Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Saturday, June 30, 2012

இப்படியும் ஒரு தாய்

வேப்ப மரத்தின் கீழே அந்த குழந்தை கிடந்தது. பிறந்த சில மணி நேரமே ஆன குழந்தை.. தொப்புள் கொடி நறுக்கப்பட்டு, ஒரு துணியில் சுற்றப்பட்டு கிடத்தப்பட்டிருந்தது.

வாசல் பெருக்க வந்த வனஜா குழந்தை சத்தத்தை கேட்டாள். முதலில் யார் வீட்டிலோ கத்துகிறது என்று தான் நினைத்தாள். வேப்ப மரம் அவள் வீட்டிலிருந்து கூப்பிடு தூரம் தான். சற்று நேரத்தில் வேப்ப மரத்தடியில் நின்ற நாயும் அதன் அருகில் தான் குழந்தை சத்தமும் வருகிறது என தெரிந்தது.
நடந்து சென்று பார்த்தவள் அதிர்ந்து போனாள்.

குழந்தை வயிற்றில் இருந்து வடியும் ரத்தத்தை நாய் நாக்கால் சாப்பிட்டு கொண்டிருந்தது. நாயை முதலில் விரட்டினாள்.

அந்த குரூரத்தை உணர்ந்த அவள் உடல் நடுங்க ஆரம்பித்தது

" ஐய்யய்யோ ! பச்சை குழந்தை ! யாரு போட்டது "

குழந்தையை வீட்டுக்கு எடுத்து போகவும் மனசில்லை. அங்கேயே போட்டு போனாலும் நாய் மறுபடி வருமே என பயம். " என்னங்க என்னங்க" என தன் கணவனை கூவி அழைத்தாள்.

வீட்டின் உள்ளே தூங்கி கொண்டிருந்தவன் எழுந்து வரவில்லை.

பக்கத்து வீட்டு சண்முகம் எட்டி பார்த்தார். " என்னம்மா?"

" பிறந்த பச்சை குழந்தையை யாரோ கொண்டு வந்து போட்டுருக்காங்க; நாய் வந்து இங்கே நிக்குது"

வயதான சண்முகம் பதறி போய் ஓடி வந்தார். குழந்தை முகத்தில் ஆங்காங்கு கீறல்கள். நாயின் வேலையாய் இருக்கணும்

" என்ன பாக்குறே ? தூக்கு குழந்தையை " என்றார்.

" தூக்கிட்டு போய் எங்கே வைக்கிறது? "

" உன் வீட்டுல வை; யார் என்னன்னு விசாரிப்போம்"

" என் வீட்டு காரர் என்ன சொல்வாரோ? "

" நான் பேசிக்கிறேன் தூக்கிட்டு போ "

சற்று தயங்கிய படி தூக்கினாள். குழந்தை வீரிட்டு அழுதது. உள்ளே தூக்கி வந்தவள், தன் கணவனை எழுப்பினாள்.

" என்னடி இவ்ளோ சீக்கிரம் எழுப்புறே " என்று எழுந்தவனுக்கு வீட்டினுள் ஒரு குழந்தையை பார்த்ததும் ஒன்றும் புரிய வில்லை.

வனஜா அனைத்தையும் சொன்னாள். " சண்முகம் சார் தான் இங்கே வச்சிருக்க சொல்லிருக்கார்; இப்போ வந்துடுவார்"

வனஜா நினைத்த மாதிரி அவள் கணவன் கோபிக்க வில்லை. "யார் பிள்ளையா இருக்கும்? யாராவது வேண்டாதவங்க எடுத்து கொண்டு வந்து போட்டிருப்பாங்களா " என்றான்.

" தெருவில என்ன நடக்குதுன்னே உங்களுக்கு தெரியாது. எல்லாம் அந்த மூணாவது வீட்டுக்காரி தான் "

" யாரு? சரசா?"

" ஆமா "

" என்னாடி சொல்றே"


" பக்கத்து வீட்டு அக்கா கூட சொல்லிக்கிட்டே இருந்தாங்க. அவள் வயிறு பெருசா இருக்குன்னு. இதுக்குன்னே எப்பவும் வயிறை மறைக்கிற மாதிரி பெரிய துணியா போட்டுக்கிட்டு இருந்தா. வெளியிலேயே அதிகம் வர்றதில்லை. கமுக்கமா இருந்து பிள்ளை பெத்திருக்கா "

" வீட்டுலேயேவா பிள்ளை பெத்திருப்பாங்க ?"

" ஆமா. எல்லாம் அவள் அம்மா காரி கூட இருக்கால்ல. அவ தான் நைட்டோட நைட்டா பிரசவம் பாத்து காலையில் பிள்ளையை கொண்டு வந்து மரத்தடியில் போட்டுருக்காளுவ"

" அவள் புருஷன் வந்து போயிக்கிட்டா இருக்கான்? "

" எங்கே வந்தான்? அவன் எந்த ஊரில இருக்கானே தெரியலை. சண்டை போட்டுக்கிட்டு போயி மூணு வருஷம் ஆவுது. "

"அப்ப ? சே ! என்ன அசிங்கமோ?"

" அதான் விஷயம். புருஷன் கூட இல்லாம புள்ளை பெத்திருக்கா இல்ல. அதான் நைசா கொண்டு வந்து போட்டுட்டாங்க "

" இப்படி கூடவா இருப்பாங்க. நாய் கடிச்சு பிள்ளை செத்திருந்தா என்ன ஆவறது?"

" சனியன் பிடிச்சதுங்க. உருப்படவே மாட்டாளுங்க"

வனஜா மீண்டும் வெளியே வந்தாள். தெருவில் ஆங்காங்கு கூடி நின்று பேச ஆரம்பித்தார்கள். வனஜா வெளியே வந்ததும் அவளை நெருங்கி விபரம் கேட்டனர்.

" ஆமா. நான் பாத்தப்போ நாய் கவ்விட்டு இருந்துச்சு....."

அதே கதை. அலுக்காமல் சொன்னாள்.

சண்முகம் நான்கைந்து வீடுகளுக்கு சென்று பேசி விட்டு சோர்வாய் வந்தார். " யார் செஞ்சிருப்பாங்கன்னே தெரியலையே"

" சரசு வீட்டுலே கேட்டீங்களா? "என்றாள் வனஜா.

" எப்புடி கேக்குறது? கூட அவ புருஷன் இல்லையே? உங்க வீட்டு பிள்ளையான்னு அங்கே போய் கேட்க முடியுமா?"

பக்கத்த்து வீட்டு ரமணி நாலு வீட்டுக்கு கேட்கிற மாதிரி திட்ட ஆரம்பித்தாள்.

படம்: நன்றி : இணையம் 
" கழிசல்ல போறவ.. எந்த சிறுக்கி இந்த வேலை பண்ணிருக்கா. நாய் வந்து கடிச்சிருக்கு. அப்படியே போட்டுருக்காளே. இவள்லாம் ஒரு அம்மாகாரியா?"

பல வீடுகளிலிருந்தும் ஆட்கள் வெளியே வந்து விட்டனர். சரசு வீட்டில் மட்டுமே யாரும் வெளியே வர வில்லை.

பலருக்கும் சரசு மீது தான் சந்தேகம்.

" எம் பொண்ணுக்கு வயித்துல கட்டி. ஆபரேஷன் செய்யணும்னு சொன்னுச்சு அந்தம்மா. ரெண்டு பேருமா சேர்ந்து என்ன பண்ணி வச்சிருக்காளுங்க பாரு "

ஆள் ஆளுக்கு ஜாடை மாடையாய் சரசுவையும் அவள் அம்மாவையும் திட்ட தொடங்கினர்.

