Monday, November 30, 2015

இஞ்சி இடுப்பழகி - சினிமா விமர்சனம்

புகைப்படங்கள் மற்றும் ட்ரைலர் இவையே உணர்த்தி விடும் கதையின் போக்கை..

பருமனான ஒரு பெண்.. எப்படி பிறரால் பார்க்கப்படுகிறாள்.. அவளுக்கு திருமணம் ஆவதில் உள்ள சிக்கல்.. இவையே கதையின் அடித்தளம்...

விரைவில் உடல் இளைக்க செய்யப்படும் சில மோசடிகளை தொட்டு செல்கிறார்கள்.. கூடவே உடற்பயிற்சியால் மட்டுமே உடல் இளைப்பது சரியான ஒன்று என்ற கருத்தும்..

முதலில் நல்ல விஷயங்கள்..

அனுஷ்கா !!!


வேறு எந்த டாப் ஹீரோயின் இப்படி ஒரு ரிஸ்க் எடுப்பார் என தெரியவில்லை.. உடலை பருமனாக்கி பின் இளைப்பது சாதாரண காரியம் இல்லை.. கமல், விக்ரம் ரேஞ்சுக்கு இந்த விஷயத்தில் அவர் செய்தது வியக்க வைக்கிறது.. உணர்வுகள், பாடி லாங்குவேஜ் என படத்தை தாங்குவது அனுஷ்கா தான்..

ஆர்யா..

நிஜ வாழ்வில் மிகுந்த fitness freak ஆன ஆர்யா - கதையிலும் அப்படியே வருகிறார்.. ஹீரோயினுக்கு மிகுந்த முக்கியத்துவம் உள்ள படம்.. ஆர்யா வழக்கம் போல் அதிகம் அலட்டி கொள்ளாமல் நடிக்கிறார்..

அனுஷ்கா அம்மாவாக ஊர்வசி.. அவரது நடிப்பும் சரி. கதையை முடித்து வைக்கும் விதமும் அழகு..

படம் சொதப்பியது எங்கு?

ஹீரோ, ஹீரோயின், ஊர்வசி, பிரகாஷ் ராஜ் தவிர மற்ற முகங்கள் அத் தனையும் அக்மார்க் தெலுகு மக்கள். இப்படி இரு மொழிகளில் படமெடுக்கும் போது துணை நடிகர்கள் இன்னொரு மொழியில் பயன்படுத்துவதில் தவறில்லை; மலையாள இயக்குனர்கள் தமிழில் படமெடுக்கும் போது வழக்கமாய் செய்வது தான் அது.. ஆனால் இங்கு அவர்கள் பேசும் விதம் - படத்தை மிக அந்நியப்படுத்தி விடுகிறது.. படம் எதிர்பார்த்த impact தராமல் போக மிக முக்கிய காரணம் இது..



நல்ல கருவை எடுத்து கொண்டு .. செயற்கையான திரைக்கதை அமைத்துள்ளனர்.. அனுஷ்காவின் வலி, கண்ணீர் - படம் பார்ப்போருக்கு எங்கும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை..

பாடல்கள் ரொம்ப சுமார்.. காமெடி.. ஊஹூம்...இப்படி எண்டெர்டெயின்மெண்ட் விஷயங்களிலும் கோட்டை விடுகிறது படம்..

படம் முடியும் போது அனுஷ்காவின் முயற்சி / உழைப்பு வீணானதை எண்ணி வருந்த தான் வேண்டியுள்ளது...

இஞ்சி இடுப்பழகி.. விழலுக்கு இறைத்த நீர்.. 

Saturday, November 28, 2015

தஞ்சை லெட்சுமி சீவல் :ஒரு பார்வை

ஞ்சையில் இருந்தோர் / இருப்போர் அனைவருக்கும் தெரிந்த ஒரு நிறுவனம் லெட்சுமி சீவல். மருத்துவ கல்லூரி செல்லும் வழியில் லெட்சுமி சீவல் என்கிற பேருந்து நிறுத்தம் உண்டு. இந்த இடத்தை சுற்றி LIC நகர், ஜே ஜே நகர் என பல குடியிருப்பு நகர்கள் இருந்தாலும், இன்னும் இந்த நிறுத்தம் லெட்சுமி சீவல் என்றே அழைக்கப்படுகிறது. 

பேருந்து நிறுத்தத்தில் இருந்து கூப்பிடு தூரத்தில் உள்ளது இந்த நிறுவனம். எனது பெற்றோர் மற்றும் அண்ணன் குடியிருக்கும் வீடு அருகில் உள்ளதால், அடிக்கடி இந்த இடத்தில் இறங்கி செல்வேன். முதல் முறையாக நிறுவனம் உள்ளே சென்று சீவல் எப்படி தயாரிக்கிறார்கள் என பார்த்தேன். லெட்சுமி சீவல் பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது


லெட்சுமி சீவல் நிறுவனம் துவங்கி 50 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து லாபகரமாக இயங்கி வருகிறது. தமிழகத்தில் மிக புகழ் பெற்ற சீவல் தயாரிப்பாளர்கள் எனில் இரு நிறுவனங்களை சொல்லலாம். ஒன்று ARR சீவல். ARR குழுமம் - சீவலுடன், ARR சுகந்த பாக்கும் தயாரிக்கிறார்கள். இன்னொரு புகழ் பெற்ற சீவல் தயாரிப்பு நிறுவனமான லெட்சுமி சீவலில், சீவல் மட்டுமே தயாரிக்கப்படுகிறது.

மதுரையில், சின்ன பெட்டிக் கடை வியாபாரமாக துவங்கிய இவர்களது சீவல் வியாபாரம் இன்று, ஒரு பெரிய "பிராண்ட் குழுமமாக" வளர்ந்துள்ளது.

