Showing posts with label குளு-மணாலி. Show all posts
Showing posts with label குளு-மணாலி. Show all posts

Saturday, June 4, 2016

சிம்லா அற்புத குகை ரயில் பயணம்- படங்கள் & வீடியோவுடன்



சிம்லாவுக்கு எப்படி பயணம் ஆவது என்பதில் துவங்குவோம்.

டில்லி அல்லது சண்டிகார் இவை இரண்டில் எங்கிருந்து வேண்டுமானாலும் சிம்லா எளிதாக செல்லலாம். பேருந்து, விமானம், கார் என அனைத்து விதத்திலும் சிம்லா அடையலாம். ஹிமாச்சல் பிரதேஷின் தலைநகரம் என்பதால் போக்குவரத்து பல வழிகளிலும் ( mode ) உண்டு.
சிம்லாவுக்கு ரயிலில் செல்வது மிக சிறப்பானது. காரணம் இது ஒரு டாய் டிரெயின். இந்த அனுபவம் மிக புதிதாய் வித்யாசமாய் இருக்கும்

டில்லி டு கல்கா சதாப்தியில்
சிம்லாவுக்கு செல்லும் ரயில் கல்கா என்ற இடத்திலிருந்து மட்டும் தான் துவங்குகிறது. கல்கா சண்டிகார்க்கு அடுத்து உள்ள சிறு நகரம். டில்லியிலிருந்து கல்காவிற்கு ( கல்கா தாண்டி செல்லும்) ஏராளமான ரயில்கள் உள்ளன. நாங்கள் ஒரு சதாப்தியில் கல்கா சென்று சேர்ந்தோம்

கல்காவிலிருந்து தினம் ஆறு ரயில்கள் ( Toy train ) சிம்லா செல்கின்றன.

எங்கள் பத்து நாள் டூர் முழுதுமே இந்த டிரெயின் டிக்கெட்டை பொறுத்தே சுழன்றது. முதலில் இந்த டிரெயினில் புக் செய்து விட்டு, பின் தான் டில்லி செல்ல, மணாலி செல்ல, திரும்ப வர என அனைத்து டிக்கெட்டும் புக் செய்தோம்.

சிம்லா ரயில் பயணம் செய்ய விரும்பினால், நீங்கள் உங்களுக்கு எந்த தேதியில் டிக்கெட் கிடைக்கிறதோ அந்த நாளில்  பயணம் செய்ய தயாராய் இருக்க வேண்டும். பலர் முதலில் மற்ற விமானம்/ ரயிலும் புக் செய்து விட்டு பின் சிம்லா ரயிலுக்கு டிக்கெட் புக் செய்ய முயல்கிறார்கள். அது கிடைக்காமல் பின் பஸ் அல்லது காரில் சிம்லா பயணிக்கிறார்கள்.

நாங்கள் பகல் பன்னிரண்டரைக்கு கல்காவில் கிளம்பி மாலை ஐந்தரைக்கு சிம்லா செல்லும் ரயிலில் சென்றோம்

நீங்கள் மேட்டுபாளையத்திலிருந்து ஊட்டி செல்லும் ரயிலில் ( Toy train ) சென்றுள்ளீர்களா? அதே போன்ற அனுபவம் தான் இதுவும் ! இன்னும் கொஞ்சம் அதிக மலைகளையும், பசுமையான செடி கொடிகளையும் பார்க்க முடியும் என்பது தான் முக்கிய வித்யாசம். மேலும் ஊட்டி ரயிலில் செல்லும் போது சாப்பாடு வழியில் எங்கும் கிடைக்காமல் கஷ்டப்பட்டோம். இங்கு கல்காவிலேயே மதிய சாப்பாடு வாங்கி கொண்டு ரயில் ஏறினோம். வழியிலும் கூட உணவு கிடைக்கிறது. இருந்தாலும் கல்காவில் உணவு வாங்கி விடுவது நல்லது

ஆறு அல்லது ஏழு பேட்டிகள் கொண்ட சிறிய ரயில் இது. எங்கள் ரயில் கிளம்பிய கொஞ்ச நேரத்தில் சிம்லா கிளம்பும் இன்னொரு ரயில் ஒரு மணி நேரம் அதிகமாக (ஆறரை மணி நேர பிராயணம்) செல்லுமாம் !


செல்லும் வழியெங்கும் மலை மேல் இருக்கும் அழகான வீடுகளை பார்க்க பொறாமையாய் இருக்கிறது.

இந்த ரயில் பாதை கட்ட ஆரம்பித்தது 1900-ல் . அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த பாதை முழுதும் போட்டு முடித்து 1903 முதல் இந்த ரயில் இயங்கி வருகிறது

2008 -ல் UNESCO இதை ஒரு " Heritage centre" என அறிவித்துள்ளது





ரயிலின் ஜன்னல் வழியே எடுத்த இந்த படத்தில் ரயில் ஒரு குகைக்குள் (Tunnel) நுழைவது தெரியும்


இந்த பாதையில் மொத்தம் 102 குகைகள் (Tunnel ) மற்றும் 917 வளைவுகள் உள்ளனவாம்


வழியெங்கும் பல்வேறு ஊர்களில் ரயில் நிற்கிறது. அப்படி பரோக் என்ற ஊரில் நின்ற போது எடுத்த படம் இது


செல்லும் வழியில் ஆங்காங்கே பள்ளி சென்று திரும்பும் குழந்தைகள் உற்சாகமாக நம்மை பார்த்து கையசைக்கின்றனர்

ஓர் இடத்தில் ரயில் நின்ற போது அங்கிருந்த ஸ்டேஷனில் குட்டி ரயிலின் ஒரு பகுதி மட்டும் டிராக்கில் ஓட்டி கொண்டிருந்தனர். அப்போது எடுத்த படம்



பயணத்தின் போது  ரயிலில் ஒரு புறம் தான் அருமையான வியூ கிடைக்கிறது. மறு புறம் பெரிய பாறை இருக்கும். அந்த பக்கம் பார்க்க, ரசிக்க ஏதும் இராது. என்ன ஒன்று .. ஒரே புறம் எப்போதும் பாறை இருக்காது. நீங்கள் எந்த புறம் அமர்ந்திருந்தாலும் நல்ல வியூ மாறி மாறி கிடைக்கும்
மலைகளும் வீடுகளும்
குகைக்குள் செல்லும் போது குட்டி பசங்க செம சத்தம் போட்டு குரல் எழுப்புகிறார்கள்.

