Showing posts with label நீடா நினைவுகள். Show all posts
Showing posts with label நீடா நினைவுகள். Show all posts

Saturday, August 7, 2021

சப்போர்ட்- கிராமத்து ஓட்ட பந்தய வீரர்

லிம்பிக்ஸ் நடக்கும் இந்நேரம் - எங்கள் ஊர் மாரத்தான் வீரர் பற்றிய நினைவுகள் ..

அவர் பெயர் - சப்போர்ட் ! நிஜப்பெயர் சுப்பிரமணியன் என்று நினைவு.. (தவறாகக்  கூட இருக்கலாம்). 

அதென்ன சப்போர்ட்? அவர் ஓடும்போது ஊர் முழுக்க அவருக்கு தான் சப்போர்ட் செய்யும் ! அவருக்காகவே கூச்சலிடும்!  

சாதாரண தோற்றம்.. ஆறடிக்கு சற்று குறைவான உயரம். மிக அமைதியாக தான் இருப்பார். ஒரு கூட்டத்தில் வைத்து பார்த்தால் சராசரி மனிதர் போல தான் தெரியும்..

ஆனால் மைதானத்தில் அவரது வீச்சு.. அதனை சற்று விளக்குகிறேன் 

சப்போர்ட் ஒரு பக்கா விளையாட்டு வீரர் - பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்வார். பரிசுகள் வெல்வார். ஆனால் ரொம்ப ஸ்பெஷல் - மாரத்தான் ஓட்டம் தான்.. 

சப்போர்ட் என்று நினைத்தாலே உடனே நினைவுக்கு வருவது அவர் ஓடும் மாரத்தான் ஓட்டம்.. மற்றும் அப்போது கூடி நின்று பார்க்கும் மக்களின் ரீ ஆக்ஷன் 

மாரத்தான் ஓட்டத்தில் - எங்கள் ஊர் மைதானத்தை 10 அல்லது 11 ரவுண்ட் ஓடி வரவேண்டும். துவக்கத்தில் சப்போர்ட் கடைசி ஆட்களில் ஒருவராக தான் இருப்பார். மக்கள் எந்த டென்ஷனும் ஆகாமல் "இது தெரிந்த கதை தானே" என்று பேசாமல் இருப்பார்கள். கடைசி சில ரவுண்ட் இருக்கும்போது சப்போர்டின் - சப்போர்ட்டகளுக்கே  டென்சன் வந்து விடும். அப்போது தான் சப்போர்ட் வார்ம் அப் ஆகி சற்று வேகமெடுக்க உத்தேசிக்கிறார் என தெரியும் 

கடைசி ரவுண்ட் ! அது தான் கிளைமாக்ஸ் .. மக்கள் அனைவரும் "சப்போர்ட்டு ! சப்போர்ட்டு !" என்று கத்த துவங்கி விடுவர்.. எங்கிருந்து தான் சேர்த்து வைத்திருப்போரோ அவ்வளவு எனர்ஜியை ! வெறி பிடித்த மாதிரி ஒரு ஓட்டம் 




"சப்போர்ட்டு ! சப்போர்ட்டு !" குரல்கள் அரங்கை அதிரவைக்க, கடைசியிலிருந்து ஒவ்வொரு வீரராய் தாண்டி மக்கள் கைதட்டல், விசில்கள் இடையே - எப்போதும் மாரத்தானில் முதல் ஆளாய் தான் வருவார் சப்போர்ட் !

தமிழ் சினிமாவில் பார்க்க தகுந்த அட்டகாசமான காட்சியாய்  இருக்கும். மக்கள் ஒவ்வொருவருக்கும் எதோ தானே வென்ற மாதிரி ஒரு மகிழ்ச்சி முகத்தில் தெரியும்.. 

100 மீட்டர் ஓட்டம், லாங் ஜம்ப், ஹை ஜம்ப் இவற்றிலும் அவர் கலந்து கொள்வார். பரிசுகள் வெல்வார். ஆனால் அவற்றில் எப்போதும் முதல் பரிசு வெல்வார் என சொல்ல இயலாது. அவற்றில் அவருக்கு மக்கள் ஆதரவும் மரத்தானில் இருக்கும் அளவு இருக்காது 

மாரத்தானில் மட்டும்.. அந்த அரங்கில் பிற ஓட்ட காரர்களின் குடும்பத்தினர் எவரேனும் இருந்தால் அவர்களை தவிர, மீதம் அத்தனை பேரின் ஒட்டு மொத்த ஆதரவும் சப்போர்டுக்கு தான் !

சப்போர்ட் என்ன ஆனார்? என்ன வேலைக்கு சென்றார் ? எந்த தகவலும் இல்லை. முறையான பயிற்சியும் ஊக்குவிப்பும் இருந்திருந்தால் சப்போர்ட் இன்னும் உயரங்களை அடைந்திருப்பார் ..

நிஜமான Raw talent - தலை நகரங்களுக்கு வெளியே - இத்தகைய கிராமங்களில் தான் இருக்கிறது . 

சப்போர்ட்.. எனது இளமை கால ஹீரோக்களில் மறக்க முடியாத ஒருவர் !

Sunday, October 20, 2019

அன்புள்ள அப்பா...

அமுதா பார்மசி

ப்பா என்றதும் முதலில் நினைவில் வரும் சித்திரம் - அமுதா பார்மசி மருந்து கடையில் அவர் அமர்ந்திருக்கும் காட்சி தான். அவர் தன் வாழ்நாளில் அதிகம் இருந்த இடம் அந்த கடையாகத்தான் இருக்கும். தனது 4 குழந்தைகளை படிக்க வைத்தது, திருமணம் செய்வித்தது அனைத்தும் அந்த சிறு கடை மூலம் தான்.

அப்பா ஒரு மருந்தாளுனர் (Pharmacist). அவரது அப்பாவும் அதே தொழில் தான். அவர் காலத்தில் இதற்காக படிக்க கல்லூரி இல்லை; தனது அப்பாவிடம் பணிபுரிந்த அனுபவம் - மேலும் ஒரு தேர்வு மட்டும் எழுதி அதில் தேர்வானால் Pharmacist !

அப்பாவின் தினசரி நாள் இப்படியாக இருக்கும்:

காலை ஐந்தரை மணியளவில் எழுந்து விடுவார். பத்து நிமிடத்தில் தயாராகி - ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் வயலுக்கு சைக்கிளில் செல்வார். சின்ன வயல்.. ஒரு ஏக்கர் (மூன்று மா) . அங்கு தினம் என்னதான் வேலை இருக்குமோ தெரியாது. ஆனால் அப்பா வயலுக்கு செல்லாத நாட்கள் ஏதும் இருந்ததாய் நினைவில் இல்லை. 

ஆறரை அளவில் வீடு திரும்பி - குளித்து பூஜை செய்வார். எங்கள் வீட்டு பூஜையறை மிக சிறியதாய் இருக்கும். ஏராள சாமி படங்கள், பீரோ இவை தவிர 2 பேர் நிற்க முடிந்தால் பெரிய விஷயம். தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் அப்பா உள்ளே நின்று பூஜை செய்ய நாங்கள் வெளியில் நின்று தான் கும்பிடுவோம். 

மிகுந்த தெய்வ நம்பிக்கை கொண்டவர். தினசரி பூஜை அரை மணி நேரம் போல் நடக்கும். ஒவ்வொரு சாமிக்கும் எதோ மந்திரம் சொல்வார். அது தமிழா, சமஸ்கிருதமா என கொஞ்ச நாள் ஆராய்ந்து பின் புரியாமல் விட்டு விட்டேன். அவர் குரல் வேறு கர கர -வென சற்று தெளிவில்லாமல் இருக்கும் (என்னை தெரிந்தவர்களுக்கு மட்டும் - என் குரல் தெரியும் அல்லவா? Exactly அதே கர கர குரல் !)

ஏழு மணியளவில் சாப்பிட்டு விட்டு (அநேகமாய் இட்லி) ஏழே காலுக்கு கடை திறக்க சென்று விடுவார். கடையும் வீடும் -அடுத்தடுத்த தெரு -  நூறு மீட்டர் தூரம். 2 நிமிட நடை. 

ஏழே காலுக்கு கடைக்கு சென்றால் இரவு 10 மணி வரை கடை தான். மகன்கள் யாரேனும் இருந்தால் மதியம் சென்று சாப்பிட அவரை அனுப்புவோம். இல்லா விடில் அரை மணி நேரம் பூட்டி விட்டு,  வீடு வந்து சாப்பிட்டு செல்வார். 

ஒரு நாளைக்கு 15 மணி நேரம் கடை வாசம் தான். இத்தனைக்கும் 15 மணி நேரத்தில்அந்த சிறிய ஊரில் 30 அல்லது 40 பேர் மருந்து வாங்க வந்தால் அதிகம். 

சுற்று வட்டத்தில் "ஆராமுது கடை " என அவருக்கென்று வாடிக்கையாளர்கள் உண்டு. அவர்கள் அப்பா இல்லாத நேரம் வந்தால் - "அப்பா வரட்டும், அப்புறம் வர்றேன்" என சென்று விடுவர்.  

குறைந்தது 45 வருடம் இப்படி கடையுடன் தான் வாழ்ந்திருப்பார். அவரது முக்கிய identity அந்த கடை தான் !

மிகுந்த குறைந்த லாபத்திற்கு தான் வியாபாரம் செய்வார். தீபாவளி சமயம் அதே கடைக்கு வெளியே  வெடிக்கடை வைக்கும் போது - எனது நண்பர்கள் எல்லாம் வந்து வியாபாரம் செய்வார்கள். ஆனால் அப்பாவை வெடிக்கடையில் உட்கார வைக்க மாட்டோம். அவர் இருந்தால் 200 ரூபாய்க்கு வெடி வாங்கி, 100 ரூபாய் தந்து விட்டு, மீதி அப்புறம் தருகிறேன் என சொல்லி சென்று விடுவர் .. இப்படி சென்றோர் ஒருவரும் மீதம் பணம் கொண்டு வந்து தந்தாக வரலாறு இல்லை. 

உண்மையில் அமுதா பார்மசி என்ற தலைப்பிலேயே ஒரு தனி பதிவு எழுதலாம்.. தனிப்பட்ட முறையில் ஏராள நினைவுகள்.. அது பிறிதொரு சந்தர்ப்பத்தில் !

கடைக்குட்டி செல்லம் 

அம்மா - அப்பாவிற்கு முதலில் ஒரு பெண் குழந்தை (கோதை) பிறந்து இறந்து விட்டது. பின் கொஞ்ச காலம் குழந்தை இல்லை. சற்று இடைவெளிக்கு பின் அடுத்தடுத்து இரு மகன்கள்.. (கோவிந்த குமார் & பாலாஜி குமார்)  பின் ஒரு மகள் (செண்பக லட்சுமி). 

அப்புறம் ஒரு பையன் பிறந்து (முரளி) சில மாதங்களில் இறந்து விட, சில ஆண்டு கழித்து கடைக்குட்டி நான் பிறந்தேன்.



கடைசி பிள்ளை என்பதால் நிறையவே செல்லம். குறிப்பாய் அப்பா என்னை அடித்ததாக நினைவே இல்லை. மட்டுமல்ல, நான் எதுவும் கேட்டு அவர் வாங்கி கொடுக்காமல் இருந்ததும் இல்லை. போலவே, பணமும் !  கடையில் இருக்கும் போது சென்று பணம் கேட்டால், கை உடனே கல்லா பெட்டியை திறந்து விடும்.  எவ்ளோ வேணும்பா  என்று தான் கேட்பாரே ஒழிய எதற்கு என்று கூட கேட்க மாட்டார்.

பள்ளி செல்லும் வரை  நான் டூ பாத் ரூம் சென்றால் அப்பா தான் வந்து கழுவி விடணும். வேறு யார் செய்தாலும் நோ தான். இதனால் கடைக்கு யாராவது சென்று அப்பாவை அனுப்புவார்கள். அவரும் அலுக்காமல் அந்த ஒரு நிமிடத்திற்காக வந்து செல்வார். "ஏண்டா வேற யார்கிட்டேயும் செஞ்சுக்க மாட்டியா என ஒரு முறை அடித்திருந்தால் அப்படி அடம்பிடித்திருக்க மாட்டேன்" என இப்போது நினைப்பதுண்டு  

பள்ளியில் படிக்க ஆரம்பித்த பின் ப்ராகிரஸ் கார்ட் - அவரிடம் கையெழுத்து வாங்குவது போன்ற ஈஸியான வேலை வேறு எதுவும் இல்லை. மிக சாதாரணமாக நீட்ட, அவரும் ஆட்டோ கிராப் போட்டு தரும் வி.ஐ. பி போல சில நொடிகளில் கையெழுத்து போட்டு தந்து விடுவார். (அந்த கருமம் பிடித்த ப்ராகிரஸ் கார்ட்டை - அதற்கு முன் அண்ணன்கள்- அக்காவிடம் காட்டி  - வாங்க வேண்டிய அனைத்தும் வாங்க வேண்டும் என்பது தனி சோகம்; அதுவும் அண்ணன் - அக்காவே  பாலோ செய்து கொண்டிருப்பர். குவார்ட்டளி முடிஞ்சு ரொம்ப நாள் ஆச்சே.. இன்னுமா ப்ரோக்ராஸ் கார்ட் வரலை? ) 

எல்லாம் நன்மைக்கே 

எல்லாவற்றையும் பாசிட்டிவ் ஆக மட்டும் தான் அப்பா எடுத்து கொள்வார். அது நாங்கள் கிண்டல் அடிக்கும் அளவு extreme ஆக சில நேரம் இருக்கும். எல்லாம் நன்மைக்கே என்பது அவர் அடிக்கடி சொல்லும் வாரத்தை. 

அறுவடை நேரம் மழை வந்து பாதித்தால் அதுவும் நன்மைக்கே என ஒரு காரணம் சொல்லுவார். 

இப்போது யோசித்தால் உண்மையில் அந்த தீவிர பாசிட்டிவ் எண்ணம் மற்றும் நம்பிக்கை தான் பல நேரங்களில் அவர் சோர்ந்து விடாமல் காப்பாற்றியுள்ளது 

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை 

அப்பா அடிக்கடி சொல்லும் இன்னொரு பழமொழி இது. அவர் சொன்ன பல விஷயங்களை அவர் முடிந்த வரை பின்பற்றினார் என்பது தான் சிறப்பே. 

குடும்பத்தில் ஒரு முறை சின்ன சண்டை - ஒரு மருமகளை அவரது தந்தை வந்து தன் இல்லத்திற்கு அழைத்து சென்று விட்டார்.

வீட்டில் அனைவரும் "அவர் தான் வந்து கூட்டி போனார். அவரே கொண்டு வந்து விடட்டும்" என்று சொன்னாலும் அப்பா அதனை சிறிதும் பொருட்படுத்தாமல்  தனியாக கிளம்பி சென்று - அவர்களிடம் பேசி திரும்ப அழைத்து வந்து விட்டார் 

70 வயதுக்கு மேல் அண்ணன் வீட்டில் இருக்க ஆரம்பித்த பிறகும் சரி, அவ்வப்போது திருச்சியில் அக்கா இல்லம் வந்து சில மாதங்கள் தங்கும் போதும் சரி  இருக்கிற இடத்திற்கு தகுந்த மாதிரி முழுதும் தன்னை adopt செய்து கொள்வார். அங்கிருப்போர் பற்றி ஒரு குறையும் சொல்ல மாட்டார். இதனால், அவர் இருக்கும் இடத்தில அவரால் எந்த சண்டையும் வராது. 

நீங்கள் கேட்டவை 

நீடாமங்கலத்தில் முதலில் அம்சவல்லி- காவேரி என இரு டூரிங் தியேட்டர்கள் (டென்ட் கொட்டாய்கள்). பின் சரவண பவன் என்ற நல்ல தியேட்டர் வந்தது. பசங்களுக்கு பெரிய குஷி சினிமா போவது தான். ஆனால் அப்பா வருடம் ஒரு படமாவது பார்த்தாரா என்றால் இல்லை என்று தான் சொல்லணும்.

அம்மா கூட அரிதாய் சாமி படம்- சிவாஜி படம் என எங்களுடன் சினிமாவிற்கு வருவதுண்டு. அப்பா ... ஊஹூம் . 

அப்பா, அம்மா, 4 பிள்ளைகள் என 6 பேரும் சேர்ந்து குடும்பமாய் பார்த்த படம் ஒன்று கூட இல்லை !

ஒரு முறை பொங்கலுக்கு பாலு மஹிந்திரா இயக்கிய நீங்கள் கேட்டவை - சரவண பவனில் வந்தது. பொங்கல் நேரம் - நான்கைந்து நாட்கள் -எங்கள் ஊரில் எந்த படமாய் இருந்தாலும் ஹவுஸ் புல் தான். என்னுடன் வழக்கமாய் சினிமாவிற்கு வரும் நந்து-  மோகன் படம் பார்த்து விட்டனர். இதனால் படத்திற்கு போகணும் என தொடர்ந்து நான் அழுது கொண்டே இருக்க, அப்பா முதல் முறை என்னுடன் படம் பார்க்க வந்தார். 

