Tuesday, May 31, 2011

வானவில் : கமலின் தெளிவான பதில் / அம்மாவின் அமைச்சர்கள்

டிவி பக்கம் 
விஜய் டிவி மியூசிக் அவார்ட்ஸ் என நிகழ்ச்சி நடத்தினார்கள். எல்லா பாடகர், பாடகியும் கூப்பிட்டு வந்த எல்லாருக்கும் ஏதாவது ஒரு கேட்டகரியில் விருது தந்தனர். இதில் கமலுக்கு "நடிகர்கள் பாடியதில் சிறந்த பாடல் விருது" என நீல வானம் பாட்டுக்காக குடுக்க பட்டது. விருதை வழங்கிய யேசுதாஸ், விருது பெற்ற கமலிடம் ஒரே கேள்வி தான் கேட்டார்: "நீங்க முறைப்படி சங்கீதம் கத்துக்கிடீங்களா ?" இதுக்கு கமல் சொன்ன பதில் இருக்கே ..அடடா ! இதை யாராவது புரிஞ்சிக்கிட்டா அவங்களுக்கு அதுக்கே விருது குடுக்கலாம். அது எப்படி கமல் மட்டும் திடீர்னு கேள்வி கேட்டா கூட இப்படி தலையை & உடலை சுற்றி பதில் தர்றாரோ ! யேசுதாஸ் நம்ம கஷ்டத்தை புரிஞ்சிக்கிட்டு "சரி. நீங்க பாட்டு கத்துக்கிட்டீங்க. யாரிடம் கத்துக்கிட்டீங்க?" என்று கேட்டார். இதுக்கும் தலையை சுற்றி சொன்ன பதிலில் கமல் பால முரளி கிருஷ்ணாவிடம் பாட்டு கற்று கொண்டது தெரிந்தது. கமல் மைக் பிடித்தாலே நமக்கு சில நேரம் கிலியாகிடுது. சில நேரம் சிரிச்சு சிரிச்சு கண்ணில் தண்ணி வருது. நடத்துங்கண்ணா !

அம்மாவும் அமைச்சர்களும் 

அம்மாவின் அமைச்சர்கள் சிலர் நமக்கு சுவாரஸ்யமான விஷயங்கள் தருகிறார்கள். மாதிரிக்கு சில :

உதய குமார் என்பவர் ஐ. டி துறைக்கு அமைச்சர். இவர் காலணிகள் அணிவதே இல்லை. காரணம் கேட்டால், " அம்மா இருக்கும் இடத்தில எப்படி செருப்பு போடுவது?" என்கிறார். எல்லா இடத்திற்கும் செருப்பு அணியாமலே செல்லும் இவர், அரசு நடத்தும் மீட்டிங்குகளில், பல உயர் அதிகாரிகள் பளபளக்கும் ஷூக்களுடன் இருக்க தான் மட்டும் செருப்பின்றி அமர்ந்து மீட்டிங் நடத்துகிறார். (கடைசியாக கிடைத்த தகவலின் படி அம்மா இவரை அவசியம் செருப்பு அணிய வேண்டும் என்று கூறியிருக்கிறார்)

செல்ல பாண்டியன் என்கிற தொழிலாளர் துறை அமைச்சர் கதை வேறு விதம். தனது பெண் கல்யாணத்திற்கே இவர் போகவில்லை. அம்மா நடத்துகிற மீட்டிங் தான் முக்கியம். பொண்ணை அப்புறம் பாத்துக்கலாம் " என்பது இவரது கருத்து.

நமக்கு இது மாதிரி சுவாரஸ்ய நியூஸ் இனி நிறைய கிடைக்க போகுது ..

இரு கேள்வி இரு பதில் 

கேள்வி : தமிழக அரசிடம் என்னென்ன எதிர்பார்க்கிறீர்கள்?

பதிவர் பதில் : (பெயர் வேண்டாம் என சொல்லி விட்டு சொன்னது)

தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள்.

தங்களுடைய முதல் ஏழு கையெழுத்தும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. அதிலும் குறிப்பாக முதியோருக்கு மாதாந்திரம் வழங்கப்படும் உதவித் தொகை ரூ. ஆயிரம் பலராலும் வரவேற்கபடுகிறது.

இனி, நாங்கள் தங்களிடமிருந்து உடனடியாக எதிர்ப்பார்ப்பது, தாங்கள்
தேர்தலில் சொன்ன இலவசத்தையல்ல. அதற்கு முன்பு.

பள்ளி, கல்லூரிகளில் நன்கொடை வசூல் செய்வதையும், கட்டணக் கொள்ளையையும் கட்டுப்படுத்தவும். அரசு பள்ளிகள் சிறப்பாக செயல்பட நடவடிக்கையும்.

ஏழை மாணவர்களுக்கு கல்வி பயில வட்டியில்லாக் கடன் வழங்கவும். தடையில்லா மின்சாரம் கிடைப்பதோடு, தொழிற்துறையில் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றி, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யவும்.

ரேஷன் கடைகளில் தரமானப் பொருட்கள் தொடர்ந்து கிடைக்கவும். தாறுமாறாக ஏறும் விலைவாசியை சீர்ப்படுத்தவும்.

வழிப்பறி, வீடு புகுந்து கொள்ளையடித்தல், வாகனத்திருட்டு, சாலை விதி மீறல்களால் ஏற்படும் விபத்து போன்றவற்றை முற்றிலும் தடுக்கவும். அரசியல் பின்புலத்தைப் பயன்படுத்தி கட்டப் பஞ்சாயத்து, கந்து வட்டி போன்ற சட்டவிரோத செயால்களில் ஈடுபடுவோரை ஒழிக்கவும்.
பூரண மதுவிலக்கு அல்லது விற்பனை நேரத்தைக் குறைக்கவும். விவசாயிகளுக்கு தங்களின் உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க, பொருட்களை அரசே வாங்கி மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்தவும்.

அரசு மருத்துவாமனைகளின் தரத்தை உயர்த்துவதோடு, கிராமப்புற மருத்துவனைகளில் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் அங்கேயே தாங்கி பணிபுரிய குடியிருப்புகள் ஏற்படுத்தவும். மேலும், பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், வலிப்பு மற்றும் தைராயிட போன்ற ் நோய்களுக்குரிய மாத்திரைகளை, மாதத்திற்கு ஒரு முறை வழங்கவும். அப்படி வழங்குவதால், அரசுக்கு பொருளாதார இழப்பு ஏற்படப் போவதில்லை. அதே நேரம் நோயாளிகளுக்கு பொருளாதாரம் மற்றும் நேரம் மிச்சமாகும். இன்னும், சர்க்கரை வியாதிக்கு ஒருநாள், ரத்த அழுத்தத்திற்கு ஒருநாள், வலிப்பு நோய்க்கு ஒருநாள், என்று பிரித்து வைத்திருக்கிறார்கள். இப்பொழுது பெரும் பகுதியினருக்கு சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம், போன்றவை சேர்த்தேதான் வருகிறது. இந்நிலையில் இம்மாதிரி நோயாளிகளுக்கு ஒரே நாளில் மாத்திரைகள் வழங்க நடவடிக்கை எடுக்கவும்.

அனைத்து மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கவும். அனைத்துக் கிராமங்களையும், நகரங்களுடன் இணைக்க மினி பஸ் வசதியை அதிகப்படுத்தவும்.

இவைகளையும், இன்னும்பிற மக்கள் நலத்திட்டங்களையும் செய்த பிறகு, இலவசத்தைத் தாருங்கள் மகிழ்ச்சியாக வாங்கிக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களில் ஒருவன்.

கேள்வி 2 : நமது தற்போதைய கல்வி முறை சரியானது தானா? இதில் அவசியம் செய்ய வேண்டிய மாறுதல்களாக நீங்கள் கருதுவது என்னென்ன?

பதில் : கார்த்திகை பாண்டியன்

ஒரு ஆசிரியராக நான் உணர்ந்த விஷயங்களின் அடிப்படையிலேயே இதைச் சொல்கிறேன். முதலில் இப்போதுள்ள கல்வி முறையை இரண்டாகப் பிரித்துக் கொள்வோம். பள்ளிக் கல்வி மற்றும் கல்லூரிகள் இருக்கும் உயர்நிலைக் கல்வி.

