Sunday, December 30, 2018

ஏற்காடு - ஒரு ஷார்ட் ட்ரிப்

வ்வருடம் இரண்டு நாட்கள் ஏற்காடு சென்று வந்தோம். ஏற்காடு பற்றி ஒரு சிறு குறிப்பு....

ஏற்காடு .. எப்படி சென்றடையலாம்?

சேலம் வரை ரயிலில் சென்று விட்டு அங்கிருந்து 2 மணி நேர பேருந்து பயணத்தில் ஏற்காடு மலை ஏறுவது சிக்கனமான வழி. குடும்பத்துடன் சென்றால், சேலத்தில் இருந்து காரில் செல்லலாம். 1500 ரூபாய் போல் காருக்கு (ஒரு வழி) வாங்குகிறார்கள்.

என்ன பார்க்கலாம்?

லேடிஸ் சீட், ஜென்ட்ஸ் சீட் இவையெல்லாம் வியூ பாயிண்ட்கள்.

நாங்கள் சென்ற நேரம் அரசு பூங்கா இருந்த இடத்திலேயே மலர் கண்காட்சி வைத்திருந்தனர். ஊட்டி மலர் கண்காட்சி அளவு அற்புதம் இல்லை என்றாலும் மனைவி மற்றும் மகள் மலர் கண்காட்சியை ரசித்தனர்.

பொட்டானிக்கல் கார்டன் .. நாங்கள் சென்ற நேரம் சற்று வெய்யில் கொளுத்தியது எனவே ஒரு மணி நேரத்துடன் முடித்து கொண்டோம்.. வெய்யில் சற்று குறைவெனில் நிறைய நேரம் சுற்றி வரலாம்

ஏற்காட்டின் முக்கிய அடையாளம் அதன் ஏரி.  படகு சவாரிக்கு குறைந்த அளவு கட்டணம் வாங்குவதாலோ என்னவோ கூட்டம் சற்று அதிகமே. நாங்கள் படகு சவாரி செல்லவில்லை. நேரம் இருப்பின் நிச்சயம் ஒரு ரவுண்ட் அடிக்கலாம்.



ஊரின் நடுவில் இருக்கிறது இந்த ஏரி. கடைத்தெரு முழுமையும் ஏரிக்கரையை ஒட்டியே உள்ளது. போலவே பல்வேறு தாங்கும் விடுதிகள், அண்ணா பார்க், ஏற்காட்டின் ஒரே திரை அரங்கம் என அனைத்தும் ஏரியை ஒட்டியே அமைந்துள்ளது.

எத்தனை நாள் டூர் போதுமானது? 

நிச்சயம் இரண்டு நாளில் மிக நன்றாக சுற்றி விடலாம். அதற்கு மேல் தங்குவது ஹனிமூன் ஜோடிகளுக்கு மட்டும் வேண்டுமானால் சரியாய் இருக்கும். பிறருக்கு போர் அடித்து விடும்

தங்குமிடம் 

நாங்கள் தங்கியது ஹோட்டல் ஷேர்வராய் -சில். மிக பெரிய ஏரியா. ஏராள மரங்கள் மற்றும் பசுமை. சாப்பாடும் நன்று  (உணவு விலை சற்று அதிகம்) .. இரவு வேளையில் நிச்சயம் கேம்ப் பயர்  ஏற்பாடு செய்கிறார்கள். நாங்கள் பார்த்த இரு நாளும் யாரும் பெரிதாய் ஆடவில்லை. பலரும் சிறு சிறு குடும்பமாக வந்தது காரணமாய் இருக்கலாம். 10-15 பேர் சேர்ந்து வந்திருந்தால்  கேம்ப் பயர்  அருகே கேம்ஸ் ஆடி நிறைய மகிழ்ந்திருப்பர்.

ஹோட்டலில் பல்வேறு 1500 துவங்கி பல்வேறு விலையில் தினசரி அறைகள் உள்ளன. ஏரியில் இருந்து நடக்கிற தூரம் தான். தயக்கமின்றி பரிந்துரைக்கும் நல்ல ஹோட்டல் தான் இது

மேலும் 700 ருபாய் வாடகையில் துவங்கி பல்வேறு  ஹோட்டல்களும் உள்ளன. சாப்பாடு மற்றும் தங்குமிடம் விலை குறைவாக இருப்பதால் ஏற்காட்டை ஏழைகளின் ஊட்டி என்று கூறுவர்

கிளைமேட் / வெதர் 

வருடம் முழுதும் பார்த்தாலும் 30 டிகிரி தாண்டாது - 13 டிகிரிக்கு கீழே போகாத ஊர் இது. மே இறுதியில் சென்ற போது - காலை 10 மணி முதல் சற்று வெய்யில் அடித்தாலும் தினசரி மழையும் பெய்யவே செய்தது

தியேட்டர் 

குட்டி ஊரில் அதிசயமாக ஓர் தியேட்டர். அதன் பெயரும் சேர்வராயர் ! நாங்கள் தங்கிய ஹோட்டல் நிர்வாகம் தான் இந்த திரை அரங்கையும் வைத்துள்ளனர்.

ஊட்டி போன்ற ஊர் செல்லும்போது அந்த குளிரில் திரை அரங்கம் சென்று பார்ப்பது எனக்கு மிக பிடிக்கும். ஒவ்வொரு வாரமும் - அன்று ரிலீஸ் ஆகும் புது படம் திரை இடப்படுகிறது. நாங்கள் சென்ற போது பாஸ்கர் ஒரு ராஸ்கல் நடந்து கொண்டிருந்தது அதற்கான விமர்சனங்கள் ரொம்ப சுமார் என்பதால் செல்லவில்லை.

திரை அரங்கை - இரு காட்சிகளுக்கு இடையே உள்ள இடைவெளியில் எட்டி பார்த்தோம், நன்றாக பராமரிக்கிறார்கள். ஏற்காடு செல்லும்போது நேரம் இருந்தால், ஓரளவு நல்ல படம் இருந்தால் நிச்சயம் ஒரு வித்தியாச அனுபவத்திற்காக கண்டு களிக்கலாம்

உணவகம் 

ஹோட்டல் பிரபாகரன் என்றொரு ஹோட்டல் .. ஏரிக்கு பக்கம்... ரவுண்டானா மிக அருகே உள்ளது. இது நல்ல ஹோட்டல் என்று சிலர் பரிந்துரைக்க - ஒரு இரவு இங்கு சாப்பிட்டோம். வித விதமான பரோட்டா, குருமா, இட்லி, தலைக்கறி என சுவையாகவே இருந்தது. நல்ல கூட்டம் ...ஹோட்டலின் பிரபலத்தை காட்டியது !

நிறைவாக...

ஏற்காடு

பிளஸ் 

13 டிகிரி முதல் 30 டிகிரிக்குள் எப்போதும் இருக்கும் கிளைமேட்
அதிக செலவு வைக்காத சுற்றுலா
பல இடங்களுக்கு நடை அல்லது ஆட்டோவில் சென்று விடலாம்; கார் அவசியமில்லை

மைனஸ் 

பார்க்க அதிக இடங்களில்லை ; 2 நாளுக்கு மேல்  தங்க இயலாது

நல்ல சீசனில் நண்பர்கள் அல்லது உறவினர் குடும்பங்களுடன் சென்றால் மட்டுமே முழுமையாக என்ஜாய் செய்யலாம்...

Related Posts Plugin for WordPress, Blogger...