அதுவும் இரவு பத்து மணிகாட்சி  - கடை மூடி விட்டு தான் சென்றோம்.  

படம் தந்த சந்தோஷம் ஒரு புறம் இருக்க, சினிமாவே செல்லாத அப்பா, எனக்காக உடன் வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷமாய் இருந்தது  

வாழை பழத்தார் சண்டை 

 பொங்கல் பற்றி சொல்லும்போது இன்னொரு சம்பவம் நினைவிற்கு வருகிறது.

அப்பா என்னைத்தான் அடிக்க மாட்டாரே ஒழிய பெரிய அண்ணன் அவரிடம் அவ்வப்போது அடி வாங்குவார்.  பெரிய அண்ணன் சிறு வயது சுபாவமே வாலு என்பதாலும், வீட்டுக்கு தெரியாமல் பக்கத்து ஊர் சினிமா போவது போன்றவை செய்து அப்பாவிடம் மாட்டி அடி  வாங்குவார். 

அப்பா " முன் ஏர் போற படி தான் பின் ஏர் போகும்" என முதல் பிள்ளை ஒழுங்காக படித்தால், மற்றவை அவனை பார்த்து ஒழுங்காய் படிக்கும் என நினைத்திருக்கலாம்.   (ஒரு பிள்ளையை ட்ரக் இன்ஸ்பெக்டர் ஆக்கணும்; ஒரு பிள்ளை டாக்டர் ஆகணும் என நினைத்தார். முடித்து விட்டார் )

பெரிய அண்ணன் - சின்ன அண்ணன் இருவருக்கும் 2 வயது தான் வித்யாசம் என்பதால் நண்பர்கள் போல பழகுவர். அதே நேரம் திடீர் சண்டை வெடிக்கும். பல நேரம் பெரிய அண்ணன்  தான் வில்லனாக இருப்பார். 

ஒரு முறை பொங்கல் நேரம் இரண்டு அண்ணன்களுக்கும் பலத்த சண்டை ! சண்டை துவங்கியதும் அம்மா கடைக்கு தகவல் அனுப்பி விட்டார்.  நெல் கொட்டி வைக்கும் பத்தாயத்தின் இடுக்கில் சின்ன அண்ணன் தலையை வைத்து தள்ளி கொண்டிருந்தார் பெரிய அண்ணன். பத்தாயத்தில் தலை மாட்டி இறந்தே போய் விடுவாரோ என்ற பயத்துடன் பார்த்து கொண்டிருதோம். பெரிய அண்ணன் எல்லாம் அப்போ ஒரு டெரர் .. சண்டையில் நாங்க எல்லாம் கிட்ட கூட போக முடியாது 

அப்பா சரியான நேரம் என்ட்ரி கொடுத்தார். பொங்கலுக்கு வாங்கி - உத்தரத்தில்  தொங்க விட்டிருந்த வாழை பழ தாரை பிடித்த பிடி சர்ரென்று பறந்து வந்து பெரிய அண்ணனுக்கு விட்டார் ஒரு உதை ! சில பல அடிகளுக்கு பின் நிலைமை கட்டுக்குள் வந்தது. 

இன்றும் வாழை பழத்தார் சண்டை என்றால் அவரது பிள்ளைகள் முகத்தில் ஒரு புன்முறுவலை காணலாம். 

நந்து -மோகன் 

12வது படிக்கிறேன். அது தான் வாழ்க்கையை முடிவு செய்யும் வருடம் என வீட்டில் ரொம்ப முக்கியத்துவம் தருவார்கள்.  நானோ கிரிக்கெட் விளையாடியும், டிவி பார்த்தும் வீணாய் போய் கொண்டிருக்கிறேன்  

நண்பர்கள் நந்து -மோகன் இருவரும் என்னை காண வீட்டுக்கு வருவார்கள். கடையை தாண்டிதான் எங்கள் வீட்டுக்கு செல்லணும் என்பதால், அவர்கள் தெருவில் போவதை பார்த்தாலே. " வீட்டுக்கு போகாதே .. அவன் படிக்கிறான்" என டிராபிக் கான்ஸ்டபிள் போல் அடம் பிடித்து திரும்ப அனுப்பி விடுவார். நிஜமாக கடைத்தெருவில் ஏதாவது அவர்கள் வாங்க வந்தாலும் அந்த ஒரு வருடம் - இதே கதை தான் ! 

இதுக்கெல்லாம் மசிவோமா நாங்க !  இன்னோர் சுத்து வழியில் வந்து எப்படியும் என்னை தள்ளிக்கிட்டு போய்டுவாங்க பசங்க !

ஒரு முத்தம் 

5 வருடம் சட்டம் படித்து, பின் ACS இன்டர் வரை முடித்து விட்டு - ACS ட்ரைனிங் செல்ல துவங்கினேன். ஏனோ அந்த வேலை பிடிக்க வில்லை. இந்த படிப்பே வேணாம்; நான் ஊரில் போய் அப்பாவுக்கு உதவி பண்றேன்; ஜிராக்ஸ் கடை வைக்கிறேன் என சென்னையிலிருந்து கிளம்பி நீடாமங்கலம் வந்து விட்டேன். சில மாதங்கள் ஊரிலேயே சுற்றி வந்தேன். தஞ்சை - திருச்சி என சென்று எந்த நண்பனை பார்த்தாலும் " ஒழுங்கா ACS படிச்சு முடி; வேற எதுவும் உனக்கு செட் ஆகாது " என ஒரே மாதிரி கூறினர் 

என்ன செய்வது என பயங்கர குழப்பம். ஏறக்குறைய depression . 

ஒரு நாள் இரவு - சுத்தமாய் உறக்கம் வரவில்லை; மனதில் ஏதேதோ பயம்.. தூக்கம் வரவில்லை என்ற கவலை வேறு. 

24 வயது பையன் - தூங்கி கொண்டிருந்த அப்பா அருகில் சென்று அவரை எழுப்பி " அப்பா தூக்கம் வரலை; பயமா இருக்கு" என்கிறேன். அப்பா ஏதேதோ சமாதானம் சொல்கிறார். மனது ஆறவே இல்லை. 

"நான் இருக்கேன் பா. எதுக்கும் கவலை படாதே. இந்த வீடு, கடை, வயல் எல்லாம் உனக்கு தான்" என்று சொல்லி விட்டு எனக்கு அழுந்த ஒரு முத்தம் தந்தார். 

அன்று இரவு முழுக்க எதோ பயத்தில் நான் தூங்கவில்லை என்றாலும் - அப்பா சொன்ன வார்த்தைகளும்,  அந்த முத்தமும் எதோ ஒரு ஆறுதலை தந்தது. 

இதில் "இந்த வீடு, கடை, வயல் எல்லாம் உனக்கு தான்" என்கிற டயலாக் கொஞ்சம் பேமஸ். காரணம் அப்பா எல்லா பசங்களிடமும் அந்த வரியை எதோ ஒரு சந்தர்ப்பத்தில் சொல்வார். நம்ம முன்னாடியே இன்னொரு பையன் கிட்டேயும் இதே மாதிரி சொல்றாரே என சற்று அதிர்ச்சியாய் இருக்கும் !

அப்பா தனது கடைசி நாள் வரை கடையில் இருப்பார் என்று தான் நானெல்லாம் நினைத்திருந்தேன். ஆனால் 70-72 வயதளவில் தனக்கு முடியவில்லை என மருந்து கடையை மூடி விட்டார். அம்மாவின் உடல்நிலையும் அப்போது சீராக இல்லை   

அம்மாவின் இறுதிக்காலம் 

அம்மாவிற்கு வயதான காலத்தில் அப்பா செய்த பணிவிடைகள் போல இன்னொரு கணவர் யாரேனும் செய்திருப்பார்களா என்பது சந்தேகம் தான். ஒரு ஆண் நர்ஸ் போல் தான் -அத்தனை வேலையும் முகம் சுழிக்காமல் செய்தார். இருவரும் படும் துயரத்தை பார்த்து விட்டு " அம்மா சீக்கிரம் போயிட்டா நல்லதுப்பா " என்றால் அதனை ஒப்பு கொள்ளவே மாட்டார்.

அப்பா மிக நொடித்து போனதும், அழுததும் அம்மா மரணத்தின் போது தான் காண முடிந்தது. வயதாகி, நீண்ட காலம் படுக்கையில் இருந்து மறைந்தாலும் -அம்மாவின்   மரணத்தை அவரால் எளிதில் ஏற்க முடியவில்லை. 

அப்பாவின் பிரபலமான " எல்லாம் நன்மைக்கு" வரியை அம்மா மரணத்தில் அவர் ஏற்கவே இல்லை !           

அப்பா .. இப்போது !

அம்மா மரணத்திற்கு பின் அண்ணன் வீட்டில் தனது அனைத்து வேலைகளையும் தானே பார்த்த படி நன்றாகவே இருந்தார். சிறு வயது முதல் மிகுந்த உணவு கட்டுப்பாடு. சுகர் எட்டி பார்த்ததும், டயட் மூலமே மீண்டும் வராமல் பார்த்து கொண்டார். BP எப்போதுமே இல்லை 

ஒரு முறை அக்கா (அவரது பெண் ) தஞ்சை வந்த போது அவரை காண அவசரமாய் வந்தவர் வழுக்கி விழ, காலில் எலும்பு நொறுங்கி விட்டது. ஆப்பரேஷன் செய்தாக வேண்டும் என்று சொல்லி, அது முடிந்த பின் ஆளே மாறி போய்விட்டார். 

நினைவு திரும்பவே பல வாரங்கள் ஆனது. விழித்து பார்த்தாலும் எங்களை தெரியவில்லை. 

சுகர், BP என வேறு எந்த உடல் உபாதைகள் இல்லாமல் இருந்தவர் வீட்டில் அனைவர் கண் முன்பு வழுக்கி விழுந்து இப்படி ஆகி விட்டார் என்பதில் அனைவருக்கும் பெரும் வருத்தம் 

முழு நேரம் ஆள் வைத்து தான் அனைத்து வேலைகளும்  அவருக்கு இப்போது நடக்கிறது. அப்பாவை பாதுகாக்கும் விஷயத்தில் அண்ணன் - அண்ணி இருவருமே போற்றுதலுக்கு உரியவர்கள்; அதிலும் அண்ணன் அப்பாவிற்காக மெனக்கெடுவது மிக மிக அதிகம் ! 

அப்பா சில நேரம் எங்களை சரியாக அடையாளம் கண்டு சொல்லுவார். அப்படி சொன்னாலே எங்களுக்கு பரம சந்தோசம்.

அண்மை படம் : அப்பா - பெரிய அண்ணன், அக்கா மற்றும் என்னுடன்    


இம்முறை சென்ற போது என்னை பார்த்து புன்னகைத்தார். " நான் யார் சொல்லுங்க" என்றதும் " கடைசி பிள்ளை..மோகன் குமார்" என்றார். 

கொஞ்ச நேரம் பேசிய பின் " மெட்றாஸ் வர்றீங்களா? " என்றதும் " வேணாம்பா .. அவ்ளோ தூரம் தாங்காது" என்றார். இவ்வளவு தெளிவாக கேள்வியை புரிந்து அதற்கான பதில் சொன்னது ஆச்சரியம் !

 அப்பாக்கள் பரிதாபத்திற்குரியவர்கள்.. தனக்காக எதுவும் செய்து கொள்ளாதவர்கள் ..குழந்தைகள் நலன் மட்டுமே எப்போதும் நினைப்பவர்கள். அம்மாவிடம் காட்டும் அன்பில் சிறு துளி கூட அப்பாவிடம் காண்பிக்க தவறுகிறோம். அம்மாக்கள் தங்கள் அன்பை காட்ட எத்தனையோ வழிகள் உண்டு. உணவு, உபசரிப்பு என அம்மாக்கள் தினம் தினம் நம் மனதில் நிறைகிறார்கள். அப்பாக்கள் அப்படி அன்பை காண்பிக்க தெரியாதவர்கள் 

அன்பு காட்ட நினைக்கும் போது அப்பா இல்லை என்பார் சுஜாதா 

எத்தனை உண்மை இது !

இதோ.. இந்த கட்டுரை கூட அப்பா நல்ல நினைவோடு இருக்கும்போது எழுதப்பட்டிருக்கலாம். 

என்றைக்கேனும் ஒரு நாள் இந்த கட்டுரையை அப்பாவிடம் படித்து, அவர் அதனை புரிந்து கொள்ள நேர்ந்தால், அதை விட மகிழ்ச்சி வேறு எதுவும் இருக்காது !

Thursday, September 5, 2019

வானதி டீச்சர்

        பாலு மகேந்திராவின் அழியாத கோலங்கள் பார்த்திருக்கிறீர்களா? பள்ளி மாணவர்களுக்கும்- ஆசிரியைக்கும் உள்ள அன்பை கவிதையாய் சொன்ன அற்புதமான படம் அது. படத்தில் வரும் ஷோபா டீச்சர் போல ஒவ்வொருவருக்கும் இளம் வயதில் ஒரு டீச்சர் இருந்தே தீருவார். எங்களுக்கு அது ..வானதி டீச்சர் !

ஆறாவது, ஏழாவது, எட்டாவது - மூன்று வருடமும் எங்களுக்கு அறிவியல் எடுத்தார். அறிவியல் கான்செப்டுகளுக்கும் எனக்கும் அன்று முதல் இன்று வரை காத தூரம். ஆயினும் அந்த மூன்று வருடமும் அறிவியலில் முதல் மார்க் எடுத்தேன் என்றால் அது வானதி டீச்சருக்காக !

எனது இரு அண்ணன்கள்- அக்கா அனைவரும் அதே பள்ளியில் படித்திருந்தனர். மூவரும் நன்கு படிப்பவர்கள் என்பதால் அதே குடும்பத்தை சேர்ந்த நானும் நன்கு படிப்பேன் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு. அது ஒரு சுமையாய் என் மீது இறங்கியது. அந்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டியதாகி விட்டது !

அறிவியலுக்கு வானதி டீச்சர் என்றதும் அண்ணன்களும் அக்காவும் சொன்னது : " அப்டியா ..அப்ப அந்த பாடத்தை பத்தி கவலைப்பட வேண்டாம்" .

படம்: இணையத்திலிருந்து
வானதி டீச்சர் புடவை கட்டியிருக்கும் விதமே மிக கண்ணியமாய் இருக்கும். ரெண்டுங்கெட்டான் வயது பசங்க - அவங்க மனசில் சலனம் வரக்கூடாது என்கிற ஜாக்கிரதை உணர்வு அதில் இருக்கும்.

பாடத்தை தவிர வேறு விஷயம் பக்கம் அதிகம் போக மாட்டாங்க. ஆனா செம ஹியூமர் சென்ஸ் ! டக்குன்னு அந்த நேரத்துக்கு தகுந்த ஜோக் அடிப்பாங்க ! (வேறு சில டீச்சர்களும் ஜோக் அடிப்பார்கள் எனினும் அது தயாரிக்கப்பட்ட ஜோக்காய் இருக்கும். அந்த டீச்சர்கள் அடுத்தடுத்த வருஷமும் அந்த இடத்தில் அதே ஜோக்கை சொல்லிக் கொண்டு இருப்பார்கள். )

வானதி டீச்சரின் ஜோக் எல்லாருக்கும் புரிஞ்சிடாது. கொஞ்சம் உலக விஷயமும், புத்தக அறிவும் இருந்தால் தான் முழுசா புரியும். உதாரணமாய் அரசியல் வாதிகளுக்கு இருக்கும் பட்ட பெயரை வைத்து யாரையாவது கிண்டல் செய்வார்கள்.  அந்த நேரத்தில், அந்த இடத்தில் ஏன் அந்த பெயர் சொல்கிறார்கள் என்பது வகுப்பில் சிலருக்கு தான் புரியும்.

கிளாசில் தப்பு பண்ணாலோ, ஒழுங்கா பதில் சொல்லாட்டியோ டீச்சர் கிள்ளுவது பயங்கரமா வலிக்கும். வயிற்றில் உள்ள சதையை ரெண்டு விரலால் பிடிச்சு நல்லா கிள்ளுவாங்க. ஓரிரு முறை பாடம் நடத்தும் போது பக்கத்தில் பேசி அப்படி கிள்ளு வாங்கிருக்கேன். நன்கு வளர்ந்த பெரிய பையன்களை அப்படி கிள்ள மாட்டாங்க. "டீச்சர் நம்மளை கிள்ள மாட்டாங்க இல்ல" என்று சிரிப்பார்கள் அவர்கள். ஆனால் அவர்களுக்கு மட்டும் ஸ்கேல் பேசும் !