“ என்ன தான் பண்றது இப்போ?"

" போலிசுக்கு சொல்ல வேண்டியது தான்; அவங்க வந்து விசாரிக்கட்டும்"

உள்ளூர் காவல் நிலையத்துக்கு போன் செய்தார் சண்முகம். அரை மணியில் போலிஸ் ஜீப் வந்து சேர்ந்தது.

" யாரும்மா பார்த்தது? " விசாரணை ஆரம்பமானது.

" தெருவில யாரும் மாசமா இருந்தாங்களா?"

"............"

யாரும் பதில் சொல்ல வில்லை.

" என்ன யாரும் பதில் சொல்லலை"

" எங்களுக்கு தெரிஞ்சு யாரும் நிறை மாசம் இல்லீங்க "

"அப்ப வேறு ஏரியாவில இருந்து இங்கே கொண்டு வந்து போட்டிருக்கணும்"

" அப்படிங்களா?"

சரசு பற்றி ஏனோ யாருமே மூச்சு விட வில்லை. போலீசிடம் மாட்டி விட்டால், சண்டைக்காரியான அவள் அம்மா எல்லாரிடமும் சண்டை போடுவாள் என்கிற பயமா.. அல்லது வேறு என்ன காரணமோ?

" எங்க கூட ஸ்டேஷனுக்கு வந்து கம்பிலயின்ட் எழுதி குடுத்துட்டு வாங்க. ஏம்மா. நீதானே முதல்ல பார்த்தே. நீ வா.."

சண்முகம் , வனஜா, அவள் கணவன் குழந்தையுடன் போலிஸ் ஜீப்பில் ஏறினர்.

" சார் குழந்தையை என்ன பண்ணுவீங்க?"

" அநாதை குழந்தைங்க இல்லம் இருக்கு. அங்கே தான் விடணும்; அம்மா காரி மனசு மாறி வந்து வாங்கி கிட்டா உண்டு. முதல்ல நாய் கடிச்சதுக்கு டாக்டர் கிட்டே காட்டணும் "

போலிஸ் வண்டி புழுதியை கிளப்பி கொண்டு விரைந்தது.


வண்டி சென்று பத்து நிமிடம் கழித்து சரசு வீடு திறந்தது. வெளியே வந்தது சரசுவே தான். தெருவில் நின்று பேசி கொண்டிருந்தவர்கள் பார்வை, நைட்டி அணிந்த அவள் வயிறு மீதே இருந்தது.

அவர்கள் பார்வையை முற்றிலும் புறக்கணித்த சரசு அருகிலுள்ள கடைக்கு சென்று " ஒரு பாக்கெட் பிஸ்கட் குடுங்க" என்றாள்.

*********



NEWS ITEM IN TODAYS TIMES OF INDIA

*********
Newborn Baby rescued from roadside

CHENNAI: Police rescued a newborn baby found abandoned on the roadside in Pallikaranai on Friday morning. 

Pallikaranai police handed over the baby boy to a children's home in Tambaram. At 6am on Friday, passersby heard a baby's cry and found the child wrapped in a towel on the roadside. 

Police said the baby was given first aid at a private hospital and later shifted to the children's hospital in Egmore where the child was kept under observation for a couple of hours. The infant was found with a part of his umbilical cord intact. Investigation is on to find whether a single mother abandoned the baby. Police are also checking records of hospitals to know about the deliveries in the past few days to trace the parents, a police officer said. 

Nobody has come forward claimed the baby so far. 
**************


Friday, February 18, 2011

ஆணும் பெண்ணும் - சிறுகதை

குளிப்பதற்காக பாத் ரூமுக்குள் வாணி நுழைந்த அடுத்த நிமிடம் செல்போன் சிணுங்க ஆரம்பித்தது. கதவைத் திறந்து கொண்டு வெளியே வருவதற்குள் நின்று விட்டது. அவசரமாய் குளிக்க ஆரம்பித்த சற்று நேரத்தில் லேண்ட் லைன் அலறியது. " அவராகத்தான் இருக்கும்!  செல்போனை எடுக்க வில்லை என்றதும் லேண்ட் லைனில் யாருடனாவது பேசிக்கிட்டிருக்கிறாளோ என செக் பண்ணியிருப்பார்".

யோசித்தவாறே குளித்து முடித்து உடை மாற்றும் போது மீண்டும் அழைத்தான் நிதின்.

" போனை கூட எடுக்காம என்ன பண்ணிக்கிட்டிருந்தே?"
"குளிச்சிக்கிட்டிருந்தேங்க"
" இப்போ அங்க மணி என்ன ?"
"பதினொன்னு"
"இப்பத் தான் குளிக்கிறியா?"
"......"
பேச்சை மாற்ற எண்ணியவள் " சாப்பிட்டீங்களா?" என்றாள்.
"ஆச்சு. சப்பாத்தி. தினமும் ரொட்டி சப்பாத்தின்னு சாப்பிட்டு போர் அடிச்சிடுச்சு எனக்கு"
" ம்ம்... என் சமையல் அருமை தெரியணும்ல"

ஒரு சில நொடி மௌனத்திற்கு பிறகு " அடுத்த வீட்டு ரவி இன்னிக்கு எந்த ஷிப்ட் போறான் ? " என்றான்.

ரவி ஷிப்ட்டில் வேலைக்கு போவதால் இப்போ வீட்டில் இருப்பானோ, அதனால்தான் வாணி போனை எடுக்கலையோ என்று அடுத்த சந்தேகம்!

"தெரியலைங்க. அவங்க வீட்டுல யாரையும் இன்னிக்கு நான் பாக்கலை "
"அவன் உன்னை பாக்குற பார்வையே சரியில்லை. ஜாக்கிரதையா இருன்னு சொல்ல வந்தேன்.  வீட்டை பூட்டிட்டேள்ள?”

"ம்ம்"
" பிளைட் எட்டு மணிக்கு வந்துடுச்சுன்னா டின்னர் சாப்பிட வந்துடுவேன்னு நினைக்கறேன்"

அவன் பேசி முடித்ததும் அலுப்புடன் நாற்காலியில் சாய்ந்தாள். திருமணமாகி ரெண்டு வருடமாகிறது. " ஒரு வேளை குழந்தை வந்திருந்தால், இவ்வளவு தூரம் சந்தேகப்பட மாட்டானோ என்னவோ? ம்ம்... கடவுள் இன்னும் கண் திறக்கலை"  அடிக்கடி தோன்றி மறையும் எண்ணம் மறுபடி..

வேலை விஷயமாக வெளி நாடு அல்லது உள் நாட்டிலேயே எங்காவது ஒரு ஊர் என்று மாதத்திற்கு பத்து நாளாவது டூர் போவான் நிதின்.


அந்த பத்து நாளும் அவளுக்கு கொடுமையாய் இருக்கும். சமைக்கவே பிடிக்காது. ஒரு ஆளுக்காக சமையல் என்ன வேண்டியிருக்கு என்று  சோம்பேறித்தனம் வந்து விடும். கண்கள் டி.வியை பார்த்துக்  கொண்டிருந்தாலும் மனம் வேற எதையாவது நினைக்கும். எவ்வளவு தான் புலம்புவது? வயதான காலத்தில் அம்மாவை ஏன் கஷ்டப்படுத்த வேண்டும் என்று நிறைய விஷயங்களை வாணி அவர்களிடம் சொல்வதே இல்லை.

"பி. எஸ். சி.க்கு பதில் அப்பாவிடம் சண்டை போட்டாவது இஞ்சினீரிங் படிச்சிருந்தா இப்போ வேலைக்கு போயிருக்கலாம். தப்பு பண்ணிட்டேன்" என்று அவ்வப்போது ஆட்கொள்ளும் சுய வெறுப்பு..

