Monday, November 29, 2010

வானவில்: ஒளிபதிவாளர் கோபி நாத் & இந்தியாவின் 4 பெரிய ஊழல்கள்



சந்தித்த நபர் : ஒளிப்பதிவாளர் கோபி நாத்

ஒரு விழாவில் ஒளிப்பதிவாளர் கோபி நாத்தை சந்தித்தேன். எங்கள் ஊர் நீடாமங்கலத்துக்காரர். என் தெரு/ என் பள்ளி சீனியர். ராஜீவ் மேனனிடம் அசிஸ்டன்ட் ஆக இருந்து தில் மூலம் அறிமுகம்.. பின் தூள் வேட்டை காரன் என கலக்கி கொண்டிருக்கிறார். மனிதர் விஜய் ரசிகராயிருப்பார் போலும் !  " ரஜினிக்கு அடுத்து இன்னிக்கும் மாஸ் ஹீரோ விஜய் தான். அந்த அளவு ஒப்பனிங் வேற யாருக்கும் இல்லை" என்றார். (கார்க்கி மற்றும் விஜய் ரசிகர்கள் .. ஹேப்பியா?) தற்சமயம் தனியாக சில விளம்பர படங்கள் எடுப்பதாகவும், ஒரு சில ஆண்டுகளில் படம் இயக்கும் யோசனையும் உள்ளது என்றார். வாழ்க.. வளர்க..எங்க ஊர் பேரை காப்பற்றுக..

இணையத்தில் ரசித்த சிறு கதை 


ஜெய மார்த்தாண்டன் எழுதி கல்கியில் பிரசுரமான "நவநீதகிருஷ்ணனின் காதல் கதை" -யை தனது ப்ளாகில் பகிர்ந்துள்ளார். நேரம் இருக்கும் போது வாசியுங்கள். சொல்லாமல் சொல்லும் சில விஷயங்கள் அருமை .  வாழ்த்துக்கள் ஜெய மார்த்தாண்டன்!!

இந்தியாவை உலுக்கும் நான்கு ஊழல்கள் 

 ஸ்பெக்ட்ரம் ஊழல் மிக பெரிய அளவில் மீடியா கவரேஜ்  , பார்லிமென்ட் புறக்கணிப்பு என அனைவர் கவனத்தையும் ஈர்க்கிறது, இது தவிர இன்னும் சில ஊழல்களும் கூட மிக சூடாகவும் முடிவு என்ன ஆகும் என்ற எதிர் பார்ப்போடும் உள்ளன. 

அவை: 

மகாராஷ்டிரா - கார்கில் போராளிகளுக்கு நிலம் வழங்கியதில் உள்ள ஊழல். (விளைவு: அசோக் சவான் ராஜினாமா) 

காமன் வெல்த் போட்டிகளில் உபகரணங்கள் வாங்கியதில் உள்ள ஊழல்  (தற்போதைய விளைவு: கல்மாடி வெளியேற்றம்) 

இந்த வாரம் latest addition : வங்கிகள் கடன் வழங்க நிறுவனங்களிடம் வாங்கிய ஊழல்.  (தற்போதைய விளைவு: சில வங்கி பெருந்தலைகள் நீக்கப்பட்டுள்ளனர்) 

இந்த ஊழல்களில் முக்கிய புள்ளிகள் தற்சமயம் நீக்கப்பட்டாலும், ஊழல் பற்றி முழு விபரங்களும் வெளி வருமா, வழக்கம் போல் விசாரணை கமிஷன் போன்ற காரணங்களால் மூட படுமா என தெரிய வில்லை. 

அய்யாசாமி தத்துவம்

கணவன் என்பவன் ஒரு ஸ்பிலிட் ஏ சி மாதிரி. ரெண்டிலும் சத்தம் வெளியில் மட்டும் தான் கேக்கும். வீட்டுக்குள்ளே ஒரு சத்தமும் வராது..


பார்த்த படம் : உத்தம புத்திரன் 


நிறைய பதிவர்கள் சொன்னது போல்  படம் நிச்சயம் மெகா சீரியலாக வந்திருக்க வேண்டிய ஒன்று தான். விவேக்  இருந்ததால் சற்று தப்பிக்கிறோம். அதிசயமாக விவேக் சிரிக்க வைக்கிறார். பின் பாதியில் கும்பல் கும்பலாக யார் யாரோ பேசுகிறார்கள். ஹீரோ, ஹீரோயின் பெரும்பாலும் பாட்டு பாட சரியா வந்துடுறாங்க. 

நீங்கள் இது வரை பார்க்கா விடில், ஒரு சனி அல்லது ஞாயிறு மாலையில்  வீட்டில் உட்கார்ந்து டைம் பாசுக்கு  பார்க்கலாம். இல்லையேல், விரைவில் இந்திய தொலை காட்சிகளில் முதன் முறையாக வரும் போது பார்த்து கொள்ளலாம். 

ரசிக்கும் விஷயம்/ முணுமுணுக்கும் வரிகள் 

பட்டாம் பூச்சி..பட்டாம் பூச்சி .. கால்களை கொண்டு தான் ருசி அறியும்.. 
காதல் கொள்ளும் மனித பூச்சி கண்களை கொண்டு தான் ருசி அறியும்.. 

ஒரு விஞ்ஞானி காதலிப்பதால், இந்த பாட்டு முழுதுமே அறிவியல் உண்மைகள் & வார்த்தைகள் கொண்டே வைரமுத்து "காதல் அணுக்கள்" பாடல் எழுதியுள்ளதை நிச்சயம் கவனித்திருப்பீர்கள். பாடலும் படமாக்கப்பட்ட விதமும் அற்புதம் !!

சமீபத்தில் ரசிக்கும் இன்னொரு பாடல்: என்றென்றும் காதல் படத்தில் வரும் "நெஞ்சில்,  நெஞ்சில் இதோ இதோ" .. என்ன ஒரு மெலடி!! ஹாரிஸ் இசை , சின்மயி குரல் இரண்டுமே எப்போதும் கவர்பவை.. இந்த பாடலும் விதி விலக்கல்ல ..

அறிவிப்பு 

அய்யா சாமி ஒரு டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். உடனே சன் டிவி, விஜய் டிவி ரேஞ்சுக்கு யோசிக்க வேண்டாம். அய்யா சாமி லெவலுக்கு சாதாரண டிவி தான். ஒளி பரப்பாகும் முன் நிச்சயம் சொல்கிறேன். முடிந்தால் (தைரியம் இருந்தால்) பாருங்கள்!!

Wednesday, November 24, 2010

பயம் - ஓர் பார்வை ..வாங்க முன்னேறி பார்க்கலாம்: : பகுதி 7

" அச்சமில்லை; அச்சமில்லை என சொல்லி கொள்ளுங்கள்; பிறருக்கும் இதையே சொல்லுங்கள். உலகில் தோன்றிய தீய எண்ணங்கள் எல்லாம் பயத்திலிருந்து தான் தோன்றியிருக்கின்றன" - விவேகானந்தர் 

                                                                 ***

கீழே உள்ள எண்ணங்களில் ஒரு சிலவாவது உங்களுக்கு அவ்வபோது தோன்றுகிறதா?

எனக்கு (கேன்சர் போன்று) ஏதாவது பெரிய நோய் இருக்குமோ? 

ஏதாவது ஒரு விதத்தில் நான் பார்க்கும் வேலைக்கு பிரச்சனை வருமோ? 

நாம் இருக்கும் ஊரில் பூகம்பம். சுனாமி வந்தால் என்னாவது? 

மாணவர் எனில் - இந்த பரிட்சையில் பாஸ் செய்து விடுவேனா? என் படிப்புகேற்ற வேலை கிடைக்குமா? 

உண்மையை சொல்ல வேண்டுமெனில், வாழ்வின் பல்வேறு தருணங்களில் இத்தகைய பய எண்ணங்கள் வரவே செய்கின்றன. இதை தடுக்க முடியாது. அவற்றை நாம் எப்படி எதிர் கொள்கிறோம் என்பது தான் அவசியம். இத்தகைய பயங்களுக்கு நாம் முக்கியத்துவம் தந்து அவை பற்றியே ஆழமாய் சிந்தித்தால் அந்த பயங்கள் சிறிது சிறிதாய் நம்மை ஆட்கொள்ளும். 