என்றைக்குமே பத்துக்கு மூன்று ஆசிரியர்கள் தான் நன்கு பாடம் நடத்துபவர்களாய் இருக்கிறார்கள். வானதி டீச்சர் நடத்தும் அறிவியல் பாடம் வீட்டில் நான் படித்த மாதிரி நினைவே இல்லை. கிளாசிலேயே நடத்தி, பாடத்தை முழுசாய் புரிய வைத்து அங்கேயே சொல்லியும் காட்டி விடுவோம். வீட்டில் படிக்க வேண்டிய அவசியமே இல்லை.

நம்மை விட பெரியவருக்கு நன்றி சொல்லணும்னா "Thank You" ன்னு சொல்லணும். நமக்கு சரி சமமான அல்லது குறைந்த வயது ஆட்கள் என்றால் " தேங்க்ஸ்" அப்படின்னு சொல்லலாம் என டீச்சர் சொல்லி தந்திருந்தார். ஒரு முறை அலமேலு என்கிற வயதான டீச்சர் தந்த ஒரு பொருளை திரும்ப தந்து விட்டு " தேங்க்ஸ் சொன்னேன்னு சொல்லிடு" என்றார் வானதி டீச்சர். வகுப்பில் எல்லாரும் பார்க்கும் போது டீச்சரிடம் கேட்டேன் " அலமேலு டீச்சர் உங்களை விட வயசானவங்க ஆச்சே. நீங்க எப்படி தேங்க்ஸ் சொல்லலாம்? தேன்க் யூ தானே சொல்லணும்?"

சிரித்து விட்டு டீச்சர் சொன்னார் : " நீ என்னை விட சின்னவன் இல்லையா? அதான் உன்னிடம் தேங்க்ஸ்ன்னு சொல்றேன்; நீ அவங்களிடம் சொல்லும் போது தேன்க் யூ ன்னு சொல்லிடு"

டீச்சர் முதலில் தவறு செய்து விட்டு அப்புறம் சமாளித்தார் என்றாலும், அவர் சமாளித்த விதம் அவ்வளவு அழகாய் இருந்தது !

எனது அக்காவிற்கு மருத்துவ படிப்புக்கு சீட் கிடைத்த போது வானதி டீச்சரை பார்த்து ஸ்வீட் கொடுத்து வர டீச்சர் வீட்டுக்கு என்னை அனுப்பியது இன்னும் நினைவில் இருக்கு.

முதல் முறை அப்போது தான் அவர்கள் வீட்டுக்கு செல்கிறேன். மிக சிறிய வீடு. இனிப்பை பெற்று கொண்ட அவர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி ! தான் அறிவியல் சொல்லி கொடுத்த பெண் இன்று டாக்டர் ஆக போகிறார் என்று ஆனந்தம் அவர்கள் பேச்சில் தெரிந்தது. வகுப்புகளில் டீச்சர் அவ்வளவு மகிழ்ச்சியாய் இருந்து நான் பார்த்ததில்லை.

அதன் பின் அவ்வப்போது டீச்சருக்கு எங்கள் ஊர் லைப்ரரியில் கதை புத்தகம் எடுத்து தர அவர்கள் வீட்டுக்கு போவேன். டீச்சருக்கு ஒரே மகன். என்னை விட நான்கைந்து வயது சிறியவன். கணவர் எதோ ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

சுஜாதா மற்றும் பட்டுக்கோட்டை பிரபாகர் இருவரின் கதைகளை தான் டீச்சர் மிக விரும்பி படிப்பார். இந்த இருவர் எழுதிய புத்தகங்களை தான் எடுத்து வர சொல்லுவார். சுஜாதா புத்தகங்கள் நான் அதிகம் வாசிக்க ஆரம்பித்ததும் இந்த கால கட்டத்தில் தான்.

பொதுவாய் ஒரு வருடம் முடிந்து அடுத்த வகுப்பு போகும் போது சென்ற வருடம் ஏழு "ஏ' வில் அறிவியல் எடுத்தவர்கள் இவ்வருடம் ஏழு " பி" க்கு அறிவியல் எடுப்பார்கள். எட்டாவது செல்லும் போது அப்படி பார்த்தால் வானதி டீச்சர் எடுக்க மாட்டார்; வேறு யாரோ வரவேண்டும். இதை ஏழாவது படிக்கும் போதே ஒரு முறை கேட்டோம் " அடுத்த வருஷம் நீங்க வர மாட்டீங்களா டீச்சர் ? " " ஆமா அடுத்த வருஷம் வேற டீச்சர் அறிவியலுக்கு வருவாங்க " என்றார்.

ஆனால் எட்டாவது அறிவியல் முதல் வகுப்புக்கு டீச்சரே வந்த போது சந்தோஷத்தில் திக்கு முக்காடி போனோம். பள்ளியில் எப்படி அந்த முடிவு எடுத்தார்களோ தெரியாது ஆனால் டீச்சர் எங்கள் வகுப்புக்கு அவர்கள் தான் எடுக்க வேண்டும் என்று கேட்டு வாங்கி கொண்டு வந்ததாக நாங்கள் உறுதியாக நம்பினோம்.

அந்த பள்ளியை விட்டு ஒன்பதாம் வகுப்பு நான் வேறு பள்ளிக்கு மாறி விட்டேன். அதன் பின் டீச்சரை பார்ப்பது, பேசுவது எல்லாம் குறைந்து விட்டது. ஆனால் நண்பர்கள் நந்து, மதுவிடம் டீச்சர் பற்றி அவ்வப்போது விசாரிப்பேன்

எனக்கு திருமணம் நிச்சயமான போது, நண்பர்கள் அனைவரும் வெளியூரில் செட்டில் ஆனதால் ஊரில் பத்திரிக்கை வைக்க நான் செல்லவே இல்லை. அப்பாவும் கூட டீச்சருக்கு நியாபகமாய் பத்திரிகை வைத்திருக்க வாய்ப்பே இல்லை. ஆனாலும் வெளியூரில் திருமணமாகி பின் நானும், என் மனைவியும்  ஊரில் இருந்த சில மணி நேரங்களில் சரியாக வீட்டுக்கு வந்து டீச்சர் என்னை ஆசிர்வாதம் செய்தார்கள். என்னிடம் இருக்கும் டீச்சரின் ஒரே புகைப்படம் அன்று எடுத்தது தான். எனக்கு மனைவியுடன் டீச்சர் காலில் ஆசி வாங்கிய போது ஏனோ அழுகையே வந்து விட்டது. ஒரு நல்ல மாணவன் - நல்ல ஆசிரியரின் மனதில் என்றும் இருப்பான் என்பதை, டீச்சர் என்னை அன்று வாழ்த்த வந்தது உணர்த்தியது .

டீச்சரை கடைசியாய் நான் பார்த்தது அன்று தான். அவர்களை பார்த்து 15 வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது. அதன் பின் டீச்சரின் கணவருக்கு விபத்தில் கால்களை அகற்றும் படி ஆனது. டீச்சர் அந்த கஷ்டமான காலத்தை தாண்டி வந்தார் என்று நண்பர்கள் மூலம் அறிந்தேன். எனக்கு அந்த தகவல் பல மாதங்கள் கழித்து தான் சென்னையில் தெரிந்தது. டீச்சர் இன்று ரிட்டையர் ஆகி விட்டார். இப்போது எங்கள் ஊரில் வசிக்க வில்லை. எங்கு வசிக்கிறார் என தெரியாது.

இப்போது நரைத்து போய்,வயதான தோற்றத்தில் வானதி டீச்சர் இருக்கலாம். அவரை அப்படி பார்க்க விரும்பாததே கூட நான் பல ஆண்டுகளாய் பார்க்க முயலாததன் காரணமாய் இருக்க கூடும். இன்றும் வானதி டீச்சர் என்றால் எட்டாம் வகுப்பு கிளாஸ்ரூமில் அவர் கரும்பலகை அருகே நிற்கிற சித்திரம் தான் நினைவுக்கு வருகிறது !

இந்த முறை ஊருக்கு செல்லும்போது டீச்சர் எங்கு வசிக்கிறார் என நிச்சயம் விசாரிக்க வேண்டும் என தோன்றுகிறது. டீச்சரை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் " உங்களை பற்றி நான் எழுதியிருக்கேன்" என சொல்லணும்;  பின் அவர் விரும்பினால் இந்த பதிவின் பிரிண்ட் அவுட் அவருக்கு தரவேண்டும். வாசித்தால் மகிழ்வார் என்று நினைக்கிறேன்.

ஆண்டவன் அந்த வாய்ப்ப்பை தருகிறானா என்று பார்ப்போம் !

இந்த களிமண்ணை ஒரு உருவமாய் மாற்றிய எத்தனையோ கைகளில் வானதி டீச்சரின் கையும் ஒன்று ! அவர் சொல்லிகொடுத்த விஷயத்துடனே இப்பதிவை முடிக்கிறேன் :

தேன்க் யூ டீச்சர் !

Saturday, March 26, 2016

அம்மா இல்லாத உலகம் ....

ம்மா எதிர்பார்த்த ஒன்று கிடைத்து விட்டது.. மிக அதிக காத்திருப்பு, வலி, வேதனைக்கு பிறகு.. அம்மா எதிர்பார்த்த மரணம் கிடைத்தே விட்டது..

கணவர்- பெரிய மகன் மற்றும் ஒரே மகள் - அம்மாவின் அருகிலிருக்க - மார்ச் 18 - எங்களை விட்டு பிரிந்தார்.

கடைசி பிள்ளையான நான்- அம்மாவின் 40 வயதில் பிறந்தேன். அதன் பின்னரே அம்மாவின் உடல்நிலை சின்ன சின்னதாய் பாதிக்கப்பட்டது.. எனது கல்லூரி காலத்தில் அம்மாவிற்கு முதன் முறையாய் ஹார்ட் பெயிலியர்.. அம்மா நம்மை விட்டு எப்போது வேண்டுமானாலும்   பிரிவார் என்ற பயம் வந்து விட்டது.. அம்மா மீதிருந்த பிரியத்தின் பெரும்பகுதி அக்கா மீது செலுத்த ஆரம்பித்தது இந்த பயத்தினால் தான்..



கடந்த 10 வருடங்களில் அம்மாவிற்கு எத்தனையோ வித நோய்கள்.. உடல் நிலை காரணமாக கடைசி சில வருடங்கள் அம்மாவின் வாழ்க்கையில்  மிக வலி மிகுந்தது. .

75 வயது வரை  அனைத்து வீட்டு வேலையும் செய்து வந்தவர், பின் எந்த வேலையும் செய்ய முடியாத படி ஆனதே அவர் மனதை புண் படுத்தியிருக்க வேண்டும்.

கடந்த 5 வருடங்களில் நிலைமை பெரிதும் மோசமானது. இரு முறை டாக்டர்கள் "பிழைக்க  மாட்டார்;உறவினர்களுக்கு சொல்லி அனுப்புங்கள்" என கூறி, அதன் பின் இரு முறையும் உயிர் பிழைத்தார். மகன்கள்- மகள் மட்டுமல்ல, சம்பந்திகள் வரை வந்து காத்திருந்து - விழித்தெழுந்த அம்மாவிடம்  பேசிவிட்டு கிளம்பினர்..

2011-ல் அம்மா பற்றி எழுதிய கட்டுரை... இங்கே...

அம்மா மை டார்லிங்

கடந்த சில மாதங்களாய் மீண்டும் உடல்நிலை  மோசம் ....

ஒரே நல்ல விஷயம்.. இறுதி காலத்தில் ( கடைசி ஏழெட்டு வருடங்கள்) முழுக்க முழுக்க - மகனுடன் அவர் இருந்தது தான்.. பெரிய அண்ணன் மற்றும் அண்ணி அவர்களின் கடைசி காலத்தில் பார்த்து கொண்டு - பெரும் புண்ணியம் தேடி கொண்டனர் ..  

மேலும் அப்பா - ஒரு நர்ஸ் செய்யும் சேவையை விட அற்புதமாய் அம்மாவிற்கான அனைத்து பணிகளையும்  சிறிதும் முகம் சுழிக்காமல், சோர்வடையாமல் இரவு பகலாய் - பல வருடங்கள் செய்தார்.

எனது மகள்  + 2 தேர்வு நடக்கும்போதே அம்மா தவறினார்.. ஆனால் மிக சரியாக - அடுத்தடுத்த  தேர்வுகள் இடையே 10 நாள் இடைவெளி இருக்கும்போதே - அவர் மரணம் நிகழ்ந்தது.. ஆபிசுக்கு கூட விடுப்பு எடுக்க தேவையின்றி - ஒரு சனி, ஞாயிறில் அனைத்து கடமைகளும்- அனைவருக்கும் முடிந்தது..

16 ஆம் நாள் காரியமும் கூட ஒரு ஞாயிறில் தான் வருகிறது.. இது தான் அம்மா !! யாருக்கும் தன்னால் கெடுதல் வரக்கூடாது என்று நினைத்த அம்மாவின் எண்ணப்படி தான் அவர் மரணத்திற்கு பிறகான காரியங்களும் நடக்கின்றன..

அம்மா இறந்த அன்று.. திருநெல்வேலியில் ACS இன்ஸ்டிடியூட் விழா ஒன்றில் பேசிக் கொண்டிருந்தேன்.. விழா முடிந்து அறைக்கு வந்து கொண்டிருக்கும்போது அண்ணனின் அழைப்பு..

" நீ கிளம்பி வா"
" ஏன் .. அம்மாவுக்கு உடம்பு முடியலையா ?"
" அம்மா இஸ் நோ மோர்"

அடுத்த அரை மணி நேரம் என்ன செய்தேன் என்பது சற்று குழப்பமாய் தான் இருக்கிறது..

நல்லவேளையாக திருநெல்வேலியில் பள்ளிக்கால நண்பன் வேங்கடப்பன் - அடுத்த கொஞ்ச நேரத்தில் என்னை காண அறைக்கு வந்தான்..  கூடவே இருந்து வற்புறுத்தி சற்று சாப்பிட சொல்லி, ரயிலுக்கு கூட்டி சென்று ஏற்றி விட்டான்..

இரவு சுத்தமாய் உறங்க பிடிக்க வில்லை.. டிக்கெட் செக்கரிடம் கூறிவிட்டு பெர்த்தை விடுத்து,  அமர்கிற படி இடம் தேடி சென்றேன்.. எத்தனையோ நினைவுகள்......

அதிகாலை 3 மணி அளவில் அம்மாவை சென்று பார்த்தது முதல், உடலை  எடுக்கும் நேரம் வரை அழவே இல்லை; அக்காவும், மனைவியும் ஏன் அழாமல் இருக்கிறேன் என பல முறை கேட்டு விட்டனர்..

பல வருடங்களாக இப்படித்தான் இருக்கிறேன்.. மரணம் அநேகமாய் என்னை அழவைப்பதில்லை..

உண்மையில் மரணம் - இறக்கிற மனிதனுக்கு மிக பெரும் விடுதலை. ஒவ்வொரு மனிதனும் எத்தனையோ அவமானங்களையும், வலியையும், வேதனையையும் சகித்து கொண்டு தான் வாழ்கிறான்.. எனவே மரணம் - இறந்த நபரை பொறுத்த வரை எந்த பிரச்னையும் இல்லை; இறந்தவர் குறித்து நாம் வருந்த ஏதும் இல்லை.

இறந்தவரின் மறைவு - அவரை சுற்றி இருக்கும் மற்றவர்களுக்கு மிகப்பெரும் வலி.. இழப்பு. அதை அவர்கள் எப்படி தாங்குகிறார்கள்; எப்படி மீள்கிறார்கள் என்பது தான் முக்கிய விஷயம்..

ஜெயந்தனின் கவிதை வரி ஒன்று இப்படி துவங்கும் " எங்கும் யாருக்கும் எதுவும் நடக்கலாம்" .. வாழ்க்கையின் நிலையாமை சொல்லும் இந்த வரி உள்ளுக்குள் ஆழமாக பதிந்து போனது..

" கடவுளாலும் முடியாத விஷயம் ஒன்று உண்டு; நடந்ததை மாற்ற அவராலும் முடியாது.. " இதுவும் கூட எங்கோ எப்போதோ கேட்ட, அதன் அர்த்தம் முழுமையாய் உள் வாங்கிய விஷயம்..

நெருங்கிய நண்பர்கள் சிலரை மரணத்திற்கு கொடுத்த போது கூட அழாமல் இருந்தததற்கு மனதில் ஊறிப்போன மேற்சொன்ன எண்ணங்களே காரணம்...

ம்மாவை கடந்த 10- 15 வருடங்களில் எப்போது பார்த்தாலும்   கட்டி பிடித்து முத்தம் தருவது என்னுடைய வழக்கம். இறந்த அம்மாவிற்கு அப்படி முத்தம் தரலாமா என்ற எண்ணம் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. கண்ணாடி பேழைக்குள் அம்மா இருந்தார். கடைசியில் வெளியே எடுக்கும் போது பெரும் கூட்டம்; அத்தனை பேர் முன் அம்மா கன்னத்தில் முத்தம் தர ஏனோ ஒரு கூச்சம்.. அம்மாவின் கை மற்றும் கன்னத்தை கொஞ்ச நேரம்தடவியபடி நின்றிருந்தேன்.. அம்மாவின் அதே மென்மை .. மனதை என்னவோ செய்தது..
எனது 44 வருட வாழ்வில் - எனது குடும்பத்தில் நான் கண்ட முதல் மரணம்.. (எனக்கு முன் 2 குழந்தைகள் பிறந்து இறந்துள்ளனர்.. அதனால் - அண்ணன்கள்- அக்காவிற்கு இந்த வலி ஓரளவேனும்  தெரிந்திருக்கலாம்) எனக்கு இந்த வலி புதிது.. 

