Wednesday, December 30, 2009

வானவில் - சென்னை பதிவர் சந்திப்பும், N . T திவாரியும்

வானவில் என்ற தலைப்பில் ஒவ்வொரு வாரமும் சில எண்ணங்களை உங்களுடன் பகிர உள்ளேன். ஏழு வண்ணங்கள் போல் ஏழு விஷயங்கள்... இதே தலைப்பில் தான் இருக்கும் என்று கட்டாயம் இல்லை. ஏனெனில் " மாறுதல் ஒன்றே மாறாத ஒன்று.."

ஒரு சந்திப்பு

பதிவர் உலகநாதன் சென்னை வந்திருந்தார். மலேசியாவில் பணி புரியும் இவர் முதல் முறை பதிவுலக நண்பர்கள் பலரை சந்தித்தார். நண்பர் தண்டோரா அலுவலகத்தில் சந்திப்பு. கேபிள், தண்டோரா, பொன். வாசுதேவன், பட்டர்பிளை சூரியா, கார்க்கி, அதி பிரதாபன், பைத்திய காரன் முதலானோர் சந்தித்தோம். பலரை நானும் இன்று தான் சந்திதேன்.

கார்க்கி எழுத்தில் இருப்பதற்கு சற்று குறைவான குசும்புடன்.. உலகநாதன் உடல் நலத்துக்கு மட்டும் வாகிங், யோகா என தினம் ரெண்டு மணி நேரம் ஒதுக்குவாராம். பார்த்தாலே தெரிகிறது. (நான் வாகிங் ஆரம்பிப்பது மழை பெய்தால் விடுவது ..வழக்கம் போல்..)

உலக நாதன் அனைவருக்கும் ஓர் சிறு நினைவு பரிசுடன் வந்திருந்தார். அன்பிற்கு நன்றி உலக நாதன்!!

கலக்கலான அரட்டை.. வேட்டைக்காரன் பற்றியும் ஆயிரத்தில் ஒருவன் ட்ரைலர் பற்றியும் பிரித்து மேய்ந்தனர். கார்க்கி , கேபிள் பாட... .. மிக இனிமையாய் மூன்று மணி நேரங்கள் போனது.

சந்திப்பில் எடுத்த புகை படங்கள் நண்பர்கள் யாரேனும் விரைவில் upload செய்வார்கள் என நினைக்கிறேன்.

வாரம் ஒரு சட்ட சொல் – இந்த வாரம்- Caveat

முதலில் ஒரு உதாரணம்: நீங்கள் உங்கள் நிலத்தில் ஒரு அலுவலகம் அல்லது வீடு கட்டுகிறீர்கள். பக்கத்து நிலத்து சொந்த காரருக்கும் உங்களுக்கும் ஏதோ சண்டை. நீங்கள் கட்டடம் கட்டுவதை அவர் எதிர்க்கிறார். இவர் இதற்காக கோர்டுக்கு போய், நீங்கள் கட்டடம் கட்டுவதை நிறுத்த இடை கால உத்தரவு (interim order) பெறலாம் என உங்களுக்கு நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கோர்ட்டுகள் பெரும்பாலும் இரு பக்கமும் கேட்டு தான் நீதி வழங்கும். ஆயினும் அவசர நேரத்தில் ஒரு party-யை மட்டும் கேட்டு விட்டு interim order வழங்க வாய்ப்பு உண்டு. நீங்கள் உங்களை பாது காக்க என்ன செய்யலாம்? கோர்ட்டில் நீங்கள் ஒரு caveat file செய்யலாம். இவ்வாறு செய்தால் கோர்ட் உங்களுக்கும் தகவல் தந்து, உங்கள் தரப்பையும் கேட்டு தான் எந்த ஆர்டரும் தர முடியும். ஆங்கிலத்தில் proactive என்பார்களே அதற்க்கு ஒரு சிறந்த உதாரணம் caveat file செய்தல்.

ரசித்த SMS/ QUOTE:

“On no account brood over your errors. Take the learning alone. Rolling over the muck is not the best way of getting clean”.

ஆனந்த் என்று ஒரு நண்பர். முன்பு எனது colleague. தவறாமல் ஒரு நல்ல மெசேஜ் தினம் காலை அனுப்புவார். நன்றி ஆனந்த்

ஒரு தகவல்

குளோபல் வார்மிங் பற்றிய ஒரு Talk show-வில் வசந்த் டிவியில் பேசியுள்ளேன். நிகழ்ச்சி புத்தாண்டு (1/1/2010) அன்று இரவு 8.30 முதல் 9.30 வரை வசந்த் டிவியில் ஒளி பரப்பாகும். இதன் தொடர்ச்சி சனி மற்றும் ஞாயிறு (2/1/2010 & 3/1/2010) இரவு எட்டரைக்கு அரை மணி நிகழ்ச்சியாக வரும். முடிந்தால் காணுங்கள்.

இந்த நிகழ்ச்சியில் பேச பல அற்புதமான தகவல்கள் தந்த சக பதிவர் ஜெய மார்தாண்டனுக்கு நன்றிகள் பல.

ரசித்த கவிதை

திறந்த வாயிற்படியில்
ஒரு முகம் தோன்றி
ஏதேனும் உரைக்கட்டும்
பார்க்கும் போது
பூட்டில்லாமல் இருத்தல் வேண்டும்

- மறைந்த நண்பன் லக்ஷ்மணன்

நாட்டு நடப்பு

திவாரி என்ற மனிதர்.. நமக்கு பக்கத்தில் ஆந்திராவில் கவர்னரா இருந்தார். ஊரே தெலுங்கானாவில் பத்தி எரியும் போது மனிதர் பெட் ரூமில் ரெண்டு பெண்களுடன் குஜாலா இருந்திருக்கார். இப்போ பதவி போய் சொந்த ஊர் போய்ட்டார் ..இவருக்கு வயது அதிகமில்லை ஜென்டில் மேன் .. 86 . அவரிடம் இரு கேள்வி:

1. ஏனுங்க இந்த வயசிலுமா??
2. ஆமாம் இந்த வயசில என்ன செய்வீங்க?


கிசு கிசு (100 % பொய்; 0 % நிஜம் )

அவதார பெயர் கொண்ட பதிவரை அவரது கார் கம்பனி மும்பைக்கு இட மாற்றம் செய்துள்ளதாம். மும்பை போனால் அவர் எழுதுவது கூடுமா குறையுமா என இரு பதிவர்கள் சரக்கடித்தவாரே, காரசாரமாக டிஸ்கஸ் செய்துள்ளனர்.

***
நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!!

Tuesday, December 29, 2009

நீயா நானாவில் திரு & திருமதி மோகன் குமார்

எனது ஹாபிகளில் ஒன்று டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது. திருமணத்துக்கு முன் அரட்டை அரங்கம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பேசியவன், அதன் பின் மனைவிக்கு அடங்கிய கணவனாக, அலுவலகம் - விட்டால் வீட்டு வேலை என கடந்த பத்து வருடங்களை ஓட்டி விட்டேன்.

இந்த வருடம் ஒன்றல்ல இரண்டல்ல, இத்தனை வருடங்களாக விட்டதற்கும் சேர்த்து ஆறு TV நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டேன்!! அது பற்றிய சிறு தொகுப்பே இது.

ஆறில் மூன்று மட்டும் இப்போது:

1. இமயம் டிவி - புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி

இந்த Talk show நிகழ்ச்சி 2009 ஜனவரி ஒன்றாம் தேதி இமயம் டிவியில் ஒளி பரப்பானது.( என்னது இமயம் டிவி ன்னு ஒன்னு இருக்கான்னா கேக்குறீங்க? நோ நோ அப்டியெல்லாம் கேக்க படாது!!)

இது வரை கலந்து கொண்டதில் மிகவும் மன நிறைவுடன் பேசிய ஒரு நிகழ்ச்சி. தலைப்பு: இந்தியா வல்லரசாக வேண்டுமா? நல்லரசாக வேண்டுமா? இந்தியா நல்லரசாக வேண்டும் என பேசினேன். இன்னும் கல்வி, Infrastructure,Healthcare போன்றவற்றில் நாம் எந்த அளவு பின் தங்கியுள்ளோம் என்றும், முதலில் இதில் முன்னேற வேண்டிய அவசியம் பற்றியும் பேசினேன்.

குறிப்பாக வல்லரசு என்றால் அதற்கான defintion , என்னென்ன இருந்தால் வல்லரசாக முடியும்; இதில் பல ingredients இருந்தாலும் முக்கியமாக நாம் இன்னும் 65% தான் கல்வி அறிவு (அதாவது எழுத படிக்க) பெற்றுள்ளோம், வல்லரசுகள் அனைத்தும் கிட்டத்தட்ட கல்வி அறிவு பெற்றவை. கல்வி அறிவு அனைவரும் பெற்றால் பின் அவர்கள் ஏதாவது வேலை - தானாகவோ, நிறுவனத்திலோ பெற முடியும்.

பேசுவதோடு இல்லாமல், நானும் நண்பர்களும் கடந்த ஏழெட்டு வருடங்களாக கிட்டத்தட்ட 10 ஏழை குழந்தைகளை படிக்க வைப்பதையும், இதனையே முக்கிய நோக்கமாக கொண்டு நண்பர்கள் நடத்தும் "துணை" என்ற அமைப்பு பற்றியும் கூறினேன்.

புத்தாண்டின் முதல் வேலை நாள் ஜனவரி 2. எங்கள் நிறுவனத்தின் Finance Head வெங்கடரமணி (SVR) department-ல் எல்லோரையும் கூப்பிட்டு ( 20 பேர்) ஒரு மீட்டிங் நடத்துவார். இதில் நான் கலந்து கொண்டு பேசிய டிவி நிகழ்ச்சி பற்றி மட்டும் 15 நிமிடம் பாராட்டி பேசினார். மகிழ்ச்சியாய் இருந்தாலும் வெட்கத்தில் நாணி கோணி விட்டேன்.


2. நீயா நானாவில் திரு & திருமதி மோகன் குமார்

நீயா நானாவில் பங்கேற்க ரொம்ப காலமாகவே எண்ணம். இந்த வருடம் அது கை கூடியது. என்னுடைய House boss-ம், நானும் கலந்து கொண்ட show - சென்ற July 26th -அன்று ஒளி பரப்பானது.

முதலில் TV-க்கெல்லாம் வர மாட்டேன் என்று முரண்டு பிடித்த house boss-ஐ, நீயா நானா co-orinator என்னமோ பேசி சம்மதிக்க வைத்தது செம ஆச்சர்யம்.

என்னிடம் பேசும் போதே, அந்த பெண்ணிடம் நான் " எங்க madam-வர மாட்டாங்க; நான் மட்டும் தான் வருவேன் " என்றேன்.

"இது Husband- wife நிகழ்ச்சி. வந்தால் ரெண்டு பெரும் வரணும்; நான் அவங்க கிட்டே பேசி ஒத்துக்க வைக்கிறேன்".

அந்த பெண் அசராமல் House boss - எண் வாங்கி, " உங்க வீட்டு காரர் ரெண்டு பேரும் வர்றதா ஒத்துக்கிட்டார். நாளை மறு நாள் shooting. நீங்க வரலைன்னா cancel-ஆகிடும்" னு அடிச்சு விட, நம்ம House boss ஷூட்டிங் வர ஒத்து கிட்டார்.

தலைப்பு சிக்கனம் Vs தாராளம்... கணவன் மனைவியில் யார் சிக்கனம், யார் தாராளம் என்பது பற்றி. நாங்கள் இருவருமே சிக்கனம் என சொன்னால், இருவரில் ஒருவராவது கொஞ்சம் தாராளமா இருப்பீங்க யோசிங்கன்னுட்டங்க. ஹவுஸ் பாஸ் தான் சிக்கனம் என பேசுவதாகவும் என்னை தாராளம் என பேசும் படியும் பணித்தார். (என்னுடைய சிக்கனம் பற்றி பேசினால் நம்ம இமேஜ் - damage ஆகிடும்னு நல்ல எண்ணம் தான் இதுக்கு காரணம். வாழ்க ஹவுஸ் பாஸ்!!)

கோபி நாத் நிகழ்ச்சியை சிறப்பாகவே நடத்துகிறார். நல்ல மெமரி பவர். தமிழும் அழகு. என்ன சில நேரம் நம்மை பேச விடாமல் சற்று dominate செய்கிறார். நாங்கள் பேசியதன் ஒரு பகுதி மட்டும் இந்த லிங்க் உங்கள் browser-ல் பொருத்தி காணுங்கள்.




இதில் முதல் ஜோடியாக பேசுவதுதான் நானும் என் வீட்டம்மாவும்.(கிரெடிட் கார்ட் மேட்டர்)

நீயா நானாவுக்கு இருக்கும் reach அதிசயிக்க வைக்கிறது . நிகழ்ச்சி நடக்கும் போதே பல நண்பர்களிடமிருந்து SMS மற்றும் தொலை பேசி அழைப்புகள்; மறு நாள் காலை நான் வாக்கிங் செல்லும் போது சிலர் பார்த்து நேத்து டிவியில் வந்தீங்களே என கேட்டது ஆச்சரியம் !!

3. சினி குவிஸ் நிகழ்ச்சி - இமயம் தொலை காட்சி

எனது colleague கோவியுடன் கலந்து கொண்ட நிகழ்ச்சி இது.நிகழ்ச்சிக்கு செல்லும் முன் ஒரு பார்க் சென்று இருவரும் கையில் எடுத்து வந்த பேப்பர்கள் வைத்து நிறைய prepare-செய்தோம். குறிப்பாய் Dumb sherad-க்கு எப்படி நடிப்பது என நிறைய discussion.(இப்போது நினைத்தால் சிரிப்பு வருகிறது )

நிகழ்சியின் முதல் இரு ரவுண்ட் வரை எல்லா கேள்விகளுக்கும் சரியாக பதில் சொல்லி முன்னணியில் இருந்தோம். கடைசி ரவுண்டான Dumb sherad-ல் ரெண்டு படங்களும் கண்டு பிடிக்காமல் சொதப்பி ரெண்டாம் இடம் வந்தோம். முதல் பரிசு பெற்றவர்க்கு என்ன பரிசு தெரியுமா? வெறும் கை தட்டல் தான் !!

இதில் ஆன்டி க்ளைமாக்ஸ் என்னவென்றால் நிகழ்ச்சி ஒளி பரப்பானதை நாங்கள் இருவருமே பார்க்க வில்லை. நிகழ்ச்சியின் விளம்பரம் மற்றும் டைட்டில் போது மட்டும் இருவரையும் காட்டுவது கண்டு நிம்மதி அடைய வேண்டியாதாயிற்று!!

