Showing posts with label அதீதம். Show all posts
Showing posts with label அதீதம். Show all posts

Monday, April 29, 2013

பெயின்டர்கள் வாழ்க்கை - அறியாத தகவல்கள்

துரைராஜ் என்ற அந்த பெயின்டர் எங்கள் ஏரியாவில் வசிப்பவர் என்ற முறையிலும், வீட்டுக்கு ஒரு முறை பெயின்ட் அடித்தவர் என்ற முறையிலும் சில வருடங்களாக தெரியும். சமீபத்தில் ஒரு நாள் அவரோடு பேசிய போது பெயிண்டர்கள் வாழ்க்கை பற்றி அறிய முடிந்தது.

அவர் பேசியதிலிருந்து

"எனக்கு இப்போ 50 வயசு ("என்னது 50 ஆ? பாத்தா சின்ன பையன் மாதிரி இருக்கீங்க சார் ") 30 வருஷமா பெயிண்டிங் வேலை செய்றேன். என்னோட அப்பா, தம்பி எல்லாரும் இதே பெயிண்டிங் தொழில் தான்.



ஏழாவது வரைக்கும் தான் படிச்சேன் அதுக்கு பிறகு படிப்பு ஏறலை. அப்பா கூட சேர்ந்து வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டேன். நாங்க Buவர் பாமிலி சார்.

அப்பா சென்னையில் விப்ஜியார் என்ற கம்பனியில் பெயிண்டரா வேலை பார்த்தார். என்னை ஹெல்பரா சேத்துகிட்டார். கொஞ்ச வருஷம் தொழில் கத்து கிட்டேன். கம்பனி ஓனர் லிபியாவில் ஒரு வேலை எடுத்தார். அதிலே எங்களை எல்லாம் வெளிநாட்டுக்கு அனுப்பினாங்க. அப்பா வயசாகிடுச்சுன்னு வரலை; மீசை கூட முளைக்காம 82 ஜனவரியில் லிபியா போனேன்

அங்கே போயி ரொம்ப கஷ்பட்டுட்டேன் சார். ஆயில் கிணத்தில் வேலை; அப்புறம் பெரிய ஷிப் யார்டில் பெயின்ட் அடிக்க வேண்டியிருக்கும். சில நேரம் பாலை வனத்தில் வேலை . வெயில்னா வெய்யில் அப்படி ஒரு வெய்யில். ஒரு நிலைமைக்கு மேலே எங்க முதலாளியால எங்களுக்கு சம்பளம் தர முடியலை. NOC தந்து வேற இடத்தில் வேலை செய்யுங்க என்றார். அதுக்கு பிறகு மால்ட்டா-ங்கிற பெரிய வெளி நாட்டு கம்பனியில் வேலை கிடச்சுது. அங்கே காப்பி, டீ குடுக்கும் வேலை தான். ஆனா நான் அதில் சேரலை . அம்மா, அப்பாவை பார்க்கனும்னு இருந்தது. ஊருக்கு வந்துட்டேன்.

கொஞ்ச நாள் கழிச்சு மறுபடி சவுதியில் ஆராம்கோ ஆயில் கம்பனியில் வேலை கிடைச்சு 4 வருஷம் போய் வேலை பார்த்தேன். அப்புறம் இந்தியா வந்தவன் தான். மறுபடி வெளிநாடு போகலை

எனக்கு 1 அக்கா 2 தங்கச்சி ஒரு தம்பி. அக்கா தங்கை எல்லாருக்கும் கல்யாண செலவு நான் தான் செஞ்சேன் அப்பா அவரோட 55 வயசில் இறந்துட்டார். தங்கச்சிங்க கல்யாணம் ஆக தாமதம் ஆனதால எனக்கு 32 வயசில் தான் கல்யாணம் ஆச்சு. எனக்கும் என் சம்சாரத்துக்கும் 10 வயசு வித்தியாசம்.

என் மாமனார் சின்ன வயசில் வீட்டை விட்டு ஒரு லெட்டர் எழுதி வச்சுட்டு ஓடி போனவர். அப்புறம் என்ன ஆனார்னே இன்னி வரைக்கும் தெரியலை. மாமனார் ஏர் போர்ட்டில் வேலை பார்த்தார். அந்த வேலையை என் மாமியாருக்கு குடுத்தாங்க. அவங்களுக்கு ரெண்டு பொண்ணு. பசங்க இல்லை. நான் தான் அவங்களுக்கு பையனா கூட இருந்து பாத்துக்குறேன். நாங்க இருக்கிறது மாமியாரோட சொந்த வீடு தான் கீழ் போர்ஷன் என் மனைவியோட தங்கச்சிக்கு. மேல் போர்ஷன் எங்களுக்கு. மாமியார் எங்க கூட தான் இருக்காங்க

இந்தியா வந்த பிறகு பல இடத்தில் பெயிண்டரா வேலை பார்த்துட்டு அப்புறம் தனி காண்டிராக்டரா இப்ப 15 வருஷமா வேலை செய்யுறேன். இந்த ஏரியாவில் ஒரு 5 பேரு நம்ம கிட்டே வேலை பார்க்குறாங்க. தினம் வேலை இருக்கும்னு சொல்ல முடியாது. வேணுங்கும் போது கூப்பிட்டுக்க வேண்டியது தான்

ஒரு உண்மைய சொல்றேன். இந்த ஏரியா ஆளுங்க பெயின்டிங்கில் அவ்ளோ சுத்தம் கிடையாது. நம்ம தம்பி பூந்தமல்லியில் இருக்கான். அவன் கூட இருக்க ஆளுங்க தங்கமானவங்க. அவங்க வேலை செஞ்சா வீடு கண்ணாடி மாதிரி இருக்கும். பக்கத்திலே இருக்காங்க பஸ் செலவு கம்மின்னு தான் இவங்களை கூப்பிட்டுக்குறேன். பெரிய வேலை என்றால் தம்பியின் ஆளுங்களை வரவழைச்சுப்பேன்

சாமிநாதன்னு ஒரு பில்டர் நமக்கு ரெகுலரா வேலை தர்றார். 12 வருஷ பழக்கம். உங்களை மாதிரியே தான் அவரு (!!!??) எதையும் ஓப்பனா,. நேரா பேசிடுவார். நம்ம கிட்ட வேலை பாக்குற ஆளுன்னு நினைக்காம ஒரு பிரண்டு மாதிரி ஜாலியா பழகுவார். அவரோட எல்லா வீட்டுக்கும் நாம் தான் பெயின்ட் அடிக்கிறது

நமக்கு தெரிஞ்ச வீடுகளில் நம்மை ரெகுலரா கூப்பிடுறாங்க. நான் எல்லார் கிட்டேயும் குடும்பத்தில் ஒருத்தனா பழகிடுவேன். அதனால் எல்லாரும் நம்மை மறுபடி மறுபடி கூப்பிடுவாங்க எந்த வேலைன்னாலும் மறுக்காமல் செய்வேன்.

சின்ன சின்ன வேலைன்னா ஆளே வச்சிக்காம நானே பார்த்து முடிச்சுடுவேன்.

நம்ம கீழே வேலை செய்பவர்களை எப்பயோ ஒரு தடவை தான் கூப்பிடுறோம் இல்லையா? அதனால ஒரு ஆள்க்கு ஒரு நாளைக்கு 550 ரூபா கூலி தர்ரேன். தவிர பஸ் கூலி 50 ரூபா தரணும். இதே பில்டர்கள் என்றால் 300 ரூபா தான் தின கூலி தருவாங்க. அவங்களிடம் தினம் வேலை இருக்கும்னு பெயிண்டர் ஆளுங்க கம்மி சம்பளம் என்றாலும் தொடர்ந்து போவாங்க

என்னை பொருத்தவரை நான் யாரிடமும் போய் வேலை கேட்கவே மாட்டேன். அது தானா நம்மை தேடிகிட்டு வரும். வாரத்தில் எனக்கு ரெண்டு மூணு நாலு தான் வேலை இருக்கும். சில நேரம் ஒரே வேலை 10 நாள் இருக்கும். அப்புறம் 10 நாள் எந்த வேலையும் இருக்காது. இப்படி மாசத்துக்கு 10 அல்லது 15 நாள் தான் வேலை இருக்கும்

நானும் ஒரு ஆளா நின்னு வேலை பார்த்தா தான் என்னால ஆயிரம் ரூபா சம்பாதிக்க முடியும். இல்லாட்டி மெட்டிரியல், லேபருக்கே எல்லாம் போயிடும்.

நான் சம்பாதிக்கிறது பசங்களை படிக்க வைக்கவே சரியா இருக்கு . பையன் காலேஜில் மூணாம் வருஷம் படிக்கிறான். பொண்ணு கவர்ன்மெண்ட் ஸ்கூலில் எட்டாவது படிக்குது

மூணாவது வீட்டில் ஒரு வேலை மெட்டீரியல், லேபர் சேர்த்து எடுத்தேன். 10 நாள் வேலை.மொத்த காண்டிராக்ட் 50 ஆயிரம் ரூபா. எனக்கு ஒரு எட்டாயிரம் தங்குச்சு. மிச்சம் எல்லாம் கூலி, மெட்டேரியலுக்கு சரியா போச்சு

மெட்டேரியல் பற்றி பேச்சு வரும்போது சில பெயிண்டர்கள் மெட்டேரியலில் செமையா காசு பார்க்கிறார்களே என்று கேட்க அது பற்றி விளக்குகிறார் " ஆமா அது மாதிரி ஒரு விஷயம் நடக்க தான் செய்யது; சில பேர் மெட்டீரியல் நாங்க வாங்கி தர்றோம். நீங்க லேபர் காண்டிராக்ட் வேலை மட்டும் செய்யுங்கன்னு சொல்லுவாங்க. அப்ப மெட்டிரியல் வாங்குற கடையில் முதலிலேயே சொல்லி வச்சு 2 % கமிஷன் வாங்கிடுவாங்க சில பெயிண்டருங்க. இதெல்லாம் இந்த தொழிலில் நடக்குறது தான். நான் பெரும்பாலும் தெரிஞ்சவங்களுக்கு தான் செய்றேன். என்னை நம்பி விடுறாங்க மெட்டிரியல் மற்றும் லேபர் சேர்த்து தான் பெரும்பாலும் எடுப்பேன். அதனால் இந்த பிரச்சனை நம்ம கிட்டே கிடையாது

பெயிண்டிங் தொழில் உள்ள சிரமங்கள் பற்றி கேட்க, " தொடர்ந்து வேலை இல்லாம இருக்கிறது தான் பெரிய கஷ்டம். உடல் கஷ்டம்னு பார்த்தா வீட்டுக்கு அடிக்கிற வாட்டர் கலர் பெயின்ட் எல்லாம் பெரிய பிரச்சனை இல்லை. பெரிய பெரிய வேலையில் சில வகை பெயின்ட் தான் ரொம்ப படுத்திடும். கண் எரிய ஆரம்பிச்சிடும். சில நேரம் மயக்கம் கூட வரும்".

"மாசத்தில் பாதி நாளில் வேலை இல்லாட்டி எப்படி பொழுது போகும் ? சும்மா இருப்பது பெரிய சுமை ஆயிற்றே?" என்று கேட்டால், " சும்மா இருந்தா தானே சார்? எனக்கு எப்பவும் எங்க வீட்டு வேலை ஏதாவது இருந்து கிட்டே இருக்கும். ஒண்ணுமே இல்லாட்டி எங்க வீட்டுக்கு நானே பெயின்ட் அடிச்சிகிட்டு இருப்பேன். என் வீட்டு உள்ளே உள்ள அறைகளை பாத்தீங்கன்னா, ஒவ்வொரு வருஷம் ஒரு கலரா இருக்கும். வருஷா வருஷம் மாத்திடுவேன் எல்லாம் நான் சும்மா இருக்க நேரத்தில் அடிச்சவை தான் " என்று சிரிக்கிறார்

"என்னை பொறுத்த வரை எப்பவும் வேலை இருக்கணும்னு நினைக்க மாட்டேன். அதே மாதிரி பெருசா எதுவும் ஆசைப்பட மாட்டேன். இன்னிக்கு ஆயிரம் ரூபா கிடைச்சுதா; அதை வச்சு 5 நாள் ஓட்டு ; அடுத்த வேலை அதுக்குள் வரும்னு போயிக்கிட்டே இருப்பேன்

நாளைக்கு என்ன ஆகும்னு யாருக்கும் தெரியாது சார். இன்னிக்கு பத்தி கவலை பட்டா போதும். நாளை பத்தி பயந்து கிட்டே இருந்தா உடம்பு தான் சார் கெட்டு போகும்" என்று முடித்தார் 30 வயது மதிக்கத்தக்க இந்த 50 வயசு மனிதர்.

**********
அதீதம் ஏப்ரல் இதழில் வெளியானது. 

Tuesday, April 9, 2013

அம்மா உணவக பணியாளர்கள் வாழ்க்கை - அறியாத தகவல்கள்

சென்னை- ஆலந்தூரில் அரசு நடத்தும் அம்மா உணவகத்தில் சாப்பிட்டு விட்டு வெளியே வரும்போது அந்த பெண்மணியை பார்த்தேன். சமையல் கட்டின் அருகில் நின்று கொண்டு அங்கிருப்போருக்கு சில உத்தரவுகள் தந்து கொண்டிருந்தார். 

அம்மா உணவகம் பற்றி எழுத வேண்டுமென புகைப்படம் எடுத்த நேரம் அதே பெண்மணி தான் என்னிடம் வந்து " ஏன் சார் போட்டோ எடுக்குறீங்க? " என கேட்டது நினைவுக்கு வந்தது. " கணினியில் அம்மா உணவகம் பற்றி எழுத போறேன் " என்று சொல்ல " அப்படியா? யார் படம் எடுத்தாலும் எதுக்குன்னு நாங்க தெரிஞ்சு வச்சிக்கணும்; அதான்" என்றார் அவர். உணவுக்கு காசு வாங்கி கொண்டு பில் தந்தவரும் அந்த பெண்மணியே. இப்போது சமையலறை அருகில் நிற்கிறாரே என்று யோசித்த படி நான் நடக்க, அவர் தானாகவே வந்து பேச துவங்கினார்.

Mrs .முரளி என்று தன்னை அறிமுகம்  கொண்ட அவரிடம் பேசியதில் அம்மா உணவகம் பற்றி மட்டுமல்ல, அங்கு வேலை செய்யும் பெண்களின் வாழ்க்கை பற்றியும் நிறையவே அறிய முடிந்தது. 

இனி அவர் பேசியதிலிருந்து :

"நாங்க எல்லாம் மகளிர் சுய உதவி குழுவில் இருந்தோம். இப்போ எங்களை மாதிரி மகளிர் சுய உதவி குழுவை சார்ந்தவங்களுக்கு தான் - இந்த வேலை முழுக்கவே குடுத்திருக்காங்க. இங்கே மட்டும் இருபதுக்கும் மேலே பெண்கள் வேலை செய்றாங்க. இட்லிக்கு மாவு ஆட்டுறது தொடங்கி, காய் நறுக்குவது, சாம்பார் செய்வது, கலந்த சாதம் தயாரிப்பது, காசு வாங்கிகிட்டு பில் தருவது, சாப்பாடு பரிமாறுவது, சாப்பிட்ட தட்டை எடுப்பது, அவற்றை கழுவவது என எல்லாருக்கும் வேலை சரியா இருக்கும்.


மகளிர் சுய உதவி குழுவில் யார் யார் எல்லாம் நல்ல படியா இயங்கி வந்தாங்களோ அவங்களுக்கு தான் இப்போ இந்த வேலை தந்திருக்காங்க. கலக்டர் கிட்டே நாங்க அப்ளை செய்து நேரடியா அவரே அனுமதி தந்தார். எனக்கு தெரிஞ்சு இது முழுக்க மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தான் கிடைச்சிருக்கு. 

இங்கே வேலை செய்யும் பெண்கள் ஒவ்வொருத்தருக்கும் தினசரி 300 ரூபா சம்பளம். காலையில் 5 மணிக்கு வேலைக்கு வரணும். அப்போ தான் ஏழு மணிக்குள் இட்லி, சாம்பார் எல்லாம் தயார் செய்ய முடியும். ஏழு மணி முதல் 10 மணி வரை காலை டிபன் (இட்லி மட்டும்) அப்படின்னு போட்டிருக்கோம். ஆனா ஆறரைக்கே மக்கள் வந்துடுவாங்க. அதே போல மூடுற நேரம் பத்துன்னா கூட, பத்தரை வரை கியூ நின்னு சாப்பாடு வாங்குது. முடிஞ்சவரை எல்லாருக்கும் குடுத்துகிட்டு தான் இருக்கோம்.

இப்போதைக்கு ஏழு நாளும் நாங்க வேலை பாக்க வேண்டியிருக்கு. வாரத்தில் ஒரு நாள் மாத்தி மாத்தி லீவு கொடுங்கன்னு கேட்டுகிட்டு  இருக்கோம். அதே போல ஒவ்வொருத்தரும் காலை 5 மணி முதல் மாலை 4 மணி வரை - 11, 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கு. நான் இன்சார்ஜ் என்பதால், கிளம்ப சாயங்கலாம் அஞ்சு, அஞ்சரை ஆகிடும். வேலை நேரத்தையும்  8 அல்லது 9 மணி நேரமா மாத்தினா நல்லாருக்கும். இவ்ளோ நேரம் வேலை செய்றது கஷ்டமா தான் இருக்கு. ஆனா இப்ப தானே புதுசா ஆரம்பிச்சிருக்காங்க. அவங்களுக்கும் எவ்ளவோ கஷ்டம் இருக்கும். அதனால நாங்க ரொம்ப அழுத்தி கேட்கலை. கொஞ்ச நாள் போகட்டும்னு இருக்கோம்.

காலையில் இட்லிக்கு  - 27 கிலோ இட்லி அரிசி (ரேஷன் அரிசி தான்) ; 5 கிலோ பச்சரிசி, 10 கிலோ உளுந்து போட்டு மாவு அரைப்போம். சில நேரம் அதுவே பத்தாம  போயிடுது. குறிப்பா ஞாயித்து கிழமை கூட்டம் ரொம்ப அதிகமா இருக்கும். கிரிக்கெட் ஆடுற பசங்க, வாக்கிங் போறவங்க அப்படின்னு வழக்கமா வர்ற ஆட்களை தவிர புது ஆளுங்க அன்னிக்கு அதிகமா இருக்கும். அன்னிக்கு மாவு இன்னொரு 50 % அதிகம் அரைக்க வேண்டியிருக்கும். 

வார நாளில் காலையில் 2500 இட்லி போகுது (ஒரு இட்லி ஒரு ரூபாய் என்பதால் - வருமானம் 2500 ரூபாய்) மதியம் சாம்பார் சாதம், தயிர் சாதம் 3500 ரூபா போகுது (சாம்பார் சாதம் 5 ரூபா; தயிர் சாதம் 3 ரூபா) சாம்பார் சாதம் கொஞ்சம் அதிக சேல்ஸ் ஆகும்.

