Showing posts with label திண்ணை. Show all posts
Showing posts with label திண்ணை. Show all posts

Tuesday, September 27, 2016

நடிகர் நாகேஷ் பிறந்த நாள் சிறப்பு பதிவு

இன்று செப்டம்பர் 27..நாகேஷ் அவர்களின் பிறந்த நாள்  ! 
நான் நாகேஷ் : புத்தக விமர்சனம் 


சிரித்து வாழ வேண்டும் என்ற தலைப்பில் கல்கியில் வெளியான தொடர் " நான் நாகேஷ்" என்ற தலைப்பில் புத்தகமாக வந்துள்ளது. நாகேஷ் பேசுவது போலவே அமைந்த இந்த புத்தகத்தை எழுதியவர் எஸ். சந்திர மவுலி.

நாகேஷ் எனக்கு மட்டுமல்ல பலருக்கும் பிடித்தமான ஒரு நடிகர். பொதுவாய் அதிகம் பேட்டி தராத. தன் திரை உலக வாழ்க்கை பற்றி பேசாத இவர் வாழ்க்கை குறித்து புத்தகம் என்பது ஆச்சரியமான விஷயம் தான். புத்தகம் 250 பக்கங்கள் இருந்தாலும் மிக லைட் ரீடிங் என்பதால் விறுவிறுவென்று படித்து விட முடிகிறது. அதிகம் அலட்டி கொள்ளாமல் முதல் நாள் பாதியும், மறு நாள் மீதியுமாய் படித்து விடலாம்.

புத்தகத்தில் அவர் பகிர்ந்துள்ள சில சுவாரஸ்யமான விஷயங்கள் இங்கு.:

நாகேஷ் சிறு வயதில் மிக அழகாய் இருப்பாராம். வெள்ளையாக சற்று பூசியவாறு இருக்கும் நாகேஸ்வர ராவ் (அது தான் இயற் பெயர்) பள்ளி இறுதியில் படிக்கும் போது அம்மை போட்டிருக்கிறது. மீண்டும் மீண்டும் அம்மை மூன்று முறை வந்ததில் உருக்குலைந்து போயிருக்கிறார். கண்ணாடியில் தன் உருவத்தை பார்த்து கதறி அழுதிருக்கிறார். இளைத்து போய், முகமெல்லாம் அம்மை தழும்பாக, மிக விரக்தி அடைந்திருக்கிறார். இதிலிருந்து மீண்டு வர ரொம்ப நாள் பிடித்திருக்கிறது. பரீட்சை எழுத முடியாமல் போய், படிப்பு பாதியிலேயே நின்று விட்டது.

பின் அப்பா பேச்சில் கோபித்துக்கொண்டு, ஒரு நாள் அம்மாவிடம் மட்டும் சொல்லி விட்டு வீட்டை விட்டு வெளியிருக்கிறார். அப்போது அம்மா சொன்ன வார்த்தைகள் வாழ் நாள் முழுதும் மறக்க வில்லை என்கிறார்

அந்த வரிகள் "வெளி உலகத்துக்கு போய் விட்டால் நீ நிறைய பேரை சந்திக்க வேண்டும். அவர்கள் தம் வார்த்தைகளால் உன்னை கோப படுத்தலாம். உனக்கு கோபம் வந்து விட்டால் அவர்கள் வென்று விட்டதாக அர்த்தம் "

வீட்டை விட்டு வெளியேறிய நாகேஷ் பல வித வேலைகள் பார்த்திருக்கிறார். சப் ரிஜிஸ்தார் அலுவலகத்தின் வெளியே அமர்ந்து மனு எழுதி தருவது, ரேடியோ கடையில் விற்பனை பிரதிநிதி இப்படி பல வேலைகள் பார்த்து விட்டு ரயில்வேயில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அங்கிருக்கும் போது நாடகங்களில் நடிக்க துவங்கி பின் சினிமா உலகிற்குள் நுழைந்திருக்கிறார்.

முதன் முதலாக இவர் நடித்த நாடகத்தில் வயிற்று வலி ஆசாமியாக டயலாக் ஏதும் இன்றி நடித்து அசத்தியிருக்கிறார். நாடகம் பார்க்க வந்த எம். ஜி. ஆர் இவரை பாராட்டி வெள்ளி கோப்பை பரசளித்தாராம். அதனை ரொம்ப பெருமையாக வைத்திருந்தாலும், ஒரு முறை இவருடன் தங்கியிருந்த அறை நண்பர் தனது அவசரத்திற்கு எடுத்து விற்று விட்டாராம். அதன் பின் எந்த படத்தில் வாங்கிய விருதும் தன்னை பெரிதும் கவர வில்லை, தன் வீட்டு வரவேற்பறையில் அவற்றை வைப்பதில்லை என்று கூறுகிறார்.

திரையில் நாம் பார்க்கும் நாகேஷ் போலவே நிஜ வாழ்க்கையிலும் மிக குறும்பு காரராய் இருந்திருக்கிறார். உதாரணமாய் ரயில்வேயில் இருந்த போது தன் மேலதிகாரியிடம் சொல்ல முடியாத காரணத்திற்காக லீவு வேண்டும் என்று எழுதி கேட்டுள்ளார். "அது என்ன சொல்ல முடியாத காரணம்; லீவு கிடையாது" என்று கூறப்பட, மறு நாள் அலுவலகம் வந்து விட்டு தனது உடைகளை ஸ்நூகர் விளையாடும் அறையில் கழற்றி வைத்து விட்டு பனியன், அண்டர்வேர் சகிதம் தன் சீட்டில் சென்று அமர்ந்துள்ளார். மேலதிகாரி அங்கு வர, இது தான் தன் பிரச்சனை, உடை இல்லாததால் தான் லீவு கேட்டேன் என்று கூறியுள்ளார். அவர் லீவு தந்ததும் ஸ்நூகர் விளையாடும் அறைக்கு சென்று தனது உடைகளை அணிந்து கொண்டு மகிழ்ச்சியாக ஸ்நூகர் ஆடி கொண்டிருந்திருக்கிறார். அதிகாரி அங்கு வந்து அவரை பிடித்து அவரது மேலதிகாரியிடம் கூட்டி செல்ல, அவரிடம் என்ன பேசி தப்பினார் என்பதை நான் சொல்வதை விட புத்தகத்தில் நீங்கள் படித்தால் நன்றாயிருக்கும்.

பல சுவாரஸ்ய சம்பவங்கள் சொல்லி கொண்டே போகிறார். உதாரணத்திற்கு சில:

தி.நகரில் கிளப் ஹவுஸ் எனும் இடத்தில இருந்த போது உடன் இருந்த நடிகர் ஸ்ரீ காந்த் நல்ல வேலை பார்க்க, தான் உள்ளிட்ட பலரும் அவர் சட்டை பையிலிருந்து பணம் எடுத்து செலவு செய்தது.

நடிகர் பாலாஜி அவர் மீது காட்டிய பாசம். அவர் வீட்டுக்கே கூட்டி சென்று தங்க வைத்து ராஜ உபசாரம் செய்தது

மேஜர் சுந்தர்ர்ராஜன் பல முறை தன் வீட்டுக்கு கூட்டி சென்று அருமையான சமையல் செய்து அசத்தியது ("சினிமா இல்லாட்டி நீ சமையல் செய்து பிழைச்சுப்பே.நான் என்ன பண்றது?" என்பாராம் நாகேஷ்)

அந்த காலத்தில் நடிகர்கள் ஷெவாலே கார் வைத்திருப்பதை பெருமையாக நினைப்பார்களாம். இதை கிண்டலடிக்க எம். ஆர். ராதா தனது ஷெவாலே காரில் பின் புறம் முழுதும் வைக்கோல் போரை போட்டு வண்டி ஓட்டி செல்ல, நடிகர்கள் எல்லாம் தலையில் அடித்து கொண்டனராம்.

திருவிளையாடல் தருமி காட்சி பெரும்பாலும் தானாகவே பேசி நடித்தது என்கிறார். சிவாஜிக்கு மேக் அப் செய்ய தாமதமாக, அந்த நேரத்தில் இவர் மட்டும் தனியாக " அவன் வர மாட்டான் நம்பாதே" என டயலாக் பேசி சூட் செய்தது. டப்பிங் முன் படம் பார்த்த சிவாஜி “நாகேஷ் காட்சி கொஞ்சம் கூட கட் செய்ய கூடாது” என்று இயக்குனரிடம் சொன்னது. அந்த படத்தின் நூறாவது நாள் விழாவிற்கு தனக்கு அழைப்பே வராதது (அது தான் திரை உலகம்)

காதலிக்க நேரமில்லை படத்தில் நாம் அனைவரும் ரசித்த, நாகேஷ் பாலையாவிடம் கதை சொல்லும் காட்சி. இது அந்த கால இயக்குனர் தாதா மிராசி என்பவரை பார்த்து செய்ததாம். அவர் கதை சொல்லும் போது இப்படி தான் சத்தங்களை எல்லாம் சேர்த்து கதை சொல்லுவாராம். அத்துடன் இயக்குனர் ஸ்ரீதர் "கதை இருக்கிற மாதிரி இருக்கணும், ஆனா இருக்க கூடாது " என்று சொல்ல, அதை வைத்து உருவானது தான் அந்த சீன் என்று நினைவு கூர்கிறார்.

தான் மிக பிரபலமாக இருந்த நாட்களில் ஒரே நாளில் இரண்டு படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள பயன்படுத்திய டெக்னிக்குகளை மனம் திறந்து சொல்லியுள்ளார். அவற்றில் ஒன்று செட்டில் உள்ள எலக்ட்ரிசியனிடம் பணம் தந்து கரண்ட் கட் செய்து விடுவது; அந்த நேரத்தில் போய் அடுத்த படப்பிடிப்பில் கலந்து கொள்வது. மேலும் இப்படி ஒரே நேரம் இரண்டு படப்பிடிப்பில் கலந்து கொள்ள பல வித வழிகளை கையாண்டுள்ளார்.

அன்னை இல்லம் என்ற படத்தில் நடித்த போது சாஸ்திரி என்ற சென்சார் அதிகாரி அவரை நேரில் அழைத்து " இப்போ வர்ற படங்களில் தொண்ணூறு சதவீதம் நீ இருக்கே. நல்லா நடிக்கிறே ஆனா இந்த படத்தில் ஏன் திக்குவாய் காரனா காமெடி செஞ்சே? அது நல்லா இல்லை. திக்குவாய் காரர்களுக்கு மனம் வருத்தப்படும் இல்லையா? இனி இப்படி உடல் ஊனத்தை வைத்து காமெடி செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்; அப்போது தான் அன்னை இல்லம் படத்தை கிளியர் செய்வேன்" என நாகேஷிடம் சத்தியம் வாங்கினாராம்.

எழுத்தாளர் ஜெயகாந்தன் உடன் மிக நெருக்கம். ஜெயகாந்தன் எவ்வளவு வித்யாசமான நபர் என்பதற்கு ஒரு உதாரணம். ஒரு முறை காரில் சென்ற போது ரயில்வே கேட் போடப்பட்டிருக்க, "சும்மா காரில் உட்கார்ந்து என்ன செய்வது; வா ! ரயில்வே கேட் எடுக்கும் வரை பிச்சை எடுக்கலாம்" என சட்டை, வேட்டியை கழட்டி விட்டு கேட் அருகே உட்கார்ந்து பிச்சை எடுத்தனராம். அதிலும் ஜெயகாந்தனுக்கு தான் அதிகம் சில்லறை கிடைத்தது என்கிறார் குறும்புடன்.

***
இப்படி எத்தனையோ சுவாரஸ்ய சம்பவங்கள் .. கடைசி சில பகுதிகளில் கமல் பற்றி ஒரு அத்தியாயம், பின் அடுத்தது ரஜினி பற்றி என சம்பிரதாயமாக செல்வது தான் சற்று அலுப்பூட்டுகிறது.

நாகேஷை மட்டுமல்ல, சிவாஜி, எம். ஜி. ஆர் படங்களை பார்த்த மக்கள் நிச்சயம் ரசிக்க கூடிய புத்தகம் இது. நாகேஷ் திரை உலக வாழ்க்கையை மட்டுமல்லாது, அந்த கால கட்ட சினிமா உலகையும் அறிய முடிகிறது

**திண்ணை செப்டம்பர் 17-தேதியிட்ட இதழில் பிரசுரமான விமர்சனம்

நூலின் பெயர்:  : " நான் நாகேஷ் ":
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
ஆசிரியர்: எஸ். சந்திர மவுலி
விலை: ரூ. 175

Sunday, September 30, 2012

Who moved my cheese - சுய முன்னேற்ற புத்தக விமர்சனம்

Who moved my Cheese- மிக சிறிய ஆனால் செறிவான புத்தகம்.

கதை வடிவில் சுய முன்னேற்ற கருத்துகள்  சொல்லும் இந்நூலை  எழுதியவர் ஸ்பென்சர் ஜான்சன்.

கல்லூரி படிப்பை முடித்து சில வருடங்கள் கழித்து சில நண்பர்கள் சந்திக்கிறார்கள். யார் யார் எந்த நிலையில் உள்ளனர் என்று பேசி கொள்கின்றனர். இதை சொல்லி விட்டு நேரே ஒரு கதைக்குள் நுழைகிறார் ஆசிரியர்.

நான்கு குட்டி எலிகள் ஒரு இடத்தில் உள்ள Cheese-ஐ மகிழ்வுடன் உண்டு வருகின்றன. இவை நான்கின் குணாதிசயமும் விரிவாய் சொல்லப்படுகிறது. எலிகளுக்கு என்று வெவ்வேறு பெயர்கள் சொல்கிறார்கள். இந்த பெயர்கள் அந்நியமாய் இருப்பதால் நாம்  A, B, C & D என்று எடுத்து கொள்வோம். இதில் A மற்றும் B சற்று புத்திசாலி மற்றும் சுறுப்பான எலிகள். C மற்றும் D சற்று சோம்பேறி எலிகள்.

C மற்றும் D எப்போதும் சீஸ் கிடைக்கும் என உறுதியாய் நம்புகின்றன. ஆனால் A -யும் B-யும் சீஸ் ஸ்டேஷனில் என்ன நடக்கிறது என உற்று கவனிக்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாய் சீஸ் ஸ்டேஷனில், சீஸ் கிடைப்பது குறைகிறது. இதனால் A , B அந்த சீஸ் ஸ்டேஷனை விட்டு வேறு சீஸ் ஸ்டேஷன் தேடி அலைந்து, சற்று சிரமத்துக்கு பின் ஒரு நல்ல சீஸ் ஸ்டேஷன் சென்று சேர்ந்து விடுகின்றன.

