Showing posts with label திருநெல்வேலி. Show all posts
Showing posts with label திருநெல்வேலி. Show all posts

Sunday, May 22, 2016

பத்மநாபபுரம் பேலஸ்- படம் + வீடியோவுடன் ஒரு பார்வை

நாகர்கோவில் செல்லும் சுற்றுலா பயணிகள் அவசியம் செல்லும் இடங்களில் ஒன்று - பத்மநாபபுரம் அரண்மனை. ஆறரை ஏக்கர் பரப்பில் அசத்துகிறது. நாகர்கோவில் அருகே இருந்தாலும் கேரள அரசாங்கத்தின் பராமரிப்பில் உள்ளது இந்த அரண்மனை



அரசர் பயன்படுத்திய 167 அறைகள் இங்குள்ளன அவற்றில் இப்போது 120 மட்டுமே நாம் பார்க்க திறந்து வைக்கப்பட்டுள்ளது. சிறப்பு மிக்க சில அறைகள் பற்றி இப்பதிவில் காணலாம்.



சென்று வந்து பல மாதங்கள் கழித்து எழுதுவதால் படம் மற்றும் வீடியோ சற்று அதிகமாக இருக்கும் பொறுத்தருள்க !

பூ முகம்





ராஜா தன்னை காண வரும் வி. ஐ பி -களை இந்த இடத்தில் தான் சந்திப்பாராம்.

இங்குள்ள குதிரைக்காரன் விளக்கு - எந்த பக்கம் வெளிச்சம் இல்லையோ - அந்த பக்கம் தானாகவே திரும்பி கொள்ளும் விதத்தில் உள்ளது சிறப்பு



அரசருக்கு வந்த Wooden க்ரீட்டிங்க் கார்டுகள் பார்வைக்கு இங்கு வைத்துள்ளனர். இன்றைக்கும் ஜம்மென்று இருக்கும் நாற்காலிகள் சைனாவில் இருந்து வந்த வியாபாரிகள் அரசருக்கு பரிசாய் தந்தவையாம்

அறையின் மேல் பக்கம் -90 வித மலர்கள் - கற்களில் செதுக்கப்பட்டுள்ளது - ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்..



அரசசபை


நடுவில் அரசரும் இரு புறமும் அமைச்சர்களும் அமர்ந்திருந்த இந்த இடத்தில் செம குளுமையாக உள்ளது. குளிரூட்டப்பட்ட அறை போல மூலிகைகள் வைத்தே இந்த இடத்தை ராஜா காலத்தில் குளிர வைப்பார்களாம்

அரண்மனை முழுதுமே மின்சாரம் இல்லை. அந்த காலத்தில் இருந்த நிலையிலேயே -அரண்மனையை வைத்து - ஆனால் மிக அழகாக மெயின்டெயின் செய்கிறார்கள்

அன்னதான சாலை

2 அடுக்குகளில் (2 Floor ) இருக்கிறது அன்ன தான சாலை. ஒவ்வொரு தளத்திலும் 1000 பேர் அமர்ந்து உணவு உண்ண முடியும். இன்றைக்கு அன்றைய நாளின் நினைவாக அன்றைய அடுப்புகளும், ஊறுகாய் வைக்க பயன்படுத்திய ராட்ஸச ஜார்களும் இருக்கின்றன . மிக பெரிய அன்னதான சாலை நம்மை பிரமிக்க வைக்கிறது

ராஜாவின் அந்தரங்க அறைகள்

ராஜாவின் படுக்கை அறை , தியானம் செய்யும் இடம், பூஜை அறை போன்றவை பொதுமக்கள் பார்வைக்கு தற்போது அனுமதி இல்லை.

உப்பரிகை மாளிகை

அரண்மனையில் மிக உயரமான இடம் இது தான். 16-ஆம் நூற்றாண்டில் செய்த கட்டில் இன்னும் அங்கு உள்ளது. அரசர் கழட்டி வைக்கும் கிரீடம் வாள் உள்ளிட்டவை இங்கு நினைவுக்காக வைக்கப்பட்டுள்ளது




விருந்தினர் மாளிகை

இந்த இடம் முழுக்க முழுக்க வெளிநாட்டு விருந்தினர்கள் தங்குவதற்காக தயார் செய்யப்பட்டுள்ளது. 2 படுக்கை அறைகள், 2 பால்கனி கொண்ட இந்த அறைக்கு வெளியே அரண்மனையில் ஒரு வாயிலும் - பொதுமக்கள் வசிக்கும் தெருவும் உள்ளது. அது பற்றி விசாரித்தால், வெளிநாட்டினர் - அரண்மனையின் பின் வாயில் வழியே தான் உள்ளே வர முடியும் என்றும் - முன் பக்கம் வழியே அவர்களுக்கு அனுமதி இல்லை என்றும் சொல்கிறார்கள் !




அரண்மனை கட்ட மண் தோண்டி எடுத்த பின், காலியாய் கிடந்த இடத்தில் குளம் கட்டப்பட்டதாம் !



இந்த இடத்தின் அருகே சரஸ்வதி தேவிக்கு ஒரு கோவில் கட்டப்பட்டுள்ளது. இதனை கட்ட சேரன், சோழன் பாண்டியன் மூவரும் - பல பொருட்கள் மூலம் - தங்கள் பங்களிப்பை செய்துள்ளனர்



120 அறைகளை பொறுமையாய் பார்வையிட - அரை நாளாகும் ! ஆனால் பெரும்பாலான மக்கள் ஓரிரு மணி நேரத்தில் அவசரமாய் பார்த்து விட்டு செல்கிற படி தான் ஆகிறது !

அங்கிருக்கும் ஊழியர்கள் மிக பொறுமையாகவே அனைத்தும் விளக்குகிறார்கள். நீங்கள் சென்றால் குறைந்தது 3 அல்லது 4 மணி நேரம் செலவிடுகிற மாதிரி திட்டமிட்டு செல்லுங்கள்.. அரண்மனையின் அழகை அப்போது தான் முழுதாய் ரசிக்க இயலும் . 

Saturday, April 23, 2016

திருச்செந்தூர் - ஒரு பயண அனுபவம்

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று - திருச்செந்தூர். இந்தியாவின் தென் மேற்கு முனையில் இருக்கிறது.

முருகன் சூரனை வதம் செய்த இடம் - போரில் இந்த இடம் முழுதும் ரத்தத்தால் நனைந்தது என்பதால் - இவ்விடத்துக்கு செந்தூர் என்று பெயர் வந்தது. முருகனுக்காக திரு விகுதி சேர்ந்து திருச்செந்தூர் ஆனது

பெரிய கோவிலின் அருகிலேயே பீச் இருப்பது மிக அழகான சூழல். நிறைய ஓபன் ஸ்பேஸ் இருப்பதால் காற்று பிய்த்து கொண்டு அடிக்கிறது கோவில் பிரகாரத்தில் பீச்சை பார்த்த படி சுற்றி வருவதே இனிமையான அனுபவமாக இருக்கிறது
டாக்டர் வெங்கடப்பன், அவர் மகன் பிரகாஷ் உடன் கோவில் வெளியே 

அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படும் கோவில் இரவு 9 மணி வரை திறந்திருக்கிறது. மதியம் நடை சாத்தப்படுவதே இல்லை !

சபரிமலை செல்லும் பக்தர்களில் - குறிப்பிட்ட பகுதியினர் பெருமளவில் வருவதால் மார்கழி, தை (டிசம்பர், ஜனவரி ) மாதங்களில் கூட்டம் மிக அதிகமாய் காணப்படுகிறது
*************
இந்த வீடியோவில் கோவில் மற்றும் பீச் காணலாம்:



நாங்கள் சென்ற நேரம் சென்னையிலிருந்து இன்னொரு உயர்நீதி மன்ற வழக்கறிஞர் குடும்பமும் வந்திருந்தனர். அவர்களோடு ஒரு ஆண் கிளியும் ! உயர் நீதி மன்றத்தில் மரம் வெட்டும்போது அதிலிருந்த பொந்திலிருந்து குட்டி கிளியாக எடுத்து வளர்க்க ஆரம்பித்துள்ளனர். எவ்வளவு ஆசையாக அந்த குடும்பத்துடன் ஒட்டி கொண்டது அந்த கிளி ! ஏறக்குறைய குழந்தையை வைத்திருக்கும் படி தான் அதனை வைத்திருந்தனர். எந்த கூண்டும் இன்றி கைகளுக்குள்ளேயே வைத்திருந்தனர் அந்த கிளியை ! அவர்கள் சொன்னால் அவ்வளவு அழகாய் பேசுகிறது ! அவர்கள் சொன்னதும் எங்கள் ஒவ்வொருவரிடமும் வந்தது அக்கிளி. ஊரில் எங்கள் கிளிகளை விட்டு விட்டு போனதால் அந்த கிளியை பார்த்து மிக ஆசை, ஆசையாய் நாங்கள் மிக கொஞ்சினோம்