பள்ளிக் கல்வியில் என்ன செய்து வைக்கிறோம்? குழந்தைகளின் தகுதிக்கு மீறிய விஷயங்களை அவர்களுக்குள் திணிப்பதானதாகவே இன்றைய பள்ளிக் கல்வி இருக்கிறது. என்னுடைய கல்லூரியின் முதல் வருடத்தில்தான் நான் கணினி என்பதையே அறிந்தேன். ஆனால் இன்றைக்கு முதல் வகுப்பில் இருக்கும் மாணவனுக்கு கணினி பற்றி சொல்லித் தருகிறார்கள். வயதுக்கு மீறிய விஷயமாகவே இது எனக்குப் படுகிறது.இதேபோல புரிந்து படிக்காமல் பாடத்தை மனப்பாடம் செய்து தாளில் வாந்தி எடுக்க வைக்கும் தேர்வுமுறையும் மிகக் கேவலமானதே. அருகில் இருக்கும் ஆந்திராவில் பத்தாம் வகுப்பிலேயே அடுத்த உயர்கல்விக்கான தெரிவு முடிந்து மாணவர்களுக்கு சரியான பயிற்சி கொடுப்பார்களாம். அது போன்ற முறையை இங்கே கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.

அடுத்து கல்லூரிகள். நான் இருக்கும் துறை சார்ந்து பேச விரும்புகிறேன். பொறியியல் கல்லூரிகள் இன்றைக்கு கலைக் கல்லூரிகளக் காட்டிலும் அதிகமாக இருப்பது பெருங்கொடுமை.ஒரு பிசி போர்டைக் கொடுத்து இது எப்படி வேலை செய்கிறது எனக் கேட்டால் பதில் வருவது கிடையாது. வெறுமனே புத்தகத்தில் இருப்பதைப் படித்து பரீட்சை எழுதி வேலைக்கு வரும் மாணவர்களுக்கு நிஜத்தில் எதுவும் தெரிவதில்லை. செய்முறை என்கிற ஒரு விஷயம் ஒழுங்காக அமல்படுத்தப்படாத வரைக்கும் சரிப்பட்டு வராது. கோவை பி.எஸ்.ஜி யில் சாண்ட்விக் என்றொரு கோர்ஸ் உண்டு. காலையில் தியரி வகுப்புகளும் மதியத்துக்கு மேல் படித்த விஷயங்களை செய்முறையாக விளக்கும் வகையில் பாடத்திட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது. அது போல எல்லாக் கல்லூரிகளிலும் நடைமுறைப்படுத்தினால் சரியாக இருக்கும் என நம்புகிறேன்.

ஐ. பி. எல் கார்னர்

ஐ. பி. எல் பைனல் சென்னை வென்றதில் மிக மகிழ்ச்சி. அதிக மகிழ்ச்சி பெங்களூரை தோற்கடித்து ஜெயித்தது. என்ன ஒன்று பைனல் சுவாரஸ்யம் இல்லாமல் மேட்ச் one sided ஆக இருந்தது. பழைய ஆஸ்திரேலியா அணி மட்டும் தான் ஒரு முறை வென்ற கோப்பையை மறுபடி தொடர்ந்து தக்க வைத்தது (அதற்கு முன்பு எண்பதுகளில் மேற்கிந்திய தீவுகள்). அந்த விதத்தில் சென்னை தனது டைட்டிலை தக்க வைத்து கொண்டது. இந்த முறை ஒரு மேட்சும் நேரில் பார்க்கலை. அதனால தான் ஜெயிச்சுதுங்குரீன்களா? போன முறை நேரில் பார்த்தேனே.. அப்போ கப் ஜெயிச்சுதே !!

கண்டனம்


அமெரிக்காவில் கிருத்திகா பிஸ்வாஸ் என்ற இந்திய மாணவிக்கு நேர்ந்த அவமானம் வருத்தப்பட வைக்கிறது. தனது ஆசிரியருக்கு அசிங்கமான எஸ். எம். எஸ் அனுப்பினார் என குற்றம் சாட்டி, கைது செய்து காவலில் மிக கடுமையாக நடத்தி இருக்கிறார்கள். குற்றங்களை இவர் மறுத்தார். பின் நிஜ குற்றவாளி யார் என தெரிந்ததும்  அவரை வேறு பள்ளிக்கு மாற்றல் செய்து பிரச்னையை முடித்து விட்டனர். Discrimination அமெரிக்காவிலும் இருக்கு !! கிருத்திகா பிஸ்வாஸ் நடத்தப்பட்ட விதத்திற்கு பள்ளியோ, காவல் துறையோ ஒரு மன்னிப்பு கூட கேட்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அறிவிப்பு

" வாரம் இரண்டு பதிவு " என்கிற கொள்கையுடன் இயங்கி வந்த பிரபல பதிவர் ஒருவர் (என்னது.. வாரம் ரெண்டு பதிவு மட்டும் எழுதினா பிரபலம் கிடையாதா? ரைட்டு !!), இனி பல வாரம் ஒரு பதிவு; சில வாரம் மட்டுமே ரெண்டு பதிவு என்ற முடிவுக்கு வந்திருக்கார். இந்த மகிழ்ச்சியான செய்தியை தங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறோம். நீங்களும் இதே விதமாய் மகிழ்வீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. தொடர்ந்து அவருக்கு தங்கள் ஆதரவை தருக.

Wednesday, May 25, 2011

வானவில்: சென்னை சூப்பர் கிங்க்ஸ்; பதிவர்கள் பதில்கள்

ஐ. பி. எல் கார்னர் 
சென்னை சூப்பர் கிங்க்ஸ் ஐ. பி. எல் பைனல் வந்ததில் மிக மகிழ்ச்சி. அவ்வப்போது சென்னை அவ்ளோ தான் என எழுதி வந்தவன் தான் நான். ஆனாலும் நம்ம அணி மேல உள்ள பாசம் போகுமா? நேற்றைய சென்னை சேஸ் அற்புதம். மும்பை கொல்கத்தா ஆடிய கடைசி லீக் மேட்சும் இதே போல அருமையான ரன் சேஸ். கடைசி ஓவரில் 22 ரன் அடித்து ஜெயித்தது மும்பை ! ஆரம்பம் முதல் எனக்கு பிடித்த மும்பை, கொல்கத்தா, சென்னை மூன்றும் ப்ளே ஆப் வந்து விட்டன. இவற்றில் எவை ஜெயித்தாலும் மகிழ்ச்சியே.

டிவி பக்கம்

சன் நியூசில் டாக்டர் ஒருவரிடம் நேயர்கள் சந்தேகம் கேட்கும் நிகழ்ச்சி. இதில் அரவாணிகள் குறித்த சில புது தகவல் அறிந்தேன்.

* அரவாணிகள் அனைவரும் ஆணாக பிறந்து தான், பின் பெண்ணாக மாறுகிறார்கள். (பெண்ணாக பிறந்து ஆணாவதில்லை). பிறந்தது முதல் இவர்கள் மனது பெண்ணின் உணர்வுகளையே கொண்டிருப்பதால் இவர்களால் ஆணாக வாழ முடியாமல் போகிறது. இதில் இவர்கள் தவறு ஏதுமில்லை.

* இவர்களுக்கு ஆணுறுப்பு தானிருக்கும். சிலர் மட்டும் ஆபரேஷன் செய்து அதனை அகற்றி கொள்வர். இவர்களுக்கு ஆண்கள் மீது தான் விருப்பம் இருக்கும். இவர்களால் குழ்ந்தை பெற முடியாது. ஆணாக இருந்து பெண் ஆனதால் குழந்தை பெற முடியாமல் போகிறது.

மேலே சொன்னதில் பெரும்பாலும் எனக்கு புதிய தகவல்கள் தான் ! குறிப்பாக பெண்ணாக இருந்து கூட ஆணாகவும் கூட மாறுவார்கள் என நினைத்திருந்தேன். போலவே அவர்களால் குழந்தை பெற முடியாது என்பதும் இதுவரை யோசிக்காத ஒன்று.

