Saturday, May 31, 2014

கோச்சடையான் - சினிமா விமர்சனம்

முன்கதை சுருக்கம் 

சென்ற முறை கோச்சடையான் ரிலீஸ் என அறிவித்த போதே,  செவ்வாய் நள்ளிரவு 12 மணிக்கு விழித்திருந்து புக்கிங் துவங்கிய அரை மணி நேரத்தில் டிக்கெட் எடுக்க- அடுத்த நாளே ரிலீஸ் தாமதம் என்ற தகவல் வந்தது.  (ரஜினி, விஜய், அஜீத் போன்றோர் படத்துக்கு வெள்ளி புதுப்படம் ரிலீஸ் என்றால் மல்டி பிளக்ஸ்களில் - செவ்வாய் நள்ளிரவே - 3 நாள்  வீக் எண்ட் புக்கிங்  முடிந்து விடும் என்பதே அப்போது தான் தெரிந்தது)

4 நாட்களுக்கு பின் ரிலீஸ் ஆகும் படத்துக்கு - இப்படி நள்ளிரவு வரை விழித்திருந்து டிக்கெட் புக் செய்வது வெறுப்பாக இருக்க, ரிலீஸ் ஆனபின் பொறுமையாக பார்த்து கொள்ளலாம் என விட்டு விட்டேன்...

படம் ரிலீஸ் ஆகி ஒரு வாரம் கழித்து வெள்ளி மாலை லக்ஸ் - திரை அரங்கில் நேற்று கோச்சடையான் கண்டோம்...

கோடை விடுமுறை என்பதால் தியேட்டர் முழுதும் பள்ளி செல்லும் சிறுவர்கள் - தனியாகவோ - குடும்பத்தோடோ வந்திருந்தனர் ... ஓரளவு போட்ட காசை எடுத்து விடுவார்கள் என நினைக்கிறேன்

கதை 

இது 2 மணி நேரத்துக்கும் குறைவாக ஓடும் படம்.. ஆனால் கதையை சொன்னால் - புரிய வைக்க மூணு மணி நேரம் ஆகும்..



ஒரு வரியில் சொல்லணும் என்றால்... " சிறுவயதில் தந்தையை கொன்றவனை பழி வாங்கும் மகனின் கதை" ... (அடேங்கப்பா... ரொம்ப புதுசா இருக்கே !)

ப்ளஸ் 

1. ரஜினி படம் என்றாலே கதை, திரைக்கதை போன்றவற்றை பற்றி அதிகம் கவலைப்படாமல் - படம் ஓட ரஜினி ஒருவரே போதும் என்ற அலட்சியத்துடன் எத்தனையோ படங்கள் வந்து- அவையும் நன்கு ஓடிய வரலாற்றை நாம் அறிவோம் .

3 D, கார்ட்டூன் இவற்றை மட்டும் நம்பாது - ஒரு பெரிய வரலாற்று கதையை உருவாக்கியமைக்கு முதல் ஷொட்டு.

2. நிச்சயம் தமிழில் இது வித்யாச முயற்சியே. சாதாரண சினிமா ரசிகனாக டெக்னிகல் குறைகள் ஏதும் பெரிதாக தெரிய வில்லை.

3. கார்ட்டூனாக இருந்தபோதும் ரஜினி ஸ்டைல் மற்றும் குரல்.. அது தான் படத்தை முழுதும் பார்க்க வைக்கிறது

4. ரஜினி பேசும் வசனங்கள் படத்தின் மிக பெரிய பலம். பல பஞ்ச டயலாக்ஸ் உண்டு எனினும் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒன்று... " எதிரிகளை ஒழிக்க எத்தனையோ வழிகள் உண்டு.. முதலாவது வழி மன்னிப்பு " - கிளாஸ் !

5. ரஜினியை மட்டும் மையமாக வைத்து வரும் 2 பாடல்கள் வெரி குட்

மைனஸ் 

1. படத்தின் மிக பெரிய மைனஸ் - 110 நிமிட படத்தில் 20 நிமிடம் செம அறுவை! இந்த 20 நிமிடம் பாடல் காட்சிகள், காமெடி  மொக்கைகள் என ஆங்காங்கு நிறைந்து இருக்கிறது. மற்ற படம் எனில் அறுவை பாடல் காட்சியை வெட்டி போட்டு விடலாம். இங்கு படமே 110 நிமிடம் எனும்போது 20 நிமிடத்தை வெட்டி விட்டால் - 90 நிமிட படமாக -  மக்களுக்கு திருப்தி அளிக்காமல் போய் விடும் அபாயம் இருக்கிறது

படத்தை தொய்வடைய செய்வதே இந்த அறுவை காட்சிகள் தான் !

 2.  இசை - முன்பே சொன்ன மாதிரி ரஜினியின் 2 பாடல்கள் மட்டுமே நன்று; தீபிகாவை சுற்றி வரும் அனைத்து பாடல்களும் உலக மகா கொடுமை ! டூயட்டும் சரி.. இடைவேளைக்கு பின் வரும் சோக பாட்டும் சரி.. படத்தை தொபுக்கடீர் என விழ வைக்கிறது !



சில காட்சிகளில் ரீ ரிகார்டிங் ரகுமானையே வெறுக்கடிக்கிறது. உதாரணமாய் ரானா தனது வீட்டில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்க - அங்கு வரும் மாமா நாகேஷ் - தான் வடித்த சிலை பற்றி பேசும் காட்சி.. இதற்கு தேவையே இல்லாமல் ரகுமான் போட்டுள்ள பின்னணி இசை... எழுந்து வெளியே ஓடலாமா என எண்ண வைக்கிறது !

3. ரஜினி, நாசர் போன்றோரை எளிதில் அடையாளம் காண முடிகிறது எனினும், பல நடிகர்களை நாம் புரிந்து கொள்ளவே ரொம்ப நேரம் பிடிக்கிறது. குறிப்பாக ஆதி, ருக்மணி இருவரையும் எத்த்தனை பேருக்கு தெரிந்திருக்குமோ ! படத்தை பற்றி யோசிக்காமல் - நம் மனது " இது யாரு.. எங்கேயோ பார்த்திருக்கோமே !" என யோசித்தபடி இருப்பது படத்தோடு ஒன்ற முடியாமல் செய்து விடுகிறது ! படம் துவங்கும் முன்பே பாத்திரங்களையும் அதை நடிப்போரையும் அறிமுகபடுத்தியிருக்கலாம் ! வரலாற்று படம் என்பதால் இப்படி முன் அறிமுகம் செய்வது  சாத்தியமே !

4. நாகேஷை வைத்து காமெடி என்ற பெயரில் அடிக்கும் கூத்து 70 களில் கூட சிரிப்பை வரவழைதிருக்காது !

லாஜிக் மீறல்களை தாண்டி காதில் பூ சுற்றும் பல காட்சிகள் உண்டு ; மலையை விட்டு மலை தாவும் ரஜினியின் குதிரை..  கடலுக்குள் செல்லும் ரஜினியை டால்பின் மீண்டும் கப்பலுக்குள் தூக்கி எறிவது .. இப்படி... ஆனால் ரஜினி படத்தில் லாஜிக் பார்க்க கூடாது என்ற அரிய கொள்கை - நாம் அறிவோம் ஆகவே இவற்றை பெரிது படுத்த வேண்டியதில்லை.

வெர்டிக்ட் 

படம் பற்றி ரஜினி ரீ ஆக்ஷன் 

வீட்டில் பள்ளி செல்லும் குழந்தைகள் இருந்தால் - அவர்களுக்காக செல்லுங்கள். அவர்கள் (மட்டும்) நிச்சயம் என்ஜாய் செய்வார்கள். மற்றபடி குழந்தைகள் இன்றி பெரியவர்கள் செல்ல இப்படத்தை நிச்சயம் பரிந்துரைக்க முடியாது ! ( பெரியவர் யாருக்கேனும் படம் பிடிக்கிறது என்றால் அவர் அதி தீவிர ரஜினி ரசிகனாய் இருக்க வேண்டும் ! )

அடுத்து ரஜினியை வைத்து ரெகுலர் படமே செய்யுங்க சௌந்தர்யா .. திரைக்கதை & இயக்கத்தில் சற்று கவனத்துடன் !

Friday, May 23, 2014

கோட்டூர் புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம் ஒரு பார்வை

றிஞர் அண்ணா நூலகம் துவங்கி சில ஆண்டுகள் ஆகி விட்டன. இப்போது தான் முதல் முறை  செல்ல வாய்த்தது .



கோடை விடுமுறை..மகள் மற்றும் விருந்தினர் குழந்தைகளுடன் ஒரு ஞாயிறு காலை நூலகம் சென்றோம். கார் மற்றும் பைக் பார்க்கிங் மிக வசதியாக நிறைய இடம் கொடுத்துள்ளனர். (அண்மையில் தான் கார் ஓட்ட கற்று கொண்டதால் பார்க்கிங் சற்று மிரளுவேன். இங்கு எந்த பிரச்னையும் இல்லை)

நுழையும் போது முழு செக்கிங் செய்கிறார்கள். குடிநீர் தவிர வேறெதுவும் உள்ளே அனுமதி இல்லை. எந்த வித பைகளும் (லேடீஸ் ஹாண்ட் பேக் உட்பட) அனுமதிப்பதில்லை.



உள்ளே வந்ததும் துவக்கத்திலேயே பார்வையற்றோர்க்கான ப்ரேய்லி பகுதி... அதன் எதிரில் காம்பெடடிவ் தேர்வுகளுக்கு படிப்போருக்கான பகுதி... இதனை தாண்டி கட்டிடத்தின் மையப்பகுதிக்கு வந்தால் - மேல் தளம் வரை நடுவில் முழுதும் ஓபன் ஆக இருக்கும்படி உள்ள அழகான கட்டமைப்பு வாவ் சொல்ல வைக்கிறது.



முதல் தளம் செல்ல மட்டும் எஸ்கலேட்டர். அதன் அருகிலேயே ஸ்நாக்ஸ் சாப்பிட சிறு கடை.. இதனை தவிர இங்கு கேண்டீன் போன்றவை இல்லை ( முழு நாளும் இருந்து படிப்போர்க்கு காண்டீன் இருந்தால் நலமாய் இருக்கும் !