எங்களுக்கு கொடுக்கிற சம்பளம், வாங்குற பொருட்கள் இதெல்ல்லாம் சேர்த்து பார்த்தா அரசாங்கத்துக்கு நிச்சயம் இன்னும் அதிக செலவு தான் ஆகும். அவங்க மேலே காசு போட்டு தான் நடத்துறாங்க

20 பெண்களுக்கும் வேலை சரியா இருக்கு. இடத்தை எப்பவும் ரொம்ப க்ளீனா வச்சிக்கணும்னு சொல்லிருக்காங்க. உடனே உடனே கூட்டி பெருக்கி கழுவி வச்சிருப்போம். சாப்பாடு நேரத்தில் இங்கே வேலை பார்க்குற பெண்களுக்கு உட்கார நேரம் கிடைக்குறது ரொம்ப கஷ்டம் தான். 

இப்போதைக்கு காலை, மதியம் ரெண்டு வேலை தான் சாப்பாடு குடுக்குறோம்  ஏன் நைட்டுக்கும் தர கூடாதுன்னு நிறைய பேர் கேட்கிறாங்க. இதோ இந்த ரிஜிஸ்தரில் எழுதிட்டு போறாங்க.

அங்கிருக்கும் Feedback ரிஜிஸ்தரை காட்டுகிறார். படித்து பார்த்தால் ஒவ்வொரு நாளும் 50 பேராவது அதில் கருத்துகள் எழுதி விட்டு போவதை  காண முடிந்தது. பலரும் இந்த சிஸ்டத்தை வாழ்த்தி எழுத, ஒரு சிலர் "இரவு சாப்பாடு போடலாமே ; இட்லி இன்னும் சற்று பெரிய சைஸ் ஆக இருக்கலாம் " என்றெல்லாம் கருத்து சொல்ல தவற வில்லை. 

குறிப்பாக வெளி மாநிலத்தை சேர்ந்த பலரும் தப்பும் தவறுமான ஆங்கிலத்தில் மிக மகிழ்ச்சியுடன் இந்த உணவகத்தை வாழ்த்தி எழுதியிருப்பதை காண முடிந்தது. இங்கு வேலை செய்யும் பெண்கள் மிக விரைவாகவும், அன்புடனும் சிறிதும் கோபப்படாமல் உள்ளனர் என பலரும் குறிப்பிட்டு எழுதியிருந்தனர். அதை அவரிடம் காட்டியதும் மகிழ்வுடன் ஆமோதித்தார். 

உணவகத்திற்கு வருகிறவர்கள் செருப்பை வெளியே தான் விட்டு செல்ல வேண்டும். ஒரு சிலர் செருப்புடன் உள்ளே வர, திருமதி. முரளி எல்லோருக்கும் கேட்கிற மாதிரி சற்று சத்தமாக இப்படி பேசினார் :

" தயவு செஞ்சு செருப்பை வெளியே விட்டுட்டு வாங்க. இது நீங்க சாப்புடுற இடம். நீங்களே சுத்தமா வச்சிக்க வேணாமா? ப்ளீஸ் கோ ஆபரேட் பண்ணுங்க "

உள்ளே ஒரு சில ஆர்டர்கள் தந்து விட்டு மீண்டும் நம்முடன் வந்து பேச துவங்கினார். 

"சமையலுக்கு தேவையான இட்லி, உளுந்து, பருப்பு எல்லாம் முன்னாடியே வந்துடும். ஸ்டோர் ரூமில் பத்திரமா வச்சிக்கணும். வரும்போதும் எழுதணும். அங்கிருந்து ஏதாவது எடுத்தாலும் ரிஜிஸ்டரில் எழுதிட்டு தான் எடுக்கணும். எப்ப வேண்ணா வந்து செக்கிங்க்  பண்ணுவாங்க

இன்னைக்கு கூட எதிரில் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஒரு மீட்டிங் இருக்கு. அதுக்கு கலக்டர் வர்றார். அவர் நேரடி கண்ட்ரோலில் நடக்குறதால இங்கே வந்து பார்ப்பார்னு நினைக்கிறோம். அவரு வர்றாருன்னு இல்லை எப்பவுமே இடம் சுத்தமா தான் இருக்கும். அதனால் எந்த பிரச்னையும் இல்லை. யார் வேணும்னா எப்ப வேண்ணா வந்து பார்க்கலாம்

இந்த இடம் ஆலந்தூர் முனிசிபல் ஆபிஸ் பக்கத்தில் இருப்பதால் அங்கே வேலை செய்றவங்க ரொம்ப உதவியா இருக்காங்க. ஏதாவது உணவு பொருள் தேவைன்னாலும் சரி, கேஸ் சிலிண்டர் காலி ஆனாலோ அல்லது இன்னொரு இட்லி பானை வேணும்னாலோ  உடனே வாங்கி கொடுத்துடுறாங்க

குடி தண்ணீருக்கு தனி வாட்டர் பியூரிபையர் போட்டிருக்கு. ஆலந்தூரில் வரும் பாலாற்று தண்ணியை சுத்தம் பண்ணி நல்ல தண்ணியா கொடுக்குறோம். அருமையான மினரல் வாட்டர்.

இங்கு எந்த விதமான மக்கள் அதிகம் வருகிறார்கள் என்று கேட்க, " ஏழைகளுக்குன்னு துவங்கியது தான். ஆனா எல்லா விதமான மக்களும் வர்றாங்க. ஆபிஸ் வேலைக்கு போறவங்க, செக்கியூரிட்டிங்க, கூர்க்கா, தினம் ஸ்கூல் போகும் சின்ன பசங்க, கட்டிட வேலை செய்றவங்க இப்படி எல்லாரும் வர்றாங்க".

இப்போதைக்கு எங்களுக்கு கஷ்டம்னு பார்த்தா மாவு அரைப்பது தான் பெரிய விஷயமா இருக்கு. அப்புறம் 10 -12 மணி நேரம் வேலை செய்றது ; ஏழு நாளும் வேலை செய்றது இது மட்டும் சரி பண்ணா எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும் என்றார்.

"ஒரு நல்ல விஷயம் செஞ்சுகிட்டு இருக்கீங்க செய்றது அரசாங்கம் என்றாலும், எல்லாரும் உங்களை தான் மனசார வாழ்த்திட்டு போறாங்க. அது ரிஜிஸ்டரை பார்க்கும் போதே தெரிஞ்சுது. அவ்ளோ புண்ணியமும் உங்க புள்ளைகளுக்கு தான் சேரும்" என்று நான் சொல்ல முகம் மலர்ந்து புன்னகைத்து நமக்கு விடை கொடுத்தார் அந்த பெண்மணி !
*********
அதீதம் ஏப்ரல் 2013 இதழில் வெளியானது
*********
அம்மா உணவகம் அறிமுகம் - இங்கு
*********
அண்மை பதிவு:

தொல்லை காட்சி நீயா நானா -லொள்ளு சபா -தெய்வ மகள்

Tuesday, February 5, 2013

ஜோசியக்காரர்கள் வாழ்க்கை அறியாத தகவல்கள்

ல நேரங்களில் சாதாரண மனிதர்கள் பேட்டி திட்டமிடாமல் இயல்பாய் நடந்து விடுகிறது. தஞ்சை சென்றபோது அப்பா ஒரு வேலை தந்து அனுப்பியிருந்தார். அதற்காக பைக்கில் சென்றவன் தஞ்சை பெரிய கோவில் வெளியே வரிசையாக கிளி ஜோசியக்காரர்கள் அமர்ந்திருப்பதை பார்த்தேன். எங்கள் வீட்டு கிளிகள் நினைவுக்கு வர, அந்த நினைவோடே கடந்து செல்லும்போது ஒரு கிளியை பார்த்ததும் நின்று விட்டேன்.

வழக்கத்தை விட சற்றே பெரிய ஆண் கிளி அது. ஜோசியக்காரர்களின் கூண்டுக்கு உள்தான் பெரும்பாலும் கிளிகள் இருக்கும். ஆனால் இந்த கிளி ஜம்மென்று கூண்டின் வெளியே மிக அழகாய் அமர்ந்திருந்தது. வண்டியை நிறுத்தி விட்டு கிளி ஜோசியக்காரர்களிடம் பேச ஆரம்பித்தேன். எங்கள் பேச்சு பெரும்பகுதி நாங்கள் கிளி வளர்ப்பதை பற்றியும் அதற்கு என்ன உணவு தரணும், எப்படி பாதுகாக்கணும் என்றே சுழன்றது. அவை அனைத்தையும் தவிர்த்து விட்டு அவர்கள் தங்கள் வாழ்க்கை குறித்து பேசிய விஷயங்கள் மட்டும் பகிர்கிறேன்.


"எப்படி இந்த கிளி மேலே பறக்காமல் உட்கார்ந்திருக்கு?"

" இந்த கிளி எங்களோட 22 வருஷமா இருக்குதுங்க. எங்கப்பா இதே கிளி வச்சு ஜோசியம் பார்த்தார். இப்போ நான் வச்சிருக்கேன். இது பறந்து போகாது. நீங்க பிடிக்கிறீங்களா?" என்று என் கையில் தர அது அழகாய் நம் கையில் ஏறி கையில் உள்ள மோதிரத்தை கடித்து பார்த்தது.

" இந்த கிளி மேலே பல பேர் ஆசைப்படுவாங்க சார். கேரளாவில் இருந்து வந்தவங்க 10,000 ரூபாய் தர்றேன்னு சொல்லி இதை கேட்டாங்க. நம்ம குடும்ப மனுஷன் மாதிரி சார் இது. இதை விக்க முடியுமா சொல்லுங்க"

நான் பேசுவதை பார்த்து அவருக்கு இரண்டு பக்கமும் இருக்கும் இன்னும் சில ஜோசியக்காரர்கள் வந்து பேசினர். அனைவரும் சொந்தக்காரர்கள் ! பெரிய கோவில் வெளியே உள்ள பிளாட் பாரத்தில் அடுத்தடுத்து அமர்ந்து ஜோசியம் பார்க்கிறார்கள் இவர்கள்.

ஒருவருக்கு ஜோசியம் பார்க்க ஆள் சென்றால் அடுத்தவர் வருந்துவதோ, அவரை அழைப்பதோ இல்லை. " அவர் எனக்கு மாமா. இது சித்தப்பா பையன் " என்று ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்து வைக்கிறார்.

அவர்களில் மிக மூத்தவரான வேலு என்பவர் பேச ஆரம்பித்தார். " நாங்க வள்ளுவர் ஜாதி. எங்க ஜாதி மக்கள் தான் இந்த தொழில் செய்வாங்க. நான் நாப்பது வருஷமா இதே தொழில் பண்றேன். நாங்க கிளி ஜோசியம் மட்டுமில்லாம, கை ரேகை, கோடங்கி, ஜாதகம் எல்லாம் பார்ப்போம்"

" அதென்ன கோடங்கி ? "

" குறி சொல்றது சார். இரவு நேரத்திலே வந்து குறி சொல்லுவோம். மறுபடி காலையில் வந்து குறி சொல்லுவோம். காலையில் வரும்போது தான் காசு கேட்போம். சில பேர் தருவாங்க. சிலர் போயிட்டு வாங்கன்னு சொல்லிடுவாங்க"

" நீங்க சொல்றது பலிக்குமா? மக்கள் நம்புறாங்களா?"

" நாங்க சொல்றதுக்கு முக்கியம் சைக்கலாஜி ( !!! ) தான் சார். முகத்தை பார்த்தே ஓரளவு புரிஞ்சிக்குவோம். கை ரேகை பாக்க தெரியும். நம்புறாங்களான்னு கேக்குறீங்க. எங்க கிட்டே வந்தவங்க மறுபடி திரும்ப வர்றாங்களே. நம்புறதாலே தான் வர்றாங்க. சில பேர் " நீ சொன்ன படி நடந்துச்சு" என சொல்லி வேட்டி, துணி மணி வாங்கி தந்துட்டு போறாங்க. ஒரு கஷ்டத்தில் இருக்கும் போது நம்மை தேடி வர்றாங்க. சரியாகிடும் கவலைப்படாதே; இந்த கோவிலுக்கு போய் சாமி கும்பிடுன்னு சொல்றோம். பிரச்சனை சரியான உடனே நம்மை நன்றியோட நினைச்சிக்குறாங்க"

இதற்குள் ஒருவர் ஜோசியம் பார்க்க வருகிறார். தரையில்  அமர்ந்து ஜோசியம் கேட்க, கிளி வெளியே வந்தது. ஒவ்வொரு சீட்டாய் எடுத்து எடுத்து போட்டது. கடைசி சீட்டு வரை எடுத்து போட்டு விட்டு ஒன்றுமே தராமல் உள்ளே போய் விட்டது !! அவர் தந்த பத்து ரூபாயை திரும்ப தந்து " பக்கத்துக்கு ஆளிடம் பார்த்துக்குங்க " என்று அனுப்புகிறார்.

வெவ்வேறு கிளிகள் இவருக்கு சீட்டு எடுத்து தரலை !

நமது ஜோசியர் வேலுவிடம் வந்து அமர்கிறார் அவர்.  பெயரை கேட்டு விட்டு " ரவி என்கிற பேருக்கு சீட்டு எடுத்து குடு. அவர் கிரகம் எப்படி? ஜாதகம் எப்படி? அவர் நினைச்சது நடக்குமா? கஷ்டமெல்லாம் நீங்குமா பாத்து சொல்லு" என்று சொல்லி கொண்டே இருக்க, ஒவ்வொரு சீட்டாய் எடுத்து போட்டது. இந்த கிளியும் ஒரு சீட்டும் எடுத்து தராமல் உள்ளே போய் விட்டது !!

அந்த மனிதரின் முகம் இருண்டு விட்டது. வேலு அவரிடம் " உனக்கு கொஞ்சம் நேரம் சரியில்லை. ஒன்னும் பயப்படாதே. பிள்ளையார் கோவிலில் போய் தினம் கும்பிடு ; சரியாகும்" என சொல்லி விட்டு அவர் பணத்தை திரும்ப தந்து அனுப்புகிறார்.

" அவருக்கு எதோ பிரச்சனை போல; கிளிகளுக்கு சத்திய வாக்கு வாங்கிருக்கோம்; அது தப்பா சொல்லாது. பாருங்க ரெண்டு கிளியும் சீட்டு எடுத்து தரலை " என்கிறார்

"புது கிளிங்களுக்கு எப்படி இதெல்லாம் பழக்குவீங்க?"

" புதுசா ஒரு கிளி வாங்குனா அடுத்த ஒரு மாசமோ, ரெண்டு மாசமோ தொழிலே பாக்க முடியாது. முழுக்க முழுக்க கிளி கூட தான் இருக்கணும். ஒரு பிறந்த குழந்தை எப்படி ஒண்ணு ரெண்டு மாசம் கழிச்சு அம்மா முகத்தை தெரிஞ்சுக்குது. அப்படி தான் இதுவும். முதல் ரெண்டு மாசம் அம்மா கூடவே இருக்க மாதிரி நாமும் கூடவே இருக்கணும். நம்ம கிட்டே நம்பிக்கை வந்ததும் அப்புறம் மெதுவா ஜோசியத்துக்கு பழக்குவோம். எல்லாம் கத்து குடுத்துட்டு சத்திய வாக்கு வாங்கிப்போம். அப்புறம் தான் தொழிலுக்கு கூட்டி வருவோம் "

உங்க பசங்க எல்லாம் இந்த தொழில் தான் பண்றாங்களா?

இல்லை. இப்போ பண்ற ஆட்களோட இந்த தொழில் முடிஞ்சு போயிடும். இனிமே இந்த தொழில் இருக்காது. யாரும் புதுசா கத்துக்க மாட்டாங்க. எங்க பசங்க எல்லாம் வேற வேற தொழிலுக்கு போயிட்டாங்க.

அதோ இருக்கார் பாருங்க (பெரிய கிளி வைத்திருந்தவரை காட்டி) அவரோட பொண்ணு ப்ளஸ் டூவில் ஆயிரத்து அம்பதுக்கு மேலே எடுத்தது. நாங்க எஸ். சி கம்மியூநிட்டி. இந்த மார்க்குக்கு நல்ல படிப்பு படிக்க வைக்கலாம். என்ன படிப்பு படிக்க வைக்கிறதுன்னு தெரியலை. நர்சிங் போய் கேட்டா இந்த வருஷம் முடிஞ்சிடுச்சு. இந்த மார்க்குக்கு நிச்சயம் கிடைச்சிருக்கும். ஏன் முதலில் வரலைன்னாங்க. அடுத்த வருஷம் நர்சிங் சேர்க்கணும்னு வச்சிருக்கோம். இப்போ எதோ கம்பியூட்டர் கோர்ஸ் போறேன்னு போகுது"

இவ்வளவு மதிப்பெண்ணுக்கு எளிதாக பீ. ஈ அண்ணா யூநிவர்சிட்டியில் கிடைக்குமே என்றால், அந்த பெண் படித்த குரூப் எது என்று அவர்களுக்கு சொல்ல தெரிய வில்லை. " நர்சிங் தான் படிப்பேன்னு சொல்லுது சார். நல்லா படிக்கிற பொண்ணு. வெளியூர் போகணும்னா நாங்க காலையில மூணு மணிக்கு எழுந்து கிளம்புவோம். அப்ப எங்களோட சேர்ந்து எழுந்துட்டு படிக்கும். படிக்கறதில் ரொம்ப ஆசை சார் அதுக்கு "

மீண்டும் கிளிகள் பற்றி பேச்சு திரும்புகிறது

" கிளிகள் பேசும்னு சொல்றாங்களே இதுங்க பேசுமா?"

"ஓ பேசுமே. இப்போ பாருங்க" என்று கூறி விட்டு, "மோகன்குமார் என்கிற பேருக்கு சீட்டு எடுத்து குடு" என்று சொல்ல, வெளியே வந்து கொஞ்சம் சீட்டை எடுத்து போட்டு விட்டு ஒரு சீட்டு எடுத்து தருகிறது.

மோகன்குமாருக்கு எடுத்து தந்த சீட்டு  !

கிளி எடுத்து தந்த சீட்டை விட்டு விட்டு, வேறொரு சீட்டை காட்டி " இதை அவருக்கு படிக்கலாமா?"

" ஊஹும் " என தலையை இடதும் வலதுமாய் ஆட்டுகிறது.

இன்னொரு சீட்டை எடுத்து " இதை படிக்கலாமா?" என காட்ட, மீண்டும் இடதும் வலதுமாய் இல்லையென தலையாட்டல்...

அது எடுத்த சீட்டை காட்டி " இது எனக்கு பொருந்துமா?" " ஊஹும்"

அது எடுத்து தந்த சீட்டை காட்டி " இதை மோகன் குமாருக்கு படிக்கலாமா?"