நிற்க. ஆறு நிகழ்ச்சியும் ஓன்றாய் சொன்னால் உங்களுக்கு போர் அடிச்சிடும். எனவே அடுத்த மூணு நிகழ்ச்சி பற்றி தனியே எழுதுகிறேன் . இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. இமயம் மாதிரி இன்னொரு முன்னணி (!!!!) சேனலில் நான் கலந்து கொண்ட நிகழ்ச்சி வரும் ஜனவரி ஒன்று ஒளி பரப்பாகிறது. முடிந்தால் ஒளி பரப்பாகும் சரியான நேரத்துடன் அடுத்த பதிவில் கூறுகிறேன்....

Saturday, December 26, 2009

2009 - Blogger விருதுகள் + இந்த வருடத்தின் சில சிறந்த பதிவுகள்

இந்த வருடத்தின் பிற் பகுதியிலிருந்து தான் அதிகம் வாசிக்கவம், எழுதவும் துவங்கினேன். எனினும் வலை உலகில் இந்த வருடத்தின் சில குறிப்பிடத்தக்க பதிவர்களும், நான் ரசித்த சில பதிவுகளும் உங்களுடன் பகிர்கிறேன்.

இதற்கான பல்வேறு பரிந்துரை செய்த விக்கி, கேபிள், பா. ரா, சித்ரா உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்.

முதலில் சில விருதுகள். சில காமெடியாக இருக்கும் சில சீரியசாக இருக்கும். எது காமெடி, எது சீரியஸ் என்பதை உங்கள் ஊகத்துக்கே விட்டு விடுகிறேன்.

2009 BLOGGER AWARDS:

சிறந்த ஹீரோ : நரசிம் (இந்த மனுஷனை ஆம்பளைங்களே சைட் அடிக்கிறாங்க.. நற.. நற..)

சிறந்த பின்னணி பாடகர்: அப்துல்லா (வேற பிளாக்கர் யாரும் சினிமால இந்த வருஷம் பாடலை.. )

சிறந்த கலை இயக்குனர் : அதி பிரதாபன் (நிறைய பேருக்கு ப்ளாக் வடிவமைச்சு குடுத்திருக்கார்)

சிறந்த தொடர் : சினிமா வியாபாரம் (என்டர் கவிஞர், சினிமா பதிவர், யூத்து என அழைக்கப்படும் கேபிள் சங்கர்)

சிறந்த சிரிப்பு பாத்திரம்: "ஏழு " (கார்க்கி)

சிறந்த வில்லன்: ஜெட் லி (குறிப்பா சினிமா காரங்களுக்கு வில்லன்.. முத நாளே படம் பாத்துட்டு விமர்சனத்தில் கிழிப்பதால்)

சிறந்த இரட்டையர் : சிவ ராமன் மற்றும் ஜ்யோவ்ராம் சுந்தர் (கதை பட்டறை, கவிதை போட்டி என கை காசு செலவழித்து ப்ளாக்கர்களை ஊக்குவிப்பதால்)

சிறந்த ஒளி ஓவியர்: ஆதி @ தாமிரா & முரளி குமார் பத்மநாபன்

சிறந்த ஆராய்ச்சியாளர்: முரளி கண்ணன் ( சினிமா கிரிக்கட் இவற்றோடு கொஞ்சமா மெக்கானிக்கல் ஆராய்ச்சியும் செய்றார்)

சிறந்த புது முகம் : பா. ரா @பா. ராஜா ராம் (ஆறு மாதத்தில் கவிதை உலகை கலக்கியவர்)

பின்னூட்ட புயல்கள்: 1. ஜெகன் நாதன் (சில blog-ல் மிக நீ..ண்ட பின்னூட்டம் போடுவார்)

2. ராஜு (எதிர் கவுஜ ஸ்பெசளிஸ்ட்)

3. நையாண்டி நைனா

சிறந்த பெண் பதிவர் : வித்யா - Scribblings ( Variety-ஆக எழுதுவதால்) (பிற தோழிகள் கோபிக்க வேண்டாம். இந்த தேர்வு கேபிள் சங்கருடையது)

சிறந்த பப்ளிஷர் : அகநாழிகை வாசுதேவன் (நம்ம பிளாக்கர்களை நம்ம்பி புக் போடுறவர்)

சிறந்த யூத்: அனுஜன்யா (சார் உங்களுக்கு 48 வயசுன்னு சொல்லவே முடியாது:))))

********************

இந்த வருடத்தில் வெளி வந்த சில குறிபிடத்தக்க பதிவுகள்:

தமயந்தியின் இந்த கட்டுரை:(இதற்கு தலைப்பே இல்லை!!)

அக்கா (நரசிம்)

ஷோபா என்னும் அழியாத கோலம் - மாதவராஜ்

சிறுகதை (தேர்வு செய்தது பா. ரா)

1. காமராஜின்"மருதோன்றி நினைவுகள்"

2. அமித்தம்மாவின்,"சாமிவேலுவின் மகன்"

கவிதைகள்

1. கரையேறாத கனவொன்று.. நிலா ரசிகன்

2. தகப்பனாக இருப்பது - பா. ரா

3. யாருமற்ற கருவறை - நேசமித்திரன்
*******

மேலே குறிப்பிட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். நிறைய எழுதுங்கள், உங்கள் எழுத்தின் மூலம் பலரை நீங்கள் மகிழ்விக்கிறீர்கள். தொடருங்கள்..

இந்த பதிவு பிடித்திருந்தால் தமிழிஷ் மற்றும் தமிழ் மணத்தில் ஓட்டும், பின்னூட்டமும் இடுங்கள்! நன்றி..

Friday, December 25, 2009

எழுத்துக்கு அங்கீகாரம்

ஒவ்வொரு மனிதனும் அங்கீகாரம் எதிர் பார்க்கவே செய்கிறான். எனது எழுத்துக்கும் இதோ சில recognition:

*******

நண்பர் குறும்பனிடமிருந்து ஒரு மடல். இதோ அவர் எழுத்துக்களில்:

ஹலோ மோகன் சார்,

நல்லாருக்கீங்க‌ளா? டாப் 10 பாட‌ல்க‌ள், ப‌ட‌ங்க‌ள்னு போட்டு அச‌த்துறீங்க‌. உங்க‌ அள‌வுக்கு இல்லாட்டாலும் அதுல‌ பாதியாவ‌து ப‌ண்ண‌லாம்னு, நானும் க‌ள‌த்துல‌ இற‌ங்கிட்டேன். என்னோட‌ ஃபேவ‌ரைட் ப‌திவ‌ர்க‌ள் எழுதின‌துல‌ இந்த‌ வ‌ருஷ‌த்தோட‌ (என‌க்கு புடிச்ச‌) டாப் 5 பதிவுகளை செல‌க்ட் ப‌ண்ணியிருக்கேன்.

கொஞ்ச‌ம் க‌ஷ்ட‌ப்ப‌ட்டு ஃபில்ட‌ர் ப‌ண்ணின‌துல‌ 5க்கு ப‌தில் 6 வ‌ந்திருக்கு. கூடவே ஏன் என‌க்கு இந்த‌ ப‌திவுக‌ள் புடிச்சிருக்குங்க‌ற‌துக்கான‌ கார‌ண‌ம்.

ஜென் க‌தைக‌ள் ‍

முத‌ல் க‌தைக்கு நீங்க‌ சொல்லியிருக்க‌ற‌ க‌ருத்து ந‌ல்லாயிருந்த‌து


வ‌ழ‌க்க‌றிஞ‌ர் போராட்ட‌ம் சில‌ பார்வைக‌ள்....

பொது ம‌க்க‌ள் பார்வையில் நீங்க‌ள் க‌ருத்து சொல்லிய‌ வித‌ம் அருமை....(ச‌சிகுமார் ஸ்டைலில்)உங்க‌ நேர்மை என‌க்கு புடிச்சிருக்கு

ஏல‌கிரி - சென்னைக்க‌ருகே ஒரு hill station

ஏல‌கிரி போக‌ற‌துக்கு ஒரு தூண்டுத‌லாக‌வும், அதே ச‌ம‌ய‌ம் ப‌ய‌னுள்ள‌‌ விவ‌ர‌ங்க‌ளோடும் இருந்த‌து இந்த‌ ப‌திவு

க‌ண‌வ‌ன் - ம‌னைவி ச‌ண்டை (யூத் விக‌ட‌னில் வெளியான‌து)

உங்க‌ளோட‌ ஹ்யூம‌ர் சென்ஸ் அருமையாக‌ வெளிப்ப‌ட்ட‌ ப‌திவு

க‌ன‌வு க‌ன்னிக‌ள்

த‌ங்க‌ த‌லைவி த‌ம‌ன்னாவுக்காக‌வே இந்த‌ ப‌திவு, ஆனா ஸ்னேகாவை பின்னுக்கு த‌ள்ளிய‌தில் கொஞ்ச‌ம் வ‌ருத்த‌ம்தான்:(

பிர‌ப‌ல‌ ப‌திவ‌ர்க‌ளின் மாபெரும் த‌வ‌றுக‌ள்..ப‌ட‌ங்க‌ளுட‌ன்

யாரையுமே புண்ப‌டுத்தாத‌, ஆனால் ப‌டிக்கும்போது ஒரு ஸ்மைலை வ‌ர‌வ‌ழைக்கும் உங்க‌ள் எழுத்துக்காக இந்த‌ ப‌திவு. குறிப்பாக‌ அப்துல்லா அவ‌ர்க‌ளை ப‌ற்றி நீங்க‌ குறிப்பிட்டிருந்த‌து ஸோ நைஸ்:) பாருங்க‌, நானும் அவ‌ரை மாதிரியே ஸ்மைலி போட்டுட்டேன்

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினற்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்:)

என்றும் அன்புடன்

குறும்பன்
*********
நன்றி குறும்பன். மிகுந்த மகிழ்ச்சி. அனைத்து பதிவுகளும் தேடி வாசித்ததுடன் சரியான லிங்குகளும் அனுப்பி நெகிழ வைத்து விட்டீர்கள்

உங்களில் பலர் எனது பதிவுகளை சமீபமாக தான் வாசித்திருப்பீர்கள். குறும்பன் சொன்னதில் சில பதிவுகள் நீங்கள் வாசிதிராவிடில் அவர் தந்துள்ள லிங்க் மூலம் வாசித்து பாருங்கள். நன்றாக இருந்தால் குரும்பனுக்கு நன்றி சொல்லலாம்; நல்லா இல்லா விடில் எழுதிய என்னை திட்டலாம் :))

*********

நண்பர் பா. ரா நமக்கு ஒரு விருது தந்திருக்கிறார்.




கூடவே "திறந்த மனதுடன் சக பயணியை சிலாகிக்கும் மோகனுக்கு" என்று சொல்லியிருக்கிறார். நன்றி பா. ரா.

******

இவர்கள் இருவரும் மகிழ்வித்த அதே அளவு மகிழ்ச்சி நண்பர் அப்துல்லா சென்ற பதிவின் பின்னூட்டத்தில் "சிறந்த புது முக பதிவர் மோகன் குமார்" என்று எழுதிய போது கிடைத்தது. கூடவே கேபிள் தான் வழி மொழிவதாக வேறு சொல்லி விட்டார்.

மிகுந்த மகிழ்ச்சி.
******
சிறந்த படங்கள் மற்றும் சினிமா சம்பந்த பட்ட விருதுகள் எழுதியது போல, பதிவர்களுக்கான வித்யாசமான விருதுகள், மற்றும் bloggers எழுதியதில் நான் ரசித்த சில நல்ல கட்டுரை/ கவிதை/ சிறுகதை வெகு விரைவில் ஒரு பதிவில் பகிர்ந்து கொள்வேன்.

இந்த பதிவு பிடித்திருந்தால் ஓட்டும், பின்னூட்டமும் தந்து ஊக்குவியுங்கள். நன்றி

Thursday, December 24, 2009

2009-சிறந்த 10௦ பாடல்கள்+ மற்ற விருதுகள்



2009 - சிறந்த 10 பாட்டுக்கள்:

10.கந்த சாமி - மியாவ் மியாவ் பூனை (குட்டி பசங்களுக்கு கேட்க, நமக்கு பார்க்க பிடிச்ச பாட்டு)
9. த.நா. அ.ல 4077 - ஆத்திச்சூடி
8.ஈரம்- மழையே மழையே
7. ஆதவன் - வாராயோ.. வாராயோ..
6. வேட்டை காரன் - கரிகாலன் காலை போல
5. கண்டேன் காதலை - ஓடோ ஓடோ ஓடோடி போறேன்
4. சர்வம் - சுட்டா சூரியனை
3 . சிவா மனசுல சக்தி - ஒரு கல் ஒரு கண்ணாடி
2. அயன் - விழி மூடி யோசித்தால்
1. நினைத்தாலே இனிக்கும் - அழகாய் பூக்குதே

*********

சிறந்த கதை & வசனம்: பாண்டி ராஜ் (பசங்க)



சிறந்த திரை கதை:



சமுத்திர கனி (நாடோடிகள்)

சிறந்த இயக்கம்:

பாண்டி ராஜ் (பசங்க)/
அறிவழகன் (ஈரம்)

சிறந்த இசை அமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ் (அயன்)/ விஜய் அந்தோனி (நினைத்தாலே இனிக்கும்)

சிறந்த பாடலாசிரியர்:


நா. முத்து குமார் (அயன், சிவா மனசுல சக்தி)


சிறந்த புது முக இயக்குனர்: அருண் வைத்யநாதன் (அச்சமுண்டு அச்சமுண்டு ) (இவர் ஒரு blogger - கொஞ்சம் அந்த பாசம்)

சிறந்த பின்னணி பாடகர்:


கார்த்திக் (விழி மூடி/ ஹசிலி ப்சிலி )

சிறந்த பின்னணி பாடகி: ஜானகி ஐயர் (அழகாய் பூக்குதே)

சிறந்த புதுமுக நடிகர்: விமல் (பசங்க)

சிறந்த புதுமுக நடிகை : அனுஜா ஐயர் (உன்னை போல் ஒருவன்/ நினைத்தாலே இனிக்கும்)

சிறந்த நடிகர்: எனக்கு யாரும் தோணலை. நீங்களே சொல்லுங்களேன்!!

சிறந்த நடிகை :



பூஜா (நான் கடவுள்)

சிறந்த நடிகை (சிறப்பு பரிசு) : தமன்னா (அயன்) (ஹலோ.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க. கலைஞர் உளியின் ஓசைக்காக "நமக்கு நாமே" திட்டத்தின் படி விருது வாங்கலையா? நாம கூட தலைவிக்கு குடுக்காட்டி வேற யார் குடுப்பா?)

Wednesday, December 23, 2009

2009- சிறந்த 10 படங்கள்


புத்தாண்டுக்கு எட்டே நாள் இருக்கும் நிலையில் இதோ புத்தாண்டு ஸ்பெஷல் தொடங்கி விட்டது.. இந்த வரிசையில் முதலாவதாக எனக்கு பிடித்த 10 படங்கள்.