C -யும் D -யும் எந்த கவலையும் இன்றி இருக்கும் சீஸ் சாப்பிட்டு வருகின்றன. அங்கு சீஸ் கொஞ்சம் கொஞ்சமாய் காலி ஆனது பற்றி கூட அவர்களுக்கு மிக தாமதமாய் தான் தெரிகிறது. ஒரு நேரத்தில் சுத்தமாய் சீஸ் தீர்ந்து விடுகிறது. அதன் பின்னும் C & D அந்த இடத்துக்கு தினம் வந்து பார்த்து செல்கின்றன.

ஒரு நிலையில் இங்கு சீஸ் கிடைக்காது என D இங்கிருந்து வேறு இடம் தேடி போகலாம் என்கிறது. ஆனால் C " நமக்கு வயதாகி விட்டது. இனி வேறு இடம் தேடி போக முடியாது. நாம் என்ன தப்பு செய்தோம்? நமக்கு கொஞ்ச நாளில் இங்கேயே சீஸ் கிடைக்கும்" என்கிறது.

வேறு வழியின்றி C ஐ விட்டு விட்டு D அங்கிருந்து வேறு இடம் தேடி செல்கிறது. மிக சிரமத்க்கு பின் நல்ல சீஸ் ஸ்டேஷன் ஒன்றை பார்க்கிறது. அங்கு தான் அதன் பழைய நண்பர்கள் A மற்றும் B உள்ளனர். கொஞ்ச நாளில் C யும் கூட இந்த சீஸ் ஸ்டேஷனை தேடி வர கூடும் என்று D நினைப்பதுடன் குட்டி கதை முடிகிறது.

பின் நண்பர்கள் இந்த கதை குறித்து பேசி கொள்கிறார்கள். இந்த கதையில்,  தான் எந்த பாத்திரத்தை ஒத்து போகிறேன்; கதையில் சொன்னது போன்ற சம்பவம் தனக்கு என்ன நடந்தது, தான் அப்போது எப்படி நடந்து கொண்டேன் என பேசுகிறார்கள். மிக சுவாரஸ்யமான இந்த உரையாடலுடன் கதை நிறைவடைகிறது

கதை சொல்கிற முக்கிய விஷயம் : உங்கள் சுற்றி நடப்பதை எப்போதும் கூர்ந்து கவனியுங்கள் ! மாறுதலுக்கு தயாராகுங்கள் .. என்பதே.

கதையை படிக்கும் அவரவருக்கும் அவரவர் அப்போது சந்திக்கும் பிரச்சனைக்கான தீர்வு எதோ ஒரு இடத்தில் கிட்ட வாய்ப்புகள் அதிகம்.

நான் ஒவ்வொரு முறை படிக்கும் போதும் அப்போதைய பிரச்னையை மனதின் பின்புலத்தில் வைத்து கொண்டு படிப்பேன். நிறைய புது விஷயமும் தீர்வும் கிடைக்கும்.

**********
புத்தகத்தில் சொல்லப்பட்ட சில அழகிய வரிகள் இதோ உங்கள் பார்வைக்கு (ஆங்கிலத்தில் படித்த நூலின் தமிழாக்கம் தருகிறேன். அது சரியாக இருக்குமோ இல்லையோ என்கிற எண்ணத்தில் அதன் ஆங்கில மூலமும் சேர்த்து தருகிறேன். பொறுத்தருள்க !):

##  நீங்கள் மாறா விடில், அழிந்து தான் போவீர்கள் (If you do not change, you can become extinct).

*** சில நேரம் வாழ்க்கையில் சில விஷயங்கள் மாறி விடும். பின் அவை முன்பு போல் இருக்கவே இருக்காது. வாழ்க்கை இப்படி தான் இருக்கும் ! நகர்ந்து சென்று கொண்டே இருக்கும் வாழ்க்கை ! அதனுடன் சேர்ந்து நாமும் நகரத்தான் வேண்டும் ! (Sometimes things change and they are never the same again. That's life ! Life moves on ! And so should we !)

## உங்கள் சுற்றி நடப்பதை எப்போதும் கவனித்தபடியே இருங்கள். அப்போது தான் பிரச்னை ஆரம்பிக்கும் போதே நீங்கள் சீக்கிரம் உணர முடியும்

*** சிறு மாறுதல்களை சீக்கிரம் உணர்வது பெரிய மாற்றங்களுக்கு உங்களை தயார் படுத்தி விடும் ( Noticing small changes early helps you adapt to the Bigger changes that are to come)

## மாறுதல்களை சந்தோஷமாக அனுபவியுங்கள். புது அனுபவம் மற்றும் சவால்களுக்கு தயங்காதீர்கள் ( Enjoy the change ! Savor the Adventure and Enjoy the taste of New cheese!)

*****
நான் இதுவரை படித்தவற்றில் ஒரு மிக சிறந்த புத்தகம் என்றும், ஒவ்வொரு மனிதரும் தவற விடாமல் படிக்க வேண்டிய புத்தகம் என்றும் நிச்சயம் பரிந்துரைப்பேன் !

புத்தகம் இணையத்திலேயே PDF மற்றும் PPT வடிவில் இலவசமாக கிடைக்கிறது.தேடிப் பார்த்து அவசியம் வாசியுங்கள் இந்த அரிய புத்தகத்தை !
*****
திண்ணை ஆகஸ்ட் 13, 2012  இதழில் வெளியானது 

Monday, September 10, 2012

சுஜாதாவின் மத்யமர்

சுஜாதாவின் மத்யமர் - எனக்கு தனிப்பட்ட முறையில் ரொம்பவே ஸ்பெஷல் புத்தகம் ! என்ன ஸ்பெஷல் என்று பிறகு சொல்கிறேன். முதலில் மத்யமர்.

முன்னுரையில் சுஜாதா மத்யமர் என்கிற வர்க்கம் பற்றி இப்படி சொல்கிறார்:

" இவர்கள் இங்கேயும் இல்லாமல், அங்கேயும் செல்ல முடியாமல் அல்லாடுபவர்கள். ஏறக்குறைய நல்லவர்கள், பெரும்பாலும் கோழைகள் " என மிடில் கிளாஸ் மக்களை வர்ணிக்கிறார் சுஜாதா. மொத்தம் 12 கதைகள் இந்த தொகுப்பில் ! சில கதைகள் மட்டும் இங்கு பார்ப்போம்

தர்ட்டி பை பார்ட்டி

பெங்களூரில் இருக்கும் நஞ்சுண்ட ராவ் ஒரு காலி நிலம் வாங்க அல்லாடுகிறார். ஒரு வழியாய் அவருக்கு ஒரு நிலம் கிடைக்கிறது. வக்கீலிடம் கேட்டு விட்டு பணம் தந்து நிலத்தை பதிவு செய்கிறார். அப்புறம் தான் தெரிகிறது. அவருக்கு காட்டிய நிலம் வேறு. பதிவு செய்து தந்த நிலம் வேறு என்று. அவருக்கு கிடைத்த நிலம் சரியான பாறை உள்ள இடம் அங்கு வீடு கட்ட, நிலம் வாங்கிய அளவுக்கு மேல் செலவு செய்தால் தான் தரை மட்டமாக்க முடியும். ஏமாந்து போன நஞ்சுண்ட ராவ் தனக்கு நிலம் விற்றவனை தேடி போக, அவர் ஊருக்கு போனதாக தகவல் கிடைக்கிறது. சில நாட்கள் பித்து பிடித்த மாதிரி அலைகிறார். தனக்கு நிலம் விற்றவனை என்ன செய்கிறேன் பார் என்று சொல்லியபடி இருக்கிறார். ஒரு நாள் கடப்பாரை எடுத்து கொண்டு காணாமல் போக, மனைவி அவர் நிலம் விற்றவனை கொல்ல சென்று விட்டார் என அழுது புலம்புகிறாள்.

ஆனால் கடைசி பாராவில் திரும்பும் நஞ்சுண்ட ராவ் " நம்ம நிலத்துக்கு தான் போனேன். உடைச்சு பார்த்தேன். பாறை பேர்ந்து வருது. நீயும் வா. ரெண்டு பேரும் சேர்ந்து பாறை முழுக்க உடைசிடலாம்" என்கிறார் !

மிடில் கிளாஸ் மக்கள் என்பவர்களின் பல வித வலியை இந்த சின்ன கதையில் சொல்லி போகிறார் சுஜாதா ! இக்கதையின் பின்னால் உள்ள விமர்சன கடிதங்கள் இன்னும் பல பரிணாமத்தை காட்டுகிறது.

ஒருவர் "நிலம் வாங்கும் போதே மனைவி தடுத்தார் பாருங்க பெண்கள் எப்பவும் புத்தி சாலி தான் " என்கிறார். இன்னொருவர் "அவரை ஏமாற்றுபவனும் மத்யமனே; ஆக வில்லனும் மத்யமர் தான் " என்கிறார்.

அறிவுரை

லஞ்சம் வாங்காத ராமலிங்கம் என்கிற அரசு ஊழியர் பற்றி பேசுகிறது. அவர் மனைவியோ கூட வேலை செய்யும் நபரை காட்டி " அவர் உங்களுக்கு சமான பதவி தான். ஆனால் கார் வைத்துள்ளார்; எப்படி?" என கேட்கிறார் " அவன் லஞ்சம் வாங்குறான்மா" என்கிறார் கணவர். " நீங்களும் வாங்குங்க; ஊரே வாங்குது " என்கிறார் மனைவி.

ராமலிங்கத்தின் தந்தையும் ஒரு அரசு ஊழியர். லஞ்சம் வாங்காத அவர், மகனையும் அப்படியே வளர்த்துள்ளார். இம்முறை ராமலிங்கத்துக்கு ஒரு நல்ல பணம் கிடைக்க வாய்ப்பு. அவருக்கும் பணத்தேவை உள்ளது. சரி சேலத்தில் இருக்கும் அப்பாவை சந்தித்து பேசுவோம் என்று செல்கிறார். அவரிடம் இது பற்றி பேச, அப்பா சொல்லும் அறிவுரை அவரை மட்டுமல்ல நம்மையும் திடுக்கிட வைக்கிறது.

இந்த கதை கல்கியில் வெளியான போது கதை குறித்த எனது விமர்சன கடிதம் வெளியானது. பின் நான் சுஜாதாவிற்கு கடிதம் எழுத, அவர் தன் கைப்பட பதில் எழுதினர். மறக்க முடியாத நினைவுகள் ! (புத்தகம் ஸ்பெஷல் என்றது இதற்காகத்தான் !)

சாட்சி 

சரளா என்ற பெண் தெருவில் நடக்கும் ஒரு கொலையை நேரில் பார்த்து விடுகிறார். போலிஸ் வந்து இவரை விசாரிக்கும் என அவள் மாமனார், மாமியார் அனைவரும் கொலையை பார்த்ததை சொல்லி விடாதே; கோர்ட் போலிஸ் ஸ்டேஷன் என அலையணும் என்று சொல்ல, இறுதியில் அவள் சொன்னாளா என்பதை சுஜாதா ஸ்டைலில் சொல்கிறார்

நீலப்புடவை ரோஜாப்பூ 

 இந்த தொகுப்பில் மிக வித்யாசமான கதை. கணவன்- மனைவிக்கு இடையே சரியான உறவில்லை. இதனால் கணவன் வெளியே ஒரு பெண்ணை நாடுகிறான். பேனா நட்பில் ஒரு பெண் தெரிய வருகிறாள். இருவரும் கடிதத்தில் நிறைய பேசுகிறார்கள். இறுதியில்.. இறுதியில்... ஆம் நீங்கள் ஊகித்தது சரி தான்.. அது அவன் மனைவி தான் !

மகளின் சினிமா வாய்ப்புக்காக சோரம் போகும் ஒரு அம்மா - திருமணம் ஆகாமல் கர்பமாகும் மகளை பிரசவம் முடியும் வரை எங்கோ கொண்டு சென்று டெலிவரி பார்க்கும் இன்னொரு தாய் இப்படி சர்ச்சையை கிளப்பிய கதைகளும் உண்டு. இதை விட அதிக சர்ச்சை கிளப்பிய கதை இட ஒதுக்கீட்டை எதிர்த்து எழுதப்பட்ட கதை. உயர் சமூகத்தை சார்ந்த, புத்தி சாலி ஏழைக்கு வேலை கிடைக்காமல், அதே வேலை இட ஒதுக்கீட்டால் சராசரி அறிவுள்ள வசதியான ஒரு பெண்ணுக்கு கிடைப்பதாக ஒரு கதை. இதன் விமர்சனத்தில் பாராட்டை விட கண்டன கணைகள் அதிகம் காண முடிகிறது.

முடிவுரையில் சுஜாதா விமர்சன கடிதங்கள் பற்றி " விமர்சனம் எழுதியவர்கள் நிறைய யோசிக்கிறார்கள். இவ்வளவு சாத்தியக்கூறு எழுதும் போது நான் யோசிப்பதில்லை" என்கிறார். கதைகளில் பலரும் பிராமணர்களாக இருப்பது ஏன் என பலரும் கேட்டதாகவும், தனக்கு பரிச்சயமுள்ள மொழி என்பதால் அதை தேர்ந்தெடுத்ததாகவும், ஆனால் இதே பிரச்சனைகள் எந்த சமூகத்துக்கும் வரலாம் என்கிறார்

மொத்தத்தில் :

சிறுகதைகள -  சுஜாதாவுக்கு மிக பிடித்த கிரவுண்ட்- பிச்சு உதறி இருக்கார். வாய்ப்பு கிடைத்தால் அவசியம் வாசியுங்கள் !

நூல் பெயர்: மத்யமர்
வெளியீடு: விசா பப்ளிகேஷன்ஸ்
பக்கங்கள்: 164
விலை : Rs. 65

திண்ணை ஆகஸ்ட் 5,2012 இதழில் வெளியானது
***
டிஸ்கி  ப்ளாகர் இதனை 501 -ஆவது பதிவு என்கிறது. சும்மா ஞாபகத்துக்கு இத்தகவல் பதிந்து வைக்கிறேன் !

Monday, September 3, 2012

சுஜாதாவின் நிலாநிழல் விமர்சனம்


னக்கு மிக மிக பிடித்த சுஜாதா நாவல்களில் ஒன்று...நிலாநிழல் !  இருபது வருடத்துக்கு முன் வாசித்து இந்த நாவல். தின மணி கதிரில் தொடராய்  வந்த நினைவு. எங்கள் ஊர் நூலகத்திற்கு வாரா வாரம் தவறாமல் இந்த கதை வாசிக்கவே சென்று விடுவேன்.

கதையின் நாயகன் வயது தான் இக்கதையை வாசிக்கும் போது எனக்கும் (19 அல்லது 20 ). மேலும் அவனை போல கிரிக்கெட் வெறி அந்த வயதில் இருந்தது. இதுவே கூட புத்தகம் மீது ஈர்ப்பை தந்தது எனலாம். ஆனால் அதையும் தாண்டி கிரிக்கெட் ஆட்டங்களை ஒரு நாவலில் இவ்வளவு சுவாரஸ்யமாய் யாரும் தந்ததே இல்லை. அது தான் இந்த நாவல் இன்று வரை பலராலும் நினைவு கூறப்பட காரணம் !

