Thursday, February 17, 2011

அம்ம்மா..மை டார்லிங்..

அம்மாவை பற்றி எங்கு எழுத ஆரம்பிப்பது?  " ப்ளாகிலே என்னென்னவோ எழுதுறியே. என்னை பத்தி எழுத மாட்டியா? " என குழந்தை மாதிரி அம்மா கேட்ட பிறகும் ஏன் ஒண்ணரை வருடமாக எழுதலை? எத்தனையோ கேள்விகளுடன் எழுத துவங்குகிறேன்

அம்மாவின் சொந்த ஊர் மன்னார்குடி. அப்பாவிற்கு கும்பகோணம். திருமணத்திற்கு பின் இருவரும் இந்த இரண்டு ஊருக்கும் நடுவில் உள்ள நீடாமங்கலத்தில் வந்து செட்டில் ஆனார்கள்.

பெற்ற ஆறு குழந்தைகளில் இரண்டு சிறு வயதிலேயே இறந்து விட்டன. நான்தான் கடைக்குட்டி. எனக்கு முன் பிறந்த குழந்தை இறந்ததால் அம்மா சோகத்திலேயே இருக்க, அதை மறக்க என்னை பெற்றதாக அப்பா சொல்லுவார். இருவரும் அவர்கள் நாற்பதுகளில் இருந்த போது பிறந்தவன் நான்.

அம்மாவின் தினசரி & முக்கிய குறிக்கோள்: பசங்க நல்லா சாப்பிடணும். நான்கு குழந்தைகள் இருந்தும் அம்மா சிம்பிளான சமையல் செய்ததில்லை. காலை & இரவு ரெண்டு வேளையும் டிபன். அதுவும் பூரி, இடியாப்பம், புட்டு, பொங்கல் என தினம் வித்யாசமாய் செய்வார். அந்த காலத்தில் கிரைண்டர், மிக்சி இல்லாமல் அம்மி கல்லிலேயே எவ்வளவு அரைத்திருப்பார்!

மிக அதிக தொந்தரவு தந்த பிள்ளை நானாக தான் இருப்பேன். ஏழு வயது வரை பால் குடித்த பையன். தெருவில் விளையாடி கொண்டிருக்கும் போது நடுவில், " இரு.. பால் குடிச்சிட்டு வந்துடுறேன்" என சொல்லிட்டு வந்து தாய் பால் குடித்துட்டு போவேன். தெருவில் யார் வீட்டிலாவது சிறு குழந்தைக்கு பால் குடுப்பதை பார்த்தால் வீட்டுக்கு வந்து எனக்கும் குடு என்று கேட்பேன். இப்படி நானாக நிறுத்தும் வரை, அவர் நிறுத்தாமல் தன் ரத்தத்தை பாலாக தந்து கொண்டு தான் இருந்தார்.

சற்று வளர்ந்ததும், பல் துலக்கி விட்டு, காலையே கதை புத்தகத்தை கையில் எடுத்து விடுவேன். (அப்போ நோ டிவி) அம்மா " குளிடா. சாப்பிடுடா" என சொல்லி கொண்டே இருப்பார். சொன்னதையே மறுபடி, மறுபடி சொல்வதால் "டேப் ரிக்கார்டர்" என அவருக்கு பெயர் வைத்தோம். "டேப்பு .. சும்மா இரு" என திட்டுவேன். டேப் நிற்காமல் பேசியதையே பேசியவாறு இருக்கும் .. வேலை முடியும் வரை.

அம்மா, அப்பா இருவருமே என்னை திட்டியதோ, அடித்ததோ இல்லை (அது பெரிய அண்ணன் டிப்பார்ட்மன்ட்). வாழ்க்கையில் என்னை அம்மா அடித்த ஒரே சம்பவத்தை மறக்க முடியாது. ACS படித்த போது " கோர்ஸ் ரொம்ப கஷ்டமாயிருக்கு. படிக்கலை. வக்கீலாகவே பிராக்டீஸ் செய்றேன்; இல்லாட்டி ஜிராக்ஸ் கடை வைக்கிறேன்" என கொஞ்ச நாள் ஊரில் வந்து உட்கார்ந்து விட்டேன். அனைவரும் ரொம்ப வற்புறுத்தி பரீட்சை எழுத வைக்க, அந்த க்ரூப் பாஸ் செய்தேன் ! அதற்கடுத்த கடைசி க்ரூப் சற்று எளிது. நானே தைரியமாக எதிர் கொண்டு கோர்ஸ் முடித்தேன்.