" ஆம் " என்று தலையாட்டுது. சரி உள்ளே போ என்றதும் சமர்த்தாய் போய் விட்டது !

நமக்கு வந்த சீட்டை பார்த்தால் வெங்கடாசலபதி மற்றும் பிள்ளையார் இருந்தது.

" நீங்க ரொம்ப ஸ்ட்ராங் சார். உங்களை அசைக்கவே முடியாது. உங்க மனைவி ஒரு மகராசி சார். " என்று சொல்லிவிட்டு மனைவி மற்றும் குழந்தை பற்றி இன்னும் கொஞ்சம் பேசுகிறார். சிரித்தவாறே நான் கேட்டு கொண்டிருக்க, நம்ப வில்லையோ என அந்த சீட்டை உள்ளே வைத்து விட்டு, நீங்கள் ஒரு சீட்டு எடுங்க என்றார். எடுத்தால் மீண்டும் வெங்கடாசலபதி படமே வந்தது !

" பாத்தீங்களா? " என பெருமிதமாய் பார்த்தார்.

அங்கிருந்த நான்கைந்து கிளி ஜோசிய காரர்களுக்கும் டீ வாங்கி வர சொன்னேன். அவர்கள் அருகில் சும்மா இருந்த ஒருவர் சென்று வாங்கி வந்தார். " அவர் என்ன செய்றார். இங்கே சும்மாவே இருக்காரே?" என்று கேட்டால் " அவர் பேய் ஒட்டுறவரு; கோவில்லையும் வீட்டுக்கே போயும் பேய் ஓட்டிட்டு வருவாரு" என்று கூறி அதிர வைத்தனர்.

எங்கள் வீட்டு கிளிகள் சாப்பாடு, அவை சேருவது (Mating) பற்றியும் சில சந்தேகங்கள் கேட்ட பிறகு அவர்களிடமிருந்து விடை பெற்றேன்.

இனி தஞ்சை பெரிய கோவில் பக்கம் செல்லும்போதெல்லாம் அவர்களிடமும், அந்த கிளிகளிடமும் பேசிவிட்டே செல்வேன் என தோன்றுகிறது.
****
அதீதம் இதழில் வெளியானது 
****
அண்மை பதிவு :


Tuesday, January 22, 2013

தஞ்சை விவசாயி வாழ்க்கை -பேட்டி -படங்கள்

மீபமாய் தஞ்சைக்கு மிக அடிக்கடி செல்ல நேர்கிறது. உடல் நலமில்லாத அம்மா, உறவினர் விழாக்கள் என தஞ்சை மட்டுமின்றி மன்னார்குடி, வடுவூர், கோட்டூர் என பல ஊர்களுக்கு கடந்த ஒரு மாதத்தில் பயணம் செய்துள்ளேன் . டிசம்பர், ஜனவரி மாதங்களில் வயல்கள் சற்று பசுமையாய், செழிப்பாய் இருப்பதாய்த் தான் தோன்றியது. ஆனால் கோட்டூர் அருகே உள்ள ஊரில் விவசாயி ஒருவரிடம் பேசியபோது விவசாயம் பற்றி மிக வருத்தத்துடன் பேசினார். அவர்கள் பேசியதில் இருந்து சில பகுதிகள் :



என்னோட பேர் ராமமூர்த்தி. நாப்பது வருஷமா விவசாயம் பண்றேன் 

தஞ்சை, நாகை அதை சுற்றியுள்ள இடங்கள் விவசாயத்துக்குன்னு புகழ் பெற்ற இடங்களா ஒரு காலத்தில் இருந்தது இங்கு மூன்று போகம் அறுவடை செய்த காலம் ஒன்று உண்டு. அப்புறம் அது இரண்டு போகம் ஆச்சு. இப்போ சம்பான்னு ஒரு போகம் தான் அறுவடை நடக்குது. ("போகம் என்றால் என்ன" என்று தெரியாதவர்களுக்கு மட்டும் : ஒரு முறை நடவு நட்டு, நான்கு மாதம் கழித்து அறுவடை செய்வது தான் ஒரு போகம் . இப்படி வருடத்துக்கு மூன்று முறை அமோகமாய் அறுவடை செய்த நிலை மாறி, வருடத்துக்கு ஒரே முறை தான் அறுவடை செய்கிறார்களாம் பல விவசாயிகள் !)

சில பேர் இப்போ ரெண்டாம் போகமா உளுந்து போடுறாங்க.. உளுந்து போடணும்னா, மார்கழி ஆரம்பத்தில் (டிசம்பர் இறுதிக்குள் ) நெல் அறுவடை முடிச்சிட்டு, மார்கழி கடைசிக்குள் போட்டா தான் உண்டு. இல்லாட்டி சரியா வராது. தை மாசம் நெல் அறுவடை செய்பவர்கள் உளுந்து போட முடியாது.

" இப்போதெல்லாம் ஆள் வச்சு வேலை வாங்க முடியலை. ஒரு ஆள் சம்பளம் குறைஞ்சது 300 ரூபா ஆகுது. நாள் முழுசும் வேலையும் இருக்காது. ஆனா இந்த அளவாவது பணம் குடுத்தா தான் அவங்களால் வரமுடியும். ஏன்னா ஒரு நாளைக்கு இங்கு வந்துட்டா அப்புறம் மதியத்துக்கு மேலே வேற எங்கும் அவங்க வேலைக்கு போக முடியாது இல்லையா? "

இப்போ எல்லாம் எல்லா வேலைக்கும் மெஷின் வந்துடுச்சு. விதையை தெளிக்க மட்டும் ஒரு ஆள் இருந்தா போதும். அதை முழுக்க நிரவி விட மெஷின் இருக்கு. அப்புறம் களை இருந்தா எடுக்க ஆள் வேணும். அவ்ளோ தான். உரம் தூவுறது எப்பவுமே ஒரு ஆள் செய்ற வேலை தான். அறுவடைக்கே மெஷின் வந்துடுச்சு. கதிரை அறுத்து நெல்லை தனியா மெஷின் பிரிச்சு கொடுத்துடும்.

ஆளுங்களை வச்சு வேலை வாங்குறதை விட மெஷினில் வேலையை முடிக்கிறது ஈசியாவும், செலவு கம்மியாவும் ஆகுது . இதனால் மனுஷனை வச்சு வேலை வாங்கறது ரொம்ப குறைஞ்சிடுச்சு. விவசாய வேலையை மட்டுமே நம்பி அவங்களால் வருஷம் முழுக்க இருக்க முடியாது. இப்ப விவசாயமே நாலஞ்சு மாதம் மட்டும் தானே நடக்குது ! அதனால் பல பேரு மெட்ராசு, திருப்பூர் இப்படி ஊர்களுக்கு வேலைக்கு போயிடுறாங்க. சொந்த நிலமும் இல்லாம, இங்கேயே விவசாய வேலை மட்டும் பார்த்துக்கிட்டு இருக்கிற ஆட்கள் மிக குறைவு தான்
அந்த ஊரில் உள்ள சிறு பாலம் மற்றும் ஆறு
"எல்லா நேரமும் நெல் மட்டும் தான் பயிர் செய்யணுமா? கரும்பு போடக்கூடாதா? " என்று கேட்க, " இங்கு களிமண் பூமியாக இருப்பதால் கரும்பு அவ்வளவு நல்லா வராது. வந்தால் கூட, அதை விற்பதற்குள் போதும் போதும்னு ஆகிடும். ஏதாவது சர்க்கரை ஆலையிடம் தான் கரும்பை வாங்கி கொள்ள சொல்லி கேட்கணும். அவர்கள் கட்டிங் ஆர்டர் தரணும் (கரும்பை எப்போது வெட்டலாம் என்கிற ஆர்டர் சர்க்கரை ஆலை காரர்கள் தான் சொல்வார்களாம் ! இது தான் கட்டிங் ஆர்டர் ) 

கமிஷன் வாங்கணும்குற எண்ணத்தில் வேணும்னு கட்டிங் ஆர்டர் தாமதம் பண்ணுவாங்க. இதெல்லாம் ஒரு முறை பார்த்தா வெறுத்து போயி அப்புறம் கரும்பு சாகுபடி பண்ணவே தோணாது “

"நெல் சாகுபடி பண்ற வங்களை பொறுத்தவரை, கொஞ்சம் நிலம் இருக்கவங்க பாடு தான் ரொம்ப கஷ்டம். அஞ்சு, பத்து ஏக்கர் வெவ்வேறு இடத்தில் இருந்தா ஒரு இடத்தில் சரியா விளையாட்டியும், தண்ணி இல்லாட்டியும் இன்னொரு இடத்தில் நல்லா விளைஞ்சிடும் அதனால் நஷ்டம் வராம தப்பிச்சுடுவாங்க"

"அறுவடை முடிஞ்சவுடன் அவங்கவங்க வீட்டுக்கு தேவையான அளவு நெல்லை எடுத்துக்கிட்டு, மீதியை அரசாங்கமே அதுக்குன்னு வச்சிருக்கும் கடை மூலமா விப்போம். நெல் மூட்டை வரிசையா அங்கு அடுக்கி கிடக்கும். நெல்லில் ஈரம் எப்படி இருக்குன்னு பாத்துட்டு அதுக்கு தகுந்த படி விலை நிர்ணயம் செய்யும். வேண்டாத ஆளு அல்லது அப்பாவி மனுஷன்னா அதிக ஈரம்னு சொல்லி கம்மி விலைக்கு எடுத்துக்குவாங்க"
நடுவில் சாலை.. இருபுறமும் கண்ணுக்கெட்டிய தூரம் வயல்வெளிகள் 
"சாதாரண விவசாயிக்கு மிக முக்கிய பிரச்சனை ஆற்றில் தண்ணி இல்லாதது தான். நிறைய விவசாயிகள் ஆத்து நீரை தான் நம்பியிருக்கோம். நிறைய நிலம் வச்சிருக்க ஆளுங்க தான் போர்வெல் போட முடியும். அதுக்கு அம்பதாயிரம் பணம் செலவாகிடும். சாதாரண ஆட்களால் இவ்ளோ செலவு பண்ணி போர்வெல் போட முடியாது. "

"மேட்டூர் அணை எப்ப திறப்பாங்கன்னு பொறுத்து தான் நாங்க வயலுக்கு தண்ணி பாய்ச்ச முடியும். இப்ப கூட நாலு நாளில் மேட்டர் அணை திறப்பாங்கன்னு ரேடியோ நியூசில் சொன்னாங்க. கதிர் நல்லா வர்ற வரை ஒவ்வொரு ஸ்டேஜிலும் பயிருக்கு நல்லா தண்ணி தேவை".

"மழையும் இப்போல்லாம் ரொம்ப குறைஞ்சுடுச்சு அதுவும் இந்த வருஷம் மிக மோசம். மழை அதிகம் இருந்தா கூட பயிர் தப்பிச்சுக்கும். சாயாது. ரொம்ப பெரிய புயலா இருந்தா தான் பயிர் சாயும். ஆனா தண்ணி இல்லாம படுற கஷ்டம் தான் பெரும் கஷ்டமா இருக்கு. யாரை குத்தம் சொல்றது ? அரசாங்கத்து கிட்டே தண்ணி இல்லை. இருந்தா திறந்து விடுவாங்க. காவிரியில் நமக்கு வேண்டிய தண்ணியை கர்நாடகா காரங்க திறந்து விட மாட்டேங்கு ங்குறாங்க. அதை விட்டா கூட இவ்ளோ பிரச்சனை இருக்காது"

வெறும் விவசாயத்தை நம்பி இருக்க முடியாதுன்னு ஆகிடுச்சு. இதோ இவர் இப்போ ஒரு பெட்டி கடை வச்சிருக்கார் நான் கோவில் வேலை செய்றேன்

விவசாயத்தில் லாபம் இல்லைன்னு தெரிஞ்சு தான் எல்லாரும் நிலத்தை பிளாட் போட்டு விக்க ஆரம்பிச்சிட்டாங்க. இப்படியே போனா பெரிய ஆளுங்க மட்டும் தான் நம்ம தமிழ் நாட்டில் விவசாயம் செய்வாங்க. ஏற்கனவே அரிசி ஆந்திரா மாதிரி பல மாநிலத்தில் இருந்து வருது இது இன்னும் அதிகம் ஆகிடும்

"அடுத்தடுத்த தலைமுறையில் யாரும் விவசாயம் செய்யப்போறதில்லை மத்த தொழில் மாதிரி இல்லையே இது. வேற சின்ன தொழில் அழிஞ்சா, அது அழிஞ்சதுன்னு வருத்தம் மட்டும் தான் இருக்கும் ஆனா விவசாயம் அழிஞ்சா அது எல்லாரையும் தானே பாதிக்கும் ? "

என்று கேள்வியுடனே தன் பேச்சை முடித்தார்.

அவரிடம் பேசி முடித்து விட்டு திரும்ப வரும்போது நெல்லை ஜெயந்தாவின் இந்த கவிதை திரும்ப திரும்ப மனதில் ஓடி கொண்டிருந்தது.

தஞ்சையில் நஞ்சை உண்டு
சாகுபடி ஆனது

தஞ்சையில் நஞ்சை உண்டு
சாகும்படி ஆனது !


******
அதீதம் ஜனவரி 15, 2013 பொங்கல் சிறப்பிதழில் வெளியான கட்டுரை 

Thursday, January 10, 2013

மளிகை கடைக்காரர் வாழ்க்கை -பேட்டி

ங்கள் வீட்டின் அருகே மளிகை கடை வைத்துள்ள அவரை தினமும் சந்திக்கிறேன். தன் மனைவியோடு சேர்ந்தே கடையை பார்த்து கொள்வார். எங்கள் வீட்டுக்கு மினரல் வாட்டர் கொண்டு வருவதில் தொடங்கி, மளிகை, காய்கறி என பலவும் நாங்கள் வாங்கும் கடை. இவரது குட்டி பையன் ரோஹித் எனக்கு ரொம்ப செல்லம். நான் வாங்க -போங்க " என்று கூப்பிட, அவன் " டேய் போடா " ரேஞ்சுக்கு என்னை உரிமையாய் அழைப்பான்.

எப்போதும் அதிகம் பேசாத அவரை இம்முறை இணையத்தில் வெளியாகும் பேட்டி என்று சொல்லி பேசவைத்தேன். அவர் பேசியதிலிருந்து :

சாத்தூர் அருகே இருக்க சுப்ரமணியபுரம் தான் எங்க ஊரு (அட சசிகுமார் நடிச்ச ஹிட் படத்து பேரு!) எங்க தாத்தா விவசாயம் செஞ்சார். அப்பா மிலிட்டரியில் கொஞ்ச வருஷம் வேலை பார்த்துட்டு,  எனக்கு அஞ்சு வயசு இருக்கும்போதே மிலிடரியில் இருந்து திரும்ப வந்துட்டார்.

மிலிட்டரி அனுபவம் இருந்ததாலே BSNL மாதிரி பல கம்பனியில் அப்பாவுக்கு வேலை தர்றேன்னாங்க. அவர் போகலை. விவசாயம் தான் பார்ப்பேன்னு இருந்துட்டார்

எங்க வீட்டிலே நான் தான் மூத்த பையன். பத்தாவது வரைக்கும் படிச்சேன். எனக்கு ரெண்டு தம்பிங்க. ரெண்டு பேரும் பார்மசி கோர்ஸ் படிச்சுட்டு அதே லைனில் வேலை பாக்கிறாங்க

         

1991-ல் பத்தாவது முடிச்சுட்டு கொஞ்ச நாள் வேற வேற மளிகை கடையில் வேலை பார்த்தேன். ஒவ்வொரு கடையை விட்டு நிக்க ஒவ்வொரு காரணம். ஒருத்தனுக்கு ஜாதகம் சரியில்லைன்னா ஒரே இடத்தில வேலையில் நிக்க முடியாது. அது அடுத்தடுத்த வேலைக்கு அவனை தள்ளிடும். அது அவன் கையில் இல்லை

மூணு நாலு வருஷம் அப்பாவுக்கு உதவியா விவசாயம் பண்ணேன். நடவு நடுவது, அறுவடை பண்றது எல்லாத்துக்கும் ஆள் இருக்கும் மேற்பார்வை பாக்கிறது தான் நம்ம வேலை.

எங்க ஊர் சிவகாசி பக்கம் இல்லியா? கிராமத்தில் கூட நிறைய பேர் தீப்பெட்டி தயார் செய்வாங்க. நானும் அப்படி ஒரு தீப்பெட்டி கம்பனியில் வேலை பார்த்தேன். இன்னொரு பக்கம் அப்பாவுக்கு விவசாயத்திலும் உதவினேன்

2000-த்துக்கு மேலே ஊரில மழையே இல்லை ஒவ்வொரு வருஷமும் விவசாயத்தில நஷ்டம் தான். இனிமே விவசாயத்தை நம்பி பலன் இல்லைன்னு புரிஞ்சிடுச்சு.

டூரிஸ்ட் விசாவில துபாய் போனேன் அங்கே ஏதாவது வேலை கிடைக்குமா அப்படியே பெர்மனன்ட் ஆகிடலாம்னு பார்த்தேன். ஆனா நமக்கு எலெக்டிரிகல் வேலை மாதிரி டெக்னிக்கல் விஷயம் தெரியாதே. எதோ வெல்டிங் வேலைன்னா செய்யலாம்.

அப்ப கார்கில் போர் நடந்ததாலே இந்தியா, பாகிஸ்தான் ரெண்டு நாட்டு ஆளுக்கும் பெர்மனன்ட் விசா குடுக்க கூடாதுன்னுட்டங்க அதுனால ஊருக்கு திரும்ப வந்துட்டேன்.

எங்கம்மாவும் சின்ன வயசுலேந்தே வேலை பார்த்தாங்க. அவங்க ஒரு கவர்ன்மென்ட் ஹாஸ்டலில வார்டனா இருந்தாங்க. சொல்லப் போனா அவங்க சம்பாத்தியம் வச்சு தான் குடும்பே ஓடிச்சு. அப்போவோட விவசாயத்தை வச்சு குடும்பம் நடத்துறது கஷ்டம்.

அம்மா தான் மெட்ராசில் போயி கடை போடுன்னு சொன்னாங்க. நெசப்பாக்கத்தில் ஒரு சொந்தக்காரர் டீ கடை வச்சிருந்தார் . அவர் கூட வந்து தங்கிட்டு எங்கே கடை போடலாம்னு தேடினேன். அவரு வேளச்சேரியில் தங்கியிருந்தார். அதுக்கு பக்கத்தில் இருந்ததால் மடிப்பாக்கத்தில் சுத்தி சுத்தி வந்து, இந்த இடத்தை பிடிச்சேன். ஒரு லட்ச ரூபா முதல் போட்டு கடையை ஆரம்பிச்சோம். முழுக்க முழுக்க அம்மா கொடுத்த பணம் தான்.

