Thursday, May 27, 2010

விருப்பங்கள் - கவிதை

பாப்பாவுக்கு கட்டிய தொட்டிலில்
ஊஞ்சலாடி மகிழ்ந்தது
நாலாம் வகுப்பில் அலுத்தது.

கிட்டி புல்லும் கையுமாய்
தெரு தெருவாய் அலைந்ததும்
உயர பறப்பது
யாருடைய பட்டமென்ற போட்டியும்,
கண்கள் சிவக்க சிவக்க
ஆற்றிலடித்த நீச்சலும் -
காலத்திற்கேற்ப அகன்றன.

ஒரு தலையாய் காதலித்து
ஒருத்தியிடமும் சொல்லாமல்
கசந்து போன அனுபவங்களில்
கவிதை மட்டுமே மிஞ்சிற்று.
சிறு குழந்தைகளுடன் விளையாடல்
இனிமையே எனினும்
அரை மணியில்
அலுத்து போகிறது.


வாழ்வின் பாதி காலம்
படிப்பிற்கென செலவிட்டு
பெயரை விட நீளமாய்
பட்டங்கள் சேர்ந்த பின்
பட்டங்கள் பயிற்றுவிப்பது
ஏதுமில்லையென விளங்கிற்று.

பிடித்தமான எழுத்தாளரின்
படைப்புகளை
தேடி தேடி வாசித்து
நெகிழ்ந்து கடிதமெழுதி
நேரிலே கண்டபின்
இருந்த மதிப்பும் போயிற்று.

உடன் இயங்கும்
சக இயந்திரங்களின் புன்னகையை
சம்பிரதாயமாய் பிரதி பலிக்கும் போது
தோன்றும் கேள்வி:
அலுக்காதது
ஏதுமுண்டா வாழ்வில் ?

****************

டிஸ்கி: வேலை அதிகம்; வேறு ஏதும் எழுத முடியாததால் பிரசுரம் ஆகாத பழைய கவிதை ..

Monday, May 17, 2010

ராவணன் பாடல்கள் விமர்சனம்

மணிரத்னம்- ரஹ்மான்- வைரமுத்து என அமர்க்களமான கூட்டணியில் வந்துள்ளது ராவணன் பட பாடல்கள். இவை கேட்க எப்படி உள்ளது என ஒரு சாதாரண ரசிகனின் அலசல்..



1. உசுரே போகுதே உசுரே போகுதே

பாடியவர்கள் : கார்த்திக் முகமத் இர்பான்

ஆண் குரலில் சோலோ பாடல் இது. செம ஸ்பீடான இந்த பாடல் துவங்கும் போது சத்தமே இல்லாமல் ஆரம்பிக்கிறது. பாட்டு பாடுதா இல்லையா என நாம் சந்தேகிக்கும் அளவு அமைதி.. பின் மெதுவாய் ஆரம்பிக்கிறது...

"இந்த பூமியிலே எப்ப வந்து நீ பொறந்த..
என் புத்திக்குள்ள தீபொறியை நீள வச்சே
அடி தேக்கு மர காடு பெருசு தான்..

சின்ன தீக்குச்சி உசரம் சிறுசு தான் ..
ஒரு தீக்குச்சி விழுந்து துடிக்குதடி..

கடும் தேக்கு மர காடு வெடிக்குதடி.. "

போக போக செம ஸ்பீடாகி விடுகிறது..

உசுரே போகுதே உசுரே போகுதே உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையிலே....மாமன் தவிக்கிறேன் மடி பிச்சை கேட்கிறேன் மனசை தாடி என் மணி குயிலே
அக்கறை சீமையில் நீ இருந்தும் மைவிரல் தீண்டிட நினைக்குதடி
அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி "


பின் வேகம் குறைவதும், அதிகமாவதும் மாறி மாறி நடக்கிறது. டிரம்ஸ் அதிருகிறது.

சில இடங்களில் பாடகர் மூச்சு விடாமல் பாட நமக்கு மூச்சு முட்டுகிறது. முதல் முறை கேட்கும் போதே ரசிக்க முடிகிற பாடல்.. Pick of the album!!

2. காட்டு சிறுக்கி

பாடியவர்கள் : ஷங்கர் மகாதேவன் , அனுராதா ஸ்ரீராம்

இது ஒரு டூயட் பாடல். பழைய குற்றால குறவஞ்சி போல் கடினமான வரிகள் பல்லவியில் ஆணும் பெண்ணும் மாறி மாறி பாடுவது வித்யாசமான அனுபவம்.

"அவள் நெத்தியில் வச்ச பொட்டுல என் நெஞ்சாங்கூடு ஒட்டுதே" என்பது trademark வைரமுத்து வரிகள்.. போக போக பெண்ணின் அழகை பல விதமாய் வர்ணிக்கிறது..

"உச்சந்தலை வகிடு வழி ஒத்தை மனம் அலையுதடி உதட்டு வழி பள்ளத்துல உயிர் கிடந்தது தவிக்குதடி.."

மணி ரத்னம் போன்றோர் கூட காதல், காமம் பெண்ணின் உடல் இவையே பாடலில் கூறாய் வைப்பது சற்று வருத்தமாக தான் உள்ளது

இந்த பாடலில் காட்டு சிறுக்கி என்ற வார்த்தை எத்தனை முறை ஒலிக்கிறது என போட்டியே வைக்கலாம். குறைந்தது 50 தடவையாவது ஒலிக்கிறது!! அதுவும் பாடல் முடியும் போது திரும்ப திரும்ப அந்த வார்த்தைகளை சொல்லி கொண்டே முடிக்கிறார்கள்..

