Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Wednesday, March 29, 2017

வானவில்: ஆர் கே நகர் இடைத்தேர்தல்+ இந்தியா ஆஸி சீரிஸ் ஒரு பார்வை

ஆர் கே நகர் இடைத்தேர்தல் 

இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சிதான் ஜெயிக்கும் என்ற நிலை மாறி ரொம்ப நாள் கழித்து நல்ல போட்டியுடன் ஒரு இடைத்தேர்தல்.

தினகரன் மற்றும் தி.மு.க இருவரில் ஒருவர் தான் ஜெயிப்பார் என நினைக்கிறேன்.

தினகரன்.. ப்ளஸ் பண பலம் மற்றும் அதிகார பலம்... மைனஸ் ... இவை தவிர மற்ற எல்லாம்.. குறிப்பாக இரட்டை இலை  சின்னம் இல்லாமை மற்றும் ஜெ மரணத்தின் மர்மம்

தி.மு.க - பலம் அதிமுக உடைந்தது; தனது வழக்கமான 30 % வாக்கு வாங்கினாலே வெல்லும் வாய்ப்பு அதிகம். மைனஸ் - இத்தொகுதி traditional ஆக அதிமுக கோட்டை...

நீண்ட நாளுக்கு அதிமுக பிரிந்து இருக்கும் என தோன்றவில்லை; ஜானகி- ஜெ அணி இணைந்தது போல் - பாராளுமன்ற தேர்தலுக்கு பின் எந்த அணிக்கு வாக்கு வாங்கி அதிகமோ அதனுடன் மற்ற அணி இணைய வாய்ப்புகள் அதிகம்.

கிரிக்கெட் கார்னர்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இறுதி டெஸ்ட்டில் இந்தியா வென்றது மிக நிறைவான ஒன்றாய்  இருந்தது.

இந்த சீரிஸில் குறிப்பிடத்தக்க பர்பாமன்ஸ் செய்த சிலர் பற்றி

ராகுல்: கடினமான பிட்சில் 7 இன்னிங்ஸ் ஆடி - 6 - 50கள் எடுத்த ராகுல்.. ஒரு ஓப்பனிங் பாட்ஸ்மான் ஆக நிலை நிறுத்தி கொண்டுள்ளார்.

ஜடேஜா - பவுலிங்கில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் மட்டுமல்லாமல் - இரு முறை கடினமான நேரத்தில் நன்கு பாட்டிங் செய்து இந்தியாவை காப்பாற்றி  கொடுத்தார்.

புஜாரா - ராகுல் திராவிடுக்கு சரியான replacement இவர் தான் ! பொறுமை மற்றும் விடா முயற்சி இவரது இலக்கணம். மிஸ்டர் கன்சிஸ்டண்ட்

உமேஷ் யாதவ் : இந்திய பிச்சில் இப்படி ஒரு பவுலர் அசத்துவது ஆச்சரியம். சாதாரண பவுலராக வந்து - மிக நன்றாக தற்போது வீசி  தன்னை நிலை நிறுத்தி  கொண்டுள்ளார்.

சாஹா : முதல் 2 மேட்சில் பாட்டிங்கில் அடிக்கலை; ஆனால் கடைசி 2 மேட்சில் சூப்பர்  பாட்டிங்.

சுமார் performers :

ரஹானே : டெஸ்ட் சீரிஸில் பெரிய இல்லை; ஆனால் கடைசி மேட்சில் காப்டன்சி மற்றும் 2 விக்கெட் போன நேரத்தில் உள்ளே வந்து அதிரடியாய் சில சிக்ஸர் அடித்து மேட்சை விரைவாய் முடித்தது அட்டகாசம் !

அஷ்வின்: ஜடேஜா - பாட்டிங், பவுலிங் இரண்டிலும் தன்னை விஞ்சுவார் என அஷ்வின் நினைத்திருக்கவே  மாட்டார். ஆஸ்திரேலியா இவரது பந்து வீச்சுக்கு நிறைய திட்டமிட்டு வந்தது காரணமாய்  இருக்கலாம்.

கோலி - ஒரு 50 கூட அடிக்கலை; ஆனால் aggressive captaincy !

அழகு கார்னர் 


Related image
நிவேதா தாமஸ் 

ஹெல்த் கார்னர் : மசக்கை சில குறிப்புகள் 

கொஞ்சமாக அடிக்கடி சாப்பிடுங்கள் 

சாப்பாட்டிற்கு அரை மணி முன் தண்ணீர் குடியுங்கள் சாப்பாட்டின் போது வேண்டாம்  

நாள் முழுக்க கொஞ்சம் கொஞ்சமாக திரவ ஆகாரம் அருந்துங்கள் 

குமட்டல் ஏற்படுத்தும் உணவை தவிருங்கள் அந்த உணவு வாசனையை விட்டு விலகி இருங்கள் 

நன்றாக தூங்குங்கள். முடிந்தால் பகலிலும் சற்று தூங்கலாம் 

உஷ்ணம் குமட்டலை அதிகரிக்கும். உஷ்ணம் நிறைந்த இடங்களை தவிருங்கள் 

உடற்பயிற்சி செய்யுங்கள்.
எலுமிச்சை முகருங்கள். இஞ்சி கலந்த ஜூஸ் அல்லது தர்பூசணி குமட்டலுக்கு நல்லது 

சாப்பிட்டதும் படுக்காதீர்கள் 
பட்டினி கிடக்காதீர்கள் வேளைக்கு சாப்பிடுங்கள். உணவை தவிர்க்காதீர்கள் 

ஸ்பைசி உணவை சமைக்காதீர்கள் சாப்பிடாதீர்கள் 

- குமுதம் ஹெல்த் இதழில் இருந்து 

என்னா பாட்டுடே

ஓகே கண்மணியில் நானே வருகிறேன் பாடல் .. ரகுமான் லைவ் இசை நிகழ்ச்சி ஒன்றில் வாசித்த போது எடுத்த வீடியோ இது.. என்னா மாதிரி பாட்டு.. பெண் குரலும் சரி, குறைவாக ஒலிக்கும் ஆண் குரலும் சரி.. அற்புதம் !



QUOTE CORNER

A man of wealth has many enemies, while a man of knowledge has many friends.

அழகு கொஞ்சும் ECR சாலை

மிக அழகான ECR சாலையில் 30 கி. மீ சைக்கிள் பயணம் அண்மையில் சென்றேன். சைக்கிளிங் செல்லும் பலர் ECR ஐ விரும்புவதன் காரணம் புரிந்தது. அதிக டிராபிக் இல்லாத அற்புதமான சாலைகள்..வாவ் !

காலை 6 மணிக்கு அக்கரை கடற்கரையில் சூர்யோதயம் காணும் வாய்ப்பு. 

Image may contain: one or more people, ocean, sky, twilight, beach, outdoor, nature and water

கடலில் சூர்யன் உதிக்கும் போது - அதற்கு எதிரில் 10 பேர் அமைதியாக அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தனர்.

Image may contain: one or more people, ocean, sky, outdoor, nature and water

அக்கரை ஏரியாவிலிருக்கும் பங்களா ஒவ்வொன்றும் செம !
பொதுவாய் வெவ்வேறு பகுதியில் சைக்கிள் ஓட்ட நினைக்கும் என்னை ECR அடிக்கடி இழுக்கும் என நினைக்கிறேன்.

Monday, June 20, 2016

ஆதார் கார்ட் என்றொரு அபத்தம்

முதலில் நல்ல விஷயத்தை சொல்லி விடுகிறேன்.. 4 வருட படையெடுப்புக்கு பின் ஒரு வழியாய் ஆதார் கார்டுக்கான புகைப்படம் எனக்கும்- ஹவுஸ் பாசுக்கும் எடுத்து விட்டார்கள்..

முதல் வரியை சரியே கவனித்தீர்களா? 4 வருடங்கள்.. !! நான் இந்த போராட்டத்தை துவங்கி -  போட்டோ எடுக்கும் நிலைக்கு வரு முன் லட்சகணக்கான தமிழர்கள் இஞ்சினியரிங் கோர்ஸ் படிக்க துவங்கி, டிகிரியும் வாங்கி முடித்திருப்பார்கள் !!




முதல் கோணல் முற்றும் கோணல்

ஆதார் கார்ட் கணக்கெடுப்பு எப்படி துவங்கினார்கள் தெரியுமா?  சென்சஸ் எடுக்க வரும் டீச்சர்கள் ஆங்காங்கு வீடுகளில் வந்து தகவல் கேட்டு குறித்து சென்றுள்ளார்கள்.. ஊரில் பாதி வீடுகள் பகல் நேரங்களில் பூட்டி இருக்கின்றன.. இருவரும் வேலை பார்க்க- குழந்தைகளும் பள்ளி சென்று விட, யார் இருப்பார் வீட்டில்?

பிரச்சனை இங்கேயே துவங்கி விடுகிறது..

இப்படி அவர்கள் வந்து தகவல் சேகரித்த செய்தி அறிந்து - அருகில் உள்ள ஒவ்வோர் பள்ளியாக சென்று கடைசியில் எந்த பள்ளியில் சென்சஸ் எடுத்தார்களோ அவர்களை கண்டு கொண்டேன் ! கண்டு கொண்டேன் ! ஒரு முறையல்ல .. அடுத்தடுத்த மாதங்களில் 2 தடவை அவர்களிடம் இதற்கான பார்ம் பில் செய்து தந்தேன்..

அடுத்த கட்டம்

ஊரில் பலருக்கும் போட்டோ பிடிக்க துவங்கினர்.. கூட்டம் பிய்த்து உதறியது.



உங்களுக்கு மெசேஜ் வரும் .. அப்புறம் தான் போட்டோ எடுக்க வர முடியும் என கெத்து காட்டினார்கள்.. இல்லாட்டி அந்த புக்கில் உங்க பேர் வரணும் என்றார்கள்.

அந்த புக் என அவர்கள் சொன்னது ஒரு புக் இல்லை.. ஏழெட்டு புக் !! ஏரியாவாசிகள் பெயர்கள் மொத்தமும் அடங்கிய இந்த புத்தகம் அந்த சென்டரின் நுழை வாயிலில் இருக்கும்.. அந்த எட்டு புக்கின் அனைத்து பக்கத்தையும் ஒன்று விடாமல் நீங்கள் தேட வேண்டும்.. உங்கள் பெயர் இருக்கிறதா என்று !!!

என்ன தலையை சுற்றுகிறதா?

இப்படி எட்டு புக்கின் அனைத்து பக்கத்தையும் தேடும் படலம் மட்டும் 3 வருடத்தில் - மொத்தம் 20 முறைக்கு மேல் செய்த எனக்கு எப்படி இருக்கும் !!

ஒவ்வொரு முறையும் போய் புக்கில் பெயர் இருக்கா என தேடவேண்டியது.. இல்லை என்றதும், பாரம் பில் செஞ்சு கொடுங்க சார் என்பார்கள்.. இந்த பார்ம் மட்டும் 15 முறையாவது பில் செய்து தந்திருப்பேன்.. !!

ஊஹூம்.. எத்தனை தடவை எழுதி தந்தாலும் புக்கில் நம் பெயர் வருகிற மாதிரி இல்லை..

அந்த நாள்.. !!!

4 வருட படையெடுப்புக்கு பின் ஒரு நாள் வெறுத்து போய் இணையத்தில் ஏதாவது நம்பர் கிடைக்குமா என தேடினேன் ..எங்கள் ஏரியா அசிஸ்டென்ட் ரெவினியூ ஆபிசர் (ARO) தொலை பேசி எண் கிடைத்தது.. அவரிடம் போன் செய்து "நாலு வருட தவம் " பற்றி பேச, "நேரில் வாங்க பேசுவோம்" என்றார். ( இந்த ஆதார் கார்ட் வாங்கும் விஷயத்தில் இவர் தான் முக்கிய ஆபிசர் !!) மறுநாளே ஆபிசில் போய் பார்த்ததும், பியூனை அழைத்து "சாருக்கு போட்டோ எடுக்க சொல்லு" என அனுப்பி வைத்தார்..

நம்ப முடிய வில்லை.. இன்னிக்கு எடுத்துடுவாங்களா என ஆச்சரியத்துடன் செல்ல, "சாயந்திரம் 4 மணிக்கு வாங்க; இப்ப கூட்டமா இருக்கு " என அனுப்பி வைத்தனர்..

4 மணிக்கு வந்ததும் - ஒரு பார்ம் கொடுத்து பில் பண்ணுங்க என்றனர்.. 4 வருடத்துக்கு முன் பள்ளியில் கொடுத்த அதே பார்ம் ..!!!  15 தடவைக்கு மேல் பில் அப் பண்ணி தந்த பார்ம்...!! சுஜாதா பாணியில் என்னய்யா விளையாடுகிறீர்களா என கேட்காமல் ,  பொறுமையாய் பில் செய்தேன்..

ஒரு வழியாய், கண், காது, மூக்கு என தனி தனியே எல்லாவற்றையும் போட்டோ எடுத்தனர்.. நம்ம போட்டோ
உடன் சேர்த்து அக்னாலட்ஜ் மென்ட் ஸ்லிப் ஒன்று தந்தனர்..



ஹவுஸ்பாஸ் தனது போட்டோவை பார்த்து விட்டு " சே.. என்ன இது வேலைக்காரி மாதிரி இருக்கு" என அதிர்ந்தார் .. நானும் எட்டி பார்த்தேன்.. கொஞ்சம் அப்படி தான் இருந்தது.. இருந்தாலும் " ச்சே. சே. அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை" என்றேன் சிரிப்பை அடக்கிய படி ..

வெளியில் காத்திருந்த நேரம் போட்டோ எடுக்க வந்த ஒரு பெரியவர் சொன்னார்: "எனக்கு ஏற்கனவே போட்டோ எடுத்தாச்சு. ஆனா 2 வருஷம் ஆகியும் கார்ட் வரலை; அதான் மறுபடி எடுக்குறேன் !!"

அடப்பாவிகளா !! நான் எதோ இத்தோட முடிஞ்சு போயிடும்னு நினைச்சேன்.. இப்படி பயமுறுத்துறிங்களே  !! மறுபடி முதல்லேந்தா???

நிற்க. இன்றைக்கு ஒரே நாளில் பார்ம் பில் செய்து வாங்கி, போட்டோ எடுத்து மொத்த வேலையும் முடித்தார்களே . !! ஏன் இதனை முதலிலேயே செய்திருக்க கூடாது?

நேரில் வந்து - ஒரு முகவரி சான்று  (அட்ரஸ் ப்ரூப் ஒரிஜினல் ) காட்டி விட்டு, அன்றே போட்டோ எடுத்தால் வேலை எளிதாய் முடிந்திருக்கும்.. அதை விடுத்து முதலில் வீட்டிற்கு வந்து லிஸ்ட் எடுப்போம். .மிஸ் ஆனால் பார்ம் பில் செய்து தரனும்.. பின் புக்கில் பெயர் வரும். பெயர் வந்தால் மட்டுமே போட்டோ என எவ்வளவு சுத்தி விட்டார்கள் !! கொடுமை..