நண்பர்கள் மரணம் வேறு.. ஆனால் குடும்பத்தினர் இறப்பு தரும் வலி அதை விட பல மடங்கு அதிகமாய் உள்ளது. 

அம்மாவை அடக்கம் செய்ய,  உடலை எடுத்து செல்லும் முன் லேசாக அழுகை எட்டி பார்த்தது; முழுமையாய் அழவில்லை.. 

இந்த ஒரு வாரத்தில் - மனதில் பாரம் அப்படியே இருக்கிறது.. 

வர வைத்து கொண்டாவது ஒரு பாட்டம் அழுதிருக்கலாம் என்று இப்போது  தோன்றுகிறது.. 

50 வயதை தாண்டிய எந்த பெண்ணை கண்டாலும் - அம்மாவின் நினைவை அவர் கிளறி போகிறார்.. வாகனம் ஓட்டும் போது சில நேரம் மனம் அம்மாவின் நினைவில் அழுகிறது..  

எங்கோ, எப்போதோ - எந்த மேடையிலோ அல்லது யார் முன்னோ - அம்மாவிற்காக அழுது தீர்க்க போகிறேன் என அடிக்கடி தோன்றுகிறது ...

உலகில் நாம் எத்தனையோ பேரை நேசிக்கலாம்; ஆனால் நம் மீது மிக, மிக அதிக அன்பு காட்டுவது அம்மா தான். குழந்தையில் துவங்கி நம் திருமணத்துக்கு பின்னும் நீடிக்கும் அம்மாவின் இந்த அன்பு......... நம்மை மிக அதிகம் நேசித்த அம்மாவின் பிரிவு.. உள்ளுக்குள் ஒரு வெறுமையை கொண்டு வருகிறது.. 

84 வயது வரை வாழ்ந்து விட்டு மறைந்திருக்கிறார்.. எல்லா கடமையும் முடித்து விட்டார். மிக அதிக உடல் உபாதைகள் பட்டு விட்டார்.. இருந்தும் மனம் அவரது இழப்பை ஏற்று கொள்ள மறுக்கிறது 

இன்னும் எவ்வளவு நாள் ஆகும் இந்த வலி சரியாக ? தெரிய வில்லை.. 

அம்மா பிறந்த நாள் எங்கள் யாருக்கும் தெரியாது; அம்மா- அப்பா திருமண நாள் கூடத்தான்..! அம்மாவை பொறுத்தவரை அவர்  காலமான  மார்ச் 18 மட்டுமே எங்களுக்கு - ஒரே முக்கிய நாளாகி போனது !

இறந்த ஆத்மா - 13 நாள் உலகில் சுற்றி விட்டு - பின் சொர்க்கம் அல்லது நரகம் செல்லும் என்கிறார்கள்.. அம்மா எதோ ஒரு விதத்தில் இந்த கட்டுரையையும் வாசிக்கலாம் என்பதால் அந்த 13 நாளுக்குள் இதை எழுதுகிறேன்..

"தன் மகன்  மனம் சோர்ந்திருப்பது அம்மாவிற்கு சிறிதும் பிடிக்காது; நான் மகிழ்ச்சியோடு இருப்பது தான் அம்மா வேண்டுவது " என அடிக்கடி சொல்லிக்கொள்கிறேன்..

சென்று வா அம்மா..

எங்கள் நினைவுகளில் தினமும் நீ வாழ்ந்திருப்பாய் !

Monday, November 9, 2015

வெடிக்கடை நினைவுகள்..

தீபாவளி  வந்தபின் வெடிக்கடையை நினைக்காமல் இருக்க முடியுமா? பதிவின் பிற்பகுதியில் வெடிக்கடையில் வழக்கமாய் செய்யும் சில ஏமாற்று வேலைகளை சொல்கிறேன். முதலில் வெடிக்கடை அனுபவங்கள்.....

*********
நீடாமங்கலத்தில் வருடா வருடம் வெடிக்கடை வைப்போம். தீபாவளிக்கு ஐந்து நாள் முன்தான் கடை ஆரம்பிக்கும். ஆனால் அதற்கான முன்னேற்பாடுகள் சில மாதங்கள் முன்பே துவங்கி விடுவோம். 90 % வெடிகள் சிவகாசியிலிருந்து வரும். அதனை ஆர்டர் செய்து சில வாரங்கள் கழித்து, திடீரென ஒரு நாள் அதிகாலையில் தான் வண்டி வரும்.

வீட்டிற்கு அஞ்சு மணிக்கெல்லாம் வந்து எழுப்பி " சரக்கு வந்துடுச்சு" என்பார்கள். கள்ளிபெட்டியில் போட்டு அபாரமாய் பேக் செய்து வெடிகள் அனைத்தும் வரும். கூடவே வெடிகளுக்கான பில்லும் இருக்கும். நாங்கள் ஆர்டர் செய்தது சரியாக வந்திருக்கா , பில்லில் இருப்பவை சரியா இருக்கா என முழுதும் செக் செய்து மீண்டும் கள்ளிபெட்டிக்கே அவை போய்விடும்.



தஞ்சைக்கருகே அய்யம்பேட்டை என்றொரு ஊர் உண்டு ( அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியம்பெருமாள்.. சந்திரன்.. நியாபகம் இருக்கா? அதே அய்யம்பேட்டை தான் !). இங்கே யானை வெடி, லட்சுமி வெடி, ஓலை வெடி போன்றவை அட்டகாசமாய் இருக்கும். ஒவ்வொரு வருடமும் அங்கு சென்று இத்தகைய வெடிகளை வாங்கி பஸ்ஸில் எடுத்து வருவது த்ரில்லான அனுபவம் !

துப்பாக்கி போன்றவை அருகில் உள்ள கும்பகோணத்தில் வாங்குவோம்.

இப்படி எல்லாம் வாங்கி முடித்து தீபாவளிக்கு சரியாய் ஐந்து நாள் முன்பு கடை துவங்கும். ஒரு நாற்பது பக்க நோட்டில் அனைத்து வெடிகளையும் லிஸ்ட் போட்டு, அதன் அடக்கவிலையை எங்களுக்கு மட்டும் புரிகிற மொழியில் (பணத்தை வெளிப்படையாய் சொல்லாமல் மறைமுகமாய் சொல்லும் ஒரு பிசினஸ் மொழி ஒவ்வொரு தொழிலிலும் உண்டு) எழுதி விட்டு, அதை எந்த விலைக்கு விற்கலாம் என்று லிஸ்ட் போடுவோம்.

முதல் இரண்டு நாள் கடையில் ஈ ஆடும். " இவங்க இந்த வருஷமும் கடை போட்டிருக்காங்க" என்கிற தகவல் ஊரில் அனைவருக்கும் சேர மட்டுமே சில நாள் முன்னர் கடை திறப்பது.

கிராமங்களில் 90 % வியாபாரம் கடைசி நாள் மட்டும் தான். அதற்கு முந்தைய நாள் மீதம் 10 % வியாபாரம் இருக்கும். மற்ற நாள்கள் ....ஊஹூம் ! தீபாவளிக்கு முந்தைய நாள் மட்டுமே கடை போடுவோரும் கிராமத்தில் உண்டு !

தீபாவளி- முதல் நாள் வியாபாரத்துக்கு வருவோம்.

அதற்கு முன் நாலு நாளும் கடையை ஒரே ஆள் கூட சமாளிச்சிட முடியும். ஆனால் கடைசி நாள் எத்தனை பேர் கடையில் இருந்தாலும் போறாது. கூட்டம் அம்மும். வெளியூரிலிருந்து அண்ணன்கள், மற்றும் என் நண்பர்கள் நந்து, மது, மோகன் போன்றோர் அன்று தான் கடைக்கு வருவார்கள். கடைசி நேரத்தில் வருவதால் வெடி விலை இவர்களுக்கு புரிபடாது. முதல் நாளிலிருந்து கடையில் இருக்கும் என்னிடம் மதியம் வரை விலை கேட்டு கொண்டே இருப்பார்கள்.

கடையில் இருப்போர் ஒவ்வொருவர் காதிலும் ஒரு ரூபாய் பேனா ஒன்று சொருகியிருக்கும். பெரும்பாலும் மக்கள் வாங்கும் கம்பி மத்தாப்பு பாக்கெட் ஒன்றின் பின்னால் தான் அவர்கள் வாங்கிய வெடி கணக்கு போடுவோம். நடுவில் குடிக்க டீ வரும். அதை குடிக்கவும் நேரம் இல்லாது ஆறி போகும். வியாபாரம் பிச்சு எடுக்கும்.

சில நேரம் கடைசி நாள் மழை வந்து வியாபாரத்தை கெடுத்து விடும். மழையின் போது மக்கள் யாரும் வெடி வாங்க வர மாட்டார்கள். அதற்கு இரண்டு காரணம்: ஒன்று : கடை ரோடை ஒட்டி இருக்கும். மழையில் நனைந்து கொண்டு நின்றபடி தான் வெடி வாங்கணும். அடுத்து மழையில் நனைந்தால் வெடி நமத்துடும்.

என்னதான் மழை வந்தாலும், இரண்டு மணி நேரம் மழை விட்டால் கூட, அந்த நேரத்தில் மக்கள் வெடிக்கடை மீது படையெடுத்து வெடி வாங்கி தள்ளிடுவார்கள்.

தீபாவளிக்கு முதல் நாள் இரவு பன்னிரண்டு மணிக்கு - வெடிகள் காலியாகும் வரை கடை இருக்கும். இரவு பத்து மணியளவில் வியாபாரத்திலிருந்து “எஸ்” ஆகி கடைக்கு உள்ளே சென்று, இருக்கிற வெடிகள் கொஞ்சம் கொஞ்சம் பதுக்க ஆரம்பித்து விடுவேன். காரணம் கடையில் வியாபாரம் பார்க்கும் நண்பர்களுக்கு நாங்கள் தருவது வெடிகள் மட்டுமே. வெடி எல்லாம் காலியாகி விட்டால், வியாபாரம் செய்த நண்பர்களுக்கு வெடி இல்லாமல் போயிடும்.

இரவு பன்னிரண்டு மணிக்கு எல்லாவற்றையும் விற்று விட்ட மகிழ்ச்சியில் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரிப்போம். கூட்டத்தில் கத்தி கத்தி எல்லோருக்கும் தொண்டை கட்டி, குரலே மாறி போயிருக்கும்.

இந்த கடைசி நாள் வியாபாரம் - எனக்கு மட்டுமல்ல - நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் வருடா வருடம் தவற விட விரும்பாத ஜாலியான அனுபவம். அதில் கிடைக்கும் சந்தோஷம், த்ரில், எதையோ சாதித்த மாதிரி பீலிங் இவையெல்லாம் அலாதியானவை. புத்தாடை, இனிப்புகள், புது படம், வெடி வெடிப்பது இவற்றை விட வெடிக்கடையின் கடைசி நாள் வியாபாரம் தான் ஒவ்வொரு வருடமும் எங்களை தீபாவளி எப்போது வரும் என்று காத்திருக்க, எதிர்பார்க்க, ஏங்க வைத்தது.

மறுநாள் - தீபாவளி அன்று எங்கள் வீட்டில் நண்பர்கள் எல்லாரும் கூடுவர். வியாபாரத்தில் சந்தித்த வித்தியாசமான கஸ்டமர்கள், வெடி வாங்கி விட்டு - காசு தராமல் நைசாய் ஓட பார்த்த ஆள், வெடிகளுக்கு தப்பா கணக்கு போட்ட நண்பன் - என பலவற்றையும் பேசி கிண்டல் செய்து கண்ணில் நீர் வர சிரிப்போம்.

வெடிக்கடை வியாபாரம் ஒவ்வொரு அண்ணனாய் செய்து, பின் நான்
கடைசி சில ஆண்டுகள் பார்த்தேன். எனக்கு திருமணம் ஆகி, சென்னைக்கு மாப்பிள்ளையாய் அனுப்பிய பின், ஊரில் வெடி வியாபாரம் நின்று போனது. ம்ம் அது ஆச்சு 15 வருஷம் !

ஒவ்வொரு வருடமும் தீபாவளி வரும்போது இந்த நினைவுகள் என்னை மட்டுமல்ல, என் நண்பர்கள் நந்து, மது, மோகன் அனைவரையும் சூழ்கிறது. இன்றைக்கும் தீபாவளி வாழ்த்து போனில் சொல்லும் போது வெடிக்கடை நினைவுகள் பற்றி பேசாமல் எங்கள் உரையாடல் முடிவதில்லை.

சரி .. வெடிக்கடையில் பொதுவாய் எப்படி எல்லாம் ஏமாற்ற வாய்ப்புண்டு.. பார்க்கலாமா?

ஒவ்வொரு வெடிக்கும் பாக்ஸில் போடும் ரேட் மூன்று மடங்கு அதிகமாய் இருக்கும். உதாரணமாய் முன்னூறு ரூபாய் என்று பாக்ஸில் போட்டிருந்தால், அதனை உங்களிடம் இருநூறு ரூபாய்க்கு விற்க பார்ப்பார்கள். நீங்களும் அட இவ்ளோ டிஸ்கவுன்ட்டா என மகிழ்வீர்கள். உண்மையில் அதன் விலை நூறு ரூபாய்க்கும் குறைவாய் இருக்கும். எனவே பாக்ஸ் ரேட் பார்த்து ஏமாறாதீர்கள்

நகரத்தில் வாங்கிய வெடிகளுக்கு கணக்கு போடுவதை கணினியே செய்கிறது. இதில் தவறு நடக்க வாய்ப்பு குறைவு தான். விற்கிற நபரே வெடிக்கு கணக்கு போட்டால் கூட்டலிலேயே சற்று அதிகம் போட வாய்ப்புண்டு (குறிப்பாய் வாங்குபவர் நிறைய பார்கெயின் செய்து, விலை குறைக்க பார்த்தால், குறைக்கிற மாதிரி காட்டி விட்டு பின், பில்லில் இப்படி நைசாய் ஏற்றி விடுவார்கள்)

மேலும் ஏராள ஐட்டங்கள் வாங்கும் போது, அவற்றில் ஓரிரண்டை தராமல் கடையிலேயே வைத்து விடுவதும் நடக்கும். (இதுவும் அதிகம் பார்கெயின் செய்பவருக்கு தான் )

ஸ்டாண்டர்ட் போன்ற சில நிறுவனங்கள் தான் மிக சிறந்த வெடிகளை விற்பனை செய்யும். சில குவாலிட்டி குறைவான நிறுவனங்கள் விலை குறைவாய் வைத்து விட்டு மிக சுமாரான தரத்தில் வெடிகளை தந்து விடும். வெடிகளை வாங்கி அவை சரியாக வெடிக்காமல் புஸ் ஆனால், அக்கம் பக்கத்தில் பசங்களுக்கு அசிங்கமாகிடும் ... இது ஒரு தன்மான பிரச்சனை :)

சில நேரம் சென்ற வருடத்தில் மீதமான வெடிகளை நைசாய் சேர்த்து கொடுத்து விடுவர். இதற்கு தான் வெடிகளை வாங்கி, வெய்யிலில் காய வைத்து விட்டு வெடிப்பார்கள் சிலர்.

****
நிறைய பேசியாச்சு. உத்தரவு வாங்கிக்குறேன் !

Wish you and your family a happy & Safe Deepavali !

Monday, August 11, 2014

சிறு வயது குறும்புகள் + சில பிறந்த நாள் நினைவுகள் ...

குறும்பு - 1

சிறு வயதில் என்னை சாப்பிட வைப்பதென்றால் படு கஷ்டம் (நம்ப முடியலே ..இல்லே??) ..  மனதில் எதாவது ஒரு பொருளை நினைத்து கொள்வேன்.. அந்த பொருளை சாப்பாடு ஊட்டுபவர் சொல்ல வேண்டும்... சரியாக சொன்னால்தான் சாப்பிடுவேன்.. இல்லா விட்டால் தரையில் புரண்டு அழுவேன்..

சென்னை வந்த போது பச்சை கலரில் ரயில் பார்த்தது ; அதனை மனதில் நினைத்து கொள்ள, சரியாக சொல்லாத போது, " பச்சை ரயிலை சொல்ல மாட்டேங்குறியே" என நீண்ட நேரம் அழுது ஆர்பாட்டம் செய்வேன். இது எங்க குடும்பத்தில்  ரொம்ப பிரபலம்.. இன்றும் யாராவது ஒருவர் " பச்சை ரயிலை சொல்ல மாட்டேங்குறியே" என்று சொல்லி கிண்டல் செய்வார்கள்..