நான் சொன்ன சிறு குறைகள் தவிர்த்தும் இது கேட்க ஒரு இனிய பாடல் தான்

3. கெடா கெடா

பாடியவர்கள் : தன்வி ஷா, பென்னி தயாள், AR .ரேஹனா

ஆண்களும் பெண்களும் சேர்ந்து பாடும் சந்தோஷ பாடல் இது. துவக்கத்தில் பாடலின் வரிகள் புரியாத அளவு இசை முழுமையாய் ஆட்சி செய்கிறது. நடு நடுவே சில வரிகள் மட்டுமே புரிகிறது.

திரும்ப திரும்ப வரும் சில கோரஸ் (பப்பர பப்பர) மற்றும் பீட்டுகள் தான் இந்த பாடலில் சுவாரஸ்யம்..

நன்கு உற்று கேட்டால் கல்யாண சீனில் இந்த பாடல் ஒலிக்கும் என புரிகிறது. மிக பெரிய துணை நடிகர்கள் கூட்டம் ஆடுகிற ஒரு பாடலாக இருக்கலாம்..

சுவாரஸ்யமான சில பீட்டுகள் இந்த பாடலை கேட்க வைக்கின்றன.

4. கோடு போட்டா

பாடியவர்கள் : பென்னி தயாள்

வீரா (விக்ரம்) கேரக்டர் குறித்த பாட்டு. இசையில் ஏனோ ஹிந்தி வாசனை அடிக்கிறது. " நேற்று வரைக்கும் உங்கள் சட்டம்; இன்று இருந்து இனி எங்க சட்டம்" என திரும்ப திரும்ப ஒலிக்கும் வரிகள் படம் மாவோயிஸ்டுகள் அல்லது வேறு extremists பற்றியது என்ற ரூமரை உறுதி செய்வது போல் உள்ளது. ரொம்ப சுமாரான பாடல் இது.

5. வீரா

இதுவும் வீரா பற்றிய பாடல் தான்.இதனை எழுதியது மணி ரத்னமாம்!! ஒரு சின்ன பிட் பாடல் போல் ஒலிக்கிறது. Not very impressive.

6. கள்வரே கள்வரே

ஸ்ரேயா கோஷல் பாடும் மெலடி இது; கேட்க கேட்க பிடிக்கலாம்.

மொத்தத்தில் உசுரே போகுதே, காட்டு சிறுக்கி ஆகிய இரு பாடல்கள் தான் எடுத்தவுடன் இந்த ஆல்பத்தில் ரசிக்க வைக்கின்றன. இன்னும் கேட்க கேட்க வேறு சில பாடல்களும் பிடிக்க கூடும்

ஆமாம்.. கதை? பத்திரிக்கைகளில் படித்ததும் டிவியில் நேற்று இசை வெளியீட்டு விழா பார்த்தும் உணர்ந்தது இது தான்:

பிரிதிவி ராஜ் - ஐஸ்வர்யா ராய் கணவன்- மனைவி. ஐஸ்வர்யா ராய், விக்ரமால் கடத்தபடுகிறார். காடு போன்ற பகுதியில் சிறை வைக்க படுகிறார். பிரிதிவி ராஜ் போராடி, இறுதியில் விக்ரம் இறக்க ஐஸ்வர்யா ராய் காப்பாற்ற படுகிறார். இதில் விக்ரம் மற்றும் அவர் மக்களின் துயரம் அழுத்தமாய் சொல்லப்பட்டிருக்கிறது போல் தெரிகிறது.

மாற்றான் மனைவியை கடத்தி செல்லும் ராவணனாக விக்ரம்.. கதையில் இந்த நெகடிவ் கேரக்டர் தான் முக்கியமானது போலும். அதான் படத்தில் பெயரே ராவணன் என உள்ளது.

கதை சாதாரணமாய் தோன்றினாலும், மணி ரத்னத்தின் presentation நன்றாக இருந்து, படம் மக்களை கவரும் வாய்ப்புகள் வழக்கம் போல் அதிகம்..

Thursday, May 13, 2010

நீ கோபப்பட்டால் நானும்.. முன்னேறி பார்க்கலாம் பகுதி 4

கோபம் என்பது ஒரு வித சக்தி. அதனை பாசிடிவ்வாகவும் உபயோக படுத்தலாம். சில வேலைகள் விரைவாய் நடக்க மேனஜர்கள் கோப படுவார்களே.. அது போல.. ஆனால் கோபம் என்கிற சக்தி பெரும்பாலும் நெகடிவ்வாக தான் உபயோக படுத்தபடுகிறது. கோபம் என்பது குறித்த சிந்தனையே இந்த பகுதியில்.

இதனை எழுத எனக்கு தகுதி இருக்கிறதா? நானே எத்தனை பேர் மீது கோபப்பட்டுள்ளேன்? எத்தனை முன் பின் தெரியாத நபர்களுடன் பொது இடத்தில் சண்டை பிடித்துள்ளேன்?




"குடிக்காதீர்கள்; சீரழிவீர்கள்" என கவிஞர் கண்ணதாசன் சொன்னால் " நீங்க யார் சொல்ல? நீங்களே குடித்தீர்களே? " என்று புறக்கணிக்கலாம்.. ஆனால் குடியின் கொடுமையை அனுபவித்த அவர்தான் அதனை சொல்ல தகுதியானவர் ...இல்லையா?