அய்யாசாமி புலம்பல்

" சார்.. கண்ணுக்கு தெரியாமல் மறையிற வித்தை உங்களில் யாருக்காவது தெரியுமா? தெரிஞ்சா சொல்லி குடுங்க. புண்ணியமா போகும். எதுக்கா? வீட்டம்மாவுக்கு கிச்சனுக்குள்ளே நாம வந்து வேலையும் பாக்கணும். அதே சமயம் வழியிலே நிக்க கூடாது. ஒரு சின்ன பூச்சி மாதிரி சுவத்திலே ஒட்டிகிட்டு நாம வேலை பார்த்தால் கூட " இடத்தை அடைச்சிக்கிட்டு நிக்குறே"ன்னு சொல்றாங்க. கிச்சனுக்குள் இல்லாம கிச்சன் வேலை எப்படி சார் பாக்குறது? சும்மாவா சொன்னாங்க "No male is perfect in the kitchen in the eyes of his wife " அப்படின்னு.. சொன்னவன் வாய்க்கு சர்க்கரை போடணும் ஹும்"

QUOTE HANGER

The secret of happiness is curiosity.

ஒரு கேள்வி இரு பதில்


வெளி நாட்டு வாழ்க்கையில் பணம் ஈட்டுவதை தவிர வேறு நல்ல விஷயங்கள் உள்ளனவா?


ஹுசைனம்மா :

1. சட்டம், விதிமுறைகளுக்குட்பட்டு வாழ்வதோடு (லஞ்சம் கொடுக்காமை, இன்ஃப்ளூயன்ஸ் பயன்படுத்தி செய்ய முடியாமை, ட்ராஃபிக் விதிமுறைகள்), நம் அன்றாட செயல்களில்கூட ஒரு ஒழுங்குமுறை இருக்க வேண்டும் (வரிசையில் நிற்பது, குப்பைகளை குப்பைத் தொட்டியில் போடுவது) என்று நெறிப்படுத்திக் கொள்ள முடிகிறது.
2. சுத்தமான காற்று, நீர், உணவு, தரமான மருத்துவ சிகிச்சைகள் கிடைப்பது. சாலைக் கட்டமைப்பும்.
3. உறவுகளின் அநாவசியத் தலையிடல்கள் இல்லாமை. அதனாலேயே உறவுகளின் அருமை தெரிவது.
4. இணையத்தில் அரசின் கட்டுப்பாடு - பிள்ளைகளை சுதந்திரமாக உலவவிட வசதியாக இருக்கிறது.
5. பல நாட்டினரும் இருப்பதால், பல மொழிகள் படிக்கும் வாய்ப்பு; பல கலாச்சாரங்களும் உணவு முறைகளும் காணக்கிடைப்பதால், (அன்னம் போல) அவற்றில் அல்லவற்றைப் பிரித்துணர்ந்து, நல்லவற்றை இயைந்துகொள்ளும் பண்பு அமைந்தே ஆகவேண்டிய சூழ்நிலை.
6. தனிப்பட்ட முறையில், நான் இருப்பது இஸ்லாமிய நாடு என்பதால், என் பிள்ளைகளுக்கு இஸ்லாமியக் கல்வியும், சூழ்நிலையும் கிடைப்பது இங்கு வாழ்வதில் எனக்கு மிகவும் பிடித்தது.
7. வாழும் நாட்டில் உள்ள சிறப்பானவையெல்லாம் நம் நாட்டிலும் பேதமின்றி அனைவருக்கும் கிடைக்கும் நாள் வரவேண்டும் என்ற ஆசையில், ஏதேனும் செய்யமுடியுமா என்ற தேடல் தருவது (பெரும்பாலும்) வெளிநாட்டு வாழ்க்கையே.

பா. ராஜாராம் 

கண்டிப்பாக நல்ல விஷயங்கள் உள்ளன . பல விஷயங்களை சொல்லலாம். உதாரணமா, இந்தப் பத்து வருடங்களில் நம் மொழி தவிர்த்து ஆங்கிலம், அரபி பேசக் கற்றுகொண்டது. நம் மனிதர்கள் அல்லாத பல தேசத்தவர்களிடம் கலந்து பழக வாய்த்தது என என் வரையில் என்றால்,

மனைவியின் தனித்த அடையாளத்தை காணும் பேரு இந்த என் வெளிநாட்டு வாழ்வுதான் எனக்கு அளித்தது. இந்தப் பயணத்தில் தெரு முனையில் இருக்கும் ஆட்டோ ஸ்டாண்டுக்கு ஆட்டோ அழைக்கப் போயிருந்தேன். 'வீடு எங்கண்ணே?' என்று கேட்டார் ஆட்டோ ஓட்டுனர். தெரு முனையில் இருக்கும் ஆட்டோவிற்கெல்லாம் வீட்டு அடையாளம் சொல்லிப் பழக்கம் இல்லாததால் சற்று ஸ்தம்பித்து விட்டேன்.

பக்கத்தில் இருந்த பெட்டிக் கடைக்காரர், ' டேய்..லதாக்கா வீட்டுக்காரர்டா' என்றார். லதா என் வீட்டுக்காரியாக இருந்த காலம் போய், என்னை லதாவின் வீட்டுக்காரனாக்கி தந்திருக்கிறது இந்த வெளிநாட்டு வாழ்வு. இதைவிட வேறென்ன வேணும்?

Thursday, May 19, 2011

வானவில்: ஹோம் சுவீட் ஹோம் / வானவில்லில் பதிவர்கள்


டிவி பக்கம்

விஜய் டிவியில் சத்யராஜ் ஹோம் சுவீட் ஹோம் என்ற நிகழ்ச்சி நடத்துகிறார். வெள்ளி, சனி இரவு பத்து முதல் பதினொன்று வரை நடக்கிறது இந்த நிகழ்ச்சி (இந்த நேரம் ஏன் தேர்ந்தெடுத்தார்கள்? பலரும் பத்துக்கெல்லாம் தூங்க ஆரம்பிப்பார்களே?) இரண்டு அணிகளை வைத்து கொண்டு குட்டி குட்டி விளையாட்டு வைக்கிறார்கள். தூர நின்று பந்தை தூக்கி ஜாடிக்குள் போடுவது, மூக்கால் வெண்டை காயை ஒட்டி அடுத்த மேசையில் கொண்டு போய் வைப்பது போன்ற விளையாட்டுகள்.. ஒரு அணிக்கு மூன்று பேர். விளையாட்டை முடிக்கா விடில் அந்த நபர் அவுட் ஆகி விடுகிறார். மற்றவரை வைத்து அந்த டீம் விளையாட வேண்டும். எல்லாம் ஜெயித்தால் வீடு என்று சொன்னாலும், அதனை வெல்வது மிக கடினமே. வருகிறவர்கள் பத்தாயிரம் அல்லது இருபதாயிரம் ரூபாய் போல் தான் வெற்றி பெற்று எடுத்து போகிறார்கள். புரட்சி தமிழன் சத்யராஜ், இந்த நிகழ்ச்சியில் கோட்டும், விக்கும் அணிந்து எல்லோரையும் பார்த்து கேட்கும் கேள்வி " ஆர் யூ ரெடி?"

எங்கள் தெருவில் ஓர் அழகி 

நான் எதிர் பார்த்து காத்திருந்தது கடைசியில் நடந்து விட்டது. என் தெருவில் ஒரு அழகிய பெண்.. அடடா ! கடவுளுக்கு என் கோரிக்கை காதில் விழுந்து விட்டது போலும். ஜெஸ்ஸிகா என்ன அருமையான பெயர் ! விண்ணை தாண்டி வருவாயா த்ரிஷா பேரும் ஜெஸ்சி தான். அதே பெயரில் இன்னொரு ஜெஸ்சி இங்கே !

அவளை முதல் முறை பார்த்த போதே மனதை பறிகொடுத்து விட்டேன். தெருவில் முதல் வீடு ஜெஸ்சியுடையது. தெருவினுள் நுழையும் போதும், கிளம்பும் போதும் கண்கள் ஜெஸ்சியை தேடுகின்றன. சில நேரம் வெற்றி. பல முறை தோல்வி. ம்ம் அவளுக்கு என்னென்ன வேலையோ?

ஒரு முறை அவள் அப்பாவிடம் பேசும் சாக்கில் அவள் வீட்டுக்கு சென்றேன். "அடடா நீங்களும் தஞ்சாவூரா? அங்கே எங்க?" என்ற கேள்விகள் ஒருபுறம் இருக்க கண்கள் ஜெஸ்சி மீதே இருந்தது. அவள் என்னை பார்த்தும் பார்க்காத மாதிரி இருந்தாள். தூர இருந்து பார்த்து விட்டு வந்து விட்டேன்.