இத்தகைய பயங்களில் எதற்கேனும் உடனடி தீர்வு உண்டா? நிச்சயமாய் இல்லை. எனவே அவை பற்றி ஆழ சிந்தித்து எப்படி நம் எண்ணங்கள் மூலம் ரெடிமேட் தீர்வுக்கு வர முடியும்? இத்தகைய பயங்களை எதிர்கொள்ள சிறந்த முறை அவற்றை இக்னோர் ( Ignore ) செய்வது தான் 

மனவியல் வல்லுனர்கள் பலரும் திரும்ப திரும்ப சொல்வது - நம் மனதில் தோன்றும் பயங்களில் குறைந்த பட்சம் 90 சதவீதம் நடக்கவே நடக்காத  விஷயங்கள்! இவற்றிற்கு பயந்து, பயந்து தான் நாம் நிம்மதியையும், எனர்ஜியையும்  இழக்கிறோம்.  இத்தகைய பயங்கள் நம் Idle mind-ல்  எழும் வீணான எண்ணங்கள். அவ்வளவு தான். 

நமக்கு தெரியாத/ புரிந்து கொள்ளாத ஒன்றின் மீது நமக்கு எப்போதும் சற்று பயமிருக்கும். உதாரணமாய் மரணம். இதனை அனுபவித்துப் பார்த்து விட்டு யாரும் சொன்னாரில்லை. எனவே மரணம்/ அதன் பின் என்ன என்பது குறித்த பயம் எல்லோருக்கும் உள்ளது. 

மேலும் நமக்கு தெரியாத, இதுவரை செய்யாத விஷயங்கள் முயற்சிக்கும் போது " நம்மால் ஒழுங்காய் இதனை செய்ய முடியுமா? சரியாக வரா விடில் என்னாகுமோ?" என்ற பயங்கள் இருக்கவே செய்யும்.  

மிக பெரிய ப்ராஜக்டுகளை கற்பனை செய்து அவை ஒவ்வொன்றையும் திரையில் நிஜமாக்கிய இயக்குனர் ஷங்கர் சொன்னது போல், " ஒரு வேலையை துவங்கும் வரை தான் தயக்கம்/ பிரச்சனை. துவங்கிய பின் அந்த வேலையே அதற்கு தேவையான வேலையை வாங்கி கொள்ளும் !"
அரிதாக சில பயங்கள் நன்மை பயப்பவை. உதாரணமாய் ஆரம்பிக்கும் போது சொன்ன பயங்களில், ஒரு மாணவனுக்கு தோன்றும் " நான் தேர்வில் பாஸ் ஆகி விடுவேனா? " என்ற பயம் - படிக்கும் அனைவருக்கும் இருக்கும்/ இருக்க வேண்டிய எண்ணம்- இந்த எண்ணத்தால் தான் அந்த மாணவன் நன்றாக படிப்பான். 

இத்தகைய " நல்ல பயங்களை" நாம் பாசிடிவ் நடவடிக்கை/ செயல்களாக மாற்றி எதிர் கொள்ள வேண்டும். 

"பயமெனும் பேய் தனை கொன்றாய்" என்றார் பாரதி.  எத்தனை அழுத்தமான வரி!  பயம் ஒரு பேய் போல நம் கற்பனை தான். இந்த பயத்தை  கொல்லுங்கள் என்கிறார் பாரதி!!

சில பயங்களை அது சம்பந்த பட்ட அலுவலக/ பழைய நண்பர்களிடம் பேசலாம். இப்படி நாம் பேசும் நபர்கள் தைரியம்/ நம்பிக்கை தர கூடியவர்களாக தேர்வு செய்து பேச வேண்டியது அவசியம். போலவே அவரகள் சொல்லும் நம்பிக்கை வரிகளை நாம் நம்புவதும் முக்கியம். 

உதாரணமாய் குடும்பம்/ வீடு  குறித்த எனது பயங்களை மனைவியிடம் மட்டும் பேசுவேன். அவர் சொல்லும் நம்பிக்கை வார்த்தைகளை முழுதாய் நம்புவேன்/ ஏற்று கொள்வேன். 

நம் உடலை குறித்து வரும் பயங்களை - அவை எத்தனை சிறியதாய் இருந்தாலும் மருத்துவரை பார்க்கும் போது பேசி விடுங்கள். அவற்றில் பெரும்பாலானவை தேவையற்ற பயம் என மருத்துவர் நம் உடல்நிலையில் தெரியும் அறிகுறிகள் (symptoms) வைத்தே கூறி விடுவார். அவசியமானால் அதற்கு சரியான சோதனை (Test) எடுத்து பார்க்க சொல்லுவார். சோம்பேறித்தனப்படாமல், தள்ளிப்போடாமல் அந்த சோதனை செய்துவிட வேண்டும். சோதனை முடிவில் நோய் இல்லை என்று தெரிந்ததும் - அந்த நோய் குறித்த பயம் முழுமையாக போய் விடும். இந்த இரண்டும் (டாக்டரிடம் உடல் பயம் குறித்து பேசுவது/ அவர் சொன்னால் டெஸ்ட் செய்து பார்ப்பது) நான் எப்போதும் பின் பற்றும் விஷயங்கள்.

பயம் குறித்து மேரி கியூரி சொன்ன அழகிய வரிகளுடன் இந்த பதிவை நிறைவு செய்கிறேன்: 

" Nothing in this life is to be feared. It is only to be understood. " - Marie Curie. 

Monday, November 22, 2010

வானவில் : ஜெட்லி திருமணமும் பதிவர் சந்திப்பும்

ஜெட்லி திருமணமும் பதிவர் சந்திப்பும்

சமீபத்தில் நமது பதிவுலக நண்பர் ஜெட்லிக்கு திருமணம்  மிக சிறப்பாக நடந்தது. சுட சுட ஜெட்லி எழுதும் சினிமா விமர்சனங்கள் நீங்கள் நிச்சயம் வாசித்திருப்பீர்கள். திருமண வரவேற்பிற்கு  வர சொல்லி ஜெட்லி பேசிய போது எங்களிடையே நடந்த உரையாடல்:

" கல்யாணம் எங்க ஜெட்லி?"

"எக்மோர் ஆல்பர்ட் தியேட்டர் இருக்குள்ள அண்ணே. அதுக்கு பக்கத்தில.. "

" ஏம்பா..  தியேட்டர் வச்சு தான் அடையாளம் சொல்லுவீங்களா? உங்க கடை திருவான்மியூரில் எங்க இருக்கு?"

" தியாகராஜா தியேட்டர்  பக்கத்திலே அண்ணே" என ஜெட்லி முடிக்கும் முன் போனிலேயே பெரிதாய் சிரிக்க ஆரம்பித்து விட்டேன். " எல்லாம் தியேட்டர் வச்சு தானா?"


 இடமிருந்து வலம்:  கே.ஆர்.பி செந்தில், உண்மை தமிழன், மயில் ராவணன், சங்கர், கேபிள்,  சிரிப்பு போலிஸ் ரமேஷ்,  எறும்பு ராஜ கோபால் & மோகன் குமார் 

ஜாக்கி சேகர் பின்னர் வந்தார். அனைவரும் மனம் விட்டு அரட்டை அடித்து அருமையான சாப்பாடு சாப்பிட்டு மகிழ்ந்தோம்

கேபிள் & சங்கர் (ஜெட்லி நண்பர் ) தவிர பலரை முதன் முறையாக சந்திக்கிறேன். குறிப்பாக மயில் ராவணனுடன் நிறைய பேச முடிந்தது. நல்ல மனிதர். இன்னும் நிறைய பழக வேண்டும் என எண்ண வைத்தார்.

ஜெட்லி மண வாழ்க்கை வெற்றி கரமாய் அமைய வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்..  


அய்யா சாமி சிந்தனை

பண்டிகை நாளில் சாப்பாடு செஞ்சு மாடியில் வச்சா காக்கா வந்து சாப்பிட மாட்டேங்குது.

சாதாரண நாளில் மாடியில் கோதுமை, பருப்பு ஏதாவது காய வச்சா காக்கா வந்து இறைச்சிட்டு போயிடுது.