" இரவு என்ன சமைப்பது? ம்ம்.. தினமும் இது ஒரு பிரச்சனை.  என்ன சமைப்பது என்று யோசிப்பதே பாரமாய் ஆகி விட்டது.  மதியம் ஒரு தூக்கம் போட்டு விட்டு, மாலை காய்கறி வாங்கிகிட்டு வந்து டின்னர் ரெடி பண்ணனும்..."   யோசித்தவாறே காலை சாப்பாட்டை முடித்தாள்.

இரவு எட்டரைக்கு கார் வந்தது. வாசலை திறந்து வைக்க முடியாதபடி கொசுக்கள். ஜன்னல் வழியே பார்த்து விட்டு மகிழ்ச்சியோடு ஓடி வந்தாள். நிதின் காருக்கு பணம் தந்து விட்டு வாணியை பார்த்து சிரித்தான்.
" எப்படி இருந்துச்சு மீட்டிங்?"
"ம்ம்"
உள்ளே வந்து சாக்ஸை கழட்டியவாறு " காபி குடு" என்றான்.

காபி போட உள்ளே ஓடினாள்.  சோபாவில் அமர்ந்தவனின் கண்ணில் முதலில் பட்டது போனும், அருகிலிருந்த காலர் ஐ டியும். மெதுவாய் சென்று காலர் ஐ டியை அழுத்தி எங்கிருந்தெல்லாம் போன் வந்ததென பார்த்தான். அம்மா நம்பர், அப்பா நம்பர்,அதற்கடுத்து அவள் தோழி திவ்யாவின் நம்பர்.." பார்த்துவிட்டு மீண்டும் சோபாவிற்கு வந்து விட்டான்.

காபி குடிக்கும் போது அருகில்வந்த வாணியிடம் " இதென்ன உன்னிடமிருந்து புது ஸ்மெல்? புதுசா ஸ்ப்ரே ஏதும் வாங்கினியா " 

" நீங்க இல்லாம என்னிக்குங்க நான் அதெல்லாம் வாங்கியிருக்கேன்? குளிச்சிட்டு வாங்க சாப்பிடலாம் " என்றாள்.

குளிக்கப் போகும் போதுதான் வாணியின் செல்போன் கண்ணில் பட்டது. கதவை மூடி விட்டு இன்கமிங் கால்களை ஆராய்ந்தான். ஏதோ ஓர் தெரியாத எண்ணிலிருந்து இரு முறை போன் வந்துள்ளதே ! சந்தேகத்துடனே குளித்தான்.

சாப்பிட்டு முடித்ததும் " டயர்டா இருக்கு படுக்கலாம்" என்றான்.

" என்னங்க ஒன்னுமே பேச மாட்டேங்கறீங்க. என்ன ஆச்சு உங்களுக்கு? "

படுத்த பிறகு கேட்டான். " ஏதோ ஒரு நம்பரிலிருந்து இன்னிக்கு ரெண்டு தடவை போன் வந்துருக்கே யார் அது? "

" ஐயோ ஆரம்பிசிட்டீங்களா? அது ஏதோ கிளப்பிலேந்து போன் பண்ணி மெம்பராகுங்கன்னாங்க ".

"அவங்க எதுக்கு ரெண்டு தடவை போன் செய்யணும்?"

" முதல் தடவையே " இண்டரெஸ்ட் இல்லைன்னு சொல்லிட்டேன். தெரியாம மறுபடி போன் பண்ணிட்டு சாரி கேட்டாங்க"

"இதை என்னை நம்ப சொல்றியா?"

""ஐயோ ஏங்க இப்டி பேசுறீங்க. எப்படி புரிய வைக்கிறது. நான் என்ன தப்பா நடந்துட்டேன்? எதை வச்சு ஏன் மேலே சந்தேக படுறீங்க? " பேச்சு அழுகையாக மாறியது.

நிதின் மெளனமாக படுத்திருந்தான். நாளை அந்த நம்பருக்கு போன் செய்து பார்த்திருந்தா உண்மைலேயே அது கிளப் தானான்னு தெரிஞ்சிருக்கும். ச்சே!  இவள் கிட்டே கேட்காம அதைச் செய்திருக்கலாம். இப்ப அழ ஆரம்பிச்சிட்டாளே!"

"சரி போதும் நிறுத்தறியா? நான் தூங்கணும்"

" குளவி கூட்டில கை வச்சிட்டமோ? இன்னிக்கு தூங்கின மாதிரி தான். எப்படி வரும் தூக்கம்? ம்ம்.. அந்த சைனாக் காரி என்னமா மசாஜ் பண்ணா?  சான்சே இல்ல. கடைசி நாள் தான் பார்த்தோம் அவளை. முன்னாடியே வராம போய்ட்டா " அவனுள் எண்ணங்கள் ஓடியபடியே இருக்க...

வாணியின் விசும்பல் தொடர்ந்தது.
*******

நேற்றைய பதிவுகள் :



Wednesday, March 31, 2010

ஒரு தற்கொலை - மூன்று கோணங்கள்

மீட்டிங்கில் இருந்தபோது மொபைல் மௌனமாய் அதிர்ந்தது. " ஆட்டோ டேவிட்" என்ற பெயர் பார்த்து உடன் வெளியே வந்து பேசினேன். குழந்தையின் ஆட்டோ காரர்.

" சார்...உங்க தெருவில ஒரு டெத் ஆயிடுச்சு"
"யாரு டேவிட்?"
"உங்க வீட்டுக்கு நாலு வீடு தள்ளி இருக்காரே.. ரவி.. அவர் முதல் பொண்ணு தூக்கு மாட்டி செத்துடுச்சு சார் "
அதிர்ந்தேன் " யாரு கயலா? எட்டாவது தான் படிக்கிறா அவளா? "
"ஆமா சார்".

கயல்.. பதிமூன்று வயது பெண்.. ஒல்லியாக கருப்பாக கண்ணாடி அணிந்திருப்பாள். அவளது தங்கை ஐந்தாவது படிப்பவள். எப்போதும் தெருவில் சைக்கிள் ஒட்டியவாறு இருப்பாள். அவளை அடிக்கடி நான் கிண்டல் செய்வேன். கயல் வயதுக்கு வந்த பெண் என சற்று தள்ளி இருப்பது வழக்கம்.

சென்ற வருடம் கயல் பெரியவளான போது மண்டபத்தில் வைத்து பெரிய விழாவாக செய்தார்கள். பதிமூன்று வயது பெண்ணுக்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்தது?

அதன் பின் மீட்டிங்கில் மனம் செல்ல வில்லை. எனது பாஸிடம் சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்பி விட்டேன்.

வண்டி ஓட்டும் போது ஏதேதோ நினைவுகள். எனக்கும் பதினோரு வயது பெண் உள்ளதால், இந்த வலி, அதன் தாக்கம் அதிகமாய் உணர முடிகிறது.

தெருவிற்குள் நுழையும் போது போலீஸ் ஏற்கனவே வந்திருந்தது. ஹாலில் கயல் கிடத்தபட்டிருந்தாள். பள்ளி யுனிபார்மில் தூங்குவது போல் தான் இருந்தாள்.

போலீஸ் கயலின் அம்மா அப்பா தவிர மற்றவர்களை வெளியே அனுப்பி விட்டு வரிசையாய் கேள்வி கேட்க ஆரம்பித்தனர். நான் ஹாலுக்கு சற்று வெளியே உள்ள திண்ணையில் நின்றதால் அவர்கள் பேசுவது தெளிவாக கேட்டது

கோணம் - 1

" யார் முதலில் பார்த்தது? "

" நான் சாப்பிட வீட்டுக்கு வந்தேன்; ரொம்ப நேரம் தட்டி கதவு திறக்கலை; ஜன்னல் வழியா தூங்குராலோன்னு பார்த்தேன். பேனில் தொங்கிட்டுருந்தா சார் " கயலின் அப்பா விம்மினார்.