கோவில் உள்ளே செல்ல காத்திருக்கும் நேரத்தில் இந்த நிகழ்வை கண்டோம். சுற்றியள்ள இடங்களில் இருந்து நடைபயணமாக வருவார்கள் இல்லையா அப்படி கோவிலுக்கு வந்த ஒரு பெரிய பக்தர் கூட்டம் .. சாமியை பார்க்கும் முன்பு பூஜை செய்து கொண்டிருந்தது. சரியான துள்ளல் இசை, பக்தி பாட்டு என டெம்போ ஏற ஏற அங்கிருந்த ஒரு அம்மணி சாமி ஆடியது செம சுவாரஸ்யமாக இருந்தது வீடியோவில் பாருங்கள்



சபிக்கப்பட்ட தினமான - அந்த டிசம்பர் 26 கடல் சார்ந்த பகுதியான திருச்செந்தூரையும் தாக்கியிருக்கிறது. ஆனால் கோவில் இருந்த இடம் பீச்சிற்கு மிக அருகில் இருந்தும் கோவில் உள்ளே மட்டும் தண்ணீர் நுழையவே இல்லை ! கடல் உள்வாங்கி விட்டது !  " சுனாமி வென்ற முருகன் " என்று அதன் பின் அழைக்க துவங்கி விட்டனர் நம் மக்கள் !

இங்கு வழங்கப்படும் பன்னீர் இல்லை பிரசாதம் பிரபலமானது. ஒரு இலையில் திருநீரை வைத்து மடித்து பாடம் செய்யப்பட்டது போல் தருகிறார்கள். (எல்லா பக்தர்களுக்கும் இது தரப்படுவதில்லை. கோவிலில் வேலை செய்வோர் யாரேனும் தெரிந்தால் மட்டுமே வாங்க முடியும்)

குறிப்பிட்ட ஒரு மரத்திலிருந்து இந்த இலைகள் எடுக்கப்படுகின்றன. அவற்றின் 12 நரம்புகளும் தெளிவாக தெரிகிறது; இதனை முருகனின் பன்னிரு கரத்துடன் ஒப்பிட்டு பன்னிரு இலை என்று சொல்லப்பட்டு அதுவே பன்னீர் பிரசாதம் ஆகி விட்டது.



கோவிலின் உள்ளே தினம் குறைந்தது 300 பேருக்காவது அன்னதானம் வழங்கப்படுகிறது. மேலும் கோவிலில் இருந்து சற்று தொலைவில் " நகரத்தார் விடுதி" என்று சொல்லப்படும் இடத்தில் தினம் 100 பேருக்கு மிக தரமான உணவு அன்னதானம் தரப்படுகிறது. நகரத்தார் விடுதி இந்த பகுதியில் மிக பிரபலம் என்பதால் யாரை கேட்டாலும் அடையாளம் காட்டுவார்கள்

திருச்செந்தூர் நல்ல உணவிற்கு பெயர் போனது. இங்கு சரவண பவன் உட்பட நல்ல ஹோட்டல்கள் பல உண்டு.

குடந்தை அருகே உள்ள ஆலங்குடி குருஸ்தலம் - ஆக கருதப்படுவது போல, திருச்செந்தூர் அருகே உள்ளவர்கள் குரு பெயர்ச்சியின் போது பெரும் திரளாக இங்குள்ள குரு - சந்நிதியில் வந்து வணங்குகிறார்கள். கோவிலில் குருவிற்கு தனி (பெரிய) சந்நிதி உண்டு

இந்த கோவிலில் இரண்டு மூலவர் சந்நிதி உண்டு. ஒரு மூலவருக்கு கேரள முறைப்படி வழிபாடு நடக்கிறது. இன்னொரு மூலவருக்கு தமிழக முறைப்படி வழிபாடு தொடர்கிறது

முருகன் சந்நிதிக்கு அருகிலேயே உள்ள பஞ்சலிங்க குகையும் ( ரொம்ப குனிந்து ,வளைந்து செல்ல வேண்டும் )கோவிலுக்கு வெளியே உள்ள வள்ளி குகையும் பலரும் விரும்பி செல்லும் இடங்களாக உள்ளன.

திருச்செந்தூருக்கு அருகில் தான் சரவண பவன் ஓனர் கட்டிய வன திருப்பதி கோவிலும் உள்ளது நீங்கள் காரில் திருச்செந்தூர் செல்கிறீர்கள் என்றால் வழியில் வன திருப்பதிக்கும் ஒரு விசிட் அடிக்கலாம் !

Tuesday, April 23, 2013

இருட்டுக்கடை அல்வா - அறியாத தகவல்கள்- வீடியோவுடன்

திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா கடை பற்றி கேள்விப்படும் பல தகவல்கள் ஆச்சரியமாக இருக்கிறது .

1930 - 1940 களில் ராஜஸ்தானை சேர்ந்த பிஜிலி சிங் என்பவர் துவங்கி அதன் பின் கிருஷ்ணசிங் மற்றும் அவருடன் இணைந்து அடுத்த தலைமுறையை சேர்ந்தவர்கள் நடத்தி வருகிறார்கள் இக்கடையை !

மாலை ஐந்தரை அளவில் தான் கடையே திறக்கப்படுகிறது. அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் மொத்த ஸ்டாக்கும் காலியாகி விட கடையை மூடி விட்டு கிளம்பி விடுகிறார்கள்.


மற்ற கடைகளை விட இங்கு அல்வா நிச்சயம் அட்டகாசமாய் இருக்க முக்கிய காரணமாக சொல்லப்படுவது இது தான்:

அல்வாவிற்கு தேவையான கோதுமையை இவர்கள் கைகளால் தான் அரைக்கிறார்கள். மேலும் அதை தயார் செய்வதும் Manual முறையில் தான் ! இது தான் அல்வாவிற்கு ஒரு யூனிக் சுவை தருகிறதாம். மேலும் இந்த அல்வா தயாரிக்கும் முறை இவர்களுக்கு மட்டுமே தெரியும் .. வேறு யாருக்கும் தெரியாது !

இப்படி கையால் தயார் செய்வதால், ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவிற்கு தான் இவர்களால் தயார் செய்ய முடிகிறது. அதனை மட்டும் விற்று முடித்து விட்டு, திருப்தி அடைந்து விடுகிறார்கள். இவர்கள் நினைத்தால் - கிடைத்துள்ள பெயரை வைத்து மெஷின் வைத்து இன்னும் 10 மடங்கு தயார் செய்ய முடியும் - அவ்வளவுக்கும் மார்கெட் இருக்கு என்றாலும் தங்கள் தரம் சிறிதும் குறைய கூடாது என்பதால் - பெரிய அளவில் செல்லாமல் இருக்கிறார்கள்.

பலகைகளால் ஆன பழைய கால கதவை கவனியுங்கள் !

இருட்டுக்கடை என்று பெயர் வர காரணம் - 1930 களில் கடை துவங்க பட்ட போது, ஒரே ஒரு காண்டா விளக்கு (மண்ணெண்ணெய் விளக்கு) மட்டும் இருக்குமாம். இருட்டாய் இருக்கும் கடை என்பதே பெயராகி " இருட்டு கடை அல்வா" என்ற பெயர் வந்து விட்டது. இன்றைக்கு இங்கு காண்டா விளக்கு அகன்று ஒரு 200 வாட்ச் பல்பு எரிகிறது அவ்வளவு தான் வித்யாசம். கடைக்கு பெயர் பலகை கூட இல்லை. இருந்தும் கடையின் கூட்டமோ புகழோ குறையவே இல்லை.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் அருகிலேயே உள்ளது இக்கடை. வேறு கடைகளில் விசாரித்தால் உங்களை மற்ற இடங்களுக்கு மாற்றி விட வாய்ப்பு உண்டு. இக்கடையில் பிஜிலி சிங் அவர்களின் பெயர் போட்டு புகைப்படம் இருக்கும். அது தான் அடையாளம் !

இருட்டு கடை என்கிற பெயரில் இன்னொரு கோஷ்டி காபி ரைட் வாங்க, அவர்கள் மேல் இவர்கள் வழக்கு துவங்கி தங்கள் கடை பற்றி பல வருடங்களாக பத்திரிக்கைகளில் வெளி வந்த குறிப்புகளை காட்டி தங்களுக்கு தான் அந்த பெயருக்கு உரிமை உண்டு என போராடி வருகிறாகள்.