இந்த வீடியோவில் குகைக்குள் ரயில் நுழைந்து வெளியேறுவதும் அப்போது குட்டி பசங்க எழுப்பும் சத்தமும் பார்க்கலாம்




ஐந்தரை மணி நேரம் செல்லும் போது போக போக போர் அடிக்க தான் செய்யும். ஓரிரு குடும்பங்கள் சேர்ந்து போனால் அதிக போர் அடிக்காமல் செல்லும்.




எங்களுடன் ஒரு ஆந்திரா குடும்பம் பயணித்தது. அந்த பசங்களுடன் சேர்ந்து கார்ட்ஸ் ஆடினோம். பின்னர் இன்னும் சில விளையாட்டுகள் ஆடினோம்.

ஆந்திர குடும்பம்

இந்த ஆந்திர குடும்பம் மிக நன்றாக எங்களுடன் பழகினர்.  அரசு துறையில் பணி புரிகிறார். அவர்கள் சிம்லாவில் தங்காமல் நேரே மணாலி மட்டும் பார்க்க சென்றனர்

மிக நீண்ட  Tunnel- ஒன்று கடக்க ஐந்து நிமிடம் போல் ஆகிறது . செம திரில்லிங் மற்றும் ஜாலி ஆக இருக்கும். அந்த tunnel-ல்  எடுத்த வீடியோ



ரயிலில், எங்கள் கம்பார்ட்மெண்டில் வந்த ஒரு குட்டி பையன் செம அழகாய் இருந்தான்.




சிம்லா நெருங்கியதும் ஆங்காங்கு உள்ள ஊர்களில் சிலர் இறங்குகிறார்கள் (உள்ளூர் மக்கள்)

படம் பிடிப்போரை படம் பிடிப்போம் கார்னர்


நண்பன் படத்தில் " என் பிரண்டை போல யாரு மச்சான்" மற்றும் த்ரீ இடியட்சில் அதே பாட்டும் எடுத்தது இந்த சாலையும், அதன் வளைவுகளிலும் தான். பாருங்கள் :



குறிப்பிட்ட தூரம் தாண்டியதும் குளிரை மிக நன்றாக உணர முடிகிறது. சென்னை மற்றும் டில்லி வெய்யிலை அனுபவித்த எங்களுக்கு முதல் முறை குளிர் காற்றை சுவாசிக்க மிக மகிழ்ச்சியாய் இருந்தது !


Saturday, May 28, 2016

ஜாலியான சிம்லா பயணம்- எங்கள் ஹோட்டல் + குப்ரி + கிரீன்வேலி

சிம்லா சென்று இறங்கியதும் போர்ட்டர்கள் போல் உள்ள கமிஷன் ஏஜண்டுகள் நம்மை மொய்க்கிறார்கள். "ரூம் வேணுமா?" என கேட்டு ! ரூம் போட்டாச்சு என்று சொன்னாலும் ஹோட்டல் பேர் கேட்டு விட்டு " அங்கேயா ரூம் போட்டுருக்கீங்க? அது வேஸ்ட். ரொம்ப தூரம் இருக்கு " என்று நம் மனதை கலைக்க பார்க்கின்றனர். " நல்ல ஹோட்டலுக்கு நான் கூட்டி போகிறேன் " என்று மொய்க்கிற இவர்களை தவிர்த்து விட்டு வெளியே வந்தால் அரசாங்கமே ஆட்களை நியமித்து காருக்கு குறிப்பிட்ட தொகை மட்டும் தந்து உங்கள் ஹோட்டலில் இறக்கி விட வழி செய்துள்ளது.

சிம்லாவில் உள்ள ஒரு அரசாங்க அலுவலகம்

சிம்லா முழுதும் ஆட்டோக்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இங்கு நீங்கள் ஆட்டோவை பார்க்கவே முடியாது. இதனால் எங்கு போனாலும் காரில் தான் போகணும். காருக்கு குறைந்தது (Minimum amount) நூறு ரூபாய் வாங்குகிறார்கள். 

சிம்லாவில் லோக்கல் டூர் ட்ரிப் அடிக்க ஹிமாச்சல் டூரிசமே ஏற்பாடு செய்கிறது. ஒரு நாளில் குப்ரி மற்றும் செயில் பேலஸ் ஆகிய இடங்களை இவர்கள் சுற்றி காட்டுகிறார்கள். அப்படி ஒரு நாள் டூரில் தான் நாங்கள் சிம்லாவின் இடங்களை சுற்றி பார்த்தோம்.

சிம்லாவில் நாங்கள் பார்த்த சில இடங்களை ஒவ்வொன்றாய் பார்ப்போம்

குப்ரி

                            

குப்ரி என்ற இந்த இடம் சிம்லா சென்ற பலரும் செல்வார்கள். உண்மையில் இங்கு பெரிதாய் ஒன்றுமில்லை. குதிரைகள் நிறைய இருக்கும் மலைப்பாங்கான இடம் அவ்வளவு தான்.

குப்ரி யை நெருங்கும் போதே ஏராள குதிரைகள் இருப்பதை கண்கள் மட்டுமல்ல மூக்கும் காட்டி கொடுத்து விடுகிறது (கப்பு தான் !)

குப்ரியில் சில பஸ்கள் மேலே வரை செல்லும். சில பஸ்களோ குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தி விட்டு அதன் பின் குதிரையில் போக சொல்வர். உண்மையில் பஸ் மேலே ஏறும் வரை அனுமதியும் வசதியும் உள்ளது. ஆனால் குதிரை காரர்களுக்கு வருமானம் வேண்டும் என்கிற "ஒப்பந்தத்தில்" தான் இப்படி பாதியில் பஸ்ஸை நிறுத்துவது. குதிரை மேல் ஏறி போவதில் விசேஷமா ஏதும் இல்லை !  குதிரை சவாரி செய்வது எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதை தவிர.