" அவங்க அம்மா எங்க போய்ட்டாங்க? "

" சார் நான் மகளிர் சுய உதவி குழுல இருக்கேன்; அங்கே கூடை பின்ன கத்து தராங்க; அதுக்கு போயிருந்தேன்"

அம்மா போனது எத்தனை மணி, அப்பா வந்தது எந்த நேரம் என கேள்விகள் நீண்டது.

" மேலிருந்து இறக்கினது யாரு? "

"பக்கத்துல கட்டிட வேலை நடக்குது; அங்கே வேலை செய்றவங்க தான் வந்து பூட்டை உடைச்சு அவளை இறக்கினாங்க"

" இப்படி தொங்கினவளை இறக்கிருக்க கூடாது.. எப்படி நீங்களா இறக்கலாம்? நாங்க செய்ற வேலையை நீங்களே செய்வீங்களா? "

" சார் உயிர் இருக்கும்னு நினைச்சேன். உடனே டாக்டர் கிட்டே தூக்கிட்டு ஓடினேன். பாத்துட்டு உயிர் போய்டுச்சுன்னு சொல்லிட்டார்"

எனக்கு அருகிலிருந்தவரிடம் எப்படி போலீஸ் வந்தாங்க என நான் கேட்க, " கயல் அப்பா தான் போய் போலீசில் சொன்னார். பிரச்சனை ஆகிட கூடாதுன்னு தான்" என்றார்.

கேள்விகள் வேறு திசையில் செல்ல ஆரம்பித்திருந்தன.

" பெரியவளாகிட்டாலா? "

" ஆகிட்டா. போன வருஷம்.."

" கடைசியா எப்ப மென்சஸ் வந்தது? "

பதில் சொல்லாமல் கயல் அம்மா கதறினார். " ஐயோ கயலு என்ன கேள்வி கேக்குறாங்க"

" சொல்லும்மா" அதட்டினார் எஸ். ஐ.

" போன வாரம் தாங்க வந்துது"

"உண்மையாவா"

" ஆமாங்க"

" படிப்பில எப்படி"

"ரொம்ப சுமாரா தாங்க படிப்பா"

" திட்டுவீங்களா?"

" படி; டிவி பாக்காதேன்னு சொல்லுவேன்" கயல் அம்மா விசும்பலோடு சொன்னார்.

" ஏன் இன்னிக்கு ஸ்கூலுக்கு போகலை? "



" பத்தாவது பரீட்சை நடக்குது; பாதி நாள் தான் ஸ்கூல்; மத்தியானமா போவா" 

" ஸ்கூலில் திட்டு வாங்குவாளா? "

"ஆமாங்க; ரொம்ப கண்டிப்பான ஸ்கூல் அது படிக்கலைன்னா அடிப்பாங்க; திட்டுவாங்க”.

அது கோ- எட் பள்ளியா என எஸ். ஐ. உறுதி செய்து கொண்டார்.

"கடைசியா எப்ப திட்டினதா சொன்னா ? "

"ரெண்டு நாள் முன்னாடிங்க"

கோணம் - 2

நான் வெளியே வந்தேன். அவர்களுக்கு நேர் எதிர் வீட்டில் வித்யா என்ற பெண்ணிடம் தான் அவள் டியுஷன் படித்தாள். அவர்கள் வீட்டினுள் சென்று நின்றேன். தெருவில் உள்ள இன்னும் சில பேரும் அங்கு தான் நின்று கொண்டிருந்தனர். வித்யா அழுது ஓய்ந்திருந்தாள். " என்ன வித்யா.. உன் கிட்டே தான சாயங்காலம் முழுக்க இருப்பா? என்ன காரணமா இருக்கும்? "

" அவ ரொம்ப டிப்ரஷனில் இருந்தா அங்கிள்..எனக்கு வாழவே பிடிக்கலைன்னு அடிக்கடி சொல்லுவா"

" என்னம்மா இது!! அவங்க அம்மா கிட்டே சொல்ல வேண்டியது தானே? "

" சொல்லிருக்கேன்; அவங்க பெருசா எடுத்துக்கலை. சைகியாடரிஸ்ட் கிட்டே அப்பாயின்மன்ட் வாங்கி தந்தேன். அது எக்மோர் ரொம்ப தூரம்ன்னு போகலை; அப்புறம் பக்கத்தில் வேளச்சேரியில் கூட ஒரு டாக்டர் பேர் சொல்லி, போங்கன்னு சொன்னேன்; போகலை"

கயலின் பக்கத்துக்கு வீட்டு அம்மா பேச ஆரம்பித்தார். " அவளுக்கு எங்கே பொண்ணு மேல அக்கறை? சும்மா ஊர் சுத்திக்கிட்டே இருப்பா; புருஷன் தான் சம்பதிக்கிறாநேன்னு பேசாம இருக்க வேண்டியது தானே? இந்த கூடை பின்ன கத்துக்கிட்டு என்ன செய்ய போறா? இப்ப பொண்ணு போயிட்டாளே"

வித்யாவின் அம்மா அதனை ஆமோதித்து பேசினார் " பசங்க பள்ளி கூடத்தில் இருந்து வந்து பசியோட கிடக்கும்; இது எங்காவது போய்டும்; சும்மா அடி, உதை.. வயசுக்கு வந்த பொண்ணை எவ்ளோ திட்டுறது, அடிக்கிறது? கொஞ்சம் கூட அவ மேல அக்கறை இல்லை "

போலீஸ் கயல் வீட்டிலிருந்து வெளியே வர பேச்சை நிறுத்தினர்.
" ஆம்புலன்சுக்கு சொல்லியாச்சா? "
"வந்திட்டுருக்கு சார்".

இதனிடையே ஒரு புகை பட காரர் வந்து கயலை போட்டோ எடுத்து கொண்டிருந்தார்.

எஸ். ஐ பக்கத்துக்கு வீடுகள், கயலின் தங்கை என ஒவ்வொருவராக விசாரித்து கொண்டிருந்தார்.

ஆம்புலன்ஸ் வந்து விட, கயல் போஸ்ட் மார்டம் செய்யபட எடுத்து செல்லபட்டாள்.

கயலின் அம்மாவின் அழுகை மிக அதிகமானது. " இன்னும் கொஞ்ச நேரம் பாத்துக்குரேங்க.. விடுங்க.. எல்லாத்துக்கும் ஆசை படுவாளே.. எல்லாம் வாங்கி தருவோமே; இப்ப இதுக்கும் ஆசை பட்டாளே.. காலையில் கூட ரப் நோட்டு கேட்டா.. வாங்கிட்டு வந்து குடுத்தேனே.. "

கயலின் தந்தை கம்பியை பிடித்தவாறு தலை குனிந்து நின்று கொண்டிருந்தார்.. அழ வில்லை; அவர் அழுதால் நல்லாயிருக்குமே என தோன்றியது.

" ம்ம் இந்த பூமியில் அவளுக்கு உப்பும் தண்ணியும் அவ்ளோ தான். போய்ட்டா " என்றா வித்யாவின் அம்மா. ஆம்புலன்ஸ் புறப்பட்டது. கயல் அம்மா, உறவினர்கள் அழுகையில் எனக்கும் அழுகை எட்டி பார்த்தது .