வேகமாய் வண்டி ஒட்டி விபத்திற்குள்ளானவர், பிறரை அப்படி ஓட்டாதீர்கள் என்று சொன்னால், “ நான் பட்ட கஷ்டம் நீங்கள் அனுபவிக்க வேண்டாம்” என்ற அவரின் உள்ளத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நான் கோபப்பட்டதால் அதன் பலன்களை முழுதுமாக அனுபவித்துள்ளேன். வாழ் நாள் முழுதும் வரக்கூடிய சில சிறந்த உறவுகளை கோபத்தால் இழந்துள்ளேன். அவமானம், குற்ற உணர்ச்சி இப்படி கோபம் என்னென்ன செய்யுமோ எல்லாம் வாழ்க்கையில் நடந்திருக்கிறது.

*************
கோபம் பெரும்பாலும் ஒரு மனிதனுக்கு எதனால் ஏற்படுகிறது? அந்த மனிதன் ஒரு விஷயம் இப்படித்தான் நடக்க வேண்டும் என நினைக்கிறான். அதற்கு, அவனை சுற்றி உள்ளவர்களும் ஒத்துழைக்க வேண்டும் என நினைக்கிறான். அப்படி அவர்கள் செய்யாத போது கோபம் வருகிறது. சுருக்கமாக சொன்னால் ஒரு மனிதனுக்கு அவன் நினைத்தபடி ஒரு விஷயம் நடக்கா விடில் கோபம் வருகிறது.

யோசித்தால் இது எவ்வளவு முட்டாள் தனம் என தெரியும். ஒரு விஷயம் இப்படித்தான் நடக்க வேண்டும் என எப்படி ஒருவர் மட்டும் முடிவு செய்யலாம்? அடுத்த மனிதர் அதன்படியே நடக்க வேண்டுமா என்ன?
அவரவருக்கும் தன் விருப்பப்படி நடக்க  உரிமை உண்டு தானே?  எனவே  பிறரிடம்  எதிர்பார்ப்புகளை  குறிப்பாய்  அவர்கள் குறிப்பிட்ட விதமாய் நடக்க வேண்டும் என்கிற எண்ணத்தை நாம் மாற்றிக்கொள்ள  துவங்கினாலே  கோபம் ஓரளவு குறையத் துவங்கும்.            

அடுத்து, நம் மீது ஒருவர் கோபப்பட்டால் அவரிடம் திரும்ப கோபப்படுவது. நாமும் கோபப்படும் போது அவரைப்போல் கீழிறங்கி விடுகிறோம்... இந்த நேரம் அவரவரின் ஈகோ நன்கு விழித்து கொண்டு வேலை செய்கிறது. ஒருவரை மற்றவர் வார்த்தைகளால் கீறிக் கொள்கிறோம்.. அடுத்த பல நாட்களுக்கு இதனால் நிம்மதி இழக்கிறோம்.

கோபம் சில நேரம் ஒரு செயின் ரியாக்சன் (Chain reaction) போல சென்று கொண்டே இருக்கும். ஆனால்,  நடுவில் யாரேனும் ஒருவர் அதனை அப்படியே விழுங்க தான் வேண்டும். அது தான் உறவுகளுக்கு நல்லது.

கோபத்துடன் எழுபவன் நஷ்டத்துடன் உட்காருவான் என ஒரு பழமொழி உண்டு. நஷ்டம் என எளிமையாய் இங்கு சொன்னாலும் கோபம் எத்தனை வித நஷ்டங்களை உண்டாக்க வல்லது ...!! உறவுகளில் விரிசல், கோபப் படுபவரின் உடல் நலம், பண நஷ்டம் இப்படி பல வித நஷ்டங்களும் ஒரு சாதாரண கோபம் உண்டாக்கி விடும்.

பொதுவாக யாரிடம் நாம் கோபப்படுகிறோம்? யோசித்து பாருங்கள்.. என்றேனும் நிறுவன CEO-இடமோ, அல்லது நமது மேலதிகாரியிடமோ கோபப்பட்டுள்ளோமா? இல்லை.. ஏன் கோபம் நம்மை விட பெரியவர்களிடம் வருவது இல்லை.. அவர்கள் தவறே செய்தாலும் கூட நம்மை விட பெரியவர்களிடம் நமக்கு கோபம் வருவதில்லை.

ஆனால் குழந்தை, மனைவி/ கணவன், சாதாரண மனிதர்கள், இவர்களிடம் கோபப்பட முடிகிறது. இவர்கள் பல நேரம் நம்மை எதிர்த்து பேச போவதில்லை. அந்த கோபத்தின் வலியை அவர்களுக்குள் மௌனமாக அனுபவிக்க போகிறார்கள்..

நாம் யார் மீதெல்லாம் கோப படுகிறோமோ அவர்கள் உண்மையில் நாம் நன்றி சொல்ல வேண்டியவர்கள், அவர்கள் நமக்காக உழைப்பவர்கள், நமக்காக பல காரியம் செய்பவர்கள்; பல நேரங்களில் நீங்கள் கோபப்படுவதற்கு முன் கூட உங்களுக்கான ஏதோ ஒரு செயலை அவர்கள் செய்து கொண்டிருக்கலாம்..

அடுத்து, பொது இடத்தில வருகிற கோபம்.. இது அபாய கரமானது. சில நேரம் வெட்டு, குத்து என்ற ரீதியில் கூட சென்று முடிகிறது.

ஒரு ஹோட்டலுக்கு செல்கிறோம், அங்குள்ள செக்யூரிட்டி நமது கார் அல்லது பைக்கை சற்று தள்ளி ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறுத்த சொல்கிறார். "ஏன் இங்கு நிறுத்தினால் என்ன ?" என நாம் சண்டை பிடிக்கிறோம். அவர் அதற்கு ஏதோ காரணம் சொல்கிறார். நாம் ஏற்காமல் மல்லுக்கு நிற்கிறோம். குடும்பத்துடன் வந்து விட்டு இப்படி சண்டை போடுவதால் மனைவி திட்டுகிறார். அன்று அந்த உணவை நீங்கள் மகிழ்வாய் சாப்பிட முடியாமல் போகிறது.

