பார்த்த படம்: பீப்ளி லைவ்
விவசாயிகள் பிரச்சனையை பேசும் படம். அமீர்கான் தயாரித்தது. துவக்கத்தில் மிக மெதுவாய் துவங்குகினாலும், மீடியா மற்றும் அரசியல் வாதிகளை தோலுரித்து காட்ட துவங்கியதும் செமையாய் சூடு பிடித்து விடுகிறது. எப்போதாவது வரும் நசுருதின் ஷா தவிர மற்ற அனைவரும் தெரியாத முகங்களே ! அரசியல் வாதிகளை அம்பலப்படுத்தும் பல படங்கள் பார்த்திருக்கிறோம். ஆனால் மீடியாவை இந்த அளவு கிழித்து காய போடும் படம் இதுவாக தான் இருக்கும். பரபரபிற்காக அவர்கள் அடிக்கும் கூத்தை காட்டியது அமர்க்களமாய் இருந்தது. என்னை பொறுத்த வரை இந்த படத்தின் ஹை லைட் இது தான்.
விவசாயிகள் பிரச்சனை என்ற சீரியஸ் விஷயத்தை, நகைச்சுவை கலந்து அருமையாய் சொல்லி உள்ளனர். நேரம் கிடைக்கும் போது பார்த்து ரசியுங்கள்.
அய்யாசாமி (தனது தலைவிகள் பற்றி)
"சின்ன வயசில நதியாவில் துவங்கியது, அப்புறம் ரேவதி, குஷ்பூ என தலைவிகள் அடுத்தடுத்து மாறினாங்க. கடைசி மாஜி தலைவியா தமன்னா கொஞ்ச நாள் தான் இருந்தார். கடந்த ஒண்ணரை வருஷமா அனுஷ்கா இடத்தை யாராலும் பிடிக்க முடியலை. இது கொஞ்சம் லாங் இன்னிங்க்ஸா தான் இருக்கு. என்ன ஒண்ணு இந்த அனுஷ் பொண்ணு தமிழில் வருஷத்துக்கு ஒண்ணு, ரெண்டு படம் தான் நடிக்குது. மத்த நேரம் எல்லாம் டிவியில் சென்னை சில்க்ஸ், டவ் ஷாம்பூ விளம்பரத்தில் எல்லாம் அனுஷை பார்த்து ஆறுதல் அடைய வேண்டியதா இருக்கு. சீக்கிரம் வேறு யாராவது தலைவியா வந்து அசத்துங்கப்பா.".
வீடியோ காட்சி ஒன்று
ஹைதராபாத் சென்ற போது எடுத்த வீடியோ இது. ராமாராவ் பார்க்கில் ஒரு ஜம்பிங் விளையாட்டு இருந்தது. பெரியவர்களே பயப்படும் இந்த விளையாட்டை ஒரு சிறு பெண் எப்படி பயமின்றி ஜாலியாக ஆடுகிறாள் பாருங்கள்
சம்பவம்
அலுவலகம் விட்டு வருகையில் மழை வலுக்கிறது. டீ கடையில் ஒதுங்குகிறேன். என்னை போலவே அங்கே இன்னும் சிலர்... . சும்மா நிற்கும் போது அங்கிருக்கும் கஜூரா எனும் தின்பண்டம் ஈர்க்கிறது. போண்டா மாதிரி ஒரு இனிப்பு பண்டம் தான் இது. போண்டாவை விட இன்னும் சற்று கடினமாக (hard) இருக்கும். ஒரு கஜூரா கடித்து சாப்பிட பத்து நிமிடம் ஆகலாம். வயிறு சீக்கிரம் நிரம்பி விடும். இதனை சாப்பிட்டு பல ஆண்டுகள் ஆகி விட்டது. குடும்பஸ்தன் ஆனதிலிருந்து டீ கடைகள் பக்கம் வருவது குறைந்து விட்டது. ஒரு கஜூரா வாங்கி மெதுவாக சாப்பிட தொடங்குகிறேன்.
ஒரு புதிய மனிதர் டீ கடைக்குள் நுழைகிறார். மிக ஒடிசலான உருவம். முழுக்கை சட்டை, பழைய காலத்து பேன்ட். கழுத்தில் டை நெற்றியில் ஒற்றை நாமம். அவரது பேண்ட்டும், டையும் அவரை உற்று நோக்க வைத்தது. "இவர் என்ன வாங்குவார்? அநேகமாய் சிகரெட்" என நினைக்கிறேன். அவர் சிகரெட் வாங்கி விட்டு ஒதுங்குகிறார்.