இவர்களின் குழும கடையாக சற்று தள்ளி விசாகா சுவீட்ஸ் என்ற கடை இருக்கிறது. இங்கும் இருட்டு கடை அல்வா பகல் வேளைகளில் கிடைக்கிறது ( பிஜிலி சிங் படம் இங்கும் இருக்கும் !)

உள்ளூர் வாசிகள் நூறு கிராம் அல்வா சுட சுட வாங்கி கொண்டு ஓரமாக நின்று ருசித்து சாப்பிட்டு விட்டு, சைடில் சென்று கை நீட்ட , சற்று மிக்சர் இலவசமாக தருகிறாகள். அதை சாப்பிட்டு விட்டு அங்கு மாட்டி யுள்ள பேப்பரை எடுத்து கை துடைத்து கொண்டே செல்வதை காண முடிந்தது

சில நேரங்களில் கியூவில் நின்றும் வாங்கி செல்வதுண்டாம். எப்பவும் கால் கிலோ, அரை கிலோ, ஒரு கிலோ பாக்கெட்கள் தயாராய் இருக்கின்றன. நீங்கள் சென்றவுடன் கேட்கிற அளவை கொடுத்து உடன் அனுப்பி விடுகிறார்கள். இருந்தும் தீபாவளி பொங்கல் நேரங்களில் கூட்டம் மிக அதிகமாகி இருக்கும் அல்வாவை அனைவருக்கும் பகிந்தளிக்க வேண்டிய சூழலில் ரேஷன் முறையும் அமல் படுத்தப்படுமாம் ! ( ஒரு கிலோ கேட்டால் கால் கிலோ தருவது !)

வீடியோவில் இருட்டு கடை அல்வா கடையை கண்டு களியுங்கள் :




இவ்வளவு அற்புதமான, மிக சுவையான, தமிழகத்தின் நம்பர் : 1 அல்வா - ஒரு கிலோ 140 ரூபாய் என்றால் நம்ப முடிகிறதா?

ஊருக்கு கிளம்பும் அவசரத்தில் அல்வா வாங்கி கொண்டு வீடியோ படம் பிடித்து விட்டு, 500 ரூபாய்க்கு பேலன்ஸ் வாங்காமல் நான் கிளம்ப ஒருவர் துரத்தியவாறே வந்து மீதம் பணத்தை தந்து விட்டு போனார் !

இங்கு வாங்கப்படும் அல்வா ஒரு வாரம் வரை கெடாது ! நாங்கள் சென்னை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அல்வா வாங்கி வர, அனைவரும் இருட்டு கடை பற்றி ஆர்வமாய் கேட்டார்கள்.

அவர்களிடம் என்ன சொன்னேன் என்று கேட்கிறீர்களா?

கட்டுரையின் முதல் வரியிலிருந்து துவங்குங்கள் !
*******
அண்மை பதிவுகள்:

வானவில்: எடை கூட என்ன செய்யலாம்?

தொல்லை காட்சி - விஜய் அவார்ட்ஸ்- கலைஞர் செய்திகள்

Wednesday, April 17, 2013

வாவ் ! அசரடித்த தமிழக சிற்ப கோவில் !

கிருஷ்ணா புரம்

திருநெல்வேலி அருகில் உள்ளது கிருஷ்ணா புரம் ! இந்த வெங்கடாசலபதி கோவில் சிற்பக்கலைக்கு மிக புகழ் பெற்றது.

நமது நண்பன் வேங்கடப்பன் மிக வித்யாசமானவன். இந்த இடத்துக்கு செல்லும் வரை இப்படி ஒரு கோவில் இருக்கிறது என்றோ அதன் சிறப்பு பற்றியோ எதுவும் மூச்சு விட வில்லை.

நவதிருப்பதி கோவில்களை ஒரே நாளில் சுற்றி வர கிளம்பிய எங்களின் கார் சைலன்ட்டாக இந்த இடத்துக்கு வந்தது.

இங்குள்ள சிற்பங்கள் அளவு அழகான சிற்பங்கள் மிக சில கோவில்களில் தான் நீங்கள் பார்க்க முடியும். நேரு, இந்திரா ராஜீவ் என 3 பிரதமர்கள் வந்து ரசித்த சிற்பங்கள் இவை.

சிற்பங்களில் நாங்கள் ரசித்த சில விஷயங்கள் :

ஒரு சிலையில் குறவன் ஒருவன் - ராஜகுமாரியை கடத்தி செல்கிறான். இன்னொன்றில் குறத்தி ராஜகுமாரனை கடத்தி செல்கிறாள். இரண்டும் காதல் வயப்பட்டு தான். 2 சிலைகளும் உடைகள், முகத்தில் தெரியும் உணர்வுகள்.. என அவ்வளவு தத்ரூபமாய் இருந்தன. தோல் பட்டையில் தெரியும் எலும்பு, இடுப்பில் உள்ள எலும்பு எல்லாம் அற்புதமாய் வடிவமைத்துள்ளனர்.

கடத்தி செல்லும் ராஜகுமாரி முகம் அவ்வளவு மகிழ்ச்சியாய் உள்ளது. குறவன் முகத்தில் உள்ள தொங்கு மீசை பார்க்க காமெடியாக உள்ளது. பெரிய தலைமுடி வைத்து பின்னல், கொண்டை போட்ட ஆண்கள், ஜடை பின்னிய பெண்கள், ஆண்கள் தாடியில் உள்ள முடிச்சு என.. அந்த கால உடை மற்றும் சிகை அலங்காரங்களை அறிய முடிகிறது

இன்னொரு சிலையில் பெரிய வில் ஒன்று உள்ளது. அதன் ஒரு புறம் துவங்கி மறுபுறம் மிக மெல்லிய துளை செல்கிறது. ஊசியை ஒருபுறம் போட்டால் மறுபுறம் வழியே அந்த ஊசி வருமாம். ஆனால் இப்போது அந்த சிலை மற்றும் வில் உடைந்துள்ளது பெரும் சோகம் :(

இப்படி பல்வேறு அரிதான சிலைகள் உடைவதால், இப்போதெல்லாம் சிலைகளை சுற்றி இரும்பு வலை போட்டு மூடப்பட்டுள்ளது

சில சிலைகளில் நகைகளின் டிசைன்கள் கூட பெண்களை பெரிதும் ஈர்க்கிறது. இப்போதெல்லாம் நகை கடை காரர்கள் இத்தகைய டிசைன்களை பார்த்து தான் ஆண்டிக் என்று நகை செய்கிறார்கள் போலும்.

அந்த காலத்து இசை கருவிகள் கூட ( யாழ், தவில் ) சிலைகளில் காண முடிகிறது

மிக சிறப்புடன் இருந்த இக்கோவில் - பின்னர் வந்த காலத்தில் சரியான கண்காணிப்பின்றி, கவனிப்பின்றி இருந்துள்ளது. இந்த கால கட்டத்தில் தான் சிலைகளும் உடைக்கப்பட்டுள்ளது.

இங்கிருக்கும் ஒரு ராஜா சிலை பற்றி ஒரு சின்ன கதை சொல்கிறார்கள். ஒரு புகழ் பெற்ற சிற்பி ஒரு ராஜாவை உயிருடன் இருக்கும் போது நேரில் பார்த்து சிலை வடித்துள்ளார். சிலை முடியும் முன் ராஜா இறந்து விட, அடுத்த ராஜாவாக வந்த அவரது மகன் அந்த சிற்பியை அழைத்து " வேண்டுமானால் மீதம் சிலை வடிக்க என்னை பார்த்து கொள்ளுங்கள் " என்று கூறியுள்ளார். சிற்பியோ " வேண்டாம். நீ அம்மா ஜாடை; அரசர் முகம் எனக்கு சரியே நினைவில் இருக்கிறது. பார்க்காமலே வடித்து விடுவேன் " என்று சொல்லி விட்டு அதே போல் சிலையை முடித்தாராம்.

இப்படி இங்குள்ள சிலைகள் பற்றி ஏராள கதைகள் உலவுகின்றன !

சிலைகளை ரசிக்கவும் ஒரு மனது / பார்வை வேண்டும். உண்மையில் எனக்கு அந்த அளவு ரசனை இல்லை. ஆனால் உடன் வந்த வெங்கடப்பன் தம்பதியினர் ஒவ்வொரு சிலையின் அழகையும் பொறுமையாய் விளக்கி கூறும்போது வியந்து பார்த்தேன். உடன் இருந்த நம்ம வீட்டம்மாவுக்கு இதிலெல்லாம் ரொம்பவே ஈடுபாடு !

மனிதர்களின் உடலில் ஓடும் நரம்புகள் முதல் கட்டை விரல் நகம் வரை அற்புதமாய் வடித்த இந்த சிலைகளை அவசியம் ஒரு முறை நேரில் கண்டு களியுங்கள் !

