மனுஷ்ய புத்திரன் வரவேற்று பேசினார். ஆறு பிரிவுகளில் சுஜாதா விருதுகள் தர போவதாக சொன்னார்: அவை:
சிறந்த சிறுகதை நூல்
சிறந்த கவிதை நூல்
சிறந்த கட்டுரை நூல்
சிறந்த ப்ளாக்
சிறந்த நாவல்
சிறந்த சிறு பத்திரிக்கை
மார்ச் 31, 2010 க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் மே மாதம் மூன்றாம் தேதி சுஜாதா பிறந்த நாள் அன்று விருதுகள் வழங்க படும் என்றும் சொன்னார். விருதுகள் ஒவ்வொன்றுக்கும் ரூ.10,000 பரிசு என்று சொன்னதாக நினைவு (தவறு எனில் பின்னூட்டத்தில் கூறுங்கள்)
அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்திருந்தனர். .. மனுஷ்ய புத்திரன் விருது, விழா, சாப்பாடு என நிரம்பவே செலவும் மெனக்கெடவும் செய்கிறார்!! பெரிய விஷயம் இது!!
பதிவர்கள் தங்கள் கவிதை தொகுப்பையும் ப்ளாக் பற்றிய தகவல்களையும் மார்ச் 31-க்குள் மனுஷ்ய புத்திரனுக்கு அனுப்பி வையுங்கள்..
இனி விழாவில் மற்றவர்கள் பேசியது குறித்து..
தூர்தர்ஷன் முன்னாள் இயக்குனர் நடராசன்
"நான் வெளி நாடு சென்றிருந்த போது , அங்கிருந்த ஒரு புகழ் பெற்ற புத்தக கடையில் இருந்து என்ன புத்தகம் வாங்கலாம் என சுஜாதாவிற்கு தொலை பேசி மூலம் கேட்டேன்.சுஜாதா அங்கு மட்டும் கிடைக்கும் புத்தகத்தை சரியாக சொன்னார். அவற்றை வாங்கினேன். சுஜாதா குடும்பத்துடன் நான் நீண்ட கால நண்பன். சுஜாதா கிட்ட தட்ட எனது சகோதரர் போல.."
ராஜீவ் மேனன்:
"கண்டு கொண்டேன் படம் டிசம்பரில் வசனம் எழுத ஆரம்பித்தோம். காலை முழுதும் வசனம் எழுதிட்டு மாலை கர்நாடக சங்கீதம் கேட்போம். ஜனவரி மாதம் வந்ததும் சேப்பாக்கம் ஸ்டேடியம் போய் கிரிக்கெட் மேட்ச் பார்ப்போம்; பின் வசனம் எழுதுவோம்; இப்படி இயக்குனர்- வசன கர்த்தா என்றில்லாமல் ஒரு அப்பா- மகன் போல இருந்தோம்; இப்போது கூட நல்ல ராகம் கேட்கும் போது சுஜாதாவிடம் பகிர தோன்றுகிறது; சச்சின் 200 ரன் அடித்த போது சுஜாதாவிற்கு போன் செய்து பேச தோன்றுகிறது".
சந்திர சேகர் ( பெண்டா மீடியா இயக்குனர்)
"நான் கம்பெனி ஆரம்பித்த போது சுஜாதா அவசியம் அதில் இருக்க வேண்டும் என நினைத்தேன். கம்ப்யூட்டர் சம்பந்தமான விஷயங்களை மிக எளிதாக எழுத அவர் தான் சரியான நபர் என நினைத்தேன். எங்கள் அனைத்து அனிமேஷன் படங்களுக்கும் தமிழுக்கு மட்டுமல்ல ஆங்கிலத்துக்கும் அவர் தான் வசனம் எழுதினார். ஆங்கிலம் கூட மிக அற்புதமாக எழுதினார். நான் சினிமா, தியட்டேர் என ஆரம்பித்த போது வீட்டார் உட்பட யாரும் ஆதரிக்கலை; ஆனால் சுஜாதா மட்டும் இவ்ளோ பேர் எதிர்த்தால் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் என encourage செய்தார்"
திருமலை (சுஜாதாவின் தம்பி)
வெளி நாடுகளில் கூட பல எழுத்தாளர்கள் இருந்தாலும் சுஜாதா போல் சிறுகதை, நாவல், வசனம் என பல பிரிவுகளில் அசத்தியவர் யாரும் இருந்ததாக எனக்கு தெரியலை; அத்தோடு பல விதமாய் எழுதினால் ஆழமாய் எழுத முடியாது என்பார்கள்; ஆனால் சுஜாதா பல பிரிவுகளில் ஆழமாய் எழுதினார்; அப்படி பட்ட மனிதரை நம் மருத்துவர்களால் காப்பாற்ற முடியாதது எனக்கு வருத்தமே; குறைந்தது அந்த மூளையை எடுத்து preserve செய்திருக்க வேண்டும்!
