Friday, January 15, 2016

ரஜினி முருகன் - நம்பி போங்க- சந்தோஷமா வாங்க : விமர்சனம்

ந்தேகமே வேண்டாம்..வருத்தபடாத வாலிபர் சங்கம் - இரண்டாம் பாகம்  தான்.. கிராமத்து பின்னணி.. சிவா- சூரி காம்போ; தாவணியில் மின்னும் ஹீரோயின்; காமெடி; குடும்பத்து உறவுகளை முக்கியபடுத்தும் திரைக்கதை.. என ஏராள ஒற்றுமைகள்.. "நம்பி வாங்க.. சந்தோஷமா போங்க" என்று விளம்பரம் செய்தார்கள்  .. அது நடந்ததா?கதை

வேலை இல்லாத ஹீரோ - டீ  கடை - ரியல் எஸ்டேட் என என்னவோ செய்து பார்க்கிறார்- ஒன்றும் செட் ஆகாததால் - தாத்தா ராஜ் கிரணின் பல கோடி சொத்தை விற்று - அதில் கிடைக்கும் பங்கில் - ஒரு பிசினெஸ் செய்ய நினைக்கிறார்; அதை தடுக்க வரும் உள்ளூர் வில்லன் சமுத்திர கனி - சிவா சொத்தை விற்றாரா?  தாத்தாவின் பேரன் என்று சொல்லும் சமுத்திர கனியின் பொய்யை நிரூபித்தாரா என்பது கலகல பிற்பகுதி..

இயக்குனர் பொன் ராம்

பொன் ராம் - ஜனரஞ்சன இயக்குனராக கலக்குகிறார்.  மக்களின் பல்ஸ் உணர்ந்து -  எங்கு சிரிப்பார்கள் - எப்படி ரசிப்பார்கள் என்று பக்காவாக காட்சிகள் அமைக்கிறார். தாரை தப்பட்டை பார்த்து விட்டு - உடன் பார்த்ததால் - மனைவி- மகள் இருவரும் - "இது மாதிரி படமே போதுங்க; எவ்ளோ நல்லாருக்கு !" என்று ரிலீப் ஆனார்கள்

சிவகார்த்திகேயன்

மனிதரின் சக்சஸ் வீதம் வியக்க வைக்கிறது. ஓரிரு படம் தவிர - இவர் நடித்த அனேக படங்கள் ஹிட்- ஒரே காரணம் - இவரது ஹியூமர் சென்ஸ் மற்றும் நகைச்சுவை கலந்த ஸ்க்ரிப்ட் மட்டும் தேர்ந்தெடுக்கும் புத்தி சாலித்தனம் ; சிவா படம் நிச்சயம் குடும்பமாக சென்று பார்க்கலாம்- ஏமாற்ற மாட்டார் என்ற நம்பிக்கையை கொடுத்து விட்டார். தியேட்டர்களில் குடும்பங்கள் கூட்டம் தான் அள்ளுகிறது ! புக்கிங் கூட முதலில் காலியானது இப்படத்துக்கு தான் !

சூரி

சிறு இடைவெளிக்கு பின் மீண்டும் பார்முக்கு வந்துள்ளார் சூரி; சூரி ப்ராண்ட் காமெடி தான்; அடிக்கடி பண வசூல் வேட்டை நடத்தும் அவரது தந்தை கேரக்டர் செம கல கல ! அவருக்கு உதவும் சிவா & சூரி திருடுவதும், மாட்டுவதும் - அப்போது பேசும் டயலாக்கும் தியேட்டர் அதிருகிறது..