இதன் தொடர்ச்சியாக சிறந்த 10 பாடல்கள், சிறந்த நடிப்பு, இயக்கம், etc இன்னொரு பதிவாக விரைவில் வெளி வரும்.

10 நான் கடவுள்



படம் பற்றி நண்பர் பைத்திய காரன், நர்சிம்மின் விமர்சன பின்னூட்டத்தில் சிலாகித்து எழுதியிருந்தார். அது நரசிம் விமர்சனத்தை விட நன்றாயிருந்தது. உண்மையை சொல்லனும்னா பைத்திய காரன் பின்னூட்டம் தந்த அனுபவம் இந்த படம் எனக்கு தர வில்லை. தமிழில் இது ஒரு வித்யாசமான படம் என்ற அளவில் தான் இதனை நான் சேர்க்கிறேன்.

9. சிவா மனசுல சக்தி


CD -யில் ரொம்ப நாள் கழித்து பார்த்தாலும் படம் ஓரளவு பிடித்திருந்தது. ரெண்டு பாட்டு அருமை. படத்தின் ஹீரோயின் தான் பெரிய மைனஸ். நடிக்கவும் தெரியலை. எந்த features-ம் நல்லா இல்லை. It falls under "We can see this film once" category.

8. யாவரும் நலம்

மாதவன் நடித்த வித்யாசமான த்ரில்லர் படம். A சென்டரில் நன்கு ஓடியது.

7. உன்னை போல் ஒருவன்

மொழி மாற்று படம் என்பதால் சற்று பின் தங்கி வருகிறது. ஒரே நாளில் நடக்கும் கதை - ஒரு வித்யாசமான ட்ரீட்மேன்ட். எனக்கு மோகன் லால் நடிப்பு பிடித்தது. போட்ட பணம் plus some profit எடுத்திருப்பார்கள் என நினைக்கிறேன்.

6. பேராண்மை

ஜன நாதன் இயக்கத்தில் பழங்குடியினரின் வாழ்கையை பற்றி ஆழமாக பேசிய படம். ஜெயம் ரவி உழைப்பு ......ஆச்சரியம் + நன்று.

5. வெண்ணிலா கபடி குழு



நல்ல கதை; சொன்ன விதமும் அருமை. சென்னை -28 க்கு பிறகு விளையாட்டை அடிப்படையாக வைத்து வெற்றி பெற்ற இன்னொரு படம்.

**********

இனி நான் மிக என்ஜாய் செய்த, இந்த வருடம் மிக பிடித்த 4 படங்கள்:

4. அயன்

மிக விறு விறுப்பான கதை. சூர்யாவின் growth ஆச்சரியப்பட வைக்கிறது. நடிக்க வந்த போது ஆடவும், முக பாவமும் செய்ய தெரியாத சூர்யாவா இது!! K.V. ஆனந்த் ஒரு intelligent டைரக்டர். அது அவர் இயக்கிய இரு படங்களிலும் தெரிகிறது. அற்புதமான பாடல்கள். Picturization-ம் அருமை. இவற்றுக்கும் மேல்.. தமன்னா நமக்கு தலைவியான படம்..!! படத்தின் கடைசியில் ரொம்ப இழுத்துட்டாங்க. அதான் மைனஸ். இந்த வருடத்தின் செம ஹிட் படங்களுள் இது ஒன்று.

3. ஈரம்



பொதுவாய் நான் பேய் மற்றும் திரில்லர் படங்கள் பார்ப்பதை தவிர்ப்பேன். காசு குடுத்து பயந்துட்டு வரணுமா என்பது நம்ம பாலிசி. ஆனால் என்னை அதிகம் கவர்ந்த த்ரில்லர் படங்களில் இது ஒன்று. காரணம் இயக்குனர் அறிவழகன். ஒவ்வொரு முறையும் நிகழ் காலத்துக்கும், flash back-க்கும் மாறி மாறி இயல்பாய் சென்ற விதம் - simply superb. ஆதி நடிப்பு ஆச்சரிய பட வைத்தது. இந்த படம் ஏதேனும் ஆங்கில பட தழுவலா என அறியேன். அப்படி இல்லது இருந்தால் இன்னும் மகிழ்ச்சி.

2. நாடோடிகள்



அட்டகாசமான படம். திரை கதை.. என்னா ஸ்பீட் !! இடை வேளைக்கு முந்தய sequence- முடிந்த போது எழுந்து போக மனசில்லாமல் விக்கித்து அமர்ந்திருந்தது நினைவுக்கு வருகிறது. சமுத்திர கனிக்கு third time lucky -ஆக அமைந்த படம். (அவருக்கு முதல் ரெண்டு படமும் failure). சசி குமார் காட்டில் 2 வருடங்களாக செம மழை.

1 . பசங்க



என்னோட All time favourites-ல் இடம் பிடிக்க கூடிய படம். பொதுவாகவே எனக்கு குழந்தைகள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் ரொம்ப பிடிக்கும். இது குழந்தைகளே நடிச்ச படம். குறிப்பா ஒரு குட்டி பய்யன் (ஹீரோ பையனோட தம்பியா) வருவான் பாருங்க. அவன் அடிக்கும் லூட்டியெல்லாம் CD- யில் மூணாவது முறை பார்க்கும் போது தான் செமையா தெரிந்தது. "நல்ல விஷயம் பார்த்தால் பாராட்டுங்கள்" என்பது தான் கதை சொன்ன மெசேஜ். மகிழ்ச்சியில் அழ வைத்த படம்
********
நீங்கள் இந்த படங்களில் ஏதேனும் ரசித்திருந்தால் சொல்லுங்கள். இவை தவிர வேறு ரசித்திருந்தாலும் சொல்லலாம்.

Monday, December 21, 2009

வயது 13

"பள்ளி மாடியிலிருந்து மாணவன் விழுந்தான்" என்ற செய்தி நீங்கள் தமிழ் பத்திரிக்கை வாசிப்பவரானால் சென்ற வாரம் கவனித்திருக்கலாம்.

சென்னை: டிசம்பர் 3. அம்பத்தூர் சிவாஜி நகரை சேர்ந்தவர் குமரன். இவரது மகன் சதீஷ். அம்பத்தூர் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான். சம்பவ தினத்தன்று பள்ளி முடிந்து மாணவர்கள் அனைவரும் கீழே இறங்கும் போது படியின் அருகிலுள்ள துவாரம் வழியாக இவன் கீழே விழுந்து விட்டான். பள்ளியை சேர்ந்தோர் இவனை அருகிலுள்ள மருத்துவ மனைக்கு கூட்டி சென்று தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்தனர் அவனுக்கு கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவன் மறுபடி நடக்க ஆரம்பிக்க சில மாதங்கள் ஆகும் என்றும் அவனுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் தெரிவித்தனர். போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் விசாரணை இருக்கட்டும்.. அன்று நடந்த சம்பவங்களை பார்ப்போமா?

**********

மூணாவது பெல் அடித்து விட்டது. " அப்பா சீக்கிரம்" அவரமாக அப்பாவின் வண்டியிலிருந்து இறங்கி புத்தகம் மற்றும் சாப்பாட்டு பையுடன் வேகமாக ஓடினான் சதீஷ். " ஹோம் வொர்க் செய்ய வில்லை" என்ற பயம் வேறு உறுத்தி கொண்டிருந்தது.

சதீஷ் மிக சுமாராக படிப்பவன். அவனுக்கு ஆர்வமெல்லாம் விளையாட்டில் தான். எப்போதும் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் தான் பார்ப்பான். ஓட்ட பந்தயம், கால் பந்து இவற்றில் கில்லாடி. ஆனால் அம்மா அப்பா இருவரும் சொல்வது "படிடா; விளையாட்டா சோறு போடும்? "

எவ்வளவு படித்தாலும் மண்டையில் ஏற மாட்டேங்குது. சில மிஸ் நடத்தினால் நன்கு புரிகிறது. ஆனால் பல மிஸ் சுத்த மோசம். போன வருடம் வரலாற்று பாடத்திற்கு வந்த மிஸ் எவ்வளவு நல்லவங்க!! பாடம் மட்டுமல்லாது அதன் முழு விவரமும் பொறுமையாய் சொல்வார்கள். அந்த பாடத்தில் மட்டும் சதீஷ் ஐம்பதுக்கு மேல் வாங்கினான். மற்ற பாடங்களில் பாஸ் செய்வதே எப்போதோ ஒரு முறை தான் நடக்கும்.

சுந்தரி மிஸ் கிளாஸ் டீச்சர். ஏற்கனவே வந்து சேர் முழுக்க உட்கார்நிதிருந்தார் . இவன் தயங்கி தயங்கி நின்றான். நிமிர்ந்து அவனை பார்த்தார். " ஏன் லேட்? "

" கெஸ்ட் வந்திருந்தாங்க மிஸ்"

" கெஸ்ட் வந்தா நீ என்ன பண்ணே? சமைச்சியா ? "

இப்போது வகுப்பில் சிரிப்பு சத்தம். " இல்ல அப்பா கொண்டு வந்து வர லேட் ஆகிடுச்சு"

" கெஸ்ட்டால் லேட்டா? அப்பாவால் லேட்டா?"

" அவங்க வந்ததால அப்பா கொண்டு வந்து விட லேட். '

" ஏதோ ஒரு காரணம்.... போ. இனிமே காரணம் கீரணம் சொன்னே பாரு"

உள்ளே போய் அமர்ந்தான். " சீக்கிரம் வந்து தொலைய வேண்டியது தானடா" கணபதி கிசு கிசுத்தான்.

அனைவரிடமும் ஹோம் வொர்க் நோட்டுகள் ஒரு பெண் வாங்கி கொண்டிருந்தாள். ஹோம் வொர்க் செய்யாத சதீஷ் எப்படி தப்பிப்பது என யோசிக்க ஆரம்பித்தான். "இப்போ தான் காரணம் சொல்லதேன்னு சொன்னாங்க. அதுக்குள் அடுத்த பிரச்சனை".

நேற்று இரவு சித்தப்பா வெளி நாட்டிலிருந்து வந்தார். அவனுக்கு சித்தப்பாவை ரொம்ப பிடிக்கும். சட்டை, பந்து, சென்ட்டு என நேற்று முழுதும் குஷி ஆக இருந்தது. காலை எழுந்தது லேட். அவனுக்கு பள்ளி வரவே விருப்பமில்லை. " அப்பா நான் ஹோம் வொர்க் செய்யலை. ஸ்கூல் போகலைப்பா" என்றான். " அங்கே போய் எழுதிக்க கிளம்பு" என்று சிம்பிள் ஆக முடித்து விட்டார் அப்பா. அவர் சொன்னால் அதற்கு மேல் பேச்சு இல்லை.

என்ன சொல்லலாம்? "நோட்டு கொண்டு வரலைன்னு சொல்லிடலாமா? " நேற்று ஒருத்தன் அப்படி தான் சொல்லி தப்பித்தான். அந்த பெண் அருகில் வந்து விட்டாள்.

" நோட்டு மறந்திட்டு வந்துட்டேன்"

முறைத்தாள். " ஏன்"

" மறந்துட்டேன்"

அவள் சதீஷை நம்ப தயாரில்லை. " மிஸ் சதீஷ் ஹோம் வொர்க் கொண்டு வரலை " உரக்கக் குரல் கொடுத்தாள்.

" ஏன் என்னவாம்?"
" மறந்துட்டானாம் "

உடனடியாக மிஸ் சொன்னாள் " அவன் பைய்ய பாரு". சதீஷுக்கு தொண்டை அடைத்தது. அந்த பெண் பையை கேட்டாள். சதீஷ் தயங்கினான். அவளே பிடுங்கினாள். திறந்து தேட, ஆங்கில ஹோம் வொர்க் நோட்டு வந்து விட்டது. அவளே பிரித்து பார்த்தாள். பின் மிஸ்ஸிடம் எடுத்து சென்று தந்தாள். கண்ணாடியை அணிந்து கொண்டு சுந்தரி மிஸ் பார்த்தார். ஹோம் வொர்க் எழுதலை என தெரிந்ததும் நோட்டு பறந்தது. அவனது பெஞ்சுக்கு முதல் பெஞ்சில் விழுந்தது.

"எழுதலை; கேட்டா பொய் சொல்றியா? யார் கிட்டே கத்து கிட்டே? "

முதல் பெஞ்ச் நபர்களிடமிருந்து ஸ்கேல் எடுத்து கொண்டாள். சதீஷ் கையிலும் முதுகிலும் சரா மாறியாக விழுந்தது அடி.



" கெட் அவுட்; வெளியே போ"

" மிஸ் கெஸ்ட் வந்ததாலா தான் மிஸ். நாளைக்கு எழுதுறேன்"

" கெட் அவுட். வந்தது லேட்டு. ஹோம் வொர்க் எழுதலை. பொய் வேற. மத்த சப்ஜக்ட்டாவது எழுதினியா? "

தயங்கி சொன்னான். " இல்ல மிஸ்"

"அப்படியா இன்னிக்கு முழுக்க வெளியே நில்லு. லாஸ்ட் பீரியட் நான் வருவேன் இல்ல.. வச்சிக்குறேன் "

சதீஷ் தலை கவிழ்ந்தவாரே வெளியேறினான்.

" என் மூடை கெடுக்குரதுக்குன்னே வர்றானுங்க.. முதல் கிளாசே இப்படியா?"

கைகளை கட்டி கொண்டு தலை குனிந்தவாறு வாசலுக்கு சற்று வெளியே நிற்க துவங்கினான்.

சதீஷ் நின்ற சில நிமிடத்தில் இன்னோர் மாணவன் தாமதமாய் வந்தான். அவன் நன்கு படிப்பவன். சுந்தரி மிஸ் " கோ.. கோ.. " என்று கூறி விட்டார். "படிப்பவனுக்கு ஒரு சட்டம். படிக்காதவனுக்கு ஒரு சட்டம். ஹும்"

மிஸ் பாடத்தை துவங்கி விட்டார். பாடத்தில் மனம் செல்ல வில்லை. மெளனமாக கீழே பார்த்தான். காரில் பிரின்சிபால் வந்து இறங்குவது தெரிந்தது. " போச்சு இன்னிக்கு வந்திருக்காரா? அப்ப ரவுண்ட்ஸ் வருவாரே?"

"சே! இன்னிக்கு நான் வந்திருக்கவே வேணாம். எல்லாம் இந்த அப்பாவால் வந்தது"

பெண்கள் இவனை பார்த்து சிரித்து சிரித்து பேசிய மாதிரி இருந்தது. அவர்களை பார்ப்பதை தவிர்க்க முயன்றான். ஆனாலும் கண்கள் தானாக அவ்வபோது சென்றது.

