கடந்த 30-35 வருடங்களில் தமிழகத்தில் ஒரு தனி மனிதர் மரணத்துக்கு இவ்வளவு பேர் வருந்தியது எம். ஜி. ஆருக்கு பின் கலாமுக்கு தான் !
காந்தி மற்றும் காமராஜர் வரிசையில் வைத்து போற்றப்பட வேண்டியவர் கலாம்.. நிச்சயமாக காந்தி / காமராஜர் என்று சொன்னால் சராசரி தமிழனுக்கு எவ்வளவு மரியாதை கலந்த உணர்வு வருகிறதோ அதே வித உணர்வுகள் தான் கலாம் என்று சொன்னாலும் என்றென்றும் வரும் ....
கலாமின் அறிவியல் சாதனைகள் ஒரு புறம் என்றால், எந்த பின்புலமும் இன்றி ஜனாதிபதியான சாதனை, பதவியில் இருந்தபோது அவரது நேர்மை, என்றென்றும் ஆசிரியராய் இருந்த எளிமை... இப்படி எத்தனையோ விஷயங்கள் உண்டு...
இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியாவை முன்னேற்ற வேண்டும் என்ற கலாம் அவர்களின் கனவு.. அது இளைஞர்களால் மட்டுமே சாத்தியம் என அவர் நம்பினார் ...
அது எப்படி இளைஞர்களால் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றி விட முடியும்?
ஒவ்வொரு இளைஞனும் தன் வாழ்வில் இலக்கை பெரிதாய் நிர்ணயம் செய்து கொண்டு - அதை நோக்கி பயணித்தால் - நிச்சயம் அவன் வளர்ச்சி அடைவான்.. இப்படி ஏராள இளைஞர்கள் வளர்ச்சி - நிச்சயம் இந்தியாவை பொருளாதார ரீதியில் மிக பெரும் அளவில் முன்னேற்றும் என்ற எளிய - சாத்தியமாக கூடிய விஷயத்தை தான் கலாம் அவர்கள் தொடர்ந்து முன் வைத்தார்...
அவரின் அன்பான அணுகுமுறைக்கு மாணவர் மத்தியில் மிக நல்ல வரவேற்பு இருந்தது.
லட்சியம் பெரிதாக இருக்க வேண்டும்; சின்னதான லட்சியம் கொள்வது மிக பெரிய குற்றம் என்று அடிக்கடி சொல்வார்.. உண்மையான விஷயம் இது..
மரணம் எல்லாருக்கும் வருவது தான்... 70 வயதுக்கு மேல் வாழும் எல்லா நாளும் போனஸ் தான். எத்தனையோ முதியவர்கள் மரணம் எப்போது வரும் என்று காத்திருக்க, 70க்கு பின் சட்டென்று வரும் மரணம் போன்றதொரு கொடுப்பினை வாழ்வில் வேறெதுவும் இல்லை... அந்த கொடுப்பினை நமது கலாம் அவர்களுக்கு கிடைக்க பெற்றது..
அரசியல் சார்பின்றி - மாணவர்கள் -இளைஞர்கள் - சமூகத்தை தொடர்ந்து ஊக்கப்படுத்த கலாம் போல இன்னொரு தலைவர் இந்தியாவில் இல்லை.. இது பெரும் வெற்றிடம் தான்..
கலாம் பற்றி சாரு
கலாம் அவர்கள் பற்றி சாரு கடந்த 4 நாட்களாக கிண்டல் அடித்தோ, குறை சொல்லியோ பதிவுகள் எழுதி வருகிறார்..
ஒரு எம். பி தொடர்ந்து சாருவிற்கு போன் செய்து கலாம் பற்றி சொல்வாராம்.. கலாம் பார்க்குபோதேல்லாம் ஒரு திருக்குறள் சொல்லுங்கள் என்று படுத்துவதாகவும், சாருவிடம் திருக்குறள் ஒவ்வொரு முறையும் கேட்டதாகவும் செல்கிறது கதை...
இதில் ஏதாவது ஒரு பகுதியாவது நம்பும்படி உள்ளதா ?
சாருவிற்கு எந்த எம். பியாவது தொடர்ந்து போன் செய்வாரா? சாருவின் இமேஜ் பிரசித்தி பெற்றது. இவரோடு தொடர்பில் இருக்கிறார் என்றாலே "ஒரு மாதிரி" தான் பார்ப்பார்கள்... சர்வ நிச்சயமாய் எந்த எம். பியும் இவருடன் தொடர்ந்து தொலை பேச வாய்ப்பே இல்லை..
அடுத்து கலாம் அவர்கள் பார்க்கும் போதெல்லாம் ஒரு திருக்குறள் சொல்லி படுத்தியாக சொல்வது... கலாம் அவர்களை சந்தித்ததாக ஆயிரக்கணக்கனோர் இதுவரை எழுதியுள்ளனர். இந்த குற்ற சாட்டை எவரும் சொன்னதில்லை..
இறந்த பின் ஒருவர் பற்றி தவறாக எழுதுவதை இதனால் தான் தவிர்க்க வேண்டும்.. வந்து பதில் சொல்ல அவர் இருக்கா மாட்டார் இல்லையா? எவராலும் அவர் கவனத்துக்கு எடுத்து செல்ல முடியாது அல்லவா?
அதிலும் தினம் ஒரு திருக்குறள் சொல்ல சாரு தான் சரியான ஆளா? அவரிடம் தினம் ஒரு பலான மேட்டர் கேட்டார் என்று சொன்னால் நம்பலாம்.. திருக்குறளுக்கும் சாருவுக்கும் என்ன சம்பந்தம் ??
மறைந்த ஒரு மாபெரும் தலைவர் பற்றி இப்படி அவதூறாக எழுதுவ து என்ன விதமான மனநிலை? நீங்கள் கலாமை ஒரு தலைவர் என்றோ அவர் வாழ்ந்த வாழ்க்கை அற்புதம் என்றோ சொல்ல வேண்டாம், எத்தனையோ பேரின் உணர்வுகளை காயப்படுத்தாமல் குறைந்த பட்சம் அமைதி காக்கலாம்.. இந்த அடிப்படை நாகரீகம் கூட இல்லாதவர்களை - மனிதர்கள் என்ற வகையிலேயே சேர்க்க முடியாது !