இதன் மேனேஜர் திரு கார்த்திக்குடன் பேசிய போது சீவல் தயாரிக்கும் முறையை விளக்கினார். இளைஞர் போல் தெரியும் இவர், சுறுசுறுப்பாக அங்கும் இங்கும் ஓடி தேவையான உத்தரவுகள் போட்டு கொண்டிருந்தார். 10 வருடங்களாக இதே நிறுவனத்தில் பணி புரிகிறாராம்.


சீவல் தயாரிப்பது மிக எளிமையான வழி முறை தான்.

நல்ல நிறுவனங்களிடமிருந்து பாக்கு வாங்கி அதனை தண்ணீரில் ஊற வைக்கிறார்கள். பின் அதனை நுணுக்கி வெயிலில் காய வைக்கின்றனர். சரியான அளவு காய வைத்ததும் சீவல் வடிவில் அது வந்து விடுகிறது. இதனை பின் கவர்களில் போட்டு விற்பனை செய்கின்றனர். அவ்வளவு தான் இங்கு நடக்கும் விஷயம் !

நிறைய பேர் செய்ய வேண்டிய வேலை, சீவலை கவர்களில் போடுவது தான். உள்ளே ஏறக்குறைய முப்பது பெண்கள் அமர்ந்து சீவலை கவரில் போட்டு கொண்டிருந்தனர்.

நான் சென்ற போது, மின்சாரம் இல்லா விட்டாலும், ஜன்னல்களை திறந்து வைத்து விட்டு, சீவல்களை கவர்களில் போட்டு கொண்டிருந்தனர். மின்சார தட்டுப்பாடு இவர்கள் தொழிலை பாதிக்கவில்லை என்பது ஆச்சரியமான, மகிழ்வான தகவல்.

இந்நிறுவனத்தை துவக்கியவர் திரு. சுப்பிரமணியம் செட்டியார். இவர் மறைவுக்கு பின் அவர் மகன் நிறுவனத்தை இப்போது நடத்தி வருகிறார்.

"சீவல் செரிமானத்துக்கு நல்லது. ஆனால் இது தஞ்சை, திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மட்டும் தான் பிரபலம். மதுரையில் போய் சீவல் என்று கேட்டால் தெரியாது" என்றார் நிறுவன மேனஜர் கார்த்திக். "தற்போது சீவல் வியாபாரம் சற்று டல் அடிப்பதாகவும் இதற்கு காரணம் புது தலைமுறை மக்கள் பான் பராக் போன்ற லாகிரி வஸ்துகளுக்கு பழக்கம் ஆகி விட்டது தான் " என்றும் வருத்தப்பட்டார்.

இவர்களின் நிறுவனமும் கூட புதிய மாறுதல்களுக்கு ஏற்ப தங்களை மாற்றி கொண்டு வருகிறது. லெட்சுமி சீவலுக்கு அருகில், மெயின் ரோடிலேயே போர்டு கார் விற்பனை நிலையம் ஒன்றை துவக்கி உள்ளனர்.

சொல்லப் போனால் இப்போது லட்சுமி சீவல் நிறுவனம் உள்ளேயும் போர்டு நிறுவனம் முக்கிய சாலையிலும் வந்து விட்டது. காலத்தின் மாறுதல் !



இது மட்டுமன்றி இவர்கள் நிறுவனம் தற்போது பேப்பர் இண்டஸ்ட்ரீஸ், பிளாஸ்டிக்ஸ், டீ எஸ்டேட்ஸ், கல்வி நிறுவனங்கள், மெஷினரி, ஆட்டோமொபைல், பண்ணை எனப் பல்வேறு துறைகளில் பிரகாசிக்கிறது. தாத்தாவின் பெயரையே கொண்ட அவர் பேரன் சுப்பிரமணியம், வெளி நாட்டில் எம். பி. ஏ முடித்து விட்டு, தற்போது குடும்ப பிசினஸ்சில் இறங்கி, அனைத்து வியாபாரங்களும் இன்று கொடி கட்டி பறக்கிறது . ஆயினும் தாங்கள் துவங்கிய முதல் பிசினஸ் இது என்பதால் இதை இன்றும் தொடர்கின்றனர்.

லெட்சுமி சீவல் என்கிற பெயரை உச்சரிக்காத தஞ்சை மக்களே இருக்க மாட்டார்கள்..  ! இன்று அந்த நிறுவனம் பற்றி அறிந்து கொண்ட மகிழ்வோடு திரும்பினேன். தஞ்சை மண்ணை சேர்ந்தவர்கள் இந்த பதிவை வாசித்தாலும், என்னைப் போலவே மகிழ்வார்கள் என்றே நம்புகிறேன்.

Monday, November 23, 2015

வானவில்: ப்ரேமம்- க்ரெடிட் கார்ட் திருட்டுகள் -வேளச்சேரி க்ராண்ட் மால்

பார்த்த படம்- ப்ரேமம் (மலையாளம்) 

பல்வேறு பருவங்களில் ஒரு ஆணுக்கு வரும் காதல்.. அவனது திருமணத்தில் நிறைவடையும் ஆட்டோகிராப் பாணி கதை தான். ஒன் லைனர் அப்படியே ஆட்டோ கிராபை ஒத்திருக்கிறது.. திரைக்கதை முற்றிலும் மாறுபட்டது. குறிப்பாக இங்கு ஹீரோ - காதலிக்கும் ஒவ்வொரு பெண்ணும் கடைசியில் வேறு யார் கைக்கோ சென்று விடுகிறார்.. கடைசி காதலிலும் அது நடக்க இருந்து - கடைசி நிமிடம் மாறுகிறது..