கீர்த்தி சுரேஷ்

வாவ் !! பொன் ராம் - இரண்டாம் முறையாய் அழகான ​+ நடிக்க தெரிந்த ஹீரோயின்  அறிமுகம் செய்துள்ளார் (இது தான் முதல் படம்.. ரிலீஸ் தாமதம் காரணமாக - இன்னொரு படம் ரிலீஸ் ஆகி பெட்டிக்குள் போனது !)அம்மணி செம அழகு;எக்ஸ்பிரஷன் ஸ்ரீ திவ்யாவை விட கியூட் !  தாவணி- புடவை- கோட் - சூட்- சுடிதார் என அனைத்துமே பொருந்துகிறது. அடுத்து விஜய் - அஜீத் படங்கள் என்று ட்ராவல் ஆகிவிடுவார் என நினைக்கிறன்

 இந்த படத்தில் அவருக்கு சற்று தெளிவில்லாத பாத்திரம்..ஹீரோவை லவ் செய்கிறாரா இல்லையா என்பதில் செம குழப்பம். கேரக்டர் தெளிவாய் இருந்தால் ஸ்ரீ திவ்யா போலவே நம் மனதில் முழுசாய் நிறைந்திருப்பார்..

சமுத்திர கனி

அண்மையாய் மிக நல்லவன் பாத்திரங்கள் மட்டுமே செய்யும் சமுத்திர கனி - ஏழரை மூக்கன் எனும் மிக மோசமான வில்லன் பாத்திரம்.. மனுஷன் செம அருமையான நடிப்பு..

பிற பாத்திரங்கள்

ராஜ்கிரண்.. படத்தின் பின்புலமாய் - முதுகெலும்பாய் இருக்கிறார். முக்கிய திருப்பங்கள் இவர் பாத்திரம் மூலம் தான் வருகிறது.. நடிப்புக்கும் அதிக ஸ்கோப் இவருக்கு தான். மனுஷரை பற்றி சொல்லணுமா ? Very apt !

ஹீரோயின் தந்தை - ரஜினி ரசிகராய் வருபர் பாத்திரம் மற்றும் நடிப்பும் நைஸ் !

மியூசிக்

இமான் பாடல்கள் ஏற்கனவே பட்டையை கிளப்பி கொண்டிருக்கின்றன. "என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா", " " உன் மேலே ஒரு கண்ணு "  - இவை குறிப்பிட்டு சொல்ல வேண்டியவை..

நெகடிவ்

உண்மையில் பெரிதாய் நெகடிவ் அதிகம் இல்லை; அதிக ரிஸ்க் இல்லாத - ஏற்கனவே பார்த்த மாதிரி கதை- என்பது - நெகடிவ் என்றாலும் சிவா- சூரி காம்போ மீண்டும் வொர்க் அவுட் ஆகிறது..

கடைசியாக  -கோவில்  விழாவில் பாடும் பாட்டு நிச்சயம் ஸ்பீட் ப்ரேக்கர்; அதனை தூக்கியிருக்கலாம் !

பைனல் அனலிசிஸ்

கொஞ்ச நாளுக்கு பிறகு - குடும்பத்தோடு ஜாலியாக பார்க்க ஏற்ற படம் - பைசா வசூல் !
*********
அண்மை பதிவு:தாரை தப்பட்டை - விமர்சனம் 

தாரை தப்பட்டை - சினிமா விமர்சனம்

ராஜாவின் ஆயிரமாவது படம் - இசை - இளையராஜா என்று போடும்போது விசில் மற்றும் கைத்தட்டல் காதை கிழிக்கிறது !

நாம் பார்க்க முக்கிய காரணம் பாலா !கதை 

தஞ்சை அருகே வாழும் தாரை தப்பட்டை கலைஞர்கள் - வறுமையில் வாடுகிறார்கள். அந்த ட்ரூப் நடத்தும் சசிகுமார் மேல் - டான்சர் வரலட்சுமிக்கு அதீத காதல்.. சசிகுமாரும் காதலித்தாலும் வெளியே சொல்லாமல் இருக்கிறார்.

அந்த ஊருக்கு புதிதாய் வரும் இளைஞன் ஒருவன் - வரலட்சுமி மீது ஆசைப்பட்டு வந்து பெண் கேட்க- அவர் அம்மா - " அவளாவது நம் மாதிரி கஷ்டப்படாமல் நல்லாய் வாழட்டும்" என சசிகுமாரை கன்வின்ஸ் செய்து - வரலட்சுமி - இளைஞனை மணக்கிறார்.  

