தெய்வ திருமகள்
கதை மட்டும் இன்ன பிற விஷயங்கள் நான் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. இந்நேரம் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.படத்தின் பிளஸ் மற்றும் மைனஸ் மட்டும் என் பார்வையில் ...
பிளஸ்
* குடும்பத்துடன் அமர்ந்து எந்த காட்சியிலும் நெளியாமல் பார்க்கிற மாதிரி ஒரு படம் நீண்ட நாள் கழித்து தந்தமைக்கு விஜய்க்கு பாராட்டு.
* குழந்தை சாரா கொள்ளை அழகு. தமிழ் புரியாது என்பது தெரியாத அளவில் மிக நல்ல நடிப்பு. (இடைவேளைக்கு பின் சாராவிற்கு வேலை மிக குறைவே)
* விக்ரம் நடிப்பை பலர் ரசித்தும், சிலர் விமர்சித்தும் ("எந்த ஐந்து வயது குழந்தை இப்படி பேசுகிறது?") எழுதுகிறார்கள். ஐந்து வயது குழந்தையின் மனநிலை என்பதை விட, மன நிலை சரியில்லாதவர் என்பது தான் சரி. அந்த விதத்தில் அவர் நடிப்பு நிச்சயம் அருமை. படத்தின் இறுதியில் விக்ரம் & குழந்தை சாரா கோர்ட் உள்ளே மற்றும் வெளியே சந்திக்கும் காட்சிகளில் அழுபவர் பலர்.. (என்னையும் சேர்த்து )
*சந்தானம் நகைச்சுவை கலக்கல். தமிழ் சினிமாவில் தற்சமயம் போட்டிக்கு ஆளே இல்லாமல் நம்பர் ஒன் ஆக இருக்கிறார் சந்தானம். இன்னும் கொஞ்சம் இவருக்கு போர்ஷன் தந்திருக்கலாம் என்கிற அளவு கிடைக்கிற கேப்பில் எல்லாம் விளையாடுகிறார்.
* வக்கீலான சந்தானம் கோர்ட் வாசலில் நின்று கிளையன்ட் பிடிக்க அலைவது நீங்கள் சைதாப்பேட்டை அல்லது எக்மோர் கோர்ட் சென்றால் பார்த்திருக்கலாம். வாய்தாவுக்கும், ஜாமீனுக்கும் இத்தகைய வக்கீல்கள் இருக்கவே செய்கின்றனர். அனுஷ்காவின் மற்றொரு பெண் உதவியாளரை பார்த்து நாசரின் ஜூனியர் ஜொள் விடுவதும், அதை வைத்து அவர்கள் பக்கத்து விஷயங்கள் கறப்பதும் கூட சுவாரஸ்யமாய் சொல்கின்றனர்.
* அனுஷ்கா இந்த படத்திற்கு மிக பெரிய பிளஸ். அதிக மேக் அப் இன்றி இயல்பான அழகுடன் அசத்துகிறார். வெறும் அழகு மட்டுமின்றி நடிக்கவும் செய்கிறார். சொல்ல போனால் பிற்பகுதியில் விக்ரம் வீட்டுக்குள் அடைந்தே கிடக்க, கதை அனுஷ்கா மற்றும் நாசர் இருவரின் தோள்களில் நன்றாகவே பயணம் செய்கிறது. விக்ரமிற்கு மீண்டும் கடைசி 15 நிமிடங்களில் தான் வேலை !
* "ஆரிரோ" & " ஒரே ஒரு ஊருக்குள்ளே" பாடல்களும், படமாக்கிய விதமும் அருமை. பின்னணி இசையும் உறுத்தாமல் உள்ளது
* படத்தின் கோர்ட் சீன்களும் இறுதி காட்சியும் படத்தின் நிச்சயமான ஹை லைட்ஸ்.
மைனஸ்
* ஐ யாம் சாம் படத்தின் அப்பட்ட தழுவல் என்பது நிச்சயம் உறுத்துகிறது. டைட்டானிக்கை காப்பி அடித்ததாலேயே எனக்கு மதராச பட்டினம் அதிகம் பிடிக்காமல் போனது. ஐ யாம் சாம் பார்த்ததில்லை எனினும் அந்த படம் பற்றி படிக்கும் போது, அதிலிருந்து முதல் காட்சி முதல் கடைசி காட்சி வரை, ("பபபா.. பப்பா" பாட்டு உட்பட) எந்த அளவு உருவியுள்ளனர் என்பது தெளிவாக புரிகிறது. இது படத்திற்கு தர வேண்டிய மரியாதையை குறைத்து விடுகிறது
* படத்தின் ஆண்டி கிளைமாக்ஸ் எனக்கு சுத்தமாக பிடிக்க வில்லை. விக்ரம் தன் குழந்தையை பிரிந்து இருக்கும் போது ஒவ்வொரு பார்வையாளனும், தானும் அந்த மனநிலையில் இருந்து குழந்தை தந்தையுடன் சேர வேண்டும் என்று நினைக்கிறான். ஆனால் குழந்தை வந்த முதல் நாள் இரவே விக்ரம் அவளை மீண்டும் தன் மாமனார் வீட்டிலேயே விடுகிறாராம் ! அப்போ தான் அவர் நல்லா படித்து "டாக்டர்" ஆவாராம் !! இது படத்தை சோகமாக முடித்தால் தான் பார்ப்பவர்கள் "சோக மனதோடு" செல்வார்கள் என்பதால் வலிந்து செய்யப்பட ஒன்று. அல்லது ஐ யாம் சாம் படத்து முடிவு இதே என்பதால் அதே போல் முடித்துள்ளார்கள்.