படத்திற்கு கிடைக்கும் அதீத வரவேற்பு ஆச்சரியப்படுதுகிறது. அத்தனை கொண்டாடப்படும் அளவு ஆக சிறந்த படம் இல்லை.. ஜஸ்ட் ஓகே

அட்டகாசமான நடிப்பு ஹீரோ நிவின் பாலி  தான். என்ன ஒரு இயல்பான பெர்பார்மென்ஸ். பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்லும் இளைஞன் என ஒவ்வொரு கெட் அப்பிலும் நிவின் பாலி தெரியாமல் - அந்த காரக்டர் தான் தெரிகிறது..





மலர்.. தமிழ் பேசும் ஆசிரியை.. கியூட்.. (தமிழில் இந்த ரோலுக்கு ஸ்ருதி ஹாசன் என்றதும் ஆஆஆஆ ! என அலற தான் தோன்றுகிறது.. !; இது  நடந்தால் ப்ரேமம் பார்த்த பலரும் தமிழ் பதிப்பை பார்க்க மாட்டார்கள் !)

ஒரு நல்ல பீல் குட் படம்.. தட்ஸ் ஆல் !

சென்னை ஸ்பெஷல் - க்ராண்ட் மால், வேளச்சேரி

சென்னையில் எத்தனையோ மால்- கள் துவங்கி சக்கை போடு போடுகின்றன. ஆனால் துவங்கி பல வருடம் ஆகியும் தூங்கி வழியும் ஒரு மால் என்றால்  அது வேளச்சேரி க்ராண்ட் மால் தான்.

இத்தனைக்கும் ரொம்ப அட்டகாசமான லொகேஷனில் அமைந்துள்ளது.

விஜய நகர் பஸ் டெர்மினஸ் மற்றும் வேளச்சேரி ரயில் நிலையம் இரண்டுமே மிக மிக - எளிதில் நடந்து செல்லும் தூரத்தில் உள்ளது. ( மால் மிக பாப்புலர் ஆனால் - வாகனங்கள் வெளியில் எப்படி வரும்.. அப்போது இந்த முக்கிய சாலையில் ட்ராபிக் இன்னும் அதிகமாகும் என்ற பயம் இன்னொரு பக்கம்.. )

மால் அதிகம் பிரபலமடையாததற்கு மிக  முக்கிய காரணம் - இங்கு PVR சினிமாவிற்கு தியேட்டர்கள் கட்டி முழுதும் முடித்தும் இன்னும் திறக்காதது தான். ஏன் அவர்களுக்கு அனுமதி வரவில்லை என்பது இப்போது லுக்ஸ் யார் வாங்கினார்கள் என்பதை வைத்து யோசித்தாலே புரிந்து விடும்..

மால்-கள் எல்லாமே - கூட்டம் வர- தியேட்டரை பெருமளவு நம்பும் நிலை தான் உள்ளது போலும்..

தற்சமயம் சில எலக்ட்ரானிக்ஸ் கடைகள், ஒரு சில துணி கடை- சில உணவகங்கள் அவ்வளவு தான் க்ராண்ட் மாலில் உள்ளது. விடுமுறை தினங்களில் கூட ஈ ஆடுகிறது..

எளிதில் சென்று சேரும் இடத்தில் இருக்கும் இந்த மால்- விரைவில் தியேட்டர் துவங்கி - கடைகளும் அதிகமாகி பலருக்கும் பயன்படும் வகையில் - மாற சென்னைவாசியாக விரும்புகிறேன் !

வெளிநாட்டு மோகம் !!

அண்மையில் படித்த இந்த சர்வே சில ஆச்சரிய விஷயங்களை சொன்னது.

இந்தியர்களில் 60 % பேர் வெளிநாட்டில் வேலை செய்ய விரும்புகிறார்களாம் ! அதிலும் சென்னையை சேர்ந்தவர்கள் 71 % வெளிநாடு செல்ல விரும்புகிறார்களாம் !

விரிவான கட்டுரை கீழுள்ள லிங்கில் வாசிக்கலாம் :


66% Indians seek work abroad: Study

Read more at:

ராஜஸ்தான் அரசு ஊழியர்கள்.. இரண்டு திருமணம் ​+ 3 குழந்தை...

ரேடியோவில் காலை 7.15 செய்திகள் கேட்கும்போது, முதல் செய்தியே வித்யாசமாக இருந்தது...

" ராஜஸ்தானில் அரசு ஊழியர்கள் - தங்கள் இரண்டாவது திருமணம் மூலம் மூன்றாவது குழந்தை பெற்று கொள்ள அனுமதி தர வகை செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.. " என்றனர்..

என்னடா இது.. அரசு ஊழியர் இரண்டாவது திருமணம் செய்வதை அரசே ஆதரிக்கிறதா என ஆச்சரியத்துடன் தொடர்ந்து கேட்க..

ராஜஸ்தானில் அரசு ஊழியர்கள் 2 குழந்தைக்கு மேல் பெற்றால் பணியில் நீடிக்க முடியாது என சட்டம் உள்ளதாம் ! இப்படி முதல் திருமணத்தில் 2 குழந்தை பெற்றோர் - பின் விவாகரத்து பெற்று, மறுமணம் புரிந்தால் - அந்த திருமணம் மூலம் இன்னொரு குழந்தை பெற்று கொள்ளலாம் என்று தான் அரசு இப்போது சட்டம் இயற்றுகிறது..

இந்தியாவில் ஒரு மாநிலத்தில் குடும்ப கட்டுப்பாடு குறித்து இவ்வளவு ஸ்ட்ரிக்ட் ஆக இருப்பது தெரிந்து ஆச்சரியமாக இருந்தது !

