Sunday, January 29, 2017

வானவில்+தொல்லைக்காட்சி: அச்சமின்றி - சந்திர நந்தினி -ஜல்லிக்கட்டு போராட்டம்

பார்த்த படம் : அச்சமின்றி

சமுத்திரக்கனி, விஜய் வசந்த் நடித்த இப்படம்.. ஒரு நல்ல விஷயத்தை அடிப்படையாக கொண்டது.. கல்வி துறையில் நடக்கும் ஊழலில் துவங்கி மார்க் வாங்க வைக்க பள்ளிகள் செய்யும் அக்கிரமங்கள் வரை பலவற்றை பேசுகிறது.. ஆயினும், லாஜிக் மீறல்கள், நல்ல ஹீரோ இல்லாதது, சற்று தொய்வான திரைக்கதை (பாட்டும் , சண்டையும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கிறது !) ..இவற்றால் இலக்கை எட்டாமல் போகிறது.

Image result for achamindri

படத்தின் உருப்படியான விஷயம் அது உரக்க பேசும் கல்வி துறை பற்றிய கடைசி அரை மணி நேரம் தான் !

டிவியில் பார்த்த படம் : வை ராஜா வை

ஜெயா டிவியில் காணும் பொங்கல் அன்று ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய வை ராஜா வை ஒளிபரப்பினர். பின்னால் நடக்க போவதை முன் கூட்டியே அறியும் ஹீரோ பாத்திரம்.. இதை வைத்து காசு செய்ய நினைக்கின்றனர் சிலர்.. கதை இதன் அடிப்படையிலேயே செல்கிறது. ஓரளவு நல்ல முடிச்சு என்றாலும் - படம் ஏனோ மிக பெரும் தோல்வியை சந்தித்தது; எப்படி முடிப்பது என தெரியாமல் அவசரம் அவசரமாக முடித்துள்ளனர் படத்தை.. ஒரு proper conclusion இல்லாமல் படம் முடிகிறது..

QUOTE CORNER


நல்ல சீரியல்: சந்திர நந்தினி

விஜய் டிவியில் மாலை 7.30க்கு ஒளிபரப்பாகும் டப்பிங் சீரியல் சந்திர நந்தினி ! வீட்டம்மணியின் அலுவலகத்தில் சிலர் சொன்னதால் பார்க்க ஆரம்பித்தார். நானும் அவ்வப்போது (மட்டும்) கண்டு வருகிறேன்.

Image result for chandra nandini tamil

சந்திர குப்த மௌரியர் என்கிற நல்ல அரசர் பற்றி பள்ளியின் வரலாற்று பாடங்களில் படித்திருப்போம். அவர் தான் கதை  நாயகர்.நந்தினி என்பது அவரது மனைவி பெயர். இவர்கள் இருவரின் கதை தான் சந்திர நந்தினி. கூடவே சாணக்கியர் பாத்திரமும் !

நடந்த கதை என்பதால் - வரலாறு அறியும் ஆர்வம்.. கூடவே அதனை சுவாரஸ்யமாக பதிவு செய்த டீம்.. இவை இரண்டும் தான் சீரியலை அவ்வப்போது காண வைக்கின்றன.

ஜல்லிக்கட்டும் மாணவர் போராட்டமும் 

ஜல்லி கட்டு பற்றி ஏன் எதுவும் எழுத வில்லை என நான்கைந்து நண்பர்களெனும் கேட்டு விட்டனர்.

பொதுவான மக்கள் கருத்துக்கெதிராக நம் கருத்து இருக்கும் போது அமைதியாக இருப்பது நல்லதென நினைக்கிறேன்.

இருப்பினும் இவ்வளவு பெரிய இளைஞர் கூட்டம் - மிக அற்புதமாக போராட்டம் நடத்தியதை ரசிக்காமலும், பாராட்டாமலும் இருக்க முடியாது.

போராட்டத்தை சரியான நேரத்தில் முடித்திருக்க வேண்டும்!  தலைமை என்று எதுவும் தெளிவாக இல்லாததால் வந்த விளைவு. கடைசி நாளில் போலீஸ் வன்முறை நிச்சயம் கண்டிக்க தக்கது. ஆனால் பெரும்பான்மை மக்கள் அதை பற்றி அதிகம் கண்டு கொள்ளாமல் " அடுத்த வேலையை பார்க்கலாம்" என நகர்ந்து விட்டனர் .

மெரினாவில் இனி போராட கூடாது என 144 தடை உத்தரவு போட்டிருக்கிறார்கள் கவனித்தீர்களா? இறுதி நாள் வன்முறையே - இனி இப்படி கூட்டம் கூடக்கூடாது என மிரட்ட தான்... ! அதுவே ஒரு மினி 144 தான் !


கல்யாணம் முதல் காதல் வரை 

வீட்டில் அவ்வப்போது பார்த்து வந்த சீரியல் "கல்யாணம் முதல் காதல் வரை" பழைய ப்ரியாவிற்காக நானும் அவ்வப்போது பார்த்து வந்தது உண்டு.

ப்ரியா என்ன காரணத்தாலோ விலகிய பின் கதையே மிக பெரும் அதள பாதாளத்தில் விழுந்து விட்டது; சினிமா பாணியில் - 2 காரெக்டர் - ஆள் மாறாட்டம் என நம்ப முடியாத படி சென்று திடீரென ஒரே நாளில் கதையை முடித்து சுபம் போட்டு விட்டார்கள் !

பலரால் விரும்பி பார்க்கப்பட்ட ஒரு சீரியலை - எப்படி கொடுமைப்படுத்தி - வெறுக்கடிக்கலாம் என்பதற்கு சிறந்த உதாரணமாக முடிந்து விட்டது கல்யாணம் முதல் காதல் வரை !

****
அண்மை பதிவு


அதே கண்கள்: சினிமா விமர்சனம்

அதே கண்கள்: சினிமா விமர்சனம்

யாரிப்பாளர் சி. வி குமார் படங்கள் அநேகமாய் தரமான தயாரிப்பாய் இருந்து விடுகிறது.. அதே கண்களும் விதி விலக்கல்ல..