உண்மையில் இந்த கோவிலுக்கு செல்வது இறைவனை வணங்க என்பதை விட, அந்த சிலைகளை காண என்பது தான் சரியாய் இருக்கும் !

********
சுசீந்திரம்

சுசீந்திரம் தமிழகத்தின் மிக புகழ் பெற்ற கோவில்களில் ஒன்று. கன்யாகுமரி மற்றும் நாகர்கோவிலுக்கு இடையே 4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

தாணுமாலயன் கோவில் என்று இதனை சொல்கிறார்கள். தாணு என்றால் சிவன்; மால் - பெருமாள் ;

பிரம்மா - சிவன்- பெருமாள் என மூவரும் இணைந்து இருக்கும் கோவில் இது !

அகலிகை மேல் இந்திரன் காதல் கொள்ள, அதனால் சாபம் பெற்று மிக துயருகிறார்.  பின் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் ஒன்றாக இந்திரனுக்கு பாவ விமோசனம் இங்கு தான் தந்தனர் என்று நம்பப்படுகிறது. (ஊரின் பெயரிலேயே இந்திரனுக்கு இடமுண்டு கவனித்தீர்களா?)



25க்கும் மேற்பட்ட சந்நிதிகள் உள்ளன. மூலவர் திருவேங்கடம் விஷ்ணுவரம் பெருமாள்.  விக்னேஸ்வரி - மேலே பெண்ணாகவும் கீழே ஆணாகவும் இருக்கும் பிள்ளையார்.

நீல கண்ட விநாயகர் - என்கிற இன்னொரு கடவுளும் மிக விசேஷமானவர். சிவன் ரூபத்தில் இருக்கும் பிள்ளையார் இவர் என்கிறார்கள்

பல இடங்களில் தமிழில் அர்ச்சனை நடப்பதை காண முடிந்தது

விளக்கு பரிகாரம் என்பது இங்கு நிறையவே நடக்கிறது. பலரும் 9 முதல் 108 விளக்குகள் வைத்து பரிகாரம் செய்கிறார்கள். நவகிரக மூர்த்திகள் மேலே விளக்குடன் சுற்றி வருவதாக ஒரு ஐதீகம் 12 நட்சத்திரத்தை சேர்ந்தவர்களும் இங்கு பரிகாரம் செய்ய வருகிறார்கள்


சுசீந்தரத்தின் சங்கீத தூண்கள் மிக புகழ் பெற்றவை. ஒரே கல்லில் செய்யப்பட மிக உயரமான 7 தூண்கள் அலங்கார மண்டபத்தில் உள்ளன. ஆனால் நாம் தட்டினால் அவற்றில் எந்த சத்தமும் வருவதில்லை. அவற்றை குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட விதத்தில் தட்ட வேண்டும். கோவிலில் இருக்கும் பெரியவர் ஒருவர் தட்டி சத்தம் வர வைத்து காட்டினார்

நாங்கள் சென்ற நேரம் வருடாந்திர கோவில் திருவிழா நடப்பதால் அந்த ஏரியாவே களை கட்டியிருந்தது. வீடியோவில் சுசீந்திரம் கோவில் வெளிப்புறத்தை நீங்கள் ரசிக்கலாம்



22 அடி உயரத்தில் இங்கிருக்கும் ஆஞ்சேநேயர் மிக பிரபலமானவர். பலரும் அவருக்கு வெண்ணை வாங்கி சாற்றுகிறார்கள்.

 22 அடி என்பதால் கூட்டம் அதிகமிருந்தாலும் தூரத்திலிருந்தே அவரை ரசிக்க முடிகிறது
##########
தமிழரின் அற்புத சிற்ப கலை, சிவா- விஷ்ணு- பிரம்மா இணைந்த கோவில் - 22 அடி ஆஞ்சேநேயர் - சங்கீத தூண்கள் என உங்களை கவர பல விஷயங்கள் இக்கோவிலில் உண்டு. நாகர் கோவில் அல்லது கன்யாகுமரி பக்கம் செல்லும் போது தவறாமல் சென்று வாருங்கள் !

*********
தொடர்புடைய திருநெல்வேலி / கன்யாகுமரி பயணக்கட்டுரைகள்:

சரவண பவன் ஓனர் கட்டிய கோவில் நேரடி அனுபவம்

திருநெல்வேலி - நெல்லையப்பர் கோவில் ஒரு பார்வை

நாகர்கோவில் - தொட்டி பாலமும், உதயகிரி கோட்டையும் - ஒரு பயணம்

வாவ் மறக்க முடியாத முட்டம் கடற்கரை

கன்யாகுமரி சில கசப்பான உண்மைகள்

*********

Sunday, March 31, 2013

உணவகம் அறிமுகம்: திருநெல்வேலி ஆர்யாஸ்.

திருநெல்வேலியில் உள்ள நல்ல ஹோட்டல்களில் ஒன்று ஆர்யாஸ்.குற்றாலம் சென்று விட்டு அங்கு சாப்பிடாமல் திருநெல்வேலி வந்து விட்டோம். மாலை நான்கரை மணிக்கு சாப்பிடுற மாதிரி ஆனது.




திருநெல்வேலியில் மட்டுமே இவர்களுக்கு 9 ஹோட்டல்கள் இருக்கிறது. ஏதேனும் ஒரு இடத்தில் கூட்டம் அதிகமாகி விட்டால், இன்னொரு இடத்திலிருந்து உணவு வகைகள் சில நிமிடங்களில் தருவித்து விடுகிறார்கள்.

"ஹோட்டல் பிசினஸில் ஒரு ஹோட்டலாக நடத்துவது தான் கஷ்டம். நான்கைந்து ஹோட்டல் இருந்தால் உணவு வகைகள் மட்டுமல்ல, சமைக்கிற ஆட்களும் கூட குறையும் நேரங்களில் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு அனுப்பி சமாளிக்கலாம் " என்றார் நம் நண்பர் வேங்கடப்பன்.

சரி ஆரியாஸ் ஹோட்டலுக்கு வருவோம். சப்பாத்தி, பரோட்டா, பொங்கல் போன்ற ஐட்டங்கள் எல்லாம் 40 ரூபாய். இந்த ஊருக்கு விலை சற்று அதிகம் என தோன்றினாலும் சுவை நிச்சயம் சான்சே இல்லை. சென்னையின் பல ஹோட்டல்களை விட நன்றாகவே இருந்தது.

வழக்கமான மீல்ஸ் 65 ரூபாய். ஸ்பெஷல் மீல்ஸ் 165 ரூபாய்.

தோசையில் மட்டும் 20 வகை இருக்கிறது. அதிலும் ரவா தோசையில் மட்டுமே 10 வகை ! (நம்ம ப்ளாக் ஸ்ரீராம் சார்: ஹாப்பி??)

டாக்டர் வேங்கடப்பன் 

நெல்லை வரும் பல வி. ஐ. பி களும் இந்த ஹோட்டலில் வந்து சாப்பிட தவறுவதில்லையாம். குறிப்பாக பின்னணி பாடகி தனக்கு பிடித்த உணவு என " நெல்லை ஆர்யாஸ் ஹோட்டல் ரவா தோசை" என ஒரு பத்திர்க்கை பேட்டியில் சொன்னதை கட் செய்து பிரேம் செய்து வைத்துள்ளனர்.

நாங்கள் இங்கு என்ன ஸ்பெஷல் என்று கேட்க, பட்டர் நான் மற்றும் பன்னீர் பட்டர் மசாலா & ப்ரைட் ரைஸ் தான் என்று கூறினார். அவற்றை ஆர்டர் செய்து சாப்பிட்டோம். பசி நேரத்தில் தேவாமிர்தமாக இருந்தது. பரோட்டா, ரவா தோசை ஆகியவையும் கொஞ்சம் டேஸ்ட் செய்தோம்.

கடைசியாய் பில்டர் காபி - அற்புதம் ! ஒவ்வொரு ஊருக்கும் காபிக்கு தனி சுவை இருக்கிறது !

இது போர்டிங் & லாட்ஜிங் ஹோட்டல். தங்கும் அறைகளும் ரீசனபில் ரேட்டில் தான் இருக்கிறது
நெல்லை சென்றால் அவசியம் சென்று சாப்பிட்டு வாருங்கள் ஆர்யாஸ் ஹோட்டலுக்கு !
************
மேலதிக குறிப்புகள்:

ஆரியாஸ் ரெசிடென்ஸ்

க்ரூப் இணைய தளம் : http://aryaasgroup.com/about.html

நாங்கள் சாப்பிட்ட ஹோட்டல் http://aryaasgroup.com/resi_aryaas.html
************
அண்மை பதிவுகள் :

Thursday, March 21, 2013

குளிச்சா திப்ப்ப்பரப்பு - ஜாலி குளியல் அனுபவம்

திருநெல்வேலி, கன்யாகுமரி பயணக்கட்டுரையில் இம்முறை திப்பரப்பு நீர்வீழ்ச்சி மற்றும் நாகராஜா கோவிலை ஒரு ரவுண்ட் அடிப்போம் !