குப்ரி கடல் மட்டத்திலிருந்து 8500 அடி உயரத்தில் உள்ளது

இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தம் இங்கு தான் கையெழுத்தானது 
இந்தியா பாகிஸ்தான் இடையே 1971-ல் போர் நடந்தது. 1972-ல் போர் நிறுத்தம் நிகழும் போது இங்கு தான் அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்திராவும் பாகிஸ்தான் அதிபரும் இங்கு கையெழுத்திட்டனர்.

உள்ளே சிறு கார்டன் மற்றும் மேற்சொன்ன சரித்திர பிரசத்தி பெற்ற இடத்தை காண டிக்கெட் ஐந்து ரூபாய்க்கு வாங்குகிறார்கள்.

இந்த இடத்தில் எடுத்த வீடியோ இதோ



சிறுவர்கள் விளையாட கம்பியூட்டர் கேம்ஸ் இங்கு உள்ளன.

                                           


இங்கு ஒரு Zoo கட்டி கொண்டுள்ளனராம்.விரைவில் திறக்க படலாம்

இங்கு இந்த இடதிற்கென சிறப்பு மிக்க சில பழங்கள் விற்கப்படுகின்றன. அவற்றின் பெயர்கள்: செர்ரி, ஆப்ரிகார்ட், காபல் ஆகியவை. இதோ இந்த படத்தில் அந்த பழங்களை பாருங்கள்

                       

சைனாவிலிருந்து நிறைய பொருட்கள் இங்கு கொண்டு வந்து விற்கப்படுகின்றன.


சைனா பசார் என்ற பெயரில் கடைகள் உள்ளன. கீ செயின் கிளிப் போன்ற சமாச்சாரங்கள் இங்கு வாங்கினர். இந்த இடம் சிம்லாவிலிருந்து மலை மேல் உள்ளதால், நாம் பொருட்களை சிம்லாவில் வாங்குவதே புத்தி சாலிதனம். இங்கு சிம்லாவை விட விலை அதிகம் இருக்க வாய்ப்பு அதிகம்

குப்ரியில் நின்ற போது எங்கள் பஸ்ஸில் வந்த ஒரு இளம் ஜோடி பாரில் சென்று புகுந்தது. பின் நிதானமாக, தாமதமாக வந்து சேர்ந்தது. பெண்ணுக்கு அப்புறம் வழியெல்லாம் வாந்தி ! மலை பிரதேசத்தில் நல்ல நேரத்திலயே குமட்டும் ! இதில் ஆல்கஹால் வேறு சாப்பிட்டால் என்ன ஆவது?

நாங்கள் லோக்கல் டூர் சென்ற பஸ் 

குப்ரி செல்லும் வழியில் கிரீன் வேலி என்கிற இடம் உள்ளது. முழுக்க மரங்கள் சூழ்ந்து பச்சையாக இருப்பதால் இந்த பெயர்.


இங்குள்ள மரங்களின் பெயர் தேவதார் மரங்கள் என்பதாகும்.
இங்கு எடுத்த வீடியோ:


சிம்லா முழுவதுமே "Yak " என்று சொல்லப்படுகிற இந்த மிருகம் மிக பேமஸ். பல இடங்களிலும் இது நிற்கும். இதன் மீது அமர்ந்து போட்டோ எடுத்து கொள்ள பலரும் விரும்புவார்கள். அப்படி ஏறி போட்டோ எடுக்க ஒரு ரேட், வீடியோ எடுக்க ஒரு ரேட். அதன் மீது அமர்ந்து ரவுண்ட அடிக்க தனி காசு.



மேலே நாம் எடுத்த போட்டோ மற்றும் வீடியோ இதோ:


ஹோட்டல் சுக் சாகர்

நாங்கள் தங்கிய ஹோட்டலை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். ஹோட்டல் சுக் சாகர் !

Rs. 1400 முதல் இரண்டு பெட் ரூம் அறைகள் கிடைக்கிறது. நிச்சயம் ஒரு டீசன்ட் ஹோட்டல். உணவும் நன்கு உள்ளது. புபே விலை இருநூறு ரூபாய். இது அதிகம் என நினைத்தால், உணவுகள் ஆர்டர் செய்து சாப்பிடலாம். ஒரு நாள் புபேயும் மறுநாள் ஆர்டர் செய்தும் சாப்பிட்டோம், ஆர்டர் செய்து சாப்பிடுவது சீப்பாக உள்ளது. சப்பாத்தி மற்றும் அதற்கான சைட் டிஷ் மிக அருமை


இரண்டு சீக்கியர்கள் தான் இதற்கு ஓனர்கள். இருவரும் எப்போதும் ஹோட்டலில் இருந்து வியாபாரத்தையும் வாடிக்கையாளர்களையும் கவனிக்கிறார்கள். இதனாலேயே ஹோட்டல் நிர்வாகம் நன்கு உள்ளது. இரவு பத்தரை, பதினோரு மணி வரை இருந்து விட்டு அப்புறம் தான் கிளம்புகிறார்கள்.

புபேயில் சாப்பிடும் போது, இவர்களில் ஒருவர் வந்து " வேறு ஏதும் வேணுமா?" என பல முறை நம்மிடம் கேட்டு உபசரித்தார்.

ஐஸ்கிரீம் குறிப்பாய் மில்க் கிரீம் செம சூப்பராக இருந்தது.

இந்த சீக்கியர்களிடம் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தேன்

" நீங்க தான் ஓனரா சார்?" என்றதும், "கடவுள் தான் ஓனர். நாங்க அவரோட வேலை காரர்கள்" என்றார் செண்டிமென்ட்டாய்"..!