சற்று நேரத்தில் பிரின்சிபால் ரவுண்ட்ஸ் வந்து விட்டார். " என்ன..? என்ன விஷயம்" இவனை பார்த்து கேட்டார்.

சுந்தரி மிஸ் முன்னே வந்து பதில் சொன்னார். " லேட்டா வந்தான் சார். ஹோம் வொர்க் செய்யலை. இதில நோட்டு கொண்டு வரலைன்னு பொய் சொல்றான்"

ஒன்னு விடாம சொல்றாளே பாவி என நினைக்கும் போதே பிரின்சிபால் அடிக்க ஆரம்பித்து விட்டார். " ஹோம் வொர்க் எழுதுறதை விட வேற என்ன ...........வேலை? "
" உன் மேல ரெகுலர் கம்பலேயின்ட் வருது. உங்க அப்பாவை கூட்டிட்டு வா நாளைக்கு" அடி கொடுத்தவாரே பேசினார்.

சதீஷுக்கு கிட்டத்தட்ட அழுகை வந்தது. " பொண்ணுங்க முன்னாடி அழுவ கூடாது" என்ற வைராக்கியத்தில் அழாமல் நின்றான்.

அடுத்ததடுத்த வகுப்புகள் மிஸ்கள் வந்து குசலம் விசாரித்தனர். கோ- எட் பள்ளி என்பதால் அனைத்தும் மிஸ்கள் தான்.

மதியம் சாப்பிடவே பிடிக்க வில்லை. தன் இருக்கைக்கு சென்று கணபதி அருகே அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தான். "இப்பவாவது உட்காரலாமா? கிளாஸ் மிஸ் வந்துட கூடாதே" என்ற பயம் வேறு. பாதி சாப்பிட்டு விட்டு மீதத்தை கொட்டினான்.

"இந்த பத்து வருஷத்தில் எந்த மிஸ்சும் யாரையும் முழு நாள் வெளியே நிற்க வச்சதில்ல. இந்த மிஸ் ஏண்டா இப்படி பண்றாங்க? " கணபதி புலம்பினான்

மதியம் வந்த மிஸ்ஸிடம், தலை வலி கிளும்புரேன் என சொல்லி பார்த்தான். " என்னடா நடிக்கிறியா? போய் கிளாஸ் டீச்சர் கிட்டே கேட்டுட்டு வா"

"அதுக்கு கேக்காமலே நிக்கலாம்" என எண்ணியவாறு நின்றான்.

ஒரு வழியாய் கடைசி வகுப்பு வந்து விட்டது.

காலையில் இங்கிலீஷ் I எடுத்த சுந்தரி மிஸ் இப்போது இங்கிலீஷ் II எடுக்க வந்திருந்தார்.

" நாளைக்காவது ஹோம் வொர்க் எழுதிட்டு வருவியா?" கேட்டவாரே அவன் பதிலுக்கு காத்திராமல் உள் சென்றார்

இந்த மிஸ்ஸை ஏதாவது பண்ணனும் என வெறுப்பு வந்தது. சதீஷ் அமைதியாய் நின்று கொண்டிருந்தான்.

கடைசி மணி அடிக்க ஐந்து நிமிடம் இருந்தது.

" மிஸ்"

பெரும் சத்தம் கேட்டு சுந்தரி மிஸ் திரும்பினாள்.

" என்னை அவமான படுத்திட்டீங்க இல்ல! நாள் முழுக்க வெளியே நிக்க வச்சிடீங்க.. எவ்ளோ அடி அடிச்சீங்க. நான் போறேன் மிஸ்" சொல்லியவாறு கிளாசை விட்டு ஓடினான் .

" டேய் டேய்" என கத்தியவாறு சுந்தரி மிஸ் வெளியே வந்து பார்த்த போது, குட்டி சுவர் மீது ஏறி மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்து கொண்டிருந்தான் சதீஷ்.

Saturday, December 19, 2009

பிரபல பதிவர்களின் மாபெரும் தவறுகள்.. படங்களுடன்

எத்தனை நாளைக்கு தான் "Blog மாதிரி அற்புதமான உலகம் எங்கும் கிடையாது; எல்லாரும் நட்பா இருக்காங்க; நல்லவங்களா இருக்காங்க" அப்படின்னே எழுதுறது? இப்படியே போனா நாம எப்ப ரவுடி ஆறது? அதான் துணிஞ்சு இறங்கிட்டேன். (ஆனாலும் மாபெரும் தவறுகள் என்பதெல்லாம் உங்களை உள்ளே இழுக்க செய்த ஐடியா தான் ..ஹிஹி)

இதோ பிரபல பதிவர்களின் தவறுகள் பட்டியல்:

நரசிம்: எல்லா பதிவர் சந்திப்புக்கும் பல blog-ல் போன் நம்பர் மட்டும் போட்டு வச்சிருக்கார். ஆனா மனுஷன் போன் பண்ணா எடுக்கவே மாட்டார்.



இதுக்கும் மேல அநியாயத்துக்கு அழகா இருக்கார். இதெல்லாம் நல்லா இல்ல ஆமா..

கேபிள் சங்கர்: நரசிம் போன் பண்ணா எடுக்கிரதில்லன்னா, இவர் வேற மாதிரி. எப்போ பண்ணாலும் வெயிட்டிங்கில் இருக்கும்!!



(கண்ணாடி அணிந்த யூத்து தான் நம்ம கேபிள்)

இது தவிர கொஞ்ச நாளாவே கவிதை கவிதைன்னு ஒரு ஆசை வந்திருக்கு. விட்டுருங்க தல பாவம் அது பொழச்சு போகட்டும்

குசும்பன்:




அவரோட தோஸ்துங்க பதிவுக்கு மட்டும் தான் பின்னோட்டம் போடுறார். என்ன மாதிரி சாதாரண ஆட்களை மதிப்பதேயில்லை.

கார்க்கி:


இவர் மேல உள்ள குற்ற சாட்டு என்னான்னா தொடர்ந்து விடாம எழுதுறார் அப்படிங்கறது தான் ( Happy-ஆ அப்துல்லா?)

பா. ராஜாராம்: மனுஷன் வெளி நாட்டில் இருந்து கிட்டு எல்லோருக்கும் காசு செலவு பண்ணி போன் போட்டு பேசுறார். ஏன் தல.. மெயில், பின்னூட்டம் பத்தாதா? அந்த பணம் மகாவுக்காக சேக்கலாமே (மக்கா கோபிக்காதீங்க. உங்க தம்பி மாதிரி ஒரு உரிமையில் சொல்றேன்)

ராம லக்ஷ்மி: எப்பவும் எல்லாரையும் பாராட்டி மட்டுமே எழுதுறார். பின்னூட்டம் போடுறார்.


"உலகமே நல்லவர்களால் ஆனது" ன்னு நம்பிட்டுருக்கார் போல

அப்துல்லா: பின்னூட்டம் போட சொன்னா புள்ளி, அரை புள்ளி, கமா இப்படி போடுறார் !


மெயில் அனுப்புனா கூட இப்படி symbol-லேயே பதில் அனுப்புறார். நமக்கு விளங்க மாட்டேங்குது

** **

இவ்ளோ தாங்க நமக்கு தெரிஞ்சது. ஓரளவு பழகிய நபர்கள் என உரிமையா கிண்டல் பண்ணிருக்கேன். கோச்சுகாதீங்க பெருந் தலைகளே.. காய்ச்ச மரம் கல்லடி படவே செய்யும்!! இருந்தாலும் நான் சொன்னது பத்தி கொஞ்சம் யோசிங்க :))))

ஹலோ.. இவர்களிடமோ மற்றவர்களிடமோ இப்படி (காமெடி) தவறு இருந்தால் பின்னூட்டத்தில் கும்மிடுங்க. சம்பந்த பட்ட நபர் மனம் hurt-ஆகாம செய்யுங்க ப்ளீஸ்

இந்த பதிவு பிடிச்சா தமிழிஷ் மற்றும் தமிழ் மணத்தில் ஒட்டு போடணும்.. ஆமா!!

Friday, December 18, 2009

என்ன பாட்டு? கண்டு பிடிங்க பாக்கலாம் !


எல்லோருமே பாட்டு கேட்கிறோம் ! எத்தனை முறை பாடல் வரிகளை கவனிக்கிறோம்? இதை டெஸ்ட் செஞ்சுடுவோமா? 2009-ல் வெளி வந்த famous பாடல்களில் இருந்து எடுத்த வரிகள்.. (அதாங்க க்ளு) என்ன பாட்டுன்னு பின்னூட்டத்தில் சொல்லுங்க பாக்கலாம்.. வித்யா சொன்னது போல கமெண்ட் மாடரேஷன் வைத்துள்ளேன். அனைத்து சரியான பாடல்களை யாரேனும் சொன்ன பின் தான் கமெண்டுகள் வெளியாகும். பொருத்தருள்க!!

இப்போ வரிகள்..

1. "கடவுளின் கனவில் இருவரும் இருப்போமே.."

2. "மாட்டி கொண்ட பின் மறுபடி மாட்டிட மனம் துடிக்கும் ... "

3. "கடலை பிடிச்சு கையில் அடக்கிட தெரியாது.."

4. "ஆசைகள் ஒன்னோ ரெண்டோ அடங்கிடும் மனசும் உண்டோ?"

5. "என் விழியின் கரு மணியில் தேடி பார் உன் காலடி தடங்களை காட்டுமே"

6. "உரசாமல் அலசாமல் உயிரோடு ஓடுது ஆசை"

7. "விடியும் வரை அதிரடியாய் பட படக்கும் எங்களோட தாளம்"

8. "எல்லோரும் உறவே என்றால் சோகங்கள் ஏதும் இல்லை"

9. "நன்மைகள் தீமைகள் யார்தான் அறிவார்? நாளையின் தீர்ப்பை யார் தான் தருவார்?"

10. "தேகமில்ல தேகமில்ல தீப்பிடிச்ச மேகம்"

Ready !! Start !! பின்னூட்டத்தில் பின்னுங்க!! என்ன பாட்டுன்னு சொல்லுங்க !!

"என்ன பாட்டு? கண்டு பிடிங்க பாக்கலாம் " பிடிச்சிருந்தா தமிழிஷ் மற்றும் தமிழ் மணத்தில் ஒட்டு போடுங்க பாஸ்!!

Wednesday, December 16, 2009

வீடு திரும்பலுக்கு விருது




வீடு திரும்பலுக்கு விருது!! கேக்கவே ரைமிங்கா நல்லா இருக்குல்ல?

முதல் முறையா நம்மளை மதிச்சு விருது குடுத்திருக்கார் குறும்பன்.

என்ன விஷேஷம்னா அவர் இத்தனை நாளா நம்ம ப்ளாகுக்கு சைலண்டா வந்து போயிருக்கார். ..கமெண்ட் கூட போடாம. இப்ப தான் ஒன்னு ரெண்டு கமெண்ட் போட்டார். அவர் ப்ளாகில் இப்படி எழுதி இருக்கார்:

"மோக‌ன் - கொஞ்ச‌ நாளா இவ‌ரோட‌ ப‌திவுக‌ளை ஒரு சைல‌ண்ட் ரீட‌ராக‌த்தான் ப‌டிச்சிட்டு வ‌ந்தேன். இப்போதான் பின்னூட்ட‌ ஆர‌ம்பிச்சிருக்கேன். இவரோட‌ எளிமையான‌ ந‌டை ரொம்ப‌வும் அருமையா இருக்கும். ப‌திவுல‌க‌த்துல‌ நீங்க‌ என‌க்கு சீனிய‌ர்தான், இருந்தாலும் ப‌ர‌வால்லைன்னு (விஜ‌ய் கையால‌ சிற‌ந்த‌ ந‌டிக‌ர் விருதை க‌ம‌ல் வாங்கின‌ மாதிரி) கொஞ்ச‌ம் அட்ஜஸ்ட் ப‌ண்ணி வாங்கிக்கோங்க‌ சார்."

நன்றி குறும்பன். தங்கள் அன்புக்கும் விருதுக்கும். இது வலை உலகில் முதல் அங்கீகாரம் என்பதாலும், தங்கள் அன்பிலும் மகிழ்கிறேன்.

நான் விருது தர விரும்புபவர்கள்:

அதி பிரதாபன் : சின்ன வயசு; பய புள்ளைக்கு அதுக்குள்ள கல்யாண ஆச வந்துடுச்சு. நமக்கு technical consultant. நல்லா கதை எழுதுறார். உலக சினிமா மேல் நிறைய ஆர்வம். (விருதெல்லாம் குடுத்தாச்சு; இனி மேலாவது போன் பண்ணா எடுக்கணும்; சொல்லி புட்டேன்)

வரதராஜலு : எப்போதாவது தான் பதிவிடுகிறார். அவரே தன்னை " ஒரு காமன் மேன்தான்" என்கிறார். பலரின் பதிவுகளை படித்து பின்னூட்டம் இடுகிறார். சார் உங்க மாதிரி உசுப்பேத்துற நண்பர்களால் தான் என்னை மாதிரி ஆட்கள் தொடர்ந்து எழுதுறோம். தொடருங்க சார்.

சீனா : மூத்த பதிவர். மதுரையை சேர்ந்தவர்.

வடலூரான்: செம கிண்டலா எழுதுறார்.

சங்கவி: - Health consciousஆ சில நல்ல பதிவு செய்துள்ளார்
*******
இன்னும் பலருக்கும் குடுக்க நினைக்கிறேன். பலர் ஏற்கனவே வாங்கிட்டாங்க.. இவர்கள் மற்றவர்களுக்கு குடுக்கட்டுமே என எண்ணி எஸ்ஸாகிரேன்.
*******
கடந்த ஒரு வாரத்தில் வியாழன் தொடங்கி இன்று புதன் வரை தினம் ஒரு பதிவு போட்டுள்ளேன். ப்ளாக் ஆரம்பித்து இவ்வாறு நிகழ்வது முதல் முறை.

பதிவு எத்தனை நாளுக்கு ஒரு முறை போடலாம்? தினம் போட்டால் 3 நாட்கள் முன் போட்ட பதிவு யாரும் படிக்காமல் போகவும் வாய்ப்பு உண்டல்லாவா? (தினம் பதிவு போட விஷயம் & நேரம் இருக்குமா என்பது ஒரு தனி கேள்வி) எனக்கென்னவோ 2 நாளைக்கு ஒரு பதிவு போட முயலாலாம்னு தோணுது. உங்க மேலான அறிவுரையை பின்னூட்டத்தில் சொல்லுங்க.
*******
புத்தாண்டுக்காக சிறப்பு பதிவுகள் கேபிள், அப்துல்லா, விக்னேஸ்வரி, அதி ப்ராதபன் போன்ற பலரிடம் discuss செய்து தயாராகுது.. விரைவில் a series of பதிவுகள்... புத்தாண்டு ஸ்பெஷல்.. எதிர் பாருங்கள்..