ஒரு அரசாங்க ப்ராஜக்ட் எப்படி நடத்த பட கூடாது என்பதற்கு மிக சிறந்த உதாரணம் ஆதார் கார்ட் வழங்கும் முறை தான்..

இதுவரை நீங்கள் ஆதார் வாங்காவிடில்..

தற்சமயம் பல்வேறு இடங்களில் அடிக்கடி ஆதார் போட்டோ எடுக்கும் வைபவம் நடத்துகிறார்கள்.. பேப்பரில் கவனியுங்கள்... அல்லது உங்கள் ஏரியாவில் சிலரிடம் சொல்லி வையுங்கள்.. நடந்தால் உங்களுக்கு தெரிவிக்க சொல்லி.. அங்கு நேரடியாக ஒரு அட்ரஸ் ப்ரூப் உடன் சென்று போட்டோ எடுத்து வந்து விடலாம்..

அல்லது உங்கள் ஏரியா ரெவினியூ ஆபிஸ் எங்குள்ளது என விசாரித்து - அங்கு சென்று பாருங்கள்.. அந்த ஆபிசில் தான் ஆதாருக்கு  தினமும் போட்டோ எடுக்கிறார்கள்.. அந்த ஆபிஸ் போகும் போது ARO-ஐ மறந்து விடாதீர்கள் !

ஆல் தி பெஸ்ட் !

Saturday, June 4, 2016

சிம்லா அற்புத குகை ரயில் பயணம்- படங்கள் & வீடியோவுடன்



சிம்லாவுக்கு எப்படி பயணம் ஆவது என்பதில் துவங்குவோம்.

டில்லி அல்லது சண்டிகார் இவை இரண்டில் எங்கிருந்து வேண்டுமானாலும் சிம்லா எளிதாக செல்லலாம். பேருந்து, விமானம், கார் என அனைத்து விதத்திலும் சிம்லா அடையலாம். ஹிமாச்சல் பிரதேஷின் தலைநகரம் என்பதால் போக்குவரத்து பல வழிகளிலும் ( mode ) உண்டு.
சிம்லாவுக்கு ரயிலில் செல்வது மிக சிறப்பானது. காரணம் இது ஒரு டாய் டிரெயின். இந்த அனுபவம் மிக புதிதாய் வித்யாசமாய் இருக்கும்

டில்லி டு கல்கா சதாப்தியில்
சிம்லாவுக்கு செல்லும் ரயில் கல்கா என்ற இடத்திலிருந்து மட்டும் தான் துவங்குகிறது. கல்கா சண்டிகார்க்கு அடுத்து உள்ள சிறு நகரம். டில்லியிலிருந்து கல்காவிற்கு ( கல்கா தாண்டி செல்லும்) ஏராளமான ரயில்கள் உள்ளன. நாங்கள் ஒரு சதாப்தியில் கல்கா சென்று சேர்ந்தோம்

கல்காவிலிருந்து தினம் ஆறு ரயில்கள் ( Toy train ) சிம்லா செல்கின்றன.

எங்கள் பத்து நாள் டூர் முழுதுமே இந்த டிரெயின் டிக்கெட்டை பொறுத்தே சுழன்றது. முதலில் இந்த டிரெயினில் புக் செய்து விட்டு, பின் தான் டில்லி செல்ல, மணாலி செல்ல, திரும்ப வர என அனைத்து டிக்கெட்டும் புக் செய்தோம்.

சிம்லா ரயில் பயணம் செய்ய விரும்பினால், நீங்கள் உங்களுக்கு எந்த தேதியில் டிக்கெட் கிடைக்கிறதோ அந்த நாளில்  பயணம் செய்ய தயாராய் இருக்க வேண்டும். பலர் முதலில் மற்ற விமானம்/ ரயிலும் புக் செய்து விட்டு பின் சிம்லா ரயிலுக்கு டிக்கெட் புக் செய்ய முயல்கிறார்கள். அது கிடைக்காமல் பின் பஸ் அல்லது காரில் சிம்லா பயணிக்கிறார்கள்.

நாங்கள் பகல் பன்னிரண்டரைக்கு கல்காவில் கிளம்பி மாலை ஐந்தரைக்கு சிம்லா செல்லும் ரயிலில் சென்றோம்

நீங்கள் மேட்டுபாளையத்திலிருந்து ஊட்டி செல்லும் ரயிலில் ( Toy train ) சென்றுள்ளீர்களா? அதே போன்ற அனுபவம் தான் இதுவும் ! இன்னும் கொஞ்சம் அதிக மலைகளையும், பசுமையான செடி கொடிகளையும் பார்க்க முடியும் என்பது தான் முக்கிய வித்யாசம். மேலும் ஊட்டி ரயிலில் செல்லும் போது சாப்பாடு வழியில் எங்கும் கிடைக்காமல் கஷ்டப்பட்டோம். இங்கு கல்காவிலேயே மதிய சாப்பாடு வாங்கி கொண்டு ரயில் ஏறினோம். வழியிலும் கூட உணவு கிடைக்கிறது. இருந்தாலும் கல்காவில் உணவு வாங்கி விடுவது நல்லது

ஆறு அல்லது ஏழு பேட்டிகள் கொண்ட சிறிய ரயில் இது. எங்கள் ரயில் கிளம்பிய கொஞ்ச நேரத்தில் சிம்லா கிளம்பும் இன்னொரு ரயில் ஒரு மணி நேரம் அதிகமாக (ஆறரை மணி நேர பிராயணம்) செல்லுமாம் !


செல்லும் வழியெங்கும் மலை மேல் இருக்கும் அழகான வீடுகளை பார்க்க பொறாமையாய் இருக்கிறது.

இந்த ரயில் பாதை கட்ட ஆரம்பித்தது 1900-ல் . அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த பாதை முழுதும் போட்டு முடித்து 1903 முதல் இந்த ரயில் இயங்கி வருகிறது

2008 -ல் UNESCO இதை ஒரு " Heritage centre" என அறிவித்துள்ளது





ரயிலின் ஜன்னல் வழியே எடுத்த இந்த படத்தில் ரயில் ஒரு குகைக்குள் (Tunnel) நுழைவது தெரியும்


இந்த பாதையில் மொத்தம் 102 குகைகள் (Tunnel ) மற்றும் 917 வளைவுகள் உள்ளனவாம்


வழியெங்கும் பல்வேறு ஊர்களில் ரயில் நிற்கிறது. அப்படி பரோக் என்ற ஊரில் நின்ற போது எடுத்த படம் இது


செல்லும் வழியில் ஆங்காங்கே பள்ளி சென்று திரும்பும் குழந்தைகள் உற்சாகமாக நம்மை பார்த்து கையசைக்கின்றனர்

ஓர் இடத்தில் ரயில் நின்ற போது அங்கிருந்த ஸ்டேஷனில் குட்டி ரயிலின் ஒரு பகுதி மட்டும் டிராக்கில் ஓட்டி கொண்டிருந்தனர். அப்போது எடுத்த படம்



பயணத்தின் போது  ரயிலில் ஒரு புறம் தான் அருமையான வியூ கிடைக்கிறது. மறு புறம் பெரிய பாறை இருக்கும். அந்த பக்கம் பார்க்க, ரசிக்க ஏதும் இராது. என்ன ஒன்று .. ஒரே புறம் எப்போதும் பாறை இருக்காது. நீங்கள் எந்த புறம் அமர்ந்திருந்தாலும் நல்ல வியூ மாறி மாறி கிடைக்கும்
மலைகளும் வீடுகளும்
குகைக்குள் செல்லும் போது குட்டி பசங்க செம சத்தம் போட்டு குரல் எழுப்புகிறார்கள்.

இந்த வீடியோவில் குகைக்குள் ரயில் நுழைந்து வெளியேறுவதும் அப்போது குட்டி பசங்க எழுப்பும் சத்தமும் பார்க்கலாம்




ஐந்தரை மணி நேரம் செல்லும் போது போக போக போர் அடிக்க தான் செய்யும். ஓரிரு குடும்பங்கள் சேர்ந்து போனால் அதிக போர் அடிக்காமல் செல்லும்.




எங்களுடன் ஒரு ஆந்திரா குடும்பம் பயணித்தது. அந்த பசங்களுடன் சேர்ந்து கார்ட்ஸ் ஆடினோம். பின்னர் இன்னும் சில விளையாட்டுகள் ஆடினோம்.

ஆந்திர குடும்பம்

இந்த ஆந்திர குடும்பம் மிக நன்றாக எங்களுடன் பழகினர்.  அரசு துறையில் பணி புரிகிறார். அவர்கள் சிம்லாவில் தங்காமல் நேரே மணாலி மட்டும் பார்க்க சென்றனர்

மிக நீண்ட  Tunnel- ஒன்று கடக்க ஐந்து நிமிடம் போல் ஆகிறது . செம திரில்லிங் மற்றும் ஜாலி ஆக இருக்கும். அந்த tunnel-ல்  எடுத்த வீடியோ



ரயிலில், எங்கள் கம்பார்ட்மெண்டில் வந்த ஒரு குட்டி பையன் செம அழகாய் இருந்தான்.




சிம்லா நெருங்கியதும் ஆங்காங்கு உள்ள ஊர்களில் சிலர் இறங்குகிறார்கள் (உள்ளூர் மக்கள்)

படம் பிடிப்போரை படம் பிடிப்போம் கார்னர்


நண்பன் படத்தில் " என் பிரண்டை போல யாரு மச்சான்" மற்றும் த்ரீ இடியட்சில் அதே பாட்டும் எடுத்தது இந்த சாலையும், அதன் வளைவுகளிலும் தான். பாருங்கள் :



குறிப்பிட்ட தூரம் தாண்டியதும் குளிரை மிக நன்றாக உணர முடிகிறது. சென்னை மற்றும் டில்லி வெய்யிலை அனுபவித்த எங்களுக்கு முதல் முறை குளிர் காற்றை சுவாசிக்க மிக மகிழ்ச்சியாய் இருந்தது !


Saturday, May 21, 2016

வைகோ - ஒரு சீரியஸ் பார்வை + ஜாலி மீம்ஸ்

வை.கோபால்சாமி... இந்த பெயரை முதலில் நான் கேள்விபட்டது 80 களின் இறுதியில்.. திருச்சி சட்ட கல்லூரியில் முதலாண்டு படிக்கையில் - தி.மு.க மாநில மாநாடு நடந்தது. அதில் வைகோ உரையை கேட்கவே நண்பர்கள் பலரும் சென்றனர்.. கேட்டு விட்டு வந்து " என்ன பேச்சு..!!!! உடம்பெல்லாம் சிலிர்த்து போச்சு" என புளகாங்கிதம் அடைந்தனர்..

ஈழ மக்களுக்காக கள்ள தோனியில் இலங்கை சென்றபோது " மனுஷ்னன்னா இவர் தான்யா மனுஷன். என்ன ஒரு தமிழ் உணர்வு... வாழ்க்கையையே ரிஸ்க் எடுத்து போயிருக்கார் பாரு.. " என பேசிக்கொண்டோம்..

அடுத்து வைகோ பற்றி முக்கிய பேச்சு வந்தது அவர் தி.மு. க  விட்டு வெளியே வந்த போது.. பொது வெளியில் வைக்கோவின் கண்ணீர் - அப்போது தான் பார்த்தேன்.. நெகிழ்வாக, வருத்தமாக இருந்தது.. தி.மு.க மீது சற்று கோபமாகவும்.. !



அடுத்தடுத்த தேர்தல்களில் அவர் அணி மாறி, மாறி -கூட்டணி அமைத்த போது கூட " அரசியல்லே இதெல்லாம் சாதாரணமப்பா" என்று தான் இருந்தேன்..

2002ல் பொடா சட்டத்தின் கீழ் 18 மாதங்கள் ஜெ அவரை சிறை வைத்த போது அவர் மீது பெரும் வெறுப்பு இருந்தது.. தேவையே இன்றி வைகோவை சிறை வைக்கிறார்கள் என்று..!

தி,முக விலிருந்து வெளியேறிய பின் தள்ளியே இருந்த கலைஞர் அவரை சிறையில் சில முறை சென்று சந்திக்கிறார்.. " கலைஞர் தான் என்றைக்கும் எனது அண்ணன்; இனி வாழ்நாளில் என்றைக்கும் அவரை எதிர்க்க மாட்டேன்" என்று உருகினார் வைகோ

சிறையை விட்டு வெளி வந்து 2006 தேர்தலில் அ.தி.மு.க வை எதிர்த்து தீவிரமாக பணியாற்றி கொண்டிருந்தார்.   தி.மு.க குறிப்பிட்ட சீட்டுகள் தர, அதை விட 2 சீட்டுகள் அதிகம் தருகிறார் என்று காரணம் காட்டி அ.தி.மு.க விடம் சேர்ந்தார் வைகோ.

வைகோ மீதிருந்த நம்பிக்கை சுத்தமாக எனக்கு தளர்ந்தது அந்த சந்தர்ப்பத்தில் தான் ! சற்று முன்பு வரை தன்னை  சிறை வைத்த / அந்த முறை மிக மோசமான ஆட்சி தந்த அ.தி.மு.க வுடன் கூட்டணி சேர்கிறார்.. !! 2 சீட்டுக்காக கொள்கையை மாற்றி கொள்கிறார் எனில் உண்மையில் இவருக்கு கொள்கை என ஒன்றும் இல்லை; இவர் அரசியலில் என்ன வேண்டுமானாலும் செய்வார் என்று நான் உணர்ந்த நாள் அது; அன்று முதல் இன்று வரை எனது அந்த நம்பிக்கையை தொடர்ந்து காப்பாற்றி வருகிறார் வைகோ

கடந்த 15 ஆண்டுகளில் சட்ட மன்ற தேர்தலில் எந்த கட்சி ஜெயிக்கும் என தெரிந்து கொள்ள அதிகம் சிரமப்பட தேவையில்லை; வைகோ எந்த அணியில் இருக்கிறாரோ அந்த அணி தோற்கும்; அதற்கு எதிர் அணி ஜெயிக்கும். MGR க்கு பின் ஒவ்வொரு தேர்தலிலும் Anti incumbency அலை தான் அடித்து கொண்டிருந்தது. மேலும் தி.மு.க ஆளும் கட்சி என்றால் சிறு கட்சிகள் அனைத்தும் அதி.மு.க வுடன் சேர்ந்து தேர்தலை எதிர்கொள்ளும்; வெல்லும்; இதுவே அ .தி.மு.க  ஆளும் கட்சி என்றால் தி.மு.க வுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்து அந்த அணி வெற்றி கொள்ளும்..