என்ன உலகம் சார் இது!!

ரசிக்கும் விஷயம் : சுப்ரபாதம் & கந்த சஷ்டி கவசம்

கடந்த சில மாதங்களாக காலையில் வீட்டு வேலை செய்து கொண்டே  சுப்ர பாதம் & கந்த சஷ்டி கவசம் கேட்கும் வழக்கம் வந்துள்ளது.  ஹவுஸ் பாஸ் மூலம் வந்த பழக்கம் என்றாலும் இது நன்றாகவே உள்ளது !  சுப்ர பாதம் & கந்த சஷ்டி கவசம் - இரண்டிலும் குறிப்பிட்ட சில இடங்கள் கேட்கும் போது ரொம்ப உற்சாகமாக இருக்கும். எம். எஸ் அம்மாவின் குரல் தெய்வீகம்!!

அறிவிப்பு 

தொடர்ந்து மூன்று வாரங்களாக அடுத்தடுத்து வானவில் மட்டுமே பதிவாக வருகிறது. இவ்வாறு நடப்பது இது முதல் முறையாக இருக்கலாம்.

விரைவில் "வாங்க முன்னேறி பார்க்கலாம்"  தொடர் மீண்டும் துவங்குகிறது.  இந்த வாரம் புதன் அல்லது வியாழன் இப்பதிவு வெளி வரும். வழக்கம் போல் உங்கள் ஆதரவை தருக. வாரா வாரம் வெளி வருமா என உறுதி சொல்ல முடிய வில்லை. ஆனால் இயலும் போதெல்லாம் எழுதவும், முடிந்தால் புத்தகமாய் கொண்டு வரவும் எண்ணம். பார்க்கலாம் 

ரசித்த SMS: 

To the question of your life, you are the answer. To the problem of your life, you are the only solution - Albert Einstein. 


மாமி

நான் சென்னை வந்த போது தங்கிய முதல் இடம் எனது மாமியின் வீடு. நாற்பது  ஆண்டுகளுக்கும் மேலாக இருதய நோயால் அவதிப்பட்ட மாமி சமீபத்தில் மரணமடைந்தார். இதய வால்வ் மாற்றி முப்பது ஆண்டுகள் ஆகி, பின் அதே வால்வில் பிரச்சனை வந்தது. புகழ் பெற்ற மருத்துவரான தணிகாசலம் " ஆப்பரேஷன் செய்தால் பிழைப்பது கடினம்; இப்படியே மருந்து மாத்திரையில் தொடரலாம் " என சொல்லி அதன் பின் 6  அல்லது  7 ஆண்டுகள் இருந்தார்.  


எங்கள் ஊரிலிருந்து சென்னை வரும் பலரும் மாமா- மாமி வீட்டை தான் நாடுவார்கள். அனைவருக்கும் அலுக்காமல் சமையல் செய்து அன்புடன் உபசரிப்பார். சிரித்த முகம். இந்த தீபாவளி அன்று வீட்டில் செய்த பலகாரங்களுடன் சென்று பார்த்து விட்டு ஆசீர்வாதம் வாங்கி வந்தேன். அத்தனை உடல் உபாதைகளையும் தாங்கி கொண்டு கடைசி வரை தன் கடமையை செய்தவர். மிக கடுமையான ஒரு நோயுடன், என்றும் தன் கடமையை செய்த, பிறருக்கு எந்த விதத்திலும் துன்பம் எண்ணாத ஒரு ஜீவன். தன் குழந்தைகள் இருவரும் வாழ்க்கையில் குழந்தை, வீடு என செட்டில் ஆனதை பார்த்து விட்டு (இவர் மகள் எனது சின்ன அண்ணி) நிம்மதியாக இறந்தார். 

இவரை போல் நாமும் கஷ்டங்களையும் வேதனையும் சகித்து கொண்டு புன்னகையுடன் கடமைகளை கடைசி வரை செய்ய வேண்டும் என தோன்றியது.  இவர் இறந்த பின் வந்து பார்த்த டாக்டர் தணிகாசலம் சொன்னது: "I have lost a person who was my patient for the last 40 years!!" 

கவனித்த விஷயம்

இந்த மரணத்திற்கு வந்திருந்த பல உறவினர்கள், நண்பர்களை கவனித்த போது நாற்பது அல்லது ஐம்பது வயதை தாண்டிய பல அண்ணன்- தம்பிகள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளவே இல்லை. தம்பியை யாரென்றே தெரியாத நபர் போல் இருக்கிறார்கள். இது ஏன் என என் அண்ணனிடம் கேட்ட போது " சொத்து பிரிக்கும் போது பொதுவா சண்டை வந்துடும்; அதுக்கு பிறகு பேச்சு வார்த்தை இருக்காது" என சாதாரணமாய் சொன்னார். 

"தம்பி உடையான் படைக்கஞ்சான்" ;  " தான் ஆடா விட்டாலும் சதை ஆடும்"  என்றெல்லாம் பழமொழிகள் இருக்க, நிஜம் வேறு விதமாய் இருப்பது மனதை தைத்தது. 

Monday, November 15, 2010

வானவில் : மைனா படமும், எல்.கே. அத்வானியும்

மைனா


பிரபு சாலமன் இயக்கிய படங்களில் மைனா அவருக்கு நிச்சயம் பேர் வாங்கி தந்துள்ளது. கதை போன்றவை ஏற்கனவே நீங்கள் பல பதிவுகளில் வாசித்திருப்பீர்கள்.

இரண்டு போலீஸ்காரர்களுக்கும் உள்ள மனைவிகள்: ஒருவர் போலீஸ் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்றும் இன்னொருவர் எப்படி இருக்க கூடாது என்றும் அமைத்தது அழகு. பேருந்து விபத்துக்குள்ளான காட்சிக்கு பின் சில நிமிடங்கள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றனர். தம்பி ராமையா பேச்சு, முக பாவங்களால் பல முறை சிரிக்கவும் சில நேரம் நெகிழவும் வைக்கிறார்.

இறுதி காட்சிகள் நம்மை பாதிப்புக்குள்ளாக்கவே எடுக்க பட்டுள்ளது. சோக முடிவு எனில் மனதில் நிற்கும் என... ஆனால் இதில் உள்ள அடிப்படை கேள்வி, மைனா வயதான தம்பி ராமையா வீட்டுக்கு போகாமல் இளம் வயது இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு அந்த இரவு ஏன் போக வேண்டும் என்பது !!

நல்ல ஒரு படைப்பு என்ற அளவில் இது (குழந்தைகள் தவிர்த்து) பார்க்க கூடிய படமே.

அரசியல் பக்கம்

ஒபாமா பாராளுமன்றத்தில் உரை ஆற்றி முடித்ததும் அனைத்து தலைவர்களும் வெளியே செல்ல முயன்றுள்ளனர். ஆனால் கதவுகள் சாத்தப்பட்டிருக்க சோனியாவும் ராகுலும் அத்வானி அறைக்கு எதிரே நிற்குமாறு ஆகியுள்ளது. இதை பார்த்து விட்டு அத்வானி அவர்களை உள்ளே அழைத்து அமர வைத்துள்ளார். ராகுல் அவரிடம் அப்போது அரசியல் சம்பந்தமான சில அடிப்படை சந்தேங்கள் கேட்க அத்வானி பதில் தந்துள்ளார். உடன் இருந்த அத்வானி மகள் அத்வானிக்கு பிறந்த நாள் என்றும் இருவரும் வீட்டுக்கு வர வேண்டும் என்றும் கூற, "முதலில் இங்கேயே பார்ட்டி கொண்டாடுவோம்" என கேண்டீனில் ஏதாவது வாங்கி வர சொல்லி உள்ளனர். கான்டீன் பூட்டியிருந்ததால் வாங்க முடிய வில்லை. பின்னர் நடந்த அத்வானி பர்த்டே பார்ட்டிக்கு ராகுல் மட்டும் பூங்கொத்துடன் சென்றுள்ளார். ம்ம் தமிழகத்தில் இப்படியெல்லாம் நடக்குமா? அம்மா ஜெயிச்சால் கலைஞர் சட்டசபை வருவதில்லை. கலைஞர் ஜெயிச்சால் அம்மா சட்டசபை வருவதில்லை.