*******
வாரா வாரம் எழுதும் மேட்டருக்கு . நான் நினைக்கும் தலைப்பு " வானவில்" ; கலவையான விஷயங்கள் எழுத போவதாலும், தலைப்பு சாப்பாடு மேட்டர் தவிர்த்து யோசிப்பதாலும் இதனை consider செய்கிறேன். இன்னும் இறுதி முடிவாகலை. இது பற்றியும் .. உங்க கிட்டேருந்து இன்னும் நிறையா எதிர் பார்க்கிறேன்...

Tuesday, December 15, 2009

எழுத வந்த கதை

தோழி விக்கி "எழுத வந்த கதை" தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார். வர வர நம்மளையும் ரவுடின்னு இந்த உலகம் நம்ப ஆரம்பிச்சிருக்கு!! அதான் பிடித்த 10 பிடிக்காத 10, மற்றும் எழுத வந்த கதை என ஒரே அழைப்புகள்..எவ்வளவோ வேலை இருந்தாலும் ("டேய் அடங்குடா") நம்மளை நம்பி ஒருத்தர் வேலை குடுத்தால் அதை முடிச்சிட்டு தான் மறு வேலை!!

எனக்கு ஆறு வயசிருக்கும் (அப்போல்லாம் ஐயா - சட்டை டிராயர் போன்றவற்றை வீட்டுக்கு வந்தோன முதல் வேலையா கழட்டி எறிஞ்சுட்டு தெருவுக்கு ஓடிடுவார்) யாராவது "பெரியவனாகி என்ன பண்ண போறே?" என்றால் தயங்காமல் சொல்வேன்" டைரக்டராக போறேன்"

ஏழு வயசில் முதலில் பள்ளி டிராமாவில் நடித்தேன். வந்திருந்த Chief Guest- "குட்டி பய்யன் நல்லா நடிச்சான்" என மைக்கில் பாராட்டி, தனக்கு போட்ட மாலையை எனக்கு போட்டு விட்டார். அதனை கழட்டாமல் கடை தெரு முழுக்க நடந்து வீடு வரை வந்தது இன்னும் நினைவில் ஆடுகிறது .... அதே ஏழு வயதில் எங்க தெருவிலும் பக்கத்துக்கு தெருக்களிலும் டிராமா எழுதி நண்பர்களை சேர்த்து கொண்டு நடிக்க ஆரம்பிச்சிட்டேன்.

பள்ளி, கல்லூரி என தொடர்ந்தது எழுத்தும் நடிப்பும்.. கல்லூரி மேகசின் முதல் இப்போது அலுவலக மேகசின் வரை சில நேரம் வெறும் பங்களிப்பு, சில நேரம் எடிட்டோரியல் டீமில் மெம்பர் என இந்த ஆர்வம் தொடர்கிறது.

கல்லூரி முடிந்து தமிழ் சினிமாவில் "தொபுக்கடீர்" என குதித்தே தீருவேன் என்று இருந்தவனை அண்ணன்கள் மற்றும் அக்கா பேசி பேசி "படிச்சு முடி; இப்போ படிச்சா தான் உண்டு; எப்போ வேண்ணா நடிக்கலாம்" என திசை திருப்பிட்டாங்க !! படு பாவிங்க !! What a great loss to Tamil Industry:)))

படிச்சதும் கொஞ்சம் அதிகமா ஆனதாலே (பட்டம் முழுக்க போட்டா பேரை விட நீளமா போகும். ச்சே!!) வாழ்க்கையில் ஒரு குறிப்பட்ட உயரம் வந்தாச்சு.

இதுக்கிடையிலே கல்யாணம் வேறே ஆகி போச்சு. நானும் டிபிகல் சவுத் இந்தியன் ஹஸ்பண்ட மாதிரி மனைவி பேச்சை தட்ட மாட்டேன். மனைவிக்கு நம்ம மேல ரொம்ப நம்பிக்கை. " நீ அந்த பக்கம் போனா கெட்டு குட்டி சுவராய்டுவே" என ஆசிர்வதித்து, "போனா போகுது. வேண்ணா ஏதாவது எழுதிட்டு கிட" என பெர்மிஷன் குடுத்தாங்க.

என் நண்பனின் தம்பி கிச்சா "அண்ணா நீங்க blog ஆரம்பிங்க" ன்னு ரொம்ப நாளா சொல்லிட்டுருந்தான். நான் "வேணாண்டா; பாத்திரம் கழுவவும், துணி மடிச்சு வைக்கவுமே நேரம் பத்தலை" ன்னு சொல்லிட்டுருந்தேன்.

அலுவலகத்தில் B.பிரகாஷ் என ஒரு நண்பர். எல்லார் பிறந்த நாளுக்கும் தமிழில் வாழ்த்து அனுப்புவார். அவர் மூலம் தமிழில் டைப் செய்யும் Google Transliteration அறிந்தேன். தமிழகம் தாண்டி இருக்கும் நண்பர்களுக்கு தமிழில் மெயில் எழுத ஆரம்பிதேன். தொலை தூரத்தில் இருந்து தமிழை படிக்கும் போது அவர்களுக்கு மிக மகிழ்ச்சி.

பின் சில blog-பார்த்து கொஞ்சம் எழுதும் ஆசை வந்தது. ஒரு நாள் ஏதோ செய்து கொண்டிருக்கும் போது ப்ளாக் ஒன்று ஆரம்பிக்கும் இடம் வந்து விட்டேன். ப்ளாக் பெயர் அது கேட்க திடீரென ஒன்றும் தோன்றலை. எங்கள் நண்பன் லட்சுமணன் இறந்த பின் அவன் கவிதைகளை தொகுத்து புத்தமாக வெளியிட்டோம். அதன் பெயர் வீடு திரும்பல். அவசரத்தில் அந்த தலைப்பு தான் தோன்றியது. ப்ளாக் துவங்கி முதலில் ஒரு கவிதை பப்ளிஷ் செய்து விட்டு அப்படியே இருந்து விட்டேன்.

சனி கிழமைகளில் ஹவுஸ் பாசுக்கு ஆபிஸ் உண்டு. குழந்தை சிறு வயதிலிருந்தே சனி கிழமை என்னுடன் இருப்பாள். இப்படி பட்ட நேரங்களில் ஏதேனும் எழுதி அப்படியே வச்சிடுவேன். பின் வியாழன் or வெள்ளி re-write செய்து பப்ளிஷ் செய்வேன். உடன் நண்பர்களுக்கு இது பற்றி ஒரு மெயில் அனுப்புவேன். என் நண்பர்கள் யாருக்கும் பின்னூட்டம் எப்படி இடுவது என தெரியாது. ஆனால் போனிலோ நேரிலோ மெயிலிலோ பிடித்திருந்தால் சொல்லுவர். இப்படி ரொம்ப காலம், விட்டு விட்டு எழுதிட்டிருந்தேன்.

நண்பன் லட்சுமணன் இறந்த பின் நிகழ்ந்த நெகிழ்வான புத்தக வெளியீடு பற்றி எழுதியிருந்தேன். ஆனால் நண்பர்கள் பலர் தமிழ் font இல்லை; படிக்க முடியலை என சொல்ல, பின் ஆங்கிலதில் ஓர் ப்ளாக் துவங்கி அதையே எழுதினேன். ஆங்கிலத்தில் எழுதியதை எனது சட்ட கல்லூரி நண்பர் கூட்டம் (எங்களுக்குன்னு தனி யாஹூ குரூப் உண்டு; இதில் அடிக்கும் லூட்டி தனி...) ஆர்வமாய் படித்தாலும், தாய் மொழியில் எழுதுற மாதிரி இல்லை. எனவே ஆங்கிலத்தில் எழுதுவது குறைஞ்சுடுச்சு.

ஆரம்ப எழுத்துக்களில் சில நீங்கள் வாசித்திருக்க மாட்டீர்கள். வீடு திரும்பல் புத்தக வெளியீடு, சிறு வயது குறும்புகள் ஆகியவற்றை நீங்கள் வாசிக்க பரிந்துரைக்கிறேன். இவை வாசித்தால் மோகன் என்பவனை பற்றி நீங்கள் இன்னும் கொஞ்சம் அறிய முடியும்!

S. கண்ணன் என ஒருவர் எப்படியோ நம்ம ப்ளாக் படிச்சுட்டு follower facility -துவங்குங்க என்றார். அவர் சொல்லி சில மாசம் கழிச்சு தான் அதை செய்தேன். ரொம்ப மாசம் அஞ்சு, ஆறு பேர் தான் followers இருந்தாங்க. அவருக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்லியே ஆகணும்!! (கண்ணன் எங்க உங்களை காணும்? ஒரு ஹலோ சொல்லுங்க தல )

பின் திரு ரேகா ராகவன் மூலம் தமிழிஷ், தமிழ் மணம் பற்றி அறிந்து அவற்றில் ப்ளாகை சேர்த்தேன். அதன் பின் தான் வாசிப்போர் எண்ணிக்கை மள மள வென அதிகமானது. நிறைய பேர் படிக்கிறார்கள் என்றதும் தான் எழுதுவது அதிகமானது.

சமீபத்தில் எனது பள்ளி கால நண்பனுடன் ப்ளாக் மூலம் மறுபடி நட்பு கிடைத்தது. பின் அவன் மூலம் 10௦ பழைய நண்பர்கள் தொடர்பு கிடைத்தது. என் நண்பன் பெயர் சொல்ல விருப்பமில்லை என்ற பெயரில் ப்ளாக் எழுதி வருகிறான்!!

நண்பர் அதி பிரதாபன் நம்ம blog-ஐ வடிவமைத்துள்ளார். இன்னும் செய்ய நிறைய இருக்கு!!

எழுதும் ஒவ்வொருத்தரும் recognition -க்காகவே எழுதுகின்றனர். சமீபத்தில் பதிவர் சந்திப்பில் நரசிம் போன்ற பிரபல பதிவர்கள் கூட தனது blog-ல் பின்னூட்டம் பற்றி மிக எதிர் பார்ப்பது தெரிந்தது.

சில பதிவுகள் நல்ல பதிவுகள் நிறைய பேர் ரசிப்பார் என நினைத்தால் நமத்து போன வெடி
போல சத்தமில்லாமல் இருக்கிறது. அதிகம் எதிர் பார்க்காத சில பதிவுக்கு நிறைய பின்னோட்டம், வோட்டு விழுகிறது. இதிலிருந்து ஒன்று புரிகிறது. எழுதுவது மட்டும் தான் நம்ம வேலை. பின்னோட்டம், வோட்டு, இதெல்லாம் நம்ம கையில் நிச்சயமா இல்லை. இதுக்கெல்லாம் டார்கெட் வச்சிக்க முடியாது:))) மேலும் வாசிப்போரில் வெகு சிறிய பகுதியினர் தான் பின்னூட்டம் இடுகின்றனர்.

"என்னை பற்றி உண்மையாக யாரேனும் பாராட்டினால் அதை வைத்து ஒரு வாரம் உயிர் வாழ்வேன்" என்று மார்க் ட்வைன் என்ற மிக பெரிய அறிஞர் சொல்லியிருக்கிறார். வாசிப்பவர்க்கள் பிடித்திருந்தால் பாராட்டுவது நிச்சயம் எழுதியவருக்கு நிறைய மகிழ்வை தரும். ஒருவரின் எழுத்து உங்களுக்கு மகிழ்வை தந்தால், அதை அவருக்கு சொல்லலாமே? அவரும் மகிழ்ந்து விட்டு போகட்டுமே!!பெரும்பாலும் நான் வாசித்தது பிடித்தால், ஒரு வரி எழுதி விட்டே வருகிறேன்; நேரம் இல்லா விடில் ஓட்டு போட்டு விட்டு வந்து விடுவேன்.

சில நேரம் ப்ளாகிலும் ஒரு விரக்தி வந்து எட்டி பார்க்கிறது; பின் சரியாகிறது. எத்தனை நாள் ஆர்வமாய் எழுதுவேன் என்ற கேள்வி குறி இருந்து கொண்டே தான் உள்ளது. நான் குடும்பம் தவிர மற்ற எல்லாவற்றிலும் variety எதிர் பார்ப்பவன். உதாரனமாய் ஒவ்வோர் நாள் வெவ்வேறு ரூட்டில் ஆபிஸ் செல்ல நினைப்பவன். இதனை தவிர Board meeting, Annual General Meeting நேரங்கள் என்றால் சில வாரங்கள் முழுக்க, வீட்டுக்கு வரவே 11 மணி ஆகும். அடுத்த Board meeting ஜனவரி கடைசியில்.. அப்போது blog-ல் ஒரு கேப் நிச்சயம் விழும். அதன் பின் மீண்டும் துவங்குவேன்.

ஒரு வாசகனாக நான் எதை விரும்பி வாசிப்பேனோ சினிமா, ஹெல்த், சுய முன்னேற்றம், நல்ல நூல்கள்/ மனிதர்கள் அறிமுகம் போன்ற விஷயங்களை அதிகம் எழுதும் எண்ணம்.. பார்க்கலாம்.

கேபிளுக்கு கொத்து பரோட்டா போல, நரசிமுக்கு என்'ணங்கள் போல வாரந்திர பகுதி எழுத யோசித்து வருகிறேன். ஏதேனும் நல்ல தலைப்பு பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.. நீங்கள் சொல்லிய தலைப்பு எனக்கு பிடித்து நான் உபயோகிக்க ஆரம்பித்தால், உங்களுக்கு ஓர் புத்தகம் அன்பு பரிசாக அனுப்ப படும்!!

எழுத வந்த கதை பிடிச்சிருந்தா தமிழிஷ் மற்றும் தமிழ் மணத்தில் ஓட்டு போடுங்க பாஸ்!!

Monday, December 14, 2009

கனவுகள்



எப்படியும் நம்மை நினைத்து கொள்ளலாம்
நமக்குள்...
நெடுந்தூர பிரயாணங்களில்
ரேஷனில் நிற்கும் நேரங்களில்
தூக்கம் வரா இரவுகளில் ..
எப்படியும் நினைத்து கொள்ளலாம் ...

வாழ்க்கை தராத இன்பத்தை
கனவுகள் தரலாம்
கேட்க எவருக்குண்டு உரிமை?

கனவுகள் இதமேயெனினும் ...

தந்தையின் வசவுகளும்
எதிர் வீட்டு பெண்ணின் பாரா முகமும்
நிற்காமல் சிரித்தவாறே செல்லும்
தபால் காரரும் ...

கனவுகள் பசியாற்றுவதில்லை ...