இன்றைக்கு அவளிடம் பேசியே தீருவது என சபதத்துடன் சென்றேன். கேட்டிற்கு வெளியில் இருந்து பார்த்தேன். அவள் மட்டுமே இருந்தாள். என்னை பார்த்த்தாள். ஒரு "யூ" டர்ன் அடித்து முட்டி போட்டவாறே திரும்ப வீட்டிற்குள் ஓடி விட்டாள் அந்த எட்டு மாத ஜெஸ்சி.

இருக்கட்டும். எப்படியும் அவளை என் தோஸ்தாக்கி விடுவேன். !! I love kids sooooo much.

QUOTE HANGER


A busy man will find time for every thing. A lazy man will not find time for anything.

பிடித்த கவிதை தீராத விளையாட்டு

பார்வையாலே பரவசப்படுத்தியதும்
சிரித்தே சிநேகம் செய்ததும்
கூந்தலாலே தூண்டிலிட்டதும்
தென்றலை தீண்ட கற்று கொடுத்ததும்
நலம் விசாரித்தே நம்பிக்கை கொடுத்ததும்
நேற்று காணுமே ! வர வில்லையா?
நேசத்துடன் கேட்டதும்
இப்போது ங்கே சென்றது
பொய்யாக இருந்தோமோ? இருந்தேனா?
பரவாயில்லை
நன்றாகவே
பொழுது போனது.

-சீ. ரகு ( வனம் கவிஞர்கள் எழுதிய MCC கல்லூரியின் கவிதை தொகுப்பில்)

கவிதையை முடிக்கும் போது தெரியும் எள்ளல் சிரிக்கவும், யோசிக்கவும் வைக்கிறது.

அய்யாசாமியும் அயனும் 

இது அய்யாசாமியின் முன்னாள் அபிமான நடிகை தமன்னா நடித்த அயன் அல்ல. நிஜமான அயன் (Iron box ) 

அய்யாசாமி வீட்டில் எப்போதாவது தான் அயன் செய்வார். அப்படி ஒரு முறை தன்னோட பெண் யூனிபார்மை அயன் செய்து முடிச்சிட்டு, அயன் பாக்சை டைனிங் டேபிளில் வச்சிட்டு (சூடு குறைஞ்ச பிறகு எடுத்து உள்ளே வைப்பாராம்!!) டிவி பார்க்க ஆரம்பிச்சிட்டார். டைனிங் டேபிள் மேல்புறம் கண்ணாடியால் ஆனது. அயன் பாக்ஸ் சூட்டில் கண்ணாடி உடைஞ்சு போய்டுச்சு!! ஒரு ஓரமா கண்ணாடி உடைஞ்சதால், அதன் மேலே பழ கூடை போல ஏதாவது வச்சு "சமாளிபிகேஷன்" செஞ்சாங்க அவங்க மனைவி. இன்னும் மனுஷன் அந்த கண்ணாடியை மாத்தலை. நீங்க அவர் வீட்டுக்கு போனா, அந்த வரலாற்று சிறப்பு மிக்க கண்ணாடியை பாக்கலாம்.

வானவில்லில் இனி நீங்கள்..

சென்ற வாரம் வானவில் பற்றி கருத்து கேட்டமைக்கு பலரும் தொடருங்கள் என்று கூறியிருந்தீர்கள். நன்றி. பன்னிரெண்டு தலைப்புகள் வைத்துள்ளேன். இவற்றில் ஏதாவது ஐந்து அல்லது ஆறு எடுத்து கொண்டு, மீதம் ஓரிரு புது விஷயம் சேர்த்து, மொத்தம் ஏழு விஷயங்களை வானவில் என எழுதுகிறேன். (மிக அரிதாக ஆறு விஷயங்களுடன் எஸ்ஸாவதும் உண்டு !)

வானவில்லில் அடுத்த பகுதியை எழுத போவது ப்ளாகராகிய நீங்கள் தான் ! "ஒரு கேள்வி இரு பதில்" என்கிற தலைப்பில் புது பகுதி. ஒரே கேள்விக்கு இரு விதமான பதில் ப்ளாகர்களிடம் கேட்டு வாங்கி வெளியிட எண்ணம். ஒரு ஆண் & ஒரு பெண் பதிவர் பதிலளித்தால் நன்றாக இருக்கும். கேள்விகள் அவ்வபோது தனி மடலில் உங்களை வந்தடையும். இது உங்கள் ஒத்துழைப்பை பொறுத்தே வெற்றியாகும் ! ஆதரியுங்கள்! நன்றி!!

Monday, May 16, 2011

"யூ ஆர் அப்பாயிண்டட் " - புத்தக விமர்சனம்

"யூ ஆர் அப்பாயிண்டட் "என்கிற புத்தகம் சமீபத்தில் வாசித்தேன். இதனை எழுதிய திரு. பாண்டியராஜன் மாபா என்கிற மனித வள நிறுவனத்தின் தலைவர். தனது 25 ஆண்டு அனுபவத்தை வைத்து இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் எந்தெந்த துறைகளில் வேலை வாய்ப்பு அதிகம் என்பது குறித்து  பயன் தரக்கூடிய பல தகவல்களை கொண்டுள்ளது. மிக எளிமையான மொழியில் எழுதப்பட்ட இப்புத்தகம் ப்ளஸ் டூ முடித்து அடுத்து என்னை படிப்பில் சேரலாம் என்று யோசிக்கும் இளைஞர்களுக்கு நிச்சயம் உதவ கூடியது. கல்லூரியில் படிக்கும் மாணவர்களும் அடுத்து என்ன செய்யலாம் என்ற அறியவும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்காகவும் வாசிக்க வேண்டிய புத்தகம் இது. 

ப்ளஸ் டூ ரிசல்ட் வந்த இந்நேரத்தில் இந்த புத்தகத்தில் உள்ள சில முக்கிய தகவல்களை பகிர்வது பலருக்கும் உதவும் என்று தோன்றுகிறது. புத்தகத்திலிருந்து சில செய்திகள் உங்கள் பார்வைக்கு:

* இந்தியாவில் 24000 மருந்து கம்பெனிகள் உள்ளன. ஆண்டிற்கு 20,000 கோடிக்கும் மேல் மருந்துகள் விற்பனையாகிறது. மருந்து உற்பத்தி (Manufacturing), விற்பனை (Sales) , ஆராய்ச்சி ( Research) என ஏராளமான வேலை வாய்ப்பு இத்துறையில் உள்ளது. பி. எஸ். சி கெமிஸ்டிரி, பி. பார்ம், எம். பார்ம், பி.இ கெமிக்கல் இஞ்சினியரிங் போன்ற படிப்புகள் படித்தவர்களுக்கு இத்துறையில் வேலை வாய்ப்பு அதிகம்.

* மென்பொருள் (Software), மென்பொருள் சேவை துறை ( ITES), ஹார்ட்வேர் ஆகிய துறைகளில் B .E அல்லது MCA முடித்த கம்பியூட்டர் இஞ்சினியர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்தியா இந்த துறைகளில் அதிகம் செய்வது, ஆள் பிடித்து வேலைக்கு அமர்த்துவது, ப்ராஜெக்ட் செய்து கொடுப்பது போன்ற low end வேலைகளைத்தான். இதனால் உலக அளவில் 5 சதவீத வியாபாரம் தான் இந்தியாவிற்கு கிடைக்கிறது. விண்டோஸ், அவுட்லுக் எக்ஸ்பிரஸ் போன்ற மதிப்பு மிக்க ஐ.டி. ப்ராடக்ட்களை தயாரித்து விற்றால் இந்தியாவிற்கு அதிக வருமானமும் வேலை வாய்ப்புகளும் கிடைக்கும்.

* இந்தியாவில் பி. காம், பி. எஸ். சி போன்றவை மட்டுமல்ல இஞ்சினியரிங்கும் முடித்து விட்டு வேலை இல்லாதிருப்போர் ஏராளம். இன்னொரு பக்கம் தங்கள் பணிக்கு சரியான ஆள் ( Right fitting candidate) கிடைக்காமல் தவிக்கும் நிறுவனங்களும் அதிகமாகவே உள்ளன.1 முதல் 2 சதவீதம் மாணவர்கள்தான் படிப்பு. வேலை இரண்டிலுமே  பிரகாசிப்பவர்களாக உள்ளனர். மாணவர்கள் படிப்பது மட்டுமன்றி, தான் செல்ல விரும்பும் வேலைக்கு தேவையான திறமையை (Skills for the job) வளர்த்து கொள்ள வேண்டியது அவசிய தேவை.