கோணம் -3

ஆம்புலன்சும் போலீஸ் வேணும் சென்ற பின் வீட்டினுள் சென்றேன். அந்த அறை!! ஓரிருவர் நின்றிருந்தனர். வித்யா அம்மா கையில் ஒரு காகிதம்.
" என்னமோ இங்கிலிசில் எழுதிருக்கு. என்னான்னு புரியலை" என சொல்லி கொண்டிருக்க, " குடுங்க" என கேட்டு வாங்கினேன். அவள் உறவுக்கார பெண் ஒருத்தி அவள் ரப் நோட்டிலிருந்து அந்த கடிதத்தை எடுத்திருந்தாள். ஆங்கிலத்தில் தெளிவாக அடித்தல் திருத்தல் இன்றி எழுதி இருந்தாள். யாருக்கு எழுதப்பட்டது என்ற தகவலோ, என்று எழுதப்பட்டது என்ற விபரமோ இல்லை. அந்த கடிதம்….

“நீ ஏன் நேற்று வர வில்லை? நேற்று நீ வருவாய் என காத்திருந்து ஏமாந்தேன். உனக்கு நினைவிருக்கா உன்னை நான் எப்போது பார்த்தேன் என? அப்போது நாம் ஐந்தாவது படித்து கொண்டிருந்தோம். உன்னை தோழி வீட்டில் பார்த்தேன். என்ன பேர் என கேட்க " ராஜ்... பிரின்ஸ் ராஜ்" என உன் பள்ளி கூடம் பேர் சேர்த்து சொன்னாய். உன்னுடம் இருக்கும் நேரம் எனக்கு எவ்வளவு சந்தோசம் தெரியுமா? என்னை சிரிக்க வைப்பது நீ மட்டும் தான். ஒரு முறை நீ என்னை தள்ளி விட நான் கீழே விழுந்து அழ ஆரம்பித்து விட்டேன். அப்போது நீ என்னை " இதுக்கெல்லாமா அழுவாங்க? " (இது மட்டும் தமிழில் எழுத பட்டிருந்தது) என தேற்றினாய். நீ சொன்ன ஜோக்குகளை என்னால் மறக்க முடிய வில்லை. உன்னையும் தான். அனைத்துக்கும் நன்றி “.

" என்ன? என்ன?" என்றார் வித்யா அம்மா. " ஒண்ணுமில்லை. சும்மா எதோ எழுதிருக்கா" .. கயல் அப்பாவை தேடி அவரிடம் அந்த கடிதத்தை தந்தேன். மிக சாதாரணமாய் வாங்கி உள்ளே வைத்து கொண்டார். ஏற்கனவே படித்திருக்கலாம்!!

அதிர்ச்சியாக இருந்தது!! பதிமூன்று வயது பெண்!!

இன்னும் சிறிது நேரத்தில் பள்ளியிலிருந்து ஆட்டோவில் வர போகும் எனது பெண்ணுக்காக காத்திருக்க ஆரம்பித்தேன். மனம் அவளிடம் இதனை எப்படி சொல்வது என யோசிக்க ஆரம்பித்திருந்தது.

Monday, December 21, 2009

வயது 13

"பள்ளி மாடியிலிருந்து மாணவன் விழுந்தான்" என்ற செய்தி நீங்கள் தமிழ் பத்திரிக்கை வாசிப்பவரானால் சென்ற வாரம் கவனித்திருக்கலாம்.

சென்னை: டிசம்பர் 3. அம்பத்தூர் சிவாஜி நகரை சேர்ந்தவர் குமரன். இவரது மகன் சதீஷ். அம்பத்தூர் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான். சம்பவ தினத்தன்று பள்ளி முடிந்து மாணவர்கள் அனைவரும் கீழே இறங்கும் போது படியின் அருகிலுள்ள துவாரம் வழியாக இவன் கீழே விழுந்து விட்டான். பள்ளியை சேர்ந்தோர் இவனை அருகிலுள்ள மருத்துவ மனைக்கு கூட்டி சென்று தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்தனர் அவனுக்கு கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவன் மறுபடி நடக்க ஆரம்பிக்க சில மாதங்கள் ஆகும் என்றும் அவனுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் தெரிவித்தனர். போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் விசாரணை இருக்கட்டும்.. அன்று நடந்த சம்பவங்களை பார்ப்போமா?

**********

மூணாவது பெல் அடித்து விட்டது. " அப்பா சீக்கிரம்" அவரமாக அப்பாவின் வண்டியிலிருந்து இறங்கி புத்தகம் மற்றும் சாப்பாட்டு பையுடன் வேகமாக ஓடினான் சதீஷ். " ஹோம் வொர்க் செய்ய வில்லை" என்ற பயம் வேறு உறுத்தி கொண்டிருந்தது.

சதீஷ் மிக சுமாராக படிப்பவன். அவனுக்கு ஆர்வமெல்லாம் விளையாட்டில் தான். எப்போதும் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் தான் பார்ப்பான். ஓட்ட பந்தயம், கால் பந்து இவற்றில் கில்லாடி. ஆனால் அம்மா அப்பா இருவரும் சொல்வது "படிடா; விளையாட்டா சோறு போடும்? "

எவ்வளவு படித்தாலும் மண்டையில் ஏற மாட்டேங்குது. சில மிஸ் நடத்தினால் நன்கு புரிகிறது. ஆனால் பல மிஸ் சுத்த மோசம். போன வருடம் வரலாற்று பாடத்திற்கு வந்த மிஸ் எவ்வளவு நல்லவங்க!! பாடம் மட்டுமல்லாது அதன் முழு விவரமும் பொறுமையாய் சொல்வார்கள். அந்த பாடத்தில் மட்டும் சதீஷ் ஐம்பதுக்கு மேல் வாங்கினான். மற்ற பாடங்களில் பாஸ் செய்வதே எப்போதோ ஒரு முறை தான் நடக்கும்.

சுந்தரி மிஸ் கிளாஸ் டீச்சர். ஏற்கனவே வந்து சேர் முழுக்க உட்கார்நிதிருந்தார் . இவன் தயங்கி தயங்கி நின்றான். நிமிர்ந்து அவனை பார்த்தார். " ஏன் லேட்? "

" கெஸ்ட் வந்திருந்தாங்க மிஸ்"

" கெஸ்ட் வந்தா நீ என்ன பண்ணே? சமைச்சியா ? "

இப்போது வகுப்பில் சிரிப்பு சத்தம். " இல்ல அப்பா கொண்டு வந்து வர லேட் ஆகிடுச்சு"

" கெஸ்ட்டால் லேட்டா? அப்பாவால் லேட்டா?"

" அவங்க வந்ததால அப்பா கொண்டு வந்து விட லேட். '

" ஏதோ ஒரு காரணம்.... போ. இனிமே காரணம் கீரணம் சொன்னே பாரு"

உள்ளே போய் அமர்ந்தான். " சீக்கிரம் வந்து தொலைய வேண்டியது தானடா" கணபதி கிசு கிசுத்தான்.

அனைவரிடமும் ஹோம் வொர்க் நோட்டுகள் ஒரு பெண் வாங்கி கொண்டிருந்தாள். ஹோம் வொர்க் செய்யாத சதீஷ் எப்படி தப்பிப்பது என யோசிக்க ஆரம்பித்தான். "இப்போ தான் காரணம் சொல்லதேன்னு சொன்னாங்க. அதுக்குள் அடுத்த பிரச்சனை".