 வரலட்சுமி கணவனின் கொடூர முகம் தெரியும் இரண்டாம் பாகம்... கற்பனைக்கும் எட்டாத சம்பவங்களை கொண்டது !

பிளஸ்

பல்வேறு பாத்திரங்களின் இயல்பான நடிப்பு.. குறிப்பாக முதல் பாதியில் வரலட்சுமி பிய்த்து உதறுகிறார்.. ஆண்களையே தூக்கி போட்டு அடிக்கும் இந்த பாத்திரம் நிச்சயம் புதிது. கிராமத்து பெண் டான்சர்கள் - இப்படி சற்று பருமனாக தான் இருப்பார்கள்; இது வரை இருந்த இமேஜ்ஜில் இருந்து முழு மாறுதல்.

சசிகுமார் தந்தையாக வரும் GM குமார்.. இன்னொரு அட்டகாச நடிப்பு; துவக்க காட்சியில் வாசிக்கும் விதம் தத்ரூபம் - இவருக்கும் - சசிகுமாருக்கும் இருக்கும் சண்டையுடன் கூடிய அன்பு.. அழகு..சசிகுமார். அநேகமாய் அடக்கி வாசிக்கிறார்; கிளை மாக்ஸ் மட்டும் ஆக்ரோஷம்..

இன்னொரு பெரிய ஆச்சரியம்.. வில்லன்; பாலா படங்களில் வில்லன் பாத்திரம் மிக கொடூரமாக இருக்கும். சிறிதும் இரக்கமோ, மனித தன்மையோ இல்லாதோர் வில்லனாக இருப்பர். பெரும்பாலும் புது முகங்களை வில்லனாக அறிமுகம் செய்வார். இங்கு இரண்டாம் பகுதி முழுதும் சுரேஷ் ராஜ்ஜியம் தான்.. அனைவரின் வெறுப்பையும் சேர்த்து பெற்று கொள்கிறார்..

ராஜாவின் பாடல்கள் .. பலவும் மிக அற்புதம். நீதானே என் பொன் வசந்தத்திற்கு பிறகு அற்புத பாடல்களுடன் ராஜா இசை. .. பின்னணி இசையில் ராஜாவை யாராலும் விஞ்ச முடியாது !

படத்தின் இருட்டு பக்கம் 

பாலா படம் என்றாலே வன்முறை அதிகம்; இங்கு மிக சரியாக "A" சான்றிதழ் தந்துள்ளனர்.இருந்தும் கூட இப்படத்தில் ஹீரோயின் -  மீது நடத்தும் வன்முறை மிக அதிகம்.. குறிப்பாக ஒன்பதரை மாத கர்ப்பிணி பெண்ணை மார்ச்சுவரி அட்டெண்டர் - உயிரோடு கொன்று குழந்தையை வெளியே எடுப்பதெல்லாம் .. ரொம்ப ரொம்ப ஓவர்.. நிச்சயம் இத்தகைய காட்சிகள் பெண்கள் -  படத்தை பார்க்க வைக்காது.

பாலாவின் படங்களின் இறுதி பகுதி அநேகமாய் ஒரே டெம்ப்ளேட்- டில் இருப்பது சலிப்பூட்டுகிறது

ஹீரோயினை  - வில்லன் கொடுரமாக கொல்ல (அரிதாக இன்னொரு ஹீரோ) , நம்ம ஹீரோ வில்லனது  - குரல்வளையை சர்வ நிச்சயமாக கடித்தோ - குத்தியோ கொல்வார்.

உலகமே வெறுத்து - தனியாக - ஒரு மரத்தின் அருகே ஹீரோ நடந்து போகும் ஸ்டில்லுடன் A film By Bala என்று  போட - நாமும்  - சோக மூடுடன் - தியேட்டர் விட்டு வெளியேறுவோம் ..

ஹீரோ அல்லது ஹீரோயின் - இருவரில் ஒருவர் சாகாத பாலா படமே கண்டுபிடிக்க முடியாது ! அப்படி அதிசயமாய் சாகாத - பரதேசியில் - " இதுக்கு ஹீரோ இறந்திருக்கலாம் !!" என்று எண்ணியபடி வெளியே வருமளவு சோகம் !