ஆனால் இந்த அரசியல் காமன் சென்ஸ் சிறிதும் இன்றி ஒவ்வொரு முறையும் தோற்கும் அணியுடன் தான் கை கோர்ப்பார் வைகோ.

தங்கள் கட்சி சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடாது என சென்ற முறை (2011) முடிவெடுத்ததெல்லாம் - அரசியல் தற்கொலைக்கு சமம், இம்முறை தி.மு.க வந்து விடக்கூடாது என தீவிரமாக இருந்தார் வைகோ. இதன் பின்னணியில் ஜெ இருந்தார் என பலரும் சொல்வது உண்மையாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என்றே கருதுகிறேன்.

தங்கள் அணிக்கு விஜய் காந்த் முதல்வர் வேட்பாளர் என அறிவித்தது அவர் தி.முக பக்கம் சென்று விட கூடாது என்ற despareteness என்பது வெளிப்படை

சட்ட மன்ற தேர்தல் என வரும்போது ஆளும் கட்சி எப்படி ஆட்சி நடத்தியது,  அதில் உள்ள குறைகள் என்ன என்பது தான் எதிரில் நிற்கும் கட்சிக்கு முக்கிய பேசு பொருளாக இருக்கும்.இம்முறை வைகோ தி.முக மீது தான் மிக கடுமையான தாக்குதலில் இருந்தார். குறிப்பாக கலைஞரை சாதிய ரீதியில் பேசியது - 2006ல்  தன்னை சிறை வைத்த சுவடு மறையும் முன் அ தி.முக வுடன் கூட்டணி வைத்ததற்கு ஒப்பான தவறு..

நிற்க. வைகோவிற்கென்று எந்த ஒட்டு வங்கியும் இல்லை- வாழ் நாளில்  முதல்வர் ஆக போவதில்லை -அவர் 1 அல்லது 2 சதவீத ஓட்டுகளை கொண்ட ஒரு மிக சிறு கட்சியின் தலைவர்; அதை உணர்ந்து ஏதேனும் ஒரு பெரும் கட்சியுடன் சேர்ந்து தேர்தலை சந்திப்பது மட்டுமே அவரது கட்சியை, தொண்டர்களை கொஞ்சமாவது உயிர்ப்புடன் வைக்கும்..

******
சீரியஸ் டாபிக் முடிந்து ஜாலி பகுதிக்கு வருவோம்..

இம்முறை தேர்தலில் வென்ற ஜெ வை விட, தோற்ற கலைஞரை  விட - வைகோ பற்றி மீம்ஸ்கள் தான் மிக அதிகம்.. அவற்றில் சில மட்டும் இங்கு..


















தொடர்புடைய பதிவு

வானவில் :அ.தி.மு. க வெற்றி- ஒரு பார்வை 

Monday, May 16, 2016

மிக வித்யாசமான தேர்தல் 2016 : ஒரு பார்வை

1980 முதல் தமிழக தேர்தலை கவனித்து வருகிறேன்.. 1980 ல் ஆரம்ப பள்ளியில் படித்தபோது - நினைவு தெரிந்து நடந்த முதல்  தேர்தல் துவங்கி இன்று வரை ஏராள தேர்தல்கள் பார்த்திருந்தாலும் இம்முறை நடக்கும் தேர்தல் மிக மிக வித்யாசமான முறையில் இருக்கிறது... காரணங்கள்....



1. எந்த சுவர்களிலும் வேட்பாளர் பெயர் - சின்னம் வரையப்படாமல் நடந்த முதல் தேர்தல் .. கொஞ்சம் கொஞ்சமாக இது குறைந்து வந்தது எனினும் இம்முறை சுத்தமாக எங்கும் பெயர்- சின்னம் வரையப்பட வில்லை.. குறைந்த பட்சம் சென்னையில் இப்படியாக தான் இருக்கிறது நிலைமை..

2. வீடுகளுக்க்கு வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தரும் பிட் நோட்டிஸ் கூட இம்முறை தரப்படவில்லை; இதனால் நமது தொகுதியில் யார் வேட்பாளர் என்பதே தெரியாமல் போய் விட்டது.

ஒரு நாளைக்கு முன்பு தேர்தல் கமிஷன் வெப் சைட்டை திறந்து தான் இம்முறை யார் யார் வேட்பாளர்கள் என்பதை தெரிந்து கொண்டேன். மேலும் அவர்கள் என்ன படித்துள்ளனர், எவ்வளவு சொத்து என்கிற விபரமும் அறிய முடிகிறது.

இதில் தி.மு.க, அ.தி. மு. க - 2 கட்சிகளுக்கு தான் பெரும் நலன் கிடைக்கும். அவை தான் மக்களிடம் நன்கு எஸ்டாப்ளிஷ்  ஆன கட்சிகள்.. வேட்பாளர்- அவர்தம் கட்சி விபரங்கள் தெரியாத நிலையில் - ஏற்கனவே நன்கு பிரபலமான இந்த 2 கட்சிகளுக்கு தான் மிக அதிக ஓட்டுகள் சென்று சேரும்..

சுவர் விளம்பரம் மற்றும் பிட் நோட்டிஸ் தடுப்பது பல நல்ல விளைவுகளை தந்தாலும், எல்லாரும் தேர்தல் கமிஷன் வெப் சைட்டை பார்த்து என்னென்ன வேட்பாளர் என தெரிந்து கொள்ள முடியாதே !! நம் நாட்டில் இணையத்தை பயன் படுத்துவோரே மிக குறைவு தான்...

http://myneta.info/

இந்த வெப் சைட் சென்று தமிழ் நாடு தேர்ந்தெடுத்து பின் உங்கள் மாவட்டம் தேர்ந்தெடுங்கள். உங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளும் தெரியும். அதில் உங்கள் தொகுதியை க்ளிக் செய்தால் - உங்கள் தொகுதி வேட்பாளர்கள் - பெயர்- கட்சி- அவர்கள் பின்னணி- படிப்பு மற்றும் சொத்து விபரம் தெரிய வரும்.

3. உண்மையில் கட்சிகளின் உழைப்பை விட மிக அதிகம் உழைத்து தேர்தல் கமிஷனும் - அவர்கள் டீமும் தான். வாய்ப்பிருந்தால் அவர்களுக்கே கூட வாக்களிக்கலாம் :) அவ்வளவு அற்புதமான உழைப்பு.. 100% வாக்கு பதிவு என்ற கடினமான இலக்குடன் - பால் கவர் துவங்கி, டிவி - ரேடியோ விளம்பரங்கள் என பல்வேறு விதத்தில் அவர்கள் வாக்களிக்க சொன்ன விதம் அருமை !!

4. ஜெ, கலைஞர், ஸ்டாலின், விஜய் காந்த் என்ற தலைவர்களை வைத்து கட்சிகள் ஆங்காங்கு மீட்டிங் போட்டதுடன் சரி.. அதற்கு வந்த கூட்டம் அனைத்தும் "கூட்டி வரப்பட்ட" கூட்டமே. எங்கள் ஏரியாவிற்கு பக்கத்தில் ஒரு கூட்டம் நடந்தது. அதற்கு அரை கிலோ மீட்டர் தள்ளி ஏராள வாகனங்கள் - மீட்டிங்  முடிந்ததும் - அவர்கள் அனைவரும் வந்து கூட்டம் கூட்டமாக அந்த லாரிகளில் ஏறி சென்றனர்.. அடுத்த நாள் வேறு மீட்டிங்.. வேறு கூட்டம்..

  5. வாக்குக்கு பணம் கொடுப்பதை தேர்தல் கமிஷன் முடிந்தவரை முடக்க பார்த்தது. முழுமையாய் தடை செய்ய முடிய வில்லை என்பது தான் உண்மை. ஆயினும் வழக்கமான அளவு பண புழக்கம் இல்லை என்றும் ,தேர்தல் கமிஷன் நடவடிக்கை தான் காரணம் என்றும் பல நண்பர்களும் கூறினர்..

**************
தேர்தல் நாளான இன்று - நள்ளிரவில் சென்னையில் மழை பெய்தமையால் காலை வெய்யில் சற்று குறைவாய் இருந்தது.
மடிப்பாக்கத்தில் காலை 7.15 மணிக்கு வாக்கு பதிவு 

நானும் மனைவியும் காலை 7.15க்கெல்லாம் வாக்களிக்க சென்று விட்டோம். அப்போதே மிக நல்ல கூட்டம்.
நம்ம வீட்டம்மணி எனக்கு முன்பாக வாக்களிக்கிறார் 

எவ்வளவு கூட்டம் இருப்பினும் 5 முதல் 15 நிமிடத்திற்குள் வாக்களித்து விடலாம்..

வாக்களிக்கும் முன்...

இம்முறை வாக்காளர் சீட்டு  ( பூத் ஸ்லிப்) கூட கட்சிகள் தர அனுமதியில்லை; தேர்தல் ஆணையம் தான் அணைத்து வீடுகளிலும் தந்துள்ளது. அந்த பூத் ஸ்லிப்  உங்கள் வீட்டுக்கு வந்து விட்டால் எந்த பிரச்சனையும் இல்லை; அந்த சீட்டுடன் - வாக்காளர் அடையாள அட்டை, டிரைவின் லைசன்ஸ், ஆதார் கார்ட், ரேஷன் கார்ட் போன்ற எந்த அடையாள அட்டையை எடுத்து சென்றும் வாக்களித்து விடலாம்,,

பூத் ஸ்லிப்  உங்கள் இல்லத்திற்கு/ உங்கள் கைக்கு வராத பட்சம்.. 

உங்கள் வீட்டுக்கருகே இருக்கும் வாக்கு சாவடிக்கு அவசியம் செல்லுங்கள். அங்கு குறிப்பிட்ட பள்ளி/ கல்லூரிக்கு முன்பே ஏராள வாலண்டியர்கள் வாக்காளர் விபரங்களுடன் அமர்ந்துள்ளனர். அதில் உங்களது வாக்காளர் எண் என்ன - பூத் எண் எது என தெரிந்து கொள்ளுங்கள். இப்படி பூத் நம்பர் மற்றும் வாக்காளர் வரிசை எண் - இரண்டும் தெரிந்தாலே - வாக்காளர் சீட்டு இல்லா விடினும் தாரளமாக வாக்களிக்கலாம்..

வாக்களிப்போரில் பாதி பேர் தான் பூத் ஸ்லிப் வைத்துள்ளனர்.மீதம் உள்ளோர் வாக்கு சாவடிக்கு சென்று தான்  வாக்காளர் எண் & பூத் எண் எது என தெரிந்து கொண்டு - வாக்களிக்கிறார்கள். எனவே பூத் ஸ்லிப் இல்லாவிடினும் - உங்கள் பெயர் வாக்காளர் லிஸ்ட்டில் இருந்தால் நிச்சயம் வாக்களிக்கலாம்.

உங்கள் பெயர் வாக்காளர் லிஸ்ட்டில் உள்ளதா என அறிய இந்த ஸ்டெப்களை பயன்படுத்துங்கள்:



அவசியம் வாக்களியுங்கள்... இந்த கறை நல்லது !

அண்மை பதிவு: 

சென்னையின் தீம் பார்க்குகள்: எது ஓகே? எது நாட் ஓகே?

Tuesday, April 22, 2014

வானவில் - வோட்டர் ஐ. டி குளறுபடி-சாக்லேட் ரூம்- உஸ்தாத் ஹோட்டல்

வோட்டர் ஐ. டி குளறுபடிகள் 

இன்னொரு தேர்தல் வந்து விட்டது. மடிப்பாக்கம் வந்து ஏழு வருடமாக தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்காக போராடி வருகிறேன். இதுவரை எத்தனை முறை அதற்கான பாரம் நிரப்பி கொடுத்தேன் என்று கணக்கே இல்லை. தாம்பரம் - தலைமை அலுவலகம் பல முறை சென்றும் பார்த்தாகி விட்டது. ஊஹூம்

நமக்கு தான் இப்படி என்றால் - புழுதிவாக்கம் அரசு பள்ளிக்கு சமீபத்தில் சென்றபோது அங்குள்ள ஆசிரியை இது ரொம்ப சாதாரணம் என்றார். 10 - 15 முறைக்கு மேல் அப்ளிகேஷன் நிரப்பி தந்தும் வாக்காளர் அடையாள அட்டை வருவதே இல்லையாம்.. வி. ஏ . ஓ அலுவலகம், தாம்பரம் ஆபிஸ், அது இது என்று அலைய  விடுகிறார்களே ஒழிய வாக்காளர் அடையாள அட்டை கைக்கு வருவதே இல்லை.

என்னிடம் பேசிய டீச்சர் தனது மகளுக்கு இந்த அட்டை வாங்குவதற்குள் தான் பட்ட பாட்டை சொல்லி நொந்து கொண்டார். " நாங்க தான் எல்லா வீட்டுக்கும் போய் தகவல் வாங்குறோம்; எங்களுக்கே ரொம்ப நாள் கார்ட் தரலை. பெண்ணுக்கு ஏதாவது ஒரு ஐ. டி கார்டாவாது வேண்டும் என ரொம்ப போராடி வாங்கினோம்" என்றார்

நாம் இதற்கான அப்ளிகேஷன் நிரப்பி தந்தும் ஏன் அரசாங்கத்தால் சரியாக கார்ட் தர முடியவில்லை? நாம் நிரப்பி தருகிற அப்ளிகேஷன் என்ன ஆகிறது ? ஒவ்வொரு முறை போய் கேட்கும் போதும் புதிதாக நிரப்பி தர சொல்லி அவர்கள் தான் சொல்கிறார்கள்..

அரசாங்கம் மீதும் அரசு துறைகள் மீதும் வெறுப்பையும் நம்பிக்கையின்மையையும் தருகிற விஷயங்களாக இவை இருக்கின்றன... ஹூம்

அழகு கார்னர் 

நிவேதா தாமஸ்.. போராளி உள்ளிட்ட படங்களில் நடித்தவரை ஜில்லாவில்விஜய்க்கு தங்கையாக்கினர்  :((

அழகு, திறமை இரண்டும் இருந்தும் தமிழ் திரை உலகம் ஏன் இன்னும் கண்டு கொள்ளாமல் இருக்கிறதோ தெரியவில்லை




டிவி பக்கம்

ஆதித்யா சானலில் கல்லூரிகளுக்கு சென்று தமிழில் பேச சொல்லி நடத்தும் நிகழ்ச்சி செம காமெடியாக உள்ளது. ஆங்கிலத்தில் சில வரிகளை சொல்லி தமிழில் சொல்லுங்க என்பதும், அவர்கள் தரும் பதிலுக்கு நிகழ்ச்சி காம்பியர் தரும் கவுண்டர் மற்றும் முக பாவமும் பட்டாசு !

இதில் யாரேனும் ஒரு பிரபலத்தின் புகைப்படம் காட்டி " யார் இவர்? " என கேட்டு கல்லூரி மாணவர்களின் அறியாமை வேறு பறை சாற்றுகிறார்கள்.