இந்த தகவலை போனில் சொல்லி விட்டு மகிழ்ச்சியுடன் ஊருக்கு வந்தேன். வீட்டில் அம்மா பெரிய குச்சியுடன் நின்றிருந்தார். உள்ளே நுழைந்ததும் குச்சியால் என் காலில் ஓங்கி அடித்தவாறு " படிக்க மாட்டேன்னு சொன்னியே. இப்ப பாத்தியா?  இப்ப பாத்தியா? " என செம அடி!!. நான் ஆச்சரியத்தில் சிரித்தவாறே அடி வாங்கினேன்.

அப்பா எப்போதும் கடையிலேயே இருக்க, பசங்களை நன்கு படிக்க வைத்தது அம்மா தான். என்ன ஜூரம் இருந்தாலும் பள்ளிக்கூடம் போயிடனும் என்று தான் சொல்லுவார். பள்ளியிலிருந்து வந்ததும் டாக்டரிடம் கூட்டி போய் புலம்புவார்.நான்கு பிள்ளைகளும் நன்கு படித்து, மிக நன்றாக செட்டில் ஆனதால், இன்று ஊரில் எங்கள் குடும்பத்தை தான் "அவங்களை மாதிரி படித்தால் நல்ல வேலைக்கு போகலாம்" என உதாரணமாக காட்டுவார்கள். இதன் பின்னால் அம்மாவின் உழைப்பும் தியாகமும் உள்ளது. 

"பெரிய குடும்பத்தில் கடைசி பிள்ளைங்க உருப்படாம போயிடும். நீ நல்ல நிலைமைக்கு வந்தது ஆச்சரியம் தாண்டா" என்பார்.

அம்மாவிடம் ஒரு பழக்கம். சுற்றியிருக்கும் எல்லாருக்கும் ஏதாவது வேலை குடுத்து கொண்டே இருப்பார். " நீ ஏதாவது கம்பனியில் மேனேஜராகவோ, கட்டிடம் கட்டுற மேஸ்திரியாகவோ போய்ருக்கணும். நல்லா வேலை வாங்கியிருப்பே" என்பேன். வேலை செய்பவர்கள் இல்லா விட்டால் தெருவில் நின்றவாறு ரோடில் செல்பவர் யாரையாவது கூப்பிட்டு " சித்த வாயேன். இந்த வேலையை செஞ்சு குடேன்" என்பார். அதில் சிலர் கண்டு கொள்ளாமல் போனாலும், யாரையாவது கூப்பிட்டு தன் வேலை முடியும் வரை ஓய மாட்டார். அவர்களுக்கு காபி, உணவு போன்றவை தந்ததாலும், அம்மாவின் இயல்பான Innocence-க்காகவும் அம்மாவை எல்லோருக்கும் பிடிக்கவே செய்யும். 

நான் கல்லூரியில் படிக்கும் போது அம்மாவிற்கு இருதயத்தில் பிரச்சனை வந்து உடன் கண்டு பிடித்ததால் உயிர் பிழைத்தார். 20 வருடங்களாக நோயுடனும் மாத்திரைகளுடன் தான் உயிர் ஓடிக்கொண்டிருக்கிறது. " நான் இன்னும் எவ்வளவு நாள் இருப்பேனோ? " என்று சொல்லியே எனக்கு 25 வயதில் திருமணம் செய்தார்கள். " அடுத்த தீபாவளிக்கு இருப்பேனான்னு தெரியாது" எனும் போதெல்லாம் " என்னோட சின்ன வயசுலேந்து இப்படி தான் சொல்றே; இருவது வருஷம் ஓடி போச்சு" என்று அவரை அடக்குவது வழக்கம்.

அம்மாவிற்கு சிறியதாக பயப்படவே தெரியாது. தலை வலி என்றாலே " பிரைன் டியூமரா இருக்குமோ? " என்று தான் கேட்பார். எனக்கும் இந்த "வியாதி" இருந்து தற்போது குறைத்து விட்டேன்.