பைனல் வெர்டிக்ட்: 

தாரை தப்பட்டை - பாலா டைப் படங்களை தீவிரமாய் காதலிப்போருக்கு மட்டும் ! பெண்கள் - குழந்தைகள் தவிர்க்கவும் !
***********
அண்மை பதிவு:

ரஜினி முருகன் - நம்பி போங்க சந்தோஷமா வாங்க - விமர்சனம் 

Thursday, January 14, 2016

சென்னை - ஆல்செக் கார்பரேட் பொங்கல் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

பொங்கல் திருவிழாவை -  எங்கள் நிறுவனம் ஆல்செக் 2 நாள் - பல்வேறு விளையாட்டுகளுடன் கொண்டாடி வருகிறது.. இதில் எடுத்த புகைப்படங்கள் சில..

தமிழர் உடையில் .. பெரும்பாலான பணியாளர்கள் வந்திருந்தனர். 

கோலப்போட்டியில் எடுத்த படங்கள் 
கோல போட்டியை பாரவையிடும் நடுவர்கள் 

கயிறு இழுக்கும் போட்டி 

பெண்களுக்கு தனியே - ஆண்களுக்கு தனியே நடந்து வருகிறது..

பொங்கல் சமையல் போட்டி 
உணவு போட்டியில் உணவை சுவைத்து பார்க்கிறார்கள் நடுவர்கள் 


 அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் !

Tuesday, January 12, 2016

கோவா : தவற விடக்கூடாத பாகா & கலங்கட் பீச்


கோவாவின் முக்கிய பீச்களான பாகா (Bhaga ) & கலங்கட் பற்றி இந்த பதிவில்  பார்க்கலாம்.. 

கோவா - வடக்கு கோவா மற்றும் தெற்கு கோவா என இரு பிரிவுகளை கொண்டது. வடக்கு கோவாவில் தான் பல முக்கிய பீச்கள் மற்றும் அவை சார்ந்த விளையாட்டுகள் உள்ளன. தெற்கு கோவாவில் உள்ள பீச்கள் அதிகம் மக்கள் செல்லாதவை.. மிக அமைதியானவை.. வெளி நாட்டவர் வந்து சன் பாத் எடுக்க கூடிய இடங்கள்.... (ஆஹா அப்ப அங்கே தான் போகணும் அப்படிங்கறீங்களா? !!!)

பாகா மற்றும் கலங்கட் பீச் - இந்த 2 இடத்தில் மட்டும் தான் மிக அதிக அளவு  பீச் விளையாட்டுகள் நிகழ்கின்றன. ஏன் பீச் விளையாட்டு விளையாட வேண்டும் ? 

கோவாவில் இருக்கும் எல்லா பீச்களையும் சும்மா பார்த்து கால் நனைத்தால் போதுமா?  ஒவ்வொரு ஊரின் சிறப்பம்சத்தை பொறுத்து - இத்தகைய விளையாட்டுகளை அவசியம் விளையாட வேண்டும்... அது தான்... Fun part  யே!  உதாரணமாய் குளு மனாலி சென்றால் - பனிக்கட்டி சருக்கல் - ஆற்றில் செல்லும் ரிவர் ராப்டிங் செல்லாமல் வரவே கூடாது.. அங்கு பனி அதிகம் என்பதால் அதை அடிப்படையாய்  கொண்டு விளையாட்டுகள் இருக்கும்;  )நாங்கள் பாகா பீச்சிற்கு - கோவா சென்ற முதல் நாள் மாலையே சென்று விட்டோம். நாங்கள் போன போது மாலை ஆறு மணி. எனவே விளையாட்டுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு விட்டன.