குறும்பு - 2

ஒன்றாவது, ரெண்டாவது ( I std/ II std) படிக்கும் போதெல்லாம் அக்காவின் தோழிகள் , பக்கத்து வீட்டு பெண்கள் என என்னை விட மிக பெரிய பெண்களிடம், " என்னை கல்யாணம் பண்ணிக்கிறிங்களா? என கேட்பேன்.. (அப்போ வயசு 5 அல்லது 6 !!) இதை எப்படி ஆரம்பித்தேன்; நானாகவே கேட்டேனா; யாரும் சொல்லி கொடுத்ததா என நினைவில் இல்லை.

ஏழாவது படிக்கும் போது,  ஆசிரியை ஒருவர், " ஏன்டா சின்ன வயசில் பக்கத்து வீட்டுக்கு வரும் போது என் கிட்டே வந்து கல்யாணம் பண்ணிக்கிறியா-ன்னு கேட்டே; இப்ப பண்ணிக்கிறியா? " என வம்புக்கு கேட்க, அனைவரும் (குறிப்பாய் பெண்கள்) செமையாய் சிரித்தனர். மானம் போனது. பதில் சொல்லாமல் வழிந்து வைத்தேன்..

குறும்பு - 3

ஏழு வயது இருக்கும் போது எனது வகுப்பு மாணவன் ஒருவன் குஷியாக இருக்கையில், ஒரு குறிப்பிட்ட வார்த்தையை உபயோகிப்பான். அவனிடம் இருந்து அந்த வார்த்தை எனக்கும் தொற்றி கொண்டது. ஒரு நாள் வீட்டில் உள்ள ரேடியோ-வில் 16 வயதினிலே பாட்டு ஒன்று வைத்தனர். புது பட பாட்டு என்ற மகிழ்ச்சியில் நான் அந்த வார்த்தையை குதித்தவாறே சொன்னேன். அண்ணன் அடி பின்னி விட்டார் பின்னி.. அப்புறம் தான் தெரிந்தது அது ஒரு கெட்ட வார்த்தை என்பது.. !!!

குறும்பு - 4

தம்பு சாமி என்ற நண்பன் என் தெருவிலேயே இருந்தான். செம, செம வாலு பையன். இவன் இன்னும் சில நண்பர்களுடன் தினம் மாலை ரயில்வே ஸ்டேஷன் வரை வாக்கிங் போவான். ரயில் நிற்கும் போது, அதில் உள்ளவர்களுடன் ஜன்னல் வழியே நல்ல தனமாக பேசுவான். ஆனால் ரயில்  கிளம்ப ஆரம்பித்ததும் அதே நபர்களை கெட்ட, கெட்ட வார்த்தைகளால் திட்டுவான். அவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் பார்ப்பது அவனுக்கு செம குஷி..

அவர்களது எந்த குறும்புக்கும் உதவி செய்யாத என்னை எப்படி இந்த கேங்கில் சேர்த்து வைத்திருந்தார்கள் என்பது இன்றளவும் புதிர்  தான்.
***********************

சில பிறந்த நாள் நினைவுகள் ....



நீடாமங்கலம் என்ற சிறிய ஊரில் நான்காவது (கடைசி) பிள்ளை யாய் பிறந்தாலும் ஒவ்வொரு வருடமும் சிறு வயதில் எனது பிறந்த நாள் வீட்டில் மிக சிறப்பாக கொண்டாடினார்கள்.

13 வது வயது வரை - பெரியண்ணன் தான் எனது பிறந்த நாளை முன்னின்று  கொண்டாடுவார். எங்கு படித்த போதும் வேலைக்கு சென்ற போதும் - ஆகஸ்ட் 12 அன்று நீடாமங்கலம் வந்துவிடுவார்.

முதல் நாள் இரவே வீடு முழுதும் கலர் காகிதங்கள் ஒட்டுவார். அதில் எம்.  ஜி.ஆர்.  கலைஞர்,சிவாஜி, கமல், ரஜினி ஆகியோர் எனக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னது போல் எழுதியிருப்பார். இது கற்பனை என்றாலும் சின்ன வயதில் அது எனக்கு மிக அதிக மகிழ்ச்சியை தரும். பிறந்த நாள் முடிந்த பின்னும் ரொம்ப நாள் அந்த கலர் காகிதங்கள் காற்றில் அசைந்து கொண்டேயிருக்கும்.... ஜனவரியில் பொங்கல் வந்து வீட்டுக்கு வண்ணம் பூசும் வரை ஒரு சிலவாவது மிச்சமிருக்கும்

இன்றைக்கும் ஒவ்வொரு பிறந்த நாள் வரும் போதும் - அந்த கலர் காகிதங்கள் நினைவிலாடும்..

*************
கல்லூரியில் படிக்கும் போது ஒரு வருட பிறந்த நாளை நண்பர்கள் மறக்க முடியாத நாளாக்கினர்

அந்த வருடம் ஆகஸ்ட் துவக்கம் நீண்ட விடுமுறையில் கல்லூரி இருந்தது. நண்பர்கள் வெவ்வேறு ஊர்களில் இருந்த போதும் - எனது பிறந்த நாளுக்காக திருச்சி வர  திட்டமிட்டனர்.என்னையும்  அழைத்தனர்.

கல்லூரியில் படித்த போது - சில ஆண்டுகளில் - பிறந்த நாளன்று ரத்த தானம் செய்வது  வழக்கம். அன்றும் அப்படி தஞ்சை ராஜா மிராசுதார் மருத்துவ மனையில் ரத்த தானம் செய்து விட்டு - திருச்சி  சென்றேன். கல்லணையில் சந்திக்க நண்பர்கள் கூறியிருக்க.. அங்கு சென்றதும் - ஒரு அற்புதமான கேக் வெட்ட சொல்லி என்ன  அசத்தினர் நண்பர்கள். ஆளுக்கு ஒரு பரிசு தந்ததில்... இன்றும் நினைவில் இருப்பது பாலகுமாரனின் " இனிது இனிது காதல் இனிது " புத்தகம். பாலகுமாரனுக்கு எழுதிய எனது கடிதம் 3 பக்க அளவில் பிரசுரம்  ஆகியிருந்தது. அது பிரசுரம் ஆனது எனக்கு தெரியாத நிலையில், அவர்கள்  அப்புத்தகம் வாங்கி சரியாக பிறந்த நாள் அன்று தந்தது அப்பிறந்த நாளை ஸ்பெஷல் ஆக்கியது..

*************
பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் ஸ்பெஷல் ஆனவர் தான். ஒவ்வொருவர் பிறந்த தினம் அவருக்கு சிறப்பான + கொண்டாடப்பட வேண்டிய ஒன்று தான்....!

Sunday, September 23, 2012

என் விகடனில் எங்க ஊர் நீடாமங்கலம் !

ன் விகடனில் எங்கள் ஊர் பற்றி வந்திருப்பதாக நண்பன் தேவா லிங்க் அனுப்பியதும் சென்று பார்த்து மிக, மிக மகிழ்ந்தேன். ஒளிப்பதிவாளர் கோபிநாத் பற்றி ஏற்கனவே இங்கு ஒரு பதிவில் சொல்லியிருக்கேன்.


பொதுவாய் எந்த பதிவும் காப்பி பேஸ்ட் செய்யாதவன் இந்த முறை விகடனுக்கு நன்றி போட்டு விட்டு அப்படியே போட காரணம், பதிவு எங்கள் ஊரை பற்றியது. நண்பர்களில் பலரும் நீடாமங்கலம் வந்து, எங்கள் வீட்டில் தங்கி, கடையில் என்னோடு அமர்ந்து அரட்டை அடித்தவர்கள். அவர்களில் நிறைய பேர் வீடுதிரும்பல் வாசிக்கிறார்கள். கீழே உள்ள படங்களில் உள்ள கமன்ட் மட்டுமே நான் போட்டது !
*********

காவிரியு்ம் அம்சவள்ளியும் என் முக்கியமான தோழிகள்!''

தமிழ்த் திரை உலகில் கமர்ஷியல் சினிமாக்களின் 'கில்லி’ ஒளிப்பதிவாளர் எஸ்.கோபிநாத், தன்னுடைய சொந்த ஊரான நீடாமங்கலம் பற்றி நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.



''இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட ஒரு புண்ணிய பூமி நீடாமங்கலம். ஏனெனில், வடக்கே வெண்ணாறு, தெற்கே கோரையாறு, மேற்கே பாமணியாறு என ஊரின் மூன்று பக்கமும் மூன்று அழகான ஆற்றங்கரைகள் அமைந்து இருக்கும். அந்த மூன்று ஆறுகளும் பிரியும் இடம் 'மூணார் தலைப்பு’ என வழங்கப்பட்டது. சங்க காலத்தில் இந்த ஊர் 'நீடூர்’ என்றும் 'நீராடும் மங்கலம்’ என்றும் அழைக்கப்பட்டு இருக்கிறது. 'நீராடும் மங்கலம்’ என்பதே காலப்போக்கில் மருவி 'நீடாமங்கலம்’ என நிலைத்துவிட்டது.

இது ஒரு புண்ணியஸ்தலமும்கூட. இங்கே உள்ள காசி விஸ்வநாதர் கோயிலும் சந்தான ராமசாமி கோயிலும் மிகவும் பிரசித்திப் பெற்றவை. கி.பி 18-ம் நூற்றாண்டில் தஞ்சையை மராட்டியர்கள் ஆண்டபோது, அரசன் சிம்கானின் மனைவி யமுனாம்பாளுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. அவள் இங்கேவந்து சந்தான ராமசாமி கோயில் குளத்தில் குளித்துப் புண்ணியம் அடைந்து, குழந்தை வரம் பெற்றாள். அன்று முதல் சந்தான ராமசாமி கோயில் குழந்தை இல்லாதவர்களின் குறைதீர்க்கும் கோயிலாக இருந்துவருகிறது. அப்போதைய காலகட்டத்தில் நீடாமங்கலத்துக்கு 'யமுனாம்பாள்புரம்’ என்றும் ஒரு பெயர் இருந்திருக்கிறது.


ஒளிப்பதிவாளர் கோபிநாத் வீடு. இதே தெருவில் 15 வீடு தள்ளி எங்க வீடு

நீடாமங்கலத்தில் எங்கள் குடும்பம் பாரம்பரியப் பெருமையைக்கொண்டது. பரம்பரை பரம்பரையாக நாங்கள் மளிகைக் கடை நடத்திவருபவர்கள். 'எஸ்.கே.வி.ஜி.எஸ். அண்ட் சன்ஸ் மளிகை’ என்றால் நீடாமங்கலத்துக்காரர்கள் எல்லோருக்கும் தெரியும். இப்போதும் அந்த மளிகைக் கடையை என் தம்பி நடத்திவருகிறார். அது மட்டும் இல்லாமல், பல ஏக்கர் நிலத்தில் விவசாயம் பார்த்து நெல் சாகுபடிச் செய்த குடும்பம் எங்களுடையது.



எனது அண்ணன்கள், அக்கா, ஒளிப்பதிவாளர் கோபிநாத் படித்த LVS பள்ளி

நீடாமங்கலம் எல்.வி.எஸ். நடுநிலைப் பள்ளியில்தான் நான் என்னுடைய ஆரம்பக் கல்வியைக் கற்றேன். அப்போது நான் மிகவும் சேட்டைக்காரனாக இருப்பேன். ஆசிரியர்களிடம் அடிவாங்காத நாளே இல்லை. நானே குச்சி ஒடித்துக் கொண்டுவந்து கொடுத்து அடி வாங்குவேன். அந்தப் பள்ளியில் அடிபட்டுக் கற்றுக்கொண்ட நேரந்தவறாமை, சுய ஒழுக்கம் போன்ற பல நல்ல பழக்கங்களை இன்றும் என் வாழ்வில் கடைப்பிடித்துவருகிறேன். என் பள்ளியையும் ஆசிரியர்கள் ராஜகோபால், பழனிவேல் போன்றவர்களையும் என்னால் என்றுமே மறக்கமுடியாது.

பெரியார் சிலையும் எங்க மண்ணின் மக்களும்

ஆறாவது படிக்கும்போது அடிக்கடி தியேட்டருக்குச் சென்று படம் பார்க்க ஆரம்பித்தேன். அப்பாவுக்குத் தெரியாமல்தான் செல்வேன். ஆனால், 'நடுத்தம்பி படம் பார்க்க வந்திருக்கு’ என அப்பாவிடம் யாராவது தகவல் சொல்லிவிடுவார்கள். படம் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே வீட்டில் இருந்து ஆட்கள் வந்து என்னைக் கூட்டிப்போய்விடுவார்கள். போனதும் பெல்டாலேயே பின்னி எடுப்பார் என் அப்பா. ஆனாலும் மறுநாள் எப்படியாவது அந்தப் படத்தை பார்த்துவிடுவேன். அந்தவகையில் நான் படம் பார்த்த எங்கள் ஊர் தியேட்டர்களான காவிரியும் அம்சவள்ளியும் எனக்கு முக்கியமான தோழிகள். நான் ஒளிப்பதிவு செய்த முதல் படமான 'தில்’ ஒரு மாதம் காவிரி திரையரங்கில் ஓடியது. நாம் படம் பார்த்து வளர்ந்த திரையரங்கில் நாம் எடுத்தத் திரைப்படத்தை எப்படியாவது பார்த்துவிடவேண்டும் என நினைத்தேன். ஆனால், அது முடியாமலே போய்விட்டது. நாளடைவில் அந்தத் திரையரங்கு மூடப்பட்டுவிட்டதில் எனக்கு நிறையவே வருத்தம் உண்டு.  

பத்தாவது படிக்கும்போதே என் வாழ்க்கை சினிமாதான், அதிலும் குறிப்பாக ஒளிப்பதிவுத் துறைதான் என்பதை முடிவு செய்துவிட்டதால் அதன்பிறகு நான் சரியாகப் படிக்கவில்லை. பன்னிரெண்டாம் வகுப்பில் பார்டரில் பாஸ் செய்துவிட்டு தரமணி ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் சேரத் தயாரானேன். ஆனால், என்னை வலுக்கட்டாயமாக திருச்சி ஜோசப் கல்லூரியில் சேர்த்தனர். அதன்பிறகு மீண்டும் இன்ஸ்டிட்யூட்டில் சேர, ஆரம்பக்கட்டத் தேர்வுகள் முடித்து மறுநாள் சேர்க்கைக்காகத் தயாரான நிலையில் அம்மாவிடம் இருந்து போன் வந்தது, அப்பாவுக்கு உடல் நிலை சரியில்லை என. உடனே ஊருக்குக் கிளம்பி வந்தவன்தான்... ஐந்து ஆண்டுகள் தீவிரமாக விவசாயம் பார்த்துக்கொண்டே அப்பாவையும் கவனித்துக்கொண்டேன். அதன்பிறகு நேரடியாகவே சினிமாவில் நுழைந்தேன்
எங்க ஊரில் டிராபிக் ஜாம் ! ஆட்டோ எல்லாம் எங்க ஊரில் ஓடுது பாருங்க  !

என் பால்ய கால நண்பர்களில் குமரன், மோகன், நடராஜா, சிவநேசன், குபேந்திரன் இவர்கள் எல்லாம் குறிப்பிடத்தக்கவர்கள். அதேபோல், கவிஞர் ரவிசுப்ரமணியத்தை அடிக்கடி கும்பகோணத்துக்குச் சென்று சந்தித்து இலக்கியம் பற்றி பேசிவருவேன். என் இலக்கிய ஆர்வத்தைச் செம்மைப்படுத்தியவர் அவர். அவரோடு சேர்ந்து இலக்கிய கூட்டங்களுக்குச் செல்வேன். பொதுவாகவே, மிகவும் கண்டிப்பான என் அப்பா இது போன்ற விஷயங்களுக்கு எனக்கு நிறைய சுதந்திரம் தந்தார்.

இந்த ரயில்வே ஸ்டேஷனில் எங்கள் நண்பர் குழு செய்த வாலுத்தனங்கள் கொஞ்ச நஞ்சமா? 

நீடாமங்கலத்தில் எனக்கு மிகவும் பிடித்த இன்னொரு விஷயம் ரயில்வே ஸ்டேஷன். சுற்றி இருக்கும் தஞ்சை, திருவாரூர், மன்னார்குடி, கும்பகோணம் போன்ற முக்கிய ஊர்களுக்கு இதுதான் மையப் புள்ளி. இங்கு இருந்து அந்த ஊர்களுக்கு எளிதாக ரயிலிலோ, பேருந்திலோ சென்றுவிடலாம்.

என்னைப் பொறுத்தவரை நீடாமங்கலம் ஒரு ராசியான ஊர். இங்கு இருந்து புறப்பட்டவர்கள் யாருமே சோடை போனது இல்லை. இசைக் கலைஞர்கள் 'தவில்’ மீனாட்சி சுந்தரம், நீலகண்ட சாஸ்திரிகள், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி இப்படி எல்லோருமே நீடாமங்கலம் தந்த பரிசுகள். அந்த வகையில் எனக்கும் நீடாமங்கலத்துக்கும் உறவு இருக்கிறது என்பதில் எனக்கு மிகவும் பெருமைதான்!''