"டாக்டர் ஆவது இருக்கட்டும். தந்தை இன்றி அந்த குழந்தை ஒரு நிமிடம் கூட மகிழ்ச்சியாக இல்லாததாக காட்டுகிறார்களே. அப்படி அவள் தந்தையை பிரிந்து இருப்பது தேவையா? படித்து டாக்டர் ஆகவும் ஒரு மன நிலை வேண்டும் தானே? மனம் முழுக்க வருத்தம் இருந்தால் படிக்க முடியுமா? விக்ரமிற்கு அவளை படிக்க வைக்க பணமில்லை என்பதை காரணமாக காட்டுகிறார்கள். ஆனால் விக்ரமின் பேக்டரி ஓனரே மிக நல்லவராய் உள்ளார். அனுஷ்கா விக்ரம் மேல் காதல் கொண்டு பைக்கில் போகும் போதே மனதுக்குள் டூயட் எல்லாம் பாடி விட்டார். அவர்கள் படிக்க வைக்க மாட்டார்களா? இந்த முடிவு உண்மையில் செம கடுப்பை தந்தது. " நந்தவனத்தில் ஒரு ஆண்டி" பாடல் தான் நினைவுக்கு வந்தது. உடைத்தது விக்ரம் அல்ல. இயக்குனர் விஜய்.
* படத்தில் நாடக தன்மையை சற்று குறைத்திருக்கலாம். உதாரணத்திற்கு ஒரு காட்சி. உடல் நிலை சரியில்லாத நாசர் குழந்தைக்கு ஓடி சென்று மருந்து வாங்கி வருகிறார் விக்ரம். அதுவாவது பரவாயில்லை. அப்போது வீட்டுக்கு வந்த டாக்டர் " அடடா நான் மருந்து சீட்டில் எழுதிய அதே மருந்தை வாங்கிட்டு வந்திருக்கீங்களே!" என்கிறார். இது மாதிரி " சாரி கொஞ்சம் ஓவர்" காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.
மொத்தத்தில்
மனதை நெகிழ்த்தும் ஒரு நல்ல படம் ! ஐ யாம் சாம் பார்க்காத நாம் நிச்சயம் ரசித்து பார்க்கவே செய்வோம். விக்ரம், சந்தானம், அனுஷ்கா, நாசர். குழந்தை சாரா என நம்மை அசத்தும் நட்சதிரங்களுக்காகவே நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம் !
கொசுறு : வேங்கை : குட்டி விமர்சனம்
ஓரளவு நல்ல கதை. சில சுவாரஸ்யமான திருப்பங்கள்..தொடக்கத்தில் " நல்லா தானே போய் கிட்டு இருக்கு !!" என்று தான் நினைத்தேன். ஆனால் போக போக " முடியலை!!"
தனுஷ், பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண் மட்டுமல்ல சார்லி, பயில்வான் ரங்கநாதன் போன்ற ஐம்பதுக்கும் அதிகமான குட்டி பாத்திரங்கள். கதையை நன்றாக எடுத்து செல்ல வாய்ப்பு இருந்தும், மோசமான திரைக்கதையால் சொதப்பி விட்டார் அருவா புகழ் ஹரி.
அருவாளை கண்டாலே அலறும் அளவுக்கு கடைசி ஒரு மணி நேரம் சோதிக்கிறது. தனுஷ் எத்தனை பேரை கொல்கிறார்! அது குறித்து எந்த குற்ற உணர்வும் இல்லாமல் (ஒருவனை கொன்றாலே யாராலாவது நிம்மதியாய் தூங்க முடியுமா?) வலம் வருகிறார்.
தனுஷ் அருவா தூக்கும் போது நமக்கு சிரிப்பதா அழுவதா என தெரிய வில்லை. " ஒரு அருவாளே அருவாள் தூக்குகிறதே!" என விவேக் மாதிரி சொல்ல வேண்டியது தான்.
கஞ்சா கருப்பு காமெடி குமட்ட வைக்கும் அளவுக்கு அருவருப்பாக உள்ளது. சிரிப்பு என்பது மருந்துக்கும் வர வில்லை.
தமன்னா மற்றும் குடும்பத்தார் ராஜ் கிரனை கொல்வதே 15 ஆண்டுக்கும் மேலாக வாழ்க்கை லட்சியமாக கொண்டுள்ளனர். ஆனால் ராஜ் கிரண் அவர்கள் வீட்டிற்குள் வந்து " உங்க அப்பாவை நான் கொல்ல வில்லை. வேறு ஒருவன் கொன்றான்" என ரெண்டு வரிங்க. ரெண்டே ரெண்டு வரி பேசியதும், தமன்னா குடும்பமே கண்ணீர் விட்டு ராஜ் கிரண் சொல்வதை நம்பி, அவரிடம் மன்னிப்பு கேட்கிறது ! அருவா ஹரி சார் .. நல்லா இருக்குங்க இந்த சீன். செமையா தின்க் பண்ணிருக்கீங்க !
இந்த இயக்குனர் அவ்வப்போது "சாமி", " சிங்கம்" என்ற நல்ல படங்கள் தருவார். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் ஹரி !!
****
****
தெய்வ திருமகள் : நிச்சயம் பார்க்கலாம்
வேங்கை : சன் டிவியில் வரும் போது (பொழுது போகாட்டி) பார்த்துக்கலாம்!