கோவா முழுவதும் இருப்பது அரேபியன் கடல் தான் என்றாலும், ஒவ்வொரு பீச்சும் மாறுபடுவது அது எந்த சூழலில் (Backdrop) அமைந்திருக்கிறது என்பதில் தான்... பாகாவை பொறுத்த வரை அதனை சுற்றி ஒரு புறம் மலை அழகாக விரிந்து கிடக்கிறது. மேலும் பெரிய கரை.... அதன் ஓரத்தில் சன்பாத் எடுக்க பல படுக்கைகள் அமைத்திருக்க, காதலர்களும், வெளிநாட்டவரும் -  படுத்த வண்ணம் கடலை ரசிக்கின்றனர் ...

பாகா பீச் அருகே பல அருமையான ஹோட்டல்கள் உள்ளன. நாங்கள் சாப்பிட்டது பிரிட்டோ  என்ற ஹோட்டலில். ரொம்ப அட்டகாசமான ஹோட்டல் அது. பாதிக்கும் மேல் வெளிநாட்டவர் தான் ஹோட்டலை நிறைத்திருந்தனர். நாங்கள் கோவாவில் சாப்பிட்ட இடங்களிலேயே விலை அதிகம் என்றால் இங்கு தான் என நினைக்கிறேன்.

ஆனால் உணவின் சுவை அற்புதம். சில மீன்கள், பெரிய நண்டு போன்றவை அங்கேயே காட்சி பொருளாக வைத்துள்ளனர். அதை பார்த்து இந்த மீன் அல்லது நண்டு வேண்டும் என்று சொன்னால், அதன் பின் சமைக்கிறார்கள்.

ஹோட்டல் அமைக்கப்பட்டுள்ள விதமே - ஒரு சினிமா செட் போல ரசிக்கும் வண்ணம் உள்ளது.

பாகா பீச்- நாங்கள் சென்றது மாலை நேரம் என்பதால் கடலில் கால் நனைத்து விட்டு - சற்று உலாத்தி விட்டு- மேற்சொன்ன ஹோட்டலில் உணவை முடித்து கொண்டு கிளம்பி விட்டோம்,

அடுத்து - கலங்கட் பீச் பற்றி பார்ப்போம்.....

மதியம் 2 மணி அளவில் கலங்கட் பீச் சென்றடைந்தோம்.... ஏராளமான  விளையாட்டுகள் நடக்கின்றன.

குறிப்பாக பாரா சைலிங், பம்பர், பனானா ரைட் போன்ற நான்கு விளையாட்டுகள் சேர்த்து 1500 ரூபாய் வாங்குகிறார்கள். தனித்தனி என்றால் கிட்டத்தட்ட இதே ரேட் வந்து விடும். நன்கு பீச் விளையாட்டை என்ஜாய் செய்யும் ஆள் என்றால் இந்த பேக்கேஜ் எடுத்து கொள்வது நல்லது. ஒவ்வொரு விளையாட்டு முடிந்ததும் எது free - ஆக உள்ளதோ அதற்கு சென்று விடலாம். ஒவ்வொன்றாய் டிக்கெட் வாங்கினால்... ஒவ்வொரு முறை சென்று வாங்க வேண்டும்.. காத்திருக்க வேண்டும்...

விளையாட்டுகள் பற்றி பார்ப்போம்....

பாரா சைலிங்

விளையாட்டுகளில் சற்று காஸ்ட்லி இது தான். ஒரு ஆளுக்கு 600 ரூபாய். தவற விட கூடாத விளையாட்டு இது !  கோவா போன்ற வெகு சில இடங்களில் மட்டுமே விளையாட முடியும்.10 அல்லது 12 பேரை ஒரு போட்- டில் நடுக்கடலுக்கு அழைத்து செல்கிறார்கள். அங்கு இன்னொரு போட்டுக்கு  நம்மை மாற்றி - அந்த போட்டில் ஒரு பாராசூட்டை அமைக்கிறார்கள். பின் நம் இடுப்பில் பாராசூட் ஹூக்கை கட்டிவிட்டு நம்மை மேலே ஏற்றி கடலின் நடுவே 100- 150 அடி உயரத்தில் பறக்க வைக்கிறார்கள்..

வாவ்... அட்டகாசமான உணர்வு அது...