இந்த வாரம் ம. பொ. சி புகைப்படத்தை காட்டி யாரென்று கேட்க, " பாரதியார் சொந்தக்காரர்" என்றும் " வ. உ  சி" என்றும் அவர்கள் சொன்ன பதில் தமிழ் ஆர்வலகளுக்கு கோபத்தை வரவழைத்திருக்கும்.. !

உணவகம் அறிமுகம் - சாக்லேட் ரூம் வேளச்சேரி 



வேளச்சேரி 200 அடி சாலையில் உள்ளது சாக்கேலேட் ரூம்; பெயருக்கேற்ப சாக்லேட் வகை இங்கு அதிகமாக கிடைக்கிறது. 11 காலை டு 11 இரவு கடை திறந்திருக்கும் . மாலை தான் கூட்டம் ! மிக அழகான ஆம்பியன்ஸ்...

பிட்சா போன்றவையும் இங்கு உண்டு; ஆனால் சாக்கலேட் தான் பலரும் விரும்புகிற உணவாக இருப்பதாக கடைக்காரர் கூறினார். (கீழே இவர்களுக்கு ஒரு துணிக்கடை உண்டு.. அது நாங்கள் வழக்கமாய் செல்லும் கடை.. இரண்டிற்கும் ஓனர் ஒருவரே என்பதால், அவர் பல ஆண்டுகளாக நல்ல பழக்கம்)

பெண்களுக்கு சாக்லேட் பிடிக்கும் என்பதால் அவர்களை தான் அதிகம் காண முடிகிறது ( ஹீ ஹீ )

நிச்சயம் ஒரு வித்தியாச அனுபவத்திற்காக ஒரு முறை விசிட் அடியுங்கள்



பாடல் கார்னர் 

இந்த வாரம் வெளிவர உள்ள " என்னமோ எதோ" படப்பாடல் இது..

இமான் என்றால் துள்ளல் இசை தான் அதிகம் இசைப்பார் என்பதற்கு மாறாக ஒரு சோக மற்றும் மெலடி பாடல் இது.. பாடியவர் ரொம்ப ஸ்பெஷல் ஆன ஒருவர்... பாருங்கள்...




ஐ. பி. எல் கார்னர் 

இந்த வருட ஐ. பி. எல் லில் பாவரைட் அணி எதனையும் இப்போதைக்கு சொல்ல முடியவில்லை. ஆனாலும் மொஹாலி அணி அதன் இரண்டு வீரர்களுக்காக கவனத்தை கவர்கிறது..

மேக்ஸ் வெல்  மற்றும் மில்லர். அடுத்தடுத்து 205 மற்றும் 190 ரன்களை இந்த இருவரணி அனாயசமாக அடித்து ஜெயித்தது கண் கொள்ளா காட்சி.

மேக்ஸ் வெல் ஆட்டத்தை இதுவரை பார்க்கா விடில் இன்று மாலை நடக்கும் மேட்சில் அவசியம் பாருங்கள் ( இன்று மொஹாலி Vs   சண் ரைசர்ஸ் ) அடேங்கப்பா. என்னா அடி.. 5- அல்லது 10 பந்துகளுக்கு பிறகு ஒரே சிக்சர் மழை தான். இந்த வருட ஐ. பி. எல் லில் அசத்த போகிற வீரர்களில் மேக்ஸ் வெல்லுக்கு மிக பெரிய இடம் இருக்க போகிறது. அவரை விரைவில் அவுட் ஆக்காமல் 30 - 40 பந்துகள் ஆட விட்டால் எந்த அணியும் ரத்த கண்ணீர் சிந்த வேண்டியது தான்.

இன்னொரு பக்கம் கில்லர் மில்லர்... 20 பந்துகளில் 50 அடிப்பதை வழக்கமாக  கொண்டுள்ளார்.

இந்த இருவரை தவிர இந்த அணியில் சொல்லி கொள்கிற மாதிரி இல்லை எனினும் இதுவரை இந்த இருவர் அணியே வெற்றி தேடி தந்து  கொண்டிருக்கிறது

சென்னை முதல் மேட்சை விட நல்ல பவுலிங் வரிசையை அமைத்து கொண்டு நேற்று மிக பெரும் வெற்றியை ஈட்டியது மகிழ்ச்சி. இருப்பினும் பிரேவோ இல்லாதது பெரும் பின்னடைவு தான்..

பார்த்த படம் - உஸ்தாத் ஹோட்டல் 

அட்டகாசமான படம்.. எப்படித்தான் இவ்வளவு அழகான கதையெல்லாம் யோசிக்க முடிகிறதோ ?

பெண்களுடனே வளர்ந்து சமையலின் மீது ஆர்வம் கொண்ட ஹீரோ- ஒரு சந்தர்ப்பத்தில் தனது தாத்தாவுடன் சில மாதங்கள் இருக்க நேரிடுகிறது. தாத்தா வைத்திருக்கும் ஹோட்டலின் பெயர் தான் உஸ்தாத் ஹோட்டல். வெளிநாடு செல்ல துடிக்கும் அவனை உஸ்தாத் ஹோட்டல் என்ன செய்தது என்பது தான் கதை.

அன்பு தான் படத்தின் அடிநாதம். நகைச்சுவை மேலும் மனிதர்களின் மென் உணர்வுகளை அழகாக தொட்டு செல்கிறார் இயக்குனர்.

முக்கிய பாத்திரத்தில் திலகன்  .. என்னா நடிப்புடா சாமி ! இறுதியில் அவரை ஒட்டி வரும் ஒரு டுவிஸ்ட் கவிதை.. (அதை அறிய - டைட்டில் ஓடி முடியும் கடைசி ஷாட் வரை காத்திருக்க வேண்டும்.. )

மலையாளத்தின் அற்புதமான படங்களில் ஒன்றான இப்படத்தை அவசியம் பாருங்கள் !

Tuesday, July 30, 2013

மனதை உலுக்கிய தூக்கு மர நிழலில்

ல்லூரி காலத்தில் படித்து விக்கித்து போன நூல் சி.ஏ பாலன் என்பவர் எழுதிய "தூக்கு மர நிழலில் ".

பாலன் கேரளாவை சார்ந்த ஒரு கம்யூனிஸ்ட் தலைவர். அவருக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. கருணை மனுவும் ஜனாதிபதியால்   நிரகாரிக்கப்பட - இன்னும் ஒரு வாரத்தில் தூக்கு எனும் நிலை.

அப்போது கேரளாவில் ஈ. எம் எஸ் தலைமையில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்தது.வழக்கறிஞர் கிருஷ்ண ஐயர் மூலம் மீண்டும் ஜனாதிபதிக்கு மனு செல்ல, இம்முறை கருணை மனு ஏற்று கொள்ளப்பட்டு விட்டது !

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பாலன் எந்த தவறும் செய்ய வில்லை என விடுதலை ஆகிறார் !

**********
நூல் முழுக்க முழுக்க சிறையில் இருந்த போது சி.ஏ பாலன் சந்தித்த அனுபவங்களை தான் கூறுகிறது. மேலும் பல தூக்கு தண்டனை கைதிகளின் மன நிலையை கண்ணாடி போல காட்டி விடும் இந்த புத்தகம் !

சி.ஏ பாலன் சிறையிலிருந்து வெளியான பின் எழுதிய நூல் இது. முழுக்க முழுக்க உண்மை சம்பவங்களால் நிறைந்தது

இந்த நூல் எந்த பதிப்பகத்தில் கிடைக்கும் என்ற தகவலும் இல்லை. புத்தக சந்தையிலும் கூட இந்த புத்தகம் கண்ணில் பட்டது இல்லை.  எந்த பதிப்பகத்தில் இந்த நூல் கிடைக்கிறது என்ற தகவல் யாரேனும் தந்தால் நன்றியுடையவனாவேன் !

நூல் துவங்கும் போது சி.ஏ பாலன் சிறையில் சென்று சேர்கிறார். அவருக்கு ஒரு அறை ஒதுக்கப்படுகிறது. அதன்பின் சிறையில் நடக்கும் பல்வேறு சம்பவங்களை அவர் சொல்லி போகும் போது நமக்கு " இப்படி ஒரு உலகமா?" என்று அச்சமும் வியப்பும் மேலிடும்.

உதாரணத்துக்கு சில :

வெளி உலகில் காசு எப்படி பல பொருள்களை வாங்க பயன்படுகிறதோ அதே போல, சிறைக்குள் பீடி, சிகரெட் தான் பண்டமாற்று பொருள். சிறை வார்டன்கள் அல்லது கைதிகளிடம் பல வஸ்துகள்  கிடைக்கவும் இவையே பயன்படுகிறது. வழக்கமாய் ஜெயிலுக்கு வருவோர் தங்களை போலிஸ் பிடிக்க போகிறது என்றால் ஆசன வாயில் பீடி கட்டை சொருகி சிறைக்குள் எடுத்து வந்து விடுவார்களாம் !

வார்டன்கள் செய்கிற கொடுமை; சிறைக்குள் உள்ள அரசியல் என்றெல்லாம் சொல்லி போகும் இந்த நூல் - மிக முக்கியமாய் தொடுவது தூக்கு தண்டனை கைதிகளின் மன நிலையை !



நூலாசிரியர் சி.ஏ பாலன் ஒரு தூக்கு தண்டனை கைதி என்பதால் - பல தூக்கு தண்டனை கைதிகளுடன் பழகும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கிறது. அவர்களின் கதைகள் பலவற்றை அவர் கூறுகிறார். அநேகமாய் ஒவ்வொரு மனிதனும் எதோ ஒரு நேரத்தில்,  கோபத்தில் அல்லது முட்டாள் தனத்தில் தவறு செய்து விட்டு அந்த தவறுக்காக தன்னை தானே நொந்து கொண்டு இருப்பதை சொல்லி செல்கிறார்

தூக்கில் போடப்போகும் முன் மனிதர்கள் எப்படி பயப்படுகிறார்கள் என்பதையெல்லாம் அவர் விவரிக்கும் விதம் படித்து 20 வருடம் ஆகியும் இன்னும் மறக்க முடிய வில்லை ! தூக்கு மேடைக்கு செல்லும்போது  பலரை தர தரவென்று இழுத்து தான் செல்வார்களாம். சிலர் அந்த பயத்தில் ஏறக்குறைய மயங்கி போய் விடுவார்களாம். அப்படியே கொண்டு சென்று தான் தூக்கில் இடுவார்களாம்.

நிற்க. சி.ஏ பாலனுக்கு என்ன ஆனது என்று பார்ப்போம்

அவர் ஒரு நிரபராதி எந்த தவறும் செய்ய வில்லை என வெளியில் சில அரசியல் கட்சிகள் போராடுகின்றன. குறிப்பாக நடிகர் MR ராதா இவரை விடுவிக்க கோரி பெரும் போராட்டத்தில் ஈடுபடுகிறார்
பொதுவாய் தூக்கு தண்டனை கைதிகள் - தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனை பெறுவதை தான் கேள்விப்படுவோம். இங்கு அவர் குற்றமே செய்யாதவர் என விடுவிக்கப்படுகிறார்

"எந்த தவறும் செய்யாத எனக்கு தானே தூக்கு விதிக்கப்பட்டது? அந்த தீர்ப்பு அப்படியே எடுத்து கொள்ளப்பட்டிருந்தால் நான் இறந்திருக்க வேண்டும் தானே ? நமது நீதி முறையும் தூக்கு வழங்கும் விதமும் எவ்வளவு கேலிக் கூத்தாக இருக்கிறது பாருங்கள்"  என்று நூலை முடிக்கிறார் சி.ஏ பாலன் 

படித்து 20 வருடங்கள் ஆகியும் இவ்வளவு விஷயங்கள் நினைவில் கொண்டு எழுதுவதிலேயே இந்த நூல் என்னுள் ஏற்படுத்திய தாக்கம் உங்களுக்கு புரிந்திருக்கும் !

வாய்ப்பு கிடைத்தால் இந்நூலை அவசியம் வாசியுங்கள் !

Friday, March 22, 2013

பத்து ரூபாயில் திருமணம் முடித்த அரசியல் தலைவர் -ஆதிமனிதன்


பத்து ரூபாய் செலவில் ஒரு பிரபல அரசியல் தலைவரின் திருமணம் முடித்தது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இன்றைய அரசியலில், மா.செ முதல் மாநில அமைச்சர்களின் 'இல்ல திருமண' விழாக்களில் பணம் படும் பாடு நாம் எல்லோரும் அறிந்ததே. ஆனால் தோழர். ஜீவா அவர்கள் வெறும் பத்து ரூபாயில் தன் திருமணத்தை நடத்தி முடித்து இருக்கிறார்.

தனது திருமணத்திற்கு மிகவும் நெருக்கமான பத்துக்கும் உட்பட்ட தோழர்களை மட்டும் அழைத்து அவர்களில் ஒருவரிடம் ஒரு பத்து ரூபாயை கொடுத்து இரண்டு மல்லிகைப்பூ மாலை மீதமுள்ள பணத்திற்கு 'சாக்லேட்' மிட்டாய்களையும் வாங்கி வர சொல்லி, மணமக்கள் அந்த மல்லிகைபூ மாலையை மாற்றிக்கொண்டு அங்கிருந்தவர்களிடம் கையில் ஆளுக்கு ஒரு சாக்லேட் கொடுத்து அவ்வளவுதான் திருமணம் முடிந்து விட்டது எல்லோரும் போகலாம் என்றாராம்.




ஒரு முறை திரு. ஜீவாவும், காம்ரேட் ஒருவரும் மதுரைக்கு கட்சிக்காக நிதி சேர்க்கும் பொருட்டு சென்று திருச்சி திரும்பிய போது இரவு நேரமாகி விட்டதாம். திருச்சி ரயில் நிலையத்தில் சென்னை ரயிலுக்காக காத்திருந்த நேரத்தில் அவருடன் வந்திருந்த தோழர், காம்ரேட், காலையில் இருந்து ஒன்றும் சாப்பிடவில்லை. வயிறு பசிக்கிறது. ஏதாவது வாங்கி சாப்பிடலாமா என கேட்டிருக்கிறார்.