நேற்று இரவு சித்தப்பா வெளி நாட்டிலிருந்து வந்தார். அவனுக்கு சித்தப்பாவை ரொம்ப பிடிக்கும். சட்டை, பந்து, சென்ட்டு என நேற்று முழுதும் குஷி ஆக இருந்தது. காலை எழுந்தது லேட். அவனுக்கு பள்ளி வரவே விருப்பமில்லை. " அப்பா நான் ஹோம் வொர்க் செய்யலை. ஸ்கூல் போகலைப்பா" என்றான். " அங்கே போய் எழுதிக்க கிளம்பு" என்று சிம்பிள் ஆக முடித்து விட்டார் அப்பா. அவர் சொன்னால் அதற்கு மேல் பேச்சு இல்லை.

என்ன சொல்லலாம்? "நோட்டு கொண்டு வரலைன்னு சொல்லிடலாமா? " நேற்று ஒருத்தன் அப்படி தான் சொல்லி தப்பித்தான். அந்த பெண் அருகில் வந்து விட்டாள்.

" நோட்டு மறந்திட்டு வந்துட்டேன்"

முறைத்தாள். " ஏன்"

" மறந்துட்டேன்"

அவள் சதீஷை நம்ப தயாரில்லை. " மிஸ் சதீஷ் ஹோம் வொர்க் கொண்டு வரலை " உரக்கக் குரல் கொடுத்தாள்.

" ஏன் என்னவாம்?"
" மறந்துட்டானாம் "

உடனடியாக மிஸ் சொன்னாள் " அவன் பைய்ய பாரு". சதீஷுக்கு தொண்டை அடைத்தது. அந்த பெண் பையை கேட்டாள். சதீஷ் தயங்கினான். அவளே பிடுங்கினாள். திறந்து தேட, ஆங்கில ஹோம் வொர்க் நோட்டு வந்து விட்டது. அவளே பிரித்து பார்த்தாள். பின் மிஸ்ஸிடம் எடுத்து சென்று தந்தாள். கண்ணாடியை அணிந்து கொண்டு சுந்தரி மிஸ் பார்த்தார். ஹோம் வொர்க் எழுதலை என தெரிந்ததும் நோட்டு பறந்தது. அவனது பெஞ்சுக்கு முதல் பெஞ்சில் விழுந்தது.

"எழுதலை; கேட்டா பொய் சொல்றியா? யார் கிட்டே கத்து கிட்டே? "

முதல் பெஞ்ச் நபர்களிடமிருந்து ஸ்கேல் எடுத்து கொண்டாள். சதீஷ் கையிலும் முதுகிலும் சரா மாறியாக விழுந்தது அடி.



" கெட் அவுட்; வெளியே போ"

" மிஸ் கெஸ்ட் வந்ததாலா தான் மிஸ். நாளைக்கு எழுதுறேன்"

" கெட் அவுட். வந்தது லேட்டு. ஹோம் வொர்க் எழுதலை. பொய் வேற. மத்த சப்ஜக்ட்டாவது எழுதினியா? "

தயங்கி சொன்னான். " இல்ல மிஸ்"

"அப்படியா இன்னிக்கு முழுக்க வெளியே நில்லு. லாஸ்ட் பீரியட் நான் வருவேன் இல்ல.. வச்சிக்குறேன் "

சதீஷ் தலை கவிழ்ந்தவாரே வெளியேறினான்.

" என் மூடை கெடுக்குரதுக்குன்னே வர்றானுங்க.. முதல் கிளாசே இப்படியா?"

கைகளை கட்டி கொண்டு தலை குனிந்தவாறு வாசலுக்கு சற்று வெளியே நிற்க துவங்கினான்.

சதீஷ் நின்ற சில நிமிடத்தில் இன்னோர் மாணவன் தாமதமாய் வந்தான். அவன் நன்கு படிப்பவன். சுந்தரி மிஸ் " கோ.. கோ.. " என்று கூறி விட்டார். "படிப்பவனுக்கு ஒரு சட்டம். படிக்காதவனுக்கு ஒரு சட்டம். ஹும்"

மிஸ் பாடத்தை துவங்கி விட்டார். பாடத்தில் மனம் செல்ல வில்லை. மெளனமாக கீழே பார்த்தான். காரில் பிரின்சிபால் வந்து இறங்குவது தெரிந்தது. " போச்சு இன்னிக்கு வந்திருக்காரா? அப்ப ரவுண்ட்ஸ் வருவாரே?"

"சே! இன்னிக்கு நான் வந்திருக்கவே வேணாம். எல்லாம் இந்த அப்பாவால் வந்தது"

பெண்கள் இவனை பார்த்து சிரித்து சிரித்து பேசிய மாதிரி இருந்தது. அவர்களை பார்ப்பதை தவிர்க்க முயன்றான். ஆனாலும் கண்கள் தானாக அவ்வபோது சென்றது.

சற்று நேரத்தில் பிரின்சிபால் ரவுண்ட்ஸ் வந்து விட்டார். " என்ன..? என்ன விஷயம்" இவனை பார்த்து கேட்டார்.

சுந்தரி மிஸ் முன்னே வந்து பதில் சொன்னார். " லேட்டா வந்தான் சார். ஹோம் வொர்க் செய்யலை. இதில நோட்டு கொண்டு வரலைன்னு பொய் சொல்றான்"

ஒன்னு விடாம சொல்றாளே பாவி என நினைக்கும் போதே பிரின்சிபால் அடிக்க ஆரம்பித்து விட்டார். " ஹோம் வொர்க் எழுதுறதை விட வேற என்ன ...........வேலை? "
" உன் மேல ரெகுலர் கம்பலேயின்ட் வருது. உங்க அப்பாவை கூட்டிட்டு வா நாளைக்கு" அடி கொடுத்தவாரே பேசினார்.

சதீஷுக்கு கிட்டத்தட்ட அழுகை வந்தது. " பொண்ணுங்க முன்னாடி அழுவ கூடாது" என்ற வைராக்கியத்தில் அழாமல் நின்றான்.

அடுத்ததடுத்த வகுப்புகள் மிஸ்கள் வந்து குசலம் விசாரித்தனர். கோ- எட் பள்ளி என்பதால் அனைத்தும் மிஸ்கள் தான்.

மதியம் சாப்பிடவே பிடிக்க வில்லை. தன் இருக்கைக்கு சென்று கணபதி அருகே அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தான். "இப்பவாவது உட்காரலாமா? கிளாஸ் மிஸ் வந்துட கூடாதே" என்ற பயம் வேறு. பாதி சாப்பிட்டு விட்டு மீதத்தை கொட்டினான்.

"இந்த பத்து வருஷத்தில் எந்த மிஸ்சும் யாரையும் முழு நாள் வெளியே நிற்க வச்சதில்ல. இந்த மிஸ் ஏண்டா இப்படி பண்றாங்க? " கணபதி புலம்பினான்

மதியம் வந்த மிஸ்ஸிடம், தலை வலி கிளும்புரேன் என சொல்லி பார்த்தான். " என்னடா நடிக்கிறியா? போய் கிளாஸ் டீச்சர் கிட்டே கேட்டுட்டு வா"

"அதுக்கு கேக்காமலே நிக்கலாம்" என எண்ணியவாறு நின்றான்.

ஒரு வழியாய் கடைசி வகுப்பு வந்து விட்டது.

காலையில் இங்கிலீஷ் I எடுத்த சுந்தரி மிஸ் இப்போது இங்கிலீஷ் II எடுக்க வந்திருந்தார்.

" நாளைக்காவது ஹோம் வொர்க் எழுதிட்டு வருவியா?" கேட்டவாரே அவன் பதிலுக்கு காத்திராமல் உள் சென்றார்

இந்த மிஸ்ஸை ஏதாவது பண்ணனும் என வெறுப்பு வந்தது. சதீஷ் அமைதியாய் நின்று கொண்டிருந்தான்.