Image result for adhey kangal

கதை 

வழக்கமான காதல் கதை போல தான் துவங்குகிறது.. பின் ஹீரோ சிறு இடைவெளியில் இருமுறை காதல் வயப்படுகிறார். (ரெண்டுமே டபிள் சைட் லவ் பாஸ் !!) முதல் காதலி காணாமல் போனதால் தான் அடுத்த காதல் துவங்குகிறது..

முதல் காதலி பற்றி கிடைக்கும் தகவல்கள் - மீண்டும் அவளை தேடி போக வைக்கிறது.. அந்த தேடல் பல மர்மங்களை சொல்கிறது..

திரைக்கதை 

வழக்கமாய் விமர்சனங்களில் முதல் பாதி அருமை; ரெண்டாவது பாதியில் சொதப்பி விட்டனர் என்போம்; இங்கு ரெண்டாவது பாதி தான் படத்தை நிமிர்த்துகிறது; முதல் பாதி நீளமாகவும், சற்று அயர்ச்சி தருவதையும் தவிர்த்திருக்கலாம்.

படத்தின் நெகட்டிவ் காரெக்டர் மற்றும் அதை காட்டிய விதம் தான் படத்தை வித்தியாச படுத்துகிறது. இந்த பாத்திரம் மட்டும் - பச்சைக்கிளி முத்துச்சரம் பட சம்பவங்களை  நினைவூட்டுகிறது..

நடிகர்கள் 

கலையரசன் முதலில் கண் தெரியாதவராகவும்,  பின் கண் வந்த பின் காதலியை தேடி அலைபவராகவும் apt performance ! ஜனனி ஐயர் அழகாக வந்து போகிறார்.

இரண்டாவது நாயகியாய் வரும் ஷிவடா தான் (என்ன பேர் சார் இது !) சர்ப்ரைஸ் பாக்கெட். சரியான காரெக்டர் !!  இது மாதிரி ஆட்களும் நிச்சயம் நாட்டில் இருக்கவே செயகிறார்கள்.

பாடல்கள் ஸ்பீட் பிரேக்கர்; சண்டைகள் இல்லாதது ஆறுதல்; படம் 2 மணி நேரத்தில் முடிந்து விடுகிறது.. !!

இயக்குனர் ரோஹின் வெங்கடேசன் முதல் படத்தில் வித்தியாச கதை களனை எடுத்து பாஸ் மார்க் வாங்கி விடுகிறார். முதல் பாதி டைட்டான திரைக்கதை இருந்தால் இன்னும் ரசித்திருக்கலாம்.

அதே கண்கள் - நிச்சயம் ஒரு முறை காணலாம் !

****
அண்மை பதிவு 

Monday, January 16, 2017

வானவில்- ஜோக்கர்- கேதார் ஜாதவ் - அசீம் பிரேம்ஜி

பார்த்த படம்- ஜோக்கர் 

சென்ற வருடம் வெளியான ஜோக்கர் இப்போது தான் காண முடிந்தது. அரசியல் வாதிகளை நேரடியே கிழி கிழி என கிழிக்கிறது படம்! கலைஞர் தொடங்கி ஆளும் கட்சி வரை - வித்யாசமே இன்றி தோலுரிக்கிறார்.  படம் எப்படி சென்சாரை தாண்டி இந்த அளவில் வந்துள்ளது என்பதே ஆச்சரியம் தான் !

Image result for joker tamil movie

படம் துவங்கும் போது நமக்கும் குழப்பமாக தான்  உள்ளது; ஹீரோ தன்னை ஜனாதிபதி என்று சொல்லி கொள்கிறார் என்றால் - கூடவே சிலர் அவரை ஜனாதிபதி என்று சொல்கிறார்கள் !!

அழுத்தமான பிளாஷ் பேக் ..  நம்மை உலுக்குகிறது.. நமது அரசியல் வாதிகள் இப்படித்தான் இருக்கிறார்கள்.. கழிவறையில் மட்டுமல்ல  சுடுகாட்டில் கூட ஊழல் இல்லாமல் கட்ட முடியாது அவர்களால்..

மனதை கனக்க வைத்து விட்டு -போராட்டம் தொடரும் என முடிகிறது படம்.

ஹீரோவாக வரும் குரு சோமசுந்தரம்  நடிப்பு அற்புதம். வாழ்ந்திருக்கிறார் மனுஷன். தலையை ஒரு கையால் கோதியபடியும் கண்ணை சிமிட்ட படியும் இருப்பது.. பகத் சிங்கை திறந்து விடட்டுமா என கேட்பது என அசத்துகிறார். அவருடன் எப்போதும் கூட வரும் பெரியவர் டிராபிக் ராமசாமியை நினைவு படுத்தும் பாத்திரம்.. படத்தின் இறுதியில் இவர் சொல்லும் ஒரு வசனம்.. " நாம் யாருக்காக போராடுறோமோ அவங்களே நம்மளை மதிக்க மாட்டேங்குறாங்க ; பைத்தியம்னு சொல்றாங்க" என்பது தான் இப்படம் தரும் மிகப்பெரும் செய்தி

ஜோக்கர் - நல்ல மாற்று சினிமா விரும்புவோர் அவசியம் காண வேண்டிய படம்.

படித்த புத்தகம்: அசீம் கம்பியூட்டர்ஜி 

சொக்கன் எழுதிய அசீம் பிரேம்ஜி வாழ்க்கை வரலாறு அண்மையில் வாசித்தேன் .

பிரேம்ஜியின் வாழ்க்கை வரலாறு என்பதை விட விப்ரோ என்கிற நிறுவனம் பற்றி தான் அதிகம் எழுதியுள்ளார்.

