அம்மா உணவகம்...

உணவக வாசலில் போர்டு 
காலை நேரம் கிண்டி BSNL - அலுவலகத்தில் ஒரு வேலை விஷயமாக சென்று கொண்டிருக்க, ஆலந்தூரில் இந்த அம்மா உணவகம் கண்ணில் பட்டது. BSNL அலுவலகம் திறக்க நேரமாகும்; உள்ளே போய் பார்க்கலாம் என்று நுழைந்தேன்.

நல்ல விஸ்தாரமான பெரிய இடம். சமையல் அறை , ஸ்டோர் ரூம், சாப்பாட்டு அறை என தெளிவாக போர்டு மாட்டி வைத்துள்ளனர்.

சாப்பாட்டுக்கு டோக்கன் வாங்க பெரிய கியூ நிற்கிறது. உள்ளே எட்டி பார்த்தால் சாப்பாடு வாங்க இன்னோர் பெரிய கியூ. டோக்கன் வாங்கும் கியூவில் நானும் இணைந்தேன். ஒரு இட்லிக்கு ஒரு சீட்டு என நீங்கள் நாலு இட்லி சாப்பிட்டால் நாலு சீட்டு தனித்தனியே தருகிறார்கள். (காகிதம் தான் வீணாகிறது. ஒரே காகிதத்தில் நான்கு இட்லிக்கும் எழுதி தரலாம். ஒரு பக்கம் மரங்களை அழிக்க கூடாது என்று சொல்லி விட்டு, இவ்வளவு காகிதம் அழிக்கணுமா என்றும் கேள்வி எழுகிறது)



வீட்டில் சாப்புடற மாதிரி யாரும் 3 இட்லி, நாலு இட்லி சாப்பிடுவதில்லை. பலரும் 6, 8 அல்லது 10 இட்லி வாங்கி கொண்டிருந்தார்கள். நான் ஏற்கனவே காலை சாப்பிட்டு விட்டதால் 2 இட்லி மட்டும் கேட்க, நம்மை " 2 இட்லியா ?" என ஒரு மாதிரி பார்த்தவாறு டோக்கன் தந்தனர்

அடுத்து இட்லி வாங்கும் கியூ . " செயின்ட் தாமஸ் மவுண்டில் இருந்து இங்கு வர்றேன். அந்த பக்கமும் ஒரு கடை போட்டா நல்லாருக்கும். சீக்கிரம் போட்டுருவாங்கன்னு நினைக்கிறேன் " என்று சொல்லியபடி இருந்தார் நமக்கு பின்னால் இருந்தவர்

ஒரு பக்கம் இட்லி வாங்கும் கியூ என்றால், நடு நடுவே இட்லி தட்டை கொண்டு வந்து நீட்டி எக்ஸ்ட்ரா சாம்பார் வாங்கி செல்வோருக்கும் தாரளமாக சாம்பார் ஊற்றுகிறார்கள்.

நமக்கான 2 இட்லியை வாங்கும் போது " சட்னி ஏதும் கிடையாதா? சாம்பார் மட்டும் தானா? "என்று கேட்க வார்த்தையில் மிக தன்மையாக " ஆமாங்க சாம்பார் மட்டும் தான் " என்கிறார் உணவு தரும் பெண்மணி. தட்டை எடுத்து கொண்டு சாப்பிடும் இடத்திற்கு வருகிறேன். நிறையவே டேபிள், சேர்கள் போடப்பட்டிருந்தாலும் அவையெல்லாம் ஹவுஸ் புல். ஓரமாய் நின்று கொண்டு சாப்பிடும் மக்களுடன் இணைந்தேன்

இட்லியும் சாம்பாரும் எந்த குறையும் சொல்ல முடியாத படி அருமையாய் இருந்தது. அவ்வப்போது சாப்பிட்ட தட்டை எடுத்தபடியும், தண்ணீர் ஊற்றியபடியும் இருக்கிறார்கள் பெண்கள்.

அங்கிருக்கும் ஒருவரிடம் பேசியபோது " இப்பல்லாம் தினம் 2 வேளையும் இங்கே தான் சார் சாப்பாடு. மதியம் சாம்பார் சாதம் வந்து சாப்பிட்டு பாருங்க. செம சூப்பரா இருக்கும் " என்றார்.

சுட சுட இட்லி, திக்கான சாம்பார், அருமையான குடிநீர், குறைவான விலை என அம்மா உணவகம் அடிச்சு தூள் கிளப்புது.....

இந்த அரசு செய்யும் அரிதான நல்ல காரியங்களில் ஒன்று இந்த அம்மா உணவகம்....

நிற்க இந்த பதிவிற்கு இரண்டாம் பாகமும் உண்டு.. மதிய சாப்பாடு பற்றி என்று நினைக்கிறீர்களா? நிச்சயம் இல்லை.. ! என்ன என யோசித்தவாறு இருங்கள்.. சில நாட்களில் பகிர்கிறேன் !
Related Posts Plugin for WordPress, Blogger...