உரையாடல் அமைப்பின் கவிதை போட்டிக்காக

Sunday, December 13, 2009

ரஜினி குறித்த சில கேள்விகள்

ரஜினியின் சிறந்த பத்து படங்கள் லிஸ்ட் நண்பர்களுக்கு மிகந்த மகிழ்ச்சி அளித்திருப்பது அறிந்து எனக்கும் மகிழ்ச்சி. இன்றும் டிவி சேனல்கள் எல்லாம் ரஜினி படமே போட்டு கொண்டிருக்க, இதோ இன்னொரு ரஜினி ஸ்பெஷல்: ரஜினி குறித்த 10 கேள்விகள். பதில் அறிந்தோர் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

நாட்டாமை (வேற யாரு.. நான் தான்) தீர்ப்பே இறுதியானது.




************
1. ரஜினி ஒரு படத்தில் சொந்த குரலில் டூயட் பாடியிருக்கிறார்? என்ன பாட்டு? என்ன படம்?

2. ரஜினி கதை திரைக்கதை வசனம் எழுதிய படம் எது?

3. தில்லு முல்லு படத்தில் ரஜினியின் ரெண்டு கேரக்டர்கள் பெயர் என்னென்ன?

4. ரஜினியின் திருமணம் எங்கு நடந்தது?

5. மத்திய அரசால் ரஜினிக்கு தரப்பட்ட மிக பெரிய விருது என்ன?

6. ரஜினி- கமல் ஒன்றாக நடித்த கடைசி படம் எது?

7. ராமோஜி ராவ் - ரஜினியின் தந்தை என்ன வேலை பார்த்தார்?

8. ரஜினியை வைத்து அதிக படங்கள் இயக்கிய இயக்குனர் யார்?

9. சிரஞ்சீவி ரஜினியின் படம் ஒன்றில் வில்லனாக நடித்துள்ளார்? அது எந்த படம்?

10. ரஜினி எந்த படத்திலிருந்து "சூப்பர் ஸ்டார்" என்ற அடை மொழியுடன் அழைக்க பட ஆரம்பித்தார்?

***
என்ன ரெடி ஜுட்.. பின்னோட்டத்தில் பதில் சொல்லுங்க பார்ப்போம்!!
***
ரஜினி - 10 கேள்விகள் பிடிச்சிருந்தா தமிழிஷ் மற்றும் தமிழ் மணத்தில் ஓட்டு போடுங்க பாஸ்!!

Saturday, December 12, 2009

ரஜினி - அசத்திய பத்து படங்கள்

ரஜினியின் பிறந்த நாளை ஒட்டி அவரது சிறந்த 10 படங்களை பட்டியிலிட்டுள்ளேன். நான் ரஜினி ரசிகன் அல்ல. ஆனால் நல்ல சினிமா யார் தந்தாலும் ரசிப்பவன். இதே போல் சிறந்த பத்து படங்கள் கமலுக்கும் எழுத முடியும். அது பிறிதொரு சமயத்தில்..

இதோ ரஜினியின் சிறந்த 10 படங்கள்

ஆறிலிருந்து அறுபது வரை

இன்றளவும் ரஜினியின் நடிப்பு திறமைக்கு பேர் சொல்லும் படம். சற்று சோகம் அதிகம் என்றாலும் தம்பி தங்கைக்காக வாழும் இத்தகைய அண்ணன்கள் அன்றைக்கு சற்று அதிகமாகவும் இன்றைக்கு சற்று குறைவாகவும் இருக்கவே செய்கின்றனர்.



இத்தகைய கேரக்டர்கள் நடிக்கும் போது ஓவர் ஆக்டிங் செய்ய நேரும். ஆனால் ரஜினி கொஞ்சம் கூட ஓவர் ஆக்டிங் இல்லாமல் நடித்திருந்தார். இளையராஜா இசையில் கண்மணியே காதல் என்பது கற்பனையோ பாடல் இன்னும் கேட்க மிக இனிமை.


முள்ளும் மலரும்

இது வரை வெளி வந்த தமிழ் படங்களில் விகடன் அறுபதுக்கும் மேல் மதிப்பெண் தந்த படங்கள் 10 கூட இருக்காது. அவற்றுள் இது ஒன்று. மகேந்திரனின் அற்புதமான இயக்கத்தில் வந்த படம்.



பாசமான அண்ணனாகவும் ஒரு சாதாரண தொழிலாளியாகவும் ரஜினி மிக அழகிய நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். செந்தாழம் பூவில், ராமன் ஆண்டாலும் என இன்றைக்கும் கேட்க இனிய பாடல்கள். ரஜினியின் தேர்ந்த நடிப்புக்கு உதாரணமாய் என்றும் இந்த படம் இருக்கும்.

தர்ம யுத்தம்



சாதாரண பழி வாங்கும் கதை தான். இந்த படம் எடுக்கும் போது ரஜினி பெரிய stress-ல் இருந்தார். ஆனால் படத்து கேரக்டர் அதே போல் அமையவே அவர் நடிப்பு பிரகாசித்தது. இளைய ராஜா இசையில் ஆகாய கங்கை, ஒரு தங்க ரதத்தில் ஆகிய பாடல்களை மறக்க முடியுமா?

மூன்று முகம்

மூன்று முகம் என்று சொல்வதை விட ஒரு முகம் என சொல்லி விடலாம். அந்த ஒரு முகம் அலெக்ஸ் பாண்டியனுடயது. என்ன ஸ்டைல், ஸ்பீட்..



படத்தில் இந்த கேரக்டர் அரை மணிக்கும் குறைவாய் வந்தாலும் இன்றைக்கும் மனதில் நிற்கும் படி மாறி போனது. (ரஜினி இவ்வாறு கொஞ்ச நேரமே வந்தும் கலக்கிய கேரக்டர்கள் நிறையவே உண்டு. வேட்டையன் முதல் சிவாஜி மொட்டை வரை யோசித்து பாருங்கள்).

தில்லு முல்லு



ரஜினியின் சிறந்த காமெடிக்கு ஒரு உதாரணம். என் நண்பர்களில் சிலர் இன்றும் இந்த படம் டிவி யில் வந்தால் முழுதும் பார்க்க உட்கார்ந்து விடுவர். தேங்காய் சீனிவாசன் - ரஜினி என்ற அபூர்வ காம்பினேஷனில் அசத்திய படம்.

ஸ்ரீ ராகவேந்திரர்

இது ரஜினிக்கே மிக பிடித்த படம். பெரும்பாலும் ஜனங்களுக்காக படம் செய்யும் ரஜினி தன் திருப்திக்கு எடுத்த படம்.



தனது வழக்கமான பணியை விடுத்து மிக மெதுவாக பேசி நடித்திருந்தார். படம் பெரிதாக ஓட வில்லை என்றாலும் ரஜினியின் சிறந்த படங்களில் இது நிச்சயம் இடம் பெறும்.

பாஷா

தமிழின் மிக பெரிய வெற்றி படங்களில் இதுவும் ஒன்று. படத்தில் காமெடி almost இல்லை. ஆனால் எந்த தொய்வும் இல்லாமல் படம் அட்டகாசமாய் இருந்தது. ஒரு வெற்றி பெற்ற படத்தில் வெயிட்டாக சில காட்சியாவது இருக்கும். இந்த படத்தில் ரஜினி தங்கை கல்லூரி அட்மிஷனுக்காக போகும் போது நடக்கும் காட்சி ஒரு உதாரணம். "எனக்கு இன்னொரு பேர் இருக்கு" என்றவுடன் சத்தமில்லாமல் கண்ணாடி அறைக்குள் நடக்கும் காட்சிகள் பார்க்கும் ரசிகரை விசிலடிக்க வைக்கும்.



இந்த படத்தின் வெற்றி விழாவில் ரஜினி பேசியது பெரும் அரசியலானது. ரஜினியின் all time hits-ல் இந்த படம் இல்லாமல் போகாது.

படையப்பா

எனக்கு ரொம்ப பிடித்த ரஜினி படத்தில் இது ரொம்ப மேலே வரும். சில படங்கள் நாம் பார்க்கும் போது எந்த நிலையில் உள்ளோம் என்பதை பொறுத்து பிடிக்கும் அல்லது பிடிக்காமல் போகும். இந்த படம் மற்றும் அதன் பாடல்கள் எனக்கு மிக பிடித்தது அன்றைக்கு எனக்கு இருந்த மன நிலையும் ஒரு காரணம்.




ஒரு பெண்ணை powerful- வில்லியாக காட்டியிருந்தது அசத்தலாக இருந்தது. சொல்ல போனால் ஹீரோயின் விட எல்லோரும் ரம்யா கிருஷ்ணன் பற்றி தான் பேசினார்கள். அந்த அளவு இன்னொரு கேரக்டருக்கு scope -கொடுத்தது நிச்சயம் ரஜினியின் பெருந்தன்மை தான்.

A super hit film with excellent songs.

சந்திரமுகி

ரீமேக் என்றாலும் அதனை விட அதிக வியாபாரமும் வெற்றியும் பெற்ற படம். சென்னையில் 700 நாட்கள் ஓடிய படம். ஜோதிகாவிற்கு நடிக்க செம வாய்ப்பு இருந்தும் ரஜினியும் புத்தி சாலிதனமான நடிப்பால் நம்மை கவர்ந்தார்.



படத்தின் கடைசி 45 நிமிடங்கள் நாங்கள் DVD-ல் பல முறை பார்த்து ரசித்துள்ளோம்.

சிவாஜி

இது இந்த பட்டியலில் வருவது சிலருக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால் ரஜினி டான்ஸ் மற்றும் சண்டை இந்த படம் அளவு வேறு எந்த படத்திலும் match-ஆகாது என்பது ஏன் எண்ணம்.



ஷங்கருடன் ரஜினி முன்பே நடித்திருக்க வேண்டியது... முதல்வனில்...!! நினைத்து பாருங்கள்!! முதல்வன் பட கதைக்கு ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்!! Great miss!!

மொட்டை ரஜினி அஞ்சே நிமிஷத்தில் அசத்தி இருந்தார். வெள்ளை ரஜினியும், அதற்கான ஷங்கரின் மெனக்கெடலும் குறிப்பிட பட வேண்டியவை. காமெடி, நல்ல தீம், விறு விறுப்பான திரைகதை என சிவாஜி ஒரு பக்கா entertaining film.

*********
எனது பத்து முடிந்து விட்டது. ஏதாவது படம் விடு பட்டு விட்டது என எண்ணுகிறீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்கள்!! இதே படங்களில் உங்களுக்கு பிடித்த படம் இருந்தாலும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நமக்கு entertaining சினிமா தரும் ரஜினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

ரஜினி-10 பிடித்திருந்தால் தமிழிஷ் மற்றும் தமிழ் மணத்தில் ஓட்டு போடுங்க பாஸ்!!

Friday, December 11, 2009

கனவு கன்னிகள்

மீசை முளைக்க ஆரம்பித்த காலம்.பெண்கள் மீது ஈர்ப்பு வந்த பொழுது.. அப்போ ஆரம்பிச்சுது இந்த " கனவு கன்னி" சமாசாரம்!! அப்போ முதல் இப்போ வரை இது ஒரு flash back.

மாஜி தலைவிகள்

நதியா

9 அல்லது 10-ஆவது படித்து கொண்டிருந்தேன். அப்போது பூவே பூச்சுடவா என்ற படம் வெளியாகி பட்டையை கிளப்பியது. ஹீரோ என்று யாரும் இல்லாமல் பத்மினி மற்றும் நதியா என்ற புது முகம் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தனர். தமிழுக்கு பாசில் என்ற புது இயக்குனர்.



நதியாவின் குறும்பு, நடை, ஸ்டைல் எல்லாமே அசத்தியது. நான் பல முறை பார்த்த படங்களில் இது ஒன்று. அதற்கு பாசிலின் கதை மற்றும் இயக்கம் ஒரு முக்கிய காரணம் என்றால்.. ஹி ஹி நதியாவும் இன்னொரு காரணம்.

அப்போது நதியா டைப் Haristyle , உடை என எல்லாம் ரொம்ப famous-ஆனது.

இவர் எந்த நடிகருடனும் நெருக்கமாக நடிக்க மாட்டார். அன்புள்ள அப்பா படத்தில் சிவாஜியுடன் நடித்த போது, இவரை அதிகம் கட்டி பிடித்து நடித்த ஒரே நடிகர் சிவாஜி என ஒரு பத்திரிக்கை விமர்சனம் எழுதியது!!

எல்லாம் இருக்கட்டும். இத்தனை வருஷம் கழிச்சு வந்தாலும் M. குமரன், சண்டை போன்ற படங்களில் என்னமா அசத்துறார் சாமி. பார்க்க நாற்பத்தி சொச்ச வயசுன்னு சொல்ல முடியுமா? ம்....

ரேவதி



துடுக்கு தனமாக அல்லது அப்பாவியாக கொஞ்சி கொஞ்சி சொந்த குரலில் பேசி 80-களில் பலர் உள்ளத்தில் இடம் பிடித்தார் ரேவதி. ஒரு கைதியின் டைரி, புன்னகை மன்னன் போன்ற படங்களில் இவரது நடிப்பு ரசிக்கும் படி இருந்தது. ஏனோ எனக்கு அவரது second innings -அவ்வளவு திருப்தி கரமாக இல்லை.

குஷ்பூ

தமிழகமே இவரை கொண்டாடிய நேரம் அது. 90-களின் துவக்கம். ரஜினி, கமல், விஜய காந்த், சத்ய ராஜ் என ஹீரோ யாராக இருந்தாலும் ஹீரோயின் மட்டும் குஷ்பூவாக இருப்பார்.



குறிப்பிட்டு சொல்லும் படி features இல்லா விடினும் ஏதோ ஒரு attraction இருந்தது அவர் மேல். அவரது நடிப்பில் (சாரி அழகில்) அசத்திய படம் வருஷம் 16.


மீரா ஜாஸ்மின்



ரன் படம் பார்த்து கொஞ்ச நாள் ரசித்து கொண்டிருந்தேன். மூக்கும் முழியுமா லட்சணமா இருப்பார். திடிரென குண்டாகி விடுவார். பின் இளைப்பார். சண்ட கோழியிலும் அசதி இருந்தார் அழகிலும் குறும்பிலும்.

ஸ்நேகா



அழகு, நடிப்பு எல்லாம் இருந்தும் கிடைக்க வேண்டிய அளவு recognition-கிடைக்காதவர். தமிழகத்தை சேர்ந்த ஒரு அழகிய நடிகை. முகமும் சிரிப்பும்.. வாவ் !!

அசின்:

நல்ல அழகு; நடிப்பு; சொந்த குரலில் எந்த மொழியானாலும் பேசும் உறுதி. ஹிந்தியில் சென்று அங்குள்ள politics-லும் கலக்கி கொண்டிருக்கிறார்.



