Thursday, August 15, 2019

கோமாளி சினிமா விமர்சனம்

16 வருடங்கள் கோமாவில் இருக்கும் (ஜெயம்) ரவி திடீரென ஒரு நாள் விழிக்க இத்தனை வருடத்தில் நடந்த மாறுதல்களை எப்படி எதிர்கொள்கிறார் என்பதே கோமாளி

பிளஸ் 

ட்ரைலர் மட்டும் பார்த்து பல்பு வாங்கிய படங்கள் நிச்சயம் எல்லோருக்கும் இருக்கும்.  நானும், பெண்ணும் ட்ரைலர் பார்த்து விட்டு காமெடி படம் என்று டிக்கெட் போட்டோம் !  எந்த ரிவியூவும்  இல்லாம, ட்ரைலர் பார்த்து போறோம்..சொதப்பாம இருக்குணும் என்று சொல்லியபடி இருந்தேன்..

காமெடி !  அது தான் படத்தின் பிளஸ். முதல் பாதியில் சிரிக்க  வைக்க எத்தனையோ சூழல்கள்.. அனைத்தையும் முடிந்தவரை சரியே பயன்படுத்தியுள்ளார் இயக்குனர்.

வாட்ஸ் அப், பேஸ் புக் என பலவற்றை கிண்டல் அடித்தாலும், கூகிள் மேப்பை கிண்டலடிக்கும் போது தியேட்டர் குலுங்குகிறது

ஐ. டி வேலை செய்வோர், கூவத்தூர் ரிசார்ட் என பல விஷயங்கள் மக்கள் ரசிக்கும் வண்ணம் நக்கல் அடிக்கிறார் இயக்குனர்

இறுதியில் சென்னை வெள்ளத்தில் சொல்கிற மெசேஜ் - தியேட்டரில் மக்களிடம் நன்கு எடுபடுவதை காண முடிந்தது..

சில நெருடல்கள் ஒரு படம் நிச்சயம் கதை என ஒன்று  சொல்லியே ஆகணுமா?

கருத்து ? அது இருந்தே தான்  தீரணுமா?

இயக்குனர் அப்படித்தான் நினைக்கிறார் போலும்.

உள்ளத்தை அள்ளித்தா என்று ஒரு படம் - கதை என்று பேருக்கு எதுவோ ஒன்று இருக்கும்.. காமெடி மட்டும் காட்சிக்கு காட்சி சிரிக்க வைக்கும்..

கிட்டத்தட்ட அந்த அளவு அமர்க்களமாய் இப்படத்தை கொண்டு சென்றிருக்கலாம்.. அழகான ஒரு பிளாட் கிடைத்து காமெடியும் இயக்குனருக்கு நன்றாகவே வருகிறது.. காமெடியில் முழுக்க பவுண்டரி, சிக்ஸர் என அடித்திருந்தால் இது ஒரு  மறக்க முடியாத படமாகியிருக்கும் .. ஆனால் இயக்குனரின் "கதை சொல்கிறேன்- கருத்து சொல்கிறேன்" என்ற "நல்லெண்ணத்தால்" அது நடக்காமல்  போகிறது.

மொத்தத்தில் 

இரண்டரை மணி நேர படத்தில் 45 நிமிடமாவது சிரிப்புக்கு காரண்டி.. அந்த நேரம்  இன்னும் அதிகமாய் இருந்திருக்கலாம்.. அது தான் வருத்தமே !

அதிக எதிர்பார்ப்பின்றி பார்த்தால், ஆங்காங்கு மனம் விட்டு சிரிக்கலாம் !

அண்மை பதிவு: நேர்கொண்ட பார்வை விமர்சனம்  இங்கு

Wednesday, August 14, 2019

நேர்கொண்ட பார்வை விமர்சனம்


ந்தியில்  வெளியான பிங்க் தமிழில்  "நேர்கொண்ட பார்வை " யாக !கதை 

ஒரு பார்ட்டியில், சில இளம் ஆண்களும், பெண்களும் குடித்து விட்டு  பேசிக்கொண்டிருக்க, இளைஞன் -ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயல- அவள் பாட்டிலால் ஓங்கி அடித்து விடுகிறாள். பையன் பெரிய  இடம்.போலீஸ் கேஸ் ஆனபின், எல்லாம் தலை கீழ் ஆகிறது ...பெண்களுக்கு ஆஜர் ஆகி வாதிடுகிறார் அஜீத். நீதி கிடைத்ததா என்பதை இறுதி பகுதி கோர்ட் காட்சிகளால் சொல்கிறது

பிங்க் Vs நேர்கொண்ட பார்வை 

இந்த ஒப்பிடலை தவிர்க்க முடியாது.

இரண்டையும் பார்த்தோரில் சிலருக்கு பிங்க் ஏற்படுத்திய  தாக்கம் அதிகமாக இருக்கும் ! காரணம்.. கதை மற்றும் முதல்  முறை பார்க்கும் போது - அது தரும் எழுச்சி. Freshness !

