Monday, August 31, 2015

தனி ஒருவன் -துப்பாக்கி பார்ட் டூ வா ? - விமர்சனம்

இன்றைய சினிமா இருக்கும் நிலையில் ஒரு நடிகர் வருடத்துக்கு 2 படம் நடித்தாலே பெரிய விஷயம்.. ஜெயம் ரவிக்கு இவ்வருடம் மூன்றாவது ரிலீஸ் இது..

அதுவும் அடுத்தடுத்த மாதங்களில் ... ஜூன் மாதம் - ரோமியோ ஜூலியட், ஜூலை - சகல கலா வல்லவன், ஆகஸ்ட்- தனி ஒருவன்.. என 3 மாதங்களில் 3 ரிலீஸ்... !! ரோமியோ ஜூலியட் கையை கடிக்காமல் ஓடியது; அடுத்த சகல கலா வல்லவன் செம அடி.. இப்போது தனி ஒருவன் மரண மாஸ் ஹிட் !

கதைநல்லவனுக்கும் கெட்டவனுக்கும் நடக்கும் போராட்டம்.. குறிப்பாக அவர்களுக்குள் நடக்கும் மைண்ட் கேம்ஸ்  தான் கதை.. இதற்கு மேல் சொல்லி சுவாரஸ்யத்தை குலைக்க விரும்ப வில்லை

ஹீரோ 

சர்ர்ர்ரியான ஹீரோயிசம் நிறைந்த பாத்திரம்.. அதற்கு முழுசாய் ஜஸ்டிபை (Justify)  செய்கிறார் ஜெயம் ரவி.. எமோஷனல் காட்சிகள், குழம்பிய மன நிலை, சண்டை காட்சி என அனைத்திலும் யூனிபார்ம் போல கச்சிதம்.. ..

அரவிந்த் சாமி

இந்நேரம் நிச்சயம் உங்களுக்கு தெரிந்திருக்கும்.. படத்தின் பெரும் ஆச்சரியம் அரவிந்த் சுவாமி தான்.. கடலில் வில்லனாக சொதப்பியவர், இங்கு அசத்தி இருக்கிறார்.. உண்மையில் அவருக்கு கிடைக்கும் பாராட்டில் பெரும் பகுதி இயக்குனருக்கு தான் செல்ல வேண்டும். அர்விந்த் சுவாமி வழக்கம் போல் மிக அடக்கி வாசித்துள்ளார்(Under play without over acting) .. அந்த பழைய அழகை மீண்டும் ரசிக்க முடிகிறது..

படத்தின் முடிவின் சாதா வில்லன் கதையை முடிப்பது போல் செய்யாமல், இறுதியிலும் நம் மனதில் நிறைகிற படி செய்துள்ளது அழகு..நயன் தாரா 

ஹீரோ மற்றும் வில்லன் இன்ட்ரோவை விட நயன் முதலில் வரும் காட்சிக்கு தான் தியேட்டர் முழுக்க அவ்வளவு சத்தம் !!

பாடலுக்கு மட்டுமின்றி - கதையோடு வருகிற மாதிரி இவர் பாத்திரம் அமைக்க பட்டதே ரொம்ப நல்ல விஷயம்..

தம்பி ராமையா 

ரொம்ப ரொம்ப அழகான கேரக்டரைசேஷன்; இரண்டாம் பாதியில் இவரது பாத்திரம் நல்ல ரிலீப்... மாடுலேஷனடுன் + இவர் பேசும் பல வசனங்களை மிக ரசிக்கிறார்கள்..

திரைக்கதை - வசனம்  

வசனம் பல இடத்தில் அப்ளாஸ் அள்ளுது.. திரைக் கதை தான் நிஜ ஹீரோ. முதல் பாதி முழுதும் தோட்டா போல சீறி பறக்கிறது.. இரண்டாம் பாதியும் குட்.. ஏனோ கடைசி 10 நிமிடம் ஒரு lag வருகிற மாதிரி உணர்வு.. ( சண்டை காட்சி இன்றி கிளை மாக்ஸ் வைத்திருப்பதை பாராட்ட வேண்டும் !)

குறைவான பாடல்கள் -

நிறைய சண்டைகளுக்கு வாய்ப்பிருந்தும் அளவோடு வைத்தது.. என திரைக்கதையில் பாராட்ட ஏராள விஷயங்கள் ...

நிச்சயம் பல லாஜிக் மிஸ்டேக் உள்ளது.. ஆனால் பற பற கதையில் அது மறந்து போகிறது..

இயக்கம் 

ஜெயிக்க ஆசை மட்டும் போதாது .. வெறி வேண்டும்..

ஓரிரு தோல்விக்கு பிறகு   - முதல் படம் போல அதீத வெறியோடு உழைத்துள்ளார் மோகன் ராஜா (எம். ராஜாவிலிருந்து  மோகன் ராஜா என்ற பெயர் மாற்றம் அவருக்கு நன்றாகவே வொர்க் அவுட் ஆகி உள்ளது !)

ஜெயம் ரவி - நயன்தாராவிடம் காதலை சொல்லும் சீன் அட்டகாசம்.. அந்த காட்சியை எவ்வளவு சுவாரஸ்யமாக கற்பனை செய்துள்ளனர் என ஆச்சரியமாக இருந்தது.. இப்படி வசனமே இல்லாமல் - இயக்குனரின் புத்திசாலி தனம் மூலம் சில காட்சிகள் கை தட்டலை அள்ளுகிறது..
தியேட்டர் நொறுக்ஸ்

சத்யம் நிறுவன தியேட்டர்களில் - வெள்ளி கிழமை ரிலீஸ் ஆகும் நல்ல படங்களுக்கு செவ்வாய் கிழமை இரவே டிக்கெட் புல் ஆகி விடுகிறது.. ரிவ்யூ நல்லா இருக்கு என தெரிந்த பின் பார்க்கணும் என்றால் சிறு தியேட்டர்களை தான் நாடணும்  !

ரொம்ப நாள் கழித்து (After 7 years) எங்க ஊர் குமரன் தியேட்டர் சென்றோம்.. சனிக் கிழமை சென்று டிக்கெட் கிடைக்காமல் திரும்பி, மறு நாளைக்கு புக்கிங் செய்து விட்டு வந்தோம் !!