கதையின் முதல் வரியும் பாராவும் இன்னும் கூட எனக்கு அப்படியே நினைவு இருக்கிறது

அதிகாலை முகுந்தன் கனவு கண்டான். இன்னும் ஒரு ஓவர் இருக்கிறது. 18 ரன் அடிக்க வேண்டும். இம்ரான் கான் பந்து வீச வருகிறார். " அதெப்படி ஸ்ரீரங்கம் மேட்சில் இம்ரான்கான் பந்து வீசலாம்?" என முகுந்தன் கேட்க, "கடைசி ஓவர் யார் வேணும்னா போடலாம்னு இப்போ ரூல் வந்திடுச்சு என்கிறார்கள். முதல் மூன்று பந்து முகுந்தால் தொட முடியலை. மூணு பந்து. 18 ரன். நான்காவது மற்றும் ஐந்தாவது பந்தை முகுந்த் சிக்சர் அடிக்கிறான். ஆறாவது பந்தை வீச இம்ரான் ஓடிவரும்போது வேலைக்காரியால் தூக்கத்தில் இருந்து எழுப்ப படுகிறான் முகுந்தன்.

முதல் வரியிலே கனவு என்று சொல்லப்பட்ட போதும், அந்த கடைசி பந்து முடியாமல் கனவு கலைந்ததே என நாமும் வருந்துகிறோம். இங்கு துவங்கிறது முகுந்துடன் சேர்ந்த நம் பயணம்.

பதின்ம வயது பையனுக்கு இருக்கும் அதே ஆர்வங்கள், பிரச்சனைகள் முகுந்தனுக்கும் உண்டு. அவன் கிரிக்கெட், கிரிக்கெட் என சுற்றுகிறானே என திட்டுகிறார் அப்பா. (எந்த அப்பாவுக்கு தான் மகன் கிரிக்கெட் பார்ப்பது பிடித்திருக்கிறது?) அப்பாவை ஏமாற்றி விட்டு மாநில அளவில் கிரிக்கெட் ஆட பம்பாய் பயணமாகிறான் முகுந்த். துவக்கத்தில் டீம் பாலிடிக்சால் அணியில் இடம் கிடைக்கா விட்டாலும், ஒரு முறை substitute ஆக இறங்கி பீல்டிங்கில் கலக்குகிறான். பின் தொடர்ந்து ஆட ஆரம்பிக்கிறான். அதன் பின் அவனது ஆட்டம் அசத்துகிறது. தனது ஆட்டத்தால் அந்த டோர்னமெண்டை கலக்கி விட்டு ஸ்ரீரங்கம் வருகிறான் முகுந்த். அப்பாவுக்கு இவன் ஏமாற்றி விட்டு பம்பாய் போனது தெரிந்து விடுகிறது. அவர் என்ன செய்தார், முகுந்த் இறுதியில் என்ன முடிவெடுக்கிறான் என்பதே கதையின் இறுதி பகுதி!

சுஜாதா இந்த புத்தகத்திற்கு எழுதிய முன்னுரையின் ஒரு பகுதி :

"உன்னிப்பாகப் படித்தால், இந்தக் கதையின் மையக் கருத்து கிரிக்கெட் அல்ல என்பது தெரியும். நாம் எல்லோருமே வாழ்வில் பட்டென்று ஒரு கணத்தில் அறியாமை என்பது முடிந்து போய் ஒருவித அதிர்ச்சியுடன் பெரியவர்கள் உலகுக்குள் உதிர்க்கப்படுகிறோம். அந்தக் கணம் எப்போது வரும் என்பது சொல்ல இயலாது. இந்தக் கதையில் முகுந்தனின் அந்தக் கணம் என்ன என்பதை வாசகர்கள் யோசித்துப் பார்க்கலாம். அதைச் சிலர் தரிசனம் என்பார்கள், நிதரிசனம் என்பர், ஒரு விதமான அனுபவம் என்பர். ஏதாயினும் நான் முன்பு சொன்ன ‘இழப்பு‘ எப்படியும் இருந்தே தீரும். உங்கள் வாழ்க்கையையே யோசித்துப் பாருங்கள்.

எப்பொழுது நீங்கள் அறியாமையை இழந்தீர்கள், எப்போது நிஜமெனும் பூதத்தைச் சந்து மூலையில் சந்தித்தீர்கள், எப்போது கவிதைகளும், சினிமாப் பாடல்களும் அர்த்தமற்றுப் போய் போஸ்டல் ஆர்டரும், ஜெராக்ஸ் பிரதிகளும் முக்கியமாய்ப் போயின ? எப்போது உறவுகள் கொச்சைப்படுத்தப்பட்டு, வியர்வை வீச்சமும், பொதுக் கழிப்பிடங்களையும் ஒப்புக் கொள்ளத் துவங்கினீர்கள் ? எப்போது பொய், துரோகம், அன்பிழப்பு, பிறர் வாய்ப்பைப் பறித்தல் போன்ற அத்தியாவசியப் பாவங்களில் ஒன்றை முதலில் செய்தீர்கள் ?

அப்போதுதான் அந்த இழப்பு ஏற்பட்டது.
***
முகுந்தனுக்கு லவ் இண்டரெஸ்ட் ஆக லல்லி என ஒரு சொந்த கார பெண்ணும் உண்டு ! டீன் ஏஜில் வரும் காதல், மற்றும் தடுமாற்றம் இந்த பாத்திரம் ஊடாக வெளிப்படும்.

முதலிலேயே சொன்ன மாதிரி இந்த அளவு கிரிக்கெட் மேட்சை விரிவாய் சொன்ன நாவல் இதுவரை கிடையாது. மேட்சில் முகுந்தின் ஒரு ஓவரை சுஜாதாவின் வரிகளில் படியுங்கள்

புது பாட்ஸ்மன் கார்டு வாங்கிக்கொண்டு இங்குமங்கும் பார்த்துவிட்டு முகுந்தன் போட்ட நான்காவது பந்தை லெக் சைடில் ஹீக் பண்ண எண்ணிக் கோட்டை விட ஸெட்ரிக் ஓரத்தில் டைவ் அடித்து பை போகாமல் பிடித்தான். முகுந்த் நம்பிக்கையில்லாமல் ஸ்டெப் எடுத்து கர்ச்சீப்பை அடையாளம் வைத்து ஓடிவந்து கொஞ்சம் பேஸை அடக்கிப் போட்டுப்பார்த்தான். உடனே லெங்த் கிடைத்து முதல் பந்து அரைக்கால் இன்ச்சில் ஆப் ஸ்டம்பை தொடாமல் விட்டது. இரண்டாவது ஷார்ட் பிட்சாகிவிட் அதை உடனே அந்த பாட்ஸ்மேன் விளிம்புக்கு வெளியே அனுப்பிவிட்டான். அடுத்தது லெக் அண்ட் மிடிலில் பிட்சி ஆகி வில்லாக வளைந்து மட்டை விளிம்பைச் சந்தேகத்துக்கு இடமின்றித் தொட்டுவிட்டு முதல் ஸ்லிப்பில் ஷாவின் பத்திரமான கைகளுக்குப் போய்ச் சேர்ந்தது.
***
அப்பப்பா ! நம்மை அந்த கிரவுண்டுக்கே அழைத்து போய் விடுகிறார் ! என்னா டீட்டைளிங் !

கிரிக்கெட் பற்றி மட்டுமல்ல, மும்பையின் பரபர வாழ்க்கை, அங்குள்ள பயணம் எல்லாமே இந்த நாவலில் மிக அழகாய் சொல்லப்பட்டிருக்கும் !

தலைவரின் மிக சிறந்த நாவல்களில் ஒன்றான இந்த புத்தகத்தை அவசியம் வாசியுங்கள்...குறிப்பாய் கிரிக்கெட் மீது ஈடுபாடு கொண்டோருக்கு இந்த நாவல் மிக இனிக்கும் !

***
திண்ணை ஆகஸ்ட் 19, 2012 இதழில் வெளியான கட்டுரை   

Saturday, August 4, 2012

பதிவர் துளசி கோபாலின் செல்ல செல்வங்கள்..

ன் செல்ல செல்வங்கள் - பதிவர் துளசி கோபால் அவர்களின் புத்தகம்.

எழுதுவதற்கு விஷயங்கள் எத்தனை எத்தனை உள்ளன ! தான் வளர்த்த செல்ல பிராணிகள் குறித்து ஒரு தொகுப்பு எழுத வேண்டும் என்று நினைத்த அந்த எண்ணத்துக்கு முதல் வணக்கம் !

சிறு வயதில் வளர்த்த மணி வாத்து நீரில் மூழ்கி இறந்ததில் துவங்குகிறது பயணம். கிட்ட தட்ட 19 வளர்ப்பு பிராணிகள். நாய்கள், புறாக்கள், பூனைகள் என..

ஒரு உண்மையை சொல்லி விடுகிறேன். எனக்கு புத்தகத்தில் முதல் பகுதி தான் வெகுவாக பிடித்தது. காரணம் நாய்கள் குறித்த பகுதி முதல் பாதிக்குள் முடிந்து விடுகிறது. இரண்டாம் பகுதி முழுதும் பூனை தான் ராஜ்ஜியம் செய்கிறது ! துளசி மேடம் கூட ஒரு இடத்தில் "எனக்கும் மிக பிடித்த பிராணி நாய் தான்" என்கிறார். அவை மிக அறிவு மிக்கவை. நாம் சொல்வதை அப்படியே புரிந்து கொள்ளும். அன்பை காட்டுவதிலும் அவற்றை மிஞ்சவே முடியாது.

ஒவ்வொரு செல்லம் துளசி மேடமிடம் வரும் கதை சுவாரஸ்யம். ஒன்று கூட எங்கிருந்தும் வாங்காமல், தானாகவே அவர்கள் வீட்டு வாசலுக்கோ அல்லது பூனை என்றால் வீட்டுக்குள்ளோ வந்து விடுகின்றன. துளசி மேடமின் கணவர் கோபால் கேரக்டர் மிக சுவாரஸ்யமாக விரிகிறது. "ஏன் இதையெல்லாம் வளர்க்கிறே? இனிமே ஒண்ணும் உள்ளே வர கூடாது" என்று ஒரு பக்கம் சொன்னாலும், பின் தானும் அவற்றுக்கான வேலைகள் செய்வதை சிரிக்க சிரிக்க சொல்கிறார்.

புத்தகம் முழுதும் அவர் நம் அருகில் அமர்ந்து பேசும் பாணியில் தான் எழுதப்பட்டிருக்கு. முழுக்க முழுக்க பேச்சு தமிழ் தான். இதுவே வித்தியாசமாகவும் சுவாரஸ்யமாகவும் உள்ளது

ஒவ்வொரு செல்லமாக இறப்பது வாசிக்கும் நமக்கே கஷ்டமாக உள்ளது எனில் வளர்த்தவர்களுக்கு எப்படி இருக்கும் ? அதிலும் ஒரு பூனைக்கு ஹெச். ஐ. வி வந்து அதன் பின்னும் வளர்த்து இனி பிழைக்காது என்கிற நாள் வரை வைத்து பார்த்தது நெகிழ்வு.

இவை எங்களின் செல்லங்கள் !

செல்ல பிராணிகள் பற்றிய தொகுப்பு எனினும் அது துளசி - கோபால் என்கிற இரு மனிதர்களின் வாழ்க்கை பயணத்தை ஒரு பக்கம் சொல்லி செல்கிறது. அவர்களுக்கு குழந்தை பிறக்க பல வருடங்கள் ஆனது, அப்போது செல்லங்களே துணையாய் இருந்தது, பின் மகள் பிறந்தது, ஒவ்வொரு ஊராக மாறியது என வாழ்க்கை விரிகிறது

முதன் முதலில் இந்தியாவில் டிவி வந்த காலத்தில் தெருவில் யாரோ ஒருவர் வீட்டில் மட்டுமே டிவி இருக்கும். அவர் வீட்டுக்கு போய் தான் மற்றவர்கள் பார்ப்போம். அப்படி மற்றொரு வீட்டில் ஒரு விம்பிள்டன் பைனல் இரவு முழுதும் பார்த்த கதை- பின் தாங்களே டிவி வாங்கிய பின் தெரு முழுதும் இவர்கள் வீடு வந்து டிவி பார்த்தது என சுவையான பிளாஷ்பேக்.


துளசி மேடமை சும்மா சொல்ல கூடாது எல்லாருக்கும் பட்ட பெயர் வைத்து விடுகிறார். வீட்டின் அருகில் இருப்போருக்கும் சரி செல்லங்களுக்கும் சரி நிறைய பட்ட பெயர்கள். அநேகமாய் பதிவர்களுக்கும் வைத்தாலும் வைத்திருப்பார் :))

தனக்கு ஒரு ஆப்பரேஷன் ஆகி இரண்டு வாரம் தன் செல்ல நாய் ச்சிண்டுவை பிரிந்து இருந்ததும், அப்போது அவரை பார்க்க முடியாமல் அது கஷ்டப்படதையும் பின் வீட்டுக்கு வந்த பின், அவரை விட்டு ச்சிண்டு எங்கும் போகாமல் அருகிலேயே அமர்ந்து கொண்டதும் சொல்லும் இடம் நெகிழ்வு

இவர்கள் தான் எத்தனை முறை வீடு மாறியிருக்கிறார்கள்? "வீடு மாறும் அனுபவம் எங்களுக்கு பிக்னிக் போற மாதிரி" என வீடு மாற எப்படி தயார் ஆவது என அசால்ட்டாக சொல்கிறார். செம காமெடியாய் உள்ளது.

நிறைவாக: இந்த புத்தகம் ஒரே மூச்சில் படிக்க கூடிய புத்தகம் அல்ல. சில அத்தியாயங்கள் படித்து முடித்ததும் செல்லம் ஒன்று மரித்து விட, நமக்கும் மனது கனத்து போகிறது. இதனால் ஒரு நாளைக்கு சில அத்தியாயங்கள் மட்டுமே வாசிக்க வேண்டும் என்பது என் பரிந்துரை.


செல்ல பிராணிகள் வளர்ப்போர் - மிக ரசிக்கவும், வளர்க்காதோர், அவை வளர்ப்பதில் உள்ள சிரமங்களை அறியவும் உதவும் இந்த புத்தகம் ! துளசி மேடமுக்கு வாழ்த்துகளும், வணக்கமும் !