துவக்கத்திலே வேலைக்கு உதவிக்கு ஊரிலிருந்து கூட்டி வந்த ஒரு சின்ன பையன் இருந்தான். அவனும் கொஞ்ச நாளில் போய்ட்டான். இப்போல்லாம் வேலைக்கு ஊரிலிருந்து ஆள் கிடைப்பதே இல்லை. முன்னாடி ஏழாவது, எட்டாவது வரைக்கும் மட்டும் படிச்சவங்க நிறைய பேர் ஊர் பக்கம் இருப்பாங்க. இப்ப எல்லாரும் டிகிரியாவது படிச்சிடுறாங்க அப்புறம் எப்படி மளிகை கடையில் வேலை பார்ப்பாங்க ?

உதவிக்கு வேற ஆள் இல்லாதது தான் எனக்கு பெரிய கஷ்டம். காலையில் எல்லா வீட்டுக்கும் பால் பாக்கெட் போடணும்; வாட்டர் கேன் சப்ளை பண்ணனும். ஆள் இருந்தா அவங்க கிட்டே அனுப்பிட்டு நாம கடையை பார்த்துக்கலாம்.

காலையில் பால் பாக்கெட் போட்டுட்டு தான் கடை திறப்பேன். தண்ணி கேன் பல பேரு கேட்டு போன் செய்வாங்க. மனைவி வீட்டு வேலை முடிச்சுட்டு கடைக்கு வரும்போது தான் நான் வீடுகளுக்கு போயி தண்ணி கேன் ஊற்ற முடியும். அவங்க இருக்கும்போதே எல்லா வெளி வேலையும் முடிச்சுக்கணும். காய்கறி போயி வாங்கிட்டு வரணும். பெரும்பாலான பொருள்கள் கடைக்கே கொண்டு வந்து சப்ளை பண்ணிடுறாங்க. ஆனா சில பொருள்கள் நாங்க போயி தான் வாங்கணும்.

காலை ஐந்து மணிக்கு எழுந்து வேலையை ஆரம்பிச்சா நைட்டு பத்து மணிக்கு கடை மூடுற வரை விடாம வேலை இருக்கும். மதியம் ரெண்டு மணி நேரம் கடை மூடுவேன் அப்பவும் வீட்டில் படுக்க முடியாது. பையனை ஸ்கூலில் போய் கூட்டி வர்ற வேலை இருக்கும். அவன் வந்தா அப்புறம் எங்கே தூங்குறது ?

எங்க தொழிலில் அனேகமா நஷ்டம் வராது. நஷ்டம் வர ஒரே காரணம் தான். பொருள் கடனுக்கு குடுத்து அவங்க பணம் திரும்ப தராமல் போனா மட்டும் தான் நஷ்டம் வரும் . அப்படி யாரும் பணம் தராம போனா எங்களை அது ரொம்ப பாதிக்கும் வீடுகளை பொறுத்த வரை பிரச்சனை இல்லை. எப்படியும் குடுத்துடுவாங்க. ஆங்காங்கே வீடு கட்ட வர்ற ஆட்கள் " இங்கே தான் கட்டிட வேலை செய்றோம்"னு கடன் வாங்குவாங்க; திடீர்னு காணாம போயிடுவாங்க. அங்கே வேலை செய்ற சாதாரண ஆளுங்களை விடுங்க; ஒரு மேஸ்திரி என்னை பாடா படுத்திட்டார் ஐயாயிரத்துக்கு மேலே பொருள் வாங்கி பணமே தரலை. நாலு வருஷம் ஆச்சு கேட்டு கேட்டு பார்த்தேன். " அதெல்லாம் நான் குடுத்துட்டேனே"ன்னுட்டார். வெறுத்து போயி விட்டுட்டேன்

வாங்குற பொருள் 52 ரூபா வந்தா எல்லாரும் நூறு ரூபா குடுத்துட்டு, ரெண்டு ரூபா அப்புறம் தரேன்; மீதம் அம்பது ரூபா தாங்கன்னு வாங்கிட்டு போவாங்க. இப்படி 1 ரூபா, 2 ரூபா தராம விட்டாலே எங்களுக்கு தினம் நூறு ரூபாயாவது போயிடும்.

சில்லறை பிரச்சனை எங்களுக்கு பெரும் பிரச்சனையா இருக்கு. பொதுவா சில்லறை காசு  கிடைப்பதே பெரிய கஷ்டமா இருக்கு

பெரிய பெரிய சூப்பர் மார்கெட்டுகள் வருவது பற்றியும், இந்த துறையில் வெளிநாடுகள் முதலீடு செய்ய அனுமதி தருவது பற்றியும் தயக்கத்தோடு கேட்க, அவர் பொரிந்து தள்ளி விட்டார். " மடிப்பாக்கத்தில் ஒரு ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட் இருக்கு.ஒரு நாளைக்கு பல லட்சம் வியாபாரம் அவங்களுக்கு நடக்குது அதெல்லாம் என்னை மாதிரி வியாபாரிகளுக்கு கிடைக்க வேண்டிய வியாபாரம் தானே? அந்த கடை இல்லாட்டி எங்களை மாதிரி கடையில் தானே நீங்க வாங்குவீங்க ?

ரிலையன்சுக்கு என்ன அவங்க .. எத்தனையோ தொழில் பண்றாங்க. நாங்கல்லாம் முன்னேறாம சம்பாதிக்கிறதை வச்சு சாப்பிட்டு கிட்டு அப்படியே இருக்க காரணம் இது மாதிரி சூப்பர் மார்கெட் தான். இந்த துறையில் அந்நிய முதலீடு வந்தா நாங்க கடையை அப்படியே மூடிட்டு போக மாட்டோம் ஆனா இப்ப இருக்க மாதிரியே சின்ன ஆளுங்களாவே இருப்போம் ; இப்போ ஆயிரம் ரூபா தினம் கிடைக்குது அப்போ அது 500- ன்னு குறையலாம்.

நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே அவர் மனைவி அவரை ரிலீவ் செய்ய வருகிறார். எங்கள் பேச்சு தொடர்ந்தது

ஒரு எல் .ஐ. சி ஏஜன்ட் பாலிசி போடுங்கன்னு சொன்னார். அதை நம்பி ரெண்டு பாலிசி போட்டுட்டேன் மாசம் மூவாயிரம் ரூபா அதில கட்ட வேண்டியது வந்துடுச்சு. அது எனக்கு கழுத்தை பிடிச்சு நெருக்குது ரொம்ப கஷ்டமா இருக்கு. அது இல்லாட்டி ஓரளவு ஈசியா இருக்கும்

" உங்க மகனை என்ன பண்ணலாம்னு இருக்கீங்க. பிசினசிலேயே இருப்பாரா? " என்றதும் அவரை முந்தி கொண்டு அவர் மனைவி சொன்னார்

" பிசினசா ? அது மட்டும் வேண்டவே வேண்டாம். நாங்க பட்ட கஷ்டம் போதும் அவன் ஏதாவது படிச்சு நல்ல வேலைக்கு போகணும்.

இந்த காய்கறி இருக்கு பாருங்க. எல்லாரும் எடுத்துட்டு மிச்சம் இருக்கிறது தான் எங்க வீட்டு சமையலுக்கு எடுத்துப்போம் ஒரு நாளும் நல்ல காய் கிடைக்காது முத்தினது, பழசானது தான் எங்க வீட்டுக்கு "

மனைவி வந்ததால் அவர் பிற வீடுகளுக்கு சென்று தண்ணீர் கேன் போட கிளம்பினார். கடைசியாய் அவர் பெயரை கேட்க, " கடை பேருதான் எல்லாருக்கும் தெரியும். என் பேர் யாருக்கும் தெரியாது. ரங்கசாமி" என்று கூறிவிட்டு கிளம்பினார்.

ஆறு வருடமாய் பழகுபவரின் பெயர் இன்றைக்கு தான் தெரிய வருகிறது. இத்தனை நாள் அவர் கடை பெயரையே அவர் பெயராக நினைத்து வந்துள்ளேன் ! இப்படி நாம் தினம் பழகுவோரில் இன்னும் எத்தனை பேரின் பெயர் நமக்கு தெரியாமலே இருக்கிறது என்ற எண்ணத்துடன் வீட்டை நோக்கி நடந்தேன்.
***

Thursday, December 20, 2012

யானைப் பாகன் வாழ்க்கை - அறியாத தகவல்கள் - பேட்டி

பாண்டிச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் வணங்கிவிட்டு அவர்கள் தந்த சூடான சர்க்கரை பொங்கலை சாப்பிட்டவாறு (தேவாமிர்த சுவை!)  அந்த யானையை ரசிக்க துவங்கினேன்

பல சிறு குழந்தைகள் யானைக்கு அருகே நின்று கொண்டிருந்தனர். அதனை தொடவும் செய்தனர். யானையின் காலருகே இரு வெளிநாட்டு குழந்தைகள் அமர்ந்தவாறு இருந்தது மிக ஆச்சரியத்தை தந்தது. அக்குழந்தைகள் யானையின் தும்பிக்கையை பிடித்து விளையாடியதோடு, அதிலிருந்து பணத்தையும் அவ்வப்போது எடுத்து யானை பாகனிடம் தந்து கொண்டிருந்தனர். யானை பாகனை அணுகி யானை பற்றி சற்று கேட்க,  என்னையும் யானையின் கால் அருகே அமர்த்தியவாறு பேசத் துவங்கினார்.


என் பேர் சக்திவேல் எங்க குடும்பத்தில் நாலு தலைமுறையா இதே தொழில் தான் செய்றோம். நாங்க திருவனந்த புரத்தை சேர்ந்தவங்க. அப்பா ரொம்ப வருஷம் முன்னாடி திருக்கடையூரில் வந்து செட்டில் ஆகிட்டார். திருச்செந்தூர் உட்பட தமிழ் நாட்டின் பல கோயில்களில் என்னோட சித்தப்பா பெரியப்பா பசங்க தான் யானை பாகனா இருக்காங்க.

இந்த கோவிலில் யானை பாகன் வேலைக்கு ஆள் தேவைன்னு பேப்பரில் விளம்பரம் கொடுத்து என் தம்பி செந்தில் குமார் இன்டர்வியூ அட்டென்ட் செய்தான். இன்டர்வியூவில் கலந்துகிட்ட 19 பேரில் ஒருவனா செலக்ட் ஆனான்.

யானைகள் பொதுவா கேரளாவில் தான் மிக அதிகம். அங்கு யானையை வீட்டில் வைத்து வளர்க்கவே அனுமதிப்பாங்க. தமிழ் நாட்டில் பெரும்பாலும் வீட்டில் யாரும் யானை வளர்க்கிற மாதிரி தெரியலை கோயிலில் இருப்பது தான் அதிகம். சிலர் யானையை கேரளாவில் மரம் தூக்கும் வேலைக்கு கூட பயன்படுத்துவாங்க. யானைக்கு கோயில்களில் அங்கு ரொம்ப முக்கியத்துவம் உண்டு. எல்லா விழாவுக்கும் யானை வந்துடும்.

யானை வாங்கும்போது நல்ல யானையான்னு பார்த்து வாங்குவாங்க. எப்படி மாட்டுக்கு பல் பார்த்து வாங்கணுமோ அது போல யானைக்கும் சில விஷயம் சரியா இருக்கான்னு பார்த்து தான் வாங்கணும்.

குட்டி யானையா இருந்தா பழக்குறது ஈசி. அதை நேரே கோயிலுக்கு இப்படி கூட்டி வந்து கூட பழக்கிடலாம் வளர்ந்த யானை என்றால் முதலில் பழக்கிட்டு அப்புறம் தான் கூட்டி வரணும்.

ஒரு யானையை பார்த்ததுக்க எப்பவும் ரெண்டு பாகன் இருப்போம். ஒவ்வொரு பாகனுக்கும் ஒரு மாசத்துக்கு எட்டு நாள் லீவு உண்டு. நவம்பர் கடைசியில் எட்டு நாள், டிசம்பர் முதலில் எட்டு நாள் இப்படி 16 நாள் லீவு சேர்த்து எடுத்துட்டு எங்க சொந்த ஊரான கேரளா போவோம். அந்த 16 நாளும் குடும்பம், பசங்க இவங்க பத்தின சிந்தனை தான் இருக்கும். அவங்களுக்கும் இப்படி நாங்க ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை 16 நாள் வந்து இருக்குறது பழகிடுச்சு

யானைகள் ரொம்ப புத்திசாலி. நாம சொல்றதை நல்லா புரிஞ்சிக்கும். பேச மட்டும் தான் தெரியாதே ஒழிய மற்ற எல்லாம் தெரியும். வளர்க்கிறவங்க சொல்றதை மட்டும் தான் கேட்கும். மத்தவங்க சொல்றதை கேட்காது எங்க வாயில் இருந்து வரும் ஸ்மெல் வச்சு தான் எங்களை முக்கியமா அடையாளம் கண்டு பிடிச்சிக்கும்

நம்ம லட்சுமி யானை இங்கே 16 வருஷமா இருக்கு.  யானைக்கு ஆயுள் காலம் மனுஷங்க மாதிரி 100 வருஷம். அதுக்கு கூட குறைய இருக்கலாம்.

இங்கே வர்ற நிறைய பேரு யானைக்கு வாழைப்பழம் தர்றாங்க. ஒரு ஆளு ஒரு பழத்துக்கு மேலே தர விட மாட்டேன் ஒவ்வொண்ணா தந்தாலே ஒரு நாளைக்கு இருநூறு பழம் ஆயிடும்; அதுக்கு மேலே சாப்பிட்டா யானைக்கு வயித்துக்கு ஒத்துக்காது. அருகம்புல் எவ்ளோ வேண்ணா சாப்பிடலாம் ; அதுக்கு லிமிட்டே தேவை இல்லை.

கோயில் அருகே உள்ள கடையில் இது ரெண்டுமே நம்ம யானைக்காகவே நிறைய விற்கும். பார்க்க வர்றவங்க தர்ற பழம்/ அருகம் புல் தவிர கோயிலில் யானைக்கு ரெகுலரா நிறைய உணவு கொடுப்பாங்க 30 தென்னை மட்டை , 3 கிலோ வெண் பொங்கல், கேழ்வரகு களி, அரை கிலோ சாதம் இப்படி நேரா நேரத்துக்கு கோவிலில் இருந்து அதுக்கு சாப்பாடு வரும்.

லட்சுமி காலுக்கு வெள்ளியில் கொலுசு பண்ணி போட்டிருக்காங்க இது மாதிரி 14 செட்டு இருக்கு. ஒண்ணு மாத்தி ஒண்ணு போட்டு விடுவோம். நகை கடையில் நம்ம லட்சுமிக்காக ஸ்பெஷலா செய்த கொலுசு இதெல்லாம் !

               

நம்ம யானை மாதிரி எல்லார் கிட்டேயும் அன்பா பழகுற யானை நீங்க எங்குமே பார்க்க முடியாது. பொதுவா யானைங்க ஆசீர்வாதம் மட்டும் தான் செய்யும். நம்ம யானையை பார்வையாளர்கள் தொடலாம் ; கட்டி புடிச்சு கொஞ்சலாம். ஒண்ணும் செய்யாது. கால் அருகே உட்கார்ந்திருக்கே இந்த பசங்க.. இது மாதிரி வெளி நாட்டு ஆட்கள் கோவில் பார்க்க வரும்போது விட்டுட்டு போயிடுவாங்க அதுங்களும் கால் அருகே உட்கார்ந்து விளையாடும். நம்ம கிட்டே இருந்தா குழந்தை பத்தி பயம் இல்லாம கோயிலை சுத்திட்டு வருவாங்க வெளிநாட்டு ஆளுங்க.

(இந்த வீடியோவில் யானையின் அன்பை நீங்கள் காணலாம் ! பின்னணியில் ஒலிக்கும் குரல்களை புறக்கணியுங்கள் :)))


யானை தங்கும் இடம் இங்கிருந்து ரெண்டு கிலோ மீட்டர் தள்ளியிருக்கு அதுக்கு தனி ஷெட் மற்றும் மணல் திட்டு இருக்கு. வெய்யில் காலத்தில் மணல் திட்டில் இருக்கும் மழை என்றால் ஷெட்-டில் விட்டுடுவோம்.

இரவுல அது விட்டு, விட்டு தான் தூங்கும். ஒரு மணி நேரம் தூங்கும் . அப்புறம் முழிச்சிட்டு தென்னை மட்டையெல்லாம் கொஞ்ச நேரம் சாப்பிடும். மறுபடி தூங்கும். கை, கால் இரண்டையும் விரிச்சுகிட்டு மனுஷன் மாதிரி படுத்து தூங்கும். நாம படுத்த வாக்கிலேயே புரண்டு படுப்போம் இல்லையா. அது மட்டும் யானையால் செய்ய முடியாது.  எழுந்து புரண்டு படுத்துட்டு தூங்கும். நைட்டு முழுக்க யானை பக்கத்திலே தான் இருக்கணும். நாம இல்லாட்டி அது கத்த ஆரம்பிச்சுடும். எங்க தூக்கமும் இதனால் விட்டு விட்டு தான் இருக்கும். அது தூங்கும் போது நாங்க தூங்கிக்கணும்

காலையில் கோயிலுக்கு வர்றதுக்கு முன்னாடி யானையை கூட்டிட்டு ஒண்ணரை மணி நேரம் வாக்கிங் போவேன். அப்ப தான் யானை ஆரோக்கியமா இருக்கும். எனக்கும் அந்த நேரம் வாக்கிங் போன மாதிரி ஆச்சு.

யானைக்கு 15 நாளைக்கு ஒரு முறை சில வகை மருந்துகள் நாங்க குடுப்போம். முதல் 15 நாள் முடிஞ்சோன பால்காயம் என்கிற மருந்து தருவோம். அடுத்த 15 நாள் கழிச்சு அஷ்டசொர்ணம் தருவோம். இதெல்லாம் யானைக்கு நோய் வராம பாத்துக்கும். வருஷம் ஒரு முறை கேரளாவில் இருந்து டாக்டர் வந்து பரிசோதனை செய்வார். இங்கே உள்ளூரிலேயே ஒரு டாக்டரும் இருக்கார் . அவசரத்துக்கு அவரிடம் காட்டுவோம்

யானைக்கு வயசானவுடனே எலும்புருக்கி நோய் வந்து தாக்கும். வயதான யானைகள் அது தாக்கி இறப்பது உண்டு

எனக்கு ஒரே பையன். அவன் அஞ்சாவது படிக்கிறான். நல்ல பள்ளி கூடத்தில் படிக்க வச்சிருக்கேன். விட்டா வெள்ளை காரங்க கிட்டேயே இங்க்லீசில் பேசுவான். அவ்ளோ அருமையா இங்க்லீஸ் பேசுறான். பொண்ணு ரெண்டாவது படிக்குது.