- உ.அருண்குமார்

படங்கள்: கே.குணசீலன்
***********
நன்றி : என் விகடன் -திருச்சி பதிப்பு
************
தொடர்புடைய பதிவு :


சொர்க்கமே என்றாலும் நம்மூரை போல வருமா?

Monday, January 16, 2012

ஜல்லிகட்டு தேவையா - கிராமத்து பொங்கல் நினைவுகள்


தஞ்சை மாவட்டத்தில் பிறந்து தற்போது சென்னையில் வாழ்பவன் என்கிற முறையில் பொங்கல் குறித்தான ஒரு பார்வை இது : 

தஞ்சையும் அதை சுற்றி உள்ள பகுதிகளிலும் பொங்கல் பண்டிகையின் போது தான் வயல்களில் அறுவடை முடியும் காலம்...!! அதனால் கிராமத்தில் இருப்போரிடம் அப்போது தான் பண புழக்கம் ஓரளவு இருக்கும். கிராமங்களில் விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று பொங்கல் !

முதல் பண்டிகை போகி !! சரியாக போகியன்று தான் பொங்கல் பொருட்கள் வாங்க கிராமத்தில் இறுதி பலரும் அருகில் உள்ள சிறு நகரத்துக்கு வருவார்கள். அதென்னவோ ஏழைகள் தீபாவளி ஆகட்டும், பொங்கல் ஆகட்டும் முதல் நாள் தான் துணி மற்றும் முக்கிய பொருட்கள் வாங்குகிறார்கள்.

போகி தினத்தில் தெருவில் இருக்கும் குப்பைகளை சேர்த்து எரிய விடும் வழக்கம் உண்டு என்றாலும் இந்த விஷயத்தில் சென்னை தான் ரொம்ப மோசம் ! அன்று முழுதும் வெளியில் வர முடியாத அளவு சென்னை புகை மண்டலமாக இருக்கும். டையர் போன்ற எரிக்க கூடாத விஷயங்களையும் எரித்து நாசம் செய்வோரும் உள்ளனர் என்பது வருததுக்க்குரிய விஷயம்.

போகிக்கு அடுத்த நாளான பொங்கலுக்கு வருவோம்.

2012- பொங்கலுக்கு எங்கள் வீட்டில் மனைவியும் பெண்ணும் வரைந்த கோலம் 

 கிராமத்தில் கொண்டாடப்படும் பொங்கல் தான் மிக அற்புதமாக இருக்கும். தை பொங்கல் என்பது சூரியனுக்கான விழா அல்லவா? கிராமத்து தெருக்களின் நடுவே பானை + அடுப்பு வைத்து பொங்கல் செய்வார்கள். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் பொங்கல் பானை வைத்து வழிபடுவது அருமையாக இருக்கும். ஒரு முறை என் நண்பன் கருணாநிதி (பெயர் தான் கருணாநிதி ! ஆனால் இவன் பக்கா ADMK ) ஊரான காவராபட்டுக்கு சென்ற போது இப்படி தெருவின் நடுவே பொங்கல் வைப்பதை பார்த்து ரசிக்க முடிந்தது. அந்த ஊரில் பல வீட்டிலும் வீட்டுக்கே வெளியே, தெருவில் கயிற்று கட்டில் போட்டு தான் இரவில் தூங்கவே செய்கிறார்கள் !! ரொம்ப ஆச்சரியமா இருந்தது.

பொங்கலின் போது மூன்று நாளும் எங்க ஊர் நீடாமங்கலத்தில் அம்சவல்லி & காவேரி தியேட்டரில் மூணு ஷோ சினிமா நடக்கும். (வழக்கமா மாலை மற்றும் இரவு காட்சி மட்டுமே நடக்கும்!) மக்கள் கரும்பு, பொங்கல் மற்றும் வாழை பழங்களுடன் தியேட்டர் சென்று படம் பார்ப்பார்கள். படம் முடிந்ததும் கரும்பு சக்கை தியேட்டர் முழுதும் கொட்டி கிடக்கும். இதை சுத்தம் செய்து அடுத்த காட்சி ஆரம்பிக்க தாமதமாகும். போன வருட பொங்கல் அல்லது தமிழ் புத்தாண்டுக்கு ரிலீஸ் ஆன படங்கள் பொங்கலுக்கு தான் எங்க தியேட்டருக்கு வரும். ஆனாலும் பண்டிகைகளில் தியேட்டரில் மிக அதிக கூட்டம் வருவதன்னவோ பொங்கலின் போது தான் !!

ஒரு காலத்தில் அம்சவல்லி, காவேரி, சரவணபவன் என மூன்று தியேட்டர் இருந்த எங்க ஊரில் இப்போது ஒரு தியேட்டரும் இல்லை!

தை பொங்கலுக்கு மறு நாள் மாட்டு பொங்கல் !

மாட்டு பொங்கல் என்றால் என்னவென்று தெரிய வேண்டுமெனில் நீங்கள் நிச்சயம் கிராமத்துக்கு தான் செல்ல வேண்டும். அவரவர் வீட்டில் இருக்கும் மாட்டுக்கு குளிப்பாட்டி, பொட்டு வைத்து அலங்காரங்கள் செய்வார்கள். கொம்பில் வர்ணம் பூசுவார்கள். மாட்டின் உடலில் கலர் காகிதத்தில் செய்த அலங்காரங்கள் அலங்கரிக்கும். அன்றைக்கும் பொங்கல் தான் செய்வார்கள். கோமாதாவுக்கு நன்றி சொல்லி செய்யும் பொங்கல் இது.

ஜல்லி கட்டு நடக்கும் நேரமும் கூட இது தான். ஜல்லி கட்டு தேவை/ தேவையில்லை என இரு வேறு கருத்து உண்டு. நான் நிச்சயம் ஜல்லி கட்டு தேவையில்லை என நினைப்பவன். மாடுகளை துன்புறுத்துகிறோம் என்பது ஒரு முக்கிய காரணம். அதை விட பெரிய காரணம் உண்டு.

என் அக்கா கிராமத்து மருத்துவமனையில் டாக்டராக உள்ளார். அவர் இருக்கும் கிராமத்தில் வருடா வருடம் ஜல்லி கட்டு நடக்கும். சரியாக ஜல்லி கட்டு போட்டி நடக்கும் நேரம், வெவ்வேறு நேரத்தில் டியூட்டி பார்க்கும் அனைத்து டாக்டர்களும், நர்சுகளும் மருத்துவ மனையில் இருந்தாக வேண்டும். குத்து பட்ட நிலையில் மனிதர்கள் வந்த வண்ணம் இருக்க, வரிசையாக தையல் போட்டு போட்டு ஓய்ந்து போவார்கள். நிலைமை மோசம் என்றால் பெரிய ஆஸ்பத்திரி கொண்டு போக சொல்வார்கள். இந்த ஆஸ்பத்திரியில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு அல்லது மூன்று பேராவது ஜல்லி கட்டில் உயிர் இழக்கிறார்கள். அதன் பின் அந்த குடும்பம் என்ன ஆகும்? ஒவ்வொரு வருடமும் கை, கால் என உறுப்புகள் இழப்பவரும் உள்ளனர். ஜல்லி கட்டு வேண்டாம் என நினைக்க முக்கிய காரணம் இது தான்.

கன்னி பொங்கல் அல்லது காணும் பொங்கல், இந்த வரிசையில் கடைசி பண்டிகை தினம் ! இந்த நாளன்று நம் தெருவிலும், பக்கத்துக்கு தெருக்களிலும் உள்ள பலரும் ஒன்றாக சேர்ந்து மாட்டு வண்டி, டிராக்டர் மற்றும் கிடைத்த வாகனங்களில் கூட்டமாக அருகில் உள்ள மூணாம் தலைப்பு என்னும் இடத்துக்கு செல்வார்கள். எங்கள் ஊருக்கு அருகில் உள்ள பிக்னிக் ஸ்பாட் அது தான் . மூன்று ஆறுகள் ஒன்றாய் கூடுமிடம்... சின்ன அணை போல இருக்கும் ... சுற்றி நிறைய மரங்களும், காலி இடமும் இருக்கும்.

புளி சாதம், தயிர் சாதம் என கட்டு சோறு கட்டி காலையே சென்று, நாள் முழுதும் அங்கு விளையாடி விட்டு வருவார்கள். சில வருடங்கள் முன்பு ஒரு காணும் பொங்கலன்று அக்கா, அண்ணன் குழந்தைகளுடன் அந்த இடம் சென்றேன். இப்போது முன்பு போல் அதிக கூட்டமில்லை. நமது நல்ல பழக்க வழக்கங்களில் சிலவற்றை நாம் இழந்து வருகிறோமோ என சற்று வருத்தமாக இருந்தது.

கேஸ் அடுப்பில் பொங்கல்வைத்து, சாப்பிட்டு முடித்ததும் சாலமன் பாப்பையா பட்டி மன்றமும், டிவியில் போடும் புது படமும் பார்க்கும் நகர வாசிகள் ஒரு முறையாவது பொங்கல் விடுமுறையில் கிராமங்கள் பக்கம் சென்று வரலாம். நம் பாரம்பரியம் இன்னும் கொஞ்சம் மிச்சமிருப்பதை நேரில் காண இது ஒரு அரிய வாய்ப்பு !!

Thursday, November 10, 2011

சொர்க்கமே என்றாலும்,நம்மூரை போல வருமா?

எங்கள் ஊர் நீடாமங்கலம் பற்றிய சிறு பதிவு இது. எங்கள் ஊர், அதன் வித்தியாச மனிதர்கள், இனிய நினைவுகள் பற்றி எழுத எவ்வளவோ உள்ளது. இப்போதைக்கு சில இடங்கள் மட்டும் அறிமுகம்..




நீடாமங்கலத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மூணாம் தலைப்பு. வெண்ணாறு என்கிற பெரிய ஆறு கோரையாறு, பாமனியாறு மற்றும் சிறிய வெண்ணாறு என மூன்றாக இங்கு பிரித்து விடப்படுகிறது. ஒரு மினி டேம் போல் இருக்கும் இந்த நீர் தேக்கம் பார்க்க மிக இனிமையாக இருக்கும். சுற்றிலும் முழுக்க முழுக்க கிராமம்.

சின்ன வயதில் காணும் பொங்கல் அன்று இங்கு கூட்டம் கூட்டமாய் மக்கள் மாட்டு வண்டி கட்டி கொண்டு வருவார்கள்.  சில ஆண்டுகள் முன் எங்கள் குடும்பத்தினர் பலருடன் காணும் பொங்கல் அன்று  மூணாம் தலைப்பு சென்ற போது கூட்டமே இல்லை. மக்கள் டிவி முன் தங்களை மெய் மறந்து விட்டனர்.


இந்த முறை தீடீரென முடிவு செய்து ஒரு நாள் மாலை கிளம்பி மூணாம் தலைப்பு சென்றோம். மாலை நேரத்தில் சூரிய அஸ்தமனம் பார்க்க மிக ரம்மியமாக இருந்தது. ஆறுகளில் தண்ணீர் நிறையவே இருந்தது. இருந்த கொஞ்ச நேரம் ரொம்ப அற்புதமாக இருந்தது. இருட்டி விட்டதால் விரைவில் கிளம்ப வேண்டியதாயிற்று. மூணாம் தலைப்பில் எடுத்த வீடியோ இதோ  




 
எங்கள் ஊரில் கோயில்கள் பலவும் ரொம்பவே விசேஷம். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய கோயில் சந்தான ராமசாமி கோயில். குழந்தை வரம் தரும் கடவுள் என இந்த கோயில் மிக பிரபலம். அதி காலை தம்பதியர் சேர்ந்து வந்து வணங்கினால் குட்டி கிருஷ்ணனை மடியில் வைத்து பூஜை செய்வார்கள்.

இந்த கோயிலில் இம்முறை கொலு வைத்திருந்தனர். சாமி பார்க்க மாலை நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் குழுமி இருந்தது ஆச்சரியமாய் இருந்தது. பூஜை முடிந்து கொலு இருப்பதால் அனைவருக்கும் பிரசாதம் வழங்கினர். அனைவரையும் தரையில் அமர சொல்லி பந்தியில் பரிமாறுவது போல் இலை போட்டு பிரசாதம் பரிமாறினர் !

கீழே உள்ள வீடியோ சில ஆண்டுகள் முன் இந்த சந்தான ராமர் கோயில் வெளியே எடுத்தது. இதில் கோயிலின் குளம், மண்டபம், தேர்,  பாம்பு பொம்மை வாய் அருகே அமர்ந்திருக்கும் ஆடு, நொங்கு வெட்டும் ஆள், எங்க ஊரின் தெருக்கள் இவற்றை பார்க்கலாம்  



ராமர் கோயிலில் இருந்து கொஞ்ச தூரத்தில் உள்ளது சிவன் கோவில். இங்கு எடுத்த சில படங்கள் இதோ


சிவன் கோவில்: சற்று உடைந்த நிலையில் சிலைகள்

 சிவன் கோவில் கொலு

************* 
என் பெண் சின்னவளாய் இருக்கும் வரை நீடாமங்கலம் சென்றால் போர் செட்டில் குளிப்பது தான் வழக்கம். செம ஜாலியாக நீண்ட நேரம் குளித்து விட்டு வருவோம். இம்முறை காலை நேரத்தில் போர் செட் ஓடாது என்றதால் போக வில்லை. இந்த படம் சில வருடங்களுக்கு முன் எடுத்தது

ஊருக்கு சென்ற முதல் நாள் காலை பெண்ணுடன் ஊரை சுற்றி ஒரு ரவுண்டு நடந்து வந்தேன். அப்போதே பல ஹோட்டல்களில் புரோட்டாவிற்கு மாவு பிசைய ஆரம்பித்திருந்தனர். " இவ்ளோ காலையிலேயேவா?" என என் பெண் ஆச்சரியப்பட்டாள். இப்படியான ஒரு சூழலில் இருந்ததாலோ என்னவோ நமக்கு பரோட்டா ரொம்ப பிடித்து போய் விட்டது. பரோட்டா போடும் வீடியோ ஒன்று இதோ உங்கள் பார்வைக்கு


எங்கள் ஊரின் பிரபலமான இனிப்பு கடை SMT சுவீட்ஸ் ! சென்னையில் கூட இவ்வளவு அருமையான இனிப்புகள் கிடைக்காது. மிக ரீசனபில் விலையில் அல்வா, அசோகா போன்றவை சாப்பிடவாவது நீங்கள் எங்கள் ஊருக்கு ஒரு முறை வரலாம் !

குரு ஸ்தலமான ஆலங்குடிக்கு மிக அருகில் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது எங்கள் ஊர் ! நீங்கள் ஆலங்குடி அல்லது கும்பகோணம் வந்தால் அப்படியே எங்கள் ஊருக்கும் வாருங்கள். எங்கள் இல்லத்தில் அம்மா- அப்பாவையும் அவசியம் சந்தியுங்கள் !

இந்த வார பதிவுகள் சில:


எஸ். ராமகிருஷ்ணன் சந்திப்பு படங்களுடன்

ஏழாம் அறிவு சறுக்கியது ஏன்?

Thursday, March 31, 2011

கிரிக்கெட் கேரக்டர்கள்: ராஜு & பட்டப்பா

தொடர்ந்து கிரிக்கெட் மேட்ச்களே எழுதி வந்ததால், சற்று மாறாக இம்முறை எங்களுடன் விளையாடிய இரு சுவாரஸ்ய கேரக்டர்கள்:

ராஜு 

ராஜு எங்கள் ஊர் கிரிக்கெட் டீமில் மிக முக்கிய பவுலர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவன். எங்கள் கிரவண்டுக்கு அருகிலேயே இருக்கும் காவேரி தியேட்டரில் இடைவேளையின் போது முறுக்கு, கடலை மிட்டாய் விற்பான்.

ராஜு பத்து பன்னிரண்டு அடிகள் தான் ஓடி வந்து வீசுவான். ஆனால் பந்து மிக வேகமாக சரியாக விக்கெட் நோக்கி வரும். எந்த பந்தை தவற விட்டாலும் நிச்சயம் க்ளீன் பவுல்ட் தான்.

எங்கள் கிரவுண்டின் ஆப் மற்றும் லெக் சைட் இரண்டிலுமே நாங்கள் அடித்து ஆடுவதில் சிரமம் இருந்தது. வலப்பக்கம் ஒரு குளம் இருக்கும். இடப்பக்கமோ அரசு ஆஸ்பத்திரி. வலப்பக்கம் அடித்தாலாவது குளத்திலிருந்து போய் எடுத்து வந்து விடலாம். இடப்பக்கம் எனில் ஆஸ்பத்திரி ஆயிற்றே!  முடிந்த வரை இடப்பக்கம் ஷாட் அடிக்காமல் தான் ஆடுவோம். நான்கு மற்றும் ஆறு ரன்கள் நேரே ( ஸ்டிரைட் ஷாட்) அடித்தால் தான் உண்டு. இதனால் எங்கள் ஊரில் பலரும் லெக் சைடில் சற்றே வீக் தான். இதை அறிந்த ராஜு மிக சரியாக பந்தை காலுக்கு அருகே இறக்குவான். பந்து காலில் படாமல் காலை நகர்த்தினால் ஸ்டம்ப் எகிறும்.