அதற்கு திரு ஜீவாவோ, ஓ சாப்பிடலாமே. எவ்வளவு பணம் வச்சிருக்கே என கேட்டாராம். பணமா, என்னிடம் ஏது காம்ரேட். உங்களிடம் தான் வசூலித்த பணம் நிறைய இருக்கே. சாப்பாடுக்கு தானே, அதிலிருந்து வாங்குவோமே என்று திரும்பி கேட்டாராம். அதற்க்கு திரு ஜீவா அவர்கள், இதோ பார். அது மூட்டை தூக்கி பிழைப்பவனும், வண்டி இழுத்து பிழைப்பவனும் கட்சிக்காக கொடுத்தது. அதிலிருந்து ஒரு சல்லி காசு நாம் எடுக்க கூடாது. என்னிடமும் வேறு பணமில்லை. ஒரு இரவு தானே, பொறுத்துக்கொள். சென்னை சென்றதும் என் வீட்டில் பழைய சாதம் இருக்கும். இரண்டு பெரும் சாப்பிடுவோம் என்றாராம். அந்த அளவிற்கு திரு ஜீவா அவர்கள் எளிமையையும் அரசியலில் நேர்மையையும் கடைபிடித்தவர். ஹ்ம்ம்...கனவில் தான் இத்தகையவர்களை நாம் இனி காண முடியும்.

பின்னாளில் திரு. ஜீவா அவர்களின் மகளுக்கு திருச்சியில் திருமணம் நடந்த போது (திரு. ஜீவா அவர்கள் மறைவிற்கு பின்) பேசிய தந்தை பெரியார், ஜீவா இருந்திருந்தால் கூட இவ்வளவு சிறப்பாக இத்திருமணம் நடந்திருக்காது, நடத்த விட்டிருக்க மாட்டார். நாம் அனைவரும் ஜீவாவின் வீட்டு திருமணத்தை சிறப்பாக நடத்தி இருக்கிறோம் என்று பெருமை பட்டுக்கொண்டாராம். இத் திருமணத்தில் அப்போதைய முதல்வர் அறிஞர் அண்ணா, கலைஞர் உட்பட அனைத்து தலைவர்களும் கலந்து கொண்டு ஜீவாவின் இல்ல திருமணத்தை சிறப்பித்துள்ளார்கள்.

எளிமைக்கு பெயர் பெற்ற கர்மவீரர் காமராஜ், மரியாதைக்குரிய கக்கன் போன்று தோழர் ஜீவாவும் ஒருவர். தமிழ் மீது தீராத ஆர்வம் கொண்டிருந்த ஜீவா அவர்கள், தூய தமிழில் பேசவும் எழுதவும் வேண்டும் என விரும்பியவர். அதனாலேயே தன பெயரை 'உயிரின்பன்' என மாற்றிக்கொண்டார். இன்று தமிழ் தமிழகத்தின் அலுவல் மொழியாக ஆவதற்கும், தமிழ் வழிக் கல்வியை கொண்டு வருவதற்கும் அவர் ஒரு முக்கிய காரணம் என கூறலாம். 'தாமரை' என்ற தமிழ் இலக்கிய இதழையும் அக்காலத்தில் அவர் தொடங்கி நடத்தி வந்தார்.

சுய மரியாதை சுடரான திரு ஜீவா அவர்களிடம் தந்தை பெரியார் அவர்கள் பகத்சிங்கின் Why I am an atheist என்ற புத்தகத்தை தமிழில் மொழி பெயர்க்க கோரி இருந்தார். அதை ஏற்று அப்புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்த காரணத்திற்காக (அப்புத்தகம் முதன் முதலில் மொழி பெயர்க்கப்பட்டது தமிழில் தான்) அப்போதைய ஆங்கில அரசு பெரியார் மற்றும் திரு ஜீவா அவர்களை சிறையில் தள்ளி, விடுதலை வேண்டும் என்றால் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுக்க கூறியது. இதை அடுத்து தந்தை பெரியார் அவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்து விடுதலை ஆனார். ஆனால் தன்மான சிங்கம் திரு ஜீவா அவர்கள் நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று சிறையில் தண்டனை காலம் முடிந்தே வெளியேறினார். இவ்வாறு ஜீவாவின் சிறப்புகளை அடுக்கி கொண்டே போகலாம்.

திரு. ஜீவா அவர்களுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உண்டு. திருமதி. பத்மாவதி ஜீவானந்தம் அவர்களும் பல வருடங்களுக்கு முன்னரே இயற்கை எய்தி விட்டார்கள். அறிஞர் அண்ணா அவர்கள் முதல் மந்திரியாக இருந்த போது யாரோ பத்மாவதி அம்மையாரை பிடிக்காதவர்கள் அவர்களை பற்றி புகார் ஒன்றை தட்டி விட, அது அண்ணாவிடம் போய் சேர்ந்திருக்கிறது. யார், என்ன வென்று விசாரித்து தெரிந்து கொண்ட அண்ணா அவர்கள், ஜீவா அவர்கள் நினைத்திருந்தால் எப்படி எல்லாமோ வாழ்ந்திருக்கலாம். ஆனால் கடைசி வரை அப்பழுக்கில்லாமல் வாழ்ந்து மறைந்தவர் அவர். அவர் குடும்பத்தில் ஒருவர் மீது உண்மையிலேயே புகார் இருந்தால் கூட அதை இந்த அரசு உப்பு மிளகாய் கணக்கில் சேர்த்து விடும். ஒன்றும் குடி முழுகி போய் விடாது என்று திருப்பி அனுப்பி விட்டாராம்.

எல்லோரையும் தன் பேச்சு திறமையால் ஈர்த்த, தன் வாழ்நாள் முழுதும் ஏழை எளிய, தொழிலார் வர்கத்திற்க்காக போராடி, காந்திய வழியில் எளிமையை கடை பிடித்தும், பெரியார் வழியில் தாழ்த்தப்பட்டோருக்காக குரல் கொடுத்தவரும், கம்யூனிசத்தை ஒடுக்கப்பட்டோருக்காக வளர்த்து சென்ற தோழர். திரு ஜீவா அவர்கள் ஜனவரி 18, 1963 அன்று தாம்பரத்தில் உள்ள தன் எளிய வீட்டிலேயே வீர மரணம் அடைந்தார். சுமார் இரண்டு லட்சம் மக்கள் அவருடைய இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனராம்.

நன்றி: எனக்கு அரசியல் பற்றியும் அரசியல் தலைவர்களை பற்றியும் சிறு வயது முதல் சொல்லி வந்த என் தாய், தந்தைக்கு! மேற்கூறிய பல விசயங்கள் என் பெற்றோர் சொல்லி செவி வழி கேட்டதே.


***
தொடர்புடைய முந்தைய பதிவு :

தோழர் ஜீவா - ஏறினால் ரயில் - இறங்கினால் ஜெயில்

Tuesday, March 19, 2013

ஈழ பிரச்சனை- கலைஞர் நிலை - விகடன் கட்டுரை

"ண்ணா பிசியா?  பேசலாமா? "

தேவா என்னுடனான தொலைபேசி பேச்சை இப்படித்தான் ஆரம்பிப்பான்.

அறை மணிக்கு முன் தனியறையில் ஆப்பு வாங்கியிருந்தாலும், அதை வெளிக்காட்டாமல் " சொல்லு தேவா " என்பேன்.

" விகடனில் ஈழ பிரச்சனை பத்தி திருமாவேலன் எழுதிய கட்டுரை படிச்சேன். என்னமோ போல ஆகிடுச்சு. கடைசி பகுதி மட்டும் படிக்கிறேன் கேளுங்க" என சொல்லி விட்டு போனிலேயே - பெரியார் சொன்ன வரிகளும் கட்டுரையின் கடைசி வரியையும் படிக்க "திடுக்" என்று தாக்கியது. அதன்பின் வழக்கம் போல் இருவரும் அது பற்றி பேசி ஆத்து போனோம். " இவர் மட்டுமா? எல்லா அரசியல் வாதியும் இலங்கை பிரச்னையை வச்சு அரசியல் தானே பண்றாங்க? " என்ற ரீதியில் போனது எங்கள் பேச்சு. 

மாலை வீடு வந்ததும் முதல் வேலையாக அந்த கட்டுரையை அச்சு வடிவில் - புத்தகத்தில் நிதானமாய் வாசித்தேன். 

அடுத்த சில நாட்களில் கூகிள் பிளஸ் அல்லது முகநூலில் யாரேனும் இக்கட்டுரை பற்றி எழுதுவார்கள் என நினைக்க, யாரும் பகிர்ந்த மாதிரி தெரியலை. உடன்பிறப்புகள் பொங்கிய மாதிரியும் தெரியலை. (என் கண்ணில் படாமலும் இருந்திருக்கலாம்)

என் தந்தை கலைஞருடன் திருவாரூர் மற்றும் குடந்தையில் நாடகத்தில் நடித்தவர். நகர தி.மு. க. பொருளாளராக இருந்து எமெர்ஜென்சியில் சிறை சென்றவர். அந்த ஈர்ப்பில் இன்றும் தி.மு.க தவிர வேறு கட்சிக்கு ஓட்டு போட மாட்டார். எனக்கும் தி. மு. க மீது சற்று ஈர்ப்பு உண்டு என்றாலும் நல்லது கெட்டது என வரும்போது தி.மு.க வை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் நபர் இல்லை. சொல்ல போனால் கடந்த 15 ஆண்டுகளாக ஆளும் கட்சி எதுவாயினும் அதற்கு எதிர்த்து ஓட்டு போடும் சாதாரண மனிதனாகவே இருந்து வருகிறேன். 

இன்றைய தி.மு.க வில் எனக்கு பிடிக்காத விஷயங்கள் 3-

1. குடும்ப ஆதிக்கம்.

2. ஊழல் (இது - தி.மு.க - அ .தி.மு.க இரண்டு கட்சிக்கும் பொதுவே; இவ்விஷயத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை)

3. ஈழ விஷயத்தில் போடும் நாடகம் - ஆட்சியிலிருந்த போது அவர்களுக்கு எதுவும் செய்யாமல் போனது

நிற்க . பொங்கும் உடன்பிறப்புகள் இந்த கட்டுரையில் சொன்ன விஷயங்களுக்கு தகுந்த விளக்கங்களுடன் பொங்கலாம்.. !

விகடனில் வரும் கட்டுரைகளை ப்ளாகில் பகிர்வது எனக்கு அறவே பிடிக்காத விஷயம். அது இன்னொருவர் உழைப்பை திருடி குளிர் காயும் ஈன காரியம் என்று நினைப்பேன். இருந்தும் இந்த கட்டுரையில் சொல்லப்பட்ட விஷயம் இன்னும் ஆயிரம் பேருக்கு செல்ல வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக இங்கு பகிர்கிறேன்.

இன்றைய தேதியில் Draft-ல் இருக்கும் பதிவுகளின் எண்ணிக்கை: 56. விகடனில் மட்டுமல்ல பிற பத்திரிக்கைகளில் வெளியாகும் கட்டுரைகள் வீடுதிரும்பலில் தொடர்ந்து வராது. நம்ம பதிவை தினம் ஒன்று போட்டாலே பல மாசம் தாங்கும் !

இனி விகடனில் வெளியான கட்டுரை ....

************

'சாந்தா அல்லது பழனியப்பன்’ - இது கருணாநிதி போட்ட முதல் நாடகம். 'டெசோ அல்லது புஸ்ஸோ’ - இது கருணாநிதி நடத்த ஆரம்பித்திருக்கும் இறுதி நாடகம்.கோபாலபுரம் வீட்டு வாசலில் முதலமைச்சர் கார் வந்து நிற்க ஆரம்பித்தால், 'தமிழினத் தலைவர்’ நாற்காலியைப் புறவாசலில் கொண்டுபோய்ப் போட்டுவிடுவதும், அந்தக் கார் காணாமல் போனால், தூசி தட்டி 'தமிழினத் தலைவர்’நாற்காலியை எடுத்துவந்து உட்காருவதும் கருணாநிதிக்குக் கைவந்த கலை. இந்த நூற்றாண்டின் வரலாற்றுச் சோகமான ஈழத் தமிழர் வாழ்க்கையைவைத்தும் அவர் இப்படி நாடகம் ஆடுவதைத் தான் பார்க்கச் சகிக்கவில்லை.

ஈழத்தில் கொடுமை நடந்து 100 ஆண்டுகள் ஆகிவிடவில்லை. மூன்று ஆண்டுகளே முழுமையாக முடியவில்லை. அந்த அவலம் அரங்கேறியபோது,தமிழ்நாட்டின் அதிகாரம் பொருந்திய நாற்காலியில்அமைச்சர்களோடு அமர்ந்து நாளரு பாராட்டு விழா, நித்தம் ஒரு கொண்டாட்டம், கவர்ச்சி ஆட்டம்பாட்டங்களைக் கண்டுகளித்தவர் கருணாநிதி. அப்போது அவரது கட்சியின் தயவை நம்பித்தான் மத்தியில் காங்கிரஸ் அரசாங்கம் இருந்தது. மன்மோகன், சோனியா, பிரணாப் முகர்ஜி ஆகிய மூன்று அதிகார மையங்களிடமும் அரை மணி நேரத்தில் தொடர்புகொண்டு, தான் நினைத்ததைச் சொல்லும் சக்திகருணாநிதிக்கு இருந்தது. அப்போதெல்லாம் கேளாக் காதினராய், பாராக் கண்ணுடையவராய் இருந்துவிட்டு, 'என்னது... சிவாஜி செத்துட்டாரா?’ என்று மறதி நாயகன் கேட்பதுபோல, இப்போது 'ஈழத்தில் எவ்வளவு அவலம் பார்த்தாயா உடன்பிறப்பே!’ என்று கேட்பது சினிமாவுக்கு வேண்டுமானால் சிரிப்பைத் தரலாம். அரசியலில் இதற்குப் பெயர் துரோகம்... பச்சைத் துரோகம்!

முதலமைச்சராக இருக்கும்போது ஒரு பேச்சு, எதிர்க் கட்சி ஆனதும் மறுபேச்சு. நரம்பு இல்லாத நாக்கு எப்படி வேண்டு மானாலும் வளையும் என்பார் கள். ஆனால்,இப்படியெல்லாம் வளைய முடியுமா என்று கருணாநிதியின் அறிக்கை களைப் பார்த்து அதிர்ச்சியடை யத்தான் வேண்டும். கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக கருணாநிதி எதையெல்லாம் சொல்லிவந்தாரோ, அதை எல்லாம் கடந்த இரண்டு, மூன்று வாரங்களாக உல்டா அடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

''இலங்கையை சர்வாதிகாரப் பாதையில் செலுத்திக்கொண்டு இருக்கும் ராஜபக்ஷேவை, மனித உரிமைகள், மனிதநேயம்ஆகியவற்றுக்கு எதிராகப் பல்வேறு வகையான போர்க் குற்றங்களைப் புரிந்த சர்வதேசக் குற்றவாளி என உலக நாடுகள் பார்க்கின்றன. அவர் இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று கேட்கும் அளவுக்குப் பேசி இருக்கிறார். சிங்களப் பேரினவாதத்தின் சின்னம் ராஜபக்ஷே. நமது இந்தியப் பேரரசு தற்போதாவது விழித்துக்கொண்டு ராஜபக்ஷே வின் சுய உருவத்தையும், குணத்தையும்,நோக்கத்தையும் புரிந்துகொள்ள வேண்டும்'' என்று இப்போது அறிக்கைவிட்ட கருணாநிதிதான் தமிழ்நாடு சட்டசபையில்'முதல்வராக’ இருந்தபோது, ''நாம் தமிழர்களைக் காப்பாற்ற அவர்களுடைய வாழ்வாதாரத்தை வளமாக்கப்பாடுபடப்போகிறோமா? அல்லது ராஜபக்ஷேவை குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தப்போகிறோமா? வாழ்வா தாரத்தைப் பெருக்க வேண்டுமானால், இன்றைக்கு இருக்கிற சிங்கள அரசின் மூலமாகத்தான் அதைச் செய்ய முடியும். அங்கே இருக்கிற தமிழர்களுக்கு நன்மை செய்ய வேண்டுமானால், நாம் இங்கே ஆத்திரப்பட்டோ அல்லதுவெறுப்பு உணர்வுடனோ அங்குள்ள சிங்கள இனத்தினரைப் பற்றி ஒன்றைச் சொல்லி, அது வேறு விதமான விளைவுகளை உண்டாக்கினால் நல்லதல்ல. இலங்கையிலே உள்ள தமிழனைக் காப்பாற்ற வேண்டுமானால், சிங்களவர்கள் கோபத்தை அதிகமாக ஆக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எதிலும் ஒரு நீக்குப்போக்கு வேண்டும்'' என்று சொல்லிச் சமாளித்தவர்.