நடிகர்/ இயக்குனர் பார்த்திபன்:
"பல பிரச்சனைகளை சுஜாதாவிடம் தான் அட்வைஸ் கேட்பேன்; கிறுக்கல்கள் புத்தகம் ஆன்லைனில் வெளியிடப்பட்டு பிரச்சனை ஆனபோது கூட பேச சுஜாதா இல்லையே என feel செய்தேன். இந்த விருதுகளுக்கு ஆகும் செலவில் மனுஷ்ய புத்திரனுக்கு தேவையான உதவிகள் (sponsor) செய்ய தயார்"
இயக்குனர் ஷங்கர் பேசும் போது தனது படங்களில் அவர் எழுதிய வசனங்களில் தனக்கு பிடித்த வசனங்களை ( அந்நியன், இந்தியன், சிவாஜி) பற்றி பேசினார். மேலும் ஸ்டோரி டிஸ்கஷனில் பல முறை எப்படி எடுத்து செல்வது என தடுமாறிய போது சுஜாதா எப்படி உதவினார்; எப்படி motivate செய்தார் என கூறினார். எந்திரனுக்கும் சுஜாதா வசனம் எழுதி தந்ததாகவும் அதிலிருந்து ஒரு காட்சியும் சொன்னார். ரஜினி வேலை வேலை என வீட்டை மறந்து இருப்பாராம். ரொம்ப நாள் கழித்து வீட்டுக்கு தாடியுடன் வர, அவர் அம்மா " என்னடா லீவில வந்த ரிஷி மாதிரி இருக்கே" என்பாராம் !
இயக்குனர் வசந்த் சுஜாதாவை தான் சந்தித்து பேச பல முறை முயன்று தோற்று, கடைசியில் பெங்களூரில் பார்த்து, ஒன்னரை மணி நேரம் பேசியதை நகைச்சுவையாக ஒரு சினிமா போல், சஸ்பென்ஸ் உடன் பேசினார்.
மதன் விழா இன்னும் பெரிய அளவில் நடத்தலாம் என்றும் மனுஷ்ய புத்திரன் மற்ற பிரபலங்களிடம் இதற்கான உதவிகள் கேட்டு பெறலாம் என்றார். ஜூனியர் விகடன் புத்தகத்தில் சுஜாதாவின் "ஏன் எதற்கு எப்படி" வர துவங்கிய கதையை பகிர்ந்து கொண்டார்.
மேலும் எழுத்தாளர் இந்திரா பார்த்த சாரதி, கவிஞர் ஞான கூத்தன் போன்றோரும் பேசினர்.
விழாவில் பார்த்த பதிவர்கள் :
டோண்டு ராகவன் (பெரிய சைஸ் நோட்டு வச்சி எழுதிட்டு இருந்தார்; இங்கு இல்லாத மற்ற தகவல் அங்கு நீங்கள் பாக்கலாம்)
கேபிள் (எப்படிய்யா சுஜாதாவை சீரியஸ் ரைட்டர் இல்லைன்னு சொல்லலாம் என என் சட்டையை பிடிச்சு உலுக்காத குறை தான்)
நரசிம் (நாலு நாள் தாடியில் தல வித்யாசமா இருந்தார்; கேட்டா Month end; வேலை அதிகம் என்றார்)
புது மாப்பிள்ளை அதிஷா மற்றும் லக்கி
பைத்திய காரன் (மிக சீரியஸா கவனிச்சார்)
சங்கர் (நானும் இவரும் விழா முடிந்து திரும்ப வர, வண்டி பங்கசர்; இனிமே என்னை வண்டியில் ஏத்துவார்ங்குறீங்க ?)
டம்பி மேவி (ரொம்ப சீக்கிரமே எஸ்கேப்)
சுரேஷ் கண்ணன் (முதல் தடவை பார்த்தேன் இந்த சிநேகமான மனிதரை)
மேலும் அதியமான், டாக்டர் ப்ருனோ மற்றும் பலர். அட சொல்லலையே சாரு கூட வந்திருந்தார்!!
திருமதி சுஜாதாவிடமும் , அவர் மூத்த மகனிடமும் சற்று நேரம் பேசி விட்டு நானும் சங்கரும் விடை பெற்றோம்.
ஒரு எழுத்தாளர் இறந்து இரண்டு வருடம் ஆன பின்னும் இத்தனை பேர் அவர் நினைவாக குழுமி அவரது நினைவுகளை பகிர்ந்தது, மிக நெகிழ்வான உணர்வுகளை தந்தது!!