முதல் தளமே மிக அதிக மக்கள் செல்ல கூடிய தளமாக இருக்கும் ! காரணம் இங்கு தான் செய்தி தாள்கள், வார இதழ்கள் பிரிவு ஒரு புறமும், இன்னொரு பக்கம் குழந்தைகளுக்கான பகுதியும் உள்ளது

குழந்தைகள் பகுதிக்கு 14 வயது வரை மட்டுமே அனுமதி என போட்டிருந்தாலும் அதை விட பெரிய பள்ளி, கல்லூரி மாணவர்களும் செல்கிறார்கள். யாரும் பெரிதாக கேள்வி கேட்பதில்லை. தாய் அல்லது தந்தை ஒருவர் மட்டும் குழந்தையுடன் செல்லலாம் என்பது இன்னொரு விதி. இதுவும் கூட பெரிய அளவு பின்பற்றப்படுவதில்லை. பெற்றோர் இருவருமே உடன் செல்கிறார்கள்

குழந்தைகள் பகுதி மிகுந்த கலை ரசனையோடு வடிவமைக்கப்பட்டுள்ளது.  ஒரு மரம் போல ஆர்ட்வொர்க் செய்து வைத்திருப்பதாகட்டும், அந்த பகுதியில் உள்ள சேர்கள் ஆகட்டும், சுவற்றுக்குள்ள வண்ணம் என அனைத்துமே ரசிக்கும்படி உள்ளன.



நம்ம வீட்டி குட்டீஸ் அதிக நேரம் இருந்த பகுதி இதுவே.

ஒரு பக்கம் குழந்தைகள் விளையாட கணினியும் உண்டு ( அதான் வீட்டிலேயே கணினியும் கையுமாய் இருக்கிறார்களே.. இங்கும் அதனை தரணுமா ?). கணினியில் விளையாட்டு விஷயங்கள் மட்டுமே உண்டு என நினைக்கிறேன் (அங்கிருந்த குட்டி பசங்கள் அனைவரும் விளையாட மட்டுமே செய்தனர் !)

" சத்தம் போடாதீர்கள்" என்று எழுதியது ஒரு புறமிருக்க - ஏழெட்டு வயது குட்டி பசங்க அங்கும் இங்கும் ஓடி, அமர்க்களம் செய்கிறார்கள். " தம்பி சண்டை போடாதீங்க" என்று லவுட் ஸ்பீக்கர் வைக்காத குறையாக அங்கிருந்த நூலகர் அடிக்கடி கூவி கொண்டிருந்தார்

Photo


செப்டமபர் 15, 2010 ல் நூலகம் துவங்கப்பட்டுள்ளது  தினம் காலை 9 முதல் 8 வரை திறந்திருக்கும். (ஞாயிறு உட்பட) ; தீபாவளி, பொங்கல், சுதந்திர தினம் போன்ற வருடத்தில் 10 தினங்கள் மட்டுமே விடுமுறை.

அய்யா திறந்த நூலகம் என்பதால் அம்மா அப்புறம் எதுவும் புத்தகம் வாங்க வில்லையாம். முதலில் வந்த புத்தகங்கள் மட்டுமே இன்னும் இருக்கின்றனவாம். செய்தி தாள்கள், வார இதழ்கள் மட்டும் தொடர்ந்து வாங்குகிறார்கள் போலும்

நூலகத்தில் அமர்ந்து படிக்கும் வசதி மட்டுமே உண்டு. புத்தகத்தை வெளியே எடுத்து செல்லும் வசதி கொண்டு வரப்பட வில்லை.

Photo

நூலகம் முழுவதுமே சென்ட்ரலைசுட் ஏ. சி. ! இப்படி ஏ . சி யுடன் கூடிய அற்புத லைப்ரரி - மக்கள் இன்னும் கூட நன்கு பயன்படுத்தி கொள்ளலாம் என தோன்றியது

நூலகர்கள், செக்கியூரிட்டி ஆட்கள்  என 100 பேராவது பணி புரிவார்கள் என நினைக்கிறேன்.  ... 8 மாடி கட்டிடம் ஆயிற்றே... முதல் மாடி பற்றி தான் சொன்னேன்... மற்ற மாடிகளில் என்னன்னே துறைகள் உண்டு என இந்த புகைப்படம் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்:(புகைப்படம் மேலே க்ளிக் செய்து பெரிதாக்கி படிக்கலாம் )



நம்ம பசங்க குட்டீஸ் பிரிவில் இருக்கும் போது மற்ற தளங்களுக்கு விசிட் அடித்து ஆர்வமுள்ள பகுதிகளை மட்டும் கண்டு வந்தேன். குறிப்பாக தமிழ் சிறுகதை, நாவல், கட்டுரை  பகுதிகள்...

நிச்சயம் ஏரளாமான நூல்கள் உண்டு எனினும் இன்னும் கூட நிறையவே செய்யலாம்.. இந்நூலகதிற்கு..

ஒவ்வொரு தளத்திலும் கழிவறை இருந்தாலும் அவ்வளவு சுத்தமாக இல்லை என்பது சற்று வருத்ததிற்குரிய விஷயம்.

நூலகத்தை சுற்றி வரும்போது கலைஞரும், ஜெ - வும் மனதில் நிழலாடுகிறார்கள்.

சென்னையில் இருந்தும் இதுவரை செல்லாவிடில் நிச்சயம் ஒரு நல்ல விஷயத்தை மிஸ் செய்கிறீர்கள்.. ஒரு முறை மட்டுமல்ல மீண்டும் மீண்டும் செல்ல வேண்டிய அற்புத இடம் அண்ணா நூலகம்..

கலைஞர் செய்த நல்ல விஷயங்களில் இதுவும் ஒன்று... அம்மா இதனை உதாசீனம் செய்யாமல் - கவனித்தால் நன்று !

Monday, May 19, 2014

வானவில்- 101 சோடியங்கள் - மோடி- தி. மு. க - கேஸ் லீக்

பார்த்த படம் - 101 சோடியங்கள் (மலையாளம் )

சிறுவர்கள் குறித்த படங்கள் எப்போதும் என்னை ஈர்ப்பவை...மேலும் கூகிள் பிளஸ் -சில் வடகரை வேலன் இப்படம் பற்றி பரிந்துரைத்திருந்தார்.

வித்யாசமான கதைக்களன் தான். வறுமையில் வாடும் ஒரு சிறுவனின் குடும்பம்.... தந்தை வேலை இழந்து - மீண்டும் அதனைப் பெற போராடி கொண்டிருக்கிறார்.   சிறுவனின் பள்ளி ஆசிரியர் அவனுக்கு ஒரு சிறு Project work தருகிறார்... வாழ்க்கை குறித்து 101 கேள்விகள் அவன் எழுதி கொண்டு வந்தால் - 101 ரூபாய் தருவதாக கூற, அந்த 101 கேள்விகளை தேடி அவன் செல்லும் பயணமும், சற்றே நெகிழ வைக்கும் 101 -வது கேள்வியுமே படம்..



உண்மையை முதலில் சொல்லி விடுகிறேன். படம் என்னை பெரிய அளவு கவர வில்லை. மிக மிக மெதுவாக ஒரு ஆர்ட் பிலிம் போல நகர்ந்ததும், ஆங்காங்கு தூங்க வைத்ததுமே காரணங்கள்... ரொம்ப கஷ்டப்பட்டு மீண்டும் மீண்டும் விழித்து தான் பார்க்க வேண்டியிருந்தது. படத்தின் பெரும் மைனஸ் இதுவே.

மெதுவாய் நடந்து வருவது, சும்மாய் அமர்ந்திருப்பது இவற்றையெல்லாம் ரொம்ப நேரம் காட்டும் ஆர்ட் பிலிம் வகையறாவில் லேசாக படம் சென்று சேர்ந்து கொள்கிறது

பொறுமையாய் பார்த்தால் முதலில் சொன்னபடி நிச்சயம் வேறுபட்ட கான்செப்ட் தான். சிறுவன் நன்கு நடிக்கிறான். ஆனால் நம் மனதில் சென்று மிக பெரும் தாக்கத்தை எல்லாம் ஏற்படுத்தவில்லை

சுஜாதாவின் பல கதைகளில் இளமையின் அறியாமையை தொலைத்து பெரியவர்கள் உலகில் நுழையும் தருணம் பற்றிய குறிப்புகள் இருக்கும். இப்படம் சொல்லும் செய்தியும் அதுவே !

இன்டேன் கேஸ் லீக் - எமெர்ஜென்சி !!

ஞாயிறு காலை ஹவுஸ் பாஸ் கேஸ் லீக் ஆகிறது -  இண்டேனுக்கு போன் செய்யுங்கள் என்றார். பில்லில் உள்ள எமெர்ஜென்சி நம்பருக்கு போன் செய்தால் - அது தவறான எண் என்கிறது.  இணையத்தில்,  ஜஸ்ட் டயலில் என எல்லா இடத்தையும் முயற்சித்தாலும் இன்டேன் எமெர்ஜென்சி நம்பர் கிடைக்கவே இல்லை. 

ஒரு நம்பர் இருக்கிறது - அதற்கு போன் செய்தால் நான்கு மணி நேரமாக " நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் பிசி ஆக உள்ளார் - சிறிது நேரத்துக்கு பின் தொடர்பு கொள்ளவும் " என்கிற பல்லவி தான்.. 

வெறுத்து போய் கடைசியில் லோக்கல் மெக்கானிக் கடையில் சரணடைந்து அவர் மூலம் சரியானது 

இன்டேன் எமர்ஜென்சி எண்ணை கூட மக்கள் ரீச் ஆக முடியாமல் வைத்திருப்பது ஆச்சரியத்தையும் சங்கடத்தையும் தருகிறது. இது ஞாயிறு என்பதாலா? மற்ற நாட்களிலும் இதே கதையா தெரிய வில்லை !

அழகு கார்னர் 


என்னா பாட்டுடே - காதல் கவிதைகள் படைத்திடும் நேரம்... 

சில பாட்டுகளை கேட்கும் போதே - அதனோடு சேர்ந்து சில இடங்கள் அல்லது சம்பவங்கள் நமக்கு நியாபகம் வந்து விடும். 