சென்னை ஸ்பெஷல் : வேளச்சேரியின் பாக்டரி அவுட்லட்டுகள்

ஆண்கள் சட்டை மற்றும் முழுக்கால் சட்டைகளுக்கு வேளச்சேரியின் பாக்டரி அவுட்லட்டுகள் நல்ல choice என்று சொல்லலாம். ரேமன்ட் போன்ற ஷோ ரூம்கள் போய் பர்ஸ் பழுப்பதை விட இங்கு நல்ல விலைக்கு  துணிகள் வாங்கலாம். பீட்டர் இங்கிலாந்த், வான் ஹுசைன் போன்ற பல்வேறு பாக்டரி அவுட்லட்டுகள் வேளச்சேரியில் உள்ளன. ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள் !


மனதை வருத்திய சம்பவம்


என்னுடன் சட்ட கல்லூரியில் படித்த நண்பன். வக்கீலாக பணி புரிகிறான். பொதுவாக தேவை இல்லாத பிரச்சனைகள் பக்கம் செல்லாதவன். சமீபத்தில் சென்னையில் பெருங்குடி அருகே தனது காரில் இரவு ஒன்பதரை மணிக்கு வரும் போது ஒரு பைக்கில் வந்த மூன்று பேர் அவனது காரை மறித்து, வெளியே இழுத்து மிக கடுமையாக தாக்கியுள்ளனர். " ஏன் அடிக்கிறீர்கள்?" என அவன் பல முறை கேட்ட பிறகு " நீ எங்கள் பைக்கை இடித்து விட்டு கண்டு கொள்ளாமல் சென்றாய்" என்று கூறியுள்ளனர். " நான் யாரையும் இடிக்கலை; யாருக்கும் அடி பட்ட மாத்ரி தெரியலையே" என அவன் சொல்ல, " அடி பட்டது வேற ஒருவன்" என சொல்லி அவனிடம் இருந்த ரெண்டாயிரம் ரூபாயை பிடுங்கி கொண்டு சென்றுள்ளனர். அடி பட்ட என் நண்பனுக்கு காது டிரம் இரண்டும் கிழிந்து விட்டது. அவன் உடன் பணி புரியும் வக்கீல்களுக்கு தொலை பேச, அவர்கள் வந்து அவனை மருத்துவரிடம் காட்டி விட்டு, போலீசிலும் கம்ப்ளைன்ட் தந்துள்ளனர். ஆனால் அவர்கள் ஆளும் கட்சி ஆட்கள் என்பதால் கைது செய்ய பட வில்லை. சில நாட்கள் பொருத்து பார்த்த வக்கீல்கள் தொடர்ந்து கோர்ட் புறக்கணிக்க அதன் பின் அடித்த மூவரில் இருவரை கைது செய்துள்ளது போலிஸ். முக்கிய நபர் ஆளும் கட்சி என அவர் கைது செய்ய படலை.

அடி பட்ட நபர் வக்கீல் என்பதால் சென்னை மற்றும் அதன் சுற்று புற கோர்ட்டுகள் அனைத்தும் சில நாட்கள் புறக்கணித்து இரண்டு பேர் கைது செய்ய பட்டனர். இது சாதாரண நபருக்கு நடந்தால் என்ன ஆவது? நிச்சயம் அடி வாங்கி கொண்டு பணத்தை கொடுத்து விட்டு போக வேண்டியது தான்.

என் அலுவலகத்தில் இருக்கும் பெருங்குடி காரர்களிடம் பேசிய போது ஓ.எம். ஆர். ரோடில் இரவில் ரௌடிகளால் நிறைய அராஜகம் இது போல் நடப்பதாகவும் போலிஸ் அவர்களை எதுவும் செய்வதில்லை என்றும் சொல்கிறார்கள். இரவில் வந்தால் காரை அல்லது பைக்கை அடித்து பணம் பிடுங்குவது, பெண்களை அப்படியே இழுத்து கொண்டு போய் விடுவது போன்ற சம்பவங்கள் சாதாரணமாக நடக்கிறதாம். இவை மேல் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லையாம்.

அரசாங்கம் என்ன செய்கிறது என தெரிய வில்லை. இத்தகைய சம்பவங்களை உண்மையில் தடுக்க விரும்பினால் சில போலிஸ்கள் இரவு நேரத்தில் இத்தகைய இடங்களில் வைக்கலாம். ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம். எதுவும் செய்யபடுவதில்லை. துணை முதல்வர் கடந்த ஒரு ஆண்டில் சென்னையில் இரண்டு குழந்தைகள் தான் கடத்தப்பட்டன. மற்றவை காதல் போன்ற விஷயத்தால் ஓடியவை என்று கூறியிருக்கிறார்.. ம்ம்ம் சென்னையில் நான் இருக்கும் சிறு இடத்திலேயே இரண்டுக்கு மேற்பட்ட கடத்தல் சம்பவங்கள் கடந்த சில மாதங்களில் மட்டும் நடந்து விட்டன.

தமிழகத்தின் நிலை உண்மையில் வருத்தப்பட வைக்கிறது.

அய்யாசாமி ரசித்த வரிகள்

"மனைவி கிட்டே தோத்தவன் வாழ்க்கையில் ஜெயிப்பான்.

மனைவி கிட்டே ஜெயிச்சவன் வாழ்க்கையில் தோத்துடுவான். "
****
"இதனால் தான் நான் எப்பவும் வீட்டம்மா கிட்டே தோக்குறேன்" என்கிறார் அய்யாசாமி பெருமிதத்துடன்.

சட்ட சொல் : Damage  & Damages

Damages என்பது Damage-ன் (Plural) அல்ல என்பதை அறிவீர்களா?

Damage என்றால் பாதிப்பு அல்லது இழப்பு என்று சொல்லலாம். உங்களுக்கு நடந்த பாதிப்பிற்காக நீங்கள் வழக்கு தொடர்ந்தால், அதில் நீங்கள் கேட்பது Damages அதாவது இழப்பீடு.

சுருக்கமாய் சொன்னால் வழக்கு தொடர்பவர் தனக்கு நடந்த இழப்பிற்காக (Damage), இழப்பீடு (Damages) கேட்கிறார்.

ரசிக்கும் விஷயம் : பட்டாம் பூச்சி

நாங்கள் சென்னையில் வசிக்கும் இடத்தில நிறையவே தனி வீடுகள் என்பதால் பலரும் மரங்கள் அல்லது குறைந்தது செடிகளாவது வளர்க்கிறார்கள். எனவே எங்கள் ஏரியாவில் நிறைய பட்டாம் பூச்சிகளை பார்க்க முடியும். பல நாட்கள் வீட்டிலிருந்து அலுவலகம் செல்லும் காலை நேரத்தில் ஒரு பட்டாம் பூச்சியாவது பார்க்கிறேன். பட்டாம் பூச்சி பார்ப்பது ஒரு Good Omen என்பது போல் ஆகி விட்டது.


பட்டாம் பூச்சிகள் தான் எத்தனை அழகான வண்ணங்களில் உள்ளன ! இது பற்றி ஒரு ஆராய்ச்சியே செய்து வருகிறேன். பொதுவாய் தங்க நிற பட்டாம் பூச்சிகள் தான் அதிகம் உள்ளன. மேலும் வெள்ளை, கருப்பு, நீலம் என பல்வேறு நிறங்களில் அவை உள்ளன. பட்டாம் பூச்சிகள் எந்த நிறத்தில் இருந்தாலும் அவற்றின் ஓரம் பெரும்பாலும் கருப்பு வண்ணத்தில் உள்ளது.

நிற்க, இதற்கு மேல் தொடர்ந்தால் நீங்கள் என்னை உதைக்கலாம். ஆனால் ஒன்று பட்டாம் பூச்சியை பார்க்க நேர்ந்தால் சில நொடிகள் குழந்தை போல் ரசிக்கலாம். சில நொடிகள் தான். பின் உங்கள் பார்வையிலிருந்து அது நிச்சயம் மறைந்து விடும். கடவுள் (நீங்கள் நம்பாவிடில் இயற்கை) யின் அழகிய படைப்பு பட்டாம் பூச்சி..