ஒவ்வொரு இடத்துக்கும் ஒரு ரூல் (Rule) இருக்கும், அங்கு அதனை நிர்வகிப்பவர் தான் மாஸ்டர். அவர் தான் ஜித்தன். நாம் எவ்வளவு பெரிய ஆளாய் இருந்தாலும் அங்கு அவர் சொன்ன படி கேட்டு விட்டால் பிரச்சனை இல்லை. மேலே சொன்ன பார்க்கிங் உதாரணத்தில், அந்த செக்யூரிட்டி சொன்ன படி நிறுத்தி விட்டு போயிருந்தால் அன்றைய தினம் மகிழ்ச்சியாய் இருந்திருக்கலாம்..

இப்படி பொது இடத்தில சாதாரண மனிதர்கள் என்றாலும் அந்தந்த இடத்தை நிர்வகிப்பவர்களுடன் சண்டை போடுவது பல பிரச்சனைகள் தரும். அவர்கள் சொன்ன படி அந்த இடத்தில கேட்டு விடுவது தான்
புத்திசாலித்தனம்.

இளரத்தம் சில நேரம் அதிகமாய் துடிக்கும். எனவே இத்தகைய கோபங்கள் இளவயதில்  வரும்; இன்னொரு பக்கம் 40 வயதுக்கு மேல் BP போன்ற உபாதைகளால் சிலருக்கு கோபம் அதிகமாக வரும்.

கோபம் பிறருக்கு வந்து விட்டு போகட்டும். அது நமக்கு வராமல் இருப்பது நல்லது. கோபம் வெறுப்பு போன்ற எதிர் மறை உணர்ச்சிகள் (Negative emotions) ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருந்து அதிக கெடுதலே செய்யும். நீங்கள் ஒருவர் மீது கொள்ளும் வெறுப்பு உங்கள் மனதை, உடலை லேசாக அரித்து உங்களுக்கு சர்வ நிச்சயமாய் கெடுதல் செய்யும்.

அலுவலகமோ, வீடோ நம்மை சுற்றி இருக்கும் ஒவ்வொருவரின் உதவியும் ஏதோ ஒரு தருணத்தில் கட்டாயம் தேவைப்படும். எனவே நம்மை சுற்றி இருக்கும் அனைவரிடமும் நல்ல உறவு வைத்திருப்பது மிக அவசியமாகிறது.

நமக்கு தீங்கு செய்தவரே ஆயினும், அவரை நாம் மனதளவில் மன்னித்து விடுவது நல்லது.. அவருக்காக அல்ல.. நம் உடல் நலத்துக்காக…

Tuesday, May 11, 2010

25 ஆண்டு கழித்து ஒரு நெகிழ்வான சந்திப்பு

 
மே 2 -ஆம் தேதி அன்று நாங்கள் படித்த மன்னார்குடி நேஷனல் பள்ளி மாணவர்கள் 25 ஆண்டுகள் கழித்து நாங்கள் படித்த அதே பள்ளியில் சந்தித்தோம். முப்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்தனர். எங்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்கள் கிட்டத்தட்ட 35 பேர் அழைக்க பட்டு கௌரவிக்க பட்டனர்.





இந்த விழா ஐடியா நமது சக பதிவரும், எனது பள்ளி வகுப்பு தோழருமான பெயர் சொல்ல விருப்பமில்லை தான் துவங்கினார். பின் பல நண்பர்கள் பெரும் முயற்சியும், உழைப்பும் எடுத்து விழா நடந்தது. காலை, மதியம் இரு வேளை அருமையான உணவு, சென்னையில் உள்ள ஆசிரியர்கள் வந்து செல்ல வாகனம், ஆசிரியர்கள் தங்க லாட்ஜில் அறைகள் என பார்த்து பார்த்து செய்திருந்தனர்.



விழா மிக நெகிழ்வாய் நடந்தது. ஒவ்வொரு மாணவரும் தங்களை சுய அறிமுகம் செய்து கொண்டனர். பள்ளியில் படித்த போது ஒல்லியாக இருந்தவர் இன்று குண்டாகவும், அப்போது குண்டாக இருந்த சிலர் இப்போது சற்று இளைத்தும் ஆச்சரியம் தந்தனர். சிலரை தவிர பலரை அடையாளம் கண்டு பிடிப்பது பெரும் சிரமமாகவே இருந்தது.

நாங்கள் படித்த போது தினமும் கடவுள் வாழ்த்து பாடும் எங்கள் வகுப்பு மாணவி சௌம்யா இன்றும் பாட, எங்கள் நண்பன் டாக்டர் ரவீந்திரன் கவிதை நடையில் ஆசிரியர்களை பாராட்டி அழைத்தார்.



கடவுள் வாழ்த்து சௌம்யா, அன்புமணிடீச்சர், கண்ணன்  

ஆசிரியர்களுக்கு பள்ளி படத்துடன் கூடிய நினைவு சின்னமும், சால்வையும் வழங்க பட்டது. மேலும் அந்தமானில் உள்ள நண்பன் வேல் முருகன் அனைவருக்கும் நினைவு பரிசு அனுப்பி இருந்தான். நிகழ்ச்சிக்கு வர முடியாத அவன் தொலை பேசி மூலம் அனைவருடனும் பேசிய கணம் மிக நெகிழ்வான ஒன்று..