*****
குளிச்சா திப்பரப்பு 

திப்பரப்பு நீர்வீழ்ச்சி ஒவ்வொரு முறையும் கவர முக்கிய காரணம் - தண்ணீர் எப்போதும் இருக்கும் ! மேலும் அதிக கூட்ட நெரிசலின்றி ஜாலியாக குளிக்கலாம்




இம்முறை செல்லும்போது அந்த இடம் சற்று மாறுதலுக்கு உள்ளானது தெரிந்தது. சுற்றிலும் குரோட்டன்ஸ் உள்ளிட்ட நிறைய செடிகள் வைத்து ஒரு பூங்காவை வடிவமைத்துள்ளனர். அருவிக்கு சென்றால் சிலர் குளிக்காமல் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பார்கள் அல்லவா? அத்தகையோர் பூங்காவில்,  தள்ளி அமர்ந்து அருவியை ரசிக்கலாம்

இப்படத்தில் அய்யாசாமியும் கீறாராம் ! சொல்ல சொன்னார் :)

நான்கைந்து இடங்களில் அருவி கொட்ட, நடுவில் தடுப்பு சுவறொன்று வைத்து பெண்களுக்கான இடம் பிரித்து விட்டுள்ளனர். அருவிக்கு அருகே சிறு ஓடை போல் ஓட , சிறுவர் சிறுமிகள் அதில் ஆனந்தமாக நீந்தி மகிழ்கிறார்கள்.

ஒரே ஒரு செக்கியூரிட்டி நின்று கொண்டு ஆண்கள் பெண்கள் பக்கம் செல்லாமலும், வேறு சண்டைகள் வராமாலும் ஏரியாவை மெயிண்டைன் (!!) செய்கிறார்

திப்பரப்பு அருவியின் அழகை இந்த வீடியோவில் கண்டு களிக்கலாம்:


அருவிக்கு சென்றாலே முதலில் இறங்குவதும், கடைசியில் "போதும்; கிளம்பலாம்" என்று தர தரவென இழுத்து செல்லும் என்னை மாதிரி ஆளுக்கு ஏற்ற இடம் திப்பரப்பு ! கூட்ட தொந்தரவோ, யாரும் எண்ணை பிசுக்குடன் மேலே இடிக்கிறார்கள் என்றோ கவலை இன்றி வேண்டிய மட்டும் குளிக்கலாம். 

நின்றவாறு- படுத்தவாறு, அமர்ந்தவாறு வெவ்வேறு போஸில் ஆசை தீரும் வரை குளித்து தீர்த்தேன்.

குளியல் முடிந்து பசி வயிற்றை கிள்ள, திப்பரப்பில் சாப்பிட உருப்படியான ஹோட்டல் இல்லாதது பெரும் குறை.

நாகர்கோவில் பக்கம் செல்லும்போது தவற விடாதீர்கள் திப்பரப்பை !
****
நாகராஜா கோவில் 

நாகர்கோவில் என்பது மிக பெரிய ஊர் - கன்யாகுமரி மாவட்டத்தின் தலைநகரம் நாகர்கோவில் தான். ஆனால் நாகர்கோவிலில் பார்க்க என்ன இருக்கு என்று கேட்டால் - பத்மநாபபுரம் பேலஸ் திப்பரப்பு என 5 அல்லது 10 கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் இடங்களை தான் சொல்வார்களே ஒழிய, ஊருக்குள் ஒரு இடம் கூட பார்பதற்கு இருக்குற மாதிரி சொல்லவே மாட்டார்கள். அதையும் மீறி அழுத்தி கேட்டால், " நாகராஜா கோவில் மட்டும் தான் இங்கு விசேஷம் " என்று முணுமுணுப்பார்கள்.

ஒரு மாலை நேரத்தில் நாகராஜா கோவிலுக்கு சென்று வந்தோம்.



நாகர் கோவில் என்ற பெயரே இந்த கோவிலை வைத்து வந்தது தான். கோவில் முழுதும் நாகங்களின் படங்களை பார்க்க முடிகிறது. மேலும் கோவிலை வெளியிலிருந்து காப்பதும் இரு நாகங்களின் உருவங்களே

பரிகாரம் என்பது பெரிய பிசினசாக தொடர்கிறது. வெள்ளியில் கை, கால் வாங்கி சாமிக்கு காணிக்கை செலுத்துவது போன்ற நம்பிக்கைகளை காண முடிந்தது


கோவில் வந்ததுக்கு பின்னே ஒரு சிறு சம்பவம் கதை போல் சொல்லப்படுகிறது

ரொம்ப வருஷத்துக்கு முன் சிறுமி ஒருத்தி, இந்த இடத்தில் உள்ள புற்களை வெட்ட, திடீரென ரத்தம் கொட்டுவதை கண்டுள்ளாள். என்ன என்று பார்க்க, 5 தலை நாகமொன்றின் தலையை தெரியாமல் வெட்டியது தெரிய வந்துள்ளது. பயந்து ஓடி போய் ஊரில் சொல்ல, ஊர் மக்கள் வந்து பார்க்கும்போது அந்த நாகத்துக்கு பட்ட காயம் தானாகவே சரியாகி விட்டதை கண்டுள்ளனர். பின் இந்த இடத்தை சுத்தம் செய்து இந்த கோவில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது



அதன் பின் ராஜா ஒருவர் கொடிய நோய் வந்து துன்புற்றதாகவும், அப்போது இந்த கோவிலுக்கு வந்து குணமானதால் அவர் இந்த கோவிலை மேலும் பிரபலமாக்கியிருக்கிறார். ஒவ்வொரு ஆவணி மாத ஞாயிறும் ராஜாவின் பரம்பரை பல வருடங்கள் இந்த கோவிலை வந்து வணங்கியிருக்கிறார்கள்.

கோவில் முழுவதும் நாக உருவங்களை தவிர முருகன், பிள்ளையார் சந்நிதிகள் மட்டுமன்றி சில ஜெயின் சிலைகளும் கூட இங்கு உள்ளது.

********












தொடர்புடைய திருநெல்வேலி / கன்யாகுமரி பயணக்கட்டுரைகள்:

சரவண பவன் ஓனர் கட்டிய கோவில் நேரடி அனுபவம்

திருநெல்வேலி - நெல்லையப்பர் கோவில் ஒரு பார்வை

நாகர்கோவில் - தொட்டி பாலமும், உதயகிரி கோட்டையும் - ஒரு பயணம்

வாவ் மறக்க முடியாத முட்டம் கடற்கரை

கன்யாகுமரி சில கசப்பான உண்மைகள்
***********
கோவிலில் நான் கவனித்த ஒரு காமெடியான விஷயம் இதோ:



கோவில் குறித்து எனக்கு தெரிந்த குறைவான் தகவல்களை கூறியுள்ளேன். பயண தொடரை தொடர்ந்து வரும் நெல்லை நண்பர்கள் மேலும் தகவல் இருந்தால் பின்னூட்டத்தில் கூறலாம் !

******
அண்மை பதிவுகள் :

வானவில்: கருணாஸ் பேச்சு- தேசிய விருது- தமன்னா 


ஈழ பிரச்சனை-கலைஞர் நிலை- விகடன் கட்டுரை

பரதேசி - தமிழில் ஒரு உலக சினிமா - சல்யூட் பாலா !

எதிர் நீச்சல் - பட்டை கிளப்பும் பாட்டுகள் ஆடியோவுடன் ! அசத்தும் அனிருத் !

தொல்லை காட்சி - நீயா நானா - பரதேசி படக்குழு - ஷீக்கர் தவன்



Friday, March 15, 2013

உணவகம் அறிமுகம் - வசந்தபவன் திருநெல்வேலி

திருநெல்வேலி சென்று நாங்கள் இறங்கும் போது மணி மதியம் மூன்று. நாகர்கோவிலில் இருந்து கிளம்பும் போது மதியம் ஒண்ணரை. அப்போதே சாப்பிட்டு விட்டு பஸ் ஏறலாம் என்றால், " சாப்பிட்டு விட்டு பஸ்ஸில் ஏறினால் நல்லாருக்காது ; அங்கு போய் சாப்பிடலாம்" என மனைவி மற்றும் மகள் கூறி விட்டனர்

திருநெல்வேலியில் நண்பன் வேங்கடப்பன் வந்து காரில் அழைத்து கொள்வதாக சொல்லியிருந்தான். சாப்பிட வில்லை என்றால் வீட்டில் சமைப்பார்கள் என்பதால், சாப்பிட்டு விட்டு ஏறியதாக அவனிடம் பொய் சொல்லியாச்சு. திருநெல்வேலி வந்த இறங்கியதும் பசி வயிற்றை கிள்ளியது



கன்யாகுமரியில் சாப்பிட்டு மோசமான அனுபவம் இருந்தமையால் பஸ்ஸில் வரும்போதே அருகில் விசாரித்து வைத்திருந்தோம் " பஸ் ஸ்டாண்ட் அருகில் இருக்கும் வசந்த பவன் செல்லுங்கள்" என கூறியிருந்தனர். இறங்கியதும் நல்ல ஹோட்டல் என மறுபடி விசாரித்த போதும் அதே ஹோட்டல் பெயரே சொல்லப்பட்டது.