கஜூராவை நிதானமாய் அனுபவித்து சாப்பிட்டு முடிக்கிறேன். தெருவில் வாகனங்கள் நகர ஆரம்பித்திருக்கின்றன. நானும் வந்து எனது வண்டியை எடுக்க செல்ல , அருகில் நமது டை அணிந்த நபர் தன வண்டியை எடுத்து கொண்டிருந்தார். என்னை பார்த்ததும் ஏனோ அதிர்ச்சியுற்றார். "நம்மை தொடர்ந்து பாலோ செய்கிறானே; இவன் யார்?" என நினைத்திருப்பாரோ? இந்த நினைப்பே எனக்கு சிரிப்பை தர, புன்னகையுடன் வண்டியை எடுத்தேன். சிறு தூறலுக்கிடையே தொடர்ந்தது பயணம்.
QUOTE HANGER
He who cannot forgive others destroys the bridge over which he himself must pass.
ஒரு கேள்வி மூன்று பதில்
கேள்வி:
தொடர்ந்து கவிதை எழுதுவது எப்படி என்பது புதிராகவே உள்ளது...தேவதேவன் , மனுஷ்யபுத்திரன் போன்றோர் நிறைய கவிதை எழுதுகிறார்கள் ... இந்த மன நிலை அவர்களுக்கு எப்படி வாய்க்கிறது என்பது ஆச்சரியமான விஷயம் தான்... அதுவும் ஒரு தரத்திற்கு மேலே இருக்கும் கவிதைகளை தொடர்ச்சியாய் எழுதுவதற்கு, நிறைய பார்க்கிறார்கள், விஷயங்களை ஒரு அணுக்கத்துடனும், அக்கறையுடனும் பார்க்கிறார்கள் என்று நினைக்கிறேன். அவர்களின் படிப்பும், மொழியார்வமும் அதை சுலபமாய் கவிதையாக்க உதவுகிறது என்பது என் எண்ணம்.
நானும் ஒரு காலத்தில் கவிதை என்ற பெயரில் நிறைய எழுதினேன். அவை கவிதையா என இப்போது யோசிக்க வேண்டியுள்ளது :))
கவிதை என்பது ஒரு சம்பவம் போல என்னைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. மகிழ்ச்சி., துக்கம்., சோகம்., விரக்தி, வெறுப்பு., அசூயை., கோபம்., வீரம்., தன்னம்பிக்கை ., என எல்லா நிலைகளிலும் சில உணர்வுகள் கவிதைவரிகளாய்ப் பிரசவிக்கின்றன.
உணர்வின் வீர்யம் பொறுத்தும்., ஆழம் பொறுத்தும் அது எளிதாய் நிகழ்கிறது.எப்போதோ சில சமயம் நான் கவிதைகளிடமிருந்து அந்நியப்பட்டு விடுவேனோ என்ற அச்சம் தாக்கும் போதெல்லாம் அதிகமாக கவிதை எழுதி இருக்கிறேன். சிலசமயம் நான் கவிதைகளைத் துரத்தியும். சில சமயம் அது என்னைத் துரத்தியும் காதல் செய்து கொண்டிருக்கிறோம். என்றென்றூம் தீராத அமிர்தமாய் அது தன்னை என்னிடம் கையளித்துக் கொண்டே இருக்கிறது. மிக ஆழமான உணர்வுகளின் போது கவிதைகளில் அவற்றைப் பகிர்ந்தபின் நிம்மதியாய்த் தூங்கி இருக்கிறேன். கடவுளிடம் என்னை ஒப்புவித்த குழந்தை போல.
எத்தனை காலமாகவோ நானும் அதுவும் தொடர்பில் இல்லை என்றாலும் தொடர்பில் திரும்ப வந்தபின் விட்டுப் பிரிவது என்பது குறுந்தகவல் காதல்களைப் போல எளிதாயில்லை. போகன் வில்லாக்களைப் போலும் குல்மோஹர் போலும் ., டேலியா., கினியா போலும் அவை விதம்விதமான நிறங்களிலும். மல்லி., முல்லை ., வாசனைகளிலும் ஒரு தாயன்பைப் போலத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சிநேகிதியைப் போலும் ., குழந்தையைப்போலும் உணர்கிறேன் கவி்தைகளிடம் என்னை ஒப்புக் கொடுக்கும்போது.
என்னை மேலெடுத்துச் சென்றது, சிம்மாசனம் அளித்ததும் சேவகம் செய்வதும் அதுதானென்றாலும் நானும் அதன் சேவகியாய் இருக்கிறேன். ஓடமும் வண்டியுமாய் நானும் அதுவும் ஒருவரை ஒருவர் சுமந்துகொண்டிருக்கிறோம். ஒன்றிலொன்று உள்ளூரக் கலந்துவிட்டதால் ஓடமும் வண்டியும் என்றும் பிரிவதேயில்லை.. ஒத்த காதலர்களைப் போலிருக்கும் என்னையும் கவிதையையும் போல.
பதிவர் கனாக்காதலன்
என் பாட்டனுக்குப் புகையிலை
என் அப்பாவிற்கு சிகரெட்
எனக்கு கவிதை.