*********
புத்தகம்: என் செல்ல செல்வங்கள் 
பதிப்பகம்:சந்தியா பதிப்பகம்  
விலை: 80
பக்கங்கள்: 152
*********

ஜூலை 22, 2012 தேதியிட்ட திண்ணை இதழில் வெளியானது

*********
நண்பர்களே, மக்கள் டிவியின் " நான் படித்த புத்தகம்" பகுதிக்கு மீண்டும் சில புத்தகங்கள் குறித்து பேசி உள்ளேன். வீட்டுக்கே வந்து இம்முறை ரிக்கார்டிங் செய்தனர். ஆறு புத்தகங்களுக்கான விமர்சனம், ஒவ்வொன்றாய் வருகிற  திங்கள் கிழமை   முதல் தொடர்ந்து ஒளி பரப்பாகும். அதில் முதல் புத்தக விமர்சனமாய் ஒளிபரப்பாக உள்ளது செல்ல செல்வங்கள் தான் ! வரும் திங்கள் முதல் காலை 8.45-க்கு இயலுமானால் பாருங்கள் !

Tuesday, May 8, 2012

சுஜாதாவின் வஸந்த் வஸந்த் - விமர்சனம்


சுஜாதா எழுதி எண்பதுகளின் துவக்கத்தில் கல்கி வார இதழில் வந்த நாவல் வஸந்த் வஸந்த். வெளி வந்த போதே வாசித்துள்ளேன். ஒவ்வொரு அத்தியாயம் முடியும் போதும் சுஜாதா வைக்கும் சஸ்பென்ஸ் செமையாக இருக்கும் ! உயிர்மை பதிப்பு நூலாக பல ஆண்டுகளுக்கு பிறகு இதனை இப்போது மீண்டும் வாசித்தேன். இத்தனை ஆண்டுகளுக்கு பின்னும் முதலில் வாசித்த போது கிடைத்த அதே உணர்வுகள் ..! வாத்தியார் வாத்தியார் தான் !

2005-ல் எழுதிய முன்னுரையில் சுஜாதா இப்படி சொல்கிறார்:

"வஸந்த் முதலில் கதையில் தோன்றி முப்பது ஆண்டுகள் ஆகிறது. இருவருக்கும் இன்னும் கல்யாணம் ஆக வில்லை. வஸந்த் பெண்களை பார்த்தால் சற்று அசடு வழிவதோடு சரி (நாம் எல்லோருமே தானே!) "

அட ! சுஜாதாவே பெண்களை பார்த்தால் வழிவாரா என்கிற ஆச்சரியத்துடன் வாங்க கதைக்குள் போவோம்..!

கதை 

னியா என்கிற பெண்ணை காதலிக்கிறான் வஸந்த். இனியாவின் தந்தை ஒரு வரலாற்று பேராசிரியர். அவர் எழுதிய ஒரு ஆராய்ச்சி கட்டுரையை கடத்தி போகிறது ஒரு கூட்டம். அந்த கட்டுரை வேண்டும் என அவர் சொன்னதால் அதை தேடி போகின்றனர் வஸந்தும் கணேஷும்.



அந்த கட்டுரையில் ராஜராஜன் கிணறு பற்றி எழுத பட்டுள்ளது என அறிந்து அந்த கிணறு இருக்கும் உக்கல் என்கிற கிராமத்துக்கு செல்கின்றனர் கணேஷ் & வஸந்த். அங்கு வினோதமான பல அனுபவங்கள் கிட்டுகின்றன. கிணற்றில் புதையல் உண்டா, தங்க காசுகள் உண்டா என்கிற கேள்வி எல்லாம் தாண்டி, அந்த கிணற்றின் நீருக்காக தான் அவ்வளவு போராட்டம் என்பது தெரிகிறது. அப்படி என்ன அந்த நீரில் விசேஷம், அதை வைத்து என்ன செய்கிறார்கள் வில்லன்கள் என்பது கதையின் இறுதியில் தெரிகிறது.

நாவலின் இறுதியில் இனியா அமெரிக்க மாப்பிள்ளையை மணக்க சம்மதிக்க, வஸந்த் அடுத்த காதலுக்கு தயார் ஆகிறார் !

கிணறு குறித்த அந்த சஸ்பென்ஸ் செமையாக உள்ளது. அது என்ன என அறியும் ஆவலிலேயே பக்கங்கள் பறக்கின்றன. அது தெரியும் போது நமக்கே வியப்பாக தான் உள்ளது

வஸந்த் ஸ்டைல் குறும்புகள் சில :

"என்னமா எழுதிருக்கார் மகாகவி பாரதி. தலைப்பாவை விலக்கி தலையை தடவி கொடுக்கணும் போல இருக்கு பாஸ் "

" என் பேரு ரங்காச்சாரி. சமீபத்தில் தமிழ் நாட்டில் ஜாதி பேர் கூடாதுன்னதால் ரங்கா. வீட்டில் கூப்பிடுறது '...ங்கா' "

ஆங்காங்கு சுய எள்ளலும் உண்டு " வர வர சுஜாதா கதை நிறைய படிக்க ஆரம்பிசிட்டீயா நீ? ". இன்னொரு இடத்தில் " வேண்டாம் அந்த வார்த்தை சொல்லாதே தொடர் கதையை பாதியில் நிறுத்திடுவாங்க"

நூலகம், மருத்துவமனை என தான் போகும் இடமெல்லாம் பெண்களிடம் கடலை போடுவதும், தன் நகைச்சுவை பேச்சால் பெண்களை கவர்வதும் என வஸந்த் எப்போதும் போல் வசீகரிக்கிறார்.

அரிதாக இந்த கதையில் வஸந்துக்கு கல்யாணம் என்றும், பிறிதோர் இடத்தில வஸந்த் துப்பாக்கியால் சுடப்பட்டு இறக்க போவதாகவும் சொல்கிறார். இரண்டுமே நடக்க வில்லை. (வஸந்த் இறக்க போகிற மாதிரி ஒரு வாரம் முடித்த போது " வஸந்தை கொன்று விடாதீர்கள்" என பலரும் தந்தி அடித்ததாக சுஜாதா சொன்னது.. நீங்களும் அறிந்திருக்கலாம்)

சோடியம் ஹைட்ராக்சைட் , சோடியம் மானோ சல்பேட் என அறிவியலுக்குள் சென்று விளக்கும் போதும், எளிமையாக சுவாரஸ்யமாக சொல்வதில் தான் சுஜாதா நிற்கிறார்.

26 அத்தியாயங்கள் கொண்ட இக்கதையை இரண்டரை மணி நேரத்தில் படித்து முடித்தேன். செம விறுவிறுப்பு !

கணேஷ் -வஸந்த்தின் துப்பறியும் நாவலை சுஜாதாவின் வழக்கமான பாணியில் வாசிக்க விரும்பினால் அவசியம் வாசியுங்கள் !
************
நூல்: வஸந்த் வஸந்த்
ஆசிரியர்: சுஜாதா 
வெளியீடு : உயிர்மை பதிப்பகம் 
பக்கங்கள்: 176
விலை: ரூ. 100
நன்றி : பதிவர் ரகு 
************
திண்ணை ஏப்ரல் 22 , 2012 இதழில் வெளியானது 

Monday, March 26, 2012

இறையன்பு எழுதிய "ஓடும் நதியின் ஓசை"

இறையன்பு அவர்களின் பேச்சை நேரிலோ டிவியிலோ பார்த்திருக்கிறீர்களா? அருவி போல் தங்கு தடையின்றி அழகிய தமிழில் பேசுவார். அதே போல் தான் உள்ளது அவர் எழுத்தும். நல்ல பேச்சாளர் நல்ல எழுத்தாளர் ஆகவும் உள்ளதை காணும் போது ஆச்சரியமாக உள்ளது.


இறையன்பு எழுதிய "ஓடும் நதியின் ஓசை" கட்டுரை தொகுப்பை சமீபத்தில் வாசிக்க முடிந்தது. துவக்கத்திலேயே இவ்வாறு சொல்கிறார் எழுத்தாளர்:

"சுய முன்னேற்றத்தில் எனக்கு உடன்பாடு இல்லை ஜடா முனிவரை போல் அமர்ந்து அறிவுரை கூறவும் எனக்கு ஆசை இல்லை. நான் பகிர்ந்து கொள்ள விரும்புபவை என் அனுபவங்களை"

ஆயினும் புத்தகம் நிச்சயம் நம்மை குறித்து நிறையவே சிந்திக்க வைக்கிறது. 

சின்ன சின்ன விஷயங்களை உடனுக்குடன் செய்து முடித்தால் நம் முன்னேற்றம் இன்னும் துரிதமாகும் என்பதை தன் அனுபவம் கொண்டே சொல்கிறார். 

நடைபயிற்சி குறித்த பகுதியில் ஜே. கிருஷ்ணமூர்த்தி யாருடனும் சேர்ந்து நடப்பதை விரும்பவே மாட்டாராம். உடன் வருபவர் இயற்கையை உற்று நோக்குவதை, ரசிப்பதை தடை செய்து விடுவார் என்பதே காரணமாம் என்று சுவாரஸ்ய தகவல் கூறுகிறார். 

எதிர்காலம் பற்றி சொல்லும் போது " கணினி எல்லாம் நிறைந்திருக்கும்.... காற்று  மட்டும் குறைந்திருக்கும்" என அவர் சொல்லும் போது நம்மால் பெருமூச்சு விடாமல் இருக்க முடிய வில்லை. 

படிப்பு மட்டுமே வாழ்வல்ல என்பதற்கு இவர் கூறும் நண்பரின் வாழ்க்கை மாணவர்களை நிச்சயம் சிந்திக்க வைக்கும். எப்போதும் பாடத்தில் முதல் வகுப்பெடுக்கும், சினிமா கூட பார்க்காத, கதை புத்தகம் வாசிக்காத நண்பன் பின்னாளில் வாழ்க்கையில் சற்று குழம்பி, யாருடனும் படிப்பு தவிர வேறு எந்த விஷயமும் பேச முடியாமல் நின்ற நிலையை பகிரும் போது சற்று அதிர்ச்சியாக தான் உள்ளது. 

ஒவ்வொரு மனிதனும் அங்கீகாரம் தேடவே செய்கிறான். அது கிடைக்கா விடில், என்னை யாரும் அங்கீகரிக்க வில்லை என மனதுக்குள்ளோ, வெளியிலோ புலம்புகிறான். இது பற்றி விரிவாய் பேசும் இறை அன்பு, "நாம் யாரை அங்கீகரித்துள்ளோம் ..பிறர் நம்மை அங்கீகரிக்க?" என கேள்வி எழுப்புகிறார். பின் இவ்வாறு நெத்தியடியாக சொல்கிறார். " உண்மையான அங்கீகாரம் என்பது நமக்கு நாமே கொடுத்து கொள்கின்ற அங்கீகாரம் மட்டும் தான்" 

"நிகழ் காலத்தில் வாழுங்கள்"  என்பது குறித்த அத்தியாயத்தில் அவர் மேற்கோள் காட்டும் "நொடிக்கு நொடி வாழுங்கள்" என்கிற ஜென் தத்துவ வரிகள் அருமை ! 

எந்த வித மனச்சிக்கலும் இல்லாத நபரை சந்தித்தால் என்ன செய்வீர்கள் என ஒரு மன நல மருத்துவரை கேட்டார்கள். " அப்படி யாரேனும் ஒரு நபர் இருந்தால் அவரை நாங்கள் நிச்சயம் குணப்படுத்திவிடுவோம்"  என்கிற வரிகளை வாசித்தவுடன் சிரிப்பு வந்தாலும், அது நமக்கு பெரும் ஆறுதல் தரும் வரிகளாக இருப்பது நிஜம்! இந்த வரிகளில் உள்ள உண்மை புரிந்தால், நமக்கு அன்றாடம் வரும் மன குழப்பங்களுக்கு இனி பெரிதாக வருந்த மாட்டோம் !

உழைப்பு, முயற்சி, பொறுமை குறித்த கீழ் காணும் வரிகள் அற்புதம் !

ஒரு விதை ஜெயிப்பதற்கு மரம் எவ்வளவு முறை பூக்க வேண்டியிருக்கிறது? எத்தனை முறை காய்களை சுமக்க வேண்டியிருக்கிறது? 

திருப்பதியில் சுவாமியை தரிசிக்கும் நேரம் சில நொடி. ஆனால் அதற்கு சென்று வருகிற கால அளவு எவ்வளவு மணி நேரம்? 

தேர்வு எழுதுவது மூன்று மணி நேரம்.ஆனால் அதற்கு படிப்பு எத்தனை மாதங்கள்? சில தேர்வுக்கு எத்தனை வருடங்கள் !

நாம் வெகு சாதாரணமாக ஒரு சில நொடிகளில் கடக்கிற பாலம் எத்தனை வருடங்கள் எத்தனை பேரின் உழைப்பில் உருவாகிறது? 

உலகத்தில் மிக சிறந்த கண்டுபிடிப்புகளை தந்தவர்கள் எல்லாரும் ஞாபக திறனில் அதிக கவனம் செலுத்தாதவர்களாக இருந்தார்கள். ஐன்ஸ்டீனில்இருந்து எடிசன் வரை, ஆர்க்கிமிடசில் இருந்து ராமானுஜர் வரை ஞாபக சக்திக்கு முக்கிய துவம் தரவில்லை. தந்திருந்தால் அவர்களும் சராசரி மனிதர்களாக இருந்திருப்பார்கள் சரித்திர புருஷர்கள் ஆகியிருக்க மாட்டார்கள் என சொல்லி "அட!" போட வைக்கிறார்.

இறுதியாக புத்தகத்தில் சொன்ன ஒரு வரிகள் சொல்லியே இந்த விமர்சனத்தை நிறைவு செய்கிறேன். " நாம் ரசித்து செய்யா விட்டால் ரொட்டி கூட புளித்து போகும் -கலீல் கிப்ரான்" !

இறையன்பு அவர்கள் ரசித்து செய்த இந்த புத்தகம் அவசியம் நாம் , ஜப்பானியர்கள் தேநீர் அருந்துவது போல் நிதானமாய் ரசித்து வாசிக்க வேண்டிய புத்தகம் !

நூலின் பெயர்:  : " ஓடும் நதியின் ஓசை"
வெளியீடு நியூ சென்ச்சுரி புக் ஹவுஸ், சென்னை  
ஆசிரியர்: இறை அன்பு 
விலை: ரூ. 60
**********
திண்ணை மார்ச் 25,2012  இதழில் வெளியான கட்டுரை 

Monday, March 19, 2012

கலைஞரை எதிர்த்து கண்ணதாசன் எழுதிய வனவாசம்-விமர்சனம்

வனவாசம் - வானதி பதிப்பகம் மூலம் 37 பதிப்புகள் வெளியாகி, பின் 2010 முதல் கண்ணதாசன் பதிப்பகத்தால் தொடர்ந்து வெளியிடப்படும் புத்தகம் !சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் கண்ணதாசன் தி.மு.க மீது ஈர்க்கப்பட்டதில் துவங்கி, அந்த கட்சியில் அவர் இருந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை அலசி, பின் அவர் கட்சியிலிருந்து வெளிவருவதுடன் முடிகிறது. இதனாலேயே தி.மு.க எதிர்ப்பு நிலைப்பாடு கொண்டோருக்கு பிடித்தமான புத்தகமாக அமைந்து விடுகிறது. கலைஞர் அபிமானிகள் இப்புத்தகத்தை அதிகம் நேசிக்க மாட்டார்கள்!