நீடாமங்கலத்தில் நண்பன் தேனுவின் வீடு. அற்புதமான மியூசிக் பிளேயர் அமைத்திருந்தான். பெரிய அறை .. அதில் தேனு, மது, கோபி, ஐயப்பன், நான் குழுமி இருப்போம். இந்த பாடலை ஒலிக்க விட்டுவிட்டு விளக்கை அணைத்து  விடுவோம்... 

அடடா ! மாஜிக் ! மாஜிக் ! இளையராஜா இசையில் வயலின்கள் இழைவது மனதை நெகிழ வைக்கும். " இந்த பாட்டை கேட்டால் எனக்கு கண்ணுல தண்ணி வந்துடும் " என்பான் தேனு. "இதுக்கெல்லாம் கண்ணுல தண்ணி வருமாடா " என சிரிப்போம் நாங்கள் ... 

படம் வரும் முன்பே இப்பாட்டை பல முறை கேட்டு விட்டோம். அந்த சில மாதங்களில் - தினமும் எத்தனையோ பாட்டுகள் கேட்டாலும், அங்கிருந்து கிளம்பும் முன் நேயர் விருப்பமாக இப்பாடலை மீண்டும் ஒரு முறை ஒலிக்க விடுவோம்.. குறிப்பாக பாடல் துவங்கும் போது வரும் ராஜாவின் மியூசிக் தான் எங்கள் அனைவரின் விருப்பமாக இருந்தது...

கோபுர வாசலிலே என்கிற இப்படத்தின் அத்தனை  பாடல்களும் சூப்பர் ஹிட் என்றாலும் படம் மரண மொக்கையாகி எங்களை எல்ல்லாம் வருந்த வைததது தனிக்கதை.. 

இன்றைக்கும் மது, கோபி அல்லது தேனுவை காணும்போது "காதல் கவிதைகள் " பாட்டு பற்றி பேச்சேடுத்தாலே  - உடன் ஒரு  புன்னகை அனைவர் முகத்திலும் மலரும்.. 



போஸ்டர் கார்னர்



மோடியின் வெற்றி... 

பா.ஜ. க வெற்றி குறித்து அனைவரும் கருத்து கூறி விட்டனர். நம் பங்குக்கு ஏதேனும் சொல்லாவிட்டால், ரவுடி என சமூகம் ஒப்பு கொள்ளாது.

இத்தேர்தலில் பா.ஜ. க வெற்றி பெற வேண்டும் என்று தான் நானும் நினைத்தேன். கோத்ரா சம்பவம் ஒன்றையே வைத்து அவர் எதிர்ப்பாளார்கள் இது நாள் வரை ஜல்லி அடித்ததை மாற்றி   இனி அவர் ஆட்சியை வைத்து குற்றம் கண்டு பிடிக்கலாம் ( இவர்கள் ஆதரவு அரசியல் வாதிகள் எல்லாம் உத்தம புத்திரர்கள் போல அவர்கள் பேசுவதை கண்டால் சிரிப்பு தான் வரும் ). கோத்ரா சம்பவத்தை பொறுத்தவரை - அதனை மோடி தூண்டி விட்டிருப்பார் என நிச்சயம் நான் கருத வில்லை; ஒரு முதல்வராக அதனை விரைவில் அவர் அடக்க  தவறினார்...

மோடி இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் அல்ல என தனது ஆட்சியில் நிரூபிப்பார் என நம்புகிறேன் ( ராமர் கோவில் பற்றிய கோஷம் எதுவும் இத்தேர்தலில் கிளம்ப வில்லை  .. இல்லையா ?)

எனக்கு மிக பெரிய சந்தோஷம் பா.ஜ. க விற்கு தனிப்பெரும்பான்மை கிடைத்ததும், காங்கிரசுக்கு கிடைத்த மரண அடியும் தான்... பெரும்பான்மை இருப்பதால் முடிவுகள் தைரியமாக எடுக்கலாம் எனினும் இனி மோடியின் சவால் - உள் கட்சியை சமாளிப்பதில் உள்ளது. வெற்றி பெற்ற தினத்தன்று அத்வானி பேசிய பேச்சுக்கு அவருக்கு வட்ட செயலாளர் பதவி கூட தரக்கூடாது என்றே நினைக்கிறேன் (கஷ்டம் தான் !)

தமிழக முடிவுகளும் நிச்சயம் ஆச்சரியம் + அதிர்ச்சியை தந்தன. தி.மு.க பெரிய அளவில் சோர்வடைய வேண்டியதில்லை. சென்ற தி. மு. க ஆட்சியின் போதும் கூட  முதல் 3 ஆண்டுகள் அ .தி.மு.க கதை முடிந்தது என்று தான் பலரும் நினைத்தனர். மாரத்தான் போல கடைசி ரவுண்ட் ஓட்டம் தான் முக்கியம். இதில் முக்கிய விஷயம் அடுத்த முறை வெல்ல வேண்டுமெனில் பா. ம.க. , தே.மு. தி. க போன்ற கட்சிகளுடன் நெருங்கி சென்று கூட்டணிக்குள் கொண்டுவருவதும், விலைவாசி உயர்வு, மின் வெட்டு போன்றவற்றை  எதிர்த்து பெரும் தொடர் போராட்டங்கள் நடத்துவதும் அவசியம் செய்ய வேண்டியவை.  கலைஞர் ரிட்டையர் ஆவதும் கூட உடனடி தேவை தான் (அடுத்த தேர்தலில் அவரை முன்னிறுத்தியா தி. மு. க ஓட்டு கேட்க முடியும் ?).. ஆனால் அது நடப்பது மிக மிக சந்தேகமே !

வாசித்த புத்தகம் - சுஜாதாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் 

புகழ் பெற்ற எழுத்தாளர்களின் சிறுகதைகளை பிறர் தேர்ந்தெடுத்து தொகுப்பது  வழக்கம். இப்புத்தகம் - சுஜாதா தனது சிறுகதைகளில் சிறந்ததென அவரே செலெக்ட் செய்தவை. அது பற்றி ஒரு முன்னுரையும் எழுதி உள்ளார்.

பல வடிவங்களில் கோலோச்சிய சுஜாதாவின் எழுத்து - எல்லா வடிவிலுமே பிடிக்கும் என்றாலும் முதல் இடம் தரணும் என்றால் - அது அவரது சிறுகதைக்கு தான்.

இந்த தொகுப்பில் நான் கவனித்த விஷயம் - ஏராள கதைகளில் ஒரு சோகம் இழையோடுகிறது... குறிப்பாக முடிவு... பொதுவாக சுஜாதா எழுத்தில் இப்படிப்பட்ட உணர்வு எனக்கு என்றும் வந்ததில்லை.. ஆனால் இத்தொகுப்பில் குறைந்தது பாதி கதைக்கும் மேல் சோக உணர்வு மேலோங்கி நிற்கிறது...

இருப்பினும் சுஜாதாவின் எழுத்துக்கள் வழு வழுவென்று வழுக்கி கொண்டு ஓடுகிறது....

சுஜாதாவின் மிக புகழ் பெற்ற கதைகளான நகரம் (மதுரை மருத்துவமனை பற்றியது) பிரயாணி ( ரயிலில் நிகழும் பயணம்) அடங்கிய இத்தொகுப்பு சுஜாதா ரசிகர்களுக்கு நிரம்ப பிடிக்கும் !

நிற்க. முதன் முறையாய் எனது பெண்ணும் கூட இதில் நான்கைந்து கதைகள் வாசித்தாள் !

Thursday, May 15, 2014

மீண்டும் தஞ்சைக்குப் போகலாம்.....

ஞ்சைக்கு இன்னொரு விசிட்... இம்முறை 4 நாள் வேறெங்கும் செல்லாமல் தஞ்சையில் மட்டுமே கழிந்தது. சில அனுபவங்கள் இங்கு பதிகிறேன்...



* யிலில் சென்று இறங்கியதும், இதுவரை நேரில் பார்த்திராத ஒரு நண்பர் அருகில் வந்து " என்ன மோகன்குமார் .. எப்படி இருக்கீங்க ? " என்று பேசினார். அடுத்த வரி " என்னை அடையாளம் தெரியுதா ?"

"ம்ம்.. தெரியுது.. நாடோடி இலக்கியன் (கூகிள் பிளஸ் புகழ்) " என்று சொல்ல " ஆமாம். நிஜ பேர் பாரி " என்றார்.

ரயில் ஏற்கனவே மிக தாமதம் என்பதால் இருவரும் அதிகம் பேசாமல் கிளம்ப - மகள் கேட்டாள் " யாரு அவரு ? ப்ளாகரா ?"

" ப்ளாக் வாசிப்பவரா ? " என கேட்காமல் ப்ளாகரா என கேட்கிறாளே என்ற ஆச்சரியத்துடன் " ஆமாம்" என்றேன்...

வீட்டிலே உள்ளவங்களுக்கு கூட ப்ளாக் உலகில் - படிப்பது ,  எழுதுவது இரண்டும் ஒரே க்ரூப் தான் என தெரிஞ்சிருக்கு !

* களுடன் தஞ்சையை அடிக்கடி சுற்றி வந்தேன். சாந்தி தியேட்டரிலிருந்து விஜயா தியேட்டர் செல்லும் சாலையில் செல்லும்போது ஒரு விஷயம் மிக ஆச்சரியப்படுத்தியது. அந்த சிறிய சாலையில் இரண்டு புறமும் டைலர் கடைகள்......25- 30 கடைகள் வரிசையாக இருக்கும் போலும். செல்ல செல்ல, இன்னும் இன்னும் இன்னும் என டைலர் கடையாகவே இருக்க, எப்படி இது என சிரிப்பும் வியப்பும் எட்டி பார்த்தது.

முன்பும் இத்தெருவில் சில டைலர் கடைகள் இருக்கும் என்றாலும் இந்த அளவிற்கு இல்லை ! அனைத்து கடைகளிலும் உடைகளும் ஏராளாமாக தைக்க வந்திருந்ததையும் கவனிக்க முடிந்தது.