ஒரு முறை ராஜு போட்ட பந்து என் காலை நன்கு பதம் பார்த்து விட்டது. நாங்கள் ஆடுவது கார்க் பந்து. கல் போல இருக்கும். கால் நன்கு வீங்கி விட்டது. தஞ்சை சென்று டாக்டரிடம் காட்ட,  ஆபரேஷன் செய்யணும் என்று கூறி விட்டார் ! எங்கள் ஊரில் உள்ள பழனி செல்வம் என்ற அருமையான டாக்டர் மிக சாதாரணமாக வீக்கத்தை முழுவதும் கீறி எடுத்து, கட்டு போட்டு சரி செய்து என் வேதனையை முடித்தார். " ஆபரேஷன்...ஆயிரக்கணக்கில் செலவு" என பயந்த எங்களுக்கு, பத்து ரூபாயில், ஐந்து நிமிடத்தில் வைத்தியம் முடிந்து விட்டது ! இன்னமும் அந்த பெரிய தழும்பு ராஜுவையும், பழனி செல்வம் டாக்டரையும் நினைவு படுத்தும் விதமாய் என்னுடன் உள்ளது.

எங்கள் ஊரில் சரியான மைதானம் இல்லாததால் அம்மாபேட்டை அல்லது மன்னார்குடி சென்று தான் மேட்ச் ஆடுவோம். மேட்ச் விளையாட பேருந்து அல்லது ரயில் என எதில் சென்றாலும், செல்லும் பதினோரு பேரில் நான்கைந்து பேர் தான் டிக்கெட் எடுப்பார்கள். மற்றவர்கள் ஓசி தான் !! பஸ் என்றாலாவது சற்று மதித்து,   நான்கைந்து பேர் டிக்கெட் வாங்குவர். ரயில் எனில் சுத்த மோசம். என்னை போன்ற ஒரு சில பயந்தாங்கொள்ளி தான் டிக்கெட் எடுப்பார்கள். பெரும்பாலான நண்பர்கள் எடுக்க மாட்டார்கள். ரயில் என்பது அரசு நமக்காக விட்ட இலவச வாகனம் என்பது அனைவரின் கருத்தாக இருந்தது.

ஒரு முறை ரயிலில் டிக்கெட் செக்கர் வந்து விட்டார். வழக்கமாய் நாம் செல்லும் ரயில்களில் உள்ளது போல் ஒரு கம்பார்ட்மென்ட்டிலிருந்து அடுத்ததற்கு நேரே உள் வழியே செல்ல முடியாது. டிக்கெட் எடுக்காத ராஜு அடுத்த கம்பார்ட்மென்ட்டுக்கு, ஓடும் ரயிலின் வெளிப்புறம் வழியாக கம்பியை பிடித்தவாறே ஊர்ந்து , ஊர்ந்து சென்றான். இது பெரிய ஹீரோயிச வேலை போல் நாங்கள் ஆச்சரியமாக பார்த்தோம்.

மிக ஏழ்மையில் பிறந்த, முறுக்கு விற்ற, ரயிலில் டிக்கெட் எடுக்காத ராஜு இப்போது ?? போலிசாக உள்ளான் !!

பட்டப்பா

பட்டப்பா ஒரு சுவாரஸ்யமான மனிதர். எங்களை விட மிக சீனியர். எங்கள் அண்ணன் செட். ஒல்லியாக உயரமாக இருப்பார். வெள்ளை நிறம். பார்ப்பதற்கு கோபக்காரர் போல் தெரியும். பவுலிங் போடும் போது முகத்தை மிகவும் மாற்றி கொண்டு, பல்லை கடித்தவாறு பயமுறுத்துவது போல் வந்து வீசுவார். பார்க்கும் எங்களுக்கு குச்சி எகிறும் அல்லது பாட்ஸ்மென் செத்தான் என்று தோன்றும். ஆனால் சீனியர் டீமில் உள்ள எல்லாரும் அவரை மிக சாதாரணமாக ஆடுவார்கள். ஆச்சரியமாக இருக்கும்.

பட்டப்பா மிலிடரியில் வேலை பார்த்தார். பின் அதிலிருந்து சொல்லாமலே வந்து விட்டார். இப்படி பாதியில் வர கூடாது என்றும், அவ்வாறு வந்ததால், அவரை கைது கூட செய்யலாம் என்றும் பேசி கொள்வார்கள். இது பற்றி கவலை படாமல் பட்டப்பா கிரிக்கெட் ஆடி வந்தார். அப்போதெல்லாம் சொல்லுவார். " மெட்ராஸ், டில்லி மாதிரி பெரிய ஊர்ல உள்ளவங்க நல்லா பேட்டிங் பண்ணுவானுங்க. ஆனா நம்ம மாதிரி இன்டீரியர் ஊர்லதான் நல்ல பவுலர்கள் கிடைப்பாங்க ! " யோசித்து பார்த்தால் இது சரி என்றே தோன்றுகிறது.

மிலிடரியிலிருந்து வந்த பின் பட்டப்பா எந்த வேலைக்கும் போகாமல் ஊரில் சும்மாவே சுற்றி வந்தார். " சும்மா இருப்பது" ஒரு மனிதனை எப்படியெல்லாம் அழிக்கும் என கண் முன்னே பார்த்தோம். குடி பழக்கம் வந்தது. மிக டீசன்ட் ஆக அறியப்பட்ட மனிதர், தெருக்களில் சும்மாவே சுற்றி வருவதோடு, யாரிடமாவது அனாவசியமாய் சண்டை வளர்த்தார். அனைவரும் அவரை தவிர்க்க ஆரம்பித்தனர். அவருக்கு மன நிலை சரியில்லை என்றும், யார் யாரிடம் என்னென்ன பிரச்சனை செய்தார் என்றும் பல விதமாய் கதைகள்..

எங்கள் மருந்து கடையில் நான் இருக்கும் போது பட்டப்பா ரோடில் சென்றால், மேலே ஏறி வந்து என்னிடம் பேசி விட கூடாதே என்று பயமாய் இருக்கும். சில நேரம் நான் இருக்கும் போது கடைக்கு வந்து சம்பந்தமில்லாமல் பேசி, சத்தமாய் சிரித்து செல்வார். சிறிது சிறிதாக ஒரு மனிதன் வீழ்வதை நாங்கள் பார்த்து கொண்டிருந்தோம்.

கல்லூரியில் படித்த போது, விடுமுறையில் ஊருக்கு சென்றேன். என் நண்பன் மது என்னை பார்த்ததும் முதலில் சொன்னான் " டேய் பட்டப்பா இறந்திட்டாருடா !!"

மனது மிக வலித்தது. செய்தியை உள் வாங்க ரொம்ப நேரம் ஆனது. குடியாலும், மன நிலை பாதிக்கப்பட்டதாலும் அவர் மரணம் நிகழ்ந்தது. அப்போது அவருக்கு முப்பத்தைந்து வயது இருந்திருக்கலாம் ! அவரை பார்க்கும் போதெல்லாம் பயந்த நாங்கள், அவர் மரணத்திற்காக ஏன் மிகவும் வருந்தினோம் ? விடை தெரிய வில்லை !!

                                                                                                      (கிரிக்கெட் சீரீஸ் முற்றும்...)

Monday, March 28, 2011

அம்மாபேட்டை கிரிக்கெட் டோர்னமெண்ட்

தஞ்சாவூருக்கருகே உள்ளது அம்மா பேட்டை. இதன் அருகில் உள்ள உக்கடை என்ற ஊரின் கிரிக்கெட் டீம் தொடர்ந்து அம்மா பேட்டையில் கிரிக்கெட் டோர்னமென்ட் நடத்தி வந்தனர். அப்படி ஒரு டோர்னமென்ட் பற்றி தான் இந்த பதிவு. 

எங்கள் சீனியர் டீமில் உள்ள எல்லோரும் வேலை கிடைத்து வெவ்வேறு ஊருக்கு சென்று விட, என் வயதை ஒத்தவர்கள் தான் டீமில் இருந்தனர். எங்கள் டீமில் சிலரை அறிமுக படுத்துகிறேன்:

ரவி: ரவி தான் ஓபனிங் பேட்ஸ்மன். தன்னை "கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்" என சொல்லி கொள்வான். பாஸ்ட் பவுலிங்கை உரித்து எடுப்பான். ஆப் சைடில் ரொம்ப அருமையாக ஆடுவான். இந்த இரண்டு ப்ளஸ்களால் எல்லா அணியும் ரவியை மிகவும் மதிப்பார்கள். ஆனால் ரவிக்கு உள்ள வீக்னெஸ் எங்களுக்கு தான் தெரியும். எப்படி ஆப் சைடில் ஸ்டிராங்கோ அதற்கு நேர் எதிராய் லெக் சைடில் செம வீக். இதை கூட போக போக கொஞ்சம் சரி செய்து கொண்டு, லெக்சைடில் பந்து வந்தால் சிங்கிள் எடுக்க கற்று கொண்டான். அடுத்த வீக்னெஸ் மெதுவாக பந்து வீசினால் உடனடியாக அவுட் ஆகி விடுவான். அவன் கூட பிறந்த ட்வின் சகோதரனான ராமு மிக சாதாரண பவுலர். ஆனால் ராமு பந்து போட்டால் ரவி " போங்கடா.. இவன் எல்லாம் பந்து போட்டா ஆட மாட்டேன்" என்று கத்துவான். காரணம் ராமு நின்று நிதாரணமாய் ஸ்டம்ப் நோக்கி போட்டால் உடனடியாக ரவி பவுல்ட் ஆகி விடுவான். ஆனால் ரவி ஓபனிங் என்பதால் வேக பந்து வீச்சை மட்டுமே சந்தித்து வெளுத்து கட்டினான். இந்த டோர்னமெண்டில் எங்கள் அணியில் மட்டுமல்ல அனைத்து டீம்களிலும் அதிக ரன் எடுத்தது ரவி தான் !

பாபு: ரவியுடன் சேர்ந்து ஆடும் மற்றொரு ஓபனிங் பேட்ஸ்மன். பொறுமையாய் ஆடி ரவிக்கு நிறைய ஸ்டிரைக் தந்து விடுவான். மேலும் இந்த டோர்னமெண்ட்டில் பாபு ஓபனிங் பவுலிங்கும் போட்டான் !! அவன் வேக பந்து வீச்சாளனும் கிடையாது, ஸ்பின்னும் இல்லை. எதோ ஒரு சென்டிமெண்டில் அவனை தொடர்ந்து ஓபனிங் பவுலிங் போட வைத்தனர்.

பிரபா: இவன் தான் டீம் கேப்டன். உள்ளூரில் எங்களுக்குள் டீம் பிரித்து ஆடும் போது கூட கேப்டன் ஆக இல்லாத பிரபா எப்படி டோர்னமென்ட் ஆடும்போது கேப்டன் ஆனான் என்பது ஒரு புதிரே. பிரபா ஒரு பவுலர். ஆப் கட்டர் பந்து வீசுவான். இந்த டோர்னமெண்டில் எங்கள் அணிக்காக அதிக விக்கட்டுகள் எடுத்தது இவன் தான். ஒரு மேட்சுக்கும் அடுத்த மேட்சுக்கும் இடையில் உள்ளூரில் ஆடும் போது பொடியன்கள் கூட இவன் பவுலிங்கை அடித்து நாசம் செய்வார்கள். ஆனால் வெளியூரில் இவன் ஆப் கட்டர்கள் புரியாமல் அவுட் ஆகி கொண்டே இருந்தனர்.

சரி டோர்ணமண்டிற்கு வருவோம். லீக் ஆட்டத்தில் எங்கள் அணி தொடர்ந்து நன்கு ஆடி அசத்தியது. மற்ற அணிகள் டாஸ் ஜெயித்தால் பேட்டிங் எடுப்பார்கள். நாங்களோ பவுலிங் எடுப்போம். எதிர் அணியை குறைந்த ரன்களுக்கு அவுட் ஆக்கி விட்டு. அந்த ரன்களை எளிதில் அடித்து ஜெயிப்பதே எங்கள் வழக்கமாய் இருந்தது. பெரும்பாலும் விக்கெட் இழப்பின்றியோ, ஓரிரு விக்கெட் மட்டுமே இழந்தோ வென்று வந்தோம். எங்களுக்கே இது ஆச்சரியமாய் தான் இருந்தது.

செமி பைனல் வரை தோற்காமலே வந்து விட்டோம். செமி பைனல், டோர்னமென்ட் நடத்தி வந்த உக்கடை அணியுடன் நடந்தது. அந்த  அணி முதலில் பேட் செய்தது. உக்கடை அணியின் கேப்டன் விளையாடும் போது, நான் மிட் விக்கெட்டில் நின்று கொண்டிருந்தேன். எனது பீல்டிங் பற்றி சொல்ல வேண்டுமெனில், சென்னை -28 படத்தில் பிரேம்ஜி எப்படி "நல்ல பீல்டரோ" அதே போல் தான் நான். அந்த படத்தில் அவர் சொல்லும் " டேய் நான் எப்பவாவது கேட்ச் பிடிச்சு பார்த்திருக்கியா?" தான் நமக்கும் ஒத்து வரும். உக்கடை அணியின் கேப்டன் அடித்த ஒரு ஷாட் என் தலைக்கு மிக மேல், நன்கு தள்ளி சென்று கொண்டிருந்தது. எதற்கும் இருக்கட்டுமே என நான் கையை நீட்ட, பந்து அதிர்ஷ்ட வசமாய் என் கையில் ஒட்டி கொண்டது. பேட்ஸ்மன் விக்கித்து நின்று விட்டார். நல்ல பீல்டருக்கே அது செம கேட்ச் தான். எங்க டீம் ஆட்கள் சிரி சிரியென சிரித்து தீர்த்தனர்.

எங்கள் அணி மறுபடி விக்கெட் இழப்பின்றி அந்த ஸ்கோரை அடித்து ஜெயித்தது. இப்போது எல்லா அணிக்கும் நீடாமங்கலம் அணி என்றால் ஒரு கிலி வந்து விட்டது.

இறுதி போட்டி தஞ்சை அணியுடன். நாங்கள் மிக நம்பிக்கையுடன்  இருந்தோம். தஞ்சை அணியில் முந்தய ஆட்டங்களில் ஆடாத புது வீரர்களை களம் இறக்கி விட்டனர். இவர்களில் சிலர் டிஸ்ட்ரிக்ட் மட்டும் லீக் போட்டிகள் ஆடுபவர்கள். முதலில் ஆடிய தஞ்சை அணி மற்ற அணிகளை போல் இன்றி எங்கள் பவுலிங்கை துவைத்து எடுத்து விட்டனர். 140 ரன் போல அவர்கள் எடுக்க, அதனை எடுக்க முடியாமல் எங்கள் அணி ஆல் அவுட் ஆகியது. பெரிய டோர்னமென்ட் வெல்லும் ஆசை இப்படியாக முடிந்தது

இருந்தாலும் "அம்மாபேட்டை டோர்னமெண்டில் ரன்னர்ஸ் தெரியுமா? " என ரொம்ப நாள் சொல்லி கொண்டு தான் இருந்தோம் !

Tuesday, March 22, 2011

மன்னர்குடியுடன் பரபரப்பான கிரிக்கெட் மேட்ச்

மன்னார்குடி (சுருக்கமாய் மன்னை ) எங்கள் ஊரான நீடாமங்கலதிலிருந்து 13 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. எங்கள் ஊரை விட பல மடங்கு பெரிய ஊர். எங்களுக்கெல்லாம் அது ஒரு "டவுன்". இப்படி டவுனில் உள்ள மன்னை டீம் எங்களை விட நன்றாக ஆடுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. எங்கள் ஊரில் உள்ள "பெரிய டீம்" பல முறை மன்னையுடன் ஆடி அத்தனை முறையும் தோற்றது. மன்னையுடன் நாங்கள் ஆடிய அந்த மறக்க முடியாத மேட்சை பார்க்கும் முன் வேறு ஒரு தகவல்.

எங்கள் ஊரின் பெரிய டீம் கிரிக்கெட்டுக்காக எத்தனை முறை பணம் வசூல் செய்துள்ளனர் !! டோர்னமென்ட் விளையாடுவது , புதிதாய் கிரிக்கெட் கிட் வாங்குவது என எதற்கும் வசூல் வேட்டை ஆரம்பித்து விடும். அப்படி தான் அந்த முறையும் வசூல் நடந்தது.   ஊரில் கொழும்பு ஸ்டோர் என்ற பெயரில் ஒரு மளிகை கடை இருந்தது. இசுலாமியர்கள் நடத்தி வந்த கடை. அவர்களிடம் தான் முதலில் வாங்குவார்கள். எந்த கேள்வியும் கேட்காமல் அதிக பணமும் போடுவார்கள். இப்படி வசூல் நடந்து புதிதாய் பேட் உட்பட நிறைய கிரிக்கெட் கிட் வாங்கப்பட்டது.