படகில் இருப்போருக்கு 200 ரூபாய் டிப்ஸ் தந்தால் - "டிப் "(Dip ) என்று சொல்லி நம்மை ஆரம்பத்திலும், கடைசியிலும் கடல் தண்ணீரில் சற்று முங்க வைக்கிறார்கள்.

டிப் "(Dip ) அவசியம் செய்யுங்கள். செம ஜாலியாக இருக்கும். மேலும் அவர்களுக்கு டிப்ஸ் தந்து Dip செய்வோருக்கு மட்டும் தான் 5 நிமிடம் பறக்க வைக்கிறார்கள். மற்றவர்களை ஓரிரு நிமிடத்தில் இறக்கி விடுகிறார்கள்.

டிப்புக்கு எவ்வளவு பணம் என்பதில் மட்டும் சரியாக பேசி வைத்து கொள்ள வேண்டும். சில இடங்களில் ஒவ்வொரு முறைக்கும் 200 ரூபாய் என சில நேரம் "3 முறை டிப் செய்தோம் 600 ரூபாய் தா " என கேட்கும் நிகழ்வும் நடக்கிறதாம்... எங்கள் போட்டில் அப்படி நடக்க வில்லை. 200 ரூபாய் என்பது ஸ்டாண்டர்ட்  ஆக வைத்திருந்தனர்.

முதல் முறை பாரா சைலிங் செல்லும்போது மனைவி மற்றும் மகள் இருவருமே வர வில்லை- நான் மட்டுமே சென்றது அவ்வளவு உகப்பாக இல்லை. காரணம் ... அங்கிருக்கும் எல்லாரும் குருப்பாக  தான் வருகிறார்கள். ஒருவர் மேலே பறக்கும் போது கீழிருந்து கை தட்டி, குரல் எழுப்பி உற்சாகப்படுத்துகிறார்கள். நாமும் மேலே பறக்கும் போது கையசைத்து நமது மகிழ்வை சொல்ல யாரேனும் வேண்டும் இல்லையா ?

மற்றவர்கள் பறந்த போது அவரவர் நண்பர் அல்லது உறவினர் மிக உற்சாகமாய் குரல்  எழுப்பினர்.பறந்தவரும் கீழே இருக்கு தம் நண்பரை பார்த்து மகிழ்ச்சியாய் கை அசைத்தனர். இதுவே நான் பறந்தபோது அப்படி எதுவும் இல்லாமல் அமைதியாய் பறந்தேன்.

பாரா சைலிங் முடித்து விட்டு வந்து மகளிடம் ரொம்ப அருமையாக இருந்தது...மிஸ் செய்துடாதே... பயப்பட ஒன்றும் இல்லை; போட்டில் நீச்சல் தெரிந்த 3 போட் காரர்கள்  உள்ளனர்.கீழே விழுந்தாலும் அவர்கள் வந்து தூக்கி விடுவார்கள் என தைரியம் சொல்லி மீண்டும் ஒரு முறை பாரா சைலிங் சென்றோம்...

மகள் செமையாக என்ஜாய் செய்தாள் ...

மற்ற இரு விளையாட்டுகள்

ஜம்பர்

டியூப் ஒன்றில் நாம் அமர்ந்து கொள்ள அதனை ஒரு போட்டில் கட்டி விட்டு - Boat - நம்மை கடலுக்குள் இழுத்து சென்று நனைக்கிறது... இருவராக விளையாடும் விளையாட்டு இது. இதுவும் ரொம்ப ஜாலி ஆன ஒரு விளையாட்டே...

பனானா ரைட்

வாழைப்பழம் போல சைசில் இருக்கும் படகில் - 5- 6 பேரை கடலுக்குள் அழைத்து செல்கிறார்கள். செல்லும்போது அலைகள் நம் மீது அடிக்க - அதுவே ஒரு கொண்டாட்டம். பின் ஒவ்வொருவராய் கடலுக்குள் சற்று நேரம் டிப் செய்து வெளியே எடுக்கிறார்கள்...இவை தவிர இன்னும் பல விளையாட்டுகளும் உள்ளன. .