நல்லவேளையாக சாப்பாடு காலியாகமல் இருந்தது. நாங்கள் சாப்பாடு சாப்பிட, பெண் மட்டும் டிபன் சாப்பிட்டாள் (அவள் பரோட்டா சாப்பிடும் போது மட்டும் பாதி பிடுங்கி விட்டேன் ).

பஸ் ஸ்டாண்ட் உள்ளே மற்றும் அதன் அருகே இருக்கும் ஹோட்டல்கள் தரத்தில் அதிகம் கவனம் செலுத்துவதில்லை. முக்கிய காரணம் அவர்களுக்கு ரெகுலர் கஸ்டமர்கள் வர போவதில்லை. எல்லாமே எப்போதோ ஒரு முறை வருவோர் தான். ஆனால் அதனை மீறி இங்கு சாப்பாடு அட்டகாசமாய் இருந்தது


50 ரூபாய்க்கு - அற்புதமான சாம்பார் (ஒவ்வொரு ஊருக்கும் ஒரு வித்யாசம் இருக்கு; இங்கே உள்ள சாம்பார் தனி ருசி ), இரண்டாம் முறை கேட்டு வாங்கி சாப்பிடும் அளவில் மோர் குழம்பு, ரசம், ருசித்து சாப்பிட காய்கறிகள் என அட்டகாசமாய் இருந்தது. கொடுத்த 50 ரூபாய்க்கு செம வொர்த் !

நிற்க. மகள் சாப்பிட்ட பரோட்டாவிற்கு வருகிறேன். மதிய நேரம் அங்கிருந்த பலரும் ஒன்று லஞ்ச் அல்லது பரோட்டா சாப்பிட்டு கொண்டிருந்தனர். அதற்கான குருமா ஸ்மெல் " வா வா " என்று அழைத்தது. பெண்ணிடமிருந்து பாதி பரோட்டா கேட்டு வாங்கி நிறைய குருமா ஊற்றி சாப்பிட்டு பார்த்தேன்.. அடடா ! டேஸ்ட் .. ஏ ஒன் ! பாதி பரோட்டா தர பெண் அழுது தீர்த்தாள் . ரெண்டும் அவளே சாப்பிடணுமாம் !

சில இடத்தில் மட்டும் தான் சாப்பிட்டு முடித்து விட்டு பில் தந்து விட்டு வரும்போது மிக நிறைவாய் கொடுத்த காசு வொர்த் என்ற எண்ணம் வரும்.. அது திருநெல்வேலி வசந்த பவனில் வந்தது !
****
மேலதிக தகவல்கள் 

உணவகம் பெயர்: வசந்த பவன்

இடம்: பேருந்து நிலையம் அருகில், திருநெல்வேலி

ஸ்பெஷல்: மதிய உணவு மற்றும் பரோட்டா

Saturday, March 9, 2013

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் - ஒரு பார்வை

திருநெல்வேலியின் புகழ் பெற்ற கோவில் நெல்லையப்பர் கோவில் சுற்றளவில் மிக பெரியது.

படம்: இணையத்திலிருந்து 

நெல்லையப்பர் கோவில் ஏராளமான குளங்களுடன் பெரிய அளவில் முன்பு இருந்திருக்கிறது. ஆனால் கால போக்கில் அந்த குளங்கள் தூர்க்கப்பட்டு, அவற்றை யார் யாரோ ஆக்கிரமித்து விட்டனர். அந்த இடங்களில் எல்லாம் இப்போது கடைகள் வந்து விட்டன.

உள்ளே நுழையும் போது தலைக்கு மேலே இருக்கும் சிற்பங்கள் அடல்ட்ஸ் ஒன்லி வகையை சேர்ந்தவை. அந்த காலத்தில் கணவன் - மனைவி கோவிலுக்கு வந்து விட்டு, இவற்றை பார்த்தால் "அந்த மூட்" வந்துடுமாம் !

வெளி பிரகாரத்தில் மட்டும் தான் இத்தகைய சிலைகள். உள்ளே முழுக்க முழுக்க அனைவரும் காண கூடிய அளவில் தான் இருக்கிறது.

படம்: இணையத்திலிருந்து 

ஒரு யானை இன்னொரு யானையை கூட்டி செல்லும் காட்சி, சிவனுக்கு கண் தந்த கண்ணப்ப நாயனார் சிலை, மல்யுத்த வீரன் சில ஆகியவை நம்மை ஈர்த்தன.

படம்: இணையத்திலிருந்து 

நாயக்கர் ஒரு காலத்தில் இந்த பகுதியை ஆண்டபோது, கடவுள் சிலைகளிலும் தங்கள் கடவுளை முன்னிறுத்தி சில மாறுதல்கள் செய்து விட்டனர் என சொல்லப்படுகிறது.

கோவிலில் நெல்லையப்பர் அருகிலிருக்கும் நெல்லை கோவிந்தர் படுத்த வண்ணம் அழகாய் காட்சி தருகிறார்.  சற்று உயரம் குறைவானவர்.

பிள்ளை தாண்டு என்பது இங்குள்ள ஒரு வித்யாசமான நம்பிக்கை - குழந்தை இல்லாத பெண்கள் இங்குள்ள வெளியே பூட்டப்பட்ட பொல்லா பிள்ளையார் சந்நிதியுள்ளே மிக மெலிதான கம்பிகளின் ஊடே புகுந்து இன்னொரு பக்கமாய் வெளி வரவேண்டுமாம். அப்படி செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்குமாம். இப்படி பலருக்கும் நடந்ததாக சொல்கிறார்கள். அந்த இடத்தையும், கம்பிகளையும் பார்த்தால் இதற்குள் எப்படி புகுந்து வந்திருப்பார்கள் என ஆச்சரியமாக இருந்தது. உள்ளே புகந்து வரும் பெண்ணின் பெற்றோர் அல்லது மாமனார் - மாமியார் உடனிருந்து உள்ளே பிடித்து தள்ளி விடுவார்களாம் !

கோவில் தஞ்சை பெரிய கோவிலை விடவும் அளவில் பெரியது என்றும், கட்டி முடித்து 1860 ஆண்டுகள் ஆகிறது என்றும் சொல்கிறார்கள்

இங்குள்ள சகஸ்ரலிங்கம் - ஒரு பெரிய லிங்கத்தினுள் 1008 சிறிய லிங்கங்கள் கொண்டது. (காஞ்சியில் ஒரு கோவிலிலும் இதே போல் பார்த்த நினைவு )
இங்குள்ள பார்வதி அம்மன் பெயர் : காந்திமதி அம்மன். இந்த ஏரியாவில் உள்ள பெண்களில் பலருக்கும் இப்பெயர் உண்டு.

படம்: இணையத்திலிருந்து 
கோவிலின் உள்ளேயே ஒரு அழகான கோவில் குளம் உள்ளது. அது அற்புதமாக பராமரிக்கப்படுகிறது.

மீன் வளத்துறை குளத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்து இங்கு நிறைய மீன்களை விட்டு, வளர்த்து வருகிறது

அடுத்து நாம் சென்ற இடம் - தாமிர சபை. சமீபத்தில் தான் 70 லட்சம் செலவில் renovate செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சிவன் நடனம் புரிந்த பல்வேறு "சபை" கள் உள்ளன.
சிதம்பரம் - தங்க சபை
மதுரை - வெள்ளி சபை
திருவலங்காடு - இரத்தின சபை
குற்றாலம் - சித்திர சபை

இந்த வரிசையில் நெல்லையில் உள்ளது தாமிர சபை. இந்த ஒவ்வொரு சபைகளிலும் சிவன் நடனம் புரிந்ததாக நம்பப்படுகிறது. இந்த இடத்தில் அமர்ந்து தியானம் செய்வோர் பலர். இங்கு பாசிடிவ் வைப்ரேஷன் உணர முடியும் என்கிறார்கள்

அம்மனுக்கு ஏராளமான நகைகள் உண்டு போலும். அது இருக்கும் Safe vault வெளியே எந்நேரமும் ஒரு போலிஸ் காவல் காக்கிறார்.