Friday, November 16, 2012

குலுமனாலி பயணக்கட்டுரை நிறைவு பகுதி - படம்+வீடியோ

காயத்ரி தேவி கோவில்
 
பாண்டவர்கள் பன்னிரண்டு வருடம் வனவாசம் சென்ற போது மறைந்து வாழ்ந்தார்கள் அல்லவா? அப்போது இந்த இடத்துக்கு வந்துள்ளனர். இங்கிருந்த காயத்ரி தேவியை மற்றவர் கண்ணுக்கு தெரியாவிடினும், பாண்டவர்களுக்கு விஷேச சக்தி இருந்ததால் கண்டு பிடித்தனர் அவர் பாண்டவர்கள் இந்த இடத்தில் மறைந்திருக்க உதவினார். அதன் பின் காயத்ரி தேவிக்கு இந்த கோவிலை பாண்டவர்கள் கட்டினர் என்பது இந்த கோயில் குறித்த கதை

அங்கு அர்ச்சகர் போல் இருந்தது எண்பது வயது மதிக்கத்தக்க ஒரு பாட்டி ! அவர் தான் இந்த கதையை கூறினார்


அர்ச்சகர் பாட்டி

இந்த கோயில் அருகே நூறு வருடத்துக்கும் மேல் வயதான ஒரு மரம் உள்ளது. கோவில் வளாகத்தில் ஒரு பள்ளியும் நடந்து வருகிறது.
மே மாதம் இயங்குது பள்ளிகள்
மே மாதம் என்றாலும் இங்கு எல்லா இடத்திலும் பள்ளிகள் இருந்தன. (குளிர்/ மழை காலத்தில் விடுமுறை இருக்கலாம்)

ஹவுஸ்பாஸ் / பூக்கள் கார்னர்

ஒரு வீட்டின் மீது பூத்துக் கிடக்கும் ரோஜாக்கள் !!
சத்யம் ஹோட்டல்

மணாலியில் உள்ள சத்யம் ஹோட்டலில் தென் இந்திய உணவு வகைகள் கிடைக்கிறது. மீல்ஸ் ரூ.130 . இட்லி இரண்டு ரூ. 60௦ !!!!

சென்னையில் இட்லியை கண்டால் "தினமும் காலை அதே உணவா?" என ஓடும் நாம், அங்கு இட்லியை கண்டால் " கடவுளே" என்று

மகிழ்ச்சியுடன் பாய்கிறோம் ! காரணம் சப்பாத்தி, நான் போன்றவையே ஒவ்வொரு வேளைக்கும் தின்று நம் உணவையே பார்க்காமல் போவது தான்

சம்மரில் அங்கு பெரும்பாலான ஹோட்டல்களில் மூன்று வேளை சாப்பாட்டுக்கும் சேர்த்து வாடகை வாங்கி விடுவார்கள்.

நிச்சயம் மதியம் யாரும் நாம் தாங்கும் ஹோட்டலில் சாப்பிட போவதில்லை. வெளியே போயிடுவோம். எனவே குறைந்தது காலை மற்றும் இரவு நாம் தங்கும் ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி ஆயிடும்.

கிராமத்தில் வளர்ந்து எனக்கு இங்கு சுழித்து கொண்டு ஓடும் ஆறுகள் மிக அதிக மகிழ்ச்சி தந்தன. அவற்றை பார்த்து கொண்டு இருப்பதே மனதுக்கு அவ்வளவு நிம்மதி தருகிறது. எங்கள் ஊர் நீடாமங்கலம் நினைவுகள் இங்கிருக்கும் போது மீண்டும் மீண்டும் வந்தது.

இந்த ஆறுகளை பஸ்ஸில் செல்லும் போது சற்று உயரத்திலிருந்து பாப்போம். பின் உயரம் குறைந்து குறைந்து, நம் அருகிலேயே ஆற்றினை பார்ப்போம். மிக இனிமையான அனுபவம் இது
*******
நாங்கள் சென்ற ஒரு ஷால் தயாரிக்கும் பாக்டரியில் எடுத்த படங்களும் வீடியோவும் இதோ:


பட்டு தயாரிக்கும் காஞ்சிபுரம் போலவே நூற்பாலைகள் இங்கும் இருக்கின்றன. அழகான இளம்பெண்கள் ஷால் தயார் செய்து கொண்டிருந்தனர்





இங்கு எடுத்த வீடியோ:


*****
ணாலியில் இருந்து மணிக்கரன் அல்லது ரோடங் பாஸ் சென்று விட்டு திரும்பும் போது, மாலை நேரம் ஒரு பெரிய பிரச்னையை அனைவரும் எதிர் கொள்கிறார்கள். அது டிராபிக் ஜாம். மணாலிக்கு ஒரு கிலோ மீட்டர் முன் வரிசையாக கார்கள் நின்று கொண்டு, ஓரு கிலோ மீட்டரை கடந்து ஊருக்குள் செல்ல ஓரிரு மணி நேரம் ஆகிறது.

இதில் கொடுமை என்னவென்றால் அந்த நேரம் மணாலியில் இருந்து வெளியே வண்டிகள் வருவதில்லை. ரோடின் ஒரு புறம் மட்டுமே (நாம் செல்லும் திசையில்- மணாலி நோக்கி) வாகனங்கள் செல்கின்றன. மறுபுறம் முழுதும் காலியாக கிடக்கின்றன. ஒரு விதத்தில் எதிர்புறம் செல்லாத இவர்கள் ஒழுக்கத்தை பாராட்ட வேண்டும் எனினும் எவ்வளவு நேரம் விரயம் ! குறிப்பாய் மாலை ஊருக்கு திரும்ப பஸ் பிடிக்கும் நேரத்தில் இப்படி ரெண்டு மணி நேரம் டிராபிக்கில் மாட்டினால் என்ன ஆவது? போலிஸ் அந்த இடத்தில் இருந்து வாகனங்களை விரைவில் செல்கிற மாதிரி செய்தால் நன்றாயிருக்கும் !
*****
ணாலியில் நாங்கள் சென்ற இன்னொரு இடம் : நிகோலஸ் ரூரிச் என்ற ரஷிய ஓவியர் வாழ்ந்த வீடு மற்றும் அவரது ஓவிய கண்காட்சி.


சுதந்திரம் கிடைத்த முதல் பத்தாண்டுகள் அவர் இந்தியாவின் பல பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து இந்தியர்களின் வாழ்க்கை முறையை ஓவியமாய் பதிவு செய்துள்ளார். நேரு, இந்திரா உள்ளிட்ட தலைவர்களுடன் அவர் இருக்கும் படங்களும் இங்கு உள்ளது.