ரசித்த கவிதை 

ஒரு நொடி கூட ஆகாது.
என் மணிக்கட்டில் ஊரும் பூச்சியைச்
சுலபமாய்க் கொன்றுவிடலாம்.
கொல்லும் அந்த ஒரு நொடி அற்ற
காலத்துடன் அல்லவா
ஓடிக்கொண்டு இருக்கிறது என் கடிகாரம்.
கருணையின் பாடலைப் பாடி அல்லவா
குதித்துக் குதித்துச் செல்கிறது
அந்த மூன்றாவது முள்.- வண்ணதாசன்

அழகு கார்னர் 




டெபிட்/ க்ரெடிட் கார்ட் திருட்டுகள் குறித்து ..

டெபிட்/ க்ரெடிட் கார்ட் - இவற்றில் நடக்கும் திருட்டுகள் குறித்த செமினார் அண்மையில் கலந்து கொண்டேன். அதில் பகிர்ந்து கொண்ட சில கருத்துகள்:
* இன்டர்நெட் மூலம் பண பரிமாற்றம் செய்யும் போது https என்று துவங்கும் வெப் சைட் தான் உபயோக்கிறீர்களா என கவனியுங்கள். மேலும் நீங்கள் பயன்படுத்தும் வங்கியின் லோகோ நன்கு தெரிந்து வைத்து கொள்ளுங்கள். அது சரியாக display ஆகிறதா என்றும் சரி பார்க்கவும் (திருட்டு வேலை செய்வோருக்கு லோகோ சரியாக செய்யும் அளவு திறமை, நேரம் இல்லை )

* வீட்டில் Wifi - எப்போதும் லாக் செய்து வைக்கவும். லாக் ஆகாத wifi மூலம் விஷமிகள் விளையாடிய சம்பவம் ஏராளம் உண்டு..

* ஹோட்டல்களில் பில் கட்ட, உங்கள் டெபிட்/ க்ரெடிட் கார்டை தந்து அனுப்பாதீர்கள். ஸ்கிம்மர் என்ற மெஷின் மூலம் உங்கள் கார்ட்க்கு டூப்ளிகேட் செய்து விட முடியும். எனவே கார்ட் எப்போதும் நம் கண் முன்னே இருப்பது நல்லது

* முகநூலில் பல்வேறு வித செக்கியூரிட்டி features உள்ளன. அவற்றை நாம் சரியாக பயன்படுத்தினால், நமது முகநூல் கணக்கை பாதுகாக்க முடியும்.

Wednesday, November 18, 2015

தொல்லை காட்சி: தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்- கமல், வைரமுத்து இன்னும் பிற

தீபாவளி படங்கள் டிவி யில்..

தீபாவளி படங்களை பொறுத்த வரை சன் டிவி மற்றும் ஜெயா டிவி முந்தியது என்று தான் சொல்லவேண்டும். விஜய் டிவி மாரி மற்றும் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க என்ற ரெண்டு சுமாரான படங்களை திரையிட, சன் ரிலீஸ் செய்த வேலை இல்லா பட்டதாரி குடும்பங்கள் விரும்பி பார்க்கும் படமாய் அமைந்து விட்டது..இப்படம் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாக,  மாலை ஜெயா டிவி பாகுபலி ஒளிபரப்பி TRP ஐ தன்  பக்கம் திருப்பியது..

விஜய் ஸ்டார்ஸ் தீபாவளி ஸ்பெஷல் ஷோ

தமிழ் சானல்களில் விஜய் டிவி காம்பியர்கள் தான் பெயர் சொன்னாலே - அதிக மக்களுக்கு தெரியும் என்கிற அளவில் இருக்கிறார்கள். இதனால், அவர்கள் காம்பியர்களை வைத்தே - விஜய் ஸ்டார்ஸ் என ஒரு நிகழ்ச்சி நடத்தி விட்டனர்....



பாட்டு, டான்ஸ் என ஒரு மணி நேரம் சென்ற நிகழ்ச்சியில் உருப்படியான/ ரசிக்க வாய்த்த ஒரே விஷயம் கலக்க போவது யாரு டீமிலிருந்து வந்து சிரிக்க வைத்தது தான் !

வைரமுத்து சிறப்பு பட்டி மன்றம்

விஜய் டிவியில் வைரமுத்துவின் சிறுகதைகள் பற்றி பட்டி மன்றம்.. !

இப்படி தனி ஒரு மனிதர் பற்றிய பட்டி மன்றம் என்றாலே ரெண்டு பக்கமும் புகழ்ந்து தான் தள்ளுவார்கள்.. இந்நிகழ்ச்சியும் அவ்விதமே.



ஒரு பக்கம் அவரது கதை/ அதன் களன் அற்புதம் என்று பேச, இன்னொரு பக்கம் அவர் ரசனை, மொழி வளம் பற்றி வியந்தனர்..

நிமிடத்திற்கொரு முறை வைரமுத்து ரசிக்கும் விதத்தை காட்ட ஒரு க்ளோஸ் அப்..

அரை நிமிடத்தில்  நடுவர் அவசர தீர்ப்பு தர (நிஜமாய் அரை நிமிடம் மட்டுமே !! மீதம் எடிட்டிங்கில் போனதா தெரியாது ) பின் அரை மணி நேரம் வைரமுத்து பேசினார்; சிரித்தார்; அழுதார்..

சினிமாவில் இருந்து கொண்டு எழுதுவதால் மட்டுமே இந்த மரியாதை என்பதும், தமிழில் மிக அதிக ரசிகர்கள் கொண்டிருந்த சுஜாதாவிற்கு கூட  இப்படி ஒரு நிகழ்ச்சி நடக்கவில்லை என்பதும் மனதை தைத்தது !

வேதாளம் சிறப்பு நிகழ்ச்சி

விஜய் டிவி தீபாவளி இரவு 10 மணிக்கு வேதாளம் பட சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பினர்.