வெளிநாட்டில் கல்லூரியில் படிக்கும்போது தந்தை இறந்து விட- படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு நிறுவனத்தை கவனிக்க இந்தியா வருகிறார் பிரேம்ஜி. ஏதேதோ பிசினஸ் செய்து வந்த அவர்கள் கணினி துறைக்குள் நுழைந்தது எப்படி, அத்துறையில் அவர்களின் பிரமிக்க வைக்கும் வளர்ச்சி இவற்றை பேசுகிறது இப்புத்தகம்.

விப்ரோவை கிட்டத்தட்ட நெடுஞ்செழியன் போன்றோருடன் ஒப்பிட முடிகிறது; எப்போதும் இரண்டு அல்லது மூன்றாம் நிலை தான். இன்போசிஸ் மற்றும் T C S எப்போதும் முதல் 2 இடங்களை பிடித்துக் கொள்ள, மூன்றாம் ரேங்க் மாணவனாகவே இருக்கிறது விப்ரோ. "நாங்கள் எப்போதும் அதிக ரிஸ்க் எடுப்பதில்லை" என்பதை தங்கள் குறைகளில் ஒன்றாக ஒப்புக் கொள்கிறார் பிரேம்ஜி.

மேலும் கணினி துறை தவிர அவர்களின் பிற நிறுவனங்கள் அந்த அளவு Turnover / வளர்ச்சியை காணவில்லை; இதற்கு பிரேம்ஜி சொல்லும் விளக்கம்: "அவையெல்லாம் நன்கு செட்டில் ஆன நிறுவனங்கள் .. டாப் மேனேஜ்மென்ட்டின் நேரத்தை அதிகம் எடுத்து கொள்வதில்லை.."

அசீம் பிரேம்ஜி அவர்களை எனக்கு  மிக பிடிக்க ஓர் காரணம்: அவர் செயகிற CSR (Charity) விஷயங்களுக்கு தான் ! பள்ளி கல்வி துறையில் எத்தனையோ ஏழை குழந்தைகளுக்கு இந்நிறுவனம் செய்யும் தொண்டு பாராட்ட படவேண்டிய ஒன்று.

சென்னை ஸ்பெஷல் - பல்லாவரம் மீன் மார்க்கெட்

பல்லாவரத்தில் புதிதாக ஒரு மீன் மார்க்கெட் வந்துள்ளது; பல்லாவரத்திலிருந்து - பம்மல் செல்லும் சாலையில் ஹோட்டல் மார்ஸ் அருகே வந்துள்ள இந்த மார்க்கெட் . சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் மட்டும் இயங்குகிறது.

மீன்களின் விலை  மிக குறைவாக கிடைக்கிறது; குறிப்பாக வஞ்சிரம் மீன் புதிதாக இருப்பதுடன் வெளியில் உள்ள கடைகளை விட 50 % விலை குறைவாக உள்ளது.  பல்லாவரம், குரோம்பேட்டை, நங்கநல்லூர், மடிப்பாக்கம் போன்ற இடங்களில் உள்ள நண்பர்கள் சிறிது தூரம் என்றாலும் நல்ல மீன்- குறைவான விலையில் வாங்க இங்கு ஒரு விசிட் அடிக்கலாம் !

டிவியில் பார்த்த படம்- கடவுள் இருக்கான் குமாரு 

இயக்குனர் ராஜேஷ் தனது காரியரின் துவக்கத்தில் சில சிரிக்கும் படியான காமெடி படங்களை தந்தவர்.. அதற்குள் சரக்கு மொத்தமும் காலியாகிடுச்சா ! கடைசி சில படங்கள் செம மொக்கை வாங்குகிறது. அதிலும் இந்த படம் தாங்க முடியலை.. சிரிப்பு என்பது மருந்துக்கும் இல்லை; ஓசியில் .....டிவியில் பார்த்த நமக்கே இப்படி இருக்கே.. காசு தந்து தியேட்டரில் பார்த்தவர்கள் எப்படி நொந்து போயிருப்பார்கள்.. ! இதில் இன்னொரு கொடுமை இப்படம் போட்டது விஜய் டிவியில்.. 3 மாசத்துக்கு ஒரு முறை கண்டிப்பா போட்டு கொலையா கொல்லுவாங்க ! ஹூம் :(

QUOTE CORNER


கிரிக்கெட் கார்னர் 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் மேட்சில் இங்கிலாந்து 350 ரன் அடிக்க,இந்தியா 60க்கு 4 விக்கெட் என்றதும், "வேற வேலையை பார்க்கலாம்" என நகர்ந்தாச்சு; அவ்வப்போது க்ரிக் இன்போவில் ஸ்கொர் பார்த்து கொண்டிருந்தேன். கோலி அடித்ததில் ஆச்சரியப்பட ஏதுமில்லை; (ஹர்ஷா போக்லே ட்வீட்டில் கோலிக்கு செஞ்சுரி அடிப்பது .......பல் துலக்குவது, குளிப்பது போல இன்னொரு தினசரி வேலை என எழுதியிருந்தார் )

கேதார் ஜாதவ் 60 பந்தில் செஞ்சுரி அடித்தது ரணகளம் ! உண்மையில் இந்த இன்னிங்ஸ் தான் மேட்சை நம் பக்கம் திருப்பியது; ஜெயிக்க  60 ரன் இருக்கும்போது இருவரும் அவுட் ஆனாலும் பாண்டே பொறுப்புடன் ஆடி ஜெயிக்க வைத்தார். இந்திய அணி கோலியின் தலைமையில் fearless and aggressive ஆட்டம் ஆடிவருவது ரசிக்கும்படி உள்ளது. தொடரட்டும் !

சின்னத்திரை குறித்த நீயா நானா 

சின்னத்திரை நடிகர்கள் - இந்த மீடியா குறித்து பேசிய  நிகழ்ச்சி பல தகவல்களை தந்தது:

* இங்கு நடிகர்களுக்கு குறைந்த பட்ச தினசரி சம்பளம் 500 முதல் 750 ரூபாய் தானாம் ! கேரக்டர் ரோல் செய்வோருக்கு தினசரி 1000 ம் - ஹீரோயின் போன்றோருக்கு 3000 முதல் 6000 வரை கிடைக்குமாம். அதுவும் மாதத்தில் சில நாட்கள் மட்டுமே வேலையும், சம்பளமும் கிடைக்குமாம் !