ஞ்சையில் நாங்கள் இம்முறை பார்த்து வியந்த இன்னொரு விஷயம் திருவள்ளுவர் தியேட்டரை ஒட்டி உள்ள " முருகன் புத்தக கடை" .. அடேங்கப்பா ! தஞ்சையில் இவ்வளவு பெரிய புத்தக கடையா ? 2-3 நூலகங்களை ஒன்றாய் சேர்த்தது  போல் பறந்து விரிந்து இருக்கிறது,. பாட புத்தகங்கள் தொடங்கி அனைத்து வகை தமிழ் இலக்கியமும்  இங்கு கிடைக்கிறது. மேலும் ஆங்கில புத்தகங்களும் கூட குவிந்து கிடக்கிறது. இத்தனை வருடம்  தஞ்சையில் இருந்தும் இப்படி ஒரு புத்தக கடை தெரியாமல் இருப்பது சற்று வெட்கமாக இருந்தது.

தஞ்சையில் சில நாள் இருப்பது போல் சென்றால் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே திருவள்ளுவர் தியேட்டர் முன்பு இருக்கும் இக்கடைக்கு அவசியம் ஒரு விசிட் அடியுங்கள் !

ஞ்சையில் நிறைய ஷேர் ஆட்டோக்கள் புழங்க தொடங்கி விட்டன. இதில் ஆச்சரியமான விஷயம் மிக அதிக தூரத்துக்கும் குறைவான அளவு தான் பணம் வாங்குகிறார்கள். உதாரணமாக லட்சுமி சீவலில் இருந்து வல்லம் செல்ல - 8-9 கிலோ மீட்டர் இருக்கும். ஷேர் ஆட்டோவில் 7 ரூபாய் தான் டிக்கெட். குறைவான தொகை என 3 ரூபாய் கூட வாங்குகிறார்கள் ( சென்னையில் பல ஷேர் ஆட்டோக்கள் 10-க்கு குறைவாக வாங்குவதில்லை என்பது நினைவுக்கு வந்தது )

* ஞ்சை பாலாஜி நகர்/  TPS  நகர் பேருந்து நிலையம் அருகே புதிதாக ஒரு காபி கடை துவங்கப்பட்டுள்ளது. 10, 12, 15 என மூன்று ரேட்டில் கிடைக்கும் காபி அட்டகாசமான சுவை. (விலை - அளவை பொறுத்து மட்டுமே மாறுகிறது, மற்றபடி தரம் ஒன்றே) ; இக்கடையை குறிப்பிட காரணம் - இக்கதையை நடத்தும் நபர் (ஓனரும் அவரே - காபி மாஸ்டரும் அவரே) சென்னையில் ஒரு நல்ல வேலையில் இருந்ததை  விட்டு விட்டு இப்போது இக்கடை துவங்கியுள்ளார் !

* லக்ஷன் தினம் நாங்கள் சென்றிருந்தோம். முக்கிய கட்சியிலிருந்து "சாதாரண மனிதர்கள் " குடும்பங்களுக்கு ரூ. 500 சப்ளை ஆகிக் கொண்டிருந்தது. எலக்ஷன் கமிஷன் மிக நியாயமாக தேர்தல் நடத்துகிறது ;எந்த தவறும் நடக்க விடுவதில்லை என்பது எவ்வளவு பெரிய பம்மாத்து ! ஹூம்

ஞ்சை போய் விட்டு பழைய பஸ் ஸ்டாண்ட் அன்பு கடையில் லஸ்ஸி அல்லது பால் குடிக்காமல் வர முடியுமா... ? வெய்யிலுக்கு இதமாக லஸ்ஸி .. அதே அற்புத சுவை.. இப்போது விலை 20 ரூபாய். குடிக்க, குடிக்க " அய்யய்யோ .. காலி ஆகுதே !" என வருத்தம் எட்டிப்பார்க்க , குடித்து முடித்ததும் இன்னும் ஒன்று குடிக்கலாமா என்ற சலனம் ஒரு புறம் எழும்ப,  வண்டியை எடுத்துகிட்டு விடு ஜூட்....

* ஞ்சையில் இருந்த காலங்களில் நான் அதிக நேரம் செலவழித்த இடங்கள் - தியேட்டர்கள் தான் ! அவற்றை ஒவ்வொன்றாக மகளுக்கு சுற்றி காண்பித்தேன். ராஜா கலையரங்கம் தியேட்டர் இன்னும் இருப்பது ஆச்சரியப்படுத்தியது. ( இன்னமும் அவளோட ராவுகள் போன்ற படங்கள் தான் ...... ) யாகப்பா தியேட்டர் மூடி விட்டதாக சொன்னார்கள். தியேட்டர் இருந்த இடத்திற்கு கூட செல்ல முடியவில்லை. ஞானம் தியேட்டர் ஞானம் ஹோட்டலாகி ரொம்ப வருஷம் ஆகிறது. ஜூபிடர், திருவள்ளுவர் போன்றவை எப்படியோ காலம் தள்ளி கொண்டிருக்கின்றன. ராணி பேரடைஸ் - பிக் சினிமாஸ் ஆன பின் இன்னும் ஒரு முறை கூட படம் பார்க்க வில்லை.

* ஞ்சையில் சில கடைகளில்  " கரண்ட் இல்லாத போதும் சிராக்ஸ் எடுக்கப்படும் " என பெரிய எழுத்தில் எழுதி போட்டுள்ளது புன்னகையை வரவழைக்கிறது. மின் வெட்டு எலக்ஷன் நேரம் வரை சற்று அடக்கி வாசித்தாலும் மற்றபடி - மிக மிக அதிகம் தான்.

* துவரை தஞ்சையில் செல்லாத ஒரு இடத்துக்கு சென்று நிறைய தகவல்கள் சேகரித்துள்ளேன். அது பற்றி தனியாக பின்பு....

* எப்போது பேட்டரி குறைந்தாலும் சொந்த ஊருக்கு சென்று வந்தால் உடல் மற்றும் மனது ரீ சார்ஜ் ஆன மாதிரி ஆகிவிடுகிறது... கவனித்துள்ளீர்களா  ? 

Tuesday, May 13, 2014

சூப்பர் சிங்கர் ரோஷன் உடன் ஒரு சந்திப்பு

சூப்பர் சிங்கரில் பைனல் வரை வந்த ரோஷன்... எங்கள் தெருவிற்கு அடுத்த தெருவில் தான் கடந்த சில  வருடங்களாகவே குடியிருக்கிறான். அடுத்த தெரு என்றாலும் - 50 மீட்டர் தான் தூரம்.. பல முறை அவனது வீட்டிலும் சாலைகளிலும் பார்ப்பது உண்டு.  அவனை பார்த்து புன்னகைத்தால், வெட்கத்துடன் சிரித்த படி சென்று விடுவான். என்றாவது ஒரு நாள் அவனை நிறுத்தி பேசணும் என்று எண்ணி, எண்ணி அண்மையில் தான் அது சாத்தியமானது..

ஈஸ்டர் தினம்.. சாலையில் செல்லும் போது அவர்கள் வீட்டிலிருந்து பாடல் வழிகிறது " நான் தான் சகல கலா வல்லவன் " .. கேட்டபடியே சென்று விட்டு - அரை மணி கழித்து திரும்பும் போது மீண்டும் இன்னொரு பாடல் கசிகிறது " நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள் "

சரி.. இன்றைக்கு அவனை நேரில் பார்த்து விடலாம் என அவர்கள் இல்லத்தின் உள்ளே சென்றேன்...

ரோஷன் ஹாலிலேயே லேப்டாப் உடன் அமர்ந்திருந்தான்.. அப்போது பாட்டு பாடியது? அவனது தம்பி ராபின்... ! இது அங்கு சென்றபின் தான் உணர முடிந்தது

உள்ளே ராபினுக்கு அவனது தந்தை பாட்டு பயிற்சி தந்து கொண்டிருந்தார்.

நான் ரோஷன் மற்றும் அவனது தாயுடன் பேசிக்கொண்டிருந்தேன்

ரோஷன் குடும்பம் முதலில் கோட்டூர் புரத்திலிருந்துள்ளது. இங்கு சொந்தமாய் வீடு வாங்கி கொண்டு 3 வருடம் முன்பு தான்  வந்துள்ளனர். ரோஷனுக்கு ஒரு தம்பி மற்றும் ஒரு தங்கை. அப்பா பெப்சிகொவில் விற்பனை துறையில் பணியாற்றுகிறார்

தற்போது +2 அக்கவுண்ட்ஸ் க்ரூப் படிக்கும் ரோஷன் C A படிக்க விருப்பம் என்று சொல்ல, எங்கள் ACS கோர்ஸ் பற்றியும் அவனிடம் பகிர்ந்து கொண்டேன். நான் அவனது துறை சார்ந்து தான் படித்துள்ளேன் என்பதை அறிந்ததும் நன்கு பேசத் துவங்கினான் ரோஷன்.

முறைப்படி கர்னாடிக் எல்லாம் கற்று கொள்ள வில்லை என்றும், ஹிந்துஸ்தானி சமீபத்தில் கற்று கொண்டதாகவும் சொன்னான். முக்கிய பயிற்சி அப்பாவிடமிருந்து தானாம் !.

ரோஷன் தாய் மற்றும் தந்தை பேச்சில் மலையாள வாடை தெரிகிறது. ரோஷனின் பேச்சில் சுத்தமாய் இல்லை. இங்கேயே பிறந்து வளர்ந்தமையால் இருக்கலாம்...

சிறிது நேரத்தில் ரோஷனின் தந்தையும் எங்கள் பேச்சில் வந்து சேர்ந்து கொண்டார்.

+2 என்பதால் ரோஷன் தற்போது படிப்பில் கவனம்  செலுத்த,அவனது தம்பி ராபின் தான் தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் மற்றும் சன் சிங்கரில் கலக்கி வருகிறான்.

அன்று கூட சூப்பர் சிங்கர் ஜூனியரில் ஒரு குறிப்பிட்ட நிலையில் செலெக்ட் ஆகி விட்டு அப்போது தான் இல்லம் திரும்பியிருக்கிறார்கள். உடனே அடுத்த சில நாட்களில் வரும் நிகழ்ச்சிக்கான பயிற்சி !!

ராபின் எந்தெந்த நிகழ்ச்சியில் தற்போது வருகிறான், எங்கெங்கு பாடுகிறான் என்று தாயும் தந்தையும் பெருமை பொங்க பகிர்ந்து  கொண்டனர்.

சூப்பர் சிங்கர் பற்றியும் ஜட்ஜ்கள் பற்றியும் கூட கொஞ்சம் பேசினோம்.