தமிழில் நமக்கு பெரும்பாலும் என்ன  நடக்கும் என தெரிந்து விடுவது சிறு குறை. ஆயினும், சப் டைட்டில் படிக்கும் பிரச்சனை இன்றி நேரடியே ரசிக்க முடிவதால்,  பலருக்கும் தமிழ் version பிடிக்கவே செய்யும்

பிளஸ் 

அஜீத் !  இப்படத்தில் அஜீத் இல்லாவிடில் இந்த அளவு ரீச் மற்றும் வெற்றி கிடைத்திருக்காது. ஒரு பெரிய நடிகர் இந்த செய்தியை சொன்னதால் தான் அது  பேசப்படுகிறது. ரொம்ப subdued  ஆக - underplay செய்து நடித்துள்ளார் அஜீத்

இடைவேளை காட்சி பட்டாசு ! அஜீத் ரசிகர்களால்  சீட்டில் அமரவே முடியாத படி அந்த 10-15 நிமிடம் ரணகளப்படுகிறது. இப்பகுதி முழுக்க தமிழில் அஜீத்திற்காக மட்டும் சேர்க்கப்பட்டது !    அட்டகாசம் !பின்னணி இசை - அடிநாதமான அற்புத கதைக்கு அடுத்து ரொம்பவும் அசத்துவது பின்னணி இசை தான். இண்டெர்வெல் பிளாக்கிற்கு தரும் நரம்பு புடைக்க வைக்கும் இசை - எமோஷனல்- த்ரில் காட்சிகளுக்கு தரும் இசை - என ஒவ்வொன்றும் ரசிக்க  வைக்கிறது.பாடல்கள் சுமார் தான் !

ஷ்ரத்தா ஸ்ரீநாத் - அட்டகாசமான role - முழுதும் உள்வாங்கி அனாயாசமாக நடிக்கிறார். பாத்திரமாக மட்டுமே பார்க்க முடிகிறது

இயக்கம் - இன்று 10 படம் வந்தால், 1 அல்லது 2 தான் போட்ட காசை எடுக்கிறது.இந்த சூழலில் வினோத் என்ற இயக்குனர் ஒன்றொக்கொன்று சம்பந்தமே இல்லாத ஜானரில் 3 படமெடுத்து மூன்றும் ஹிட் ஆவதெல்லாம் கிட்டத்தட்ட இமாலய சாதனை ! (முதல் 2 - சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம்  ஒன்று). உண்மையை சொல்ல வேண்டுமெனில் அவை இரண்டும் இப்படத்தை விட இன்னும் அசத்தியதன் காரணம் - freshness தான். இப்படத்தில் தமிழுக்கு  தேவையான விதத்தில் மிக சிறு மாறுதல்கள் செய்ததும், முக்கிய செய்தியை எவ்விதத்திலும் பாழாகாமல் சரியே சேர்த்த விதத்திலும் வினோத் வெல்கிறார்

எனக்கு தெரிந்து இதற்கு  முன் முதல் 3 படங்களும் ஹிட் ஆன இயக்குனர்கள் - பாரதி ராஜா மற்றும் ஷங்கர்.வினோத்தை அவர்கள் லெவலில் நிச்சயம் வைக்க முடியாது. ஆனால் தமிழில் நம்பிக்கை தரும் இளம் இயக்குனர் பட்டியலில் அவசியம் சேர்கிறார்

சில சிறு குறைகள் 

பிக் பாஸ் புகழ் அபிராமி இப்படத்திலும் அழுகிறார். மற்ற இரு பெண்களை விட மிக, மிக  முதிர்ந்தவராய்  தெரிகிறார்.


ரங்கராஜ் பாண்டே - எப்படி இத்தனை பவர்புல் பாத்திரம் ஒரு புதியவருக்கு தந்தாரோ இயக்குனர். பாண்டே தன்னால் இயன்ற வரை  செய்திருந்தாலும், அஜீத் எதிரில் இத்தனை புதியவர் எனும்போதே முடிவு யாவருக்கும் தெரிந்து விடும். பிரகாஷ் ராஜ், நாசர் போன்ற வலுவான நபர் நடித்திருக்க வேண்டிய பாத்திரம் இது.

கோர்ட்டில் - வேறு   வழக்குகளே இல்லையா? வந்ததும் முதல் வேலையாய் இந்த வழக்கை கூப்பிடுகிறார்கள்.  இந்த வழக்கு முடிந்ததும்  பல நேரம் நீதிபதி எழுந்து சென்று விடுகிறார் !

பெண்களுக்கான கையேடு என அஜீத் அவ்வப்போது சொல்வது " பெண்களை சமூகம் எப்படி பார்க்கிறது" என்ற எள்ளலுடன் கூடிய விஷயம் என எத்தனை பேருக்கு புரிந்திருக்கும் !. அவற்றை சிலர் சீரியஸாக கூட எடுத்திருக்கலாம் !

நிறைவாக

ஒழுக்கம் என்பது இரு பாலாருக்கும் பொது - அது பெண்களுக்கு மட்டுமே ஆனது  அல்ல -

ஒரு பெண் நோ என்று சொன்னால் - அதற்கு மேல் தொடர்வது யாராயினும் கூடாது

இந்த இரண்டு செய்தியும் மிக தெளிவாய் வந்து சேர்கிறது !

படம்  பெண்கள் அனைவரையும்  கவர்வது - வெளிப்படையாய் தெரிகிறது. பெண்கள் விரும்பும் படம்  வெற்றியடைந்தே தீரும்.

பிங்க் பார்க்காதோர் - மிஸ் பண்ணவே பண்ணாதீர்கள் ! ரொம்ப ரொம்ப ரசிப்பீர்கள் !

பிங்க் பார்த்தோறும் கூட - அஜீத்தின் அதிரடி + டயலாக் இரண்டிற்காகவும் நிச்சயம் காணலாம்  !

பிங்க் -  இந்தி பட விமர்சனம் : இங்கு 
Related Posts Plugin for WordPress, Blogger...