குமரன் தியேட்டர் இப்படம் போலவே இனிய ஆச்சரியம் தந்தது.. முழு ஏ. சி.. அருமையான இருக்கைகள்.. நல்ல சவுண்ட் சிஸ்டம்.. சுத்தமான கழிப்பறை.. இணையத்தில் முன் பதிவு என எங்க மடிப்பாக்கத்தில் இவ்வளவு நல்ல தியேட்டரா என கிள்ளி பார்த்து கொள்ள வேண்டியுள்ளது..

தனி ஒருவன் - FINAL ANALYSIS

உண்மையில் இப்படத்தை விஜய்  நடித்த துப்பாக்கி உடன் தான் ஒப்பிட வேண்டும். அங்கு ஹீரோ ராணுவ அதிகாரி. இங்கு போலீஸ். அப்படம் போலவே தனி  மனிதனாக பெரும் கூட்டத்தை வீழ்த்துகிறார் ஹீரோ..நிச்சயம் துப்பாக்கியின் இன்ஸ்பிரேஷன் என்று சொல்ல வில்லை; ஆனால் அதே genre ; திரைக்கதையில் அதே ஸ்பீட் !

அஜீத் நடித்திருந்தால் - இப்படம் இன்னும் சில மடங்கு வெற்றி அடைந்திருக்கும் (விஜய் எனில் - துப்பாக்கி போலவே இருக்கு என சொல்ல வாய்ப்பு அதிகம்; எனவே அஜீத்தை சொன்னேன் )

த்ரில்லர் + சஸ்பென்ஸ் + ஆக்ஷன் கதைகள் சரியான திரைக் கதையுடன் சொல்ல பட்டால் வெற்றி பெற வாய்ப்பு அதிகம்.. அது மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகி உள்ளது.. நிச்சயம் பிற மொழிகளுக்கு இப்படம் (Re make) சென்று விடும்..

ராஜா.. அடுத்த பட திரை கதைக்கு நிறைய நாள் எடுத்து கொண்டு இதே தரத்துடன் தர வேண்டும் ..

தனி ஒருவன்.. Racy thriller ! Dont miss it !!

Thursday, August 27, 2015

வானவில்- பாபநாசம் - ஒரிசா... மற்றும் விஜய்யின் புலி..

பார்த்த படம் - பாபநாசம் 

த்ரிஷ்யம் - என்ன கதை என்று சிறிதும் தெரியாமல் பார்த்து ரசித்த படம். பாபநாசம் கதை முழுதும் தெரிந்த பின்னும் ரசிக்க முடிந்தது.

தமிழுக்கு மிக பொருந்தும் விதத்தில் மிகச் சிறு, சரியான மாறுதல்கள் கொண்டு வந்தது அழகு...கமலுக்கு நடிக்க கற்று தரவா வேண்டும்?  கேரக்டருக்கு தேவையான படி அடக்கி வாசித்துள்ளார் (க்ளோஸ் அப்பில் - வயது தெரிகிறது.. பாத்திரத்துக்கு 40 வயது என்கிறார்கள் !!)

மண் மணக்கும் வசனம், சரியான காஸ்டிங் (கெளதமி மிக மிக லேசான உறுத்தல்... ஆனால் அவருக்கும் பாஸ் மார்க் தான் ), பின்னணி இசை  என சொல்லி அடித்துள்ளனர்.. கமலுக்கு- விஸ்வரூபத்திற்கு பின் நல்லதொரு ஹிட்..

மலையாளத்தில் பார்க்காதவர்கள் இந்த வித்யாச கதையில் பிரமித்து போவீர்கள் .. அவசியம் காணுங்கள் !

ஒரிசா... ஆச்சரியபடுத்திய தகவல் ஒன்று

அண்மையில் ரயில் பயணம் ஒன்றில்  எனது கம்பார்ட்மெண்ட்டில் ஒரிசாவை சேர்ந்த இளைஞர்- தனது மனைவியுடன் பயணித்தார். அவரிடம் பேசி கொண்டிருக்கும் போது அவர் சொன்ன ஒரு தகவல் ஆச்சரிய படுத்தியது..

ஒரிசாவில் பெண்கள் அநேகமாய் வேலைக்கு செல்ல மாட்டார்களாம். படித்திருந்தால் கூட வேலைக்கு செல்வதில்லை என்றார் அவர்.

தினம் சாப்பிடவே இருவரும் உழைத்தால் தான் முடியும் என்ற நிலை உள்ளவர்கள் மட்டும் தான் வேலைக்கு செல்வார்கள் என்றார் !

"அப்ப காலேஜில் படிக்கும் பெண்கள்??" என கேட்க, மீண்டும் உறுதியாக " அவர்கள் வேலைக்கு போக மாட்டார்கள்" என்றார் !

இந்தியாவின் பல மாநிலத்தில் பெண்கள் எவ்வளவோ வளர்ச்சி அடைந்து விட - ஒரிசாவில் எப்படி இந்த மாதிரி நிலை உள்ளது !! அநேகமாய் பீகார் உள்ளிட்ட இன்னும் சில மாநிலங்களிலும் இந்த நிலை இருக்கலாம் என ஊகிக்கிறேன் !

போஸ்ட்டர் கார்னர்ஹெல்த் பக்கம்

உடல் பயிற்சியில் மிக முக்கிய விஷயம் Consistency ! நம் அலுவலகத்தில் ஜிம் இருக்கும்......... சேரலாமா என்ற யோசனையிலேயே பல மாதங்கள் கழிப்போம். அல்லது வீட்டின் அருகில்/ வரும் வழியில் ஜிம் இருக்கும். சேரலாமா வேண்டாமா என்ற யோசனையிலேயே ரொம்ப நாள் முடிவெடுக்காது இருப்போம்.

விரைவில் முடிவெடுத்து சேர்வது தான் முதல் படி; அடுத்த முக்கிய விஷயம் சேர்ந்த பின் தொடர்ந்து செல்வது.

எப்படியோ தினம் ஜிம் போகணும் என்ற பழக்கத்தை மட்டும் எப்படியேனும் கொண்டு வந்து விட வேண்டும். ஜிம் போய் விட்டாலே முக்கால் கிணறு தாண்டி விட்டோம் என்று அர்த்தம். அதன் பின் எப்படியும் ஓரளவு வொர்க் அவுட் செய்து விடுவோம். ஜிம்மில் சேர்ந்த பின்னும் கூட நாளை போகலாம்; நாளை போகலாம் என்றே தள்ளி போடுவது தான் மிக பெரிய தவறு;

உடற் பயிற்சி குறித்து சொல்லும் போது இந்த விஷயத்தை தான் முக்கியமாக சொல்கிறார்கள் " தினமும் ஜிம் சென்று விடுங்கள்; மற்றவை தன்னால் நடக்கும் !!"