அலுவலகத்தில் ஒரு முக்கிய பொறுப்பில் இருந்து கொண்டு ஒவ்வொரு முறை தனது மகன்கள் பாடும்போதும் விடுப்பு எடுத்து கொண்டு கூடவே செல்லும் அவனது தந்தையை - மனம் விட்டு பாராட்டினேன்.

அவர்கள் படிக்கும் வேல்ஸ் பள்ளியும் கூட இது போன்ற திறமைகளை நன்கு ஊக்குவிப்பதாக மகிழ்ச்சியாக  சொன்னார்.பல பள்ளிகள் "படிப்பு படிப்பு " என விடுப்பே தர மாட்டார்கள்; அதனால் தான்  அங்கு சேர்க்க வில்லை" என்றும்  கூறினார்.



ரோஷனின் தம்பி - ராபின் - குட்டி பையன் . ரோஷன் போல இன்றி சற்று சதைபிடிப்புடன் இருப்பதால் செம அழகாக இருக்கிறான்.

இருவரை விட இன்னும் கியூட் அவர்கள் தங்கை. ஆறு வயது தான் இருக்கும். கண்ணில் குறும்பு கொப்பளிக்கிறது. அண்ணன்கள் இருவரும் பாட மட்டுமே செய்வார்களே ஒழிய முகத்தில் எந்த ரீ ஆக்ஷனும் இருக்காது. இவளது முகத்திலோ அத்தனை முகபாவங்கள் வந்து போகிறது...

எங்கள் வீட்டில் கிளிகள் இருக்கின்றன என்றதும், வந்து பார்க்கணும் என்று ரொம்ப ஆசைப்பட்டாள் குட்டி பெண். ரோஷன் அல்லது அப்பாவுடன் இன்னொரு முறை வா என்று கூறி விட்டு விடை பெற்றேன்.

படிப்பு, படிப்பு என இருக்கும் இந்த காலத்தில் இத்தகைய பிற திறமைகளை ஊக்குவிக்கும் ரோஷன்- ராபின் தந்தை தான் வீடு நோக்கி நடக்கும்போது மனதில் நிறைந்திருந்தார் .. !

Saturday, May 10, 2014

வானவில் - ரியோ-2-டமால் டுமீல்- மேக்ஸ்வெல் - அந்தி மழை பொழிகிறது

பார்த்த படம் -1 ரியோ -2


கோடை விடுமுறை வீக் எண்ட் முழுவதுமே மகள் மற்றும் மச்சான் குழந்தைகளுடன் கழிகிறது. அவர்களுடன் ஏதேனும் சினிமா அல்லது சென்னையின் குறிப்பிடத்தக்க இடத்திற்கு சென்று கொண்டிருக்கிறோம்.

ரியோ -2 பார்க்கணும் " 2 கிளிகள் பற்றிய படம் " என மகள் சொல்ல , நாங்கள் வளர்க்கும் கிளிகள் கதை போல இருக்கும் என நம்ம்ம்ம்ப்பி புக் செய்தேன். கடைசியில் இது ஒரு கார்ட்டூன் படம். பசங்க செமையாக என்ஜாய் செய்தார்கள். எனக்கு தான் படத்தில் ஒன்றவே முடியவில்லை. (பொதுவாக கார்ட்டூன் படங்கள் பார்த்து அதிகம் பழக்கம் இல்லை )

2 வயது முதல் 15 வயது வரை உள்ள குட்டி பசங்க நன்கு ரசிக்கிறார்கள் ,, . மேலும் சில பெண்மணிகளும் கூட படம் பார்த்து விட்டு " சூப்பரா இருந்தது இல்ல?" என்று பேசியபடி சென்றனர்...

வீட்டில் குட்டி பசங்க இருந்தால் அவர்களுக்காக மட்டும் செல்லலாம் ரியோ - 2

பார்த்த படம் -2 டமால் டுமீல் 

தமிழில் சின்ன பட்ஜெட் படங்கள் சுவாரஸ்யமாக தொடர்ந்து வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அண்மையில் தான் என்னமோ நடக்குது நன்கு உள்ளது என எழுதினேன். அதற்கு முன்பே வந்த டமால் டுமீல் இப்போது தான் காண முடிந்தது.



இப்படத்து கதையை- விமர்சனத்தில் நம்ம உண்மை தமிழன் அண்ணனால் கூட தெளிவாக எழுதி விட முடியாது. டைரக்டர் எப்படி தயாரிப்பாளருக்கு சொல்லி புரியவும் ரசிக்கவும் வைத்தார் என்பதே ஆச்சரியம் தான். படத்தையும், கதையும் படம் பார்த்து தான் புரிந்து கொள்ளவும் ரசிக்கவும் முடியும்

பாண்டசி டைப் கதை தான். நிஜத்தில் நடக்க வாய்ப்புகள் குறைவு. ஆயினும் படம் பார்க்கும் போது அப்படி தோன்றாத அளவு கொண்டு செல்கிறார்கள்.

வைபவ் - தனி ஹீரோவாக முதல் படம் - நன்றாகவே  செய்துள்ளார். பிரபலம் ஆகாத ஹீரோ என்பதால் - அந்த பாத்திரமாக நம்மால் பார்க்க முடிகிறது. நமது அபிமான ரம்யா நம்பீசனுக்கு தான் அதிக ஸ்கோப் இல்லை.

த்ரில்லர் படம் - ஒரு அளவிற்கு மேல் புன்னகையும் வரவழைப்பது கலக்கல் ஆக உள்ளது.

அவசியம் ஒரு முறை பார்க்கலாம் - டமால் டுமீல்.

ஐ. பி. எல் கார்னர் 

மிக சுமாரான அணியை - குறிப்பாக மிக மிக வீக் பவுலிங் வைத்து கொண்டு பஞ்சாப் ஒவ்வொரு மேட்சையும் - க்ளோஸ் ஆக கூட இல்லாமல் - ரொம்ப நல்ல மார்ஜினில் ஜெயித்து வருகிறார்கள்.  மேக்ஸ்வெல் மற்றும் மில்லர் இருவரின் பேட்டிங் தான் முக்கிய காரணம். இவர்கள் டாமிநேஷனில் ஒவ்வொரு மேட்சிலும் கிட்டத்தட்ட 200 ரன் எடுத்து விடுகிறது இந்த அணி.

மேக்ஸ்வேல் ஆட்டம் தான் இந்த ஐ. பி எல் லில் ஹைலைட். மரண அடி ! 5 பந்து தான் அமைதியாக இருக்கிறார். அதுக்கு பிறகு பூஜை போட்டு விடுகிறார். " டேய் இவன் எப்படி போட்டாலும் அடிக்கிறாண்டா !" கதை தான்... குறிப்பாக ஸ்பின் பவுலிங் போட்டால் மேக்ஸ்வேல்லுக்கு நாவில் எச்சில் ஊறி விடும். திருநெல்வேலி அல்வா சாப்பிடுற மாதிரி பிரிச்சு மேய்ந்து விடுகிறார். ரவிச்சந்திரன் அஷ்வினை கேட்டால் மிச்ச கதை சொல்வார்...

பஞ்சாப் தான் இந்த வருடத்தின் பார்ம் அணி. மேலும் சென்னை மற்றும் ராஜஸ்தான் இவையும் செமி பைனல் செல்லும் என்று நம்புகிறேன்.

நிற்க. ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் இடையே நடந்த மேட்ச்சில் நம்ம அமித் மிஸ்ரா ரன் அவுட் ஆனது சூப்பர் காமெடி. இந்த லின்க்கில் கண்டு சிரியுங்கள் :

http://matchcentre.starsports.com/cricket/160/175947/1326919

என்னா பாட்டுடே - அந்தி மழை பொழிகிறது 

தமிழின் கிளாசிக் பாடல்களில் ஒன்று.

எஸ். பி. பி திரையில் பாடுவது, மாதவியின் அற்புத அழகு, 80 களில் சென்னையின் சாலைகள், பேருந்துகள் என பாடலில் நிறைய சுவாரஸ்யங்கள் இருந்தாலும் - மீண்டும் மீண்டும் ரசிக்கவும் நெகிழவும் வைப்பது ராஜாவின் இசை தான்.. என்ன மாதிரி ஆர்கிஸ்ட்ரேஷன் ! ச்சே.. இந்த மனுஷனுக்கு இணையா இன்னொரு ஆளை சொல்லவே முடியாது !



போஸ்டர் கார்னர் 



டிவி பக்கம் - சன் டிவி சூர்ய வணக்கத்தில் கற்றது தமிழ் ராம் 

சூர்ய வணக்கத்தை அவ்வப்போது பார்ப்பது வழக்கம். காரணம் தொகுப்பாளினி அஞ்சனா ஹீ ஹீ

அண்மையில் கற்றது தமிழ் ராம் தேசிய விருது வாங்கியதை அடுத்து அவரிடம் பேசினர். ராம் தனது இரண்டு படங்களிலும் ஹீரோவை அவரை போலவே தாடி + கண்ணாடியுடன் படைத்தது - மேலும் அந்த பாத்திரங்களை eccentric ஆக காண்பித்தது அவரது பாத்திரம் தான் அப்படி எதிரொலித்ததோ என எண்ண வைத்தது. ஆனால் நிகழ்ச்சியில் மிக இயல்பாய் - புரியும்படி - மனதிலிருந்து பேசினார் ராம்.


மற்ற இயக்குனர் படங்களில் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு " நான் எழுதிய பாத்திரம் என்பதால் ஹீரோவின்  உணர்வுகள் எனக்கு தெரியும்; அதனால் நடித்து விட்டேன். மற்ற இயக்குனர் எழுதும் கதையில் நடிகனான நான் ஷைன் பண்ணுவேனா என்பது சந்தேகம் தான் " என ஓபனாக கூறினார்.

