டிவி பக்கம் : ஷின்சன் & போண்டா கொரில்லா
உங்களுக்கு ஷின்சன் அப்படின்னா யாருன்னு தெரியுமா? என்னது தெரியாதா? Atleast ஹீமாவாரி? என்ன சார் எந்த உலகத்தில் இருக்கீங்க? இதிலிருந்து என்ன தெரியுதுன்னா ஒன்னு உங்களுக்கு கல்யாணம் ஆகலை அல்லது உங்க வீட்டில் உள்ள பசங்க பெரியவங்களாய்ட்டாங்க!!
"Hungamaa" அப்படின்னு ஒரு சேனல். சூப்பரான இங்கிலீஷ் சீரியல்களை தமிழில் டப் பண்ணி போடுறாங்க; சின்ன பசங்க எப்ப பார்த்தாலும் ஷின்சன் பாத்து சிரிச்சுக்கிட்டு இருக்காங்க.
ஷின்சன் தான் அண்ணன். ஏழு வயசு. செம வாலு; அவன் தங்கை ஹீமாவாரி ஒரு வயது கூட பூர்த்தியாகாத கை குழந்தை ; ஆனா அவனை விட வாலு; ஹீமாவாரி செய்யும் கூத்துக்கெல்லாம் ஷின்சன் வாங்கி கட்டிக்குவான். இவங்க ரெண்டு பேரின் அம்மா ஒரு ஷாபிங் பிரியை. அப்பா உங்களையும் என்னையும் மாதிரி மனைவிக்கு பயந்தவர்.. (ஹி ஹி). ஒரு நாளைக்கு எவ்ளோ மணி நேரம் இந்த சீரியல் வருதோ பார்க்கும் போதெல்லாம் இதான் ஓடுது.
இதை தவிர இன்னொரு சீரியலில் சுவாரசியமான இன்னொரு பெயர் காதில் அடிக்கடி விழும்.. போண்டா கொரில்லா.. ம்ம் நல்லா வைக்கிராங்கடா பேரு ...
முரளியும் எண்ணூறும்
முரளிதரன் எண்ணூறு விக்கட் எடுக்காமல் போய் விடுவாரோ என சென்ற வானவில்லில் எழுதி இருந்தேன். என் கணிப்பை பொய்யாக்கி எண்ணூறு விக்கட் எடுத்து முடித்தார் முரளி. கடைசி நாள்.. கடைசி விக்கட் எடுத்து எண்ணூரை தொட்டார்; அவர் அணியும் வெற்றி பெற.. இதை விட மகிழ்வான வழியனுப்புதல் அவருக்கு இருக்க முடியாது. பாகிஸ்தான் மீது நமக்கெல்லாம் எப்படி கோபம் உண்டோ அதே போல் தான் இலங்கை அணி மீதும்...இருந்தும் முரளியை ரசிக்காமல் இருக்க முடியாது. காரணம் தமிழர் என்பதும் இருக்கலாம். அதை விட முக்கியமாய் அந்த வெள்ளை சிரிப்பு. அவரது பவுலிங் ஆக் ஷ ன் காரணமாய் உலகம் அவரை முழுமையாய் (ஷேன் வாரன் போல) மதிக்கவில்லை, ஏற்று கொள்ள வில்லை என்பது சற்று சோகம் தான்.
ரசித்த கவிதை
வேலிக்கு வெளியே
தலையை நீட்டிய என்
கிளைகளை வெட்டிய
தோட்டக்காரனே!
வேலிக்கு அடியில்
நழுவும் என் வேர்களை
என்ன செய்வாய்?
- அப்துல் ரகுமான்
(இந்த கவிதை இந்த வருட ஆறாம் வகுப்பு தமிழ் பாட புத்தகம் - சமச்சீர் கல்வியில் வாசித்தது!!)
ப்ளாகுகளில் இந்த வாரம் ரசித்தது
மதராசபட்டினம் படத்தை பாரதிராஜா, பாக்யராஜ், ராஜேந்தர் இவங்க எடுத்தா எப்படி இருக்கும்னு எழுதிய வித்யாவின் இந்த பதிவு !! நீங்கள் இதுவரை படிக்கா விடில் படித்து சிரியுங்கள் !