* குடும்ப செலவுகளுக்கே சரியான வருமானம் இல்லா நிலையில் வேறு வேலை பார்க்கலாம் என நினைக்கும் போது புதிதாய் ஒரு வாய்ப்பு வருவதும், பின் அதன் பின்னே ஓடுவதும் என கழிகிறது காலம் .. புலிவால் பிடித்த கதையாக தான் இருக்கிறது வாழ்க்கை .

* திருமணம் என்பது பொதுவாகவே கடினம் எனினும், ஆண்களுக்காவது பெண் கிடைத்து விடுமாம். நடிகைகளுக்கு வரன் கிடைப்பது குதிரை கொம்பாம். காதல் திருமணம் தான் ஒரே வழி என்று பேசினர்...

சின்னத்திரை நட்சத்திரங்கள் வாழ்க்கை நிச்சயம் கவலைக்குரிய ஒன்று தான் !

Friday, January 13, 2017

பைரவா சினிமா விமர்சனம்

ழகிய தமிழ் மகன் படமெடுத்த இயக்குனருக்கு இன்னொரு பட வாய்ப்பு தந்துள்ளார் விஜய். பரதன் இம்முறையாவது அதனை சரியே பயன்படுத்தினாரா?

Image result for bairavaa images

ஹீரோயினை வேட்டையாட நினைக்கும் வில்லன்...... இடையில் சாதாரண ஹீரோ புகுந்து ஹீரோயினை காப்பாற்றும் கில்லி டைப் கதையே பைரவா.

பாசிட்டிவ் 

விஜய் - காமெடி, டான்ஸ், பைட் என கலந்து கட்டி அடிக்கிறார் (விக் முதலில் உறுத்தல்.. பின் பழகிடுது !)

சண்டை காட்சிகள் ......குறிப்பாக கிரிக்கெட் பைட் மற்றும் இடைவேளையின் போது வரும் சண்டை.. இரண்டும் ரசிக்கும் படி உள்ளது.

பணம் கறக்கும் கல்லூரிகள் என்பது ஒரு நல்ல கான்செப்ட்..  படம் அதனை தொட்டு செல்கிறது.

ஹீரோயின்-  பாட்டுக்கு என்றில்லாமல் கதையின் மையமாக   திகழ்கிறார்.நடிக்க தெரிந்த கீர்த்தி சுரேஷ் - அப்பாத்திரத்துக்கு கச்சிதம்

முதல் பாதி ரசிக்கும் படி தான் இருந்தது. இடைவேளையில் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதை காண முடிந்தது.

Image result for bairavaa vijay images

மைனஸ் 

செகண்ட் ஆப் - எதிர் பார்த்த அளவு இல்லை; 170 நிமிட படம் என்பதெல்லாம் இந்த காலத்துக்கு நிச்சயம் உதவாது. (மிக விரைவில் படத்தின் நீளத்தில் கத்தி  வைப்பார்கள்... நிச்சயமாய் !)

பாடல்கள்  மற்றும் பின்னணி இசை பெருத்த ஏமாற்றம். வர்லாம் வா பாட்டு மட்டும் அடிக்கடி வருவதால் மனதில் நிற்கிறது. மற்ற பாட்டு எல்லாம் சுமார் (எடுத்த விதமும் மிக சாதாரணம் ); கோர்ட் சீனில் ஓர் BGM போட்டிருக்கிறார் சந்தோஷ் நாராயண். கொடுமை ! விஜய் பேசும்போதே .....கூட கூட இசையும் படுத்தி எடுக்கிறது.

காமெடி இத்தகைய படங்களுக்கு மிக முக்கியம்; அது சில இடங்களில்  மட்டுமே ரசிக்கும் படி உள்ளது.

Image result for bairavaa images

பைனல் அனாலிசிஸ் 

இரட்டை அர்த்த வசனம்.. அதீத வன்முறை இல்லாததால் - குடும்பத்துடன் பார்க்கும் விதத்தில் உள்ளது

இது வேதாளம் போன்றதொரு படம்; கமர்ஷியல் எலிமெண்ட்களில் ! (இதனை அஜீத் ரசிகர்கள் ஒப்பு கொள்ள மாட்டார்கள். ..இருந்தும் ஒரு நடுநிலை வாதியாக சொல்கிறேன் !)

வியாழன் துவங்கி - திங்கள் (காணும் பொங்கல்) வரை படம் ஹவுஸ் புல் ஆக ஓட வாய்ப்புகள் அதிகம். எனவே போட்ட காசை நிச்சயம் எடுத்து விடுவர்.

பைரவா - ஒரு முறை பார்க்கலாம் !

Monday, January 9, 2017

சென்னையின் மாபெரும் - விப்ரோ மாரத்தான்.. சில பாசிட்டிவ் & நெகட்டிவ்

மூன்று மாதங்களுக்கு முன் விப்ரோ மாரத்தானை மனதில் வைத்து தான் முதன்முதலாக ஓட துவங்கினோம்.. நான் மட்டுமல்ல இன்னும் பல நண்பர்களும். ஆயினும் இந்நாள் வரும் முன் சின்ன சின்னதாய் பல  மாரத்தான்கள்  ஓடி விட்டோம். ஜனவரி 8 அன்று நடந்த விப்ரோ மாரத்தான் பற்றிய ஒரு அலசல்..பாராட்டத்தக்க அம்சங்கள்
- - - -
* 4 ஆண்டுகளுக்கு முன் 3000 பேருடன் ஆரம்பித்த விப்ரோ மாரத்தான் இன்று 20000 பேருக்கும் மேல் ஓடுமளவு வளர்ந்துள்ளது; இது ஒவ்வொரு ஆண்டும் அதிகமாகவே செய்கிறது; இப்படி ஏராளம் பேரை ஓட்டம் நோக்கி இழுக்கும் சக்தி இத்தகைய மாபெரும் அளவில் நடத்தப்படும், பெரும் விளம்பரம் செய்யப்படும் மாரத்தான்களில் மட்டுமே சாத்தியம் !