பையனை நல்லா படிக்க வச்சு நல்ல வேலைக்கு அனுப்ப ணும்னு தான் நினைக்கிறேன் ; அவன் இந்த தொழிலுக்கு தான் வரணும்னு ஆண்டவன் எழுதியிருந்தா மாத்த முடியாது

இந்த வேலையை நான் ரொம்ப மகிழ்ச்சியோட செய்யுறேன். யானை எனக்கு குழந்தை மாதிரி தான். 16 வருஷமா இரவும் பகலும் அது கூடவே இருக்கேனே ! இந்த தொழிலில் வருமானத்துக்கும் குறைவில்லை. வீட்டை விட்டு தள்ளி இருக்கோம். ஆனாலும் ரெண்டு மாசத்துக்கு ஒரு முறை 15 நாள் அவங்க கூட இருக்குறதால பெரிய விஷயமா தெரியலை.

இந்தியாவிலேயே இது மாதிரி மக்கள் மத்தியில் பிரபலமான யானை எதுவும் கிடையாது. இது ஒண்ணு தான் எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. எப்பவும் இதைத்தான் காப்பாத்த நினைக்கிறேன் !

****
இங்கு தொடர்ச்சியாய் அவர் பேசியது போல் எழுதி விட்டேனே ஒழிய இடையில் எத்தனையோ குறுக்கீடுகள் ! நடுநடுவே லட்சுமி யானையுடன் பேசிக்கொள்கிறார். கோமியம் வாங்க யாரோ ஒரு பெண்மணி  வந்து முன்பணம் தந்து செல்கிறார். பழம் தருவோரிடம் தொடர்ந்து " ஒரு பழம் மட்டும் தாங்க" என சொல்லி கொண்டே இருக்கிறார். கோவிலில் இருந்து சிலர் வந்து பேசி செல்கிறார்கள். இத்தனைக்கும் நடுவில் நம்மிடம் மனம் விட்டு பேசிய அவருக்கு நெஞ்சார்ந்த நன்றி கூறி விடைபெற்றேன்.
****
அதீதம் டிசம்பர் 15, 2012 இதழில் வெளியானது
****
அண்மை பதிவு :

வானவில்: வண்ணாரபேட்டை -ஸ்னேஹா - ஹார்ட் அட்டாக்

Tuesday, November 27, 2012

முடி திருத்துவோர் வாழ்க்கை : அறியாத தகவல்கள்

ழக்கமாய் முடி வெட்டுபவரிடம் எப்போதுமே பல விஷயங்கள் பேசுவேன். நம்ம ஊரில் என்ன நடக்கிறது என பல தகவல்கள் அவர்கள் மூலம் தெரிய வரும். இந்த முறை முடி வெட்டியபோது இப்பேட்டிக்காக அவர் தொழில் பற்றியே பேசினேன். அவரும் தன் நிறைய விஷயம் பகிர்ந்தார். நாங்கள் பேசியதில் இருந்து :
****
இந்த வரிசை பேட்டிகள் அதீதம் இணைய இதழில் தொடர்ந்து வெளியாகிறது
******
இந்த கடை வாடகை கடையா? 

ஆமாம். வாடகை கடை தான். மாச வாடகை 2, 200. சில இடங்களில் இப்போ அட்வான்ஸ் மட்டுமே ஒரு லட்சம் கேட்கிறார்கள். இந்த கடை வைக்க அட்வான்ஸ், கார்பெண்டரி, சேர் எல்லாம் சேர்த்து 1 லட்சம் செலவாச்சு. மனைவி நகைகளை அடகு வைத்து தான் பணம் சேர்த்து கடை வைத்தேன். ரெண்டு வருஷத்தில் அந்த நகை எல்லாம் மீட்டுட்டேன் .

உங்க குடும்பத்தில் எத்தனை பேரு?

மூணு அக்கா. ஒரு அண்ணன். அண்ணன் செங்கல் சூளையில் வேலை பார்க்கிறார். மூணு அக்காவுக்கும் கல்யாணம் ஆகிடுச்சு. அவங்க மூணு பேர் புருஷனும் எங்க தொழில் தான் பண்றாங்க.

அக்கா மூணு பேருக்கும் கல்யாணம் பண்ண நிறைய கடன் வாங்கினேன் அதெல்லாம் அடைச்சிட்டு நான் கல்யாணம் பண்ணிக்க 29 வயசாகிடுச்சு. எனக்கு இப்போ கல்யாணம் ஆகி ரெண்டு பொண்ணுங்க இருக்கு . கிங்க்ஸ் மெட்ரிகுலேஷனில் படிக்கிறாங்க. நாம தான் படிக்காமல் போயிட்டோம் அதுங்களாவது நல்லா படிக்கட்டும்.

நல்லா படிச்சு நல்லா வேலைக்கு போனா அதுக்கு தகுந்த மாப்பிள்ளை பாக்கலாம். இல்லாட்டி நம்ம வசதிக்கு ஏற்ப சின்ன அளவில் மாப்பிள்ளை பார்க்க வேண்டியது தான்.



கடையில் நீங்க ஒரே ஆளா? துணைக்கு ஆள் வச்சிக்கலையா?

ஆள் வச்சிக்கலை. ஆள் வச்சா தினம் 350 ரூபா சம்பளம் கொடுக்கணும் . வேலை இருந்தாலும் இல்லாட்டியும் அந்த பணம் கொடுத்தாகணும். ஆள் இல்லாததால் தான் என்னால கடன் சீக்கிரம் அடைக்க முடிந்தது.

சனி ஞாயிறு கூட்டம் அதிகம் இருக்கும் போது சிரமமா இருக்கும். கை விரல் எல்லாம் வலி பின்னி எடுக்கும். இன்னொரு பக்கம் ஆள் வேறு காத்திருப்பாங்க. அன்னிக்கு மட்டும் ரொம்ப சீக்கிரமா முடி வெட்டுவோம். வலியை பார்க்காம வெட்டினா அன்னிக்கு நல்லா பணம் கிடைக்கும்.

முடி வெட்ட கத்து தர கோர்ஸ் ஏதும் இருக்கா?

ஆமா. நாலு அஞ்சு மாச டிரைனிங் கோர்ஸ் இருக்கு. பியூட்டி பார்லர் வைப்போர் எல்லாம் அப்படி தான் டிரைனிங் எடுத்துட்டு வைக்கிறாங்க. ஆனா கடையில் வேலை பார்த்து கத்துக்குறது இன்னொரு விதமான டிரைனிங் . நான் எல்லாம் அப்படி தான் கத்து கிட்டேன். வெறுமென அஞ்சு மாச கோர்ஸ் படிச்சிட்டு பியூட்டி பார்லர் வைப்பவர்களால் எங்களை மாதிரி முடி வெட்ட முடியாது .

கடையிலே வேலை பார்த்தா ஆறு மாசத்துக்கு தரையை கூட்டுறது, சிகரெட், டீ வாங்கி தர்றது மாதிரி வேலை தான் செய்ய சொல்வாங்க. நானெல்லாம் முதலாளி வீட்டில் பாத்திரம் தேய்ச்சு துணி எல்லாம் தோச்சு போட்டிருக்கேன். (ரெண்டு முறை இதை சொன்னார். மனதில் ரொம்ப வலி போலிருக்கு) சாமானியத்தில் தொழில் கத்து தர மாட்டாங்க.

ஆறு மாசம் கழிச்சு ஷேவிங் பண்ண விடுவாங்க. அப்புறம் சின்ன பசங்க கட்டிங்க்  பண்ண சொல்லி பார்ப்பாங்க. அது நல்லா செஞ்சா பெரிய ஆளுங்க. இப்படி கொஞ்சம் கொஞ்சமா மாறி தொழில் நல்லா கத்துக்க நீங்க ஒரு கடையில் மூணு வருஷமாவது இருந்தாகணும் 

நான் வேலை பார்த்தது அண்ணா நகரில் உள்ள ஒரு மார்வாடி சலூனில் தான். அவரு காசு வாங்குற வேலை மட்டும் தான் செய்வார். முடி வெட்டுற வேலை செய்றது எல்லாம் எங்களை மாதிரி ஆளுங்க

முன்னே இந்து நாவிதர் தான் இந்த தொழில் அதிகம் செஞ்சாங்க. இப்போ ஐயர், மார்வாடி எல்லாம் இந்த தொழில் ( பியூட்டி பார்லர் ) பண்றாங்க. இதுலே நிறைய காசு வருதுன்னு எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு அதான்.

உங்களுக்குன்னு ஒரு சங்கம் இருக்குள்ள? அதுக்கு நீங்க பணம் ஏதும் கட்டணுமா?

சங்கத்துக்கு  வருடம்  250 ரூபா கட்டணும். வருஷா வருஷம் ஒரு விழா வைப்பாங்க. அதுக்கான செலவு இந்த பணத்தில் செய்வாங்க. ஒரு கிப்ட் தருவாங்க; அப்புறம் வருஷம் ஒரு தடவை டூர் கூட்டி போய் வருவாங்க. 

தலைவர், செயலாளர் எல்லாம் குறிப்பிட்ட ஆளுங்களே தான்  இருப்பாங்க. யாராவது நடவடிக்கை சரியில்லாட்டி அந்த வருஷ மீட்டிங்கில் அவரை நீக்கிட்டு வேறு ஆளை நியமிப்போம். நாங்க எல்லாம் ஓட்டு போட்டு தான் ஆள் தேர்ந்தெடுக்கணும் 

வாரத்தில ஒரு நாள் கண்டிப்பா  கடை மூடணுமா என்ன? 

சென்னை முழுசுக்குமே செவ்வாய் கிழமை லீவு. அந்தந்த ஏரியா சங்கத்தில் கொஞ்சம் ரூல்ஸ் மாத்திப்பாங்க. மடிப்பாக்கத்தில் செவ்வாய் கிழமை அரை நாள் திறக்கலாம்னு சொல்லிருக்காங்க. கோவிலம்பாக்கத்தில்  செவ்வாய் கிழமை முழுக்க கட்டாயம் மூடணும்னு  ரூல்ஸ் இருக்கு 

எவ்ளோ நாளைக்கு ஒரு தடவை முடி வெட்டிகிட்டா சரியா இருக்கும்?

ஒரு மாசத்துக்கு ஒரு முறை முடி  வெட்டிகிட்டா எப்பவும் ஒரே அளவு முடி இருக்குற மாதிரி, ஒரே ஹேர் ஸ்டைலில்   இருப்பது போல் பாத்துக்கலாம். 

ஷேவிங் தாங்களே பண்ணிக்கலாம்னா கூட சில பேர் எப்பவுமே கடைக்கு வந்து தான் ஷேவிங் பண்ணிக்குவாங்க. நீங்க பண்ணிகிட்டா எதிர் திசையில் தான் ஷேவ் பண்ணிக்க முடியும். நாங்க எப்பவும்  நீங்க பண்றதுக்கு ஆப்போசிட்டா பண்ணுவோம். அது தான் சரியான மெத்தட். தோல் ஹார்ட் ஆகாம சாப்ட் ஆக இருக்கும்

எத்தனை வயசு வரை இந்த தொழில் செய்ய முடியும்? 

 50 வயசுக்கு மேலே இந்த தொழில் செய்ய முடியாது. நின்னு கிட்டே முடி வெட்டுவதால் உடம்பில் உள்ள நீர் எல்லாம் காலில் போய் சேர்ந்திடுது. காலில் சின்னதா அடி பட்டாலே செமையா வீங்கிக்கும். காலையில் எழும் போதே சில நாள் காலை நகர்த்த முடியாது. நரம்பு சம்பந்தமான வியாதி எல்லாம் வர நிறைய வாய்ப்பு இருக்கு

அதோட சின்ன பசங்க " அவரு வயசானவரு- இப்போ உள்ள ஸ்டைல் அவருக்கு தெரியாது" என நினைப்பாங்க. அதனால் கூட்டம் வராது. 

வயசாகறதுக்குள் உட்கார்ந்து சாப்பிடுற அளவு பணம் சம்பாதிச்சுடனும் இல்லாட்டி நாம கடை வச்சிக்கிட்டு வேற ஆள் வச்சு வேலை வாங்கணும். "
***
நான் வந்த வேலை முடிந்து, எனக்கு போர்த்திய துண்டை உதறினார். முடி வெட்டும்போதே ஒரு பேட்டியும் கிடைத்த எண்ணத்தோடு விடைபெற்றேன்.
***
தொடர்புடைய பதிவுகள்: 
சலவை தொழிலாளி வாழ்க்கை: அறியாத தகவல்கள்
கூர்க்கா வாழ்க்கை அறியாத தகவல்கள்
பெங்களூர் ஆட்டோ காரர் பேட்டி 
மெக்கானிக் வாழ்க்கை : அறியாத தகவல்கள்
செருப்பு தைப்பவர் வாழ்க்கை-  பேட்டி

Tuesday, October 30, 2012

டிவி மெக்கானிக் வாழ்க்கை : அறியாத தகவல்கள்

ங்கள் வீட்டு டிவி திடீரென ஒரு நாள் உடல்நலமின்றி போனது . தானாகவே சரியாகும் என சில நாள் பொறுத்திருந்து பார்த்தால் , அப்படி ஒன்றும் நடக்கலை. டிவி பார்க்காமல் இருப்பது நல்லது தான் எனினும், வேறு வித பின் விளைவுகள் வரும்போல் இருந்தது. வாரக் கடைசிகளில் பெண் " ரொம்ப போர் அடிக்குது; எங்காவது ஷாப்பிங் போகலாம்" என்று சொல்ல, "ஆஹா; டிவி இல்லாததால் வந்த வினையா? இதுக்கு டிவியை சீக்கிரம் சரி பண்ணிடலாம் என மெக்கானிக் ஒருவரை வரவழைத்தேன்.



மாசிலாமணி என்கிற அந்த மெக்கானிக் வந்து சேர்ந்தார். மிக பருமனான உருவம். கட கட கடவென பேசுகிறார். இவரிடம் இந்த பேட்டி எடுக்கும் எண்ணமே இல்லை. அவர் பாட்டுக்கு டிவி சரி செய்ய, நான் வழக்கம் போல் புத்தகம் படித்துக் கொண்டு அரை தூக்கத்தில் தான் இருந்தேன். விடாமல் அவர் பேசியதில் கொஞ்சமாய் அவரிடம் பேசலானேன். பாதி தூரம் தாண்டியதும் " பேட்டிக்கான பொறி தட்ட" எழுந்து உட்கார்ந்து விட்டேன்.

இனி அவர் பேசியதில் இருந்து:

" நமக்கு சொந்த ஊர் திருவண்ணாமலை. சென்னைக்கு வந்து முப்பது வருஷம் ஆகுது. என்னை பாத்தா என்ன வயசு தெரியுது? "

" நாப்பது இருக்குமா சார்?"

மகிழ்ச்சியாகி " அம்பத்தி மூணு ஆச்சு. ப்ளஸ் டூ முடிச்சிட்டு டிவி மெக்கானிசம் டிப்ளமோ படிச்சேன். கல்கத்தாவில் இருக்கும் ஒரு டிவி கம்பனி அப்போ வேலைக்கு ஆள் எடுத்துது. அதோட சென்னை பிரானச்சில் நான் வேலைக்கு சேர்ந்தேன். இருபது வருஷம் அதே கம்பனியில் வேலை. அந்த கம்பனி மூடிட்டாங்க. அப்புறம் நானே சொந்தமா வேலை பார்க்க ஆரம்பிச்சிட்டேன். "

" எனக்கு ஒரே பொண்ணு. அதுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. ஒரு தம்பி இருக்கான். எனக்கு பதினேழு வருஷம் கழிச்சு பிறந்தவன். அவனை மூணாவதில் இருந்து நான் தான் வீட்டில் வச்சி படிக்க வைக்கிறேன். அவன் எனக்கு பையன் மாதிரி தான். நிறைய பேர் அவனை என் தம்பின்னு நினைக்க மாட்டாங்க. பையன்னு தான் நினைப்பாங்க. அவனிடமே " உங்க அப்பா எங்கன்னு என்னை பத்தி கேட்பாங்க . இப்போ அவன் பெங்களூரில் இருக்கான்"

தன் மகளுடன் சேர்த்து தன் தம்பியையும் மகன் போல சொல்கிறாரே என ஆச்சரியமாய் இருந்தது !

" இப்போல்லாம் எல்லாரும் LCD டிவி தான் வாங்க ஆரம்பிச்சிட்டாங்க; LCD தவிர மற்ற டிவி எல்லாம் இனிமே படுத்துடும். இப்போ முப்பதாயிரத்துக்கு நல்ல LCD டிவி கிடைக்குது. போக போக இன்னும் விலை குறையும். லாஸ்ட் ரெண்டு வருஷத்தில் LCD டிவி விலை செமையா குறைஞ்சிருக்கு "

அவர் முதலில் டிவி ரிப்பேர் பார்த்த காலம் பற்றி கேட்க, " அப்போல்லாம் எங்களுக்கு ரொம்ப நல்ல மரியாதை இருந்தது. டிவின்னாலே மக்களுக்கு புதுசு இல்லையா? அப்படி புது விஷயம் சரி பண்ற ஆளுங்களை மரியாதையோடு பார்த்தாங்க. இப்போ அந்த மரியாதை எல்லாம் குறைஞ்சு போச்சு. இப்போ எல்லாரும் ஐ. டி கம்பனியில் சாப்ட்வேர் வேலை பார்க்க தான் விரும்புறாங்க. இப்போ TV-க்கள் ரொம்ப ரொம்ப அதிகமாகிடுச்சு. ஆனா மெக்கானிக்குங்க முன்பு இருந்த அளவு கூட இல்லை".

" முத முதல்லே டிவி வந்தப்போ தூர்தர்ஷன்லே ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் தான் நிகழ்ச்சி இருக்கும். அப்புறம் டில்லி டிவி வந்துச்சு ; தமிழ் நிகழ்ச்சி முடிந்தவுடனே ஹிந்தி நிகழ்ச்சின்னு சொல்லி அதை காட்டுவாங்க. இப்போ எவ்ளோ சேனல். எவ்ளோ நிகழ்ச்சி ! ஆனா மக்கள் ஏன் தான் இவ்ளோ நேரம் டிவி பாக்குறாங்களோ தெரியலை ! ஏதோ டிஸ்கவரி சேனல் மாதிரி நமக்கு தெரியாத, நாம நேர்ல பார்க்காத விஷயம்னாலும் பரவாயில்லை. ஆனால் அதை எங்கே பாக்குறாங்க. வேற எதை எதையோ பாக்குறாங்க "

இந்த வேலைக்கு என்ன படிக்கணும் என்று கேட்டதற்கு " பிளஸ் டூ முடிச்சவுடன் இதுக்குன்னு டிப்ளமோ கோர்ஸ் இருக்கும். அதை படிக்கணும். அப்புறம் ஒரு டிவி கம்பனியிலோ அல்லது டிவி ரிப்பேர் கடையிலோ சேர்ந்து வேலை பார்த்து தொழில் கத்துக்கணும். அப்புறம் தான் தனியா கடை போடவோ அல்லது தானே தனியா வீடுகளுக்கு போய் ரிப்பேர் செய்வதோ முடியும்.