ரசித்த கவிதை

முப்பது கம்பனிகளும்
இரண்டு வெளி நாட்டு வங்கிகளும் இருக்கும்
அந்த பெரிய கட்டிடத்தை
தன் மகனுக்கு அறிமுகப் படுத்தினாள்
அந்த சித்தாள்
நாங்கள் கட்டியது என்று சொல்லி
கட்டும் போது இருந்த இடம்,
சமைத்த இடம்,
தூங்கிய இடம் எல்லாம் காண்பித்தாள்,
வெளியே இருந்தபடியே

முற்றிலும் மாறிப்போய்
 தான்  உள்ளே நுழைய கூட முடியாமல்
ஆகிப்போன அந்த கட்டிடத்தை
பெருமையுடன் பார்த்தாள்

அந்த வங்கியின்
நியோன் போர்டு இருக்கும் இடத்தில்
புடவை காயப்  போட்டது
தனக்கு மட்டும் தெரியும்
என்பதை திடீரென உணர்ந்தவளாக !
 _ முகுந்த் நாகராஜன்

(கவிதைக்கு விளக்கம் சொல்ல தேவையில்லை தான். இந்த கவிதை வாசித்ததும் முதலில் தோன்றிய விஷயம் - மிக பெரும் கட்டிடங்கள் கட்டும் நபர்கள் - அந்த கட்டிடம் முடிந்த பின் - அதன் உள்ளே கூட செல்ல அனுமதி இல்லாத நிலை .... என்ன ஒரு வருத்தமான முரண் !!) )

நெசமாத்தான் சொல்றீங்களா ? புலி வருது.. புலி வருது.. 

புலி ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி சன் டிவியில் சில பகுதிகள் மட்டும் கண்டேன். விஜய்யின் பேச்சு சற்று ஆச்சரியப்படுத்தியது. அவருக்கு இவ்வளவு பேச தெரியுமா என்று !!!

20 நிமிடம் போல தங்கு தடையின்றி பேசினார்... நிறைய சினிமா வசனம்/ பஞ்ச் டயலாக்  இருந்தாலும், சிறு பேப்பர் இன்றி, இவ்வளவு கோர்வையாக விஜய்க்கு பேச தெரியும் என்பதே ஆச்சரியமாய் இருந்தது...

டி. ராஜேந்தர் விஜயை அளவுக்கதிகமாக புகழ்ந்தது இவ்வாரம் டுவிட்டர் மற்றும் முக நூல் மக்களுக்கு செம இன்பத்தை தந்தது. அவர் பேசியதை ஓட்டு , ஓட்டென்று ஓட்டி கொண்டுள்ளனர்...

மாதிரிக்கு சில..
Saturday, August 22, 2015

சுஜாதாவின் நைலான் கயிறு -விமர்சனம்

9எழுத்தாளர் சுஜாதாவின் மிக புகழ் பெற்ற நாவல்களில் ஒன்று.1960 களின் இறுதியில் குமுதத்தில் தொடராக வெளிவந்தது.20 ஆண்டுகளுக்கு முன் முதன் முறை படித்த போது அசந்து போனேன். பின் வேறு சில முறை வாசித்துள்ளேன். தற்போது மீண்டும் ஒரு முறை !!

கதை
முதல் அத்தியாயத்தில் ஒரு கொலை நடக்கிறது. நன்கு தெரிந்த ஒருவர் - ஒரு வீட்டுக்கு சென்று அங்குள்ள இளைஞனுடன் சற்று பேசி கொண்டிருந்து விட்டு அவனை நைலான் கயிறால் நெரித்து கொல்கிறான்.

கொலை பழி அதற்கு சற்று முன் வந்து சென்ற இன்னொருவன் மேல் விழுகிறது. அவன் கணேஷை அணுக - கணேஷ் சாதுரியமாக வாதாடி வழக்கை உடைக்கிறான்.. இது முதல் ஏழெட்டு அத்தியாயங்கள்.. கணேஷ் இத்துடன் விடை பெறுகிறான் (இக்கதை எழுதும் போது வசந்த் உதயமாக வில்லை !!)

அந்த கொலையை செய்தது யார் என ரிட்டயர் ஆகும் நிலையில் உள்ள ஒரு போலிஸ் அதிகாரி துப்பு துலக்கி கடைசி அத்தியாயத்தில் கண்டறிகிறார்...
அப்படி என்ன வித்யாசம் ?
வழக்கமான ஒரு கொலை- அதை துப்பறியும் போலிஸ்.. என்பது தான் கதை எனினும் திரைக்கதை - பாணி அந்த காலத்துக்கு நிச்சயம் புதிது.

ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் சுனந்தாவின் டயரியில் இருந்து என்று ஒரு சில பத்திகள் மிக சுவாரஸ்யமாக வந்தோ கொண்டேயிருக்கும்.. நிச்சயம் இந்த பெண் இப்போது இல்லை; அவள் மரணத்துக்கு காரணமானவன் தான் முதல் அத்தியாயத்தில் கொல்லப்பட்டான் என்பது நமக்கு தெரியும். இருப்பினும் கொன்றது யார்.. என்பது ஊகிக்க முடியாத ஒன்று தான்..

மேலும் இறுதியில் அந்த போலிஸ் அதிகாரி ஐ. பி. சி க்கு வெளியே ஒரு நியாயம் நடந்திருக்கிறது; இன்றைய தினம் நான் ரிட்டயர் ஆகி விட்டேன்; உன்னை கைது செய்யவோ, போலீசிடம் மாட்டி தரவோ விரும்ப வில்லை என்று சொல்லி விட்டு செல்வது - நிச்சயம் அந்த காலத்தில் ஒரு புதிதான முடிவாக இருந்திருக்கும்.பல விஷயங்களை சுஜாதா முயன்று பார்த்துள்ளார். இறங்கினான் என்பதை அடுத்தடுத்த வரியில் சொல்வது, சுனந்தாவின் டயரி குறிப்பு இவை எல்லாமே அவர் செய்து பார்த்த புதுமையே...

உண்மையில் 20 வருடம் முன் வாசிக்கும் போது இருந்த திகைப்பும் ரசிப்பும் இப்போது கிட்ட வில்லை என்பது உண்மை தான்...