* உலகின் பெரிய 50 கம்பனிகளில், குறைந்தது 25 ஆவது ரீடெயில் என்கிற சில்லறை விற்பனை துறையில் இருக்கின்றன. Foodworld, Spencer, Life Style மட்டுமின்றி, நம் ஊரில் இருக்கும் சாதாரண கடைகளும் ரீடெயில் துறையில் அடங்கும். நம் நாட்டில் விவசாயத்திற்கு அடுத்து அதிகமான வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் துறை இது. இந்தியாவில் சின்னதும், பெரியதுமாய் ஒரு கோடிக்கும் அதிகமான கடைகள் உள்ளன. ப்ளஸ் டூ படித்த இளைஞர்களுக்கு Foodworld போன்ற கடைகளில் மாதம் 4000 முதல் 5000 வரை சம்பளம் தரும் துறை இது.

* இந்தியா மட்டுமல்ல, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் கூட சிவகாசியில் தயாரான டைரிகளை தான் பயன்படுத்துகிறார்கள். பிழைப்பு தேடி, யார் வந்தாலும் அவர்களை பட்டினி போடாத ஊர் என சிவகாசிக்கு பெயர் உண்டு.

* தமிழகம் மற்றும் ஆந்திராவில் தான் மகளிர் சுய உதவி குழுக்கள் மிக நன்கு செயல் படுகின்றன. வங்கிகள் இவர்களுக்கு ஆர்வத்துடன் கடன் தருகின்றன. காரணம் இவர்களுக்கு தரப்படும் பணம் பெரும்பாலும் வங்கிக்கு திரும்ப கிடைத்து விடுகிறது (இவர்களிடம் வாரா கடன் 2சதவீதம் மட்டுமே )

* காற்றிலிருந்து மின்சாரம் தயாரிப்பது இன்றைக்கு அவசிய தேவையாகவும் முக்கிய தொழிலாகவும் உள்ளது. இந்த நிறுவனங்களுக்கு தேவைப்படும் ராட்சச காற்றாலை விசிறி கம்பங்களை (ஒவ்வொன்றும் ரூபாய் 8 கோடி!! ) உற்பத்தி செய்வதில் திருச்சி தான் இந்தியாவிலேயே முன்னணியில் உள்ளது. திருச்சியில் இத்தகைய நிறுவனங்கள் ஏழு உள்ளன. இங்கு பணியாற்ற பிட்டர், வெல்டர், கிரைண்டர் (ஐ.டி. ஐ/ டிப்ளமோ படித்தவர்கள்) அதிகம் தேவைப்படுகிறார்கள்.

* தமிழகம் எப்போதும் தோல் துறையில் முன்னணியில் உள்ளது. இந்திய தோல் ஏற்றுமதியில் 60% தமிழகத்திலிருந்து தான் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆம்பூர், ராணிப்பேட்டை, திருச்சி, ஈரோடு, சென்னை ஆகிய நகரங்களில் தோல் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. தோல் துறையா என முகம் சுழிக்காது இஞ்சினியரிங் படித்த மாணவர்கள் இந்த துறைக்கு சென்றால் அருமையான வளர்ச்சி உண்டு.

* நர்ஸ் வேலைக்கு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் எப்போதும் டிமாண்ட் அதிகம். இந்தியாவில் கிடைக்கும் சம்பளத்தை விட 40 மடங்கு அதிக சம்பளம் என்பதால், நர்ஸ் கோர்ஸ் படித்த பலரும் வெளி நாடு செல்ல விரும்புகின்றனர். சுமார் 131 செவிலியர் கல்லூரிகளை கொண்ட கேரளா இந்தியாவில் மிக அதிக நர்ஸ்களை உருவாக்குகிறது.

* பயோ டெக்னாலஜி துறையில் ஹைதராபாத், பெங்களூரு,மகாராஷ்டிரா அளவிற்கு தமிழகம் இல்லாது, சற்று பின்தங்கி இருந்தது. பின் இந்த படிப்பின் அருமை உணர்ந்து ஐ.டி க்கு "டைடல் பார்க் " போல பயோ டெக்னாலஜிக்கு "டைசல் பார்க்" துவங்கி உள்ளது. இந்த துறையில் ஆபிஸ் என்றால் ஆராய்ச்சி கூடம் தான். தினம் தினம் புதிது புதிதான வேலை செய்ய விரும்புபவர்களுக்கு ஏற்ற துறை இது. ஆராய்ச்சி சம்பந்தமான அனைத்து டாகுமெண்டுகளும் ஆங்கிலத்தில் தான் இருக்குமென்பதால் ஆங்கில அறிவு இந்த துறையில் மிக அவசியம்.
***
மாபா என்கிற நிறுவனத்தின் மூலம் கிடைத்த அனுபவங்களை உள்ளடக்கிய இந்த புத்தகம் வாசிக்கவும், பரிசளிக்கவும் ஏற்ற ஒரு சிறந்த புத்தகம்.

***
புத்தகம் பெயர் : யூ ஆர் அப்பாயிண்டட்
வெளியீடு: விகடன் பிரசுரம்
**
15 மே, 2011 தேதியிட்ட திண்ணை இணைய இதழில் வெளியான கட்டுரை. 

Wednesday, May 11, 2011

வானம் -விமர்சனம்

தாய் மூகாம்பிகை, தேவரின் திருவருள் போன்ற படங்கள் பார்த்துள்ளீர்களா? இத்தகைய படங்களின் காட்சிகள் பின்வருமாறு இருக்கும்:


முதல் காட்சி: முத்துராமன்- கே.ஆர். விஜயா தம்பதிக்கு குழந்தை இல்லை. இதற்கு மருமகளே காரணம் என்கிறார் மாமியார் ! மன வேதனை உடன் கே.ஆர் விஜயா சாமி படம் முன்பு அழுகிறார் .

இரண்டாம் காட்சி: ஸ்ரீ காந்த் ஒரு ஏமாற்று பேர்வழி. நம்ப வைத்து கழுத்தறுப்பது இவர் வேலை. கன்னத்தில் மச்ச்சதுடன் ஒரே மாடுலேஷனில் பேசி யாரையோ ஏமாற்றுவார் இவர் ! (எல்லா படத்திலும் இவருக்கு இந்த கேரக்டர் தான்)

மூன்றாம் காட்சி: ஏ. வி. எம் ராஜனுக்கு வியாபாரத்தில் பெரும் நஷ்டம். கடன் தொல்லையால் நொந்து போயிருக்கிறார் இவர். இப்படியாக சிவகுமார் மற்றும் மேஜர் சுந்தர்ராஜனை வைத்து இன்னும் இரு கிளை கதைகள் மாறி மாறி காண்பிப்பார்கள். கடைசி காட்சியில் பழனி மலையிலோ, தாய் மூகாம்பிகை சந்நிதியிலோ இவர்கள் அனைவரும் ஒன்று கூடுவர். அது தான் அவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை.

இந்த ரக கதையொன்று நீண்ட நாள் கழித்து தெலுகு ரீ மேக்காக வந்துள்ளது. அது தான் வானம். கடைசி காட்சியில் கோயிலுக்கு பதில் இங்கு ஆஸ்பத்திரி.

மேற்சொன்ன தெய்வ கதைகள் டைட்டில் ஓடும் போதே ஒரு பாட்டு போடுவார்கள். பின் டைட்டில் முடிந்து வசனம் ஆரம்பிக்கும் முன்பே சீர்காழி கோவிந்தராஜனோ, கே.பி. சுந்தராம்பாளோ ஒரு பாட்டு பாடுவார்கள். வானத்திலும் இதே போல் டைட்டிலில் ஒன்று, படம் துவங்கும் முன் ஒன்று என டபிள் பாட்டு போடுகிறார்கள்.