இனி விழாவில் பேசிய ஆசிரியர்கள் சிலரின் பேச்சு சுருக்கமாக

திரு சேது ராமன்; அறிவியல் ஆசிரியர்,முன்னாள் தலைமை ஆசிரியர்

" ஆசிரியர் ஒரு மனிதனின் வாழ்க்கையில் எந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறார் என சரியாக சொல்ல முடியாது. His impact on the students is immeasurable. ஆனால் அப்படி நாங்கள் செய்த தாக்கம் காரணமாக தான் இன்று நீங்கள் எங்கெங்கோ இருந்து வந்துள்ளீர்கள்.


                     ஆசிரியர் சேது ராமன் குத்து விளக்கேற்றுகிறார்


“ஓர் கடிதத்தில் எத்தனையோ எழுதினாலும் Post script தான் முக்கியமானது. ஒரு மகன் தந்தைக்கு எழுதும் கடிதத்தில் எல்லோரையும் விசாரித்து விட்டு கடைசியில் பின் குறிப்பு: உடன் ஆயிரம் ருபாய் பணம் அனுப்பவும்" என எழுதுகிறான். அந்த கடைசி வரி தான் முக்கியமானது. அப்படி நீங்கள் எழுதுவது மற்றும் பேசுவதில் கடைசி பார்ட் முக்கியமானது"

திரு ராம சாமி , தமிழாசிரியர்

"பொதுவாக டல்லான மாணவர்கள் தான் ஆசிரியரை நினைவில் வைத்திருப்பார்கள்; எங்காவது போகும் போது நம்மிடம் வந்து, " நான் உங்க மாணவன்" என அறிமுகம் செய்து கொள்வார்கள்; என்ன செய்கிறாய் என்றால் மிக சாதாரண வேலை சொல்வார்கள்; நன்கு படித்த மாணவர்கள் சிலர் நம்மை பார்த்தால் கூட, பார்க்காத மாதிரி செல்வார்கள்; ஆனால் இங்கே நன்கு படித்து வாழ்க்கையில் நல்ல நிலையில் உள்ள மாணவர்கள் ஆசிரியர்களை நன்றியுடன் நினைவு கூறுகின்றனர்"

திரு. M.R. சுவாமிநாதன், ஆங்கிலம்/ வரலாறு ஆசிரியர்


" இந்த பேட்ச் மாணவர்கள் இங்கிலீஷ் மீடியம்; இதற்கு ஏன் வகுப்பு எடுக்கிறாய்? ரொம்ப கஷ்டப்பட்டு தயார் செய்யனுமே என அப்போது கேட்பார்கள்; உண்மையில் தமிழ் மீடியம் பசங்களை விட இங்கிலீஷ் மீடியம் பசங்க intelligent. நாம சொல்லி குடுக்காமலே படிச்சுடுவாங்க. நம்ம வேலை ஈசி என்பேன். எனது மாணவர்களை எனது மகன்கள் போல தான் எப்போதும் நினைப்பேன். உங்க பேச்சு, செயல்கள் இவை எல்லாம் எங்களை ரொம்ப மகிழ்ச்சிக்குள்ளாக்கி இன்னும் பத்து வருடம் கூடுதலாய் வாழ செய்து விடும் என நினைக்கிறேன்"

திரு சீனிவாசன், கணக்கு ஆசிரியர்

நான் கணிதம் எடுத்தேன். மற்ற பாடங்களை விட கணக்கு சற்று வித்யாசமான் பாடம். மற்ற பாடங்களில் அறிவு பெறுவதை knowledge என்பார்கள் (English knowledge, Science knowledge). கணக்கில் அறிவு பெறுவதை Mathematical skills என்பார்கள். முழுக்க முழக்க பயிற்சி மூலமே அறிய வேண்டிய பாடம் கணக்கு.

முதல் நாள் வகுப்பிலேயே “Copying = Eating human waste” என்று போர்டின் ஓரத்தில் என எழுதி விடுவேன். அது உங்களில் சிலருக்கு இன்னும் நினைவில் உள்ளது அறிந்து ரொம்ப சந்தோசம். கணக்கில் மட்டுமல்ல மற்ற விஷயங்களிலும் மற்றவரை காப்பி அடிக்க கூடாது; அடித்தால் வெல்ல முடியாது"

******
நிகழ்ச்சியை தொடர்ந்து கவனித்து வந்த எங்கள் நண்பன் கண்ணனின் 12 வயது மகன் " நீங்க எல்லாம் நல்ல டீச்சர்ஸ் ஆக இருக்கீங்க; இது மாதிரி எல்லாம் எங்க டீச்சர்ஸ் இல்ல.. நீங்க எல்லாம் சென்னை வந்து எங்களுக்கு பாடம் எடுங்க" என்று பேசி கல கலப்பூட்டினான்.

நிகழ்ச்சியில் பேசிய பல ஆசிரியர்கள் " ஒரு மனிதன் முன்னுக்கு வருவதில் ஆசிரியர் ஒரு சிறிய பங்கு தான் வகிக்கிறார்; தனி மனிதனின் ஊக்கம் மற்றும் முயற்சியே அவரவர் முன்னுக்கு வர காரணம்" என பேசினர். " நன்றி உணர்ச்சி உள்ளவர்கள் வாழ்க்கையில் நிச்சயம் முன்னுக்கு வருவர்; அந்த விதத்தில் நாங்கள் செய்த உதவியை நினைவில் வைத்து எங்களை மகிழ வைத்த நீங்கள் நல்லபடி முன்னேறுவீர்கள்" என வாழ்த்தினர்.

                                                குரூப் போட்டோ

விழா முடிந்து நண்பர்கள் சற்று கனத்த மனதுடன் பிரிந்தோம். நல்ல நிலையில் இருக்கும் இத்தனை பேர் ஒன்று கூடியது மகிழ்ச்சி; இனி பள்ளிக்கு அல்லது சமூகத்திற்கு பயன் படும் வகையில் ஏதேனும் செய்ய வேண்டும் என்ற யோசனை அனைவருக்கும் உள்ளது; என்ன செய்வது என்பது குறித்து யோசித்தும் பேசியும் வருகிறோம்.