Image may contain: 5 people, people smiling, people standing

* ஜனவரி 8 ஓட்டம் என்றால் - அதற்கு முதல் இரு நாட்களும் நமது டீ ஷர்ட், நமது ஓட்ட நேரத்தை  கணக்கெடுக்கும் சிப் உள்ளிட்டவை வாங்கி கொள்ளும் நாள்.. இம்முறை சென்னை டிரேட் சென்டரில் இந்த கண்காட்சி நடந்தது; தொடர்ந்து அங்கு அன்று பல நிகழ்ச்சிகள்...அனைத்தும் ஓட்டம் சார்ந்து. ஏராள கவுண்டர்கள் வைத்து கியூ அதிகமின்றி மிக விரைவில் நமது டி ஷர்ட் உள்ளிட்ட பொருட்களை வாங்க முடிந்தது; இந்த நாளிலேயே நண்பர்கள் பலர் ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்ளவும் கண்காட்சி உதவியாய் இருந்தது

Image may contain: 15 people, people smiling, people standing and indoor

* 20000 பேருக்கு மேல் ஓடும் - இந்த ஓட்டத்திற்கு முன்னேற்பாடு, ஓட்டம் துவங்கும் இடம், அங்கு மக்களை சரியான வேகப்படி பிரித்து வைப்பது, ஓடி முடித்ததும் உணவு பெறுவது, வழியெங்கும் பாரம்பரிய இசை கருவிகளை வைத்து பெரும் இசை எழுப்பியது.. என பல விஷயங்கள் ரசிக்கும் வண்ணம் இருந்தது.

Image may contain: 1 person, standing and outdoor

* மரத்தானில் வீல் சேரில்  இருந்த படியும் பலர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு உதவ அந்த வீல் சேரை தள்ளியபடி இன்னொரு வாலன்டியர் ஓடிவந்தார். வீல் சேரில் அமர்ந்திருக்கும் நண்பரும் தனது கையால் தள்ளியபடி செல்ல, பின்னால் வரும் நண்பரும் வீல் சேரை தள்ளியபடி ஓடிவருவார். இதனை பார்க்கும் போது மிக நெகிழ்ச்சியாய் இருந்தது. இப்படி வீல் சேரில் சென்றபடி  Shailesh Kumar Sinha 21 கிலோ மீட்டரை 2 மணி நேரம் 17 நிமிடத்தில் ஒரு நண்பர் நேற்று முடித்திருக்கிறார்  ! இது ஒரு இந்திய சாதனையாகும் !

Image may contain: 2 people, outdoor


Image may contain: 14 people, outdoor* சில நண்பர்கள் காலில் விபத்திலோ அல்லது வேறு காரணத்தாலோ சில பாதிப்புகள் வந்தபோதும், விந்தி விந்தி 10 கிலோ மீட்டர் நடந்ததையும் காண முடிந்தது; அவர்கள் மன உறுதி வியக்க வைத்தது.

சில சங்கடங்கள்..

10 கி. மீ ஓட்டம் துவங்கியது அண்ணா- MGR சமாதிக்கு முன்புள்ள நேப்பியர் பாலம் அருகே. முடிந்தது தரமணி C P T பாலிடெக்னீக் அருகே. பொதுவாய் துவங்கும் இடத்திலேயே ஓட்டம் முடிந்தால் தான் நமது வாகனங்கள் வைத்து விட்டு எடுக்க வசதியாய் இருக்கும். இப்படி இரண்டும் வெவ்வேறு இடம் என்பதால் பங்கேற்பாளர்கள் சிரமப்பட்டனர்.

Image may contain: 1 person
* மேற்சொன்ன காரணத்தால் பறக்கும் ரயிலில் செல்லலாம் என 15 நண்பர்கள் திட்டமிட்டிருந்தோம். ஆனால் வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷன்க்கு 5 மணிக்கு  சென்றால் அடுத்த ரயில் 6.15க்கு தான் என்றனர். இதை பிடித்தால் மாராத்தானுக்கு நேரத்திற்கு செல்ல முடியாது. இதனால் நூற்றுக்கணக்கானவர்கள் ரயில்வே ஸ்டேஷன் வந்து விட்டு பின் ஆட்டோ, கார் என அவசரமாய் பிடித்து செல்வதை காண முடிந்தது.

Image may contain: 2 people, outdoor

கிரிக்கெட் மேட்ச் நடக்கும் போது நள்ளிரவு ஸ்பெஷல் ட்ரெயின் விடும் ரயில்வே துறை - மாரத்தான் அன்று வழக்கமான 2 காலை ரயில்களும் கான்சல் செய்தது கொடுமை !

மொத்த ரன்னர்களில் 70 % க்கும் மேல் 10 கி. மீ ஓடுவோர் தான். இதனால் சாலை முழுதும் நிரம்பி வழிந்தது. பலரும் மெதுவாய் நடப்போராய் இருந்தனர். இவர்கள் முழு கும்பலாய் சேர்ந்து சாலையை மறைத்தபடி நடந்து செல்ல -ஓடுவோர் அவர்களை சுற்றி கொண்டு - அல்லது வழி விடுங்கள் என சொல்லி கொண்டு ஓட வேண்டி இருந்தது. இதனால் வழக்கமான நேரத்தை விட நிச்சயம் சற்று கூடுதல் நேரம் ஆனது.