தமன்னா Vs அனுஷ்கா
சமீபத்தில் சுறா பட பாடல் ஒன்று டிவியில் பார்க்க நேர்ந்தது. என்னங்க இது !! பாட்டு ஆரம்பிக்கும் போதே விஜய் தமன்னா போட்டிருக்கிற முக்கால் டிராயரை கீழே இறக்கி இறக்கி மறுபடி போடுறார்! இந்த கருமத்தை மறுபடி மறுபடி வேற காட்டுறாங்க! இயக்குனருக்கும், டான்ஸ் மாஸ்டருக்கும் என்ன ரசனையோ போங்க! அவங்க தான் இப்படின்னா இந்த தமன்னா ஏன் இப்படி நடிக்க ஒத்துக்கணும்?
தமன்னா கட்சியிலிருந்து விலகி அனுஷ்கா கட்சியில் சேர இதை விட வேற காரணம் வேணுமா சொல்லுங்க?
நண்பர் ரகு: தமன்னவுக்காக நாம ரெண்டு பெரும் கொஞ்ச நாள் சண்டை போட்டோம்; போயிட்டு போகுது; என்னோட நண்பரான உங்களுக்காக தமன்னாவை உங்களுக்கே விட்டு குடுத்துடுரேன். எனக்கு அனுஷ்கா போதும். ஆனா அந்த ஏரியாவுக்கு வராதீங்க; ஏற்கனவே கேபிள், ஜாக்கி போன்ற மிடில் ஏஜ் மக்கள் போட்டியிலே இருக்காங்க. :))
அய்யாசாமிக்கு வந்த சத்திய சோதனை
அய்யாசாமி பெட்ரோல் பங்கில் போய் பெட்ரோல் போட்டார். போடும் முன் ஐநூறு ரூபாய் தந்தார். அங்கிருந்த ஒருவர் மீதம் நானூறு ரூபாய் தந்தார். பின் பெட்ரோல் போட்டு முடித்ததும் இன்னொருவரும் மறுபடி நானூறு ரூபாய் ரெண்டாம் முறையா தந்தார். அய்யாசாமி குழம்பியவாரே வண்டியுடன் பெட்ரோல் பேங்க் வெளியே வந்தார். பல முறை பெட்ரோல் கம்மியா போட்டு நம்ம கிட்டே காசு அடிக்கிறாங்க ; இதை திரும்ப தரணுமா என ஓர் எண்ணம்; பாவம் அவங்க கை காசிலிருந்து தர வேண்டி வரும்னு இன்னொரு எண்ணம்; ரெண்டாவது எண்ணம் ஜெயித்தது. மறுபடி போய் அந்த எக்ஸ்டிரா பணத்தை அவங்களிடம் குடுத்துட்டு வந்துட்டார். ம்ம் சத்திய சோதனை!! ஆனா அய்யாசாமி ஜெயிச்சிட்டார்!!
அந்த ரெண்டு பேரும் அய்யாசாமிக்கு தேங்க்ஸ் கூட சொல்லாம " நீ ஏண்டா குடுத்தே? " என ஒருவரை ஒருவர் திட்டிகிட்டாங்க.
தமிழிஷ் மற்றும் இண்ட்லி
தமிழிஷ் இப்போ இண்ட்லி என்ற இணைய தளத்துடன் இணைந்து விட்டது .. இண்ட்லி மூலம் உங்களை புதிதாக தொடர்கிறார்கள் என தினம் சில மெயில்கள் வருகின்றன. மகிழ்ச்சி தான். ஆனால் நம்ம ப்ளாகிலேயே ஒரு தொடர்வோர் பட்டை வைத்திருக்கோம். இந்த எண்ணிக்கை அதிகமானால் மகிழ்கிறோம். நண்பர்கள் இண்ட்லி மூலம் தொடர்ந்தால் இங்கு எண்ணிக்கை கூடாது இல்லையா? (என்ன இது சின்ன புள்ள தனமா இருக்குன்னு நீங்க கேட்டாலும் மனசுல நினைக்கிறதை சொல்றேங்க). இதனால என்ன சொல்றேன்னா, நீங்க இண்ட்லி மூலம் தொடர்ந்தாலும், இங்கேயும் தொடர்வோரில் சேர்ந்து இந்த சின்ன பையனை (நான் தான்! நான் தான் !!) ஊக்கபடுத்துங்க !ஓகேவா ?