இருப்பினும் சுஜாதா ரசிகர்கள் அனைவரும் படிக்க/ ரசிக்க வேண்டிய ஒரு புத்தகம் நைலான் கயிறு..

Monday, August 17, 2015

வானவில்..சண்டி வீரன் - அமைதி சிம்பு- டென்ஷன் பிரகாஷ் ராஜ்

பார்த்த படம் - சண்டி வீரன் 

அதர்வா, ஆனந்தி, லால் நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த படம்.

சற்குணம் படங்கள் பெரும்பாலும் தஞ்சை கிராமங்களை பின் புலமாய் கொண்டவை. ஒரு நல்ல மெசேஜ் உள்ள படத்தை காதல் பின்னணியில் கொடுப்பது இவர் பாணியாக இருக்கிறது. இப்படத்திலும் கிராமங்களின் தண்ணீர்  பிரச்னையை தொட்டுள்ளார்.

பக்கத்து ஊருக்கு தண்ணீர் தர மறுக்கும் ஒரு கிராமம் (கர்நாடகா நினைவுக்கு வருகிறதா? ) - அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞன் மிக போராடி - பக்கத்துக்கு ஊருக்கு தண்ணீர் பெற்று தருவது தான் கதை. இதை காதல் மற்றும் காமெடி கலந்து  சொல்லியுள்ளனர்.

ஆனந்தி அழகு, நடிப்பு இரண்டிலுமே மிளிர்கிறார். அதர்வா, லால் நடிப்பும் ரசிக்கும் விதமே...
இருப்பினும் அனைவரும் ரசிக்க, கொண்டாட படத்தில் பெரிதாக எதுவும் இல்லை..

இத்தகைய படம் சூப்பர் ஹிட் ஆகா விடினும், மினிமம் காரண்டி அளவிலாவது ஓடியிருக்கலாம்... இதுவும் ஒரு தோல்வி படமாக அமைந்து விட்டது...

விரைவில் சின்ன திரையில் கண்டு மகிழுங்கள்..

தொலைந்த மொபைலும் கற்ற பாடமும்

அண்மையில் சென்னையிலிருந்து தஞ்சைக்கு ரதி மீனா ஸ்லீப்பர் பஸ்ஸில் பயணித்தேன். பஸ் அல்லது ரயிலில் செல்லும்போது அருகில் போனை வைத்த படியே உறங்குவது பல வருட வழக்கம். அன்றும் அப்படி தான் நடந்தது. நள்ளிரவில் - அதி காலையில் எழும் போதெல்லாம் பத்திரமாக இருந்தது. ஆனால் தஞ்சை சென்று இறங்கும் போது போன் காணவில்லை.. !!

ஏ. சி ஸ்லீப்பர் கோச்.... பெர்த் ஸ்க்ரீன் போட்டு மூடியிருக்கும் போது உள்ளே கை விட்டு போனை யார் எடுத்திருக்க முடியும் !! உடன் பயணித்த யாரும் எடுத்திருப்பர் என தோன்ற வில்லை.... ரதி மீனாவில் வேலை செய்யும் -  நபர்கள் செய்திருக்க வாய்ப்புகள் அதிகம்...

ஒரு சின்ன பையன்.. அட்டெண்டர் ஆக இருந்தான்.. 18 வயது முடிந்திருக்குமா என்றே தெரிய வில்லை.. அவனிடம் கேட்க, நான் எடுக்கலை சார் என தனது பையை கொண்டு வந்து காட்டினான் !! ( உனது பையை காட்டு என நான் கேட்கவே இல்லை )

பையிலா ஒளித்து வைக்க வேண்டும்.. அவனுக்கு பஸ்ஸில் ஒளிய வைக்க எத்தனயோ இடம் !!

புது போன்க்கான செலவை விட - Contacts அனைத்தும் சென்றது தான் பெரும் இழப்பு !

ஒரு வருடம் முன்பு கடைசியாக Back Up எடுத்துள்ளேன்.. எனவே பாதி- Contacts க்கும் மேல் மீட்க முடிந்தது.. இருப்பினும் மீதம் பாதி மீட்பதற்குள் பெரும் துயரத்தில் ஆளாக வேண்டி உள்ளது..

நண்பர்கள் தங்களது Contacts /  தொலைபேசி எண் இவற்றை ஜி மெயிலில் வைத்திருப்பது நல்லது..போன் தொலைந்தாலும் எண்களை மீட்க முடியும்.. இம்முறை அப்படி தான் செய்து வருகிறேன்..

அதிர வைத்த புகைப்படம்அனுஷ்கா - ஆர்யா நடிக்கும் அடுத்த படம் - இஞ்சி இடுப்பழகி (தெலுகிலும் சைஸ் சீரோ என்ற பெயரில் தயாராகிறது )  ; இதில் அனுஷ்கா பருமனான வேடத்தில் நடிக்கிறார்.

கமல், விக்ரம் போன்றோர் பாத்திரத்துக்கேற்ற படி உடல் ஏற்றுவது, இறக்குவது போல ஒரு ஹீரோயின் செய்வது ஆச்சரியமான விஷயம் ! நிச்சயம் இது  ஹீரோயின்க்கு பெரிய ரிஸ்க்.. அடுத்த படம் நடிப்பதற்குள் எடையை குறைப்பது எவ்வளவு கஷ்டமான காரியம்.. !!

அனுஷ்காவின் அர்ப்பணிப்பு உணர்வு ஆச்சரியப்படுத்துகிறது !

என்னா பாட்டுடே.... உனக்கென்ன வேணும் சொல்லு...

என்னை அறிந்தால் படத்தின் " உனக்கென்ன வேணும் சொல்லு"  ....... தந்தை- மகள் உறவு அழகாக வெளிப்படும் இந்த மெலடி நான் கடந்த சில மாதங்களில் அடிக்கடி கேட்கும் பாடல்களில் ஒன்று..
ஹெல்த் கார்னர்

2010 முதல் தொடர்ந்து (4 ஆண்டுக்கும் மேலாக) உடல் பயிற்சி செய்து வந்த நான் - கடந்த ஒரு வருடத்தில் சற்று இடைவெளி விட்டு விட்டேன். தற்போது மீண்டும் துவக்கம்..

உடல் பயிற்சி துவங்கிய பின் அது குறித்து படிப்பதும் இயல்பாக நடக்க துவங்கும்.. அவற்றில் சிலவற்றை இங்கு அவ்வப்போது பகிர்கிறேன்...