அஜீத்திடம் என்ன பிடிக்கும் என சம்பிரதாய கேள்வி; அவர் நடை, சிரிப்பு என ரசிகர்களின் அதே வித பதில், பெண்கள் சிலிர்ப்புடன் பேசுவது என 5 நிமிடத்துக்கு மேல் பார்க்க முடியாமல் தாண்டி விட்டேன்..

சினிமா ஒரு என்ட்டர்டேயின்மென்ட்; பிடிக்கிறதென்றால் பார்த்து விட்டு போக வேண்டும்; அதை விட்டு விட்டு  இன்னும் எத்தனை காலம் தான் நடிகர்களை - மீடியா இப்படி உயர்த்தி பிடிக்குமோ !!

காபி வித் DD - கமல் பேட்டி 



தூங்காவனம் ரிலீஸ் மற்றும் தனது பிறந்த நாள் இரண்டையும் முன்னிட்டு கமலை பேட்டி எடுத்தார் DD.

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் ஒன்றே ! கமலுடன் சேர்ந்து அமர்ந்து பேச ஒவ்வொருவராய் வந்தனர்.. படத்தின் இயக்குனர் ராஜேஷ் அதில் ஒருவர்..

ஆனால் படம் பற்றி அவர் எதுவுமே பேசவில்லை ! அவரை வைத்து கொண்டும் கமல் தான் பேசி கொண்டிருந்தார். இயக்குனர் ராஜேஷ் எதுவும் பேசாமல் - DD " நீங்க வந்ததுக்கு ரொம்ப நன்றி" என சொல்லி அனுப்பி விட்டார் !!

கமலுக்கு எதற்கு இப்படி ப்ராக்ஸி இயக்குனர்கள் தேவை என புரியவில்லை ! தனது பெயரிலேயே இயக்கி விட்டு போய் விடலாம் !!

நம்ம வீட்டு கல்யாணம் - அட்லி- ப்ரியா & சாந்தனு- கீர்த்தி

முன்பு வாரம் ஒரு முறை DD நம்ம வீட்டு கல்யாணம் நிகழ்வை தொகுத்து வழங்குவார். அதை நிறுத்தி ரொம்ப காலமாயிற்று. தீபாவளிக்கு இரண்டு சினிமா பிரபலங்கள் திருமண நிகழ்வை காட்டினர்..

அட்லி - ப்ரியா திருமணம் பற்றிய சில தகவல்கள் சுவாரஸ்யம்.

அட்லி மட்டுமே ஒரு தலையாய் காதலிக்க, நண்பர் வட்டத்தில் அனைவருக்கும் தெரியுமாம்.

ஒரு முறை ப்ரியா தனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்க வருவதாக தெரிவிக்க, அட்லி நானும் அப்ளை செய்யட்டுமா என கேட்டுள்ளார். முதலில் விளையாடுகிறார் என பிரியா நினைக்க, அப்புறம் நண்பர்கள் மூலம் விஷயம் தெரிந்துள்ளது. அப்புறம் வீட்டில் பேசி சம்மதம் வாங்கி, 1 மாதத்தில் திருமணம் நடந்துள்ளது. ஆக - நாங்கள் காதலர்களாக இருக்கவோ, சுற்றவோ இல்லை என அட்லி புலம்பினார்.

ஹனிமூன் வெளிநாடு செல்லுபோது ப்ரியா பிறந்த நாள் வர- சும்மா வெளியில் போகலாம் என கடலுக்குள் அழைத்து, பின் சினிமா மாதிரி வழி மாறி போய் விட்டோம் என ஒரு நடுக்கடல் ரிசார்ட் கூட்டி சென்று - அங்கு ஒரு பெரிய திரையில் அவரது சிறு வயது முதல் உள்ள புகைப்படங்களால் வீடியோ காட்டி அசத்தி உள்ளார்.. Interesting & Romantic !!

Monday, November 16, 2015

தூங்காவனம் சினிமா விமர்சனம்

தூங்காவனம் : விமர்சனம் 

மகனை கடத்தும் கூட்டத்திடமிருந்து  - அவனை மீட்க போராடும் தந்தையின் ஒரு நாள் நிகழ்வுகளே தூங்காவனம்



ப்ளஸ் 

வழக்கமான மசாலா சினிமாவிலிருந்து மாறுபட்ட கதை. (Sleepless nights பட தழுவல்; ரீ மேக்-கிற்கான உரிய பணம் கொடுத்திருப்பார்கள் என தோன்ற வில்லை !!)

நல்ல காஸ்டிங்

தேவையற்ற சம்பவங்கள் இல்லாமல் நேரே கதை சொன்னது..



மைனஸ்

த்ரில்லர் படம்.. ஒரு நாளில் நடக்கும் கதை.. எனவே விறுவிறுவென சென்றிருந்தால் நன்றாய் இருந்திருக்கும்.. மாறாக படம் இழு இழு என இழுக்கிற உணர்வு.. குறிப்பாக இரண்டாம் பாதி தூங்கா வனம்.. தூங்கும் வனமாகி விடுகிறது..

படம் - எலைட் ஆடியன்சுக்கு தான். சென்னை தாண்டினாலே படம் ஓடுவது சிரமம் தான். காரணம் நமக்கும் சில காட்சிகளில் புரியாமையும், கேள்விகளும் எஞ்சி நிற்கின்றன..



வேறு பெரிய குறைகள் இல்லை தான். ஆனால் இவை இரண்டுமே மிகப் பெரிது !!

இப்படத்தை இணையத்தில் சிலர் அட்டகாசம் என வியந்து பாராட்ட, இன்னொரு பக்கம் " ப்ச்ச்.. சுமார் தான்; ஒண்ணும் கிரேட் இல்லை " என்று கூறி கொண்டிருக்கின்றனர்..

எனது கருத்து இரண்டாவது பிரிவினரை ஒத்து தான் இருக்கிறது !!