இங்கு எடுத்த வீடியோக்கள் இதோ:



ஓவியர் வரைந்த பெயிண்டிங்க்ஸ் இந்த வீடியோவில் பார்க்கலாம் :



அவர் இருந்த வீடு அப்படியே அவரது பொருட்களுடன் ஒரு மியுசியம் போல வைத்துள்ளனர். 



மரத்தால் ஆன வீட்டின் மீது இருபது பேருக்கு மேல் ஏறக்கூடாது என்று போட்டிருந்தாலும் அதற்கு மேல் தான் மக்கள் கூட்டம் சென்று பார்க்கிறது !
****
ணாலியில் இருந்து சண்டிகர்-க்கு பஸ் மூலம் வந்து, பின் டில்லிக்கு ரயில் பிடித்தோம். டில்லி வந்து விமானம் மூலம் சென்னை ரிட்டன். (இது தான் மிக குறுக்கு வழி. குறிப்பாய் மணாலியிலிருந்து சண்டிகர் வரை மட்டும் பஸ்ஸில் வந்து பின் ரயிலில் வருவது மிக நன்று. பலரும் மணாலி முதல் டில்லி வரை பஸ் பயணம் செய்கின்றனர். -17 மணி நேர பஸ் பயணம் tedious ஆக இருக்கும்)

நிறைவாய் சில வரிகள்:

டில்லிக்கு செல்ல அக்டோபர் மாதம் சிறந்தது. குளிர் தாங்கும் எனில் டிசம்பரில் செல்லலாம். சிம்லாவிற்கு டிசம்பரில் சென்றால் சாலைகளில் ஸ்னோ பார்க்கலாம். எனவே டில்லி மற்றும் சிம்லா சேர்த்து டிசம்பரில் டூர் அடிக்க திட்டமிடுங்கள்.

மணாலியை பொறுத்த வரை : ஏப்ரல் மே மாதம் தான் செல்ல சிறந்தவை. மற்ற மாதங்கள் மிக அதிக குளிராய் இருக்கும். மணாலியில் ரோடங் பாஸ், ரிவர் ராப்டிங், பாரா கிளைடிங் ஆகியவற்றை என்ஜாய் செய்ய தவறாதீர்கள் !

இந்த பயணத்தில் மறக்க முடியாத நினைவுகள்:

தேவா குடும்பத்தின் உபசரிப்பு,
தாஜ் மஹால் பார்த்து வியந்தது,
சிம்லா குகை ரயில் பயணம், 
சிம்லா டு மணாலி இனிய பஸ் பயணம், 
ரோடங்கில் பனிக்கட்டி விளையாட்டு, 
வெந்நீர் ஊற்றுகளை அனுபவித்த அற்புத கணங்கள் 
ரிவர் ராப்டிங் 

ஆகியவை !

ஒரு டயரி குறிப்பாகவே இதனை பகிர்ந்தேன். உங்களில் யாருக்கேனும் என்றேனும் இதில் ஒரு பகுதி உதவினால் கூடுதல் மகிழ்ச்சி !

நண்பர்களின் தொடர் வாசிப்புக்கு நன்றி !

(டில்லி- சிம்லா - மணாலி பயணம் நிறைந்தது)  

Thursday, November 8, 2012

பாரா கிளைடிங்கும், பீமன் மனைவி கோவிலும்

ணாலியில் உள்ள ஏராளமான விளையாட்டுகளில் ஒன்று ஹெலிகாப்டரில் சுற்றி வருவது ! ஒரு மணி நேரம் சுற்றி வர பத்தாயிரம் வாங்குகிறார்கள். ஹெலிகாப்டரை பக்கத்தில் பார்ப்பதே நமக்கு ஜாலியாய் இருக்கும். அதில் பறக்க தனி பட்ஜெட் போடுமளவெல்லாம் வசதியில்லை.


இந்த வீடியோவில் ஹெலிகாப்டரை அது வாடகைக்கு விடப்படும் இடத்தை நீங்கள் பார்க்கலாம்:



இந்த இடத்திற்கு அருகில் ஒரு நாள் மதியம் சாப்பிட்டோம்.


ஹோட்டலுக்கு அருகிலேயே பனி படர்ந்த மலையிலிருந்து பனி உருகி ஓடி வருவது தெரிகிறதா? இது தான் மணாலியின் ஸ்பெஷலே  !
******

நண்பர் ஜோஷியின் மகளுடன் 

இங்கு லஞ்ச் முடிந்ததும் நாங்கள் சென்றது பாராகிளைடிங் விளையாடும் இடம் !

சற்று மலை பாங்கான இடங்கள் அனைத்திலுமே பாரா கிளைடிங் விளையாட்டு இருக்கும். ஏற்காடு சென்றபோது பாரா கிளைடிங் இருக்கிறது என்று சொன்னார்கள். நேரில் பார்க்க வில்லை. மணாலியில் தான் அதை நேரடியே காணமுடிந்தது.

உயரமான சிறு குன்றின் மீதிருந்து ஒரு பாராசூட் உதவியோடு கீழே குதிக்கிறார்கள். இதற்கு பெயர் தான் பாரா கிளைடிங்.

நாம் தனியாய் குதிப்பதில்லை. பைலட் என்று சொல்லப்படும் ஒரு டிரைனரும் சேர்ந்தே குதிக்கிறார். உண்மையில் நாம் அவருடன் சேர்ந்து இந்த விளையாட்டின் சுவாரஸ்யத்தை அனுபவிக்கிறோம் அவ்வளவு தான் ! மற்றபடி காற்றின் வேகம் பொறுத்து பாராசூட்டை இயக்கி நாம் பத்திரமாய் இறங்க உதவுவது இந்த பைலட் தான்.