* ஒரு வாரத்திற்கு இரண்டரை மணி நேரம் (150 நிமிடங்கள்) குறைந்த பட்சம் நடை பயிற்சி உள்ளிட்ட மிதமான பயிற்சியில் ஈடுபட்டு வந்தால் நிச்சயம் எடை கூடாமல் மெயிண்டயின் செய்யலாம். (எடை குறைய இந்த நேரம் அதிகமாக்கப்பட வேண்டும் !)

* அதாவது அரை மணி நேர நடை பயிற்சி வாரத்தில் - 5 நாள் செய்தால் கூட எடை அதிகமாகாமல் காக்கலாம்..

* தொடர்ந்து அலுவலகத்தில் அமர்ந்திருப்பது நிச்சயம் எடை கூட வைக்கும். காலை, மதியம் - ஒவ்வொரு வேளையும் - 2 குட்டி ப்ரேக் எடுத்து 10 நிமிடம் நடப்பது அல்லது மாடிப்படி ஏறுவது கூட சிறு பலன் அளிக்கும் !

(அவ்வப்போது ஹெல்த் பக்கத்தில் சில தகவல்கள் பகிர்கிறேன் )

சுதந்திர தினம் - சன் டிவியில் சிம்பு

சிம்புவின் வாலு படம் வந்ததை ஒட்டி சன் டிவியில் சந்தானம் மற்றும் சிம்பு பேசினர் . இதில் சிம்பு மீது உள்ள அத்தனை குற்ற சாட்டுகள் பற்றியும் ஒரு இளம்பெண் பேசுவது போல காட்டியிருந்தது சற்று வித்யாசமாய் இருந்தது. பெரும்பாலும் சினிமா காரர்களை அழைத்து வந்து ஆஹோ ஓஹோ வென பாராட்டுவர்.. இந்த நிகழ்வில் " சிம்பு பெர்சனல் லைபில் சரியில்லை... அடிக்கடி காதலி மாற்றுகிறார்.. சந்தானம் வைத்து கொண்டே எல்லா படமும் ஒப்பெற்றுகிறார்.. காதல் தவிர வேறு படம் நடிப்பதில்லை.. எல்லாம் சுமார் படங்கள்.. " என அனைத்து குற்ற சாட்டுகளையும் சொல்ல வைத்து அனைத்திற்கும் சிம்பு பதில் கூறினார் !

பெண்களை அவமதிக்கும் விளம்பரம்..

A screengrab of the advertisement.

KFJ நிறுவனம் புதிதாக வெளியிட்டு வரும் பேப்பர் மற்றும் டிவி விளம்பரத்தில் - கல்யாண வயதில் பெண்கள் என்றாலே டென்ஷன் ;  உங்க வீட்டுலே டென்ஷன் இருக்கா என்று விளம்பரம் செய்து வருகிறார்கள்.

உண்மையில் திருமணம் ஆகாத இளம் பெண்கள் + அவர்தம் பெற்றோர் உணர்வையும் காயப்படுத்தும் இத்தகைய விளம்பரத்தை எப்படி அனுமதிக்கிறார்கள் என தெரிய வில்லை !

நிறுவனத்துக்கு கொஞ்சேமேனும் காமன் சென்ஸ் இருக்க வேண்டும்..இப்போது விஷயம் கோர்ட் வசம் சென்றுள்ளது.. விரைவில் இந்த விளம்பரம் நிறுத்தப்படும் என நம்பலாம் !

Wednesday, August 12, 2015

எங்க வீட்டு தோட்டம்- பிறந்தநாள் பதிவு +படங்கள்

ன்னிக்கு பொறந்த நாள். வாழ்த்துவோர் வாழ்த்தலாம். திட்டுவோர் திட்டலாம் ! உங்களிடம் நேரடியே இனி பர்த்டே பாய் பேசுவார்.....
****
ல்லாருக்கும் வணக்கம். எங்கள் வீட்டு தோட்டத்தை எப்போதும் நம்ம வீட்டம்மா Photo எடுத்து வைப்பார். இந்த தோட்டம் அவரின் முக்கிய ஹாபி.   இந்த பதிவில் சில மாதங்கள் அல்லது சில வருடங்களுக்கு முன் எடுத்த படங்கள் கூட இருக்கும் ! (90 % கடந்த ஓரிரு மாதத்தில் எடுத்தது தான் !)

தோட்டம், செடி, பூ இதில் ஆர்வம் உள்ளவங்களுக்கு மட்டுமே இந்த பதிவு. மற்றவர்கள் இப்பவே எஸ் ஆகிடலாம்.

முதலில் ஒரு உண்மையை சொல்லி விடுகிறேன். எங்கள் வீட்டில் உள்ளது மிக குறைந்த இடம். அதில் தான் இந்த செடிகள் மற்றும் பூந்தொட்டிகள் வைத்துள்ளோம். படங்களை பார்த்து பெரிய தோட்டம் என நினைத்தால் ஏமாந்து விடுவீர்கள்.. !  சரி வாங்க எங்க தோட்டத்துக்கு போவோம் !

வாசலுக்கருகே உள்ள சிறிய Lawn
                      மிக அரிதாகவே இந்த வேலை செய்வேன் !

கிச்சன் சுவர் மீது படர்ந்து கிடக்கும் கொடி

நான்கு வீடுகள் ஒரே காம்பவுண்டுக்குள் உள்ளது. அனைவருக்கும் பொதுவாய் நுழையும் இடத்தில் உள்ளது இந்த சிறு மரம்


********
வித விதமான ரோஜாக்குளும், செம்பருத்திகளும்   :


காம்பவுண்டு சுவர் மீது வலை அடித்து அதில் காய்க்கும் பாகற்காய்
வீட்டில் உள்ள வெற்றிலை கொடி. செம காரமா இருக்கு என பலரும் பறித்து செல்கின்றனர்

*********
இட்லி பூ செடியில் நாட்டி உட்கார்ந்துருக்கா. மாலை நேரம் என் பெண் அவளை இங்கு கொண்டு வந்து விடுவா. நாட்டி இங்கிருந்து பறந்து போக நினைப்பதில்லை
செடியில் அமர்ந்துள்ள நாட்டி
இன்னும் சில பூந்தொட்டிகள்:இந்த மரம் இப்போது இல்லை. பட்டு போயிடுச்சு வெட்டி விட்டோம். எங்கள் வீட்டு மாடலிலேயே உள்ள பக்கத்து வீடு. அவர்கள் வீட்டு விஷேசதின் போது சீரியல் லைட் போட்டிருக்காங்க; அவர்களும் நிறைய செடி அவர்கள் வீட்டின் எதிரே வைத்துள்ளனர்

குட்டி இடத்தில் வரிசையா செடிகள் 
நாகலிங்க பூ: பாண்டவர் பூ என்றும் சொல்வாங்க. அஞ்சு பெட்டல்ஸ் இருக்குமாம்
அழகான குரோட்டன்ஸ் - சுவரின் மீதுள்ள தொட்டியில் வளருதுசெம்பருத்தி செடிகள் நிறையவே இருக்கு

நித்திய மல்லிப்பூ

அரளி பூ/ மரம்


Tub-ல் வளரும் அல்லி செடி ; கூடவே சும்மா சில பூக்கள் போட்டு வச்சிருக்காங்க !
 இப்போ இதற்குள் சில மீன்களும் இருக்கு !