எனக்கு ரொம்ப பிடித்தது கஜினி (தமிழ்) தான். காமெடிக்கு ஹீரோயின் மட்டுமே முழு பொறுப்பு ஏற்று அசத்தலாய் செய்தது இந்த படம் தான் என நினைக்கிறேன்.

தற்போதைய தலைவிகள்:

கேட்ரினா கைப்:

இந்த அழகு தேவதையை பற்றி என்னான்னு சொல்ல? ஆங்கிலோ இந்தியன் பியூட்டி.



இவர் உள்ள stills பார்த்தால் நகரவே மனசு வர மாட்டேங்குது. சல்மான் கான் பேஸ்து அடிச்சா மாதிரி அலைஞ்சார்ணா சும்மாவா?

தமன்னா

கல்லூரியில் பார்த்து மயங்கியது. அயனில் தலைவி என உறுதி செய்ய பட்டது. சமீபத்தில் குமுதம் அரசு பதில்களில் ஒரு கேள்வி: "தமன்னாவிடம் அப்படி என்ன இருக்கு எல்லோரையும் கவர?" என்று. அதற்கு அரசு சொன்ன பதில் இருக்கட்டும். நானாக இருந்தால் " தமன்னாவிடம் அப்படி என்ன இல்லை.. யாருக்கும் பிடிக்காமல் போக?" என கேட்பேன்.



சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் பல பெண்களுடன் வருவார் பாருங்கள். (அநேகமாய் மற்ற அனைவருமே ஹீரோயின்கள் தான்) வேறு யாரையாவது பார்க்க தோன்றுகிறதா? அதிலும் எப்போதும் விளம்பரத்தில் மையமாக இவரே இருப்பார்.. பாருங்கள்.

இன்னும் சில வருஷம் தமிழில் கோலோச்சுவார் என உறுதியாக நம்புகிறேன்.

************
தலைவிகள் மாறுவது மிக இயல்பாய் நடக்கும் ஒன்று. ஒரு நேரத்தில் ஒரே தலைவியும் இருக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்டும் இருக்கலாம். இப்படியாக வாழ்க்கை போயிட்டு இருக்கு.

கனவு கன்னிகள் பிடிச்சிருந்தா தமிழிஷ் மற்றும் தமிழ் மணத்தில் ஓட்டு போடுங்க பாஸ்!!

Thursday, December 10, 2009

கேபிள் சங்கர் - No:1 யூத் ( 50 -வது பதிவு)



* கேபிள் சங்கர் - தமிழில் ப்ளாக் வாசிக்கும் அனைவருக்கும் தெரிந்த பதிவர். பதிவுகள் வரும் நாளில் சுமார் 2000 பேரும், பதிவுகள் வராத நாளில் கூட 500 முதல் 1000௦௦௦ வரையும் வாசகர்கள் தினசரி இவரது blog-ஐ வாசிக்கின்றனர் !!


* கேபிள்ஜிக்கு இரு மகன்கள். பெரியவர் ஐந்தாவதும் சின்னவர் ஒன்றாவதும் படிக்கின்றனர்..(தல.. உங்களோட யூத் இமேஜை உடைச்சிட்டோமோ? )


* இவரது தந்தை அரசு துறையில் (EB) இருந்து ஓய்வு பெற்றவர். திரை துறையிலும் பங்காற்றியிருக்கிறார். சமீபத்தில் இவர் மரணம் கேபிளை ரொம்பவே உலுக்கியது. வலை உலக நண்பர்கள் பெரும் ஆறுதலாகவும் துணை ஆகவும் இருந்தனர் அப்போது.


* சினிமா இயக்க வேண்டும் என்பது இவரின் நீண்ட நாள் கனவு. நான்கு கதைகள் கை வசம் வைத்துள்ளார். நல்ல தயாரிப்பாளர் கிடைத்து விட்டால் ஸ்டார்ட் காமெரா என சொல்ல ஆரம்பித்து விடுவார்.

* பல தொலை காட்சி தொடர்களிலும் (குறிப்பாக ஜெயா டிவி), சில சினிமாக்களிலும் நடித்திருக்கிறார். தற்போது ஏன் நடிப்பதில்லை என்றால், " நடிச்சுக்கிட்டு இருந்தா நடிகன்னே வச்சிடுவாங்க; டைரக்ட் பண்ண சான்ஸ் கிடைக்காது. அதனால தான் நடிக்கிறதில்லை" என்கிறார் !!

* சென்னை சைதாபேட்டையில் வசிக்கும் இவர் கேபிள் operator ஆக உள்ளார். (பெயர் காரணம் புரிந்திருக்குமே? )

* யூத் என விளிப்பது இவருக்கு ரொம்ப பிடிக்கும். இவருடன் பழகினால் உண்மையிலேயே இவர் யூத்துதான் என அறியலாம். ஒரு கல்லூரி மாணவன் கூட இவருடன் பழகினால் ஆச்சர்யப்பட்டுப்போவான். அந்த அளவுக்கு செயலிலும் எண்ணங்களிலும் பேச்சிலும் இளமை பொங்கி வழியும். இந்த யூத்தை வைத்து வலை உலகில் நிறைய கிசு கிசு உலாவியது. அந்த கட்டுரைகளுக்கு தானும் ஒரு வாசகனாக போய் யாரோ ஒருவர் பற்றி எழுதிய மாதிரி கமெண்ட் போட்டு விட்டு வருவார்.

* ஹோட்டலுக்குச் சாப்பிடச் சென்றால் சர்வரிடம் முதலில் பெயர் கேட்பார். அதன் பிறகு அவரை பெயரோடு சார் போட்டு அழைப்பார்.(உ.ம் - ரவி சார்)

* உட்கார்ந்து அரட்டை அடிப்பதைவிட நின்று கொண்டு அரட்டை அடிப்பது மிகவும் பிடிக்கும்.

* அப்பாவின் பூர்வீகம் தஞ்சாவூர் என்பதால் யாரேனும் தஞ்சைக்காரர்களைப் பார்த்தால் ரொம்ப happy ஆகி அளவளாவுவார் .

* சினிமா வியாபாரம் பற்றி இவர் எழுதியதன் தொகுப்பை கிழக்கு பதிப்பகம் மூலம் புத்தகமாக விரைவில் எதிர் பார்க்கலாம். Blog -ல் வந்ததை விட எக்ஸ்ட்ரா மேட்டர்கள் புத்தகத்தில் உண்டு.

* பல புது ப்ளாக்கர்களுக்கு இவர் ஊக்கமும், ஐடியா- க்களும் தருவார். " எல்லோரும் எழுதலாங்க; எழுத நிறைய மேட்டர்ஸ் இருக்கே" என்பார்.


* எழுத்தில் இருக்கும் கேலியும் கிண்டலும் நேரில் பேசும் போதும் இன்னும் சற்று அதிகமாகவே இருக்கும் !!

* போனில் பேசும் போது சில நேரம் பைக் ஓட்டி கொண்டிருப்பார். அப்புறம் பேசுறேன் என்றால், " போன் வந்துக்கிட்டே தான் இருக்கும். காதில ஹெட் போன் மாட்டிட்டு பேசிட்டு போய்ட்டே இருக்க வேண்டியது தான்; இல்லாட்டி முடியாது" என்பார். ( தல பார்த்து.. ஜாக்கிரதை தல.. )

* கவிதைக்கும் இவருக்கும் ஆகாது. "கவிதையா? என்டெர் தட்டி, என்டெர் தட்டி எழுதுறது தானே?" என்பார் கிண்டலாய். இவர் நெருங்கிய நண்பர்களுள் ஒருவரான பெரும் சத்தம் எழுப்பும் பெயர் கொண்டவர், " அவருக்கு கவிதை வராதுங்க. அதான் இப்படி சொல்றார்" என்கிறார்.. (ஏதோ நம்மால முடிஞ்சது).




* ஒவ்வொரு திங்களன்றும் இவர் எழுதும் கொத்து பரோட்டா ரொம்ப பேமஸ் !! இதில் ரொம்ப நாளாய் வாரம் ஒரு புது ஹோட்டல் பற்றி எழுதி வருகிறார். இப்போது அதிகம் அறிய படாத ஒரு பதிவர் பற்றியும் எழுதுகிறார்.


* ஜெயா டிவி தமிழ் பதிவுலகம் பற்றி இவரை பேட்டி எடுத்து ஒலி பரப்பியது. அதில் blog ஆரம்பிப்பது எப்படி, அதன் மூலம் கிடைக்கும் பயன்கள் என்ன உள்ளிட்ட பல விஷயங்கள் இவர் பகிர்ந்து கொண்டார்.


* பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான பிரமிட் நடராஜன் இவருக்கு சித்தப்பா முறை.

* கேபிள் சினிமா படங்கள் பார்ப்பதில் அலாதி பிரியம் கொண்டவர். தெலுங்கு படம் சென்னையில் ரிலீஸ் ஆகா விடில் ஆந்திரா போய் பார்த்து வருவாராம்!! தெலுங்கு நன்கு பேசவும் தெரியும்.


* பழகுவதற்கு பெரியவன் சிறியவன் என்று பாகுபாடெல்லாம் பார்ப்பது கிடையாது . அனைவரிடமும் பகிர்ந்துகொள்ள ஏதேனும் மேட்டர் இருக்கும் இவரிடம். பேச ஆரம்பித்தால் சுவாரஸ்யமாக இருக்கும், நக்கல் கலந்து பல விசயங்களை அள்ளி வீசுவார். அதிலும் சினிமா பற்றி என்றால் நம் வயிறு வலிப்பது நிச்சயம்.

* கேபிளிடம் உள்ள இன்னொரு குணம், உரிமையை தட்டிக் கேட்பது. பொது இடங்களில் யாரை வேண்டுமானாலும் எதிர்த்து நிற்கும் தைரியம் அவரிடம் உண்டு. கடைக்காரர் சரியான சில்லரை கொடுக்கவில்லையென்றால் வாக்குவாதம்தான், அது எந்த ஷாப்பாக இருந்தாலும் சரி, வாதாடி மீதி 2 ரூபாயை வாங்கிவிட்டுத்தான் வருவார். கேட்டால், “என் பணம்யா இது, ஒரு ரூபாயா இருந்தா என்ன? நா சம்பாதிச்சது, அத எடுக்க இவனுக்கு என்ன உரிமை இருக்கு?”ன்னு கேப்பார்.

* மூட் இருந்தால் மற்றவர்களை இமிடேட் செய்து காண்பித்து நண்பர்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பார்.

* Blogger-களை வரிசை படுத்தும் அலெக்ஸா ரேட்டிங்கில் தற்சமயம் இடம்பெற்றுள்ள ஒரே தமிழ் வலைப்பூ நம்ப சங்கருடையதே. (இதற்கு அர்த்தம் ரேட்டிங்கில் இவர் நம்பர் 1 என்பதாக கொள்ளலாம்).

* பழக மிக இனிமையானவர். பலருக்கும் உதவுவது எப்போதும் இவரது வழக்கம்.
அவரது எண்ணப்படி நல்ல சினிமா ஒரு நாள் நிச்சயம் தருவார் என்பது அவரது நம்பிக்கை மட்டுமல்ல அவரது நண்பர்கள் அனைவரின் நம்பிக்கை.

டிஸ்கி 1 : கேபிளிடம் கொஞ்ச காலமே பழகிய நான், எழுத வேறு சில விஷயங்கள் இருந்த போதும், எழுதாமல் தவிர்த்து, வியாழன் வரை காத்திருந்து 50 -வது பதிவு - கேபிள் பற்றி தான் இருக்க வேண்டும் என எண்ணினேன். இது கேபிள் குறுகிய காலம் பழகிய நபர் மீது கூட செலுத்தும் ஆளுமையை காட்டுகிறது.

டிஸ்கி 2 : கேபிள் சங்கர் பற்றி என்றதும் தண்டோரா, அதிஷா, நரசிம், அப்துல்லா, அதி பிரதாபன், ஜெட் லி, அசோக் என பலரும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அதன் தொகுப்பே இந்த கட்டுரை. தகவல் தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல.

Friday, December 4, 2009

உள்ளூர் துயரம் ...வெளியூர் வலி

வேதாரண்யத்தில் பள்ளி வேன் விபத்தில் 10 பேர் ( 9 குழந்தைகள்; ஒரு ஆசிரியை) இறந்துள்ளனர். இன்னும் எத்தனை முறை தான் இது மாதிரி செய்திகள் கேள்விப்பட போகிறோம்? அரசாங்கம் பள்ளி வாகனங்களில் அதிகம் பேர் ஏற்ற கூடாது என்ற மிரட்டல் அறிவிப்பு மட்டும் சில நேரம் செய்கிறது. நடவடிக்கை ஒன்றும் காணும்.

இந்த விபத்தில் டிரைவர் குறித்த இரண்டு விஷயங்கள் அதிர வைக்கிறது. முதலாவது: அவரிடம் வண்டி ஓட்ட லைசென்ஸ் கூட இல்லை. அடுத்தது இன்னும் கொடுமை: அந்த accident -நடக்கும் போது டிரைவர் செல் போனில் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்.


Photo: Thanks to Dinamalar.

ஒரு தனி மனிதனின் அலட்சியம் எத்தனை குழந்தைகளின் உயிரை குடித்திருக்கிறது?

அரசாங்கத்தை நம்பி எந்த பயனும் இல்லை. நீங்கள் செல்லும் வண்டியில் டிரைவர் செல் போனில் பேசினால் தயங்காமல் அவரை கீழே வைக்க சொல்லுங்கள். (நான் எப்போதும் இதை வலிக்காமல் சொல்வேன். உதாரணமாய், “வண்டியை ஓரமா நிறுத்திட்டு பேசுங்க அப்புறம் போகலாம்”)

உங்கள் குழந்தை வண்டி செல்லும் டிரைவர் எப்படி பட்டவர், எப்படி வண்டி ஓட்டுகிறார் என்று கொஞ்ச நேரம் செலவு செய்து அறிய பாருங்கள். என் பெண் செல்லும் வண்டியில் முதலில் கிட்ட தட்ட 15 பேர் பயணம் செய்தனர். பல முறை அவரிடம் நான் பேசி, இப்போது அவர் தனது 2 ஆட்டோவும் உபயோகிக்கிறார். (இப்பவும் 7-8 பேர் செல்கின்றனர் என்ன செய்வது !! இதற்கு குறைவாய் செல்லும் ஆட்டோ கிடைப்பதில்லை). காலையில் எப்போதும் பள்ளியில் நான் சென்று விடுகிறேன். அந்த நேரம் ஏதோ சில விஷயங்கள் அவளுடன் பேச முடிகிறது. மனிதர்கள் எப்படி வாழ்கிறார்கள் என காட்ட முடிகிறது. இது குழந்தைக்கு மனதளவில் உதவவே செய்கிறது. (காலையில் பள்ளிக்கு பெற்றோர் அழைத்து சென்று விடுவதை குழந்தைகள் மிக விரும்புவார்கள் என ஒரு டாக்டர் எழுதியதை படித்தேன் ..)