நாங்கள் மணாலியில் பாரா கிளைடிங் இடத்துக்கு சென்றபோது அங்கு காற்று சற்று சாதகமின்றி வீச துவங்கியிருந்தது. நாங்கள் சென்றபோது சிலர் பாராசூட்டில் குதித்து கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் காற்று ஒரு பக்கமாய் அடிக்கவும் சிலர் வெவ்வேறு பக்கமாய் போய் குதிக்க ஆரம்பித்தனர். கீழே இறங்கும் சிலரும் தரையில் விழுந்து சற்று அடி பட ஆரம்பித்தனர். ஒருவர் காற்று திசை மாறி, வேறு பக்கம் இருக்கும் மரத்தின் மீது சென்று விழுந்தார் ! அடுத்த சில நிமிடம் கழித்து, ஒரு டென்ட் கடை மீது ஒரு பாராசூட் இறங்கியது ! காற்று மோசமாக உள்ளதென தற்காலிகமாய் பாரா கிளைடிங் நிறுத்தப்பட்டது.



இன்னும் சிறிது நேரத்தில் மீண்டும் துவங்கும் என்றதால் எங்கள் குழுவில் சிலர் மலை மேல் ஏறி சென்றோம்.

கீழிருந்து  அந்த குன்றின் மேல் நடந்தும் செல்லலாம். நடக்க சிரமம் எனில் குதிரை மீதும் ஏறி போகலாம். இதற்கு சில குதிரை காரார்கள் உள்ளனர். நாங்கள் இரண்டு முறை ஏறி ஏறி இறங்கியதால் இரண்டாம் முறை குதிரையில் சென்றோம். குதிரைகள் பெயரெல்லாம் வித்யாசமா இருக்கு ! ஒன்று பேர் ஷாரூக் கான். மற்றொரு குதிரை ராஜா ஹிந்துஸ்தானி !

குன்றிற்கு சென்ற பின் எங்களை போல இன்னும் சிலர் இப்படி குதிக்க காத்து கொண்டிருந்தனர் . ஒரு மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்து வெறுத்து போனோம். "இதோ ஆரம்பிச்சுடும்; ஆரம்பிச்சுடும்" என்று கூறினரே ஒழிய ஒன்றும் நடக்கலை.

குன்றிற்கு கீழே வேறு சில விளையாட்டுகளும் இருந்தன. ரோப் கார், ஜம்பிங் போன்ற அதிகம் உபத்திரவம் இல்லாதவை. எங்கள் குழுவை சேர்ந்த மற்ற நண்பர்கள் இவற்றை விளையாடி கொண்டிருந்தனர்.  




காற்று ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் வீசினால் பாரா கிளைடிங் செய்வது மிக கடினமாம். மேலிருந்து கீழோ, கீழிருந்தோ மேலோ வீசினால் சமாளித்து பறந்து விடலாமாம்.

எங்களுடன் வந்த குழு தங்கள் வேலைகளை முடித்து விட்டு நெடுநேரம்
கீழே காத்திருந்ததால், பறக்காமல் திரும்பினோம்.

இன்னொரு இடத்தில தான் இந்த அனுபவத்தை என்ஜாய் செய்யணும் !



இந்த வீடியோக்களில் மற்றவர்கள் செய்யும் பாரா கிளைடிங் பார்க்க முடியும் :









****
ஹவுஸ் பாஸ்/ பூக்கள் கார்னர்



ஹடிம்பா : பீமனின் மனைவி கோவில்  

 
ஹடிம்பா கோவில் என்பது முழுக்க மரத்தால் ஆன ஒரு குகை கோயில். கோவிலின் மேல் 24 அடி உயரத்தில் பெரிய கோபுரம் உள்ளது.

ஹடிம்பா என்பது பீமனின் மனைவி பெயர். பாண்டவர்கள் மறைந்திருந்து வாழ்ந்த காலத்தில் மணாலியில் தான் இருந்தள்ளதாக நம்புகின்றனர். அப்போது ஒரு தீய சக்தி (Demon ) அவர்களை தக்க, பீமன் அதனை அழிக்கிறான். அந்த தீய சக்தியின் தங்கையான ஹடிம்பியை மணக்கிறான் பீமன். இவர்களுக்கு ஒரு மகனும் உண்டு)

இது குகை கோவில் என்பதால், சன்னதிக்குள் செல்லும்போது நம்மை முழுதும் குறுக்கி கொண்டு மண்டியிட்டு தவழ்ந்து செல்லவேண்டும் !




ஹடிம்பா கோவில் அருகில் சிறுவர்கள் விளையாட ஒரு அட்வென்ச்சர் பார்க் உள்ளது. காஷ்மிரி உடை வாடகைக்கு தர, இங்கு பலரும் அதனை அணிந்து புகைப்படம் எடுத்து கொண்டனர். நாங்களும் தான் !.

மணாலி பஸ் ஸ்டாண்டிலிருந்து ஓரிரு கிலோ மீட்டரிலேயே உள்ள இந்த கோவிலில் கூட்டம் எப்போதும் நிரம்பி வழிகிறது. ஒரு மணி நேரம் போல் கியூவில் நின்று தரிசனம் பார்க்க வேண்டி உள்ளது !
****
டிஸ்கி: மிக விரைவில் ( 1 அல்லது பதிவுடன்) டில்லி-குலு மணாலி பயணக்கட்டுரை முடியும் ! 

Friday, November 2, 2012

குளுமணாலி :மறக்க முடியாத ரிவர் ராப்டிங் அனுபவம்

குளு மணாலியில் ஆங்காங்கு ஆறுகள் நிறைய உண்டு. அருகிலேயே மலைகள் வேறு. இவற்றை அடிப்படையாய் வைத்து ஏராளமான ஜாலி விளையாட்டுகள் இருக்கும். இவற்றை அவசியம் என்ஜாய் செய்ய வேண்டும். இத்தகைய இடங்களில் தான் இவற்றை செய்ய முடியும் என்பது ஒரு காரணம். மேலும் பகலிலேயே குளிரும் இந்த க்ளைமேட்டை முழுதாய் அனுபவிக்க இவை தான் உதவும்.
 

அப்படி நாங்கள் சென்றது தான் ரிவர் ராப்டிங் என்கிற இந்த விளையாட்டு. நாங்கள் மூன்று குடும்பங்கள் சேர்ந்து சென்றிருந்தோம். மிக சிறுவர்கள் இதில் விடுவதில்லை. ஆறு வயது வரை உள்ள சிறுவர்கள் மட்டும் வரவில்லை. இதனால் இவர்கள் கூட இருக்க இரு பெண்மணி மட்டும் தங்கி விட்டனர். (கடைசியில் அவர்களுக்கு மட்டும் அருகிலேயே ஒரு குட்டி ரவுண்ட் அடித்து தந்தார் படகு ஓட்டுனர்).