பாலுமஹேந்திரா பற்றி சொல்லும்போது " அவரிடம் ரொம்ப பிடித்த விஷயம் அவரது மன்னிக்கும் மனது தான். சமயத்தில் அவர் போன் செய்தால் அதை அட்டெண்ட் செய்யாமல், அல்லது அவர் கூப்பிட்டும் சென்று பார்க்காமல் இருந்துள்ளேன். அப்படி இருந்தும் அடுத்த முறை சென்றால் " ஏண்டா கூப்பிட்டும் வரலை?" என்று கேட்டுவிட்டு அப்புறம் சமாதானமாகி விடுவார். அவர் நிலையில் நான் இருந்தால் கூட அவ்வளவு சீக்கிரம் கோபம் சரியாகி இருக்காது"

சென்னை ஸ்பெஷல் 

நுங்கம்பாக்கம் அண்ணா மேம்பாலம் அருகே இருக்கும் லேண்ட்மார்க் புத்தகக்கடை - காலி செய்வதால் எல்லா புத்தகம் மற்றும் பொருட்களுக்கும் 70 % நேரடி டிஸ்கவுன்ட் தருகிறார்களாம். முகநூலில் அதிஷா மற்றும் ப்ரியா கல்யாணராமன் பகிர்ந்திருந்தனர். இன்றோ நாளையோ செல்ல திட்டமிட்டுள்ளேன். முடிந்தால் நீங்களும் லேண்ட்மார்க் கடையை ஒரு எட்டு எட்டி பாருங்கள் !

Tuesday, May 6, 2014

கோவா- கப்பலில் ஒரு இனிய பயணம்- வீடியோக்களுடன்

கோவாவின் தலைநகரம் - பனாஜி சிட்டி. இங்குள்ள துறைமுகத்தில் இருந்து தினம் மாலை வேளையில் கப்பலில் ஒரு இனிய பயணம் நிகழ்கிறது. ஒவ்வொரு நாளும் குறைந்தது 5000 முதல் 10000 வரை மக்கள் பயணிக்கிறார்கள்.



டிக்கெட் வாங்கி விட்டு உள்ளே செல்லவே மிக பெரிய கியூ... வெளியிலேயே நின்ற படி சில ஏஜென்ட்கள் டிக்கெட் விற்கிறார்கள். அதே விலையில் தான் விற்பதால் அங்கேயே வாங்கினோம்...

மாலை 5 மணி முதல் எட்டு மணி வரை இந்த பயணம் தொடர்கிறது... ஒவ்வொரு கப்பலிலும் 500 பேராவது பயணிப்பர்.

திருப்பதி போல கியூவில் நின்று பொறுமையாய் மக்கள் கப்பலில் ஏறுகிறார்கள். டிக்கெட் விலை ஒருவருக்கு ரூ. 200



கப்பல் இரண்டு தளத்தை கொண்டது. அமரும் வரை - கடலின் ஓர இருக்கை - மாடி இருக்கை என்றெல்லாம்    அடித்து பிடித்து அமர்ந்தாலும் கப்பல் செல்ல துவங்கியதும் பாதி பேருக்கு மேல் இருக்கையில் இருப்பதில்லை.. எழுந்து நடப்பதும்,  நின்றபடி கடலை வேடிக்கை பார்பதுமாய் இருக்கிறார்கள்.

கப்பல் நிரம்பும் வரை கிளம்பாமல் காத்திருக்கிறார்கள். மிக விரைவாகவே நிரம்பி விடுகிறது..

கப்பல் கிளம்ப துவங்கும்  போதே - கப்பலுக்குள் அமைக்கப்பட்டுள்ள மேடையில் மைக் பிடித்தபடி ஒருவர் வந்து பேசத்துவங்கி விடுகிறார். அதன் பின் ஒரு மணி நேர பயணம்.. பின் கப்பல் திரும்பும் வரை அந்த மேடையில் தொடர்ந்து பாட்டு, டான்ஸ் தான்....



முதலில் குழந்தைகளை மட்டும் அழைத்து பாடல்கள் இசைத்து ஆட வைக்கிறார்கள். பின் கணவன்- மனைவி ஆகியோரின் டான்ஸ் - அப்புறம் ஆண்கள் மட்டும் - பின் பெண்கள் மட்டும் - கடைசியாக யார் வேண்டுமானாலும் வந்து ஆடலாம் என அறிவிக்கிறார்கள்.

குழந்தைகள் ஆடும்போது - பெற்றோர் ஆர்வமாக தங்கள் குழந்தைகளை மேடை மீது ஏற்றி விட, அதில் பாதி பேர் மட்டுமே ஆட, நிறைய குழந்தைகள் ஆடாமல் விழித்த படி நின்று கொண்டிருந்தனர் ...



எல்லா நேரமும் டான்ஸ் மட்டும் தான் ஆடுவார்கள் என அறியாமல் கணவன்- மனைவி மேடைக்கு வாருங்கள் என்று அழைத்த போது அய்யாசாமி மற்றும் அவர் மனைவி மேடையேறி விட்டனர்.




டான்ஸ் என்று அறிவித்ததும் திருமதி. அய்யாசாமி திரு திரு என விழிக்க, அய்யாசாமி நைசாக இறங்கி போயிடலாம் என அழைத்து வந்து விட்டார் ( அய்யாசாமி எதோ ஒரு விதமாய் ஆடுவார் என்றாலும், தனியே எப்படி ஆடுவது?)




வெய்யில் காலம் என்றால் - 5 மணிக்கு துறைமுகத்தை அடைவது நல்லது.. கியூவில் நின்று அடுத்த அரை மணியில் கப்பலில் ஏறினால் ஆறு மணிக்கு கப்பல் கிளம்பும்.. ஒரு மணி நேரம் சென்று விட்டு வருவதற்குள் - கடலில் சூரிய அஸ்தமனம் கண்டு ரசிக்கலாம். மேலும் திரும்ப  வரும்போது அழகிய பனாஜி நகரம் வண்ண மயமான விளக்குகளால் ஜொலிப்பது அட்டகாசமான காட்சி. அழகான ஹோட்டல்கள், மிதக்கும் கப்பல்கள் (கேசினோ) போன்றவையும் பயணத்தில் நம்மை கவரும் மற்ற விஷயங்கள்..



கப்பலிலேயே ஸ்நாக்ஸ் மற்றும் ட்ரிங்க்ஸ் ( ஆம் .. பீர், ஹாட் உட்பட ) விற்கிறார்கள். அந்த விற்பனையும் அமோகமாய் நடக்கிறது.

நிலா அது  வானத்து மேலே 

கோவா செல்லும்போது அவசியம் பனாஜி நகரை ஒரு முறை சுற்றி வரவும், இந்த கப்பல் பயணத்தையும் தவற விடாதீர்கள்.

கோவா - சில குறிப்புகள் 

கோவாவை ஆண்டவர்கள் ஆங்கிலேயர்கள் அல்ல; போர்சுகீசியர்கள்; எனவே பாண்டிச்சேரியின் சில தன்மைகள் இங்கு உண்டு. ஆனால் பாண்டிச்சேரியை விட பல மடங்கு அழகும் சுவாரஸ்யமும் கோவாவிற்கு உண்டு

பனாஜி சிட்டியில் ஒரு வீடு 


தலை நகரில் கூட நமது சென்னை அல்லது மற்ற சிட்டி அளவெல்லாம் டிராபிக் இல்லை; மிக நிதானமாக கழிகிறது பொழுதுகள்.

கோவாவில் என்னை பெரிதும் கவர்ந்த அம்சம் - அதன் வெரைட்டி தான். கோவா நகரத்தின் ஸ்டைலை கொண்டுள்ளது; இன்னொரு பக்கம் அக்மார்க் கிராமம் போல உள்ளது. பல்வேறு பீச்கள் மற்றும் Backwaters இருப்பதால் கேரளாவில் இருக்கிறோமோ என்று சந்தேகம் வருகிறது. பாதைகள் ஹில் ஸ்டேஷன் போல !  இப்படி ஒரே இடத்தில அத்தனை இடங்களின் குணங்களையும் காட்டுவது செம சுவாரஸ்யம் !



 கோவாவில் கல்லூரி செல்லும் மாணவ மாணவியர் கூட யூனிபார்ம் அணிகிறார்கள். கேட்டால் - டூரிஸ்ட் மற்றும் மாணவர்களுக்கு வித்யாசம் தெரியாது ; அதனால் இந்த ஏற்பாடு என்கிறார்கள்.

டிசம்பர் 25 முதல் ஜனவரி 3 வரை வருடாந்திர கோவா பெஸ்டிவல் நடக்கும். கோவாவில் மிக அதிக கூட்டம் கூடும் நேரம் இதுவே . அறை வாடகை எல்லாம் கன்னா பின்னாவென்று பிய்த்து கொண்டு போகும். இந்த 2 வாரம்  பள்ளி, கல்லூரிகள் மட்டுமல்ல அரசு அலுவலகம் கூட அநேகமாய் இயங்காது என்கிறார்கள். அலுவலகம் திறந்திருந்தாலும் ஓரிருவர் மட்டும் இருப்பராம் ; வேலை எதுவும் நடக்காதாம்

பனாஜியில் நிதானமாய் நாங்கள் அடிக்கடி சுற்றி வந்தோம். அழகான குட்டி நகரம். பகலில் ஒரு வித  முகமும் இரவில் இன்னொரு அழகும் காட்டுகிறது பனாஜி சிட்டி.



ஜூன் 18 என்ற பெயரில் பனாஜியில் ஒரு தெரு ( வெள்ளையனே வெளியேறு போல - போர்சுகீசியர்களை வெளியேற சொன்ன நாள் ஜூன் 18, 1946 என்பதால் இந்த பெயர்)

கோவாவில்  இனிப்புகள் அதிகம் பிரபலம் இல்லை; முந்திரி மற்றும் இதர நட்ஸ் (Nuts) தான் இங்கு அவசியம் வாங்க சொல்லி பரிந்துரைக்கிறார்கள். அந்த கடைகள் சிலவும், ஜூன் 18 உள்ளிட்ட பனாஜியின் சில முக்கிய தெருக்களையும் இந்த வீடியோவில் காணலாம்.




இஞ்சினியரிங் போன்றவை இங்குள்ளோருக்கு உகப்பான படிப்பு அல்ல. போலவே மருத்துவமும் கூட அநேகமாய் யாரும் படிப்பதில்லை. அவர்கள் பீ. காம் போன்ற ஆர்ட்ஸ்  படிப்பையே அதிகம் படிக்கிறார்கள். மேலும் ஹோட்டல் சம்பந்தமான கோர்ஸ் என்றால் நிறைய பேர் படிப்பதாக சொன்னார்கள் (படித்து விட்டு கோவாவில் ஹோட்டலில் வேலை பார்க்கலாம் அல்லவா?)