Image may contain: 5 people, people smiling, outdoor

10 கி. மீ, அரை மாரத்தான் மற்றும் முழு மராத்தான் மூன்றும் ஒரே ரூட் .. எனவே 7 மணி முதல் 9 மணி வரை அந்த ரூட்டில் 3 வித மாரத்தான் ஓடுவோரும் ஓடி கொண்டிருந்தனர். குறிப்பாக மிக வேகமாய் ஓடும் நண்பர்களுக்கு கூட்டத்தில் புகுந்து ஓடுவது சிரமமாக இருந்தது.

10 கி. மீ ஓட்டம் காலை 7 மணிக்கு தான் துவங்கியது; நல்ல வெய்யில் அடிக்க ஆரம்பித்து விட்டது. குறிப்பாக அடுத்த அரை மணியில் செம வெய்யில்.. பெரும்பகுதி ஓட்டம் வெய்யிலில் ஓட வேண்டியிருந்தது; பல மாரத்தான்களில்  7 மணிக்கு ஓட்டத்தை முழுவதும் முடித்திருப்போம். வெய்யில் ஓட்டத்தை பாதித்தது என நண்பர்கள் பலர் கூறினர் !

இறுதியாக....

ஏராளம் பேரை இழுக்கும் மெகா மராத்தானின் முக்கிய நோக்கம் அத்துடன் முடிகிறது. சில நூறு அல்லது அதிகபட்சம் ஆயிரம் பேர் ஓடும் மராத்தான்களில் ஓடுவதே மகிழ்ச்சியும் இனிய அனுபவமும் தருகிறது. அத்தகைய ஓட்டங்களை தான் அதிகம் தொடர வேண்டும் என நண்பர்கள் பேசிக்கொண்டோம்..

Image may contain: 1 person, standing and text

உங்களுக்கு உடல் குண்டாய் இல்லாமல் பார்க்க  fit ஆக இருக்கணும் என ஆசையா? அதே நேரம் சாப்பாடு  விஷயத்தில் எதையும் விட்டு கொடுக்க கூடாது; வழக்கம் போல் பிடித்ததை சாப்பிடணும், நோயும் வர கூடாது என நினைக்கிறீர்களா?

ஒரே வழி தான்..

வாங்க .. ஓடலாம் !
****
தொடர்புடைய பதிவுகள்

உடல் எடை குறைப்பு: உணவாலா? உடற் பயிற்சியாலா: ஒரு நேரடி அனுபவம்

முதல் மாரத்தான் அனுபவங்கள் 

பாடகர் நரேஷ் அய்யருடன் ஓடிய மாரத்தான் + மினி பேட்டி-படங்கள்

மராத்தான் ..சில தவறான புரிதல்கள்


Friday, January 6, 2017

கோத்தகிரி.. என்ன பார்க்கலாம்.. எங்கு தங்கலாம் + கொடநாடு எஸ்டேட் ஒரு விசிட்

கோத்தகிரியில் என்ன விசேஷம்?

இரண்டு விஷயங்கள்.. ஒன்று கிளைமேட்.. பெரும்பாலான மாதங்கள் குளிர் இருக்கும் ஊர்.அடுத்தது எங்கெங்கு காணினும் தேயிலை தோட்டங்கள் .. இதனால் எங்கும் பசுமை நிறைந்து அழகு ததும்புகிறது.

பார்ப்பதற்கு என்ன இருக்கிறது?

ஒரு சில .இடங்கள் உண்டு. முக்கியமாக கொட நாடு. (ஆம்.. ஜெயலலிதா முதல்வராக இருக்கும் போது அடிக்கடி சென்று தங்குவாறே .. அதே கொட நாடு தான்.இது கோத்தகிரியில் இருந்து 18 கி. மீ தூரத்தில் உள்ளது.அங்கு ஒரு வியூ பாயிண்ட் உள்ளது. அதனை விட முக்கியம் செல்லும் 18 கி. மீட்டரும் பசுமை போர்த்தி ரசிக்கும் வண்ணம் உள்ளது.மற்றபடி கிளைமேட்டை என்ஜாய் செய்தபடி ரிலாக்ஸ் செய்யலாம். தேயிலை தோட்டங்களில் காலாற நடக்கலாம். அவ்வளவு தான்.

மலை வாசஸ்தலம் என்றால் - மலை மேல் பயணம் செய்யணும் இல்லியா? நாமே கார் ஒட்டி செல்லலாமா? கடினமான மலையா?

மலை வாசஸ்தலம் தான். ஆனால் இதுவரை நாங்கள் சென்றவற்றில் இவ்வளவு உயரத்தில் உள்ள ஹில் ஸ்டேஷன் ஏற அவ்வளவு எளிதில் இருப்பது - இங்கு தான் பார்க்கிறோம். பிரிட்டிஷ் காரர்கள் போட்ட மிக மிக மிக அற்புத சாலைகள் மற்றும் அதன் வடிவமைப்பு அட்டகாசம். சம தளத்தில் பயணிக்கிற உணர்வு தான் வருகிறதே ஒழிய மலை மேல் ஏறுவது போல தோன்றவே இல்லை; வளைவுகள் அப்படி திட்டமிட்டுள்ளனர். அற்புதம் ! குறிப்பாக எல்லா மலை ஏறும்போதும் வாமிட் செய்வோர் கூட கோத்தகிரி செல்லும் போது வாமிட் செய்ய மாட்டார்கள் !கார் ஓட்ட முடியுமெனில் தைரியமாக நாமே கார் ஒட்டி செல்லலாம்; எந்த பிரச்னையும் இல்லை.

தங்க இடம்?

50க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்கள் உள்ளன. முழு லிஸ்ட்டை எந்த ஒரு பயண வலை தளத்திலும் பார்க்கலாம்.

நாங்கள் தங்கியது பீக் வியூ என்கிற ரிசார்ட்டில்.

பீக் வியூ ரிசார்ட் அனுபவம் எப்படி இருந்தது?

நிச்சயம் மிக இனிமையாக இருந்தது.