மழையில் திணறும் வேளச்சேரி & மடிப்பாக்கம் - படங்கள்

வேளச்சேரி ஓவர் பிரிட்ஜ் அருகே படகு சேவை.. பெரும் சாலையில் ஆறாக ஓடும் தண்ணீர் 

மடிப்பாக்கம்.. பெரும்பாலான வாகனங்களில் நீர் புகுந்தது.. மெக்கானிக்குகள் அடுத்த சில வாரங்களுக்கு செம பிசி 




மடிப்பாக்கம் - தரை தளத்தில் இருக்கும் பலர்  சொந்த காரர் இல்லங்களுக்கு சென்று கொண்டுள்ளனர். சில கிலோ மீட்டர் நடை.. எங்கே போய்  பஸ் அல்லது ஆட்டோ பிடிப்பார்களோ ?


சாலைகளில் ஓடும் ஆறு... தண்ணீரின் வேகத்தை பாருங்கள்.. 






வேளச்சேரி கிராண்ட் மால் அருகே 

வேளச்சேரி வெங்கடேஸ்வரா சூப்பர் மார்கெட் & நாதெள்ளா நகை கடை அருகில் 

அண்மை பதிவு:

தூங்காவனம் சினிமா விமர்சனம்

Saturday, November 14, 2015

வேதாளம்... சினிமா விமர்சனம்

அண்ணன்- தங்கை பாசம்; பழி வாங்கல் இந்த பின்னணியில் வழக்கமான மசாலா படம்...



முதல் பாதி பார்க்கையில் இணையத்தில் ஏன் இந்த படத்தை அதிகம் விமர்சித்தனர்? படம் ஓகே தானே என தோன்றியது.. இரண்டாவது பாதி வந்ததும் தான் - படத்தை அப்படி விமர்சித்ததில் எந்த தவறும் இல்லை என புரிந்தது..

முதல் பாதி குட் என்றால் இரண்டாம் பாதி - குறிப்பாக ப்ளாஷ் பேக் பெரும் ஏமாற்றம் !

அஜீத் - ஒரே பாத்திரம் - ரெண்டு கெட் அப். டாக்சி டிரைவர் ஆன முதல் கெட் அப் தான் கவர்கிறது. இன்னொசன்ட் மாதிரி இருந்து கொண்டு பேய்த் தனமான விஷயங்கள் செய்வது ஈர்க்கவும் ரசிக்கவும் வைக்கிறது. அஜீத் ஸ்க்ரீன் பிரசன்ஸ் - ரசிகர்கள் குதிக்க வைக்கும் டயாலக்ஸ் என முதல் பாதி நிச்சயம் ரசிக்கும் படி செல்கிறது..

சின்ன சின்ன சஸ்பென்ஸ் வைத்து - நல்ல பில்ட் அப் தருகிறார்கள். ஆனால் - அதற்கேற்ற ப்ளாஷ் பேக் தர தவறியது படத்தை சூப்பர் ஹிட் ஆக்காமல் செய்து விடுகிறது.

இரண்டாம் பகுதியில் - பில்ட் அப்பிற்கு நல்ல காரணமும் - வேதாளம் பாத்திரம் இவ்வளவு ஆர்டிபீஷியல் ஆக இல்லாமல் - இயல்பாகவும் இருதிருக்கலாம். ஹூம்



 படத்தில் ரசிக்க வைக்கும் இன்னொரு விஷயம் : லட்சுமி மேனன்- பாத்திரம் மற்றும் நடிப்பு. ஹீரோயின் விட வெயிட் ஆன பாத்திரம்.. அவரது  பெர்பார்மென்ஸ் apt !

சூரி காமெடி பல இடங்களில் சிரிக்கவும், சில இடங்களில் வெறுக்கவும் வைக்கிறது. அவரது மனைவி மற்றும் மாமியாருடன் உள்ள காமெடி மற்றும் அவர் பேசும் ஆங்கிலம் நிச்சயம் சிரிப்பை வரவழைக்கும் !

சுருதி....இப்படி பெரிய ஹீரோ படம் என்றால் போதும், தனக்கு எந்த முக்கிய துவமும் இல்லா விட்டாலும் பரவாயில்லை என எவ்வளவு காலம் ஓட்டுவார் !! குரல் வேறு கர்ண கொடூரம்.. (படம் பார்க்கும் போது தோன்றிய சின்ன விஷயம்: கமலின் தூங்காவனம் விட - வேதாளத்திற்கு அதிக தியேட்டர் கிடைத்தது - கமலுக்கு வருத்தமாய் இருந்திருக்காது... என்ன இருந்தாலும்  வேதாளம் -அவர் மகள் ஹீரோயினாய் நடித்த படமல்லவா !!)

சண்டைகளில் வயலன்ஸ் அதிகம்.. அதுவே படத்திற்கு U / A சான்றிதழும், வரி விலக்கு கிடைக்காமலும்  செய்து விடுகிறது

ஆலுமா, டோலுமா மற்றும் கணபதி பாட்டு மட்டுமே தேறுகிறது.  பின்னணி இசை ஓகே



இயக்குனர் பேட்டிகளில் மிக குறுகிய தயாரிப்பு என பெருமையாய் கூறியிருந்தார். பிரச்னையும் அதுவே. அவசரப்படாமல் இரண்டாம் பாதியில் - திரைக் கதைக்கு மெனக்கெட்டிருந்தால் படம் சூப்பர் ஹிட்டதித்திருக்கும்..

இப்போது ? போட்ட பணத்தை மட்டும் எடுக்கலாம் !

வேதாளம்- அஜீத் ரசிகர்களுக்கு வேட்டை ! மற்றவர்களுக்கு ஜஸ்ட் ஓகே !