சரி வானத்திற்கு வருவோம். ஐந்து குட்டி கதைகள். இவை அனைத்திலும் வரும் மனிதர்களும் வாழ்க்கையில் அநியாயத்துக்கு கஷ்டப்படுகிறார்கள். இவை மிக விரிவாக சொல்லப்படும் போது அயர்ச்சியாக உள்ளது. "ஏம்பா.. சினிமா பார்ப்பதே சற்று ஜாலியாக இருக்கத்தான்! இவ்வளவு கஷ்டங்கள் சீரியலில் கூட இல்லையே " என பெருமூச்சு எழுகிறது. ஹீரோ சிம்பு "என்ன வாழ்க்கை இது !" என எப்போதும் அலுத்து கொள்கிறார். மற்ற கேரக்டர்களுக்கும் இதே நிலைமை தான். நல்ல வேளையாக சிம்புவின் நண்பராக சந்தானம் வருகிறார். இவர் மட்டும் இல்லா விடில் நாம் படம் முழுதும் சிரிப்பை நினைத்து கூட பார்க்க முடியாது.

ஐந்து கிளை கதைகளில் நம் மனதை சற்றேனும் பாதிப்பது சரண்யா குடும்பக்கதை தான். கிட்னியை விற்று பிழைக்கும் ஏழைகள் பற்றியும், அதில் உள்ள நெட்வொர்க் பற்றியும் பார்க்க அதிர்ச்சியாக உள்ளது. ஒரு லட்சத்திற்கு கிட்னி விற்கப்படுகிறது. நடுவில் உள்ள ப்ரோக்கர்கள் ஒவ்வொருவரும் கமிஷன் அடிக்க, கடைசியில் 37 ,000 ரூபாய் கிட்னி தானம் தந்தவர்கள் கையில் கிடைப்பதை பார்க்க மனது வலிக்கிறது.

சிம்பு ஒரு ஆர்டிபீசியல் காதலியை நியூ இயர் பார்ட்டிக்கு அழைத்து செல்ல நாற்பதாயிரம் பணம் சேர்க்க அலைகிறார். என்னே லட்சியம்! அனுஷ்கா பலான தொழிலை வெறுத்து ஓடுகிறார். இனியாவது திருந்தி வாழவா என்றால், அதற்கு இல்லை; முழு பணமும் கமிஷன் இன்றி தனக்கே வரும்படி தனி வியாபாரம் செய்வேன் என்கிறார். பிரகாஷ் ராஜ் ட்ராக் சற்று பரவாயில்லை எனினும் மிகை படுத்தல் நிறையவே உள்ளது.

கிளைமாக்சில் பத்தாவது மாடியிலிருந்து கீழே விழுந்தாலும் முழுதாக உள்ள ஹீரோ, " என்ன வாழ்க்கைடா இது " என்று தெளிவாக சொல்லி விட்டு செத்து போகிறார்.

நல்ல விஷயங்களே இல்லையா என்றால், உள்ளது பார்ப்போம்.

ஹீரோ-ஹீரோயின் என்கிற வழக்கமான பார்முலா இல்லாமல் வித்யாசமான கதைக்களன் சற்று மாறுதலாகத்தான் உள்ளது. (மெலோ டிராமாவை குறைத்திருக்கலாம்). சந்தானம் ஆங்காங்கு நன்கு சிரிக்க வைக்கிறார். விரல் வித்தை செய்யாத சிம்பு சற்று ஆறுதல். அனுஷ்கா அழகு ! பிரகாஷ் ராஜ் கொடுத்த பாத்திரத்தில் சரியே செய்துள்ளார் . "தெய்வம் வாழ்வது எங்கே" பாடல் வரிகளும், பாடலும் சிந்திக்க வைக்கிறது. முதலில் சொன்ன மாதிரி சரண்யா ட்ராக் சற்று மனதை பாதிக்கிறது.

ஆயினும் ஆனந்த விகடன் 44 மார்க் தருமளவு நிச்சயம் இந்த படம் இல்லை. திரைக்கதையில் தமிழுக்கென்று மாறுதல் செய்கிறோம் என சொதப்பி விட்டார்களோ என்னவோ? தமிழ், தெலுகு ரெண்டு படமும் பார்த்த நண்பர்கள் தான் சொல்லணும்.

சிலர் நன்றாக உள்ளதாக சொன்ன படம் நமக்கு ஏன் பிடிக்கலை என யோசிக்கிறேன். சில நேரங்களில் படங்களை நாம் எந்த மன நிலையில் பார்க்கிறோம், நமது அந்த நேரத்து மன அழுத்தம் இவற்றை பொறுத்தும் நமக்கு  பிடிப்பது மாறுபடலாம்தான். ஆனால் ஒரு நல்ல படம் நமது மன நிலையை மாற்றி, நம் கவலைகளை தற்காலிகமாக மறக்க வைத்து, அந்த பாத்திரங்களுடன் ஒன்ற வைக்க வேண்டும். வானத்தில் அது நடக்க வில்லை என்பதே கசப்பான உண்மை.

**
விமர்சனம் வல்லமை இணைய இதழில் பிரசுரமானது. நன்றி அண்ணா கண்ணன் !!

Monday, May 9, 2011

கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் !

கல்யாண சாப்பாடு செலவு குறித்த நண்பன் தேவா கட்டுரையும், அதற்கு மாற்று கருத்து ஒன்றும்...
**
கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! (By தேவ குமார்)

ஒரு திருமண பந்தியில் அமர்ந்து இருக்கீர்கள். கொஞ்சம் சாதமும் சாம்பாரும் பரிமாறிவிட்டு, அவ்வளவுதான் என சொல்லி விடுகிறார்கள். ஒரு கூட்டு இல்லை, கறி இல்லை, இனிப்பு இல்லை,ஏன் ரசம், தயிர் கூட இல்லை - எப்படி இருக்கும்? மொய் பணத்தை திரும்ப வாங்கிக்கலாம் என தோன்றும் இல்லையா (என்னது, சாப்பிட்டு பார்த்து சாப்பாடு எப்படி இருந்ததோ அதுக்கு தகுந்த மாதிரி தான் மொய் வைப்பிங்களா? கை கொடுங்க!!)

சமீபத்தில் KV தாமஸ், மத்திய உணவு துறை அமைச்சர் இவ்வாறு சொன்னார் "திருமணத்தில் நிறைய உணவு வீணாவதால், ஒரு விதமான உணவு வகை மட்டுமே பரிமாற வேண்டும் ! இப்படி செய்வதால், குறைந்தது 20% -30% உணவுவீணாவதை தவிர்க்க முடியும். இதற்காக அரசாங்கம் ஒரு சட்டத்தையோ அல்லது கைட்லைன்கலையோ (Guidelines ) கொண்டு வரும்".  இப்படியாக இந்த விஷயம் ஹிந்துவும், அவுட்லுக்கும் கட்டுரை எழுதும் அளவிற்கு போய் விட்டது !!

நான் முதல் முதலில் கலந்து கொண்ட டெல்லி திருமணம் கொஞ்சம் மயக்கம் தர கூடியது. அது ஒரு Government Contractor - வீட்டு திருமணம். பெரிய விளையாட்டு திடலில் பந்தலிட்டு, 32 வகை (பஞ்சாபி, சவுத் இந்தியன், அரபிக், இட்டாலியன் இப்படி போனது லிஸ்ட்!) உணவு பரிமாற பட்டது. ஊறுகாய் கவுன்ட்டர் ஒரு ஊறுகாய் கடை மாதிரி இருந்தது. என்னை அந்த திருமண வீட்டுக்காரர் சவுத் இந்தியன் கவுன்ட்டர்க்கு கூட்டி போய், இந்த தோசை மாஸ்டர் சென்னையில் இருந்து கூட்டி வந்து இருக்கோம், தோசையை சாப்பிட்டு பார்த்து authenticக்கா இருக்கான்னு சொல்லுங்க என்றார். அந்த மாஸ்டரும் நிறைய நெய் போட்டு மசாலா தோசை தர, அந்த இரவு மசால் தோசையோடு நிறைவு பெற்று (32 வகை உணவு இருந்தும்) அந்த மாஸ்டர் என் வயிற்றெரிச்சலை வாங்கி கட்டி கொண்டார்.

அப்படி திருமணம் நடத்தும் ஒரு Government contractor - இடம், உங்கள் மகள் திருமணத்தில் ரொட்டியும், ஒரு சப்ஜியும் தான் பரிமாற வேண்டும் என சொன்னால்,அவருக்கு அதை புரிந்து கொள்ளவே இரண்டு நாள் ஆகும்!! அது கூட பரவாயில்லை, தமிழ் திருமணத்தில் ஒரு வகை தான் பரிமாற வேண்டும் என்றால், எதை பரிமாறுவது? இட்லி, சட்டினி? அல்லது தயிர் சாதம்? அல்லது பாயசம் மட்டும்? என்ன கொடுமை சார் இது... ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயம், யாரும் சாப்பாட்டை அதிகமா குறை சொல்ல மாட்டாங்க!