Thursday, May 6, 2010

முயற்சி என்னும் ஊக்க மருந்து/ வாங்க முன்னேறலாம் - பகுதி 3

வெற்றிக்கு மிக முக்கிய தேவைகளில் ஒன்று முயற்சி. உலகத்து மனிதர்களை இரு வகையாக பிரிக்கலாம். முயற்சி செய்பவர்கள்; முயற்சி செய்யாதவர்கள். சற்று யோசித்தால் முதல் வகை மனிதர்கள் வெற்றியாளர்களாகவும், அடுத்த வகை மனிதர்கள் சாதாரண மனிதர்களாகவும் இருப்பதை உணரலாம்

திருக்குறளில் வள்ளுவர் முயற்சி, சோம்பேறித்தனம் இவை பற்றி பொருட் பாலில் மீண்டும் மீண்டும் எழுதி உள்ளார்.

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.


“முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும், முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்துவிடும்”.

எடிசன் பற்றி வாசித்துள்ளீர்களா? வாழ்க்கை முழுதுமே ஆராய்ச்சி, ஆராய்ச்சி என செலவிட்டு இவர் கண்டுபிடித்த விஷயங்கள் தான் எத்தனை.. எத்தனை.. ? எவ்வளவு முயற்சி அதற்கு அவர் எடுத்திருக்க வேண்டும்? அநேகமாய் அவர் கண்டு பிடித்தவற்றை விட பல மடங்கு அதிகமாக அவர் அந்த முயற்சிகளில் தோற்றிருக்க கூடும்.

**********

CA, ACS, ICWA போன்ற கோர்சுகள் படிப்பவர்களை கவனித்து பாருங்கள். இந்த தேர்வுகளில் ஒரு குருப்பிற்கு மூன்று அல்லது நான்கு தேர்வுகள் இருக்கும். இவற்றில் ஒன்றில் பெயில் ஆனாலும் அனைத்து பேப்பர்களும் எழுத வேண்டும். இந்த கோர்சுகள் படிப்பவர்களில் ஒரு முறையாவது இப்படி பெயில் ஆகி அனைத்து பேப்பர்களையும் மறுபடி எழுதாதவர்கள் மிக சில பேர் தான். இப்படி மறு படி மறு படி எழுதி பாஸ் ஆகின்றனர் சிலர். பலரோ தொடர்ந்து முயற்சி செய்ய மனமின்றி வேறு படிப்புகள் பக்கம் திரும்பி விடுகின்றனர். முயன்றவர் வெல்கின்றனர்.. முயல மனமில்லாதோர் சிறு வேலைகளில் சேர்ந்து தங்களை திருப்தி செய்ய முயல்கின்றனர்.

*********

எனக்கு தெரிந்த இரு குடும்பங்களின் கதை சுருக்கமாக சொல்கிறேன்.

முதல் குடும்பத்தில் ஆறு பெண்கள். கணவர் சாதாரண வேலை தான். ஆனால் அதன் பின் மாலையில் பார்ட் டைம் வேலை பார்த்தார். மனைவி இவருக்கு பெரும் உறுதுணை. சிறுக சிறுக சேர்த்து அனைத்து பெண்களையும் படிக்க வைத்தனர். அனைவருக்கும் சென்னையில் சொந்தமாய் வீடு வாங்கினர். ஒவ்வொருத்தருக்கும் 25 பவுன் நகை போட்டு திருமணம் செய்து தந்தார்கள். பெண்கள் அனைவரும் வேலை பார்க்கின்றனர். மிக சாதாரண குடும்பமான அவர்கள் அடுத்த generation-ல் சற்று மேலே வந்துள்ளனர். அந்த தந்தையின் உழைப்பை நினைத்து பாருங்கள்!! இன்றைக்கும் அவர் உழைத்து பேரன் பேத்திகளுக்கு நகை போன்றவை வாங்கி தருகிறார்!! உழைப்பு!!

அடுத்த குடும்பம்: இவர்களுக்கு ஒரே பெண். கணவர் சொந்தத்தில், சிறு வயதிலேயே ஒரு பெண் அனாதையாய் நின்றது. அந்த பெண்ணை எடுத்து வளர்த்து படிக்க வைத்தார். மனைவி உள்ளிட்ட மற்ற உறவினருக்கு விருப்பம் இல்லா விடினும் அந்த பெண்ணை நன்கு படிக்க வைத்து வேலை வாங்கி தந்து திருமணம் செய்து தர வேண்டும் என உறுதியாய் இருந்தார். அவ்வாறே செய்தும் முடித்தார். இந்த திருமணம் சென்ற போது நான் நெகிழ்ந்து போயிருந்தேன். இப்படியும் மனிதர்கள் உள்ளனரா என!!

***********
"கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்க படும்; தேடுங்கள் கண்டடைவீர்கள்" இவை இந்து, இஸ்லாம், கிறித்துவ மத புனித நூல்கள் அனைத்தும் சொல்கிற விஷயம்.

குமுதம் ஆசிரியர் எஸ். ஏ. பி பகவத் கீதையின் மிக பெரிய ரசிகர். கீதை வகுப்புகள் வாரா வாரம் நடக்கும். அவர் அடிக்கடி ஒன்று சொல்வாராம். " ஒரு விஷயத்தை சரியாக செய்து முடிப்பது தான் நம் வேலை; நமக்கு பிடித்தமான ரிசல்ட் வந்தால் அது ஒரு போனஸ் என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும்!”. எத்தனை உண்மையான வார்த்தைகள்!!