இந்த விளையாட்டுகளை ஜாலியாக ஆடுவது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் நம் பாதுகாப்பும் கூட ! எங்களுடன் வந்த ஜோஷி இந்த விஷயத்தில் மிக அக்கறையாய் இருந்தார். எல்லா சேப்டி விஷயங்களும் சரியாக இருக்கா, எங்களுக்கு படகு ஓட்டும் ஆள் இதற்கான லைசன்ஸ் வைத்திருக்காரா என்றெல்லாம் முழுதாய் சரி பார்த்த பின் தான் எங்கள் பயணம் துவங்கியது !

சேப்டி உடை போட்டு விடுகிறார்கள் 
ஒவ்வொருவரும் சேப்டி உடை, நம் உடைக்கு மேல் அணிந்து கொள்ள வேண்டும் (ஒரு வேளை நீரில் விழுந்துட்டா? அதுக்கு தான் இந்த ஜாக்கிரதை உணர்வு !)

இந்த சவாரிக்கு அவர்கள் தங்கள் இஷ்டப்படி எக்கச்சக்கமாய் பணம் சொல்வார்கள். பேரம் பேசி குறைக்க வேண்டும். ஜோஷி தான் இந்த டிபார்ட்மென்ட் முழுக்க பார்த்து கொண்டார். பணம் தருவதுடன் நம் வேலை முடிஞ்சுது ! ஒரு ஆளுக்கு ஐநூறு ரூபாய் போல தந்த மாதிரி நினைவு. (உடைக்கும், படகு ஓட்டுனர் டிப்ஸ் எல்லாம் சேர்த்து).

சாலையில் ராப்டிங் விளம்பரம் 
அரை மணி நேர ரவுண்ட் என்பதால் அதிக தூரம் கூட்டி சென்றனர் படகு ஓட்டிகள்.

இரு படகுகளில் எங்கள் க்ரூப் சென்றது. முதல் க்ரூப் முன்னே போய் விட்டது.

சாதாரண ஏரிகளில் இந்த பயணம் செல்வதும், இங்கு செல்லும் ரிவர் ராப்டிங்கும் மிக மிக வித்யாசப்படும். ஆற்றின் நடுவே பாறைகள் இருப்பதாலும், சில இடங்கள் அதிக ஆழம் இருப்பதாலும் படகு மேலும் கீழும் அசையும். அப்படி அசையும் ஒவ்வொரு முறையும் தண்ணீர் அலை போல வந்து நம் மீது மோதும் ! இது தான் பயங்கர த்ரில்லே ! பகல் பத்து மணிக்கு இந்த பயணம் சென்றோம். வெய்யில் ஓரளவு அடித்தது. ஆனாலும் ஒவ்வொரு முறை ஆற்றில் உள்ள தண்ணீர் எங்கள் மேல் படும்போது உடல் விறைத்தது ! ஐஸ் கட்டி மாதிரி தண்ணீர் இருந்தால் பின்னே என்ன ஆவது?



எங்களுடன் வந்த குழு செல்லும் ராப்டிங் இதில் சற்று பாருங்கள் 



இரண்டு படகோட்டிகள் படகை திறமையாக ஓட்டி வந்தனர்.

அந்த அரை மணி நேரமும் மிக மிக மிக என்ஜாய் செய்தோம். எங்கள் படகில் நான், மனைவி, மகள் ஆகியோர் மட்டுமே இருந்தோம். மூவர் முகத்திலும் முழுக்க முழுக்க சிரிப்பும் த்ரில்லும் தான் அந்த அரை மணி நேரமும் இருந்தது. இந்த ராப்டிங் சென்றவர்களால் வாழ் நாளைக்கு அதை மறக்க முடியாது !

இமய மலையில் இருந்து பனிக்கட்டி உருகி தான் இந்த ஆறுகளில் ஓடுவதாகவும் அதனால் தான் தண்ணீர் இப்படி ஜில் என்று இருப்பதாகவும் சொன்னார்கள் !

கடைசியில் குட்டி ரவுண்ட். ......................போகாத சிலருக்காக 
நாங்கள்  செல்லும் ராப்டிங் வீடியோ  (துவக்கம் மட்டும்)



பூக்கள் கார்னர்


 படகில் முன்னே அமர்பவர் மேல் தான் மிக அதிக தண்ணீர் கொட்டுகிறது. எடை பாலன்ஸ் செய்யணும் என ஹவுஸ் பாஸ் முன்னே அமர்ந்ததால் அவருக்கு தான் ஐஸ் தண்ணீர் மழை அதிகம் கொட்டியது ! ஆனாலும் படகு அவ்வப்போது சுழலும் போது பின்னே இருக்கும் நாம் முன்னே வந்துடுவோம். அப்போ நம் மேல் தண்ணீர் கொட்டும்.

படகோட்டி நேபாளை சேர்ந்தவராம். ஹவுஸ் பாஸ் தான் அவரிடம் சின்னதா பேட்டி எடுத்தார். (நமக்கு ஹிந்தி தெரியாது)



எங்களை மிக அதிகமாய் குஷிப்படுத்திய அந்த அரை மணி நேர ரிவர் ராப்டிங் ரொம்ப சீக்கிரமே முடிவுக்கு வந்தது.

இது முடிந்ததும் சர்வ நிச்சயமாய் ஒவ்வொருவரும் உடை மாற்ற வேண்டும். அனைவரும் ஐஸ் நீரில் நனைவதால் குளிர் பின்னி எடுத்துடும். கரையில் வைத்து விட்டு அப்புறம் வந்து உடை மாற்றி கொண்டோம். இதற்கு அறைகள் அங்கேயே உண்டு.

மணாலியில் என்றில்லை, எங்கு ரிவர் ராப்டிங் இருந்தாலும் அவசியம் சென்று பாருங்கள். செம்ம்.......ம அனுபவமாய் அது இருக்கும் !