லட்சக்கணக்கான தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொலை செய்யப்பட்டது மே மாதம் 17-ம் தேதி. கருணாநிதி இப்படிச்சொன்னது ஜூலை 1. லட்சம் பேர் செத்ததைப் பார்த்து ஆத்திரம் வரவில்லை. அனுதாபம் கூட வரவில்லை.'கோபப்படாதே’ என்று ஈழ தாகத்தின் வேரில் வெந்நீர்ஊற்றினார். அதற்கு ஒரே காரணம்தான். அதையும் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்குக் கொடுத்த பேட்டியில் அவர் ஒப்புக்கொண்டார். 'இலங்கைப் பிரச்னையில் மத்தியஅரசின் நிலைக்கு மாறாக நடந்திருந்தால், என் ஆட்சியையே இழக்க வேண்டி வந்திருக்கும்’ என்பது பட்டவர்த் தனமான அவரது வாக்குமூலம். ''பதவி என்தோளில் கிடக்கும் துண்டு, கொள்கைதான் வேட்டி'' என்று பேசியது எல்லாம் ஊருக்குத்தானோ?!

''இலங்கை அரசு அறிவித்த போர் நிறுத்தத்தை உண்மைஎன்று நானும் நம்பி, இந்திய அரசும் அதை நம்பி எனக்குத் தெரிவித்ததால், உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றேன்'' என்று புதுக்கதை விட ஆரம்பித்துள்ளார்கருணாநிதி. அவரை இத்தனை சுலபமாக ஏமாற்ற முடியும் என்பதை அவரது எதிரிகளும் ஏற்க மாட்டார்கள். அவர் அப்போதும் இப்போதும் தமிழ்நாட்டு மக்களைஏமாற்றுகிறார் என்பதே உண்மை. 'போரை நிறுத்திவிட்டோம்’ என்று ராஜபக்ஷே சொன்னதை,ப.சிதம்பரம் நம்பலாம். ப.சி. சொன்னதை மு.க-வும் நம்பலாம். தவறில்லை. ''அன்றைய தினம்தான் எட்டு இடங்களில் கொத்துக் குண்டுகளைப் போட் டார்கள்'' என்று விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப் பாளர் நடேசன்,பி.பி.சி. வானொலியில் அன்று இரவே கதறினாரே... அப்போது கருணாநிதி அளித்த பதில் என்ன?கருணாநிதியின் அறிவிப்பைப் பார்த்துதான் 'பாதுகாப்பானஇடத்துக்கு’ அப்பாவி மக்கள் இடம்பெயர்ந்தார்கள். அந்த இடத்தில் குண்டுகள் போடப்பட்டு கொலைகள் நடந்தன. கருணாநிதி சொன்னதை நம்பியதால் தமிழர்கள்உயிரைவிட்டார்கள். ஆனால், இப்போது கருணாநிதி அறிக்கைவிட்டு ஊதுபத்தி ஏற்றுகிறார்.

''நீங்கள் போர் நிறுத்தம் செய்துவிட்டதாகச் சொல்லிஉண்ணாவிரத்தத்தை முடித்துவிட்டீர்கள். ஆனால்,அன்றைய தினம்கூட குண்டுபோட்டுள்ளார்களே?'' என்று மனசாட்சி உள்ள ஒரு பத்திரிகையாளன் கேட்டபோது, ''மழைவிட்டும் தூவானம் தொடர்வது வழக்கம்தான். இதைப் போலத்தான் இலங்கையிலே இப்போதும் தொடரும் விமானத் தாக்குதல்களைக் கருத வேண்டும்'' என்று கருணாநிதி சொன்ன வாசகம், மிகக் கொடூரமான சினிமா வில்லன்கள் கூடப் பேசாத வசனம். உரிமை மனோபாவம் கொண்டவன் உடலில் உடைகூட இருக்கக் கூடாது என்றுநிர்வாணப்படுத்திக் கண்ணைக் கட்டி சிட்டுக்குருவிகளைப் போல சுட்டுக் கொன்ற காட்சிகளைப் போர் முடிந்த நான்காவது மாதம் சேனல் 4 வெளிப்படுத்தியது. 'கொன்றுவிட்டார்கள்... கொடுமைப்படுத்தினார்கள்... சித்ரவதை செய்தார்கள்’என்று அதுவரை சொல்லிக் கொண்டுதான் இருந்தார்கள். முதன்முதலாக அந்த வீடியோ காட்சிகள், அம்பலப்படுத்தி அதிரவைத்தன. 

அப்போதும் 'முதல்வர்’ கருணாநிதி, ''இந்தக் காட்சிகள் பழையவை. இப்போது எடுக்கப்பட்டவை அல்ல''என்று எல்லாம் தெரிந்தவராகச் சொன்னார். ராஜ பக்ஷேவின் கண்துடைப்பு நாடகத்தில் தானும் ஒரு பாத்திர மாகப் பங்கேற்கும் வகையில் 10 பேரை அனுப்பிவைத்தார் கருணாநிதி. அவர்களை சென்னை விமான நிலையத்தில் வரவேற்கும் தினத்திலும், ''போரின்போதுதான் சித்ரவதை கள் நடந்தன. இப்போது அல்ல. இப்போது தமிழர்கள் யாரும் கடத்திச் செல்லப்படுவது இல்லை'' என்றார்.

அதாவது,இலங்கை அரசாங்கத்தை, ராஜபக்ஷேவைக் குற்றம்சாட்டி யார் கேள்வி கேட்டாலும் கருணாநிதிக்குச் சுருக்கென்றது. அதனால்தான் ராஜபக்ஷேவும் மன்மோகனும் பதில் சொல்ல வேண்டிய கேள்விகளுக்கு எல்லாம் கருணா நிதியே வலியப் போய் பதில் சொன்னார். இந்த அதீத ஆர்வத்துக்கு ஒரு பின்னணி இருந்தது. இலங்கையில் நடந்த அனைத்தும் அவருக்கு முன்கூட்டியே சொல்லப்பட்டன.

''இறுதிப் போர் நடந்த காலகட்டத்தில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஒரு குழுவை அமைத்தோம். எங்கள் நாட்டின் சார்பில் நானும் பசில் ராஜபக்ஷே, லலித் வீரதுங்க ஆகிய மூவரும்இடம்பெற்றோம்.
இந்தியாவின் சார்பில் எம்.கே.நாராயணன்,சிவசங்கர்மேனன், விஜய்சிங் ஆகிய மூவரும் இருந்தார்கள்''என்று கோத்த பய ராஜபக்ஷே சொன்னார்.

போர் நடந்த காலகட்டத்தில் கருணாநிதியை எம்.கே.நாராயணன் எத்தனையோ தடவை சந்தித்தார். இலங்கை போய்விட்டு இங்கே வருவார். அல்லது கருணாநிதியைப் பார்த்துவிட்டு அங்கே போவார். போரை வழி நடத்திய ஒருவர் தன்னை அடிக்கடி வந்து சந்திக்கிறாரே என்று அப்போதாவது கருணாநிதிக்குக் குற்றவுணர்ச்சி வந்திருக்க வேண்டும்.'போர் நிறுத்தம் செய்வதற்கு இந்தியா முயற்சிக்காவிட்டால், உங்களுக்குத் தரும் ஆதரவை வாபஸ் பெறுவேன்’ என்று மானஸ்தர் சொல்லி இருக்க வேண்டும்.

''போர் நிறுத்தம் செய்யச் சொல்வது எங்களது வேலை அல்ல'' என்று கருணாநிதி வீட்டு வாசலில் நின்றுகொண்டு அன்றைய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சொன்னபோதாவது, கருணாநிதிக்கு ஆத்திரம் வந்திருக்க வேண்டும். ''அங்கே போர் முடிவுக்கு வரப்போகிறது'' என்று சந்தோஷ அறிவிப்பை நாடாளுமன்றத்தில் பிரணாப் வெளியிட்டபோதாவது, கோபம் வந்திருக்க வேண்டும்.''ராஜபக்ஷே என்ன முடிவெடுத்தாலும் இந்தியா வழக்கம்போல ஆதரிக்கும். இந்தியாவின் போரை நாங்கள் நடத்தினோம் என்று ராஜபக்ஷே சொன்னது ஒருவகையில் சரியானதுதான்'' என்று சிவசங்கர் மேனன் சொன்னபோதாவது, அவமானம் வந்திருக்க வேண்டும். இத்தனை கழுத்தறுப்புகளையும் மறைப்பதற்கு டெசோ ஷோவை கருணாநிதி இப்போது ஆரம்பிக்கிறார்.

போர் உச்சகட்டத்தில் இருந்த போது, ''முதல்வர் கருணாநிதி யின் உயிருக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து'' என்று சென்னை போலீஸ் கமிஷனரை வைத்து அறிக்கை விடவைத்து, முத்துக்குமார் உள்ளிட்ட 17 தமிழ்த் தியாகிகள் தங்களது தேகங்களை ஈழத் தாய்க்கு அர்ப்பணித்தபோது வேடிக்கை பார்த்ததுடன், ''அவர்கள் ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளிக்கவில்லை... பொண்டாட்டியிடம் தகராறு. அதனால் தீக்குளித்தனர்'' என்று கொச்சைப்படுத்தும் காரியத்தை போலீஸ்காரர்களை வைத்து முடுக்கிவிட்டு, தமிழ்நாடு ஒரே உணர்வில் இருக்கிறது என்பதைக் காட்ட கடையடைப்பு நடத்தப்பட்டபோது, ''இது சட்டப்படி குற்றம். கடையை அடைக்கச் சொன்னால் தேசப் பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்வோம்'' என்று மிரட்டல் விடுத்து, பிரபாகரன் படத்தைப் பார்த்தாலே கிழிக்கும் வேலையை போலீஸாருக்குக்கொடுத்து... இப்படிச் செய்த அனைத்துப் பாவங்களுக்கும் இப்போது பரிகாரம் தேட நினைக்கிறார் கருணாநிதி.

சென்னையில் இருந்த இலங் கைத் தூதரக வட்டாரத்துக்கும் அன்றைய தி.மு.க. ஆட்சியின் போலீஸ் உளவுத் துறைக் கும் இருந்த பிரிக்க முடியாத பாசத்தை கருணாநிதி உணரத் தவறியதன் விளைவுதான், இன்று நித்தமும் உடன்பிறப்பு களுக்குக் கடிதம் எழுதியாக வேண்டிய அவஸ்தையைக்கொடுக்கிறது. 

உயிரோடு வந்த பாட்டி பார்வதியை, அநாதை யாக வானத்தில் திருப்பி அனுப்பிய சோகத்தை பேரன் பாலச்சந்திரன் படம் பார்த்து அறிக்கை வெளியிட்டுப் போக்கியாக வேண்டியிருக் கிறது. ''பாவிகளின் கொலை வெறிக்குப் பலியான பாலகன் பாலச்சந்திரன்'' என்று இன்று கண்ணீர்க் கவிதை வடிப்பவர், ''விடுதலைப் புலிகள் கல்லறை கள் கட்டுவதில் காலம் கழித்து விட்டார்கள்''என்று கிண்டல் அடித்ததும், ''இன்று அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவோம்'' என்பவர், அன்று, ''ஈழ ஆதரவாளர்கள் அனைவரும் கடல் வழியாகப் போய் போராட வேண்டியதுதானே. நான் கரையில் இருந்து கண்டுகளிப்பேன்'' என்று வயிற்றெரிச் சலைக் கொட்டியதும் தமிழன் மறக்கக் கூடாத வாக்குமூலங்கள்.

ஊழல் வழக்கில் ஏ.சி முருகேசன் தன் கையைப் பிடித்துத் தூக்கியதால் ஏற்பட்ட சிவப்புக் காய்ப்பை 100 வீடியோ கேமராக்களுக்கு முன்னால் காட்ட வேண்டுமானால்,பாளையங்கோட்டை சிறையில் பல்லி ஓடியதையே 50ஆண்டுகள் சொல்ல முடியுமானால், வளரும் கருவை வயிற்றில் இருந்து எடுத்துப் பொசுக்கிய காட்டுமிராண்டிக்கூட்டத்தைப் பற்றி இன்னும் எத்தனை ஆண்டுகள் சொல்லித் தொலைத்தாலும் ஆத்திரம் அடங்காது.

அந்த சோகத்தில்கூட அரசியல் செய்ய நினைப்பது, அந்தக் கொடூரத்தை விடக் கொடூரமானது. காங்கிரஸை மிரட்டுவதற்கு, அல்லது காங்கிரஸ் தங்களைவிரட்டிவிட்டால் ஈழ ஆதரவுக் கட்சிகளைக்கொண்ட கூட்டணி அமைப்பதற்கு, அதுவும் இல்லா விட்டால் ஈழப் பிரச்னையை எதிர் அணியினர் பயன்படுத்தாமல்இருப்பதற்கு... என்று சாவு வீட்டிலும் லாபநஷ்டங்களுக்கு,கடல் தாண்டிய சொந்தங்களின் சோகத்தை முதலீடு ஆக்குவது ஆபத்தானது. தன்னுடைய கடந்த காலத்தவறுகளை மறைக்க இன்றைக்கு கருணாநிதிக்குத் தேவை முகமூடி. ஏற்கெனவே வீரமணி, திருமாவளவன் ஆகிய இருவரும் சிக்கிவிட்டார்கள். 