Tuesday, November 9, 2010

வானவில்: இயக்குனர் ஷங்கரும் மிச்சேல் ஒபாமாவும்

சென்னை ஸ்பெஷல்: திருவல்லிகேணி : பழைய புத்தக கடைகள்

எஸ். ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பல எழுத்தாளர்களே பழைய புத்தக கடைகளை விரும்பி செல்கிறார்கள். நானும் கூட தான்... இங்கு பல முறை அற்புத புத்தகங்கள் குறைந்த விலைக்கு கிடைக்கும். ஒரு காலத்தில் மூர் மார்க்கட் பழைய புத்தகங்களுக்கு புகழ் பெற்ற இடமாயிருந்தது. தற்போது அவ்வளவு பெரிய பழைய புத்தக சந்தை எங்கும் இல்லை. அதற்கு அடுத்த படி திருவல்லிகேணியில் நிறைய பழைய புத்தக கடைகள் உள்ளன. சேப்பாக் ஸ்டேடியம் அருகே,  பீச்சிலிருந்து நடந்து போகும் தூரம் தான். நீங்கள் புத்தக ஆர்வலர் எனில் இந்த கடைகளுக்கு ஒரு முறை சென்று பாருங்கள் நம்ப முடியாத விலையில் அருமையான புத்தகங்களை அள்ளி வரலாம். 

வலை பக்கம் ரசித்தது 

என். கணேசன் எழுதிய குங்க்ஃபூ பாண்டாவும் வாழ்க்கை தத்துவமும் என்ற பதிவை வாசியுங்கள். படத்தை பற்றியும் அதில் உள்ள வாழ்க்கை தத்துவங்களையும் எளிமையாய் கூறியுள்ளார். படம் பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டி விட்டதுடன், வாசிக்கும் போதே அந்த தத்துவங்கள் நிறைய சிந்திக்கவும் வைத்தது.  


நம்பிக்கை கார்னர் 



இயக்குனர் ஷங்கர் ஒரு பேட்டியில் சொன்னது: " எந்த வேலையாய் இருந்தாலும் ரொம்ப யோசித்து கொண்டிருக்காதீர்கள். முதலில் வேலையில் இறங்கி விடுங்கள். பின் அந்த வேலையே தனக்கு தேவையான விஷயங்களை வாங்கி கொள்ளும்" . எவ்வளவு உண்மை இது!! விஷயங்களை துவங்கும் வரை தான் பிரச்சனை. துவங்கிய பின் யார் யாரோ உதவ எந்த வேலையும் நன்றாக முடிந்து விடுகிறது தானே!! 

சந்தேகம்

டாக்டர்  படித்தவர்கள் மேலே பல கோர்ஸ்கள் படிக்கிறார்கள். இதில் DGO  என்று சொல்கிற Gynacology  முடித்தவர்கள் பெரும்பாலும் பெண்களாக தான் இருக்கிறார்கள். பெண்களுக்கு வைத்தியம் பார்ப்பதால் என்றாலும், மற்ற பிற நோய்களுக்கு ஆண் டாக்டர்களே பார்க்கிறார்களே! நீங்கள் DGO முடித்த ஆண் டாக்டரை பார்த்திருக்கிறீர்களா? தெரிந்தால் சொல்லுங்கள்.. 

அய்யாசாமி

அய்யாசாமி இரவகளில் நடுவில் எழுந்தால் நேரம் பார்ப்பதில்லை. இது ஏன் என்று கேட்ட போது நேரம் பார்த்தால் டென்ஷன் ஆகிடுது என்கிறார். மேலும் கிளறிய போது, "நேரம் தெரிந்தால், தூக்கம் கொஞ்ச நேரம் வரா விட்டாலும் காலை வரை இன்னும் ரொம்ப நேரம் விழிக்கனுமா என டென்ஷன் வந்துடுது.  இதனால் காலை சூரிய வெளிச்சம் வந்த பின் தான் நேரம் பார்ப்பேன்" என்றார். யோசித்தால்,  இவர் சொல்வதிலும் கொஞ்சம் உண்மை இருக்க தான் செய்யுது. 


ரசிக்கும்  விஷயம் : பசுமை 

ரசிக்கும் விஷயம் அவ்வபோது தொடர்ந்து எழுத எண்ணம். இதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. கடந்த சில மாதங்களாக வேலை பளு மட்டுமல்லாது ஏதோ சில தேவையற்ற சுமைகள் மனதுள். வாழ்க்கையை நன்றாக என்ஜாய் செய்ய வில்லையோ என்ற எண்ணம் ஒரு பக்கம்.  

சென்ற பதிவில் " மேகம்" பற்றி எழுதிய பின், இதே போல் ரசிக்கும் விஷயங்கள் என்னென்ன என பட்டியிலிட்டு பார்த்த பின் தான், வாழ்க்கையில் தொடர்ந்து பல விஷயங்களை ரசித்து கொண்டும், என்ஜாய் செய்து கொண்டும் இருப்பது புரிந்தது. அப்படி பட்டியலிட்ட சில வானவில்லில் தொடரும். நீங்களும் ரசித்தால் " சேம் ப்ளட்" சொல்லலாம்.. 

****
பச்சை நிறத்தில் வயல்கள், புல், மரங்கள் என எதை பார்த்தாலும் மனசு சில நொடிகள் பச்சையில் லயித்து விட்டு மீள்கிறது. பசுமையை பார்ப்பது மனதுக்கு மிக நல்லது செய்யும் என்கிறார்கள். டிவியில் ஏதேனும் நிகழ்ச்சி பார்க்கும் போது கூட பசுமையான காட்சிகள் எனில் உதடு புன்னகை பூசி கொள்கிறது. 

(அடுத்து பகிர போகும் "ரசிக்கும் விஷயம்" கூட பசுமையுடன்  தொடர்புடைய மற்றொரு அழகிய விஷயம் தான் ) 

மிச்சேல் ஒபாமா

ஒபாமா வருகை குறித்த தகவல்கள்/ அவர் பேச்சு நான் உன்னிப்பாய் கவனித்தேன். நிற்க. அவர் மனைவி மிச்சேல் இளைஞர்கள் இடையே பேசிய  சில வரிகள் இதோ உங்கள் பார்வைக்கு: 

" நான் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவள். எங்களால் வெளி நாடு செல்வது என்பதெல்லாம் நினைக்க முடியாத விஷயம். ஆயினும் நான் பெரிய நிலையை அடைவேன் என நம்பினேன். நீங்களும் பெரிய விஷயங்களை அடைவீர்கள் என நம்புங்கள். கனவு காண்பதும், அதனை அடைய முயல்வதும், உங்களுக்கும் உங்கள் சுற்றி உள்ள உலகிற்கும் மிகுந்த நன்மை பயக்கும். நீங்கள் எது செய்தாலும் அதை சிறந்த முறையில் செய்யுங்கள். நிச்சயம் முன்னேறுவீர்கள். (Aim for excellence in whatever you do; you will succeeed). 

Friday, November 5, 2010

ரஜினியும் லியோனியும் -டிவியில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்

நமது பண்டிகைகள் டிவி முன் தான் செலவிடுவது என ஆகி போய் கொஞ்ச காலமாகிறது. லீவு நாளில் வேலை இல்லாமல் பின் எப்படி தான் பொழுதை கழிப்பது?  புக் படித்தால்  " குடும்பத்தோடு கூட இல்லை" என பிரச்சனை வரலாம். குடும்பத்துடன் டிவி பார்த்தால், அவர்களுடன் பொழுதை கழித்த மாதிரி ஆச்சு. இந்த வருட தீபாவளி டிவி நிகழ்சிகள் எப்புடி?? வாங்க பாக்கலாம்