எங்க வீட்டு பப்பாளி

கருவேப்பிலை செடி


பொதினா- பிரியாணிக்கு இதை தான் எடுப்போம் 

பறந்து விரிந்த குரோட்டன்ஸ்       

வீட்டு மருதாணி - கையில் போட்டால் செமையா கலர் வரும்

*********
நிறைவா என்ன சொல்லணும்னா: அரை கிரவுண்டில் உள்ள வீட்டை சுத்தி, இருக்கும் கொஞ்ச இடத்தில் இவ்வளவும் செய்துருக்கோம் ! மனம் இருந்தால் மார்க்கமுண்டு ( கருத்து சொல்றாராமாம் !) நீங்கள் விரும்பினால் தொட்டியிலும் அழகிய செடி வளர்க்கலாம் !

நன்றி நண்பர்களே !

டிஸ்கி: முதல் முறையாய் தமிழ் மணத்தின் 3 மாத டிராபிக் ரேங்கில் வீடுதிரும்பல் முதல் இடத்தில் வந்துள்ளது. தமிழ் மணத்தின் பிறந்த நாள் பரிசு ??!!

Saturday, August 8, 2015

வானவில்: ஏர்டெல் உடனடி நடவடிக்கைக்கு ஒரு வழி..

பார்த்த படம்- இன்று நேற்று நாளை 

சற்று தாமதமாக தான் இப்படம் காண முடிந்தது. பதிவுலக நண்பர்களால் பெருவாரியாக பாராட்டப்பட்ட படம்...டைம் மிஷின் என்கிற வித்தியாச முயற்சி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை... ஆனால் அந்த அட்டகாச கான்செப்டை வைத்து கொண்டு பிச்சு உதறியிருக்கலாம்... சினிமாவில் பட்டினத்தில் பூதம், நாடகத்தில் எஸ். வீ,. சேகரின் மகாபாரதத்தில் மங்காத்தா இவை இதே களத்தில் அசத்திய கதைகள்..

டைம் மிஷின் கான்செப்டை நிச்சயம் இன்னும் சுவாரஸ்ய படுத்தியிருக்கலாம்.. பெரும்பகுதி காணாமல் போன பொருட்களை கண்டு பிடிக்கவும், கட்டப்பட்ட நாய் - அவிழாமல் இருக்கவுமே டைம் மிஷின் கதையில் யூஸ் ஆகுது...

படம் - கமர்ஷியல் வெற்றி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.. ஆனால் சிக்சர் அடிக்க வேண்டிய கதைக்களனில் மூச்சிரைக்க ஓடி மூணு ரன் எடுத்துள்ளார்கள் என்கிற வருத்தம் தான்...

ரசித்த பாடல் - ஆகாயம் தீப்பிடிச்சா 

சென்ற வருடம் வந்தவற்றில் - வெகுவாக ஈர்த்த பாடல்களில் இதுவும் ஒன்று... புது இசை அமைப்பாளர்களில் அனிருத், இமானுக்கு அடுத்த படியாக சந்தோஷ் நாராயண் அசத்துகிறார்.

மெட்ராஸ் படம் - மிகவும் பாராட்ட தக்க ஒரு முயற்சி.. இன்று அதன் இயக்குனர் ரஜினியை வைத்த படம் இயக்க காரணமே மெட்ராஸ் படம் தான் !!

படத்தில் 2-3 பாடல்கள் அருமை எனினும் இந்த மெலடி - கிளாஸ்..
ரசித்த SMS:

Mistakes are very easy to see with others and very difficult to see within oneself.

வீடுதிரும்பல்... வாரமிரு முறை மீண்டும்...

ஆம்; தலைப்பிலேயே புரிந்திருக்கும்.. வாரம் இரு பதிவாவது இனி எழுத திட்டம். சனி மற்றும் புதன் கிழமை பதிவுகள் வெளியாகலாம்... புது பதிவு தயாராக இல்லை எனில் பழைய பதிவில் ஏதாவது ஒன்று மீள் பதிவு செய்ய நேரலாம்... பொறுத்தருள்க !

வீட்டருகில் ஒரு சம்பவம்.. 

செய்தி தாள்களில் மரண செய்திகள் எவ்வளவோ வாசிக்கிறோம். அதுவே நமது வீட்டுக்கருகில் நடக்கும் போது - செய்தி தாள்களில் வாசித்து விட்டு கடந்து போவது போல் முடிவதில்லை.. 

எங்கள் வீட்டுக்கு 2 தெரு தள்ளி நடந்த சம்பவம்.. 

கணவன் போலீசில் - ஊட்டியில் பணியாற்றுகிறார்...மனைவி மற்றும் 2 குழந்தைகள் மட்டும் சென்னையில் வசிக்கின்றனர்...

கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு வந்து விட, மனைவியிடம் விவாகரத்து கேட்டு வற்புறுத்தி உள்ளார்... மனைவி, உள்ளூரில் போலிஸ் காரர் நடத்தும் கடையை தனக்கு எழுதி தர சொல்லி கேட்டுள்ளார் (படிக்காத மனைவி பின் 2 குழந்தைகளை எப்படி காப்பாற்றுவார்? )

ஊட்டியிலிருந்து ஒரு நாள் வந்த கணவன் - பிள்ளைகள் பள்ளி சென்ற மதிய வேளை வீட்டுக்குவந்து மனைவியை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். பின் வீட்டை விட்டு நைசாக வெளியேறி விட்டார். மாலை பள்ளியிலிருந்து வந்த குழந்தைகள் அம்மா இறந்து கிடப்பதை கண்டு விக்கித்து போயினர்.. சில மணி நேரங்களில் தானாகவே ஆஜர் ஆன கணவன் ஏதும் தெரியாத மாதிரி நடித்து அழுதுள்ளார்.. 