படம்: இணையத்திலிருந்து 

1000 கால் மண்டபம் ஒன்று நம்மை ஈர்க்கிறது. அங்கு எப்போதும் ஏதாவது கலாட்சேபம் நடக்குமாம். குறிப்பாக திருநெல்வேலி சைவ பிள்ளை மார் வகுப்பினருக்கு இக்கோவில் மிக முக்கியமான ஒன்று என்றும், அவர்கள் அடிக்கடி இங்கு கூடி கலாட்சேபம் செய்வார்கள் என்றும் கூறினார்கள்.
கோவிலுக்குள் இருக்கும் மற்றொரு இடம் - நந்தவனம். இங்கு ஏராள மரங்கள் உடன் - கோவிலுக்கு தேவையான பாலுக்காக சில மாடுகள் வளர்க்கப்படுகின்றன

கோவில் முழுதும் சுற்றி விட்டு சண்டிகேஸ்வரர் சந்நிதிக்கு வருகிறோம். எல்லா சிவன் கோவிலிலும் சண்டிகேஸ்வரர் இருப்பார். கை தட்டியோ, விரல்களால் சுண்டியோ நம் வருகையை தெரிய படுத்துவோம் இல்லையா .. அவரே தான் ! கோவிலை விட்டு செல்லும்போது பிரசாதம் தவிர வேறு ஏதும் இங்கிருந்து எடுத்து செல்ல வில்லை என தெரிய படுத்தவே இவர் முன் கைகளை தட்டி விட்டு செல்கிறோம் என்றார் உடன் வந்த நம் நண்பர்.

இந்த கோவிலை அழகாகவும் சுத்தமாகவும் வைத்து கொள்ள நெல்லை நகர பொது மக்களே உதவுகிறார்கள். ஒவ்வொரு நான்காவது ஞாயிறன்றும் 400 முதல் 500 பொது மக்கள் கோவிலுக்கு வந்திருந்து கோவில் முழுமையாய் கழுவி விடுகிறார்கள். கோவில் வேலை செய்த திருப்தி அவர்களுக்கும் கிடைத்த மாதிரி ஆயிற்று. கோவிலும் சுத்தமாய் உள்ளது.

இத்தகைய பெரிய கோவில்களில் பின் தான் எத்தனை பேரின் உழைப்பும் தியாகமும் அந்த கோவிலை சுற்றி பல்வேறு கதைகளும் உள்ளன !

கோவிலை தினம் ஒரு முறை முழுதாய் சுற்றி வந்தால் வேறு உடற்பயிற்சியே தேவையில்லை !

நெல்லை சென்றால் அவசியம் சென்று வாருங்கள். நெல்லையப்பரை தரிசிக்க !

********
தொடர்புடைய பதிவுகள் 
சரவண பவன் ஓனர் கட்டிய கோவில் நேரடி அனுபவம்

நாகர்கோவில் - தொட்டி பாலமும், உதயகிரி கோட்டையும் - ஒரு பயணம்

வாவ் மறக்க முடியாத முட்டம் கடற்கரை

Tuesday, March 5, 2013

சரவணபவன் ஓனர் கட்டிய கோவில் -நேரடி அனுபவம்

ரவண பவன் ஓனர் கட்டிய இந்த கோவிலின் கதை சுவாரஸ்யமானது. பல்வேறு வழக்குகளிலும் அண்ணாச்சி சிக்கி தவித்த போது , " உன் சொந்த ஊரில் பெருமாளுக்கு ஒரு கோவில் கட்டு. அங்கு வருவோருக்கு அன்ன தானம் செய் ; அப்போது தான் வழக்குகளிலிருந்து வெளிவருவாய் " என ஜோசியர் ஒருவர் அறிவுரை செய்தாராம். அதன்படி அவரது குல தெய்வம் கோவில் இருந்த இந்த இடத்தில் இந்த கோவில் கட்டியுள்ளார். கொஞ்சம் கொஞ்சமாக கோவில் மிக பேமஸ் ஆகி விட்டது. திருநெல்வேலி டு திருச்செந்தூர் செல்லும் வழியில் இருக்கிறது இந்த வனதிருப்பதி.


பணம் செலவு செய்யணும் என்று ஆரம்பித்த இந்த கோவில் இப்போது அவர்களுக்கு இன்னொரு பணம் சம்பாதிக்கும் வழியை கொடுத்து விட்டது. கோவில் மூலம் அவர்கள் ஏதும் சம்பாதிக்க வில்லை. சொல்ல போனால் அங்கு உண்டியலே கிடையாது (உண்டியல் வைத்தால் அரசாங்கமே கோவிலை எடுத்து கொள்ளும் என்றும் அதனால் தான் வைக்கலை என்றும் ஒரு சென்னை நண்பர் சொன்னார் உண்மையா என தெரியலை). பொதுமக்கள் டொனேஷன் செய்ய வேண்டும் எனில் அன்னதானத்துக்கு அரிசி, பருப்பு போன்றவை தரலாம் என்று எழுதி போடப்பட்டுள்ளது.

அவர்களுக்கு வருமானம் கோவிலில் இருந்தல்ல; அங்குள்ள சரவணா பவன் ஹோட்டல் மற்றும் லாட்ஜ்ஜில் இருந்து தான். முதலில் கோவிலும், வந்த கூட்டத்தை பார்த்து பின் ஹோட்டலும் லாட்ஜும் கட்டியுள்ளனர்.

ஜூலை 2009 -ல் கட்டப்பட்ட இந்த கோவில் ஒரு காட்டுக்குள் இருக்கிறது. அந்த ஏரியா முழுவதிலும் யாருமே இல்லாமல் இருக்க, கோவில் அருகில் மட்டும் ஆயிரம் பேரை கூட்டமாய் காண முடிவது ஆச்சரியமாய் இருக்கிறது.



மூல கடவுள் திருப்பதி வெங்கடாசலபதி உருவில் இருக்கிறார். வெளியில் நின்ற படியே பார்க்க முடிகிறது. மதியம் 3 மணி வாக்கில் இந்த இடத்தை அடைந்தோம். அப்பவே 15 நிமிடம் கியூவில் நின்று தான் சாமி பார்க்க வேண்டியிருந்தது.

உள்ளே நுழையும் முன் கால்களை தண்ணீரில் நனைத்து விட்டு போகிற மாதிரி , நடக்கிற பாதையில் , குறிப்பிட்ட இடத்தில் 3 அடி நீளத்துக்கு, முழு அகலத்துக்கு தண்ணீர் விட்டு வைத்துள்ளனர்

பெருமாளை வணங்கி விட்டு வெளியே வந்தால் - ஸ்ரீ பூக்கன் பலவேசம், சப்பாணி முத்து, லாடகு சந்நியாசி, இருளப்பர், நட்டான் பலவேசம், முத்து பாளையம்மன் ஆகிய அண்ணாச்சியின் குல தெய்வ கடவுள்கள் உள்ளன

கோவிலில் உள்ள குருக்கள் அனைவரும் பிராமணர்கள் தான்.

கோவில் உள்ளே நுழையவும், பிரசாதம் வாங்கவும் மட்டும் தான் பெரிய கியூ. ஒவ்வொரு நாளும் புளி சாதம், தயிர் சாதம், கேசரி போன்ற ஏதாவது ஒரு பிரசாதம் வழங்கப்படுகிறது. நாம் வழக்கமாய் சாப்பிடும் உணவில் பாதி அளவு அந்த பிரசாதம் இருக்கிறது. டேஸ்ட் கேட்கணுமா என்ன ! அவ்வளவு கூட்டத்துக்கும் சரவண பவன் உணவக டேஸ்ட்டில் இந்த பிரசாதம் வழங்கப்படுகிறது.

மிக பெரிய அண்டாக்கள், ஏகப்பட்ட ஆட்கள் இதற்கு மட்டும் உழைக்கிறார்கள்.

நாங்கள் சென்ற அன்று வைகுண்ட ஏகாதசி .. எனவே " சொர்க்க வாசல் இன்று மாலை 6 மணிக்கு திறக்கப்படும் " என்று எழுதப்பட்டிருந்தது. பக்கா பெருமாள் கோவில் போல ஒரு விஷயமும் விடுறதில்லை !

இந்த வீடியோவில் கோவில் மற்றும் அதன் சுற்று பகுதிகளை ஒரு விசிட் அடியுங்கள்




திருப்பதி போலவே 35 ரூபாய்க்கு பிரசாத லட்டு விற்பனை ஆகிறது. முடி காணிக்கை ( ரூ 50) காது குத்தல் ( ரூ 100) போன்றவையும் நடந்தேறுகிறது.