**

முதலில் டிவியில் தீபாவளி சிறப்பு  படங்கள் : ம்ம்ம் என்னத்தை சொல்றது! அழகிய தமிழ் மகனுக்கு பிறகு விஜய் நாலு படம் நடிச்சு முடிச்சாச்சு. அதை தீபாவளி சிறப்பு படம்னு சன்னில் போட்டாங்க. ரிலீஸ் ஆகி மூணு வருஷம் கழிச்சு சிவாஜி இப்போ தான் கலைஞரில் !! இதனை தியேட்டர் அல்லது சிடியிலாவது இதுவரை பார்க்காமல் எத்தனை பேர் இருந்திருப்பார்கள்? விஜய் டிவியில் சில மாதங்களுக்கு முன் பண்டிகை ஒன்றுமே இல்லாமல் திடீரென ஈரம் போட்டார்கள். தீபாவளிக்கு மீண்டும் சில மாதங்களில் அதே ஈரம்!! தீபாவளிக்கு முதல் நாளே விஜயில் போடப்பட்ட களவாணி தான் தீபாவளி சிறப்பு படங்களில் ஓகே. ஆனால் ஏகப்பட்ட விளம்பரங்களுடன் நான்கு மணி நேரத்துக்கு மேலாய் படம் ஓடி கொண்டிருந்தது. (நாலு மணி நேரம் தாண்டியதும் நிறுத்தியாச்சு) 

***
லியோனி பட்டி மன்றம் சிரிக்கலாம் என்ற எண்ணத்தில் அவ்வபோது பார்ப்பதுண்டு; கலைஞரில் லியோனி இம்முறை ஏமாற்றவில்லை. தலைப்பு "திரை பட பாடல்கள், படம் வெற்றி பெற உதவுகிறது / உதவ வில்லை".  வழக்கமாய் லியோனி பேச்சு தான் செம சிரிப்பாய் இருக்கும். இம்முறை இனியவன் என்ற இளைஞர் பேசியதில் வீட்டில் அனைவரும் உண்மையில் விழுந்து விழுந்து சிரித்தோம். புது பாடல்களுக்கு அவர் குடுத்த விளக்கங்கள் தான் ஹை லைட். உதாரணத்திற்க்கு ஒன்று: " லாலாக்கு டோல் டப்பிம்மா" பாட்டு பெண்களை காப்பாற்றும் பாட்டு . லாலா என்றால் திருநெல்வேலி ; டோல் டப்பி மா இவை அடுப்பு சாப்பாடு மாவு இவற்றை குறிக்கும். திருநெல்வேலியில் அடுப்பில் மாவு வேலை செய்யும் கங்கம்மா, உன் இடுப்பை திருப்பி பின்னால் பார் , இல்லா விடில் உன் புடவையில் நெருப்பு பத்திக்கும் என்ற அர்த்தம் உள்ள பாட்டு" என்றார். மேலும் பல பாடல் விளக்கங்கள் செம சிரிப்பு.  

நிறைய இடங்களில் சிரிக்க முடிந்ததால்  இந்த நிகழ்ச்சி நன்கு என்ஜாய் செய்ய முடிந்தது. 
**
இந்த லியோனி பட்டி மன்றம் கலைஞரில் நடக்கும் போதே விஜயில் கமல் பேட்டி!! விளம்பர இடைவெளிகளில் மாறி மாறி பார்த்த வரையில் வாலி, வைரமுத்து, ஞான சம்பந்தன், கலைஞர் என அனைவரும் கமல் ஒரு மிக சிறந்த கவிஞர் என சொல்லி வாய்த்த மாதிரி பேசினார்கள்.வேற ஒண்ணும் இல்ல.. மன்மதன் அம்புல கமல் நாலு பாட்டு எழுதுறாருள்ள!! அதான் !! அப்புறம் கமல் ஆர்.சி சக்தி போன்றோருடன் இருந்த புகை படங்களை காட்டி பேசி கொண்டிருந்தார். (கேட்டாச்சு !! கேட்டாச்சு!!) வழக்கம் போல் இருந்தது கமல் பேச்சு.   கமலின் இந்த பேட்டி புரிந்தது என்று சொன்னால் என்னை அறிவு ஜீவி என நீங்கள் நினைக்கலாம். அப்படி நினைக்க உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் அது உண்மை இல்லை என்று சொல்ல எனக்கும் அதே அளவு உரிமை உண்டு. (ஹிஹி.. கடைசி வரிகள் கமல் பாதிப்பு )
**
தீபாவளிக்கு வந்த புது பட பாடல்களில் இது வரை டிவியில் பார்த்த வரை " மைனா" படத்தின் "ஜிங் சிக்கா" பாடல் செம டப்பங்குத்தாய் உள்ளது. பீட் & டியூன் அருமை. இசை இமானாம். நம்ப முடிய வில்லை!!!
**
விஜய் டிவியின் சிறப்பு நீயா நானா தலைப்பு : வெற்றி பெற அதிகம் தேவை: கடின உழைப்பா; அதிர்ஷ்டமா? பிரபு சாலமன், வெங்கடேஷ், நந்தினி  போன்ற இயக்குனர்கள் மேலும் பல சின்ன திரை நட்சத்திரங்கள் ( நோ ரெகுலர் பப்ளிக்) கலந்து கொண்ட நிகழ்ச்சி. இந்த தலைப்பு திரை உலகில் வெற்றி பெற தேவை உழைப்பா அதிர்ஷ்டமா என்றே சென்றது. திரை உலகம் மற்ற துறைகளில் இருந்து மிக வித்யாசமானது. அதன் நடை முறை, ரூல்கள் பிற துறைகளுக்கு (உதாரணமாய் ஒரு அலுவலகத்தில் பணி புரிபவருக்கு) ஒத்து போகாது. தலைப்பு ஓரளவு நன்றாயிருந்தாலும் கலந்து கொண்டவர்கள் பேச்சு சற்று ஏமாற்றமாகவே இருந்தது. 

**
மிக அதிக நாட்களாய் விளம்பரம் செய்யப்பட்ட " எந்திரன் உருவான கதை" - ஓரளவு சுவாரஸ்யமாய் இருந்தது. இதில் கவனித்த சில துளிகள்:

* ரஜினிக்கு பெரும்பாலும் டூப் இருந்த மாதிரி தெரியலை; ஒன்று ரஜினி; அல்லது கம்பியுடர் கிராபிக்ஸ். நாம் கிராபிக்ஸ் என நினைத்த பல இடங்களில் ரஜினியை பெண்டு நிமிர்த்தியிருக்கிறார்கள்.

* ஒளிப்பதிவாளர் ரத்னவேலு பல நேரங்களில் கேமராவை தோளில் சுமத படியே ஓடுகிறார். பாவம்.. செம வெயிட் .. கடும் உழைப்பு..

* படம் பார்த்த போது ஐஸ்வர்யா ராயை  அதிகம் ரசிக்கலை.  படம் நடந்தஷூட்டிங் ஸ்பாட்  இடங்களுடன் (Live  ) பார்த்த போது அவரது நடன அசைவுகளை ரசிக்க முடிந்தது.
***
டிவியில் செய்திகள் அல்லது விளம்பரம் வரும் இடைவெளியில் சுட சுட எழுதப்பட்ட பதிவு. 

புத்தாடை, இனிப்பு, ஓரிரு உறவினர்கள் வீட்டுக்கு செல்வது, டிவி நிகழ்ச்சிகள் மற்றும் வெடியுடன் வழக்கம் போல் கழிந்தது தீபாவளி.. 

ம்ம் இன்னும் ஒரு வருஷம் ஆகும் அடுத்த தீபாவளி  வர.. 

Tuesday, November 2, 2010

தீபாவளி நினைவுகள்

நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!! 

இப்பதிவின் தலைப்பை தீபாவளி நினைவுகள் என்பதை விட வெடி கடை நினைவுகள் என சொல்லி விடலாம். எங்கள் ஊர் நீடாமங்கலத்தில் அப்பா மருந்து கடை வைத்திருந்தார். தீபாவளி சமயம் மட்டும் வெடி கடை வைப்போம். இதில் அண்ணன்கள் இருவர் தான் எல்லா வேலைகளும் (சிவகாசி உள்ளிட்ட பல இடங்களில்  இருந்து வெடி வாங்குவது, கடையில் அமர்ந்து வியாபாரம் பார்ப்பது) செய்வார்கள். அண்ணன்கள் கல்லூரி படித்த போது, தீபாவளி நேரம் விடுப்பில் ஒரு வாரம் வந்து அனைத்து வேலைகள் செய்வார்கள். அவர்கள் இருவரும் வேலைக்கு சென்ற போது நான் கல்லூரியில் இருந்தேன். இப்போது வெடி கடையை பார்ப்பது என் வேலை ஆனது. 