போஸ்ட் மார்ட்டமில் கழுத்து நெரித்து இறந்ததும், அன்று தான் கணவர் ஊரில் இருந்து வந்துள்ளதும், அவர்கள் இடையே நடக்கும் சண்டை இவை - மூலம் கணவரை 'முறைப்படி' விசாரிக்க,  அவர் கொன்றது தான் தான் என ஒப்பு கொண்டுள்ளார்.. 

தாய் இறக்க, தந்தை ஜெயிலில் இருக்க , +2 மற்றும் 9 வது படிக்கும் குழந்தைகள் இப்போது சென்னையை காலி செய்து விட்டு திருச்சியில் பாட்டி வீடு சென்று விட்டனர்.. 

திருமணத்துக்கு பின் - வேறு பெண்ணுடன் சகவாசம் எங்கு கொண்டு போய் முடித்திருக்கிறது.. !! மனது இறந்து போன அந்த அப்பாவி பெண்ணையும், அந்த குழந்தைகளையும் நினைத்து தான் இன்னும் வருந்துகிறது ! 

ஏர்டெல் - உடனடி நடவடிக்கைக்கு

அண்மையில் நான் உபயோகிக்கும் ஏர்டெல் மொபைலில் ஒரு பிரச்சனை இருந்தது. அவ்வப்போது புகார் செய்து சலித்துப் போயிருந்தேன்... அப்போது நண்பர் ஒருவர் மற்றொரு மெயில் ஐ. டி தந்து இதற்கு மெயில் அனுப்பு; உடனே வேலை நடக்கும் என்றார்....

நாம் பொதுவாக கஸ்டமர் கேருக்கு தான் தொலை பேசுவோம்; மெயில் அனுப்புவோம்; இது அதற்கு அடுத்த படி... நோடல் ஆபீசர் எனப்படும் அடுத்த நிலை அதிகாரி. இவரிடம் புகார் செய்தால் பொறி பறக்கிறது..

நான் இவருக்கு மெயில் அனுப்பி - 5 நிமிடத்தில் ஏர்டெல்லில் இருந்து தொலை பேசினர் ; அன்றே பிரச்சனை தீர்த்து வைக்க பட்டது.

இது போன்ற நோடல் ஆபீசர் வோடபோன் உள்ளிட்ட மற்ற சேவை நிறுவனத்திடமும் இருக்கும் என்றே நினைக்கிறேன்.

ஏர்டெல் - நோடல் ஆபீசர் மெயில் ஐ. டி - Nodalofficer.tn@in.airtel.com

இவர் திங்கள் முதல் வெள்ளி வரை மட்டுமே பணியாற்றுகிறார்; வார இறுதிகளில் அனுப்பப்படும் மெயில்கள் சற்று தாமதமாக கவனிக்கப்படும் என்பதை அறிக !!

Thursday, August 6, 2015

ஆரஞ்சு மிட்டாய் - சினிமா விமர்சனம்

கடந்த சில வருடங்களில் பாராட்டத்தக்க வளர்ச்சி பெற்ற விஜய் சேதுபதி - தயாரிப்பாளர் ஆகியிருக்கும் முதல் படம்.. ஆரஞ்சு மிட்டாய் .கதை 

உடல் நிலை சரியில்லாத நிலையில் - தனிமையில் வாழும் வயதான மனிதர் - நெஞ்சு வலி என ஆம்புலன்சுக்கு போன் செய்கிறார்... ஆம்புலன்ஸ் வந்து ஆஸ்பத்திரி செல்லும் போது நடக்கும் சம்பவங்கள்.. உடன் வரும் நபருடன் அவருக்கு வரும் உறவு.. அவனது மகனுடனான பிணக்கு...   என நகர்ந்து ஒரு புன்னகையுடன் முடிகிறது படம்...

சோகத்தை அடி நாதமாய் வைத்தாலும் முடிந்த வரை காமெடியாய் சொல்ல முயன்றது ரசிக்கும் படி உள்ளது..

படத்தில் ஆங்காங்கு சில காட்சிகள் புன்னகைக்கவும், ரசிக்கவும் வைக்கிறது... வயதானவர் ஆடும் டான்ஸ்... இறுதியில் தெரிய வரும் இனிய டுவிஸ்ட், ஸ்டெரச்சரில் உட்கார்ந்த படி வருவது, அப்போது விண்ணை தாண்டி வருவாயா படம் பற்றி ஊர் காரருடன் பேசுவது..ஆனால்...

இந்த சின்ன சின்ன பொறிகளே போதுமா?

நிஜத்தில் இது குறும் படமாய் வந்திருந்தால் நிச்சயம்  வரவேற்பு பெற்றிருக்கும் .. !!

என்ன பிரச்சனை ? 

முதலில் படத்தின் நீளம்.... ஒன்னரை மணி நேரம் தான் ஓடுகிறது... ஆனாலும் பின் பகுதில் இழுவையாய் தெரிகிறது.. கடைசி 10 நிமிடம் இது தான் கடைசி ஷாட் போலும் என நினைத்தே ரொம்ப நேரம் ஓடுகிறது...

இவ்வளவு குட்டி படத்தில் 4 பாட்டுகள்.. அதையும் கழித்து பார்த்தால் காட்சிகள் எவ்வளவு நேரம் இருக்கும் !!

பெரியவரின் வாழ்க்கை எந்த விதத்திலும் மனதில் பதிய வில்லை.. பாதிக்க வில்லை... அவர்  மீது பரிதாபமே வரவில்லை.. அதற்கு ஒரு முக்கிய காரணம் அவரை காணும் போது அது விஜய் சேதுபதியாக தான் தெரிகிறது... வயதானவராய் தெரிய வில்லை..பெரியவர் ஏன் மகனை விட்டு பிரிந்துள்ளார்.. அவருக்கும் மகனுக்கும் என்ன தான் பிரச்சனை? இன்னொரு காட்சியில் பெரியவர் - நானும் என் தந்தையை இப்படி தான் துரத்தினேன்.. அவர் மட்டுமல்ல... அவரது தாத்தா கூட இப்படிதான் என எதோ பரம்பரை வியாதி போல சொல்கிறார்...