கோத்தகிரி பஸ் நிலையத்தில் இருந்து 3 கி. மீ தொலைவில் உள்ளது இந்த பீக் வியூ ரிசார்ட். ஊட்டி- கோத்தகிரி நெடுஞ்சாலை மீதே உள்ளது; எனவே கோத்தகிரியில் இருந்து ஊட்டி/ குன்னூர் செல்லும் எந்த பஸ்ஸில் ஏறினாலும் இங்கு இறங்கி  கொள்ளலாம்.மேலும் ஏராள மினி பஸ்கள் ஓடுகின்றன. அவற்றின் மூலமும் இங்கு வந்து  சேரலாம்.இது நந்த குமார் என்பவரின் குடும்பம் பராமரிக்கும் ரிசார்ட். இவர்களும் அதே காம்பவுண்டில் தனியே ஒரு வீட்டில் இருப்பதால் - பாச்சிலர்ஸ் தங்க அனுமதிப்பதில்லை; குடும்பத்தினருக்கு மட்டுமே அனுமதி தருகிறார்கள்.மொத்தம் 4 ரூம். சிறிய ரூம் வாடகை 2400; பெரிய ரூம் 2700.

அங்கேயே உள்ள கிச்சனில் வசந்தி என்கிற குக் மிக மிக அற்புதமாக சமைத்து தருகிறார். டிவைன் ! விலையும் மிக நியாயமாக உள்ளது.முன்பு இவர்கள் தங்கிய வீட்டை தான் இப்போது ரிசார்ட்  ஆக்கியுள்ளனர். குளிக்க ஹீட்டர் உள்ளது; அறையினுள் - அறையை சூடாக்கும் ஹீட்டர் இல்லை; மாலை நேரம் குளிர் உள்ளே வராமல் கதவுகளை சாத்தி வைத்து விட்டால் சமாளித்து  விடலாம்.

இவர்களது ஆர்கானிக் கார்டன் அருமையான பராமரிப்பு. கேரட், பீன்ஸ், டபுள் பீன்ஸ், உருளை கிழங்கு  உள்ளிட்ட பல காய்கறிகள்  இவர்கள் விளைய வைத்து - இவர்களும் பயன்படுத்தி விற்கவும் செயகிறார்கள்.இவர்களது டீ எஸ்டேட்ட்டும் பின்னாலேயே உள்ளது; அதனையும் சுற்றி பார்க்கலாம்.

மாலை நேரம் 500 ரூபாய் சார்ஜ் செய்து காம்ப் பாயர் ஏற்பாடு செய்கிறார்கள். தேவையெனில் சொல்லலாம்.

கோத்தகிரியில் எத்தனை நாள் தங்கலாம்?

சிலர் ஊட்டியில் தங்குவதற்கு பதில் இங்கு தங்கி கொண்டு - இங்கிருந்து பஸ் அல்லது காரில் ஒரு நாள் குன்னூர் சென்று அங்குள்ள  இடங்களை பார்த்து வருகிறார்கள். போலவே மற்றொரு நாள் ஊட்டி சென்று திரும்புகிறார்கள். இப்படி ஊட்டி மற்றும் குன்னூர் சேர்த்து விசிட் அடித்தால் 3 அல்லது 4 நாள் தங்கலாம். வெறும் கோத்தகிரி எனில் 2 அல்லது அதிக பட்சம் 3 நாள் தங்கலாம்.

பீக் வியூவில் தங்கினால் - ஊட்டி சாலையில்  பீக் வியூவிற்கு சற்று மேலே - 5 முதல் 10 நிமிடம் நடந்தால் சில அழகிய காட்சிகளை காணலாம்..உயரமான சாலையின் கீழ் பள்ளத்தாக்கு .. சுற்றிலும் மலைகள் மற்றும் மேலிருந்து கீழ் வரும் தேயிலை தோட்டங்கள்..என மனதை கொள்ளை அடிக்கும் காட்சிகள்..

கொடநாடு?

முதலில் சொன்னது போல, கோத்தகிரியில் இருந்து 18 கி.மீ தொலைவில் உள்ளது கொடநாடு. இது சற்று உயரத்தில் இருப்பதால், வியூ பாயிண்ட் ஒன்று  அமைத்துள்ளனர்.நல்ல சூழல் எனில் மேகங்கள் தவழ்வதை கண்டு மகிழலாம்; மதியம் 3 மணிக்கு மேல் மேகங்கள் அதிகம் தெரியாது என்கிறார்கள். எனவே காலை நேரம் செல்வது சிறப்பு.இங்குள்ள வியூ பாயிண்ட்டை விட கோத்தகிரியில் இருந்து கொடநாடு செல்லும் ரூட் தான் அமர்க்களம். நீங்கள் ட்ரெக்கிங்/ நடை பிரியர் எனில் 18 + 18 = 36 கிலோ மீட்டர் நடக்கலாம் ! ஒரு நாள் ஆகும்.. தப்பே இல்லை. அல்லது செல்லும்போது பஸ்ஸில் சென்று விட்டு வரும்போது நடந்து வரலாம். அற்புதமான பசுமை/ காட்சிகளில் சொக்கி போவோம் !

கொடநாடுக்கு எப்படி செல்வது?

நீங்கள் காரில் வந்திருந்தால் எளிதில் அதில் செல்லலாம்.

 அல்லது அங்குள்ள கார் ஒன்றை வாடகைக்கு எடுத்து கொள்ளலாம்.

இன்னும் எக்கனாமி தேவை எனில் கோத்தகிரியில் இருந்து ஒரு மணிக்கொரு பஸ் கொடநாடு செல்கிறது; 9 ரூபாய் மட்டுமே டிக்கெட்; போலவே அங்கிருந்தும் - கோத்தகிரிக்கு ஒரு மணிக்கொரு பஸ் வருகிறது. நாங்கள் இதில் தான் சென்று வந்தோம்.

ஒரு பஸ்ஸில் சென்று கொடநாடு வியூ பாயிண்ட் பார்த்து விட்டு பின் நாங்களே இறங்க ஆரம்பித்து விட்டோம். ஆங்காங்கு நின்று ரசித்து படங்கள் எடுத்து 2 மணி நேரம் கழித்தோம்.பின் ஒரு பஸ் வர, அதனை பிடித்து கீழே வந்து சேர்ந்தோம்.