கடைசி மணி அடிக்க ஐந்து நிமிடம் இருந்தது.

" மிஸ்"

பெரும் சத்தம் கேட்டு சுந்தரி மிஸ் திரும்பினாள்.

" என்னை அவமான படுத்திட்டீங்க இல்ல! நாள் முழுக்க வெளியே நிக்க வச்சிடீங்க.. எவ்ளோ அடி அடிச்சீங்க. நான் போறேன் மிஸ்" சொல்லியவாறு கிளாசை விட்டு ஓடினான் .

" டேய் டேய்" என கத்தியவாறு சுந்தரி மிஸ் வெளியே வந்து பார்த்த போது, குட்டி சுவர் மீது ஏறி மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்து கொண்டிருந்தான் சதீஷ்.

Wednesday, November 25, 2009

அன்பு

சாப்பிட்டு கொண்டிருந்த ராகவன் தட்டை தூக்கி எறிந்தான். தட்டு குழம்பு  வைத்திருந்த  பாத்திரம்  மேல் பட்டு  கீழே விழுந்தது. தட்டிலிருந்த சாதம் தரையெங்கும்  சிதறியது.
 
நித்யா ஓடி வந்து குழம்பு பாத்திரத்தை எடுத்தாள். அதற்குள் முழுதும் கொட்டி விட்டது.
 
" மனுஷன் நிம்மதியா சாப்பிட முடியலே. சாப்பிடும் போது தான் எல்லா பிரச்னையும் பேசணுமா?" பெருங்குரலில் கத்தினான். நித்யா ஏதும் பேசாமல் தரையை சுத்தம் செய்யும் வேலையில் இருந்தாள்.



 
" இது இல்லை .. அது இல்லை.. எல்லாம் இப்ப தான் பேசணுமா?"
 
"இல்லைன்னா இல்லைன்னு தானேங்க சொல்ல முடியும்?"
 
" அதுக்கு இதான் நேரமா? வந்ததும் வராததுமா சொல்ல வேண்டியது; இல்லாட்டி சாப்பிடும் போது பேச வேண்டியது. .. ச்சே! "
 
முகுந்த் சத்தமில்லாமல் சாப்பிட்டு கொண்டிருந்தான். பத்தாம் வகுப்பு படிக்கும் அவனுக்கு நாளைக்கு அரையாண்டு பரீட்சை. " ஆரம்பிச்சிட்டாங்களா? இன்னைக்கு படிச்சா மாதிரி தான்" 
 
முகுந்த் சாப்பிட்டு  முடித்து விட்டு அந்த வீட்டில் இருந்த ஒரே தனி அறையினுள் நுழைந்தான். வெளியில் சத்தம் இன்னும் குறைந்த பாடில்லை.

" நான் என்ன உங்க அப்பன் மாதிரி தினம் பணம் பாக்கிறவனா?  இருபது தேதிக்கு மேல் முழி பிதுங்குது. ரெண்டு பஸ் விட்டுட்டு ஆர்டினரி பஸ் பிடிச்சு வர்ரேன்"
 
" வீட்டுக்கு வேண்டிய பொருள் எல்லாம் மாச ஆரம்பத்திலயே வாங்கினா தான் என்ன? "

இந்த கேள்விக்கு ராகவனிடம் பதில் இல்லை. உள்ளே சென்று சட்டையை எடுத்து மாட்டி கொண்டு கிளம்பினான். முகுந்த், அப்பா கை கூட கழுவாமல் சட்டை மாட்டி கொண்டு கிளம்புவது பார்த்து தடுக்க முயன்றான்.
 
"அப்பா.. போகாதீங்கப்பா.. நாளைக்கு எனக்கு பரீட்சை" 
 
" அதாண்டா கிளம்பறேன். இருந்தா சண்டை வந்துட்டே இருக்கும்" 
 
சில வினாடி நின்று  மொபைலை எடுத்து கொள்ளாலாமா என யோசித்தான் . பின் வேண்டாமென  எடுக்காமல்  கிளம்பினான்.  

"அம்மா. ஏன் அவரை தடுக்கலை"
 
"விடுறா. துர்கா பவன் போய் சாப்பிட்டுட்டு வருவாரு. வேற எங்கே போவாரு? "
 
"உனக்கு சாப்பாடு? "
 
"எங்கே? இருந்த குழம்பை கொட்டிட்டாரு..வெறும் சாதத்தை எப்படி சாப்பிடறது? " 

***** *********** *********

சற்று நேரம் தெருவினுள் நடந்த பின் தோன்றியது. "எங்கே போவது? " மனதினுள் இன்னும் கோபம் குறைய வில்லை. "வைக்கிற இடத்தில இவளை வச்சிருக்கணும்; ரொம்ப இடம் குடுத்திட்டேன் "

“மத்தவனுங்க  மாதிரி  நான் தம் அடிக்கிறேனா.. தண்ணி அடிக்கிறேனா? என்னோட அருமை இவளுக்கு தெரியவே இல்லை" மனதிற்குள் சுய இரக்கம் பெருகியது.  

"சுந்தர்  ரூமுக்கு போகலாமா? இருப்பானா? போன் வேற எடுக்காம வந்துட்டோம்"
 
போன் இல்லாத போது தான் நிறைய பேருக்கு பேசணும்னு தோணும். பணம் கம்மியா எடுத்துட்டு வரும் போது நிறைய வாங்கனும்னு தோணுவது போல்...
 
கால்கள் சுந்தர் ரூம் நோக்கி நடக்க ஆரம்பித்தது.

***** *********** *********

"வாடா என்ன இது லுங்கியோட? "
 
"ப்ச்.. ஒன்னும் கேக்காதே மாப்ளே”

"வீட்லே சண்டையா"
 
"ம்"
  
"உக்காரு. துணி துவைச்சிட்டு இருக்கேன். வந்துடுறேன்" 
 
அருகிலிருந்த புத்தகத்தை எடுத்து படிக்க முற்பட்டான். மனசு பதிய வில்லை. 
 
சுந்தர் தனிக்கட்டை. 40  வயதுக்கு மேல் ஆகியும் திருமணம் செய்ய வில்லை.  "குடுத்து வச்சவன்" என அடிக்கடி சொல்லுவான் ராகவன்.
 
அடுத்த அரை மணியில் சுந்தர் வந்து சேர்ந்தான். 

" என்னடா .. சாப்டியா?
 
என்ன பதில் சொல்வது இதற்கு? பாதி சாப்பாட்டில் தூக்கி எறிந்தாயிற்று.   "ம்" என்று சொல்லி வைத்தான்.
 
"என்னடா அப்படி சண்டை? "
 
"சாப்பிடும் போது இது இல்லை அது இல்லைன்னு குறை சொல்றாடா. மனுஷன் நிம்மதியா சாப்பிட முடியலை; தட்டை தூக்கி எறிஞ்சுட்டு வந்துட்டேன் "
 
"அட  பாவி.. சமையல் பண்ணும் போது எவ்ளோ எரிச்சல் வரும் தெரியுமா? முன்ன பின்ன சமைச்சு பாத்திருக்கியா? சமைக்கும் போது பொருள் இல்லன்னா என்ன தான் பண்றது சொல்லு" 
 
ராகவன் அமைதியாய்  இருந்தான். " உன் பையனுக்கு எக்ஸ்சாம்ன்னு சொல்லிட்டிருந்தே"
 
"........."
 
" டேய்.  சின்ன வயசில் என் அம்மா, அப்பா இப்படி தான் சண்டை போட்டுப்பாங்க அது என் மனசை எவ்ளோ பாதிச்சுது தெரியுமா? இப்போ பார். அம்மா, அப்பா போன பிறகு என்னை பாத்துக்க ஆள்  இல்லாம தனியா  கிடக்கிறேன். உன்னை பாத்து குடுத்து வச்சவன்னு நினைச்சிட்டு இருக்கேன்.. நீ என்னடான்னா ..."
 