அந்த குழந்தைகளின் பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்லி தேற்றுவது? அரசாங்கம் வழக்கம் போல் பணம் மட்டும் தரும். அது அந்த துயரை ஆற்றி விடுமா?

மற்றொரு துயர சம்பவம் போபால் கேஸ் விபத்து. யூனியன் கார்பைடு என்ற நிறுவனத்திலிருந்து வெளியான கேஸ் கசிவால் இறந்தவர்கள் 3000 பேர்; பின் அடுத்த சில வருடங்களில் 12000 பேர் இறந்தனர் உறுப்புகள் பாதிக்க பட்டவர் லட்ச கணக்கில்.




இது நடந்து 25 வருடங்களுக்கு பின்னும் அந்த விபத்தில் பாதிக்க பட்டவர்கள் நஷ்ட ஈடு கேட்டு அரசு, கோர்ட் என பல இடங்கள் இத்தனை வருடங்களாக ஏறி இறங்குகின்றனர். போபால் கேஸ் விபத்து நான் சட்டம் படித்த போதே பாடத்தில் படித்த வழக்கு. இன்றைக்கும் நீதி கிடைத்த பாடில்லை. இத்தனை வருடங்கள் ஆன பிறகும் தினம் குறைந்தது 6000 பேர் மருத்தவர்களை பார்க்க வேண்டிய நிலையாம்!! இதற்கு நடுவே யூனியன் கார்பைடு நிறுவனம் மறுபடி திறக்க போவதாக செய்திகள் வருகின்றன. அரசாங்கம் அறிவித்துள்ள இழப்பீடு குறைவு என இன்றைக்கும் போபாலில் மக்கள் போராடுகின்றனர்.

இது போன்ற செய்திகள் கேள்வி படும் போது மட்டும் ஏன் இந்தியாவில் வசிக்கிறோம் என்று வலிக்கிறது.

Thursday, December 3, 2009

வாரம் ஒரு பதிவர்: இந்த வாரம் - விக்னேஷ்வரி




தென் தமிழகத்தின் ஒரு கிராமத்தில் பிறந்து இன்று தில்லியையும் வலை உலகையும் கலக்கி கொண்டிருக்கிறார் விக்னேஷ்வரி. அவரை பற்றி....

விகடன் மட்டும் தான் 25 பாயின்ட்டா எழுதணுமா.... நாங்களும் எழுதுவோம்ல :)

பிறந்த ஊர் - ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அருகே ஒரு கிராமம். பெயர் குன்னூர். ஆனால் வளர்ந்ததெல்லாம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தான்.

டிப்பு - ஃபேஷன் டிசைனில் இளங்கலை. Home Textile Management முதுகலை. இன்னும் படிப்புத் தேடல் குறையாமல் அடுத்து என்ன படிக்கலாம் என ஆராய்ந்து கொண்டிருக்கிறார். கூடிய சீக்கிரமே மீண்டும் மாணவராகும் வாய்ப்பு உள்ளது.

தொழில் - மென் பொருள் நிறுவனத்தில் வேலை. ERP Project Consultant. சீக்கிரமே துறை சார்ந்த தொழில் தொடங்க ஆவல் உண்டாம்.

பெயர் காரணம் : அம்மா, அப்பாவிற்கு 11 வருடங்கள் குழந்தையில்லாமல்
இருந்து, பிள்ளையாரிடம் வேண்டிபிறந்ததால் விக்னேஷ்வரனின் பெயரிலிருந்து 'விக்னேஷ்வரி' வந்தது. அழைக்கப்படும் பிற பெயர்கள் : தன்வி மற்றும் விக்கி

ற்சமயம் மட்டுமல்லாது நிரந்தர டில்லி வாசம். தெரிஞ்ச பதிவர்கள் யாராவது டில்லி போனால், தங்க ஒரு இடம் ரெடி.

டன் பணி புரியும் யோகேஷுடன் 2008-ல் காதல் திருமணம். கணவர் பஞ்சாபை சேர்ந்தவர். எனவே வரலட்சுமி விரதத்தை கை விட்டு கரவா சோத் கொண்டாட ஆரம்பித்து விட்டார். கணவர் பற்றியகவிதை என் கண் அவன் - என் கணவன் இவர்களின் அன்பையும், காதலையும் காட்டுகிறது

வரது திருமணம் எப்படி நடந்தது என்பது இவருக்கே தெரியாதாம்.(எந்த உலகத்தில் இருந்தீங்க மேடம்?) திருமண நேரங்களில் திரு திருவென முழித்துக் கொண்டிருந்தாராம். திருமணம் பஞ்சாபிய முறை படி மூன்று நாள் நடந்ததை சுவராஸ்யமாக திருமண நிகழ்வு - பதிவு செய்துள்ளார்.தமிழில் தனது திருமணம் பற்றி ஒரு பெண் எழுதிய விரிவான பதிவு இது.

வரின் பிடித்தமான பொழுதுபோக்கு இவரது கணவருக்கு தமிழ் கற்றுத் தருவது தானாம். தனது பதிவுகளில் காதல் கணவன் யோகி தமிழ் கற்று வரும் அனுபவங்களை " யோகி டைம்ஸ்" என காமெடி ஆகஎழுதி வருகிறார்.
யோகி தற்போது தமிழ் நாட்டிலிருந்து யாராவது தொலைபேசினால், "வணக்கம், நல்லாஇருக்கீங்களா?" என அன்பாக கேட்கிறாராம் !!

ள்ளி காலத்தில் சிறந்த பேச்சாளராய் இருந்திருக்கிறார். பள்ளியின் அனைத்து விழா, நிகழ்ச்சிகளிலும் இவர் குரல் ஒலித்திருக்கிறது. பள்ளி, கல்லூரிகளில் நிகழ்ச்சிகளைத் தொகுத்தும் வழங்கியிருக்கிறார். அப்போது எழுதிய அனுபவம் மிகக் குறைவாம். ஆனால் பெயிண்டிங், ஓவியம், கைவேலைப்பாடுகள் என ஆல் ரவுண்டர் ஆக இருந்திருக்கிறார் .
ண்பர்களைத் தக்க வைத்துக் கொள்வதில் அக்கறை அதிகம். பழைய பள்ளி நண்பனை சந்தித்த போது எவ்வளவோ பேச நினைக்க எதுவும் பேசாமல் வந்த நினைவை அழகாய் பதிவு செய்துள்ளார் "தொலைத்த நாட்கள்" என. அவரது பதிவுகளில் எனக்கு பிடித்த பதிவு அது

ழுத ஆரம்பித்த குறுகிய காலத்தில் 110 followers. (எப்புடிங்க அது? எங்களுக்கெல்லாம் சொல்லி குடுங்க )

ன் வாசிப்பிற்குக் காரணமே அம்மா தான் என்கிறார். அம்மாவின் கவிதைகள் சில வாரப் பத்திரிக்கைகளிலும் வந்துள்ளதாம். இப்போது அவர் அம்மா எழுதுவதில்லை. ஆனால், எழுத்து குறித்தும், புத்தகங்கள் குறித்தும் இருவரும்நிறைய பேசுவார்களாம். " அம்மாவின் எழுத்தை அபகரிக்க முடியவில்லை" என்கிறார் ஏக்கமாய்.

திருமணத்திற்கு பின் பெண்கள் தம் தோழிகளுடன் பேசும் போது ஏற்படும்
வலியை அவரது வார்த்தைகளில் கேளுங்கள்:
".................இப்போதும் எப்போதாவது தொலை பேச நேர்ந்தாலோ, நேரில் சந்தித்தாலோ அதே அன்பு மாறாமல்,எங்கள் கதை பேச நேரங்கள் போதவில்லை. "அவர் வந்திடுவாரு நான் கிளம்பறேன்", "குழந்தை எழுந்திருச்சிருப்பா","மாமியாரை கோவிலுக்குக் கூட்டிட்டுப் போகணும்" என்று ஏதோ ஒரு பொறுப்பு நினைவிற்கு வர சொல்லா நட்பின் இதத்தை ஒரு கட்டியணைத்தலில் பரிமாறி விடை பெறுகிறோம்".

காதல் பிரிவின் வலி பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்ற தலைப்பில் எழுதி உள்ளார். பின்னூட்டங்களிலேயே அந்த நேர்மையான பதிவு எத்தனை பேரை எந்த அளவு பாதித்திருக்கிறது என உணர முடிகிறது

ம்மையாருக்கு இன்ஜினியரிங் படிப்பில் துளியும் விருப்பமில்லாமல் அம்மாவுடன் சண்டை போட்டு தப்பித்தாராம். இதில் அப்பாவின் சப்போர்ட் இருந்ததால் வெற்றி கிடைத்தது. சட்டம் படிக்கணும் என்ற ஆவலும் இருந்ததாம் (ஏனுங்க எனக்கு போட்டியா?)

மாமியார், நாத்தனார் என எல்லோரும் பாசமழை பொழிகிறார்களாம்!! இது பற்றியே ஒரு தனி பதிவு !! இது இவர் அவர்கள் மீது கொள்ளும் அன்பின் பிரதிபலிப்பே.

மைப்பதில் ஆர்வம் அதிகம். சாப்பிடுவதிலும் தான். தெற்கும் வடக்கும் திருமணம் செய்தாலும், வீட்டில், தமிழ் நாடு, ஆந்திரா, பஞ்சாபி, ராஜஸ்தானி, குஜராத்தி, மராத்தி, தில்லி என தினம் ஒரு விதசமையலை முயற்சி செய்து (!!!) பார்க்கிறார். (யோகி கல்யாணத்திற்கு பிறகு எடை கூடினாரா குறைந்தாரா என்றுகேட்டால், சமையல் எப்படி என்று அறியலாம். யோகி நம்பர் ப்ளீஸ். )

திவுலகில் ஏகப்பட்ட நண்பர்கள். எல்லோர் எழுதுவதையும்படித்து சின்சியர்
சிகாமணியாக comment-போடுவார்.
ழுத்திலும் பேச்சிலும் ஒரு சிநேகம் தெரிகிறது. கூடவே கிண்டலும் பெரும்பாலான பதிவுகளில் தெரிகிறது. Hit counter-க்கு "இதுக்கு சூடு வைக்க முடியலையே!!!" என தலைப்பு வைக்கிறார். Followers -க்கு தலைப்பு " நம்மளையுமா?"

ண்களுக்கு சப்போர்ட் செய்யும் பெண்ணிவர். தவறு பெண்களிடம், குற்றம் ஆண்கள் மீதா... தலைப்பே இதன் கரு சொல்லும். ஆண்கள் படித்து மகிழவேண்டிய பதிவு

விதைகள் எழுத பழுகுகிறார் (கோபிக்காதீங்க விக்கி) . அவர் கவிதைகளில்
என்னை கவர்ந்தது தைரியமான எழுத்து...
வருக்குப் பிடிக்காதவர்கள், கெட்டவர்கள் என்று எவரும் இல்லை. "ஒருவரின் சில செயல்கள் அல்லது எண்ணங்கள் தவறாக இருக்கலாம். ஆனால், அதற்காக அந்த மனிதரே தவறென சொல்வதை என்னால் ஏற்க முடியாது" என்கிறார்.
Blog உலகம்பற்றி அவரிடம் நான் கேட்ட போது அவரது பதில் :

"சாதாரண உலகம் போலவே நல்லவர்கள், கெட்டவர்கள், நண்பர்கள், கயவர்கள் என அனைவரும் கலந்து இயங்கும் உலகம். ஆனால் இவையனைத்தும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் இருக்கும் வரை யாருக்கும் பிரச்சனையில்லை.

கற்றது பெற்றதும் மிக அதிகம். முதலில் பெற்றது என் தாய் மொழியை என்னுடனே வைத்திருக்கும் பாக்கியம். ஒரு பஞ்சாபியை மணந்து தலைநகரில் வாழப் போகிறோம் எனும் போது தமிழை இழக்கும் பயம் அதிகம் இருந்தது. ஆனால், இந்தப் பதிவுலகம் தான் என்னை என் மொழியுடன் இணைத்து வைத்திருக்கிறது. தவிர நிறைய நண்பர்கள், நிறைய விஷயங்கள், வித்தியாசமான மொழி நடைகள், சுவாரசியமான புது வார்த்தைகள், நண்பர்களின் ஆரோக்கியமான, நேர்மையான விமர்சனங்கள் என இங்கிருந்து கற்றவை பல. இன்னும் கற்றுக் கொண்டேயிருக்கிறேன்."
வரைப் பற்றி அவரது நண்பர் செல்வேந்திரனின் கருத்து.

விக்னேஷ்வரி என்றதும் நினைவில் ஆடுவது அவளது நிபந்தனையற்ற தூய பேரன்பு மட்டுமே. சூடிக்கொடுத்தசுடர்க்கொடி ஆண்டாள் நடைபழகிய அக்கிஹாரத்தில் பிறந்த பெண் இன்றைக்கு காதலின் அன்புக் கற்றையினால் சுற்றப்பட்டு முழு பஞ்சாபிப் பெண்ணாக மாறி லோஹ்ரி பண்டிகைக்கு பலகாரம் சுட்டுக்கொண்டிருக்கிறாள். நல்ல கவிஞராகும் துடிப்பும், ஆர்வமும் அவளிடத்தில் எப்போதும் உண்டு. தொடர்ந்த உழைப்பின் மூலம் ஒரு நாள் நல்ல கவிதாயிணியாக அவள் வருவாள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

டிஸ்கி 1 :
பெண் பதிவர்கள் உங்கள் அனுமதி இன்றி உங்களை பற்றி எழுதுவேனோ என்ற பயம் கொள்ள தேவை இல்லை. பெண்கள் பற்றி எழுதும் போது அறிவிப்பிற்கு முன்பும், பிரசுரிக்கும் முன்பும் தங்கள் அனுமதி பெற்ற பின்பே வெளியிடுவேன் என்பதை கவனத்தில் கொள்க.

டிஸ்கி 2:
ஒரு வழியாய் followers எண்ணிக்கை ஐம்பதை தொட்டு விட்டது. ஒரு மாதம் முன்பு வரை அது 12 -ஆகவே இருந்தது. தமிழ் மணம் மற்றும் தமிழிஷில் இணைந்த பிறகே எண்ணிக்கை கூடியது. அந்த 50 நண்பர்களுக்கும் நன்றிங்கோ !!

அடுத்த வாரம் : சென்னையின் eternal youth : கேபிள் சங்கர்
Related Posts Plugin for WordPress, Blogger...