சுஜாதா ஒரு முறை " அன்பு காட்ட நினைக்கும் போது அப்பா இல்லை" என்று எழுதி இருந்தார். இது அப்பாவிற்கு மட்டுமல்ல, அம்மாவிற்கும் பொருந்த கூடும் என புரிந்தது. வாசித்த போதே வலித்தது. அந்த நிலை எனக்கு வர கூடாது என நினைத்தேன்.

எனக்கு திருமணம் முடிந்து அம்மாவிற்கும் வயதான பின்தான் அம்மா மேல் அன்பை காட்ட ஆரம்பித்தேன். "டார்லிங்" என்று தான் கூப்பிடுவேன். ஊருக்கு செல்லும் போதெல்லாம் நான் முத்தம் குடுப்பது, கொஞ்சுவது அவருக்கு ரொம்ப சந்தோசம். "இவன் மட்டும் தான் என்னை இப்படி கொஞ்சுறான்!!".

அம்மாவிற்கு பொடி & வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் ரொம்ப வருஷம் இருந்தது. இரண்டு பழக்கங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக முழுவதுமாய் நிறுத்தினார்.

முதல் அண்ணனுக்கு திருமணம் ஆனபோது அவர் அருகிலுள்ள ஊரில் வேலை பார்த்தாலும் அம்மா தனி குடித்தனம் வைத்தார். எங்கள் அனைவருக்குமே அப்படி தான் செய்தார். "தள்ளி இருந்தால் தான் உறவு கெடாது" என தெளிவாய் இருந்தார். 

"தவமாய் தவமிருந்து" படம் பார்த்து விட்டு "அம்மா அப்பாவை என்கூட வைத்தே தீருவேன்" என அவர்களை வற்புறுத்தி சென்னை அழைத்து வந்தேன். ஓரிரு மாதங்களில் சென்னையும், டென்ஷனில் நான் போடும் கூச்சலும் பிடிக்காமல் மீண்டும் ஊருக்கே சென்று விட்டனர்.

தற்போது அம்மா?

அம்மா தன்னுடைய இறப்பிற்காக, கடைசி நாளுக்காக காத்து கொண்டிருக்கிறார். கடந்த ரெண்டு வருடங்களாகவே அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் போனது. ஒரு முறை மூன்று நாள் கோமாவில் இருந்து டாக்டர்கள் கை விரித்த பின்னும், மிராக்கில் போல உயிர் பிழைத்தார்.

நடப்பது சிரமமானது. பின் உட்காருவதே சிரமமானது.தற்போது வாக்கர் பிடித்து நிற்கவும், சற்று உட்காரவும் செய்கிறார். சிறு வயதில் அம்மாவை மிக கஷ்ட படுத்திய, பல வருடங்கள் பேசாது இருந்த பெரியண்ணன் தான் இப்போது அவரை பார்த்து கொள்கிறார்.

அம்மாவை ஒரு குழந்தை போல் பார்த்து கொள்ளும், மருந்து & உணவு தரும் அப்பாவின் அன்னியோன்னியம்.. அனைவரும் வியக்கும் விஷயம். 

" நான் சீக்கிரம் சாகணும்னு வேண்டிக்கடா, முடியலை" என தற்போதெல்லாம் அடிக்கடி சொல்கிறார். "வேண்டிக்குறேம்மா; நீ கஷ்டப்படாம நல்ல படியா சாகணும்னு தினம் வேண்டிக்குறேன்; ஆனா சீக்கிரம் சாகணும்னு வேண்டிக்க முடியலை. மனசு வரலைம்மா" என்றேன்.

அடுத்த முறை தஞ்சை செல்லும் போது இந்த பதிவை பிரின்ட் அவுட் எடுத்து அம்மாவிடம் காட்டுவேன்.

டார்லிங் ஐ லவ் யூ!

42 comments:

 1. பாசம் சொட்டும் பதிவு! எங்கள் அன்பையும் வணக்கத்தையும் தெரிவியுங்கள்!