பெரியாரைக்காப்பாற்றுவதைவிட, அம்பேத்கர் புகழைப் பரப்புவதைவிட இவர்களுக்கு கருணாநிதியை நியாயப்படுத்துவதே முழு நேரத் தொழிலாக மாறிவிட்டது. ''ஓட்டுக்காக எவனும் எதையும் செய்வான். யார் காலையும் நக்குவான். இதற்குயாரும் விதிவிலக்கு இல்லை!'' என்று தந்தை பெரியார் சொன்னார்.

அதற்காக, ஈழத் தமிழர் பிணங்களையுமா?

Thursday, March 14, 2013

தோழர் ஜீவா - ஏறினால் ரயில்... இறங்கினால் ஜெயில் !

தோழர் ஜீவா - ஏறினால் ரயில்... இறங்கினால் ஜெயில் !- ஆதி மனிதன் 

மிழகத்தில் கம்யூனிசத்தை வளர்த்தவர் தோழர் ஜீவா என்கிற ஜீவானந்தம். இந்த தலைமுறையில் எத்தனை பேருக்கு தோழர் ஜீவாவை பற்றி தெரிந்திருக்கும் என எனக்கு தெரியவில்லை. தமிழகத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் உறுப்பினர் திரு ஜீவா என்றால் அவருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் உள்ள தொடர்ப்பை சாதாரணமானவர்கள் கூட அறிந்து கொள்ளலாம்.


அப்படிப்பட்ட ஒரு விடுதலை போராட்ட வீரர். அகில இந்திய காங்கிரசின் கமிட்டியின் முன்னாள் உறுப்பினர், தமிழகத்தில் தீண்டாமையை ஒழிக்க அரும்பாடு பட்ட ஒரு பெரும் தலைவரின் குடும்பத்தோடு எங்கள் குடும்பத்திற்கு நெருங்கிய தொடர்பு உண்டு என்றால் அதை விட நான் பெருமை பட்டுக்கொள்ள வேறு ஒன்றும் இல்லை. கடந்த வாரத்தில் தோழர் ஜீவாவின் மகன் திரு. மணி குமார் அவர்களை தோழர் ஜீவா அவர்கள் வாழ்த்த வீட்டில் என் அம்மாவுடன் சந்தித்து அளாவியது எனக்கு கிடைத்த பெரும் பேராகும்.

பூதபாண்டி என்கிற ஊரில் மிகவும் ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்த திரு. ஜீவா அவர்கள், தனது குடும்ப பின்னணி காரணமாக சிறு வயதிலேயே இலக்கியம், தெய்வ பக்தி பாடல்கள், கலை என பலவும் கற்று தேர்ந்திருந்தார். தீண்டாமைக்கு எதிராக தனது சிறு வயதிலேயே குரல் கொடுக்க துவங்கிய தோழர் ஜீவா, தனது 'தலித்' நண்பர்களை மேல்ஜாதியினர் வசிக்கும் தெருக்களுக்கும், பொது இடங்களுக்கும்  அழைத்து சென்றதில் தனது வீட்டிலேயே அவருக்கு எதிர்ப்பு வலுக்க தொடங்கியது.  அதுவே ஒரு கட்டத்தில் அவர் தனது வீட்டை விட்டு வெளியேற ஒரு காரணமாகி போனது.

பின்னாளில் காந்தியின் கொள்கைகளால் கவரப்பட்டு அவர் வழியில் கதராடை அணிய தொடங்கி தனது இறுதி நாட்கள் வரை கதராடையை மட்டுமே அணிந்து வந்தார். வைக்கம், சுசீந்தரம் என்று பல ஊர்களில் தலித்துகள் ஊர் மற்றும் கோவிலுக்குள் செல்ல நடைபெற்ற போராட்டங்களில் பங்கு கொண்டவர் சிறுவாயல் என்ற ஊரில் ஒரு ஆசிரமத்தை பொறுப்பேற்று நடத்திக்கொண்டிருந்த போது அங்கு வருகை தந்த காந்திஜியை சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு கிட்டியது. ஆனால், அதுவே அவர் பின்னாளில் காந்தியை விட்டு விலகும் சூழ்நிலையையும் ஏற்படுத்தி விட்டது. தீண்டாமையை விரட்டுவதில் காந்தி முனைப்புடன் இருந்தாலும் 'வருணாசிரம தருமம்' கடைபிடிக்க பட வேண்டும் என்ற காந்தியின் கருத்து அவரை காந்தியை விட்டு விலக வைத்தது.

CPI யில் அவர் சேர்ந்த பிறகு தோழர் P. ராமமூர்த்தியுடன் சேர்ந்து தமிழகம் முழுதும் கம்யூனிஸ்ட் கட்சிக்காக உறுபினர்களை சேர்ப்பதிலும், ஊர் ஊராக சென்று தொழிலாளர் மற்றும் தஞ்சை மாவட்டத்தில் விவசாய தொழிலாளர்களை கம்யூனிச இயக்கத்தில் இணைப்பதை தன் பெரும் பணியாக கொண்டிருந்தார்.

சிறந்த பேச்சாளரான ஜீவா, தனது அனல் பறக்கும் பேச்சால் தொழிலாளர் நலன் மேம்பட பல தொழிலாளர் போராட்டங்களுக்கு வித்தாக அமைந்துள்ளார். ஒரு ஊருக்கு ஜீவா பேச சென்றால் அங்கு அடுத்த நாளே ஒரு தொழிலாளர் போராட்டம் ஆரம்பித்து விடும். இதனாலேயே அவர் அரசின் அடக்குமுறைக்கு ஆளாகி பல முறை சிறை செல்ல நேரிட்டது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் பல தடவை சிறைக்கு சென்று வந்த தோழர் ஜீவாவை இப்படி சொல்வார்கள். ஜீவா 'ஏறினால் ரயில் இறங்கினால் ஜெயில்' என்று. அது மட்டுமன்று ஒரு குறிப்பிட்ட காலம் சென்னையில் நுழைய ஜீவாவிற்கு பிரிட்டிஷ் அரசு தடையே விதித்திருந்தது.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு முதல் தேர்தலில் வியாசர்பாடியில் போட்டியிட்ட திரு. ஜீவா அவர்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பின்னாளில் ஜீவாவை கொவுரவிக்கும் பொருட்டு வியாசர்பாடி ரயில் நிலையத்திற்கு 'ஜீவா வியாசர்பாடி' என்று பெயர் இட்டனர்.

இவர் இப்படி என்றால் இவரின் துணைவியார் திருமதி. பத்மாவதி ஜீவானந்தம் அந்த காலத்தில் தமிழக அரசின் சமூக நலத்துறையின் கீழ் வரும் 'சேவை இல்லம்' என்ற ஆதரவற்ற பெண்களுக்கான சிறப்பு பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக தஞ்சையில் பொறுப்பேற்றிருந்தார். ஓரிரு ஆசிரியர்களையும் ஐம்பது அறுபது மாணவிகளையும்(ஆதரவற்ற பெண்களையும்) மட்டுமே கொண்டிருந்த பள்ளிக்கு மேலும் ஆசிரியர்களை நேர்காணல் செய்த போதுதான் அப்போதே ஆசிரியர் பயிற்சி முடித்திருந்த என என் அம்மாவும் அப்பள்ளிக்கு ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்து இருந்தார். பத்து பதினைந்து பேர் கலந்து கொண்ட அந்த நேர்முக தேர்வில் என் அம்மாவை தேர்ந்தெடுத்தது தொடங்கி இன்று வரை திரு. ஜீவா அவர்களின் குடும்பத்துடனான நட்பு, தொடர்பு நீடிக்கிறது. 

தனக்கு கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் சேவை இல்லத்தில் பயின்ற ஆதரவற்ற பெண்களை தன் குடும்ப உறுப்பினர்களை போலவே நடத்துவாராம். அன்றைய காலகட்டத்தில் சேவை இல்லத்திற்கு அரசின் நிதி சிறிது காலம் கிடைக்காமல் போக தானே ஊரில் உள்ள பெரிய மனிதர்களின் வீடுகளுக்கு சென்று நிலைமையை எடுத்து சொல்லி ஒரு ஆறு மாத காலத்திற்கு அரசின் உதவி பணமே இல்லாமலும், இல்லத்தை இழுத்து மூடாமலும் அங்கு தங்கி இருந்த அனைத்து மாணவிகளுக்கும் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

திரு. ஜீவா - பத்மாவதி அம்மையாரின் அவர்களின் திருமணம் நடைபெற்ற விதத்தை படித்தாலாவது இன்றைய அரசியல்வாதிகள் திருந்துவார்களா என தெரியவில்லை. அது...

அடுத்தவராம்.

வீடு திரும்பலில் வெளியான நண்பர் ஆதியின் முந்தைய பதிவுகள் சில..




Monday, March 11, 2013

தொல்லைகாட்சி -சுருளி ராஜன்- வாணி ஜெயராம்- சூப்பர் சிங்கர்

சீரியல் பக்கம்: கனா காணும் காலங்கள் - கல்லூரியின் கதை

எந்த சீரியலும் பார்ப்பதில்லை. ஆனால் சேனல் மாற்றும் போது சில அழகான பெண்மணிகள் கண்ணில் பட்டால், அங்கேயே சற்று இளைப்பாறுவது உண்டு. அப்படி தான் கனா காணும் காலங்கள் - கல்லூரியின் கதையில் அவ்வப்போது லேண்ட் ஆகிறேன்.

பூஜா என்ற டிவி நடிகை இதில் டீச்சர் ஆக வருகிறார். எந்த பூஜாவா? ஆமாங்க இந்த பூஜாக்கள் தொல்லை தாங்க முடியல.. ஏகப்பட்ட பேரு இருக்காங்க உங்க குழப்பம் போகணும்னு யார்ன்னு இங்கே தந்திருக்கேன் பாருங்க




ஜோடி நம்பர் சீசன் ஒன்னில் டைட்டில் ஜெயிச்சார் ; அப்புறம் வேற சில சீரியல் கூட நடிச்சார் போல ( என் மாமியாரை கேட்டால் ஒன்று விடாம அவர் நடிச்ச எல்லா சீரியல் பேரும் சொல்லுவாங்க )

இவருக்கு கல்யாணம் ஆன பின், ஒரேயடியாக கல்லூரி ப்ரபசர் ஆக்கிட்டாங்க. ம் கொடுத்து வச்ச பசங்க !

மறக்க முடியுமா- சுருளி ராஜன்

கேப்டன் நியூஸ் என்று ஒரு புதிய சானல் வருகிறது. (நம்ம கேப்டனின் டிவி தான். தேர்தல் சமயத்தில் பயன்படும் என துவங்கி உள்ளார் போல..)

அதில் " மறக்க முடியுமா" என ஒரு நிகழ்ச்சி. மறைந்த நடிகர்கள், பாடகர்கள் பற்றி நினைவு கூர்கிறார்கள்.

நான் பார்த்த வாரம் - சுருளி ராஜன் பற்றி பேசினார்கள். 15 வருடம் தமிழ் திரை உலகை கலக்கிய சுருளி - ஒரு காலத்தில் கமல், ரஜினி, சிவாஜி என அனைத்து டாப் ஹீரோக்கள் படத்திலும் தவறாது இடம் பிடித்துள்ளார்.

1980- ல் தனது 40 வது வயதில் குடி பழக்கத்தால் அவர் இறந்துள்ளார். அந்த வருடம் மட்டும் அவர் நடித்த படங்கள் 50 ரிலீஸ் ஆனதாம். 82 ஆம் ஆண்டு வரை அவரின் பல படங்கள் ரிலீஸ் ஆகி கொண்டே இருந்ததாம் !

இப்படி காரியரில் பீக்கில் இருக்கும் போது இறக்கும் நடிகர்கள் அரிது தான் என நினைக்கிறேன் ! அடுத்த வாரம் பின்னணி பாடகி ஸ்வர்ணலதா பற்றி என்று முன்னோட்டம் காட்டினார்கள். முடிந்தால் பார்க்கணும் !

பெண்கள் தின சிறப்பு நிகழ்ச்சி - 1

CNN IBN -ல் சாதித்த இந்திய பெண்களுக்கு பரிசுகள் தந்தனர்
ஐஸ்வரியா ராய் மற்றும் கெளதம் கம்பீர் சிறப்பு விருந்தினர்களாக அனைவருக்கும் பரிசுகள் தந்து உரையாடினர்

கார்த்திகா என்கிற தமிழ் பெண் விருது கிடைத்து பேசும் போது " நான் ஏழை தான். ஏழைகள் சிந்தனை சின்ன அளவில் தான் இருக்கும் என்கிறார்கள். அது தவறு. இந்த நாட்டின் பிரதமர் ஆகவேண்டும் என்பது என் கனவு. மனிதர்களை தயவு செய்து அவர்கள் வைத்துள்ள பணத்தை வைத்தோ, அவர்களது பாலினத்தை ( Gender ) வைத்தோ எடை போடாதீர்கள்" என கம்பீரமாக பேசினாள். 

" உன் அம்மாவிடம் ஏதேனும் பேசணுமா ? " என ஐஸ்வரியா ராய் கேட்க " அம்மா - உன்னால் தான் நான் படிக்க முடிந்தது. என்னை வீட்டில் வைக்காமல் படிக்க வைக்க அனுப்பிய முடிவை நீ தான் எடுத்தாய். அதற்கு நன்றி. அதனால் தான் நான் இன்று நிற்கிறேன் " என்று தமிழில் பேசி அசத்தினாள்.

நெகிழ்வான நிகழ்ச்சியாக இது இருந்தது

பெண்கள் தின சிறப்பு நிகழ்ச்சி - 2

முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் கே. வி. தங்கபாலு நிர்வகிக்கும் மெகா டிவி  யில் பெண்கள் தினத்தை முன்னிட்டு 5 ஆண்டுகளாக சாதனை பெண்களுக்கு விருது தருகிறார்களாம்.

இவ்வருடம் வாணி ஜெயராம்க்கு வாழ் நாள் சாதனையாளர் விருது தர, அவரது அற்புத பாடல்களில் பலவற்றை காட்டினார்கள். அவர் இந்த 75 வயதில் மிக அருமையாக சில பாடல்களை பாடி காட்டினார். பாடல் வரிகளை தப்பு தப்பாக பாடும் இளம் தலைமுறை போலன்றி முப்பதுக்கும் மேற்பட்ட பாட்டுகளை மனப்பாடமாய் அடுத்தடுத்து பாடியது ஆச்சரிய பட வைத்தது

இந்த நிகழ்ச்சியை நான் பார்த்ததில், இதை வாசிக்கும் - உங்களுக்கு ஒரு கஷ்டமிருக்கு.. .. வாணி ஜெயராம் பாடல்கள் பற்றி மட்டுமே ஒரு தனி பதிவு எழுத ஆசை வந்துடுச்சு (ஒடுங்க.. ஒடுங்க.. அது உங்களை நோக்கி தான் வருது )

டிவியில் வரும் சினிமா விளம்பரங்கள் 

என்ன ஆச்சு தமிழ் சினிமாவுக்கு? ஒவ்வொரு சானலிலும் பத்துக்கும் மேற்பட்ட சினிமா விளம்பரங்கள் காட்டிய வண்ணம் உள்ளனர். மதில் மேல் பூனை, ஒன்பதுல குரு உள்ளிட்ட படங்கள் மிக அதிக முறை காட்டினாலும், இன்னும் பெயர் நினைவில் வைத்து கொள்ள முடியாத எத்தனையோ படங்களும் கூட வருகிறது.