பெரியவர்களை நேசியுங்கள்; அவர்களை தனிமையில் விடாதீர்கள் என்ற நல்ல மெசேஜ் சொல்ல நினைத்தது பாராட்டுக்குரியது.. அதை நிச்சயம் ரசிக்கும் படி சொல்லியிருக்கலாம்...

ஆரஞ்ச் மிட்டாய் - இனிக்க வில்லை.. 

Saturday, August 1, 2015

வானவில் - கேளடி கண்மணியும் புத்தம் புது காலையும்

டிவியில் ரசித்த - கேளடி கண்மணி

இயக்குனர் வசந்த்தின் முதல் படம்.. ஆசை, ரிதம் போன்ற நல்ல படங்கள் பின் எடுத்தாலும், அவை எதுவும் கேளடி கண்மணி தரத்திற்கு இணையாக அமைய வில்லை.

பாடகர் SPB முதல் படம் என்பதால் ஆங்காங்கு சற்று செயற்கையாக தெரிகிறார்.. ராதிகா, அஞ்சு, ரமேஷ் அரவிந்த் ஆகியோர் அட்டகாசமாக பொருந்துகிறார்கள்..

மூச்சு விடாமல் பாடிய பாட்டு என சொல்லி மண்ணில் இந்த காதலன்றி பாட்டு மிக அதிக பிரபலமாகி படம்  நன்கு ஓட காரணமாக இருந்தது.. நீ பாதி- நான் பாதி மற்றும் கற்பூர பொம்மை ஒன்று - இரண்டும் இன்றும் பலர் ரசிக்கும் பாடல்கள்..

இப்போது பார்க்கையிலும் மிக ரசிக்கும் படி இருந்தது..

ஆனந்த விகடனில் 50 மார்க்குக்கு மேல் வாங்கிய ஒரு சில படங்களில் ஒன்று...  !

அழகு கார்னர்நீயா நானா

வரதட்சணை பற்றி நீயா நானாவில் - ஒரு அணி - ஏன் வேண்டாம் என்றும் மறுபக்கம்- அது ஏன் வேண்டும் என்றும் பேசினர் ..

வரதட்சணை ஏன் வாங்கப்படுகிறது என்பதற்காக பேசிய அனைவரையும் - கோபிநாத்தே "தப்பு; தப்பு" என மடக்கி விட்டார்.. வரதட்சணை தவறு என்பதில் மாற்று கருத்து இல்லை- ஆயினும் அவர்களை- முழுவதும் பேசவாவது விட்டிருக்கலாம்.. .

நிகழ்ச்சி முழுதுமே  மிக சிலரே திரும்ப திரும்ப பேசினர் ... இவ்வளவு ஏன் .. சிறப்பு விருந்தினர் என ஒரு பெண்மணி வந்து.. ஒரு வார்த்தை கூட பேசவில்லை !!

கலக்க போவது யாரு

விஜய் டிவி யில் கலக்க போவது யாரு  புது சீசன் ஆரம்பித்துள்ளனர்... முதல் வாரம் பெர்பார்மென்ஸ் ரொம்ப ரொம்ப சுமார். .. பிரியங்கா, தாடி பாலாஜி போன்றோர் ஜட்ஜ் ஆக அமர்ந்துள்ளனர்.. இதென்ன.. தகுதி சுற்றா, அப்புறமாவது நன்றாக இருக்குமா என தெரிய வில்லை. இதே தரத்தில் போனால் நிகழ்ச்சி அம்பேல் ஆகி விடும்..

என்னா பாட்டுடே : புத்தம் புது காலை

அலைகள் ஓய்வதில்லை படத்திற்காக பதிவான ஒரு அற்புத பாட்டு - "புத்தம் புது காலை .. பொன்னிற வேளை ".. இளையராஜா- பாரதிராஜா அற்புத காம்பினேஷனில் உருவானது...

படத்தில் அந்த பாடல் இடம் பெறவே இல்லை; இசை தட்டுகள் - ரேடியோ இவை மூலமே பிரபலமான இப்பாட்டை சென்ற ஆண்டு வெளியான மேகா படத்தில் பயன் படுத்தியிருந்தனர்...

நமது மனதில் நீங்கா இடம் பெற்ற இப்பாடலை நல்ல வேளையாக - கெடுக்காமல் - மிக அழகாக படமாக்கியிருந்தனர்.

வீடியோவுடன் ரசிக்க - ராஜாவின் இசை ஒரு காரணமென்றால் - இன்னொரு காரணம் அந்த அழகிய ஹீரோயின்.. வாவ்... வாட் அ பியூட்டி ... ! இன்னும் ஒரு சுற்று இளைத்தால் செம சூப்பர் ஆக இருப்பார் !

பாடலை ரசிக்க குட்டி குட்டியாய் பல விஷயங்கள் உண்டு.. அழகான ஒளி வெள்ளம்... குழந்தை மூலம் முத்த பரிமாற்றம் நடப்பது... ஹீரோயினின் புன்னகை.. இப்படி பல...

பார்த்து மகிழுங்கள்..படித்ததில் பிடித்தது 

கலாம் அவர்கள் பற்றி வந்த சில எதிர் மறை பதிவுகள் பற்றி ஜெயமோகன் மிக அற்புதமான பதில் தந்துள்ளார். அண்மையில் படித்ததில் மிக ரசித்த பதிவு இது...

கலாம்- கேள்விகள்

சூப்பர் சிங்கர் 

சூப்பர் சிங்கர் இந்த வாரம் மறைந்த எம். எஸ்.வி நினைவை போற்றும் வகையில் - அவரது பாடல்கள் இசைக்கப்பட்டன. மேலும் தினம் வெவ்வேறு சிறப்பு விருந்தினர் வந்து பேசினர் .. இதில் எம். எஸ்.வி அவர்களின் ட்ரூப்பில் இசை அமைத்தோர் வந்து பேசியது மிக அற்புதமாகவும், நெகிழ்வாகவும் இருந்தது. போலவே வாணி ஜெயராம் பல விஷயங்களை கண்ணீரை அடக்கிய படியே பேசினார்.....

இம்முறை சூப்பர் சிங்கரில் பல நல்ல பாடகர்கள் இருப்பது தெரிகிறது. விஜய் டிவி இழுத்தடிக்காமல் சுறுசுறுப்பாய் கொண்டு சென்றால் நன்றாயிருக்கும்....
Related Posts Plugin for WordPress, Blogger...