துவக்கத்தில் கண்ணதாசனுக்கு மிக வேண்டியவரான இராம. கண்ணப்பன் கண்ணதாசனின் இளமை காலம் குறித்து எழுதி உள்ளார். கண்ணதாசனின் தந்தை எந்த வேலைக்கும் போகாமல் சீட்டு ஆடக்கூடியவர். இதனால் குடும்பம் மிக வறுமையில் வாடியிருக்கிறது. ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்த கண்ணதாசன் ஊரை விட்டு வெளியேறி வெளி இடங்களில் வேலை தேடியுள்ளார். முதலில் திருச்சி பின் சென்னை என பல இடங்களில் சிறு சிறு வேலைகள். போராட்டங்கள். பல்வேறு பத்திரிக்கைகளில் வேலை பார்த்து பின் ஒரு பத்திரிக்கை ஆசிரியர் ஆகவும் மாறி உள்ளார். பின் தி.மு.க மீது ஈர்க்கப்பட்டு கட்சியில் சேர்ந்தது, கட்சியில் கலந்து கொண்ட போராட்டங்கள், உள் கட்சி அரசியல் என விளாவாரியாக பேசுகிறது புத்தகம்.

காந்திஜியின் சத்திய சோதனை தான் இந்த சுய சரிதை எழுத காரணம் என சொல்லும் கண்ணதாசன் , சத்திய சோதனையில் உள்ளது போல, தான் செய்த பல தவறுகளை மனம் விட்டு கூறுகிறார். உதாரணத்துக்கு

- முதல் வேலையில் "பொருட்கள் சென்று வாங்கும் போது அதற்கு விலை ஏற்றி சொல்லி கமிஷன் அடித்தது

- விலை மாதர் இல்லம் சென்றது

- பல நாள் சாப்பிடாமல் இருந்து காசு கிடைத்ததும் ஹோட்டல் சென்று ஆறு மசால் தோசை ஒரே நேரத்தில் ஆர்டர் செய்து சாப்பிட்டது

- முதல் முறை பாட்டெழுதி நூறு ரூபாய் கிடைத்ததும் விலை மாது வீடு தேடி அலைந்தது

- நிலையான வருமானம் வந்ததும் ஒரு பெண்ணின் அழகில் மயங்கி மூன்று மாதம் வாழ்ந்தது- ஊருக்கு சென்று திரும்பும் போது அவர் வேறு நபருடன் வாழ்வது கண்டு மனம் வெறுத்தது

இப்படி எத்தனையோ சம்பவங்கள் சொல்கிறார்.

செட்டியார் சமூகத்தில் சுவீகாரம் செய்வது குறித்து பல தகவல்கள் தெரிய வருகிறது. " ஏழைகளுக்கு நிறைய குழந்தைகள் இருக்கும். பணக்காரர்கள் சிலருக்கு குழந்தைகள் இருக்காது. அவர்கள் ஒரு குறிப்பிட தொகை கொடுத்து தெரிந்த உறவினரிடம் குழந்தைகள் தத்தெடுப்பர்" என்கிறார்.

வாழ முடியாதவர்கள் என்கிற தலைப்பில் கலைஞர் எழுதிய சிறுகதையை பற்றி காட்டமாக விமர்சிக்கிறார். மனைவியை இழந்த கணவன். தன் மகளுடனே உறவு கொள்கிறான் என்கிறதாம் இக்கதை. இது பற்றி இவ்வாறு சொல்கிறார் கண்ணதாசன் " வெளி நாட்டவர்கள் கூட வறுமையை சித்தரிக்கும் போது பண்பாட்டோடு எழுதினார்கள். ஆனால் மகளை கெடுத்த தந்தையை வறுமைக்கு உதாரணமாக்கினார் முற்போக்கு ஆசிரியர்"

கண்ணதாசனின் அனுபவம் ஆங்காங்கு தத்துவமாக/ கருத்தாக வெளிப்படுகிறது:
 
" தன் துயரத்தை பகிர்ந்து கொள்ள இன்னொருவர் இருந்தால் மனதுக்கு ஆறுதல் கிடைக்கிறது. அந்த இன்னொருவர் பெண்ணாக இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுகிறது !"


" சில நேரங்களில் துணிவை மட்டுமே மூல தனமாக கொண்டு முன்னேற்றத்துக்கு தேவையான சந்தர்ப்பத்தை மனிதனால் ஆக்கி கொள்ள முடியும்."

" அரசியல் வாதிகளுடன் சில காலம் பழகியதிலேயே பல உண்மைகள் தெரிய ஆரம்பித்தது. தாம் கொண்ட கொள்கைகளில் யாருமே உறுதியாக இல்லை. ஜனங்கள் முட்டாள்கள் என்பதை நன்றாக உணர்ந்து கொண்டு அதை வெளியில் சொல்லாமலே அரசியல் நடத்துகிறார்கள் "
 
அரசியல் வாழ்க்கையில் பல சம்பவங்களை மிக விரிவாக விவரிக்கிறார். குறிப்பாக எம். எல். ஏ வாக ஆயிரம் விளக்கு தொகுதியில் நிற்க சொல்லி தி.மு.க சொல்ல, இவரோ தன் சொந்த ஊரான காரைக்குடி அருகே ஒரு தொகுதியில் நின்று தோற்றது ( ஆயிரம் விளக்கில் நின்றவர் வென்று விட்டாராம்)
 
சென்னை மாநாகராட்சி தேர்தலில் கண்ணதாசன் கடுமையாக தேர்தல் பணி செய்தாராம். அந்த தேர்தலில் தி.மு.க பெரும் வெற்றி பெற்ற போது வேட்பாளர்கள் பலர் அவர் வீடு தேடி வந்து நன்றி கூறினாராம். ஆனால் வெற்றி விழாவில் அண்ணா கலைஞருக்கு கணையாழி குடுத்து வெற்றிக்கு காரணம் இவரே என்றாராம். இது பற்றி கண்ண தாசன் அண்ணாவிடம் கேட்க, " நீயும் அவரை போல ஒரு மோதிரம் வாங்கி கொடுத்தால், உனக்கும் மேடையில் அணிவிக்கிறேன்" என்றாராம் !!

டால்மியாபுரம் போராட்டம் பற்றி மிக விரிவாக சொல்கிறார். அப்போது தான் தண்டவாளத்தில் தலை வைத்து படுக்கும் நிகழ்சிகள் நடந்தேறி உள்ளன. முதல் குருப் ஓடாத ரயில் முன் படுத்து கைதாகி விட்டது. அடுத்த குழுவிற்கு கண்ணதாசன் தலைமை ஏற்றிருக்கிறார். அந்த குழு சென்ற போது ரயில் நகர துவங்க, ஓடும் ரயில் முன் போய் விழ சொன்னார்களாம் ! ஓடும் ரயில் முன் விழுந்தால் நேரே சாக வேண்டியது தான் என கண்ணதாசன் செய்ய வில்லை. இந்த போராட்டத்தில் சிறைக்கு போய் பல மாதம் சிறையில் வாடி, குடும்பம் பணம் இன்றி கஷ்டப்பட்ட பின் தான் அரசியல் சற்று புளிக்க துவங்கி உள்ளது அவருக்கு !

கடைசி நூறு பக்கங்களில் தி.மு.கவில் அண்ணா- சம்பத் இடையே இருந்த சண்டை பற்றி விரிவாக பேசுகிறார். இவர் சம்பத் பக்கம் நின்றிருக்கிறார். அண்ணாவின் கருப்பு பக்கங்களும் இந்த புத்தகத்தில் பேச படுவது ஆச்சரியமாக உள்ளது. கலைஞரை நேரடியாக பல இடங்களிலும் " கலை ரசிகர்" என மறைமுகமாக பல இடங்களிலும் தாக்குகிறார்.

பெரிய சம்பவங்கள் அல்லது பிரச்சனைகள் முடிவுகள் எடுக்கும் போது தான் நமக்கெல்லாம் தூக்கம் பாதிக்கும். ஆனால் கண்ணதாசனோ பல முறை அத்தகைய சமபவங்கள் பற்றி சொல்லும் போதெல்லாம் அன்று இரவு நன்கு உறங்கினேன் என்று தான் முடிக்கிறார் !

வனவாசம் என அவர் சொல்லுவது தி.மு.கவில் இருந்த கால கட்டத்தை தான் ! கண்ண தாசனின் பாடல்களுக்கு ரசிகனான நான் அவர் அந்த பாடல்கள் குறித்தும் அவை எழுதிய சூழல், சில சுவையான சம்பவங்கள் எதிர் பார்த்தேன். ஆனால் இந்த நூல் எழுதிய கால கட்டத்தில் அவர் ஒரு புகழ் பெற்ற பாடலாசிரியராக இருந்தும், இந்த நூல் அவர் சுய சரிதை என்றாலும் அவர் பாடல்கள் குறித்து அதிகம் பேசாதது சற்று ஏமாற்றமே.

இது முழுக்க முழுக்க கண்ணதாசன் என்கிற தனி நபரின் தி.மு.க எதிரான நிலை பாடு ஏன் என்பதற்கான புத்தகம். கலைஞர் அல்லது அண்ணா அபிமானிகளிடம் இதற்கு நேர் எதிரான தங்கள் நிலை சார்ந்த கருத்துகள் இருக்க கூடும்.

ஒரு அரசியல் கட்சியில் உள்ளே நடக்கும் சம்பவங்களை இவ்வளவு விரிவாக பேசிய புத்தகம் என்கிற அளவில் நிச்சயம் இது ஒரு மாறுபட்ட புத்தகமே !
*******************

Monday, February 20, 2012

சுஜாதாவின் விரும்பி சொன்ன பொய்கள்

விரும்பி சொன்ன பொய்கள் - என்ன அழகான தலைப்பு ! பொய்மையும் வாய்மையிடத்த என்கிற மாதிரி இருக்கிறது இந்த தலைப்பு. சுஜாதாவின் க்ரைம் த்ரில்லர் இந்த நாவல்.

கதை

ராதாகிருஷ்ணன் என்பவன் மதுரைக்கு வரும் தன் முதலாளி மனைவியை வரவேற்க விமான நிலையத்தில் காத்திருக்கிறான். சுருக்கமாக அவன் பிளாஸ் பேக் விரிகிறது. இதற்கு முன் சர்க்கஸில் வேலை பார்த்து தான் காதலித்த பெண் மீது வேண்டுமென்றே அம்பு எய்து காயப்படுத்தியதால் ஜெயிலுக்கு போய் திரும்பியவன். அவனது பழைய கதை தெரிந்து யாரும் வேலை தராத போது இந்த நிறுவனத்தில் தான் வேலை கிடைக்கிறது.

"மதுரை வரும் தன் மனைவியை பார்த்து கொள்" என சொல்கிறார் முதலாளி. வரும் மனைவியோ புயல் மாதிரி இருக்கிறாள். அலை பாயும் மனம் கொண்ட அவளின் செயல்கள் புதிராய் இருக்கின்றன. அவள் செல்லும் இடமெல்லாம் கூட செல்ல வேண்டும் என்ற பாஸின் கட்டளையால் அப்படியே செய்கிறான் ராதாகிருஷ்ணன். ஒரு இரவில் தனிமையான பீச்சில் இருவருக்கும் உறவும் நடக்கிறது. இதன் பின் மறு நாள் அவள் சென்னை சென்று விடுகிறாள். ராதா கிருஷ்ணனோ அவள் நினைவாக பித்து பிடித்து அலைகிறான்

அவளை காண சென்னை செல்கிறான். சந்திக்கவும் செய்கிறான். சந்தித்த அன்று இரவே அவள் இறக்கிறாள். அது தற்கொலையா கொலையா என ஆராயும் போலிஸ் சொல்லும் கதை ராதா கிருஷ்ணனை மட்டுமல்ல நம்மையும் தூக்கி வாரி போடுகிறது.

ராதா கிருஷ்ணனை வந்து சந்தித்தது வேறு பெண். அவர் முதலாளி மனைவி அல்ல. ராதா கிருஷ்ணனின் past-ஐ வைத்து அவனை இந்த வலையில் விழ வைப்பதுடன் கொலை பழியும் வருகிற மாதிரி செய்தது அந்த முதலாளி தான் என்கிற ரீதியில் கேள்வி குறி மட்டும் எழுப்பி கதையை நிறைவு செய்கிறார்.

***
முடிவில் இறந்த பெண் அவர் மனைவி தானா இல்லையா? இந்த கேள்விக்கு ஆம் என்பதா இல்லை என்பதா என்று கேட்டு விட்டு, அதனை வாசகர்களே நீங்களே சொல்லுங்கள் என முடிக்கும் போது நமக்கு ஏமாற்றம் ஆகி விடுவது நிஜம்.

சர்க்கஸ் வாழ்க்கை பற்றி சுவாரஸ்யமாக முதல் சில பக்கங்களில் சொல்கிறார். ராதா கிருஷ்ணனின் ஜெயில் வாழ்க்கை பற்றி நீண்டு செல்லும் ஒரே வரியில் வலியை நமக்கு உணர வைப்பது டிபிகல் சுஜாதா !

கதையில் வரும் பாத்திரங்கள் பலவும் " கல்யாணம் பண்ணிக்காதே " என்கிறார்கள். (அவ்வப்போது சுஜாதாவின் பாத்திரங்கள் பிற கதைகளிலும் இந்த வரியை சொல்வதுண்டு")

சிவகங்கை அருகில் இரவு சென்று தங்கினார்கள் என கூறிவிட்டு பீச் சென்று குளிப்பதாக சொல்வது இடிக்கிறது. சிவகங்கை அருகே எங்கே பீச்?

முன்னுரையில் சுஜாதாவே " வாசகரிடம் முடிவை ஊகிக்க சொல்வது எனக்கு மிக பிடித்த உத்தி" என்கிறார்.ஆனால் இந்த கதையில் முடிவு தெரியாமல் நமக்கு சற்று என்னவோ போல் தான் உள்ளது !

விரும்பி சொன்ன பொய்கள் : Diehard Sujatha fans-க்கு மட்டும் பிடிக்கும்!