படிக்கா விட்டாலும் பிரச்சனையே இல்லை; படிக்காதோர் அதிகம் நாடும் தொழில் கார் ஓட்டுவது தான்; நான் கூட அதிகம் படிக்கலை என சிரித்த படி சொன்னார் எங்கள் கார் டிரைவர் !

(கோவா குறிப்புகள் தொடரும்.)

Saturday, May 3, 2014

வானவில் -நான் சிகப்பு மனிதன்-இறையன்பு -அஞ்சான்

பார்த்த படம் - நான் சிகப்பு மனிதன் 

நிச்சயம் ஒரு வித்யாச முயற்சி தான்.



சட்டென்று தூக்கம் வரும் " நார்கோலெப்சி " பற்றி தமிழ் சினிமா இயக்குனர்கள் எப்படி இவ்வளவு நாள் விட்டு வைத்தார்கள் என தெரியவில்லை. பழைய படம் ஒன்றில் நாகேஷுக்கு இதே வித பிரச்சனை உண்டென காமெடி பகுதியில் பயன்படுத்தியிருப்பர்-  நார்கோலெப்சி பற்றியெல்லாம் சொல்லாமல்.. படம் பெயர் நினைவில்லை. ஆயினும் இதையே கதையின் மைய புள்ளியாக வைத்து பின்னப்பட்ட விதம் அருமை (ஆங்கில பட பாதிப்புகள் இருக்கலாம். அறியவில்லை)

ஹீரோவின் பாத்திரத்தின் வித்தியாசத்துடன் திருப்தி அடைந்து விடாமல்,  ஹீரோயின் மற்றும் வில்லி பாத்திரம் இரண்டையுமே இதுவரை தமிழில் பார்த்திராத விதத்தில் படைத்துள்ளார் இயக்குனர். விஷாலை மணக்க எந்த எல்லைக்கும் செல்லும் லட்சுமி மேனன் பாத்திரம் ஆச்சரியப்படுத்துகிறது என்றால் - இனியா பாத்திரம் அதை விட சூப்பர். குறிப்பாக தனது கடைசி காட்சியில் இனியா அறைக்குள் இருந்து கத்தியவாறே வந்து பேசும் டயலாக்.!

இனியா மற்றும் அவர் கணவர் போன்ற ஆட்கள் இருப்பார்களா ?  நிச்சயம் செய்தி தாளில் இது மாதிரி எத்தனையோ கதைகளை வாசிக்க தானே செய்கிறோம்......

இனியாவின் கணவர் பாத்திரம் தான் (நல்லா பார்த்த முகமா இருக்கு... யார் சார் அந்த நடிகர்?) அநியாயத்துக்கு புத்திசாலியாக, ஏமாற்று காரனாக - ஆனால் அனைவரும் அவரை நம்பும்படி அமைத்தது சற்று உறுத்துகிறது

படத்தின் முக்கிய குறை - மிரட்டலான இடைவேளைக்கு பின் 10-15 நிமிடம் படம் படுத்து விடுகிறது. இந்த நேரம் ஹீரோயின் தூங்கிய படி இருக்க ஹீரோ ஒரு பாட்டு பாடுகிறார் பாருங்கள்... அது மட்டும் இன்னும் அரை மணி கழித்து வந்திருந்தால் தியேட்டரில் குறட்டை சத்தங்கள் கிளம்பியிருக்கும் ..

நிச்சயம் ஒரு முறை பார்க்கத்தக்க படம் - வன்முறை மற்றும் " A " காட்சிகள் உண்டு என்பதால் குழந்தைகளை தவிர்த்து விட்டு பார்ப்பது நல்லது.

டிவி பக்கம் - பொதிகையில் இறையன்பு 

ஒவ்வொரு ஞாயிறு மதியம் 3 மணிக்கு பொதிகையில் வெவ்வேறு தலைப்புகளில் மடை திறந்த வெள்ளம் போல - பேசுகிறார் இறையன்பு ஐ. ஏ எஸ். ! கேட்டு முடித்ததும் ஒரு பாக்கெட் குளுக்கோஸ் சாப்பிட்ட மாதிரி இருக்கு என்றாலும் அப்புறம் மறந்து தான் போகிறோம் என்பது வேறு விஷயம் :)

மாற்று திறனாளிகள் பற்றியும், கிரியேடிவ் திங்கிங் என்பது என்ன என்பது பற்றியும் இவர் பேசியதன் ஒலி வடிவம் கிடைத்தால் கேட்டு பாருங்கள் .. !

என்னா பாட்டுடே - உறவெனும் புதிய வானில்

ராஜவின் மேதைமை ஒவ்வொரு இன்ச்சிலும் தெரிகிற பாடல். நெஞ்சத்தை கிள்ளாதேயில் இடம் பெற்ற " உறவெனும் புதிய வானில்" .

அற்புத மெட்டு, இனிய கிட்டார் இசை என மயக்குது இப்பாட்டு

இயக்குனர் மகேந்திரனுக்கு டூயட் என்பது சுத்தமாக பிடிக்காது. தப்பி தவறி டூயட் இருந்தாலும் அதனை வாயசைத்து பாட மாட்டார்கள். டூயட் ஒரு புறம் சென்ற படி இருக்க - பாத்திரங்களின் உணர்வுகளை நமக்கு கடத்துவதையே இவரது பாடல்கள் செய்யும்

80 களில் பல பாட்டுகளையும் வீ. ஜி. பி கோல்டன் பீச்சில் படம் பிடிப்பது வழக்கம். இப்பாடலிலும் அதனை காண காமெடியாக உள்ளது. பாடல் இன்னும் நன்கு படமாக்காப்பட்டிருக்கலாம்... இதன் ஆடியோ வடிவம் நான் அடிக்கடி கேட்கும் ஒன்று... இப்பாடலை கேட்கும்போது நமக்கு வரும் மகிழ்ச்சியை, பாடலில் உள்ள ஒரே வரி சரியாக சொல்லிவிடும் 

" எந்தன் மனம் எங்கிலும் இன்பம் அது சங்கமம் "....!



ஐ. பி. எல் கார்னர் 

என்ன தான் திட்டினாலும், பிக்சிங்கோ என்ற சந்தேகம் இருந்தாலும் ஐ. பி. எல் பார்க்காமல் இருக்க முடிவதில்லை. பசங்களும் விரும்பி பார்ப்பதால், நம் வீடோ விருந்தினர் வீடோ எங்கே இருந்தாலும் - ஐ. பி. எல்  காணாமல் ஒரு நாளும் கழிவதில்லை . 

சென்னை மற்றும் பஞ்சாப் செமி பைனல் செல்வது எந்த அளவு நிச்சயமோ, அதே அளவு மும்பை செல்ல முடியாது என்பதும் உறுதி .. (அதிசயங்கள் நிகழ்ந்தால் ஒழிய) 

இந்த ஐ. பி. எல் லில் எனக்கு மட்டுமல்ல லட்சகணக்கான மக்கள் விரும்பும் ஹீரோவாய் மாக்ஸ்வெல்  உருவெடுத்துள்ளார். பஞ்சாப் ஜெயிக்கிறதோ இல்லையோ - அவர் 40 பந்து விளையாடினால் போதும்- மக்களுக்கு முழு entertainment காரண்டி ! அதற்கு குறைவான பந்துகளில் அவர் அவுட் ஆனால்  - ஏராள மக்கள் ஏமாந்து போகிறோம். தஞ்சை சென்றபோதும் இதே உணர்வை பலரிடமும் காண முடிந்தது.

மும்பை தவிர டில்லி அணியும் நிச்சயம் செமி பைனல் வராது என்று நினைக்கிறேன். மற்ற அணிகளில் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் வர வாய்ப்புகள் அதிகம். 

கொல்கத்தா மற்றும் சன்ரைசர்ஸ் இவையும் நல்ல அணிகளே. இரண்டிலும் பவுலிங் நல்ல விதத்தில் உள்ளது, பேட்டிங் தான் அடிக்கடி சொதப்பி விடுகிறது 

மே 18- சென்னை Vs பெங்களூரு மேட்ச் சேப்பாக்கத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர் குழந்தைகளுடன் பார்க்க திட்டமிட்டு வருகிறேன். டிக்கெட் வாங்கணும்... ! 

அஞ்சான் !!

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அஞ்சான் பட ஸ்டில்கள்  வெளியாகி உள்ளன. அவற்றில் நம்மை பெரிதும் கவர்வது ஹீ ஹீ சமந்தா தான்... சோ கியூட் !



படித்ததில் பிடித்தது

ஆங்கிலம் என்றாலும் அவசியம் வாசியுங்கள்.. குறிப்பாக திருமணமான ஆண்கள் அனைவரும்...

Must read for young men and women who got married ....

Brad Pitt About His Wife :

“My wife got sick. She was constantly nervous because of problems at work, personal life, her failures and problems with children.

She has lost 30 pounds and weighted about 90 pounds in her 35 years. She got very skinny, and was constantly crying. She was not a happy woman.

She had suffered from continuing headaches, heart pain and jammed nerves in her back and ribs. She did not sleep well, falling asleep only in the morning and got tired very quickly during the day.

Our relationship was on the verge of break up. Her beauty was leaving her somewhere, she had bags under her eyes, she was poking her head, and stopped taking care of herself.

She refused to shoot the films and rejected any role. I lost hope and thought that we’ll get divorced soon…

But then I decided to act on it. After all I’ve got the most beautiful woman on the earth. She is the idol of more than half of men and women on earth, and I was the one allowed to fall asleep next to her and to hug her shoulders.

I began to pamper her with flowers, kisses and compliments. I surprised her and pleased her every minute. I gave her lots of gifts and lived just for her. I spoke in public only about her. I incorporated all themes in her direction. I praised her in front of her own and our mutual friends.

You won’t believe it, but she blossomed. She became even better than before. She gained weight, was no longer nervous and she loved me even more than ever. I had no clue that she CAN love that much.

And then I realized one thing: The woman is the reflection of her man.

If you love her to the point of madness, she will become it. ” – Brad Pitt, A Secret of Love.