வெடி கடை வேலை நிறைய மெனக்கெட வேண்டி இருந்தாலும் ரொம்ப சந்தோஷமாய் செய்வோம். 

வெடி வியாபாரம் கிட்டத்தட்ட 40 % லாபம் உள்ள தொழில். நீங்கள் வெடி வாங்கும் போது எந்த தயக்கமும் இன்றி bargain செய்யலாம். நிச்சயம் விலை குறைத்து தருவார்கள். 

பாக்ஸில் போட்டிருக்கும் விலை கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகமாக இருக்கும். இதனை பார்த்து ஏமாந்து விடாதீர்கள்.  ஒரு முறை கடையில் எங்களுக்கு உதவ வந்திருந்த என் நண்பன் மோகன் (அவன் பெயரும் மோகன் தான்) தந்தைக்கு எல்லா வெடியும் பாக்ஸ் ரேட்டிற்கு போட்டு ஒருவர் அனுப்பி விட, தீபாவளி அன்று வீட்டுக்கு வந்து (செல்ல) சண்டை போட்டான் நண்பன் மோகன்.

தஞ்சை அருகே அய்யம்பேட்டையில் கிடைக்கும் லட்சுமி வெடி மிக அற்புதமாய் இருக்கும். சத்தமும் அதிகம். விலையும் சிவகாசி விட குறைவு. இதனை பல வருடங்கள் நேரே சென்று வாங்கி வருவேன். பஸ்ஸில் வெடி மூட்டையுடன் பயணிப்பது ஒரு திரில் அனுபவம்.  

எங்கள் ஊரில் தீபாவளி சமயம் மைக் மூலம் ஒவ்வொரு கடைக்கும் விளம்பரம் செய்வார்கள். துணி கடை, சுவீட் கடை, வெடி கடை இப்படி அனைத்திற்கும் ஒரே இடத்திலிருந்து மைக் மூலம் விளம்பரம் செய்ய படும். எங்கள் கடையை வெடி கடை அல்ல வெடி கடல் என விளம்பரம் செய்வோம். சில நேரம் அந்த மைக்கில் எங்கள் கடைக்காக நானும் பேசியது உண்டு!!

(This photo is taken from Net -  not our shop!!)

ஒரு குறிப்பிட்ட வெடி தரையில் ஒன்றோடு ஒன்று முட்டி கொண்டு பின் வானத்தில் போய் டபிள் ஷாட் போல் வெடிக்கும். இதற்கு மாமியார் மருமகள் வெடி என பெயர் வைத்திருந்தோம். இதனை மைக் மூலம் விளம்பரம் செய்ய, ரொம்ப பேமஸ் ஆகி விட்டது. எல்லோரும் இதே வெடி கேட்க, பின் குறிப்பிட்ட அளவு பணத்திற்கு வெடி வாங்கினால் மட்டுமே மாமியார் மருமகள் வெடி கிடைக்கும் என புது ரூல் போட்டு சமாளிக்க வேண்டியதாயிற்று.  

தீபாவளிக்கு முதல் நாள் தவிர மற்ற நாட்கள் கடையில் அதிக கூட்டம் இருக்காது. அப்போது எங்களில் ஓரிருவர் கீழே இறங்கி வெடி வாங்குவது போல் வாங்குவோம். மக்கள் சைக்காலஜி "கூட்டம் உள்ள கடைக்கு போக வேண்டும்" என்பதே. அப்படி ஆட்கள் வந்து விட்டால் கீழே நின்றவரே மேலே போய்,  வியாபாரம் செய்வார்!! 

மொத்த வியாபாரத்தில் 90 சதவீதம் தீபாவளிக்கு முதல் நாள் தான் நடக்கும். எங்கள் ஊரை சுற்றி உள்ள கிராமத்து மனிதர்கள் அன்று வந்து வாங்குவர். அன்று மழை பெய்தாலும் கூட, மழை இல்லாத நேரத்தில் சரியாக கூட்டம் அம்மி விடும். இந்த நேரத்தில் திருடவே ஒரு கூட்டமிருக்கும். சிலர் வெடி வாங்கி விட்டு பணம் தராமல் டிமிக்கி கொடுப்பர். இதனை மட்டுமே கடையிலிருந்து ஒருவர் பார்த்து கொண்டிருக்க வேண்டும். எங்கள் கடையில் அண்ணன்கள் தவிர, என் நண்பர்கள் நந்து, மது, மோகன் ஆகியோர் வருடா வருடம் வியாபாரம் செய்ய வருவார்கள். அனைவருக்குமே வெடி எடுத்து தந்து, விலை போடுவது மிக பிடித்தமான விஷயமாக இருக்கும்.

நாங்கள் மிக அதிகமாக வெடி வாங்காமல், அந்த வருடமே காலி ஆகி விடும் அளவு தான் வாங்குவோம். இதனால் இரவு ஒன்பது மணி அளவில் கடையில் ரெண்டு மூன்று நாளாக உழைத்த நண்பர்களுக்காக, உள்ள வெடிகளில் கொஞ்சம் எடுத்து பேக் செய்ய ஆரம்பித்து விடுவேன். கத்தி கத்தி அனைவருக்கும் தொண்டை கட்டியிருக்கும். குரலே மாறி போயிருக்கும். ஆனாலும் ஏதோ பெரிய சாதனை செய்த மாதிரி ஒரு திருப்தி முகத்தில் இருக்கும் (அனைத்து வெடிகளும் விற்று விட்டதே!!)

தீபாவளி அன்று எங்கள் வீட்டில் நண்பர்கள் கூடி விடுவார்கள். வியாபாரம் செய்த போது சந்தித்த வித்யாசமான கஸ்டமர்கள், அனுபவங்கள் பற்றி பேசி சிரித்தபடி கழியும் பொழுது....அப்போது டிவி சிறப்பு நிகழ்ச்சிகள் இல்லை.. அண்ணன்கள் மட்டும் அருகில் உள்ள தஞ்சாவுருக்கு புதிதாய் ரிலீஸ் ஆன படம் பார்க்க செல்வார்கள். எங்கள் ஊர் தியேட்டரில்  கடந்த  தீபாவளி அல்லது பொங்கலுக்கு வந்த படம் இப்போது தான் வந்திருக்கும். அதனை பார்க்க எனது நண்பர்கள் திட்டமிடுவோம்..

அது ஓர் காலம்.. !!!!

Monday, November 1, 2010

வானவில் : நான் ஏன் காணாமல் போனேன்?

நான் ஏன் காணாமல் போனேன்? 

தற்போது ஏன் எழுதுவதில்லை என கேட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் அன்பில் நெகிழ்கிறேன். உங்களுக்காக கொஞ்ச நாளாக எழுதாததன் காரணம் சொல்லியே ஆக வேண்டும். 

பொதுவாகவே நான் வீடு &; அலுவல் இவற்றிற்கு தான் மிக அதிக முக்கிய துவம் & நேரம் ஒதுக்கும் ஆசாமி. ஆனால் பிளாக்கில் சில மாதங்களாக  ரொம்ப நேரம்  செலவிடுகிறோமோ என்று ஒரு  உணர்வு கொஞ்ச காலம் ஆட்டி படைத்தது. இதேநேரம் வீடு & அலுவலகம் ரெண்டு பக்கமும் பணி சுமையும் மிக அதிகம். எனவே தான் ஒதுங்கி இருந்தேன். எழுதுவதற்கு விஷயங்கள் இல்லாமல் போகவில்லை (சரக்கு இன்னும் தீர வில்லை :))

மீண்டும் எழுத துவங்கும் இந்நேரம் சில Does & Donts  உடன் தான் எழுத துவங்குகிறேன். அதில் சில மட்டும் (எல்லாவற்றையும் சொல்ல முடியாது!) உங்கள் பார்வைக்கு:

1. வாரம் இத்தனை பதிவுகள் எழுத வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் கூடாது. (முன்பு வாரம் ரெண்டாவது எழுதுவேன்); சில வாரங்கள் பதிவே எழுதா விட்டாலும் பரவாயில்லை. 

2. வானவில் &; முன்னேறி பார்க்கலாம் தொடர் இரண்டும் தொடர வேண்டும். இவை வாரா வாரம் என இன்றி இயலும் போது எழுதலாம். 