  ReplyDelete
 2. நல்ல பதிவு. படித்து விட்டு மனம் நெகிழ்ந்தேன். அம்மா நலம் பெற மனப்பூர்வமான பிரார்த்தனைகள்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. மிக நெகிழ்வான பதிவு. அவரவர் அம்மாவை நினைவுறுத்துவதாகவும் உள்ளது. குறிப்பாக.. /பசங்க நல்லா சாப்பிடணும். நான்கு குழந்தைகள் இருந்தும் அம்மா சிம்பிளான சமையல் செய்ததில்லை. காலை & இரவு ரெண்டு வேலையும் டிபன். அதுவும் பூரி, இடியாப்பம், புட்டு, பொங்கல் என தினம் வித்யாசமாய் செய்வார்./

  /இப்ப பாத்தியா? இப்ப பாத்தியா?/

  ரசித்தேன்:)!

  உங்கள் அம்மாவுக்கு அன்பும் வணக்கங்களும். அவர் நலமாக இருக்க பிரார்த்தனைகளும்.

  ReplyDelete
 4. அம்மா ஒரு அபூர்வப் பிறவி.
  வெகு அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.
  உடனே போய்ப் பார்க்க வேண்டும் போல இருக்கிறது. எங்கள் அம்மாவும் 88ல் வந்த இதய நோய்க்குப் பிழைத்து 16 வருடங்கள் வாழ்ந்தார். இன்னும்நன்றாகக் கவனிக்காமல் விட்டோமெ என்ற வருத்தம் இன்னும்கசப்பான நினைவாக் என்னுள் இருக்கிறது.
  உங்கள் அம்ம நலமாக இருக்கணும். மனநிறைவோடு உங்கள் அப்பாவையும் வாழ்த்துகிறேன். இது போல கணவன் கிடைத்த அந்த மகராசி மனநிறைவோடு இருக்கட்டும். மிச்சது பகவான் செயல்.

  ReplyDelete
 5. // வேண்டிக்குறேம்மா; நீ கஷ்டப்படாம நல்ல படியா சாகணும்னு தினம் வேண்டிக்குறேன்; ஆனா சீக்கிரம் சாகணும்னு வேண்டிக்க முடியலை. மனசு வரலைம்மா" என்றேன். //

  கண்களில் நீர் வர வைத்தது..
  பாசமுள்ள பதிவு..

  "அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை..
  அவர் அடி தொழ மறுப்பவர் மனிதரில்லை.."

  ReplyDelete
 6. நெகிழ்ச்சியான இடுகை மோகன்ஜி. அழகான பகிர்வுகளா போட்டுத் தாக்கறீங்க வாழ்த்துகள்! :))

  ReplyDelete
 7. உன் அம்மா நலமாக இருக்க நானும் இறைவனை வேண்டுகிறேன், நண்பா!
  (போட்டோ பார்த்தேன், அப்படியே அம்மா சாயல்ல நீ இருக்கே, அதான், அம்மா மேல ஒரு அன்போ?)

  ReplyDelete
 8. காசிருந்தா உலகத்தில எல்லோரையும் வாங்கலாம்... அம்மாவை வாங்க முடியுமா...

  எஸ். ஜே. சூர்யா தன் படத்தில் இப்படி ஒரு பாடலை வைத்திருப்பார். எங்கள் குடும்ப நண்பரின் நெருங்கிய உறவினர் என்ற வகையில் அவர் தன் தாயின் மீதுள்ள அன்பின் காரணமாகவும் அவரின் நினைவாகமுமே அந்தப் பாடலை படத்தில் வைத்ததாக கேள்விப்பட்டேன். அம்மா என்றால் எல்லோருக்குமே ஒரு படி மேல்தான்.

  நெகிழ்வாகவும் நிறைவாகவும் இருந்தது பதிவு.

  //"வேண்டிக்குறேம்மா; நீ கஷ்டப்படாம நல்ல படியா சாகணும்னு தினம் வேண்டிக்குறேன்; ஆனா சீக்கிரம் சாகணும்னு வேண்டிக்க முடியலை. மனசு வரலைம்மா" என்றேன்.//

  யாருக்குதான் வரும்.

  ReplyDelete
 9. " நான் சீக்கிரம் சாகணும்னு வேண்டிக்கடா, முடியலை" என தற்போதெல்லாம் அடிக்கடி சொல்கிறார். "வேண்டிக்குறேம்மா; நீ கஷ்டப்படாம நல்ல படியா சாகணும்னு தினம் வேண்டிக்குறேன்; ஆனா சீக்கிரம் சாகணும்னு வேண்டிக்க முடியலை. மனசு வரலைம்மா" என்றேன்.  .........கண்ணீருடன் இந்த வரிகளை வாசித்தேன்.... நெகிழ வைக்கும் பதிவு....