ஆனால், இந்த proposal - இல் இருக்கிற கொஞ்சூண்டு காமெடியை புறம் தள்ளி வைத்து, அதில் உள்ள அடிப்படை விஷயத்தை பார்த்தால், அது அவசியமான விஷயமாகத்தான் தோன்றுகிறது... ஒரு திருமணத்தில் இவ்வளவு செலவு செய்ய வேண்டுமா? மேற்கத்திய நாடுகளில் இவ்வளவு விமரிசையாக திருமணத்தை நடத்துவது இல்லையே (ஒரு வேளை , ஒன்றுக்கு மேற்பட்ட திருமணத்தை ஒருவர் செய்ய வேண்டிய சாத்தியம் இருப்பதாலோ?) நமது திருமண முறை இத்தனை நீட்டி முழக்கி இருப்பதற்கான காரணம், அந்த காலத்தில் போக்கு வரத்து இல்லை, திருமணத்துக்கு போக, வரவே சில வாரங்கள் ஆகும், எனவே "வந்தது வந்தாங்க கொஞ்ச நாள் இருந்துட்டு போகட்டுமே" என நினைத்து, திருமண சடங்குகளை நீட்டினார்கள். ஆனால், இந்த காலத்திற்கு இந்த முறை பொருந்துகிறதா? திருமண நேரத்தையும், செலவையும் இப்போதாவது சுருக்க வேண்டாமா? இவ்வளவு செலவு செய்வது சரியா? அதுவும் கடன் வாங்கி செலவு செய்பவர்களை பார்த்தால் பாவமாகவும், வீம்புக்காக இப்படி செலவு செய்கிறார்களே என வருத்தம் ஆகவும் இல்லையா?

அதற்காக நான் "அத்தான் வீட்டில் கல்யாணம்... அவரவர் வீட்டில் சாப்பாடு" என்று சொல்லவில்லை. நூறு பேருக்கு மிகாமல், ஒரு நேர விருந்தோடு திருமணத்தை நிகழ்த்துதல் நலம் இல்லையா என்பதுதான் என் கேள்வி. இரண்டு குருவிகள் இணைந்து அழகிய கூடு கட்டுவது பார்க்க எவ்வளவு அழகாகவும் எளிமையாகவும் இருக்குமோ அப்படி இருக்கவேண்டும் திருமணமும்... குடும்ப அந்தஸ்து, வறட்டு கௌரவம் (சானியா திருமணத்தில் நாட்டு பிரச்சனையை இழுத்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?) தவிர்த்து
இரண்டு இளைய உள்ளங்களின் இணைவாக அது நிகழ்ந்தால், சுகம்... !

***********
இன்னொரு மாற்று கருத்து (By மோகன் குமார்)
தேவா அவசியம் யோசிக்க வேண்டிய விஷயம் பற்றி தான் எழுதியிருக்கிறார். ஆயினும் இதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன.

1 . நூறு பேருக்கு மட்டும் அழைப்பு என்பது இன்றைய நிலையில் மிக சிரமம். கணவன்- மனைவி இரண்டு பக்கமும் நெருங்கிய உறவினர், உடன் வேலை செய்பவர், தெருவில் உள்ளோர், சிறு வயது முதல் தொடரும் நண்பர்கள்.. இப்படி அனைவரும் அழைக்க விரும்பும் லிஸ்ட் பெரிது. இது பெண்- மாப்பிள்ளை இரண்டு வீட்டுக்கும் வேறு தனி தனியே சேர்த்தால் இன்னும் அதிகமாகும். (நூறு பேர் மட்டும் தான் அழைக்க வேண்டுமென்றால் டில்லியில் உள்ள தேவா, சென்னையிலிருக்கும் என்னை தன் பிள்ளை திருமணதிற்கு கூப்பிடுவாரா ? :))

2 . இன்று பெரும்பாலானோர் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் தான் பெறுகின்றனர். எனவே தன் குடும்பத்தில் நடக்கும் மிக பெரிய விசேஷமான தன் குழந்தை திருமணத்தில் தெரிந்த அனைவரையும் அழைக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.

3 . நமது கலாசாரம் சற்று சிக்கலானது. கல்யாண நேரத்தில் உள்ள அதீத
வேலை காரணமாக கல்யாண பத்திரிக்கை தர மறந்ததால் முறிந்து போன உறவுகளும் நட்புகளும் கூட உண்டு என்பதையும் நாம் மறக்க கூடாது.

4 . இன்றைக்கும் நாம் சென்று வந்த கல்யாணத்தில் நடந்த நிகழ்வுகளை மறந்து விடுவோம். ஆனால் அந்த சாப்பாடை மட்டும் மறக்க மாட்டோம். நான் சென்று வந்த திருமணங்களில் எங்கு சாப்பாடு அற்புதமாக இருந்ததோ அதை மனதில் ஒரு Yardstick-ஆக வைத்திருப்பேன். இன்னொரு அற்புத சாப்பாடு அடுத்த சில மாதம் அல்லது வருடங்களில் வந்து தான் அதை beat செய்யும். இது பலருக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்.

5 . ஒரே வகை உணவு எனில் இசுலாமியர் வீட்டு திருமணங்களில் செய்வது போல பிரியாணி தான் செய்ய வேண்டுமோ? அந்த திருமணங்களில் சாப்பிடுவது ஒரே வித உணவு எனினும் திருப்தி ஆக தான் வந்து விடுகிறோம். ஆனால் இந்து திருமணங்களில் அநேகமாய் நான்வெஜ் செய்வது இல்லை.

6. எனக்கென்னவோ இந்த விஷயத்தில் மக்களின் சென்சிடிவ் உணர்வுகள் காரணமாய் அரசு இப்படி ஒரு சட்டம் இயற்றாது என்றே தோன்றுகிறது. ஒரு வேளை சில கைட்லைன்கள் தரலாம். அவை எந்த அளவு பின் பற்றப்படும் என்பது கேள்வி குறிதான் .

நிற்க இவை எல்லாம் இன்னொரு பார்வை இந்த விஷயத்தில் வேண்டும் என்பதால் எழுதப்பட்டவையே.

திருமணங்களில் சாப்பாட்டில் மட்டுமல்ல, மண்டபம், பத்திரிக்கை, உடைகள் போன்ற பல விஷயத்தில் தேவைக்கு அதிகமாக செலவு செய்கிறோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. திருமணத்திற்கு எடுக்கிற உடைகள் கூட அதன் பின் ஒரு சில முறைக்கு மேல் நாம் போடுவதில்லை (உருவம் இருவருக்குமே ரொம்பவும் மாறி போய் உடை பற்றாமல் போய் விடுகிறது). ஆனால் இப்படி ஒரு சில முறை மட்டுமே போடப்படும் உடைக்கு எத்தனை ஆயிரம் செலவு செய்கிறோம்?

 "எவ்வளவு பவுன் நகை போடுவீர்கள்?" என்கிற கேள்வி இல்லாமல் எந்த திருமணமும் இன்றைக்கும் நடப்பது இல்லை. நகை, வரதட்சணை பெண்ணை பெற்றவர்களை வேதனைக்குள்ளாக்குகிறது. 

பலரும் தங்கள் வாழ் நாள் சேமிப்பு முழுக்க பெண் திருமணத்தில் செலவழித்து விட்டு பின் அவர்கள் ஓய்வு காலத்தில் கஷ்டப்படுகிறார்கள். என் வீட்டுக்கருகில் ஒரு பெரியவர் சொந்த வீட்டை விற்று, தன் ஓய்வூதியம் முழக்க செலவழித்து தன் இரண்டு பெண்களுக்கும் திருமணம் செய்தார். இன்று வாடகை வீட்டில் இருந்து கொண்டு கடைசி காலத்தை தள்ள, 65 வயதில் வேலைக்கு போகிறார். 