3. வாசித்ததில் பிடித்த புத்தகங்கள், பிடித்த படங்கள், உடல் நலம் குறித்து பதிவுகள் இவை தொடர வேண்டும் . 

4. பதிவுகள் சனி, ஞாயிறுகளில் எழுத படும். ஆனால் சனி, ஞாயிறு நிறைய பேர் பிளாக் வாசிக்காததால் திங்கள் to வெள்ளிக்குள் பிரசுரம் செய்யப்படும். (இது முன்பே செய்தது தான்) பதிவுகளை வலை ஏற்றுவது மற்றும் கமெண்டுகள் வாசித்து பதில் சொல்வது இவை மட்டுமே பதிவுலகுக்காக திங்கள் to வெள்ளி வரை செய்ய கூடிய வேலை. (இதற்கு நிச்சயம் அதிக நேரம் ஆகாது; அதிக பட்சம் அரை மணி நேரம் ஆகலாம் )

சுருக்கமாக,  இயலும் போது மட்டும் எழுத போகிறேன். வழக்கம் போல் உங்கள் கருத்துக்களை பகிருங்கள் நண்பர்களே; அது தான் உற்சாக டானிக். 

படித்ததில் பிடித்தது  குமார் தையலகம் சிறுகதை 

ஆனந்த விகடனில் இந்த வாரம் தாமிரா எழுதிய  " குமார் தையலகம்" சிறுகதை நெகிழ்த்தியது. 

கதை இது தான்: கிராமத்து நண்பர்கள் சேர்ந்து ஒரு நாடகம் போட திட்டமிடுகின்றனர். தையல் கடை வைத்திருக்கும் குமார் கடையில் அனைவரும் கூடி விவாதிக்கின்றனர்.  நாடகம் போடும் ஐடியா தந்ததோடு, அதற்கு  15,000 பணம் வேண்டும், பண்ணையார்களிடம் நானே வசூலித்து தருகிறேன் என்கிறான் ஒரு நண்பன். ஆனால் கொஞ்ச நாளில் அவன் நைசாக ஒதுங்கி கொள்ள, துவங்கி விட்டோம், முடித்தாக வேண்டுமென குமார் டைலர் நாடகம் போட்டு முடிக்கிறார். பணம் போதாமையால் தனது தையல் மிஷின்களை விற்று பணம் செட்டில் செய்கிறார். கதை இப்படி முடிகிறது:            " அதன் பிறகு ஊரில் வேறு யாரும் நாடகம் போட வில்லை; குமார் தையலகம் மூட பட்டு விட்டது; ஊர் காரர்கள் மட்டும் " குமார் போட்ட நாடகம் போல வராதுப்பா" என இன்னமும் பேசி கொண்டிருக்கின்றனர். 

ம்ம் ஒவ்வொரு கிராமத்திலும் இது போல நாடகம் போட்ட அனுபவங்கள் 
இருக்கும். (எனக்கும் கூட !)

டிவி பக்கம் : ஒரு வார்த்தை ஒரு லட்சம்

விஜய் டிவியின் புது நிகழ்ச்சி ஜேம்ஸ் வசந்தன் நடத்தும் "ஒரு வார்த்தை ஒரு லட்சம்". சனி கிழமை இரவுகளில் ஒளிபரப்பாகிறது. ரெண்டு பேர் கொண்டது ஓர் அணி; இவ்வாறு இரு அணிகள் முதலில் மோதுகின்றன. பின் அதிக பாய்ண்டுகள் எடுத்த அணி "மணி ட்ரீ ரவுண்ட் " விளையாடுகிறது. இதில் Rs. 10,000/ 50,000/ 75,000/ 100,000 என சில ரவுண்டுகள். எப்போது வேண்டுமானுலும் விலகலாம்.

இருவர் உள்ள டீமில் ஒருவரிடம் சில தமிழ் வார்த்தைகள் லேப் டாப் மூலம் காட்டுகிறார்கள். இதனை மற்றவருக்கு சில க்ளு கொடுத்து கண்டு பிடிக்க வைக்க வேண்டும். க்ளு ஒரே வார்த்தையில் தர பட வேண்டும்; மேலும் ஒரு வார்த்தை கண்டு பிடிக்க அதிக பட்சம் 3   க்ளு தான் தரலாம். 

அந்த நேரத்தில் சரியான வார்த்தை/ க்ளு நினைவுக்கு வர வேண்டும்; அது தான் விஷயமே! தற்போது சின்ன திரை நட்சத்திரங்கள் தான் கலந்து கொள்கின்றனர். (கொஞ்சம் மேட்ச் பிக்ஸ்சிங் இருக்க மாதிரி சந்தேகமும் வருது!!) கூடிய விரைவில் பொது மக்களும் கலந்து கொள்ள கூடும். 

போக போக தான் நிகழ்ச்சி ஹிட்டா இல்லையா என சொல்ல முடியும்.

தீபாவளி சினிமாக்கள்

தீபாவளிக்கு ரஜினி, கமல் படங்கள் வந்தது ஒரு காலம். அதற்கு அடுத்த வரிசையில் உள்ள விஜய், அஜீத், சூர்யா, விக்ரம் இவர்களில் யார் படமும் இம்முறை வரவில்லை. தமிழ் சினிமா ரசிகர்கள் நிலை நிச்சயம் பாவம் தான்.  தனுஷின் உத்தம புத்திரன் & வ குவார்டர் கட்டிங் இவை தான் முக்கியமான (!!??) படங்கள். (மைனா, வல்ல கோட்டை இவற்றை விட்டது ஏன் போன்ற பின்னூட்டங்கள் வரவேற்க படுகின்றன) குவார்டர் கட்டிங் என தலைப்பிலேயே வைப்பது எவ்வளவு அராஜகம். இதற்கும் வரி விலக்கு உண்டு. வாழ்க செம்மொழி!! 

ரசித்த SMS: 

Stay committed to your decisions, but stay flexible in your approach. 

எந்ந்ந்த்த்திரா 

எந்திரன் பார்த்தது பற்றி இப்போ எழுதினால் அடிக்க மாட்டீர்களே? :))
முதல் பாதி முடிந்து அசந்து போய் உட்கார்ந்திருந்தேன். என்ன அருமையா எடுத்திருக்காங்க என!! இரண்டாம் பாதி பொறுமையை சோதித்து விட்டது ரோபோவிற்கு ரெட் சிப் வைத்த பின் ஒவ்வொரு நிமிடதிற்குள்ளும் பல கார்களும் மனிதர்களும் செத்து கொண்டே இருக்கின்றனர்.  எனக்கு அழிவை தொடர்ந்து பார்ப்பது மிகுந்த அயர்ச்சியாக இருந்தது. குட்டி பசங்களுக்கு இத்தகைய ஜெட்டிக்ஸ் சமாச்சாரங்கள் காரணமாய் இரண்டாம் பாதி(யும்)  மிக பிடிக்கிறது !!

எப்படி எல்லாம் பணம் பண்ணலாம் என சன் டிவியிடம் தான் கத்துக்கணும். இப்போ "Making of Enthiran" என டிவி மூலம் காசு செய்ய போகிறார்கள்..

ரசிக்கும் விஷயம் : மேகம் 


என்னவோ கொஞ்ச நாளாக மேகங்களை ரசிக்கும் வழக்கம் வந்துள்ளது. வெள்ளை வெள்ளையாய் வெவ்வேறு வடிவங்களில் மேகங்கள். அது என்ன வடிவம் என கற்பனை செய்வதே ஒரு விளையாட்டு போல் உள்ளது. சில நேரம் அவற்றை சும்மா பார்ப்பதே மனச்சுமை குறைக்க உதவுகிறது. இதுவரை இல்லா விடில் இனியாவது ஒரு நாளின் வெவ்வேறு பொழுதுகளில் மேகங்களை கவனியுங்கள். முக்கியமான விஷயம் வண்டி ஓட்டும் போது பார்க்காதீர்கள். அது கவனத்தை சிதற அடிக்கும். நிற்கும் அல்லது நடக்கும் நேரம் மட்டும் பார்த்து ரசிக்கலாம். இயற்கையை ரசிப்பது நிச்சயம் நல்ல stress relief. 
Related Posts Plugin for WordPress, Blogger...