முக்கிய விஷயம்.. கலங்கட்  பீச் கரையை நீங்கள் தொட்டதுமே பல ப்ரோக்கர்கள் உங்களை சுற்றி சுற்றி வருவார்கள்... இந்த விளையாட்டுகளுக்கு அழைத்த படி.. டிக்கெட்டுக்கு மேல் 100 அல்லது 200 ரூபாய் வைத்து இவர்கள் சொல்கிறார்கள். அரசாங்கமே மொத்தமாய் அனைத்து போட்டிற்கும் சேர்த்து டிக்கெட் தருகிறது. அது எந்த இடம் என பார்த்து அங்கு சென்று டிக்கெட் வாங்கி கொள்ளலாம். அங்கு பார்கெயின் எதுவும் செய்ய முடியாது ( வேறு சில பீச்களில் தனி நபர்களே இத்தகைய விளையாட்டுகள் நடத்துகிறார்கள். அவர்கள் விலை சற்று அதிகம் சொல்வர். அங்கு பார்கெயின் செய்ய முடியும் )

முதலிலேயே சொன்னது போல பாகா & கலங்கட் - இந்த இரு பீச்களில் தான் வாட்டர் ஸ்போர்ட்ஸ் நிறைய இருக்கும். கலங்கட் மிக அதிக கூட்டம் இருக்கும். எனவே நீங்கள் விளையாடி முடிக்க நேரமாகும். பாகா - கூட்டம் சற்று குறைவு எனவே நன்கு என்ஜாய் செய்யலாம்.. 

கோவா செல்லும் எவராலும் - அங்கிருக்கும் எல்லா பீச்களையும் பார்ப்பது கடினம். பாகா மற்றும் கலங்கட் - இரண்டுமே தவற விடக்கூடாத பீச்... 

Thursday, January 7, 2016

சார்லி - சுவாரஸ்ய மலையாள படம் விமர்சனம்

ப்படி ஒரு வித்யாசமான படம் பார்த்து எவ்வளவு காலம் ஆயிற்று?

காதல் அல்லது பழிவாங்கல் - இந்த இரண்டு கதைகளுக்குள்ளேயே பல சினிமா உழலும் போது மலையாளத்தில் அவ்வப்போது இப்படி - அவுட் ஆப் தி பாக்ஸ் - யோசித்து சில படங்கள் வருகின்றன..

முதல் 10 நிமிடம் பர்ஸ்ட் கியரில் மெதுவாக போகிறது .. அப்புறம் சின்ன சின்னதாக சம்பவங்களை அடுக்க ஆரம்பிக்கிறார்கள்.. ஒரு அழகான புதிர் போல கதையும் திரைக்கதையும் விரிகிறது." எப்படிடா இப்படி கதை யோசிக்கிறீங்க? கதை இருக்கட்டும்... எப்படி இந்த மாதிரி ஒரு ஸ்க்ரீன் ப்ளே யோசிக்க முடியுது !" என இன்டர்வெல்லில் வியந்து போனேன்.

இரண்டாம் பகுதி - அந்த புதிரை நமக்கு விளக்க முற்படுவதில் கழிகிறது.. எனவே முதல் பகுதி அளவு சுவாரஸ்யம் இல்லை ( ஆனால் படம் முடிந்து வெளியே வந்த சிலர் - இரண்டாம் பாதி தான் பிச்சு உதறிட்டாங்க என பேசிக்கொண்டு சென்றனர் !! How perception differ from person to person !!)

படத்தில் காதலும் இருக்கிறது.. ஆனால் அது ஊறுகாய் தான்.

ரசித்த பல விஷயங்களில் சில மட்டும் இங்கு ..

முதலில் பல வண்ண பாத்திரங்கள்.. ஹீரோ கேரக்டரை விடுங்கள்.. மற்ற சிறு பாத்திரம் ஒவ்வொன்றும் தனித்து தெரிகிறது; திருடன் கேரக்டர், எய்ட்ஸ் நோயாளியாக வரும் கல்பனா, நெடுமுடி வேணு என எத்தனையோ சிறு பாத்திரங்களிலும் ஒரு தெளிவும் அழகும்  மிளிர்கிறது.