நமக்கு ஒரு பெரிய இலக்கு நிர்ணயம் செய்த பிறகு அதனை அடையும் வழியில் சின்ன சின்ன விஷயங்கள் கூட நாம் நினைத்த படி தான் நடக்க வேண்டும் என எண்ண முடியாது. சில விஷயங்கள் நாம் நினைத்ததற்கு மாறாகவும் நடக்கலாம். ஆனால் நாம் நினைத்த final objective நிறைவேறும் வரை நாம் பல்வேறு வழிகளில் முயல வேண்டும்.

இன்னும் சொல்ல வேண்டுமெனில் எந்தவொரு விஷயத்திலும் நமது பங்கை நாம் சரியாக செய்து விட வேண்டும்; அது மட்டும் தான் நம்மிடம் உள்ளது; மற்றவர்கள அதை பார்த்து என்ன விதமாக react செய்வார்கள், அதற்கு என்ன வித பலன் கிடைக்கும் இவை எல்லாம் நம் கையில் இல்லை; நம் பங்கை முடித்து விட்டு, பிறகு எது நடந்தாலும் நாமும் spectaror மாதிரி ரசிக்க வேண்டியது தான்.

குரங்கு பெடலில்
சைக்கிள் ஒட்டியும்
முட்டி தேய விழுந்து
ரத்தம் பார்த்திருக்கிறேன்.

நீந்த தெரியாமல்
தண்ணீர் குடித்து
நீருள் வீசிய அண்ணனை
ஏசியிருக்கிறேன்..

தேர்வுக்கு
முந்தைய வாரத்தில்
தலையணை நனைய
பயந்து அழுதிருக்கிறேன்..

பிரச்னைகள்
விஸ்வரூபம் எடுக்கையில் எல்லாம்
விக்கித்து நின்றிருக்கிறேன்..

என்றாலும் கூட
நான் நீந்துகிறேன்..
தேர்வுகளை வெல்கிறேன்

முயற்சி தரும் சுகத்தில்
லயித்து வாழ்கிறேன்...

இது எனது கவிதை மட்டுமல்ல என் வாழ்க்கையும் கூட


தொடங்கிய எந்த விஷயமும் முடிகிற வரை முயற்சி என்பது தொடர வேண்டும். அலுவல் வேலையாகட்டும்,சொந்த வேலையாகட்டும் முடிக்காத விஷயம் ஒரு தீயை அணைக்காமல் விடுவது போல் தான். அது மிகுந்த கெடுதலே செய்யும்.

போலவே ஒரு விஷயத்தை முடிக்காமல் வைத்திருப்பது மனதில் ஓரத்தில் எப்போதும் தங்கி உறுத்தி கொண்டே இருக்கும். இது நமது energy -யை drain செய்து விடும். இதற்கு ஒரே மருந்து அந்த விஷயத்தை தொடர்ந்து, இறுதி வரை எடுத்து சென்று முடிப்பது தான்!!


“மெய் வருத்தம் பாரார்; பசி நோக்கார்; கண் துஞ்சார்; எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் செவ்வி அருமையும் பாரார் கருமமே கண்ணாயினார்!!”

Tuesday, May 4, 2010

வானவில் -முஹம்மது அமீரும் போளி ஸ்டாலும்

கிரிக்கெட் கார்னர்

T- 20 வேர்ல்ட் கப்பில் ஆஸ்திரேலியா Vs பாகிஸ்தான் இடையே நடந்த போட்டி. 19 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 191 for 5 எடுத்திருந்தது. அந்த 20-வது ஓவர் முடிவில் ஸ்கோர் என்ன ஆயிருக்கும் என நினைக்கிறீர்கள்? 191 for 5-லிருந்து 20வது ஓவரில் ஆஸ்திரேலியா 191 ஆல் அவுட்!!

முஹம்மது அமீர் என்ற பவுலர் 20-வது ஓவர் பந்து வீசினார். முதல் இரு பந்தில் இரு விக்கட் எடுத்தார். ஹாட் ட்ரிக் பந்து.. விக்கட்டுக்கு வெளியே விழுந்து விக்கட் கீப்பர் கையில் அடைந்தது. ஒரு ரன் எடுக்க முயல ரன் அவுட். நான்காவது பந்தும் அதே போல் பந்து விக்கட் கீப்பர் கையில் உள்ள போதே ரன் எடுக்க முயல ரன் அவுட். 5-வது பந்தில் ரன் இல்லை. ஆறாவது பந்தில் கிளீன் போல்ட். ஒரு ஓவரில் இது வரை 5 விக்கட்டுகள் ஒரு International மேட்சில் வீழ்த்த பட்ட மாதிரி தெரியவில்லை!! Last over….5 Wickets and a Maiden over!!

அன்று பாகிஸ்தான் தோற்றாலும் கூட இத்தகைய அதிசயமான நிகழ்வை Highlights-ல் பார்த்து ஆச்சரிய பட்டு போனேன்.

ஒரு சம்பவம்

சமீபத்தில் எங்கள் ஊரான நீடாமங்கலம் சென்று விட்டு பேருந்தில் தஞ்சை வந்து கொண்டிருந்தேன். நல்ல கூட்டம். சாலிய மங்கலம் என்ற ஊரில் ஒரு கணவன், மனைவி கை குழந்தை உடன் ஏறினர். அந்த ரெண்டரை வயது குழந்தையை நான் வாங்கி மடியில் அமர்த்தி கொண்டேன். எனக்கு பக்கத்தில் ஜன்னலோரம் இருந்தவர் எழுந்ததும் நான் ஜன்னலோரம் செல்ல, என் அருகே குழந்தையின் தந்தை அமர்ந்தார். குழந்தையை கூப்பிட அது அவரிடம் போகலை. என்னிடமே இருப்பதாக சொல்லி விட்டது. ஜன்னலோரம் என்பதால் போக மாட்டேன் என நினைக்கிறது என நாங்கள் பேசி கொண்டோம்.