டிரைலர் பார்க்கவே கண்ணை கட்டுதே ... நம்ம உண்மை தமிழன் மற்றும் கேபிள் போன்றோர் எப்படி தான் இந்த படங்களை பார்க்கிறார்களோ.. தமிழ் சினிமா இயக்குனர்கள் இவர்களுக்கு ரொம்பவே கடமை பட்டுள்ளனர் !

பிளாஷ் பேக் : எதிரொலி (வாசகர் கடிதம்)

தூர்தர்ஷனில் வாசகர் எழுதும் கடிதங்களை ஒரு பெண்மணி வாசிக்க, நிலைய இயக்குனர் அதற்கெல்லாம் பதில் சொல்லுவார்.. குவிந்து கிடக்கும் கடிதங்களை பார்த்தால் பிரமிப்பா இருக்கும். குறைஞ்சது ஆயிரம் லெட்டராவது கிடக்கும். ஏற்கனவே அவற்றை வாசித்து விட்டு, தங்களால் எதற்கு பதில் சொல்ல முடியுமோ அதை மட்டுமே அந்த பெண்மணி வாசிப்பார். பலவும் " அருமை; அற்புதம்; " என்று இருக்கும். அரிதாய் சில சந்தேகங்கள் வர, அப்போ மட்டும் முகம் முழுக்க மேக் அப் போட்ட நம்ம நிலைய இயக்குனர் பதில் சொல்றேன் என அறுத்து தள்ளுவார்.

டிவி வந்த காலத்தில் தூர்தர்ஷனில் வரும் எல்லா நிகழ்சிகளையும் பார்த்தாக வேண்டிய கட்டாயத்துக்கு பார்த்த நிகழ்ச்சி.. இன்னும் வருதா என தெரியலை !

சூப்பர் சிங்கர் கார்னர் 

கடந்த வாரம் Zonal லெவலில் பெஸ்ட் பாடகர்களாக வந்தவர்கள் பாடினார்கள். உண்மையில் அந்த கேட்டகரியில் பலரும் செம அட்டகாசமாய் பாடினார்கள் என்று தான் சொல்லணும்.

ஐந்து ஜட்ஜ்கள் அமர்ந்து தங்களுக்குள் பேசியவாறும், சிரித்தவாறும் கேட்கிறார்கள். நன்கு பாடுகிறார் என நாம் நினைக்கும் போதே தேவன் ரொம்ப சீக்கிரம் ரெட் பட்டனை அழுத்துகிறார். அவரை பார்த்துட்டு அடுத்த நொடி அடுத்து சுபா அல்லது சௌமியா ரெட் அழுத்திடுறாங்க. ஏன் செலெக்ட் ஆகலை என்பதற்கு காரணம் சொல்றோம் என நல்லா டிஸ்கரேஜ் பண்ணி அனுப்பிடுறாங்க.

பாடகர்களுக்கு பயிற்சி தருவது இருக்கட்டும்....விஜய் டிவி இந்த ஜட்ஜ்களுக்கு மனிதர்களிடம் எப்படி பேசுவது என கொஞ்சம் டிரைனிங் தந்தால் தேவலை !
****
அண்மை பதிவுகள்

பாலாவின் பரதேசி பாடல்கள் - எப்படி ?

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் - ஒரு பார்வை

Wednesday, February 6, 2013

வானவில்: அஞ்சலி- கிரிவலம்- ரேஷன் கார்ட் குளறுபடி

ஹெல்த் பக்கம்/ படித்த தகவல்

கேள்வி: புட்டி பால் கொடுக்க துவங்கினால், குழந்தைகளுக்கு தாய் பால் பிடிக்காமல் போய் விடும் என்கிறார்களே? உண்மையா?

டாக்டர் பதில்:

பசுவிடம் இருந்து பால் கறப்பதை பார்த்துள்ளீர்களா முதலில் கன்று குட்டியை மாட்டிடம் விடுவார்கள். கன்று தாய்ப்பசுவின் காம்பில் வாய் வைத்ததும் பால் வந்து விடாது. கொஞ்ச நேரம் உறிஞ்சிய பின்னரே பால் சுரக்கும். அப்படி பால் சுரக்கும் தருணம் கன்றை விலக்கி விட்டு பால் கறப்பார்கள்.

தாய்ப்பால் குடிக்கும் குழந்தையும் அம்மாவின் மார்பில் வாய் வைத்ததுமே பால் வந்து விடாது கொஞ்ச நேரம் உறிஞ்சத்தான் வேண்டும். ஆனால் புட்டி பாலில் குழந்தைக்கு இந்த தேவை இருக்காது. புட்டியை வாயில் வைத்து உறிஞ்சினாலே பால் வந்து விடும் என்பதால் இம்முறையில் பால் குடிப்பது குழந்தைக்கு சுலபமாகி விடும். இப்படி எளிதாய் குடித்து பழகிய பின் தாய்ப்பால் குடிக்க சற்று போராடி பெறுவது குழந்தைக்கு பிடிக்காமல் போக வாய்ப்புண்டு. அதனால் தான் புட்டி பால் கொடுத்து பழக்காதீர்கள் என்கிறோம்

மேலும் புட்டி பால் நிப்பிள்கள் குழந்தைக்கு வயிற்று போக்கு தொடங்கி பல பிரச்சனைகள் வர காரணமாகி விடும்

போதுமான பால் குடித்து வரும் குழந்தைகள் ஒரு நாளைக்கு 5 அல்லது 6 முறையேனும் சிறுநீர் கழிக்கும். அதற்கு குறைவாக கழித்தால் அதற்கு போதிய பால் கிடைக்க வில்லை என்று அர்த்தம்.

கிரிவலம்

ஜனவரி 26 - அன்று நண்பன் பிரேமுடன் கிரிவலம் சென்று வந்தேன். சற்றும் பிளான் செய்யாமல், திடீரென நிகழ்ந்த பயணம் அது . கிரிவலம் பற்றி விரிவாய் ஒரு பதிவு விரைவில் வீடுதிரும்பலில்..

அழகு கார்னர்

அழகு, நடிப்பு, கிளாமர் என அனைத்தும் கலந்து கட்டி அடிக்கும் அம்மணி. சொந்த குரலில் பேசி சொக்க வைக்கும் சுந்தரி. சின்ன தலைவி.. இவ்வார அழகு கார்னரில்..

                            
ரேஷன் கார்டு தக்க வைக்க நடக்கும் போராட்டம்

முன்பெல்லாம் ஒரு முறை ரேஷன் கார்ட் வாங்கினால்,அடுத்த ஐந்து ஆண்டுக்கு அது செல்லுபடியாகும். கருணை மிகு அம்மா ஆட்சியில் வருடா வருடம் அதை புதுப்பிக்க வேண்டும் என்கிறார்கள். புதுப்பிப்பது என்றால் வேறொன்றுமில்லை. மாதா மாதம் பொருட்கள் தந்து விட்டு நம் ரேஷன் கார்டில் பொருட்கள் வாங்கியதை குறிப்பார்கள் அல்லவா? அந்த சீட்டு முன்பு 5 வருடத்துக்கு தருவார்கள். இப்போது ஒவ்வோர் வருடமும் அந்த சீட்டு வாங்க வேண்டும். சரி ..ரேஷன் கார்டில் நிறைய தில்லுமுல்லு நடக்கிறது வருடா வருடம் ஒரு செக் பாயிண்ட் இருப்பது நல்லது என்று நினைத்தால். ஒவ்வொரு வருடமும் அந்த சீட்டு வாங்கி நம் ரேஷன் கார்டை தக்க வைத்து கொள்ள உயிர் போகிறது.

இந்த வருடத்தை எடுத்து கொள்ளுங்கள்: வருட துவக்கத்தில் எதோ ஒரு நாள் அந்த சீட்டு வந்துள்ளது. ஒரே நாளில் அந்த சீட்டு காலி. இனி மறுபடி  சீட்டுவந்தால் தான் என்றனர். கொஞ்ச நாள் கழித்து சென்று பார்த்தால், ரேஷன் கார்ட் வரிசை எண் படி ஒரு லிஸ்ட் போட்டு அந்தந்த நம்பர் உள்ளவர்கள் குறிப்பிட்ட  நாளில் மட்டும் தான் வரணும் என்றனர். நான் இந்த லிஸ்ட்டில் முதல் நாளில் இருந்துள்ளேன். அன்றைக்கு தவற விட்டதால் எல்லாருக்கும் தந்து முடித்து விட்டு அப்புறம் பார்க்கலாம் என்கிறார்கள்.

நம் மக்களுக்கு தங்கள் நம்பர் பார்த்து அதன் படி வருவதெல்லாம் புரியவில்லை. ஏராளமான மக்கள் ஒவ்வொரு நாளும் ரேஷன் கார்டுடன் வந்து, உங்களது நம்பர் இன்றைக்கு இல்லை என திரும்பி போகிறார்கள்.

நிற்க பொருள்கள் காலையிலும், ரேஷன் கார்ட் ஸ்லிப் மதியமும் ( 2 to 3.30) தான் தருகிறார்கள். என்னை மாதிரி இருவரும் வேலைக்கு செல்வோர்க்கு காலை தந்தாலாவது ஓரிரு மணி நேரம் பெர்மிஷனில் தாமதமாய் செல்லலாம். மதியம் என்றால் அரை நாள் லீவு போடணும். இப்படி லீவு போட்டி விட்டு எத்தனை முறை அலைவது ? !!

அஜூ நாட்டி அப்டேட் 
ஜோசியக்காரர்கள் பற்றிய சென்ற பதிவின் பின்னூட்டங்களில் எங்கள் வீட்டு கிளிகளான அஜூ மற்றும் நாட்டி நலமா என அன்புடன் விசாரித்த நண்பர்களுக்கு மிக்க நன்றி

இருவரும் அட்டகாசமா இருக்காங்க. நாட்டி பிறந்தது முதல் வீட்டில் வளர்பவள் என்பதால் எங்களுடன் எளிதாக ஒட்டி கொண்டாள். அஜூ பயல் ஏழெட்டு மாதம் கழித்து தான் எங்களிடம் வர ஆரம்பித்தான். இப்போது நன்கு வருகிறான். குழந்தை இருக்கும் வீடு மாதிரி குதூகலமா இருக்கு இவர்களுடன் விளையாடுவது. நாங்கள் மூவரும் காலை எழுந்ததும் இவர்களிடம் பேசி, கொஞ்சிவிட்டு தான் அடுத்த வேலைக்கு செல்வோம்.

எங்கள் பெண் பள்ளியில் இந்த வருடம் முழுதும் தொடர்ந்து மூன்று ரேங்கிற்குள் வந்ததால் மெரிட் கார்ட் வாங்குகிறாள். இதற்கு காரணம் கிளிகள் தான் என்று சொல்லி வருகிறாள். எப்படி என்று கேட்டால், படிப்பிற்கு நடுவே ரிலாக்ஸ் செய்ய வேண்டுமெனில் டிவி அல்லது கணினி முன் உட்கார்ந்தால் நேரம் போவது தெரியாமல் போய் விடும். அதுவே படிப்புக்கு நடு நடுவே கிளிகளுடன் விளையாடினால், சில நிமிடத்தில் மனசு ரிலாக்ஸ் ஆகிடுது என்கிறாள். லாஜிக் கரக்ட் தான் !

அலுவல் மற்றும் தனிப்பட்ட விஷயங்களில் இருந்து பெரிய ஸ்ட்ரெஸ் ரிலீப் இந்த கிளிகளுடன் விளையாடும் நிமிடங்கள் தான் !


பதிவர் பக்கம் : சங்கர ராமசாமி / கருத்து சுரங்கம்

சங்கர ராமசாமி என்கிற இந்த பதிவரை சென்னையில் கடந்த ஆகஸ்ட் மாதம் பதிவர் சந்திப்பு நடந்தபோது சந்தித்தேன். சமீபத்தில் தான் இவரது ப்ளாகை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பல இடங்களில் வந்த நல்ல செய்திகளை தான் " கருத்து சுரங்கம்" என்கிற பெயரில் சேகரித்து/ வெளியிட்டு வருகிறார்.

குறிப்பாய் வயதான முதியவர்களை அவர்கள் குழந்தைகள் வைத்து கொள்ளா விடில், அவர்கள் தங்கள் மகன் மீதே கம்பிலேயின்ட் தரலாம் என்று ஒரு சட்டம் வந்தது அல்லவா? மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டம் என்கிற அந்த சட்டம் பற்றி இங்கு பகிர்ந்துள்ளார். நேரம் இருக்கும் போது வாசியுங்கள்.
             
அய்யாசாமி கார்னர்

சமீபத்தில் மனைவியுடனான சண்டையில் அய்யாசாமிக்கு மிகுந்த கோபம் வந்து விட்டது. வழக்கமாய் திட்டுவது போல தான் அன்றும் மனைவி திட்டினார். பெரும்பாலும் திட்டுகளை வாங்கி கொண்டு குண்டு பிள்ளையாராட்டாம் பேசாமல் இருந்தாலும், எப்போதேனும் ஒரு முறை அரிதாய் ரோஷம் + கோபம் வந்து விடும் நம்ம ஆளுக்கு !

இரவு திட்டு வாங்கி கொண்டு தூங்காமல் உர்ரென்று புரண்டு புரண்டு படுத்தவர், காலை முதல் ஆளாய் எழுந்து வீட்டை விட்டு வெளிநடப்பு செய்தார். ஐந்தரை முதல் எட்டரை வரை கால் போன போக்கில் நடந்து விட்டு, பெண்ணை பள்ளிக்கு விடும் நேரம், மனம் மாறி வீட்டுக்கு வந்து விட்டார். ரோஷம் ஓவராய் வந்து மனுஷன் சன்யாசம் போய்ட்டாரோ என்று பயம் வந்துடுச்சு மிஸஸ். அய்யாசாமிக்கு !.

இந்த அதிரடி நடவடிக்கையால் மனிதருக்கு ரெண்டு நாள் ராஜ உபசாரம் மற்றும் கவனிப்பு. அப்புறம்?

அப்புறம் ? என்ற கேள்வி கேட்டால் உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை என்று அர்த்தம். போங்க சார் . போய் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கிட்டு மனைவி கிட்டே திட்டு வாங்குங்க சார் . ... !
Related Posts Plugin for WordPress, Blogger...