ஹீரோ காரக்டர்.. சான்சே இல்லை. முதல் ஒரு மணி நேரம் - ஹீரோவை பற்றி மற்ற பலரும் ஒவ்வொரு சம்பவம் பகிர்வதிலேயே கழிகிறது.. ஆனாலும் அலுக்க வில்லை.

ஹீரோ சார்லி - தான் சந்திக்கும் பலரையும் ஒரே நாளில் ஆச்சரியபடுத்தி விட்டு அவர்கள் வாழ்விலிருந்து கடந்து போகிறான். படத்தின் இறுதியில் சார்லி சொல்கிறான் " எனக்கு மற்றவர்களுக்கு சர்ப்ரைஸ் தந்து -  சந்தோஷப்படுத்தி - அந்த நேரம் அவர்கள் முகத்தை பார்ப்பது ரொம்ப பிடிக்கிறது" - இந்த பாத்திரத்தை இதை விட எளிமையாக சொல்ல முடியாது !

நிஜ வாழ்வில் இப்படி ஒருவன் இருக்கவே மாட்டான் - எனினும் - படம் பார்க்கும் போது அது தோன்றவே செய்யாமல் ரசிக்க முடிகிறது..அற்புதமான பின்னணி இசை.. படத்திற்கு apt -ஆக பொருந்தி போகிறது.

முதல் பாதியில் சார்லி இருந்த அந்த சிறு வீடு - அங்கிருக்கும் சிறு சிறு பொருட்கள் - அவை தரும் சர்ப்ரைஸ்கள் - கலை இயக்குனரை எவ்வளவு பாராட்டினாலும் தகும் !

படம் மலையாள culture - ஐ ஆங்காங்கு தொட்டு கொண்டே பயணிக்கிறது.. முடியும் போது காணும் திருச்சூர் பூரம்  திருவிழா உட்பட..

படத்தின் பின்பகுதி தமிழகத்தில் எதோ ஒரு ஊரில் நடப்பதாக சொல்கிறார்கள்.. என்ன இடம் அது.. அழகு அள்ளிக்  கொண்டு போகிறது !!

துல்க்கர் மற்றும் பார்வதி என்ற இரு அட்டகாச நடிகர்களுக்கு நன்கு தீனி போடும் பாத்திரம். திரையில் ஒருவர் வரும்போது மற்றவர் இருக்கவே மாட்டார். கதை அமைப்பு அப்படி.. கிளைமாக்சில் தான் இருவரும் சந்திக்கவே செய்கிற "காதல் கோட்டை" பாணி கதை.. இந்த இருவர் நடிப்பும் தான் படத்தை நன்கு நிறுவுகிறது..

இதனை தமிழில் எடுக்க ஏற்கனவே போட்டியாம்.. இப்படத்திற்கு செய்யும் ஆகச் சிறந்த மரியாதை அதனை அப்படியே விட்டு விடுவது தான். தமிழில் இதனை மிகச் சரியாக எடுப்பார்களா என்பது பெரும் கேள்விக்குறி..

ஒருவேளை எடுத்தால் ஹீரோ பாத்திரத்திற்கு முதல் சாய்ஸ் - விஜய் சேதுபதி; இரண்டாவது சாய்ஸ்- தனுஷ். .

படத்தை திரைக்கதை எழுதி இயக்கிய மார்ட்டின் ப்ரக்கட்- டிற்கு தான் மிக அதிக பாராட்டு சேரவேண்டும். இது இவரது மூன்றாவது படமென்றும் - முதல் 2 படங்களும் கூட வெற்றி பெற்றதாகவும் அறிகிறேன். அந்த 2 படங்களையும் பார்க்கும் ஆவலை தூண்டி விட்டது சார்லி !

இறுதியாக..

அதிக எதிர்பார்ப்பின்றி சென்றதால் தான் எங்களுக்கு பிடித்தது. ரொம்ப எதிர்பார்க்காமல் பாருங்கள்.

சார்லி - சர்ப்ரைஸ் அண்ட் ஸ்வீட் விருந்தாளி !

Related Posts Plugin for WordPress, Blogger...