திண்ணை பிப்ரவரி 12, 2012  இதழில் வெளியான கட்டுரை

Tuesday, February 14, 2012

சுஜாதாவின் "சிவந்த கைகள்": அலுவலக பாலிடிக்ஸ் குறித்த நாவல்

ஒரு நிறுவனம்.அதன் அரசியல், பதவி உயர்வுக்கான போட்டி இவற்றை பின்புலமாக கொண்ட நாவல். செம விறுவிறுப்பான எழுத்து. படிக்க ஆரம்பித்த பின் இருந்த வேலைகளை ஒத்தி போட்டு விட்டு முடித்து விட்டு தான் மறு வேலை பார்த்தேன்

கதை

விக்ரம் என்கிற இளைஞன் இந்தியாவின் பெரும் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்கிறான். சேரும் முதல் நாளே " என்றாவது ஒரு நாள் எம். டி சீட்டை பிடிக்க வேண்டும்" என்கிற அளவு வேகம் உள்ளவன். எம். பி. ஏ படிப்பிருந்தால் தான் அந்த வேலை கிடைக்கும் என்பதால் பொய் சர்டிபிகேட் தயாரித்து தந்தான் என்பது அவன் மனதை உறுத்தியவாறே இருக்கிறது.

அவனது பாஸான அசோக் - எம். டி. க்கு மிக பிரியமானவன். அசோக் அடுத்த டைரக்டர் ஆக போகிறவன் என்கிறார்கள். விக்ரம், அசோக் இருவரும் எம். டி. மகளுடன் நெருக்கமாக பழகுகிறார்கள். அசோக்கை டைரக்டர் ஆக அறிவிக்கும் முன் ஹார்ட் அட்டக் வந்து உடல்நிலை பாதிக்கப்பட, டைரக்டர் ஆகும் வாய்ப்பு விக்ரமுக்கு வருகிறது. " ஆறு மாதம் observe-செய்து விட்டு அதன் பின் டைரக்டர் ஆக்குகிறேன்" என்கிறார் எம்.டி!


அந்த ஆறு மாதத்தில் பேய் மாதிரி உழைத்து நல்ல பேர் வாங்குகிறான். ஆனால் அவன் எதற்கு பயந்தானோ அது நடந்து விடுகிறது. அலுவலகத்தில் உள்ள ஒரு வயதானவர் விக்ரம் டிகிரி பொய் என்பதை கண்டு பிடிக்கிறார். அவன் எவ்வளவோ பேசி பார்த்தும் அவர் எம்.டி இடம் சொல்வேன் என மறுபடி மறுபடி சொல்ல, ஒரு sudden provocation-ல் அவரை கொன்று விடுகிறான் விக்ரம். அதற்கு பிராயச்சித்தமாக அவர் மகளுக்கு அதே நிறுவனத்தில் வேலை வாங்கி தருகிறான்.

என்னடா கதை சம்பிராதயமாக முடிகிறதே, அதுவும் தப்பு செய்தவன் எந்த தண்டனையும் இன்றி தப்பிக்கிறானே என நினைக்கும் போது கடைசி பக்கத்தில் சின்ன டுவிஸ்ட் வைத்து வழக்கம் போல ஒரு கேள்வி குறியுடன் முடிக்கிறார் சுஜாதா.

இதன் முடிவு பலருக்கு அதிர்ச்சியைக் கொடுக்க கடிதம் மேல் கடிதமாக சுஜாதாவிற்கும், நாவலை வெளியிட்ட மணியனுக்கும் எழுதித் தீர்த்தனர். எனவே ரசிகர்களின் ரசனைகேற்ப்ப இதன் இரண்டாம் பாகமாக "கலைந்த பொய்கள்" என்னும் நாவலை மணியன் மாத இதழில் எழுதினார். இதில் கதாநாயகி தந்தையைக் கொன்ற கதாநாயகனை பழிவாங்குவதாக கதையை அமைத்திருந்தார் சுஜாதா ! (தகவலுக்கு நன்றி: வாசகன் ).

***

அலுவலக அரசியல் வைத்து இத்தனை சுவாரஸ்ய கதை நிச்சயம் நான் வாசித்ததில்லை. விக்ரம் அந்த கொலை செய்யும் வரை நாம் எம்.பி ஏ என்கிற பொய்க்காக மாட்ட கூடாது என்று தான் நினைக்கிறோம். ஆனால் அந்த கொலை செய்த பின் நம் கோபம் அவன் மேல் திரும்பி விடுகிறது.

கதையின் துவக்க அத்தியாயங்களை சுஜாதா ஏனோ சிறு வாக்கியங்களிலேயே எழுதி உள்ளார். சில வாக்கியங்களில் இரண்டே வார்த்தைகள். சில நேரம் ஒரே வார்த்தை. ஆனால் இது மிக சுவாரஸ்யமாக உள்ளது.

பொய் சொல்வதற்கு சில விதிகள் என்று சொல்லி விட்டு இப்படி சொல்கிறார் சுஜாதா:

1. சின்ன விஷயங்களுக்கு பொய் சொல்லாதே.
2. குறிக்கோள் மிக முக்கியமானதாக இருந்தால் தான் பொய் சொல்ல வேண்டும்.
3. எவரும் எதிர் பாராத நேரத்தில் பொய் சொல்லு.
4. யோக்கியமாக பொய் சொல். அண்ட புளுகு புளுகாதே. நம்பும் படியாக இருத்தல் வேண்டும் உன் பொய்.

அதிசயமாய் கதையில் சில ஓட்டைகள். குறிப்பாய் விக்ரமுக்கு கார் ஓட்ட தெரியாது என்று சொல்லி விட்டு அடுத்த அத்தியாயத்தில் அவன் தனியே கார் ஓட்டி (அதுவும் ஐந்து மணி நேரம் தள்ளி உள்ள ஊருக்கு) சென்றான் என்று சொல்வது நெருடல்.

இந்த நாவல் ஒரு மாத நாவலாக மணியன் புத்தகத்தில் வந்தது என்பது ஆச்சரியம் தரும் செய்தி. இத்தனை குவாலிட்டி ஆன நாவல் மாத நாவலாக வந்துள்ளதா!! வழக்கமாய் மாத நாவல் எழுதுவோர் இந்த நாவலில் பாதி குவாலிட்டிக்கு எழுதினாலே போதும் !

விறுவிறுப்பு, நகைச்சுவை, மெசேஜ் என எல்லாம் கலந்த இந்த சுஜாதா
ஸ்டெயில் கதையை அவசியம் வாசியுங்கள் !

நாவல் பெயர்: சிவந்த கைகள்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
விலை: ரூ. 60

நன்றி: பதிவர் ரகு

திண்ணை பிப்ரவரி 5, 2012 தேதியிட்ட இதழில் வெளியானது

Monday, February 6, 2012

எழுத்தாளர் சுஜாதாவின் "ஆஸ்டின் இல்லம்"


"ஆஸ்டின் இல்லம்" சுஜாதாவின் குறுநாவல். பொதுவாய் சுஜாதா கதைகளில் மெசேஜ் இருக்காது என்பார்கள். அதில் பாதி உண்மை. பாதி பொய். சுஜாதா மெசேஜ் சொல்ல வேண்டும் என வலிந்து முனைவதில்லை. சில கதைகளில் நல்லதோர் மெசேஜ் இயல்பாய் இருக்கும். ஆஸ்டின் இல்லம் அப்படி இயல்பாய் மெசேஜ் அமைய பெற்ற கதை.


ஆஸ்டின் இல்லம் என்கிற பெயர் கொண்ட வீட்டில் ஒரு பெரிய கூட்டு குடும்பம் ஒன்றாக வசிக்கிறது. அந்த வீட்டின் ஓனர் " பெரியப்பா". அவரது சொந்தங்கள் பலவும் அந்த வீட்டிலும் அந்த சிறு தெருவிலும் (தெருவின் பல வீடுகளுக்கு பெரியப்பா தான் ஓனர் !) வசிக்கிறார்கள்.

ஆஸ்டின் இல்லத்தில் உள்ள முகுந்தன் என்பவருக்கு இரு மகன்கள். முதல் மகன் நிகில் அமெரிக்கா செல்ல ஆயத்தமாக இருக்கிறான்.
இவன் மணமுடிக்க ஒரு பெண் பார்த்து வைத்துள்ளனர். அடுத்த மகன் நந்து தான் கதையின் மைய இழை. பல திறமைகள் கொண்ட இந்த சிறுவனுக்கு உடல் நிலை சரியில்லை என டாக்டரிடம் செல்கிறார்கள். அவர் இவனை பல டெஸ்டுகளுக்கு உட்படுத்தி விட்டு அவனுக்கு எலும்பு சார்ந்த பெரிய நோய் வந்திருப்பதாகவும், இன்னும் சில வருடங்கள் தான் உயிரோடு இருப்பான் என்றும் கூறுகிறார்.

நந்துவின் தந்தையும், தாயும் மனம் உடைகிறார்கள். இன்னொரு மகனோ இவ்வளவு குழப்பம் இடையேயும் தான் அமெரிக்கா சென்றே ஆகணும் என போய் விடுகிறான்.

பெரியப்பாவின் பழைய கதை ஒன்று தெரிய வருகிறது. இந்த இடமே பெரியப்பா வேறு ஒரு ஆளை ஏமாற்றி வாங்கியதாகவும், பின் அவர் மனைவியை இவர் "சின்ன வீடாக" வைத்து கொண்டதாகவும் செய்திகள். இந்த பாவத்தால் தான் இப்படி நடக்கிறது என்றும் வீட்டை விட்டு போக வேண்டும் என்றும் நினைக்கிறார்கள் நந்துவின் பெற்றோர். அனைவரும்
இது பற்றி கேள்வி கேட்பதால் வயதான பெரியப்பா மனமுடைந்து இறக்கிறார்.

கதையின் கடைசி பக்கத்தில் நந்துவிற்கு அந்த நோய் வந்ததற்கான காரணத்தை சொல்கிறார் டாக்டர். " சொத்து கை மாறிட கூடாதுன்னு சொந்ததுக்குள்ளேயே தொடர்ந்து கல்யாணம் பண்ணது தான் இந்த நோய் வர காரணம்; நீங்க நினைக்கிற மாதிரி பாவம், புண்ணியம் ஒண்ணும் கிடையாது " என டாக்டர் சொல்வதுடன் கதை முடிகிறது.

கதையின் முதல் அத்தியாயத்தில், அந்த குடும்பத்தில் இருந்து ஏராளமான பாத்திரங்கள் அறிமுகம் ஆகும் போது நமக்கே சற்று குழப்பமாக உள்ளது. ஆனால் போக போக கதை மீது நாட்டம் வந்து பாத்திரங்கள் அதிக முக்கிய துவம் இன்றி ஆகி விடுகிறார்கள்.

வெளிநாடு போகணும் என நிற்கும் அந்த அண்ணன் , மற்றும் அவனுடன் ஈஷி கொண்டே இருக்கும் அவன் வருங்கால மனைவி ..இரண்டும் நம்மை கோபப்பட வைக்கும் பாத்திரங்கள். சுஜாதா இவர்கள் மட்டுமல்ல மனிதர்கள் அனைவரும் "selfish " தான் என போகிற போக்கில் சொல்லி போகிறார்.

பெரியப்பா பாத்திரம் மிக புதிரானது. ஆஸ்டின் இல்லத்தின் நிஜ ஓனரை பெரியப்பா கொலை கூட செய்திருக்கலாம் என பேசிக்கொள்கிறார்கள். அவ்வளவு விலை உள்ள சொத்தை ஏன் ஆயிரம் ரூபாய்க்கு அவர் விற்க வேண்டும் என கேட்கும் போது பெரியப்பா சரியான பதில் சொல்லாமல் நழுவுகிறார்.

சுஜாதா அடிக்கடி சொல்லும் ஒரு விஷயம் தான்: " எந்த பெரிய சொத்துக்கு பின்னும் ஒரு குற்றம் ஒளிந்திருக்கிறது“

ஆஸ்டின் இல்லம் "Must read " என்று சொல்ல மாட்டேன். ஆனால் சுஜாதாவின் தீவிர ரசிகர்கள் நிச்சயம் வாசிக்கலாம்

புத்தகம் பெயர்: ஆஸ்டின் இல்லம்
பதிப்பகம்: விசா பப்ளிகேஷன்ஸ் 
விலை: ரூபாய் 30

திண்ணை 29 ஜனவரி 2012 தேதியிட்ட இதழில் வெளியானது

Monday, January 23, 2012

சுஜாதாவின் ஏறக்குறைய சொர்க்கம்

அழகான மனைவி அமைய பெறுவது வரமா அல்லது சாபமா? துவக்கத்தில் வரம் போல் தோன்றினாலும் பின்னாளில் சாபமாகும் வாய்ப்பும் நிறையவே உண்டு. சுஜாதாவின் "ஏறக்குறைய சொர்க்கம்" சொல்ல வருவது இதனை தான் 

குமுதம் பத்திரிக்கையில் தொடர் கதையாக வெளி வந்த போது, வாரா வாரம் கத்தரித்து பைன்ட் செய்து, யாரோ வாசித்ததை பழைய புத்தக கடையிலிருந்து கிடைக்க பெற்றேன்.

கதை 


ராம்சந்தர் என்கிற 27 இளைஞனின் பார்வையில் கதை சொல்ல படுகிறது. காமாட்சி (காமு) என்கிற பெண்ணை, பெண் பார்த்து திருமணம் செய்கிறான். திருமணமான அன்றே ராமின் தாயார் மரணமடைகிறார். "பெண் ராசி அற்றவள் " என பலரும் சொல்ல, அதையெல்லாம் காதில் வாங்காமல் அவள் அழகில் மயங்கி கிடக்கிறான் ராம். வங்கியில் பணி செய்யும் ராமின் நண்பன் சந்துரு, ராமின் மேனஜர் என பலருக்கும் காமுவின் மீது ஒரு கண். " உங்க நண்பன் சந்துரு என்னிடம் தப்பாக நடந்து கொள்ள முயற்சித்தார்" என்கிறாள் காமு. சந்துருவை பார்க்க போனால், அவன் " உன் மனைவி நடத்தை சரியில்லை. என்னிடம் தப்பா நடந்து கொள்ள பார்த்தாள்" என்கிறான். சந்துரு சொன்ன வேறு சில விஷயங்கள் சரியாக இருக்க அவனை திட்டாமல் திரும்புகிறான் ராம்.

ராமின் மேனஜர் மூலம் ஒரு சினிமா டைரக்டர் காமுவை வந்து பார்த்து விட்டு காமுவை தன் படத்தில் நடிக்க சொல்லி அழைக்கிறார். ராம் இதை மறுக்கிறான்.