Friday, November 13, 2015

கனமழை.. எப்படியிருக்கிறது சென்னை? சென்னை வாசிகள் பேட்டி + படங்கள்

சென்னை.. மழையின் (அன்பு) பிடியில் சிக்கி தவிக்கிறது.. ஜூன் முதல் செப்டெம்பர் வரை தென் மேற்கு பருவ மழை அதிகமில்லை; இதனால் தண்ணீர் பற்றாக்குறை வருமோ என்கிற பயம் என் போன்றோருக்கு வந்து விட்டது..

அக்டோபர் மத்தியில் துவங்கும் வட கிழக்கு பருவ மழையும் தாமதம் ஆனது.. ஆனால் தீபாவளி நேரம் மழை பிச்சு உதறி விட்டது. தீபாவளிக்கு முதல் நாள் செம்ம்ம்ம மழை.. பட்டாசு வியாபாரம் டமார் ஆனது. தீபாவளி அன்று மழையின்றி குட்டி பசங்க இருந்த வெடிகளை  வெடித்து கொண்டாட, ஓரிரு நாளில் மீண்டும் கன  மழை துவங்கி விட்டது. இம்முறை சோகம் என்னவெனில் - முன்பு பெய்த மழை நீர் வடியும் முன்பே அடுத்த மழை வந்ததால் - தெருக்கள் மற்றும் ஏரிகள் நிரம்பி வழிகின்றன..




சென்னை வாசிகள் சிலர் சென்னை மழை பற்றி தங்கள் அனுபவம் பகிர்கிறார்கள் :

லட்சுமி 



எனது வீடு வளசரவாக்கம்; அலுவலகம் இருப்பது நுங்கம்பாக்கம் ஸ்டேர்லிங் சாலை.

தினம் பஸ்ஸில் தான் செல்வேன். இன்று மழை அதிகம் என ஆட்டோ முயற்சித்தேன். ஒருவரும் வரவில்லை; அடுத்து கால் டாக்சி எடுக்க முயல, ஓலா, Uber, TaxiForSure என யாருமே கார் அனுப்ப தயாராய் இல்லை.

TaxiForSure 30 % டிஸ்கவுன்ட் தருவதாகவும், இந்த டிஸ்கவுன்ட் இன்று ( 13 நவம்பர்) வரை மட்டுமே என்றும் அறிவித்திருந்தது. ஆனால் கூப்பிட்டால் கார் வரவில்லை !!

வேறு வழியின்றி பஸ்ஸில் செல்ல முடிவு செய்தேன். வழக்கமாய் கிளம்புவதை விட 15 நிமிடம் சீக்கிரம் 8.45க்கு கிளம்பியும், 11 மணிக்கு தான் அலுவலகம் வர முடிந்தது. ( 3 மடங்கு அதிக நேரம் !!)

வரும் வழியில் சாலைகள் எங்கிலும் தண்ணீர்.. தண்ணீர்.. தண்ணீர். பஸ்ஸில் செல்கிறோமா அல்லது Underwater விளையாட்டு விளையாடுகிறோமா என சந்தேகம் வந்துவிட்டது..



வடபழனி, கோடம்பாக்கம் பாலம் இவற்றை தாண்ட நீண்ட நேரம் ஆகிறது. மேலும் அலுவலகம் இருக்கும் ஸ்டேர்லிங் ரோடு தாழ்வான பகுதி... எனவே நீச்சல் குளம் போல் தண்ணீர். இதில் பல இடங்கள் தண்ணீர் செல்ல ஓட்டைகள் திறந்து வைக்க பட்டிருக்க அவற்றில் விழாமல் வருவது பெரும் சோதனை.. கிட்டத்தட்ட அப்படி ஒரு பள்ளத்தில் விழ வேண்டியது.. எப்படியோ தப்பி அலுவலகம் வந்தேன் !

சரஸ்வதி பிரியதர்ஷினி 



முகப்பேர் இல்லத்திலிருந்து புழலில் இருக்கும் அலுவலகத்திற்கு - ஆபிஸ் காரில் வருவது வழக்கம். ஆபிஸ் கார் என்பதால் - தவிர்க்க முடியாமல் கார் வந்து விட்டது. வீட்டிலிருந்து கார் பிக் அப் செய்யும் இடம் வரை தினம் ஆட்டோவில் வருவேன்; இன்று எந்த ஆட்டோவும் வர தயாராய் இல்லை; ரொம்ப கஷ்டபட்டு ஒரு ஆட்டோ காரரை சம்மதிக்க வைத்தேன் (ம்ம்ம் ! டபிள் ரேட் தான் !!)

நாங்கள் கார் ஏறும் திருமங்கலம் ஜங்க்ஷன் கொடுமையான நிலையில் இருந்தது. வேறு இடத்தில் எங்களை அழைத்து கொள்வதாக சொல்லி விட்டு கார் டிரைவர் - அந்த இடத்திற்கு வந்தார். ஆபிஸ் வர 20 நிமிடம் வழக்கமாய் ஆகும்.. இன்று ஒரு மணி நேரம் ஆனது.. பயணத்தில் எடுத்த படங்கள் சில இதோ..

க்றிஸ்டினா



எனது அலுவலகம் - மவுண்ட் ரோடு; வீடு- கோவிலம்பாக்கம். மழை காரணமாக ஒரு வாரமாய் கால் டாக்சி மூலம் தான் சென்று வருகிறேன். இன்று ஆபிஸ் செல்ல 3 மணி நேரம் ஆனது. (வழக்கமாய்: 45 நிமிடங்கள்)



சென்னை சாலைகளை பார்க்க ரொம்ப கஷ்டமாக இருந்தது; தண்ணீர் தான் கண்ணுக்கு தெரிந்தது,.... சாலைகள் அல்ல.. மேலும் சாலைகளில் ஆங்காங்கே பல Pathholes திறந்து கிடப்பதை காண அதிர்ச்சியாக இருந்தது.