" அட போடா. இக்கரைக்கு அக்கரை பச்சை. நான் உன்னை தான் அப்படி சொல்லுவேன்"  
 
"டேய். நம்ம வாழ்க்கையே ஒரு சினிமா மாதிரி தான். எல்லாம் தான் இருக்கும் இதில். சண்டை, கோபம், அழுகை, இப்படி எல்லாம் தான் இருக்கும் . வெறும் ஜாலி மட்டும் குடும்பத்திலே எதிர் பார்த்தா எப்படி? என் வாழ்க்கையை பாரு. அதில ஒன்னுமே இல்லடா. டாகுமெண்டரி படம் மாதிரி வெறுமையா கிடக்கு"
 
ராகவன் யோசிக்க ஆரம்பித்தான்.

"வெறுப்புக்கு பதில் வெறுப்பு இல்லடா. அன்பு தான் அதுக்கு சரியான பதிலா இருக்க முடியும். நீ தட்டை தூக்கி எரிஞ்சியே.. உன் வீட்டுக்கார அம்மா அப்போ என்ன பண்ணாங்க? "

ராகவன் யோசித்தான். நித்யா ஏதும் செய்ய வில்லை. தரையை தான் கூட்டினாள் என்பது நினைவில் வந்தது.

"கோபமா சொல்லும் போது நீ சொல்றது நல்ல விஷயமா இருந்தா கூட மெசேஜ் போய் சேர்ரதில்லை.. அதை புரிஞ்சிக்கோ..எதையும் பொறுமையா மெதுவா தான் சொல்லணும் ..இப்போ நான் சொல்ற மாதிரி"

***** *********** *********
"என்னம்மா அப்பாவை  இன்னும் காணும்? ஹோட்டல் போயிட்டு வந்திடுவாருன்னே" 

"தெரியலேயேடா.. எங்க போனாரோ? " நித்யாவிற்கு பயம் வந்தது "ஒன்னு கிடக்க ஒன்னு செஞ்சிட போறார். ச்சே நான் தான் தப்பு பண்ணிட்டேன். சாப்பிட்டு முடிச்சோன சொல்லிருக்கணும்"

கேட்  திறக்கும் சத்தம் கேட்டது. நித்யா எட்டி பார்த்தாள். ராகவன், துர்கா பவன்  சாப்பாட்டு பார்சலுடன் உள்ளே வந்து கொண்டிருந்தான் .

***** *********** *********

### உரத்த சிந்தனை நடத்தும் குடும்ப உறவுகள் குறித்த சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது

Wednesday, November 11, 2009

அடுத்த வீட்டு பெண் -'சர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009'


தெருவில் நுழையும் போதே மக்கள் ஆங்காங்கு நின்று பேசியவாறு இருந்தனர். ஏதோ வித்யாசமாய் உணர்ந்தேன். வண்டியை நிறுத்தி விட்டு அருகில் சென்றேன்.

" வித்யா தீ வச்சுகிட்டா சார் !" அதிர்ந்தேன்.

வித்யா என் பக்கத்து வீட்டு பெண். கல்யாணமாகி ஏழு வருடமாகிறது. ஒரு பெண் பள்ளியில் படிக்கிறாள்.

"இப்போ வித்யா ?"

"ஆஸ்பத்திரிலே இருக்கா "

"அவங்க அம்மா அப்பாவுக்கு சொல்லியாச்சா?'

"வந்துட்டாங்க... வீட்டுக்குள்ளே போலீஸ் இருக்காங்க. நாங்க உள்ளே போகலை. நீங்க வக்கீல்னு சொல்லிட்டு கொஞ்சம் போலீசில் பேசி பாருங்க. "

நான் அவள் வீட்டுக்குள் நுழைந்தேன். போலீஸ் அதிகாரியிடம் என்னை அறிமுகப்படுத்தி கொண்டேன். அவர் என்னிடம் விசாரிக்க தொடங்கினார்.

"அடிக்கடி சண்டை வருமா சார்?"

"ஆமாம். வழக்கமா உள்ளது தான்"

" அவங்க ஹஸ்பண்ட் குடிப்பாரா?"

தயங்கினேன். "சும்மா சொல்லுங்க"

"ஆமாம். அதனால் தான் பல நேரம் சண்டை"

"ம்ம்..நான் இப்ப ஹாஸ்பிட்டல் போறேன். நீங்க வர்றீங்களா?'

"சரி.. வீட்டில் சொல்லிட்டு வந்துடுறேன்".

வழியில் சப் இன்ஸ்பெக்டர் பொதுவான சில விஷயமும் வித்யா பற்றியும் பேசி கொண்டிருந்தார். வித்யா, கணவனிடம் பட்ட கஷ்டங்களை எனக்கு தெரிந்த வரை சொல்லி கொண்டிருந்தேன்.

"சில நாள் குடி போதையில் தெருவிலயே விழுந்து கிடப்பார். பல நேரம் அவர் அடிச்சு வித்யா, பொண்ணு ரெண்டு பேருக்கும் காயம் ஆயிருக்கு"

"வாரத்துக்கு ரெண்டு கேசாவது பாக்கிறோம் சார். அநேகமா ஒன்னு புருஷன் பொண்டாட்டி சண்டை.. இல்லாட்டி மாமியார் நாத்தனார் கொடுமை..அந்த பொண்ணோட புருஷன் நம்பர் இருக்கா? "

"இல்லை சார்"

" பாருங்க.. பக்கத்துக்கு வீட்டு காரங்க நம்பர் கூட இல்லாம வாழ்றோம்".

மருத்துவ மனை வந்து விட்டது. வித்யா பெற்றோர் கதறியவாறு இருந்தனர். என்னை பார்த்ததும் அழுகை அதிகமானது. "நீங்க எல்லாம் இருக்கீங்கன்னு இருந்தோமே!! அந்த சண்டாள பாவி தான் இப்படி பண்ணிட்டான். பணம் வேணும்ன்னு கேட்டுருக்கான். இவள் பீஸ் கட்டணும்னு தரலை. எரிச்சுட்டான் படு பாவி"

"உங்க மருமகன் எங்கே?"

" தெரியலே சார். போன் பண்ணா சுவிட்ச் ஆப்-ன்னு வருது".

" அநேகமா அந்த ஆள் வேலையா தான் இருக்கும். ... உங்க பொண்ணு ஏதாவது பேசினாளா? "

"உள்ளே விடலை சார்"

சப் இன்ஸ்பெக்டர் எங்களை உள்ளே அழைத்து போனார். தீ காயம் அதிகம் என்றும் பிழைப்பது கடினம் என்றும் தெரிய வந்தது.

வித்யாவை அந்த நிலையில் பார்ப்பது கொடுமையாக இருந்தது. கழுத்துக்கு கீழ் அநேகமாய் எரிந்திருந்தது.

சப் இன்ஸ்பெக்டர் குனிந்து மெல்ல பேசினார். "ஏம்மா.. எப்படி நடந்தது?"

வித்யா ஏதும் பேசலை. விழித்து எங்களை பார்க்க முயற்சித்தாள்.

"சொல்லும்மா.. அந்த படு பாவி தானே.. சொல்லு...அந்த சண்டாளன் தான்னு சொல்லு;"

வித்யா முதலும் கடைசியுமாய் மெல்ல முனகினாள். "அவுக தான்.. அவுக தான்.. அவுக தான்.. "
Related Posts Plugin for WordPress, Blogger...