Friday, October 19, 2012

மணாலி-வசிஷ்டர் கோவிலும் நாங்கள் தங்கிய ஹோட்டலும்

வஷிஸ்ட் கோயில்

Add caption
 மணாலியில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது வஷிஸ்ட் கோயில். கோயிலுக்கு நூறு மீட்டர் தூரத்தில் நம் கார் நிறுத்தப்பட்டு விடுகிறது. பின் நடக்க வேண்டும். கொஞ்சம் மலையாக உள்ளதால் வயதானவர்கள் நடக்க சற்று சிரம படுவர்.



நடக்கும் வழியில் நிறைய கடைகள் இருந்தன. பெரிய ஷால் எல்லாம் விற்கின்றனர். வெளியே நின்று உங்களை வற்புறுத்தி அழைத்து சென்று "பணமே தர வேண்டாம்; வி.பி. பி முறையில் அனுப்பி வைப்போம். கொஞ்சம் அட்வான்ஸ் மட்டும் தந்து விட்டு போங்க" என்கிறார்கள். மெத்தைக்கு போட துணி, போத்தி கொள்ள எல்லாம் சேர்த்து நாலாயிரம் என்கிறார்கள். நம்மை மாதிரி வெய்யில் தேசத்துக்கு தேவையே இல்லை. விசாரித்து விட்டு எஸ் ஆனோம்



சுடு நீர் உள்ள குளம் மிக புகழ் பெற்றது. 33000 கோடி கடவுள்களும் வந்து குளித்ததாக ஐதீகம். இங்குள்ள கடவுள் சிவன். இவரை வணங்கி விட்டு குளத்தில் ஒரு சிலர் குளித்தோம்.


பெண்களுக்கு தனி இடம். பிரைவசி உடன் ஆண்கள் காண முடியாத படி தனியாக உள்ளது.

ரோடாங் மணால்சு ஹோட்டல்


நாங்கள் தங்கிய ரோடாங் மணால்சு ஹிமாச்சல் டூரிசத்தின் ஹோட்டல். மணாலியில் ஒரே ஒரு முக்கிய கடை தெரு தான் உள்ளது. இதை மால் ரோடு என்பர். இதற்கு அருகிலும் நிறைய லாட்ஜுகள் உள்ளன. ஆனால் இந்த ரோடாங் மணால்சு அந்த இடத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. ஒவ்வொரு முறையும் வெளியே வர கார் அல்லது ஆட்டோ தேவை. இது மட்டுமே பிரச்சனை. மற்ற படி அருமையான உணவு. பனி படர்ந்த மலை அறையில் இருந்து தெரிகிறது. மிக மிக அற்புத கார்டன். பெண்கள் மிக மிக ரசித்து என்ஜாய் செய்கிறார்கள். ஹோட்டலில் இருக்கும் போதெல்லாம் என் பெண் , அறையில் இருக்காமல் கார்டனுக்கு சென்று விடுவாள். மனைவியும் கூட தான் !

ஹவுஸ்பாஸ் / பூக்கள் கார்னர்



காலை மற்றும் இரவு இரு வேளை நல்ல உணவு சாப்பிட்டோம். மதிய சாப்பாட்டுக்கும் சேர்த்து அவர்கள் பணம் வாங்குவதால், நீங்கள் கேட்டால், மதியத்துக்கு பிரேட் போல ஏதாவது பேக் செய்து காலையிலேயே தருகிறார்கள்.
ஹோட்டலில் உள்ள கார்டன் (நடப்பது யாரோ அறியேன்)
Details about the hotel:


Website: http://www.himachalhotels.in/Hotel-Rohtang-Manalsu/

Hotel Rohtang Manalsu

Tel. No. +91 177 2860601, 2860630, 2661073

email:booking@himachalhotels.in
****
மணாலியில் எல்லா கடைகளும் செம கூட்டமாய் உள்ளது. டூரிஸ்ட் கூட்டம். மருந்து கடை முதல் பெட்டி கடை வரை சரி கூட்டம் ! எந்த பொருள் வாங்கவும் கடையில் சற்று நின்று தான் வாங்கி வரணும்

அங்கு மரங்கள் நிறைய உள்ளதால் மரத்தில் நம் பெயர் அல்லது நாம் சொல்லும் மற்றவர்கள் பெயர் எழுதி தருகிறார்கள். நல்ல தரமுள்ள மரத்தில் எழுத நூறு ரூபாய் போல் தான் வாங்குகிறார்கள்.

ரூமுக்கு வெளியே கார்டன்; உள்ளே பெயர் பலகை இரண்டும் உங்கள் கவனத்திற்கு

அதில் சில கலை வேலைப்பாடு வேறு செய்து தருகிறார்கள். மச்சான் குடும்பத்துக்கு ஓரிரண்டு வாங்கி வந்தோம். அவர்கள் வேலை பாடுகளை பார்த்து மிக மகிழ்ந்தார்கள்

ரோஜா படத்தின் ஷூட்டிங் நிறைய இங்கு எடுத்துள்ளார்கள். காஷ்மீர் என்று சொன்னாலும் கூட பல காட்சிகள் இங்கு எடுத்தது தான். நாங்கள் போன போது எந்த ஷூட்டிங்கும் நடக்கலை. டூரிஸ்ட் அதிகம் உள்ள இந்த நேரம் ஷூட்டிங் விட மாட்டார்களாம். குளிர் காலத்தில் தான் ஷூட்டிங் விடுவார்களாம்

HPTC - பஸ் மூலம் லோக்கல் இடங்களுக்கு செல்லலாம் எனினும் அவர்கள் சுற்றி பார்க்க 45 நிமிடம் மட்டுமே தருவார்கள். அதற்குள் நாம் எல்லாம் இடமும் பார்த்து விட்டு வரவேண்டும். சற்று காஸ்ட்லி என்றாலும் ஒரு கார் எடுத்து கொண்டால், நம் விருப்ப படி பார்த்து வர சௌகரியம் ஆக இருக்கும். கூட இன்னும் ஓரிரு குடும்பங்கள் சேர்ந்து விட்டால் நன்கு என்ஜாய் செய்யலாம்.
Related Posts Plugin for WordPress, Blogger...