போலவே பணக்காரர்கள் ஏரியா என கருதப்படும் கோட்டூர் புரத்தின் கொடுமையான மறுபக்கத்தை இன்று கண்டேன்..  !

அம்பரீஷ் 



வேளச்சேரியில் வீட்டிலிருந்து கிண்டியில் உள்ள ஆபீசுக்கு பைக்கில் தான் செல்வேன். இன்று மழை அதிகம் என்பதால் காரில் செல்லலாம் என எண்ணி முயன்றால் - எந்த கால் டாக்சியும் வர தயாராய் இல்லை.

வேறு வழியின்றி பைக்கில் சென்றேன்.. நீந்தி சென்றேன் என்று தான் சொல்லவேண்டும்..



15 நிமிட பயணம் - இன்று ஒரு மணி நேரம் ஆனது. சாலைகளில் மழை  நீர் ஓடும்போது, அப்படி ஓடாத சாலைகளாக பார்த்து நீங்கள் மாறி மாறி பயணிக்க வேண்டும்.. இதனாலும், அதிக ட்ராபிக் - காரணமாகவும் - பயண நேரம் அதிகமாகிறது

சென்னையில் கழிவு நீர் மற்றும் மழை நீர் வெளியேற போதுமான அளவு வசதிகள் இல்லை. இது தான் மழை நீர் அதிகம் தேங்க காரணம். இப்படி மழை நீர் தேங்கும் போது, அதில் கழிவு நீர் (Drainage water) சேர்ந்து கொள்ள, தோற்று நோய்கள் பரவும் வாய்ப்பு மிக அதிகம்..

கிண்டி மற்றும் ஆதம்பாக்கம் NGO காலனி போன்ற இடங்களில் மரங்கள் விழுந்து கிடப்பதால் - பைக்கில் மட்டுமல்ல காரில் செல்வோரும் கூட - பாதிக்க படுகின்றனர்.

மிக  அதிகம் பாதிக்க படுவது நடந்து செல்வோர் தான். திறந்து கிடக்கும் ஓட்டைகள், மின்சார ஒயர்கள் இருக்குமோ என்ற பயம் வேறு..

ட்ராபிக் போலிசை பெரிதும் குறை சொல்ல முடியாது. மழையில் நின்ற படி - முடிந்த வரை சரியான பாதைகளை சொல்லி தான் அனுப்புகிறார்கள்.

தெருவில் வசிக்கும் விலங்குகள் நிரம்ப பாதிக்க படுகின்றன. அவற்றிற்கு இந்த நேரம் சாப்பிட எதுவும் கிடைப்பதில்லை. சில நாள் முன் நான் மழையில் செல்லும் போது - ஒரு பைக் ஓட்டி - ஒரு பூனை மீது ஏற்றி விட்டு நேரே சென்று விட்டார். தலையில் நல்ல அடி.. பின்னாலேயே வந்த நான் - அதனை ப்ளூ க்ராஸ் எடுத்து சென்றும் அந்த பூனை இறந்து விட்டது. மழையும் காரணமாக இத்தகைய விபத்துகள் - மனிதர்களுக்கும் நடக்கிறது

வேளச்சேரி- தரமணி லிங்க் ரோடு - படகு விடும் நிலையில் தான் உள்ளது; இன்னும் முன்னேற்றம் இல்லை

Velachery- Tharamani link Road...

மிக முக்கியமாக சொல்ல  வேண்டியது - சென்னையில் டிரைனேஜ் சிஸ்டம்- இதனை நாம் இம்ப்ரூவ் செய்தே ஆக வேண்டும்.. இது தான் மழையின் போது வரும் தொந்தரவுகளுக்கு  நல்ல தீர்வை தரும். .
************

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் ! (Thanks: Tamil Hindu - For this part...)


தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் அறிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்.

தெற்கு அந்தமானில் நிலை கொண்டிருந்த புதிய காற்றழுத்த தாழ்வு நிலையானது மேலும் நகர்ந்து இன்று காலை 8.30 மணியளவில் வங்கக்கடலில் தென் கிழக்கே நிலை கொண்டது. இந்த தாழ்வு நிலையானது நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். என்பதால் தமிழகத்தில் மழை தொடரும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 34 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. புழல் பகுதியில் 21 செ.மீ, மீனம்பாக்கத்தில் 15 செ.மீ., தரமணி, கொலப்பாக்கம் ஆகிய பகுதிகளில் 13 செ.மீ. மழை பெய்துள்ளது." என்றார்.

அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை:
அடுத்த 24 மணி நேரத்துக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய பகுதிகளிலும் புதுச்சேரியிலும் கனமழை பெய்யும். சென்னையில் தொடர்ந்து மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
***********
தொடர்புடைய பதிவு:

சென்னை மழை: நவம்பர் 2015... பல்வேறு இடங்கள்.. பிரத்யேக படங்கள்..

அண்மை பதிவு:

வேதாளம் - விமர்சனம் 

சென்னை மழை: நவம்பர் 2015... பல்வேறு இடங்கள்.. பிரத்யேக படங்கள்..

மடிப்பாக்கம்

RK நகர் (வட சென்னை)


பேருந்திற்கு காத்திருக்கும் மக்கள் 


முகப்பேர் அருகே 


வேளச்சேரி - தரமணி லிங்க் ரோடு 

மேற்கு மாம்பலம் 


பல்வேறு இடங்களில் சாலைகள்/ பாலங்கள் நிலை குறித்த தனி பதிவு இதோ ..

கனமழை.. எப்படியிருக்கிறது சென்னை?  சென்னை வாசிகள் பேட்டி + படங்கள் . 

அண்மை பதிவு:

வேதாளம் - விமர்சனம் 
Related Posts Plugin for WordPress, Blogger...