பணம் தந்தவர்களில் சிலர் " என்னப்பா புதுசா பேட் எல்லாம் வாங்கியாச்சா? எப்போ அடுத்த மேட்ச்?" என்று கேட்டு கொண்டே இருப்பர்கள். அப்போது தான் மன்னையுடன் மறுபடி மேட்ச் வந்தது.

அந்த காலத்தில் செல்போன் இல்லாமல் , பல வீடுகளில் போனும் இல்லாமல் எப்படி மேட்ச் ஆட தேதி குறித்தார்கள் தெரியுமா? யாராவது ஒரு நபர் (தூதர் போல) எந்த ஊருடன் கிரிக்கெட் ஆடணுமோ அந்த ஊருக்கு போகணும். அங்கு போய் கேம் விளையாடலாமா என்று கேட்டு தேதி குறித்து விட்டு வர வேண்டும். ம்ம் கிரிக்கெட் மேல் எவ்வளவு காதலுடன் அப்போதெல்லாம் இருந்திருக்க வேண்டும்!


(போட்டோவில் மன்னையின் புகழ் பெற்ற ராஜ கோபாலசாமி கோயில்)

மன்னை மேட்சுக்கு வருவோம். வழக்கம் போல் எங்கள் சீனியர் கிரிக்கெட் டீம் அடி வாங்கவே செய்தது. இரண்டு இன்னிங்க்ஸ் உள்ள டெஸ்ட் மேட்ச் ஆடினர். முதலில் பேட் செய்த மன்னை அணி நூற்று நாற்பது ரன் அடித்தது. பின் ஆடிய எங்கள் அணி அறுபதுக்கு ஆள் அவுட். மன்னை எங்களை பாலோ ஆன் ஆட சொல்லியிருக்கலாம். ஆனால் அவர்கள் ஆடினார்கள். ஓரிரு விக்கெட் இழப்புக்கு ஐம்பது ரன் போல அடித்து விட்டு டிக்ளர் செய்து விட்டனர்.  130 ரன் அடித்தால் வெற்றி. இவ்வளவு அதிக ரன்கள் மன்னை உடன் நாங்கள் அடித்ததே இல்லை. அதுவும் நான்காவது இன்னிங்க்ஸ் வேறு.

ஆனால் யாரும் எதிர் பாராமல் மேட்ச் சூடு பிடித்தது. எங்கள் அணி சற்று நன்கு ஆடியது. சந்தானம் என்று ஒரு ப்ளேயர். மிக நன்றாக ஆட, எங்கள் அணி ரன்களில் முன்னேறி கொண்டே இருந்தது. மறுபக்கம் விக்கெட்டுகளும் விழுந்த வண்ணம் இருந்தன. கடைசியில் பத்து ரன் எடுத்தால் நாங்கள் வெற்றி. ஒரு விக்கெட் மட்டுமே கை வசம் உள்ளது. சந்தானம் நாற்பதுக்கு மேல் எடுத்து விளையாடி கொண்டிருக்க மறு முனையில் சிங்கிள் சுந்தரம் விளையாடினார். சிங்கிள் சுந்தரம் பெயருக்கேற்ற படி சிங்கிள் மட்டும் தான் எடுப்பார். இவரை வைத்து கொண்டே சந்தானம் மீதம் உள்ள ரன்களையும் பெரும்பாலும் எடுத்து விட்டார். நாங்கள் ஜெயிக்க மூன்று ரன்கள் உள்ள போது திடீரென "இது தான் கடைசி ஓவர்" என முடிவானது.

நாங்கள் ஜெயிக்க மூன்று ரன். அவர்களுக்கு தேவை ஒரு விக்கெட். கடைசி ஓவர். டென்ஷன் ! டென்ஷன் ! ! எப்படியோ இரண்டு ரன்கள் எடுக்கப்பட்டு விட்டன.கடைசி மூன்று பந்துகள். ஒரு ரன் எடுக்க வேண்டும். இரண்டு பந்துகளில் சிங்கிள் சுந்தரம் ரன் எடுக்க முடிய வில்லை. கடைசி பந்து. சுந்தரம் பேட்டை சுழற்ற பந்து பேட்டில் படவில்லை. ஆனாலும் சுந்தரம் ரன் எடுக்க, ஓட ஆரம்பித்து விட்டார். விக்கெட் கீப்பர் பந்தை ஸ்டம்ப் நோக்கி வீச முயல்கிறார். மறு முனையில் சந்தானம் ஓடவே இல்லை. அம்பயர் பொதுவாய் பேட்டிங் அணி ஆள் தான் நிற்பார். அவர் பிடித்து சந்தானத்தை தள்ளி விட்டு ஓட சொல்ல, சந்தானம் அந்த ரன்னை ஓடி எடுத்து விட்டார்.

மன்னை அணியுடன் முதலும் கடைசி முறையுமாக நாங்கள் வென்றோம் !! சந்தானத்திடம் ஏன் ஓட வில்லை என்று கேட்டதற்கு " அடுத்த ஓவர் நான் தானே ஆட போகிறேன். அப்போ அடிச்சிக்கலாம்" என நினைத்தேன் என்றார். அது கடைசி ஓவர், கடைசி பந்து என்பதே அவருக்கு தெரிய வில்லை!!

மன்னை அணியால் எங்களிடம் தோற்றதை டைஜஸ்ட் செய்யவே முடிய வில்லை. "இன்னொரு சின்ன மேட்ச் (ஒரு இன்னிங்க்ஸ் மட்டும்) ஆடி விட்டு போங்கள்" என்று சொல்ல, எங்கள் அணி சிரித்து மழுப்பி திரும்பி விட்டது.

கிரிக்கெட்டை விட சுவாரஸ்யமாய் அடுத்து ஒரு சம்பவம் நடந்தது. "இப்போ தான் பணம் வசூல் செய்து முடிச்சோம். மேட்ச் ஜெயிச்சிட்டோம். இதுக்கு ஒரு பேனர் எழுதி வச்சிட வேண்டியது தான்" என்று முடிவு செய்து எங்கள் வெற்றி பற்றி ஒரு பேனர் எழுதி ஊரின் முக்கிய இடத்தில் வைத்தனர். அதில் " மன்னை உடன் நடந்த பரபரப்பான மேட்சில் கடைசி பந்தில் நீடாமங்கலம் அணி வெற்றி பெற்றது" என்று எழுத பட்டிருந்தது. இதனை ஊரில் பலரும் நின்று வாசித்து விட்டு மகிழ்ச்சி உடன் சென்றனர். மேட்ச் விளையாடாத என் பெயரும் கூட 13 அல்லது 14 ஆவது நபராக அதில் எழுத பட்டிருந்தது. (என்னோட அண்ணன் தான் டீம் கேப்டன். அந்த போர்ட் எழுதியது எங்கள் கடை மாடியில் உள்ள பொன். தேசிங் என்ற பெயிண்டர்.  பேர் வந்தது இவர்கள் உபயம்!!)

இந்த போர்ட் எங்கள் ஊர் மக்கள் பார்த்து மகிழ்ந்தது இருக்கட்டும். ஊருக்கு வேறு வேலையாக வந்த மன்னை கிரிக்கெட் டீமை சேர்ந்த ஒருவரும் படித்து விட்டார். மன்னை டீம் ஆட்களுக்கு இது தெரிய வர, "அட பாவிங்களா. நாம டிக்ளேர் செய்து குடுத்ததால் ஜெயிச்சிட்டு, இப்போ இப்படி போர்ட் வைக்கிறாங்க" என கடுப்பாகி மறுபடி மேட்சுக்கு அழைத்த வண்ணம் இருந்தனர்.

போவோமா நாங்க? நாங்கல்லாம் யாரு??

Wednesday, March 9, 2011

கிராமத்து கிரிக்கெட் நினைவுகள்

உலக கோப்பை நடக்கும் நேரத்தில், எங்கள் கிராமத்தில் நாங்கள் ஆடிய கிரிக்கெட் பற்றி எழுதுகிறேன்.

எங்களுடன் விளையாடிய சுவாரஸ்யமான ஒரு நபர் தான், இந்த கட்டுரையின் நாயகன்.அவர் எங்கள் ஊரில் வசித்தாலும், பக்கத்துக்கு ஊரில் வேலை பார்த்தார். வயதில் சற்று பெரியவர் என்பதால் சார் என்று அழைப்போம்.

சார் தன்னை லெக் ஸ்பின் பவுளர் என்று சொல்லி கொள்வார். ஆனால், பந்து அப்படி ஒன்றும் ஸ்பின் ஆகாது. கிரீஸுக்கு சற்று வெளியே மெதுவாய், நேராய் வந்து அல்வா போல இறங்கும். என்னை போன்ற படு சுமாரான பேட்ஸ் மேன் கூட வேண்டிய பக்கம் விளாசலாம்.

அவரது பவுலிங் ஆக்ஷ்ன் செம காமெடியாக இருக்கும். கையை முழுதாய் சுற்றி பந்தை எரியாமல், கக்கத்துக்கு கீழிருந்தே எறிவார். இது பார்க்க, சர்வ நிச்சயமான 'த்ரோ' போல் இருக்கும். ஆனால், தான் த்ரோ செய்வதாக சார் எப்போதும் ஒப்புக்கொள்ள மாட்டார்.

அவரை யாரவது த்ரோ செய்வதாக கேட்டால், தனது பவுலிங்கை யார் யார் எல்லாம் சரி என ஒப்பு கொண்டனர் என்று பட்டியல் போடுவார். மேலும், பல உள்ளூர் - வெளியூர் ஜாம்பவான்கள் எல்லாம் தனது பவுலிங்கில் க்ளீன் பவுல்ட் ஆனதாகவும், வெங்கட் ராகவனுக்கு பிறகு சிறந்த ஸ்பின் பவுலர் என்றால், அது தான் தான் என்றும் கூச்சப்படாமல் அள்ளி விடுவார்.

அந்த காலக்கட்டத்தில் சார் வீட்டில் மட்டுமே டி.வி. இருந்ததால், அங்கு சென்று தான் கிரிக்கெட் மாட்ச் பார்ப்போம். ஆட்ட சுவாரஸ்யத்தில் யாராவது நகம் கடிச்சால் போச்சு... "அய்யயோ... எச்சில் பண்ணிட்டான்..." என உடனே கொல்லைக்கு கூட்டிட்டு போய் தண்ணீர் தந்து கையை கழுவ சொல்லி கூட்டி வருவார்.

இவர் குறித்த மூன்று முக்கிய சம்பவங்களாவன:

சம்பவம் - 1

மன்னார்குடி டீமுடன் ஒரு கிரிக்கெட் மேட்ச் ஆட போயிருந்தோம். நான் அப்போது பார்வையாளர்தான். எங்கள் ஊர் "பெரிய டீம்" ஆடியது.

முதலில் மன்னார்குடி டீம் ஆடியது. செமையாய் அடி பின்னி எடுத்தனர். நடுவில் நம்ம சார் பவுலிங் போட வந்தார். முதல் பந்து போட்டதுமே "த்ரோ த்ரோ" என சிலர் கத்தினர்.

பின் ஒருவன் எழுந்து, "டேய் சும்மா இருங்கடா... ஆள் நல்லா அல்வா மாதிரி பந்து போடுறார்" என்றதும், பேசாமல் இருந்தனர். சார் பவுலிங்கில் (!!?) சும்மா வெளுத்து எடுத்தனர்.

சாரின் ஒரு பந்தை ஸ்ட்ரெயிட் பவுண்டரிக்கு அடித்தான் ஒரு பேட்ஸ்மேன். மிட் ஆஃப் அண்ட் லாங் ஆனில் நின்ற ஃபீல்டர்கள் போய் பந்தை எடுக்கவில்லை.

சார் கேட்டதற்கு, "நீங்களே போய் எடுத்துக்குங்க" என்று சொல்லி விட்டனர்!

சாருக்கெல்லாம் பவுலிங் தந்து மானத்தை வாங்குறாங்க என்று கேப்டன் மேல் கோபம் அவர்களுக்கு. பின், சாரே ஓடி போய் பவுண்டரியிலிருந்து பந்தை எடுத்து வந்து அடுத்த பந்தை வீசினார். இதை இன்னமும் சொல்லி சொல்லி சிரிப்போம்.

பின்னர், எங்க டீம் பேட்டிங் செய்து 40 ரன்னுக்கு ஆள் அவுட் ஆகியது. இதில் கடைசியாக இறங்கிய நம்ம சார் "0- நாட் அவுட்".

சம்பவம் - 2

தனது திறமையை டீம் சரியாக யூஸ் பண்ணலை என சாருக்கு ரொம்ப வருத்தம்.

மன்னார்குடி டீம் எங்களை மறுபடி ஃபாலோ ஆன் ஆட சொன்னது. சார் இந்த முறை ஓபனிங் பேட்ஸ்மேன் ஆக செல்வேன் என்றார்.

"வேண்டாம் சார். முதல் ஓவர் பாண்டியன் போடுவான். போன இன்னிங்க்ஸ்-ல் ஆறு விக்கெட் எடுத்தான் அவன்" என்றான் ஒருவன்.

சார், "போடா.. சோழனாவது.. பாண்டியனாவது," என்று முதல் ஆளாக பேட் செய்ய போய்விட்டார்.

முதல் ஓவர் பாண்டியன் தான் போட்டான். முதல் பந்து... சாரின் ஸ்டம்ப்ஸ் ரெண்டு தெறித்து விழந்தது.

பேட்டை க்ரீஸ் அருகிலேயே வைத்து விட்டு பெவிலியன் திரும்பினார் சார். (அவுட் ஆனால் பேட்-ஐ இப்படி வைத்து விட்டு வருவது சாரின் ஸ்டைல்).

அந்த மேட்ச்சில் வழக்கம் போல் தோற்றோம். ஆனாலும் இன்றும் அந்த மேட்ச் நினைவில் இருப்பதற்கு இந்த ரெண்டு நினைவுகளும் தான் காரணம்.

சம்பவம் - 3

நம்ம சாருடன் நடந்த மற்றொரு அனுபவம் சற்று வித்யாசமானது.  ஒரு முறை நீடாவில் மாலை கிரிக்கெட் சூடு பிடித்தது. ஒரு குறிப்பிட்ட பவுலர் உடம்பை குறி வைத்து பாடிலைன் பவுலிங் போட்டு மிரட்ட, எங்கள் அணி தோற்றது. மேட்ச் முடிந்து பேசி கொண்டிருக்கும் போது " அவன் அப்படி பவுலிங் போட்டிருக்க கூடாது" என்று நான் பேச, நம்ம சார் அதை மறுத்தார். " அவன் அப்படி ஒண்ணும் அடிக்கனும்னு பந்து வீசலை; யாராலையும் சொல்லி வச்சு ஒருத்தரை பவுலிங்கில் அடிக்க முடியாது தெரியுமா? " என்றார்.


" ஏன் சார் சொல்லி வச்சு அடிக்கிற மாதிரி போட முடியாது? நான் போடுவேன் சார்" என்றேன். " பார்க்கலாம்" என சொல்ல பந்தயம் ஆனது.

மறு நாள் எட்டே பேர் தான் விளையாட சென்றோம். நானும் நந்துவும் ஒரு அணியிலிருக்க, சார் எதிர் அணியில் இருந்தார். நாங்கள் விளையாடி முடித்து விட, அடுத்து அவர்கள் பேட்டிங். எப்போது வேண்டுமானாலும் மழை வருமென்கிற மாதிரி இருந்தது. முதல் ஆள் அவுட் ஆனதும் சார் இறங்கினார். நந்துவிடம் போய் " டேய் பந்தை வெளியிலே போடு அவுட் பண்ணிட போறே; அடுத்த ஓவர் நான் போடும் போது அவர் ஆடணும்" என்றேன். அடுத்த ஓவர் ..நான் தான் வீசினேன். முதல் பந்து தரையில் இறங்காமல் நேரே சாரின் இடுப்பின் மேல் இறங்கியது. அடுத்த பந்து வீசுவதற்குள் மழை கொட்ட ஆரம்பித்து விட்டது. அனைவரும் மழையில் இருந்து தப்பி ஓடி ஒரு கட்டிட நிழலில் நின்று கொண்டிருந்தோம். சாருக்கு பந்து வீசி அவரை அடித்து விட்டேனென செம கோபம். யாரும் எதுவும் பேசலை. நந்து போன்ற சிலர் சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கி கொண்டு நின்றிருந்தனர்.

நிற்க. இந்த சம்பவத்திற்கு பிறகு இன்று வரை சார் என்னுடன் பேசுவதில்லை!
Related Posts Plugin for WordPress, Blogger...