இந்த தொழிலுக்கு ரொம்ப முக்கிய விஷயம் பொறுமை. சில வேலைகள் சீக்கிரம் முடியும். சில விஷயம் ரொம்ப லேட் ஆகும். நாங்களும் டாக்டர் மாதிரி தான் சார். டாக்டர் எப்படி உடம்புக்கு என்னன்னு பார்த்து மருந்து தர்ராறோ அது மாதிரி நாங்க டிவிக்கு என்ன பிரச்சனைன்னு பார்த்து சரி செய்யணும். டாக்டர் கிட்டே நோயாளி வாய் திறந்தாவது என்ன பிரச்சனைன்னு சொல்லுவான். எங்களுக்கு அதுவும் கிடையாது. நாங்களே என்ன பிரச்சனைன்னு கண்டுபிடிக்கணும். அதான் நிறைய பொறுமை வேணும்னு சொன்னேன். பொறுமை இல்லாதவங்க இந்த தொழிலில் இருக்க முடியாது. கொஞ்ச நாளில் இது நமக்கு சரி படாதுன்னு ஓடிடுவாங்க "

கம்பனியில் இருந்து வரும் டிவி மெக்கானிக்குகள் பற்றி கேட்க, " இப்போல்லாம் கம்பனிகளில் பாலிடெக்னிக் அல்லது டிகிரி முடிச்ச ஆட்களை தான் எடுக்குறாங்க. அதுக்கு மேலே டிவி ரிப்பேர் படிப்பும் படிச்சிருக்கணும். முன்னே எல்லாம் வெறும் டிவி பற்றி டிப்ளமோ படிச்சால் போதும். இப்போ அப்படி இல்லை. நிறைய பேர் படிச்சு முடிச்சிடுறதால், டிப்ளோமா படிச்ச ஆட்களை தான் எடுக்குறாங்க. அவங்க எல்லாருக்கும் டிரெயினிங் தர்றாங்க. ஆனா எல்லாரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஸ்கூலில் படிக்கிற எல்லாரும் நல்லா படிச்சிடுறாங்களா என்ன ? அங்கேயும் நல்லா படிக்காதவங்க இருப்பாங்க இல்லை? அப்படி தான். பெரிய கம்பனியில் இருந்து வரும் மெக்காநிக்கில் சில பேர் நல்லா இருப்பாங்க. சில பேர் ஒழுங்கா பாக்க மாட்டாங்க. நல்லா பாக்குற மெக்கானிக்கா இருந்தா கம்பனியில் டிவி ரிப்பேர் பண்ணுவது நல்லது தான் "

நீங்கள் ஏன் தனி கடை வைக்க வில்லை என்று கேட்க " மக்கள் தனி கடை வச்சிருந்தா படுத்தி எடுத்துடுவாங்க. எல்லாருக்கும் உடனே டிவி வேணும். எல்லாரும் அவசர படுத்துவாங்க. அதையெல்லாம் நான் நேரில் பார்த்துட்டு தான் கடை வைக்க கூடாதுன்னு விட்டுட்டேன். இப்போ பாருங்க. உங்க வீட்டுக்கே வந்து டிவியை நான் பாக்குறேன். இதே கடைன்னா, டிவி எடுத்துட்டு போக ஒரு செலவு, கொண்டு வர ஒரு செலவு. வீட்டில் வந்து ரிப்பேர் பார்த்தா இந்த செலவு மிச்சம் !"

"மெக்காநிக்குகளே குறைவு என்றால் உங்களுக்கு நிறைய டிமாண்ட் இருக்கும் இல்லையா? " என்று கேட்க, "அப்படி சொல்ல முடியாதுங்க; சில நேரம் வேலை இருக்கும். சில நேரம் இருக்காது. இதை ஒண்ணும் பண்ண முடியாது " என்றார்.

டிவி ரிப்பேர் செய்பவர்கள் வேறு என்ன ரிப்பேர் பார்ப்பார்கள் என்று கேட்டால் " முன்பு ரேடியோவும் சேர்த்து பார்த்தனர். இப்போ FM ரேடியோ 150 ரூபாய்க்கு கிடைக்குது. வாங்கி யூஸ் பண்ணிட்டு தூக்கி போட்டுடுறாங்க. யாரும் மறுபடி ரிப்பேர் செய்வதில்லை. டிவி தவிர இப்போ சி. டி பிளேயர் ஓரளவுக்கு ரிப்பேருக்கு வருது; அவ்வளவு தான்" என்றார்.

கலைஞர் தந்த டிவியை மக்கள் எப்படி உபயோகிக்கிறார்கள் என்று கேட்டதும் சிரித்து கொண்டே சொன்னார். " டிவி இல்லாதவங்க யாருமே இல்லீங்க. அதை ரெண்டாவது டிவின்னு யூஸ் பண்றாங்க. சில நேரம் இது மாதிரி டிவி ரிப்பேர் ஆகிட்டா அது சரி ஆகும் வரை மட்டும் அதை யூஸ் பண்றாங்க" என்றார்.

டிவி மெக்கானிக்குகள் குடும்பத்தை எப்படி சமாளிக்கிறார்கள் என்று கேட்டதும் " கம்பனியில் வேலை பார்ப்பவர்களுக்கு ஏழு அல்லது எட்டாயிரம் சம்பளம் இருக்கும். தனி கடை வைப்பவர்களும் சரி, என்னை மாதிரி வீட்டுக்கு போய் டிவி ரிப்பேர் செய்பவர்களும் சரி அதே அளவு தான் சம்பாதிப்பார்கள். எப்படியோ வாழ்க்கையை ஓட்ட வேண்டியது தான் "

அவர் இருப்பது வாடகை வீடா என்று கேட்க, " இல்லை. வாடகை கொடுத்து எனக்கு கட்டுப்படி ஆகாது. என் தம்பி வாங்கின வீடு. அவன் பெங்களூரில் இருக்கான். அவன் வீட்டில் நான் இங்கே இருக்கேன்" என்று சொல்லி விட்டு கிளம்பினார்.

அவரை சந்தித்ததில் தம்பியை மகனை போல் எண்ணும் அண்ணன் - அண்ணனுக்கு குடியிருக்க தன் வீட்டை தந்துள்ள தம்பி என வித்தியாச மனிதர்களை அறிந்து கொள்ள எனக்கும் ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது !
****
தொடர்புடைய பதிவுகள்:


சலவை தொழிலாளி வாழ்க்கை: அறியாத தகவல்கள்: இங்கு

கூர்க்கா வாழ்க்கை அறியாத தகவல்கள் : இங்கு

பெங்களூர் ஆட்டோ காரர் பேட்டி : இங்கு

Tuesday, October 16, 2012

சாதாரண மனிதர் – பெங்களூர் ஆட்டோகாரர் பேட்டி

மீபத்தில் பெங்களூர் சென்றபோது இந்த ஆட்டோகாரரை சந்தித்தேன்.

ரயில்வே ஸ்டேஷனில் இருந்து நாங்கள் போக வேண்டிய இடம் ஆறு அல்லது ஏழு கிலோ மீட்டர் தூரம் இருக்கும். கார் காரர்கள் 250 ரூபாய் சொன்னார்கள். எங்கள் நண்பர் அந்த இடத்துக்கு நூறு ரூபாய் தான் ஆகும் என்று ஏற்கனவே சொல்லி இருந்ததால் ஆட்டோக்களை கேட்டோம். ஓரிருவர் 150 ரூபாய் கேட்க, கடைசியாய் இந்த ஆட்டோ காரர் நூறு ரூபாய்க்கு ஒப்புக்கொண்டு வந்தார். பெங்களூரில் ஆட்டோகாரர்கள் தமிழில் பேசுவதில் ஆச்சரியம் இல்லை. எனவே அவர் தமிழில் பேசுவதை நாங்கள் பெரிதாய் எடுத்துக்கலை. ஆனால் சிறிது நேரத்தில் அவர் தானாகவே நானும் ஒரு தமிழ் ஆள் தான் என்று கூறி விட்டு தன்னை பற்றி சொல்ல ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் நம் நிருபர் மனதும் விழித்து கொள்ள, பேட்டி துவங்கியது

என் பெயர் ராஜேந்திரன் 52 வயாசாகுது. ஒரு பெண் கல்யாணம் பண்ணி குடுத்துட்டேன். பையன் பைக் மெக்கானிக்கா இருக்கான். நான் தமிழன் தான். எங்க அப்பா இங்கே வந்து 70 வருஷம் ஆச்சு. நான் பொறந்ததே பெங்களூரில் தான். ஸ்கூல் வரைக்கும் தான் படிச்சேன். சின்ன சின்ன வேலை செஞ்சு பாத்துட்டு இருபது வருஷமா ஆட்டோ ஓட்டுறேன்.

படம்.. இணையத்திலிருந்து

நிறைய வேற்று மொழி சினிமா போஸ்டர்கள் இருப்பதை பார்த்து விட்டு அது பற்றி கேட்க, ” எனக்கு சினிமா பத்தி எதுவும் தெரியாதுங்க. நான் சினிமா பார்த்தே 15 வருஷம் ஆச்சு. எப்பவாது டிவி யில் வீட்டுலே பார்த்தா ரொம்ப கொஞ்சமா பார்ப்பேன். அதுக்கும் எங்கே நேரம்? வீட்டுக்கு போய் சேரவே ரொம்ப லேட் ஆகிடும். ஒரு நாளும் ரெஸ்ட் எடுப்பதில்லை. உடம்பு சரியில்லாம போனா தான் ஆட்டோ ஓடாம நிக்கும்.

பெங்களூரில் இப்போது மழை குறைந்து விட்டதா என்று கேட்டதும் , ” ஆமா, மரம் குறைஞ்சு போச்சுல்ல. அதான் மழை குறைஞ்சிடுச்சு. ஆனா மழை நீர் சேகரிப்பு இப்போ கட்டாயம் ஆக்கிட்டு வர்றாங்க. ஒரு கிரவுண்டுக்கு மேலே இருக்க தனி வீடு அப்புறம் பெரிய அபார்ட்மென்ட்டுங்க (Flats) இதுக்கெல்லாம் மழை நீர் சேகரிப்பு இருந்தா தான் அப்ரூவல் தர்றாங்க. மழை நீர் சேகரிப்பு பத்தி எல்லாம் யோசிக்க வேண்டிய தேவையே இல்லை ஒரு காலத்தில். இப்போ யோசிக்கிற மாதிரி நிலைமை வந்துடுச்சு

சென்னை போன்ற இடங்களை விட இங்கு ஆட்டோ கட்டணம் குறைவாக உள்ளது பற்றி கேட்க, ” நீங்க நூறு ரூபாய்க்கு வர முடியுமான்னு கேட்டீங்க. நான் வராட்டி இன்னொரு ஆள் அதே பணத்துக்கு வந்திடுவார். போட்டி இங்கே அதிகம். நிக்காம ஓடிகிட்டே இருப்போம், மக்களும் நிறைய ஆட்டோ யூஸ் பண்றாங்க. அதான் ஓரளவு கம்மி ரேட்டுக்கு வண்டி கிடைக்குது. இங்கேயும் அதிகம் கேட்குற ஆளும் இருக்காங்க. ஆளுக்கு தக்க மாதிரி வாங்கிடுவாங்க; இங்கே மினிமம் பார்த்தீங்கன்னா இருபது ரூபா. உங்க ஊரில் மினிமமே நாற்பது ரூபா இருக்கும்னு நினைக்கிறேன் ”

ஆட்டோக்கள் நிறத்தில் சற்று வேறுபடுவது ஏன் என கேட்டபோது , ” பச்சை மற்றும் மஞ்சள் நிறமுள்ள ஆட்டோக்கள் புதிய ஆட்டோ; கருப்பும் பச்சையும் சேர்ந்த கலரில் உள்ளது பழைய ஆட்டோ. இங்கு ஓடுவது பெரும்பாலும் கேஸ் ஆட்டோக்கள் தான். ”

ஆட்டோவில் ஆட்டோ காரரின் போட்டோ உள்ள ஐ. டி கார்ட் பிரேம் செய்து ஒட்டப்பட்டுள்ளது. அவரது பெயர், பிளட் குரூப் மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை இது.

டிரைவர் அடையாள அட்டை; வேறொரு ஆட்டோவில் எடுத்த படம் 

“டிரைவருக்கான லைசன்ஸ், வண்டி லைசன்ஸ் எல்லா தகவலுக்கும் சேர்த்து இந்த ஒரு ஐ. டி கார்ட்டை காட்டினால் போதும். எப்பவாவது போலிஸ் செக் பண்ணனும்னா வண்டிக்குள் இந்த கார்டை மட்டும் பாப்பாங்க; வண்டியில் வர்ற பயணிகள் யாரும் ஏதாவது தவற விட்டால் கூட, இதில் எங்களின் டீடைல்ஸ் பார்த்து வைத்திருந்தால் அதை வைத்து எங்களை ரீச் பண்ணிட முடியும்; அதுக்கு தான் இந்த ஏற்பாடு ” என்றார்.

“இங்கே இருப்போருக்கு பொதுவா கன்னடம், ஹிந்தி, தமிழ் மூணு மொழியும் தெரியும் இல்லே? ”

“ எனக்கு எத்தனை மொழி தெரியும்னு நினைக்குறீங்க? தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, இங்கிலீஷ் – ஆறு மொழி எனக்கு தெரியும். இதில் மலையாளம், இங்கிலீஷ் இரண்டும் வண்டியில் வர்றவங்க பேசுறதை புரிஞ்சிக்கிற அளவில் ரேட்டு, இடம் இது பேசினா புரிஞ்சிக்குற அளவு மட்டும் தெரியும். மத்த நாலு மொழியும் ரொம்ப நல்லா தெரியும்; இங்கே இருக்க எல்லா ஆட்டோ காரருக்கும் நாலு மொழியாவது நல்லா தெரியும்” என்றார். (தனக்கு தெரிந்த மொழிகள் என்று சொல்லும்போது தன்னை அறியாமல் தமிழை முதலில் சொன்னதை ரசித்து வியந்து கொண்டிருந்தேன்).

பெங்களூரின் டிராபிக் பற்றி கேட்க, ” ரொம்ப நாளா இந்த ஊரில் டிரையினே கிடையாது இல்லியா? மக்கள் ரோட்டை மட்டுமே நம்பி பயணம் செஞ்சாகணும். அதனால் கார், ஆட்டோ, பைக்குன்னு ரோடில் வண்டிங்க ரொம்ப அதிகம். டிரையின் இருந்தா இவ்ளோ பிரச்சனை வந்திருக்காது. இப்போ தான் மெட்ரோ வந்திருக்கு. அதனால் கொஞ்சம் கொஞ்சமா சரியாகும்” என்றார்.

” மெட்ரோ வந்தா உங்கள் வியாபாரம் பாதிக்காதா ?”

” அதெல்லாம் பாதிக்காது சார். நமக்கு வர்ற ஆளுங்க வந்துகிட்டு தான் இருப்பாங்க” என்றார்.

பெங்களூரில் மேடும் பள்ளமும் ஆக சாலைகள் ஏறி இறங்கி இருப்பது பார்த்து ‘மழைக்காலத்தில் எப்படிதான் ஓட்டுவீர்களோ?’ என்று நான் ஆரம்பிக்க மழை பற்றியப் பேச்சு வளர்ந்தது. அப்போது ஒரு தொழில் ரகசியத்தைப் போட்டு உடைத்தார். மழை வலுக்கும் போது கார் வைத்திருப்போர் சாலையில் ஒதுங்கி நிற்க ஆட்டோக்கள் மட்டும் விரைந்து சென்றவாறே இருக்குமாம். எப்படி எனக் கேட்ட போது ” ஆட்டோ கண்ணாடியில் ஒரு பாக்கெட்(சாஷே) ஷாம்பூவைத் தேச்சுத் தடவி விட்டிருவோம். தண்ணி நிக்காம வழுக்கிட்டு ஓடிடும். கண்ணாடி தெளிவா இருக்கும்.” என்று சிரித்தார்.

” வண்டிகள் சொந்தமா வச்சிருப்பாங்களா? அல்லது ஓனர் வேற, ஓட்டுற ஆள் வேறா இருக்குமா?”

” சில பேர் சொந்த வண்டி வச்சிருப்பாங்க. ஆனா பெரும்பாலும் வண்டி ஓனர் ஒருத்தர்; ஓட்டுறது இன்னொருத்தரா தான் இருக்கும். ஒரு நாளைக்கு இருநூறு ரூபாய் முதல் முன்னூறு ரூபாய் வரை ஓனருக்கு வாடகை தருவார்கள். அதுக்கு மேல் இருப்பது தான் ஆட்டோ ஓட்டுறவங்களுக்கு !”

“ஆட்டோ ஒட்டுவோரில் கன்னடியர்கள் தானே அதிகம் இருப்பார்கள் தமிழராக உங்களால் எப்படி சமாளிக்க முடியுது?”

” நான் அவங்களை பாத்து பயப்பட மாட்டேன். எதுவா இருந்தாலும் இறங்கி பாத்துடுவேன். அதனால நம்ம கிட்ட வச்சிக்க மாட்டாங்க.

தமிழங்க அவங்களுக்கு ( கன்னடியர்) தேவை சார். எதுக்கு தெரியுமா? காசுக்கு தான். தமிழ் ஆளை ஆட்டோவில் ஏத்த மாட்டேன்னு சொல்லுவானா? தமிழ் ஆளுக்கு பொருள் விக்க மாட்டேன்னு சொல்லுவானா? என்னிக்கும் சொல்ல மாட்டான். ஏன்னா அவங்க தர்ற காசு வேணும். என்ன ஒண்ணு. காவிரியில் தண்ணி தரணும்னு நீங்க தமிழ் நாட்டில் கேட்டா இங்கே அவங்களுக்கு கோபம் வந்திடும். அடுத்து கம்பெனிகளில் பெரிய பெரிய பொறுப்பில் தமிழ் ஆளுங்க தான் இருக்காங்கன்னு ரொம்ப நாளா அவங்களுக்கு கோபம். சின்ன வேலை பார்க்க நாங்க. பெரிய வேலைக்கு தமிழ் ஆளா அப்படின்னு கடுப்பு இருக்கு. ”

இதற்குள் நாங்கள் செல்ல வேண்டிய இடம் வந்து விட, இருள் விலகியும் விலகாத அந்த அதிகாலை நேரத்தில் நியாயமான ரேட்டுக்கு சவாரி வந்ததோடு, நம்மிடம் மனம் விட்டு பேசியமைக்கு அவரிடம் நன்றி சொல்லிவிட்டு விடை பெற்றோம்.