  ReplyDelete
 10. ரொம்ப நெகிழ்ச்சியான பதிவா வந்திருக்கு மோகன்..

  மேற்கொண்டு என்ன சொல்வதென தெரியவில்லை..

  ReplyDelete
 11. நெகிழ்வான பதிவு!

  ReplyDelete
 12. ரொம்ப மனச கனக்க வெச்சுட்டீங்க மோகன்..

  ReplyDelete
 13. பாசமிகு பகிர்வு. உங்கள் அம்மாவுக்கு எனது வந்தனங்கள்!

  ReplyDelete
 14. ஏழு வயதுவரை தாய்ப்பால், காய்ச்சல் என்றாலும் பள்ளி, பாஸானபின் அடி, மகன்களின் தனிக்குடித்தனம் என்று அம்மா வியக்க வைக்கிறார்.

  ReplyDelete
 15. நெகிழ்வாயயிருந்தது.. பாவம் வயதானவர்கள்..

  ReplyDelete
 16. நெகிழ்ச்சியான பதிவு. படிக்கும்போது எங்கள் அம்மாவின் நினைவு வந்தது.

  ReplyDelete
 17. அருமையான பதிவு.

  ReplyDelete
 18. //இதன் பின்னால் அம்மாவின் உழைப்பும் தியாகமும் உள்ளது.//  இந்த பதிவுக்கு தலைப்பு இதுதான்....
  வாவ் கிரேட் அம்மா ஊருக்கு போயி அம்மாவிடம் காட்டும் போது எனது
  அன்ப்பான வாழ்த்துக்களை சொல்லுங்க நம்ம ammaavukku...
  இந்த பதிவை padichathil இருந்து அவங்க எனக்கும் அம்மா ஆகிட்டாங்க....

  ReplyDelete
 19. பாசமுள்ள பகிர்வு..

  ReplyDelete
 20. அம்மா என்றாலே பாசம் தான்.
  உங்கள் அம்மாவுக்கு எனது பிரார்த்தனைகளும்.

  ReplyDelete
 21. நெகிழ்வான பதிவு. அம்மா நலமாக கடவுளை பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
 22. படித்தவுடன் பின்னூட்டம் எழுத முடியவில்லை(கண்ணாடியை கழட்டி, கண்களை துடைத்துக் கொண்டு பிறகு எழுதுகிறேன்)

  தங்களின் பதிவுகளில் மிகச் சிறந்தப் பதிவு இதுதான். உங்களின் எண்ணம் எழுத்தாக வந்ததால்தான் படிப்பவர்களை கண்கலங்க செய்துவிட்டது.

  அம்மாவின் சிறப்புகளை அற்புதமாக சொல்லிவிட்டீர்கள். அம்மா நலமுடன் நீண்ட நாள் வாழ வேண்டும்.அவர்களை பாதுகாக்கும் அண்ணன் குடும்பத்தாருக்கும் வலையுலக நண்பர்களின் சார்பாக பாராட்டுக்கள்.

  ReplyDelete
 23. தல அம்மா நல்லாவே இருப்பாங்க, சந்தோசமாவும். நீங்க அப்படியே அம்மா ஜாடை...

  ReplyDelete
 24. அருமை மோகன் சார். நெகிழ்ச்சியான பதிவு.

  அம்மாவுக்கு எனது அன்பு.

  ReplyDelete
 25. நன்றி ஜனா சார். நிச்சயம் தெரிவிக்கிறேன்.
  **
  ரத்னவேல்: நன்றி
  **
  ராம லட்சுமி: நன்றி
  **
  //இன்னும்நன்றாகக் கவனிக்காமல் விட்டோமெ என்ற வருத்தம் இன்னும்கசப்பான நினைவாக் என்னுள் இருக்கிறது.//
  வல்லிசிம்ஹன் சார்: ((((

  இது போல கணவன் கிடைத்த அந்த மகராசி மனநிறைவோடு இருக்கட்டும். மிச்சது பகவான் செயல்.