காமுவின் நடவடிக்கைகள் ராமுக்கு தொடர்ந்து சந்தேகம் தர, வேலைக்கு செல்லாமல் அவளை உளவு பார்த்து கொண்டு திரிகிறான். கர்ப்பமாகும் காமுவை அபார்ஷன் செய்ய சொல்லி விடுகிறான். இதன் பின் தன் வீட்டுக்கு போகும் காமு திரும்பவே இல்லை. நீண்ட நாள் அலைந்து காமு அவள் சித்தப்பா மூலம் சென்னை சென்று நடிகை ஆகி விட்டதை அறிகிறான். இந்நிலையில் அவன் வேலையும் இழந்து இருக்க, "எந்த தொந்தரவும் தராமல் வீட்டில் இருந்தால், உன்னை இங்கு இருக்க அனுமதிக்கிறோம்" என்கிறார்கள் சித்தப்பாவும், காமுவும். தினம் தண்ணி அடித்து கொண்டு சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கி ஒரு நடிகையின் கணவன் வேலையை பார்க்க துவங்குகிறான் ராம். இந்த வாழ்க்கையை பொறுத்து கொண்டால் "ஏறக்குறைய சொர்க்கம்" என ராம் சொல்வதுடன் கதை முடிகிறது

எண்பதுகளின் துவக்கத்தில் எழுதப்பட்ட நாவல் இது. ஒவ்வொரு வாரம் முடிக்கும் போதும் ஒவ்வொரு சஸ்பென்ஸ் உடன் முடிக்க, வாசகர்கள் நிச்சயம் அடுத்த அத்தியாயத்தில் என்ன நடக்கும் என்கிற ஆவலுடன் இருந்திருப்பார்கள்.

கதை முழுக்க முழுக்க காமு என்கிற அழகிய பெண்ணை சுற்றியே சென்றாலும் கூட, அவள் அழகை பற்றி தான் பேசுகிறதே ஒழிய, அவள் உணர்வுகள் அல்லது அவள் என்ன நினைக்கிறாள் என்பதை எங்குமே சொல்ல வர வில்லை. சொல்ல போனால் இது தான் கதையின் மிக பெரிய புதிரே.

ராம் தன் மனைவி மேல் சந்தேகப்படும் போது நாம் எந்த நிலை எடுப்பது என தடுமாறுகிறோம். ராமுக்கு உள்ளது சந்தேகம் என்கிற நோயா அல்லது அவன் சந்தேகப்படுவதில் உண்மை இருக்குமோ என்று குழம்புகிறோம். சுஜாதா விரும்பவதும் இதையே என்று தோன்றுகிறது.

இறுதி பகுதியில் சந்துரு இப்படி சொல்கிறான்.

" யோசிச்சு பார்த்தன்னா உலகத்தில் எல்லா செயல்களும் தனிப்பட்டது; உலகத்தில் எத்தனையோ தெரிஞ்சும் தெரியாமலும் பாதங்கங்கள் நடக்குது. அது ஒவ்வொன்னையும் நம்மை பாதிக்க விட்டா நம்மால உயிர் வாழவே முடியாது".

உலகத்தில் நடக்கிற எல்லாம் உனக்கு தெரிந்தா நடக்கிறது? அதுக்கெல்லாம் கவலை பட முடியுமா என அறிவுரை சொல்கிறான் நண்பன். கடைசியில் ராம் அந்த வாழ்க்கைக்கு ஒப்பு கொள்வதும் இதன் அடிப்படையில் தான்.

இந்த நாவலை 90-களில் ஏற்கனவே வாசித்திருக்கிறேன். இப்போது நினைத்தாலும், ஏறக்குறைய சொர்க்கம் என்றதும் உடனே நினைவுக்கு வருவது "அழகான மனைவி- நடிகையாகும் கதை" என்பது தான்.

சுஜாதாவின் பெஸ்ட் என்று சொல்ல முடியா விட்டாலும் சுஜாதா ரசிகர்கள் நிச்சயம் ரசிப்பார்கள் இந்த நாவலை.

திண்ணை டிசம்பர் 18 இதழில் வெளியான கட்டுரை

Friday, December 9, 2011

எழுத்தாளர் சுஜாதாவின் சொர்க்கத்தீவு

சொர்க்க தீவு என்கிற சுஜாதா நாவல் சமீபத்தில் (மீண்டும்) வாசித்தேன். சுஜாதாவின் எழுத்துக்கள் என்றும் இளமையானவை. சொர்க்க தீவும் இதே விதம் தான்.

கதை


அய்யங்கார் என்கிற சென்னையை சேர்ந்த கணினி இஞ்சினீயர் சில நபர்களால் நைச்சியமாக பேசி, தனி விமானத்தில் கடத்தப்படுகிறார். அவரை கடத்தி, வெளி உலகத்துக்கு தெரியாத ஒரு தனி நாட்டிற்கு அழைத்து செல்கிறார்கள். அந்த நாட்டை நிர்வகிக்கும் சத்யா என்கிற நபரை அவர் சந்திக்கிறார். அவர் தங்கள் கணினி வேலை செய்ய வில்லை என்றும் அதை சரி செய்யவே அவரை அழைத்து வந்ததாகவும் சொல்கிறார். அய்யங்காருக்கு தன்னை கடத்தி வந்ததில் கோபம் இருந்தாலும் தனக்கு நன்கு தெரிந்த கணினி சரி செய்யும் வேலை என்பதாலும் தப்பி செல்ல வேறு வழி இல்லாததாலும் ஒப்பு கொள்கிறார்.

அந்த நாட்டில் பல விஷயங்கள் விநோதமாக உள்ளன. அவர்கள் தமிழ் பேசுகிறார்கள் எனினும் பல வார்த்தைகளுக்கு அவர்களுக்கு அர்த்தம் புரிய வில்லை. உதாரணமாய் செக்ஸ், அப்பா, அம்மா போன்ற வார்த்தைகள் அவர்களுக்கு தெரியவில்லை !

ஒரு நாள் அய்யங்கார் தங்கிய அறைக்கு ஒரு போன் வருகிறது. அதில் ஒரு குரல் "அவர்கள் சொல்வதை செய்யாதே" என கூறுகிறது. அப்படி பேசிய நபரை ஒரு நாள் பீச்சில் இரவில் சந்திக்கிறார் அய்யங்கார். கெளதம் என்னும் அந்த நபர் "சத்யா அனைவருக்கும் மருந்து கொடுத்து உணர்வுகளை மறக்கடிப்பதாகவும், தனக்கு குடுக்கும் மருந்தில் தவறிருந்ததால் தன் உணர்வுகள் விழித்து கொண்டன என்றும் சொல்கிறார். மேலும் இயற்கைக்கு மாறாக இவர்கள் செய்வது தவறு என்றும் அய்யங்கார் கணினியை ரிப்பேர் செய்து விட்டால், மனிதர்கள் விழித்து கொள்வார்கள் என்றும் கூறுகிறார். ஆனால் இப்படி சில நபர்கள் இருப்பது சத்யாவிற்கு தெரிய வர அவர்கள் நசுக்கப்படுகிறார்கள். அய்யங்கார் கணினியை சரி செய்து விட்டு சென்னை கிளம்புகிறார். விமானத்தில் இருக்கும் போது கடைசியாக கதை வாசிக்கும் நமக்கு மட்டும் இப்படி சொல்கிறார்

"நான் கணினியில் ஒரு லேபிளை மாற்றி விட்டேன். அதனால் அனைத்து மக்களுக்கும் கொடுக்கிற மருந்து அடுத்த ஒரு மாதம் வேலை செய்யாது. அனைவரும் விழித்து கொள்வார்கள்" என்று!

வழக்கமான சுஜாதா கதை போல், அந்த விழிப்புணர்வு நிச்சயம் நடக்குமா, சத்யா அதை கண்டுபிடித்து சரி செய்துவிடுவாரா என்கிற யோசனையுடனும், கேள்விகளுடனும் கதையை முடிக்கிறோம் நாம்.
********
கதை எழுதப்பட்ட வருடம் 1971 ! இதை படிக்கும் மனிதர்களில் பலரும் அப்போது பிறந்திருக்க கூட மாட்டார்கள் ! அப்போதே கணினி பற்றி இவ்வளவு விரிவாகவும், கணினி ஆட்சி செய்ய போகிறது என்றும் எழுதி உள்ளார் சுஜாதா !

புத்தகத்தை கையில் எடுத்தால் அடுத்த ஓரிரு மணி நேரம் நம் அனைத்து கவலைகளையும் மறந்து விட்டு வாசித்து முடித்து விட்டு தான் கீழே வைக்கும் விதத்தில் எழுத பட்டுள்ளது.

சுஜாதா எல்லா புத்தகத்திலும் முன்னுரை அல்லது விளக்கம் தருபவரில்லை. ஆனால் முன்னுரையில் , புத்தகம் வெளி வந்த போது பலரும் ஆங்கில நாவல்களில் இருந்து எடுக்க பட்டதாக சொன்னதாகவும், அது எப்படி உண்மை இல்லை என்றும் சொல்கிறார். மேலும் தான் எழுதிய முதல் சயின்ஸ் பிக்ஷன் கதை இது தான் என்கிறார்.

அய்யங்கார் என்கிற கணினி இஞ்சினியர் பாத்திரத்துக்கு நான் சுஜாதாவை தான் கற்பனை செய்து கொண்டேன். இப்படி நினைக்க ரொம்ப வேடிக்கையாக இருந்தது.

நாவலில் சில சுவாரஸ்யங்கள்:

அந்த நாட்டில் வாழும் எல்லோருக்கும் இரு எழுத்து பெயர்கள் தான். சத்யா என்கிற தலைவருக்கு மட்டுமே மூன்றெழுத்து பெயர். இவர்களை எதிர்க்கும் புரட்சி காரர்கள் முதலில் செய்வது தங்கள் பெயரை நான்கெழுத்தாக மாற்றி கொள்வது தான் ! எதிர்ப்பை காட்ட ஒரு குறியீடு !

பிறப்பு, இறப்பு இரண்டையுமே அங்கு கண்ட்ரோல் செய்கிறார்கள். இயல்பான செக்ஸ் கிடையாது. மனிதர்களின் உணர்வுகள் மழுங்கடிக்க படுவதால் அந்த ஆசை அவர்களுக்கு இல்லை. 54 வயதானால் மனிதர்களை கொன்று விடுகிறார்கள். (நமக்கும் தூக்கி வாரி போடும் இடம் இது !)

உள் வட்டம், வெளி வட்டம் என இரு பிரிவுகள் உண்டு. சத்யா மற்றும் அவரை சார்ந்தவர்கள் உள் வட்டம். இவர்கள் புகைக்கலாம். பெண்களுடன் உடலுறவு வைத்து கொள்ளலாம். (நம்ம ஊர் அரசியல் வாதிகள் வழக்கில் கைதாகும் வரை மற்ற எந்த சட்டங்களுக்கும் உட்படாமல் இருப்பார்களே அந்த மாதிரி !!) மற்ற மக்கள் எல்லாரும் வெளி வட்டம். உள் வட்ட ஆண்கள் பிற பெண்களை தங்களுக்கு வேண்டிய படி உபயோகிக்கிறார்கள். இது குறித்து எந்த உணர்வும் இன்றி அந்த பெண்கள் சம்மதிக்கிறார்கள் !

பல இடங்கள் சுஜாதா முத்திரையுடன் வாய் விட்டு சிரிக்கும்படி இருந்தது. ஆனால் அதை இங்கே சொன்னால் நன்றாக இராது . கதையுடன் சேர்த்து படிக்க தான் சுவாரஸ்யமே !

இந்த கதையை சிலர் சினிமாவாக எடுக்க விரும்பினர் என்று சுஜாதா சொன்ன நியாபகம் ! நல்ல வேளை படமாக வில்லை !

வாய்ப்பு கிடைத்தால் இந்த வித்தியாச கதையை வாசித்து பாருங்கள் !!

திண்ணை நவம்பர் 28 தேதியிட்ட இதழில் வெளியானது. 

Wednesday, November 9, 2011

அலுவலகத்தில் நல்ல பேர் வாங்குவது எப்படி ??

அலுவலகத்தில் நல்ல பேர் வாங்க என்ன செய்ய வேண்டும்? இது அனைவரும் அறிய விரும்பும் விஷயம் தான். இதனை மையமாக வைத்து ஒரு புத்தகம் வெளியாகியுள்ளது. புத்தகத்தின் பெயர் : "ஆபிஸ் கைடு " கிழக்கு பதிப்பகம் வெளியீடு.

"நரகத்துக்கான எல்லா அம்சங்களும் பொருந்தி இருக்க கூடியது ஒரு நிறுவனம். ஆயினும் அதை சொர்க்கமாக மாற்றி கொள்வது கடினம் இல்லை; அதை சொல்லி குடுப்பதே புத்தகத்தின் வேலை" என்று முதல் அத்தியாயத்தில் பில்ட் அப் பயங்கரமாக தான் உள்ளது. அதை புத்தகம் பூர்த்தி செய்ததா என்றால் ஓரளவுக்கு மட்டுமே என்று தான் சொல்லவேண்டும்.

நூல் ஆசிரியர் சாது ஸ்ரீராம் டால்மியா சிமிண்ட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். 40 வயது இளைஞர். கம்பனி நிர்வாகம், மனித வள மேலாண்மை முதலிய விஷயங்களில் ஆர்வம் காட்டும் இவரின் மற்றொரு பிரபல புத்தகம் " பெரிய பிரச்சனை.. சின்ன தீர்வு"

ஆபிஸ் கைடு நூல் பதினைந்து அத்தியாயங்கள் கொண்டது. அநேகமாய் ஒவ்வொன்றிலும் ஓரிரு கதைகள் சொல்லப்பட நடுவில் சில கருத்துகளும் சொல்ல படுகின்றன. (ஆம் கதைகளுக்கு இடையே கொஞ்சமாய் கருத்துகள் !!) அதிலும் போக போக நிறைய விலங்குகள் கதைகளாக வாசிக்க, வாசிக்க, நாம் படிப்பது பஞ்ச தந்திர கதை புத்தகமோ என்கிற ஐயம் வந்து விடுகிறது. கதைகள் சற்று குறைவாய் உபயோகித்திருக்கலாம் என்பதோடு, அவை நமக்கு நெருக்கமாக நிஜ வாழ்க்கைக்கு அருகாமையில் இருந்திருக்கலாம் !!

இந்த நூல் பெருமளவு ஒரு மானேஜருக்கு அறிவுரை சொல்கிற விதமாகவே உள்ளது. மானேஜர் கீழ் வேலை பார்ப்பவர்களுக்கு தகவல் சற்று குறைவே.