****
அதீதம் அக்டோபர் 1 , 2012  இதழில் வெளியான கட்டுரை 

Saturday, September 22, 2012

மாவு மில்காரர்கள் வாழ்க்கை - அறியாத தகவல்கள்

மாவு மில் என்றதும் முதலில் எங்கள் ஊரான நீடாமங்கலம் நினைவுக்கு வரும். நீடாமங்கலத்தில் எங்கள் வீட்டிலிருந்து சற்று தொலைவில் உள்ளது பெரியார் மாவு மில். அதனை நடத்தியது ஒரு திராவிடர் கழக பிரமுகர். அந்த மாவு மில், எங்கள் ஊர் கடைத்தெருவின் முக்கிய இடத்தில் இருக்கும். கடையின் வெளியே சுவரில் " கடவுள் இல்லை இல்லவே இல்லை" உள்ளிட்ட வாசகங்கள் இடம் பெற்றிருக்கும். கடவுள் இல்லை என்பதோடு கடவுளை திட்டியும் அங்கு எழுதப்பட்டிருக்கிறதை எண்ணி சிறு வயதில் ரொம்ப வருஷம் மனதுக்குள் வியந்ததுண்டு.

மாவு மில் ஓனர் எப்போதும் சிரித்த முகத்துடன் அனைவருடனும் நன்கு பழுகுபவராக இருந்தார். கடவுளை வணங்காதோர் மகிழ்ச்சியுடன் இருக்க முடியுமா என்று ஆச்சரியம் + கேள்விகளும் கூட அந்த இளமை காலத்தில் !

இவரை சிறு வயதில் பார்த்து பார்த்து மனதில் பதிந்ததாலோ என்னவோ மாவு மில் காரர்கள் நமக்கு இயல்பாகவே நெருக்கமாகி விடுகிறார்கள்.

மடிப்பாக்கத்தில் உள்ள ஒரு மாவு மில்காரருக்கு காலில் விபத்தாகி காலுக்குள் பிளேட் வைத்தனர். அது சரியாக வைக்காமல் மிக பெரும் பிரச்சனை ஆகி மீண்டும் ஆப்பரேஷன் செய்ய வேண்டிய சூழல். எங்கள் பழைய அலுவலக நண்பர்கள் மூலம் ஆப்பரேஷனுக்கு பணம் பெற்று தருகிறேன் என்று சொல்லியிருந்தேன். அவரும் பையனின் விடுமுறையில் தான் ஆப்பரேஷன் செய்ய வேண்டும்; அப்போது உங்களை தொடர்பு கொள்கிறேன் என்று கூறியிருந்தார். சமீபத்தில் பார்த்தபோது அவருக்கு ஆப்பரேஷன் ஆகி விட்டிருந்தது. " உங்களை எதுக்கு தொந்தரவு பண்றது என கேட்கலை சார்" என்றார் தயக்கத்தோடு !

இந்த பேட்டி எடுத்தது அவரிடம் அல்ல. (அவரிடம் பேசினால் தவறாய் செய்த ஆப்பரேஷன் பற்றி நிறையவே நாங்கள் பேசுவது போகும் என்பதால்) இந்த பேட்டி இன்னொரு மாவு மில் காரரிடம் !
**********
உங்கள் பேர், ஊர் பற்றி சொல்ல முடியுமா? எத்தனை வருஷமா இந்த தொழில் செய்றீங்க?

என் பேர் ஜெயராமன். சொந்த ஊரு மதுரை பக்கம். நான் ஒரு விவசாயி தான். இப்போல்லாம் விவசாயம் லாபமா செய்ய முடியாது. கைக்காசு தான் வீணாகும்.

ஆறு வருஷமா இந்த மில் வேலையில் இருக்கேன். நாலு வருஷம் ஒரு மில்லில் வேலை பார்த்தேன். அப்புறம் இந்த மில் நடத்திய ஒருத்தர் முடியாம விட்டுட்டு கிளம்பினார். அவரிடம் இருந்து நான் வாங்கி இப்போ ரெண்டு வருஷமா வச்சிருக்கேன்.


இதுக்கு முன்னாடி விவசாயின்னு சொல்றீங்க. இந்த தொழிலுக்கு முன் அனுபவம் வேண்டாமா?

இது ரொம்ப எளிமையான வேலை தான். பெருசா முன் அனுபவம் தேவை இல்லை. நான் நாலு வருஷம் ஒரு இடத்தில வேலை பார்த்தேன் இல்லையா? அங்கே எல்லா விஷயமும் கத்து கிட்டேன்

உங்க குடும்பத்தை பத்தி ....

எங்க அப்பா ஒரு விவசாயி. எங்க பரம்பரையில் இப்படி வந்தது நான் தான் முதல் ஆள். எனக்கு ஒரே பையன். ஒன்பதாவது வரை தான் படிச்சான். இப்போ அவனையும் இதே மில் வேலைக்கு பழக்கிக்கிட்டு இருக்கேன். ஊரில் தான் இருந்தான். இப்போ தான் இங்கே வர வச்சிருக்கேன். மில்லில் இருந்து ரெண்டு தெரு தள்ளி தான் நம்ம வீடு.

கடை எப்ப திறந்து எப்ப மூடுவீங்க? என்னிக்கு லீவு?

கடை காலை ஏழு மணிக்கு திறப்பேன். மாலை ஏழு வரைக்கும் திறந்திருப்பேன். ஆறு மணிக்கு மேலே கூட்டம் கம்மியா தான் இருக்கும். ஆறரை வரை ஆள் இல்லைன்னா பூட்டிட்டு கிளம்பிடுவேன்

ஏழு நாளும் கடை இருக்கும். சொந்த தொழிலில் எப்படி லீவு போட முடியும்? உடம்பு முடியலைன்னு திறக்காம இருந்தா உண்டு. பண்டிகை நாள்னா மக்கள் வர மாட்டாங்கன்னு திறக்க மாட்டேன்.

மாவு அறைக்கும் போது எழும் நெடி நிறைய பேருக்கு ஒத்துக்காது இல்லை?

ஆமா. நீங்க கூட எப்பவும் மாவு அறைக்க வரும்போது பாத்திரத்தை கொடுத்துட்டு எதிர் கடையில் போய் நின்னுக்குவீங்க. அறைச்சு முடிச்சு சைகையில் கூப்பிட்டா தான் வருவீங்க. அது மாதிரி சில பேருக்கு இந்த நெடி ஒத்துக்காது.

ஆனா சில பேருக்கு இந்த நெடி ஒண்ணும் செய்யாது நானெல்லாம் பல வருஷமா இருக்கேனே ! என்னை எதுவும் செய்வதில்லை

இப்படி ஒரு நெடியில் தொடர்ந்து நிற்பது எதுவும் கெடுதல் பண்ணுமா?ஆஸ்துமா மாதிரி வியாதி எதுவும் வருமா?

என்ன இப்புடி கேக்குறீங்க ! ஒவ்வொருத்தர் எவ்வளவு நல்லதெல்லாம் அரைக்குறாங்க ! மிளகாய், மஞ்சள் , நல்ல வேர் மாதிரி பலதும் அரைக்கிறாங்க. அது எல்லாமே சுவாசிக்கிறது ரொம்ப நல்லது. இது ஒத்துகிச்சுன்னா எந்த கெடுதலும் அப்புறம் பண்ணாது. சொல்ல போனா எங்களுக்கு எந்த வியாதியும் சாமானியத்தில் வராது !

என்னென்ன மிஷின் இருக்கு? அரைப்பதில் என்ன முக்கிய விஷயம் இருக்கு?

நம்ம கிட்டே மூணு மிஷின் இருக்கு. ஒன்று மிளகாய், சீயக்காய் மாதிரி விஷயங்கள் அரைப்பது; இன்னொன்னு அரிசி அரைப்பது. மூணாவது கோதுமை அரைப்பது.

எத்தனை முறை அரைக்கிறது என்பது நாம வச்சிருக்க மெஷினையும், அதன் பேசையும் (Base ) பொறுத்தது. உதாரணமா கோதுமை போடுறீங்கன்னா என்னோட மெஷின் எல்லாம் மூணு தடவை அரைச்சா போதும். நைசா மைதா மாவு மாதிரி வந்துடும்.

மெஷின் ரிப்பேர் ஆகுமா? எப்படி மெயிண்டயின் பண்ணனும்?

மெஷினுக்கு தினம் ஆயில் போடணும். அங்கே பாருங்க ஆயில் போட்டுருக்கேன் !

அதுக்கு மீறி அப்பப்போ ரிப்பேர் ஆகும். அதை ரிப்பேர் செய்ய ஆளுங்க இருக்காங்க. போன் செஞ்சா எவ்ளோ சீக்கிரம் வர முடியுமோ வந்துடுவாங்க. வியாபாரம் பாதிக்க கூடாது இல்லை? ஒரு தடவை ரிப்பேர் ஆனா குறைஞ்சது முந்நூறு ரூபா செலவு வைக்கும்

கரண்ட் பில் எல்லாம் எப்புடி ஆகுது?

அந்த கொடுமையை ஏன் கேக்குறீங்க? முன்னாடி மூவாயிரம் பில் ஆச்சு. இப்போ ஐயாயிரம் பில் ஆகுது. ரொம்ப ஏத்திட்டாங்க.

நடுவிலே கரண்ட் பிரச்சனை இருக்கும் போது ஈ.பி காரங்க ரொம்ப கெடுபிடி பண்ணாங்க. செவ்வாய் கிழமை கண்டிப்பா மெஷின் ஓட்ட கூடாது. சாயந்தரம் ஆறு மணிக்கு மேலே மெஷின் ஓட கூடாது அப்படி எல்லாம் கெடுபிடி இருந்தது. இப்போ அதெல்லாம் இல்லை. செவ்வாய் கிழமையும் கடை திறக்கிறோம்

கரண்ட் பில் ஏறிடுச்சே. அப்போ நீங்களே அரைக்குற கூலி ஏத்திடுவீங்களா?

இல்லை. கூலி நாங்களா ஏத்த முடியாது. எங்களுக்குன்னு ஒரு சங்கம் இருக்கு. அது சொல்ற கூலி தான் நாங்க வாங்கணும். அதுக்கு கூடவோ குறையவோ எந்த கடையிலும் வாங்க மாட்டாங்க. சங்கம் வருஷத்துக்கு ஒரு முறை தான் கூலி ஏத்துனா ஏத்தும். எல்லா வருஷமும் ஏத்தும்னும் சொல்ல முடியாது. இப்போ கோதுமை ஒரு கிலோ அஞ்சு ரூபான்னா, அதை ஆறு ரூபான்னு ஆக்கும். அவங்க சொன்னா தான் நாங்க ஏத்த முடியும்

இப்போல்லாம் பில்சுபுரி அது இதுன்னு ரெடி மேட் மாவு வந்துடுதே. இன்னமும் மக்கள் மாவு மில்லில் அதிகம் அரைக்குறாங்களா?

நீங்களே ரெண்டு வருஷமா நம்ம கடைக்கு வர்றீங்க இல்ல ? ஏன் வர்றீங்க? கடையில விக்குற கோதுமை மாவுல்லாம் கலப்படம் சார். நீங்களே வாங்கி அரைச்சுக்குற மாதிரி வராது. அப்புறம் ஏழைங்க ரேஷன் கடையில் கோதுமை வாங்குது. அதுங்களும் அரைச்சு தானே சாப்பிடணும்?

இப்படி ஒரு மாவு மிஷின் வைக்க எவ்ளோ முதலீடு தேவைப்படும்?

மெஷின் வாங்க, கடையை மாத்தி விட எல்லாத்துக்கும் சேர்த்து ஒரு லட்சத்துக்கு மேலே முதல் போட்டேன். இப்போ வட்டி கட்டவே முழி பிதுங்குது. ஏன்டா இந்த தொழிலுக்கு வந்தோம்னு இருக்கு. வட்டி கட்டி, வீட்டு செலவும் பாத்தா கையில் ஒண்ணும் மிஞ்சலை

**
சிறிது நேரம் எங்களுக்குள் அமைதி. உங்களை ஒரு படம் எடுத்துக்கலாமா என கேட்டு விட்டு படம் எடுக்க, " எதுக்கு எடுக்குறீங்க? 'என கேட்டு தெரிந்து கொண்டார். " எதோ பேங்குக்கு சொல்லி லோன் குடுக்க சொன்னாலும் நல்லாருக்கும். நீங்க இதை எழுதுறதில் எனக்கு என்ன பிரயோஜனம் ?" என்று அவர் வருத்தம் தோய்ந்த குரலில் கேட்ட வரிகள் இதை எழுதும் போதும் மனதை அறுக்கிறது !

*****
அதீதம் செப்டம்பர் 14, 2012 இதழில் வெளியான கட்டுரை

Sunday, September 9, 2012

கூர்க்கா வாழ்க்கை அறியாத தகவல்கள்: பேட்டி

எஸ். ராமகிருஷ்ணன் கூர்க்காக்கள் பற்றி எழுதியதை வாசித்துள்ளீர்களா? படித்துப் பாருங்கள். வாசிக்கும்போதே மனதைப் பிசையும் எழுத்து. கூர்க்காக்கள் என்போர் எத்தனை பரிதாபமான ஜீவன்கள் என்று தெரியும்.

அந்த கூர்க்காவை ஒரு ஞாயிறன்று வீட்டில் சமையல் செய்ய மீன் வாங்கி விட்டு திரும்பும் வழியில் பார்த்தேன். ஒல்லியான உருவம். தலையில் தொப்பி. காக்கி பேன்ட். கலர் சட்டை. மிக வேகமான நடை. அவருடன் பேசினால் என்ன என தோன்றியது. வண்டியை நிறுத்தி விட்டு, நான் தமிழிலும் அவர் ஹிந்தியிலும் பேச, ஒரு நிமிடம்கூட தாக்கு பிடிக்க முடிய வில்லை.

இது சரிப்படாது என புரிந்து அருகில் உள்ள ஒரு அடகு கடைக்கு நம்மை கூட்டி போனார் கூர்க்கா. அடகு கடை காரரிடம் நான் என்ன கேட்கிறேன் என வினவினார். " உங்களை படம் பிடிச்சு உங்கள் வாழ்க்கையை பத்தி எழுதணுமாம்; அதுக்கு எதோ கேட்கணுமாம்" என மொழி பெயர்த்தார் அடகு கடைக்காரர். லேசான தயக்கத்துக்கு பின் பேச சம்மதித்தார் கூர்க்கா.



பேச்சு முழுவதுமே இரண்டு பக்கமும் மொழி பெயர்த்தவர் அடகு கடைக்காரர் தான் ! நேரம் போக போக வீட்டின் உள்ளே இருந்து அடகு கடைக்காரர் மனைவியும், புடவையை தலையில் சிறு முக்காடு போல் போட்டவாறு வந்து அமர்ந்து நாங்கள் பேசுவதை கேட்க ஆரம்பித்து விட்டார் ! அவர் கூடவே இரு குட்டி பசங்கள்.. !

அடகு கடைக்காரருக்கு " மொழி பெயர்ப்பாளர்" என்கிற புதிய அந்தஸ்து மிக பிடித்து விட்டது ! நடுவில் ஒரு ஆள் சீட்டு பணம் கட்ட வந்து, நின்று நின்று பொறுமை இழந்து " என் பணத்தை வாங்கிகிட்டு அப்புறம் பேசுங்க" என்றார் கடைக்காரரிடம் ! இப்படி சிறு கூட்டத்தோடு கூர்க்காவிடம் எடுத்த பேட்டி இதோ:
****
நீங்க எந்த ஊரு? உங்க அண்ணன் தம்பி எல்லாரும் என்ன செய்றாங்க?

எனக்கு ஊரு நேப்பால். ஆனா நாப்பது வருஷத்துக்கு மேலே இங்கே தான் இருக்கேன். என்னோட அப்பா இதே ஊரில் இதே தொழில் தான் பார்த்தார். அவர் இறந்த பிறகு அதே ஏரியாவில் நான் கூர்க்கா வேலை பாக்குறேன். எங்க அப்பாவுக்கு நான் ஒரே பையன். ஆணோ பெண்ணோ வேறு பிள்ளைகள் அவருக்கு கிடையாது

நேப்பாலில் இருந்து இங்கே வர பாஸ்போர்ட், விசா இதெல்லாம் வேணுமா?

இல்லை. நேபாளில் இருந்து இந்தியா வரவோ, இங்கிருந்து அங்கே போகவோ பாஸ்போர்ட் விசா எதுவும் தேவை இல்லை

உங்களுக்கு எத்தனை பசங்க? அவங்க என்ன செய்றாங்க?

எனக்கு ரெண்டு பசங்க. முதல் பையன் பீ. ஏ. முடிச்சிருக்கான். எங்க ஊரில் டீச்சர் வேலை பாக்குறான் ( இதை மிக பெருமையாக சொன்னார்) அடுத்த பையனுக்கு படிப்பு ஏறலை. பதினொன்னாவது வரை படிச்சான். நான் கூட அவ்ளோ தான் படிச்சேன். அவனை ஏதாவது கம்பனியில் செக்யூரிட்டி வேலையில் சேர்த்து விட முடியுமான்னு பாத்துகிட்டு இருக்கேன்

உங்களை மாதிரி கூர்க்கா இந்த ஊர் முழுக்க இருக்காங்களா? யார் உங்களுக்கு ஏரியா பிரிச்சு குடுப்பாங்க ?

நிறைய கூர்க்கா சென்னை முழுக்க இருக்காங்க. எங்களுக்கு அரசாங்கமோ பஞ்சாயத்தோ ஏரியா பிரிச்சு தருவது இல்லை. நாங்களே பாத்து பிரிச்சுக்குறது தான். என் அப்பா இந்த ஏரியா பார்த்தார். அவர் இறந்த பிறகு நான் பாக்குறேன். என்னோட எல்லைக்கு வேறு கூர்க்கா வர மாட்டாங்க.

இரவு நேரத்தில் உங்க டியூட்டி எப்படி இருக்கும் சொல்லுங்க.

இரவு பன்னிரண்டு மணியிலிருந்து காலை நாலு மணி வரை எங்க டியூட்டி நேரம். என்னோட ஏரியா முழுக்க மூணு தடவை சுத்தி வருவேன். ஒரு தடவை முழுக்க நடக்க ஒரு மணி நேரம் ஆகும். ஒரு மணி, ரெண்டு மணி, மூணு மணி இப்படி மூணு ரவுண்டு நான் தினம் சுத்தி வருவேன்.

எப்போ தூங்குவீங்க?

காலை நாலு அல்லது அஞ்சு மணிக்கு தான் என் வீட்டுக்கு போவேன் . ரெண்டு மணி நேரம் தூங்கிட்டு அப்புறம் கலக்ஷனுக்கு போயிடுவேன். மதியம் சாப்பிட்டுட்டு பன்னிரண்டு மணிக்கு படுத்தா அஞ்சு மணி வரை தூங்குவேன்.