  ஆம் சரியா சொன்னீங்க
  **
  நன்றி மாதவா

  ReplyDelete
 26. //நெகிழ்ச்சியான இடுகை மோகன்ஜி. அழகான பகிர்வுகளா போட்டுத் தாக்கறீங்க //

  நன்றி ஷங்கர்
  **
  பெயர் சொல்ல: தேன்க்ஸ்ப்பா
  **
  நன்றி ஆதி மனிதன். ஒவ்வொருதர்க்கும் தனக்கு பிடிச்ச அம்மா பாட்டு நினைவுக்கு வருது
  **
  நன்றி சித்ரா
  **
  வித்யா: ஏதும் சொல்லாவிடினும் உங்கள் உணர்வு புரிகிறது நன்றி
  **
  மாதவி:நன்றிங்க

  ReplyDelete
 27. நடராஜ்: நன்றி வெளி நாட்டில் இருக்கீங்களோ ?
  **
  வெங்கட்: நன்றி நண்பா
  **
  //ஹுஸைனம்மா said...
  ஏழு வயதுவரை தாய்ப்பால், காய்ச்சல் என்றாலும் பள்ளி, பாஸானபின் அடி, மகன்களின் தனிக்குடித்தனம் என்று அம்மா வியக்க வைக்கிறார்//

  நன்றி ஹுசைனம்மா; பதிவை ஒரே வரியில் சொல்லிட்டீங்க
  **

  பயணமும் எண்ணங்களும் said...
  பாவம் வயதானவர்கள்..

  மிக உண்மை!!

  ReplyDelete
 28. ஸ்ரீ ராம் said://படிக்கும்போது எங்கள் அம்மாவின் நினைவு வந்தது//.
  நன்றி ஸ்ரீ ராம்
  **
  அமுதா கிருஷ்ணா : நன்றி
  **
  நாஞ்சில் மனோ
  //இந்த பதிவை padichathil இருந்து அவங்க எனக்கும் அம்மா ஆகிட்டாங்க....//

  என் நண்பர்கள் எல்லாருமே அவங்களை அம்மான்னு தான் கூப்பிடுவாங்க. ஆன்ட்டின்னு அல்ல. அவங்களும் என் நண்பர்களுடன் பிரன்ட் மாதிரி பேசுவாங்க
  **
  நன்றி அமைதி சாரல் மேடம்
  **
  இளங்கோ: நன்றி

  ReplyDelete
 29. E MAIL FROM SWAMY:

  வணக்கம் மோகன்,

  உங்கள் ப்ளாக் நீண்ட காலமாக படித்து வருகிறேன். முக்கியமாக ஜென்சி பற்றிய பதிவு உங்களை தொடர்ந்து வசிக்க செய்தது. அனாலும் சமீப காலங்களில் உங்களின் எழுத்தில் மிகுந்த கருத்து செறிவுகள் இருப்பதாக எனக்கு ஒரு எண்ணம். ஒரு வேலை இப்போது சற்று நிதானத்துடன் படிப்பதாலும் இருக்கலாம். உங்களின் அம்மா பற்றிய பதிவு மனதை மிகவும் தொட்ட்டது. இந்த கட்டுரையை அவருக்கு உடனடியாக காட்டுங்கள். உங்களின் எழுத்துகளில் இழையோடும் மனித நேயமும் அன்பும் மனதுக்கு ஒரு இதத்தை தருகின்றது. நன்றி என சொல்லுவது ஒரு மேலோட்டமான சொல்லாகவே இருக்கும். கடவுள் உங்களுக்கு மேலும் நல்லதை வழங்கட்டும்.

  நேரம் இருந்தால் சில வார்த்தைகள் எழுதவும்.

  வணக்கம்.

  சுவாமி.

  ReplyDelete
 30. கோவை டு தில்லி: மிக நன்றி மேடம்
  **
  அமைதி அப்பா: என்ன சொல்வது.. நன்றி என்ற ஒத்தை சொல்லை தவிர? உங்கள் பின்னூட்டம் அம்மா நிச்சயம் படித்து நெகிழ்வார்கள்
  **
  முரளி said
  //நீங்க அப்படியே அம்மா ஜாடை...//

  ஜாடை மட்டும் தான் அம்மா. குரல் & சில வாலு தனங்கள் அப்பா போல. நன்றி முரளி
  **
  நன்றி சரவணா மகிழ்ச்சி

  ReplyDelete
 31. சுவாமி,

  தங்கள் இ மெயில் மிக மகிழ்ச்சி தருகிறது. இது போன்ற பாராட்டுகள் தான் கடும் பணி சுமைக்கு நடுவிலும் எழுத வைக்கிறது. நன்றியும் வணக்கமும்.