ஒவ்வொரு மானேஜரும் தன்னிடம் வேலை பார்ப்போரிடம் என்ன எதிர்பார்க்கிறார் என இவ்வாறு சொல்கிறார்:

1. தன்னிடம் பேசும்போது அளவுக்கு மீறி பேசக்கூடாது. தேவையானவை மட்டுமே பேச வேண்டும்

2. நேரடியாக கேட்காத பட்சத்தில் ஆலோசனைகள் சொல்லக்கூடாது

3. செய்வது சாதாரணமான விஷயமாக இருந்தாலும் தன்னிடம் அனுமதி பெற்றபிறகே செய்யவேண்டும்

4. தன்னிடம் பேசிய விஷயங்களை வெளியில் சொல்ல கூடாது

5. தான் எடுக்கும் முடிவுகளை, தன்னிடம் வேலை செய்வோர் பின்பற்ற வேண்டும்

போலவே நல்ல ஒரு மேனஜர் என்னென்ன செய்ய வேண்டும் என்று ஆங்காங்கு சொல்லப்பட்டவையில் சில:

1. நிறுவனம் நம்முடையது என்கிற எண்ணத்தை ஊழியர் மனத்தில் ஆழமாக விதைக்க வேண்டும்.

2. ஒவ்வொருவர் பணியும் நிறுவனத்துக்கு முக்கியம் என்கிற எண்ணத்தை அனைவரிடமும் ஏற்படுத்த வேண்டும்.

3. எல்லா பணிகளையும் தானே இழுத்து போட்டு செய்ய கூடாது. சரியான விஷயங்களை பிறருக்கு delegate செய்ய வேண்டும்.

4. சரியான முறையில் communicate செய்ய வேண்டும். பல நேரம் கீழே வேலை செய்வோர் சரியாக ஒரு வேலை செய்யாததன் காரணம் மேனஜர் சரியாக தகவல் சொல்லாதது தான்.

5. ஊழியர்களை நல்ல முறையில் பாராட்ட வேண்டும். ஊக்குவிக்க வேண்டும். சில புதிய முயற்சிகள் செய்து தோற்றால் கூட அவர்களை பாராட்டுவது அவசியம்

6. அலுவலகத்தில் மாறுதல்கள் நிகழும் போது எதனால் அது நிகழ்கிறது என தெளிவாக சொல்லி புரிய வைக்க வேண்டும்.

எந்தெந்த விஷயங்களை பிறருக்கு delegate செய்யலாம் என்பது குறித்து ஒரு அத்தியாயம் பேசுகிறது. மற்றொரு அத்தியாயம் பணி உயர்வு குறித்து ..விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி பிறிதோர் அத்தியாயம். ..

இப்படி நல்லதொரு concept இருந்தாலும் தமிழ் சினிமா பாணியில் சொல்ல வேண்டுமாயின் "திரைக்கதை" சரியில்லாமல் புத்தகம் திண்டாடுகிறது.

"எதற்கு முக்கியத்துவம் தருகிறோமோ அது வளருகிறது" என்கிற ஒரு பெரிய விஷயத்தை போகிற போக்கில் இரண்டு கதைகளுக்கு நடுவே ஒரு வரியாக சொல்லி செல்கிறார். உண்மையில் இந்த புத்தகத்துக்கும் அது பொருந்துகிறது ! நூல் ஆசிரியர் முக்கியத்துவம் தந்தது கதைகளுக்கா, கருத்துகளுக்கா என்றால் கதைகளுக்கே என்று சொல்ல வேண்டியுள்ளது.



அலுவலகத்தில் எப்படி நடந்து கொள்வது என்பது குறித்து ஒரு நூல் என்கிற கான்செப்ட் நிச்சயமாக வரவேற்கப்படவேண்டிய ஒன்று. ஆனாலும் சாது ஸ்ரீராம் , " உங்க கிட்டயிருந்து நாங்க இன்னும் நிறைய எதிர் பார்க்கிறோம் !"

நூலின் பெயர்: : "ஆபிஸ் கைடு"
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
ஆசிரியர்: சாது ஸ்ரீராம்
விலை: ரூ. 60

திண்ணை அக்டோபர் 23, 2011 தேதியிட்ட இதழில் வெளியான புத்தக விமர்சனம் 

Thursday, July 14, 2011

காமராஜ் = கருப்பு காந்தி. திண்ணையில் வெளியான புத்தக விமர்சனம்

தமிழத்தில் பிறந்த தலைவர்களில் என்னை மிக கவர்ந்தவராக எப்போதும்  காமராஜர் இருக்கிறார். அதிகம் படிக்காமலே முதல்வர் பதவிக்கு உயர்ந்தவர், தமிழகத்தில் கல்விக்கு தந்த உத்வேகம், லஞ்ச ஊழல்களில் சிக்காத நேர்மை, இந்திய அரசியலில் அவருக்கிருந்த ஆளுமை இப்படி காரணங்களை சொல்லி கொண்டே போகலாம். எனக்கு விபரம் தெரியும் முன்பே காமராஜர் இறந்து விட்டார் என்றாலும் அவர் குறித்த எந்த தகவலையும் ஆர்வமாய் படிப்பேன். அப்படி வாசித்தது தான் கிழக்கு பதிப்பக வெளியீடான காமராஜ்: கருப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை என்கிற புத்தகம். இதனை காமராஜர் பிறந்த தினமான ஜூலை 15-ல்  பகிர்வதில் மகிழ்கிறேன். 

காமராஜரின் இளமை பருவத்திலிருந்து துவங்குகிறது புத்தகம் . ஆறாவது வரை மட்டுமே படித்த காமராஜர் தந்தை சிறு வயதில் இறந்ததால், மாமாவின் துணி கடையில் வேலை பார்க்கும் நிலை. அப்போதே அரசியல் மீது ஈடுபாடு. சுதந்திர போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு ஆர்வமாக உழைத்துள்ளார். 

காமராஜர்  இந்தியாவிற்கு விடுதலை கிடைத்த பின் தான் திருமணம் செய்து கொள்வது என உறுதியாக இருந்திருக்கிறார். விடுதலை கிடைத்த பின் ஏனோ திருமணம் பற்றி யோசிக்கவே இல்லை.

விடுதலை போராட்டத்தில் மூன்று முறை சிறை சென்று ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்திருக்கிறார். இதில் மூன்றாவது முறை சிறை சென்ற வரலாறு சுவாரஸ்யமானது. "வெள்ளையனே வெளியேறு" கோஷம் ஒலித்த காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டு தமிழகம் திரும்பியிருக்கிறார் காமராஜர். அப்போது காந்தி, நேரு உள்ளிட்ட அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் கைது செய்யப்பட்டது தெரிய வர ரயில் நிலையத்தில் தலையில் முண்டாசு கட்டி, தலையில் மூட்டை வைத்து கொண்டு கிராமத்தான் மாதிரி போலிசுக்கு டிமிக்கி தந்து தப்பி சென்று  விட்டார் மாநாட்டில் எடுத்த முடிவுகளை முக்கிய காங்கிரஸ் புள்ளிகள் அனைவருக்கும் துண்டு பிரசுரம் மூலம் பல ஊர்களுக்கு சென்று சேர்த்தவர், அதன் பின் தானாகவே போலீசில் சென்று சரண் அடைந்துள்ளார். 

ராஜாஜியின் குல கல்வி திட்டம் தான் காமராஜர் முதல்வராக காரணமாக அமைந்துள்ளது. ராஜாஜி கொண்டு வந்த இந்த திட்டத்திற்கு தமிழகம் முழுதும் எதிர்ப்பு வலுக்க முதல்வரை மாற்ற வேண்டும் என்ற முடிவை காங்கிரஸ்


எடுத்துள்ளது. இது தெரிந்து ராஜாஜி தானாகவே ராஜினாமா செய்து விட்டு தன் நம்பிக்கையாளர் சி. சுப்ரமணியத்தை முன்னிறுத்தியுள்ளார். அவர் முதல்வரானால் குல கல்வி தொடரலாம் என்ற எண்ணம் இருந்ததால் அவரை எதிர்த்து யாரேனும் போட்டியிட்டாக வேண்டிய நிலை. எனவே காமராஜர் நின்று வென்று, பின் முதல்வரும் ஆகியுள்ளார். முதல்வர் ஆனபின் குல கல்வி திட்டத்தை ஒழித்து மட்டுமின்றிதனக்கு எதிராக போட்டியிட்ட சி. சுப்ரமணியத்தை கூப்பிட்டு தனது அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகள் தந்துள்ளார். 

காமராஜருக்கு ஆங்கில அறிவு அதிகம் இல்லை என்று சொல்வார்கள். இது தவறு என்பதற்கு பல உதாரணங்கள் தருகிறார் நூல் ஆசிரியர். காமராஜர் முதல்வராக இருந்த போது "காந்திஜி படத்தை எல்லா அரசு அலுவலகங்களில் hang செய்யவும்" என எழுதி கொண்டு வந்துள்ளனர். அதில் hang     என்பதற்கு பதிலாக “install செய்யவும்"என்று மாற்றி கொண்டு வாருங்கள் என்றாராம் காமராஜர் ."Hang" என்றால் தூக்கில் தொங்க விடுவது போல் அர்த்தம்/ நினைவு வரும் என காரணம் சொன்னாராம். அதே போல சாஸ்திரி பிரதமராகவும் இவர் காங்கிரஸ் தலைவராகவும் இருந்த போது ஒரு சிக்கலான கேள்விக்கு பிரதமர் பதில் சொல்ல தயங்ககாமராஜர் சரளமாக ஆங்கிலத்தில் பதில் சொல்ல, சாஸ்திரி மிக சரியாக சொன்னீர்கள் என்று பாராட்டினாராம். 

மதிய உணவு திட்டம் கொண்டு வந்தது தான் தமிழகத்தில் லட்சக்கணக்கான ஏழை குழந்தைகள் பள்ளிக்கு வர காரணமாக அமைந்தது. இதனை துவங்கிய போது, மிக அதிக செலவாகும் என அரசு அதிகாரிகளிடமிருந்து எதிர்ப்பு வர, அவற்றை மீறி அதை நடைமுறைப்படுதியிருக்கிறார். இன்றளவும் காமராஜர் இதனால் அன்புடன் நினைவு கூறப்படுகிறார். அவரது மிக புகழ் பெற்ற திட்டம் இது தான்.

ஒன்பது ஆண்டுகள் முதல்வராக இருந்த போது திருச்சி பாய்லர் தொழிற் சாலை, தஞ்சை மருத்துவ கல்லூரி துவக்கம் என தொழில் துறை, விவசாயம், மின்சாரம் என பல துறைகளிலும் தமிழகம் முன்னேற்ற பாதையில் சென்றது. 

நேருவின் புகழ் குறைய துவங்கிய காலத்தில் காமராஜர் கொண்டு வந்த திட்டம் தான் " கே பிளான்". இதன்படி காங்கிரசின் முக்கிய தலைவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு, கட்சி பணிக்கு திரும்பினர். காமராஜரும் இதனால் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். பிறகு  அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்க பட்டார்.   காங்கிரஸ் தலைவராக இருந்த போது இரண்டு முறை பிரதமரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு இவரிடம் வந்துள்ளது. நேரு இறந்த போது சாஸ்திரி பிரதமரானதும், பின் அவர் மறைந்ததும் இந்திரா காந்தி பிரதமர் ஆனதும் இவர் யோசனை


மற்றும் முயற்சிகளால் தான். இதனால்தான் கிங்மேக்கர் என பெயர் பெற்றார். 

தூக்கத்தில் மிகுந்த நாட்டமுள்ளவர் காமராஜர். இரவில் படுத்த உடன் தூங்கி விடும் இவர், பெருத்த குறட்டை விடும் பழக்கமுள்ளவர் ! தினமும் மதியம் தூங்கும் வழக்கம் எப்போதும் உண்டு. இவர் உயிர் பிரிந்தது கூட மதிய தூக்கத்தின் போது தான் !!

காமராஜரை அவர் திருமலை பிள்ளை இல்லத்தில் வந்து சந்திப்பவர்களை, அவரை பேட்டி எடுப்பவர்களை  " சாப்பிடுகிறீர்களா?"   என்று கேட்கவே மாட்டாராம். காரணம் இவருக்கு உப்பு, காரம் இன்றி உணவு சமைக்கப்படுமாம். "இதனை மற்றவர்களை சாப்பிட சொல்லி எப்படி கஷ்டபடுத்துவது?"  என்று தான் இவர் சாப்பிட சொல்ல மாட்டாராம். இரவு உறங்கும் முன் " தன்னை பார்க்க வந்த எல்லாரும் போய் விட்டனாரா?" என்று கேட்பாராம். சிலர் நேரில் வந்து பேச தயங்கியபடி கூச்சத்துடன் வெளியில் இருப்பார்கள்; அப்படி பட்டவர்களையும் கடைசியாய் கூப்பிட்டு பேசி அனுப்புவாராம் . 

முதல்வராய் இருந்த போது, மாதம் 150  ரூபாய் கேட்ட தாய்க்கு 120  ரூபாய் தான் அனுப்பி வந்திருக்கிறார். " என் சம்பளத்தில் இவ்வளவு தான் அனுப்ப முடியும்" என்பாராம். அம்மாவை அடிக்கடி சென்று கூட பார்க்காது "வேலை, வேலை" என சுற்றி வந்தவர்தன்னிடம் வேலை பார்த்தவர்கள் மீதும் அவர்கள் உடல்நிலை மீதும் மிகுந்த அக்கறை உள்ளவராக இருந்திருக்கிறார். 

நேரு பிரதமராக இருந்த காலத்தில் காமராஜருக்கு நேரு கையால் சிலை திறக்கப்பட்டுள்ளது. " உயிரோடு இருப்பவர்களுக்கு சிலை திறப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. என்றாலும் ஒரு உண்மையான மக்கள் தலைவராக காமராஜர் இருப்பதால் இதை நான் செய்கிறேன்" என்று பேசினாராம் நேரு.

அரசியலில் தன்னால் வளர்க்கப்பட்ட இந்திரா காந்தியின் பிற்கால நடவடிக்கைகள் குறிப்பாய் எமர்ஜன்சி கொண்டு வந்தது தான் இவரை மிகவும் மனதளவில் நிலை குலைய வைத்தது. இறக்கும் அன்று கூட அவரது கவலை அதுவாக தான் இருந்தது என சொல்லப்படுகிறது. 

நாட்டுக்காகவே வாழ்ந்து மறைந்த இவர் இறந்த போது அவர் சொத்து பத்து கதர் சட்டை, வேஷ்டி மற்றும் நூறு ரூபாய் பணமும் மட்டுமே !!! 

ஒரு சூரியன். ஒரு சந்திரன். ஒரு காமராஜர்! 

நூலின் பெயர்:"காமராஜ்:கருப்பு காந்தியின் வெள்ளைவாழ்க்கை 
விலை: ரூ. 60
வெளியீடு : கிழக்கு பதிப்பகம் 
ஆசிரியர்: நாகூர் ரூமி 

திண்ணை ஜூலை 2தேதியிட்ட இதழில் வெளியானது  
Related Posts Plugin for WordPress, Blogger...