****
Relevant link is available here:

http://www.facebookquotes4u.com/2013/09/brad-pitt-secret-of-love.html

ரசித்த கவிதை 

மின்னைப்போல் நான் மறைய இருந்தேன்
விளக்கைப்போல் எனைச் சுடர வைத்தாய்

பொன்னைப்போல் நான் புதைந்திருந்தேன்
புடம் போட்டாய் - நகை ஆக்கி விட்டாய்

என்னைப்போல் நான் இருக்க நினைத்தேன்
ஏதோ வேதியல் செய்து விட்டாய்

உன்னைப்போல் எனை மாற்றி விட்டாய்
உன் உருவத்தில் என்னை வார்த்துவிட்டாய்

 - அப்துல் ரகுமான்

படித்ததில் பிடித்தது - ரசித்த கவிதை எல்லாமே "ஒரு மார்க்கமா " இருக்கே என நினைக்கிறீர்களா ? கரீட்டு... நாளை ஹவுஸ் பாஸ் பிறந்த நாள்.. அம்மணிக்கே இந்த கவிதை அர்ப்பணம் !


Thursday, May 1, 2014

என்னமோ நடக்குது & வேளச்சேரி Luxe Cinema..விமர்சனம்

வீட்டிற்கு விருந்தினர் குழந்தைகள் வந்திருக்க, ... வேளச்சேரியில் தான் தியேட்டர் வந்துடுச்சே Maal &  தியேட்டர் சேர்ந்து செல்லலாம் என பார்த்தால் மே 1- மதியம் & இரவு எல்லா படங்களும் Housefull ! காலை காட்சிக்கு மட்டுமே சில டிக்கெட்டுகள் இருக்க, பார்த்து கொண்டிருக்கும் போதே அவையும் காலியாகி கொண்டே இருந்தது.

ஒரு வழியாய் காலை 8 மணிக்கு முடிவெடுத்து என்னமோ நடக்குது - புக் செய்து - பசங்களை அழைத்து கொண்டு தியேட்டர் சென்று அமர்ந்த பின் தான் வாட்ஸ் அப்பில் நண்பர்கள்  "சென்ட்ரலில் குண்டு வெடிப்பு - வெளியே போகாதீர்கள் " என்று கூறியதை காண முடிந்தது. கூடவே போலிஸ் வெளியில் செல்ல வேண்டாம் என சொன்னதாக தகவல் .. !

வரும்போதே வழக்கமான செக்யூரிட்டி தவிர நிறைய போலிஸ் இருந்தது இப்போது தான் நினைவுக்கு வந்தது. அருகில் ஹவுஸ் பாஸ் இல்லை; மற்றவர்களின் குழந்தைகளை வேறு உடன் வைத்திருக்கிறோம் .. என்ன செய்வது என குழம்பியபடி இருந்தேன்...

மீண்டும் வெளியில் வந்து மேனேஜர் போல் இருந்தவரிடம் பேச, " ஆமா சார்... சென்னையில் குண்டு வெடிச்சிருக்கு; நாங்க ரொம்ப கேர் புல்லா இருக்கோம்; ஒரு பிரச்னையும் வராது; தைரியமா படம் பாருங்க " என்றார். சரி படம் மட்டும் பார்த்து விட்டு மால் சுற்றாமல் அப்படியே எஸ் ஆகிடுவோம்.. என முடிவெடுத்து படம் பார்க்க ஆரம்பித்தோம்.

தியேட்டர் முழுதும் புக் ஆகியிருந்தாலும், கால் வாசி மக்களுக்கு மேல் வெடிகுண்டு பிரச்சனையால் வராமல் இருக்க, இருக்கைகள் காலியாய் இருந்தன...

என்னமோ நடக்குது- கதை 

முதல் காட்சியே விறு விறுவென - நிமிர்ந்து உட்காரும் வகையில் தான் படம் ஆரம்பிக்கிறது.




சட்ட விரோதமான தொழில் செய்யும் ஒரு கூட்டத்தில் பண தேவை காரணமாக ஹீரோ விஜய் வசந்த் சேர்கிறார். ( அது என்ன தொழில் என்பதில் செம வித்யாசம் + சுவாரஸ்யம் உண்டு .. படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் ). சேர்ந்து சில நாளிலேயே இவரால் பெரும் இழப்பு வருகிறது. குறிப்பிட பொருளை அவர் தொலைத்து விடுகிறார்.

அந்த பொருளை கொண்டு வர சொல்லி, ஹீரோவின் காதலியை கடத்தி வைத்து கொண்டு மிரட்டுகிறது வில்லன் கூட்டம். ஹீரோ அந்த பொருளை கண்டறிந்தாரா, ஹீரோயினை மீட்டாரா என்பது க்ளைமாக்ஸ்.

படத்திற்கு ஓரளவு நல்ல ரிவியூக்கள் வந்த வண்ணம் இருக்க அது தான் படம் பார்க்க வைத்தது. படம் நிச்சயம் ஏமாற்ற வில்லை. திரைக்கதைக்குள்  அதிகம் செல்ல விரும்ப வில்லை; காரணம் பல டுவிஸ்ட்கள் காட்சிகளில் உள்ளது . திரையிலோ, டிவியிலோ எப்போது பார்த்தாலும் திரைக்கதை தெரியாமல் பாருங்கள்.. நிச்சயம் சுவாரஸ்யமாய் இருக்கும்

விஜய் வசந்துக்கு தனி ஹீரோவாக முதல் படமா இது ? பெரிய பெர்சனாலிட்டி இல்லா விடினும் இந்த பாத்திரத்துக்கு சரியே  பொருந்துகிறார்.

படம் முழுக்க, முழுக்க  ஹீரோ மீது ட்ராவல் ஆகாமல் ரகுமான்- பிரபு- சரண்யா - தம்பி ராமையா - சுகன்யா என அனுபவ சாலிகளை மையமாய் வைத்து நகர்கிறது. அவர்கள் ஒவ்வொருவரும் அந்த பாத்திரத்துக்கு apt !



ஹீரோயின் ... மஹிமா ..  சாட்டை படத்தில் பள்ளி மாணவியாக வந்தவர்.. இப்படத்தில் நர்ஸ் ஆக சற்று மெச்சூர்ட் கேரக்டர். அழகாக இருப்பதுடன் நன்கும் நடிக்கும் இவருக்கு தமிழ் சினிமா என்ன வாய்ப்புகளை வழங்குகிறது என பார்க்க வேண்டும் .

காமெடி என்று தனியே எதுவும் இல்லை;; ஆயினும் முதல் பகுதியில் காட்சிகளே சற்று புன்னகைக்க வைக்கிறது.

படத்தின் மைனஸ் என்றால் முக்கியமாக பாடல்களை தான் சொல்ல வேண்டும்...  குறிப்பாக செகண்ட் ஹாபில் வரும் 2 பாட்டுகளும் கொட்டாவி வர வைக்கின்றன... அவை வரும் நேரமும் கூட...

லாஜிக் மீறல்கள் மற்றும் நம்ப முடியாத தன்மை சற்று உண்டு எனினும் - கதையோட்டத்தில் அவ்வளவாக உறுத்த வில்லை..

புதிய இயக்குனர் ராஜ பாண்டிக்கு பாராட்டுகள்.. குறிப்பாக நல்ல திரைக்கதை மற்றும் இயக்கத்துக்கு... அம்மா-மகன் & அப்பா - மகள் நட்பையும் கிடைத்த நேரத்தில் அழகாய் தொட்டு செல்கிறார்.

சுஜாதா சொல்வார்... கதையின் ஆரம்பத்தில் துப்பாக்கி சுவற்றில் மாட்டியிருந்தது என்று சொன்னால், கதையில்  எங்கேனும் ஓரிடத்தில் அது வெடிக்க வேண்டும் என்று.. அந்த லாஜிக்கை கிளைமாக்சில் மிக சரியாக பயன்படுத்தியிருக்கும் ராஜபாண்டிக்கு மீண்டும் ஒரு முறை பாராட்டுகள் !

என்னமோ நடக்குது - நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம் !

Luxe ..தியேட்டர்  - ஒரு பார்வை 

மொத்தம் 11 ஸ்க்ரீன்கள்... முதல் ஸ்க்ரீன் மட்டும் இன்னும் திறக்கப்படவில்லை. ஐ மாக்ஸ் எனப்படும் இந்த முதல் ஸ்க்ரீன் மட்டும் டிக்கெட் விலை சற்று அதிகமாம்.. விரைவில் திறக்கப்படும்.. !

முதல் 3 ஸ்க்ரீன்கள் 300 - 400 பேர் அமரலாம். மற்றவை அனைத்தும் மொத்தம் 180 இருக்கைகள் .. 10 வரிசைகள். ஒவ்வொன்றிலும் 18 சீட்டுகள் அவ்வளவே.டிக்கெட் விலை 120 ( ஆன் லைன் எனில் 30 ரூபாய் அதிகம்)

சத்யம் தியேட்டர் க்ரூப் என்பதால் அரங்கினுள் எல்லா திரை அரங்க வசதிகள் ( திரை மறைக்காத  சீட், நல்ல சவுண்ட் சிஸ்டம் ) இங்கும் உண்டு. மொத்தம் 10 வரிசை என்பதால் சற்று சீக்கிரம் டிக்கெட் புக் செய்ய வேண்டும். இல்லாவிடில் அருகில் அமர்ந்து பார்க்க வேண்டி வரும்..

Luxe அரங்கில் இன்டீரியர் மிக அழகாக உள்ளதால் ஏராள மக்கள் சுவர் அல்லது வித வித கண்ணாடி அருகே நின்று புகைப்படம் எடுத்து கொள்கிறார்கள்.

Luxe திரை அரங்கம்.. வேளச்சேரிக்கு  ஒரு இனிய வரவு ! 

பின்குறிப்பு : சென்னையில் தான் இதுவரை குண்டு வெடிப்புகள் நிகழாமல் இருந்தன. இங்கும் நடந்துள்ளது சற்று அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. வேறு ஏதும் அசம்பாவிதம் நடக்காமல் காவல் துறை தடுக்கும் என்று நம்புகிறேன்... இன்று எல்லா இடங்களிலும் மிக தீவிரமாக போலிஸ் வலம் வருகிறார்கள் !
Related Posts Plugin for WordPress, Blogger...