  அன்பு
  மோகன் குமார்

  ReplyDelete
 32. E MAIL FROM RAVICHANDRAN:

  அன்பின் மோகன்,

  தமிழ்மண நட்சத்திரத்திற்கு மீண்டும் வாழ்த்துகள். பதிவுகளை படித்து வருகிறேன்... அம்மா பற்றிய பதிவு நெகிழ்ச்சி!

  ஏழை குழந்தைகளின் படிப்பிற்காக தாங்கள் செய்து வரும் தொண்டிற்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுகள்.

  வாழ்க வளமுடன்!

  அன்புடன்,
  -ரவிச்சந்திரன்

  ReplyDelete
 33. பதிவு நெகிழவைத்தது.கண்களில் நீர் ததும்பியது.முகம் தெரியாத அந்த அன்பு அன்னைக்காக உயிரோடு இருக்கப்போகும் வாழ்நாட்கள் எல்லாம் உபாதையின்றி,மகிழ்வான மனதுடன் வாழ ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன்.

  ReplyDelete
 34. அருமையான மற்றும் நெகிழ்வான பதிவு. அம்மா இந்தப் பதிவைப் படித்து மகிழ்ந்தார் என்ற பதிவை படித்தேன்.

  ReplyDelete
 35. I can't stop my tears. samy

  ReplyDelete
 36. அருமையான பதிவு
  எந்த பத்தி சிறப்பாக இருந்தது என்று சொல்ல, எல்லாமே வெகு சிறப்பாக இருக்கும்போது

  ReplyDelete
 37. தங்கள் தாயார் தற்போது பூரண நலமாய் உள்ளாரா?

  ReplyDelete
 38. //NAGARAJAN said...
  தங்கள் தாயார் தற்போது பூரண நலமாய் உள்ளாரா? //

  நண்பரே, அம்மா உடல்நிலை சீராக இல்லை. அண்ணன் வீட்டில் தன் கடைசி காலத்தை வாழ்ந்து கொண்டுள்ளார். அண்ணனும் அண்ணியும் நல்ல முறையில் பார்த்து கொள்கின்றனர். அப்பா அனைத்து சேவைகளும் செய்கிறார். நாங்கள் போனில் பேசுவது, அவ்வப்போது சென்று பார்த்து வருவது என இருக்கிறோம். ஒவ்வொருவர் வயதான காலத்தை நினைத்தால் பயமாய் தான் உள்ளது.

  மிகுந்த சிரமத்துடன் தான் ஒவ்வொரு நாளும் கழிகிறது. பிறப்பு, இறப்பு இரண்டுமே நம் கையில் இல்லை

  தங்கள் அக்கறைக்கு நன்றி !

  ReplyDelete
 39. அன்புடன் பின்னூட்டமிட்ட

  ஸாதிகா
  பின்னோக்கி
  சாமி
  நாசர், மதுக்கூர்

  ஆகியோருக்கும் அன்பும் நன்றியும் !

  ReplyDelete
 40. நீங்கள் என்ன எழுதினாலும் அது சுவாரஸ்யமாகவே இருக்கின்றது.. உங்களது சொந்த கதையைக் கூட மிக அழகாகச் சொல்லியிருக்க்கின்றீர்கள். வாழ்த்துகள்

  ReplyDelete
 41. உங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்து இருக்கிறேன். நேரம் இருக்கும் போது வந்து பார்த்து விட்டு கருத்திடுங்கள் சகோ

  http://blogintamil.blogspot.com/2015/02/blog-post_3.html

  ReplyDelete
 42. அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,
  நல்வணக்கம்!
  திருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்
  "உள்ளம் சொல்லுமே அம்மா…. அம்மா…அம்மா…!!!"

  இன்றைய வலைச் சரத்தின்
  சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
  வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!

  வாழ்த்துகளுடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com

  (எனது இன்றைய பதிவு "அவன் ஒரு குடையைத் தேடி" (சிறு கதை)
  படித்திட வேண்டுகிறேன்.)

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...