சாப்பாட்டு செலவு, மண்டபம்,உடைகள் என அனைத்திலுமே நாம் செலவை குறைக்க வேண்டியது அவசியமே. இரு வீட்டாரும் பேசி ஒப்பு கொண்டு நடந்தால் மட்டுமே இது சாத்தியம் என தோன்றுகிறது.

இந்த விஷயத்தில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Wednesday, May 4, 2011

வானவில்: டிவியில் மேதின சிறப்பு நிகழ்ச்சி -டைம்ஸ் ஆப் இந்தியா

கல்யாணங்களில் அழையா விருந்தாளி

எல்லா கல்யாணங்களுக்கும் அழைக்காமலே செல்கிறார் சந்தோஷ் என்கிற மனிதர். ஆனாலும் ஒவ்வொரு இடத்திலும் இவருக்கு நல்ல மரியாதை கிடைக்கிறது. ஏன் தெரியுமா? விடை கொஞ்ச நேரத்தில்.....

வானவில்லில் மாற்றங்கள்

வர வர வானவில் ஒரே மாதிரி இருப்பதாக தோன்றுகிறது. வழக்கமான பகுதிகளே வாரா வாரம் வருவதாக எண்ணம். இந்திய/ தமிழக அரசியல் மிக உன்னிப்பாக கவனித்து, தெளிவான கருத்து இருந்தாலும், அது பற்றி இங்கே எழுதுவதில்லை. போலவே சர்ச்சைக்குரிய பல விஷயங்களை தொடுவதே இல்லை. " எழுத வேண்டாம்" என ஒதுக்கி வைத்திருப்பவை நிறைய... இதனால் எழுதுகிற விஷயங்கள்/ தலைப்புகள் சற்று குறைந்து விடுகிறது.

பார்த்த படம் விடாமல் பகிர காரணம், அவற்றை இங்கு பதிந்து வைப்பது பின்னர் வாசிக்க உதவும். நீங்களும் அந்த படம் பார்க்கலாமா , வேண்டாமா என முடிவெடுக்க ஓரளவு பயன்படக்கூடும்.

வானவில்லில் எத்தகைய மாற்றங்கள் செய்யலாம்? எவை பற்றி எழுதலாம்? அவசியம் சொல்லுங்கள்.(உடனே சட்டம் என ஆரம்பிக்காதீர்கள். எப்பவும் தான் அதையே பத்தி யோசிக்கிறேன் .. இங்கேயாவது கொஞ்சம் ரிலாக்ஸ் ப்ளீஸ்) எனக்கும் சில புதிய பகுதிகள் பற்றிய யோசனைகள் உள்ளது. பின்னர் சொல்கிறேன்.

டிவி பக்கம் : மே தின சிறப்பு நிகழ்ச்சிகள் சிறு பார்வை


* கலைஞர் டிவியில் மே தின சிறப்பு பட்டி மன்றம். லியோனி தலைமை என்பதால் பார்க்க உட்கார்ந்தால், முதல்வர் வந்த நிகழ்ச்சி என்பதால் பாதி நேரம் அவரையே பாராட்டி நம்மை tired ஆக்கிட்டாங்க ! அட போங்கப்பா!

* சன்னில் வேட்டைக்காரன் (ஓடுங்க ! ஓடுங்க !) மாலை தில்லாலங்கடி (வடிவேலு காமெடிக்காக வீட்டில் சிலர் பார்த்தனர்)
கலைஞரில் காலை அங்காடி தெரு (ஒரு முறை பார்க்கலாம். மறுபடி மறுபடி பார்த்து விம்மி விம்மி அழ முடியுமா?)
விஜய்யில் சிறுத்தை : கார்த்தி அண்ட் சந்தானம் காமெடிக்காக முதல் பாதி கொஞ்சம் பார்த்தோம்

* காபி வித் ஜீவா என "கோ" பட குழு விஜய்யில் பேசினார்கள். பியா அடித்த அடியில் ஜீவாவிற்கு வாட்ச், சட்டை உள்ளிட்ட பல பொருட்கள் உடைந்தது என்கிற சரித்திர முக்கிய சம்பவத்தை பதிவு செய்தார்கள். மேலும் மலை மேல் பாடல் காட்சி எடுத்த போது சூறாவளி அடித்து, 18 பேர் உயிர் தப்பிய கதையையும் பகிர்ந்தார்கள். "எனது அடுத்த படத்தில் கார்த்திகா நடிக்கணும்னா.." என இயக்குனர் ஆனந்த் காமெடி கண்டிஷன் போட்டார். (அடுத்த படத்திலுமா?? நாங்க... தி பாவம்)

* இரவு விஜய் நீயா நானாவில் "அலுவலகம் மற்றும் பள்ளியில் நிறைய லீவ் எடுக்கலாமா கூடாதா" என பேசினார்கள். அதென்னங்க வர வர நீயா நானா இரவு ஒன்பது மணி முதல் 11 .30 வரை போகுது !! பொதுவா கொஞ்சம் கொஞ்சம் பாத்துட்டு ஆப் செய்து விடுவேன். அன்று சென்னை சூப்பர் கிங்க்ஸ் ஆடியமேட்ச் இருந்ததால் மாறி மாறி பார்த்தேன். அதனால் தான் 11 .30 வரை நிகழ்ச்சி உள்ளது தெரிந்தது ! எட்டு மணி நேர வேலையை பற்றி டிவியில் உள்ள கோபிநாத் போன்றவர்கள் பேசலாமா? அங்கு பதினாறு மணி நேரம் அல்லது அதற்கும் மேல் தினம் வேலை வாங்குகிறார்களே !

அய்யாசாமி தத்துவம்


"நான் பாக்கிற எல்லா மனுஷங்களையும் சமாளிச்சு நடந்துடுவேன்.. அவங்க எவ்வளவு தான் கடுமையான ஆளுங்களா இருந்தாலும் அவர்களிடம் எப்படி நடந்துக்கணும் என்பது இயல்பா வந்துடும். ஆனா என்னால் சமாளிக்க முடியாத, எப்பவும் கஷ்டபடுத்தும் ஆள் ஒருத்தர் உண்டு.. அது.. நான் தான் ! முடியல !! "

டைம்ஸ் ஆப் இந்தியா ..மிக மலிவு விலையில்


டைம்ஸ் ஆப் இந்தியா பேப்பர் கடந்த இரண்டு ஆண்டுகளாக வருட சந்தா கட்டி வாங்கி வருகிறேன். இப்போது மூன்றாம் ஆண்டுக்கும் சந்தா கட்டினேன். வருடம் முன்னூறு ருபாய் மட்டுமே. (அதாவது மாதம் 25 ரூபாய்). மாதா மாதம் அந்த பேப்பரை வெயிட்டுக்கு போட்டாலே 25 ரூபாய் கிடைத்து விடுகிறது ! கிட்ட தட்ட இலவசமாய் படிக்கிற மாதிரி தான் இருக்கு ! பேப்பரும் தின தந்தி மாதிரி சுவாரஸ்யமாய் தகவல் தருகிறார்கள். ஆங்கிலம் கற்காதவர் கூட கற்று கொள்ள இந்த பேப்பர் நல்ல துவக்கமாய் இருக்கும். உங்களுக்கு புதிதாய் ஆங்கில பேப்பர் வாங்கும் யோசனை இருந்தால், டைம்ஸ் ஆப் இந்தியா பற்றி பரிசீலியுங்கள். உங்கள் தெருவில் பேப்பர் போடுபவரை கேட்டாலே அவர் ஆண்டு சந்தா பற்றி சொல்வார்.

அந்த அழையா விருந்தாளி

திருமணங்களுக்கு அழைக்காமலே சென்றாலும் சந்தோஷ் பாஜ்பாய் வரவேற்கப்பட காரணம் அவர் செல்கிற விஷயம் தான் !! ஒவ்வொரு திருமணத்திலும் தம்பதிகளை வைத்து புது மரக்கன்று நட வைக்கிறார். உத்தர பிரதேசத்தை சேர்ந்த அரசு அதிகாரியான இவர் இதுவரை ஆயிரம் திருமணங்களுக்கு  மேல் இவ்வாறு செய்துள்ளார். சொந்த பணத்தில் எட்டாயிரம் மர கன்றுகள் நட்டுள்ளார் இவர்.  மேலதிக தகவலுக்கு இங்கே பாருங்கள்.

QUOTE HANGER

If you want happiness for lifetime learn to love what you do.
Related Posts Plugin for WordPress, Blogger...