தினம் கலக்ஷன் போகணுமா என்ன ? மாச ஆரம்பத்தில் போனா போதாதா ?
ஒவ்வொருத்தர் "நாளைக்கு வா நாளைக்கு வா"ன்னு சொல்லுவாங்க. ( இதனை மிக வெறுப்புடன் சொன்னார். அந்த மனிதருக்கு பிடிக்காத வார்த்தை "நாளைக்கு வா" என்பது தான் என அவர் பேசும் விதத்திலேயே தெரிந்தது) தினம் போய் கேட்டா தான் மாசம் மூவாயிரம் ரூபாயாவது கிடைக்கும். தினம் போகாட்டி மாசம் ரெண்டாயிரம் கிடைப்பதே கஷ்டம் தான்"

" ஒவ்வொரு வீட்டில் எவ்வளவு வாங்குவீங்க?"

"இவ்வளவு என நான் கேட்பது இல்லை. அவங்களாக தருவது தான். சில பேர் பத்து ரூபாய் தருவாங்க. சில பேர் இருபது ரூபாய். ஐந்து ரூபாய் தரும் ஆளுங்க கூட இருக்காங்க"

" மூவாயிரம் ரூபாயில் எப்படி குடும்பம் நடத்த முடியும்? உங்கள் மனைவி ஊரில் இருக்காரா?"

" என் கூட தான் இருக்கார். ஒரே ரூம் தான் எங்க வீடு. ஆயிரம் ரூபாய் வாடகை. மீதம் பணத்தில் தான் சாப்பாடு, மத்த செலவு எல்லாம். எங்களுக்கு வர்ற ஒரே வருமானம் ஒவ்வொரு வீட்டிலும் கொடுக்கும் பணம் தான். அதை தவிர வேறு வருமானம் கிடையாது. "

"உங்கள் கல்யாணத்தில் வரதட்சணை எல்லாம் உண்டா?"

" அதெல்லாம் இல்லீங்க. அவங்கவங்களுக்கு முடிஞ்சதை போடுவாங்க. அதுக்கு மேலே வறுபுறுத்த முடியாது. சாப்பாடுக்கே கஷ்டப்புடுற ஆட்கள் நாங்க. நகை, பணத்துக்கு எங்கே போறது?"

" நேபாளில் எவ்ளோ பேர் கூர்க்கா வேலை பாப்பாங்க?"

" சரியா படிக்காதவங்க தான் இந்த வேலை பாக்குறாங்க. நல்லா படிச்சவங்க அங்கேயே கூட வேற தொழில் செய்றாங்க "

"திருடங்களை எப்பவாவது நேரில் பாத்துருக்கீங்களா ? திருடனை பிடிச்சிருக்கீன்களா?"
" நாங்க விசில் ஊதிக்கிட்டு கம்பை தட்டி சத்தம் எழுப்பி வந்தாலே திருடங்க ஒளிஞ்சுப்பாங்க. அதனால இதுவரை திருடனை பார்த்ததோ பிடிச்சு கொடுத்ததோ இல்லை"

" ஒரு தடவை கூட திருடனை பார்த்தது இல்லையா?"

சிரிக்கிறார் " எங்க விசில் சத்தம் கேட்டா அவன் எப்படி வெளியே வருவான்? பார்த்ததே இல்லை"

"உங்க ஏரியாவில் திருட்டு போயிட்டா போலிஸ் உங்களை விசாரிப்பாங்களா ?"

" ஆமாம். விசாரிப்பாங்க. நான் வேற பக்கம் போனவுடனே இந்த பக்கம் திருடுனா நான் என்ன செய்ய முடியும்? நான் பாக்கலைன்னு சொல்லுவேன். எனக்கு தகவல் தெரிஞ்சா சொல்லலாம். அவ்ளோ தான்”

அவருடன் இன்னும் பேசணும் என்று நினைத்தாலும் அவர் கலக்ஷன் போகணும் என துடிக்க ஆரம்பித்தார். ஞாயிறு அன்று தான் வேலைக்கு செல்வோரை வீட்டில் வைத்து பார்க்க முடியும். " சாப் . அடுத்த தடவை உங்க வீட்டுக்கு வருவேன் இல்ல. அப்போ பேசுவோம்" என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டார் கூர்க்கா.

மொழிபெயர்த்து உதவிய கடைக்காரருக்கு நன்றியும் அவர் குடும்பத்தார்க்கு வணக்கமும் சொல்லி விட்டு கிளம்பும் போது " அடகு கடைக்காரரிடம் வச்சுக்கலாமா.. அடுத்த பேட்டியை" என யோசிக்க ஆரம்பித்திருந்தது நம்மோட நிருபர் மனது !
##########

அதீதம் செப்டம்பர் 1 இதழில் வெளியானது 

Thursday, August 23, 2012

சலவை தொழிலாளி-( Iron-செய்பவர்) வாழ்க்கை அறியாத தகவல்கள்

லவை தொழிலாளிகள். ..நம் பாஷையில் சொல்ல வேண்டுமெனில் " அயர்ன் காரர்". இவர்கள் நம் வாழ்வை நிச்சயம் தொட்டு செல்கிறார்கள். எங்கள் ஊரான நீடாமங்கலம் துவங்கி, சென்னை வரை தெருவிற்கு ஒரு அயர்ன் கடை இருப்பதை பார்த்து வருகிறேன்.

இவர்கள் வாழ்வை பற்றி அறிய எங்கள் வீட்டுக்கு அருகே இருக்கும் ஒரு பெரியவரை அணுகினேன். நான் ரெகுலராக துணி தருகிற கடை இல்லை இது. இருந்தாலும் மனம் விட்டு பேசினார். இனி அவர் வார்த்தைகளில்.....
" எங்க தொழில் ஒரு குல தொழில். வண்ணான் கம்மியூனிட்டி நாங்க. ஆரம்பத்தில் நான் சொந்த ஊரான மதுரையில் ஒரு துணி கம்பெனியில் வேலை பார்த்தேன். அது மூடின பிறகு வேற வேலை இல்லாம சென்னைக்கு வந்தேன். அப்பவே கல்யாணம் ஆகி மனைவியும் ஒரு குழந்தையும் இருந்தது. அவங்களை விட்டுட்டு நான் மட்டும் இங்கே வந்தேன்.


சென்னை வந்தவுடனே முதல்லே ஆந்திரா கிளப்பில் சலவை வேலை பார்த்தேன். அங்கே வந்து தங்குற ஆட்கள் துணி, பெட்ஷீட் இதெல்லாம் துவைச்சு சலவை பண்ணனும். ஒரு நாளைக்கு எண்பது ரூபா சம்பளம்  அப்புறம்  மனைவியை ஊரில் இருந்து கூட்டி வந்து மடிப்பாக்கத்தில் குடி வைத்தேன். அவரை வைத்து ஒரு கடை போட்டு, அண்ணன் பையனை வைத்து துணி அயன் செய்ய வைத்தேன். கொஞ்ச நாளில் வியாபாரம் நன்கு ஆனதும் நான் ஆந்திரா கிளப் வேலையை விட்டு விட்டு இதே கடைக்கு வந்துட்டேன்

எங்க குடும்பத்தில் எட்டு பேர் அண்ணன்-தம்பி. அஞ்சு பேர் சென்னையில் கடை வச்சிருக்கோம். மீதி மூணு பேர் ஊரில் இதே வேலை செய்யுறாங்க. எங்க மக்கள் படிச்சு வேற வேலைக்கும் போயிருக்காங்க. ஆனா அது ரொம்ப கம்மி தான். எனக்கு ஒரே பையன். அவன் டிகிரி படிச்சிட்டு போலிஸ் வேலைக்கு போகணும்னு முயற்சி பண்றான். நானும் அவனுக்கு எப்படியாவது ஒரு நல்ல வேலை வாங்கி குடுக்கணும்னு தான் அல்லாடுறேன் " மகனை பற்றி பேசும்போது சிந்தனையில் மூழ்குகிறார்

"உங்க மக்கள் தவிர வேறு யாரும் இந்த தொழில் செய்வாங்களா?"

"சில பேர் பெரிய அளவில் கடை போட்டு செய்யுறாங்க. அவங்க கூட முதல் போட்டு கடையை தான் பாத்துப்பாங்க. வேலை செய்ய எங்க ஆளுங்க தான் இருப்பாங்க.

இந்த தொழில் குறிப்பிட்ட வயசு வரைக்கும் தான் செய்ய முடியும். 45 வயசுக்கு மேலே இந்த தொழில் செய்ய முடியாது இப்பவே எனக்கு கையில் உள்ள எலும்பு எல்லாம் (கையை திருப்பி பின்பக்கத்தை காட்டுகிறார்) தேஞ்சு போச்சு. டாக்டர்கிட்டே போனேன். என்ன வேலை செய்றே என்று கேட்டார். அயன் பொட்டி தேய்க்கிறேன் என்றதும் "அவ்வளவு தான். இதுக்கு எந்த மருந்தும் கிடையாது. உன் காலம் முடிஞ்சு போச்சு; இனி வேற வேலை பாரு" அப்படிங்கிறார். நின்னு கிட்டே தேய்ப்பதால் கால் முட்டி ரெண்டும் தேஞ்சு போயிடும். கழுத்து எலும்பும் தேஞ்சுடும். என்ன ஒன்னு எங்க ஆளுங்க யாருக்கும் எலும்பு சம்பந்தமான வியாதி மட்டும் தான் வரும். சுகர், ரத்த கொதிப்பு மாதிரி எந்த வியாதியும் வராது. காலையிலிருந்து ராத்திரி வரை கடும் உடல் உழைப்பு செய்யுறோம் இல்லியா?"

"அப்போ 45 , 50 வயசுக்கு மேல் எப்படி வாழ்க்கை நடத்துவீங்க? வருமானம் ?"

" அதுக்கு தான் பசங்களையும் இதே தொழிலில் போடுறோம். எங்களுக்கு முடியாதப்ப அவங்க செய்ய ஆரம்பிச்சுடுவாங்க. நாங்க வீட்டுக்கு போய் துணி வாங்கிட்டு வர்றது மாதிரி வேலைகள் மட்டும் செய்ய வேண்டியது தான். இல்லாட்டி ஏதாவது கொஞ்சம் காசு சேத்து வச்சிக்கிட்டு ஊர் பக்கம் போயி கிடைக்கிறதை வச்சி வாழ வேண்டியது தான் "

இந்த தொழில் செய்பவர்களில் பலரும் குடிக்கிறார்களே என்று கேட்க, " ஆமா. நூத்துக்கு தொண்ணூறு பேர் குடிக்க தான் செய்வாங்க. இது கட்டிடம் கட்டுற மேஸ்திரி மாதிரி கஷ்டமான தொழில். நைட்டு படுத்தா ரெண்டு தோள்பட்டையும் பின்னி எடுக்கும். கழுத்து நரம்பை பிடிச்சு இழுக்கும். காலையில எழுந்து வேலை பாக்கணும்னா குடிச்சா தான் தூங்க முடியும். பெரும்பாலான ஆளுங்க தினம் நைட்டு குடிச்சிட்டு தான் தூங்குவாங்க"

"பெண்கள் இந்த தொழில் செய்றாங்களா?"

" பெரும்பாலும் செய்ய மாட்டாங்க. தெலுங்கு வண்ணான் அப்படின்னு ஒரு மக்கள் இருக்காங்க. அவங்கள்ளே மட்டும் தான் பெண்கள் துணி இஸ்திரி போடுவாங்க. மத்த படி குளத்துக்கு துணி சலவை செய்ய போனா பெண்கள் கூட வந்து ஹெல்ப் பண்ணுவாங்க"

துணிகளை துவைத்து பின் சலவை செய்வது பற்றி பேச்சு திரும்புகிறது

" சில பேர் வெள்ளிக்கிழமை அன்னிக்கு துணி அயன் பண்ண கூடாதுன்னு செண்டிமெண்ட் வச்சிருக்காங்க. அதனால வெள்ளிக்கிழமை கடை லீவு. அன்னிக்கு தான் துணி சலவைக்கு போவோம். எங்க தொழிலில் மட்டும் எப்பவும் ரெண்டு ஆள் இருந்தா தான் காரியம் நடக்கும். ஒரே ஆள் கடை போட முடியாது. சலவையும் பண்ண முடியாது.

நாங்க வெள்ளி கிழமை ஆனா, காலையில் பல்லாவரம் ஏரிக்கு போய் துணிங்களை துவைப்போம். அப்புறம் அங்கேயே பாறை மேலேயோ, கயிறு கட்டியோ துணிகளை உலர்த்துவோம். அப்புறம் காய வச்சு எடுத்துட்டு வந்துடுவோம்"

"சனி ஞாயிறுகளில் தான் துணி அதிகம் வருமா?"

"அப்படி இல்லை எங்களுக்கு தினம் துணி நிறைய வரும். அதுவும் இப்ப கரண்ட் பில் அதிகமானதால, நிறைய பேர் வீட்டில் அயன் பண்ணாம துணியை எங்ககிட்டே குடுக்குறாங்க சனி ஞாயிறுகளில் ஸ்கூல் பசங்க யூனிபார்ம் அதிகம் வரும். அதை மட்டும் நிறுத்தவே மாட்டோம். எங்க கிட்டே அயன் பண்ண குடுத்த பேன்ட், சட்டை இல்லாட்டி நீங்க வேற கூட போட்டுட்டு போயிடுவீங்க. ஆனா பசங்க கிட்டே இருக்கிறதே கொஞ்சம் யூனிபார்ம் தான். அதை உடனே தேச்சு குடுத்துடுவோம்"

ரொம்ப சின்ன பசங்களோட கலர் டிரஸ் கூட அயனுக்கு வருவதை பார்த்து நான் ஆச்சரியப்பட "பசங்க ஒண்ணுக்கு போன துணி துவைச்சாலும் கூட அதிலே கிருமி இருக்கும். ஆனா நாங்க சூடா அதை தேய்ச்சா எல்லா கிருமியும் செத்துடும். அதான் ரொம்ப சின்ன பசங்க துணி கூட அயனுக்கு வருது"

" வீட்டுக்கு போய் தான் துணி வாங்கணுமா ?"

" எல்லாரும் எதிர்பாக்குறாங்களே ! சில பேர்,  தானே கொண்டு வந்து குடுத்துட்டு தானே வாங்கி போறாங்க. ஆனா நிறைய பேர் வந்து வாங்கணும்னு சொல்றாங்க. "ஏன் வர முடியாதா?" அப்படின்னு போன் பண்றாங்க. போட்டி வேற இருக்கே ! ஆனா ஒண்ணு,  ஒருத்தர் ரெகுலரா துணி வாங்குற வீட்டுக்கு இன்னொருத்தர் போக மாட்டோம் “

நமக்கு பேட்டி தந்த பெரியவர் 
அவர்கள் சலவை பெட்டி பற்றி கேட்டதும் " இது ஒவ்வொண்ணும் 4500 ரூபா. ஏழெட்டு மாசம் தான் வரும் அப்புறம் ரிப்பேர் ஆகிடும் அதை ரிப்பேர் பண்ண சைதாப்பேட்டையில் ஒரு கடை இருக்கு. ஆனா ரிப்பேருக்கு ஆயிரம் ரூபா செலவாகும். அதுக்கு பதிலா பெட்டியை போட்டுட்டு புது பெட்டி எடுத்தா பாதி காசுக்கு எடுத்துப்பாங்க. மீதி பணம் போட்டா போதும். கவர்மென்ட்டு எங்களுக்கெல்லாம் அப்பப்ப பெட்டி குடுத்தால் நல்லாருக்கும் "

"உங்களுக்குன்னு சங்கம் இருக்கா?"

"இருக்கு. அவங்க அரசாங்கத்து கிட்டே போயி பெட்டி குடுங்க. இது இதெல்லாம் செய்யுங்கன்னு மனு குடுக்குற வேலை செய்வாங்க. நான் கூட சங்கத்தில் ஒரு பொறுப்பில் இருந்தேன் ஆனா வியாபாரத்தை பாக்காம இதுக்குன்னு அலைஞ்சா அப்புறம் நம்ம வீட்டை யாரு பாப்பாங்க? அதான் விட்டுட்டேன் " 

" அயனு-க்கு வர்ற துணி கிழிஞ்சா என்ன பண்ணுவீங்க?"

" பழசா இருந்தா பிரச்சனை இல்லை. புதுசுன்னா பாதி பணம் வரை தாங்க என கேட்டு வாங்கும் ஆட்கள் இருக்காங்க. ஆடி மாசம் - காத்து காலத்தில் தான் பொறி பறந்து சட்டையில் விழுந்துடும் "

பேச்சு அவர்கள் திருமணங்கள் பற்றி திரும்புகிறது: 

"எங்க மக்கள் கிட்டேயும் வரதட்சணை பிரச்சனை ரொம்ப அதிகமா இருக்கு. நாங்க எல்லாம் அஞ்சு பவுன் போடுறதே கஷ்டம். ஆனால் சாதாரண ஆளே 15 பவுன் கேக்குறாங்க எங்கே போறது நாங்க? இப்போ இந்த கடையை வச்சு நடத்த, எனக்கு என்ன கிடைக்கும்னு நினைக்கிறீங்க? 5000 ரூபாய் மாசா மாசம் கடன் தான் ஆகிடுது "

அவர் மனைவி வர, அவரை அறிமுகம் செய்கிறார். கடையிலிருக்கும் பையனிடம் " அனைவருக்கும் டீ வாங்கிட்டு வா தம்பி" என நான் பணம் தர, "நீங்க ஏன் தர்றீங்க? எங்க கடைக்கு வந்தா நான் தானே தரனும்?" என அன்புடன் கோபித்தார்.

தேநீர் வருகிறது. அயன் செய்யும் இருவரும் நின்று கொண்டே தேநீர் அருந்துகின்றனர். " அந்த டீ குடிக்கிற நேரம் உட்கார கூடாதா? " என்கிறேன். "உட்கார்ந்தா தான் தம்பி கால் வலி அதிகமா தெரியும். அப்புறம் எந்திரிக்க கஷ்டமாயிடும்" என்கின்றனர்.

அமர்ந்திருந்த நான் எழுந்து கொண்டு, விடைபெற்றேன். அரை மணி நேரம் அவர்களுடன் பேசியதில் சொந்தக் காராரை வழியனுப்புவது போல் அனைவரும் சேர்ந்து வழியனுப்பினர்.

*****
பேட்டி அதீதம் ஆகஸ்ட் 15  இதழில் வெளியானது 
*****
ஆகஸ்ட் 26 - பதிவர் மாநாடு வருகிறீர்கள் தானே? உங்கள் பெயர் இந்த பட்டியலில் உள்ளதா என பார்த்து உறுதி செய்து கொள்ளுங்கள் நன்றி !
Related Posts Plugin for WordPress, Blogger...