"எந்த ஊர் மொட்டை?" என நான் கேட்க, சாலிய மங்கலம் அருகே திருகருகாவூர் என்ற ஊர் உள்ளதாகவும், இந்த ஊர் கடவுள் பிள்ளை பேருக்கு மிக புகழ் பெற்றது என்றும், தங்களுக்கு தாமதாமாக குழந்தை பிறந்தாதால், வேண்டுதல் நிறைவேற்ற திண்டுக்கலில் இருந்து வருவதாகவும் கணவனும் மனைவியும் மாறி மாறி கூறினர். நான் கேட்டது ஒரே கேள்வி; எவ்வளவு வெள்ளந்தியாக எத்தனை தகவல்கள்!! அதிலும் எங்கள் ஊருக்கு அருகே எனக்கே தெரியாத கோயில் பற்றி அறிமுகம்!!
அடுத்து எங்கள் பின் இருக்கை காலியாக ஜன்னலோரமாக அந்த பெண் அமர்ந்தார். இப்போது அவர் குழந்தையை கூப்பிட அப்பவும் என் மடியை விட்டு நகரலை. எனக்கு ஆச்சரியம். குழந்தைகள் என்றால் எனக்கு கொள்ளை பிரியம். ஆனால் புது குழந்தைகள் அவ்வளவு சீக்கிரம் என்னிடம் வராது. இந்த குழந்தை ஆச்சரியமாக என்னிடம் ஒட்டி கொண்டது. நான் தஞ்சையில் இறங்கும் போது அந்த குழந்தை அப்பாவிடம் கேட்டது. "அங்கிள் எந்த ஊர்?" "தஞ்சாவூர்மா"   " அவர் நம்ம ஊருக்கு வர மாட்டாரா? "   அடடா!! என்னே அன்பு!! அந்த வெள்ளந்தி தம்பதியும், குழந்தையும் இன்னும் என் நினைவுகளில்.

வாரம் ஒரு சட்ட சொல் – Sweat Equity Shares

ஒரு புது நிறுவனம் துவங்கும் போது பலரும் பல விதத்தில் உதவுவர். அவர்களில் எல்லோருக்கும் fees பணத்தால் தான் தர வேண்டும் என்பதில்லை. சில நேரம் அவர்கள் உழைப்பிற்காக நிறுவனத்தில் ஷேர்கள் தரலாம். அதற்கு அவர்கள் பணம் தர தேவையில்லை. இதனை தான் Sweat equity shares என்கின்றனர்




நம்ம சசி தரூரின் தோழி சுனந்தாவிற்கு இப்படி தான் கொச்சி அணி Sweat equity ஷேர் தந்து பிரச்னைக்குள்ளானது. சுனந்தா அப்படி என்ன contribution செய்தார் என்பது ஓர் பதில் தெரியா கேள்வி; மேலும் நிறுவனம் துவங்கி ஒரு ஆண்டு கழித்தே இத்தகைய Sweat equity shares - issue செய்யலாம் என்ற விதி மீற பட்டது வெட்ட வெளிச்சம் ஆனது. இவை சசி தரூர் மற்றும் சுனந்தா இருவரும் பிரச்சனையில் மாட்ட காரணமானது

அய்யா சாமி

அய்யா சாமி முக்கிய வேலையாக அதி காலை எழ வேண்டும் என்றால், அலாரம் கிளாக் , மொபைல் என ரெண்டுக்கும் மேற்பட்டவற்றில் அலாரம் வைப்பார். ("ஒன்னு அடிக்கேலேன்னா என்ன பண்றது?") இப்படி வச்சும் அன்னிக்கு நிம்மதியா தூங்குவாருங்குறீங்க ?? .. ம்ஹும்..இதில் காலையில் அவசரமா கிளம்பும் போது ஒவ்வொன்னா அடிக்க, அதை வந்து வந்து ஆப் செய்வது வேறு தனி வேலை..

சமீபத்து SMS:

One side love is possible, but one side friendship is impossible – Shakespeare


வெங்கடேஸ்வரா போளி ஸ்டால்


சென்னையில் சூப்பரான போளி சாப்பிட ஒரு சிறந்த இடம் : வெங்கடேஸ்வரா போளி ஸ்டால். T. நகர் துரைசுவாமி சப்வே வழியே மேற்கு மாம்பலம் செல்லும் போது சப்வே முடிந்து இடது புறம் திரும்பினவுடன் இருப்பது தான் ஒரிஜினல் வெங்கடேஸ்வரா போளி ஸ்டால். இதே பெயரில் இன்னும் நிறைய கடைகள் வந்தாலும் அவற்றில் போலி போளி கடைகள் தான். இந்த கடையில் சென்று நீங்கள் க்யூவில் தான் போளி வாங்க முடியும். போளி மட்டுமல்லாது மற்ற snacks-ம் கூட செமையாக இருக்கும். இதுவரை சாப்பிடாதவர்கள் ஒரு முறை சென்று பாருங்கள். அடுத்த முறை என்னை நேரில் பார்க்கும் போது நன்றி சொல்வீர்கள்!

P.S: "முன்னேறி பார்க்கலாம்" தொடர் அடுத்த பகுதி இந்த வாரம் வியாழன் அன்று இரவுக்குள் வெளி வரும்.
Related Posts Plugin for WordPress, Blogger...