இங்கு சாப்பிட அவ்வளவு நல்ல கடைகள் இல்லை; எனவே மதிய உணவு நேரம் இங்கிருந்தால் பிஸ்கட் போன்றவை சாப்பிட்டு சமாதானம் அடைய வேண்டியது தான்.

ஜெ அவர்களின் எஸ்டேட்?அங்கு ஏராளமான தேயிலை தோட்டங்கள் உள்ளன. அவற்றில் மிக அழகான ஒன்று ஜெ அவர்களின் எஸ்டேட் தான் ! வெளியில் இருந்து தான் பார்க்க முடிகிறது. நிறைய சாலைகள் அவர்களே அமைத்துள்ளனர். அனைத்தும் தனியார் சாலை; அனுமதி இல்லை என போர்டு தொங்குகிறது; மேலும் ஆங்காங்கு வாட்ச் மேன்கள் வேறு..

இருந்தும் அவரது ஒரு சில தோட்டங்கள் அதிக தடுப்பு/ வாட்ச் மேன் இல்லாமல் இருந்தது. அவற்றில் மட்டும் கொஞ்சம் உள்ளெ சென்று சில படங்கள் எடுத்தோம். (மற்றவற்றில் வெளியில் இருந்து பார்க்கலாம்; படம் எடுக்கலாம்)

அவர் எப்போதும் தங்கும் கொட நாடு பங்களாவை பஸ்ஸில் செல்லும்போதே காண்பிக்கிறார்கள். உள்ளே ஹெலிபேட் உள்ளதாம்; விமானத்தில் தான் வந்து செல்வாராம்.

அவரது எஸ்டேட் பெயரே கொடநாடு எஸ்டேட் தான். அதே பெயரில் தேயிலை நிறுவனமும் வைத்து - தேயிலை வெளிநாடுகளுக்கு மட்டும் மிக நல்ல விலையில் ஏற்றுமதி ஆகிறது என்கிறார்கள்.

பீக் வியூ மற்றும் டிரைவரின் தொலை பேசி எண்கள் 

Peak view Mr. Nandhu 94435 54025

Driver Mr. Sagai 94435 22199

இறுதியாக.. 

ஊட்டி போல இனிய கிளைமேட் .. ஆனால் அதை விட அழகிய சுற்றுப்புறம்.. அவசியம் ஒரு மினி ட்ரிப் அடிக்க வேண்டிய இடம் கோத்தகிரி !

தொடர்புடைய பதிவு

கோத்தகிரி - இனிய பயணம் - புகைப்படங்கள் - ட்ரைலர்

Sunday, January 1, 2017

கோத்தகிரி - இனிய பயணம் - புகைப்படங்கள் - ட்ரைலர்

நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ....

கோத்தகிரி.. 

கோயம்பத்தூரிலிருந்து 64 கி, மீ ; ஊட்டியிலிருந்து 30 கி, மீ. ஊட்டியை போலவே மிக குளிர்ந்த வானிலை; ஊட்டி போல சிறிதும் pollute ஆகவில்லை; ஊட்டிக்கருகே மறைந்திருக்கும் சொர்க்கம் என்கிறார்கள். 

அண்மையில் இங்கு ஒரு சின்ன ட்ரிப் அடித்தோம். அப்போது எடுத்த படங்கள் இதோ.. எங்கு தங்கினோம், என்ன பார்த்தோம் என்பது அடுத்த பதிவில்.. 

Add captionஎங்கெங்கு காணினும் பசுமை.. தேயிலை தோட்டங்கள்...

நாங்கள் தங்கிய ரிசார்ட் ஓனர் திரு. நந்து மற்றும் அவர் மனைவியுடன் 

பீக் வியூ ரிசார்ட்டின் அற்புத ஆர்கானிக் தோட்டத்தில் 

அதே தோட்டத்த்தில் விளைந்த உருளை கிழங்கை நமக்கு எடுத்து காட்டுகிறார் ஊழியர் 

ஓர சோலை - இந்த ஊரில் என்ன விசேஷம்..? சொல்றோம்.. வெயிட் பண்ணுங்க.. 

கொட நாடு எஸ்டேட்.. ஆம்.. உங்களுக்கும் எனக்கும் தெரிந்த அதே எஸ்டேட் தான்.. இங்கு ஒரு விசிட் 

கொடநாடு எஸ்டேட் - செக் போஸ்ட்- உள்ளே செல்ல முடிந்ததா? 

கொடநாடு எஸ்டேட்டில் தேயிலை பறிக்கிறார்கள்.. இவர்களிடம் நம்ம பதிவர் பேட்டி எடுத்தாரா? 

கொட நாடு வியூ பாயிண்ட் .. பின்னால் மேகங்கள் மேகங்களை கவனியுங்கள்.. 

சும்ம்மாவே இந்த ஆளு ரவுசு தாங்காது.. இதில் பைக் வேறயா? பின்னால் தெரிவது ரிசார்ட் அல்ல. தனியொருவர் வீடு 

கொடநாடு எஸ்டேட் 

தேயிலை தோட்டங்கள்.. பேருந்து பாதைகள் இரண்டும் சேர்ந்து தரும் அழகான தோற்றம் 


The Point என்கிற அழகிய ரிசார்ட் முன்பு 

தேயிலை தோட்டம் முன்பு அமர்ந்த படி ஒரு அரட்டை. நேரம் 12 மணி; 18 டிகிரி கிளைமேட் வெய்யிலும் குளிரும் சேர்ந்து அடிக்குது இந்த நேரத்தில்; வீட்டினுள் இருப்பதை விட வெய்யில் இருப்பதால் வெளியில் இருக்க விரும்புது மனது 


தொடர்புடைய பதிவு 

Related Posts Plugin for WordPress, Blogger...