****
நான் வயதுக்கு வந்தபோது அது வாலிபன்
(இது எங்கள் வீட்டில் இறந்து போன அரச மரத்துக்கு சமர்ப்பணம்)
"மரம் பார்க்க ஒரு ஜென்மம் போதாது என நண்பன் குமார்ஜி சொல்வான்" என ஆரம்பிக்கும் பா. ரா. வின் வலைமனையின் ஒரு பதிவு. எனக்கும் கூட அப்படித்தான். ஏனோ மரம் ரொம்ப பிடிக்கும் எனக்கு. நான் மரங்களோடு வளர்ந்தவன். எங்கள் வயல்களில் நிறைய மரங்கள் இருந்தன. மா, கொய்யா, தென்னை, பூவரசு, புங்கை, எட்டி, கூந்தல் பனை, ஈரபலா, நார்த்தங்காய் - இப்படி நிறைய மரங்கள். ஊர் திருவிழாவுக்கு எங்கள் தோட்டத்தில் இருந்துதான் கூந்தல் பனை தோரணத்துக்கு போகும். ஒரு மரத்தின் பெயரே எங்களுக்கு தெரியாது, அதை ஓட்டை மரம் என்று சொல்வோம். எங்கள் வீட்டின் எருமை மாட்டுக்கு கொம்பை இடிக்கும் பழக்கம் இருந்தது. அது எப்போதும் இந்த மரத்தில் தான் இடிக்கும், அதனால் ஓட்டை விழுந்தது. ஒரு நாள் அந்த ஓட்டையில் மாட்டின் கொம்பு மாட்டி லேசாய் ஒடிந்து போக, எல்லோரும் மரம் மாட்டை பழி வாங்கியதாய் சொன்னோம். அது தவறு. மரமும் நிலம் மாதிரி தான். அகழ்வாரை தாங்கும்...பழி வாங்காது...
எங்கள் வீட்டுக்கு முன் இருந்த அரச மரம்தான் எனக்கு மிகவும் பிடித்த மரம். நாலுபுறமும் கிளை பரப்பி, நான்கு ஐந்து ஆட்கள் கட்டி பிடிக்கும் அளவுக்கு பருமனான அந்த மரத்தை பார்த்து கொண்டே இருக்கலாம். நிமிடத்துக்கு ஒரு முறை உரு மாறும் மேகம் மாதிரி, அந்த மரமும் உரு மாறும், காற்று - அதில் ஊஞ்சலாடும் தாவணி பெண். அந்த மரம் ஒவ்வொரு காலத்திலும் வெவ்வேறு குரலில் பேசும், பழம் நிறைந்த நாட்களில் (பகலில்) குருவிகள் குரலில் (இரவில்) வொவாள்கள் குரலில், கோடை காலத்தில் சருகுகள் குரலில், ஆடி மாதத்தில் காற்றின் குரலில், இப்படி அந்த மரம் ஒரு பல குரல் மன்னன்.
அந்த மரத்துக்கு என்ன வயது என்றே யாருக்கும் தெரியாது. நான் வயசுக்கு வந்தப்பவே அது வாலிபனா இருந்தது என சொன்ன அப்பாயி, சமீபத்தில் இறந்தபோது அவர்களுக்கு 90 வயது. அந்த மரம் 100 வருஷத்துக்கு மேல் வாழ்ந்து இருக்கும் எனவே தோன்றுகிறது. அந்த மரதுக்கு வயசாச்சி என சொல்லி என் அப்பா அந்த மரத்தை வெட்டிவிட (வீட்டின் மேல் விழுந்து விடும் பயத்தில்), இப்போது எனக்கு பார்க்கிற எல்லா அரச மரமும் என் வீட்டையும் தோட்டத்தையும் நினைவுபடுத்துகின்றன.
டெல்லியில் என் வீட்டுக்கு அருகில் இருக்கும் பூங்காவில் நான் வாக்கிங் போகும்போது எப்போதும் ஒரு பெரியவர் அந்த சின்ன அரச மரத்திடம் நெடுநேரம் நின்றுகொண்டும் பேசிக்கொண்டும் இருப்பார். சில நாட்களுக்கு முன்னால் அவர் அந்த மரத்திடம் ஹிந்தியில் - சொல்லு, நான் அப்படிப்பட்டவனா, நான் உன் வீட்டுகாரிய அப்படி சொல்லி இருப்பேனா, உனக்கு என்னபத்தி தெரியும்தானே - கைகூப்பி பேசி கொண்டு இருந்ததை பார்க்கையில், பிள்ளைகளை வளர்க்கும் அதே ஆர்வத்தோடு ஒரு மரத்தையும் வளர்க்க வேண்டும்போல் இருக்கிறது. நாம் வயதாகி பேசுவதை காது கொடுத்து கேட்க ஒரு பிள்ளை வேண்டாமா!
***
(இந்த பதிவை எழுதியவர்: தேவகுமார் )