உடன் வந்த நண்பர் வேங்கடப்பன் " 3 வருஷமா ஒவ்வொரு முறை இங்கு வரும்போதும் ஏதாவது ஒரு improvement இருக்கு; இப்போ வெளியில் கூரை புதுசா போட்டிருக்காங்க. கோவிலும் இந்த இடமும் ரொம்ப பாப்புலர் ஆகிட்டிருக்கு " என்றார்.

இந்த ஏரியாவை சுற்றி நவ திருப்பதி என்கிற பெயரில் 9 கோவில்கள் உள்ளன. இவை அனைத்தையும் ஒரே நாளில் சுற்றி வணங்கி வருவோர் உண்டு. வன திருப்பதி என்கிற இந்த கோவில் வந்த பின், நவ திருப்பதி கோவில்கள் - ஒன்பதுடன், பத்தாவதாக - இந்த கோவிலையும் மக்கள் வணங்கி வருவதாக சொல்கிறார்கள். சொல்ல போனால் நவ திருப்பதி போலவே - வன திருப்பதி என்று பெயர் வைத்ததும் கூட மக்களை கவர்வதற்காக இருக்கலாம் !

இந்த கோவில் இருக்கும் இடத்தை சுற்றி இன்னமும் சரவண பவன் ஓனருக்கு விவசாய பண்ணை இருக்கிறதாம் !

மதிய சாப்பாடு இங்கிருந்த சரவண பவனில் தான் சாப்பிட்டோம். மதியம் மூணரைக்கு சென்றும் அவ்வளவு கூட்டம் ! காத்திருந்து தான் சாப்பிட வேண்டியதானது. சென்னையை விட அவர்கள் தரும் ரைஸ் அளவு நிச்சயம் அதிகம் ( இங்கிருக்கவங்க நல்லா சா ப்பிடுவாங்க ; சென்னை மாதிரி கொஞ்சமா Quantity கொடுத்தா அவங்களுக்கு பத்தாது - வேங்கடப்பன் ) ஆனால் சென்னை அளவு குவாலிட்டி இல்லை என்று தான் சொல்லணும்.

கோவிலையும் அதை சுற்றி உள்ள இடங்களையும் கிளம்பும் முன் மீண்டும் ஒரு முறை பார்க்கிறேன்:

கோவிலை தவிர அந்த ஏரியா முழுக்க இப்படத்தில் உள்ளது போல் தான் இருக்கும்- தேரி காடு! இப்படம் கோவிலுக்கு நேர் எதிரில் எடுக்க பட்டது


தேரி காடு என்று சொல்ல கூடிய செம்மண் பூமி- காடு - அங்கு இந்த கோவில், ஹோட்டல், லாட்ஜ் மூன்றும் சேர்ந்து தூள் கிளப்புது. எவ்வளவு கார்கள்... தனியார் பேருந்துகள் !

வியாபாரத்தில் சில பேருக்கு மட்டும் தான் இந்த அதிர்ஷ்டம் இருக்கும் போலருக்கு என்று பேசியவாறு அங்கிருந்து கிளம்பினோம்
**********
டிஸ்கி: கன்யாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களை சுற்றி பார்த்ததை இரு பிரிவுகளாக பிரித்து வைத்திருந்தேன். நாகர்கோவில், கன்யாகுமரி அதனை சுற்றியுள்ள பகுதிகளை சுற்றி பார்த்தது முதல் பகுதியாகவும், திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களை பார்த்தது இரண்டாம் பகுதியாகவும்...

முதல் பகுதியில் (கன்யாகுமரி) சில இடங்கள் எழுத வேண்டும், ஆயினும் , சில காரணங்களால் திருநெல்வேலி குறித்து நடுவிலேயே எழுத வேண்டியுள்ளது. 

அதென்ன சில காரணங்கள்?

1. திருநெல்வேலி டூர் முழுக்க கோவில்கள் விசிட் தான் . அவற்றை மட்டும் தனியே எழுதினால் ஆன்மீக பக்கமாகி நிறைய பேர் ஜெர்க் ஆகி ஓடிடுவார்கள். எனவே அவற்றை இப்போதே கலந்து விட வேண்டியுள்ளது.

2. கன்யாகுமரியின் மற்ற பகுதிகள் பற்றி இன்னும் எழுத வில்லை. நேரமில்லை ! Draft -ல் இருப்பதை மட்டும் வெளியிட வேண்டிய சூழல்.. :))
*********
அண்மை பதிவுகள்

தொல்லை காட்சி- கிச்சன் சூப்பர் ஸ்டார் சரவணன் மீனாட்சி -போக்கிரி

Barfi படமும், தி. ஜானகிராமனின் மரப்பசுவும்

ரயில் எஞ்சின் டிரைவர் வாழ்க்கை - அறியாத தகவல்கள் - பேட்டி

Thursday, January 24, 2013

திருநெல்வேலி, கன்யாகுமரி பயணம் - ஜாலி டிரைலர் + படங்கள்

திருநெல்வேலி, கன்யாகுமரி சென்று வந்து 1 மாதமாகிடுச்சு. அந்த பயணம் பற்றி இன்னும் 1 வரி கூட எழுத ஆரம்பிக்கலை என்ற குற்ற உணர்வு தினம் உறுத்துகிறது (குற்ற உணர்வு எதனால் என்கிறீர்களா? நம்மை ஒரு ப்ளாகர் + எழுத்தாளராக மதித்து, திருநெல்வேலியின் 2 பிசியான டாக்டர்கள், தங்கள் பல்வேறு வேலைகளையும் தள்ளி வைத்து விட்டு, எங்களை எல்லா இடத்துக்கும் அழைத்து சென்று, ஊரின் சிறப்புகளை மிக விரிவாக கூறினார்கள். அவர்களுக்காகவேனும் அவற்றை எழுதியே ஆகணும்)

இப்போதைக்கு டிரைலர். மெயின் பிக்ச்சர் நிச்சயம் விரைவில் துவங்கும் !

அந்த சூரியனைத்தான் நான் கையில புடிச்சேன்..

(கன்யாகுமரி..... சூரிய உதயத்தில்)



திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா - புகைப்படம், வீடியோ - எக்ஸ்க்ளூசிவ் தகவல்கள் + பதிவு


அலோ வள்ளுவரா? ஒரு பேட்டி எடுக்கணும்.. இதோ வந்துக்கிட்டே இருக்கேன்; ஓடிடாதீங்க

 (கமண்ட் நன்றி : வெண்பூ )

இத்தனை அழகிய கடற்கரை இதுவரை கண்டதில்லை. உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை !

பல பாரதிராஜா சினிமாக்களில் இந்த ஊரை பார்த்துள்ளீர்கள். கண்டுபிடிக்க முடியுதா?

பத்மநாபபுரம் அரண்மனை - இதுவரை காணாத Rare வீடியோக்கள் - ஒன்லி அட் வீடுதிரும்பல்
வருஷம் 16- படத்தில் "பழமுதிர் சோலை" என பாடிய படி கார்த்திக் சைக்கிள் ஒட்டுவாரே அந்த பாலம். பேர் தெரியுமா? 


அரசியலுக்கு போற ஐடியா வேறு இருக்கா? அவசியமான பயிற்சி தான் !


இந்த யானைக்கும் சரவணபவன் ஓனருக்கும் என்ன சம்பந்தம் ?
தமிழகத்தின் புகழ் பெற்ற இக்கோவிலை கண்டுபிடிக்க முடிகிறதா? 
                 


காமராஜர் நினைவகத்தில் எடுத்த அரிய புகைப்படங்கள் ....ஏராளமாய் உங்களுக்காக காத்திருக்கு 


நோ பேட்டி வித் திஸ் அம்மா ; டோன்ட் வொர்ரி கய்ஸ் ; ஜஸ்ட் ரிலாக்சிங் !

டாக்டர் வெங்கடப்பன் மற்றும் அவர் மகன் பிரகாஷ் உடன் - திருச்செந்தூர் கோவிலில் (கோவிலில் ஒரு அம்மணி சாமி வந்து ஆடிய ஸ்பெஷல் டான்ஸ் - வீடியோவில் பகிரப்படும் )

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்

மிஸ்டர் விவேக் @ கன்யாகுமரி


அலைகள் மேலே வந்து, வந்து மோத ஒரு ஜாலி பயணம் !


அட்டகாச குளியல் @ திப்பரப்பு
இதன் வீடியோ நிச்சயம் பகிர மாட்டேன். பயம் வேண்டாம் !
மானாட ..............

மயிலாட ........... எங்கே?

கூரை வீடுய்யா; விழுந்துட போகுது !

இது வேறயா?


விரிவான பயணக்கட்டுரை.. விரைவில்...!
Related Posts Plugin for WordPress, Blogger...